Thursday, 14 November 2024

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு:

போதையால் சீரழியும் இளைய தலைமுறை

அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன்.

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ‏

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.(அல்குர்ஆன் : 51:56)

ஆக மனித படைப்பின் நோக்கம் عبادت அல்லாஹுவை வணங்குதல் என்பது தான் முக்கியம்.

பிரிதோரிடத்தில் இதே கருத்தை வேறு விதத்தில் அல்லாஹ் ரப்புல் இஜ்ஜத விவரிக்கின்றான்.

اَلَّذِيْنَ اٰمَنُوْا وَتَطْمَٮِٕنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ‌  اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَٮِٕنُّ الْقُلُوْبُ ‏

(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!(அல்குர்ஆன் : 13:28)

மனித சமூகத்தில் தீமைகளும், ஆபாசங்களும்,அசிங்கங்களும் அதிகரிக்கும் போது மனிதன் படைத்த நோக்கத்தை மறந்து,இறை வணக்கம்,இறை தியானத்தை புறம் தள்ளுவிட்டு தீய வழிகளில் சுகத்தையும்,மன அமைதியையும் தேட ஆரம்பித்து விடுகிறான்.

சில சமயங்களில் ஆடல், பாடல்,ஆபாசம்,அசிங்கம்  மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் ஆகியவற்றில் அவன் சுகம் காண்கிறான் , சில சமயங்களில் சமூகத்தில் பரவியுள்ள பல்வேறு வகையான போதை மற்றும் பிற ஒழுக்கக்கேடுகளின் கடலில் மூழ்கி தன்னை மகிழ்விக்க முயற்சிக்கிறான். ஆனால் போதை,ஆபாசம் போன்ற சமூக தீமைகள் கடல் நீரை போன்றது.  இந்தக் கடல் நீரை எவ்வளவு அதிகமாகக் குடிக்கிறானோ, அவ்வளவு அதிகமாக அவனுடைய தாகம் அதிகரிக்குமே தவிர தாகம் தீராது. 

சாபத்திற்குறிய தீய போதை பழக்கவழக்கங்களும்,அதற்கான காரணிகளும்.

மாணவச் செல்வங்களை வழிகெடுக்கும் வழிகளில் ஒன்றுதான் போதைப் பொருள். மனித ஆற்றலை உருக்குலைத்து ஒன்றுக்கும் உதவாததாக மாற்றி விடுகிறது. மது, புகை, கஞ்சா, ஹெராயின், கொக்கைன், பிரவுன் சுகர், அபின், பான்பராக் போன்ற போதை வஸ்துகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. கோபுரத்தில்இருப்பவனைக் குப்பைத் தொட்டிக்கும் பூக்கடையில் இருப்பவனைச் சாக்கடைக்கும் தள்ளிவிடும். நல்ல குணத்தை நாசமாக்கி, வாழ்வு முழுவதையும் சீர்கெடுக்கும்

போதைப் பொருள்கள் அனைத்து நோய் களுக்கும் முன்னோடி என்றால் அது மிகையாகாது.

உலகளாவிய ரீதியில் 15 வயது முதல் 64 வயதுக்கு இடைப்பட்ட 243 மில்லியனுக்கும் அதிகமானோர் போதைப் பொருள்களுக்கு அடிமையாகியுள்ளனர். இதில் 80% பேர் ஆண்கள், 20% பேர் பெண்கள். கடந்த 3 ஆண்டுகளில் 6 இலட்சம் பேர் போதைப் பொருள்களினால் உயிரிழந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதைத் தடுப்பதற்கான முன்னெடுப்பாகத்தான் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ஆம் நாள் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

அதிகரித்த போதைப் பொருள் உபயோகத்தில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்

வீட்டுச் சூழலிலிருந்து பல பிள்ளைகள் போதை பழக்கத்திற்கு ஆளாகுகின்றார்கள்.தந்தை சிகரட் புகைப்பவராக இருந்தால், அந்த சிகரட்டை வாங்குவதற்கு பிள்ளையிடம் பணம் கொடுத்து வாங்கிக் கொள்கிறார்.

அந்தப் பிள்ளை தந்தையுடைய சிகரெட் பிடிக்கும் “ஸ்டைலை” பார்த்து நாளடைவில் அதனை திருட்டுத் தனமாக புகைக்க ஆரம்பிக்கின்றது.

வீட்டில் நடக்கும் விசேஷங்களின் போது பியர் மற்றும் மது உபயோகப்படுத்தப்படும் போது பிள்ளைகள் அவற்றின் ஆபத்துக்களை பொருட்படுத்தாமல் அவர்களும் பயன்படுத்த ஆரம்பிக்கின்றனர்.

வீட்டுச் சூழலில் பயன்படுத்திய போதைபொருட்களை பிள்ளைகள் நாளடைவில் சமூக சூழலில் சக தோழர்களுடன் தொடர்ந்தும் பழகிக் கொள்ள முனைகின்றனர்.

சிலவேளை வீட்டுச் சூழலில் சிகரட் புகைத்தல், மது அருந்துதல் போன்றவை இல்லாவிட்டாலும் சமூக சூழலில் அவை பயன்பாட்டில் இருக்குமாயின் அவர்கள் இலகுவில் போதைக்கு ஆளாகிவிடுவார்கள். இது போன்ற காரணங்களால் சீரழியும் இளைஞர் சமுதாயம் அதிலிருந்து வெளியேற வேண்டும். அதற்க்கு பெற்றோர்களின் அன்பும் அரவணைப்பும் அவசியம்.

குடும்பத்தில் எல்லா பிள்ளைகளிடமும் பெற்றோர்கள் சரி சமமான அன்பு பாசம் காட்டி அரவணைக்க வேண்டும்.

தாழ்வு மனப்பான்மை வளர விடாமல் காத்துக் கொள்ள வேண்டும். பெற்றோரிடம் உரிய அன்பும் அரவணைப்பும் கிடைக்காத சந்தர்ப்பத்தில் பிள்ளைகள் தங்களுக்கு ஏற்படும் மன முறிவை போக்க போதையை பயன்படுத்தி தீர்வு காண முனைகின்றனர்.

வாழ்வை நரகமாக்கக்கூடிய ஒரு சமூக தீமை பல்வேறு போதைப் பொருட்கள் பரவ காரணமாக அமைந்துவிடுகின்றது.

சிறுபிராயத்திலேயே இந்த சாபக்கேடான பழக்கம் பரவுவதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு

ஒன்று கூட நட்பு மற்றொன்று மட்டற்ற சுதந்திரம்

பொதுவாகவே சிறுவர்கள்,இளைஞர்கள் சிகரெட்,போதை இதுபோன்ற தீய பழக்கவழக்கங்களுக்கு ஆளாவது தீய நண்பர்களின் பழக்கவழக்கத்தினால் ஏற்படுகின்றது.

முதலில் நண்பர்களோடு சேர்ந்து பீடி,சிகரெட் என்று துவங்கும் தீய பழக்கம் நாளடைவில் மது,போதை போன்ற போதைப் பொருட்களுக்கு அவர்களை அடிமை ஆக்கிவிடுகின்றது.

இளைஞர்களே இலக்கு

போதைப் பொருள்கள் தூளாக, மாத்திரைகளாக, ஊசிகளாக பல வடிவங்களில் வருகிறது. மாணவப் பருவம் எதையும் செய்து பார்த்து விடலாம் என்று நினைக்கும் பருவம் என்பதால் பெரும்பாலும் பள்ளி மாணவர்களும் இளைஞர்களுமே இலக்காகின்றனர். உடல் வலிமைமிக்க இப்பருவத்தில் இளைஞர்களின் ஆற்றல்களும் வேட்கைகளும் உணர்வுகளும், சரியான முறையில் வளப்படுத்தப்படாமல் விடப்பட்டால் அது நாட்டிற்குப் பெரும் கேடாவே அமையும் என்பதை மறுக்க முடியாத நிதர்சனம். இந்தச் சிறப்புமிக்க பருவத்தைப் போதையின் பக்கம் இழுத்துச் சென்று சீர் கெடுப்பதில் நட்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

Drugs Addiction சீரழியும் இளைஞர் சமுதாயம்

பொது வாழ்வில் ஏற்படும் போட்டி சூழலுக்கு முகம் கொடுக்க முடியாமை,சவால்களை சந்திக்க முடியாமல் தோல்வி மனப்பான்மைக்கு ஆளாகும்போது போதையை (Drugs Addiction) நாடுகின்றனர்.

பரீட்சையில் தோல்வி, போட்டி நிகழ்ச்சிகளில் தோல்வி,படிப்பு ஏறவில்லை எனும்போது அவற்றுக்கு தீர்வாக போதையினை நாடுகின்றனர்.

இதுபோன்ற காரணிகளுக்கு உடந்தையாக மீடியாக்கள் செயற்படுவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


மீடியாவின் போதைக்கு ஆதரவான பிரச்சாரம்.

எந்தவொரு பிரச்சினையின் போதும் அதற்கு முகம் கொடுக்க முடியாதபோது போதையை பயன்படுத்துவதையே மீடியா முக்கியமான செய்தியாக காட்சிப்படுத்துகின்றது.

காதல் தோல்வி, குடும்பத் தகராறு, வாழ்வில் தோல்வி, வேலையின்மை, விரக்தி, நண்பர்களுக்கிடையிலான உறவில் விரிசல் போன்ற காட்சிகளில் கதாநாயகன் நாடக் கூடிய முதல் தீர்வு சிகரட் புகைப்பது, மது அருந்துவது என்பதைத்தான் இந்த சினிமா மற்றும் நாடகங்களில் காட்டப்படுகின்றது.

நமது நாட்டில் போதை பொருள் Correspondence அளவுக்கு இந்தியாவில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது. பாலிவுட் நட்சத்திரங்கள் தொடங்கி பள்ளி மாணவர்கள் வரையில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக கைதாகும் செய்திகள் தொடர்ச்சியாக வந்தபடி உள்ளன.

கடந்த செப்டம்பர் மாதத்தில், குஜராத்தில் அதானி குழுமத்துக்குச் சொந்தமான முந்த்ரா துறைமுகத்தில் 3.2 டன் அளவில் ஆப்கான் ஹெராயின் பிடிபட்டது.

அதன் மதிப்பு ரூ.21,000 கோடி. இவ்வாண்டில் இதுவரையில் 6 டன்னுக்கு மேல்ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது இரு மடங்கு அதிகம் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருள் நுகர்வில் உலக சராசரி 0.7 சதவீதமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் போதைப்பொருள் நுகர்வு 2.06 சதவீதமாக உள்ளது.

இதில் கூடுதலாக கவனிக்கத்தக்க விசயம் போதைப்பொருள் நுகர்வில் மட்டுமல்ல, கைமாற்றிவிடும் இடமாகவும், விநியோக மையமாகவும் இந்தியா உள்ளது என்பதுதான்.

இந்தியாவில் முறைகேடான போதைப்பொருள் சந்தையின் மதிப்பு ரூ.30,000 கோடிக்கு மேல் என்று அனுமானிக்கப்படுகிறது.

மும்பை நகரம் இந்தியாவின் போதைப்பொருள் கடத்தலின் தலைநகரமாக திகழ்கிறது என இந்து தமிழ் நாளிதழ் குறிப்பிடுகிறது.

தற்போதைய இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்துவரும் மது, சிகரெட்போன்ற பழக்கங்கள் மிக மோசமாக வளர்ந்துள்ள நிலையில் தற்போது சில இளைஞர்கள் கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப் பழக்கத்துக்கு அடிமையாவது கொடிகட்டி பரக்க தொடங்கியுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதை மாத்திரைகள் அதிக அளவில் புழங்கிக்கொண்டிருக்கின்றன.

போதைப்பொருள்களை பயன்படுத்துபவர்களில், 10 முதல் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளாக அதிகரித்துவருகிறது.

போதை பழக்கம் மீட்பு தொடர்பான மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது.

அதேபோல் போதைப்பழக்கத்தின் விளைவாக தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த பத்தாண்டுகளில் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது.

காரணங்கள்

மகிழ்விற்காக, துக்கம், கவலை, வலி போன்றவற்றை மறப்பதற்காக, சமூக அந்தஸ்து, கெஸ்ட் மேனர்ஸ் என்று போதை பயன்பாட்டிற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இவை மேலை நாட்டு கலாச்சாரம் என்று உயர்வாகக் கருதுவதும், இத்தகைய பழக்கங்களில் இளைஞர்கள் ஈடுபடுவது தவறில்லை என்பது போல் திரைப்படங்கள் சித்திரிப்பதும், பிரச்னைகளை மறந்து நிம்மதியாக இருக்க போதை தேவை என்ற எண்ணமும் இத்தீய பழக்கங்களுக்கு மக்களை அடிமைப்படுத்துகிது.

ஒரு சமுதாயத்தின் எழுச்சியை, முன்னேற்றத்தைத் தடுப்பதாக இருந்தால் போதைப் பொருள் பயன்பாட்டை அந்த சமுதாயத்தில் லேசாகத் தூவி விட்டாலே போதும். இப்பழக்கம் சமுதாயத்திற்கு எதிராக நடத்தப்படும் சிந்தனை ரீதியான தாக்குதலாகவே பார்க்கப்படுகின்றது.

போதைப் பழக்கம் தனிமனிதனைமட்டும் பாதிக்கும் பழக்கமல்ல. குடும்பம், சமுதாயம், அந்தஸ்து, வேலை, நட்பு, உறவு வட்டம் என அனைத்தையும் பாதித்து விரிசலை ஏற்படுத்தும் பழக்கமாகும்.குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் கிடைக்காமல் அவர்களின் எதிர்காலம் பாதிப்படைகிறது. வேலையையும் பொருளாதாரத்தையும் இழப்பதால் குடும்பத்தை வறுமையின் உச்சிக்குக் கொண்டு செல்கிறது. உலகில் ஏற்படும் 60% விபத்துகள் போதையில் வாகனம் ஓட்டுவதால் தான் ஏற்படுகிறது. தனி மனித ஒழுக்கம் சீர்கெடுவதால் நாட்டின் முன்னேற்றம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. போதை ஏற்படுத்தும் அனைத்தும் தடுக்கப்பட்டது என்பது நபிமொழியாகும்.

மேற்கத்திய கலாச்சாரத்தின் நேரெதிரான இரு முகங்கள்.

ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் ஒவ்வொரு போதை தரும் வஸ்துவையும்  ஹராம் என்று அறிவித்தது.

قال النبي صلى الله عليه وسلم :كل مسكر خمر وكل مسكر حرام ويقول: ما أسكر كثيره فقليله حرام 

أن النبي صلى الله عليه وسلم قال: الخمر أم الخبائث، فمن شربها لم تقبل صلاته أربعين يوما، فإن مات وهي في بطنه مات ميتة جاهلية.

 மதுவை அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும்  (نجس)தூய்மையற்றதாகவும், ஒவ்வொரு தீமைக்கும் மூலகாரணமாகவும், ஒவ்வொரு தீமைக்கும் ஆணிவேராகவும் அறிவித்துள்ளனர். .அனைத்து பாவங்களுக்கும் தாய் என்றும் அருவருக்கத்தக்க ஷைத்தானின் செயலாகவும் அறிவிக்கப்பட்டு அதன் கேடுகளைச் சொல்லி விலகியிருக்க கட்டளையிடப்பட்டுள்ளது. ஆனால் நாம் வாழும் சமூகத்தில், சுதந்திரம் என்ற பெயரில், மது மற்றும் பிற போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகின்றது .

இந்த விஷயம் மிகவும் ஆச்சரியமாகவும்,அதிர்ச்சியாகவும்  உள்ளது, ஏனெனில் இந்த சமூகத்தில், மக்களை குறைந்தபட்ச தீங்குகளிலிருந்து பாதுகாக்க படிப்படியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, கட்டுமானப் பகுதிக்குச் சென்றால், பாதுகாப்பு ஹெல்மெட் அணிய வேண்டும், காரில் அமர்ந்தால், பாதுகாப்பு பெல்ட் அணிய வேண்டும், வீடுகள் மற்றும் கட்டடங்களில் பாதுகாப்பு அலாரம் உள்ளது, என்ற தலைப்பில் பாதுகாப்பு கையேடு உள்ளது. ஒவ்வொரு பணியிடத்திலும் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு வலியுறுத்தப்படுகின்றது ,  

எந்தளவுக்கென்றால் ஒரு ஊசியை பயன்படுத்துவதாக இருந்தாலும் கூட பாதுகாப்பு அம்சங்களை கவனிக்கப்படுகின்றது.

போதையினால் ஏற்படும் பாதிப்புகள்

 சிறு பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க இவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்ட சமூகத்தில், மதுபானம் மற்றும் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுகின்றது, இதனால் உண்டாகும் விளைவு சிறிய தீங்கு அல்ல ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் இறக்கின்றனர்,

 புகையிலை,குடிப்பழக்கம் போன்றவற்றால் உயர் இரத்த அழுத்தம் மற்றும்   பல்வேறு ஆபத்தான நோய்கள் ஏற்படுகின்றன. இறப்புகளுக்கு மூன்றாவது முக்கிய காரணம் மது அருந்துதல் மற்றும் பிற போதைபொருட்களே ஆகும்.

2006 இன் புள்ளிவிவரங்களின்படி, ஐரோப்பாவில்  கல்லீரல் நோய்கள், பல்வேறு வகையான புற்றுநோய்கள் மற்றும்  சாலை விபத்துக்களுக்கு அதிகப்படியான மது அருந்துதலே முக்கிய காரணம் என்கிறது, இது ஒரு வருடத்தில் சுமார் 195,000 இறப்புகளை ஏற்படுத்துகிறது.

(Source: Adapted from WHO’s Global Burden of Disease study (Rehm et al 2004), Alcohol in Europe Anderson P, Baumberg B, Institute of Alcohol Studies, UK June 2006)

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவில் மட்டும் சுமார் 80,000 பேர் குடிப்பழக்கம் மற்றும் வேறு சில போதைப் பழக்கத்தால் இறந்தனர், 

20 ஆண்டுகால வியட்நாமில் நடந்த போரில்  58,000 உயிர்கள் பலியாகியுள்ளன.ஆனால்  ஒரே ஆண்டில் குடி மற்றும் போதை பழக்கத்தால் உயிரிழந்த  அமெரிக்கர்கள் 80,000 பேர் என்றால் இது எவ்வளவு பெரிய சமூக தீமை என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

 ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுமார் 3 மில்லியன் மக்களைக் கொல்லும் மதுப்பழக்கம் மற்றும் வேறு சில போதைப்பொருட்களை இன்றைய உலகம் அனுமதிக்கிறது.

 புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் ஆகியவற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை விட இந்த இறப்புகளின் எண்ணிக்கை அதிகம்.

உடலிலும்,மனதிலும் உண்டாகும் பாதிப்புகள்

மது மற்றும் பிற போதைப்பொருட்களின் பயன்பாடு  மனிதனை மிருகங்களை விட மோசமானவனாக மாற்றி விடுகிறது.

போதைதலைக்கேரியவன் புத்திதடுமாறி மனோஇச்சை தூண்டப்பட்டு விபச்சாரத்தில் வீழ்ந்துவிடுகின்றான்.

 போதைக்கு அடிமையானவரின் உடல்வலிமை பலவீனமடைகிறது, அதன் விளைவாக அவன் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறான்.

கூடுதலாக, மது மற்றும் பிற போதைப்பொருட்களின் பயன்பாடு மாரடைப்பு மற்றும் மன நோய்களை ஏற்படுத்துகின்றது, எண்ணற்ற குடும்பங்களின் அழிவிற்கு காரணமாக அமைந்துவிடுகின்றது, பெண்கள் மற்றும் குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள், மக்கள் திவாலாகிவிடுகிறார்கள், குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதினால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

போதைப்பொருள் பயன்பாடு உடலில் சிறு மூளையின் மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிப்படையச் செய்வதால் மனிதனின் நடத்தையிலும் உளவியலிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. முதலில் பாதிப்படைவது நரம்பு மண்டலம் என்பதால், மூளைக்குச் செல்லும் நரம்புகளைப் பாதித்து நினைவாற்றலைக் குறைக்கிறது. இதனால் சீரான இதயத்துடிப்பு பாதிக்கப்பட்டு இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. ஆகவே இதனை உட்கொள்கிறவர்கள் மனதளவில் தன்னம்பிக்கையை இழக்கிறான்.

மனஅழுத்தத்தை உண்டாக்கும். கோபம், உடல்சூடு அதிகமாகும். மயக்க நிலையை உண்டாக்கும். இதயம் சார்ந்த நோய்களை உருவாக்கும். புற்றுநோயைப் பரிசாகத் தரும். கல்லீரல் பாதிக்கப்படுவதால் கண்கள் மஞ்சள் நிறமாகும். இரத்தச் சுத்திகரிப்பு நடைபெறுவதைத் தடுக்கும். மூளையில் இரத்தக் கசிவை ஏற்படுத்தும். மேலும் வலிகளை உணர்வதும் தடுக்கப்படுகிறது. இவ்வாறு பலவித உடலியல் நோய்களை ஏற்படுத்தி மனிதனை முழுமையாக உருக்குலைக்கும்.

போதைப் பொருள் உபயோகிப்பதால் டோபமைன் (Dopamine) என்ற ஹார்மோன் உடலில் அதிகமாகச் சுரப்பதால் இவர்கள் ஒருவகையான இன்பத்தைப் பெறுகின்றனர். இந்த இன்பம் 3 முதல் 5 மணி நேரம் வரை நீடிக்கும். புதுவித இன்ப அனுபவத்தைத் தருவதால் தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தே இதனைப் பயன்படுத்துகின்றனர்.

தொடக்கத்தில் சக்தி அதிகரிப்பதைப் போன்ற நிலையை ஏற்படுத்தி புத்துணர்வு அளிப்பதாகத் தோன்றினாலும் போகப் போக விதவிதமான ஆரோக்கியமின்மையை ஏற்படுத்துகிறது. முதலில் ஆண்மை அதிகரித்தது போன்ற உணர்வைத் தந்தாலுமே காலப் போக்கில் அறவே ஆண்மையற்றவர்களாக ஆக்கி விடும். உடல் சோர்வு, குற்ற உணர்வு, தனிமையை நாடுதல் போன்ற அவல நிலையை உருவாக்கும். உடல் ஆரோக்கியம் பாதிப்படைவது மட்டுமின்றி சமுதாயத்திலும் குடும்பத்திலும் இத் தீய பழக்கம் ஏற்படுத்தும் பாதிப்புகள் மிக மிக அதிகம். போதைக்கு அடிமையானவர்கள் சுயகட்டுப்பாட்டை இழந்து, சுயமாகச் சிந்திக்க முடியாமல் போவதால் மனச்சிதைவு, உடல்நலக் கோளாறு, நாள்பட்ட நோய்கள், தீராத வலிகள் என பாதிப்புப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

5 முதல் 6 முறை போதைப் பொருள்களைப் பயன்படுத்தி டோபமைன் என்ற ஹார்மோன் சுரந்து அந்த இன்பத்தை உணர்ந்து விட்டால், அதற்கு அடிமையாகி விடு கின்றனர். இப்பழக்கம் அதிகரிக்கும் போது, அந்த அற்ப இன்பத்திற்காகத் திருடுதல், பொய் பேசுதல், கொலை, மானக்கேடான பாலியல் குற்றங்களையும் செய்யத் துணிகின்றனர். தான் என்ன செய்கிறோம் எதைச் செய்கிறோம் என்று அறியாமல் சமூகச் சீர்கேடுகளை விளைவிக்கின்றனர்.

நன்றி:தினமணி(13-09-2022)

ஆரோக்கியம்

ஆரோக்கியம் என்பது இறைவன் கொடுத்த அருட்கொடை. உடலின் உரிமைகளை நிறைவேற்றுவது நமது கடமையõகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு நாமே தீங்கிழைத்துக் கொள்வது பாவச் செயலாகும். இறைநம்பிக்கையின் பக்கம் மனதைத் திருப்புவதன் மூலமே இத் தீய பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆனால் மறுமையில் இது குறித்த விசாரணையும் தண்டனையும் உண்டு என்று அஞ்சுவோர் மட்டுமே இதிலிருந்து முற்றிலும் விலகிக்கொள்கின்றனர்.

போதையை தடுக்க இஸ்லாம் கூறும் அழகிய வழிகாட்டல்

மது,போதை போன்றவற்றிற்கு எதிராக அல்லாஹ்வின் கட்டளை:

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.(அல்குர்ஆன் : 5:90)

போதையின் விபரீதங்களை விவரிக்கும் குர்ஆன் வசனம்:

اِنَّمَا يُرِيْدُ الشَّيْطٰنُ اَنْ يُّوْقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ فِى الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ وَعَنِ الصَّلٰوةِ‌  فَهَلْ اَنْـتُمْ مُّنْتَهُوْنَ‏

நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?       (அல்குர்ஆன் : 5:91)

மது,ஆல்கஹால் மற்றும் இன்ன பிற போதைப் பொருட்கள் ஒரு நபரின் பிறப்பின் நோக்கமாகிய இறைவணங்கம்,இறைதியானம்,பிரார்த்தனை இவற்றை விட்டும் தடுக்கின்றது, இந்த விஷயங்கள் அனைத்தும் எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகின்ற لغویاتவீணான விஷயங்களில் அடங்கும்.

وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَۙ‏

இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.(அல்குர்ஆன் : 23:3)

நபி மொழிகளில் வருவதைப்போல...

مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكَهُ مَا لَا يَعْنِيهِ. (الترمذي، أبواب الزهد عن رسول اللّٰه)

ஒரு மனிதனின் இஸ்லாம் அழகாவது அவனுக்கு தேவைற்ற விஷயத்தை தவிர்ப்பது.

அதாவது தேவையில்லாததை விட்டுவிட வேண்டும் என்பது இஸ்லாத்தின் அழகு... எந்த ஒரு பயனற்ற செயலும் 

ஆரோக்கியத்தை வீணாக்கக் கூடாது. இந்த தீங்கான விஷயங்கள் ஈமானுக்கு கேடு விளைவிப்பதாகவும் அவற்றுக்கெல்லாம் தலையாயது மது என்றும் ஷரீஅத் தெளிவாக கூறுகின்றது.

இஸ்லாம் மிக அற்புதமான வழிகாட்டுதலை வழங்குகின்றது. குற்றங்கள்,மோசமான நடத்தைகள் பற்றி மட்டும் பேசவில்லை,மாறாக இந்த குற்றங்களைத் தவிர்ப்பதற்கான தீர்வுகள்,இந்த குற்றங்களால் எழும் சிக்கல்களையும் போதிக்கின்றது. இஸ்லாம் தீமையைத் தடுப்பது மட்டுமின்றி, அதற்கு வழிவகுக்கும் வழிகளையும் தடை செய்கிறது.

மேலும், போதைக்கு வழிவகுக்கும் கெட்ட சகவாசம் மற்றும் புகைபிடித்தல், உக்காபிடித்தல் போன்ற பழக்கங்களும் கூடாது என்று அறிவிக்கப்பட்டு அவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.


சிறார்கள் மற்றும் இளைஞர்களை போதையை விட்டும் தடுப்பதற்கான வழிகள்.

1-குழந்தைகளின் சேர்க்கைககளை(நட்புகளை)கண்காணிப்பது.

2-குழந்தைகளோடு பெற்றொர்கள் நட்பாக பழகவேண்டும்.இதனால் குழந்தைகள் தங்களின் பழக்கவழக்கங்களையும்,பிரச்சனைகளை பகிர்ந்துக்கொள்வார்கள்.

 குழந்தைகளின் சகவாசத்தைக் கண்காணித்து, அவர்களுடன் அன்போடு பழகி நம்பிக்கையான  உறவை வளர்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும், இதன்மூலம் அவர்களின் எண்ணங்களையும் போக்குகளையும் உணர்ந்து, சரியான நேரத்தில் வழிகாட்டி நெறிபடுத்துவதன் மூலம் அவர்களை வழிதவறாமல் காப்பாற்ற முயற்சிப்பது மிகவும்அவசியமாகும். 

கலந்துரையாடல் அவசியம்

வலி நிவாரணி மாத்திரையை போதை திரவமாக மாற்றி இளம் வயதினர் பயன்படுத்தி வருகிறார்கள். போதை மாத்திரையை சாப்பிடுவதை விட, திரவமாக மாற்றி உடலில் செலுத்தி போதைக்கு ஆளாகிறார்கள். இதை பயன்படுத்த தொடங்கிவிட்டால் தினசரி 2 முறையாவது கட்டாயம் ஊசிப்போட்டு போதை ஏற்றிக்கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு வந்து விடுகிறார்கள். மது, சாராயம் ஆகியவை கெட்ட வாடை வீசும் என்பதால் சிறுவர்கள், பெற்றோர்களிடம் சிக்காமல் இருக்க போதை ஊசியை தேர்ந்து எடுத்து சிக்கலுக்குள் மாட்டிக்கொள்கிறார்கள்.

பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து நடவடிக்கை எடுத்தால் விரைவாக போதைக்கு அடிமையாகும் சிறுவர் -சிறுமிகளை விரைவாக மீட்க முடியும். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளின் கைப்பைகளை பெற்றோர்கள் தினமும் சோதனை செய்து மாத்திரைகள், ஊசி போடும் சிரிஞ்ச் ஆகியவை இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். அவர்களின் வழக்கமாக தூக்க நேரத்தை தாண்டி தூங்குகிறார்களா? அல்லது தூக்கம் இல்லாமல் சிரமப்படுகிறார்களா? என்பதையும் பெற்றோர் பார்க்க வேண்டும். திடீர் என்று திருட்டுபழக்கம் வருவது. பொய் சொல்வது என்று புதிய பழக்கங்கள் வருகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். கைகளில் ஊசி போட்ட அடையாளங்கள் இருப்பதையும் கவனிக்க வேண்டும். குழந்தைகளிடம் பேச நேரம் செலவிட வேண்டும். அவர்களின் நண்பர்கள், தோழிகளுடனும் கலந்துரையாட வேண்டும். 17 வயது முதல் 24 வயது வரையானவர்கள்தான் போதை மாத்திரை, கஞ்சாவுக்கு அடிமையாகிறார்கள். பள்ளியில் இடைநின்ற மாணவ-மாணவிகள்தான் போதை வஸ்துகளின் வினியோகஸ்தர்களாக இருக்கிறார்கள்.

பள்ளிக்கூடங்களில் போதை கண்காணிப்பு குழுவை ஏற்படுத்தி, ஆசிரிய-ஆசிரியைகள் குழந்தைகளுடன் கலந்துரையாட வேண்டும். சந்தேகத்துக்கு உரிய மாணவனோ, மாணவியோ இருந்தால் அவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். காவல்துறையுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இளஞ்சிறார்களை பாதிக்கும் இந்த போதை அடிமைத்தனத்தில் இருந்து மீட்க இணைந்து அனைவரும் செயல்பட வேண்டியது அவசியம்.

நன்றி:தினத்தந்தி(19-05-2023)

ஒரு சமூகத்தில் போதைப்பொருள்களின் பயன்பாடு அதிகரிப்பது என்பது அந்தச் சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.அந்தச் சமூகம் வன்முறை மிக்கதாகவும், பாதுகாப்பற்றதாகவும் மாறும்.

இந்தப் புதைகுழியிலிருந்து இளைய தலைமுறையினரைக் காப்பது என்பது அவர்களின் குடும்பத்தினருக்கும் சரி, அரசுக்கும் சரி எளிதான செயல்பாடாக இருக்கப்போவதில்லை.

ஆறுமணி நேர அற்ப சந்தோஷத்திற்காக தங்கள் வாழ்கையை பணயம் வைக்கும் இளைய சமுதாயத்தினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை மீட்பது நம் அனைவரதும் பொறுப்பும், கடமையும் ஆகும்.

وَاَنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِ   ۛ وَاَحْسِنُوْا  ۛ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‏

அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.(அல்குர்ஆன் : 2:195)

எனவே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போதை பொருள் உபயோகம் இல்லாத சமூகத்தை உருவாக்குவோம்.

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Wednesday, 12 June 2024

ஜும்ஆ பயான் 14/06/2024

தலைப்பு:

குர்பானியின் சட்டங்கள்.

குர்பானி என்றால் என்ன?

குர்பானி  என்பது இஸ்லாத்தின் மிக முக்கியமான வணக்கமாகும், இந்த புனித மாதத்தில் மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் இந்த கடமையைச் செய்கிறார்கள்,  இப்ராஹிம் (அலை) அவர்களின் சுன்னாவைப் பின்பற்றி, அல்லாஹ்வுக்காக மில்லியன் கணக்கான பிராணிகள் பலியிடப்படுகின்றன.

குர்பானி   என்பது அடியார்கள் அல்லாஹுத்தஆலா உடனான தங்களின் காதலையும் அன்பையும் அ வெளிப்படுத்தும் வழிபாடாகும், அது உண்மையிலே உயர்ந்த அல்லாஹ்வின் திருப்தியை  பெற அவனை மகிழ்விக்க அடியானே தனது உயிரைக் கொடுத்திருக்க வேண்டும்;அதுவே யதார்த்தமும் ஆகும்.

ஆனால், உன்னதமானவனும், உயர்ந்தவனுமான அல்லாஹ்வின் கருணையே, விலங்குகளை அறுப்பதை மனித உயிருக்கு பகரமாக ஆக்கியதாகும்.

அல்லாஹ்வினால் செல்வச்செழிப்பையும்,வசதிவாய்ப்பையும் பெற்றவருக்கு,  குர்பானி ஒரு முக்கியமான தீனின் கடமையாகும், 

வசதிவாய்ப்பை பெற்றிருந்தும், இந்த மாபெரும் வணக்கத்தை இழந்தவர் மிகவும் துரதிர்ஷ்டசாலியாவார்.

குர்பானி கொடுக்கும் பாரம்பரியம், ஆதி பிதா ஆதம் (அலை) அவர்களின் காலம் தொட்டே நடைமுறையில் இருந்து வருகின்றது.

குர்ஆனில் மரியம் சூராவில் ஹஸ்ரத் ஆதம் (அலைஹி) அவர்களின் இரு மகன்களான ஹாபில் மற்றும் காபில் இருவரும் குர்பானி கொடுத்த வரலாறு கூறப்படுகிறது. 

ஹாபில்  ஒரு ஆட்டையும்,காபில் சில விளைச்சல் பொருட்களையும் குர்பானியாக முன்வைக்கின்றனர்.

ஹாபிலின் குர்பானி ஏற்றுக்கொள்ளப்பட்டு,காபிலின் குர்பானி மறுக்கப்படுகிறது.

وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ ابْنَىْ اٰدَمَ بِالْحَـقِّ‌ۘ اِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ اَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْاٰخَرِ قَالَ لَاَقْتُلَـنَّكَ‌ قَالَ اِنَّمَا يَتَقَبَّلُ اللّٰهُ مِنَ الْمُتَّقِيْنَ‏

(நபியே!) ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பியும்; அவ்விருவரும் (ஒவ்வொருவரும்) குர்பானி கொடுத்த போது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை; (பின்னவர்) “நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று கூறினார். அதற்கு (முன்னவர்) “மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்” என்று கூறினார்.(அல்குர்ஆன் : 5:27

அக்காலத்தில் குர்பானி  ஏற்றுக்கொள்ளப்பட்டதன் அடையாளமாக வானிலிருந்து நெருப்பு வந்து குர்பானியை கரித்து செல்லும்.

اَلَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ عَهِدَ اِلَيْنَاۤ اَلَّا نُؤْمِنَ لِرَسُوْلٍ حَتّٰى يَاْتِيَنَا بِقُرْبَانٍ تَاْكُلُهُ النَّارُ‌ قُلْ قَدْ جَآءَكُمْ رُسُلٌ مِّنْ قَبْلِىْ بِالْبَيِّنٰتِ وَبِالَّذِىْ قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوْهُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏

மேலும் அவர்கள், “எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை காண்பிக்கு)ம் வரை அவர் மீது நாங்கள் விசுவாசம் கொள்ள வேண்டாம்” என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்” என்று கூறுகிறார்கள். (நபியே!): “எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்” என்று நீர் கூறும்.(அல்குர்ஆன் : 3:183)

குர்பானி என்கிற வணக்கம் அமைப்பிலும்,வழிமுறையிலும் சற்று வித்தியாசங்களோடு எல்லா உம்மத்திலும் கடமையாக இருந்தது.

ஆனால் ஒரு முழுமைபெற்ற வணக்கமாக,உயர்ந்த நோக்கத்தை உள்ளடக்கிய அமலாக...

ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை)அவர்கள் தங்களின் பாசத்திற்குரிய மகனார் இஸ்மாயில் (அலைஹி) அவர்களை அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிட தயாரானபோது, அல்லாஹ் சுவனத்தில் இருந்து ஓர் செம்மறிஆட்டை இறக்கிவைத்து அவர்களின் தியாகத்தை அங்கீகரித்து,கியாம நாள் வரை அவர்களின் தியாகத்தை போற்றும் ஒரு திருநாளாக  உம்மத்தே முஹம்மதிய்யாவிற்கு குர்பானியை ஒர் வணக்கமாக ஆக்கிவிட்டான்.

குர்பானியின் சிறப்பு

சங்கைப்பொருந்திய ஹதீஸ்களில், நபி (ஸல்) அவர்கள் குர்பானியின்  முக்கியத்துவத்தையும்,சிறப்பையும் விவரித்துள்ளனர்.

(( يا رسول الله صلى الله علي وسلم ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم

قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة )) (ابن ماجہ ،کتاب الاضاحی)

”நபித்தோழர்களில் சிலர் நபி {ஸல்} அவர்களிடம் இந்த உள்ஹிய்யாவினால் என்ன கிடைக்கும்? இதன் தாத்பரியம் என்னவென்று வினவினர். அப்போது நபி {ஸல்} அவர்கள் இது உங்களின் தந்தையான இப்ராஹீம் (அலை) அவர்களின் அழகிய நடைமுறையாகும். இந்த உள்ஹிய்யா பிராணியின் ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஒவ்வொரு நன்மைகள் கிடைக்கும்” என்று நபி {ஸல்} அவர்கள் பதிலளித்தார்கள்.

குர்பானி கொடுக்காவிட்டால்..

ما رواه أحمد وابن ماجه وغيرهما عن أبي هريرة رضي الله عنه عن النبيّ صلّى الله عليه وسلّم قال: (( مَنْ وَجَدَ سَعَةً فَلَمْ يُضَحِّ، فَلاَ يَقْرَبَنَّ مُصَلاّنَا )) [حديث حسن].

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “யார் உள்ஹிய்யா கொடுக்கிற அளவுக்கு வசதி வாய்ப்புகள் பெற்றிருந்தும் உள்ஹிய்யா கொடுக்க வில்லையோ, அவர் நம் தொழுமிடத்துக்கு வரவேண்டாம்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                                         ( நூல்: அஹ்மத், இப்னு மாஜா )

குர்பானி யாரின் மீது கடமையாகும்?

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ

எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.
(அல்குர்ஆன் : 108:2)

துல்ஹஜ் பிறை 10,11,12 ஆகிய நாட்களில் ஏதேனும் ஒரு நாளன்று தனது தேவைகள் போக 87 1/2 கிராம் தங்கம் அல்லது 612 1/2 கிராம் வெள்ளி அல்லது அதன் மதிப்பு 2024 ஆம் ஆண்டின் கணக்குப்படி (சுமார் 58,800 ரூபாய்) பணமாகவோ பொருளாகவோ அடையப்பெற்றிருக்கும் பருவ வயதை அடைந்த, முஸ்லிமான ஒவ்வொரு ஆண் பெண்ணின் மீதும் குர்பானி கொடுப்பது கட்டாயக் கடமையாகும். ( வாஜிபாகும்).

வசதியற்ற ஏழைகளின் மீது குர்பானிக் கடமையில்லை . எனினும் ஒர் ஏழை குர்பானி நிய்யத்தில் ஓர் ஆட்டை வாங்கி விட்டால் அவர்மீது குர்பானி வாஜிபாகும். வசதி பெற்ற ஒருவர் ஈதுக்கு முன்னால் ஏழையாகிவிட்டால் அவர்மீதும் குர்பானி கடமையில்லை.

 ஹராமான முறையில் சேமித்த செல்வம் குர்பானிக்கு  தகுதி பெறாது. அதில் குர்பானிக் கொடுத்தால் குர்பானி நிறைவேறாது.

ஸதகதுல் ஃபித்ரின் (அளவு)நிஸாபே,குர்பானியின் நிஸாபாகும்.

குர்பானி வாஜிபாகுவதற்கு ஓராண்டு பூர்த்தியாகி இருப்பது ஷரத்து இல்லை. துல்ஹஜ் பிறை 12 அன்று சூரியன் மறைவதற்கு முன்பு நிஸாபை சொந்தமாக்கினாலும் வாஜிபாகும்.

அத்தியாவசிய தேவைகள் என்பது உயிர்வாழ,மானத்தோடு வாழ தேவையானவைகள் ஆகும்.

(எ.க)உணவு,தண்ணீர்,உடை,இருப்பிடம்

உபரியான பொருட்கள் என்றால் பயன்படுத்தப்படாமல் இருக்கும் பொருட்கள் ஆகும்.

ஒவ்வொரு நபரின் தேவைகளும் விருப்பங்களும் பொதுவாக மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவை, 

ஏகோபித்த கூற்றுப்படி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான, தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பொருட்களை சொந்தமாக வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது.

சில பொருட்கள் பயன்பாட்டில் இருக்கும்,அதனை பயன்படுத்த விருப்பமுள்ள பொருளாகவும் இருக்கும்.

அதனை வியாபாரப்பொருளாக பார்க்கப்படாமல் அத்தியாவசிய தேவையான பொருளாக கனிக்கப்படும்.

எனவே எந்த பொருட்கள் பயன்பாட்டில் இல்லாமலும்,அத்தியாவசிய தேவையாகவும் இல்லாமல் இருக்குமோ அவை மேல்மிச்சமான அதிகப்படியான பொருளாகும்,அவை குர்பானி நிஸாபில் அடங்கும்.

குர்பானி பிராணி எது?


وَلِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِّيَذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلٰى مَا رَزَقَهُمْ مِّنْ بَهِيْمَةِ الْاَنْعَامِ  فَاِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ فَلَهٗۤ اَسْلِمُوْا‌  وَبَشِّرِ الْمُخْبِتِيْنَ ۙ‏
இன்னும் கால்நடை(ப்பிராணி)களிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச் செய்வதற்காவே குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக்கிறோம்; ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
(அல்குர்ஆன் : 22:34)


ஒட்டகம், ஆடு, மாடு இவைகளையே குர்பானியாகக் கொடுக்க வேண்டும்.  இவையல்லாத மற்றவைகளை குர்பானியாக கொடுப்பது கூடாது. அவ்வாறு கொடுத்தால் குர்பானிக் கடமை நீங்காது.

 عَنْ أَنَسٍ، قَالَ ضَحَّى النَّبِيُّ صلى الله عليه وسلم بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ، فَرَأَيْتُهُ وَاضِعًا قَدَمَهُ عَلَى صِفَاحِهِمَا يُسَمِّي وَيُكَبِّرُ، فَذَبَحَهُمَا بِيَدِهِ.
அனஸ்(ரலி) கூறினார் 
நபி(ஸல்) அவர்கள் இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவர்கள் தங்களின் பாதத்தை அவற்றின் பக்கவாட்டின் மீது வைத்துக்கொண்டு அல்லாஹ்வின்பெயர் கூறி, 'தக்பீர்' (அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன் என்று) சொல்லி அவற்றைத் தம் கையால் அறுத்ததை பார்த்தேன்.
ஸஹீஹ் புகாரி : 5558. 

ஒட்டகம் ஐந்து வயதும் மாடு இரண்டு வயதும் ஆடு ஒரு வயதும் பூர்த்தியானதாக இருக்க வேண்டும். ஒரு வருடத்தின் தோற்றம் கொண்ட ஆறு மாத செம்மறி ஆட்டையும் குர்பானி கொடுக்கலாம். வரையறுக்கப்பட்ட வயதுக்கு கீழ் உள்ள பிராணிகளை குர்பானிக் கொடுப்பது கூடாது.

ஒரு குடும்பத்திற்கு ஒர் ஆடு போதுமாகாது . ஒரு குடும்பத்தில் பல பேர் ஐகாத் கொடுக்க தகுதி உள்ளவர்கள் எனில் அவர்கள் ஒவ்வொருவரும் தனக்காக தனியாக குர்பானிக் கொடுக்க வேண்டும். ஒர் ஆட்டின் நன்மையில் குடும்பம் ஒன்று சேரலாம். கடமையில் ஒன்று சேர முடியாது.

குறையுள்ள பிராணி குர்பானிக்கு தகுதியாகாது?


 عَنْ البَرَاءِ بْنِ عَازِبٍ، رَفَعَهُ قَالَ: «لَا يُضَحَّى بِالعَرْجَاءِ بَيِّنٌ ظَلَعُهَا، وَلَا بِالعَوْرَاءِ بَيِّنٌ عَوَرُهَا، وَلَا بِالمَرِيضَةِ بَيِّنٌ مَرَضُهَا، وَلَا بِالعَجْفَاءِ الَّتِي لَا تُنْقِي»

தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : பரா பின் ஆசிப் (ரலி)
( திர்மிதீ)

எனவே குர்பானி பிராணி ஆரோக்கியமாக இருப்பது அவசியம். இரு கண்கள் அல்லது ஒரு கண் குருடானவைகள், பாதிக்கு மேல் பார்வை குறைபாடு உடையவைகள், நொண்டி, ஒரு காது அல்லது இரு காது இல்லாதவைகள், மூன்றில் ஒரு பாகம் அல்லது பாதிக்கு மேல் காது அறுபட்டவைகள். அடிப்பகுதி வரை கொம்பு உடைந்தவைகள். நன்கு மெலிந்தது. வெளியில் தெரியக்கூடிய நோய் உடையவைகளைக் குர்பானிக் கொடுப்பது கூடாது.
இயற்கையிலேயே கொம்பில்லாத பிராணிகளைக் குர்பானிக் கொடுக்கலாம்.

குர்பானி பிராணியின் காதில் டேக் (tag) தொங்கவிடுவதற்காக போடப்படும் சிறு துளை ஒரு குறையல்ல. எனினும் அதுவும் இல்லாமலிருப்பது மிக சிறந்தது.

ஒரு விதை அடிக்கப்பட்ட பிராணிகளைக் குர்பானிக் கொடுப்பது கூடும்.சிறந்ததுமாகும்.

விரைவில் பிரசவிக்க இருக்கும் கர்ப்பிணி பிராணியை குர்பானி கொடுக்காமலிருப்பது நல்லது. ஒருவேளை குர்பானிக் கொடுத்த பின் வயிற்றில் குட்டி உயிருடன் இருந்தால் அதையும் உடனே குர்பானி கொடுக்க வேண்டும். இறந்திருந்தால் அதன் இறைச்சியை சாப்பிடுவது ஹராமாகும்.

கூட்டுசேர்வது


ஒட்டகம்.மாடு, 7 நபர்கள் வரை கூட்டு சேரலாம். கூட்டு சேரும் நபர்களில் யாரேனும் ஒருவர் ஒரு கூட்டில் அகீகாவை நிய்யத் செய்தால் அனைவரின் குர்பானியும் கூடும். ஆனால் அக்கூட்டில் ஒருவர் குர்பானியின் நிய்யத் இல்லாமல் வெறும் இறைச்சிக்காக வேண்டி மட்டும் கூட்டு சேர்ந்திருந்தால் யாருடைய குர்பானியும் கூடாது.

குர்பானிக் கொடுக்கும் நாட்கள்


துல் ஹஜ் பிறை பத்து முதல் பிறை 12 அஸர் வரை குர்பானி பிராணியை அறுக்கலாம். இந்த நாட்களுக்குள் ஒருவருக்கு குர்பானிக் கொடுக்க முடியாமல் போனால் அப்பிராணியை ஒரு ஏழைக்கு சதக்கா செய்துவிட வேண்டும். பிராணி வாங்கப்படாமல் இருந்தால் அதன் கிரையத்தை ஏழைக்கு சதக்கா செய்துவிட வேண்டும்.

குர்பானி பிராணியின் இறைச்சியை முஸ்லிம், முஸ்லிம் அல்லாதோர், ஏழை, பணக்காரர் என அனைவருக்கும் கொடுக்கலாம். குர்பானி பிராணியின் இறைச்சியில் பெரும்பகுதியை ஏழைகளுக்கு கொடுப்பதே சிறந்தது.

குர்பானித் தோலை தன் சொந்த பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்ளலாம். அல்லது பிறருக்கு சதக்காவாக கொடுத்து விடலாம். அதனை விற்பனை செய்வது கூடாது. ஒருவேளை விற்று விட்டால் அக்கிரயத்தை அப்படியே ஏழைக்கு சதக்கா செய்து விட வேண்டும். தான் வைப்பது கூடாது.

தக்பீர்


وَقَالَ ابْنُ عَبَّاسٍ وَاذْكُرُوا اللَّهَ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ أَيَّامُ الْعَشْرِ، وَالأَيَّامُ الْمَعْدُودَاتُ أَيَّامُ التَّشْرِيقِ.
وَكَانَ ابْنُ عُمَرَ وَأَبُو هُرَيْرَةَ يَخْرُجَانِ إِلَى السُّوقِ فِي أَيَّامِ الْعَشْرِ يُكَبِّرَانِ، وَيُكَبِّرُ النَّاسُ بِتَكْبِيرِهِمَا.
وَكَبَّرَ مُحَمَّدُ بْنُ عَلِيٍّ خَلْفَ النَّافِلَةِ.
(22:28)வசனத்தில்  அறியப்பட்ட  நாட்களில் இறைவனை திக்ரு செய்யுங்கள் என்பது துல்ஹஜ் பத்து நாட்களாகும் என்று இப்னு அப்பாஸ் ரலி கூறுகின்றார்கள்.

இப்னு உமர்(ரலி ) யும்  ,அபூஹீரைரா (ரலி) யும் துல்ஹஜ் மாதத்தில் முந்தைய பத்து  நாட்களில் கடை வீதிக்கு சென்றால் தக்பீர் சொல்வார்கள்  அதை பார்த்து மக்களும் சொல்வார்கள் நபிலான தொழுகைக்கு பிறகும் முஹம்மது பின் அலி (ரஹ்) அவர்கள் தக்பீர்  சொல்வார்கள்.

(குறிப்பு)
துல் ஹஜ் பிறை 9 ஃபஜ்ர் முதல் பிறை 13 அஸர் வரையுள்ள 23 தொழுகைகளுக்கு ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னால் ஒருமுறை தக்பீர் கூறுவது வாஜிபாகும். குர்பானி கொடுப்பவர், கொடுக்காதவர், ஊரில் இருப்பவர், வெளியூரில் இருப்பவர், ஜமாஅத்தாக தொழுபவர், தனியாக தொழுபவர், வீட்டில் தொழுபவர் என எவ்வித வித்தியாசமின்றி அனைவரும் தக்பீர் கூற வேண்டும்.

குர்பானி சம்பந்தமான சில முக்கிய சட்டங்கள்.

1)சிலர் முழு குடும்பத்தின் சார்பாக ஒரு ஆட்டை மட்டுமே குர்பானி கொடுக்கின்றனர், சில சமயங்களில் வீட்டில் பலர் நிசாபின் உரிமையாளர்களாக இருக்கிறார்கள், எனவே அவர்கள் அனைவரின் சார்பாக ஒரு ஆடு குர்பானி கொடுத்தால் எவருக்கும் குர்பானி நிறைவேறாது,ஒரு ஆடு ஒரே நபருக்கு பகரமாகும்,ஒன்றுக்கும் மேற்பட்டவருக்கு பகரமாகாது.


2)மாடு,ஒட்டம் இந்த இரு பிராணிகளில் ஏழு நபர்கள் பங்குதாரர்களாக குர்பானி கொடுக்கலாம்.(عالمگیری)

1584- عَنْ جَابِرٍ قَالَ نَحَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحُدَيْبِيَةِ الْبَدَنَةَ عَنْ سَبْعَةٍ وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ.رواه الترمدي

ஜாபிர் (ரழி) அவர்கள்கூறினார்கள். ஹுதைபிய்யாவின் வருடத்தில் நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஒரு ஒட்டகத்தை ஏழுவரின் சார்பாகவும், ஒருமாட்டை ஏழுவரின் சார்பாகவும் (குர்பானிக்காக)அறுத்தோம். (திர்மிதி)

3)கூட்டுகுர்பானியில் பங்குதாரர்களின் அனுமதியோடு அறுக்கவேண்டும்.அனுமதி பெறாமல் அறுத்தால் அவரின் குர்பானி நிறைவேறாது.

ஒரு இடத்தில் உறவினர்கள் சார்பாக குர்பானி கொடுக்கும் பழக்க,வழக்கம் இருந்தால், அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை, அனுமதியின்றி கூட குர்பானி கொடுக்கலாம்.(عالمگیری)

4)குர்பானி கொடுக்கும் நாளில் குர்பானி அவசியமாகும்.அதற்கு  வேறொன்று பகரமாக ஆகமுடியாது.

(எ.கா)குர்பானிக்கு பகரமாக அதன் கிரயத்தை ஸதகா செய்வது கூடாது.

(عالمگیری )

5)குர்பானி பிராணி குறைபாடற்றதாக இருக்க வேண்டும், குறைபாடுள்ள பிராணிகளின் குர்பானி   அனுமதிக்கப்படாது.(ردالمحتار)

 وَلاَ بِالعَوْرَاءِ بَيِّنٌ عَوَرُهَا، وَلاَ بِالمَرِيضَةِ بَيِّنٌ مَرَضُهَا، وَلاَ بِالعَجْفَاءِ الَّتِي لاَ تُنْقِي.

தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்பரா பின் ஆசிப் (ரலி)நூல் : திர்மிதீ(1417), அபூதாவூத்(4293), நஸயீ(4294) , இப்னுமாஜா (3135), அஹ்மத் (17777)

وَلَا تَجُوزُ الْعَمْيَاءُ وَالْعَوْرَاءُ الْبَيِّنُ عَوَرُهَا، وَالْعَرْجَاءُ الْبَيِّنُ عَرَجُهَا وَهِيَ الَّتِي لَا تَقْدِرُ أَنْ تَمْشِيَ بِرِجْلِهَا إلَى الْمَنْسَكِ، وَالْمَرِيضَةُ الْبَيِّنُ مَرَضُهَا، وَمَقْطُوعَةُ الْأُذُنَيْنِ وَالْأَلْيَةِ وَالذَّنَبِ بِالْكُلِّيَّةِ، وَاَلَّتِي لَا أُذُنَ لَهَا فِي الْخِلْقَةِ، وَتُجْزِئُ السَّكَّاءُ وَهِيَ صَغِيرَةُ الْأُذُنِ فَلَا تَجُوزُ مَقْطُوعَةُ إحْدَى الْأُذُنَيْنِ بِكَمَالِهَا وَاَلَّتِي لَهَا إذْنٌ

குருடானவை, அறவே நடக்க முடியாதவை காதுகள் துண்டிக்கப்பட்டவை, காதுகள் அறவே இல்லாதவை,வால், பித்தட்டு துண்டிக்கப்பட்டவை, மேயத் தெரியாதவை, மூக்கு துண்டிக்கப்பட்டவை, மடி துண்டிக்கப்பட்டவை, கன்றுக்கு பால் கொடுக்க முடியாதவை, பால் வற்றியவை, நாக்கு இல்லாதவை,நஜீஸைத்தவிர மற்றதை சாப்பிடாதவை ஒரு கால் துண்டிக்கப்பட்டவை ஆகியன குர்பானி கொடுக்கக்கூடாது.

(நூல் : துர்ருல்முக்தார் , ஆலம்கீரி, பக்கம் – 330)

6)குர்பானிக்காக அறுக்கப்படும் பிராணிகள் எவை?

பதில்: ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று மட்டும்தான். இவற்றில் அனைத்து வகையும் (செம்மறி, வெள்ளாடு, எருது, எருமை) கூடும்.

இவையல்லாத கோழி, வாத்து, மான், முயல் போன்ற பிராணிகளை சாப்பிடுவது ஹலாலாக இருந்தாலும் குர்பானியாக கொடுப்பது கூடாது

وَلِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِّيَذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلٰى مَا رَزَقَهُمْ مِّنْ بَهِيْمَةِ الْاَنْعَامِ فَاِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ فَلَهٗۤ اَسْلِمُوْا‌ وَبَشِّرِ الْمُخْبِتِيْنَ ۙ‏

குர்பானி செய்வதை ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமையாக்கி இருக்கின்றோம். அல்லாஹ் கொடுத்திருந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் மீது அவன் பெயரைக் கூறி குர்பானி செய்யுங்கள். ஆகவே, உங்களுடைய இறைவன் (ஒரே) ஒருவன்தான். ஆதலால், அவன் ஒருவனுக்கே நீங்கள் முற்றிலும் கட்டுப்பட்டு நடங்கள். உள்ளச்சம் உடையவர்களுக்கு (நபியே!) நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.(அல்குர்ஆன் : 22:34)

இவ்வசனத்தில் இடம் பெறும்”அல்அன்ஆம்”” எனும் வார்த்தை ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகளை எடுத்துக் கொள்ளும்.

மேலும் நபி (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் இம்மூன்று வகைப் பிராணிகளைத் தவிர மற்றவை எதனையும் அவர்களின் வாழ்நாளில் குர்பானிக்காக கொடுத்ததில்லை.

குர்பானி கொடுக்க வசதியற்றவர்கள் குர்பானி கொடுப்பதாக எண்ணிக் கொண்டு கோழி, சேவலை அறுப்பது மக்ரூஹ். அது குர்பானியாக ஏற்படாது.நூல் : ஆலம்கீரி, 

குர்பானிப் பிராணிகளின் வயது வரம்பு என்ன?

பதில்: 1. செம்மறியாடு, தும்பையாடு:- ஒரு வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அல்லது ஆறு மாதமாகி நன்கு கொழுத்து ஒரு வயது உடையது போல் இருந்தால் அதனை குர்பானி கொடுப்பதும் கூடும்.

2. வெள்ளாடு : ஒரு வயது முழுமை பெற்றிருக்க வேண்டும்.

3. மாடு : இரண்டு வயது முழுமை பெற்றிருக்க வேண்டும்.

4. ஒட்டகம் : ஐந்து வயது முழுமை பெற்றிருக்க வேண்டும்.

(ஷாஃபிஈ மத்ஹபுப்படி வெள்ளாடு இரண்டு வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். செம்மறி, தும்பையாடு ஒரு வயதைவிடக் குறைவாக இருந்து பல் விழுந்திருந்தால் கூடும்.

7)குர்பானி கொடுக்கும் நாள்கள் எத்தனை?

துல்ஹஜ் பிறை 10முதல் 12மாலை மஃக்ரிப் வரை மூன்று நாட்கள் (ஷாஃபிஈ மத்ஹப்படி 13 மஃக்ரிப் வரை நான்கு நாட்கள் ஆகும்.)

الأضحية جَائِزَةٌ فِي ثَلَاثَةِ أَيَّامٍ : يَوْمُ النَّحْرِ وَيَوْمَانِ بَعْدَهُ وَقَالَ الشَّافِعِيُّ : ثَلَاثَةُ أَيَّامٍ بَعْدَهُ لِقَوْلِهِ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ { أَيَّامُ التَّشْرِيقِ كُلُّهَا أَيَّامُ ذَبْحٍ } وَلَنَا مَا رُوِيَ عَنْ عُمَرَ وَعَلِيٍّ وَابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَنَّهُمْ قَالُوا : أَيَّامُ النَّحْرِ ثَلَاثَةٌ أَفْضَلُهَا أَوَّلُهَا- وَيَجُوزُ الذَّبْحُ فِي لَيَالِيِهَا إلَّا أَنَّهُ يُكْرَهُ لِاحْتِمَالِ الْغَلَطِ فِي ظُلْمَةِ اللَّيْلِ (الهداية)

ஷாபி மத்ஹபின் படி பிறை 10, 11, 12, 13 நாட்களில் குர்பானி கொடுக்கலாம். ஹனபி மத்ஹபின் படி பார்க்கும் போது பிறை 10, 11, 12 நாட்கள் மட்டுமே.

அவற்றில் முதலாவது நாள் கொடுப்பது சிறந்தது என்று நபி ஸல் அவர்கள் கூறி இருக்கிறார்கள். 

இரவில் கொடுப்பது கூடும் என்றாலும் அது மக்ரூஹ் ஆகும்.

குர்பானி கொடுக்க ஆரம்ப நேரம் எது?

பதில் : ஈத் தொழுகை நடத்த ஷரீஅத்தில் அனுமதியில் லாத அளவு குக்கிராமமாக இருந்தால், துல்ஹஜ் பிறை 10ஆம் நாள் சுப்ஹு ஏற்பட்டதிலிருந்து குர்பானியின் நேரம் ஆரம்ப மாகும். நகரவாசிகள் பெருநாள் தொழுகைக்கு முன்னர் குர் பானி கொடுப்பது கூடாது. தொழுகைக்குப் பின்னரே கொடுக்க வேண்டும். அவ்வூரில் ஏதாவது ஒர் இடத்தில் தொழுகை நடை பெற்றிருந்தாலும் போதும்.

கேள்வி:
நகரவாசிகள் தொழுகைக்கு முன்னரே குர்பானியை அறுத்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?

பதில் : அது குர்பானியாக(உள்ஹிய்யாவாக) நிறைவேறாது. மீண்டும் ஒரு பிராணியை தொழுகைக்குப் பின்னர் அறுத்து குர்பானி கொடுக்க வேண்டும்.

(ஷாஃபிஈ மத்ஹப் படி மேற்கூறிய நேரம் வந்தபின் தொழு கைக்கு முன்னர் அறுத்தாலும் கூடும். நேரம் வரும் முன் அறுத்து விட்டால் கூடாது.)

இன்று சில நாத்திக சிந்தனையுள்ள முஸ்லிம்கள்,தீன் நெறியற்றவர்களும் குர்பானியை விமர்சிக்கின்றனர். 

குர்பானி பணத்தையும்,காலத்தையும் வீணடிக்கும்காரியம் என பிதற்றுகின்றனர்.இருப்பினும் இது இஸ்லாமிய ஷரிஅத் படியும்,அறிப்பூர்வமாகவும் ஏற்புடைய கருத்தல்ல.

ஏனெனில் குர்பானி  கொடுப்பதால் பணமும் நேரமும் விரயம் என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்பானிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்க மாட்டார்கள்.

குர்பானி கொடுப்பது அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்கும், மகிழ்ச்சிக்கும் காரணம் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றுகள் மற்றும் செயல்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், இது அல்லாஹுத்தஆலாவின் மீதுள்ள அன்பின் வெளிப்பாடாகவும்,முஃமீன்களுக்கு மன்னிப்புக்கான காரணமாகவும் இருக்கிறது, எனவே, அத்தகையவர்களின் வார்த்தைகளை கண்டுக்கொள்ளவேண்டாம். 

அல்லாஹுத்தஆலா தனது அளப்பெரும் கிருபையால் அனைத்து முஸ்லிம்களின் குர்பானிகளையும் ஏற்றுக்கொள்வானாக!ஆமீன்...

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Wednesday, 22 May 2024

ஜும்ஆ பயான் 24/05/2024

நிகாஹ் எனும் திருமணம்

நிகாஹ் என்பது இஸ்லாமிய நெறிகளில் ஒன்று  என்று அறிமுகப்படுத்தாமல் மனிதப்படைப்பு மற்றும் அவனின் உருவாக்கத்தின் துவக்கம்தான் நிகாஹ் என்கிறது அருள்மறையாம் குர்ஆன்...

يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً‌  وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ‌  اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا‏

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 4:1)

அல்லாஹுத்தஆலா இவ்வசனத்தில் தன் வல்லமை,ஆற்றலை விவரிக்கின்றான்.

அவனே மனித சமுதாயத்தை தனித்துவமான முறையில் ஒழுங்கமைத்தவன்.ஆதம்(அலை)என்கிற  மனிதனை அதன் கலிஃபா பிரதிநிதியாக ஆதாரமாக்கினான்

ஆதம் (அலை) அவர்கள் வழியாக எந்த ஒரு வெளி உதவியும் இல்லாமல், பாழடைந்த வனாந்திர பூமியான உலகத்தை  மனித  மக்கள்தொகையால் செழிப்பாக மாற்றினான், இதனால் ஒரு தனி நபராக இருந்த மனிதனை ஒரு சமூகமாக மாற்றினான்.

ஷாஹ் முஹத்திஸ் திஹ்லவீ (ரஹ்)அவர்கள் கூறுகின்றார்கள்:

அல்லாஹூத்தஆலா சில உயிரினங்களை ஜோடிகளின் அவசியமற்றதாக மண்ணிலிருந்துப் படைத்தான்.                     (எ.க புழு,பூச்சிகள்)

மற்ற பெரும்பாலான உயிரினங்களை படைக்கும் போதே மண்ணிலிருந்து ஜோடிஜோடியாக படைத்தான்.

ஆனால் மனிதனை களிமண்ணிலிருந்து படைத்ததற்கு பின்னால் அவன் ஜோடியை (இணையை)அவனிலிருந்தே (முதுகு விலா எலும்பிலிருந்து)படைத்தான்.

மனிதப் படைப்பும்,இயற்கையான ஈர்ப்பும்.

அல்லாஹுத்தஆலா மனிதனை ஆண்,பெண் என்கிற இரண்டு இனங்களாக படைத்து,இயல்பிலே ஒன்று இன்னொன்றை ஈர்க்கும் விதத்தில் அமைத்துவிட்டான். இந்த ஈர்ப்பு இருவருக்கிடையில் நெருக்கத்தையும்,அந்த நெருக்கத்தை மனித இனம் பெருகுவதற்கு காரணமாக ஆக்கினான்.

ஆண்,பெண் இருவரில் ஒருவர் மற்றவரின் துணையின்றி வாழ்வை கழிக்க முடியாது.அல்லாஹுத்தஆலா இயற்கையிலே ஒருவருக்கு மற்றவரின் துணையை நிர்பந்த தேட்டமாக ஆக்கிவைத்துள்ளான்.

ஜோடிசேருவது தங்களின் வாழ்க்கை மற்றும் வம்ச விஸ்தீரணத்திற்கு இலகுவான வழியாக்கி வைத்துள்ளான்.

இந்த இயற்கையான ஈர்ப்பு குறிப்பிட்ட சில படைப்பிற்கு மாத்திரம் அல்ல எல்லா படைப்பிற்கும் பொதுவாக்கிவைத்துள்ளான்.

மனிதர்களில் நபிமார்கள், ஸஹாபாக்கள்,தாபிஃ, தபவுத்தாபிஃ, அவ்லியாக்கள்,இமாம்கள்,வலிமார்கள்,  உலமாக்கள்,முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர்கள்.

ஊர்வன,பறப்பன,நடப்பன என எல்லா உயிரினங்களிலும் இந்த ஈர்ப்பை வைத்திருக்கின்றான்.      

ஆண்,பெண் ஈர்ப்பென்து தவறான செயலன்று,மாறாக அதுவே இயற்கையாகும்,இஸ்லாம் இந்த இயற்கை அமைப்பை சிதைக்கவோ,தடுக்கவோ இல்லை,அப்படி தடுப்பது இயற்கைகே முரணாகும்.

இஸ்லாம் முழுமையான இயற்கை போதனைகளைக் கொண்ட ஒரு மார்க்கமாகும்.

இயற்கையை அடிப்படையாகக் கொண்ட அனைத்து விஷயங்களையும் ஆதரிக்கின்றது. அதனை பின்பற்றுபவர்களிடம் இயற்கை தேவைகளை அடக்குவதற்கு அவசியமான எந்த நிர்பந்ததையும் வைப்பதில்லை.        

இயற்கையான உணர்வுகளை நிராகரிப்பது ஒருபோதும் நன்மைக்கான ஆதாரமாக இருக்க முடியாது, அத்தகைய முயற்சி எடுக்கப்படும்போதெல்லாம், ​​​​அது மோசமான பின்விளைவுகளையே ஏற்படுத்தியது. 

உலகில் மதத்தின் பெயரால் இந்த இயற்கை தேவையை மறுக்கும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு,அவை அனைத்தும் தோல்வியிலும்,குழப்பத்திலும் முடிந்தன.

அவற்றில் கிறிஸ்தவத்தின் துறவறம் முதன்மையானது, இது முஜாஹதா என்ற பெயரில் இயற்கையான தேவைகளை மறுத்து, மனநல சக்திகளை அடிபணியச் செய்து மனித இயற்கை தேவையை கடுமையாக மறுத்தது, இதன் விளைவாக அவர்களின் மதம்  உலகில் நாசம்,ஊழல் மற்றும் குழப்பங்கள்  தோன்றவே வழிவகுத்தது.

இஸ்லாம் வெட்கம், கற்பொழுக்கம்,பத்தினித்தனம்  ஆகியவற்றை மனிதனுக்கு அணிகலன்களாக அறிவித்து வலியுறுத்துகின்றது.

قال رسول الله ‏ ‏صلى الله عليه وسلم:’’إذا لم تستحی فاصنع ما شئت‘‘

கண்மணி நாயகம் ﷺஅவர்கள் சொன்னார்கள்:உனக்கு வெட்கம் இல்லையென்றால்,நீ விரும்பியதை செய்துக்கொள்.

விலைமதிப்பற்ற வெட்கம்,கற்பொழுக்கம், பத்தினித்தனம் போன்ற உணர்வுகளை பேணிப்பாதுகாத்திட, இஸ்லாமிய ஷரியத் "நிக்காஹ்" என்கிற பரக்கத் பொருந்திய  வாழ்க்கை முறையை  முன்வைக்கிறது , இதனால் கற்பொழுக்கம்,பத்தினித்தனம் ஆகியன  சாத்தியமாகின்றது. திருமண பந்தத்தில் பங்கேற்பவர்கள் தூய்மையான வாழ்க்கையை வாழ முடிகிறது.

திருமணத்திற்கும்,விபச்சாரத்திற்கும் உள்ள வேறுபாடு.

மனிதனுக்கு இயற்கையாக உண்டாகும் இச்சையை பூர்த்திச்செய்வதற்கு ஆகுமான,ஆகாத இரண்டு வழிகள் உள்ளன.

ஆகாத வழி என்பது இந்தத் தேவையை நிறைவேற்ற விரும்பும் மனிதன், ​எந்த வரைமுறையும் இல்லாமல் முழு சுதந்திரத்தோடு தான் நினைத்த விதத்தில்  நினைத்த நபர்களுடன் பூர்த்தி செய்து கொள்வது .

இஸ்லாம் இதனை கடுமையாக எதிர்க்கின்றது. இதனை ’’زنا‘‘விபச்சாரம் என்றும்  மிகப்பெரும் பாவம் என்றும் சாடுகின்றது. 

சில மணிநேரங்களுக்கு விபச்சாரத்தில் ஈடுபடுவது உண்மையில் பிரபஞ்சத்தின் படைப்பாளனான அல்லாஹ்வின்  இயற்கையான கொள்கைகளுக்கு எதிரான ஒரு கிளர்ச்சியாகும்.

இதனால் தான் நிகாஹ்(திருமணம்)என்கிற ஆகுமான ஹலாலான வழிமுறையை இஸ்லாம் வழங்கியிருக்கின்றது.

இதன் மூலம் ஆகுமான வழியில் மனித இனம் உலகில் பல்கிப்பெருகும்.

எனவே, இதுப்போன்ற (விபச்சாரம்)பாவமான உறவுமுறைக்கு எதிராக ஷரிஅத் சட்டத்தில் மிகவும் கடுமையான அணுகுமுறையை எடுத்து, தீயவர்களுக்கு கடுமையான தண்டனைகளை பரிந்துரைக்கின்றது.       

தவிர, விபச்சாரம் என்பது ஒரு பொறுப்பற்ற கீழ்த்தரமான செயலாகும், இதில் ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் தற்காலிகமாக ஏற்றுக்கொள்கிறார்கள். ஒருவரையொருவர் அனுபவித்த பிறகு ஒருவரையொருவர் மீண்டும் பார்க்க அக்கறை காட்ட மாட்டார்கள்.

இதன் விளைவாக, பெண்ணின் எந்தப் பொறுப்பையும் ஆண் ஏற்கமாட்டான், பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையில் பரஸ்பர பாசமும்,எந்த சேவை மனப்பான்மையும் இருக்காது.

இருவரும் பிரபஞ்சத்தின் இயற்கைக் கொள்கைகளை மீறும் குற்றவாளிகளாக மாறுகிறார்கள், அவர்களின் இந்த தீயச்செயல் உலகத்திற்கும் அதில் வாழும் மக்களுக்கும் கேடு விளைவிக்கும் செயலாக மாறுகின்றது.

இஸ்லாமிய ஷரீஅத், இந்த இச்சையை பாலியல் திருப்திக்கு மட்டும் மட்டுப்படுத்தவில்லை; மாறாக, அதற்கு ஒரு முழுமையான,நீடித்த வடிவத்தை அளித்து, இந்த ஒப்பந்தத்தில் இருவரையும் பிணைத்து,

இதில்  வாழ்வாதாரம், செலவினங்கள்,உடை,உணவு,உறைவிடம் ஆணின் பொறுப்பாகும்.

குழந்தையை பராமரிப்பது, பாலூட்டுதல்,நல்ல முறையில் வளர்ப்பது பெண்ணின் பொறுப்பாகும்.

வாழ்க்கையின் வலி, துக்கம், மகிழ்ச்சி, மன அழுத்தம், புத்துணர்ச்சி மற்றும் சூடான,குளிர்ச்சியான சூழ்நிலைகளை இருவரும் ஒன்றாக எதிர்கொள்ள வேண்டும், இருவரும் தங்கள் முடிவுகளில் சமமான பங்கேற்பாளர்களாக இருக்கவேண்டும், அவர்களின் ஒவ்வொரு முடிவும் அவர்கள் இருவரின் உரிமையையும் ஒவ்வொருவரும் பேணும் விதத்தில் இருக்கவேண்டும்.

திருக்குர்ஆன் இந்த கணவன் மனைவி உறவை ஒரு சிறந்த உதாரணத்துடன் விளக்கியுள்ளது.

 هُنَّ لِبَاسٌ لَّـكُمْ وَاَنْـتُمْ لِبَاسٌ لَّهُنَّ  

 அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; (அல்குர்ஆன் : 2:187)

உடலுக்கு ஆடை எவ்வளவு அவசியமோ, அதே அளவு கணவன் மனைவியின் தோழமை ஒருவருக்கு ஒருவர் அவசியம்; அதன்மூலம் அவர்கள் ஒன்றிணைந்து நேர்மையான சமுதாயத்தை உருவாக்க முடியும்.          ۔

எனவே,இஸ்லாமிய ஷரீஅத் இந்த அருவருப்பான,அசிங்கமான,சமூகத்தில் தீங்குவிளைவிக்கும் விபச்சாரத்தை முற்றிலும் நிராகரித்து

 "நிகாஹ்" என்ற உலகளாவிய எளிமையான வாழ்வியல் முறையை முன்வைக்கிறது. 

இதில் பெண்ணின் பரஸ்பர சம்மதம், பெண்ணின் பாதுகாவலர் மற்றும் இருசாட்சிகள், (மஹர்)நியாயமான உரிமை தொகையளித்து ஆண் பெண்ணை தனக்கு ஹலாலாக்கிக்கொள்கிறான்.

"நிகாஹ்"உலகில் வந்த அனைத்து நபிமார்களும் செய்த பரகத்பொருந்திய அமலாகும்.

وَلَقَدْ اَرْسَلْنَا رُسُلًا مِّنْ قَبْلِكَ وَ جَعَلْنَا لَهُمْ اَزْوَاجًا وَّذُرِّيَّةً ‌  

(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; அவர்களுக்கும் மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம்; (அல்குர்ஆன் : 13:38)

இவ்வுலகில் திருமணம் செய்யாத நபிமார்களுக்கும் நாளை மறுமையில் சுவனத்தில் திருமணம் செய்து வைக்கப்படும்.

அதேப்போன்று மறுமையில் ஈமான் என்ற பொக்கிஷத்தை அடைந்தவர்களும், திருமணம் முடித்தவர்களும்தான் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.

நிகாஹ்விற்கு பிறகு உள்ள நிலையை தான் வாழ்க்கை என்பார்கள். அதற்கு முன்பாக உள்ள நிலை வாழ்க்கை அல்ல. அது வளர்ப்பு அல்லது வளர்ச்சி மட்டும்தான். எனவே தான் ஆங்கிலத்தில் வாழ்க்கையை குறித்து சொல்லும் போது

Life is not With out Ur wife 

என்பார்கள்.

நான்கு செயல்கள் நபிமார்களின் பொதுவான சுன்னத்களாகும்: 

1- வெட்கம்

 2- வாசனை திரவியம் .

3- மிஸ்வாக்

 4- நிக்காஹ்

இந்த பரகத்தான நிகாஹ்வை கண்மனி நாயகம்ﷺஅவர்கள் தமது வழிமுறை என்றார்கள்.’’النکاح من سنتی‘‘ (مشکوٰۃ)

திருமணம் என்பது பாலியல் இச்சையை தீர்த்துக்கொள்ளும் திருப்திக்கான வழிமுறை மட்டுமல்ல; மாறாக, அது ஒரு நபரின் ஆன்மீகம், தார்மீக நெறிமுறை மற்றும் சமூக வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் (عبادت) வழிபாட்டு நிலையில் உள்ளது.

திருமணம் نکاح ஆன்மீகம்,குடும்ப வாழ்க்கை இரண்டிலும் உண்டாக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை காணலாம்.    

திருமணம் ஏன் அவசியம்?

ஒவ்வொரு மனிதனுக்கும் அல்லாஹ் இயற்கையாகவே பாலுணர்வை ஏற்படுத்தியுள்ளான். இந்த ஆசையை முறையாக அவன் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக திருமணம் என்ற முறையை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

எனவே பாலுணர்வு உள்ளவர் கட்டாயமாகத் திருமணம் முடிக்க வேண்டும். இவர் திருமணத்தைப் புறக்கணித்தால் ஒரு நேரம் இல்லாவிட்டால் இன்னொரு நேரத்தில் தவறான பாதைக்குச் சென்று விடுவார். மனிதர் ஒழுக்கத்துடன் வாழ்வதற்கு திருமணம் சிறந்த வழிமுறை என்பதால் இதை மார்க்கம் வலியுறுத்துகின்றது.

மூன்று காரியங்கள் பிற்படுத்தப்படக்கடாது.

لا تُؤخِّرْ ثلاثًا: الصلاةُ إذا أتتْ، والجنازةُ إذا حضرتْ، والأَيِّمُ إذا وَجَدْتَ لها كُفْؤًا

الراوي: علي بن أبي طالب. أخرجه الترمذي (١٧١)

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அலீ ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1.தொழுகை அதற்கான நேரம் வந்து விட்டால். (தொழுவதற்கும்)

2.ஜனாஸா ஆஜராகி விட்டால்.  (தொழுது அடக்கம் செய்யவும்)

3.பருவ வயதை அடைந்த பெண்ணுக்குத் தகுந்த வரண் கிடைத்து.

மஹர் எனும் மணக்கொடை.

وَاٰ تُوا النِّسَآءَ صَدُقٰتِهِنَّ نِحْلَةً  فَاِنْ طِبْنَ لَـكُمْ عَنْ شَىْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوْهُ هَنِيْٓــٴًـــا مَّرِیْٓـــٴًﺎ‏

“பெண்களுக்கு (மஹர் எனும்) அவர்களின் மணக்கொடைகளை மனமுவந்து கொடுத்து விடுங்கள். அவர்கள் தாமாகவே அதில் எதையேனும் உங்களுக்கு மனமுவந்து விட்டுக் கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் உண்ணுங்கள்.” (4:4)

பெண்ணுக்கான மணக் கொடை மஹர் என்று கூறப்படும். இஸ்லாமியத் திருமணத்தில் இது முக்கியமானதாகும். இன்று முஸ்லிம்களில் பலரும் பெண் வீட்டாரிடம் சீதனம் பெறுகின்றனர். இது பெரும் குற்றமாகும். இஸ்லாம் பெண்ணுக்கு ‘மஹர்’ – மணக் கொடை கொடுத்து மணமுடிக்க வேண்டும் என்று கட்டளையிடுகின்றது.

இந்த மஹர் பணமாகவும், பொருளாகவும் இருக்கலாம். சில நபித்தோழர்கள் தோட்டத்தை, தங்கத்தைக் கொடுத்து திருமணம் முடித்துள்ளனர். மணப்பெண் எதை ஏற்றுக் கொள்கின்றாளோ அதுவும் மஹராக அமையலாம்.

ஒருவர் மணமுடித்து அந்தப் பெண்ணுடன் வாழ்ந்துவிட்டு பிரிய நினைத்தால் எவ்வளவுதான் மணக்கொடை கொடுத்திருந்தாலும் அதை மீளப் பெற முடியாது.

وَاِنْ اَرَدْتُّمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍ ۙ وَّاٰتَيْتُمْ اِحْدٰٮهُنَّ قِنْطَارًا فَلَا تَاْخُذُوْا مِنْهُ شَيْئًا‌  اَ تَاْخُذُوْنَهٗ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِيْنًا‏

நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா?(அல்குர்ஆன் : 4:20)

அவ்வாரே ஒரு பெண் தனது கணவரை வேண்டாம் என்று கூறி குலா கேட்கும் பொழுது கணவர் மஹரை திரும்ப கேட்டால்  கொடுத்து விடவேண்டும். அப்படி இல்லையெனில் கொடுக்க வேண்டிய தேவையில்லை.

இஸ்லாம் விதித்த இந்த மஹர் பெண்ணினத்திற்கு இஸ்லாம் கொடுத்த உரிமைகளில் ஒன்றாகும். இதை மீறுவது குற்றமாகும். இதை மீறி பெண்ணிடம் வரதட்சணை வாங்குவது ஆண் இனத்திற்கே அவமானமாகும்!

இஸ்லாமிய அடையாளத்தை இழக்கும் ஆடம்பர திருமணம்?

اِنَّ الْمُبَذِّرِيْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّيٰطِيْنِ‌  وَكَانَ الشَّيْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا‏

நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.(அல்குர்ஆன் : 17:27)

இன்று திருமணம் என்பது சம்பிரதாயச் சடங்குகளைக் கொண்ட கோலாகல விழாவாக மாறிவிட்டது. ஐந்தே நிமிடங்களில் நடந்தேற வேண்டிய ஓர் எளிய நிகழ்ச்சி ஐந்து மாதங்கள் முதல் ஐந்தாண்டுகள்வரை தயாரிக்கப்படும் இமாலய முயற்சியாகி விட்டது.

செல்வந்தர்களுக்கு இது ஓர் ஆடம்பர விழா! நடுத்தர மக்களுக்கு ஒரு கடின விழா! எளியவர்களுக்கு ஒரு கனவு விழா எண்ணிப்பார்க்கவே உள்ளம் வெதும்புகிறது.

எப்படியெல்லாம் நடக்கிறது?

விலையுயர்ந்த மண்டபம். அல்லது ஹோட்டல். ஆடம்பர பத்திரிக்கை. வரவேற்பு நிகழ்ச்சி. வீடியோ கேமரா. வீன் பந்தாவிற்கு தயாரிக்கப்பட்ட பல்வகை உணவுகள்.

இவையனைத்திற்கும் பல லட்ச ரூபாய்கள் வீணடிக்கப்படுகின்றன. இதனால் யாருக்கும் எந்தவித பிரயோசனமும் நன்மையும் கிடையாது.மாறாக இத்தகைய திருமணத்தின் மூலம் கடன்காரன் என்ற அந்தஸ்து மட்டுமே எஞ்சுகிறது.இந்த ஆடம்பரங்களும் அநாச்சாரங்களும் நாமே நம் மீது திணித்துக் கொண்டவை. இந்தப்பல லட்ச ரூபாய்களைக் கொண்டு எத்தனையோ வாழ வழியற்ற குடும்பங்களை வாழ வைக்க முடியும் என்பதை இஸ்லாமிய சமூகம் உணரவேண்டும்.

திருமணத்தின் ஆன்மீக பயன்கள்

عَنْ عَبْدِاللَّهِ بْنِ مَسْعُودٍ : قَالَ لَنَا رَسُولُ اللَّهِ ﷺ: يَا مَعْشَرَ الشَّبَابِ، مَنِ اسْتَطَاعَ مِنْكُمُ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ، وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ؛ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ. مُتَّفَقٌ عَلَيْهِ.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் எங்களிடம், ”இளைஞர் சமுதாயமே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். அதற்கு இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு, (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்” என்று கூறினார்கள். – (ஸஹீஹ் முஸ்லிம்

இந்த ஹதீஸில் கண்மனி நாயகம்ﷺஅவர்கள் இந்த உம்மதின் இளைஞர்களுக்கு திருமணத்தின் அவசியத்தை வலியுறுத்தி,அதன்  இரண்டு முக்கிய நன்மைகளையும்  குறிப்பிட்டுள்ளார்கள்.

1-பார்வை பாதுகாப்பு 2-மறைவிடப் பாதுகாப்பு

இந்த இரண்டின் அபாயம் மிகப்பெரியதாகும்.

ஆபாசம்,அசிங்கத்தின் நிகழ்வுகள் அனைத்தும் பார்வையில் துவங்கி விபச்சாரத்தில் முடிகிறது.

உலகெங்கிலும் ஆண்,பெண் இருசாராரின் பார்வை தொடர்பு இறுதியில் விபச்சாரத்திற்கு வழிவகுக்கிறது.

நிகாஹ் எனும் திருமணத்தால் இந்த ஆபாச வலை மூடப்பட்டு (ஃபித்னா)குழப்பத்தின் ஒரு பெரிய அத்தியாயமே மூடப்படுகிறது.

ما تَرَكْتُ بَعْدِي فِتْنَةً أضَرَّ علَى الرِّجالِ مِنَ النِّساءِ.

الراوي : أسامة بن زيد | المحدث : البخاري 

கண்மனி நாயகம்ﷺஅவர்கள் கூறினார்கள்:

எனக்கு பின்னால் ஆண்களின் மீது ஏற்படும் குழப்பங்களில் பெண்களை விட மிகத்தீங்கானதை நான் விட்டுச்செல்லவில்லை.(مشکوٰۃ)

இந்த குழப்பத்தை தடுப்பதற்கான ஒரே வழி நிகாஹ் ஆகும்.திருமணம் செய்வதால் பெண்ணின் குழப்பத்தை விட்டும் தடுக்கப்பட்டு,ஈமான் பாதுகாக்கப்படும்.

قال رسول الله صلى الله عليه وسلم: إذا تزوج العبد فقد استكمل نصف الدين فليتق الله في النصف الباقي.

கண்மனி நாயகம்ﷺஅவர்கள் கூறினார்கள்:அடியான் ஒருவன் திருமண செய்வானேயானால் அவன் ஈமானில் பகுதியை பூர்த்திச்செய்துவிட்டான்,மீதமுள்ள பகுதியில் அல்லாஹ்வை அவன் அஞ்சிக்கொள்ளட்டும்(احیاء العلوم ) 

ஒரு முஸ்லிமுக்கு மிகவும் விலை மதிப்பற்ற  செல்வம் ஈமான் ஆகும். இந்த ஈமான் என்ற செல்வத்தை பாதுகாக்க نکاح  திருமணமே சிறந்த வழியாகும்.    

நல்லோர்களின் கூற்று:

மனிதனின் தீங்கு என்பது வெளிரங்க உறுப்புகளை விட மறைந்திருக்கும் இரண்டு உறுப்புகளால் உண்டாகுவதே அதிகம் ஒன்று வயிறு மற்றொன்று மர்மஸ்தானம்.

வயிறு ஹராமான சம்பாத்தியத்தின் மையப்பகுதியக உள்ளது.பியூன்கள் தொடங்கி உலகக் கந்துவட்டிக்காரர்கள் வரை, அனைவரும் தங்கள் வயிற்றில் உள்ள நெருப்பை அணைக்க வட்டி, சூதாட்டம், மோசடி, லஞ்சம்,திருட்டுப் போன்ற எல்லா குறுக்கு வழிகளையும் பயன்படுத்துகிறார்கள்.

மர்ம உறுப்பின் தீங்கிற்கு மிகப்பெரும் காரணங்கள் டீவி போன்ற மின்னணு சாதனம்,அச்சு ஊடகங்கள், விளம்பர சந்தை, மொபைல் போன்கள், ஆபாச படங்களைக் காட்சிப்படுத்துதல், ஆபாசப் பொருட்கள் எளிதாகவும் மலிவாகவும் கிடைப்பது உள்ளிட்ட அனைத்தும் பரவலான ஆபாசங்களுக்கு வழிவகைச்செய்கின்றது.

இவை அனைத்தும் மனிதனின்  இயற்கை இச்சையை காமவெறியாக  மாற்றுகின்றன.

இஸ்லாம்,திருமணத்தை எளிதாகவும் எளிமையாகவும் ஊக்குவிப்பதன் மூலம்  இந்த சோதனைகளை விட்டும் மனிதனை பாதுகாக்கின்றது.

           

நிகாஹ்வின் அவசியமும்,அதனை தாமதிக்காமல் துரிதமாக செய்வதும்.

திருமணத்தின் தேவை பருவமடைந்ததிலிருந்து தொடங்குகிறது.பசி, தாகம் எழுவது போல பாலுணர்வும் இயல்பான ஒன்றாகும்.

இதனை தாமதமாக்குவது,அறிவுக்கு முரணாகும்.

ஒரு நபர் பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும்,பாலியல் ரீதியாக சக்திப்பெற்றிருந்தால், அத்தகைய நபருக்கு திருமணம் ’’فرض‘‘ "கட்டாயம்" ஆகிறது.

இமாம் கஸ்ஸாலி (ரஹ்)அவர்கள் احیاء العلوم இஹ்யாவுல் உலூமில் எழுதுகிறார்கள்:நிகாஹ் என்பது இறையச்சமுள்ளவர்,இறையச்சமில்லதவர் அனைவருக்கு கடமையாகும்

காரணம் ஷைதான் மனித மனங்களில் ஊசலாட்டதை உண்டாக்கி வழிக்கெடுப்பான்.

الَّذِىْ يُوَسْوِسُ فِىْ صُدُوْرِ النَّاسِۙ‏

அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.(அல்குர்ஆன் : 114:5)

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்)அவர்கள் தமது மனைவி வஃபாத் ஆனதும் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்கள்.இமாம் அவர்கள் அறிவிலும்,சிந்தனையிலும் அசாதாரண குணங்களை கொண்டிருந்தார்கள். இருப்பினும் ஷைத்தானின் ஊசலாட்டத்தை விட்டும் தப்பிப்பதற்கு நிகாஹ் எனும் சுன்னத்தான வழியை தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள்.இதனால் வணக்கவழிப்பாட்டிலும்,ஆன்மீகத்திலும் ஒரு ஓர்மை ஏற்படும்.

ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)அவர்கள் கூறுகின்றார்கள்:வணக்கசாலியின் عابد வணக்க வழிப்படு நிகாஹ் அன்றி பரிபூரணமாகாது.

நிகாஹ்வினால் ஏற்படும் உடல் மற்றும் உளவியல் சார்ந்த நன்மைகள்

திருமணத்தின் நன்மை, மனித உடலிலும்,ஆரோக்கியத்திலும் பிரதிபலிக்கின்றன.சரியான வழியில் இச்சையை தீர்த்துக்கொள்வது மனஅமைதிக்கும்,உடல்ஆரோக்கியத்திற்கும் காரணமாக அமைகிறது.

இந்த இச்சையை தீர்க்கா விடின் அது மூளையை சூடாக்கிவிடும்.

அதுபோலவே, மனிதனுக்கு இடைவிடாத வேலையினால் களைப்பும், சலிப்பும் ஏற்படுவதால், இறுதியில் மன அமைதியும், மனநிறைவும், தேவைப்படும் பொழுது அவனுடைய இருண்ட மனநிலையை அன்பாகவும், புத்துணர்ச்சியாகவும் மாற்றக்கூடிய  ஆற்றல் மனைவியோடு ஒன்றுகூடுவதால் பிறக்கின்றது.

அல்லாஹுத்தஆலா  இந்த உளவியல் சங்கடத்திற்கு நிக்காஹ் மூலம் சிறந்த தீர்வைக் கொடுக்கின்றான்:

وَمِنْ اٰيٰتِهٖۤ اَنْ خَلَقَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا لِّتَسْكُنُوْۤا اِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَّوَدَّةً وَّرَحْمَةً   اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.(அல்குர்ஆன் : 30:21)

உடலுறவின் மூலம் கிடைக்கும் திருப்தியினால் மனம்,உடல் இரண்டும் நிம்மதிப்பெறுகின்றது.இது ஆண்,பெண் இருவருக்கும் அவசியத்தேவையாக இருக்கின்றது.

அல்லாஹுத்தஆலா தன் பிரத்தியேகமான அடியர்களின் துஆவை இவ்விதம் குர்ஆனில் பதிவுச்செய்கிறான்.

وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏

மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.(அல்குர்ஆன் : 25:74)

கணவன் வீட்டில் நுழையும் போது அவன் மனைவியையும்,குழந்தைகளையும் கண்டால் மகிழ்ச்சி உண்டாகுமே அதற்கினையான பாக்கியம் வோறொன்றுமில்லை.

ஹழ்ரத் உமர்(ரலி)அவர்கள் சொன்னார்கள்:நல்ல மனைவி ஈமானுக்கு பின்பு கிடைத்த சிறந்தச்செல்வமாகும்.

அல்லாஹ் நம் மனைவியரை நல்ல மனைவியராகவும்,நம் சந்ததியை சிறந்த சந்ததியாகவும் ஆக்கிவைப்பானாக!ஆமீன்...

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.



   

Wednesday, 15 May 2024

ஜூம்ஆ பயான் 17/05/2024

ஹாஜிகளின் கவனத்திற்கு...

ஹஜ் எனும் கடமை.

ஹஜ் இஸ்லாத்தின் ஐந்து தூண்களில்  ஒன்றாகும். தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற கடமைகள் போன்றே புனித குர்ஆன், ஹதீஸ்  மற்றும் "இஜ்மாஃ" உம்மத்தின் ஒருமித்த கருத்து ஆகியவற்றால் ஹஜ் கடமை நிரூபிக்கப்பட்டுள்ளது; 

எனவே, எவர் ஹஜ் கடமையை மறுக்கிறாரோ அவர் காஃபிராவார். 

 ‌ وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا ‌ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنِ الْعٰلَمِيْنَ‏

இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 3:97) 

இந்த வசனம் ஹஜ் கடமையைப் பற்றி உறுதிப்படுத்துகிறது.

அண்ணலம் பெருமானார்ﷺஅவர்கள் கூறினார்கள்;

بُنِیَ الإِسْلاَمُ عَلَی خَمْسٍ: شَھَادَةِ أَنْ لاَ إِلَہَ إِلَّا اللہُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللہِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِیتَاء ِ الزَّکَاةِ، وَالحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ“․(بخاری شریف، حدیث نمبر:۸)

ஐந்தின் மீது இஸ்லாம் அமைக்கப்பட்டுள்ளது.

1,வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை மேலும் முஹம்மது நபி ﷺஅவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராக இருக்கிறார்கள்என்று சாட்சி சொல்வது.

2,தொழுகையை நிலை நாட்டுவது.

3,ஜகாத் கொடுப்பது.

4 ,ஹஜ் செய்வது

5,ரமலானில் நோன்பு நோற்பது.

(நூல்;புகாரி)

புனித ஹஜ்

புனித ஹஜ் யாத்திரை,வசதி வாய்ப்புள்ள முஸ்லிம்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் மேற்கொள்வது فرض தலையாயக் கடமையாகும்.

ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு ஹஜ் கடமையானது. அவ்வருடம் கண்மணி நாயகம் ﷺஅவர்கள் ஹழ்ரத் அபூபக்ர் சித்தீக் (ரலி)அவர்களின் தலைமையில் ஒரு குழுவை ஹஜ்ஜுக்கு அனுப்பினார்கள்.

ஹிஜ்ரி 10ஆம் ஆண்டு கண்மணி நாயகம் ﷺ அவர்கள் ஹஜ் செய்ய விரும்பி,தங்களோடு அதிகமான முஸ்லிம்கள் ஹஜ் செய்ய வேண்டும் என்பதற்காக பொது அறிவிப்பு செய்தார்கள். 

இதனால் நாயகம்  ﷺஅவர்களை பார்த்து ஹஜ் செய்யும் வாய்ப்பும்,அதனுடைய கடமைகளையும்,ஒவ்வொரு இடங்களிலும் சந்தர்ப்பங்களிலும் செய்யக்கூடிய அமல்களை அனுபவப்பூர்வமாக கற்றுக் கொள்ளும் பாக்கியம் நபியோடு ஹஜ் செய்தவர்களுக்கு கிடைத்தது.

இந்த ஹஜ்ஜில் சஹாபாக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் நபியிடம் ஹஜ் சம்பந்தமாக பல்வேறு மஸ்அலாக்களை கேட்டு அறிந்து கொண்டார்கள்.

நபி ﷺஅவர்களே ஹஜ் சம்பந்தமான மஸ்அலாக்களை தம்மிடம் கேட்டு தெரிந்து கொள்ள ஆர்வமூட்டினார்கள்.

«لِتَأْخُذُوا مَنَاسِكَكُمْ، فَإِنِّي لَا أَدْرِي لَعَلِّي لَا أَحُجُّ بَعْدَ حَجَّتِي هَذِهِ»

உங்களின் ஹஜ் சட்டங்களை முழுமையைக் பி(-ப)டித்து கொள்ளுங்கள் . ஏனெனில் மீண்டும் ஒரு முறை ஹஜ் செய்யும் வாய்ப்பு எனக்கு கிட்டுமா என்பது தெரியாது என நபி   ﷺஅவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள்.

 (ஸஹீஹ் முஸ்லிம்.அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) அவர்கள் -)

சங்கைப்பொருந்திய சஹாபாக்கள் நபி  ﷺஅவர்களிடம் ஹஜ்ஜின் சட்டங்களை முழுமையாக கற்று,பாதுகாத்து அதனை இந்த உம்மத் கியாம நாள் வரை பயன்பெறும் விதத்தில் முழுமையாக எத்திவைத்து சென்றுவிட்டனர்.

எனவே ஹஜ் செல்லக்கூடிய ஹாஜிகள்,ஹாஜிமாக்கள் ஹஜ்ஜின் மஸ்அலாக்கள்,அமல்கள்,ஹஜ்ஜில் அவசியமானவற்றை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.   

ஹஜ்ஜில் அனைத்து விதமான பாவங்களை விட்டும்,தவறான,வெறுப்பான சொல்,செயல்களை விட்டும் தவிர்ந்து பேணிக்கையாக இருப்பது அவசியமாகும்.

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பெருமக்கள் பயன்பெறும் விதத்தில் அறிஞ்சப்பெருமக்கள் ஹஜ் சம்பந்தமான சிறிய,பெரிய பல கிதாபுகளை இலகுவான விதத்தில்  எழுதி வைத்துள்ளனர்.

அதனை ஹாஜிகள்  நன்கு படித்து மனனமிட்டு,அதனை கையோடு எடுத்துச் செல்வது பயனுள்ளதாக அமையும்.

புனித ஹஜ்,வாழ்நாளில் ஒரு முறையேனும் தமக்கு செய்ய வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாக கருதி,அதில் எந்தவிதமான குறைபாடும் நிகழாமல் கவனமாக இருக்க வேண்டும்.

ஹஜ்ஜின் நிபந்தனைகள்

1.இஸ்லாம்

காபிருக்கு கடமையில்லை.அவனிடமிருந்து இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டன்.

2.புத்தியுள்ளவனாயிருத்தல்

«பைத்தியகாரர்களுக்கு ஹஜ் கடமையில்லை, மூன்று நபர்கள் குற்றவாளியாக கணிக்கப்பட மாட்டார்கள் :

 1.தூங்குபவர் எழும் வரை, 

2.சிறுவர்கள் பருவ வயதை அடையும் வரை.

3.பைத்தியகாரன் புத்தி தெளியும் வரையாகும்.

3.பருவ வயதை அடைந்திருத்தல்.

சிறுவர்கள் மீது ஹஜ் கடமையில்லை,ஆனால் செய்தால் ஏற்றுக்கொள்ளப்படும். என்றாலும் கடமையான ஹஜ்ஜை செய்தவராக கணிக்கப்படமாட்டார், அது அவருக்கு சுன்னத்தாக கணிக்கப்படும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:ஒரு பெண்மணி தம் குழந்தையை உயர்த்திக்காட்டி, "அல்லாஹ்வின் தூதரே! இவனுக்கும் ஹஜ் உண்டா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "ஆம்; (அதற்காக) உனக்கும் நற்பலன் உண்டு" என்று விடையளித்தார்கள்.                  (.ஸஹீஹ் முஸ்லிம் : 2597. )

சிறுவர் ஹஜ் செவதாக இருந்தால் அவர் இஹ்ராம் ஆடையை அணிய வேண்டும்.

4. சுதந்திரமானவனாக இருத்தல்

அடிமையின் மீது கடமையில்லை,


5. சக்தி பெற்றிருத்தல்

பயணம் செய்வதற்கு  ஒரு மனிதனுக்கு தேவையான உணவு, குடிபானம், ஆடை போன்றவை போதுமான பணம், (ராஹிலா : மனிதன் பயணம் செய்ய கூடிய கார், விமானம், கப்பல் போன்ற) வாகன வசதிகள் இருக்க வேண்டும்.

இன்னும் அதற்குச் செல்வதற்குரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்க வேண்டும்.

 ‌ وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا ‌ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنِ الْعٰلَمِيْنَ‏

இன்னும் பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 3:97)

6.பெண்ணுக்கு மஹ்ரமான ஆண் துணை இருத்தல்.

நபியவர்கள் பிரசங்கம் செய்ய நான் கேட்டதாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

«எந்த பெண்ணும் மஹ்ரம் இல்லாமல் பயணம் செய்ய வேண்டாம் என்று நபியவர்கள் கூறினார்கள்:

عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" لاَ يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ، وَلاَ تُسَافِرَنَّ امْرَأَةٌ إِلاَّ وَمَعَهَا مَحْرَمٌ "". فَقَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، اكْتُتِبْتُ فِي غَزْوَةِ كَذَا وَكَذَا، وَخَرَجَتِ امْرَأَتِي حَاجَّةً. قَالَ "" اذْهَبْ فَحُجَّ مَعَ امْرَأَتِكَ "".

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 

'ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுவிட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)' என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், 'நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்' என்று கூறினார்கள். 

(ஸஹீஹ் புகாரி : 3006. )

“எந்தவொரு பெண்ணும் தன்னுடன் மஹ்ரம் துணையில்லாமல் மூன்று நாட்களுக்குப் பயணிக்க வேண்டாம்.” ( முஸ்லிம்)

ஹஜ் பயணம் என்பது மூன்று நாட்களுக்கு மேற்பட்ட பயணம் என்பதால் இந்த ஹதீஸின் படி ஒரு பெண் ஹஜ்ஜுக்குச் செல்ல முடியாது என்பது தெரிகிறது.

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டே ஒரு பெண்ணோ, அல்லது பல பெண்களோ (திருமணம் முடிக்க தடை செய்யப்பட்ட) மஹ்ரமான ஆண்கள் துணையின்றித் தனிமையில் ஹஜ் பயணமோ, அல்லது வேறு பயணமோ செல்லக் கூடாது எனக் கூறப்படுகின்றது.

இதற்குத் தவறான வியாக்கியானம் செய்யும் சில அறிஞர்கள் “நம்பகமான பெண்கள் பலருடன் சேர்ந்து ஒரு பெண் ஹஜ்ஜை நிறைவேற்றலாம்!” என வாதிடுகின்றனர். ஒரு பெண் தனிமையில் பள்ளிக்குச் சென்று தொழுகையை நிறைவேற்றுவது போன்று ஹஜ் செய்யச் செல்லலாமா? முடியாதா? என்ற வாதப் பிரதிவாதங்கள் மார்க்க அறிஞர்கள் வட்டத்தில் காணப்பட்டாலும் “மஹ்ரம்” என்ற ஆண் துணையுடன் ஹஜ் செய்வதையே நபி(ஸல்) அவர்கள் கட்டாயப்படுத்தி இருப்பதைப் பார்க்கின்றோம். ஒரு பெண் மஹ்ரம் இன்றி ஹஜ் செய்ய முடியாது என்பதே நாம் சரியான கருத்தாகக் கொள்ளத் தக்கதாகும்.

தல்பியாவை அதிகப்படுத்துதல்

.لًبّيْكَ اَللّهُمَّ لَبَّيْكَ ، لَبَّيْكَ لا شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، اِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ  وَالْمُلْكَ  لاشَرِيْكَ  لَك

   “நான் வந்திருக்கிறேன். எனது இறைவனே! வந்திருக்கிறேன். உனக்கு இணை துணை கிடையாது. நான் வந்திருக்கிறேன். நிச்சயமாக புகழ் அனைத்தும் உனக்கே உரித்தானவை. அருட்கொடைகள் அனைத்தும் உன்னுடையவை. எல்லாவிதமான ஆட்சிகளும் உனக்கே உரித்தானவை. உனக்கு இணை எவரும் கிடையாது.”

  عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ بَيْنَمَا رَجُلٌ وَاقِفٌ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِعَرَفَةَ إِذْ وَقَعَ مِنْ رَاحِلَتِهِ فَأَقْصَعَتْهُ ـ أَوْ قَالَ فَأَقْعَصَتْهُ ـ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ، وَلاَ تُحَنِّطُوهُ وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، فَإِنَّ اللَّهَ يَبْعَثُهُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا "".

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 

(இஹ்ராம் அணிந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில் அல்லாஹ்வின் தூதருடன் தம் வாகனத்தின் மீதிருந்தார். திடீரென அவர், தன்னுடைய வாகனத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார்; அது அவரின் கழுத்தை முறித்துவிட்டார். (அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அவரின் உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரண்டு ஆடைகளால் கஃபனிடுங்கள்; அவரின் உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம்; அவரின் தலையை மறைக்கவும் வேண்டாம்: ஏனெனில் (இஹ்ராம் அணிந்திருந்த) அவர் கியாமத் நாளில் தல்பியா (லப்பைக் அல்லஹும்ம லப்பைக்...) சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்' எனக் கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி : 1266. )

ஹாஜிகளின் கனிவான கவனத்திற்கு...

ஹாஜிகள் தங்களின் ஹஜ்ஜை சரியான முறையில் நிறைவேற்றுவதற்கும்,பூரணமான நன்மைகளை பெறுவதற்கும் சிலவற்றை கடைபிடிப்பது அவசியமாகும். 

1-எண்ணங்களை (நிய்யத்)சீராக்கிக் கொள்க!

மனத்தூய்மை

وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِ 

ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்.

பெயர்.புகழ்.பட்டம் சம்பாதிப்பதற்கோ. தங்கம். டீவீ. பேரிச்சம் பழம் போன்ற பொருட்கள்  வாங்குவதற்கோ ஹஜ் அல்ல. அல்லாஹ்வின் திருப்தியை நாடி செல்ல வேண்டும்.

பாக்கியம் நிறைந்த ஹஜ் இறைக் காதலின் வெளிப்பாடாக இறைப் பொருத்தத்தை மாத்திரம் நாடி மேற்கொள்ளப்படும் புனிதப் பயணமாகும்.சில லட்சங்களை செலவு செய்து,பல அசௌகரியங்களை சகித்துக் கொண்டு மேற்கொள்ளும் ஹஜ்ஜை சில அற்ப காரணங்களுக்காக வீணடித்து விடக்கூடாது.ஊரில் தம்மை "ஹாஜியார்" என்று புகழாரம் சூட்ட வேண்டும் என்கிற ஹாஜி பட்டத்திற்காகவோ வேறு சில காரணங்களுக்காகவோ ஹஜ் செய்வதை தவிர்த்து இறை பொருத்தத்தை மாத்திரம் நாடி ஹஜ் செய்ய வேண்டும்.

 قال رسول الله ‏ ‏صلى الله عليه وسلم: ‏يأتي على الناس زمان يحج أغنياء أمتي للنزهة وأوسطهم للتجارة وقراؤهم للرياء والسمعة وفقراؤهم للمسألة " ‏

கண்மணி நாயகம் ﷺஅவர்கள் கூறினார்கள்:மக்களின் மீது ஒரு காலம் வரும் என் உம்மத்தில் செல்வந்தர்கள் சுற்றுலாவிற்காகவும்,நடுத்தரவர்க்கத்தினர் வியாபாரத்திற்காகவும்,காரிகள் பகட்டுப்பெருமைக்காகவும்,ஏழைகள் பிச்சை எடுப்பதற்காகவும்  ஹஜ் செய்வார்கள்.

2-ஹாஜிகள் ஹஜ் பயணத்தில் இமாம் ஜமாஅத்தோடு தொழுவதற்கு கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும்.

பொதுவாகவே ஹாஜுகள் இமாம் ஜமாஅத்திற்கு முக்கியத்துவம் தருவதில்லை.தொழுகையில் பேணிக்கையாக இருப்பவர்களும் இது விஷயத்தில் அலட்சியப் போக்கை கையாளுகிறார்கள்.

3-பெண் ஹாஜிமாக்கள் ஹஜ் பயணம் முழுக்க  ஃபர்தா விஷயத்தில் மிகுந்த முக்கியத்துவத்தோடு நடந்து கொள்ளவதே சிறப்பாகும். 

பெண்கள் ஹஜ்ஜில் இஹ்ராம் அணிந்து விட்டால் முகத்தை மறைக்கக் கூடாது என்பதற்காக ஃபர்தாவில் பொடுபோக்காக இருந்து விடக்கூடாது.

அன்னை ஆயிஷா (ரலி)அவர்களின் ஹஜ்ஜில் ஃபர்தா பேணிக்கை பெண்களுக்கு சிறந்த  முன்னுதாரணம் ஆகும். 

’’عن عائشۃؓ قالت: کان الرکبان یمرون بنا ونحن مع رسول اللّٰہ صلی اللّٰہ علیہ وسلم محرمات ، فإذا جاوزوا بنا سدلت إحدانا جلبابَھا من رأسھا علٰی وجہہا فإذا جاوزونا کشفناہ ، رواہ ابوداؤد وابن ماجۃ۔‘‘ (مشکوٰۃ،ص:۲۳۶، طبع: قدیمی کتب خانہ)

அன்னை ஆயிஷா (ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்;நாங்கள் (உம்மாஹாத்துல் முஃமினீன்)நபி  ﷺஅவர்களோடு ஹஜ் பயணத்தில் (முகத்தை மறைக்காமல்) இஹ்ராமில் இருந்தோம்.யாரேனும் எங்களை கடந்து சென்றால் நாங்கள் ஏதேனும் மறைப்பால் எங்கள் முகத்துக்கு நேராக வைத்துக் கொள்வோம்.அவர்கள் எங்களை கடந்து சென்றதும்.மறைப்பை நீக்கிவிடுவோம்.   

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் இஹ்ராமில் முகத்தில் துணிப்படாமல்

முகத்தை மறைப்பதற்கு கேப் போன்ற வடிவில் ஃபர்தா உள்ளது,பெண்கள் பேணிக்கைகாக அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது அறிஞ்சப்பெருமக்களில் கூற்றாகும்.


4-மக்கா முகர்ரமாவில் பெண்கள் தொழுவதற்கான தனி ஸஃப்கள் இருக்கும்.அதனை விடுத்து சில பெண்கள் ஆண்கள் வரிசையில் நிற்கின்றனர்.இது ஷரிஅத்தில் தடுக்கப்பட்டதாகும். பெண்கள் இதனை அவசியம் தவிர்த்துக்கொள்ள வேண்டும். 

5-ஒரு முக்கியமான சட்ட சிக்கல் சில வருடங்களாக தொடர்கின்றது.அதாவது மக்கா,மதினா இரண்டு ஹரம்களிலும் ஜும்ஆவிற்கு  ஜவாலுக்கு முன்பே பாங்கு சொல்லப்படுகிறது.சிலர் இந்த பாங்கிற்கு பின்னால் சுன்னத் தொழ ஆரம்பித்து விடுகின்றனர்.ஆனால் இந்நேரத்தில் எந்தத்தொழுகையும் தொழுவது தடைச்செய்யப்பட்டுள்ளது. 

۔ ’’عن عقبۃ بن عامرؓ قال: ثلٰث ساعات کان رسول اللّٰہ صلی اللّٰہ علیہ وسلم ینہانا أن نصلی فیہن وأن نقبر فیہن موتانا حین تطلع الشمس بازغۃ حتّٰی ترتفع وحین یقوم قائم الظہیرۃ حتی تمیل الشمس وحین تضیف الشمس للغروب حتی تغرب ، رواہ مسلم۔‘‘                 (مشکوٰۃ،ص:۹۴،طبع:قدیمی کتب خانہ)

மூன்று நேரங்களில் தொழ வேண்டாம்; அல்லது இறந்தவர்களைப் புதைக்க வேண்டாம் என எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்கள்  தடை விதித்திருந்தார்கள். அவையாவன:

1- சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும்வரை,

2- ஒருவர் (வெயிலில்) நிற்கும்போது நிழல் விழாத நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் (மேற்கில்) சரியும்வரை.

3- சூரியன் மறையத் தொடங்கியதிலிருந்து நன்கு மறையும்வரை.

அறிவிப்பாளர் : உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி)

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تَحَرَّوْا بِصَلَاتِكُمْ طُلُوعَ الشَّمْسِ وَلَا غُرُوبَهَا فَإِنَّهَا تَطْلُعُ بِقَرْنَيْ شَيْطَانٍ

சூரியன் உதிக்கும் நேரத்தையோ சூரியன் மறையும் நேரத்தையோ நீங்கள் தொழுவதற்காகத் தேர்வு செய்யாதீர்கள். ஏனெனில் அது, ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதிக்கின்றது என்று அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்கள்  கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி)அவர்கள் )

எனவே ஹாஜிகள் ஜும்ஆவில் முதல் பாங்கிற்கு பின்னால் எந்தவிதமான சுன்னதோ,நஃபிலோ தொழக்கூடாது.அது எச்சரிக்கப்பட்டதும்,ஷரிஅத்தில் தடுக்கப்பட்டதும் ஆகும்.

6-தற்காலத்தில் பொதுவாக ஹாஜிகள் மினாவின் தங்குவதை அவசியமில்லை என தவறாக விளங்கி வைத்துள்ளனர்.சில ஹஜ் குரூப்புகளில் ஹாஜிகளை வழி நடத்திச் செல்பவர்கள், ஹாஜிகளிடம் "நீங்கள் கல்லெறிவதற்காக மட்டும் மினாவிற்கு சென்றால் போதுமானது மற்ற நேரங்களில் அங்கு செல்லாமல் உங்கள் அறைகளில் தங்கிக் கொள்ளலாம்" என்று கூறுகின்றனர்.

இன்னும் சிலர் இரவு தங்குவதற்காக மினாவிலிருந்து  மக்காவில் தங்களின்  அறைக்கு வந்து விடுகின்றனர்.

ஆனால் கண்மணி நாயகம் ﷺஅவர்கள் ஹஜ்ஜின் போது மக்காவிற்கு தவாஃப் செய்வதற்காக மட்டும்தான் வந்திருக்கிறார்கள்.மூன்று தினங்கள் மினாவில் தான் தங்கினார்கள்.

நம் இமாம் இமாமுனா அபூஹனீஃபா (ரஹ்)அவர்களிடம் 'மினாவில் தங்குவது سنت مؤکدہ வலியுறுத்தப்பட்ட சுன்னத் ஆகும்"

ஏனைய மற்ற இமாம்களிடம்  மினாவில் தங்குவது واجب வாஜ்பாகும்.

அமீருல் முஃமினீன் ஹழ்ரத் உமர் (ரலி)அவர்கள் ஹஜ்ஜில் மினாவில் தங்காதவர்களை கண்டித்திருக்கின்றார்கள். 

மௌலானா முஃப்தி முஹம்மது அர்ஷத் காஸிமி அவர்கள் தங்களின்

 ’’رسول اللہ ﷺ کا طریقۂ حج‘‘

"நபி ﷺஅவர்களின் ஹஜ்ஜின் முறைகள்"எனும்  உர்து கிதாபில் மினாவில் தங்குவது சம்பந்தமாக பல்வேறு ரிவாயத்களை தொகுத்து எழுதியுள்ளார்கள்.அவற்றில் சில...

1-அன்னை ஆயிஷா (ரலி)அவர்களின் ரிவாயத்:நபி  ﷺ அவர்கள் அய்யாமுத் தஷ்ரீக்வுடைய நாட்களில் மினாவில் தங்கினார்கள்.

 (ابوداؤد،ص:۲۷۱، اعلاء السنن، ص:۱۸۹)

2-அப்துர் ரஹ்மான் இப்னு ஃபரூக் (ரஹ்)அவர்களின் ஒரு ரிவாயத்:நபிﷺஅவர்கள் மினாவில் இருந்தார்கள்.அங்கு தங்கினார்கள்.

 (اعلاء السنن،ص:۱۹۰) 

3-இப்னு அப்பாஸ்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள்: அகபாவில்(மக்கா எல்லைக்குள்) யாரும் தஷ்ரீக் நாட்களைக் கழிக்கக் கூடாது. 

4-ஹஸ்ரத் உமர் ஃபாரூக் (ரலி)அவர்கள் மக்கள் மினாவில் தங்காமல் விட்டுவிடுவதை கண்டித்து வந்தார்கள்.

  (فتح القدیر، ص:۵۰۲) 

 5-இப்னு அபி ஷைபாவில் உள்ளது

அமீருல் முஃமினீன் ஹழ்ரத் உமர் (ரலி)அவர்கள் அகபாவில் (கல்லெறியும் தினங்களில்)எவரும் மக்கா எல்லையில் தங்குவதை தடை செய்தார்கள்.(فتح القدیر) 

6-அமீருல் முஃமினீன் ஹழ்ரத் உமர் (ரலி)அவர்கள் மினாவுடைய நாட்களில்

மக்கா முகர்ரமாவில் இரவு தங்குவதை தடை செய்தார்கள். 

 (فتح القدیر، ص:۵۰۲)

இந்த அறிவிப்புக்களை தொகுத்து விட்டு நூலின் ஆசிரியர் முஃப்தி சாஹிப் அவர்கள் எழுதுகிறார்கள்:

ஹாஜி பிறை 10 காலை முஸ்தலிஃபாவிலிருந்து மினாவுக்கு வரும் அவர், இப்போது 12 அல்லது 13ம் தேதி வரை மினாவில் இருப்பார். 4 நாட்கள் கடந்து பிறை 8 அன்று மக்காவில் இருந்து வந்து அரஃபாத் செல்வதற்கு முந்தைய நாள் மினாவில் தங்கினால். இவை மினாவின் 5 நாட்கள் ஆகும் , இந்த நாட்களை மினாவில் கழிப்பது சுன்னதே முஅக்கதா வாகும்.

இந்த நாட்களில் மக்காவில் கூட வேறு எந்த இடத்திலும் இரவில் தங்குவது சரியல்ல.

நபி ﷺஅவர்கள் மினாவில் தங்குவதை வலியுறுத்தி கூறியுள்ளார்கள்.

நபி ﷺ அவர்கள் இரவில் மக்கா முக்கரமாவிற்கு தவாஃப் செய்ய சென்றாலும்,இரவு தங்க மினாவிற்கு வந்து விடுவார்கள். 

7-அதே போல் பிறை 10 அல்லது 11 ஆகிய தினங்களில்  தவாஃபே-ஜியாரத் சென்றாலும், தவாஃப் முடித்துவிட்டு மினாவுக்குத் திரும்பி வந்து மினாவில் இரவு தங்க வேண்டும்.

"ஷரஹ் லுபாப்" என்கிற கிதாபில்

’’ولایبیت بمکۃ ولا فی الطریق لأن البیتوتۃ بمنٰی لیالیہا سنۃ عندنا واجبۃ عند الشافعیؒ۔‘‘                                                     (شرح لباب،ص:۲۳۵)

8-ஹிதாயாவில் "மினா அல்லாத மற்ற இடங்களில் இரவு தங்குவதை மக்ரூஹ் என்று எழுதப்பட்டுள்ளது.

ولایکرہ أن لایبیت بمنٰی لیالی الرمی لأن النبی علیہ الصلٰوۃ والسلام بات بمنٰی وعمر رضی اللّٰہ عنہ کان یؤدب علٰی ترک المقام بھا۔‘

9-இனாயா என்கிற கிதாபில் எழுதப்பட்டுள்ளது:கல்லெறிதல் என்கிற ஹஜ்ஜினுடைய கிரியைகளில் முக்கியமான கிரியை இலகுவாக்குவதற்காக மினாவில் இரவு தங்குவதை வலியுறுத்தப்பட்டுள்ளது.

(عنایہ علی الفتح،ص:۵۰۱)

10-ஜுஸ்வு ஹஜ்ஜத்துல் விதாஃ என்கிற கிதாபில் எழுதப்பட்டுள்ளது:

பெரும்பான்மையான உலமாப்பெருமக்களிடம் மினாவில் தங்குவது வாஜிப் ஆகும்.

இமாமுனா அபுஹனீஃபா (ரஹ்)அவர்களிடம் சுன்னதே முஅக்கதா ஆகும்.

(حجۃ الوداع،ص:۱۷۲)

11-தஹாவியில் எழுதப்பட்டுள்ளது:அய்யாமுத்தஷ்ரீக் உடைய நாளில் மினாவில் தங்காமல் இருப்பது மக்ருஹே தஹ்ரீம் ஆகும்.

’’دلالۃ الأثر علٰی لزوم المبیت بمنٰی فی لیالیہا ظاھرۃ أن لفظ ظاہر الہدایۃ یشعر بوجوبہا عندنا۔‘‘ ( اعلاء السنن،ص:۱۹۰)  

ஹாஜிகளுக்கு ஓர் வேண்டுகோள்!

கண்மணி நாயகம்  ﷺ அவர்கள்,சஹாபாப்பெருமக்கள்,தாபியீன்கள்,நல்லோர்களான நம் முன்னோர்கள் எவ்விதத்தில் ஹஜ் செய்தார்களோ அதுபோன்றே நாமும் ஹஜ் செய்ய முயற்சிக்க வேண்டும்.

உங்கள் சுய விருப்பு,வெறுப்புக்காக  ஒவ்வொரு அமலிலும் உங்கள் சுயஎண்ணங்கள்,கருத்துக்களின் படி நீங்கள் செயல்பட ஆரம்பித்தால் ஹஜ்ஜின் புனிதம் கெட்டுவிடும்.

ஆகையால் ஹாஜிகள் எச்ரிக்கையோடு ஹஜ்ஜின் செயல்களில் புதுமைகளைப் புகுத்துவதைத் தவிர்த்து கொள்ள வேண்டும்.

கண்மணி நாயகம்  ﷺ அவர்கள்,சஹாபாப்பெருமக்கள் எவ்விதம் ஹஜ் செய்ய கற்றுத் தந்தார்களோ அவ்விதமே ஹஜ் செய்யும் பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு வழங்கிடுவானாக!ஆமீன்...

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.



Thursday, 22 February 2024

ஜும்ஆ பயான் 23/02/2024

ஷபே பராஅத்...

அருள் மழைப்பொழியும் இரவு.

சங்கைக்குரிய ஷஃபான் மாதம் இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் எட்டாம் மாதம் ஆகும்.இம்மாதத்தின் மகத்துவத்தையும்,சிறப்புகளையும் பற்றி நம் கண்மணி நாயகம் ﷺஅவர்கள் பல நபி மொழிகள் பகன்றுள்ளார்கள்.

ஒரு நபி மொழியில்...

الشعبان شهری

"ஷஃபான் என்னுடைய மாதமாகும்"என நம் கண்மணிﷺ நாயகம் அவர்கள் கூறி அதன் சிறப்பை உணர்த்தியுள்ளார்கள்.

இன்னொரு அறிவிப்பில்...

شعبان شهري وشهر رمضان شهر الله تعالى

"ஷஃபான் என்னுடைய மாதமாகும்,ரமலான் அல்லாஹுடைய மாதமாகும்"(الجامع الصغير، رقم الحديث 4889)

ஹழ்ரத் துன் நூனுல் மிஸ்ரி(ரஹ்)அவர்கள் எழுதுகிறார்கள்; ரஜப் விதைகளை விதைக்கும் மாதம், ஷபான் பாசனம் பாய்ச்சும் மாதம், ரமலான் அதன் பழங்களை உண்ணும் மாதம்.

சங்கைக்குரிய ஷஃபான் மாதம் மேன்மையையும், சிறப்புக்களையும் தாங்கி இருப்பதற்கு,இம்மாதத்தில் உள்ள மேன்மைக்குரிய 15 ஆம் நாள் இரவு மிக முக்கிய காரணமாகும்.

இவ்விரவு அல்லாஹ்வின் அருளையும் பரக்கத்தையும்,சிறப்பையும் தாங்கியுள்ள இரவு ஆகும்.

இதற்கு அரபியில் نصف شعبان "நிஸ்ஃபு ஷஃபான் இரவு" எனப்படும்.

பராஅத் இரவு என்றால் என்ன?

اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةٍ مُّبٰـرَكَةٍ‌ اِنَّا كُنَّا مُنْذِرِيْنَ‏

மாதம் பிறை 15ம் இரவுக்கு லைலத்துல் முபாரக்கா (பரக்கத் செய்யப்பட்ட இரவு), லைலத்துர் ரஹ்மா (ரஹ்மத் செய்யப்பட்ட இரவு), லைலத்துல் பராஅத் விடுதலை பெறும் இரவு) என்றெல்லாம் கூறப்படும்.

அந்த இரவிற்கு உண்டு என்கின்ற விவரம் தப்ஸீர் குர்துபியிலும், திர்மிதியின் விரிவுரை நூலான துஹ்ஃபதுல் அஹ்வதியிலும் மற்றும் பிரபலமான நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.

குறிப்பாக இமாம் இக்ரிமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் கூறியுள்ளார்கள். பராஅத் எனும் அரபி சொல்லுக்கு விடுதலை என்பது பொருளாகும். புனிதமிக்க அவ்விரவில் நரகவாசிகள் விடுதலை பெறுகிறார்கள் என்பதால் அந்த இரவிற்கு லைலதுல் பராஅத் (விடுதலை பெறும் இரவு) என பெயர் வந்தது.

ஷபே பராஅத்திற்குள்ள வேறு சில பெயர்கள்.

இமாம் கஸ்ஸாலி(ரஹ்)அவர்களின் பிரபல்யமான "முகாஷஃபதுல் குலூப்"எனும் நூலில் இவ்விரவுக்கு வேறு சில பெயர்களையும் குறிப்பிடுகிறார்கள்.

لیلۃ التکفیر

பாவங்களுக்கு பரிகாரமாகும் இரவு.

شب حیات

ஜீவனுள்ள இரவு.

شب مغفرت

பிழையைப்பொறுத்தருளும் இரவு.

شب آزادی

நரக விடுதலை வழங்கும் இரவு.

لیلۃ الشفاعۃ (شب شفاعت)

சிபாரிசு செய்யும் இரவு.

لیلۃ القسمہ والتقدیر

களா கத்ரை நிர்ணயிக்கும் இரவு.

இவ்விதமே இமாம் கஷ்ஷாஃப்(ரஹ்)அவர்கள் இவ்விரவுக்கு நான்கு பெயர்களை குறிப்பிடுவார்கள்.

لیلۃ المبارکہ

பரகத் பொருந்திய இரவு

لیلۃ البراۃ

நரக விடுதலை வழங்கும் இரவு.

لیلۃ الصک

விதி நிர்ணையிக்கப்டும் இரவு என்பதால் "சீட்டு வழங்கப்படும் இரவு"

لیلۃ الرحمہ

அருள் மழை பொழியும் இரவு.

ஷபே பராஅத் இரவுக்குள்ள தனித்துவமான சிறப்புக்கள்.

அதிகமான திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் "சூரா துகானின் இரண்டாவது வசனத்திற்கு(انا انزلناه فی ليلة مبارکة)விரிவுறையில் நிஸ்ஃபு ஷஃபான் இரவின் தனித்துவங்களை விவரித்துள்ளார்கள்.

#இவ்விரவுவில் அனைத்து காரியங்களும் நிர்ணயிக்கப்படுகிறது.

#இவ்விரவை அமல்களில் கழிப்பது சிறப்பானதாகும்.

#இவ்விரவுவில் அல்லாஹ்வின் அருள் மழைப்பொழிகிறது. 

#இவ்விரவுவில் "ஷஃபாஅத்"சிபாரிசுக்கு முக்கியத்துவமளிக்கப்படுகிறது. 

#இவ்விரவுவில் அடியார்களுக்கு பாவமன்னிப்பு எழுதப்படுகிறது.

(زمخشری، الکشاف، 4: 272 تا 273)

"ஷபே பராஅத்" என்கிற பெயர் காரணம்.

சங்கைக்குரிய இவ்விரவுக்கு "ஷபே பராஅத்"எனப்படுகிறது.இது ஃபார்ஸி வார்த்தையாகும்.شبஎன்றால் ஃபார்ஸியில் இரவு என்பதாகும்.براتஎன்றால் விடுதலை என்று பொருள்.

அரபியில் இதற்குلیلۃ البرات லைலதுல் பராஅத் எனப்படும்.

அறிஞப்பெருமக்களின் கருத்து;பாவங்களிலிருந்தும்,நரகிலிருந்தும் இவ்விரவில் விடுதலையளிக்கப்படுவதால் இதனை"لیلۃ البرات"எனப்டுகிறது. 

ஷபே பராஅத் குறித்து குர்ஆனில்...

மேலே குறிப்பிட்டதை போல சூரா துகானின் இரண்டாவது வசனத்தில் இவ்விரவைப் பற்றி கூறப்படுகிறது.

اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةٍ مُّبٰـرَكَةٍ‌ اِنَّا كُنَّا مُنْذِرِيْنَ‏

நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்.   (அல்குர்ஆன் : 44:3)

இவ்வசனத்தில் வரும் لیلۃ مبارکۃ "பரக்கத் பொருந்திய இரவு" என்றால் அது எந்த இரவு என்பதில் அறிஞப்பெருமக்களுக்கிடையில் இரு கருத்துக்கள் நிலவுகின்றன.

ழியாவுல் குர்ஆன் ضیاء القرآن எனும் தஃப்ஸீரின் ஆசிரியர், அவ்விரண்டு கருத்துக்களையும் விவரித்துள்ளார்கள். 

ஹழ்ரத் இப்னு அப்பாஸ்(ரலி)அவர்கள், கதாதா(ரஹ்)அவர்கள் இன்னும் அதிகமான  முஃபஸ்ஸிரீன்களின் கருத்து:

இவ்வசனம் "லைலதுல் கத்ர்"யே குறிக்கின்றது.இதனை குர்ஆன் இறங்கிய இரவு "லைலதுல் கத்ர்"இரவு என்று  கத்ரு சூரா தெளிவுபடுத்துகிறது.

ஹழ்ரத் இக்ரிமா(ரஹ்)அவர்கள்,இன்னும் ஒரு பெருங்கொண்ட கூட்டத்தினரின்  கருத்து:

இவ்வசனம் நிஸ்ஃபு ஷஃபானையே குறிக்கின்றது.

கஸாயினுல் இர்ஃபான் خزائن العرفان எனும் நூலின் ஆசிரியர் எழுதுகிறார்கள்:

பரக்கத் பொருந்திய இரவு  لیلۃ مبارکۃ என்பதற்கு லைலதுல் கத்ரு இரவு மற்றும் நிஸ்ஃபு ஷஃபான் இரவு இரண்டையுமே சொல்வதற்கு இடம்பாடுள்ளது. 

இவ்விரவில் திருமறை குர்ஆன் லவ்ஹுல் மஹ்ஃபூலிலிருந்து முதலாவது வானத்திற்கு ஒட்டுமொத்தமாக இறக்கி அருளப்பட்டது.பின்னர் ஜிப்ரயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாயிலாக 30 (முப்பது)வருடங்கள் சிறுக சிறுக தேவைக்கு ஏற்ப இறக்கியருளப்பட்டது.ஒட்டுமொத்தமாக திருமறை இறங்கிய இரவு என்பதால் இவ்விரவில் அல்லாஹ்வின் ரஹ்மத்தும்,பரக்கத்தும் பூமியில் இறங்குகின்றது.துஆ ஒப்புக்கொள்ளப்படுகிறது.

ஷபே பராஅத் குறித்து ஹதீஸில்...

قال النبي صلى الله عليه وآله وسلم: «إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا نَهَارَهَا؛ فَإِنَّ اللهَ يَنْزِلُ فِيهَا لِغُرُوبِ الشَّمْسِ إِلَى سَمَاءِ الدُّنْيَا، فَيَقُولُ: أَلَا مِنْ مُسْتَغْفِرٍ لِي فَأَغْفِرَ لَهُ، أَلَا مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ، أَلَا مُبْتَلًى فَأُعَافِيَهُ، أَلَا كَذَا، أَلَا كَذَا، حَتَّى يَطْلُعَ الْفَجْرُ» رواه ابن ماجه من حديث علي رضي الله عنه،

நபிகள் நாயகம்ﷺஅவர்கள் சொன்னார்கள்: ஷஃபான் மாதத்ததின் பகுதி(15ம் நாள் )இரவு வந்துவிட்டால் அதன் இரவிலே நின்று வணங்குங்கள், அதன் பகலில் நோன்பு வையுங்கள், காரணம் அல்லாஹுத்தஆலா சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் உலகின் வானத்திற்கு இறங்கி வந்து "எவரேனும் பாவமன்னிப்பு தேடுபவர் இருக்கிறாரா? அவரின் பாவத்தை நான் மன்னிப்பேன்,எவரேனும் ரிஜ்கை  கேட்பவர் இருக்கிறாரா? அவருக்கு நான் ரிஜ்கை அளிப்பேன்,எவரேனும் சிரமத்தில் அகப்பட்டவர் இருக்கிறாரா? அவரின் சிரமத்தை நான் நீக்குவேன், இவ்வாறே அல்லாஹ் (அன்றைய இரவு முழுவதும்)காலை ஃபஜ்ரு உதயமாகும் வரை கேட்டுக்கொண்டே இருப்பான். 

 (அறிவிப்பவர் :அலீ (ரலி)அவர்கள் (நூல் இப்னுமாஜா)

وخرج الإمام أحمد  من حديث عبد الله بن عمرو، عن النبي صلى الله عليه وسلم قال: "إن الله ليطلع إلى خلقه ليلة النصف من شعبان، فيغفر لعباده، إلا اثنين، مشاحن، أو قاتل نفس"، وخرجه ابن حبان في (صحيحه)  من حديث معاذ، مرفوعًا.

நபி ﷺஅவர்கள் சொன்னார்கள்:  நிச்சயமாக அல்லாஹ் ஷஃபான் மாதத்தின் பகுதி (15ம் நாள்)இரவில் தனது படைப்பினங்களின் பால் இறங்கி வந்து தனது அடியார்களின் (அனைவரின்)பாவங்களை மன்னிக்கிறான்,இரண்டு நபர்களை தவிர

1.குரோதம் கொள்பவன்

2.தற்கொலை செய்து கொண்டவன்"

அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் அம்ர் பின்ஆஸ் நூல்:இப்னு ஹிப்பான்.

ஹதீஸ்கலையில் ழஈபான ஹதீஸின் தரம் .

இன்று சிலர் பராஅத்துடைய இரவ பற்றி வந்த ஹதீஸ்கள் அனைத்தும் ழஈபானது இந்த இரவிற்கு தனிச்சிறப்பு கிடையாது என்று கூறி மக்களை இபாதத்தை விட்டும் தூரமாக்குவது தவறான காரியமாகும் ஏனெனில் இந்த இரவின் சிறப்புக்கள் பற்றி 15 ஸஹாபாக்களைத் தொட்டும் ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது அதிகமான கிதாபுகள் இந்த இரவின் சிறப்புப் பற்றி பேசியுள்ளது.

இதுபற்றி வந்த ஹதீஸ்களில் அதிகமானது ழஈபாக இருந்தாலும் அவைகளை ஒன்று சேர்க்கும் போது ஹஸனுடைய அந்தஸ்தைப் பெறும் என்பது ஹதீஸ் துறையில் ஈடுபடக்கூடியவர்களுக்குத் தெரியாதவிடயமல்ல.

இந்த ஹதீஸ்கள் ழஈப் என்று வைத்துக்கொண்டாலும் ழஈபான ஹதீஸ்களை சட்டங்களுக்கு ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாதே தவிர அமல்களின் சிறப்புக்களுக்கு ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியும் என்பது முஹத்திஸீன்களிடத்தில் ஏகோபித்த கருத்தாகும் என இமாம் நவவி (ரஹ்) கூறியிருப்பதுடன் இந்த கருத்தை ஸலபுஸ்ஸாலிஹீன்களில் இமாம் ஸவ்ரி, இப்னு உயைனா இப்னு ஹன்பல் இப்னுல் முபாரக் இப்னு மஹ்தி இப்னு மஈன் (ரஹ்) போன்றோர்களும் கூறியுள்ளார்கள்.

அமல்களின் சிறப்புகளுக்கு ழஈபான ஹதீஸ்களை ஆதாரமாக எடுப்பதின் நிபந்தனைகளை தெளிவுபடுத்திய இப்னு ஹஜர் அல் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் இந்த இரவின் சிறப்பை தனது பத்ஹுல் பாரீயிலே பேசியுல்லார்கள்.

எனவே பராஅத்துடைய இரவு பற்றி வந்த ஹதீஸ்களில் சிலது ஸஹீஹ், சிலது ஹசன், சிலது ழஈப் எனவும் சில முஹத்திஸீன்கள் கூறியிருக்கும் போது இந்த இரவை தானதர்மங்கள், குர்ஆன் திலாவத் திக்ருகள் துஆகள் போன்ற வணக்கங்களால் உயிர்ப்பிப்பது எவ்வித சந்தேகமும் கிடையாது.

ஷபே பராஅத் இரவில் கண்மணி நாயகம்ﷺஅவர்கள்.

حديث عائشة رضي الله عنها. قالت: فقدتُّ النبي صلى الله عليه وسلم  ذات ليلة، فخرجت أطلبه، فإذا هو بالبقيع، رافعًا رأسه إلى السماء. فقال: "أكنت تخافين أن يحيف الله عليك ورسوله؟" فقلت: يا رسول الله، ظننت أنك أتيت بعض نسائك. فقال: "إن الله تبارك وتعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا، فيغفر لأكثر من عدد شعر غنم كلب" (خرّجه الإمام أحمد والترمذي وابن ماجه) (2)، وذكر الترمذي عن البخاري أنه ضعفه.

அன்னை ஆயிஷா (ரலி)அறிவிக்கிறார்கள்:                  ஒருநாள் இரவு வேளையில் நபி (ஸல்) அவர்களை காணவில்லை,அவர்களைத் தேடி நான் சென்றேன், அப்போது அவர்கள் வானத்தை நோக்கி தங்களின் தலையை உயர்த்தியவர்களாக ஜன்னத்துல் பகீ என்ற இடத்தில் (இருக்கக் கண்டேன்) அப்போது அவர்கள் "அல்லாஹ்வும் அவனது தூதரும் உனக்கு அநீதம் செய்வர் என பயந்து விட்டாயா?"என என்னிடம் கேட்டார்கள்,அப்போது நான் "யா ரசூலல்லாஹ் உங்களின் மனைவியர்களில் (வேறு) சிலரின் வீட்டிற்கு வந்திருப்பீர்கள் என நான் நினைத்தேன்"என்று கூறினேன்.அப்போது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்"நிச்சயமாக அல்லாஹுத்தஆலா ஷாபான் மாதத்தின் பகுதி (15ஆம் நாள்) இரவில் இவ்வுலகின் வானத்திற்கு இறங்கி கலப் கோத்திரத்தவர்களின் ஆடுகளின் (அடர்த்தியான) .ரோமங்களின் எண்ணிக்கையைவிட அதிகமானவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்குகிறான். (நூல் :திர்மிதீ) 

ஷபே பராஅத் இரவில் (ஸஹாபாக்கள்) நபித்தோழர்கள்.

ஸய்யதுனா அனஸ் இப்னு மாலிக்(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்:சஹாபாப்பெருமக்கள், ஷஃபான் பிறையை கண்டுவிட்டால் குர்ஆன் திலாவத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.தங்களின் பொருளின் ஸகாத்தை கணக்கிட்டு வரியவர்களுக்கும்,ஏழைகளுக்கும்  ரமலான் மாதத்தில் வழங்குவதற்காக தயாராக வைத்துக் கொள்வார்கள்.

அதிகாரிகள், கைதிகளை வரவழைத்து,தண்டனை உறுதியானவர்களுக்கு தண்டனை வழங்கிவிட்டு,மற்ற கைதிகளை விடுதலை செய்து விடுவார்கள்.

வியாபாரிகள், தங்களின் கடனை நிறைவேற்றிவிட்டு,தங்களுக்கு வரவேண்டிய கடன் நிலுவைத் தொகையினை வசூல் செய்து கொள்வார்கள்.

ரமலானின் பிறை தென்பட்டு விட்டால் சில சஹாபாக்கள் குளித்துவிட்டு இஃதிகாஃபில் அமர்ந்து விடுவார்கள்.   (غنية الطالبين، جلد1، ص246)

ஷபே பராஅத் இரவில் இமாமுனா ஹஸன்(ரலி)அவர்கள்.

இமாம் தாவூஸ் யமானி(ரஹ்)அவர்கள் கூறுகின்றார்கள்:நான்,இமாம் ஹஸன் இப்னு அலி(ரலி)அவர்களிடம் நிஸ்ஃபு ஷஃபான் குறித்தும்,அதில் அமல் செய்வது குறித்தும் கேட்டேன்.

அதற்கு இமாம்(ரலி)அவர்கள் பதில் கூறினார்கள்:நான் இந்த இரவை மூன்று பகுதிகளாக பிரித்துக் கொள்வேன்.

முதல் பகுதியில் எனது பாட்டனார் கண்மணி நாயகம்ﷺ அவர்களின் மீது ஸலவாத் ஓதுவேன்.இது அல்லாஹுத்தஆலாவின் கட்டளையின்படி அமல் செய்வதற்காகவாகும்.

اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ  يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا‏

இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.(அல்குர்ஆன் : 33:56)

இரவில் இரண்டாவது பகுதியில் "இஸ்திக்ஃபார்"பாவமன்னிப்புக் கோருதலில் ஈடுபடுவேன்,இதுவும் அல்லாஹ்வின் கட்டளையாகும்.

وَمَا كَانَ اللّٰهُ لِيُعَذِّبَهُمْ وَاَنْتَ فِيْهِمْ‌ وَمَا كَانَ اللّٰهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُوْنَ‏

ஆனால் நீர் அவர்களிடையே இருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான்; மேலும் அவர்கள் பாவமன்னிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை.(அல்குர்ஆன் : 8:33)

இரவின் மூன்றாவது பகுதியில் தொழுகையில் ஈடுபடுவேன்.இதுவும் இறைகட்டளையாகும்.

كَلَّا  لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ۩‏

(அவன் கூறுவது போலல்ல;) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.(அல்குர்ஆன் : 96:19)

நான் கேட்டேன் "இந்த இரவில் இது போன்ற அமல்களில் ஈடுபடக்கூடியவர்களுக்கு என்ன கூலிக்கிடைக்கும்." 

அதற்கு இமாம்(ரலி)அவர்கள் கூறினார்கள்: எனது தந்தை அலி(ரலி)அவர்கள் கண்மணி நாயகம்ﷺ அவர்கள் சொல்லக்கேட்டதாக சொன்னார்கள்

"எவர் ஷஃபான் பதினைந்தாம் நாள் இரவை அமல்களால் உயிர் பெறச்செய்வாரோ அவரை அல்லாஹ் مقربین இறைநெருக்கம் பெற்றவர்களில் எழுதிவிடுகிறான்.

இறைநெருக்கம் பெற்றவர்கள் குறித்து திருமறையில்...

فَاَمَّاۤ اِنْ كَانَ مِنَ الْمُقَرَّبِيْنَۙ‏

(இறந்தவர் இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் நின்றும் இருப்பாராயின்.(அல்குர்ஆன் : 56:88)

(توبه و استغفار، طاهرالقادری، ص:362، 361)

ஷபே பராஅத் இரவில் ஹழ்ரத் உமர் இப்னு அப்துல் அஸீஸ்(ரஹ்)அவர்கள்.

அமீருல் முஃமினீன் ஹழ்ரத் உமர் இப்னு அப்துல் அஸீஸ்(ரஹ்)அவர்கள் ஒரு தடவை சங்கைக்குரிய ஷஃபான் மாதத்தின் 15 ஆம் நாள் இரவில் வணக்கத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் தலையை உயர்த்தியபோது, ​​​​ஒரு பச்சை காகிதத்தைக் கண்டார்கள், அதன் ஒளி வானம் முழுவதும் பரவி இருந்தது ,அதில் எழுதப்பட்டிருந்தது:

هذه براءة من النار من الملک العزيز لعبده عمر بن عبدالعزيز.

சர்வவல்லமையுள்ள ஆட்சியாளன்,மிகைத்தோனாகிய  அல்லாஹ்வால் நரக நெருப்பிலிருந்து விடுபடுவதற்கான கடிதம் இது, அவருடைய அடியாரான உமர் பின் அப்துல் அஸீஸுக்கு வழங்கப்பட்டது.   (تفسير روح البيان، ج8، ص402)

மேற்கூறப்பட்ட அனைத்து அறிவிப்புகளில் இந்த செய்தி சூரிய ஒளியை விடவும் தெளிவாக விளங்குகின்றது:

நிஸ்ஃபு ஷஃபானின் மகத்துவ மிக்க சங்கைக்குரிய இரவு அல்லாஹுத்தஆலாவின் புறத்திலிருந்து ரஹ்மத்துகளையும், பரக்கத்துக்களையும்,பாவ மன்னிப்பின் பாக்கியத்தையும் கொண்டு வருகிறது.

எனவே சங்கைப்பொருந்திய ஷபே பராஅத் இரவில் அல்லாஹ்வின் அருளையும்,பரக்கத்தையும் அடைந்துக்கொள்ள முயற்சிப்போமாக!

அல்லாஹுத்தஆலா நம் அனைவருக்கும் ஷபே பராஅத் இரவின் நன்மைகளை அடைந்துக்கொள்ள தவ்ஃபீக் செய்வானாக! ஆமீன்...

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.



Wednesday, 14 February 2024

ஜும்ஆ பயான் 16/02/2024

தலைப்பு : அன்னையர் தினம் FEB-22

” الجنة تحت أقدام الأمهات ”

தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது” 

தாய் என்ற ஒற்றை சொல்லின் பொருளாக அளவு கடந்த அன்பு மற்றும் எண்ணிலடங்காத தியாகம் என்று சொல்ல முடியும். ஒரு தாயானவள் ஒரு குழந்தையினை பெற்றெடுத்து அதனை பாராட்டி சீராட்டி பாதுகாத்து வளர்ப்பதற்காக தன்னையே அர்ப்பணிக்கின்றாள்.

தன் உதிரத்தையே பாலாக தந்து குழந்தைகளினை வளர்க்கின்றாள். வாழ்வில் பல வலிகளை தாங்கி கொண்டு தனது குழந்தைகள் நலனுக்காக உழைக்கின்ற உயர்ந்த தியாக செயலாக இதனை கூறமுடியும்.

தாய்க்கு முதலிடம்:

عن أبي هريرة رضي الله عنه قال: "جاء رجلٌ إلى رسول الله - صلى الله عليه وسلم- فقال: يا رسول الله، من أحق الناس بحسن صحابتي؟ قال: أمّك، قال: ثمّ من؟ قال: أمّك، قال: ثمّ من؟ قال: أمّك، قال: ثمّ من؟ قال: أبوك (متفق عليه).

 ‘மனிதர்களுள் யாருக்கு நான் அதிகக் கடன்பட்டுள்ளேன்?’ இது நபித்தோழர் ஒருவரின் வினா. ‘தாய்’ என்று பதிலளித்தார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். ‘அடுத்து யார்?’ என மீண்டும் அவர் கேட்க, ‘தாய்’ என்றே கூறினார்கள். மூன்றாவது முறையாக ‘அடுத்து யார்?’ என்று கேட்டபோதும் ‘தாய்’ என்றே பதில் வந்தது. ‘அடுத்து யார்?’ என நான்காம் முறையாக அவர் கேட்க ‘தந்தை’ என்று பதிலளித்தார்கள் நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். ( அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, – புகாரீ ஷரீஃப்.)

ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு தாய்-தந்தை இருவருமே காரணம் என்பது உண்மையானாலும் தந்தையைவிட தாய்க்கே முதலிடம் வழங்குகிறது இஸ்லாம். 

தியாகத்திற்கு தாயைவிட வேறு சிறந்த உதாரணம் சொல்வது சிரமம். அவள் ஒரு குழந்தையின் பிறப்புக்காக இறப்பின் வாசல்வரை சென்று வருகிறாள; தன் உயிரைப் பணயம் வைத்துக் குழந்தையைப் பெறுகிறாள். குழந்தைக்காகத் தாய் செய்யும் தியாகம் மகத்தானது. கொஞ்ச நேரம் இளைப்பாறிக்கொள்ள ஒரு பத்து நிமிடம் மற்றொருவரின் விரகுச்சுமையைத் தாங்கி நிற்கவே ஒதுங்கிவிடுகிற இந்த காலத்தில் தொடர்ந்து பத்து மாதம் ஒரு சிசுவைத் தன் வயிற்றில் சுமப்பதென்பது எவ்வளவு பெரிய தியாகம்!

குழந்தைக்கு நோய் என்றால் தான் பத்தியம் இருக்கிறாள் என்பது மாத்திரம்அல்ல, நோய்வாய்ப்பட்ட குழந்தை மருந்து சாப்பிட விரும்பாதபோது நலமாயுள்ள தாய், தானும் அந்த மருந்தை சிறிது குடிக்கிறாள். ஏன்? தாய்க்கும் தனக்கும் ஒரே நோய்தான் என்று குழந்தை எண்ணி ஆறுதல் அடைவதற்காக. ஒரு அறிஞரின் சொல் எப்படி இருக்கிறது பாருங்கள்: ‘ஒரு தாய் தனக்கு என்னவாவெல்லாம் இருக்கிறாள் என்பதை மனிதன் கடைசிவரை உணர்வதில்லை. அவன் அதை உணரும் போது அவள் உயிரோடு இருப்பதில்லை’. சிலரது வாழ்வில் இது உண்மையும்கூட!

وَوَصَّيْنَا الْاِنْسٰنَ بِوَالِدَيْهِ‌ 

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; (அல்குர்ஆன் : 31:14)

என்று பல இடங்களில் தாய் தந்தை இருவருக்கும் அடிபணிந்து நன்றி செலுத்தி வருமாறு கூறும் அல்லாஹ், தாயின் தகுதியை தந்தையைவிட ஒருபடி மேலாக உயர்த்திச் சொல்வதற்கான காரணத்தையும் கூறுகிறான்.

حَمَلَتْهُ اُمُّهٗ وَهْنًا عَلٰى وَهْنٍ وَّفِصٰلُهٗ فِىْ عَامَيْنِ اَنِ اشْكُرْ لِىْ وَلِـوَالِدَيْكَ اِلَىَّ الْمَصِيْرُ‏

”அவனுடைய தாய் பலவீனத்தின் மேல் பலவீனம் கொண்டவளாக அவனைத் தன் கர்ப்பத்தில் சுமந்தாள், மேலும் அவன் பால்குடி மறக்க இரண்டு வருடங்கள் பிடிக்கின்றன.’ (அல் குர்ஆன் 31:14)என்று தாய் அனுபவிக்கும் துன்பத்தை தெளிவாகக் கூறகிறான். ‘பலவீனத்தின் மேல் பலவீனமாக’ என்ற அல்லாஹ்வின் கூற்இன்றைய மருத்துவ வல்லுநர்கள் கூறும் விளக்கத்தை கவனியுங்கள்:

குழந்தை தன் எலும்புகள் வளரத் தேவையான ‘கால்சியம்’ சத்தை தாயின் எலும்புகளிலிருந்து உறிஞ்சிக் கொள்கிறது. அதே போல் தனக்குத் தேவையான இரும்புச்சத்தை தாயின் இரத்தத்திலிருந்து பெற்றுக் கொள்கிறது.

தாயின் கருப்பைச் சுவர்கள் குழந்தைக்கு வேண்டிய இரத்தத்தை அதிகரிப்பதால் விரிவடைகின்றன. இதனால் தாயின் மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைகிறது. தலை சுற்றல்கூட வரும். தாயின் இதயம் கற்ப காலத்தில் மட்டும் மிக அதிகமாக இயங்குகிறது. இதனால் தாய்க்கு அதிக களைப்பு நெஞ்சுக்கரிப்பு கூட ஏற்படுகிறது.

குழந்தையின் எடை அதிகரிக்கும்போது தாயின் கீழ் முதுகில் வலி ஏற்படுகிறது. இதன் மூலம் தலைவலி, வயிற்று வலி, கால்வலி, பார்வையில் மந்த நிலை ஏற்படுகிறது.

பொதுவாக குழந்தை பெற்ற பின் தாய்மார்களில் 25 முதல் 50 சதவிகித தாய்மார்கள் மனநலக்குறைவு அடைகிறார்கள் என்கின்றனர் மருத்துவ மேதைகள். மெய் சிலிரக்க வைக்கும் தாயின் தியாகத்தை மறக்கலாமா?

பெற்றோரின் சிறப்பும் கடமையும்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என சான்றோர்கள் வணங்கத் தகுதியானவர்களின் வரிசையில் முன்னிலையில் தாய் – தந்தை ஆகிய பெற்றோர்களையே முதன்மைப்படுத்தி உள்ளனர்.

இதன் மூலம் நாம் வாழும் உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் பெற்றோர்கள் எந்த அளவு முக்கியமானவர்கள் என்பதனை உணர்ந்து கொள்ள முடியும்.

அல்லாஹ்வின் பொருத்தம் பெற்றோர் பொருத்தத்தால் ஏற்படுகிறது.

رِضى الربّ في رِضى الوالدِ، وسَخَطُ الرَبّ في سخطِ الوالدِ

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் அம்ருபின் ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் திருப்தி பெற்றோரின் திருப்தியில் உள்ளது. அல்லாஹ்வின் கோபம் பெற்றோரின் கோபத்தில் உள்ளது." (சுபுலுஸ் ஸலாம்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ்[ரலி] அறிவிக்கிறார்கள். "தமது பெற்றோருக்கு நன்மை செய்து வருவோருக்கு அல்லாஹ் சுவனத்தின் இரு வாயில்களை திறந்து வைக்கிறான். அப்பெற் றோரில் ஒருவர் மட்டுமே இருந்து [அவருக்கு நன்மை செய்து வந்தால்] சுவனத்தின் ஒரு வாயிலை அல்லாஹ் அவருக்குத் திறந்து வைக்கிறான். அப்பெற்றோரில் ஒருவர் அப்பிள்ளை மீது கோபித்து விட்டால்) அவர் பொருந்திக்கொள்ளும் வரை அல்லாஹ் அவரை பொருந்திக்கொள்ளமாட்டான். அப் பெற்றோர் அவனுக்கு அநீதம் செய்தாலுமா? எனக் கேட்கப் அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஆம் பெற்றோர் அவனுக்கு அநீதி செய்தாலும் சரியே என பதில் அளித்தார்கள். [அதபுல் முப்ரது-இமாம் புகாரி]

பொதுவாகவே பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு அநீதம் செய்யமாட்டார்கள். ஆயினும் யாராவது சிலர் அவ்வாறு பிள்ளைகளுக்கு அநீதம் செய்தாலும், பிள்ளைகள் அப்பெற் றோருக்குச் செய்யவேண்டிய மரியாதைகளையும் உபகாரங் களையும் செய்து வரவேண்டும். பதிலுக்குப் பதில் என்பது அவர்கள் விஷயத்தில் பொருந்தாது.

மேலும் பெற்றோர் மார்க்கத்திற்குப் புறம்பான தீய காரியங்கள் செய்பவர்களாக இருந்தால், அத்தீமைகளின் விளைவுகளையும், தண்டனைகளையும் அவர்களுக்கு அன்பாகவும், அறிவுப் பூர்வமாகவும், பிள்ளைகள் எடுத்துரைக்கவேண்டும். மாறாக அவர்களை துன்புறுத்தவோ, அவர்கள்மீது கடுஞ் சொற்களை வீசவோ கூடாது. மேலும் அவர்கள் அத்தீய செயல்களை விட்டு, திருந்தி வாழ வல்ல அல்லாஹுத்தஆலா விடம் பிரார்த்தனை செய்து வரவேண்டும்.

இறைத் தூதர் ஸைய்யிதுனா இப்ராஹீம் (அலை) அவர் களது தந்தை ஆஸர் என்பவர் இறைவனுக்கு இணைவைப்ப வராக இருந்தார். அதனைக் கைவிட்டு ஏக இறைவன் ஒருவனையே ஈமான் கொள்ளுமாறு அவருக்கு உபதேசம் செய் யும் நேரத்தில் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் மிகுந்த மரியாதையையும் கனிவையுமே அவரிடம் கடை பிடித்தார் அவ்வுபதேசத்தின் பொழுது தந்தை கடினமான வார்த் தைகளை அள்ளி வீசியபொழுதும் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள்

قَالَ سَلٰمٌ عَلَيْكَ‌ سَاَسْتَغْفِرُ لَـكَ رَبِّىْ اِنَّهٗ كَانَ بِىْ حَفِيًّا‏

 "எனதருமைத் தந்தையே! தங்கள் மீது இறை வணின் சாந்தி உண்டாகுக! எனது இரட்சகனிடம் தங்களுக்காக பிழை பொறுக்கத் தேடுவேன் என இதமாகவும் பொறுமையாகவும் கூறினார்கள்.

யுத்தம் செய்ய பெற்றோரின் அனுமதி.

யமன் நாட்டைச் சேர்ந்த நபரொருவர் முஹம்மத் (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வந்தார். அவரை முஹம்மத் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். ‘யமன் நாட்டில் உமக்கு உறவினர்கள் எவராவது இருக்கின்றாரா?’ என வினவினார்கள். அப்போது அந்நபர் ‘ஆம் என் பெற்றோர் இருக்கின்றனர்’ என்றார். அப்போது முஹம்மத் (ஸல்) அவர்கள் ‘நீர் இங்கு வருவதற்கு அவர்கள் அனுமதி வழங்கினாரா?’ எனக்கேட்டார். அச்சமயம் அந்நபர், ‘இல்லை.

நான் அனுமதி கேட்கவில்லையே!’ என்றார். அப்படியென்றால் நீர் திரும்பிச் செல்லும். இங்கு வரவென அவர்களிடம் (பெற்றோர்) அனுமதி கேளும். அவர்கள் அனுமதி அளித்தால் இங்கு வந்து ஜிஹாதில் கலந்துகொள்ளலாம். இல்லையெனில் அவர்களுக்குச் சேவை புரிந்த வண்ணம் இருந்து அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வீராக! எனக் கூறி அனுப்பியதாக அபூ ஸயீத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல் : அபூதாவூத்)

பெற்றோரை ஏசுவது பெரும்பாவமாகும்.

பெரும்பாவங்களில் உள்ளது தாய் தந்தையரைத் திட்டுவது என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன மாத்திரத்தில், “அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் தன் தாய், தந்தையரைத் திட்டுவானா?” என்று நபித்தோழர்கள் வினவுகின்றார்கள். “ஆம்! இவன் இன்னொருவரின் தந்தையைத் திட்டுகின்றான். உடனே அவன் பதிலுக்கு இவனது தந்தையைத் திட்டுகின்றான். இவன் அவனுடைய தாயைத் திட்டுகின்றான். உடனே அவன் இவனது தாயைத் திட்டுகின்றான். (இது இவன் நேரடியாகத் திட்டியதற்குச் சமம்)” என்று பதிலளித்தார்கள். (நூல் : முஸ்லிம்)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

மௌலானா ஆஷிக் இலாஹி புலந்சஹ்ரி அவர்கள் தமது ஹுகூகுல் வாலிதைன்'' எனும் நூலில், தான் ஒரு சரித்திர யவத்தை கேள்விப்பட்டதாக எழுதுகிறார்கள். ஒருவர் தமது வயது முதிர்ந்த தந்தையை ஒரு போர்வையில் மூட்டை யாக கட்டி கிணற்றில் தள்ளுவதற்காக தூக்கிச் சென்றார். கிணற்றோரத்தில் அம்மூட்டையைவைத்து அவரைகிணற்றில் தள்ளுவதற்கு தயாராக இருந்த நேரத்தில் மூட்டைக்குள் கட்டப்பட்டிருக்கும் அவரது தந்தை மகனை விளித்து; மகனே! என்னை இக்கிணற்றில் தள்ளாதே! வேறு ஏதாவது ஒரு கிணற்றில் தளளிவிடு. ஏனெனில் இக்கிணற்றில்தான் முன்னொரு காலத்தில் நான் எனது தந்தையை தள்ளிவிட் டேன் என்றார். இதனைக்கேட்ட அவரது மகனின் உள்ளத்தில் ஒருவித மாற்றமும், திருப்பமும் ஏற்பட்டது. தன் தந்தை யின்மீது இரக்கம் பிறந்தது. பின்னர் மூட்டையி லிருந்து அவிழ்த்துவிட்டு கண்ணியமாக விட்டிற்கு அழைத்து சென்றார்.

ஒரு காலத்தில் அவர் தமது தந்தைக்குச் செய்த அதே சதிச் செயலை இன்று அவரது மகன் அவருக்குச் செய்யமுன் வந்து விட்டான். இருப்பினும், இறைவனின் நாட்டம் அம்மனிதரைக் காப்பாற்றி விட்டது.

தந்தையைப் பார்க்கிலும் தாயின் தனிச் சிறப்பு.

ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சமூகத்திற்கு வந்து எனது அழகிய நடைமுறையைக்கொண்டு யாருக்கு அதிகம் உபகாரம் செய்ய கடமைப்பட்டுள்ளேன் என கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "உமது தாய்க்கு" எனப் பகர்ந்தார்கள். பின்னர் யாருக்கு என வினவினார் அவர் அதற்கும் "உமது தாய்க்கு" என்றார்கள். பின்னர் யாருக்கு என்றார் அப்பொழுதும் உமது தாய்க்கு என்றார்கள். பின்னர் என்றார். அப்பொழுது உமது தந்தைக்கு என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (புகாரி)

தந்தையைப் பார்க்கிலும் தாயின் சிறப்பு இரு காரணங் களால் உயர்ந்துள்ளது.

முதல் காரணம்:- 1) தாய் தனது வயிற்றில் பிள்ளையைச் சுமந்திருத்தல், பின்னர் அதனை வேதனையால் துடிதுடித்து பெற்றெடுத்தல், பின்னர் அதற்கு சில ஆண்டுகள் அமுதூட்டினாள். அதனை கண்ணுங்கருத்துமாய் வளர்த்தாள்

2. காரணம் 

وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ

‘‘தனது தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து(க் கர்ப்பத்தில்) அவனைச் சுமந்து கொண்டலைந்தாள். (பிறந்த) பிறகும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அவனுக்குப் பால் மறக்கடித்தாள். ஆகவே, நீ எனக்கும் நன்றி செலுத்து; உன் தாய் தந்தைக்கும் நன்றி செலுத்து. முடிவில் நீ நம்மிடமே வந்து சேர வேண்டியதிருக்கிறது. (அல்குர்ஆன் 31 : 14)

கைருத் தாபீயின்.

தாயின் பணிவிடை காரணமாக உவைசுல் கரனீ (ரலி) நபிகளாரைக் காண வராததும் அவரை அவர்கள் புகழ்ந்துரைத்ததும் ஹஜ்ரத் உவைசுல் கரனீ (ரலி) அவர்கள் யமன் நாட் டைச் சார்ந்த "தாபிஈ" ஆவார். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே அவர் இஸ்லாத்தில் இணைந்து விட்டார். அண்ணல் நபி (ஸல்) அவர்கள்மீது அளவு கடந்த அன்பு பூண்டவராகவும், அவர்களை தம் கண்களால் கண்டு மகிழவேண்டுமென்ற பேராவலையுடையவராகவும் இருந்தார். ஆயினும் அவர் வயது முதிர்ந்த பலவீனமான தமது தாய்க்கு தொடர்ந்து பணிவிடை செய்துவரவேண்டிய வராயிருத்ததால், திரு நபி (ஸல்) காண யமனி லிருந்து திரு மதீனத்திற்கு அவரால் வர முடியவில்லை. தான் திருமதீனா சென்று விட்டால் தாயின் பணிவிடை தடை படுமே என்ற ஒரே காரணத்திற்காக அவ்வரிய பயணத்தை அவரால் மேற்கொள்ள இயலவில்லை. அவரது பல்வேறு சிறப்பியல்களுக்குச் சான்றாக அவருக்கு "கைருத் தாபீயின்"- நாயகத் தோழர்களுக்கு சிறந்த தோழர் - எனும் சிறப்புப் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வழங்கினார்கள்.

 தாயன்பு.

 ஒரு பெண் தன் இரு பெண் மக்களுடன் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வந்து யாசகம் கேட்டு நின்றாள். அவளிடம் மூன்று பேரித்தங்கனிகளை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கொடுக்கின்றார்கள். அவற்றில் ஒன்றை தனக்கு வைத்துக்கொண்டு மற்ற இரண்டையும் தன் மகள்களுக்கு சாப்பிடக் கொடுக்கிறாள். அவற்றை அவர்கள் சாப்பிடுகின்றனர். தனக்குரியதை சாப்பிட அந்த பெண் எத்தனித்த போது அதையும் தங்களுக்குத் தரக்கேட்டு அந்தக் குழந்தைகள் அடம்பிடிக்கின்றன. எவ்வித முகச்சுழிப்புமின்றி சந்தோஷமாக அப்பழத்தை இரண்டாகப் பிளந்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்துவிட்டு அவர்கள் சாப்பிடுவதை ரசித்துக் கொண்டிருந்தாள். இந்த நிகழ்ச்சி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹாவின் மனதைப்பெரிதும் பாதித்தது. இரவில் வீடு திரும்பிய நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் இந்த நிகழ்வைக்கூற, மெய்சிலிர்த்துப் போன நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அவள் நேரடியாக சுவனம் செல்வாள்’ என்ற சுபச்செய்தியை தெரிவிக்கிறார்கள். ( அப்துல்லா இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு – முஸ்லிம் ).

” الجنة تحت أقدام الأمهات ”

தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது” என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. நாம் அனைவரும் பெற்றோரைப் பேணக்கூடியவர்களாகத் திகழ எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக, ஆமீன்..

 

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...