Thursday, 23 February 2023

ஜும்ஆ பயான்.24/02/2023

ஷஃபான் மாதத்தின் முக்கியத்துவமும், சிறப்புகளும்.

ஷஃபான் இஸ்லாமிய மாதங்களில் எட்டாவது மாதமாகும்.சிறப்புகள் பொருந்திய இம் மாதத்தை கண்மணி நாயகம் ﷺஅவர்கள்  தம் மாதம் எனக் கூறி   இம்மாதத்தை சிறப்பித்துள்ளார்கள்.

شَعْبَانُ شَھْرِیْ وَ رَمَضَانُ شَھْرُ اللّٰہِ ஷஃபான்,என்னுடைய மாதம்.ரமலான் அல்லாஹ்வின் மாதமாகும்.

இம்மாதங்களில் சிறப்புகளை உம்மத்திற்கு உணர்த்துவதற்காக கண்மணி நாயகம் ﷺஅவர்கள், ரஜப் பிறை பார்த்ததிலிருந்து துஆ செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

 اَللّٰھُمَّ بَارِکْ لَنَا فِیْ رَجَبٍ وَ شَعْبَانَ وَبَلِّغْنَارَمَضَانَ۔

(مشکوۃ المصابیح:رقم الحدیث 1396)

கஃபா கிப்லாவாக மாற்றப்பட்ட மாதம்..

#இம்மாதத்தில்தான் நாயகம் ﷺஅவர்களிள் புனித கஃபாவை நோக்கி மீண்டும் தொழ வேண்டும் என்கிற நீண்ட நாள் ஆசையும்,கோரிக்கையும்  நிறைவேறியது. 

அல்லாஹ் பகரா சூராவில்...

قَدْ نَرٰى تَقَلُّبَ وَجْهِكَ فِى السَّمَآءِ‌‌ فَلَـنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضٰٮهَا‌ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَـرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَكُمْ شَطْرَهٗ ‌ وَاِنَّ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ لَيَـعْلَمُوْنَ اَنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّهِمْ‌ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُوْنَ‏

(நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.(அல்குர்ஆன் : 2:144)

கண்மணி நாயகம் ﷺஅவர்கள் கஃபாவை நோக்கி தொழவேண்டும் என்ற இந்த ஆயத்தை அல்லாஹ் இம்மாதத்தில் தான் இறக்கிவைத்தான் .

#தயம்மம் சம்பந்தமான சட்டங்கள் கடமையானதும்...

#இஸ்லாமிய வரலாற்றில் மிகப்பெரும் போர்களில் ஒன்றான بنو المصطلق பனு முஸ்தலிக் போர் நிகழ்ந்ததும்.

#கண்மணி நாயகம் ﷺஅவர்கள் அன்னை ஹஃப்ஸா,அன்னை ஜுவைரியா (ரலி-அன்ஹுமா)இருவரையும் நிகாஹ் செய்து கொண்டதும்.

மேற்கூறிய நிகழ்வுகள் அனைத்தும் ஷஃபான் மாதத்தில் தான் நடைபெற்றிருக்கின்றன.  

இஸ்லாமிய வருடத்தின் எட்டாவது மாதமான ஷஃபான்,رحمتஅருள் வளங்களையும்,برکتபரகத்களையும்,سعادتபாக்கியங்களையும் பொதிந்துள்ள சிறப்பு வாய்ந்த மாதமாகும்.இதனை  ரமலான் மாதத்தின்  முன்னோடி என்றும்,வரவேற்பு என்றும்,தயாரிப்பு என்றும் சொல்லலாம்.

ஷஃபான் மாதத்தின் முக்கியத்துவமும் சிறப்பும்.

இம்மாதத்தின் முக்கியத்துவத்தையும், மகத்துவத்தையும் கண்மணி நாயகம் ﷺஅவர்கள் பல ஹதீஸ்களில் கூறியுள்ளார்கள்.இதனை ரமலான் மாதத்தின் தயாரிப்பு என ஆர்வமூட்டியுள்ளார்கள். 

ஹழ்ரத் ஸல்மான் பார்ஸி(ரலி)அவர்களின் அறிவிப்பு; 

خَطَبَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي آخِرِ يَوْمٍ مِنْ شَعْبَانَ فَقَالَ: يا أَيُّهَا النَّاسُ قَدْ أَظَلَّكُمْ شَهْرٌ عَظِيمٌ مُبَارَكٌ (صحیح ابن خزیمہ)

நாயகம் ﷺஅவர்கள் ஷஃபான் மாத இறுதி நாளில் எங்களுக்கு  பிரசங்கம் செய்தார்கள் "மக்களே!உங்களை நோக்கி மகத்துவமிக்க பரக்கத் பொருந்திய ஒரு மாதம் (ரமலான்)  வரவிருக்கின்றது"என்று கூறினார்கள். (ஸஹீஹ் இப்னு குஸைமா)

ஷஃபான் மாதத்தில் நாயகம் ﷺஅவர்கள் அதிகம் நோன்பு நோற்பார்கள்.

:اَحَبُّ الشَّھْرِ اِلٰی رَسُوْلِ اللّٰہ ۖ اَن یَّصُوْمُ شَعْبَانَ یَصِلُہ بِرَمَضَانَ

(کنزالعمال رقم الحدیث ٢٦٥٨٦)

அன்னை ஆயிஷா (ரலி-அன்ஹா)அவர்கள் அறிவிக்கிறார்கள்;நாயகம் ﷺஅவர்கள் நோன்பு நோற்பதற்கு மிகவும் விருப்பமான மாதம் ஷாபான், ரமலான் வரை தொடர்ந்து நோன்பு இருப்பார்கள்.

مَارَاَیْتُ رَسُوْلَ اللّٰہِ ۖ یَصُوْمُ شَھْرَیْنِ مُتَتَابِعَیْنِ اِلَّا شَعْبَانَ وَرَمَضَانَ

(ترمذی شریف۱/۱۵۵)

அன்னை உம்மு ஸலமா (ரலி-அன்ஹா)அவர்கள் அறிவிக்கிறார்கள்;நாயகம் ﷺஅவர்கள் ஷஃபான்,ரமலான் இரு மாதங்கள் தவிர தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்று நான் கண்டதில்லை. 

அன்னை ஆயிஷா(ரலி) அறிவித்தார்: ‘(இனி) நோன்பை விடவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்: ‘(இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பைவிட்டுவிடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை; ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!’

(ஸஹீஹ் புகாரி:1969 அத்தியாயம் : 30. நோன்பு)

அன்னை ஆயிஷா(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தை விட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. ஷஅபானில் (சில ஆண்டுகளில்) முழு மாதமும் நோன்பு நோற்பார்கள். ‘உங்களால் இயன்ற அளவுக்கு நீங்கள் அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள்! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்!’ என்றும் கூறுவார்கள். குறைவாக இருந்தாலும் தொடர்ந்து தொழும் தொழுகையே விருப்பமானதாக இருந்தது.ஒரு தொழுகையை அவர்கள் தொழுதால் அதைத் தொடர்ந்து தொழுவார்கள்.

(ஸஹீஹ் புகாரி:1970 அத்தியாயம் : 30. நோன்பு)

ஷஃபான் மாதத்தின்  சிறப்புகளில் ஒன்று ஷபே பராஅத் இரவு.

இந்த மாதத்தின் 15ஆம் நாள் இரவை ஷபே பராஅத் இரவு என்று சொல்லப்படும்,இவ்விரவில் அல்லாஹ்வின்   مغفرت பாவ மன்னிப்பும், ரஹ்மத்தும் இறங்குகின்றது  என்று சஹாபாக்கள்,தாபியீன்கள், தபவுத்தாபியீன்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஷாபான் மாதத்தில் அதிகம் நோன்பு நோற்பதற்கான மூன்று காரணங்கள்.

1)ரமலானை கண்ணியப்படுத்துவது, ரமலானுக்கான முன் தயாரிப்பு.

இம்மாதத்தில் நாயகம் ﷺஅவர்கள் ரமலான் மாதத்தின் முக்கியத்துவத்தையும், மகத்துவத்தையும் உணர்த்துவதற்காகவும்,ரமலானின் முன் தயாரிப்பிற்காகவும் அதிகம் நோன்பு நோற்றார்கள்.

ரமலான் மாதத்தில் அல்லாஹ்வின் நெருக்கம்,ரமலானின் பிரத்யேக انوارஆத்மஒளியும்,برکاتபரகாத்துகளும் கிடைக்கப்பெறும்.அவற்றை அதிகம் பெற்றுக்கொள்ள ஷஃபானிலே அதிகம் நஃபிலான நோன்புகளை நோற்கக்கட்டளையிட்டார்கள்.

ஃபர்ளான தொழுகைகளுக்கு முன்னால் நஃபிலான தொழுகைகளை தொழுவதைப் போல ரமலானுக்கு முன் ஷஃபானில் அதிகம் நோன்பு நோற்க சொன்னார்கள்.

 اَیُّ الصَّوْمِ افضَلُ بَعْدَ رَمَضَانَ قالَ شعبانُ لِتَعْظِیْمِ رمضَانَ"  (ترمذی شریف ١/١٤٤)

ஹழ்ரத் அனஸ் (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்;நாயகம் ﷺஅவர்களிடம் கேட்கப்பட்டது"ரமலானுக்கு பின் எந்த நோன்பு மிகச்சிறப்பானது?"

அதற்கவர்கள்"ரமலானை சங்கை செய்வதன் காரணமாக ஷஃபான்"எனறு கூறினார்கள். 


2)ஷஃபான் மாதத்தில்அடியார்களின் அமல்களை அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படுகிறது.

شَعْبَانُ بَیْنَ رَجَبٍ وَ شَھْرِ رَمَضَانَ یَغْفُلُ النَّاسُ عَنْہُ یُرْفَعُ فِیْہِ اَعْمَال فَاُحِبُّ اَنْ لَّا یُ"شعبان(شعب الایمان،رقم الحدیث ۳۸۲۰)

நாயகம் ﷺஅவர்கள் கூறினார்கள்;ரஜப்,ரமலான் மாதத்தின் மத்தியிலுள்ள ஷாபான் மாதம்,அது பற்றி மக்கள் பாராமுகமாக இருக்கிறார்கள்.அதில் தான் அமல்களை (இறைவனிடம்) சமர்ப்பிக்கப்படுகிறது.அமல்கள் இறைவனிடம் சமர்ப்பிக்கப்படும் நேரத்தில் நான் அதிகம் நோன்பாளியாக இருப்பதற்கு பிரியப்படுகிறேன். 

حَدَّثَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَمْ أَرَكَ تَصُومُ شَهْرًا مِنَ الشُّهُورِ مَا تَصُومُ مِنْ شَعْبَانَ ‏.‏ قَالَ ‏ “‏ ذَلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبٍ وَرَمَضَانَ وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الأَعْمَالُ إِلَى رَبِّ الْعَالَمِينَ فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ ‏”‏ ‏.‏

سنن النسائي – الصيام (2357). مسند أحمد – مسند الأنصار رضي الله عنهم (5/201)

நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஷஃபான் மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதைப் போன்று ஏனைய மாதங்களில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லையே! என்று கேட்டேன். அதற்கவர்கள், அது ரஜபுக்கும், ரமழானுக்குமிடையில் வரும் மாதமாகும்.

இம்மாதம் பற்றி மக்கள் கவனயீனமாக இருக்கின்றார்கள். இம்மாதத்தில் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகின்றன. இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமல் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன் எனக் கூறினார்கள்.

(அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)

(நூல் : நஸாஈ 2357, முஸ்னத் அஹ்மத் (5/201)

3)மலகுல் மவ்திடம் மரணிப்போரின் பட்டியலை ஒப்படைக்கப்படுகிறது.

اِنَّ اللّٰہَ یَکْتُبُ فِیْہِ مَیْتَةً تَہْلِکُ السَّنَةَ وَاُحِبُّ اَنْ یَّأْتِیَنِیْ اَجَلِیْ وَاَنَا صَائِم ۔ (مسند ابو یعلی، رقم الحدیث ٤٩١١)

நாயகம் ﷺஅவர்கள் கூறினார்கள்;அல்லாஹ் இவ்வருடம் மரணிப்போரின் பட்டியலை இதிலே எழுதுகிறான்.

எனதுப்பெயர் மரணிப்போரின் பட்டியலில் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் நான் நோன்பாளியாக இருப்பதற்கு ஆசைப்படுகிறேன்.

அல்லாஹுத்தஆலா ஷஃபான் மாத நன்மைகளையும்,பரகத்துகளையும் நமக்கு வழங்கி,ரமலான் மாத நோன்பை முழுமையாக நோற்கும் பாக்கியத்தை வாழங்கிடுவானாக!ஆமீன்...

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Thursday, 16 February 2023

ஜும்ஆ பயான்.17/02/2023

மிஃராஜ் தரும் படிப்பினைகளும் பாடங்களும்.

இஸ்லாமிய வரலாற்றில் இரண்டு இரவுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன.அவற்றில் ஒன்று لیلۃ القدر லைலத்துல் கத்ரு இரவு,இது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவாகும்.

இந்த இரவில் தான் மகத்துவமிக்க இறைவேதமாம் திருக்குர்ஆன் அண்ணலம் பெருமானார் ﷺஅவர்களின் மீது இந்த உம்மத்திற்கு நேர்வழி காட்டிட இறக்கி அருளப்பட்டது.

மற்றொரு இரவு மிஃராஜ் இரவாகும்,இந்த இரவில் நாயகம்ﷺ அவர்கள் ஏழு வானங்களைக் கடந்து இறைவனை நேரடியாக சந்தித்து இஸ்லாத்தின் உன்னதமான உயர்ந்த வணக்கமான தொழுகையை இந்த உம்மத்திற்கு பரிசாக பெற்று தந்தார்கள்.

ஒர் இரவில்.....

 سُبْحَانَ الَّذِي أَسْرَىٰ بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا ۚ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன் 17-1)

மிஃராஜ் பயணம்,இஸ்ரா பயணம்  அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த முஃஜிஸாத் எனும் பேரற்புதமாகும்.

இஸ்ரா: என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு மேற்கொண்ட பயணத்தைக் குறிக்கிறது.

மிஃராஜ் : என்பது பூமியிலிருந்து ஏழு வானங்கள் மற்றும் அதற்கு அப்பால் சித்ரத் அல்-முன்தஹா வரை நடந்த பயணமாகும். அதில், நபி (ஸல்) அவர்கள் ஏழு வானங்கள், அரஷ், சொர்க்கம் மேலும் நரகத்தின் பல காட்சிகளைக் கண்டார்கள், அவை புனித குர்ஆனிலும் குறிப்பிடப்பட்டுள்ளன, அவற்றின் விவரங்கள் நூற்றுக்கணக்கான ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த இரண்டு பயணங்களும் ஒரே இரவில் நடந்ததாகவும், நபித்துவத்தின் பதினோராம் ஆண்டு ரஜப் மாதம் 27 ஆம் தேதி இந்த மாபெரும் அற்புதம் நிகழ்ந்ததாக பல ரிவாயத்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விரு பயணங்களும் ஒரே இரவில் நபி (ஸல்) அவர்கள் தன் பூத உடலுடன் விழித்திருந்த நிலையில் சென்றார்கள். எனவே இது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மாபெரும் அற்புதங்களில் ஒன்றாகும். இது சாதாரண மனிதர்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாகும். இது முழுக்க முழுக்க அல்லாஹ்வின் பேரருளால் நடந்த நிகழ்வாகும் என ஒரு முஃமின் நம்பிக்கை கொள்ளவேண்டும்.

அல்லாஹ்வின் ஆற்றல் மகத்தானது.

வல்ல அல்லாஹ் எண்ணற்ற அற்புதங்களை நபியவர்களுக்கு வழங்கியுள்ளான், மேலும் நூற்றுக்கணக்கான அற்புதங்கள் நபியவர்களிடமிருந்தும் தோன்றியுள்ளன. இந்த சம்பவம் நடந்ததா? இல்லையா?சரியானதா? இல்லையா? என்ற எந்த கேள்விக்கும் நம் மனதில் இடம் கொடுத்துவிடக் கூடாது.  ஏனெனில் இதை நபி (ஸல்) அவர்களின் மூலமாக நடத்தாட்டினான் என்பதற்கு பல சான்றுகளும் , ஹதீஸ்களும் உள்ளன. இந்த பயணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கொண்டிருந்தாலும், இந்த பயணத்தை ஏற்பாடு செய்தவன் எல்லாம் வல்ல அல்லாஹ் வாகும். மனிதன் எதை சாத்தியமற்றது என்று கருதுகிறானோ அதையெல்லாம் செய்வது தான் நம்மை படைத்த இறைவனின் வல்லமை. 

கனவல்ல நிஜம்...

சிலர் இது நபி (ஸல்) அவர்களின் கனவின் மூலம் நடந்த நிகழ்வாகும். பூத உடலுடன் செல்ல சாத்தியமில்லை என்று சொல்கிறார்கள். இது முற்றிலும் தவறான வாதமாகும். அப்படியே கனவின் மூலமாக நடந்தது தான் என்றாலும், நம் கனவுக்கும் நபியவர்களின் கனவுக்கும் வித்தியாசம் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில்  நம் கனவு உண்மையாகவும் துல்லியமாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை, அது நம் கற்பனை எண்ணங்களாக இருக்கலாம், அல்லது சுய எண்ணங்களாக  இருக்கலாம். ஆனால் நபிமார்களின்  கனவு அப்படியல்ல. நபிமார்களின் கனவு வஹியாகவும் இருக்கலாம். நபிமார்களின் கனவும், விழித்திருக்கும் நிலையும் ஒன்றுதான். உதாரணமாக : நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் தன் மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுப்பதாக கணவு கண்டு அதை நிரூபிக்க முயன்றது அனைத்தும் கனவின் மூலமாகவே நடந்தது என குர்ஆன் பேசுகிறது.  மறுபுறம் அல்லாஹ் ஹஸ்ரத் இஸ்மாயில் (அலை) அவர்களை தனது வல்லமையால்  காப்பாற்றினான் என்பது வேறு விஷயம்.

ஆனாலும் மிஃராஜ், இஸ்ரா பயணங்கள் நபி (ஸல்) அவர்கள் விழித்த நிலையில் தான் சென்றார்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.

மிஃராஜ் சென்றது, நாயகம்ﷺஅவர்களின்  பூ உடலா?அல்லது புனித உயிரா?

கண்மணி நாயகம்ﷺஅவர்கள் விழித்தெழும் நிலையில் உடலும் ஆன்மாவும் இணைந்தே "மிஃராஜ்"எனும்   விண்ணேற்றம் நிகழ்ந்தது என்பதும் இந்தக் கருத்து சரியே என்பதும் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் உறுதிமிக்க (உலமாக்கள்) அறிஞர்களின் முடிவு.இதற்கான வாதங்கள் பின்வருமாறு.

1)இந்த நிகழ்வின் விளக்கத்திற்கு அல்லாஹ் தஆலா ’’ سبحان‘‘ "சுப்ஹான்" என்ற வியப்பின் வெளிப்பாட்டைப் பயன்படுத்தியுள்ளான். இந்தச் சம்பவம் வெறும் கனவாக இருந்திருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.ஏனென்றால் கனவில் பூமிக்கும் வானத்துக்குமான பயணம் சாதாரண மனிதனால் கூட சாத்தியம்.

2)அல்லாஹுதஆலா மிஃராஜ் பற்றி குறிப்பிட்டு, அல்லாஹ் தனது அடியாரை ’’عبد‘‘அழைத்துச் சென்றான் என்று கூறுகிறான், அரபியில் உடல் மற்றும் ஆன்மா இரண்டையும் இணைத்ததன் பெயர்தான் عبد  அடியான் என்று அறியப்படுகிறது. 

குர்ஆனின் பல வசனங்களில், ``அப்த்'' என்பது உடல் மற்றும் ஆன்மா இரண்டின் கலவை என்று பொருள் தரும் படியாக தான் வருகின்றது.உதாரணமாக, சூரா தஹா வசனம் (77), சூரா ஷுரா வசனம் (52), சூரா துகான் வசனம் (33) மற்றும் சூரா பகரா வசனம் (86) போன்ற வசனங்களை கூறலாம்.

3)அஸ்ரா اسریٰ "(இரவில் (Speed) வேகமாக அழைத்துச் செல்லுதல்")என்கிற  பதம் விழிப்பு நிலையில்  உடலோடு அழைத்து செல்வதற்கு குர்ஆனில் வேறு சில இடங்களில் உதாரணமாக கூறப்பட்டுள்ளது.

ஹழ்ரத் லூத் (அலை)அவர்களை இரவில் விழிப்பு நிலையில் அழைத்துச் சென்ற நிகழ்வை அஸ்ராاسریٰ என்று குறிப்பிடுகிறான். 

فَاَسْرِ بِاَهْلِكَ بِقِطْعٍ مِّنَ الَّيْلِ وَاتَّبِعْ اَدْبَارَهُمْ وَلَا يَلْـتَفِتْ مِنْكُمْ اَحَدٌ وَّامْضُوْا حَيْثُ تُؤْمَرُوْنَ‏

ஆகவே இரவில் ஒரு பகுதியில் உம்முடைய குடும்பத்தினருடன் நடந்து சென்று விடும்; அன்றியும் (அவர்களை முன்னால் செல்ல விட்டு) அவர்கள் பின்னே நீர் தொடர்ந்து செல்லும். உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். நீங்கள் ஏவப்படும் இடத்திற்கு சென்று விடுங்கள் என்று அ(த் தூது)வர்கள் கூறினார்கள்.      (அல்குர்ஆன் : 15:65)

ஹழ்ரத் மூஸா (அலை)அவர்களை இரவில் அழைத்து சென்ற நிகழ்வை اسریٰ என்கிறான்

.وَلَقَدْ اَوْحَيْنَاۤ اِلٰى مُوْسٰٓى ۙ اَنْ اَسْرِ بِعِبَادِىْ فَاضْرِبْ لَهُمْ طَرِيْقًا فِى الْبَحْرِ يَبَسًا ۙ لَّا تَخٰفُ دَرَكًا وَّلَا تَخْشٰى‏

இன்னும்: “நீர் என் அடியார்களுடன் இரவோடிரவாகப் பயணம் செய்து, அவர்களுக்காக கடலில் உலர்ந்த பாதையை உண்டாக்கிக் கொள்வீராக! (ஃபிர்அவ்ன் உம்மைப்) பிடித்துவிடுவான் என்று பயப்படாமலும், (கடலில் மூழ்கி விடுவோம் என்று) அஞ்சாமலும் இருப்பீராக!” என்று மூஸாவுக்கு நாம் திட்டமாக வஹீ அறிவித்தோம்.(அல்குர்ஆன் : 20:77)

அல்லாமா காழி இயாள்(ரஹ்)அவர்கள் கூறுகிறார்கள்;لأنه لایقال فی النوم أسریٰ  மிஃராஜ் பயணம், நாயகம் ﷺஅவர்களின் உடலோடு தான் நிகழ்ந்தது.காரணம் اسریٰ அஸ்ரா என்கிற பதம் கனவிலோ கற்பனையிலோ செல்வதற்கு சொல்லப்படாது.

அல்லாமா இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் இதே வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளعبد (அப்து) என்ற வார்த்தையைப் பற்றி கூறுகிறார்கள்:

فان العبد عبارۃ عن مجموع الروح و الجسد

அடிமை العبد என்பது ஆன்மா மற்றும் உடலின் கூட்டுத்தொகையே இவ்வார்த்தையாகும். 

உடலற்ற உயிருக்கு العبدஅடிமை என்கிற பதம் பயன்படுத்தப்படாது.எனவே நாயகம்ﷺ அவர்களின் மிஃராஜ் பயணம் உடல்,உயிர் இரண்டும் சேர்ந்தே நிகழ்ந்தது.

4)இதேபோல் சூரா அந்-நஜ்மில்:

مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغٰى‏

(அவருடைய) பார்வை விலகவுமில்லை; அதைக் கடந்து (மாறி) விடவுமில்லை.(அல்குர்ஆன் : 53:17)

இங்கு الْبَصَرُ பார்வை என்கிற வார்த்தை   தவறாகவோ அல்லது மிகைப்படுத்தப்பட்டதாகவோ கூறப்படவில்லை .

பார்த்தல் الْبَصَرُ என்பது கண்ணால் பார்ப்பதற்கு சொல்லப்படும்.கனவிலே பார்ப்பதை அகக் கண்ணால் பார்ப்பது அல்லது இதயத்தால் பார்ப்பது என்று  வேண்டுமானால் சொல்லலாம்.நபி ﷺஅவர்கள் الْبَصَرُ தம் புற கண்களால் கண்டார்கள் என்பதிலிருந்தே மிஃராஜ் உடலோடு நிகழ்ந்தது என்பது உறுதியாகிறது. 

5)நாயகம் ﷺஅவர்கள் براق என்கிற வெண்மை நிற வாகனத்தில் மிஃராஜுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்பது நபிﷺ அவர்கள் விழிப்பு நிலையில் உடலோடு சென்றார்கள் என்பதை உறுதி செய்கிறது.கனவில் செல்வதற்கு வாகனம் தேவையில்லை.

இன்னொரு ஆதாரம்:  நபி நாயகம்ﷺஅவர்கள்  மிஃராஜ் பயணம் பற்றி மக்களிடம் கூறிய போது காஃபிர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

மிஃராஜ் கனவாக இருந்திருந்தால் காஃபிர்கள் விமர்சனம் செய்திருக்கமாட்டார்கள்.

புகாரி ஷரீஃபில் ஹழ்ரத் ஜாபிர்(ரலிஅவர்களின் அறிவிப்பு;

أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: ” لَمَّا كَذَّبَتْنِي قُرَيْشٌ، قُمْتُ في الحِجْرِ، فَجَلا اللهُ لي بَيْتَ المَقْدِسِ، فَطَفِقْتُ أُخْبِرُهُمْ عن آياتِهِ، وأنا أنْظُرُ إلَيْهِ.”

இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்: காலையில் நபி (ஸல்) தங்களது கூட்டத்தாரிடம் அல்லாஹ் தனக்குக் காண்பித்த மாபெரும் அத்தாட்சிகளை அறிவித்தார்கள். இதைக் கேட்ட அம்மக்கள் முன்பைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்களுக்கு நோவினையும், தொந்தரவும் கொடுத்து அவர்களை ‘பெரும் பொய்யர்’ என்று வருணித்தனர். “உங்களது பயணம் உண்மையானதாக இருந்தால் எங்களுக்கு பைத்துல் முகத்தஸின் அடையாளங்களைக் கூறுங்கள்” என்று கேட்டனர். அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் கண்முன் பைத்துல் முகத்தஸைக் காண்பிக்கவே நபி (ஸல்) அவர்கள் அம்மக்கள் கேட்ட அடையாளங்களை அப்படியே கூறினார்கள். அதில் எதையும் அவர்களால் மறுக்க முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் போகும் வழியில் சந்தித்த வியாபாரக் கூட்டத்தையும், அது எப்போது மக்காவிற்கு வரும் என்பதையும், அவர்களது காணாமல்போன ஒட்டகத்தைப் பற்றியும் மக்காவாசிகளுக்கு அறிவித்தார்கள். நபி (ஸல்) எவ்வாறு கூறினார்களோ அனைத்தும் அவ்வாறே இருந்தன. 

இருப்பினும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத அவர்கள் நிராகரிக்கவே செய்தனர். சத்தியத்தை விட்டும் வெகுதூரம் விலகியே சென்றனர். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது)

மஸ்ஜித் அல்-அக்ஸா  ஓர் அறிமுகம்.

மஸ்ஜித் அல்-அக்ஸா  பூமியில் முஸ்லிம்களுக்கு மூன்றாவது புனிதமான இடமாகும். இது வரலாற்று சிறப்பு வாய்ந்த நகரங்களில் ஒன்றாகும், இதனை ஹதீஸ்களிலும்,வரலாறும் 'பைத்துல்-முகத்தஸ்' என்று நினைவுகூறப்படுகிறது, மஸ்ஜிதியின் அளவீடு பின்வருமாறு: தெற்குப் பக்கத்தில் 281 மீட்டர், வடக்குப் பக்கத்தில் 310 மீட்டர், 462 மீட்டர் கிழக்குப் பக்கம் மற்றும் மேற்குப் பகுதியில் 491 மீட்டர் உள்ளன.

மஸ்ஜிதுல்-அக்ஸா பள்ளியின் இந்த வளாகம் பண்டைய நகரத்தின் ஆறாவது பகுதியாகும். இதில் சிறப்பு என்னவெனில், இந்த மஸ்ஜிதின் எல்லைகள்,துவக்க காலம் தொட்டே  தொழுகைக்கான இடமாக கட்டப்பட்ட இடத்தில்தான் இன்றும் உள்ளது.மஸ்ஜிதில் பதினான்கு கதவுகள் உள்ளன.

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்கள் பாலஸ்தீனை வெற்றிக்கொண்டு,  இந்தப் பள்ளிவாசலை மீட்டபோது, ​​சில காரணங்களால் பள்ளிவாசலின் கதவுகள் சில மூடப்பட்டன. இன்னும் பத்து வாயில்கள் அப்படியே பயன்பாட்டில் இருக்கின்றன. 

அல்-அக்ஸா மஸ்ஜிதில் நான்கு மினாராக்கள் உள்ளன.                                  باب المغاربہ  பாப் அல்-மகாரபா மினாரா, 

இது தென்மேற்கு பக்கத்தில் உள்ளது. باب السلسہ பாப் அல்-சல்சா மினாரா, இது மேற்கு திசையில் உள்ளது. பாப் அல்-சல்சாவிற்கு அருகில், வடமேற்கு திசையில் அமைந்துள்ள ۔ باب الغونمہபாப் அல்-கூனமா மினாரா, மற்றும் வடக்கு திசையில் அமைந்துள்ள باب الاسباط பாப் அல்-அஸ்பாத் மினாரா ஆக நான்கு மினாராக்களாகும்.

மிஃராஜ் சம்பவத்தின் படிப்பினைகளும், அறிவுரைகளும்:

 1)எல்லா சூழ்நிலைகளிலும் உறுதியானநம்பிக்கை,சரணடைதல்.

மிஃராஜ் விண்ணேற்ற சம்பவத்தை படித்தவுடன் புரிகிறது, இஸ்லாமிய மார்க்கத்தில்  சில விஷயங்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாதவை, சில விஷயங்கள் அறிவுக்கு அப்பாற்பட்டவை, அதாவது சாதாரண மக்கள் புரிந்துகொள்வது மிகவும் கடினம். இதற்கு மிகப்பெரிய உதாரணம் மிஃராஜ் சம்பவம்.

விண்ணேற்ற மிஃராஜ் நிகழ்வை  உலக காரணிகளோடு ஒப்பிட்டுப்பார்த்தால், அது சாத்தியமாகத் தெரியவில்லை, ஏனென்றால் நபிகள் நாயகம்ﷺ அவர்கள் முதன்முதலில் மக்காவிலிருந்து பாலஸ்தீனம் சென்றார்கள், மக்காவிலிருந்து பாலஸ்தீனத்திற்கு 1300 ஆயிரத்து முந்நூறு கிலோமீட்டர் தூரம், பின்னர் அவர்கள் ஏழு வானங்களை கடந்து சொர்க்க,நரக காட்சிகளை கண்டுவிட்டு மீண்டும் ஏழு வானங்களை கடந்து , அவர்கள் திரும்புவும்  பாலஸ்தீனத்திற்குத் திரும்புகிறார்கள், பிறகு பாலஸ்தீனத்திலிருந்து மக்காவிற்கு வருகிறார்கள். இந்த முழுப் பயணமும் ஓர் இரவில் சில வினாடிகளில் நடந்தேறி இருக்கிறது, வெளிப்படையாக அது சாத்தியமில்லை, மனித சிற்றறிவு இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ளாது.

ஷரீஅத்தில் ஏதாவது ஒரு கட்டளை, நம் புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒரு செய்தி நம் முன் வந்துவிட்டால், அதை ஷரீஅத் சொன்னது போல் ஏற்றுக்கொள்வது நமது பொறுப்பு என்பதை இந்தச் சம்பவம் நமக்குக் கற்றுத் தருகிறது.        ஸய்யதுனா அபூபக்ர் சித்திக்  (ரலி)அவர்கள் மிஃராஜ் சம்பவத்தை கேள்விப்பட்ட பிறகு அதனை அப்படியே ஏற்றுக் கொண்டது போல நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மார்க்க  பிரச்சாரத்தில் சத்தியத்தை  மறைத்தல் கூடாது.

மக்கள் மனதால் ஏற்றுக் கொண்டாலும் , ஏற்றுக் கொள்ளாவிட்டாலும்,மார்க்கம்  குறித்த விஷயத்தை மார்க்க  போதகர் உணர்ந்து விளக்கத் தயங்கக் கூடாது என்ற பாடமும் மிஃராஜ் சம்பவத்தின் மூலம் உணர்த்தப்படுகிறது . அது நல்லதோ கெட்டதோ பிடிக்குமோ பிடிக்காதோ, ஆனால் அவர் அதை மென்மையுடனும், ஞானத்துடனும்,நல்ல வழியிலும் மக்களுக்கு விளக்க வேண்டும்

اُدْعُ اِلٰى سَبِيْلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ‌ وَجَادِلْهُمْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ‌ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيْلِهٖ‌ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ‏

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.(அல்குர்ஆன் : 16:125)

முஹம்மதின் ﷺஷரீஅத் மற்றும் இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி   அறிந்தவர்,  எதையும் மக்கள் முன் எடுத்துரைக்கவில்லையானால் , இது சத்தியத்தை மறைத்தலாகும், மேலும் அது ஹராம் ஆகும்.

فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَ اَعْرِضْ عَنِ الْمُشْرِكِيْنَ‏

ஆதலால் உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக; இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடுவீராக!          (அல்குர்ஆன் : 15:94)

எனவே, இஸ்லாத்தின் எந்தக் கட்டளையும் மக்களின் அறிவுக்கும், புரிதலுக்கும் உட்பட்டது அல்ல, அல்லது மக்கள் ஏற்றுக் கொள்வார்களா இல்லையா என்று தெரியவில்லை என்றாலும், அதை மக்களிடம் முன்வைக்க வேண்டும் என்பதை மிஃராஜ் சம்பவம் போதிக்கிறது.

நன்றி மறப்பது நன்றன்று.

மிஃராஜ் சம்பவத்திலிருந்து கிடைக்கும் இன்னொரு படிப்பினை, நன்றி மறப்பது நரகம் செல்ல காரணமாக அமையும்.

أُرِيتُ النَّارَ فَإِذَا أكْثَرُ أهْلِهَا النِّسَاءُ، يَكْفُرْنَ قيلَ: أيَكْفُرْنَ باللَّهِ؟ قالَ: يَكْفُرْنَ العَشِيرَ، ويَكْفُرْنَ الإحْسَانَ، لو أحْسَنْتَ إلى إحْدَاهُنَّ الدَّهْرَ، ثُمَّ رَأَتْ مِنْكَ شيئًا، قالَتْ: ما رَأَيْتُ مِنْكَ خَيْرًا قَطُّ

“நரகவாசிகளில் பெண்களையே அதிகமாகக் கண்டேன் என்று கூறினார்கள். மக்கள் ஏன் (அது), அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களின் நிராகரிப்பே காரணம் என்றார்கள். அப்போது இறைவனையா நிராகரிக்கிறார்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு கணவர்களை நிராகரி(த்து நிந்தி)க்கிறார்கள். (கணவர் செய்த) உதவிகளுக்கு நன்றி காட்ட மறுக்கிறார்கள். காலமெல்லாம் அவர்களில் ஒருத்திக்கு நீ உதவி செய்து, பிறகு உன்னிடம் ஏதேனும் (குறை ஒன்றைக்) கண்டால் உன்னிடமிருந்து எந்த நலனையும் ஒருபோதும் நான் கண்டதேயில்லை என்று சொல்லிவிடுவாள் என்று பதிலளித்தார்கள். (புகாரி- 1659)

எல்லா மனைவிகளும் இப்படித்தான் என்று அர்த்தம் இல்லை, கணவனை மதிக்கும், கணவனுக்கு உதவி செய்யும், அவர்களுக்கு ஒத்துழைக்கும் நல்ல, நன்றியுள்ள மனைவிகள் இருக்கிறார்கள், உதாரணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு நல்ல முறையில் வாழ்ந்த பெண்களை புகழ்ந்து கூறியுள்ளார்கள்.

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆண்களில் பல பரிபூரண ஆண்கள் உள்ளனர், ஆனால் பெண்களில் அன்னை கதீஜா, அன்னை பாத்திமா,அன்னை  ஆசியா, அன்னை ஆயிஷா, அன்னை மர்யம் (ரலியல்லாஹு அன்ஹும்)ஆகியோர் பரிபூரணமான பெண்கள் ஆவார்கள்.

كَمُلَ مِنَ الرِّجَالِ كَثِيرٌ، وَلَمْ يَكْمُلْ مِنَ النِّسَاءِ: إِلَّا آسِيَةُ امْرَأَةُ فِرْعَوْنَ، وَمَرْيَمُ بنْتُ عِمْرَانَ، وإنَّ فَضْلَ عَائِشَةَ علَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ علَى سَائِرِ الطَّعَامِ                          (ஸஹீஹ் அல்-புகாரி – 3411)

அபு மூஸா அஷ்அரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: "ஆண்களில் பலர் பரிபூரண நிலையை அடைந்தனர், ஆனால் பெண்களில், ஃபிர்அவ்னின் மனைவி ஆசியா மரியம் பின்த் இம்ரான் (அலைஹிம்)ஆகியோர் மட்டுமே பரிபூரண நிலையை அடைந்தனர்."ஆயிஷா(ரலி)அவர்களுக்கு பெண்களில் உள்ள சிறப்பு, அனைத்து உணவுகளை விட சரீது சிறப்பாக இருப்பதை போல...

இரண்டாவது ஹதீஸில்:

أفضل نساء أهل الجنة خديجة بنت خويلد ، و فاطمة بنت محمد ، و مريم بنت عمران ، و آسية بنت مزاحم ، امرأة فرعون

சொர்க்கவாசிகளின் சிறந்த பெண்கள், கதீஜா பின்த் குவைலத், பாத்திமா பின்த் முஹம்மது,மரியம் பின்த் இம்ரான்,ஃபிர்அவ்னின் மனைவி ஆசியா பின்த் முஸாஹிம் (அலைஹிம்) ஆகிய நான்கு பெண்களாவார்கள்.

பிரிதொர் ஹதீஸ்...

يا مَعْشَرَ النِّساءِ، تَصَدَّقْنَ وأَكْثِرْنَ الاسْتِغْفارَ، فإنِّي رَأَيْتُكُنَّ أكْثَرَ أهْلِ النَّارِ وما لنا يا رَسولَ اللهِ، أكْثَرُ أهْلِ النَّارِ؟ قالَ: تُكْثِرْنَ اللَّعْنَ، وتَكْفُرْنَ العَشِيرَ

صحیح مسلم – 79 / صحیح ابن حبان – (3250)

“ஒரு நபி(ஸல்) அவர்கள் ஹஜ் அல்லது நோன்பு பெருநாளன்று தொழும் இடத்திற்கு வந்து பெண்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்கு சென்றார்கள். அப்போது தர்மம் செய்யுங்கள். பெண்கள் சமுதாயமே, உங்களை நரகவாதிகளில் மிக அதிகமானவர்களாக பார்க்கிறேன். என்று நபி(ஸல்) கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே அது எப்படி என்று கேட்டார்கள். நீங்கள் சாப வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்துகிறீர்கள். கணவனுக்கு மாறு செய்கிறீர்க்ள என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” அறிவிப்பவர்: அபூஸயீத்அல்குத்ரீ(ரழி) நூல்கள்: புகாாி, முஸ்லிம்

குழந்தை உறங்காமல் இருந்தாலோ, தவறு செய்தாலோ, வீட்டில் எதையேனும் உடைத்தாலோ, பெண்கள் குழந்தைகளை பத்துஆ செய்வதும்,திட்டுவதும்,சாபம் இடுவதும் பெண்களின் இயல்பான  பழக்கமாக உள்ளது.இதற்கு அரபியில் لعنت சாபம் என்று சொல்வார்கள்.

அல்லாஹ்வின் கருணையை விட்டு விலகுவதே لعنت சாபத்தின் உண்மையான அர்த்தம்.

அது எவ்வளவு ஆபத்தான பாவம். நபிகள் நாயகம்ﷺ அவர்களுக்கு மிஃராஜில் அதன் முடிவை தம் உம்மத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகக்காட்டப்பட்டது, எனவே  இந்த பாவத்திலிருந்து பெண்கள் தம்மை தாற்காத்துக்கொள்ளவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

கணவன் தவறு செய்யலாம், மனைவியும் தவறு செய்யலாம், கணவன் மனைவியின் தவறுகளை மன்னித்தால், மனைவி கணவனின் தவறுகளை மன்னித்தால், மனைவியின் உபகாரத்திற்கு கணவன் நன்றியுள்ளவனாக, கணவனின் உதவிக்கு மனைவி நன்றியுள்ளவளாக இருப்பாள். வீடு சொர்க்கமாகி விடும், விவாகரத்து செய்யும் நிர்பந்தம் ஏற்படாது என்ற கருத்தை பின்வரும் ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 مَنْ لَا يَشْكُرُ النَّاسَ لَا يَشْكُرُ اللَّهَ

صحیح الترمذی – 1954 / صحیح ابی داؤد – 4811

 மக்களுக்கு நன்றி செலுத்தாதவர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவராகமாட்டார்.

(ஸஹீஹ் திர்மிதி – 1954 / ஸஹீஹ் அபு தாவூத் – 4811)

நன்றியின்மை ஒரு பெரிய பாவம், நன்றியின்மை,மக்களிடம் நன்றிப் பாராட்டாதது சிறு பாவம் அல்ல, பெரும் பாவம், மேலும் ஒரு நபர் பெரும் பாவங்களால் நரகத்திற்குச் செல்வார் என்பதை மேற்கூறிய ஹதீஸ் காட்டுகிறது.

இந்த ஹதீஸைப் படிக்கும் போது, ​​நம் மனதில் என் மனைவி இப்படித்தான் இருக்கிறாள், மனைவிகள் இப்படித்தான் இருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே  கூறிவிட்டார்கள் என்று முடிவு செய்துவிடக்கூடாது 

என்றாலும், பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள், பெண்ணில் தாய் இருப்பாள். ஒரு மகள், ஒரு சகோதரி மற்றும் மனைவிகள் அனைவரும் அடங்குவர், அதாவது, அல்லாஹ்  நாடினால், நம் தாய், சகோதரி, மகள்,மனைவி, நம் மருமகள்கள்,  அல்லது எந்த பெண் உறவினர்களும் பாதிக்கப்படமாட்டார்கள். 

இந்த பாவம், அதுவும் ஒரு பெண் என்பதால், உங்கள் தாய், மகள், சகோதரியும் ஒருவரின் மனைவி என்பதால், இந்த பாவத்தின் தீவிரம் மற்றும் ஆபத்தான முடிவை அவர்களுக்கு உணர்த்தி, அவர்களுக்கு நற்போதனைகளை  விளக்கமாக கூறுவது நம் கடமையாகும். 

ஒரு ஹதீஸில்:

 أَلاَ كُلُّكُمْ رَاعٍ وَ كُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ فَالأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ وَ هُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ وَ هُوَ مَسْئُولٌ عَنْهُمْ وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا وَ وَلَدِهِ وَ هِيَ مَسْئُولَةٌ عَنْهُمْ وَالْعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَ هُوَ مَسْئُولٌ عَنْهُ أَلا فَكُلُّكُمْ رَاعٍ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒவ்வொருவரும் பொருப்பாளர், ஒவ்வொருவரும் அவரவர் பொருப்புகளைப் பற்றிக் கேட்கப்படுவார்கள்.

 ஒரு ஆட்சியாளர் அவர் மக்களுக்கு பொருப்பாளராவார். அவரது குடிமக்களைப் பற்றி விசாரிக்கப்படுவார் (அவர் தனது குடிமக்களின் உரிமைகளை வழங்கினாரா, அவர்களின் உயிரையும் சொத்துக்களையும் பாதுகாத்தாரா இல்லையா?) ஒரு ஆண் தனது குடும்பத்தின் பொருப்பாளனாவான், அவனிடம் அவர்களைப் பற்றியும் ஒரு பெண்ணிடம் அவளுடைய கணவனையும்,குழந்தைகளை பற்றியும் விசாரிக்கப்படுவார்கள், அடிமை தனது எஜமானரின் சொத்துக்களுக்கு பாதுகாவலர், அவர் அதைப் பற்றி விசாரிக்கப்படுவார். ஏனென்றால், உங்களில் ஒவ்வொருவரும் பொருப்பாளர், உங்களில் ஒவ்வொருவரும் அவரவர் பொருப்புகளைப் பற்றிக் கேட்கப்படுவீர்கள். "

எனவே உங்கள் வீட்டில் உள்ள பெண்களை இஸ்லாமிய போதனைகளால் நன்னெறிபடுத்தவேண்டும், இல்லையெனில் நாளை மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். என்பதை மிஃராஜின் இந்த சம்பவம் நமக்கு கற்றுத்தருகிறது.

மஸ்ஜிதின் முக்கியத்துவம்:

மிஃராஜில் , நபி (ஸல்) அவர்கள் முதலில் மஸ்ஜிதுல் ஹராமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள், அங்கு அவர்களின் இதயம் ஜம்ஜம் நீரால் கழுவப்பட்டது, பின்னர் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து மஸ்ஜித் அல்-அக்ஸாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்,  அங்கு அனைத்து நபிமார்களுக்கும் இமாமாக தொழவைக்கும் பாக்கியம் வழங்கப்பட்டது, மஸ்ஜித் அக்ஸாவிலிருந்து வானத்திற்கான பயணம் தொடங்கியது, திரும்பியதும். அல்-அக்ஸா மஸ்ஜிதிற்கு கொண்டு வரப்பட்டதும், பின்னர்  ஹராம் மஸ்ஜிதிற்கு கொண்டு வரப்பட்டதும். பள்ளிவாசல்களின் முக்கியத்துவத்தையும், முஸ்லிம் சமூகத்தில் பள்ளிவாசல்களின் முக்கிய பங்கையும் இஸ்ரா மற்றும் மிஃராஜ் சம்பவத்திலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது, ஏனெனில் இந்த பயணம் மஸ்ஜிதிலிருந்து தொடங்கி மஸ்ஜிதிலேயே முடிந்தது. உம்மத்திற்கு மஸ்ஜிதுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக இது செய்யப்பட்டது, ஏனென்றால் நாயகம் ﷺஅவர்கள் வீட்டிலிருந்து நேராக வானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் நேராக வீட்டிற்கு அழைத்து வரப்பட்டிருக்கலாம், ஆனால் நாயகம் ﷺஅவர்கள் மீண்டும் மீண்டும் மஸ்ஜிதிக்கு அழைத்து வரப்பட்டதன் நோக்கம். ஒரு முஸ்லிமின் வாழ்வில் மஸ்ஜிதிக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது என்பதை முஸ்லிம் உம்மத்திற்கு விளக்குவதே ஆகும், 

 ஸஹீஹ் புகாரியில் ஒரு ஹதீஸ் உள்ளது:

سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ في ظِلِّهِ يَوْمَ لا ظِلَّ إلَّا ظِلُّهُ ۔۔ وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ في المَسَاجِدِ

صحیح البخاری (6806) )

அவனுடைய நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் இல்லாத நாளில் அல்லாஹ்  தன் நிழலால் ஏழு நபர்களுக்கு நிழலிப்பான்.அவர்களில் ஒருவர் அவரின் இதயம்  மஸ்ஜிதோடு இணைக்கப்பட்டவர்.

அதாவது மஸ்ஜிதை விட்டு வெளியில் வரும்போது அடுத்த தொழுகைக்கு நேரம் வரும்போது சரியான நேரத்தில் தொழுகையை நிறைவேற்ற மஸ்ஜிதிக்கு வந்து விடுவார் தொழுகைகக்கான (அதான்) அழைப்பு வந்ததும்  மஸ்ஜிதிற்கு செல்ல வேண்டும் என்ற சிந்தனையில் இருப்பவர் , அதாவது, அவர் மஸ்ஜிதில் இல்லை, ஆனால் அவரது இதயம் மஸ்ஜிதில் உள்ளது, அவர் பாங்கொலி (அதான்) அழைப்புக்காக காத்திருக்கிறார்.

இந்தச் செயலின் பலன், மறுமை நாளில் அர்ஷின் நிழல் கிடைக்க காரணமாகிறது. எனவே, மிஃராஜ் சம்பவத்தின் மூலம் கிடைக்கும் பாடம் என்னவெனில், எப்போது மஸ்ஜிதை விட்டு வெளியேறினாலும், அடுத்த தொழுகைக்கு அழைப்பு விடுக்கும்போது, ​​அல்லாஹ் நாடினால்,  பள்ளிவாசலுக்கு நேரத்துக்கு வந்து தொழுவேன் என்ற எண்ணத்தில் வெளியேறவேண்டும். தொழுகைக்காக மஸ்ஜிதிற்கு வரவே முடியாத சூழல் ஏற்பட்டாலும், குறைந்து நிய்யத்தின்  பலனாவது கிடைக்கும், கியாம நாளில் அல்லாஹுதஆலாவின் அர்ஷ் சிம்மாசனத்தின் நிழல் பெறுவோரின் பட்டியலில் இடம் கிடைக்கும்.

 ஒரு ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது:

أَلا أدُلُّكُمْ علَى ما يَمْحُو اللَّهُ به الخَطايا، ويَرْفَعُ به الدَّرَجاتِ؟ قالُوا بَلَى يا رَسولَ اللهِ، قالَ: إسْباغُ الوُضُوءِ علَى المَكارِهِ، وكَثْرَةُ الخُطا إلى المَساجِدِ، وانْتِظارُ الصَّلاةِ بَعْدَ الصَّلاةِ، فَذَلِكُمُ الرِّباطُ

அல்லாஹ் எதன் மூலம் பாவங்களை அழித்து,பதவிகளை உயர்த்துகிறான் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா ? என்று நாயகம் அவர்கள் சஹாபாக்களிடம் கேட்டார்கள் அதற்கு அவர்கள் "ஆம்,அறிவியுங்கள் யாரசூலல்லாஹ்..." என்று கூறினார்கள் அவர் கூறினார்: "சிரமத்திலும் நன்றாக ஒளுச்செய்வதும், மஸ்ஜிதிகளின் பால் அதிகமான எட்டுகளை எடுத்து வைப்பதும், ஒரு தொழுகைக்குப் பிறகு அடுத்த தொழுகைக்காக காத்திருப்பதும் ஆகும்.அதுவேஉங்களுக்கு  பதவி உயர்வு பெறும் செயலாகும்."

(ஸஹிஹ் முஸ்லிம் – 251)

பள்ளிவாசலின் முக்கியத்துவத்தை மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும், பள்ளிவாசலுடன் இணைந்தவர்களின் வாழ்வை அல்லாஹ் மாற்றிவிடுவான் என்பதற்கு இந்த மிஃராஜ் சம்பவம் ஓர் பாடம். 

 ஒரு ஹதீஸில்...

أَحَبُّ البِلَادِ إلى اللهِ مَسَاجِدُهَا.

صحیح مسلم – )671)

 நகரங்களில் அல்லாஹுக்கு மிகவும் பிடித்தவை அதன் மஸ்ஜித்கள் ஆகும்.

அல்லாஹ்வின் பார்வையில், ஒரு நகரத்தில் மிகவும் பிரியமான இடம் அதன் மஸ்ஜித்களாகும், பின்னர் மஸ்ஜிதில் தொழும் நபருக்கு நல்ல,இறையச்சமுள்ளவர்களின் சகவாசம் கிடைக்கிறது, மேலும் அதன்  விளைவுகளால் அவருக்குள் ஓர் மாற்றம் ஏற்பட்டு பின்னர் அவர் மஸ்ஜிதில்  திக்ரு,திலாவத்,நஃபிலான வணக்கங்களில் ஈடுப்பட்டு இறையச்சமுள்ளவராக மாற வாய்ப்பாக அமைகிறது, எனவே மஸ்ஜிதின் மாண்பை சமுதாயம் உணரவே மிஃராஜில் மஸ்ஜிதிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

தஹிய்யத்துல் உளுவின் முக்கியத்தும்:

மிஃராஜ் சம்பவத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் மற்றொரு முக்கியமான படிப்பினை என்னவென்றால், நபி (ஸல்) அவர்கள் ஹஸ்ரத் பிலால் (ரலி) அழைத்துக் கேட்டதாக ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.

أنَّ النبيَّ صلَّى اللهُ عليه وسلَّمَ قالَ لبِلالٍ عِنْدَ صَلَاةِ الفَجْرِ: يا بلَالُ، حَدِّثْنِي بأَرْجَى عَمَلٍ عَمِلْتَهُ في الإسْلَامِ؛ فإنِّي سَمِعْتُ دَفَّ نَعْلَيْكَ بيْنَ يَدَيَّ في الجَنَّةِ. قالَ: ما عَمِلْتُ عَمَلًا أَرْجَى عِندِي: أَنِّي لَمْ أَتَطَهَّرْ طُهُورًا، في سَاعَةِ لَيْلٍ أَوْ نَهَارٍ، إلَّا صَلَّيْتُ بذلكَ الطُّهُورِ ما كُتِبَ لي أَنْ أُصَلِّيَ.

صحیح البخاری – (1149))

நபி(ஸல்) அவர்கள் ஒரு ஃபஜ்ருப் பொழுதில், ‘பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறும்! ஏனெனில் உம்முடைய செருப்போசையை சொர்க்கத்தில் கேட்டேன்’ என்று பிலால்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு பிலால்(ரலி) ‘இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அவ்வுளூவின் மூலம் நான் தொழ வேண்டுமென்று நாடியதைத் தொழாமல் இருப்பதில்லை. இதுதான் என்னுடைய செயல்களுள் சிறந்த செயல்’ என்று விடையளித்தார்கள் (புகாரீ 1149).

இந்த இரண்டு ரக்அத்களுக்கு தஹியத்துல் உளு என்று சொல்லப்படும் .இந்த இரண்டு ரக்அத்களும் மிகவும் முக்கியமானவையும்,சிறந்தவையாகும், நபி ﷺஅவர்கள் சொர்க்கத்தில் பிலால்(ரலி)அவர்களின் காலடி ஓசையைக் கேட்க காரணமான செயல் "தஹியாத்துல் உளு"இந்த அமல் மிஃராஜ் உணர்த்தும் பாடமாகும்.

மற்றொரு ஹதீஸில்...

دخلتُ الجنةَ ليلةَ أُسْرِىَ بِي ، فسمعتُ في جانِبِها وجْسًا ، فقُلتُ : يا جبريلُ ما هذا ؟ قال : هذا بلالٌ المُؤذِّنُ

صحیح الجامع – 3372 / مسندأحمد – 2324 / سنن البیھقی

நான் மிஃராஜ் அழைத்து செல்லப்பட்ட  இரவில் சொர்க்கத்தில் நுழைந்தேன்,அருகில் காலடி சத்தம்  நான் கேட்டேன்: ஜிப்ரயீலே!, யார் அவர்? என்று கேட்டேன்,அதற்கு "அவர் முஅத்தின் பிலால்(ரலி)அவர்கள்"என்றார் 

தற்பெருமை, ஆணவத்தை தவிர்க்கவும் .

மிஃராஜ் நிகழ்வின் பாடங்கள்,படிப்பினைகளில் முக்கியமான  ஒன்று என்னவென்றால், நபி (ஸல்) அவர்கள் விண்ணுலகிற்குச் சென்று, ஜிப்ரயீல்(அலை) அவர்களை சந்தித்தார்கள், அல்லாஹ்வைச் சந்தித்தார்கள், எந்த மனிதனும் கற்பனை கூட செய்து பார்க்க  முடியாத காட்சிகளைக் கண்டார்கள். ஆனால் அதன் பிறகு நாயகம்ﷺ அவர்கள் திரும்பி வந்தபோது, ​​அவர்களின்  அணுகுமுறை, நடத்தை,தொடர்புகளில் எந்த மாற்றமும் இல்லை. மாறாக, அவர்கள்  முன்பு நடந்து கொண்டதைப்போலவே நடந்து கொண்டார்கள், 

மனைவிக்கு சேவை செய்வதும், அடிமைகளுக்கு சேவை செய்வதும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவுவதும், அனாதைகள், விதவைகளுக்கு சேவை செய்வதும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அண்ணலவர்களின்  அணுகுமுறை இன்னும் அப்படியே எளிமையாக இருந்தது, நாயகம்  ﷺ முன்பை விட பணிவு,தயக்கத்தின் உருவமாகி, முன்பை விட மக்களிடம் அதிக இரக்கமும்,அன்பும் கொண்டவராக ஆகிவிட்டார்கள்.

அல்லாஹ் ஒருவருக்கு கிருபை செய்தால், அந்த பாக்கியம் எந்த வகையிலும் இருக்கட்டும் , செல்வம், புகழ், கௌரவம், நல்ல வேலை,வியாபாரம், நிலம், சொத்து, கார், வங்கி இருப்பு என எந்த வகையிலும் ஓர் முன்னேற்றம் ஏற்பட்டாலும் அவருடைய அணுகு முறையில் மாற்றம் ஏற்படுகிறது மக்களிடம் தற்பெருமையுடனும்,கர்வமுடனும் நடக்க ஆரம்பித்து விடுகிறார்.  

அதனால்தான் அல்லாஹ் குர்ஆனில்...

وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًا‌  اِنَّكَ لَنْ تَخْرِقَ الْاَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُوْلًا‏

மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது.(அல்குர்ஆன் : 17:37)

وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًا ‌ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرٍ‏

“(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.(அல்குர்ஆன் : 31:18)

وَاقْصِدْ فِىْ مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ‌ اِنَّ اَنْكَرَ الْاَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيْرِ‏

“உன் நடையில் (மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல்) நடுத்தரத்தை மேற்கொள்; உன் குரலையும் தாழ்த்திக் கொள்; குரல்களிலெல்லாம் வெறுக்கத்தக்கது நிச்சயமாக கழுதையின் குரலேயாகும்.  (அல்குர்ஆன் : 31:19)

 அல்லாஹ் கொடுத்த அருட்கொடைக்கு இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டும், அதைவைத்து யாரையும் இகழ்ந்து விடக்கூடாது, ஏனெனில் அல்லாஹ் ஒருவரின் அழகு, செல்வம், தோற்றம் ஆகியவற்றைப் பார்க்காமல், அவர்களின் செயல்களை, உள்ளங்களைப் பார்க்கிறான்.எனவே, உயர்வு என்பது நம் நபி (ஸல்) அவர்கள் ஏழாவது வானத்திற்குச் சென்று, பின்னர் சித்ரதுல்-முன்தாஹாவிற்க்குச் சென்று, அல்லாஹ்வைச் சந்தித்து, சொர்க்கத்திற்குச் சென்று உலகில் யாருமே அடையாத புகழின் உச்சத்தை அடைந்தார்கள், ஆனால் அவர்கள் திரும்பிவந்தபோது, ​​​​அவர்களின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை.மக்களிடம் அதே வழியில் சிறந்த முறையில்  நடந்து கொண்டார்,பணிவு,சிறந்த நடத்தையில்  முன்மாதிரியாக திகழ்ந்தார்கள்.

 மிஃராஜ் செல்வதற்கு முன் இருந்த பணிவு,மரியாதை, கௌரவம், அந்தஸ்து மற்றும் மேன்மை ஆகியவற்றின் அடிப்படையில் யாரையும் தாழ்வாகக் கருதவில்லை. ஏனென்றால், ஒரு முஸ்லிமின் பதவி,கௌரவம்,புகழ்,வேறு எந்த அருளையும் வைத்து அடுத்தவரைக் குறைவாகக் கருதுவது அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி மறுப்பதாகும்.நன்றி கெட்ட தனமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகை விட்டு பிரியா விடை கொடுத்த போது,மரண சாசனமாக கூறிய இரண்டு வாக்கியங்கள் :

قال علي بن أبي طالبٍ رضي الله تعَالى عنه: (كان آخر كلام رسول الله صلى الله عليه وسلم: الصلاة الصلاة، اتقوا الله فيما ملكت أيمانكم) (صححه أحمد شاكر في مسند الإمام أحمد 2/ 29).

அலீ (ரலி)அவர்கள்  "நபி (ஸல்)     (மரணசமயத்தில்) அவர்களின்இறுதி வாக்கியங்கள் தொழுகை! தொழுகை! என்றும் ,அடிமைகள் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்று இருந்தன"என கூறுனார்கள்.

நாயகம் (ஸல்)அவர்கள் தம் வாழ்வில்  புகழின் உச்சத்தை அடைந்தபோதும்  கூட மக்களிடம் பணிவாக நடந்து கொண்டார்கள்.பணிவாக நடக்குமாறே தம் உம்மத்தையும் ஏவினார்கள்.

வாழ்வின் இறுதி நொடியிலும் தொழுகையின் மகத்துவத்தையும்,தம் கீழ் உள்ளவர்களின் உரிமைகளை சரிவர நிறைவேற்றுமாறும் உபதேசித்தார்கள்.

 நாயகம்ﷺஅவர்கள் தம் வாழ்நாளில் பணிவோடும்,கனிவோடும் வாழ்ந்து உம்மத்திற்கு முன்மாதிரியாக திகழ்ந்தார்கள் இது மிஃராஜ் நிகழ்வின் படிப்பினைகளில் முக்கிய ஒன்றாகும்.

அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் சொன்னதின் படி வாழ இறைவன் தஃவ்பீக் செய்வானாக! ஆமின்..

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Thursday, 9 February 2023

ஜும்ஆ பயான் 10/02/2023

பேரிழப்புகள் தரும் படிப்பினைகள்(சிர்யா,துருக்கி பூகம்பம்-2023)

முன்னுரை :


கடந்த திங்கள் கிழமை அதிகாலை 3:30 மணியளவில் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவு 7.8 என்ற அளவில் பதிவாகியிருந்தது. அதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான அடுக்குமாடிக் கட்டடங்கள் இடிந்துவிழுந்தன. ஆனாலும், அதே நாளில் தொடர்ந்து மூன்று முறை துருக்கி, சிரியா உள்ளிட்ட பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கத்தை அண்டை நாடுகள் வரை உணரமுடிந்தது. இந்த நிலநடுக்கத்தில் 8000-க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பதாகவும், இன்னும் மீட்புப்பணி நிறைவடையவில்லை என்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
நிலநடுக்கம் காரணமாக மொத்தமாக துருக்கி நாடே 10 மீட்டர் நகர்ந்து உள்ளதாக ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது. கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த மிக மோசமான நிலநடுக்கமாக பேரழிவாக பார்க்கப்படுகிறது. அதோடு ஒரு முறை பிளேட் நகர்ந்தால் அதற்கு மேலே இருக்கும் பிளேட்களும் நகரும் சூழ்நிலை ஏற்படும். இது கிட்டத்தட்ட சங்கிலி விளைவு போல சில நொடிகள் ஏற்படும். இதன்பின் இந்த நிலநடுக்கம் முடிந்தும் சிறிய அளவிலான நகர்வுகள் இருக்கும். இதை ஆப்டர் எபக்ட் என்றும் கூறுவார்கள்.துருக்கி நிலநடுக்கத்தில் இப்படித்தான் ஏற்பட்டு இருக்கிறது. 

இஸ்லாமிய கிலாபத்தின் அடையாளமாய் இருந்த துருக்கி.

உஸ்மான் என்பவரின் தலைமையில் பைசாந்தியரை வீழ்த்தி 13ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் துருக்கியை மையமாக வைத்து தொடங்கிய உஸ்மானியர்களின் ஆட்சி 1924 வரை தொடர்ந்திருந்தது. இக்காலப் பகுதியில் 38 உஸ்மானிய சுல்தான்கள் ஆட்சியாளர்களாக விளங்கியுள்ளனர். இவர்களில் மிகவும் முக்கியமான ஆட்சியாளர்தான் கி.பி. 1451 இல் அரியாசனமேறிய இரண்டாம் முஹம்மத். இவர்தான் கி.பி. 1453 இல் (ஹிஜ்ரி 857) உரோமர்களுடன் போரிட்டு கொன்ஸ்தாந்து நோபிளை வெற்றி கொண்டார்.

இதனால்தான் இவர் வரலாற்றில் “பாதிஹ் முஹம்மத்” என அழைக்கப்படுகின்றார். நபி (ஸல்) அவர்களிடம் சில தோழர்கள் இஸ்லாமிய கொன்ஸ்தாந்து நோபிளையா அல்லது ரோமையா முதலில் வெற்றி கொள்ளும் என வினவிய போது, நபி (ஸல்) அவர்கள் கொன்ஸ்தாந்து நோபிளே முதலில் வெற்றி கொள்ளப்படும் என சுபசோபனம் சொன்னார்கள். எனவே, நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பின் படி கிடைத்த இம்மகத்தான வெற்றியை இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் வெகுவிமர்சையாகக் கொண்டாடின.

பின்னர் இந்நகரையே சுல்தான் முஹம்மத் தலை நகராக்கி இஸ்தான்புல் (இஸ்லாமிய நகரம்) என பெயரை மாற்றி அமைத்தார். இவ்வெற்றிக்குப் பின் இஸ்லாம் எட்டுத்திக்குகளுக்கும் மிக வேகமாகப் பரவியது. உஸ்மானியர்கள் துருக்கியைத் தளமாகக் கொண்டே ஆட்சியை விஸ்தரித்தனர். இதன் விளைவாக, உஸ்மானிய சுல்தான் முதலாம் ஸலீம் கி.பி. 1517 இல் மம்லூக்கியரை வெற்றிகொண்டு எகிப்து, சிரியா என்பவற்றைக் கைப்பற்றி துருக்கியப் பேரரசுடன் இணைத்துக்கொண்டார். கி.பி. 16ம் நூற்றாண்டளவில் உஸ்மானிய ஆட்சியானது வட ஆபிரிக்கா வரை வியாபித்திருந்தது. மேலும் அரபுத்தீபகற்பத்தின் ஹிஜாஸ¤ம், யமனும் உஸ்மானியர் வசமானதோடு, குறிப்பாக போல்கன் பிரதேசங்கள் இவர்களது ஆதிக்கத்துக்கு உட்பட்டன.

உண்மையிலேயே உலக வரலாற்றில் மிகப்பெரிய நிலப்பரப்பை ஏக காலத்தில் ஆட்சி செய்த பெருமை துருக்கிய உஸ்மானியர்களையே சாரும். துருக்கிய சுல்தான் அன்று பேரரசின் சக்கரவர்த்தியாக மாத்திரமன்றி முஸ்லிம் உலகின் ஆன்மீகத் தலைவராகவும் விளங்கினார். உஸ்மானிய கலீபாக்களில் சுல்தான் சுலைமானின் ஆட்சிக்காலம் உஸ்மானிய கிலாபத்தின் பொற்காலம் என வர்ணிக்கப்படுகின்றது. ஏனெனில் இவர் உஸ்மானியர்களின் கீழிருந்த பல நாட்டவர்கள், இனத்தவர்கள் அனைவருக்கும் ஏற்புடைய ஒரு சட்ட யாப்பை வகுத்தார். உஸ்மானிய கிலாபத்தின் மற்றுமொரு சிறந்த ஆட்சியாளரான சுல்தான் 2ம் அப்துல் ஹமீத் (கி.பி. 1876 - கி.பி. 1909) கிலாபத்தை வீழ்த்துவதற்கு சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த கிறிஸ்த்தவ, யூத சதிகளை முளையிலேயே கிள்ளி எறிந்தார். இவரது இத்தகைய செயலானது இஸ்லாத்தின் எதிரிகளை இன்றும் கோப மேற்றியது. எவ்வாறாயினும் கிலாபத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற தூண்டுதலை வழங்கியது.

இதன் பின்னணியில் கலீபாவை சிறைப்பிடித்த யூத சக்திகள் அவரை கொலையும் செய்தனர். இவ்வாறு இஸ்லாமிய கிலாபத் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த சமயம்தான் 1923 இல் இரண்டாம் அப்துல் மஜீத் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். இச்சமயத்தில் துருக்கியில் ஜனநாயகக் கோஷம் மேலோங்கிக் காணப்பட்டதால் தேசிய மகா சபையானது கலீபாவை 10 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனக் கட்டளையிட்டு 1923 துருக்கியை குடியரசாக அறிவித்தது. அதன் முதலாவது ஜனாதிபதியாக அதே வருடம் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மக்கள் ஜனநாயக சோஷலிசக் கட்சியின் தலைவர் முஸ்தபா கமாலை நியமித்தது. நபி (ஸல்) அவர்கள் மரணித்து அவர்களது தோழர்களால் நிறுவப்பட்டு, இறுதியாக துருக்கியர்களால் சுமக்கப்பட்ட இந்த இஸ்லாமிய கிலாபத்தை தங்களது கைகளாலேயே அழித்துக் கொண்டார்கள் என்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.


இயற்கை பேரழிவு...

உலக வரலாறென்பது இயற்கை சீற்றங்கள்,போர்கள் மற்றும் பேரழிவுகளால்  நிரம்பியுள்ளது,சில இயற்கை சீற்றங்கள்  மற்றும் பேரழிவுகள் மனித மக்கள்தொகையில் பெரும் பகுதியை கண் இமைக்கும் நேரத்தில் அழித்துவிட்டிருக்கின்றன.

மக்களின் வாழ்க்கையில் நிலநடுக்கங்களின் விளைவுகள் மிகவும் ஆபத்தானவை, நீங்கா துன்பங்களை தரவல்லவை. 

மற்ற பேரழிவுகளுடன் ஒப்பிடும்போது பூகம்பங்களினால் ஏற்படும் விளைவுகள்,போர்கள் மற்றும் தொற்றுநோய்களை விட கொடியவை, 

மனோதத்துவ நிபுணர்களின் கூற்று; பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர்களிலிருந்து மீண்டு உயிர் பிழைத்தவன்,மனதளவில் பயம்,துக்கத்தால் பாதிக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் நிம்மதியான தூக்கம் இன்றி தவிக்கிறான்.

உலகப் புகழ் பெற்ற  கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவின் கூற்றுப்படி:இதுவரை உலகில் ஏற்பட்ட பூகம்பங்களால் தோராயமாக மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.பொருளாதார இழப்புகள் ஏராளம்.கணக்கிற்கு அப்பாற்பட்டது.

உண்மையில்,  இந்த பூகம்பங்கள், அல்லாஹ்வின் அத்தாட்சி ஆகும்.கியாம நாளில் அடையாளங்களில்  உள்ளவை ஆகும்.

பூகம்பம் குறித்து இஸ்லாம்.

குர்ஆன்,ஹதீஸ்,வரலாறுகள் மற்றும் தம்மை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை படிப்பினையாக கொண்டு, முஸ்லிம்கள் தங்களின்  வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்ள வேண்டும்.எந்த இலட்சியமும் இல்லாமல் வாழ்வது முஸ்லிமுக்கு அழகல்ல.அது ஈமானில் உள்ள குறைபாட்டின் அடையாளமாகும்.

குறிப்பாக பேரழிவுகளின் போது, ​​​​முஸ்லிம்களாகிய நமக்கு இரண்டு பொறுப்புகள் உள்ளன, ஒன்று நாம் நமது  ஈமானையும்,நமது இஸ்லாமிய சகோதரர்களின் ஈமானில் ஏற்படும் தடுமாற்றங்களை விட்டும் பாதுகாப்பது.

இரண்டாவது இது போன்ற இக்கட்டான சந்தர்ப்பங்களில் இஸ்லாம் வழங்கும் தீர்வு என்ன என்பதனை   நாட்டின் முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு தெரியப்படுத்துவது நமது இரண்டாவது பொறுப்பாகும்.

எனவே,  குர்ஆன், ஹதீஸ் மற்றும் வரலாறு ஒளியில் பூகம்பங்கள் தொடர்பாக  இஸ்லாமிய வழங்கும் தீர்வை காணலாம்.

திருக்குர்ஆனில் ஷுஐப்(அலை) அவர்களின் கூட்டத்தவர்களுக்கு அளிக்கப்பட்ட வேதனையையும்,அதன் காரணத்தையும் படிப்பினையாக கூறப்பட்டுள்ளது.

ஷுஐப்(அலை)அவர்களின் கூட்டத்தவர்கள் அளவை,நிறுவையில் மோசடி செய்தனர்.இந்த பழக்கம் அவர்களிடம் அதிகரித்துக் கொண்டே சென்றது.சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அநியாயமாக பேரம் பேசி அடித்து வாங்குவது,விற்கும்போதுஅளவை,நிறுவையில் மோசடி செய்வதும் அவர்களின் இயல்பாகவே மாறிவிட்டது.

திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் எழுதுகிறார்கள்;பொருளாதாரத்தில் மட்டுமல்ல உரிமைகளிலும்  பெரும்போது அதிகமாக பெறுவதும் திரும்ப வழங்கும்போது குறைத்து தருவதும்  ஷுஐப்(அலை)அவர்களின் கூட்டத்தவர்கள் தீய பண்பாகவே மாறிவிட்டது. 

ஷுஐப்(அலை)அவர்களின் கூட்டத்தவர்கள் அளவை,நிறுவையில் மோசடி செய்த காரணத்தால் பூகம்பத்தினால் வேதனை செய்யப்பட்டு அடைக்கப்பட்டனர்.

فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِىْ دَارِهِمْ جٰثِمِيْنَ‌ ۛۙ     ‏

ஆகவே அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது; அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளில், இறந்தழிந்து கிடந்தனர்.(அல்குர்ஆன் : 7:91)

இவ்விதமே மூஸா நபியின் கூட்டத்தவர்கள் பூகம்பத்தால் அழிக்கப்பட்டனர்.

وَاخْتَارَ مُوْسٰى قَوْمَهٗ سَبْعِيْنَ رَجُلًا لِّمِيْقَاتِنَا‌  فَلَمَّاۤ اَخَذَتْهُمُ الرَّجْفَةُ قَالَ رَبِّ لَوْ شِئْتَ اَهْلَـكْتَهُمْ مِّنْ قَبْلُ وَاِيَّاىَ‌  اَ تُهْلِكُنَا بِمَا فَعَلَ السُّفَهَآءُ مِنَّا  اِنْ هِىَ اِلَّا فِتْنَـتُكَ  تُضِلُّ بِهَا مَنْ تَشَآءُ وَتَهْدِىْ مَنْ تَشَآءُ ‌ اَنْتَ وَلِيُّنَا فَاغْفِرْ لَـنَا وَارْحَمْنَا‌ وَاَنْتَ خَيْرُ الْغَافِرِيْنَ‏

இன்னும் மூஸா நாம் குறிப்பிட்ட நேரத்தில் (தூர் மலையில்) நம்மைச் சந்திப்பதற்காக, தம் சமூகத்தாரிலிருந்து எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார்; அவர்களைப் பூகம்பம் பற்றிக்கொண்டபோது, அவர், “என் இறைவனே! நீ கருதியிருந்தால், இதற்கு முன்னரே அவர்களையும் என்னையும் நீ அழித்திருக்கலாமே! எங்களிலுள்ள அறிவிலிகள் செய்த (குற்றத்)திற்காக, எங்கள் யாவரையும் நீ அழித்துவிடுகிறாயா? இது உன்னுடைய சோதனையேயன்றி வேறில்லை; இதைக்கொண்டு நீ நாடியவர்களை வழிதவற விடுகிறாய்; இன்னும் நீ நாடியவர்களை நேர் வழியில் நடத்துகிறாய். நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எங்களுக்கு கிருபை செய்வாயாக. மன்னிப்பவர்களிலெல்லாம் நீ தான் மிக்க மேன்மையானவன்” என்று பிரார்த்தித்தார்.(அல்குர்ஆன் : 7:155)

செல்வங்களை பதிக்க வைக்கும் செல்வந்தர்களுக்கு காரூனின் அழிவை அல்லாஹ் படிப்பினை ஆக்கினான்.

فَخَسَفْنَا بِهٖ وَبِدَارِهِ الْاَرْضَ فَمَا كَانَ لَهٗ مِنْ فِئَةٍ يَّـنْصُرُوْنَهٗ مِنْ دُوْنِ اللّٰهِ وَمَا كَانَ مِنَ الْمُنْتَصِرِيْنَ‏

ஆகவே, நாம் காரூனையும் அவன் வீட்டையும் பூமியில் அழுந்தச் செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்கிற கூட்டத்தார் எவருமில்லை; இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை.(அல்குர்ஆன் : 28:81)

ஹதீஸில்  பூகம்பங்கள் பற்றி... 

صحيح البخاري 

1036 - حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، قَالَ: أَخْبَرَنَا أَبُو الزِّنَادِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقْبَضَ العِلْمُ، وَتَكْثُرَ الزَّلاَزِلُ، وَيَتَقَارَبَ الزَّمَانُ، وَتَظْهَرَ الفِتَنُ، وَيَكْثُرَ الهَرْجُ - وَهُوَ القَتْلُ القَتْلُ - حَتَّى يَكْثُرَ فِيكُمُ المَالُ فَيَفِيضَ»

அபூஹுரைரா ( ரலி) அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவு பறிக்கப்படும் வரை, பூகம்பங்கள் அதிகரிக்கும் வரை ,நேரங்கள் சுருங்கும்  வரை, குழப்பங்கள் தோன்றும் வரை ,  கொலைகள்  அதிகரித்து, மற்றும் செல்வம் உங்களிடையே அதிகரித்து அது நிரம்பி வழியும் வரை கியாம நாள் வராது என்றார்கள்.

பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.     (நூல்: புகாரி 1036, 7121)

மூன்று பூகம்பங்கள்

யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவுகளும், பூகம்பங்களும் ஏற்படும். மனிதர்கள் உயிருடன் புதையுண்டு போவர்.

 (மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம், மேற்கே ஒரு பூகம்பம், அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை யுகமுடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), நூல்: முஸ்லிம்)

உலகில் ஆங்காங்கே பூகம்பங்களும் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன என்றாலும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடக்கூடிய இந்த பூகம்பங்கள் மிகவும் பிரமாண்டமானவையாக அமைந்திருக்கும்.

அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கை.

وَمَا نُرْسِلُ بِالْآيَاتِ إِلَّا تَخْوِيفًا

(மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பதற்காவே அன்றி நாம் (இத்தகைய) அத்தாட்சிகளை அனுப்புவதில்லை.(அல்குர்ஆன் 17/59)

அல்லாஹ் இந்த பூமியை  படைத்து அதை நமக்கு இளைப்பாறும் இடமாகவும், தொட்டிலாகவும், படுக்கையாகவும், விரிப்பாகவும் ஆக்கியுள்ளான்.

இறைவனின் இந்தப் பிரபஞ்சத்தையும் அதில் நிகழும் நிகழ்வுகளையம் நாம் சிந்தித்துப் பார்த்தால், இதைப் படைத்தவனின் மகத்துவம் நமக்கு புரிய வரும். அவன் வீணாக எதையும் படைக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளமுடியும்.

هُوَ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ ذَلُولًا فَامْشُوا فِي مَنَاكِبِهَا وَكُلُوا مِنْ رِزْقِهِ ۖ وَإِلَيْهِ النُّشُورُ

அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்; ஆகவே, அதன் பல மருங்குகளிலும், நடந்து அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள்; இன்னும் அவனிடமே (யாவரும்) உயிர்த்தெழவேண்டியிருக்கிறது. (அல்குர்ஆன் (67/15)

நிலநடுக்கம் ஏன்?

நில நடுக்கம், பூகம்பங்கள் பூமியின் தட்ப வெட்ப மாற்றத்தினால் ஏற்படுகின்றது என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த மாற்றங்களை இவ்வுலகில் நிகழ்த்துவது அல்லாஹ் தான் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் உண்டு. ஆனால்  இவை மட்டும் காரணமல்ல. மாறாக மனிதன் தன்னை படைத்த ரப்பை மறந்து தன் மனம் போன போக்கில் வாழும் போதும், அநியாயங்கள், அழிச்சாட்டியங்கள், அக்கிரமங்கள் போன்ற பாவங்களை செய்யும் போதும் இதுப் போன்ற வேதனைகளை அல்லாஹ் பூமியில் ஏற்படுத்துகிறான். சில சமயம் பசி, பட்டினி, பஞ்சம் பயம், பொருளாதார இழப்பு, உயிர் இழப்பு, போன்ற சோதனைகளையும் ஏற்படுத்துகிறான். இதையே அல்லாஹ் திருமறையில்...

ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ

மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின் (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான். (அல்குர்ஆன் 30/41)

நில நடுக்கம் என்பது இறைவனின் கோபமா?  அல்லது இது ஒரு பேரழிவா ?

பூகம்பங்கள் என்பது  அல்லாஹ்வின் பேராற்றலில் கட்டுப்பட்டதாகும். அதை இவ்வுலகில் அவ்வப்போது ஏற்படுத்துவது மனிதன் தன்னை படைத்த ரப்பை நினைத்து பயந்து வாழ்வதற்காகும். 

சில சமயம் காஃபிர்களுக்கு எதிரான கோபமாகவும் பழிவாங்கலாகவும் இருக்கலாம். சில சமயம் முஸ்லிம்களுக்கு படிப்பினையூட்ட இவ்வுலகில் வேதனையாகவும், மறுமையில் அதனால் நிறைய நன்மைகளை தருவதற்காகவும் இருக்கலாம்.

ஒரு தடவை பூமி உள்வாங்கிய போது இப்னு மஸ்ஊத் (ரலி) கூறினார்கள்..

قال ابن مسعود أيها الناس إن ربكم يستعتبكم فاعتبوه ) .

ஒ மனிதர்களே! அல்லாஹ் உங்களிடம் நீங்கள் பாவம் செய்வதிலிருந்து மீள்வதையும் அவன் திருப்பொருத்தத்தை பெறுவைதையும் எதிர்பார்கிறான் என்றார்கள். மேலும் கடுமையான சூராவளி காற்று ஏற்பட்ட போது நபி (ஸல்) அவர்களின் முகத்தில் அதை உணர்ந்தேன் என்றார்கள் .(நூல் புகாரி)

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகிறார்கள்:

பெரும்பாலும் நிலநடுக்கங்கள் கியாமத் நாளின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. எனவே நில நடுக்கம், கடுமையான காற்று, இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது இறைவனின் அச்சம் ஏற்பட்டு அவன் பக்கம் வேண்டும்.

சில சமயம் பூகம்பங்கள் காஃபிர்களுக்கு எதிரான கோபமாகவும் பழிவாங்கலாகவும் இருக்கலாம். இதற்கு முன்பாக பல சமுதாயம் இறை நிராகரிப்பின் காரணமாக அழிக்கப்பட்டுள்ளது.

فَكُلًّا أَخَذْنَا بِذَنْبِهِ ۖ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ الصَّيْحَةُ وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضَ وَمِنْهُمْ مَنْ أَغْرَقْنَا ۚ وَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَٰكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ

இவ்வாறு, நாம் ஒவ்வொருவரையும் அவரவர் செய்த பாவத்தின் காரணமாகப் பிடித்தோம்; அவர்களில் சிலர் மீது கடும்புயல் மூலமாக கல்மாரியை அனுப்பினோம்; அவர்களில் சிலரை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது அவர்களில் சிலரைப் பூமியினுள் அழுந்தச் செய்தோம்; அவர்களில் சிலரை மூழ்கடித்தோம்; ஆனால் அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்வதற்காக இருக்க வில்லை அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள். (அல்குர்ஆன் 29/ 40)

தண்டனையாக...

فعن أي موسى قال : قال رسول الله أمتي هذه أمة رحومة ليس بها عذاب في الآخرة وعذابها في الدنيا الفتن والزلازل والقتل ) رواه أبو داوود وأحمد بسند صحيح .

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உம்மத் ரஹ்மத் செய்யப்பட்ட உம்மத்தாகும். மறுமையில் எந்த வேதனையும் பெற மாட்டார்கள். மாறாக உலகத்திலே குழப்பங்கள், கொலை, பூகம்பம் போன்ற வேதனையை அடைவார்கள்.

இந்த  நிலநடுக்கங்கள் நாளை கியாமத் நாளில் ஏற்படும் கடுமையான நிலநடுக்கங்களின் அபாயத்தை முன் கூட்டியே நமக்கு காட்டுகின்றன.

يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ ۚ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ

மனிதர்களே! நீங்கள் உங்களுடைய இறைவனை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக (கியாமத்து நாளாகிய) அவ்வேளையின் அதிர்ச்சி, மகத்தான் பெரும் நிகழ்ச்சியாகும்.

يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَىٰ وَمَا هُمْ بِسُكَارَىٰ وَلَٰكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ

அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்; எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல ஆனால் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும் (அல்குர்ஆன் 22/01 -02 )

பேரிழப்புகள் தரும் படிப்பினைகள்.

قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ  ﴿9:51﴾

“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!

சோதனை இரண்டு வகை.

இவ்வாறு ஏற்படும் அழிவுகளை “இயற்கை அனர்த்தம்” என வர்ணிக்கிறார்கள் இறை நம்பிக்கையற்றவர்கள். இந்த அனர்த்தங்களை தடுத்து நிறுத்த நவீன தொழில் நுட்பங்களால் முடியவில்லை. சுனாமி முன் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட கருவியால் எந்தப் பலனம் நடக்க வில்லை. பல் வேறுபட்ட தொழில் நுட்பங்கள் கண்டு பிடிக்கப்பட்டாலும் அழிவுகளை தடுத்து நிறத்த முடியவில்லை.

அல்லாஹ்வை நம்பி வாழும் முஸ்லிம்கள் இந்த அழிவுகளை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும். இயற்கை அனர்த்தம் என்றா அல்லது அல்லாஹ்வின் சோதனைகள் என்றா? நிச்சயமாக அல்லாஹ்வின் சோதனைகள் என்றே இறை விசுவாசிகள் நம்ப வேண்டும்.

அல்லாஹ்வின் சோதனைகள் இரு வகைப்படும் என்பதை அல்குர்ஆனினூடாக அறிகிறோம்.

முதலாவது, மக்கள் பாவங்களிலும் அட்டூழியங்களிலும் அக்கிரமங்களிலும் மூழ்கும் போது அல்லாஹ் சோதனைக்குள்ளாக்கி தண்டிக்க விரும்புகிறான். இந்தத் தண்டனை பாவங்களில் உழன்று வாழ்பவர்களை திருத்துவதற்கும் மக்களுக்கு படிப்பினைக்குரியதுமாக ஆக்கு கிறான்.

இரண்டாவது, மக்களின் ஈமானை பரீட்சிப் பதற்கும் பலப்படுத்துவதற்குமுரிய சோதனை யாக ஆக்குகிறான். சுவனத்திற்குரிய கூலி யாகவும் ஆக்குகின்றான். மேலும் உலக வாழ்வை சோதனைக்குரிய வாழ்வாகவே அமைத்தும் இருக்கின்றான்.

திடீர் மரணங்கள் தண்டனையல்ல.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 

(இஹ்ராம் அணிந்திருந்த ஒருவர் அரஃபாவில் நபி(ஸல்) அவர்களுடன் தங்கியிருந்தபோது தன்னுடைய வாகனத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார். அது அவரின் கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. என அய்யூப் என்பவர் கூறுகிறார். வாகனம் அவரைக் கீழே வீழ்த்தியதால் அவரின் எலும்புகள் முறிந்துவிட்டன என அம்ர் கூறுகிறார். எனவே, அவர் இறந்துவிட்டார். நபி(ஸல்) அவர்கள், 'அவரின் உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரண்டு ஆடைகளில் கஃபனிடுங்கள்; அவருக்கு நறுமணம் பூச வேண்டாம்; அவரின் தலையை மறைக்கவும் வேண்டாம்; ஏனெனில் அவர் மறுமை நாளில் தல்பியாக் கூறிக்கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்' எனக் கூறினார்கள். 

(ஸஹீஹ் புகாரி 1268)

உம்மு ஹராம்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அப்போது நான், 'இறைத்தூதர் அவர்களே! ஏன் சிரிக்கிறீர்கள்?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தாரில் சிலர் இறைவழியில் இந்தக் கடலின் மத்தியில் பயணம் செய்யும் புனிதப் போராளிகளாக எனக்குக் காட்டப்பட்டனர். அவர்கள் கட்டில்களில் வீற்றிருக்கும் 'மன்னர்களாக' அல்லது 'மன்னர்களைப் போன்று' இருந்தார்கள்' என்று கூறினார்கள். உடனே நான், 'இறைத்தூதர் அவர்களே! என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும் படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று சொன்னேன். அப்போது எனக்காக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு (மீண்டும்) தம் தலையைக் கீழே வைத்து (உறங்கி)விட்டுப் பிறகு சிரித்தபடி விழித்தெழுந்தார்கள். அப்போதும் நான், 'ஏன் சிரிக்கிறீர்கள், இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தாரில் சிலர் இறைவழியில் புனிதப்போர் புரிபவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள்' என்று முன்புபோன்றே பதிலளித்தார்கள். அதைக் கேட்டு நான், 'இறைத்தூதர் அவர்களே! என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் (கடல் பயணம் செய்து அறப்போருக்கு) முதலாவதாகச் செல்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள்' என்று கூறினார்கள். (நபி(ஸல்) அவர்கள் கூறியபடியே) உம்மு ஹராம்(ரலி) அவர்கள் முஆவியா இப்னு அபீ சுஃப்யான்(ரலி) அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் கடல் பயணம் மேற்கொண்டார்கள். பின்பு அவர்கள் கடலிலிருந்து புறப்பட்டபோது தம் வாகனத்திலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டார்கள்.(ஸஹீஹ் புகாரி 7002 )

தொழுது,இறைவனிடம் மன்றாடுவதே தீர்வாகும் .

அல்லாமா கசானி(ரஹ்)அவர்கள் சொல்கிறார்கள்;திடுக்கமான,இக்கட்டான சந்தர்ப்பங்களில் அதிகம் தொழ வேண்டும்.குறிப்பாக பூகம்பம் ஏற்படும் போது முஸ்லிம்கள் நபிலான தொழுகைகளையும்.பயபக்தியோடு துஆவிலும் ஈடுபட வேண்டும்.இதற்கென குறிப்பாக இந்த தொழுகையும் இல்லாததால் பொதுவாக இரண்டு ரகஅத்  நஃபிலாக தொழலாம். 

பஸராவில் நிலநடுக்கத்தின் போது தாம் தொழுததாக ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. (بدائع الصنائع ۱/۲۸۲)

கீழ் வரும் துஆக்களையும் ஓதலாம்

ஹஸ்ரத் உமர் பின் அப்துல் அஜீஸ்(ரஹ்) அவர்கள் பூகம்பத்தின் போது மக்களை பின்வரும் துஆக்களை ஓதிவர வலியுறுத்தினார்கள்.

இந்த மூன்றும் குர்ஆனில் வரும் நபிமார்கள் ஓதிய துஆக்களாகும்.

1- ஹழ்ரத் ஆதம்(அலை)அவர்கள் கேட்ட துஆ;

 رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا ٚ وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا وَتَرْحَمْنَا لَـنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ‏

அதற்கு அவர்கள்: “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.(அல்குர்ஆன் : 7:23)

2- நூஹ் நபி(அலை)அவர்கள் கேட்ட துஆ;

قَالَ رَبِّ اِنِّىْۤ اَعُوْذُ بِكَ اَنْ اَسْــٴَــلَكَ مَا لَـيْسَ لِىْ بِهٖ عِلْمٌ‌ وَاِلَّا تَغْفِرْ لِىْ وَتَرْحَمْنِىْۤ اَكُنْ مِّنَ الْخٰسِرِيْنَ‏

“என் இறைவா! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்” என்று கூறினார்.(அல்குர்ஆன் : 11:47)

3- ஹஜ்ரத் யூனுஸ்(அலை)அவர்கள் கேட்ட துஆ; 

 اَنْ لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ ‌  اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنَ‌  ‌‏

 “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார்.(அல்குர்ஆன் : 21:87)

  (الجواب الکافی،ص:۴۷)                                                  

இச்சந்தர்பத்தில் முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்.

முஃப்தி முஹம்மது தகி உஸ்மானி ஹழ்ரத் அவர்கள் எழுதுகிறார்கள்;

பூகம்பம் போன்ற பேரிடர்கள் ஏற்படும்போது, உண்மையான முஃமின் இந்த நிகழ்வினால் ஏற்படும் நன்மை தீமைகளை நன்கு அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே, அவனே பிரபஞ்சத்தை படைத்து பரிபாலிக்க கூடியவன். அவனின் நாட்டமின்றி ஒர் அணுவும் அசையாது.அவன் சூட்சுமங்கள் புரிகிறதோ, இல்லையோ அதில் கருத்துக்கள் கூற உரிமையில்லை என்று விளங்குவான்.(اصلاحی خطبات۱۶/۱۳۸)

இடிபாடுகளில் சிக்கி மரணிப்பவர் ஷஹீத் அந்தஸ்தை பெற்றவராவார்.

عنْ أبي هُرَيْرةَ، ، قالَ: قالَ رَسُولُ اللَّه ﷺ: الشُّهَدَاءُ خَمسَةٌ: المَطعُونُ، وَالمبْطُونُ، والغَرِيقُ، وَصَاحبُ الهَدْم وَالشَّهيدُ في سبيل اللَّه متفقٌ عليهِ.

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:

ஐந்து நபர்கள் ஷஹீத் உடைய அந்தஸ்தை பெறுகின்றனர்.

1) காலரா நோயால் இறந்தவர்

 2) வயிற்று வலியால் இறந்தவர் 

3) நீரில் மூழ்கி இறந்தவர்

 4) இடிபாடுகளில் சிக்கி இறந்தவர். 

5) அல்லாஹ்வின் பாதையிலே இறந்தவர்.

முடிவுரை :

பாவங்களால் தான் பூமியிலே இதுப் போன்ற இயற்கை சீற்றங்கள்  iநில நடுக்கங்கள் ஏற்படுகின்றன. எனவே அல்லாஹ்வின் கோபத்தை பெற்று தரக்கூடிய பாவங்களான வட்டி , விபச்சாரம், அளவையில் மோசடி , பிறரை ஏமாற்றுதல், பாட்டு பாடுதல், தொழுகையை விடுதல் போன்ற பாவங்களிலிருந்து தவிர்ந்திருப்போம்.

மேலும் திக்ரு, திலாவத், தொழுகை, அதிகமாக தான தர்மம் செய்தல், துஆ செய்தல், அதிகமாக இஸ்திஃபார் செய்தல், பாவமன்னிப்பு எனும் தவ்பாவை அதிகப்படுத்துதலை இதுப் போன்ற நேரங்களில் கடைபிடிப்போமாக! ஆமின்...

சிர்யா,துர்க்கி பூகம்பத்தில் உயிர்நீத்தவர்களின் பிழைகளை பொறுத்தருள்வானாக!பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட சிறார்கள் முதியவர்கள் அனைவரையும் அல்லாஹ் பாதுகாத்து குணமடைய செய்வானாக!அல்லாஹ் இது போன்ற பேரிடர்களை விட்டும் நம்மையும்,நம்சந்ததினரையும் பாதுகாப்பான!ஆமீன்...

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Featured post

ஜும்ஆ பயான் 14/06/2024

தலைப்பு: குர்பானியின் சட்டங்கள். குர்பானி என்றால் என்ன? குர்பானி  என்பது இஸ்லாத்தின் மிக முக்கியமான வணக்கமாகும், இந்த புனித மாதத்தில் மில்லி...