Wednesday 28 December 2022

ஜும்ஆ பயான் 30/12/2022.

புத்தாண்டு 2023.

وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ
இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள். (٢٣/٣அல்குர்ஆன்)

உலக வாழ்வென்பது அல்லாஹ் நமக்கு வழங்கிய மகத்தான அருட்கொடை. உயர்ந்த பொக்கிஷம்.மனிதன் தன் வாழ்வை அர்த்தமுள்ளதாகவும், சீரானதாகவும் அமைத்துக் கொள்வானே யானால் ஈருலகிலும் வெற்றியடைவான்.தன் வாழ்வை வீணாக்குபவன்,மனம் போன போக்கில் வாழ்பவன் தன்னை தானே அழிவில் போட்டுக் கொள்கிறான்.

உலகின் அனைத்து மதங்களும், நாடுகளும் பல்வேறு பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்களைக் கொண்டாடுகின்றன.அவற்றில் ஒவ்வொன்றுமே வரலாற்றில்  சிலப்பல  பின்னணிகள் கொண்டவைகளாக உள்ளன.ஒவ்வொரு பண்டிகையுமே ஏதோ ஓர் விதத்தில்  நல்ல செயல்களை ஊக்குவிப்பதும், கெட்ட செயல்களை அகற்ற அழைப்பு விடுப்பதையும் அறியலாம்.

ஆனால் காலப்போக்கில் மக்களிடையே வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் பாவமிகுதியினால், அப்பண்டிகைகளின் அசல் நோக்கம் மாற்றப்பட்டு புதுமைகளும்,கட்டுக்கதைகளும்  சேர்க்கப்பட்டன. உலகம் முன்னேறி நாகரீகமாக மாற, மக்கள் கலாச்சாரம் மற்றும் கலை என்கிற பெயரில் புதிய கொண்டாட்டங்களையும், அர்த்தமற்ற கேளிக்கைகளையும்,பண்டிகைகளையும் உருவாக்கினர்.

(எ.க 1-ஸ்பெயின் நாட்டின் தக்காளித்திருவிழா.

(எ.க.2-அமெரிக்கா, பிரிட்டன், கனடா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ஹாலோவீன் திருவிழா பேய்களுக்காகக் கொண்டாடப்படுகிறது.) அவற்றில் ஒன்று தான் புத்தாண்டு கொண்டாட்டம்.


புத்தாண்டு கொண்டாட்டங்கள்...

உண்மையில், இந்த புத்தாண்டு கொண்டாட்டம் கிறிஸ்தவர்களின் மதப்பண்டிகை. புத்தாண்டைக் கொண்டாடும் பாரம்பரியம் பண்டைய காலங்களிலிருந்து கிறிஸ்தவர்களிடையே இருந்து வருகிறது, இதற்கு ஒரு காரணம், அவர்களின் மதநம்பிக்கையின்படி, டிசம்பர் 25 அன்று, (ஹஸ்ரத் ஈஸா (அலை)அவர்கள்)ஜீஸஸ் பிறந்ததினமாக கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்படுகிறது. இயேசுவின் பிறப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக  உலகம் முழுவதும் கிருஸ்துவர்களால் கொண்டாடப்படுகின்றது.அதன் நீட்சியே புத்தாண்டு கொண்டாட்டமாகும்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில், நாடு முழுவதும் வண்ண விளக்குகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, டிசம்பர் 31 இரவு, மக்கள் 12 மணி வரை காத்திருந்து, 12 மணிக்கு ஒருவரையொருவர் வாழ்த்தி, கேக் வெட்டி,Happy New Year எனக்கூச்சலிட்டு புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கின்றனர். பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. பல்வேறு இரவு விடுதிகளில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என்கிற பெயரில் வயதுவித்தியாசமின்றி ஆண்,பெண் இரு பாலரும் குடி,கூத்து,கும்மாளமுமாக அன்றைய ஓர் இரவில் மட்டும் அனைத்து அனாச்சாரங்களும், காமகளியாட்டங்களும் அரங்கேற்றப்படுகின்றன.


புத்தாண்டு கொண்டாட்டத்தில் இஸ்லாமியர்கள்.

இன்று, இந்த கிறிஸ்தவ புத்தாண்டை பொது கொண்டாட்டமாக உலகெங்கிலும் கொண்டாடப்படுகின்றது. பல இஸ்லாமிய நாடுகளும்,முஸ்லிம்களும் கூட புத்தாண்டை எதிர்பார்த்து, டிசம்பர் 31 ஆம் தேதிக்காக காத்திருக்கிறார்கள், இந்த முஸ்லிம்கள் தங்களின் உயர்ந்த மார்க்கநெறிகளையும், பாரம்பரியங்களையும் விட்டுவிட்டு தாழ்ந்த, இழிவான கலாச்சாரத்தை பின்பற்றி  புத்தாண்டைக் கொண்டாடத் தொடங்கியுள்ளனர். 

இது கிறிஸ்தவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு ஆண்டை கணக்கிடும் வரலாற்று முறையாகும்.

இஸ்லாமியர்களுக்கென  தங்களின்  ஆண்டைக்கணக்கிட உயந்த,உன்னதமான தத்துவங்களை தன்னகத்தே கொண்டுள்ள ஹிஜ்ரா (சந்திர) நாட்காட்டி முறை உள்ளது, இது நபிகள் நாயகம்ﷺஅவர்களின் ஹிஜ்ரத் செய்த ஆண்டை வைத்து கணக்கிடப்படும் முறையாகும். துவக்க மாதம் முஹர்ரம் ஆகும். இதுவே இஸ்லாமிய நாட்காட்டி; ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இஸ்லாமிய வருடமோ,மாதங்களின் பெயர்களோ தெரியாது.

இஸ்லாமியர்களுக்கு பிறையின் நினைவு வருடத்தில்  ரமலான்,ஈது பெருநாளுக்கு மட்டுமே வரும்.இஸ்லாமிய ஆண்டுகணக்கெல்லாம் பெயருக்கு நிக்காஹ்(திருமண)அழைப்பிதலில்  போடுவதற்கு மாத்திரமே தேவைப்படுகின்றது.

புத்தாண்டு கொண்டாடலாமா?

இன்று முஸ்லிம்கள் ஆங்கில புத்தாண்டை  கொண்டாடுகிறார்கள், ஆனால் உண்மையிலே புத்தாண்டு கொண்டாடுவதற்குறிய தினமா?ஒவ்வொரு ஆண்டு கழியும் போதும் நம் வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து,மரணத்திற்கு ஒரு வருடம் நெருக்கமாகின்றோம். வாழ்க்கை எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு வழங்கிய மாபெரும் பாக்கியம். அப்பாக்கியம் குறையும் போது கொண்டாடப்படக்கூடாது ; மாறாக வருத்தம் கொள்ளவேண்டும்.

கடந்த ஆண்டு கசப்பான அனுபவங்கள், உணர்வுகள், நினைவுகள், மகிழ்ச்சியான நிகழ்வுகள் மற்றும் சோகமான விபத்துக்கள் ஆகியவற்றை விட்டுவிட்டு, வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை படிப்பினையாக  கொடுத்து, மனிதனிடமிருந்து விடைபெறுகிறது. மேலும் மனிதன் தனது வாழ்க்கையின் நிலையான காலத்தை(மறுமையை) நோக்கி நகர்கிறான். 

இதனையே  கவிஞர் ஒருவர் இப்படி கூறுகிறார்:

غافل تجھے گھڑیال یہ دیتا ہے مناد

گِردوں نے گھڑی عمر کی ایک اور گھٹادی

கவனக்குறைவாக இருக்கும் உங்களுக்கு, கடிகாரம்  அறிவிப்புச்செய்கிறது..

கடிகாரத்தின் முட்கள்,வாழ்வின் பொழுதுகளை துண்டிக்கின்றன.

(கழிவது நேரங்களல்ல நம் வாழ்வின் உயர்ந்த பொழுதுகள்)

قال ابن مسعود:( ما ندمت على شيء، ندمى على يوم غربت شمسه، نقص فيه أجلي، ولم يزد فيه عملي! )قیمة الزمن عند العلماء، ص: ۲۷)

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி)அவர்கள் சொல்கிறார்கள்: நான் எதைக்குறித்தும் கைசேதப்படுவதில்லை,சூரியன் மறையும் ஓர் நாளில் எனது பட்டோலையில் எந்த நல்அமல்களும் அதிகமாகாமல் கழியும் அந்நாளே  எனக்கு கைசேதமாகும். 

قال الحسن البصري:(يا ابن آدم إنما أنت أيام!، فإذا ذهب يوم ذهب بعضك)

ஹஸன் பஸரீ (ரஹ்)அவர்கள் சொன்னார்கள்:

"ஆதமின் மகனே!நாள்களின் ஒட்டுமொத்த தொகுப்பு நீ,

விளங்கிக்கொள்!ஒரு நாள் கழியும் போது நீ உன் சிலதை இழக்கிறாய்"

இவ்வாழ்வு நமக்கு நிரந்தர மறுமை வாழ்வின் தயாரிப்பிற்காக தரப்பட்டுள்ளது.நாம் நம் வாழ்வை எவ்வளவு பயனுள்ள வழியில் கழிப்பதென சிந்தித்து செயல்பட வேண்டும்.

ஹஸ்ரத் அலி(ரலி)அவர்கள் கூறினார்கள்:இந்த நாட்கள் உங்கள் ஆயுளின் வேதச்சுவடுகளாகும், நல்லறங்களால் அவற்றை நிறந்தரமானதாக, நீடிக்ககூடியதாக்குங்கள். 

பெயரளவில் (நினைவு) தினங்கள்...

உலகளவில்  யூத,கிறிஸ்தவர்களால் தோற்றுவிக்கப்பட்ட பண்டிகைகள் அனைத்துமே, சக மனிதனின் கடமைகள்,உரிமைகளை இலட்சியம் செய்யாமல் வெறுமனே வருடாவருடம் (நினைவு)தினங்களாக...

அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், குழந்தைகள் தினம் மற்றும் ஆசிரியர் தினம் என்பன போன்ற தினங்களை கொண்டாடிவிட்டால் போதும்,; ஏனென்றால் மேற்கத்திய நாடுகளில் குடும்ப அமைப்புகள் சிதைந்து போய் விட்டன.

பெற்றோர்களை பராமரிக்காமல் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பும் பிள்ளைகளும்,வயதுக்கு வந்த பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் பெற்றோர்களும்,இப்படி எந்த உறவும் பேணப்படாமல் குடும்ப அமைப்புகளை சிதைத்து விட்டு, பெயருக்கு வருடத்தில் ஒரு முறை இது போன்ற தினங்களைக் கொண்டாடுகின்றனர்.ஆனால் இங்கு அப்படியல்ல, இஸ்லாம் அனைவருக்குமான  உரிமைகள்,கடமைகளை நிர்ணயித்து,குடும்ப அமைப்பு சிதையாமல் பாதுகாக்கின்றது. 

எனவே, இஸ்லாமியர்கள் இதுப்போன்ற வித்தியாசமான தினங்களை கொண்டாடுவது  அவசியமற்றதாகும்; மாறாக, முஸ்லிம்கள் அவற்றை தவிர்க்க வேண்டும்; மற்றவர்களின் கலாச்சாரங்களை  பின்பற்றுவதை விட்டும் இஸ்லாத்தில் தடைச்செய்யப்பட்டுள்ளது. 

குர்ஆன்,ஹதீஸ் ஒளியில் புத்தாண்டு.

 சரி ஓர் ஆண்டு கழிந்து புதிய ஆண்டை எதிர்நோக்கும் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் என்ன அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்?என்பதனை குர்ஆன்,ஹதீஸின் ஒளியில் அறியலாம்.

புத்தாண்டு தொடர்பான ஏதேனும் நடைமுறையை இஸ்லாத்தின் முதல் தலைமுறையினர்களான ஸஹாபாப்பெருமக்கள் கடைப்பிடித்திருகின்றார்களா , என்றால் அப்படி எந்த நடைமுறையையும் காண முடியவில்லை; இருப்பினும், சில ஹதீஸ் கிதாபுகளில், , புதிய மாதமோ அல்லது புத்தாண்டின் முதல் மாதமோ தொடங்கும் போது, ​​நபிகள் நாயகம் ﷺஅவர்களின் தோழர்கள் இந்த துஆவை ஓதுவார்கள்,அதனை அடுத்தவர்களுக்கு கற்றுக்கொடுப்பார்கள் என வருகின்றது. : ”اللّٰھُمَّ أدْخِلْہُ عَلَیْنَا بِالأمْنِ وَ الإیْمَانِ، وَالسَّلَامَةِ وَالإسْلَامِ، وَرِضْوَانٍ مِّنَ الرَّحْمٰنِ وَجِوَازٍمِّنَ الشَّیْطَانِ“ (المعجم الاوسط للطبرانی ۶/۲۲۱ حدیث: ۶۲۴۱ دارالحرمین قاہرہ)

யா அல்லாஹ்! எங்களுக்கு ஈமானுடைய, அருள் உடைய பிறையாகவும், ஈடேற்றமும், இஸ்லாமும் உடைய பிறையாகவும் ஆக்கி வைப்பாயாக!

இந்த துஆவை புத்தாண்டின் துவக்கத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு மாதமும் பிறை காணும் போது ஓத  வேண்டும்; மேலும்,புத்தாண்டில், முஸ்லிம்கள் குறிப்பாக இரண்டு விஷயங்களைச் செய்ய வேண்டும்.

வேறுவிதமாகக் கூறினால், புத்தாண்டு குறிப்பாக இரண்டு படிப்பினைகளை பாடமாக நமக்கு விட்டுச் செல்கிறது:        (1) கடந்த காலம் குறித்த சுயவிசாரனை (2) எதிர்காலத்திற்கான செயல் திட்டம்.

கடந்த காலம் குறித்த சுயவிசாரனை..

புத்தாண்டு நம் இம்மை,மறுமை ஈருலக வாழ்வின் நிலை குறித்து நம்மை நாமே  சுயவிசாரனை செய்துக் கொள்ளும் உணர்வை தருகிறது. நம் வாழ்நாளில் ஒரு வருடத்தை நாம் இழந்ததிருகின்றோம்.அதில் நாம் செய்த செயல்களில் நன்மை,தீமைகளை என்னென்ன என்பதனை ஆராயவேண்டும்.

நம் வணக்க வழிபாடுகளில்,கொடுக்கல் வாங்கலில் ஹலால்,ஹராமை பேணி நடந்தோமா?,அடுத்தவர்களுக்கு செலுத்த வேண்டிய கடமைகளை சரிவர நிறைவேற்றினோமா? அடுத்தவர்களின் குறைகளை ஆராய்வதற்கு முன்னால் நம் குறைகளை ஆராய்ந்தோமா?என சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம் 

ஒரு நபர் தனது தவறுகளையும் குறைபாடுகளையும் மற்றவர்களின் கண்களில் இருந்து மறைக்க முடியும்; ஆனால் சுயத்தின்(மனசாட்சி) கண்களில் இருந்து தப்ப முடியாது; அதனால்தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

”حَاسِبُوْا أنْفُسَکُمْ قَبْلَ أنْ تُحَاسَبُوْا“۔ (ترمذی ۴/ ۲۴۷ ابواب الزہد، بیروت)

உங்களை கேள்வி கணக்கு கேட்கப்படுவதற்கு முன்பு நீங்களே உங்களை விசாரணை செய்து கொள்ளுங்கள் (நூல்;திர்மிதி)

எனவே, நாம் அனைவரும் நேர்மையாக குற்றம் சாட்டி, நம்மை நாமே எடைப் போட்டு, கிடைத்த அவகாசத்தைப் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; இந்த காலக்கெடு முடிவதற்குள்.

இதனையே அல்லாஹுத்தஆலா குர்ஆனில்...

وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ‏

உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்.(அல்குர்ஆன் : 63:10)

وَلَنْ يُّؤَخِّرَ اللّٰهُ نَفْسًا اِذَا جَآءَ اَجَلُهَا‌ وَاللّٰهُ خَبِيْرٌ بِمَا تَعْمَلُوْنَ‏

ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 63:11)


எதிர்காலத்திற்கான செயல் திட்டம்.

கடந்த காலம் குறித்த சுயவிசாரனைக்கு பின்பு எதிர்வரும் ஆண்டில் நம் வாழ்வை ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில், நல்லறங்களில் கழிப்பதை குறித்து சிந்தித்து செயல்பட ஓர் திட்டமிடலும்.

கடந்த கால அனுபவப்பாடங்களிலிருந்து நம் பலம் எது, பலகீனம் எது என சிந்தித்து, நம் பலத்தை சாதகமாக பயன்படுத்தவும், பலகீனத்தை கைவிடவும் உறுதிக்கொள்ள வேண்டும் 

மனிதன் தவறுகளுக்கு மேல் தவறு செய்வதை விடவும் கொடியது, மோசமானது, அத்தவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல் அதைத் தொடர்ந்து செய்வதுதான்.

இந்த திட்டமிடல் ஹதீஸ் மூலம் அறியப்பட்ட மார்க்க மற்றும் உலக விஷயங்களில் இருக்க வேண்டும்.

நாயகம் ﷺஅவர்கள் கூறினார்கள் ;

اغتنِمْ خمسًا قبل خمسٍ: شبابَك قبل هِرَمِك، وصِحَّتَك قبل سِقَمِك، وغناك قبل فقرِك، وفراغَك قبل شُغلِك، وحياتَك قبل موتِك

ஐந்துக்கு முன் ஐந்தை (வாய்ப்பாக)கனீமத்தாக கருதுங்கள்:

வயோதிகற்கு முன் வாலிபத்தையும்,

நோய்க்கு முன் ஆரோக்கியத்தையும்,

வறுமைக்கு முன் செல்வத்தையும்,

அலுவல்களுக்கு முன் ஓய்வையும்,

மரணத்திற்கு முன் வாழ்வையும்,

(வாய்ப்பாக கருதுங்கள்).

மறுமை வாழ்வின் வெற்றியும் தோல்வியும் இவ்வுலக வாழ்வின் செயல்களைப் பொறுத்தே அமையும்.

இறைவன் தனது திருமறையில்...

 وَاَنْ لَّيْسَ لِلْاِنْسَانِ اِلَّا مَا سَعٰىۙ‏

இன்னும், மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை.(அல்குர்ஆன் : 53:39)

وَاَنَّ سَعْيَهٗ سَوْفَ يُرٰى‏

அன்றியும், நிச்சயமாக அவன் முயற்சி(யின் பலன்) பின் அவனுக்குக் காண்பிக்கப்படும்.(அல்குர்ஆன் : 53:40)

ثُمَّ يُجْزٰٮهُ الْجَزَآءَ الْاَوْفٰىۙ‏

பின்னர், அதற்கு நிறப்பமான கூலியாக, அவன் கூலி வழங்கப்படுவான்.(அல்குர்ஆன் : 53:41)

உண்மையில், ஒவ்வொரு புத்தாண்டும் மனிதனுக்கு மகிழ்ச்சிக்கு பதிலாக கவலையைத்தர வேண்டும் ; ஏனென்றால் தன் வயது படிப்படியாக குறைந்து பனிக்கட்டி போல் உருகுவதை  உணர்ந்தவன். எப்படி  மகிழ்ச்சியடைய இயலும் ? மாறாக வாழ்வின் ஒவ்வொரு நாளும் சூரியன்  மறைவதற்குள் ஏதாவது நல்லறம்  செய்ய வேண்டும் என்ற ஆசை  அவனை ஆட்கொள்ளச்  வேண்டுமல்லவா.

நம்மைப் பொறுத்தவரை, புத்தாண்டு என்பது தற்காலிக இன்பத்துக்கான,மகிழ்ச்சிக்கான நேரம் அல்ல, மாறாக, நம்மை விட்டும் கடந்த காலத்தின் மதிப்பை உணர்வதற்கும், இனி வரவிருக்கும் தருணங்களைச் சிறப்பாக கையாள்வதற்கும் , நமது இலட்சியங்களையும் மன உறுதியையும் புதுப்பிப்பதற்கும் ஓர் உன்னத  வாய்ப்பாகும்.

ஹிஜ்ரா(சந்திர) கணக்கீடு முறை,VS ஆங்கிலசூரியக் கணக்கீடு முறை.

அதே சமயம், முஸ்லிம்களின் புத்தாண்டு ஹிஜ்ரி ஆண்டாகும்.அது முஹர்ரம் மாதத்திலிருந்து துவங்குகிறது.  ஜனவரி மாதத்தில்  ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவது முஸ்லிம்களுக்கு அழகல்ல ...

முஸ்லிம்கள் தங்களின் சுக,துக்க அனைத்து காரியங்களுக்கும் ஹிஜ்ரி ஆண்டையே கணக்கிட வேண்டும்.

ரமலான்,ஹஜ், ஜகாத்து என இஸ்லாத்தின் அனைத்து அமல்களையும் இஸ்லாமிய மாத, ஆண்டு கணக்குப்படி நிறைவேற்றினால் தான் நிறைவேறும், ஆனால் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இஸ்லாமிய ஆண்டோ,மாதங்களின் பெயர்களோ தெரிவதில்லை.

ஹிஜ்ரா ஆண்டு முறை என்பது நம் வரலாறு, அதனை தெரிந்து வைத்திருப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் தலையாய கடமையாகும்.

இஸ்லாமிய வரலாறு மற்றும் இஸ்லாமிய விதிகள் அனைத்தும் ஹிஜ்ரா(சந்திர) கணக்கீடுகளின் அடிப்படையிலானவை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்; எனவே, இந்த ஹிஜ்ரா கணக்கைக் கடைப்பிடிப்பது உம்மத்தின் கடமையாகும். மற்ற சூரியக் கணக்கீடுகள், முதலியன, தேவை ஏற்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம் ; ஆனால் சந்திர கணக்கீட்டை முற்றிலுமாக புறக்கணிப்பது பெரும் பாவமாகும், இதன் காரணமாக ஒருவருக்கு ரமலான் எப்போது வரும், துல்-ஹஜ்  மற்றும் முஹர்ரம் எப்போது வரும் என்று கூட தெரியாமல் போய்விடும். (மஆரிஃபுல் குர்ஆன் 3/402, 403)

ஹழ்ரத் அஷ்ரஃப் அலி தானவி(ரஹ்) அவர்கள் எழுதுகிறார்கள்: ஷரியத்தின் விதிகள் ஹிஜ்ரா (சந்திர) கணக்கீட்டை அடிப்படையாகக் கொண்டவை ; எனவே, முழு உம்மாவும் சந்திர கணக்கீட்டை அழிக்கும் இரண்டாவது காலத்தை தங்கள் நெறிமுறையாக மாற்றினால், அனைவரும் பாவிகளாக கருதப்படுவார்கள் , அது பாதுகாப்பாக இருந்தால், மற்ற கணக்கீட்டை பயன்படுத்த  அனுமதி உண்டு; ஆனால்  ஸலஃபுஸ் ஸாலிஹீன்களான நல்லோர்களிடம்,

ஹிஜ்ரா (சந்திர) கணக்கீட்டு முறை "فرض عین " என்ற அடிப்படையில் கட்டாயக்கடமையாகும்.நம்மிடம் சந்திர கணக்கீட்டைப் பயன்படுத்துவது "فرضِ کفایہ" என்ற அடிப்படையில் சிறந்ததாகும். ( بیان القرآن ص: ۵۸ ، ادارئہ تالیفات اشرفیہ پاکستان) 

எனவே, நம்முடைய இந்த ஹிஜ்ரா  சந்திர வரலாற்றை நாம் முற்றிலும் மறந்துவிடக் கூடாது.

அமலை விரைவு படுத்துங்கள்.

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹி) கூறினார்கள்: "நேரத்தை வீணடிப்பது மரணத்தை விட கடிணமானது.ஏனென்றால் நேரத்தை வீணடிப்பது உங்களை அல்லாஹ்விடமிருந்தும்  மறுமையிலிருந்தும் துண்டிக்கிறது.

மரணமோ உங்களை இந்த உலகத்திலிருந்தும் அதன் மக்களிடமிருந்தும் துண்டிக்கிறது". (கிதாபுல் ஃபவாயிது - பக்கம்:31).

உழைப்பதற்கு நடந்து செல்லுங்கள்.

هُوَ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ ذَلُوْلًا فَامْشُوْا فِىْ مَنَاكِبِهَا وَكُلُوْا مِنْ رِّزْقِهٖ‌ وَاِلَيْهِ النُّشُوْرُ‏ 

அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்; ஆகவே, அதன் பல மருங்குகளிலும், நடந்து அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள்; இன்னும் அவனிடமே (யாவரும்) உயிர்த்தெழவேண்டியிருக்கிறது.(அல்குர்ஆன் : 67:15)

ஜும்ஆவிற்கு கொஞ்சம் வேகமாக நடந்து செல்லுங்கள்.

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ‌  ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏ 

ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.(அல்குர்ஆன் : 62:9)

பாவமன்னிப்பு கேட்க விரைந்து சொல்லுங்கள்.

وَسَارِعُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَۙ‏ 

இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.  (அல்குர்ஆன் : 3:133)

அல்லாஹ்வின் பால் விரண்டு வாருங்கள்.

فَفِرُّوْۤا اِلَى اللّٰهِ‌ اِنِّىْ لَـكُمْ مِّنْهُ نَذِيْرٌ مُّبِيْنٌ‌‏ 

ஆகவே, அல்லாஹ்வின் பக்கம் விரைந்து செல்லுங்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கின்றேன் (என்று நபியே! நீர் கூறுவீராக).              (அல்குர்ஆன் : 51:50)

‏قال شيخ الإسلام ابن تيمية رحمه الله :

من كـــان الله يحبه

استعمله فيما يحبه.

இமாம் இப்னு தைமியஹ் (றஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்: எவரை அல்லாஹ் விரும்புகின்றானோ அவரை அவனுக்கு விருப்பமான காரியங்களில் செயற்படவைப்பான்.

நயவஞ்சகனின் அடையாளம்.

اِنَّ الْمُنٰفِقِيْنَ يُخٰدِعُوْنَ اللّٰهَ وَهُوَ خَادِعُوْهُمْ‌  وَاِذَا قَامُوْۤا اِلَى الصَّلٰوةِ قَامُوْا كُسَالٰى ۙ يُرَآءُوْنَ النَّاسَ وَلَا يَذْكُرُوْنَ اللّٰهَ اِلَّا قَلِيْلًا ۙ‏ 

நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை.(அல்குர்ஆன் : 4:142)

சிறுநீர் கழித்து சுத்தம் செய்யாத நடிகன். நரகத்திற்கு வழிகாட்டும் நடிகனின் திரைப்படம் வெளிவர இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்தே படத்தைப் பார்க்க போட்டிப் போடும் மனிதன்....சுவர்க்கத்தின் பக்கம் விரைந்து வர மனம் வருவதில்லை

இமாம் அஹ்மத் இப்னு ஹர்ப் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் : ஐம்பது வருடங்களாக அல்லாஹ்வை வணங்கினேன் மூன்று விஷயங்களை விடும் வரை இபாதத்தில் இன்பம் காண முடியவில்லை.

1. மக்களின் திருப்தியை பெறுவதை விட்டேன். சத்தியத்தை (துணிந்து) சொல்லும் ஆற்றலை பெற்றேன். 

2. தீயவர்களின் தோழமையை விட்டேன்  நல்லவர்களின் தோழமையை பெற்றுக்கொண்டேன்.

3. உலக இன்பங்களை விட்டேன் மறுமையின்  இன்பத்தை பெற்றுக் கொண்டேன்.  

(நூல்: ஸியறு அஃலாமுந் நுபலா  11/34)

நேரம் பொன் போன்றது.

காலம் பொன் போன்றது என்று தமிழிலும் TIME IS GOLD என்று ஆங்கிலத்திலும்,    الوقت أثمن من الذهب என்று அரபியிலும் சொல்கிறோம். ஆனால் பொன்னை விடவும் உயர்ந்தது தான் காலம்.

உருதுவில்: گیا وقت پہر آتا نہی சென்ற நேரம் திரும்ப வராது என்பார்கள். உண்மையில் காலம் இழந்தால் பெற முடியாத ஒர் பொக்கிஷம். ஒவ்வொரு நொடியையும் திட்டமிட்டு செலவழிக்க வேண்டும். நொடியை மதிக்காதவன் நிமிடத்தை மதிக்க மாட்டான் என்பார்கள். நிமிடங்களை கவனித்துக் கொண்டால் மணி " (Money) தானாக நம் வாழ்க்கையில் கிடைத்து விடும். காலத்தை தவிர நமக்கு எதுவும் சொந்தமில்லை. தனக்கு எதுவும் இல்லாமல் இருப்பவனுக்கு கூட காலம் தான் சொந்தமாகும். உலகில் என்ன விலையும் கொடுத்து வாங்க முடியாத மிக உயர்ந்த பொருள் நேரமே! கடனாக தரவோ, பெறவோ முடியாதது காலம் தான்.அரசன் முதல் ஆண்டி வரை அனைவரிடமும் சமமாக பரவி இருப்பது நேரமே!

என்னிடம் எதை வேண்டுமானாலும் கேள். ஆனால் நேரத்தை மட்டும் கேட்காதே என்று ஒரு தத்துவஞானி கூறியுள்ளார். நேரம் என்பது எவரையும் பொருட்படுத்துவதில்லை. யாருக்காகவும் காத்திருப்பதுமில்லை.நேரத்தை வீணாக்குவது கொலையல்ல, தற்கொலையாகும். சென்ற நேரம் திரும்ப வராது. இன்றைய வேலையை நாளை தள்ளி போடுவது  மடமைத்தனமாகும்.

آج کا کام کل پر نٹال என உருதுவில் சொல்வது பிரபல்யமானதாகும்.

மரணம்....

மரணம் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது , ஆனால் வர வேண்டிய நேரத்தில் சரியாக வரும். ஒரு மனிதனின் மரண நேரம் வந்து விட்டால் ஒரு நிமிடம் முந்தவும் செய்யாது. பிந்தவும் செய்யாது.
ஆகையால் தான் மரணத்திற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். இறைவன் எப்பொழுது அழைத்தாலும் சந்தோஷமாக செல்லும் நிலையில் நம் அமல்கள் இருக்க வேண்டும்.

முற்காலத்தில் வாழ்ந்த ஒருவன் மரணம் தனக்கு வரக்கூடாது என்பதற்காக இப்படி துஆ செய்தானாம்... 

யா அல்லாஹ்! எனக்கு இரவிலும் பகலிலும் மரணம் வரக்கூடாது. அதேப்போல் நான் வீட்டிலும், வெளியிலும் மரணம் ஆகக் கூடாது என துஆ செய்தான். அவன் துஆவை அல்லாஹ் கபூல் செய்தான்.
அவனை அல்லாஹ் இரவிலும் பகலிலும் கட்டுப்படாத மஃரிப் பாங்கு சொன்ன பிறகு உள்ள 20 நிமிடத்தில் வரும் செம்மேகம் உள்ள நேரத்தில் மவ்த் ஆக்கினான். அதேப்போல் ஒரு காலை வீட்டிலும், ஒரு காலை வெளியில் வைத்த நிலையில் மரணமாக்கினான் என்பார்கள்.

எனவே ஒருவன் பிறந்து விட்டால் அவனுக்கு இறப்பு என்பது நிச்சயம். அதை யாராலும் மறுக்க முடியாது. மரணம் வந்தே தீரும். ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுகிக்க கூடியதே என அல்லாஹ் திருமறையில் பேசுகிறான்.

ஒரு தடவை முல்லா நஸ்ருத்தீன் மக்களிடம் சென்று உங்களுக்கு மரணம் வராமல் இருக்க ஒரு மருந்தை நான் சொல்லட்டுமா? எனக் கேட்டார். மக்களெல்லாம் அது என்ன மருந்து என தெரிந்துக் கொள்ள ஆர்வமாக கூடினார்கள். முல்லா என்ன சொல்ல போகிறார் என கேட்க கூட்டம் கூட்டமாக வந்தனர். கடைசியில் முல்லா சொன்னார் உனக்கு மரணம் வராமலிருக்க நீ பிறக்காமல் இருக்க வேண்டும் என்றார்.
பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு கண்டிப்பாக இருக்கும். ஆனால் அந்த இறப்புக்குள் நாம் நம்மை சரி செய்து கொள்ள வேண்டும்.

ஸஹாபாக்கள் ஒரு தடவை கூடி சிரித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த நபி (ஸல்) அவர்கள் எனக்கு தெரிந்த இரண்டு விஷயம் உங்களுக்கும் தெரிந்தால் இப்படி சிரிக்க மாட்டீர்கள்.
1)- வருங்கால வாழ்க்கை.
2)- மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கை.
இதை அறிந்தால் நீங்கள் இவ்வாறு சிரித்துக் கொண்டு இருக்க மாட்டீர்கள் என்று மரணத்தின் அகோரத்தை நபி (ஸல்) அவர்கள் உணர்த்தினார்கள்.

மரணத்தை மறந்த மனிதன்.

قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ

நபியே! அவர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள். வெருண்டோடும் மரணம் உங்களை நிச்சயமாக பிடித்துக் கொள்ளும் என்று சொல்லுங்கள். எந்த மரணத்தில் இருந்து நீங்கள் வெருண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணத்தை பார்த்து பயந்து ஓடுகிறீர்களோ நிச்சயமாக அது உங்களை சந்தித்தே தீரும். .    (அல்குர்ஆன் 62 : 8)

நாம் நினைக்க வேண்டிய மிக முக்கியமான காரியங்களில் ஒன்று, ஒவ்வொருவரும் தன்னுடைய மரணத்தைப்பற்றி அதற்காக நான் என்ன செய்து வைத்திருக்கிறேன்? என்னுடைய கப்ருக்காக நான் என்ன தேடி இருக்கிறேன்? என்னுடைய கப்ரு விசாலமாவதற்கு, என்னுடைய கப்ரு ஒளி நிறைந்ததாக சொர்க்கத்தின் இன்பங்கள் நிறைந்ததாக ஆவதற்கு நான் என்ன செய்து வைத்திருக்கிறேன்?

இந்த மரணத்தை நாம் மறந்தாலும் இந்த மரணம் நம்மை மறக்காது. நாம் மறந்துவிடுவோம். நம்முடைய தந்தையை அடக்கம் செய்த அதே நேரத்தில் மரணத்தை மறந்து விடுகின்றோம். தாயை அடக்கம் செய்துவிட்டு மரணத்தை மறந்து விடுகின்றோம். மனைவியை அடக்கம் செய்து விட்டு மறந்து விடுகின்றோம். பிள்ளைகளை அடக்கம் செய்துவிட்டு மரணத்தை மறந்து விடுகின்றோம். இப்படியாக நம்முடைய உறவுகளை நம்முடைய நண்பர்களை அடக்கம் செய்கிறோம். 

ஆனால் அடக்கம் செய்த அதே இடத்திலேயே நம்மில் பலருக்கு மரணத்தின் மறதி வந்து விடுகிறது. ஏதோ அவருக்கு தான் மரணம் அவர் மரணித்து விட்டார் தனக்கு மரணம் இல்லை என்பதை போன்ற ஒரு மனநிலையில் நாம் அந்த இடத்தில் இருந்து திரும்பி வருகின்ற நிலைமை இன்று நம்மில் பலருக்கு உள்ளது.

மறுமையில்...

مَاۤ اَغْنٰى عَنِّىْ مَالِيَهْ‏ 

“என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே! (அல்குர்ஆன் : 69:28)

هَلَكَ عَنِّىْ سُلْطٰنِيَهْ‌‏ 

“என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!” (என்று அரற்றுவான்).(அல்குர்ஆன் : 69:29)

சிறுதுளி பெருவெள்ளம்.

ஒரு நாள் ஃபஜ்ருத் தொழுகையின்போது பிலால்(ரலி) அவர்களிடம் ‘பிலாலே இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறும்! ஏனெனில் உம்முடைய செருப்போசையை சொர்க்கத்தில் கேட்டேன்‘ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 

அதற்கு பிலால்(ரலி) இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அவ்வுளூவின் மூலம் நான் இரண்டு ரக்ஆத் தொழாமல் இருப்பதில்லை. இதுதான் என்னுடைய செயல்களில் சிறந்த செயல் என்று விடையளித்தார்கள்

பிலால் ரலியல்லாஹு அன்ஹு சுவர்க்கத்திற்கு செல்வதற்கு பெரிய அமல் ஒன்றும் காரணமாக இல்லை. தொடர்ச்சியாக செய்து வந்த ஒளுவுடைய அமல்தான் அவர்களை சுவர்க்கத்திற்கு கொண்டு போய் சேர்த்தது.

இன்று நாம் ஒரே நாளில் எல்லா வணக்கங்களையும் செய்துவிட்டு மறுநாள் ஒட்டுமொத்தமாக விட்டு விடுகின்றோம் இதற்குப் பெயர் இபாதத் அல்ல. மாறாக சிறிய அமலாக இருந்தாலும் நிரந்தரமாக செய்வதிலே தான் அதிக நன்மைகள் உண்டு.

எனவே எல்லா வணக்கங்களையும் தொடர்ந்து செய்வதற்கு நமக்கு  அல்லாஹ் அருள் புரிவானாக.. மேலும் எல்லாம்  வல்ல அல்லாஹுத்தஆலா நம் அனைவரையும் மற்றவர்களைப் பின்பற்றுவதிலிருந்து விலக்கி, நம் முஹம்மது நபிﷺஅவர்களின் வழிமுறையை  பின்பற்றுவதற்கான நல் வாய்ப்பை வழங்கி ஈருலகிலும் ஈடேற்றத்தை நல்கிடுவானாக!ஆமீன்..

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Wednesday 14 December 2022

ஜும்ஆ பயான் 15/12/2022

சிறுபான்மையினர் உரிமைகள்.



اِنَّ اللّٰهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتّٰى يُغَيِّرُوْا مَا بِاَنْفُسِهِمْ‌ وَاِذَاۤ اَرَادَ اللّٰهُ بِقَوْمٍ سُوْۤءًا فَلَا مَرَدَّ لَهٗ‌ وَمَا لَهُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّالٍ‏

எந்த சமூகம் தன்னைத்தானே மாற்றிக் கொள்ளவில்லையோ, அந்த சமூகத்தை அல்லாஹ்வும் மாற்றுவதில்லை. (அல்குர்ஆன் 13: 11)



ஒவ்வோரு ஆண்டும் டிசம்பர் 18-ம் நாளை சர்வதேச சிறுபான்மையினர் உரிமைகள் நாளாகக் கடைப்பிடிக்க வேண்டுமென்று 1992-ம் ஆண்டு டிசம்பர் 18 அன்று, ஐ.நா. மன்றத்தால் அறிவிக்கப்பட்டது. அதை அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டன. எனவே அதை முன் வைத்து  சிறுபான்மையினர் நலன் குறித்து  இஸ்லாம் கூறும் செய்திகளை பார்ப்போம்.

நம் நாட்டின்  வளம், வளர்ச்சி, பொருளாதாரம் இவற்றை விடவும் ஒரு நாட்டின் பாதுகாப்பையும்,அமைதியும் உறுதிச்செய்வது அந்நாட்டின் சிறுபான்மையினரின் உயிர்,உடைமைகள்,இருப்பு,உரிமைகள் பாதுகாக்கப்பட்டு அமைதியான,நிம்மதியான சூழலை உண்டாக்குவது அரசாங்கத்தின் தலையாயக்கடமையாகும். 

ஆனால் உலகலளவில் வலது சாரி சிந்தனையில் உள்ள அரசுகள் பெரும்பான்மையினரின் ஆதரவைப்பெறவும், ஆட்சியை தக்கவைப்பதற்கும் ஆட்சி,அதிகாரத்தை கைபற்றுவதென்பது  மத, மொழி, இன சிறுபான்மையினருக்கு ஆபத்தாகவும், அச்சுறுத்தலாகவும் அமையும் என சமூகஆர்வலர்களும்,வல்லுனர்களும் எச்சரிக்கின்றனர்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், நம்பகத்தன்மைக்கும், சிறுபான்மையினர் அதிக முக்கியத்துவமுள்ளவர்களாகவும், கவனிக்கப்பட வேண்டியவர்களாகவும் இருக்கிறார்கள்.

இஸ்லாமும், சிறுபான்மையினறும்.


நமது இந்தியத் திருநாட்டைப் பொருத்தவரை, சிறுபான்மையினர் பட்டியலில், முஸ்லிம்களும் இடம் பெற்றுள்ள காரணத்தால், சிறுபான்மையினர் சம்மந்தமான சில அவசியமான கண்ணோட்டங்களை, இஸ்லாமிய அடிப்படையில்  தெரிந்துக்கொள்வதோடு, சிறுபான்மை மக்கள் விஷயத்தில் அரசின் கடமைகளும், மக்களின் உரிமைகளும் என்ன என்பதை அறிந்துக்கொள்வது அவசியமாகும்.

முஸ்லிம்கள் வெற்றி கொண்ட பிரதேசங்களில், பலர் இஸ்லாத்தின் தூயநெறியை ஏற்றுக் கொண்டனர்; சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்வாறு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களின் உயிர், உடைமை, சொத்து, வழிபாட்டு உரிமை போன்றவற்றிற்கு முழுச்சுதந்திரமும், உரிமையும் வழங்கப்பட்டிருந்தன. இவர்கள்தான் சிறுபான்மையினர் என்ற அந்தஸ்த்தில் ‘திம்மிகள்’என அழைக்கப்பட்டனர். அதாவது ஒப்பந்தம் செய்து கொண்ட மக்கள் எனப் பொருள்.

மனித வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் சிறந்த வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள இஸ்லாம், ஆட்சி,அதிகாரத்தில் தங்களின் ஆளுகைக்கு கீழ்வாழும் சிறுபான்மையினரோடு இஸ்லாமிய ஆட்சியாளர் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்கிற அழகிய வழிகாட்டுலை வழங்கியுள்ளது.

சம நீதி....


அதன் வரிசையில் முதலாவது, எல்லாமக்களுக்கும் சமமான நீதி,நீதியில் ஏற்றத்தாழ்வு,பாகுபாடுகாட்டாலாகாது.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّامِيْنَ بِالْقِسْطِ شُهَدَآءَ لِلّٰهِ وَلَوْ عَلٰٓى اَنْفُسِكُمْ اَوِ الْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ‌  اِنْ يَّكُنْ غَنِيًّا اَوْ فَقِيْرًا فَاللّٰهُ اَوْلٰى بِهِمَا‌ فَلَا تَتَّبِعُوا الْهَوٰٓى اَنْ تَعْدِلُوْا ‌ وَاِنْ تَلْوٗۤا اَوْ تُعْرِضُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا‏

முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 4:135)

பிரிதோர் வசனம்,நீதத்தோடும் நல்லமுறையில் நடக்குமாறு ஏவுகிறது.

لَا يَنْهٰٮكُمُ اللّٰهُ عَنِ الَّذِيْنَ لَمْ يُقَاتِلُوْكُمْ فِى الدِّيْنِ وَلَمْ يُخْرِجُوْكُمْ مِّنْ دِيَارِكُمْ اَنْ تَبَرُّوْهُمْ وَ تُقْسِطُوْۤا اِلَيْهِمْ‌ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ‏

மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.(அல்குர்ஆன் : 60:8)

இஸ்லமிய நாட்டில் வாழும் மத,மொழி, இன சிறுபான்மையினருக்கு இஸ்லாமியர்களுக்குள்ள அனைத்து உரிமைகளும் உண்டு என பின்வரும் நபிமொழி தெளிவுப்படுத்துகிறது.

’’فان قبلوا الذمة فأعْلِمْہم أن لہم ما للمسلمین وعلیہم ما علی المسلمین‘‘ (بدائع الصنائع، ج:۶، ص: ۶۲)

ஒப்பந்தத்தில் உள்ள ஒரு திம்மியை(முஸ்லிமல்லாதாரை)ஏற்றுக்கொண்டால்,இஸ்லாமியர்களுக்குள்ள சாதக,பாதக (அனைத்து நடவடிக்கைகளும்)அவர்களுக்கும் உண்டு என அவர்களுக்கு அறிவித்துவிடுங்கள்.என நாயகம்ﷺஅவர்கள் கூறினார்கள்.   

உயிர்,உடமை பாதுகாப்பு.


இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும் குடி மகன் என்ற வகையில், முஸ்லிமல்லாதாரின் உயிர் உடமைப் பாதுகாப்பு தொடர்பாகவும் (ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள், 

عن عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم قال من قتل نفسا معاهدا لم يرح رائحة الجنة

'ஒப்பந்தத்தில் உள்ள ஒரு திம்மியை(முஸ்லிமல்லாதாரை) எவரேனும் கொலை செய்தால் அவர் சுவர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்' (புஹாரி, அபூதாவுத்)

மற்றுமொருமறை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,

قول النبي صلى الله عليه وسلم: (ألا من ظلم معاهدًا أو انتقصه أو كلفه فوق طاقتِه أو أخذ منه شيئًا بغيرِ طيبِ نفسٍ فأنا حجيجُه يوم القيامةِ، 

 'யார் முஸ்லிமல்லாத ஒரு உடன்படிக்கை செய்திருக்கும்  திம்மிக்கு அநீதியிழைக்கிறாரோ அல்லது அவரது உரிமையைக் குறைக்கின்றாரோ, அல்லது அவரது சக்திக்கு மேல் பொறுப்புக்களை சுமத்துகின்றார்களோ அல்லது அவரது மன விருப்பின்றி ஏதேனுமொன்றை அவரிடமிருந்து பெறுகின்றாரோ அவருக்கெதிராக மறுமையில் நான் வாதிடுபவனாக இருப்பேன்' (அபூதாவுத்)

இஸ்லாமிய அரசாட்சியின்போது குடிமக்கள் முஸ்லிம், முஸலிமல்லாதார்.பெரும்பான்மை,சிறுபான்மை என பாகுபாடின்றி சகலரினதும் உயிர், உடமைப்பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது

மானம்,மரியதை. பாதுகாப்பு.


இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும் குடி மகன் என்ற வகையில், முஸ்லிமல்லாதாரின் உயிர் உடமைப் பாதுகாப்பை உறுதிசெய்வதுடனே அவர்களின் மானம்,மரியாதைக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களான புறம்,கோள்,திட்டுவது,அவதூறு  இவை அனைத்தையும் நாயகம் ﷺஅவர்கள் தடைசெய்தார்கள்.

’’ویجب کف الأذی عنہ، وتحرم غیبتہ کالمسلم‘‘(۴)

(ஒப்பந்தத்தில் உள்ள ஒரு (முஸ்லிமல்லாதார்)திம்மி)அவருக்கு நோவினை தருவதை தடுத்துக்கொள்வது கடமையாகும்.அவரை புறம் பேசுவதை முஸ்லிமை (புறம்பேசுவதை) போன்றே ஹராமாகும்.

சட்டம்,நீதிக்கு முன் அனைவரும் சமம்.


இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும் முஸ்லிம்அல்லாதாரின் உரிமைகளைப் போன்றே நீதி,குற்றவியல் சட்டங்களிலும் முஸ்லிம்களுக்குள்ள நீதி,குற்றவியல் சட்டங்களே அவர்களுக்கும் வழங்கப்படும்.

’’دماوہم کدمائنا‘‘ (۵)

அவர்களின் உதிரங்கள் நம் உதிங்களைப் போன்றதாகும்.

மத சுதந்திரம்.


இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும் முஸ்லிம்அல்லாதாருக்கு முழுமையான மத சுதந்திரம் அளிக்கப்படும்.

மதம் என்பது நம்பிக்கையின் அடிப்படையில் நடைமுறைக்கு வரும் விஷயம்.இதை வற்புறுத்தலாலோ அடக்குமுறையாலோ யார் மீதும் திணிக்கக் கூடாது.

இஸ்லாம் தன் போதனையை எங்கும் எவரிடமும் வற்புறுத்தியதில்லை. இதனையே குர்ஆன்...

لَاۤ اِكْرَاهَ فِى الدِّيْنِ‌ۙ  قَدْ تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَىِّ‌ 

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது.  (அல்குர்ஆன் : 2:256)

 இஸ்லாத்தை போதிக்க வந்த தூதருக்கே அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

فَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَيْكَ الْبَلٰغُ الْمُبِيْنُ‏

எனினும் இவர்கள் (உம்மைப்) புறக்கணித்துத் திரும்பிவிடுவார்களாயின், (நபியே! அதற்காகக் கவலைப்படாதீர்; ஏனெனில்) உம்மீது (கடமையு)ள்ளதெல்லாம் (இறை கட்டளைகளை அவர்களுக்குத்) தெளிவாகச் சேர்ப்பிப்பதுதான்.(அல்குர்ஆன் : 16:82)

சிறுபான்மையினரின் நலன் உட்பட, எல்லா செயல்பாடுகளையும் இஸ்லாமிய அரசுகள் நடைமுறைப்படுத்தின. இதனை நபி (ஸல்) அவர்கள் முதல், கலீபாக்கள் உட்பட எல்லா ஆட்சியாளர்களிடமும் நாம் காணமுடியும்.

சிறுபான்மையினர் மீது அத்துமீறாதீர்கள்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நீர் வேதமுடையவர்களிடம் செல்கிறீர். அவர்களிடம் சென்றடைந்துவிட்டால் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார் என்று (ஏகத்துவத்திற்கு) சாட்சியம் சொல்லும்படி அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டுவிட்டால், “அல்லாஹ் தினமும் ஐவேளை தொழுவதைக் கடமையாக்கியுள்ளான்’ என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் இதற்கும் (இசைந்து) உமக்கு கட்டுப்பட்டுவிட்டால் “நிச்சயமாக அல்லாஹ் அவர்களில் செல்வந்தர்களிடமிருந்து வசூக்கப்பட்டு அவர்களில் ஏழைகளுக்குக் கொடுக்கப்படுகின்ற ஸகாத்தைக் கடமையாக்கியுள்ளான்’ என அவர்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் இதற்கும் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டால் அவர்களின் பொருட்களில் சிறந்தவற்றை வசூலிப்பது குறித்து உம்மை எச்சரிக்கிறேன். அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளும்! ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையுமில்லை.

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமனுக்கு ஆளுநராக அனுப்பும்போது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் : புகாரி-1496 )

எப்படி ஒரு அடியான் இறை வணக்கத்தின் மூலம் அல்லாஹ்வை நெருங்குகிறானோ, அதைப்போலவே பாதிக்கப்பட்ட ஒருவனின் பிராத்தனைக்கும் அல்லாஹ்விடம் மிக்க நெருக்கம் இருக்கிறது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உணர்த்துகிறார்கள்.

சிறுபான்மையினரின் உணர்வுக்கு மதிப்பளிப்பது.


அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தபோது யூதர் ஒருவர் வந்து, 'அபுல் காசிமே! உங்கள் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், '(அந்தத் தோழர்) யார்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'அன்சாரிகளில் ஒருவர்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவரைக் கூப்பிடுங்கள்' என்று உத்திரவிட்டார்கள். அவர் வந்து சேர்ந்தவுடன், 'இவரை நீர் அடித்தீரா?' என்று கேட்டார்கள். அந்த அன்சாரி, 'இவர் கடைவீதியில், 'மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று ஆணையிட்டுக் கூறிக் கொண்டிருந்ததை செவியுற்றேன். உடனே நான், 'தீயவனே! முஹம்மதை விடவா (மூஸா மேன்மை வாய்ந்தவர்)?' என்று கேட்டேன். என்னைக் கோபம் ஆட்கொண்டு விட, இவரின் முகத்தில் அறைந்து விட்டேன்' என்று கூறினார். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'நபிமார்களுக்கிடையே ஒருவரை மற்றொருவரை விட உயர்த்திப் பேசாதீர்கள். ஏனெனில், மறுமை நாளில் மக்கள் அனைவரும் மூர்ச்சையாகி விடுவார்கள். அப்போது, பூமி பிளந்து வெளிப்படுத்துபவர்களில் முதலாவது நபராக நான் இருப்பேன். அப்போது, நான் மூஸாவை அர்ஷின் (இறை சிம்மாசனத்தின்) கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பவராகக் காண்பேன். '  (ஸஹீஹ் புகாரி 2412)

எவ்வளவு பெரிய ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் தவறு செய்தவன் தமது கட்சிக்காரர்களாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும். இங்கு வந்த பாதிக்கப்பட்ட மனிதர் மனமகிழ உங்கள் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் தான் மறுமையில் சிறந்தவர் என்று பதிலளித்தார்.

உரிமைகளை கேட்கும் அதிகாரத்தை கொடுப்பது.


ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்:இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஹுனைன்' போரிலிருந்து திரும்பி வந்தபோது நான் அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன். மக்களும் உடன் இருந்தனர். அப்போது (கிராம) மக்கள் நபியவர்களைச் சூழ்ந்து (தர்மம்) கேட்கலானார்கள்; 'சமுரா' என்னும் (கருவேல) முள் மரம் வரை நபி(ஸல்) அவர்களை நெருக்கித் தள்ளிவிட்டார்கள். நபியவர்களின் சால்வை முள்மரத்தில் சிக்கிக் கொண்டது. எனவே, நபி(ஸல்) அவர்கள் சற்ற நின்று, 'என் சால்வையை என்னிடம் கொடுங்கள். என்னிடம் இந்த முள்மரங்களின் எண்ணிக்கையில் ஒட்டகங்கள் இருந்திருந்தாலும் கூட அவற்றை உங்களிடையே பங்கிட்டு விட்டிருப்பேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவும் காண மாட்டீர்கள்; பொய்யனாகவும் காண மாட்டீர்கள்; கோழையாகவும் காணமாட்டீர்கள்' என்று கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி 2821)

ஆட்சியாளர்களிடம் சிறுபான்மையினர் தங்களுடைய உரிமைகளை கேட்கும் சுதந்திரத்தை கொடுத்தார்கள்.

ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களின் மரண சாசனம்.


ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் மரணப் படுக்கையில் இருந்த பொழுது அடுத்த கலீஃபாவுக்கு அறிவுரைகள் தருவதற்காக ஓர் உயில் எழுதச் சொன்னார்கள். அந்த உயிலின் இறுதி வரிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

அது கூறுகிறது: “அல்லாஹ்வின் பெயராலும், அவன் தூதர் (ஸல்) அவர்களின் பெயராலும் பாதுகாப்பு கொடுக்கப்பட்ட மக்களுக்கு, (இவர்களைத்தான் ‘திம்மிகள்’ என்பர். அதவாது, இஸ்லாமிய ஆட்சியில் உள்ள முஸ்லிமல்லாத சிறுபான்மையினர்.) அவர்களது ஒப்பந்தத்தை நாம் நிறைவேற்ற வேண்டும். அவர்களைப் பாதுகாப்பதற்காக நாம் போராட வேண்டி வந்தாலும், அதனையும் செய்து நாம் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். அவர்களது சக்திக்கு மீறி அவர்கள் மீது நாம் சுமைகளைச் சுமத்தக் கூடாது.”

இந்த வார்த்தைகளை ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் எப்பொழுது கூறுகிறார்கள் பார்த்தீர்களா? தொழுது கொண்டிருந்த கலீஃபா அவர்களை விஷம் தோய்ந்த கத்தியால் ஒரு முஸ்லிமல்லாதவன் குத்தி விடுகிறான். அந்தக் காயம் ஏற்படுத்திய வலியோடு மரணம் நெருங்கும் வேளையில் அவர்கள் இந்த வார்த்தைகளைக் கூறுகின்றார்கள்.

ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் அன்றைய பாரசீகத்திலிருந்து எகிப்து வரை பரந்து விரிந்த நிலத்தின் தலைவராக இருந்தார்கள். ஒரு முஸ்லிமல்லாத சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவன்தான் அவர்களைக் கத்தியால் குத்தினான். அவர்கள் நினைத்திருந்தால் அவனைப் பழிக்குப் பழி வாங்கியிருக்கலாம்.

இன்று ஒரு கொலை நடந்து விட்டது என்று சிறு சந்தேகம் ஏற்பட்டாலும் சரி... அல்லது ஒரு சதி நடக்கிறது என்று இலேசாக செய்தி வந்தாலும் சரி... இன்றைய நவீன ஆட்சித் தலைவர்கள் உடனே செய்வது ஏவுகணைகளையும், குண்டுகளையும் எறிவதுதான். அது அப்பாவி குடிமக்கள் பல ஆயிரம் பேரைக் காவு கொண்டாலும் சரி... அவர்களுக்குக் கவலையில்லை.

ஓர் ஆட்சியின் தலைமைக்கு மன்னிப்பது, மறப்பது என்பது பெருந்தன்மை. ஆனால் சிறுபான்மையினரைப் பாதுகாக்க வேண்டும், அவர்களை நல்ல முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கட்டளையே இட்டால்...? இதைத்தான் ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் செய்தார்கள்.

இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள இஸ்லாமியர்கள்.


அண்மைக் காலங்களில் ஏதாவதொரு காரணத்தைவைத்து மதச் சிறுபான்மையினர்மீது, குறிப்பாக இஸ்லாமியர்கள்மீது, தாக்குதல்கள் நடைபெறுவது இயல்பாக ஆகிக்கொண்டிருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்த அளவுக்குக்கூடச் சுதந்திர இந்தியாவில் சிறுபான்மையினருக்கு உரிமைகள் இல்லை என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.

பிரிட்டிஷ் ஆட்சியில் அரசாங்க வேலைகளில் 35 சதவிகித முஸ்லிம்கள் இருந்தனர். ஆனால், இப்போது சுதந்திர இந்தியாவில் அந்தச் சதவிகிதம் 3.5 ஆகக் குறைந்துள்ளது; அதேபோல, 15 சதவிகிதமாக இருந்த கிறித்தவர்களின் எண்ணிக்கை 1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. 6 - 14 வயதுக்குட்பட்ட  25 சதவிகித முஸ்லிம் குழந்தைகள் பள்ளிக்கூடமே செல்வதில்லை அல்லது இடையிலேயே பள்ளியைவிட்டு நின்றுவிடுகின்றனர். பட்டதாரிகளில் 25 பேரில் ஒருவர் மட்டுமே பட்டப்படிப்பு வரை செல்கின்றனர். உயர்படிப்புக்குச் செல்வோர் 50-ல் ஒருவரே. இன்றைய இந்தியாவில் 31 சதவிகித முஸ்லிம்கள் வறுமைக்கோட்டுக்கும் கீழே வாழ்கின்றனர்.

சிறுபான்மையினர் உணவுப் பழக்கத்துக்காகக் கொல்லப்படுகிறார்கள். பல்கலைக்கழகங்களில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்; அவர்கள்மீது தீவிரவாத முத்திரை குத்தி வெறுப்பு உமிழப்படுகிறது; சிறுபான்மையினருக்கு ஆதரவாகப் பேசுவோரின்மீது வெறுப்பு விதைக்கப்படுகிறது; தேர்தல் நலனுக்காகப் பெரும்பான்மையின் வாக்குகளைப் பெறுவதற்காக முஸ்லிம்கள்மீது வெறுப்பு விதைக்கப்பட்டு கலவரங்கள் உருவாக்கப்படுகின்றன. அண்மையில், 2014-ல் உ.பி. தேர்தலின்போது முசாபர் நகரில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்... பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயரச் செய்யப்பட்டனர். இதேபோல தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிகள்மீதும் தொடர்ந்து தாக்குதல்கள் நடப்பது அதிகரித்துவருகிறது. மொத்தத்தில் இன்றைய இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பற்றச் சூழலில் அச்சத்துடன் வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆனால், சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பாக, ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 18-ம் நாளை சர்வதேச சிறுபான்மையினர் உரிமைகள் நாளாகக் கடைப்பிடிக்க வேண்டுமென்று 1992-ம் ஆண்டு டிசம்பர் 18 அன்று, ஐ.நா. மன்றத்தால் அறிவிக்கப்பட்டது. அதை உலகின் ஜனநாயக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன.

எந்த ஒரு நாட்டிலும் மதம், மொழி, இனம் மற்றும் பண்பாடு ஆகியவற்றில் அந்த நாட்டின் பெரும்பான்மையிடமிருந்து வேறுபட்டுச் சிறுபான்மையாக வாழும் மக்களுக்கு அவர்களுடைய தனிப்பட்ட அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமை உண்டு. அந்த உரிமையை அந்தந்த நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்பது அந்த அறிவிப்பின் சாரமாகும்.

சிறுபான்மையினர் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டும்; அவர்களுடைய பண்பாடு, மொழி மற்றும் மத நம்பிக்கைகளை மதித்து நடக்க வேண்டும்; அவற்றைப் பரப்புவதற்கான உரிமைகள் அவர்களுக்கு இருக்க வேண்டும்; சமூகங்களுடனான அவர்களுடைய பரஸ்பர நட்பும், மரியாதையும் பேணப்பட வேண்டும்; இவற்றையெல்லாம் உறுதிப்படுத்துவதற்கான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்; அந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பவை அந்த அறிவிப்பின் அடிப்படை அம்சங்களாகும். இவை ஐ.நா. உடன்படிக்கை தொடர்பான அனைத்து நாடுகளின் விதிமுறைகள் ஆகும். இந்த விதிமுறைகள் மீறப்பட்டு, அவற்றால் எந்த ஒரு நாட்டின் எந்த ஒரு சிறுபான்மை மக்கள் பிரிவாவது பாதிக்கப்படுமானால், அதுகுறித்து அந்தப் பிரிவினர் சர்வதேச அமைப்புகளில் முறையிடவும், அந்த அமைப்புகள் அதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்டுவதற்கும் ஐ.நா. அமைப்பின் அறிவிப்பு வழிவகை செய்துள்ளது. இவற்றை நேர்மையாக  நடைமுறைப்படுத்தும் அரசுகளே நிஜமான ஜனநாயக அரசுகளாக இருக்க முடியும். 

இந்தப் பிரகடனத்துக்கு முன்பே சிறுபான்மையினர் உரிமைகள் குறித்த விவாதங்கள் எல்லா நாடுகளிலும் நிகழ்ந்துள்ளன. இதைக் கருத்தில்கொண்டே இந்திய அரசியல் சாசனத்தின் பல்வேறு பிரிவுகள் மதச் சிறுபான்மையினர், மொழிச் சிறுபான்மையினர், கலாசாரச் சிறுபான்மையினர் மற்றும் தங்களுக்கென்று சொந்த வாழ்நெறி நூலை வைத்திருப்போர் ஆகியோரைச் சிறுபான்மையினராக அங்கீகரிக்கின்றன.

இந்திய அரசியல் சட்டத்தின் பாகம் IV-A குடிமக்கள் அனைவரின் அடிப்படைக் கடமையைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதில் பிரிவு 51-A, சிறுபான்மையினர் குறித்த சிறப்புப் பிரிவாகும்; மதம், மொழி மற்றும் பிராந்திய, பிரிவு வேற்றுமைகள் கடந்து இந்தியாவின் அனைத்து மக்களிடையேயும் ஒத்திசைவு மற்றும் பொதுவான சகோதரத்துவ உணர்வை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்றும் நமது கலவையான கலாசாரத்தின் செழுமையான பாரம்பர்யத்தை தித்துப் பாதுகாக்க வேண்டும் என்று அந்தப் பிரிவு கூறுகிறது.

அரசியல் சட்டத்தின் ஆசான் டாக்டர் அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையிடம் கூறியதாவது, ‘‘சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு எதிராக ஒருவகையான வெறித்தனத்தை வளர்த்துக்கொண்டுள்ள கடும்போக்கினருக்கு நான் இரண்டு விஷயங்களைக் கூற விரும்புகிறேன்.

ஒன்று, சிறுபான்மையினர் ஒரு வெடித்தெழும் சக்தியாக இருக்கிறார்கள்; அந்தச் சக்தி வெடித்தெழுமானால், அரசின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் வெடித்துச் சிதறடித்து விடலாம். இதற்கு ஐரோப்பிய வரலாறு போதுமான சாட்சியங்களைக் கொண்டுள்ளது.

மற்றொன்று, இந்தியாவில் சிறுபான்மையினர் தமது இருத்தலை பெரும்பான்மையின் கரங்களில் ஒப்படைத்துள்ளனர். அயர்லாந்துப் பிரிவினையைத் தடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளின் வரலாற்றில் ரெட்மான்ட் கர்சனிடம், ‘பிராடஸ்டன்ட் சிறுபான்மையினருக்கு நீங்கள் விரும்பும் எந்தப் பாதுகாப்பையும் கேளுங்கள். ஆனால், நமக்கு ஓர் ஒன்றுபட்ட அயர்லாந்து இருக்கட்டும்' என்று கூறினார். அதற்கு கர்சன், ‘உங்கள் பாதுகாப்பு யாருக்கு வேண்டும்? நீங்கள் எங்களை ஆள்வதை நாங்கள் விரும்பவில்லை'.

இந்தியாவில் எந்தச் சிறுபான்மையும் இந்த நிலைப்பாட்டைஎடுக்கவில்லை. அவர்கள் விசுவாசத்துடன் பெரும்பான்மையின் ஆட்சியை, அரசியல் பெரும்பான்மையின் ஆட்சியை அல்ல ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.  சிறுபான்மையினருக்கு எதிராகப் பாகுபாடு காட்டக் கூடாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டியது பெரும்பான்மையின் கடமையாகும். சிறுபான்மையினர் தொடர்வார்களா அல்லது மறைந்து போவார்களா என்பது பெரும்பான்மை இதைப் பழகிக்கொள்வதைச் சார்ந்ததாகும். சிறுபான்மைக்கு எதிராகப் பாகுபடுத்திக் காண்பதை பெரும்பான்மை கைவிடும் அந்தக் கணமே சிறுபான்மையினராக இருந்துவருவதற்கு எந்த அடித்தளமும் இல்லாமல் போகும், அவர்கள் சிறுபான்மையாக இருப்பதிலிருந்து மறைந்துவிடுவார்கள். 

பெரும்பான்மை இதை மெய்யாக உணருமா?

#“அயர்லாந்து செய்ததும்... இந்தியா செய்யத்தவறியதும்!” - சர்வதேச சிறுபான்மையினர் தின சிறப்புப் பகிர்வு #InternationalMinoritiesDay

கீ.இரா.கார்த்திகேயன்.(நன்றி:விகடன்) 

நம்மிடம் மாற்றம் வேண்டும்....


 اِنَّ اللّٰهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتّٰى يُغَيِّرُوْا مَا بِاَنْفُسِهِمْ‌ وَاِذَاۤ اَرَادَ اللّٰهُ بِقَوْمٍ سُوْۤءًا فَلَا مَرَدَّ لَهٗ‌ وَمَا لَهُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّالٍ‏

எந்த சமூகம் தன்னைத்தானே மாற்றிக் கொள்ளவில்லையோ, அந்த சமூகத்தை அல்லாஹ்வும் மாற்றுவதில்லை. (அல்குர்ஆன் 13: 11)

இந்த இறைவசனத்திற்கேற்ப இந்திய இஸ்லாமியர்கள் தங்களை தகவமைத்துக்கொள்ளாத வரை எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது என்பதே நிதர்சனமான உண்மை...

ஏனெனில் இன்று இஸ்லாமியர்களை அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் வாக்கு வங்கிகளாகத்தான் பார்க்கிறார்கள். தேர்தல் நேரத்தில் அனைத்து கட்சிகளும்  "நாங்கள் தான் சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்கள்" என்று சர்வ சாதாரணமாய் பரப்புரை செய்து, அதில் வெற்றியும் காண்கிறார்கள்.

வழக்கம் போல் நாமும் ஆளுக்கொரு கட்சியாக பிரிந்து நமது வாக்குகளை சிதற செய்கிறோம். இதனால் தான் பெருபான்மையாக இருக்க வேண்டிய நம் சமூகம் இன்றும் சிறுபான்மையாகவே இருக்கிறது. நம் அரசியல் தலைவர்களும் தனக்கு பின்னால் உள்ள இஸ்லாமிய சமூகத்தை சரியான வழியில் வழி நடத்த தவறி ஏதோ ஒரு கட்சியிடம் ஒரிரு சீட்டுக்காக ஒட்டு மொத்த சமுதாயத்தையே அடமானம் வைக்கிறார்கள். அல்லது எதிரிகளின் பிரித்தாளும் சூட்சிகளுக்கு ஆட்பட்டு தன் தனி மெஜாரிட்டியை காட்டுவதற்காக மிகப் பெரிய வாக்கு வங்கியாக  உள்ள நம்மை பயன்படுத்தி அவர்களின் கட்சியை , அமைப்பை வளர்க்கிறார்கள். இதற்கு சமீபத்தில் நடந்த குஜராத் தேர்தல் மிகப் பெரிய சாட்சி.

 "ஒற்றுமை எனும் கயிற்றை பற்றி பிடியுங்கள" என்கிற குர்ஆனிய வசனம் வெறும் மேடை பேச்சுக்காக மட்டும் நம் அரசியல் தலைவர்கள் பயன்படுத்துகிறார்கள். உண்மையில் இதை நிதர்சன படுத்த யாரும் முயற்சிப்பதில்லை. முன் வருவதுமில்லை. இப்படி இருந்தால் பெரும்பான்மையாக இருக்க வேண்டிய நம் சமூகம் கியாமத் வரை சிறுபான்மையாகத்தான் இருக்க முடியும். நம் இஸ்லாமிய அரசியல் தலைவர்கள் தங்களின் ஈகோ (அரசியல் காழ்ப்புணர்ச்சியை) விட்டு வெளியே வந்து ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரனியாய் திரளாத வரை வெற்றிக்கனியை சுவைக்க முடியாது. நாம் மக்களுக்கு முன்பாக சிறுபான்மை சமூகமாக இருக்கலாம். ஆனால் நம்மை படைத்த இறைவனுக்கு முன் நாம் எப்பொழுதும் பெரும்பான்மை சமூகம் தான் என்பதை உணர்ந்தாலே நம்மை நாமே மாற்றிக் கொள்ள முடியும்.

நம் சமூகம் எல்லாத்துறையிலும் பெரும்பான்மையாக இருக்க நாம் ஒன்றுபட அல்லாஹ் உதவி செய்வானாக! ஆமின்..

வெளியீடு : செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Wednesday 7 December 2022

ஜும்ஆ பயான் 09/12/2022

ஈமானை பாதுகாப்போம்.




உலகெங்கிலும் குழப்பங்களும் சூழ்ச்சி வலைப்பின்னல்களும் நிறைந்த இக்காட்டான ஓர் காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றோம்.- 

عن أنس بن مالك، عن رسول الله صلى الله عليه وسلم قال: «تكون بين يدي الساعة فتن كقطع الليل المظلم يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا، ويمسي مؤمنا ويصبح كافرا، يبيع أقوام دينهم بعرض من الدنيا» أخرجه الترمذي (2197)

"கியாமத் நாள் சமீபத்தில் இருள் சூழ்ந்த இரவின் பகுதியைப் போல் பல குழப்பங்கள் ஏற்படும். அப்போது காலையில் முஃமினாக இருந்தவர் மாலையில் காஃபிராகிவிடுவான்.மாலையில் முஃமினானாக இருந்தவர்  காலையில் காஃபிர் ஆகிவிடுவான்" என்று நபி ﷺஅவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்;அனஸ் இப்னு மாலிக்(ரலி)அவர்கள். (நூல் ;திர்மிதீ)

இஸ்லாத்திற்கெதிரான யூத, நஸராக்களின் சூழ்ச்சிக்களில் ஒன்று, இஸ்லாத்திற்கு வெளியில் இஸ்லாமிய எதிர்ப்பு விஷமபிரச்சாரங்களை செய்து இஸ்லாமியர்களின் மீது வெறுப்பை உண்டாக்குவதும்,இஸ்லாமிய நாடுகளில் போர்தொடுத்து இஸ்லாமியர்களை அழிக்கும் வேலையை செய்வதுமாகும்.

மற்றொன்று, இஸ்லாத்திற்கு உள்ளே ஈமானை பறிக்கும் குழப்பங்களில் இஸ்லாமியர்களை சிக்கவைப்பதற்காக புதிய பிரிவுகளையும்,வழிகெட்ட கொள்கைகளையும் தோற்றுவிப்பது இன்று நேற்றல்ல நாயகம் ﷺஅவர்களின் காலந்தொட்டே தொடர்கின்றன.

நபி ﷺஅவர்களின் காலத்தில் இறுதிநபித்துவத்திற்கெதிராக முஸைலம துப்னு கத்தாப் போன்றவர்கள் தம்மை நபி என வாத்திட்டனர்,நபிﷺ காலத்திற்கு பின்னால் முதலாவதாக ஹவாரிஜ்கள், அதன் பின்னர் ராபிழாக்கள் எனப்படும் ஷீஆக்கள், பின்னர் அலி (ரழி) அவர்களைக் குறைகாணும் ‘நவாஸிப்கள்’, அதன் பின்னர் ‘கத்ரிய்யா’, ஜப்ரிய்யா, முஃதஸிலா, ஜஹ்மிய்யா, ஆகிய பிரிவுகள், குறிப்பிடதக்கவைகளாகும்.

இன்று உலக அளவில் முஸ்லிம்களின் ஈமானை பறிப்பதற்காக இஸ்லாமிய எதிரிகள் உற்பத்தி செய்து முஸ்லீம்களுக்கிடையில் நடமாட விட்டிருக்கும் மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவனை நபியாக ஏற்கும் காதியானிகள்,

ரஷாத் கலிஃபா என்பவனை இறைதூதராக ஏற்று திருக்குர்ஆனில் இரண்டு வசனங்களை மறுத்து புனித ஹதீஸ்களை சாத்தானின் கூற்றுகள் என இழிவு படுத்தும் சப்மிட்டர்ஸ் எனும் 19 குரூப்பினர்,

ஷகீல் பின் ஹனிஃப் என்பவனை ஈஸாவாக,மஹ்தியாக ஏற்கும் ஷகீலிகள்,இஸ்லாமியர்களுக்கிடையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவருகின்றனர்.

இம்மூன்று பிரிவினரும் இஸ்லாமை விட்டு நீங்கியவர்கள் என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி,மக்கா முகர்ரமாவில் "அர் ராபிததுல் ஆலமில் இஸ்லாமி"உட்பட அனைத்து மத்ரஸாக்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தெளிவாக அறிவித்துவிட்டன.

யார் இவர்கள்...


காதியானிகள்...


இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த முஸ்லிம்  சமுகத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்த அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் செய்த சதியே, காதியானிகளை முஸ்லிம் என்ற அடையாளப் படுத்தியதாகும்.இத்திட்டதை சரியாக அடையாளம் கண்டு கொண்ட சர்வதேச முஸ்லிம் சமுதாயமும் இவர்களை தனி மதமாக அறிவித்தனர். காதியானி என்பது ஒரு தனி மதமாகும்.

ஆனால் காதியானிகளை முஸ்லிம் என்று அடையாளப் படுத்த காதியானிகளும் அவர்களுக்கு ஆதரவான அரசியல் சக்திகளும் தொடர்ந்து முயற்சி செய்கின்றன. இதன் பின்னணியில் இருப்பது பிரிட்டிஷ் அரசு. 

காதியானிகளின் தலைமையிடம் லண்டனில் இருக்கிறது என்பதும் அதன் கிளை அலுவலகம் ஒன்று இஸ்ரேலில் இருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

இறுதி நபியாக அல்லாஹ்வினால் அருளப்பட்ட முஹம்மது ﷺ அவர்களின் சிறப்புப் பெயர்களில் ஒன்றாகிய அஹ்மது என்ற பெயரைக் கொண்டு தங்களை ‘அஹ்மதிகள்’ என அழைப்பது மக்களை ஏமாற்ற ‘காதியானிகள்’ செய்யும் ஒரு தந்திரமாகும். 

காதியான் எனும் ஊரிலே பிறந்து, தான் நபி என்று பிதற்றிய மிர்ஸா குலாம் அஹ்மது எனும் தஜ்ஜால்களில் ஒருவனை  பின்பற்றுபவர்களே காதியானிகள். 


மிர்ஸாவின் வழிகெட்ட கொள்கைகள்:


1. மிர்ஸா தன்னை நபி என்று வாதிட்டார்.

2. ஈஸா (அலை) அவர்கள் தந்தையின்றி அற்புதமான முறையில் பிறந்தார், என்று தெளிவுபடுத்தும் குர்ஆனுடைய கூற்றை மறுக்கிறார்.

3. ஈஸா (அலை) அவர்கள் உயிருடன் வானத்தின்பால் உயர்த்தப்பட்டதையும் உலக முடிவு நாளின் நெருக்கத்தில் உலகிற்கு வருவார்கள், என்பதையும் மறுக்கிறார்.

4. மர்யம் (அலை) அவர்களையும் ஈஸா (அலை) அவர்களையும் விகாரமான தரக்குறைவான வார்த்தைகளால் ஏசுகிறார்.

5. ஈஸா (அலை) அவர்களின் முஃஜிஸா எனும் அற்புதங்களை மறுக்கிறார்.

6. நபி  ﷺஅவர்களின் ஹதீஸ்களைப் பற்றி தகாத வார்த்தைகளைக் கூறுகிறார்.

7.  ஜிஹாது கியாம நாள் வரை நடக்கும், الجهاد ماض الى يوم القيامةஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால், மிர்ஸா, ஜிஹாதின் சட்டம் மாற்றப்பட்டுவிட்டது. இனி ஜிஹாது என்பதே இல்லை. ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஜிஹாது செய்வது ஹராம் என்று குறிப்பிட்டார்.

8. தன்னை ஏற்க மறுக்கும் முஸ்லிம்களை காஃபிர்கள் என்றும் விபச்சாரத்தில் பிறந்தவர்கள் என்றும் ஏசுகிறார். 


ஈஸா நபியால் முன்னறிவிக்கப்பட்டவர் யார்?


{وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَابَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُمْ بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ (6) وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُوَ يُدْعَى إِلَى الْإِسْلَامِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ (7)61

இஸ்ராயீலின் மக்களே! நிச்சயமாக நான் உங்களின் பால் (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதராவேன். எனக்கு முன்னுள்ள தவ்ராத் (வேதத்)தை மெய்ப்பிப்பவனாகவும், எனக்குப் பின் வரவிருக்கின்ற அஹ்மத் என்னும் பெயருடைய ஒரு தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவனாகவும் (வந்துள்ளேன்) என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைத்துப் பாருங்கள்! அவர் (அஹ்மத்) தெளிவான சான்றுகளை அவர்களிடம் கொண்டு வந்த போது இது பகிரங்கமான சூனியம் எனக் கூறி விட்டனர். இஸ்லாத்தின் பால் அழைக்கப்படும் நிலையில், அல்லாஹ்வின் மேல் பொய்யை இட்டுக்கட்டுபவனை விட மிகவும் அநியாயக்காரன் யாரிருக்க முடியும். அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான். (திருக்குர்ஆன் 61:6,7)

இவ்வசனத்திற்கு சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவன் அறிவுக்குப் பொருந்தாத விளக்கம் கொடுத்தான்.இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறிக்கவில்லை, என்னைத் தான் குறிக்கிறது என்று வாதிட்டான்.

நபிகள் நாயகத்தின் பெயர் "முஹம்மத்' தானே தவிர அஹ்மத் அல்ல. என் பெயர் தான் அஹ்மதாக உள்ளது. எனவே, இவ்வசனத்தில் முன்னறிவிப்பு செய்யப்பட்டவன் நான் தான் என்று வாதிட்டான்.தானும் ஒரு நபி தான் என்று கூறினான். இவ்வசனத்தில் இவனது வாதத்திற்கு ஏதாவது இடமிருக்கிறதா என்று பார்க்காத ஒரு கூட்டம், அவனையும் நபியென்று நம்பியது. இவர்கள் காதியாணிகள் என்று கூறப்படுகின்றனர். முஸ்லிம் சமுதாயத்தின் அனைத்து தரப்பினராலும், இவர்கள் "முஸ்லிமல்லாத புது மதத்தவர்கள்'' என்று தீர்ப்பளிக்கப்பட்டனர்.

மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவனைப் பற்றியும் அவன் உருவாக்கிய காதியாணி மதம் பற்றியும் இந்தச் சிறிய அறிமுகம் போதுமானதாகும்.இனி இவ்வசனத்திற்கு இவன் கொடுத்த விளக்கம் சரிதானா? என்று ஆராய்வோம்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயர் முஹம்மத் மட்டுமல்ல. அஹ்மத் என்பதும் அவர்களின் பெயர் தான்.

3532 - حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، قَالَ: حَدَّثَنِي مَعْنٌ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لِي خَمْسَةُ أَسْمَاءٍ: أَنَا مُحَمَّدٌ، وَأَحْمَدُ وَأَنَا المَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِي الكُفْرَ، وَأَنَا الحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي، وَأَنَا العَاقِبُ "

எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் தான் முஹம்மத். நான் தான் அஹ்மத். நான் தான் ஹாஷிர். நான் தான் ஆகிப். நான் தான் மாஹீ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். (நூல் : புகாரி 3352)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தமது பெயர்களில் அஹ்மதும் ஒன்று எனக் கூறுகிறார்கள். நபிகள் நாயகத்திற்கு அஹ்மத் என்ற பெயர் கிடையாது என்று கூறிய மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவன் மார்க்க அறிவற்றவன் என்பது இதிலிருந்து தெரியவரும்.

மிர்ஸா குலாம் அஹ்மத் என்ற இவனது பெயரில் அஹ்மத் என்ற வார்த்தை உள்ளதல்லவா? அதனால் இது தன்னைப் பற்றிய முன் அறிவிப்பு என்றான்.

ஒருவனது பெயர் அப்துல்லாஹ்  என்று இருந்தால் அதில் அப்து என்றும் அல்லாஹ் என்றும் இரண்டு சொற்கள் உள்ளன. (இதன் பொருள் அல்லாஹ்வின் அடிமை) அப்துல்லாஹ் என்ற பெயரில் அல்லாஹ் என்ற சொல் உள்ளதால் நான் தான் அல்லாஹ் என்று யாரேனும் கூறினால் நாம் ஏற்றுக் கொள்வோமா?

பெரியார் தாசன் என்று ஒருவருக்குப் பெயர். ஈ.வெ.ரா. பெரியாரைப் பற்றிக் கூறும் வாசகம் தன்னைத் தான் குறிப்பதாக அவர் வாதிட்டால் அவரை நாம் என்னவென்போம்?


ஒரு வாதத்திற்கு....


மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவனும் ஒரு நபி என்றே வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். ஈஸா நபி அவர்கள் நிச்சயமாக இவனைக் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். ஏனெனில், அவர்களுக்குப் பின் வரக்கூடிய நபிகள் நாயகத்தைத் தான் முன்னறிவிப்புச் செய்வார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) தான் முக்கிய நபி; தான் அவர்களின் நிழல் நபி என்று தான் மிர்ஸா குலாம் வாதிட்டான். ஒரிஜினலும், நிழலும் வரவிருக்கும் போது, ஒரிஜினலை விட்டு விட்டு நிழலைப் பற்றி யாரேனும் முன்னறிவிப்பு செய்வார்களா?

ஒரு கலெக்டர் பின்னால் வருவதை முன் கூட்டியே ஒருவன் அறிவித்துச் செல்கிறான். கலெக்டருடன் அவரது டிரைவரும் வருவார். அறிவிப்புச் செய்பவன் கலெக்டர் வருகிறார் என்று கூறுவானா? கலெக்டரின் டிரைவர் வருகிறார் என்று கூறுவானா?

முதல்வரும்  18-வது வார்டு உறுப்பினரும்  வந்து கொண்டிருக்கும் போது முதல்வர் வருகையைக் கூறாமல் 18-வது வார்டு மெம்பர் வருகிறார் என்று யாரேனும் அறிவிப்பு செய்வார்களா? என்பதைக் கூட இவனும், இவனது மதத்தவர்களும் சிந்திக்கவில்லை.

இது நபிகள் நாயகத்தைத் தவிர வேறு எவரையும் குறிக்கவே முடியாது என்பதற்கு இந்த வசனத்திலேயே வலுவான ஆதாரம் உள்ளது.

"அவர் (அஹ்மத்) அவர்களிடம் வந்த போது, அவர்கள் சூனியம் என்று கூறிவிட்டனர்'' என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வசனம் அருளப்பட்ட காலத்திற்குப் பிறகு தான் அஹ்மத் வருவார் என்பது இதன் கருத்தாக இருந்தால் இவ்வாறு கூற முடியாது. "அவர் இனி மேல் வரும் போது சூனியம் எனக் கூறுவார்கள்'' என்று வருங்கால வினையாகச் சொல்லப்பட்டிருக்கும். "அவர் வந்த போது'' என்று சென்ற கால வினைச் சொல் (ஃபலம்மா ஜாஅ) பயன்படுத்தப்பட்டுள்ளது.

"அவர் வந்த போது'' "கூறினார்கள்'' என்று குர்ஆன் கூறுவதால், இவ்வசனம் அருளப்பட்ட காலத்தில் அந்த அஹ்மத் வந்திருக்க வேண்டும். அவர் வந்த பின் அவர்கள் அவரை நிராகரித்திருக்கவும் வேண்டும். அவ்வாறு நடந்திருந்தால் தான் "அவர் வந்த போது'' எனக் கூறியிருக்க முடியும்.

இவ்வசனம் அருளப்பட்ட போது மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவன் வந்திருக்கவில்லை. இவனைப் பற்றிக் குறிப்பிடுவதாக இருந்தால்  "அவர் வரும் போது'' "சூன்யம் எனக் கூறுவார்கள்'' என்று வசனம் அமைந்திருக்கும்.

"அவர் வந்த போது சூனியம் என்று கூறினார்கள்'' என்று கூறப்படுவதால், இவ்வசனம் அருளப்படும் போதே அஹ்மத் வந்துவிட்டார் என்பது தெளிவு.

இவ்வசனம் அருளப்பட்ட போதே வந்திருந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தானே தவிர, இவ்வசனம் அருளப்பட்ட போது எந்தப் பொருளாகவும் இருந்திராத அஹ்மத் தாசன் (குலாம் அஹ்மத்) அல்ல.


பொய்யான ஆதாரம்...


இவ்வசனம் தன்னைத் தான் குறிக்கிறது என்பதற்கு இவன் எடுத்துக்காட்டும் முக்கியமான ஆதாரம் என்ன தெரியுமா? "இஸ்லாத்தின் பால் அழைக்கப்படும் போது அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுபவனை விட அநியாயக்காரன் யார்?'' என்று அடுத்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

இவ்வசனத்தில் "இஸ்லாத்தின் பால் அழைக்கப்படும் நிலையில்" என்ற வாசகத்தை எடுத்துக் கொண்டான். எல்லோரும் என்னைக் காஃபிர்கள் என்று கூறி இஸ்லாத்தின் பால் அழைக்கின்றனர். இஸ்லாத்தின் பால் அழைக்கப்பட்டவன் நான் மட்டுமே. எனவே இது என்னைத் தான் குறிக்கிறது என்பது தான் இவனது ஆதாரம்.


மிர்ஸாவின் மரணம்..


1907 மற்றும் 1908ம் ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் இவன் பாகிஸ்தான் நாட்டு லாகூர் நகருக்கு குடும்பத்துடன் பயணமானார். அங்கு தன் பொய்ப் பிரச்சாரத்தை பரப்பினார். அதுசமயம் நோய்வாய்ப்பட்டு வயிற்றுப்போக்கு (பேதி) ஏற்பட்டு 1908ம் ஆண்டு மே மாதம் 26ம்நாள் மரணமடைந்தார்.மிர்ஜா குலாம்  கழிப்பறையில் காலமானார் என்றும் சொல்லப்படுகிறது.

இப்படிப்பட்ட  நபரை  ஒரு கூட்டம் பின்பற்றுகின்றனர் என்றால் அவர்கள் எவ்வளவு பெரிய அறியாமையில்  உள்ளனர் என்பதை புரிந்துக் கொள்ளலாம்.

அவருடைய மரணத்துடன் இந்த இயக்கம் முடிவுறவில்லை. அதன்பின்னும் இறுதி நபியும்.நபி ஈஸா (அலை) என்றும். மஹ்தி (அலை) என்றும் என்ற தொடரும்  தொடர்ந்து கொண்டிருப்பதே இது பொய்யான கொள்கை  என்பதற்கு மிகப் பெரிய சான்றாகும்.

இப்படிப் பட்ட கொள்கையுடைய ஒரு நபரும் அவரை ஏற்றுக்கொள்பவர்களும் தங்களை அஹ்மதிய்யா முஸ்லிம்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டாலும் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவர், காஃபிர்கள், என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.


சப்மிட்டர்ஸ் எனும் 19 குருப்பினர்.


சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் யூத,கிறிஸ்துவ மிஷினரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு,உருவாக்கப்பட்டவன் தான் இந்த ரஷாத் கலீஃபா.ரிச்செட் காலிஃப் என்பது தான் இவன் உண்மைப் பெயர்.இவன் லெபனானைச் சொந்த நாடாக கொண்ட ஒரு கிறிஸ்தவன். 

தன் வாலிப பருவத்தில் எகிப்து,லெபனான் போன்ற நாடுகளில் கல்வி பயின்றான்.பட்டப்படிப்புகளை முடித்த பின்பு திருக்குர்ஆனைப் பற்றிய ஒரு விசேஷ கட்டுரையை எழுதினான்.சில நாட்களில் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்.முஸ்லிமாகி விட்டேன் என்று அறிவித்தான்.

பின்பு அமெரிக்காவுக்குச் சென்று பல வருடங்கள் அங்கே தங்கினான்.அங்கு வைத்து தான் குர்ஆனிலும்,ஹதீஸிலும் சொல்லப்பட்ட கருத்துக்கு மாற்றமாக (தாப்பதுல் அர்ளு)என்றால் கணிப்பொறி (கம்ப்யூட்டர்)தான் என்று கூறினான்.  

திருமறையில்
وَ اِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ اَخْرَجْنَا لَهُمْ دَآبَّةً مِّنَ الْاَرْضِ تُكَلِّمُهُمْۙ اَنَّ النَّاسَ كَانُوْا بِاٰيٰتِنَا لَا يُوْقِنُوْنَ‏
அவர்கள் மீது (வேதனையுடைய) வாக்கு நெருங்கும் போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து நாம் வெளியாக்குவோம்; அது, நிச்சயமாக மனிதர்கள் (யார், யார்) நம் வசனங்களின் மீது உறுதி கொள்ளவில்லையென்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்.
(அல்குர்ஆன் : 27:82)இது குர்ஆன் கூறும் விவரம்.ஆனால் இந்த ரஷாத் கலீஃபாவோ கம்ப்யூட்டர் தான் "தாப்பதுல் அர்ளு"என்கிறான்.

பத்தொன்பதின் 19 -பின்னனி.


பின்பு 19 என்ற எண்ணை மையமாக வைத்து عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ "அலைஹா திஸ்அத அஷர்"என்ற சிறிய நூலை எழுதினார்.இதில் பிஸ்மில்லாஹ்வில் 19 எழுத்துக்கள் உள்ளன.குர்ஆனின் சூராக்கள் 114 இது 19 இல் வகுபடும்.இப்படி பல குர்ஆனின் வசனங்கள்,சூராக்களை 19 உடன் சம்பந்தப்படுத்தி எழுதினான்.   மிக விரைவில் இஸ்லாமிய உலகில் இந்நூல் பிரபலமாகிவிடவே இவனுடைய பின்னணியை புரியாமல் சவுதி அரசாங்கம் இவனை சிறப்பு விருந்தினராக அழைத்து பாராட்டு தெரிவித்தது.அவ்வையம் ரியாத்,மதினா போன்ற முக்கிய நகரங்களில் இவனது பயானுக்கு  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.பல இஸ்லாமிய நாடுகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தனக்கென சில ரசிகர்களை உருவாக்கினான்.இப்படி தனது ஆக்கங்களுக்கும்,பேச்சுகளுக்கும் மதிப்பளித்து ஏற்பவர்கள் உலகில் உருவாக்கி விட்டார்கள் என்று உறுதிப்படுத்திக் கொண்ட அவன் கடைசியில் தன்னை ரஸுல் அல்லாஹ்வின் தூதர் என்றே கூறி விட்டான்.அல்லாஹ் தன்னை உடன்படிக்கை தூதராக-மெய்ப்பிக்கும் தூதராக அனுப்பி இருப்பதாகவும் கூறினான்.

நபியின் வருகை முற்றுப்பெற்று விட்டது என்று மட்டுமே குர்ஆன் கூறுகிறது.ரஸுல் வரமாட்டார்கள் என்று சொல்லவில்லை.எனவே இக்கால மனிதர்களுக்கு நேர்வழி காட்ட என்னை அல்லாஹ் ரசஸுலாக அனுப்பியுள்ளான் என்று தன் பொய் வாதத்திற்கு நியாயமும் கற்பித்தான். 

முன்பு வந்த அனைத்து நபி, ரசூல்மார்களிடமும் அக்கால மக்கள் முஃஜிஸா என்னும் அற்புதத்தைக் கேட்டுள்ளார்கள்.எனவே நாமும் ஏதாவது அற்புதத்தை காட்டாவிட்டால் தன்னை ரசூல் என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று உணர்ந்துக்கொண்ட   இப்பொய்யன்,தாம் கற்பனை செய்துள்ள 19 என்ற எண்ணின் கணித,கட்டமைப்பை பயன்படுத்தினான்.அதாவது பிஸ்மில்லாஹ்வில் 19 எழுத்துக்கள் உள்ளன.குர்ஆனின் எண்ணிக்கை 114என்பது  19-ல் வகுபடும்.இப்படி குர்ஆனே 19 என்ற எண்ணில் தான் சூழல்கிறது.என் பெயரிலுள்ள ரஷாத் கலீஃபாவிலுள்ள எழுத்துக்களை கூட்டினால் அது 19 இல் வகுப்படுகிறது.நான் ரசூலாக இருப்பதற்கு இதுதான்  முஃஜிஸாவாகும்.எனவே என் பெயருடன் தொடர்புள்ள குர்ஆனை வைத்து வழிகாட்ட என்னை ரசூலாக அல்லாஹ் அனுப்பியுள்ளான் என்று கூறினான்.

கொலையுண்ட  ரஷாத் கலீஃபா..


முஸ்லிம்களை மதமாற்றம் செய்ய இஸ்லாத்தின் எதிரிகளால் மிகப்பெரும் சதித்திட்டமாக இவன் உருவாக்கப்பட்டுள்ளான்.என்ற பின்னணி தெரியவந்த போது 1990 ஜனவரி 31 அதிகாலையில் அமெரிக்காவின் Tucson "டுக்சன் "எனும் ஊரில் அவனால் கட்டப்பட்ட (மஸ்ஜித்?)கோவிலில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டான்.

அவன் கொல்லப்பட்டுவிட்டாலும் அவனை ரசூலாக்கி அனுப்பியவர்கள் இச்சதியை தொடர்ந்து செய்து வருகின்றனர்.Final Testament என்ற இவனுடைய ஆங்கில நூலை முதலில் இன்டர்நெட்டில் வெளியிட்டனர்.இஸ்லாத்திற்கு எதிரான, ஹதீஸை கொச்சைப்படுத்தும் பல நச்சு கருத்துக்கள் இந்நூலில் வரிக்கு வரி நிரம்பி கிடைக்கின்றன.

கசப்பான உண்மை .


எந்த நாட்டில் எந்தப் பகுதியினர் இந்த வலைதளங்களில் சிக்கி கிடைக்கின்றனர் என்பதை கவனமாக கண்காணித்து அங்கு நேரடியாக தொடர்பு கொண்டு தமது மிஷினரி வேலைகளை ஆரம்பித்தனர்.இந்தியதேசத்தில் தமது  இச்சதிகளை அரங்கேற்ற அவர்கள் தேர்ந்தெடுத்தது நம் தமிழ்நாட்டைத் தான்  என்பது கசப்பான உண்மையாகும்.

இந்த Final Testament என்ற நூலை "புதிய நினைவூட்டல் "என்ற மாத இதழில் தொடராக வெளியிட்டு "குர்ஆன் இறுதி ஏற்பாடு"என்ற பெயரில் முழு தொகுப்பாக வெளியிட்டுள்ளனர்.இந்தியாவிலேயே தமிழில் தான் (இதுவரை) வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக முஸ்லிம்கள் இந்தளவு  எடுப்பார் கைப்பிள்ளைகளாக போனதற்கு என்ன காரணம்? யார் காரணம் என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். 

ரஷாத் கலீஃபாவின் (Final Testament) இறுதி ஏற்பாடு.


ரஷாத் கலீஃபா எழுதிய இறுதி ஏற்பாடு என்ற புத்தகத்தில் உள்ள கருத்துக்களை படித்தால், அவன் இஸ்லாத்திற்கு எவ்வளவு பெரிய எதிரி என்பதையும்,அவனை பின்பற்றுபவர்களின் கதி என்னவாகும் என்பதையும் புரிந்துக் கொள்ளலாம்.

இதோ அவன் எழுதி இருப்பவற்றில் சில...
1)இவ்வுலகிற்கு முஹம்மது நபி திரும்பி வந்தால் அவரைக் கல்லால் அடித்துக் கொன்றுவிடுவார்கள்.
(இறுதி ஏற்பாடு :ரஷாத் கலீஃபா பக்கம் 481)

குறிப்பு:புதிய நினைவூட்டல் என்ற புத்தகத்தில் உள்ளவை அனைத்தும் இறுதி ஏற்பாடு எனும் புத்தகத்தில் உள்ளவையே.

2)அல் முஙீரா பின் ஷுஃபா விபச்சாரகன்,அம்ருபுனு ஆஸ் பொய்யன்,அபூஹுரைரா சுயநலவாதி,காலித் பின் வலீத் கொலைகாரன்.
(புதிய நினைவூட்டல் மே 2000 பக்கம் 18)

3)முஹம்மது நபி மீது ஸலவாத்து சொல்வது ஷிர்க்.(புதிய நினைவூட்டல் ஜனவரி 1999)

4)"லாயிலாஹ இல்லல்லாஹு"மட்டும்தான் கலிமாவாகும்.இத்துடன் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்"  என்று இணைத்துக் கூறுவது ஷிர்க் ஆகும். (இறுதி ஏற்பாடு பக்கம் 427)

5)குர்ஆன் முழுமையாக பாதுகாக்கப்படவில்லை.குர்ஆன் புத்தகத்தில் எந்த ஒரு எழுத்தும் புதிதாக இடம் பெறவும் அல்லது ஏதேனும் ஒரு எழுத்து குர்ஆனில் இருந்து நீக்கம் பெறவும் முடியாது என்று நம்புவது ஒரு குருட்டு நம்பிக்கை தான்.(புதிய நினைவூட்டல் மே 2005 பக்கம் 34)

6)குர்ஆன் முஹம்மது நபியின் கரங்களால் எழுதப்பட்டது.அவர் எழுத படிக்க தெரிந்தவரே!(இறுதி ஏற்பாடு பக்கம் 473)

7)ஹதீஸ் மற்றும் சுன்னத்துகள் சாத்தானின் புதுமைகளாகும்.(இறுதி ஏற்பாடு பக்கம் 473)

8)எதிரிகளின் பொய்த் தயாரிப்பு தான் ஹதீஸ்.ஹதீஸ் மற்றும் சுன்னத் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டவன் பொய்யான நம்பிக்கையுடையவன்.(இறுதி ஏற்பாடு பக்கம் 426)

மேற்சொன்னவை அனைத்தும் ரஷாத் கலீஃபாவின் கருத்துக்களில் சிலது தான்.இன்னும் இதுப் போன்று வழிகெட்ட பல கருத்துக்களை உளறி வைத்துள்ளான்.இதுவே இவன் இஸ்லாத்திற்கு எவ்வளவு பெரிய எதிரி என்பதையும்,அவனை பின்பற்றுபவர்களின் கதி என்னவாகும் என்பதையும் புரிந்துக் கொள்ள போதுமானதாகும்.
  
ரஷாத் கலீஃபாவை இறைத்தூதராக ஏற்பவர்கள் தங்களை Sabmitters to God Alone
(கடவுளுக்கு மட்டும் அடிபணிந்தோர்)என்று கூறிக்கொண்டு,திருக்குர்ஆனின் இரு வசனங்களையும்,ஹதீஸ்களையும் மறுப்பவர்கள்.இவர்கள் முஸ்லிம்கள் அல்லர்.இஸ்லாத்தை விட்டும் நீங்கியவர்கள்.

(நன்றி:ஷரிஅத் பாதுகாப்புப் பேரவையின் "ஹதீஸை மறுப்பவர்கள் காஃபிர்களே!யார் இந்த இந்த ரஷாத் கலீஃபா என்ற நூலிலிருந்து..)


ஷகீலிகள்...


ஷகீல் பின் ஹனிஃப் என்பவனை ஈஸாவாக,மஹ்தியாக ஏற்பவர்கள்  ஷகீலிகள் ஆவார்கள்.ஷகீல் பின் ஹனிஃப் என்பவன் நவீனகால பெரும் குழப்பவாதியாவான்.

யார் இவன்.......

இந்தியாவில் பீஹார் மாநிலத்தில் உள்ள உஸ்மான் பூரைச் சேர்ந்த ஹனீஃப் என்பவரின் மகனாகிய ஷகில் என்பவன் சுமார் 12 வருடங்களுக்கு முன்பாக டெல்லியில் உள்ள இலட்சுமி நகரில் தாம் இமாம் மஹதி என்பதாகவும்,கியாமத்திற்கு நெருக்கத்தில்  வரவிருக்கும் ஈஸா (அலைஹி)என்பதாகவும் வாதிட்டான். 

இவன் தன்னை மஹ்தியாகவும்,ஈஸா (அலைஹி)ஆகவும் நிறுவுவதற்கு சில குர்ஆன் ஆயத்துக்கள்,ஹதீஸ்களை மாற்றியும்,திரித்தும் உளறி வந்தான்.

துவக்கத்தில் இவன் டெல்லியில் கல்வி கற்ற இஸ்லாமிய இளைஞர்களை குறி வைத்தான்.அவர்களிடம் இவனின் சித்து வேலைகள் பலிக்காததால் டெல்லியின் பாமர,எளிய ஏழை இஸ்லாமிய இளைஞர்களை ஏமாற்றி தன் ஆதரவாளர்களாக ஆக்கினான்.

ஆனால் சில நாட்களிலேயே இவனின் வழிகெட்ட கொள்கையை புரிந்து கொண்ட ரோஷமுள்ள இஸ்லாமியர்கள் இவனுக்கு நெருக்கடி கொடுத்து டெல்லியை விட்டே விரட்டி விட்டனர். அங்கிருந்து சென்றவன் மகாராஷ்டிராவின் ஔரங்காபாத் மாவட்டத்தில் நிரந்தரமாக குடியேறினான்.அங்கே அவன் கணிசமான மக்களை  முர்தத்துகளாக மாற்றிவிட்டான்.


ஷகீலிகளின் வழிகெட்ட கொள்கைகள்:


1)தஜ்ஜால் வந்து விட்டான்,அவன் வேறு யாருமில்லை,அமெரிக்கா ஃபிரான்ஸ்  இவ்விரு நாடுகள் தாம் தஜ்ஜால் ஆகும்.

அதற்கு இவர்களின் ஆதாரம் தஜ்ஜால் தலையில் "காபிர்" என்று எழுதப்பட்டிருக்கும்.

இந்த இரு நாடுகளின் பெயர்களையும் அரபி மொழியில் சேர்த்து எழுதினால்  (امریکا فرانس)

அமெரிக்காவின் கடைசியில்  வரும் காஃப்,அலிஃப் மற்றும் ஃபிரான்ஸின் ஆரம்பத்தில் வரும் ஃபா,ரா இவற்றை சேர்த்து படித்தால்  காஃபிர் என்று வருகிறதல்லவா அதனால் அமெரிக்கா,ஃபிரான்ஸ் இருநாடுகளும் தான் தஜ்ஜால்.

"தஜ்ஜால் ஒற்றை கண் உடையவன்" என்ற ஹதீஸுக்கு இவர்களின் விளக்கம் "சாட்டிலைட்.." , 

ஒரு அறிவிப்பில் "தஜ்ஜாலுடன் ஒரு கழுதை இருக்கும்" என்பதன் விளக்கம் "போர் விமானம்" என்றும், இதைப் போன்ற வேறு சில விஷயங்களையும் இவர்கள் சொல்கிறார்கள்.

2)தஜ்ஜால் வந்துவிட்டதனால் மஹ்தியும்,ஈஸா(அலை)யும் வந்துவிட்டார்கள்,அவரே ஷகீல் இப்னு ஹனீஃப் ஆவார்.(ماہ نامہ دارالعلوم :مارچ2016)

ஷகீல் பின் ஹனீஃப் என்பவன் இமாம் மஹ்தியாக,ஈஸா(அலை)ஆக இருக்க தகுதியற்றவன் என்பதை நிரூபிக்கும் தெளிவான ஆதாரங்கள் பின்வருமாறு...


ஹதீஸ்களில் குறிப்பிட்டுள்ள கியாமத்திற்கு நெருக்கத்தில் வரவிருக்கும் இமாம் மஹ்தி(ரலி)அவர்களின் அடையாளங்கள்.


1)இமாம் மஹ்தி (ரலி) அவர்களின் பெயர் "முஹம்மது"(அபூதாவூத்,கிதாபுல் மஹ்தி)

2)இமாம் மஹ்தி (ரலி)அவர்களின் தந்தையின் பெயர் "அப்துல்லாஹ்"(அபூதாவூத்,கிதாபுல் மஹ்தி)

3)இமாம் மஹ்தி(ரலி)நபி ஸல் அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி)அவர்களின் வம்சத்தை சார்ந்தவராக இருப்பார்கள். (அபூதாவூத்,கிதாபுல் மஹ்தி)

4)மக்கள் தன்னை  கலீஃபாவாக தேர்ந்தெடுத்து விடுவார்கள் என்று அஞ்சி இமாம் மஹ்தி(ரலி)மதினாவிலிருந்து மக்காவிற்கு விரைந்து சென்று விடுவார்கள்.(அபூதாவூத்,கிதாபுல் மஹ்தி

5)மக்களின் வலியுறுத்ததினால் இமாம் மஹ்தி(ரலி)அவர்கள் ஹஜ்ருல் அஸ்வத் மேலும் மகாமே இப்ராஹீமிற்கு நடுவில் இருந்து கொண்டு பைஅத் பெறுவார்கள்.(அபூதாவூத்,கிதாபுல் மஹ்தி)


பொய்யன் ஷகீல் பின் ஹனீஃப்.

1)இவன் பெயர் "ஷகீல்" ஆகும்.

2)இவனுடைய தந்தையின் பெயர் "ஹனீஃப்"ஆகும்.தந்தையின்றி அதிசயப்பிறவியாக பிறக்கவில்லை.

3)"இன்றைய காலகட்டத்தில் வம்சாவளிக்கான எந்த ஒரு ஆதாரமும் கிடையாது"

என்று இவன் கூறுவதின் மூலம் தன்னுடைய வம்சம் என்னவென்று தெரியவில்லை என்பதை ஒப்புக்கொண்டான்.

4)இவன் வானத்திலிருந்து திமிஷ்கில் உள்ள வெள்ளை மினாராவின் மீது இறங்கி வந்தவன் அல்லன்.மாறாக ஹனீஃப் என்பவனுக்கு மகனாக பிறந்தவன்.

5)இவன் மக்கா, மதினாவை இதுவரை கண்டதில்லை.

5)இவன் தன்னை மஹ்தி என்பதாக டெல்லியிலுள்ள லஷ்மி நகரில் இருந்து அறிவிப்பு செய்து பொய்யான பைஅத்தை செய்து கொண்டு இருந்தான்.

6)இவன் "Android Phone"னை தஜ்ஜால் என்பதாக கூறுகிறான்.அப்படி பார்த்தால் இவனின் கூற்றுப்படி இவர்களே"Android Phone"னை பயன்படுத்துவதின் மூலம் நாங்கள் தஜ்ஜாலுடைய அணியை சேர்ந்தவர்கள் என்பதாக ஒப்புக்கொள்கிறார்கள். 

மேலே ஹதீஸ்களில் குறிப்பிட்டுள்ள இமாம் மஹ்தி(ரலி)அவர்களின் அடையாளங்களில் ஒரு அடையாளம் கூட இவனுக்கு பொருந்தவில்லை என்றால் இவன் எவ்வாறு இமாம் மஹ்தியாக இருக்க முடியும்?இவன் மஹ்தியாக தன்னை வாதிடுவதில் மகா பொய்யன் என்பது நிரூபணமாகிறது.


ஹதீஸ்களில் குறிப்பிட்டுள்ள கியாமத்திற்கு நெருக்கத்தில் வரவிருக்கும் ஹழ்ரத் ஈஸா(அலை)அவர்களின் அடையாளங்கள். 


1)ஹழ்ரத் ஈஸா(அலை)அவர்களின் பெயர் "ஈஸா".(சூரா ஆல இம்ரான்-45/சூரா மர்யம்-34)

2)ஹழ்ரத் ஈஸா(அலை)அவர்கள் தந்தையின்றி (அற்புதமாக)பிறந்தார்கள்.(சூரா மர்யம்-16 To 34)

3)ஹழ்ரத் ஈஸா(அலை)அவர்கள் கியாமத்திற்கு நெருக்கத்தில் வானத்திலிருந்து இறங்கி திமிஷ்கில் உள்ள வெள்ளை மினாராவை வந்தடைவார்கள்.(சூரா நிஸா-159/அபெதாவூத் பாபு குரூஜித் தஜ்ஜால்)

4)ஹழ்ரத் ஈஸா(அலை)அவர்களின் மூச்சுக்காற்று காஃபிர்களின் மீது பட்டால் இறந்துவிடுவார்கள்.அவர்களின் மூச்சுக்காற்று கண் எட்டும் தூரம் வரை வீசும்.(முஸ்லிம் பாபு திக்ருத் தஜ்ஜால்)

5)ஹழ்ரத் ஈஸா(அலை)அவர்கள்  வானத்திலிருந்து இறங்கி வந்த பிறகு "பாபுல் லுத்" என்ற இடத்தில் தஜ்ஜாலை கொலை செய்வார்கள்.(அபூதாவூத் பாபு குரூஜித் தஜ்ஜால்

மேலே  குறிப்பிட்டுள்ள ஹழ்ரத் ஈஸா(அலை) அவர்களின் அடையாளங்களில் ஒரு அடையாளம் கூட இவனுக்கு பொருந்தவில்லை.பிறகு இவன் எவ்வாறு  ஈஸா(அலை)ஆக இருக்க முடியும்?இவன்  தன்னை ஈஸா(அலை)ஆக வாதிடுவதில் மகா பொய்யன் என்பது நிரூபணமாகிறது.

எனவே ஷகீல் பின் ஹனீஃப் என்பவனை இமாம் மஹ்தியாகவும், ஈஸா(அலை)ஆகவும் ஏற்றுக்கொண்டு பின்பற்றுபவர்கள் இஸ்லாத்தை விட்டும் நீங்கிய *"முர்தத்"* கள் ஆவார்கள்.


ஷகீலிகளின் குழப்பங்கள், ஓர் அதிர்ச்சி ஆய்வறிக்கை.


புதுடெல்லி மில்லத் டைம்ஸ் பத்திரிக்கையின் ஓர் ஆய்வறிக்கை: ஷகீலிகளின் குழப்பங்கள், நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இதுவரை இந்தியாவில் சுமார்(10,000) பத்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் இவர்களின் குழப்பத்தில் சிக்குண்டு இஸ்லாத்தை விட்டும் வெளியேறி மூர்தத்துகளாக மாறி இருக்கின்றனர்.அவர்களில் 80 சதவிகிதம் பேர் தஃவத் தப்லீக் ஜமாஅத்தில் ஈடுபாடாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷகீலி சூழ்ச்சிகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் . தீஷான் அஹ்மது (பிரதிநிதி, இறுதி நபித்துவ பாதுகாப்புப் பேரவை,பாட்னா) அவர்கள் இது குறித்து மில்லத் டைம்ஸுக்கு அளித்த நேர்க்காணலில் கூறியதாவது:  பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தைச் சேர்ந்த ஷகீல் பின் ஹனிஃப் தன்னை இமாம்  மஹ்தி என்றும்,ஈஸா (அலை) என்றும் கூறிக்கொள்ளும் இவன் சமீப காலங்களில்  ஔரங்கபாத்தை தனது தலைமையகமாக மாற்றிக்கொண்டான், மேலும் அங்கு அவனைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை அறிந்துக்கொண்டவன். பல நகரங்களில், ஷகீல் பின் ஹனிஃப் தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கலீஃபாக்களை உருவாக்கிக்கொண்டான்.

இதுகுறித்து தீஷான் அஹ்மது அவர்கள் மேலும் கூறியதாவது: பீகார், பாட்னா, சீமாஞ்சல், சம்பரான் ஆகிய மாவட்டங்களில் இதுவரை 4 ஆயிரம் பேர் இவனின் சூழ்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர், பல குடும்பங்கள் இவனின் குழப்பங்களில் சிக்கி முற்றிலும் முர்தத்துகளாக மாறிவிட்டன.

மத்தியப் பிரதேசத்தின் தலை நகர் போபால் அங்கும் ஷகீலிகள் மிகவும் வலுவடைந்துவருகின்றனர், இதுவரை 2500 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அங்கு முர்தத்துகளாக மாறிவிட்டனர் , மூன்றாவது இடத்தில் உள்ள  உ.பி. ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா உள்ளிட்ட பல மாகாணங்களில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் முர்தத்துகளாக மாறியுள்ளனர்.

சமீபகாலமாக தமிழ் நாட்டிலும் ஷகீலிகள் தங்களின் மத பிரச்சாரத்தை துவங்கி இருக்கின்றனர்.சென்னை பல்லாவரம்,குரோம்பேட்டையில் ஷகீலிமதத்தினர் இஸ்லாமியர்களிடம் தங்களின் விஷமபிரச்சாரத்தை செய்துவருகின்றனர்.

ஏற்கனவே தமிழகத்தில் ஊடுருவி விட்ட "காதியானிகள்,"மற்றும் "சப்மிட்டர்ஸ் எனும் 19 குருப்பினர்,"இப்பொழுது புதிதாக முளைத்துள்ள "ஷகீலிகள்"இதுபோன்ற வழிகேடர்களிடமிருந்து இஸ்லாமியர்கள் தங்களின் ஈமானை பாதுகாப்பது தலையாயக் கடமை என்பதனை நம் சமுதாயம் உணர்ந்துக்கொள்ள வேண்டிய இக்கட்டான தருணத்தில் இருந்துக்கொண்டிருக்கின்றோம். 


ஈமானின் அந்தஸ்தென்ன?

மனிதன் சில சமயங்களில் சிறிய பாவங்களையும், சில சமயங்களில் பெரிய பாவங்களையும் செய்துவிடுகின்றான். மனிதன் எத்தகைய பெரிய பாவங்கள் செய்தாலும் உடனே  அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டு விட்டால் மன்னிக்கும் ஆற்றல் உடையவன் அல்லாஹ்.ஆனால் ஒருவன் ஈமான் கொண்ட பிறகு அதிலிருந்து விலகிச் என்றால் அது அவனது இம்மை, மறுமை வாழ்க்கை இரண்டையும் அழித்து நாசமாக்கிவிடும்.

அத்தகைய ஈமானை பறிப்பதற்காகத்தான் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த இந்த புதிய குழப்பவாதிகள் குழப்பம் செய்து வருகின்றனர். அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு இறை தூதர் வருகை இல்லை என்ற ஹதீஸை துச்சமென கருதி தன்னையே நபியென வாதிட்டு தன் பக்கம் மக்களை ஈர்க்க செய்து அவர்களின் ஈமானையே கேள்விக்குறியாக்கியுள்ளனர். இச்சமயத்தில் நம் ஈமானையும், நம்மை சார்ந்துள்ள ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தின் ஈமானையும் பாதுகாப்பது ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.


அல்லாஹ் ஈமானின் மதிப்பை  திருக்குர்ஆன் ஹிஜ்ர் சூரா ஆரம்பத்தில்..


رُبَمَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا لَوْ كَانُوا مُسْلِمِينَ

தாங்களும் முஸ்லீம்களாக இருந்திருக்க வேண்டுமே, என்று காஃபிர்கள் (மறுமையில் பெரிதும்) ஆசைப்படுவார்கள். என கூறுகிறான்.

அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கும் ஈமானின் அந்தஸ்தை நாளை மறுமையில் தான் விளங்க முடியும். மறுமையில் கெட்ட செயல்களை செய்த முஸ்லிம்களையும், இறைவனை மறுத்து வாழ்ந்த காபிர்களையும் நரகத்திற்கு அனுப்பும் போது , காபிர்கள், முஸ்லிம்களை பார்த்து கேட்பார்களாம்... நாங்கள் தான் கலிமாவை ஏற்காமல் நரகம் வந்துள்ளோம், ஆனால் நீங்கள் கலிமாவை ஏற்றும் நரகம் வந்துள்ளீர்களே? உங்களுக்கும் எங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை எனும் போது...

அல்லாஹ் மலக்குகளை அழைத்து யாருடைய உள்ளத்திலே கடுகளவு ஈமான் உள்ளதோ அவர்கள் அனைவரையும் சுவனத்திற்கு அனுப்புங்கள் என்று சொல்வான்.


இது குறித்து ஒரு ஹதீஸில்...


மறுமை நாளில் விசாரணை முடிந்த பின்) சுவர்க்கவாசிகள், சுவர்க்கத்திலும், நரகவாசிகள் நரகத்திலும் நுழைந்துவிட்ட பின் அல்லாஹ் எவருடைய உள்ளத்தில் கடுகளவு ஈமான் எனும் இறைநம்பிக்கை உள்ளதோ அவரை (நரகத்திலிருந்து) வெளியேற்றிவிடுங்கள் என்று கூறுவான். உடனே அவர்கள் கருகிய நிலையில் வெளியேறுவார்கள். அப்போது அவர்கள் கரிக் கட்டைகளாகக் காட்சியளிப்பார்கள். பின்னர் அவர்கள் நஹ்ருல் ஹயாத் எனும் (ஜீவ) நதியில் போடப்படுவார்கள். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் அல்லது வெள்ளத்தின் கருப்புக் களி மண்ணில் விதை முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) நிறம் மாறி விடுவார்கள். அந்த வித்து (விலிருந்து வரும் புற்பூண்டுகள்) மஞ்சள் நிறத்தில் (பார்ப்பதற்கு அழகாகவும், காற்றில்) அசைந்தாடியதாக(வும்) முளைப்பதை நீங்கள் கண்டதில்லையா? என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள்.    (ஆதாரம் : புகாரி)

அப்போது காபிர்கள் கைசேதப்பட்டு நாமும் ஈமானை ஏற்றிருந்தால் இன்று விடுதலை ஆகியிருப்போமே, இப்போது நிரந்தர நரகத்தை தேடிவிட்டோமே! என கையை பிசைந்து கொள்வார்கள். ஆக ஈமானின் பெருமதி நாம் மரணித்துவிட்ட பிறகு கப்ரிலும், மறுமையிலும் தான் தெரியும். எனவே அந்த ஈமானை பாதுகாக்க நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

வல்ல அல்லாஹ்,நம் ஈமானை பாதுகாத்து,வாழ்ந்து,ஈமானோடு மரணிக்கும் நல்வாய்ப்பையும்,நாயகம்ﷺ அன்னவர்களின் ஷஃபாஅத்தை பெற்ற நன்மக்களாகவும் ஆக்கி அருள்ப்புரிவானாக!ஆமீன்...


வெளியீடு : செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Thursday 1 December 2022

ஜும்ஆ பயான் 02/12/2022

அவதூறுகளை பரப்பாதீர்கள்.

ـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِيْرًا مِّنَ الظَّنِّ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ‌ وَّلَا تَجَسَّسُوْا 

(அல்குர்ஆன் 49:12)

மனித அங்க அவையங்களில் நாவு மிக ஆபத்தான உறுப்பாகும்.நாவின் விபரீதங்களை விட்டும் மனிதன் தன்னை தற்காத்துக்கொள்வதற்காக, அல்லாஹுத்தஆலா இயற்கையிலே இருஉதடு,பற்கள் என்கிற இரண்டு பாதுகாப்பு அரண்களை அமைத்திருக்கின்றான்.ஆனால் துரதிஷ்டவசமாக அவற்றை மீறி நாவினால் உண்டாகும் தீங்கை விட்டும் மனிதனால் தன்னை தற்காத்துக்கொள்ள முடிவதில்லை.

அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹ்) கூறுகின்றார்கள்:- “ஹராமான வழியில் உண்ணல், அநீதியிழைத்தல் , விபச்சாரம் செய்தல் , களவெடுத்தல், மதுபானம் அருந்துதல், தடுக்கப்பட்டவைகளில் பார்வையைச் செலுத்துதல் இதுப்போன்ற  தீய காரியங்களை விட்டும் பாதுகாப்பாக இருக்கவும், அவற்றிலிருந்து விலகிக்கொள்ளவும் ஒரு மனிதனுக்கு சாத்தியமாகவும் இலகுவாகவும் இருக்கிறது! ஆனால், அவனது நாவசைவால் ஏற்படும் தீமைகளை விட்டும் பாதுகாப்பாக இருப்பது என்பதுதான் அவனுக்குக் கஷ்டமாகிப்போய் விடுகிறது! இது ஆச்சரியமான ஒன்றாகும்!!

நாவின் தீங்குகளில் பொய்,புறம்,கோள், தீயவார்த்தைகள் இவற்றின் வரிசையில் "அவதூறு"பெரும் பாவச்செயலாகும்.

இஸ்லாத்தில் விபச்சாரம்,திருட்டு, கொலை,கொள்ளை,வட்டி போன்றைவை பெரும்பாவங்களாக,தண்டனைக்குறிய குற்றங்களாக இருப்பதைப் போன்றே "அவதூறு"பெரும் பாவமும் தண்டனைக்குறிய குற்றமுமாகும்.

வட்டியை விடவும் அவதூறு மோசமான பாவமாகும் .வட்டி சமூக தீமையாக இருந்தாலும் அதனால் நேரடியாக பாதிக்கப்படுபவர்கள் அதனோடு ஏதேனும் ஓர் விதத்தில் தொடர்பில் இருப்பார்கள்.ஆனால் அவதூறு, சம்பந்தமே இல்லாத ஒருவனின் வாழ்கையை நிர்மூலமாக்கிவிடுகின்றது.

அவதூறு தனிமனித மானத்தை பறிக்கும்.குடும்ப நிம்மதியை,வாழ்வை சீர்குழைக்கும்.சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்.

அவதூறின் துவக்கம் (சந்தேகம்) யூகம்.

யூகங்களை விட்டும் இஸ்லாம் தடுக்கின்றது,யூகங்களின் முடிவு பெரும்பாலும் தவறாகமுடிந்துவிடும். அப்பாவி மனிதன் ஒருவனின் மீது யூகமாக ஒன்றை சொல்வது பாவமாகும்.யூகம்,சந்தேகம் ஒருவரை துருவித்துருவி ஆராய்த்தூண்டும் சகமனிதனின் நன்மதிப்பை கெடுத்துவிடும்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِيْرًا مِّنَ الظَّنِّ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ‌ وَّلَا تَجَسَّسُوْا 

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; (அல்குர்ஆன் : 49:12)

புண்படுத்தாதீர்! குறைகூறாதீர்!! (துருவித் துருவி) ஆராயாதீர்!!!

وعنْ أَبي هُريْرةَ -رَضِّيَّ اللهُ عَنْهُ- أنَّ رسُول اللَّه ﷺ قَالَ: «إيًاكُمْ والظَّنَّ، فَإنَّ الظَّنَّ أكذبُ الحدِيثَ، ولا تحَسَّسُوا، وَلاَ تَجسَّسُوا وَلاَ تنافَسُوا وَلاَ تحَاسَدُوا، وَلاَ تَباغَضُوا، وَلاَ تَدابَروُا، وكُونُوا عِباد اللَّهِ إخْوانًا كَما أمركُمْ. المُسْلِمُ أخُو المُسْلِمِ، لاَ يظلِمُهُ، وَلاَ يخذُلُهُ وَلاَ يحْقرُهُ، التَّقوى ههُنا، التَّقوَى ههُنا»

பிறர் மீது கெட்ட எண்ணம் கொள்வது குறித்தும் உங்களை நான் எச்சரிக்கின்றேன். ஏனெனில் கெட்ட எண்ணம் தான் பேச்சுக்களிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதரர்களாய் இருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிப்பவர்: அபூஹுரைரா (ரலி),        (நூல்: புகாரி-5143) 

நபி ﷺஅவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் அடியார்களைப் புண்படுத்தாதீர், அவர்களைக் குறைகூறாதீர்,அவர்களின் குறைகளை (துருவித் துருவி) ஆராயாதீர். யார் குறையை (துருவித் துருவி) ஆராய்கிறாரோ அவரது குறையை (ஒன்றுவிடாமல்) அல்லாஹ் ஆராய்வான். அவன் வீட்டுக்குள் (ஒளிந்து) இருந்தபோதும் அவனைக் கேவலப்படுத்திவிடுவான். (முஸ்னது அஹ்மது).

அவதூறு என்றால் என்ன?

أَنَّ رَسُوْلَ اللّٰہِﷺ قَالَ أَتَدْرُوْنَ مَا الْغِیْبَۃِ؟ قَالُوْا، اَللّٰہُ وَرَسُوْلُہ، أَعْلَمُ، قَالَ ذِکْرُکَ أَخَاکَ بِمَا یَکْرَہُ، قِیْلَ أَفَرَأَیْتَ اِنْ کَانَ فِيْ مَا اَقُوْلُ؟ قَالَ اِنْ کَانَ فِیْہِ مَا تَقَُوْلُ فَقَدِ اغْتَبْتَہ، وَاِنْ لَمْ یَکُنْ مَا تَقُوْلُ فَقَدْ بَھَتَّہ،۔ ﴿مسلم، کتاب البر، باب تحریم الغیبۃ، ترمذی،ا بواب البر والصلۃ، باب ما جائ فی الغیبۃ﴾

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்கள், “புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்கள், “நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்“ என்று பதிலளித்தார்கள்.

அப்போது, “நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா? (புறம் பேசுதலாக ஆகும்), கூறுங்கள்” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர்  ﷺஅவர்கள், “நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான், நீர் அவரைப் பற்றிப் புறம் பேசினீர் என்றாகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டால் நீர் அவரைப் பற்றி அவதூறு சொன்னவராவீர்” என்று கூறினார்கள்.(நூல்: முஸ்லிம் 5048)

வதந்திகளை பரப்பும் சமூகவளைதளங்கள்.

சமூகவளைதளங்களான வாட்ஸ்அப் (WhatsApp),பேஸ்புக் (Facebook,) டுவிட்டர்(Twitter),இன்ஸ்டா (Instagram),யூடியூப் (YouTube) போன்வற்றில் பரப்பப்டும் செய்திகள் பெரும்பாலும் வந்ததிகளாவும், நம்பகத்தன்மையற்றவைகளாகவுமே உள்ளன.

மருத்துவகுறிப்பு,சமூகவிழிப்புணர்வு,மருத்துவஉதவி என பரப்பப்படும் எந்த செய்திகளும் அடிப்படை ஆதாரமற்ற செய்திகளாகவே வலம் வருகின்றன.சமூகத்தில் பிரபல்யமான நபரை குறித்து தவறான தகவல்களும்,பல இறப்பு செய்திகளும் கூட பல வருடங்கள் கடந்து வதந்திகளாகளாகவே உலாவருகின்றன.

தனக்கு வரும் செய்திகளையெல்லாம் அது உண்மையா?பொய்யா? என்கிற எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் அப்படியே பல குரூப்களுக்கு Forward message மீள்பதிவுகளாக அனுப்புவதை கடமையைப்போல செய்பவர்களின் மனநிலையை என்னவென்று சொல்வது.

இதற்கு சமீபத்திய ஓர் உதாரணம்.

கடந்த வாரம் சமூக வலைதளங்களில் பலரும் FIFA உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு 2022 கார்டெல் உலகக் கோப்பையைப் பார்க்க 50 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது.நான் என்னுடையதைப் பெற்றேன். இதைத் திறக்கவும் 50 GB இலவசம் என்று ஒரு பதிவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். அந்த செய்தி பொய்யானது Fake.

இரண்டாவது இது மாதிரி fake மெசேஜ் அனுப்பி உங்கள் போனில் உள்ள அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் திருடப்படலாம்... என்று தமிழக கமிஷ்னரே தொலைகாட்சியில் தோன்றி எச்சரிக்கை விடுத்தார்.

இது போன்ற பொய்யான செய்திகளால்  உங்கள் தகவல் திருடப்படலாம் என்பது  ஆதாரபூர்வமான உண்மை மேலும் இது மெசேஜில் உள்ள லிங்க்கை கிளிக் செய்தால் மோசடி செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய அரசின் இணைய பாதுகாப்பு குழு ஆலோசனை வழங்கியுள்ளது. 

அதுபோல் வரும் இணைப்பை கிளிக் செய்தால் அதில் உங்களது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கி விவரங்கள் கேட்கப்பட்டால் அதை யாரும் தர வேண்டாம் என்றும் இந்திய அரசின் இணைய பாதுகாப்பு குழு அறிவுறுத்தியுள்ளது. 

மெசேஜை கிளிக் செய்து உங்கள் தனிப்பட்ட தகவலை தந்தால் உங்களுடைய வங்கி கணக்கில் உள்ள பணம் முழுவதும் காலியாக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே இந்த மோசடியில் யாரும் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இது போன்ற போலியான மெசேஜ்களை அனுப்பப்பட்டு வருவதாகவும் இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அதுபோல் மெசஜ் வந்தால் அதை உடனடியாக டெலிட் செய்ய வேண்டும்.

மேலும் நீங்கள் சிந்திக்க இதுபோல் பல லின்ங்குகள் இதுவரை சமூக வலைதளங்களில் பரவி உள்ளது ஏன் நீங்களே இது போல் பல லின்ங்கினை ஷேர் செய்து உள்ளீர்களே மறந்து விட்டீர்களா....

ஹோண்டா பைக் இலவசம் 

ரீசார்ஜ் இலவசம் 

லேப்டாப் இலவசம் 

லாக்டவுன் ரூ 5000 இலவசம் 

10 ஜிபி இலவசம் 

என நீங்கள் ஷேர் செய்த பொய்யான வதந்தி செய்தி போல் தான் இதுவும்.

(நன்றி:அட்மின் மீடியா) 

இதுப்போன்று தனக்கு வரும் செய்திகளையெல்லாம் பரப்புபவனை நாயகம் ﷺஅவர்கள் பொய்யன் என்றார்கள்:

كَفَى بالمرءِ كذِبًا أن يحدِّثَ بِكُلِّ ما سمِعَ

الراوي :أخرجه مسلم في ((مقدمة الصحيح)) (5)، وأبو داود (4992)، وابن حبان (30) من حديث أبي هريرة

ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம். (அறிவிப்பவர்;அபூஹுரைரா (ரலி) அவர்கள்.) (நூல்: முஸ்லிம் 6)

அவதூறுகளை பரப்பி சேற்றைவாரி இரைக்கும் மீடியாக்கள்.

மீடியாக்கள்,சமூகவலைதளங்கள்,பத்திரிக்கைகளில் "இஸ்மிலாமிய அதீத மதப்பற்று" (Islamic Redicalism)، "இஸ்லாமிய தீவிரவாதம்"(Terrorism Islamic)، "இஸ்லாமிய அடிப்படைவாதம்"(Extremism Islamic)، "இஸ்லாமிய வன்முறை" (Violence Islamic)என்பனப் போன்ற அவதூறுகள் தொடர்ந்து பரப்பப்படும்  பொய்ப் பரப்புரைகள் மக்களை சிந்திக்க தூண்டுகின்றன.

உலகில் வாழும் 150கோடிகளுக்கு அதிகமான ஒட்டுமொத்த இஸ்லாமியர்கள் மீது கடந்த 20 வருடங்களாக தீவிரவாத முத்திரைக் குத்துவதற்கான பலவேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தனிமனித தவற்றை அவன் சார்ந்த சமூகம் மற்றும் மதத்தோடு தொடர்புபடுத்தி ஒட்டுமொத்த சமூகத்தையும் குற்றவாளிகளாக சித்தரிக்கும் வன்மத்தை மீடியாக்கள் கனகச்சிதமாக செய்கின்றன.

குறிப்பாக இஸ்லாமியன் ஒருவன், குற்றச்செயலுக்காக சந்தேகத்தின் பேரில் கைதிசெய்யப்பட்டாலும் அவனை "இஸ்லாமிய தீவிரவாதி"என மீண்டும்,மீண்டும் முதன்மை செய்தியாக காட்டுவதும்,அவனை சர்வதேச தீவிரவாத அமைப்புகளோடு தொடர்புடையவனாக சித்தரித்து காட்டுவதையே மீடியாக்கள் வாடிக்கையாக கொண்டிருக்கின்றன.

தி காஷ்மீர் ஃபைல்ஸ்.

THE KASMIR FILES.

திரைத்துறையும் தன் பங்குக்கு இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து சினமாக்களை தயாரிக்கின்றன.                              சமீபத்தில் வெளியான "தி காஷ்மீர் ஃபைல்ஸ்".  என்ற திரைப்படம் காஷ்மீரில் நடந்த உண்மை சம்பவம் என விளம்பரம் செய்யப்பட்டு,  முழுக்க இஸ்லாமிய வெறுப்பை உமிழும் திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்தது.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் வெளியானபோது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இந்தப் படத்தை ஆதரித்துப் பேசியதும் அதை இழிவுபடுத்தும் சதி நடப்பதாகக் கூறியதையும் தொடர்ந்து, பாஜக ஆளும் மாநிலங்களில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளித்தது மட்டுமின்றி, பாஜக முதலமைச்சர்கள் சிறப்புக் காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.

"தி காஷ்மீர் ஃபைல்ஸ்". திரைப்படம் வெறுப்புணர்வை பரப்பும் படம் என கோவா சர்வதேச திரைப்பட விழா தேர்வுக்குழு தலைவர் கூறியுள்ளார். கோவா மாநிலம் பானாஜியில் நடைபெற்ற 53வது சர்வதேச கோவா திரைப்பட விழா நேற்றுடன் நிறைவடைந்த‌து. விழாவில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான படம் என இஸ்ரேலிய எழுத்தாளரும் திரைப்பட இயக்குனருமான, தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட் விமர்சித்துள்ளார். மேலும், பிரச்சார தன்மை கொண்டதாக‌க் கூறிய அவர், "தி காஷ்மீர் ஃபைல்ஸ் ஒரு வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம்.

மிகவும் கெளரவமான இது போன்ற சர்வதேச திரைப்பட விழாவில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரையிடப்பட்டது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இந்த படத்தைப் பார்த்த எங்கள் அனைவருக்கும் மன உளைச்சலையும் தந்துள்ளது”என தன் அதிருப்தியை தெரிவித்தார்.அவரது இந்த பேச்சை சமூக வலைத்தளங்களில் பலர் பகிர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.(நன்றி:விகடன்,தினகரன்)

FIFA WORLD CUP.

இன்று இஸ்லாமிய அரபிய நாடான கத்தாரில் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கி நடைப்பெற்று வரும்   "2022 பிஃபா கால்பந்து உலகக் கோப்பை (2022 FIFA World Cup )"

தொடரை அந்நாடு மிகச்சிறப்பாக நடத்தினாலும்,அது இஸ்லாமிய நாடு என்கிற ஒரே காழ்ப்புணர்ச்சியினால் உலக மீடியாக்கள் எதிர்மறையான விமர்சனங்களை கக்கிவருகின்றன.

இஸ்லாத்தின் மீதும்,இஸ்லாமியர்களின் மீதும் சேற்றைவாரி இறைப்பதும்,அவதூறு அபாண்டமான பழிச்சுமத்துவதும் புதிதல்ல,வரலாற்றில் நல்லோர்களின் மீது அவதூறுக்கூறிய சான்றுகள் உள்ளன.

அருள்மறையாம் திருமறைக்குர்ஆனில் ஹழ்ரத் யூசுப்,ஹழ்ரத் மூஸா,அன்னை மர்யம் (அலைஹிம்),அன்னை ஆயிஷா(ரலி-அன்ஹா)ஆகிய நான்கு நல்லோர்களின் மீது கயவர்கள் கூறிய குற்றச்சாட்டுகளையும்,அதனை அல்லாஹ் பொய்யாக்கி அவர்களை அப்பழுக்கற்ற நல்லோர்கள் என்கிற  வறலாற்றுச்செய்திகள்  பதிவுச்செய்யப்பட்டுள்ளன.

அவதூறு பரப்ப பட்டால்...

ஒருவனைக்குறித்து அபாண்டமாக பழிச்சுமத்தி அவதூறு பரப்பினால் அல்லாஹுத்தஆலா பழிச்சுமத்தப்பட்டவனின் அந்தஸ்த்தை உயர்த்தி அவன் மனவேதனைக்கு பகரமாக பாவங்களை மன்னித்தும் விடுகின்றான்.எவன் அவதூறுப்பரப்பினானோ அவனை இவ்வுலகிலே இழிவுப்படுத்திவிடுகின்றான்.

மறுமையிலோ எவரை பற்றி அவதூறு பரப்பினானோ அவனின் பாவங்கள் இவன் தலை மீது சுமத்தப்படும்.

ஒரு ஹதீஸில்...

عن أبي هريرة رضي الله عنه مرفوعاً: «أتدرون من المفلس؟» قالوا: المُفْلِس فينا من لا دِرهَمَ له ولا مَتَاع، فقال: «إن المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة، ويأتي وقد شَتَمَ هذا، وقذف هذا، وأكل مال هذا، وسَفَكَ دم هذا، وضرب هذا، فيعطى هذا من حسناته، وهذا من حسناته، فإن فنيت حسناته قبل أن يُقْضَى ما عليه، أخذ من خطاياهم فَطُرِحتْ عليه، ثم طُرِحَ في النار».  

[صحيح] - [رواه مسلم

அல்லாஹ்வின் தூதர்  ﷺஅவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்கு முன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர் மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)’’ என்று கூறினார்கள்.(நூல்: முஸ்லிம் 5037)

குர்ஆனில்...

اِنَّ الَّذِيْنَ جَآءُوْ بِالْاِفْكِ عُصْبَةٌ مِّنْكُمْ‌  لَا تَحْسَبُوْهُ شَرًّا لَّـكُمْ‌  بَلْ هُوَ خَيْرٌ لَّـكُمْ‌  لِكُلِّ امْرِىٴٍ مِّنْهُمْ مَّا اكْتَسَبَ مِنَ الْاِثْمِ‌  وَالَّذِىْ تَوَلّٰى كِبْرَهٗ مِنْهُمْ لَهٗ عَذَابٌ عَظِيْمٌ‏

எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு.(அல்குர்ஆன் : 24:11)

அவதூறான செய்தியை செவியுற்றால்...

لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ ظَنَّ الْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بِاَنْفُسِهِمْ خَيْرًاۙ وَّقَالُوْا هٰذَاۤ اِفْكٌ مُّبِيْنٌ‏

முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் - இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, “இது பகிரங்கமான வீண் பழியேயாகும்” என்று கூறியிருக்க வேண்டாமா?       (அல்குர்ஆன் : 24:12)

يَعِظُكُمُ اللّٰهُ اَنْ تَعُوْدُوْا لِمِثْلِهٖۤ اَبَدًا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‌‏

நீங்கள் (திடமாக) முஃமின்களாகயிருப்பின் நீங்கள் இது போன்ற (பழி சுமத்துவ)தின் பால் மீளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்கு போதிக்கிறான்.  (அல்குர்ஆன் : 24:17)

அவதூறு பரப்புவோருக்கு தண்டனை.

وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ يَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِيْنَ جَلْدَةً وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا‌  وَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۙ‏

எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.        (அல்குர்ஆன் : 24:4)

இதிலிருந்தே இஸ்லாம் அவதூறு பரப்புவதை எத்தகைய ஒழுக்கக்கேடான குற்றமாகப் பார்க்கிறது என்பதை எவரும் அறியலாம்.

தீமையை பரப்பாதீர்!

நன்மையானவற்றையே பரப்பவேண்டும்.ஒருவன் செய்த குற்றம் ஊர்ஜிதமாக தெரிந்தாலும் கூட அதனை ஊரெல்லாம் பரப்பிக்கொண்டு திரிவது முஃமினுக்கு அழகல்ல.

அசிங்கமான,அருவருப்பான செய்திகள் பரவுவதை அல்லாஹ் விரும்புவதில்லை வெறுக்கின்றான்,அதனை பரப்புபவர்களுக்கு வேதனை உண்டு என அல்லாஹ் எச்சரிக்கை விடுக்கின்றான்.

اِنَّ الَّذِيْنَ يُحِبُّوْنَ اَنْ تَشِيْعَ الْفَاحِشَةُ فِى الَّذِيْنَ اٰمَنُوْا لَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ‏

எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.          (அல்குர்ஆன் : 24:19)

அல்லாஹுத்ஆலா,அவதூறு போன்ற பெரும் பாவங்களை விட்டும் நம்மை பாதுகாப்பானாக!ஆமீன்...

வெளியீடு : செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.



Featured post

ஜும்ஆ பயான் 24/05/2024

நிகாஹ் எனும் திருமணம் நிகாஹ் என்பது இஸ்லாமிய நெறிகளில் ஒன்று  என்று அறிமுகப்படுத்தாமல் மனிதப்படைப்பு மற்றும் அவனின் உருவாக்கத்தின் துவக்கம்த...