Wednesday, 27 October 2021

ஜும்ஆ பயான் 29/10/2021 ஹிஜ்ரி 1443 பிறை -22

  

நபி (ஸல்) அவர்களின் சீர்த்திருத்த பணிகள்.

அல்லாஹ்வின் வாக்கு....

وَمَا كَانَ رَبُّكَ لِيُهْلِكَ الْقُرٰى بِظُلْمٍ وَّاَهْلُهَا مُصْلِحُوْنَ‏ 

(நபியே!) ஓர் ஊராரை, அவ்வூரார் சீர்திருந்திக் கொண்டிருக்கும் நிலையில் - அநியாயமாக உம் இறைவன் அழிக்கமாட்டான்.(அல்குர்ஆன் : 11:117)

நபியின் அருள்மொழி....

يَسِّرُوا ولا تُعَسِّرُوا، وبَشِّرُوا، ولا تُنَفِّرُوا

இலகுவாக்குங்கள்; சிரமத்தைக் கொடுக்காதீர்கள். மேலும் நல்லவற்றையே சொல்லுங்கள். சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்; வெறுப்பூட்டாதீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி 69)

நபியின் சமூக தீர்திருத்தம்.

நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் இப்பூலகில் அவதரித்த அவ்வேளையில் அரபகத்தில் அறியாமை இருள் சூழ்ந்திருந்தது என்கிறது வரலாறு.

ஆனால் உண்மை நிலை அரபகம் மட்டுமல்ல உலகம் முழுவதுமே அநீதம்,அநியாயம்,அட்டூழியம் எனும் இருளால் தத்தளித்துக்கொண்டிருந்தது.

இந்தியா போன்ற நாடுகளில் உயர்ஜாதி,கீழ்ஜாதி,தாழ்ந்த ஜாதி என்று  வர்ணாசிரமம் பேசும் வர்க்கபேதமும் ஜாதிவெறியும்,

மேலைநாடுகளில் வெள்ளையர்,கருப்பர் என நிறப்பாகுபாட்டை தூக்கிப்பிடிக்கும் நிறவெறியும்,

அரபகத்தில் குறிப்பாக அரபி,அஜமி எனும்(அரபியல்லாத மற்ற மொழி பேசுபவர்களை ஊமையர்கள் எனக்கூறும்) இனவெறியும்,மொழிவெறியும் பரவியிருந்த அறவே மனிதம் அற்ற காலமாக இருந்தது.

வேதக்காரர்களான (அஹ்லே-கிதாபுகளான)யூத,கிருத்துவர்களின் வாழ்க்கையோ இன்னும் தரம் தாழ்ந்திருந்தது.

யூதர்கள்:தங்களை கடவுளின் குழந்தைகள் என்றும் மற்றவர்கள் வாழதகுதியற்றவர்கள் என்றும் கூறி அட்டூழியம் புரிந்துக்கொண்டிருந்தனர்.

கிருத்துவர்களோ:இறைவேதமான இன்ஜீலை (பைபிள்)தங்களின் மனோஇச்சைக்கு தோதுவாக திரித்தும்,மாற்றியும் எழுதி தம் மனம்போனப் போக்கில் வாழ்வை கழித்துக்கொண்டிருந்தனர்.

சுருக்கமாக:பதிநான்காம் நூற்றாண்டில் ஓர் நல்ல இனத்தையோ,சமூகத்தையோ,சிறந்த ஆட்சியாளரையோ,ஆட்சியையோ,நல்ல சமூகத்தை கட்டமைக்கும் தலைவரையோ உலகெங்கிலும் எங்குமே கண்பது வெறும் கனவாக மட்டுமே இருந்தது.

அகிலமெல்லாம் அறியாமை இருள் சூழ்ந்திருந்த அவ்வேளையில் அருள் ஒளிவிளக்காய் அகிலத்திற்கோர் அருட்கொடையாய் அண்ணலம் பெருமானார் (ஸல்)அவர்கள் அரபிய தீபகற்பத்தில் அவதரித்தார்கள்.

இறைவன் அரபகத்தை ஏன் தேர்ந்தெடுத்தான்?

நாயகம் (ஸல்)அவர்கள் முழுஉலகிற்கான,கியாம நாள் வரை உள்ள அனைவருக்குமான இறுதித்தூதர் ஆவார்கள்.அவர்களின் வருகை குறிப்பாக அரபகத்தில் நிகழ்ந்தற்கான பல்வேறு காரணங்களை விவரிக்கும் ஆய்வாளர்கள் முக்கிய காரணமாகக்கூறுவது:புவியியல் அமைப்பிலேயே அரபகம் என்பது ஆசியா,ஐரோப்பா,ஆப்ரிக்கா ஆகிய பெரும் கண்டங்களின் மத்திய பகுதியாக இருந்தது.இப்பகுதிகளை சுற்றி பல்வேறு மதங்களும்,இனக்குழுக்களும் விரவிக்கிடந்தன.

அரபகம் மத்திய பகுதியாக இருந்ததால் சுற்றியுள்ள நாட்டினர் வருவதும்,செல்வதும் சகஜமாக இருந்தது. எனவே உலகெங்கிலுமுள்ளவர்களை இஸ்லாத்தை நோக்கி அழைப்பதும்,அழைப்பு பணியைக்கொண்டுப்போய் சேர்ப்பதற்கும் உகந்த இடம் அரபகம் என்பதால் அல்லாஹ் அதை தேர்ந்தெடுத்தான்.

சீர்திருத்தத்தின் துவக்கம்.

மக்காவில்........

மக்க மாநகரில் உயர்ந்த கோத்திரம் குரைஷிக் கோத்திரத்தவர்கள்,குரைஷி கோத்திரத்தில் சிறந்த வம்சம் ஹாஷிமீ வம்சத்தார்.

நாயகம் (ஸல்)அவர்கள் குரைஷி கோத்திரத்தில் ஹாஷிமீ வம்சத்தில் பிறக்கிறார்கள்.

நாயகம் (ஸல்)அவர்கள் சீர்திருத்தப் பணியை முதலில் தனது குடும்பத்தவர்கள்,கோத்திரத்தவர்களிடம் துவங்குகிறார்கள்.

துவக்கத்தில் மக்கத்து குரைஷிகள் நபியின் தூதுத்துவத்தையும்,சீர்திருத்த பணியையும் மறுத்ததோடு அல்லாமல் மூர்க்கத்தனமாக எதிர்த்தனர்.

நெருங்கிய உறவினர்களை நேர்வழிக்கு அழைத்தல்.

وَاَنْذِرْ عَشِيْرَتَكَ الْاَقْرَبِيْنَۙ‏

“நீங்கள் உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்.” (அல்குர்ஆன் 26:214)

இவ்வசனம் அருளப்பட்டதும் நபி (ஸல்) தங்களது நெருங்கிய உறவினர்களான ஹாஷிம் கிளையாரை அழைத்தார்கள். அவர்களுடன் முத்தலிபின் வமிசத்தில் சிலரும் சேர்ந்து மொத்தம் 45 ஆண்கள் வந்தனர். நபி (ஸல்) பேசத் தொடங்கியபோது அபூ லஹப் முந்திக்கொண்டு “இவர்கள் உமது தந்தையின் சகோதரர்களும் அவர்களுடைய பிள்ளைகளுமாவர். அதை நினைவில் கொண்டு பேசு! மதம் மாறியவர்களைப் பற்றி இங்கு பேசாதே. அறிந்துகொள்! அரபியர்களில் உன்னுடைய கூட்டத்தாருக்கு எந்தவொரு வலிமையுமில்லை. உன்னை தண்டிப்பதற்கு நானே மிகத் தகுதியானவன். நீ கூறும் இந்த ஏகத்துவத்தில் நீ உறுதியாக இருந்தால், அது அரபிகளின் துணையுடன் குறைஷி குடும்பத்தினர் உன்மீது பாய்வதற்கு ஏதுவாகிவிடும். தனது தந்தையின் சொந்தக்காரர்களுக்கு உன்னைப் போல தீங்கிழைத்த எவரையும் நான் கண்டதில்லை” என்று கூறினான். இதனால் நபி (ஸல்) அச்சபையில் பேசாமல் இருந்துவிட்டார்கள்.

மக்கா வாழ்வில் நபியவர்கள் 13 ஆண்டுகள் தொடர் சீர்த்திருத்த பணியில் கடும் சிரமங்களுக்கு மத்தியில் மக்களை ஓரிறைக்கொள்கையின் பால் அழைத்ததுடனே குலப்பெருமை,நிற இனப்பாகுபாடுகளுக்கு எதிராகவும்,பெண்உரிமை,பெண்களின் கண்ணியம் காத்திடவும்,இயலாதோர்,வரியோர்களின் உரிமைகளை காத்திடவும்,  உலகில் ஒளித்த ஒரே குரல், முதல் குரல், நபியவர்களின் குரலாக இருந்தது. 

கடும் எதிர்ப்புகளுக்கிடையிலும் நபியின் சீர்த்திருத்த பணியில் தோய்வு ஏற்ப்படவில்லை.

நாளுக்கு நாள் வளர்ந்து, மக்காவை கடந்து, தாயிஃப்,யத்ரிப்(மதினா),அபிசீனியா வரை தாக்கத்தை ஏற்படுத்தியது.

மதினாவில் நபியவர்கள்...

நபி (ஸல்)அவர்களின் மக்கா வாழ்க்கை, சீர்திருத்த பணியின் அஸ்திவாரம் எனில், மதினா வாழ்க்கை அசுர வளர்ச்சி,முழுவடிவம் எனலாம்.

கல்வி,பொருளாதாரம்,குடும்பவியல், அரசியல்,அணுகுமுறை என பல்துறைகளில் மிகப்பெரும் மாற்றத்தையும்,சீர்திருத்ததையும் ஏற்படுத்தினார்கள்.நற்குணங்களின் பிறறேப்பிடமாகவும்,ஏழை எளியோர்களின் புகலிடமாகவும்,அநாதைகளின் அரவணைப்பாகவும்,பெண்கள், குழந்தைகள்,வயோதிகர்களின் ஆதரவாகவும் நபியின் சீர்த்திருத்த பணி அமைந்திருந்தது.

நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த அழகிய சீர்திருத்த வழி முறைகளில் சில......


நபியின் சீர்திருத்தம் தொழுகையில்....

முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தேன். அப்போது (தொழுதுகொண்டிருந்த) மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான் "யர்ஹமுக் கல்லாஹ்” (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக) என்று (மறுமொழி) கூறினேன். உடனே  மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான் "என்னை என் தாய் இழக்கட்டும்! நீங்கள் ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்?" என்று கேட்டேன். மக்கள் (பதிலேதும் கூறாமல்) தங்கள் கைகளால் தொடைகள் மீது தட்டினர். என்னை  அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்று நான் அறிந்துகொண்டு அமைதியாகி விட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் என் தந்தையும் என் தாயும் நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்- (பின்வருமாறு அறிவுரை) கூறினார்கள். அவர்களுக்கு முன்னரோ பின்னரோ அவர்களைவிட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் (என் வாழ்நாளில்) கண்டதேயில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!  அவர்கள் என்னைக் கண்டிக்கவுமில்லை; அடிக்கவுமில்லை; திட்டவுமில்லை. (மாறாக,) அவர்கள், "இந்தத் தொழுகையானது, மக்களின் பேச்சுகளுக்கு உரிய நேரமன்று. தொழுகை என்பது இறைவனைத் துதிப்பதும் பெருமைப்படுத்துவதும் குர்ஆன் ஓதுவதுமாகும்" என்றோ அல்லது இதைப் போன்றோ சொன்னார்கள். (புகாரி (935),)


இரண்டு பிரிவினர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட கருத்து மோதலில் நபியின் சீர்திருத்தம்.

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

அகழ்ப் போர் (முடிந்து வந்த) தினம், நபி(ஸல்) அவர்கள், 'பனூ குறைழா குலத்தினர் வசிக்குமிடத்தை நீங்கள் அடையும் வரை (உங்களில்) எவரும் அஸ்ருத் தொழுகையைத் தொழவேண்டாம்' என்று கூறினார்கள். வழியிலேயே அஸ்ரு(த் தொழுகை) நேரத்தை அவர்கள் அடைந்தனர். அப்போது சிலர், 'பனூ குறைழாக் குலத்தினரை அடையும் வரை நாம் அஸ்ருத் தொழ வேண்டாம்' என்று கூறினர். வேறு சிலர், '(தொழுகை நேரம் தவறிப் போனாலும் தொழவேண்டாம் என்ற) அந்த அர்த்தத்தில் நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை; ('வேகமாக அங்கு போய்ச் சேருங்கள்' என்ற கருத்தில் தான் இந்த வார்த்தையைக் கூறினார்கள்) எனவே, நாம் தொழுவோம்' என்று கூறினர். நபி(ஸல்) அவர்களிடம் இரண்டு சாரார் குறித்தும் தெரிவிக்கப்பட்டபோது அவர்களில் எவரையும் அவர்கள் குறை கூறவில்லை.(ஸஹீஹ் புகாரி (4119)

குற்றம் செய்தவரிடம் நபியின் சீர்திருத்தம்...

அலீ(ரலி) அறிவித்தார்....

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் அவர்களையும் மிக்தாத் அவர்களையும் 'நீங்கள் 'ரவ்ளத்து காக்' என்னுமிடம் வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்' என்று கூறி அனுப்பினார்கள். (அவ்வாறே) நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தோடின. இறுதியில், நாங்கள் 'ரவ்ளா' எனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு (சிவிகைப்) பெண்ணைக் கண்டோம். நாங்கள் (அவளிடம்), 'கடிதத்தை வெளியே எடு' என்று கூறினோம். அவள், 'என்னிடம் கடிதம் எதுவுமில்லை' என்று கூறினாள். நாங்கள், 'ஒன்று நீயாகக் கடிதத்தை எடுத்து (கொடுத்து) விடு; இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி (சோதனையிட்டு) விடுவோம்' என்று சொன்னோம். உடனே, அவள் (இடுப்பு வரை நீண்டிருந்த) தன்னுடைய சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றோம். அதில், ஹாத்திப் இப்னு அபீ பல்தஆ அவர்கள் மக்காவாசிகளான இணைவைப்போரிடையுள்ள பிரமுகர்கள் சிலருக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (ரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்ததைக் கண்டோம். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஹாத்திபே! என்ன இது?' என்று கேட்டார்கள். ஹாத்திப்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! என் விஷயத்தில் அவரசப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷிகளில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாக இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களின் வீட்டாரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கிறார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால் மக்காவாசிகளுக்கு உபகாரம் எதையாவது செய்து, அதன் காரணத்தால் அவர்கள் என் உறவினர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று விரும்பினேன். (அதனால் அவர்கள் கேட்டுக் கொண்ட படி இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் சத்திய மார்க்கத்தை நிராகரித்தோ, (இஸ்லாத்தைத் துறந்து) வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இவர் உங்களிடம் உண்மை பேசினார்' என்று கூறினார்கள். உமர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விட என்னை அனுமதியுங்கள்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும், உமக்கென்ன தெரியும்? ஒருவேளை அல்லாஹ் பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களைப் பார்த்து, 'நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன்' என்று கூறி விட்டிருக்கலாம்' என்றார்கள். 

'என்ன (பலமான) அறிவிப்பாளர் தொடர் இது!' என்று இந்த நபிமொழியின் அறிவிப்பாளர் தொடரைக் கண்டு இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) (வியந்து) கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி (3007)

தன்னை சபித்தவரை சபித்தவருக்கு நபியின் சீர்திருத்த உபதேசம்

عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ دَخَلَ رَهْطٌ مِنَ الْيَهُودِ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا السَّامُ عَلَيْكُمْ. قَالَتْ عَائِشَةُ فَفَهِمْتُهَا فَقُلْتُ وَعَلَيْكُمُ السَّامُ وَاللَّعْنَةُ. قَالَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((مَهْلاً يَا عَائِشَةُ، إِنَّ اللَّهَ يُحِبُّ الرِّفْقَ فِي الأَمْرِ كُلِّهِ)). فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ وَلَمْ تَسْمَعْ مَا قَالُوا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((قَدْ قُلْتُ وَعَلَيْكُمْ)

நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) கூறினார் 

யூதர்களில் ஒரு குழுவினர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'அஸ்ஸாமு அலைக்கும்' (-உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சலாம்) கூறினர். அவர்கள் கூறியதைப் புரிந்துகொண்ட நான் அவர்களுக்கு 'வ அலைக்கும் அஸ்ஸலாமு வல்லஅனா (-அவ்வாறே உங்களின் மீது மரணமும் சாபமும் உண்டாகட்டும்)' என்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாளுவதையே அல்லாஹ் விரும்புகிறான்' என்று கூறினார்கள். அப்போது நான், 'இறைத்தூதர் அவர்களே! அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான்தான் 'வ அலைக்கும்' (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லிவிட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?)' என்று கேட்டார்கள். (ஸஹீஹ் புகாரி (6024)


நபி (ஸல்)அவர்களின் சீர்திருத்த பணியின் நீட்சி...

நபிகளாரின் இவ்வுலக வாழ்வு  குறைந்த காலமே என்றாலும் அவர்கள் நூற்றாண்டுகள் செய்யும் சாதனைகளையும்,சீர்திருத்ததையும் குறைந்த காலத்திலே செய்வதென்பது நபியின் தனிச்சிறப்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

மனிதத்தோல் போர்த்திய மிருங்களை மனிதப் புனிதர்களாக மாற்றியதும்,இறந்த உள்ளங்களை உயிர்ப்பெறச்செய்ததும்,வெறுப்பு, விரோதத்தை நீக்கி அன்பையும்,பாசத்தையும், பிணைப்பையும் ஏற்படுத்தியதும்.அறியாமை இருளில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்களை மீட்டு அவர்களுக்கு அறிவொளியும் புகட்டி சத்திய இஸ்லாமிய பாதையில் மடம்மாற்றியதும் நபியின் பேரற்புதமும்,வேறொருவரால் செய்யமுடியாத சாதனைகளுமாகும்.

அல்லாமா சுலைமான் நத்வி(ரஹ்)அவர்கள் கூறுகிறார்கள்:ஆதம் (அலை)அவர்கள் தொடங்கி ஈசா (அலை)வரையிலும்,உலகளவில் ஷாம்(சிரியா) முதல் இந்தியா வரை எந்த மனிதரையும் நம் நபிக்கு நிகராக காணமுடியாது.காரணம் அவர்களின் சொல்லும் செயலும் ஒன்றாக இருந்தது.

சொன்னதை தான் செய்தார்கள் செய்வதை தான் சொல்வார்கள்.அப்படி ஒரு தலைவரை வரலாறு கண்டதில்லை.

இன்றும் உலகளவில் மக்களின் சீர்திருத்ததிற்காகவும் ஈடேற்றத்திற்காகவும் பல்வேறு அமைப்புகளும்,குழுக்களும், ஜமாஅத்துகளும் முயற்சிகளை மேற்கொண்டும் இலக்கை அடையமுடியவில்லை.நபிவழியில் நடப்பதாலே ஒழிய மனித சமூகம் சிர்த்திருத்தம் பெறமுடியாது.

எனவே நபியை நேசிப்போம்,நபிவழி நடப்போம்...


வெளியீடு : -

செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...