Thursday, 2 March 2023

ஜும்ஆ பயான் 03/03/2023

தர்மம் தலை காக்கும்..


لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّىٰ تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ ۚ وَمَا تُنْفِقُوا مِنْ شَيْءٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ
நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்;. எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

தர்மம் என்றால் இறைவனின் திருப்பொருத்தத்தை மட்டும்  நாடி இருப்பவர் இல்லாதோருக்கு கொடுத்து உதவுவதாகும். ஆனால் இன்றைய காலத்தில் தர்மம் என்ற போர்வைக்குள் ஒளிந்துக் கொண்டு ஆடம்பர நிகழ்ச்சிகளுக்கு அள்ளி கொடுத்து தங்கள் காசு பணங்களை மனிதன் வீண் விரயம் செய்கின்றான்.
தர்மம் யாருக்கு கொடுக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு நேரமும் தன் வயிற்றில் ஏற்படும் பசியை போக்க ஏங்கி தவிக்கும் ஏழைகளுக்கும், தாய் தந்தையிழந்து பரிதவிக்கும் அநாதைகளுக்கும், தேவையிருந்தும் பத்தின தனமாக வாழ்பவர்களுக்கும் தேடி சென்று தான தர்மம் செய்வது தனவந்தர்களின் கடமை என்று வான் மறை குர்ஆன் கூறுகின்றது.
அதேப்போல் நமக்கு பிடித்தமான ஒன்றையே தர்மம் செய்ய வேண்டும் என மேற்கூறிய வசனம் கூறுகிறது. ஆனால் இன்று தான் விரும்பாத ஒன்றை, தனக்கு பிடிக்காத ஒன்றை கொடுத்து விட்டு தன்னை பெரிய தர்மவான் என சிலர் நினைத்துக் கொள்கின்றனர்.

தர்மம் எவ்வாறு வழங்க வேண்டும்?

தான தர்மங்கள் முடிந்தளவு யாருக்கும் தெரியாமல் செய்வது தான் சிறப்பு. பிறர் தெரிய செய்யும்போது சில நேரங்களில் அதில் முகஸ்துதி ஏற்பட்டு விடுகிறது. ஆகையால் தான் நம் மார்க்கம் வெளிப்படையாக தர்மம் செய்ய அனுமதி தந்திருந்தாலும் மறைமுகமாக செய்யும் தர்மமே சிறந்த தர்மம் என கூறுகிறது.

ஒரு ஹதீஸில்... வரும் செய்தி....

இறைவன் பூமியை படைத்த போது அது ஆடி நடுங்கியது... அதன் மீது மலையை அல்லாஹ் நாட்டினான். மலையை நட்டியவுடன் அது ஆடாமல் நிலை பெற்றது.மலைகளின் உறுதியை கண்ட வானவர்கள் வியந்து, எங்கள் இறைவா மலையை விட உறுதியான படைப்பை நீ படைத்திருக்கிறாயா? என்று கேட்டனர்.
ஆம் இரும்பை படைத்துள்ளேன் என்றான் இறைவன். (இரும்பு மலையை உடைத்துவிடும் .)
இரும்பை விட உறுதியான படைப்பை படைத்திருக்கிறாயா? என மலக்குகள் கேட்க... ஆம் நெருப்பை படைத்துள்ளேன் என்றான் இறைவன். (நெருப்பு இரும்பை உருக்கிவிடும்.)
நெருப்பை விட உறுதியான படைப்பை படைத்திருக்கிறாயா? என மலக்குகள் கேட்க.... ஆம் நீரை படைத்துள்ளேன் என்றான் இறைவன். (நீர் நெருப்பை அனைத்துவிடும்.)
அப்படியென்றால்  நீரை விட சிறந்த படைப்பு இருக்கிறதா? என மலக்குகள் கேட்க... ஆம் காற்றை படைத்துள்ளேன் என்றான் இறைவன். (பலமான காற்று மழை வராமல் தடுத்துவிடும்.) அப்படியென்றால் காற்றை விட சிறந்த படைப்பு இல்லையா? என மலக்குகள் கேட்க... இறைவன் கூறினான்..ஆதமுடைய சந்ததிகளான மனிதர்களை படைத்துள்ளேன். ஆனால் அவன் தன் வலது கரத்தில் கொடுக்கும் தர்மத்தை இடது கைக்கு தெரியாமல் கொடுக்கும் போது மேற்கூறிய அனைத்தை காட்டிலும் சிறந்த படைப்பாக மாறுகிறான் என அல்லாஹ் கூறினான்.
இந்த ஹதீஸ் எவ்வாறு தான தர்மம் செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறது.
ஆனால் இன்றைய தான தர்மங்கள் லைட் போட்டு வெளிச்சம் போட்டு செய்யப்படுகிறது. இதை அல்லாஹ் விரும்புவதில்லை.

கஞ்சத்தனம் செய்யாதீர்கள்.

السخي حبيب الله ولو كان فا سقا والبخيل عدو الله ولو كان عابدا
தர்மம் செய்கிறவன் அல்லாஹ்வின் தோழனாவான்.. அவன் பாவியாக இருப்பினும் சரியே!
கஞ்சன் அல்லாஹ்வின் விரோதியாவான்.. அவன் வணக்க சாலியாக இருப்பினும் சரியே!

இந்த ஹதீஸ் கஞ்சத்தனம் நம்மிடம் அறவே இருக்கக் கூடாது என எச்சரிக்கை செய்கிறது.
இதையே அல்லாஹ் திருமறையில்....

وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُولَةً إِلَىٰ عُنُقِكَ  
(உலோபியைப் போல் எதுவும் வழங்காது) உம் கையை உம் கழுத்தில் கட்டப் பட்டதாக்கிக் கொள்ளாதீர்; 
(அல்குர்ஆன் 17/29) என்ற வசனத்தில் கூறுகிறான். 

தர்மம் வளரும்.

இன்று நம்மில் அநேகர் தர்மம் செய்தால் தம் பொருள் குறைந்து விடும் என அஞ்சுகின்றனர். ஆனால் இறை மறை நீ தான தர்மங்கள் செய்தால் உன் பொருளில் அபிவிருத்தி ஏற்படும் என்று கூறுகிறது.
يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ ۗ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ
அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்;. இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
(அல்குர்ஆன் 2 /276)

தர்மம் ஒர் கேடயம்.

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்” என்ற பழமொழியும் இதனை அடிப்படையாகக் கொண்டதுதான். இவ்வாறு எதைப்பற்றியும் யோசிக்காது நாம் செய்யும் உதவியானது நமது தலைமுறையைச் சேர்ந்தவர்களைக் காக்கும் என்பதால் தர்மம் தலைகாக்கும் என்றும் சிலர் கருத்து கூறுகின்றனர்.

ஒரு ஹதீஸில்...

الصدقة رد البلاء والقضاء

நாம் செய்யும் தான தர்மங்கள் நமக்கு வரும் ஆபத்துக்கள், மூசிபத்துக்களிலிருந்து பாதுகாப்பு தரும் ஒர் யமாகும்.
நாம் எங்காவது வெளியே செல்லும் போது ஏதேனும் தான தர்மங்கள் செய்து விட்டு நம் பயணங்களை மேற்கொண்டால், அந்த பயணம் பாதுகாப்பான பயணமாக அமைய அந்த தர்மம் ஒர் கேடயமாக இருக்கும்.
தொடந்து நாம் தான தர்மங்கள் செய்யும்போது வருங்காலத்தில் வரவிருக்கும் ஆபத்துகள் , நோய் நொடிகள், மோசமான விபத்துக்கள் போன்ற ஆபத்திலிருந்து பாதுகாப்பு தந்து நீண்ட ஆயுளையும் அல்லாஹ் தருவான்.

அல்லாஹ் சில இடங்களில் அன்பாக தர்மம் செய்ய சொல்கிறான்.

اِنْ تُبْدُوا الصَّدَقٰتِ فَنِعِمَّا هِىَ‌ وَاِنْ تُخْفُوْهَا وَ تُؤْتُوْهَا الْفُقَرَآءَ فَهُوَ خَيْرٌ لَّكُمْ‌ وَيُكَفِّرُ عَنْكُمْ مِّنْ سَيِّاٰتِكُمْ‌ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏ 

தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 2:271)

சில இடங்களில் மிரட்டி சொல்கிறான்.

மரணம் வருவதற்கு முன். 

وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ‏ 

நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நீங்கள் செலவு செய்யுங்கள், உங்களில் எவருக்கேனும் மரண நேரம் வருவதற்கு முன்பாக! மேலும், அந்த நேரத்தில் அவர் கூறுவார்: “என் அதிபதியே! நீ எனக்கு இன்னும் சிறிதுகாலம் அவகாசம் அளிக்கக்கூடாதா! நான் தானதர்மம் செய்வேனே! நல்லோர்களில் ஒருவனாகி விடுவேனே!”(அல்குர்ஆன் : 63:10)

நல்லவர்களுக்கும் செல்வம் கொடுக்கப்படுகிறது.

கெட்டவர்களுக்குச் செல்வம் வழங்கப்பட்டுள்ளது என்று திருக்குர்ஆன் கூறுவது போலவே நல்லவர்களுக்குச் செல்வம் வழங்கப்பட்டுள்ளதையும் கூறுகிறது.

சுலைமான் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட செல்வச் செழிப்பைப் பின்வருமாறு திருக்குர்ஆன் எடுத்துக் காட்டுகிறது.

இம்மாளிகையில் நுழைவாயாக!'' என்று அவளிடம் கூறப்பட்டது. அதை அவள் கண்டபோது தண்ணீர்த் தடாகம் என நினைத்து, தனது கீழாடையைக் கரண்டைக்கு மேல் உயர்த்தினாள். "இது பளிங்குகளால் பளபளப்பாக்கப்பட்ட மாளிகை'' என்று அவள் கூறினாள். "நான் எனக்கே தீங்கு இழைத்து விட்டேன். சுலைமானுடன் சேர்ந்து அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டு விட்டேன்'' என்று அவள் கூறினாள்.          (திருக்குர்ஆன் - 27:44)

கெட்டவர்களுக்கும் செல்வம் கொடுக்கப்படுகிறது.

மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்தில் காரூன் என்ற கெட்டவனுக்குச் செல்வத்தைக் கொடுத்ததை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் சொல்லிக் காட்டுகிறான்.

காரூன், மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வலிமை மிக்க கூட்டத்தினருக்குச் சிரமமாக இருக்கும். (திருக்குர்ஆன் 28:76)

தனது அலங்காரத்துடன் அவன் தனது சமுதாயத்திடம் சென்றான். "காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா? அவன் பெரும் பாக்கியமுடையவனாக இருக்கிறான்'' என்று இவ்வுலக வாழ்க்கையை விரும்புவோர் கூறினர்.  (திருக்குர்ஆன் 28:79)

பொக்கிஷங்களைப் பூட்டிவைக்கும் அறைகளின் சாவிகளைச் சுமப்பதற்கு பெருங்கூட்டம் தேவை; அது அவர்களுக்குச் சிரமமாக இருக்கும் என்பதும் காரூனின் செல்வம் எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதை நம் கண் முன்னால் நிறுத்துகிறது.

لكلِّ أمَّةٍ فتنةٌ وإنّ فتنةَ أمَّتي المالُ.

ஒவ்வொரு சமுதாயத்திற்கும் சோதனைகள் இருக்கின்றன. என்னுடைய சமுதாயத்தின் சோதனை செல்வமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (நூல் : அஹ்மத்)

முத்தகீன்களின் அடையாளம்.

வறுமையிலும், செழிப்பிலும் எல்லா நிலையிலும் தர்மம் செய்யும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ ۗ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ

அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல்வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.(திருக்குர்ஆன்:3:134)

1 லட்ச‌ ரூபாய் இருக்கும் ஒருவர் 1000 ரூபாய் தர்மம் செய்வதைவிட, வெறும் 100 ரூபாய் வைத்திருப்பவர் தன்னைவிட கஷ்டப்படுபவருக்கு 50 ரூபாய்க்கு செய்யும் தர்மம்தான் மேலானதாகும். ஏனெனில் இறைவன் கொடுத்த‌ தன்னுடைய உடமையில் பாதியை அவர் கொடுத்துவிடுகிறார்.

இரண்டு விஷயங்களில் பொறாமைப்படு.

எந்தவொரு விஷயத்திலும் மற்றவர்களைப் பார்த்துப் பொறமை கொள்வதோ, பேராசைப் படுவதோ கூடாது. இவ்வாறு போதுமென்ற தன்மையோடு வாழச் சொல்லும் மார்க்கம், இரண்டு விஷயங்களுக்கு மட்டும் விதிவிலக்கு வழங்குகிறது. அதிலொன்று தர்மம் எனும் போது அதன் சிறப்பை அறிய முடிகிறது.

عَبْدَ اللهِ بْنَ مَسْعُودٍ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

لَا حَسَدَ إِلَّا فِي اثْنَتَيْنِ: رَجُلٌ آتَاهُ اللهُ مَالًا فَسُلِّطَ عَلَى هَلَكَتِهِ فِي الْحَقِّ ، وَرَجُلٌ آتَاهُ اللهُ الْحِكْمَةَ فَهُوَ يَقْضِي بِهَا وَيُعَلِّمُهَا

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்).

(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி-73)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

'அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்; நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, 'நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்' என்று சொல்லும் மனிதர், தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹ் புகாரி 660)

துறவியின் கதை.

ஒரு விறகுவெட்டி தலையில்விறகுச் சுமையுடன் வீடுதிரும்பிக்கொண்டிருந்தான். வரும்வழியில் எதிரில் ஒருதுறவிம்வருவதைப் பார்த்தான்.அவருக்கு வழி விடுவதற்காகபாதையின் ஓரத்தில் ஒதுங்கிநின்றான். ஆனால் அவரோதிடீரென, ''விறகு சுமையை உடனேகீழே எறி'' என்றார். அவனுக்குஒன்றுமே புரியவில்லை.காலையிலிருந்து கஷ்டப்பட்டுவெட்டிக்கொண்டு வந்த விறகுகள்அவை. அவற்றை விற்றால்தான்அன்று அவனுக்கு உணவு. அந்தகட்டை எறியச் சொல்லுகிறாரே?

இருந்தாலும் அவர் மீதுள்ளமரியாதைக்காக விறகுக்கட்டைகீழே போட்டான். போட்ட வேகத்தில்கயிறு அறுந்து விறகுகள் சிதறின.அதற்குள்ளே இருந்து ஒரு கருநாகம்நெளிந்து ஓடியது. விறகுவெட்டிவியப்பாலும் அச்சத்தாலும்உறைந்து நின்றுவிட்டான். உடனேசுதாரித்துக்கொண்டு ''அய்யா.நீங்கள் எனது உயிரைக்காப்பாற்றினீர்கள்'' என்றான். ''உன்னைக் காப்பாற்றியது நான்அல்ல; நீ செய்த தர்மம். இன்றுஏதாவது தர்மம் செய்தாயா?'' என்றுகேட்டார் துறவி. ''நான் பரம ஏழை.விறகுவெட்டிப் பிழைப்பவன். தர்மம்செய்யும் சக்தி எனக்கு ஏது?என்றான்.

''நன்றாக யோசித்துப் பார்''. அவன்சிறிதுநேரம் சிந்தித்துப் பார்த்தான்.அவனுக்கு நினைவுக்குவந்துவிட்டது ''ஆமாம் அய்யா!இன்று பகல் விறகு வெட்டிக்களைத்துப் போய் ஒரு மரத்தடியில்அமர்ந்தேன். கடுமையான பசி.கேழ்வரகு கூழ் கொஞ்சம் கொண்டுவந்திருந்தேன் அதை அருந்தநினைக்கும்போது அங்கே ஒருபயணி வந்தார். ''நான் இரண்டுநாளாக பட்டினி. எனக்கு ஏதாவதுசாப்பிடக் கொடுங்கள்'' என்றார்.நான் என் கூழில் பாதியைஅவருக்கு கொடுத்தேன். இதுதான்நான் செய்தது. இது என்னைமரணத்திலிருந்து காப்பாற்றுகிறஅளவுக்கு பெரிய தர்மமா?ஆச்சரியமாக இருக்கிறதே''என்றான்.

துறவி, '' இன்று நீ பாம்பு கடித்துஇறந்து போகக்கூடியவன். நீ செய்ததர்மம் உன்னைக்காப்பாற்றியது'' என்றார்.

உண்மை வரலாறு.

ரோமார்களை எதிர்த்து போர் செய்வதற்கு சென்ற ஹாலித் (ரலி) அவர்கள் அங்கிருந்து சில எதிரிகளை கைதிகளாக நாயகம் (ஸல்) அவர்கள் இடம் கொண்டு வந்தார்கள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எடுத்து சொன்னார்கள் அவர்கள் இஸ்லாத்தை ஏற்க மறுத்தார்கள். எனவே நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் அந்த கைதிகளின் பல்வேறு குற்றங்கள் முன் வைத்து அவர்கள் அனைவரையும் கொல்லும் படி உத்தரவிட்டார்கள். அவர்கள் அனைவருக் கொல்லப்பட்டார்கள். அந்த கைதிகளிடம் கடைசி நபரை ஹாலித் அவர்கள் கொல்வதற்காக முற்பட்டபோது நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மனிதரை விட்டு விடுங்கள் என்றார்கள். அப்போது ஹாலித் நாயகம் (ஸல்) அவர்கள் இடம் நாயகமே அந்த கூட்டத்தில் மிகவும் கொடியவர் இவர்தான் என்று கூறியபோது பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். இவரை பற்றி இப்போது தான் ஜிப்ரீல் (அலை) எனக்கு தகவல் தந்தார்கள். இவர் அந்த கூட்டத்தில் மிகப்பெரிய கொடை வல்லாளாக இருகின்றார் எனவே இவரை விட்டு விடுங்கள் என்று சொன்னார். இந்த தகவலை கேட்டவுடன் ஹாலித் (ரலி) அவரை விட்டு விட்டார்கள். உடனே அந்த ரோம் நாட்டு கைதி முஸ்லிமாகி விட்டார் .(நூல்: (துர்ருல் மன்சூர்)

அல்லாஹ் இல்லாதோருக்கு கொடுத்து உதவும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் தருவானாக! ஆமின்..

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

No comments:

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...