Wednesday, 4 October 2023

ஜும்ஆ பயான் 06/10/2023

முஹம்மது நபி ﷺ அவர்களின் ஹிஜ்ரத்திலிருந்து ஹஜ்ஜத்துல் விதா வரை.


طَلَعَ الْبَدْرُ عَلَیْنَا

مِنْ ثَنِیَّاتِ الْوَدَاعِ

وَجَبَ الشُّکْرُ عَلَیْنَا

مَا دَعٰی لِلّٰہِ دَاعِ

கண்மணி நாயகம் ﷺஅவர்களின் வரலாறு, உலக வரலாற்றிலேயே ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

அல்லாஹுத்தஆலா முன்னோர் பின்னோர் அனைவருக்குமான அழகிய முன்மாதிரியாக நபியை அனுப்பி வைத்தான்.அவர்களின் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் மனித சமுதாயத்திற்கு நேர்வழியாகவும்,சிறந்த பாடத்தையும் கற்பிக்கின்றது.

மதினாவின் ஹிஜ்ரத் இஸ்லாமிய வரலாற்றிலேயே அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.

இது கண்மணி நாயகம் ﷺஅவர்கள்,இன்னும் அவர்களின் தோழர்களாகிய சஹாபாப்பெருமக்களின் வாழ்க்கை திருப்புமுனையின் புதிய துவக்கமாக அமைந்தது. இஸ்லாம் உலகெங்கிலும் ஓங்கி வளர துவக்க புள்ளியாக அமைந்தது.

ஹிஜ்ரத்திற்கு முன் மதீனா.

நாயகம் ﷺஅவர்கள் ஹிஜ்ரத் செய்து மதினாவுக்கு வருவதற்கு முன்னால் மதினாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மக்காவை விட சற்று அதிகமாகவே இருந்தது.ஆனால் இஸ்லாத்தின் நிலைமையோ மிக பலவீனமாக இருந்தது. 

மதினாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 100 இருந்து ஹிஜ்ரத்துடைய நேரத்தில் ஆயிரமாக உயர்ந்திருந்தது.ஆனால் இஸ்லாம் அமைப்பு ரீதியாக பலம் பெற்று இருக்கவில்லை.இஸ்லாமியர்கள் கூட்டமைப்பாக இல்லாமல் சிதறுண்டு இருந்தனர்.

நாயகம் ﷺஅவர்களின் குபா தங்குதலும்,மதினா வருகையும்.

மக்கா காஃபிர்களின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரிக்க சஹாபாக்கள் தனித்தனியாகவும்,கூட்டாகவும் மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்ய துவங்கி விட்டனர்.

இறுதியாக நாயகம் ﷺஅவர்கள் ஹழ்ரத் அபுபக்ர்(ரலி)அவர்களோடு சேர்ந்து ஹிஜ்ரத் செய்து மதீனா வந்தடைந்தார்கள். 

அல்லாஹ்வின் நாட்டம் இன்னும் கட்டளையின் பேரில் நாயகம் ﷺஅவர்களின் மதினா ஹிஜ்ரத், பெரும் தாக்கத்தையும்,இஸ்லாம் உலகெங்கிலும் பல்கி பெருக காரணமாகவும் அமைந்துவிட்டது.

நாயகம்ﷺஅவர்கள் மதினாவிற்கு வந்த போது ஓர் அதிசய தக்க நிகழ்வை கண்டார்கள்.

மக்காவில் தங்களின் நெருங்கிய சொந்த பந்தங்களே பெரும் துன்பங்களை தந்து பிறந்த மண்ணை விட்டே நபியை துரத்தினர் ஆனால் இங்கு மதினாவிலோ தங்களின் சொந்த பந்தங்களை விடவும் நபியின் மீதுள்ள பிரியத்தில் தங்களின் உயிர்,பொருள் அனைத்தையும் நபிக்காக தியாகம் செய்யும் ஒரு கூட்டம் நபியை வரவேற்க காத்திருக்கின்றனர்.

நபிகள் நாயகம்ﷺஅவர்களின் வருகையை எதிர்நோக்கியவர்களாக மதினாவாசிகள் எல்லையில் மிகுந்த ஆர்வதோடும் அல்லாஹ்வின் பிரிய நபி இனி நம்மோடு வாழப்போகிறார்கள் என்கிற ஆர்வத்திலும் வரவேற்று காத்திருக்கின்றனர்.

பரா இப்னு ஆஸிப் (ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்;நபிகள் நாயகம்ﷺ அவர்கள் முதன்முதலாக மதினாவில் நுழையும் சந்தர்ப்பத்தில் மதினாவாசிகள் மட்டற்ற மகிழ்ச்சியில் இருந்தனர்.அது போன்றதொரு மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தை இதற்கு முன் நான் மதீனாவில் கண்டதில்லை.

குபா.

நாயகம் ﷺஅவர்கள் மதினாவிற்கு செல்வதற்கு முன்னால் அருகிலுள்ள குபாவிற்கு சென்றார்கள். இது மதினாவிலிருந்து இரண்டறை மைல் தொலை தூரத்தில் உள்ள ஓர் ஊராகும்.அங்கே சில அன்சார் சஹாபாக்களின் இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வந்தன.அங்கு குல்ஸும் இப்னு ஹத்மு (ரலி)அவர்களின் இல்லத்தில் ஓய்வெடுத்தார்கள்.நபி ﷺஅவர்கள் குபா வந்துவிட்டதை கேள்விப்பட்ட மதினாவாசிகள் நபியை சந்திக்க வர துவங்கிவிட்டனர்.

நபி ﷺஅவர்கள் குபாவிற்கு வந்ததும் முதன் முதலாக அங்கு ஒரு மஸ்ஜிதை கட்டுகின்றார்கள்.நபியோடு சேர்ந்து ஸஹாபாக்களும் இப்புனித பணியில் ஈடுபட்டு ஓரிரு தினங்களில் மஸ்ஜித் கட்டி முடிக்கப்படுகின்றது.

நாயகம்ﷺஅவர்களுக்கு இது மிக விருப்பமான மஸ்ஜிது ஆகும்.மதினாவிற்கு சென்றதற்கு பின்னாலும் கூட வாரத்தில் ஒரு தினம் இங்கு வந்து தொழுதுவிட்டு செல்வார்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் முதல் மஸ்ஜித் என்ற பெருமையும்,நாயகம் ﷺஅவர்களின் திருக்கரங்களால் கட்டப்பட்ட முதல் மஸ்ஜித் என்ற பெருமையும்.அல்லாஹுத்தஆலா திருமறையில் புகழ்ந்து கூறும் மஸ்ஜிதும் குபா மஸ்ஜிதாகும்.

لَا تَقُمْ فِيْهِ اَبَدًا ‌ لَمَسْجِدٌ اُسِّسَ عَلَى التَّقْوٰى مِنْ اَوَّلِ يَوْمٍ اَحَقُّ اَنْ تَقُوْمَ فِيْهِ‌ فِيْهِ رِجَالٌ يُّحِبُّوْنَ اَنْ يَّتَطَهَّرُوْا ‌ وَاللّٰهُ يُحِبُّ الْمُطَّهِّرِيْنَ‏

ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் - நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது; அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது; அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.(அல்குர்ஆன் : 9:108)

குபாவில் பத்து தினங்களுக்கு மேல் தங்கியதற்கு பின்னால் நாயகம் ﷺஅவர்கள் மதினாவை நோக்கி புறப்பட்டார்கள்.அந்நேரத்தில் நபி ﷺஅவர்களுடன் முஹாஜிர்,அன்சார் ஸஹாபாக்களின் ஒரு பெரும் எண்ணிக்கை இருந்தது.

நாயகம்ﷺஅவர்கள் ஒட்டகத்தில் சவாரி செய்து சென்றார்கள்.வழியில் ஓரிடத்தில் ஜும்ஆ நேரம் வந்துவிட்டதால் பனு ஸாலிம் இப்னு அவ்ஃப் என்பவரின் இடத்தில் குத்பா ஓதி,ஜும்ஆ தொழுகை நடத்தினார்கள்.

இதுவே நாயகம்ﷺஅவர்கள் நடத்திய முதல் ஜும்ஆ ஆகும்.முதல் குத்பாவில் ஸஹாபாக்களிடம் "தக்வா"இறையச்சத்தில் உறுதியாக இருக்குமாறு உபதேசித்தார்கள்.அதே இடத்தில் ஒரு மஸ்ஜித் கட்டப்பட்டது அது மஸ்ஜிதுல் ஜும்ஆ என்ற பெயரில் இன்றும் உள்ளது.

மதினா வருகை.

ஜும்ஆ தொழுகை முடிந்ததும் நாயகம் ﷺஅவர்கள் மீண்டும் தங்கள் பட்டாளத்துடன் மதினாவை நோக்கி புறப்பட்டார்கள்.மதினாவை வந்தடைந்ததும்,முஸ்லிம்கள் அனைவரும் தங்களின் இல்லத்தின் அருகே நின்று கொண்டு மிகுந்த உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் அன்போடும் நாயகம் ﷺஅவர்களை "யாரசூலல்லாஹ் ﷺ!இது எனது வீடு எனது உயிர் பொருள் அனைத்தும்  தங்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும். நீங்கள் எங்களின் இல்லத்தில் தங்கிக் கொள்ளுங்கள்." என்றனர்.

நபிﷺமதீனாவிற்குள் நுழைந்த அந்நாள் அம்மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும், ஆனந்தமும் நிறைந்த நாளாக இருந்தது. மதீனாவின் தெருக்களிலும், வீடுகளிலும் இறைப்புகழும், இறைத்துதியும் முழங்கப்பட்டன. அன்சாரிகளின் சிறுமிகள் மிக ஆனந்தத்துடன் சில கவிகளைப் பாடி குதூகலமடைந்தனர்.

طَلَعَ الْبَدْرُ عَلَیْنَا

مِنْ ثَنِیَّاتِ الْوَدَاعِ

وَجَبَ الشُّکْرُ عَلَیْنَا

مَا دَعٰی لِلّٰہِ دَاعِ

“நமக்கு முழு நிலா தோன்றியது.

ஸனியாத்தில் விதா என்னும் மலைப்பாங்கான இடத்திலிருந்து,

அல்லாஹ்வுக்காக அழைப்பவர் அழைக்கும்போதெல்லாம்

நாம் நன்றி செலுத்துவது கடமையாயிற்று.

எங்களுக்கு அனுப்பப்பட்டவரே!

பின்பற்றத் தகுந்த மார்க்கத்தைத்தான் கொணர்ந்தீரே! ”

நாயகம் ﷺஅவர்களின் வருகையின் காரணமாக அனைவரின் முகங்களும்,இல்லங்களும் பிரகாசமாகிவிட்டன.இறை நிராகரிப்பும்,இணைவைப்பும் நிறைந்த இடங்களில் ஏகத்துவம் எனும்  ஒளி வீச துவங்கி விட்டன. 

ஹழ்ரத் அனஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்;நாயகம் ﷺஅவர்கள் மதினாவிற்கு வந்த அந்த நாளிலே அவர்களின் வருகையினால் மதினாவின் மூளை முடிக்கெல்லாம் பிரகாசத்தால் மின்னியது.

நாயகம் ﷺஅவர்களின் இல்லம்.

நபி (ஸல்) மதீனாவில் நஜ்ஜார் கிளையினரின் இல்லத்திற்கு ஹிஜ்ரி 1ல் ரபிய்யுல் அவ்வல் பிறை 12, வெள்ளிக்கிழமை, கி.பி. 622 செப்டம்பர் 27ல் வந்தார்கள். 

நாயகம் ﷺஅவர்களின் ஒட்டகம் பனு நஜ்ஜாரின் இடத்தை அடைந்தபோது மதினாவாசிகளில் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் எழுந்த கேள்வி நாயகம் ﷺஅவர்கள் யாரின் இல்லத்தில் தங்கப் போகிறார்கள்?

ஒவ்வொருவருமே அந்த பாக்கியமும் சிறப்பும் கண்ணியமும் பெருமையும் தங்களுக்கே கிடைக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் ஒட்டகத்தின் கயிற்றைப் பிடித்து இழுத்தனர்.

நாயகம் ﷺஅவர்கள் அம்மக்களை நோக்கி "எனது ஒட்டகத்தை விட்டு விடுங்கள்!நான் இந்நேரம் பணிக்கப்பட்டு இருக்கிறேன்" (அல்லாஹ்வின் நாட்டம் எந்த இடத்தில் உள்ளதோ அங்கு ஒட்டகம் அமரும்)என்று கூறினார்கள்

இதனை கேட்டதும் ஒட்டகத்தின் கயிற்றை விட்டு விட்டனர்.சிறிது தூரம் சென்றதும் ஒட்டகம் ஒரு இடத்திலே அமர்ந்தது அங்கு தான்  மஸ்ஜிதுன் நபிவியும்,நபியின் மனைமார்களான உம்மஹாத்துல் முஃமீனீன்களின் இல்லங்களும் அமைந்தன. 

அங்கிருந்து எழுந்து ஒட்டகம் மீண்டும் நடந்து சென்று ஓரிடத்திலே அமர்ந்தது இப்பொழுது நாயகம்ﷺஅவர்கள் சொன்னார்கள்;இன்ஷா அல்லாஹ்! இங்குதான் தங்குமிடம் அமையும்”

ھٰذَا اِنْ شَاءَ اللّٰہُ الْمَنْزِلُ(بخاری،کتاب الہجرت)

பின்பு நாயகம்ﷺஅவர்கள் மக்களிடம் கேட்டார்கள் இந்த இடத்திற்கு அருகில் உள்ள இல்லம் யாருடையது?

உடனே அபு அய்யூப் அல் அன்சாரி(ரலி)அவர்கள் முன்னாள் வந்து யா ரசூலுல்லாஹ்ﷺ! இது எனது இல்லமாகும்.வாருங்கள்,என்று நபியை அழைத்தார்.

நாயகம்ﷺஅவர்கள் நான் தங்குவதற்கு ஒரு இடத்தை தயார் செய்யுங்கள்.என்றார்கள் (مسلم)

அபு அய்யூப் அல் அன்சாரி(ரலி)அவர்கள் தங்களின் இல்லத்தை சுத்தமாக்கி விட்டு நாயகம்ﷺஅவர்களை அழைத்துச் சென்றார்கள்.

மஸ்ஜிதுன் நபவீ

 நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் எடுத்துக் கொண்ட முதல் முயற்சி பள்ளி வாசல் ஒன்றை அமைப்பதாகும். இந்த பள்ளி வாசலைத்தான் ‘அல்மஸ்ஜித் அந்நபவி’ (நபியவர்கள் கட்டிய பள்ளிவாசல்) என்று சிறப்பாக சொல்லப்படும். தங்களது ஒட்டகம் முதன் முதலாக மண்டியிட்ட இடத்தையே நபி (ஸல்) அவர்கள் பள்ளி கட்டுவதற்காகத் தேர்வு செய்தார்கள். அந்த நிலம் இரண்டு அனாதைகளுக்குச் சொந்தமாக இருந்தது. அவர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் அதை விலைக்கு வாங்கி கட்டிடப் பணியைத் தொடங்கி, அப்பணியில் தாங்களும் பங்கெடுக்கும் முகமாக கல், மண் சுமந்தார்கள். வேலையை உற்சாகப்படுத்தும் வகையில்,

“இறைவா! மறுமை வாழ்வைத் தவிர வேறு வாழ்வு இல்லை.

அன்சாரிகள், முஹாஜிர்களுக்கு நீ மன்னிப்பளி!

இந்த சுமை கைபருடைய சுமையல்ல!

எங்கள் இறைவன் மீது ஆணையாக! இது நன்மை பயக்கக் கூடியது தூய்மையானது.”என்று கவியாக படிப்பார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பணியின்போது ஆர்வமூட்டும் சொற்களைக் கூறி வந்தது தோழர்களுக்கு வேலையில் மிகுந்த உற்சாகத்தை அளித்தது. தோழர்களும் உற்சாகம் மிகுந்தது,

நாயகம்ﷺஅவர்களின் ஒட்டகம் முதலில் உட்கார்ந்த இடம் இரண்டு முஸ்லிம் சிறுவர்களான ஸஹ்ல் மற்றும் ஸுஹைல் இருவருக்கு சொந்தமானதாகும்.அது அஸ்அத் இப்னு ஸரரா(ரலி)அவர்களின் பொறுப்பில் இருந்தது.

நாயகம்ﷺஅவர்கள் இந்த இடத்தில் மஸ்ஜித்  கட்டிக் கொள்ளவும்,மனைவிமார்களின் இல்லங்களை அமைத்துக் கொள்ளவும் விரும்பினார்கள். பத்து தீனாருக்கு அந்த இடம் வாங்கப்பட்டது.பேரித்த மரங்களை வெட்டி மஸ்ஜிதை கட்ட துவங்கினர்.

இப்புனிதப் பணியில் சஹாபாக்கள் ஆர்வத்தோடு ஈடுபட்டனர்.நாயகம்ﷺஅவர்கள் தங்களின் புனித கரங்களால் கல்லையும் மண்ணையும் சுமந்து கட்டுமான பணியை மேற்கொண்டனர்.பேரித்த மர ஓலைகளால் வேயப்பட்டதால் கன மழைகாலங்களில் மஸ்ஜிதில் தண்ணீர் ஒழுகும்.

ஆரம்பத்தில் பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுதார்கள் பின்பு கஃபத்துல்லாஹ் இருக்கும் திசையை நோக்கி கிப்லா மாற்றப்பட்டது.

அந்த பள்ளிவாசல் தொழுகையை நிறைவேற்றுதற்கு உண்டான இடம் மட்டுமல்ல மாறாக, முஸ்லிம்கள் மார்க்கக் கல்வியையும், அதன் போதனைகளையும் கற்றுத் தேர்வதற்குரிய ஒரு பல்கலைக்கழகமாகவும் பள்ளிவாசல் விளங்கியது. சண்டையிட்டு பிளவு பட்டு விரோதம் கொண்டுள்ள பல கோத்திரத்தினர் தங்களது விரோதத்தையும், பகைமையையும் மறந்து அன்புடனும், நேசத்துடனும் ஒன்று சேர்ந்து பழக, தோழமை கொள்ள, நட்புக் கொள்வதற்கேற்ற சங்கமாகவும் அது விளங்கியது. முஸ்லிம்களின் அனைத்துக் காரியங்களையும் நிர்வகிப்பதற்குரிய, செயல்திட்டங்களை அமுல்படுத்துவதற்குரிய மையமாகவும் அது விளங்கியது. ஆலோசனை சபைகளை நடத்துவதற்குரிய மன்றமாகவும் அது விளங்கியது.

அது மட்டுமல்ல வீடு, சொத்து, குடும்பம், பிள்ளைகள் என்று யாரும் இல்லாத ஏழை நபித்தோழர்களில் பலருக்கு தங்கும் விடுதியாகவும் அப்பள்ளி இருந்தது.

முஹாஜிர்,அன்சார் ஸஹாபிகளுக்கிடையில் சகோதரத்துவ ஒப்பந்தம்.

ஒற்றுமை மற்றும் அன்பை பகிர்ந்துகொள்ளும் மையமாக விளங்கிய பள்ளியை கட்டி முடிக்கும் பணியுடன், வரலாற்றில் மிகவும் பிரசித்திபெற்ற ஆச்சரியமிக்க மற்றொரு பணியையும் நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்டார்கள். அதுதான் நாடு துறந்த முஸ்லிம்களையும், மதீனாவில் உள்ள அன்சாரிகளையும் சகோதரர்களாக ஆக்கும் பணி.

இதைப்பற்றி இப்னுல் கய்” (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் அனஸ் இப்னு மாலிக்கின் இல்லத்தில் முஹாஜிர்களுக்கும், அன்சாரிகளுக்கும் இடையில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள். அப்படிச் சகோதரர்களாக ஆக்கப்பட்டவர்கள் மொத்தம் தொண்ணூறு நபர்கள். அதில் பாதி முஹாஜிர்களும், பாதி அன்சாரிகளும் இருந்தனர். இவர்களில் ஒருவர் மற்றவருடன் நட்புகொள்ள வேண்டும் அன்பு காட்ட வேண்டும் ஒருவர் மரணித்துவிட்டால் அவன் இரத்த உறவினர்களைவிட இவரே அவன் சொத்துகளுக்கு வாரிசாவார். ஆனால், பத்ர் போர் நடைபெற்றதற்குப் பின்பு

இனி அல்லாஹ்வுடைய வேதக் கட்டளைப்படி உங்கள் உறவினர்களில் உள்ளவர்களே ஒருவர் மற்றவருக்கு ஏற்றமானவர்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 8:75)

என்ற வசனம் இறங்கியபின் உடன்பிறவா சகோதர சொத்துமை சட்டம் ரத்து செய்யப்பட்டு சகோதரத்துவ உடன்படிக்கை மட்டும் நிரந்தரமாக்கப்பட்டது.

சிலர், “நபி (ஸல்) இரண்டாவது முறையாக முஹாஜிர்களுக்கு மத்தியில் மட்டும் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள். அதாவது, ஒரு முஹாஜிரை மற்றொரு முஹாஜிருக்கு சகோதரராக ஆக்கினார்கள் என்று கூறுகின்றனர். ஆனால், முதலில் கூறப்பட்ட கருத்துதான் ஏற்றமானதாகும். ஏனெனில், முன்னரே முஹாஜிர்களுக்கிடையில் இஸ்லாமிய சகோதரத்துவம் இருந்தது. குலக் கோத்திர ஒற்றுமையிலும், மக்காவை சேர்ந்தவர்கள் என்பதிலும் சகோதரர்களாக இருந்ததால் அவர்களுக்கு மத்தியில் புதிய ஒரு சகோதரத்துவ உடன்படிக்கையை ஏற்படுத்த வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனால், அன்சாரிகளுடனான முஹாஜிர்களின் நிலைமை அப்படியல்ல. அன்சாரிகளுக்கும், முஹாஜிர்களுக்குமிடையில் இஸ்லாமிய சகோதரத்துவத்துடன் தனிப்பட்ட நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக ஒரு சகோதரத்துவ உடன்படிக்கை அவசியமாயிருந்தது.” (ஜாதுல் மஆது)

நபி (ஸல்) அறிமுகப்படுத்திய சகோதரத்துவத்தின் அடிப்படை நோக்கம் என்னவெனில் அறியாமைக் கால இனவெறியை ஒழிக்க வேண்டும் நிறம், குலம், இனம் ஆகிய பாகுபாடுகள் அனைத்தும் குழி தோண்டிப் புதைக்கப்பட வேண்டும் இஸ்லாமை அடிப்படையாக வைத்தே நட்போ பகையோ ஏற்பட வேண்டும்.

இந்த சகோதரத்துவத்தில் விட்டுக்கொடுத்தல், அன்பு, ஒருவருக்கொருவர் ஆறுதலளித்தல், பிறருக்கு நன்மை புரிதல் என்ற உணர்வுகள் பின்னிப் பிணைந்திருந்தன.

அனஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது: “அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் நாடு துறந்து எங்களிடம் வந்தபோது அவர்களையும் ஸஅது இப்னு ரபீஆ (ரழி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள்.” அப்போது அப்துர் ரஹ்மானிடம் ஸஅது இப்னு ரபீஆ கூறினார்:

அன்ஸாரிகளில் நான் வசதி வாய்ப்புள்ள பணக்காரன். என் செல்வங்களை இரண்டு பங்குகளாக்கி (தங்களுக்கு ஒரு பங்கை வழங்கி) விடுகிறேன். எனக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். இருவரில் யாரைப் பிடிக்குமோ (உமக்குப் பிடித்த) அப்பெண்ணை நான் மணவிலக்கு (தலாக்கு) தந்துவிடுகிறேன். அவர் ‘இத்தா’ காலத்தை முடித்துவிட்டால் நீங்கள் அப்பெண்ணை மணமுடித்துக் கொள்ளுங்கள். அதற்கு “அல்லாஹ் உங்களுக்கு நலமும் வளமும் வழங்கட்டும்! அது தங்கள் குடும்பத்திலும் பொருளிலும் ஏற்படட்டும்!! எனக்குத் தங்களது கடைத் தெரு எங்கே இருக்கின்றதென்று காட்டுங்கள். அது போதும்” என்று அப்துர் ரஹ்மான் (ரழி) கூறினார்கள். கைனுகாவினன் கடைத் தெரு அவருக்குக் காட்டப்படவே, அப்துர் ரஹ்மான் (ரழி) கடைத்தெருவுக்குச் சென்று வியாபாரம் செய்து கொஞ்சம் பாலாடைக் கட்டி மற்றும் வெண்ணையை இலாபமாகப் பெற்று வீடு திரும்பினார். மறுநாளும் அவ்வாறே தொடர்ந்து வியாபாரத்திற்குச் சென்று அல்லாஹ்வின் அருளை அதிகமதிகம் சம்பாதித்தார். பின்பு ஒரு நாள் அவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தபோது அவர்மீது வாசனைப் பொருளின் அடையாளம் பட்டிருந்தது. அவரிடம் நபி (ஸல்) “என்ன மகிழ்ச்சியான செய்தி?” என விசாரித்தார்கள். அவர் “நான் நேற்று ஒரு அன்சாரிப் பெண்ணை திருமணம் செய்தேன்” என்றார். “எவ்வளவு மணக் கொடை (மஹர்) அளித்தீர்கள்” என்று நபி (ஸல்) கேட்க, “(கால் தீனார் பெறுமானமுள்ள) சிறு துண்டு தங்கம்” என அப்துர் ரஹ்மான் (ரழி) பதில் கூறினார். (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்களிடம் அன்ஸாரிகள் நமக்கும் நமது சகோதரர்(களான முஹாஜிர்)களுக்கும் (பலன் தரும்) பேரீத்த மரங்களை பங்கு பிரித்துக் கொடுங்கள் என்றனர். நபி (ஸல்) முடியாது என மறுத்து விட்டார்கள். அப்படியென்றால் எங்களுடன் அவர்கள் பாடுபடட்டும். வரும் பலாபலன்களில் நாம் அவர்களைக் கூட்டாகிக் கொள்வோம் என்று அன்ஸாரிகள் கோரினர். அதனை முஹாஜிர்கள் ஒத்துக்கொண்டனர். (ஸஹீஹுல் புகாரி)

இந்நிகழ்ச்சிகள் முஹாஜிர்கள் மீது அன்சாரிகள் கொண்டிருந்த ஆழமான பிரியத்தையும், மனத்தூய்மையையும், தியாகத்தையும், விட்டுக்கொடுத்தலையும் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. முஹாஜிர்கள் தங்களது அன்சாரித் தோழர்கள் செய்த உபகாரத்தை எந்த அளவிற்கு மதித்தார்கள் என்பதையும், அந்த உபகாரத்திலிருந்து தங்களின் அவசியமான தேவைக்கு மட்டும் எடுத்து பயனடைந்தார்கள் என்பதையும் அவர்களிடமிருந்து அதை முழுமையாக அபகரித்துக் கொள்ளவில்லை என்பதையும், தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

முஸ்லிம்கள் சந்தித்த பல பிரச்சனைகளுக்கு நபி (ஸல்) அறிமுகப்படுத்திய இந்த சகோதரத்துவ உடன்படிக்கை மிக அறிவுப்பூர்வமான தீர்வாகவும், நுட்பமான அரசியல் நடவடிக்கையாகவும், இருந்தது.

இஸ்லாமிய நட்பு ஒப்பந்தம்.

இறைநம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் இந்த சகோதரத்துவ உடன்படிக்கையை நபி (ஸல்) உறுதியாக அமைத்தது போன்றே அவர்களுக்கு மத்தியில் அறியாமைக்கால மனக் கசப்புகளையும், குரோதங்களையும் அகற்றும் இஸ்லாமிய நட்பு ஒப்பந்தங்களையும் ஏற்படுத்தினார்கள். அந்த ஒப்பந்தங்களின் மூலம் இனவெறி உணர்வுகளை அழித்தார்கள். ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் நிறுவினார்கள்.

நட்பு ஒப்பந்தத்தின் அம்சங்கள்.

நபியாகிய முஹம்மது (ஸல்) சார்பாகக் குறைஷி இனத்தைச் சேர்ந்த மற்றும் மதீனாவைச் சேர்ந்த இன்னும் இவர்களைப் பின்பற்றி இவர்களுடன் சேர்ந்து, இவர்களுக்குத் துணையாகப் போர் புரியும் அனைத்து முஸ்லிம்கள், இறை நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் எழுதிக் கொள்ளும் ஒப்பந்தம்:

1) முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தவர்.

2) குறைஷிகளில் ஹிஜ்ரா செய்தவர்கள் (முஹாஜிர்கள்) தங்களுக்குள் ‘தியத்“”தை கொடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களில் கைது செய்யப்பட்டவருக்கு அவர்கள் அழகிய முறையில் ‘ஃபித்யா“” கொடுத்து உதவி ஒத்தாசை செய்ய வேண்டும். அனைத்து இறைநம்பிக்கையாளர்களுக்கு மத்தியிலும் நீதமாக நடந்துகொள்ள வேண்டும். அன்சாரிகளில் உள்ள ஒவ்வொரு கிளையாரும் தங்களின் பழைய நிலைமைக்கேற்ப தங்களுக்குள் ‘தியத்’ கொடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களில் உள்ள ஒவ்வொரு வகுப்பினரும் தங்களின் கைதிகளை அழகிய முறையில் ‘ஃபித்யா’ கொடுத்து விடுவித்துக் கொள்ள வேண்டும். அனைத்து முஸ்லிம்களுக்கு மத்தியில் நீதமாக நடந்துகொள்ள வேண்டும்.

3) பொதுவாக இறைநம்பிக்கையாளர்கள் தங்களுக்கு மத்தியில் சிரமத்தில் இருப்பவர்களுக்கு ‘ஃபித்யா’ அல்லது ‘தியத்’ விஷயத்தில் அழகிய முறையில் கொடுத்து உதவ வேண்டும்.

4) தங்களில் கிளர்ச்சி செய்பவர்கள், முஃமின்களுக்கு மத்தியில் அநியாயம் செய்பவர்கள், பாவமான காரியம் செய்பவர்கள், வரம்பு மீறுபவர்கள், விஷமத்தனம் செய்பவர்கள் இவர்களை இறையச்சம் உள்ள முஃமின்கள் (இறைநம்பிக்கையாளர்கள்) ஒன்றுகூடி எதிர்க்க வேண்டும்.

5) மேற்கூறப்பட்டவர்களில் (பொதுவாக முஸ்லிம்களில்) வழிதவறிய ஒருவர் தங்களைச் சார்ந்த ஒருவரின் பிள்ளையாக இருப்பினும் சரியே! அவருக்கு எதிராக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

6) ஓர் இறைநம்பிக்கையாளர் ஒரு காஃபிருக்காக மற்றொரு இறைநம்பிக்கையாளரை கொலை செய்யக்கூடாது. அதாவது வாரிசில்லாத காஃபிர் கொலையுண்டதற்காக அந்த காஃபிருடைய முஸ்லிமான நண்பர், கொலையாளியான முஸ்லிமைக் கொல்லக் கூடாது.

7) ஓர் இறைநம்பிக்கையாளருக்கு எதிராக ஒரு காஃபிருக்கு உதவி செய்யக் கூடாது.

8) அல்லாஹ்வின் பொறுப்பு சமமான ஒன்றே. முஃமின்களில் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவர் பிறருக்கு கார்மானம் (பாதுகாப்பு) கொடுக்கலாம். தங்களில் ஒருவர் கொடுக்கும் கார்மானத்தை மற்ற அனைத்து இறைநம்பிக்கையாளர்களும் நிறைவேற்ற வேண்டும். அதில் பங்கம் இழைக்கக்கூடாது.

9) யூதர்களில் யார் நம்மை பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு உதவி செய்யப்படும். அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்ளப்படும். அவர் மீது எவ்வித அநியாயமும் இழைக்கப்படமாட்டாது. அவருக்கு எதிராக பிறருக்கு உதவி செய்யக்கூடாது.

10) சமாதான உடன்படிக்கை செய்துகொள்வது முஃமின்கள் அனைவரின் உரிமையாகும். அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும்போது, நீதமின்றி ஓர் இறைநம்பிக்கையாளரை விட்டுவிட்டு அன்னியருடன் சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளக்கூடாது.

11) இறைநம்பிக்கையாளர்களில் யாரொருவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும்போது தவறுதலாக தங்களில் ஒருவரைக் கொன்று விடுவாரோ அவருக்கு அனைத்து இறை நம்பிக்கையாளர்களும் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும்.

12) நமக்கு இணக்கமான எவரும் குறைஷிகளின் உயிர், பொருளுக்குக் கார்மானம் (பாதுகாப்பு) கொடுக்க முடியாது. மேலும், ஓர் இறைநம்பிக்கையாளருக்கு எதிராக ஒரு இணைவைப்பவரை பாதுகாக்க முடியாது.

13) ஒரு முஃமின் மற்றொரு முஃமினை குற்றமின்றி கொலை செய்து விட்டதற்கு தக்க ஆதாரமிருப்பின் அவரையும் பழிக்குப்பழி கொலை செய்யப்படும். ஆனால். கொலை செய்யப்பட்டவன் உறவினர் மன்னித்துவிட்டால் அவரை விடுவிக்கப்படும்.

14) இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் கொலை செய்தவனுக்கு எதிராக ஒன்றுசேர வேண்டும். கொலை செய்தவனுக்கு எவ்வகையிலும் உதவி செய்யக் கூடாது.

15) இறைநம்பிக்கையாளர் ஒரு விஷமக்காரனுக்கு, கலகம் செய்பவனுக்கு உதவி செய்யக் கூடாது, அவனுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது எவர் ஒருவர் ஒரு விஷமக்காரனுக்கு உதவி செய்கிறாரோ அல்லது அடைக்கலம் கொடுக்கிறாரோ அவருக்கு மறுமையில் அல்லாஹ்வின் சாபமும், கோபமும் உண்டு. அவருடைய கடமையான, உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

16) உங்களுக்கு ஏதாவது ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதை அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் இறுதித் தீர்ப்புக்காக விட்டுவிட வேண்டும். (இப்னு ஹிஷாம்)

யூதர்களுடன் ஒப்பந்தம்.

நபி (ஸல்) மதீனாவில் அரசியல் அமைப்பு, சட்ட ஒழுங்கு ஆகிய அனைத்திலும் முதன் முதலாக முஸ்லிம்களுக்கு மத்தியில் நிலைத் தன்மையையும் ஒருமைப்பாட்டையும் நிறுவினார்கள். அதன் மூலம் மதீனாவில் புதிய இஸ்லாமிய சமுதாயத்திற்கும், சமூகத்திற்குமான அடித்தளத்தை மிக ஆழமாக உறுதிப்படுத்தினார்கள்.

இரண்டாம் கட்டமாக, முஸ்லிம் அல்லாதவர்களுடன் தங்களது சமூகத் தொடர்புகளை முறைப்படுத்தத் துவங்கினார்கள். அதற்குக் காரணம், முழு மனித சமுதாயமும் நிம்மதி, பாதுகாப்பு, நற்பயன்கள், நல்லுறவுகள் கிடைக்கப்பெற வேண்டும். ஒரே ஒருமைப்பாட்டுக்குக் கீழ் நாட்டு மக்களை கொண்டுவர வேண்டும் என்பதுதான். ஆகவே சுயநோக்கங்களும், இனவெறியும் நிரம்பி இருந்த அக்காலத்தில் எங்கும் காணப்படாத மன்னித்தல், பெருந்தன்மையுடன் நடத்தல், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சட்டங்களை நபி (ஸல்) அமைத்தார்கள்.

மதீனாவிற்கு அருகில் யூதர்கள்தான் முஸ்லிமல்லாதவர்களாக இருந்தார்கள். இவர்கள் முஸ்லிம்களின் மீது உள்ளத்தில் பகைமையை மறைத்து வைத்திருந்தாலும் வெளிப்படையாக முஸ்லிம்களை எதிர்க்கவுமில்லை அவர்களிடத்தில் சண்டை, சச்சரவு செய்யவுமில்லை. எனவே நபி (ஸல்) யூதர்களுடன் நன்மையான நல்ல உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களுக்கு அவர்களது செல்வத்திலும், மதத்திலும் முழு சுதந்திரம் அளித்தார்கள். அவர்களை மதீனாவை விட்டு விரட்ட வேண்டுமென்றோ அல்லது அவர்களுடைய சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டுமென்றோ அவர்கள் நாடவுமில்லை அதைச் செய்யவுமில்லை.

நபி (ஸல்) யூதர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் அம்சங்களை இப்போது நாம் பார்ப்போம்:

1) அவ்ஃப் கிளையினரைச் சேர்ந்த யூதர்கள், முஃமின்களுடன் இணைந்த ஒரே சமுதாயத்தினராக கருதப்படுவர். இந்த யூதர்களுக்கு அவர்களது மார்க்கத்தில் முழு உரிமை உண்டு. முஸ்லிம்களுக்கும் அவர்களுடன் நட்பு கொண்டவர்களுக்கும் அவர்களின் மார்க்கத்தில் முழு சுதந்திரம் உண்டு. இவ்வாறே அவ்ஃப் கிளையினரை சாராத மற்ற யூதர்களுக்கும் அவர்களது மார்க்கத்தில் முழு சுதந்திரம் உண்டு.

2) யூதர்கள் தங்களின் செலவுகளுக்குத் தாங்களே பொறுப்பாளிகளாவர். அவ்வாறே முஸ்லிம்களும் தங்களின் செலவுகளுக்கு தாங்களே பொறுப்பாளிகளாவர்.

3) இந்த உடன்படிக்கை உடையவர்களிடம் யார் போர் தொடுத்தாலும் அவருக்கு எதிராக முஸ்லிம்களும், யூதர்களும் தங்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்துகொள்ள வேண்டும்.

4) யூதர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு - நலம் நாடுதல், ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்தல், உபகாரம் புரிதல் - என்ற அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். குற்றம் புரிவதில் துணை போவது கூடாது.

5) தனது நண்பன் குற்றத்திற்காக மற்றவர் குற்றவாளியாக மாட்டார்.

6) அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

7) பிறருக்கு எதிரானப் போரில் முஸ்லிம்களுடன் யூதர்கள் கலந்துகொள்ளும் போது யூதர்களும் போர் செலவுகளில் பங்கெடுக்க வேண்டும்.

8) இவ்வுடன்படிக்கையில் கலந்து கொள்பவர்கள் மதீனாவில் குழப்பம் விளைவிப்பதோ, விஷமத்தனம் செய்வதோ, இரத்தம் ஓட்டுவதோ முற்றிலும் தடுக்கப்பட்டதாகும்.

9) இந்த உடன்படிக்கையில் கலந்து கொண்டவர்களுக்கு மத்தியில் ஆபத்தான சண்டை, சச்சரவுகள் அல்லது ஏதும் பிரச்னைகள் நிகழ்ந்தால் அதற்குரிய முடிவை அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுமே கூறுவார்கள்.

10) குறைஷிகளுக்கும், குறைஷிகளுக்கு உதவி செய்பவர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கக் கூடாது.

11) யாராவது மதீனாவின் மீது முற்றுகையிட்டால் அவர்களுக்கெதிராக அனைவரும் போர் புரிய வேண்டும். தங்களுக்குள் உதவி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் இருக்கும் பகுதியைப் பாதுகாக்க வேண்டும் 

12) இந்த உடன்படிக்கை, அநியாயக்காரனையும், குற்றவாளியையும் தண்டனையிலிருந்து பாதுகாக்காது.

இந்த உடன்படிக்கையும், ஒப்பந்தமும் உறுதிபெற்றதால் மதீனாவும், மதீனாவைச் சுற்றியுள்ள பகுதிகளும் ஒற்றுமை மிக்க நாடாக மாறி அதற்குத் தலைநகரம் மதீனாவாக விளங்கியது. அந்த நாட்டின் தலைவராக (இவ்வாறு நாம் கூறுவது சரியாக இருப்பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இருந்தார்கள். அந்நாட்டில் முழுமையான அதிகாரமும் பேச்சுரிமையும் முஸ்லிம்களுக்கே இருந்தன.

அமைதியும், பாதுகாப்புமுடைய சூழலை விரிவுபடுத்துவதற்காகத் தேவைக்கேற்ப மற்ற சமூகத்தவர்களுடனும் நபி (ஸல்) இதற்குப்பின் உடன்படிக்கை செய்து கொண்டார்கள். 

எதிரிகளின் சூழ்ச்சியும் தாக்குதலும்,நாயகம்ﷺஅவர்களின் தற்காப்பு நடவடிக்கைகளும்.

நாயகம்ﷺஅவர்களையும்,ஸஹாபாக்களையும் மக்காவிலிருந்து விரட்டியதற்கு பின்னாலும் மக்கா காஃபிர்கள் முஸ்லிம்களை நிம்மதியாக இருக்கவிடவில்லை,பல போர்களைத்தொடுத்தார்கள்.

அதனையே அல்லாஹுதஆலா இஸ்லாம் வளர காரணமாக ஆக்கிவிட்டான்.நாயகம்ﷺஅவர்கள் காலத்தில் நிகழ்ந்த யுத்தங்கள் மொத்தம் 28 அவற்றில் 9 யுத்தங்களில் தான் வாளேந்தி போரடினர்.மற்றவை அனைத்தும் போர் இன்றியே வெற்றி கிடைத்தன.

ஜைது இப்னு அர்கம்(ரலி)அவர்களின் ஓர் அறிவிப்பு;நாயகம்ﷺஅவர்கள் பங்கேற்ற யுத்தங்கள் 19 ஆகும்.

صحیح بخاری

வரலாற்றாய்வாளர்களின் கருத்து;நாயகம்ﷺஅவர்கள் பங்கேற்ற யுத்தங்களுக்கு غزوہ "கஸ்வா" எனப்படும்.

நபி கலந்துக்கொள்ளாமல் அனுப்பிவைத்த படைக்குسرِیّہ "சரிய்யா" எனப்படும்.

இறையழைப்பு பணியும்,இஸ்லாத்தை எத்திவைத்தலும்.

ஹிஜ்ரத்தின் பரகத்தினால் மக்காவை விடவும் மதினாவில் நாயகம்ﷺஅவர்களுக்கும்,இஸ்லாமியர்களுக்கும் இஸ்லாத்தை எத்திவைப்பதும்,பரப்புவதும் இலகுவாக இருந்தது.அல்லாஹ்வின் பால் அழைக்கும் தஃவா பணி மிக வேகமாக வளர்ந்தது.

நாயகம்ﷺஅவர்களின் மதினா ஹிஜ்ரதிற்கு முன்னால் ஹழ்ரத் முஸ்அப் இப்னு உமைர் (ரலி)அவர்களை தவிர குறிப்பிட்ட எண்ணிக்கையில் தஃவா பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும் நபிகள் நாயகம்ﷺஅவர்களின் வருகைக்கு பின்னால் தஃவா பணியில் புது உத்வேகம் ஏற்பட்டது.மதினாவின் மூளை முடுக்கெல்லாம் இஸ்லாமிய அழைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

உயர்ந்தோர்,தாழ்ந்தோர்,ஏழை,செல்வந்தர் என எல்லா தரப்பு மனிதர்களிடமும் இறையழைப்பு பணி சேர்ந்தது. 

அரசர்களுக்கும் ஆளுநர்களுக்கும் கடிதம் எழுதுதல்.

நபி (ஸல்) அவர்கள் உடன்படிக்கையை முடித்து ஹுதைபிய்யாவிலிருந்து திரும்பிய பின் ஹிஜ்ரி 6ஆம் ஆண்டின் இறுதியில் பல அரசர்களுக்குக் கடிதம் எழுதி இஸ்லாமின் பக்கம் அவர்களை அழைத்தார்கள்.

நபியவர்கள் அரசர்களுக்குக் கடிதம் எழுத முற்பட்டபோது “முத்திரை இல்லாத கடிதங்களை அரசர்கள் படிக்க மாட்டார்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டது. ஆகவே, நபியவர்கள் வெள்ளியினாலான மோதிரம் ஒன்றைத் தயார் செய்தார்கள். அதில் ‘முஹம்மது ரஸூலுல்லாஹ்’ என்று பதித்தார்கள். அது மூன்று வரிகளாக இருந்தது. முஹம்மது என்று முதல் வரியிலும், ரஸூல் என்று ஒரு வரியிலும், அல்லாஹ் என்று ஒரு வரியிலும் இந்த அமைப்பில் எழுதப்பட்டிருந்தது. (ஸஹீஹுல் புகாரி)

நபியவர்கள் இப்பணிக்காக தங்களது தோழர்களில் நன்கு அனுபவம் வாய்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களைத் தூதுவர்களாக அரசர்களிடம் அனுப்பினார்கள். ஹிஜ்ரி 7ஆம் ஆண்டு, முஹர்ரம் மாதம் தொடக்கத்தில், அதாவது கைபர் தாக்குதலுக்குச் சற்று முன்பு இந்தத் தூதுர்களை நபி (ஸல்) அனுப்பினார்கள் என பேராசிரியர் மன்சூர்பூ (ரஹ்) திட்டவட்டமாக தெரிவிக்கிறார்.

மிஸ்ரு நாட்டு மன்னருக்குக் கடிதம்.

மிஸ்ரு (எகிப்து) மற்றும் இஸ்கந்தய்யா (அலெக்ஸாண்டியா)வின் மன்னரான ‘முகவ்கிஸ்’ என்றழைக்கப்படும் ஜுரைஜ் இப்னு மத்தாவிற்கு நபி (ஸல்) கடிதம் அனுப்பினார்கள்.(ரஹ்மத்துல் லில் ஆலமீன்)

அக்கடிதத்தில்:அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் எழுதுகிறேன். அல்லாஹ்வின் அடிமையும், அவனது தூதருமான முஹம்மது, கிப்திகளின் மன்னருக்கு எழுதுவது. நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்.

நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. அல்லாஹ் உங்களுக்கு இருமுறை நற்கூலி வழங்குவான். நீங்கள் புறக்கணித்து விட்டால் கிப்தி இனத்தவர்களின் குற்றமும் உங்களையே சாரும்.

(“வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்க மாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” (என்று கூறுங்கள். நம்பிக்கை யாளர்களே! இதனையும்) அவர்கள் புறக்கணித்தால் (அவர்களை நோக்கி) “நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே) வழிப்பட்டவர்கள் என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள்.) (அல்குர்ஆன் 3:64) (ஜாதுல் மஆது)

ஹபஷா மன்னர் நஜ்ஜாஷிக்குக் கடிதம்,

பாரசீக மன்னருக்குக் கடிதம்,

ரோம் நாட்டு மன்னருக்குக் கடிதம்,

பஹ்ரைன் நாட்டு ஆளுநருக்குக் கடிதம்,

யமாமா நாட்டு அரசருக்குக் கடிதம்,

ஸிரியா நாட்டு மன்னருக்குக் கடிதம்,

ஓமன் நாட்டு அரசருக்குக் கடிதம்,

இப்படி சுற்றியுள்ள அனைத்து நாட்டு மன்னர்கள்,ஆளுநர்களுக்கு கடிதம் எழுதி நாயகம்ﷺஅவர்கள் தஃவா கொடுத்தார்கள்.

ஆன்மீகப் புரட்சிகள்.

நபி (ஸல்) அவர்கள் அவ்வப்போது அவர்களுக்கு மார்க்கச் சட்டங்களையும், சமூக உயர்வுக்கு வழிகாட்டும் நல்லொழுக்கங்களையும் போதித்து வந்தார்கள். அவர்களின் உள்ளங்களை ஒவ்வொரு அசுத்தத்திலிருந்தும் தூய்மைப்படுத்தியதுடன் உயர் பண்புகளைக் கடைபிடிக்கவும் அவர்களுக்கு ஆர்வமூட்டினார்கள். அன்பு, சகோதரத்துவம், கண்ணியம், இறைவணக்கம், கீழ்ப்படிதல் போன்ற நல்லொழுக்கப் பயிற்சியும் அளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் சில ஒழுக்கப் பயிற்சிகளையும், போதனைகளையும் பின்வரும் வரிகளில் நாம் பார்ப்போம்:

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் “இஸ்லாமில் சிறந்த அமல் எது?” என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் “உணவளிப்பது, தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் சொல்வது” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தவுடன் நான் அவர்களைச் சந்திக்கச் சென்றேன். அவர்களது முகத்தை நன்கு உற்று நோக்கியபோது அது பொய்யன் முகம் அல்ல என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொண்டேன். நபி (ஸல்) அவர்களின் பேச்சில் முதலாவதாக பின்வரும் உபதேசங்களே இடம் பெற்றன. “மக்களே! ஸலாம் சொல்லும் பழக்கத்தை உங்களுக்குள் பரவலாக்குங்கள் உணவளியுங்கள் உறவினர்களுடன் சேர்ந்து வாழுங்கள் இரவில் மக்கள் உறங்கும்போது நீங்கள் எழுந்து தொழுங்கள் நீங்கள் நிம்மதியாக சுவனம் செல்வீர்கள்.” (ஸுனனுத் திர்மிதி, இப்னு மாஜா)

மக்கா வெற்றி فتح مکہ.

நாயகம் ﷺஅவர்கள்  தம் நாற்பதாவது வயதில் நபித்துவத்தை மக்களிடம் எடுத்துரைததில் தொடங்கி அவர்கள் மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்யும் வரையிலும்,ஹிஜ்ரத்திற்கு பின் நபியோடு பல போர்கள் செய்து ஹுதைபிய்யா உடன் படிக்கை வரையிலும் நபிக்கும்,நபி தோழர்களுக்கும்,மக்கா காஃபிர்கள் சொல்லொண்ணா துன்பங்களை  தந்தார்கள்.நபியின் உயிருக்கு ஊறு விளைக்க சந்தர்பங்களை எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஹிஜ்ரி 8 ஆம் நாயகம்ﷺஅவர்கள் ஸஹாபாக்களின் பத்தாயிரம் பேர்க்கொண்ட ஒரு பெரும் படையோடு மக்காவிற்குள் நுழைகிறார்கள்.கத்தி இன்றி இரத்தம் இன்றி மக்கா முஸ்லிம்களால் கைப்பற்றப்படுகிறது.

மக்கா வெற்றியின் போது தங்களை கருவறுக்க காத்திருந்த மக்கா காஃபிர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கிய காரூண்ய நபி கண்மணி நாயகம் ﷺஅவர்கள் ;

قَالَ لَا تَثْرِيبَ عَلَيْکُمُ الْيَوْمَ .. اذْهَبُوا فَاَنْتُمْ الطُّلَقَاء ُ ۔

"இன்றைய நாள் உங்களின் மீது பழிவாங்குதல் இல்லை.. என்ற யூசுஃப் சூராவின் வசனத்தை ஓதிகாட்டி,செல்லுங்கள்!நீங்கள் சுதந்திரமானவர்கள்" என்று சொன்னார்கள். (سبل الہدی والرشاد،ج5ص242 )

  اَلْيَوْمْ يَوْمُ الْمَرْحَمَةْ۔

இன்றைய நாள் அன்பு,இரக்கம் காட்டும் நாளாகும். என பொதுஅறிவிப்பு செய்தார்கள்.

 (جامع الأحادیث، مسند عبد اللہ بن عباس رضی اللہ عنہما. حدیث نمبر38481)

மக்கா வெற்றியின் போது அரபகத்தின் நான்கு தீசைகளிலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக,கோத்திரம் கோத்திரமாக இஸ்லாத்தை ஏற்று நபியிடம் பைஅத் செய்தனர்.

இப்னு ஸஅத்(ரஹ்) தங்களின் "தபகாதுல் குப்ரா"எனும் நூலில் கிட்டதட்ட 70 கோத்திரங்களுக்கும் அதிகமாக பைஅத் செய்தனர் என எழுதுகிறார்கள்.

இறுதி ஹஜ்.

ஈருலகத் தலைவர் நம் கண்மணி நாயகம் ﷺஅவர்களின் 23 வருட நபித்துவ வாழ்வின் தொடர் முயற்சி, அரப்பணிப்பினால் இஸ்லாம் உலகெங்கிலும் மிக வீரியமாக பல்கிப்பெருகியது.மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

நாயகம்ﷺ அவர்கள் ஹிஜ்ரி 10ஆம் ஆண்டு இறைக்கட்டளைக்கேற்ப பெரும் திரளான மக்களோடு ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள்.

அங்கே வைத்து  "الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ"

"தீன் சம்பூரணமாகிவிட்டது"என மக்களுக்கு அறிவிப்பு செய்கிறார்கள்.சில தினங்களில்سورہ نصر நஸ்ரு சூரா இறங்குகின்றது.

முதன் முதலில் நாயகம் அவர்களின் உற்றத்தோழர் அபூபக்ர் சித்தீக் (ரலி)அவர்கள் நபியின் பிரிவை உணருகிறார்கள்.காரணம் தீன் சம்பூரணமாகிவிட்டதால் நுபுவ்வத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டது.இனி நபியின் தேவை அவசியம் இல்லை.

அதனால் தான் நஸ்ரு சூராவின் இறுதியில் நபியின் இறுதிமுடிவை உணர்த்தும் முகமாக அல்லாஹுத்தஆலா நபியைப் பார்த்து تسبیح و استغفار தஸ்பீஹ், இஸ்திக்ஃபார் செய்துக்கொள்ளுமாறு கட்டளையிடுகின்றான்.நாயகம்ﷺ அவர்கள் தங்களின் ஹஜ்ஜை முடிப்பதற்குள்ளாகவே மக்கள் இந்த ஹஜ்ஜை حجتہ الوداع "ஹஜ்ஜதுல் விதாஃ" இறுதி ஹஜ் என சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

தற்பொழுது அழைப்புப் பணிகள் நிறைவுற்றன. இறைத்தூது உலகின் முன் வைக்கப்பட்டது. “லாஇலாஹஇல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை, முஹம்மது நபி (ஸல்) அல்லாஹ்வுடைய தூதராக இருக்கின்றார்கள்” என்ற அஸ்திவாரத்தின் மீது புதிய சமூகம் செம்மையாக அமைந்தது. இத்தருணத்தில் நபி (ஸல்) அவர்களின் உள்மனம், தாம் உலகில் இருக்கும் காலங்கள் சொற்பமே என்ற மெல்லிய ஒலிக்கீற்றை ஒலித்துக் கொண்டிருந்தது. ஆம்! அவ்வாறுதான், நபி (ஸல்) ஹிஜ்ரி 10ம் ஆண்டு யமன் தேசத்துக்கு முஆத் (ரழி) அவர்களை அனுப்பும் போது கூறிய பொன்மொழிகள் ஞாபகம் இருக்கலாம்.

“அநேகமாக இந்த ஆண்டிற்குப் பின் என்னை சந்திக்கமாட்டாய் முஆதே! இந்த பள்ளிக்கும் எனது மண்ணறைக்கும் அருகில்தான் நீ செல்வாய்.” நபி (ஸல்) அவர்களின் இந்த சொற்களால் நபி (ஸல்) அவர்களை நாம் பிரியப் போகிறோம் என்ற வருத்தத்தால் முஆது (ரழி) கண் கலங்கினார்கள். அல்லாஹ் தனது தூதருக்கு அவர்கள் செய்த அழைப்புப் பணியின் பலன்களை காட்ட நாடினான். இந்த அழைப்புப் பணிக்காகவே இருபது ஆண்டுகளுக்கு மேலாக பலவகை சிரமங்களைச் சகித்தார்கள்.

மக்காவிலும் அதன் ஓரங்களிலும் வாழ்கின்ற அரபிய வமிசங்களும், அதன் முக்கிய பிரமுகர்களும் ஒன்று சேர்ந்து இஸ்லாமிய மார்க்கச் சட்டத் திட்டங்களை நபி (ஸல்) அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நபி (ஸல்) அமானிதத்தை நிறைவேற்றினார்கள் தூதுத்துவத்தை முழுமையாக எத்திவைத்தார்கள் சமுதாயத்திற்கு நன்மையை விரும்பினார்கள் என்ற வாக்கை மக்களிடமிருந்து நபி (ஸல்) வாங்க வேண்டும் என்றும் அல்லாஹ் விரும்பினான். அல்லாஹ்வின் இந்த விருப்பத்திற்கேற்பவே கண்ணியமிக்க ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கா செல்லவிருக்கிறேன் என நபி (ஸல்) அறிவித்தார்கள். இதனைக் கேட்ட மக்கள் பல திசைகளில் இருந்தும் மதீனா வந்தனர். துல் கஅதா முடிய ஐந்து நாட்கள் இருக்கும் போது சனிக்கிழமை நபி (ஸல்) பயணம் மேற்கொண்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், ஃபத்ஹுல் பாரி)

தலையில் எண்ணெய் தடவி தலைவாரி, கீழாடையாக கைலியையும், மேலாடையாக போர்வையையும் அணிந்து கொண்டு, தனது ஒட்டகப் பிராணிக்கு மாலை அணிவித்தார்கள். ளுஹ்ர் தொழுகைக்குப் பிறகு புறப்பட்டு அஸ்ர் தொழுகைக்கு முன்பாக ‘துல் ஹுலைஃபா’ வந்தார்கள். அங்கு அஸ்ரை இரண்டு ரக்அத்தாக தொழுதுவிட்டு அங்கே அன்று முழுதும் தங்கி, மறுநாள் காலை ஸுப்ஹ் தொழுத பின்பு, தமது தோழர்களைப் பார்த்து, “அந்த பரக்கத் (அருள் வளம்) பொருந்திய பள்ளத்தாக்கில் தொழுது, “ஹஜ்ஜுடன் சேர்த்து உம்ரா எனக் கூறுங்கள்” என என்னுடைய இறைவனிடமிருந்து வந்த ஒருவர் இன்றிரவு கூறிவிட்டுச் சென்றார் என்று அறிவித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)


வரலாறு தொடரும்......

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.



Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...