தலைப்பு:
போதையால் சீரழியும் இளைய தலைமுறை
அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன்.
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.(அல்குர்ஆன் : 51:56)
ஆக மனித படைப்பின் நோக்கம் عبادت அல்லாஹுவை வணங்குதல் என்பது தான் முக்கியம்.
பிரிதோரிடத்தில் இதே கருத்தை வேறு விதத்தில் அல்லாஹ் ரப்புல் இஜ்ஜத விவரிக்கின்றான்.
اَلَّذِيْنَ اٰمَنُوْا وَتَطْمَٮِٕنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَٮِٕنُّ الْقُلُوْبُ
(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!(அல்குர்ஆன் : 13:28)
மனித சமூகத்தில் தீமைகளும், ஆபாசங்களும்,அசிங்கங்களும் அதிகரிக்கும் போது மனிதன் படைத்த நோக்கத்தை மறந்து,இறை வணக்கம்,இறை தியானத்தை புறம் தள்ளுவிட்டு தீய வழிகளில் சுகத்தையும்,மன அமைதியையும் தேட ஆரம்பித்து விடுகிறான்.
சில சமயங்களில் ஆடல், பாடல்,ஆபாசம்,அசிங்கம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் ஆகியவற்றில் அவன் சுகம் காண்கிறான் , சில சமயங்களில் சமூகத்தில் பரவியுள்ள பல்வேறு வகையான போதை மற்றும் பிற ஒழுக்கக்கேடுகளின் கடலில் மூழ்கி தன்னை மகிழ்விக்க முயற்சிக்கிறான். ஆனால் போதை,ஆபாசம் போன்ற சமூக தீமைகள் கடல் நீரை போன்றது. இந்தக் கடல் நீரை எவ்வளவு அதிகமாகக் குடிக்கிறானோ, அவ்வளவு அதிகமாக அவனுடைய தாகம் அதிகரிக்குமே தவிர தாகம் தீராது.
சாபத்திற்குறிய தீய போதை பழக்கவழக்கங்களும்,அதற்கான காரணிகளும்.
மாணவச் செல்வங்களை வழிகெடுக்கும் வழிகளில் ஒன்றுதான் போதைப் பொருள். மனித ஆற்றலை உருக்குலைத்து ஒன்றுக்கும் உதவாததாக மாற்றி விடுகிறது. மது, புகை, கஞ்சா, ஹெராயின், கொக்கைன், பிரவுன் சுகர், அபின், பான்பராக் போன்ற போதை வஸ்துகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. கோபுரத்தில்இருப்பவனைக் குப்பைத் தொட்டிக்கும் பூக்கடையில் இருப்பவனைச் சாக்கடைக்கும் தள்ளிவிடும். நல்ல குணத்தை நாசமாக்கி, வாழ்வு முழுவதையும் சீர்கெடுக்கும்
போதைப் பொருள்கள் அனைத்து நோய் களுக்கும் முன்னோடி என்றால் அது மிகையாகாது.
உலகளாவிய ரீதியில் 15 வயது முதல் 64 வயதுக்கு இடைப்பட்ட 243 மில்லியனுக்கும் அதிகமானோர் போதைப் பொருள்களுக்கு அடிமையாகியுள்ளனர். இதில் 80% பேர் ஆண்கள், 20% பேர் பெண்கள். கடந்த 3 ஆண்டுகளில் 6 இலட்சம் பேர் போதைப் பொருள்களினால் உயிரிழந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதைத் தடுப்பதற்கான முன்னெடுப்பாகத்தான் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ஆம் நாள் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
அதிகரித்த போதைப் பொருள் உபயோகத்தில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்
வீட்டுச் சூழலிலிருந்து பல பிள்ளைகள் போதை பழக்கத்திற்கு ஆளாகுகின்றார்கள்.தந்தை சிகரட் புகைப்பவராக இருந்தால், அந்த சிகரட்டை வாங்குவதற்கு பிள்ளையிடம் பணம் கொடுத்து வாங்கிக் கொள்கிறார்.
அந்தப் பிள்ளை தந்தையுடைய சிகரெட் பிடிக்கும் “ஸ்டைலை” பார்த்து நாளடைவில் அதனை திருட்டுத் தனமாக புகைக்க ஆரம்பிக்கின்றது.
வீட்டில் நடக்கும் விசேஷங்களின் போது பியர் மற்றும் மது உபயோகப்படுத்தப்படும் போது பிள்ளைகள் அவற்றின் ஆபத்துக்களை பொருட்படுத்தாமல் அவர்களும் பயன்படுத்த ஆரம்பிக்கின்றனர்.
வீட்டுச் சூழலில் பயன்படுத்திய போதைபொருட்களை பிள்ளைகள் நாளடைவில் சமூக சூழலில் சக தோழர்களுடன் தொடர்ந்தும் பழகிக் கொள்ள முனைகின்றனர்.
சிலவேளை வீட்டுச் சூழலில் சிகரட் புகைத்தல், மது அருந்துதல் போன்றவை இல்லாவிட்டாலும் சமூக சூழலில் அவை பயன்பாட்டில் இருக்குமாயின் அவர்கள் இலகுவில் போதைக்கு ஆளாகிவிடுவார்கள். இது போன்ற காரணங்களால் சீரழியும் இளைஞர் சமுதாயம் அதிலிருந்து வெளியேற வேண்டும். அதற்க்கு பெற்றோர்களின் அன்பும் அரவணைப்பும் அவசியம்.
குடும்பத்தில் எல்லா பிள்ளைகளிடமும் பெற்றோர்கள் சரி சமமான அன்பு பாசம் காட்டி அரவணைக்க வேண்டும்.
தாழ்வு மனப்பான்மை வளர விடாமல் காத்துக் கொள்ள வேண்டும். பெற்றோரிடம் உரிய அன்பும் அரவணைப்பும் கிடைக்காத சந்தர்ப்பத்தில் பிள்ளைகள் தங்களுக்கு ஏற்படும் மன முறிவை போக்க போதையை பயன்படுத்தி தீர்வு காண முனைகின்றனர்.
வாழ்வை நரகமாக்கக்கூடிய ஒரு சமூக தீமை பல்வேறு போதைப் பொருட்கள் பரவ காரணமாக அமைந்துவிடுகின்றது.
சிறுபிராயத்திலேயே இந்த சாபக்கேடான பழக்கம் பரவுவதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு
ஒன்று கூட நட்பு மற்றொன்று மட்டற்ற சுதந்திரம்
பொதுவாகவே சிறுவர்கள்,இளைஞர்கள் சிகரெட்,போதை இதுபோன்ற தீய பழக்கவழக்கங்களுக்கு ஆளாவது தீய நண்பர்களின் பழக்கவழக்கத்தினால் ஏற்படுகின்றது.
முதலில் நண்பர்களோடு சேர்ந்து பீடி,சிகரெட் என்று துவங்கும் தீய பழக்கம் நாளடைவில் மது,போதை போன்ற போதைப் பொருட்களுக்கு அவர்களை அடிமை ஆக்கிவிடுகின்றது.
இளைஞர்களே இலக்கு
போதைப் பொருள்கள் தூளாக, மாத்திரைகளாக, ஊசிகளாக பல வடிவங்களில் வருகிறது. மாணவப் பருவம் எதையும் செய்து பார்த்து விடலாம் என்று நினைக்கும் பருவம் என்பதால் பெரும்பாலும் பள்ளி மாணவர்களும் இளைஞர்களுமே இலக்காகின்றனர். உடல் வலிமைமிக்க இப்பருவத்தில் இளைஞர்களின் ஆற்றல்களும் வேட்கைகளும் உணர்வுகளும், சரியான முறையில் வளப்படுத்தப்படாமல் விடப்பட்டால் அது நாட்டிற்குப் பெரும் கேடாவே அமையும் என்பதை மறுக்க முடியாத நிதர்சனம். இந்தச் சிறப்புமிக்க பருவத்தைப் போதையின் பக்கம் இழுத்துச் சென்று சீர் கெடுப்பதில் நட்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
Drugs Addiction சீரழியும் இளைஞர் சமுதாயம்
பொது வாழ்வில் ஏற்படும் போட்டி சூழலுக்கு முகம் கொடுக்க முடியாமை,சவால்களை சந்திக்க முடியாமல் தோல்வி மனப்பான்மைக்கு ஆளாகும்போது போதையை (Drugs Addiction) நாடுகின்றனர்.
பரீட்சையில் தோல்வி, போட்டி நிகழ்ச்சிகளில் தோல்வி,படிப்பு ஏறவில்லை எனும்போது அவற்றுக்கு தீர்வாக போதையினை நாடுகின்றனர்.
இதுபோன்ற காரணிகளுக்கு உடந்தையாக மீடியாக்கள் செயற்படுவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
மீடியாவின் போதைக்கு ஆதரவான பிரச்சாரம்.
எந்தவொரு பிரச்சினையின் போதும் அதற்கு முகம் கொடுக்க முடியாதபோது போதையை பயன்படுத்துவதையே மீடியா முக்கியமான செய்தியாக காட்சிப்படுத்துகின்றது.
காதல் தோல்வி, குடும்பத் தகராறு, வாழ்வில் தோல்வி, வேலையின்மை, விரக்தி, நண்பர்களுக்கிடையிலான உறவில் விரிசல் போன்ற காட்சிகளில் கதாநாயகன் நாடக் கூடிய முதல் தீர்வு சிகரட் புகைப்பது, மது அருந்துவது என்பதைத்தான் இந்த சினிமா மற்றும் நாடகங்களில் காட்டப்படுகின்றது.
நமது நாட்டில் போதை பொருள் Correspondence அளவுக்கு இந்தியாவில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது. பாலிவுட் நட்சத்திரங்கள் தொடங்கி பள்ளி மாணவர்கள் வரையில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக கைதாகும் செய்திகள் தொடர்ச்சியாக வந்தபடி உள்ளன.
கடந்த செப்டம்பர் மாதத்தில், குஜராத்தில் அதானி குழுமத்துக்குச் சொந்தமான முந்த்ரா துறைமுகத்தில் 3.2 டன் அளவில் ஆப்கான் ஹெராயின் பிடிபட்டது.
அதன் மதிப்பு ரூ.21,000 கோடி. இவ்வாண்டில் இதுவரையில் 6 டன்னுக்கு மேல்ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது இரு மடங்கு அதிகம் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
போதைப்பொருள் நுகர்வில் உலக சராசரி 0.7 சதவீதமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் போதைப்பொருள் நுகர்வு 2.06 சதவீதமாக உள்ளது.
இதில் கூடுதலாக கவனிக்கத்தக்க விசயம் போதைப்பொருள் நுகர்வில் மட்டுமல்ல, கைமாற்றிவிடும் இடமாகவும், விநியோக மையமாகவும் இந்தியா உள்ளது என்பதுதான்.
இந்தியாவில் முறைகேடான போதைப்பொருள் சந்தையின் மதிப்பு ரூ.30,000 கோடிக்கு மேல் என்று அனுமானிக்கப்படுகிறது.
மும்பை நகரம் இந்தியாவின் போதைப்பொருள் கடத்தலின் தலைநகரமாக திகழ்கிறது என இந்து தமிழ் நாளிதழ் குறிப்பிடுகிறது.
தற்போதைய இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்துவரும் மது, சிகரெட்போன்ற பழக்கங்கள் மிக மோசமாக வளர்ந்துள்ள நிலையில் தற்போது சில இளைஞர்கள் கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப் பழக்கத்துக்கு அடிமையாவது கொடிகட்டி பரக்க தொடங்கியுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதை மாத்திரைகள் அதிக அளவில் புழங்கிக்கொண்டிருக்கின்றன.
போதைப்பொருள்களை பயன்படுத்துபவர்களில், 10 முதல் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளாக அதிகரித்துவருகிறது.
போதை பழக்கம் மீட்பு தொடர்பான மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது.
அதேபோல் போதைப்பழக்கத்தின் விளைவாக தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த பத்தாண்டுகளில் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது.
காரணங்கள்
மகிழ்விற்காக, துக்கம், கவலை, வலி போன்றவற்றை மறப்பதற்காக, சமூக அந்தஸ்து, கெஸ்ட் மேனர்ஸ் என்று போதை பயன்பாட்டிற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இவை மேலை நாட்டு கலாச்சாரம் என்று உயர்வாகக் கருதுவதும், இத்தகைய பழக்கங்களில் இளைஞர்கள் ஈடுபடுவது தவறில்லை என்பது போல் திரைப்படங்கள் சித்திரிப்பதும், பிரச்னைகளை மறந்து நிம்மதியாக இருக்க போதை தேவை என்ற எண்ணமும் இத்தீய பழக்கங்களுக்கு மக்களை அடிமைப்படுத்துகிது.
ஒரு சமுதாயத்தின் எழுச்சியை, முன்னேற்றத்தைத் தடுப்பதாக இருந்தால் போதைப் பொருள் பயன்பாட்டை அந்த சமுதாயத்தில் லேசாகத் தூவி விட்டாலே போதும். இப்பழக்கம் சமுதாயத்திற்கு எதிராக நடத்தப்படும் சிந்தனை ரீதியான தாக்குதலாகவே பார்க்கப்படுகின்றது.
போதைப் பழக்கம் தனிமனிதனைமட்டும் பாதிக்கும் பழக்கமல்ல. குடும்பம், சமுதாயம், அந்தஸ்து, வேலை, நட்பு, உறவு வட்டம் என அனைத்தையும் பாதித்து விரிசலை ஏற்படுத்தும் பழக்கமாகும்.குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் கிடைக்காமல் அவர்களின் எதிர்காலம் பாதிப்படைகிறது. வேலையையும் பொருளாதாரத்தையும் இழப்பதால் குடும்பத்தை வறுமையின் உச்சிக்குக் கொண்டு செல்கிறது. உலகில் ஏற்படும் 60% விபத்துகள் போதையில் வாகனம் ஓட்டுவதால் தான் ஏற்படுகிறது. தனி மனித ஒழுக்கம் சீர்கெடுவதால் நாட்டின் முன்னேற்றம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. போதை ஏற்படுத்தும் அனைத்தும் தடுக்கப்பட்டது என்பது நபிமொழியாகும்.
மேற்கத்திய கலாச்சாரத்தின் நேரெதிரான இரு முகங்கள்.
ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் ஒவ்வொரு போதை தரும் வஸ்துவையும் ஹராம் என்று அறிவித்தது.
قال النبي صلى الله عليه وسلم :كل مسكر خمر وكل مسكر حرام ويقول: ما أسكر كثيره فقليله حرام
أن النبي صلى الله عليه وسلم قال: الخمر أم الخبائث، فمن شربها لم تقبل صلاته أربعين يوما، فإن مات وهي في بطنه مات ميتة جاهلية.
மதுவை அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் (نجس)தூய்மையற்றதாகவும், ஒவ்வொரு தீமைக்கும் மூலகாரணமாகவும், ஒவ்வொரு தீமைக்கும் ஆணிவேராகவும் அறிவித்துள்ளனர். .அனைத்து பாவங்களுக்கும் தாய் என்றும் அருவருக்கத்தக்க ஷைத்தானின் செயலாகவும் அறிவிக்கப்பட்டு அதன் கேடுகளைச் சொல்லி விலகியிருக்க கட்டளையிடப்பட்டுள்ளது. ஆனால் நாம் வாழும் சமூகத்தில், சுதந்திரம் என்ற பெயரில், மது மற்றும் பிற போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகின்றது .
இந்த விஷயம் மிகவும் ஆச்சரியமாகவும்,அதிர்ச்சியாகவும் உள்ளது, ஏனெனில் இந்த சமூகத்தில், மக்களை குறைந்தபட்ச தீங்குகளிலிருந்து பாதுகாக்க படிப்படியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, கட்டுமானப் பகுதிக்குச் சென்றால், பாதுகாப்பு ஹெல்மெட் அணிய வேண்டும், காரில் அமர்ந்தால், பாதுகாப்பு பெல்ட் அணிய வேண்டும், வீடுகள் மற்றும் கட்டடங்களில் பாதுகாப்பு அலாரம் உள்ளது, என்ற தலைப்பில் பாதுகாப்பு கையேடு உள்ளது. ஒவ்வொரு பணியிடத்திலும் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு வலியுறுத்தப்படுகின்றது ,
எந்தளவுக்கென்றால் ஒரு ஊசியை பயன்படுத்துவதாக இருந்தாலும் கூட பாதுகாப்பு அம்சங்களை கவனிக்கப்படுகின்றது.
போதையினால் ஏற்படும் பாதிப்புகள்
சிறு பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க இவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்ட சமூகத்தில், மதுபானம் மற்றும் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுகின்றது, இதனால் உண்டாகும் விளைவு சிறிய தீங்கு அல்ல ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் இறக்கின்றனர்,
புகையிலை,குடிப்பழக்கம் போன்றவற்றால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் பல்வேறு ஆபத்தான நோய்கள் ஏற்படுகின்றன. இறப்புகளுக்கு மூன்றாவது முக்கிய காரணம் மது அருந்துதல் மற்றும் பிற போதைபொருட்களே ஆகும்.
2006 இன் புள்ளிவிவரங்களின்படி, ஐரோப்பாவில் கல்லீரல் நோய்கள், பல்வேறு வகையான புற்றுநோய்கள் மற்றும் சாலை விபத்துக்களுக்கு அதிகப்படியான மது அருந்துதலே முக்கிய காரணம் என்கிறது, இது ஒரு வருடத்தில் சுமார் 195,000 இறப்புகளை ஏற்படுத்துகிறது.
(Source: Adapted from WHO’s Global Burden of Disease study (Rehm et al 2004), Alcohol in Europe Anderson P, Baumberg B, Institute of Alcohol Studies, UK June 2006)
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவில் மட்டும் சுமார் 80,000 பேர் குடிப்பழக்கம் மற்றும் வேறு சில போதைப் பழக்கத்தால் இறந்தனர்,
20 ஆண்டுகால வியட்நாமில் நடந்த போரில் 58,000 உயிர்கள் பலியாகியுள்ளன.ஆனால் ஒரே ஆண்டில் குடி மற்றும் போதை பழக்கத்தால் உயிரிழந்த அமெரிக்கர்கள் 80,000 பேர் என்றால் இது எவ்வளவு பெரிய சமூக தீமை என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுமார் 3 மில்லியன் மக்களைக் கொல்லும் மதுப்பழக்கம் மற்றும் வேறு சில போதைப்பொருட்களை இன்றைய உலகம் அனுமதிக்கிறது.
புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் ஆகியவற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை விட இந்த இறப்புகளின் எண்ணிக்கை அதிகம்.
உடலிலும்,மனதிலும் உண்டாகும் பாதிப்புகள்
மது மற்றும் பிற போதைப்பொருட்களின் பயன்பாடு மனிதனை மிருகங்களை விட மோசமானவனாக மாற்றி விடுகிறது.
போதைதலைக்கேரியவன் புத்திதடுமாறி மனோஇச்சை தூண்டப்பட்டு விபச்சாரத்தில் வீழ்ந்துவிடுகின்றான்.
போதைக்கு அடிமையானவரின் உடல்வலிமை பலவீனமடைகிறது, அதன் விளைவாக அவன் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறான்.
கூடுதலாக, மது மற்றும் பிற போதைப்பொருட்களின் பயன்பாடு மாரடைப்பு மற்றும் மன நோய்களை ஏற்படுத்துகின்றது, எண்ணற்ற குடும்பங்களின் அழிவிற்கு காரணமாக அமைந்துவிடுகின்றது, பெண்கள் மற்றும் குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள், மக்கள் திவாலாகிவிடுகிறார்கள், குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதினால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
போதைப்பொருள் பயன்பாடு உடலில் சிறு மூளையின் மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிப்படையச் செய்வதால் மனிதனின் நடத்தையிலும் உளவியலிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. முதலில் பாதிப்படைவது நரம்பு மண்டலம் என்பதால், மூளைக்குச் செல்லும் நரம்புகளைப் பாதித்து நினைவாற்றலைக் குறைக்கிறது. இதனால் சீரான இதயத்துடிப்பு பாதிக்கப்பட்டு இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. ஆகவே இதனை உட்கொள்கிறவர்கள் மனதளவில் தன்னம்பிக்கையை இழக்கிறான்.
மனஅழுத்தத்தை உண்டாக்கும். கோபம், உடல்சூடு அதிகமாகும். மயக்க நிலையை உண்டாக்கும். இதயம் சார்ந்த நோய்களை உருவாக்கும். புற்றுநோயைப் பரிசாகத் தரும். கல்லீரல் பாதிக்கப்படுவதால் கண்கள் மஞ்சள் நிறமாகும். இரத்தச் சுத்திகரிப்பு நடைபெறுவதைத் தடுக்கும். மூளையில் இரத்தக் கசிவை ஏற்படுத்தும். மேலும் வலிகளை உணர்வதும் தடுக்கப்படுகிறது. இவ்வாறு பலவித உடலியல் நோய்களை ஏற்படுத்தி மனிதனை முழுமையாக உருக்குலைக்கும்.
போதைப் பொருள் உபயோகிப்பதால் டோபமைன் (Dopamine) என்ற ஹார்மோன் உடலில் அதிகமாகச் சுரப்பதால் இவர்கள் ஒருவகையான இன்பத்தைப் பெறுகின்றனர். இந்த இன்பம் 3 முதல் 5 மணி நேரம் வரை நீடிக்கும். புதுவித இன்ப அனுபவத்தைத் தருவதால் தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தே இதனைப் பயன்படுத்துகின்றனர்.
தொடக்கத்தில் சக்தி அதிகரிப்பதைப் போன்ற நிலையை ஏற்படுத்தி புத்துணர்வு அளிப்பதாகத் தோன்றினாலும் போகப் போக விதவிதமான ஆரோக்கியமின்மையை ஏற்படுத்துகிறது. முதலில் ஆண்மை அதிகரித்தது போன்ற உணர்வைத் தந்தாலுமே காலப் போக்கில் அறவே ஆண்மையற்றவர்களாக ஆக்கி விடும். உடல் சோர்வு, குற்ற உணர்வு, தனிமையை நாடுதல் போன்ற அவல நிலையை உருவாக்கும். உடல் ஆரோக்கியம் பாதிப்படைவது மட்டுமின்றி சமுதாயத்திலும் குடும்பத்திலும் இத் தீய பழக்கம் ஏற்படுத்தும் பாதிப்புகள் மிக மிக அதிகம். போதைக்கு அடிமையானவர்கள் சுயகட்டுப்பாட்டை இழந்து, சுயமாகச் சிந்திக்க முடியாமல் போவதால் மனச்சிதைவு, உடல்நலக் கோளாறு, நாள்பட்ட நோய்கள், தீராத வலிகள் என பாதிப்புப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
5 முதல் 6 முறை போதைப் பொருள்களைப் பயன்படுத்தி டோபமைன் என்ற ஹார்மோன் சுரந்து அந்த இன்பத்தை உணர்ந்து விட்டால், அதற்கு அடிமையாகி விடு கின்றனர். இப்பழக்கம் அதிகரிக்கும் போது, அந்த அற்ப இன்பத்திற்காகத் திருடுதல், பொய் பேசுதல், கொலை, மானக்கேடான பாலியல் குற்றங்களையும் செய்யத் துணிகின்றனர். தான் என்ன செய்கிறோம் எதைச் செய்கிறோம் என்று அறியாமல் சமூகச் சீர்கேடுகளை விளைவிக்கின்றனர்.
நன்றி:தினமணி(13-09-2022)
ஆரோக்கியம்
ஆரோக்கியம் என்பது இறைவன் கொடுத்த அருட்கொடை. உடலின் உரிமைகளை நிறைவேற்றுவது நமது கடமையõகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு நாமே தீங்கிழைத்துக் கொள்வது பாவச் செயலாகும். இறைநம்பிக்கையின் பக்கம் மனதைத் திருப்புவதன் மூலமே இத் தீய பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆனால் மறுமையில் இது குறித்த விசாரணையும் தண்டனையும் உண்டு என்று அஞ்சுவோர் மட்டுமே இதிலிருந்து முற்றிலும் விலகிக்கொள்கின்றனர்.
போதையை தடுக்க இஸ்லாம் கூறும் அழகிய வழிகாட்டல்
மது,போதை போன்றவற்றிற்கு எதிராக அல்லாஹ்வின் கட்டளை:
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.(அல்குர்ஆன் : 5:90)
போதையின் விபரீதங்களை விவரிக்கும் குர்ஆன் வசனம்:
اِنَّمَا يُرِيْدُ الشَّيْطٰنُ اَنْ يُّوْقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ فِى الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ وَعَنِ الصَّلٰوةِ فَهَلْ اَنْـتُمْ مُّنْتَهُوْنَ
நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்குர்ஆன் : 5:91)
மது,ஆல்கஹால் மற்றும் இன்ன பிற போதைப் பொருட்கள் ஒரு நபரின் பிறப்பின் நோக்கமாகிய இறைவணங்கம்,இறைதியானம்,பிரார்த்தனை இவற்றை விட்டும் தடுக்கின்றது, இந்த விஷயங்கள் அனைத்தும் எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகின்ற لغویاتவீணான விஷயங்களில் அடங்கும்.
وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَۙ
இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.(அல்குர்ஆன் : 23:3)
நபி மொழிகளில் வருவதைப்போல...
مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكَهُ مَا لَا يَعْنِيهِ. (الترمذي، أبواب الزهد عن رسول اللّٰه)
ஒரு மனிதனின் இஸ்லாம் அழகாவது அவனுக்கு தேவைற்ற விஷயத்தை தவிர்ப்பது.
அதாவது தேவையில்லாததை விட்டுவிட வேண்டும் என்பது இஸ்லாத்தின் அழகு... எந்த ஒரு பயனற்ற செயலும்
ஆரோக்கியத்தை வீணாக்கக் கூடாது. இந்த தீங்கான விஷயங்கள் ஈமானுக்கு கேடு விளைவிப்பதாகவும் அவற்றுக்கெல்லாம் தலையாயது மது என்றும் ஷரீஅத் தெளிவாக கூறுகின்றது.
இஸ்லாம் மிக அற்புதமான வழிகாட்டுதலை வழங்குகின்றது. குற்றங்கள்,மோசமான நடத்தைகள் பற்றி மட்டும் பேசவில்லை,மாறாக இந்த குற்றங்களைத் தவிர்ப்பதற்கான தீர்வுகள்,இந்த குற்றங்களால் எழும் சிக்கல்களையும் போதிக்கின்றது. இஸ்லாம் தீமையைத் தடுப்பது மட்டுமின்றி, அதற்கு வழிவகுக்கும் வழிகளையும் தடை செய்கிறது.
மேலும், போதைக்கு வழிவகுக்கும் கெட்ட சகவாசம் மற்றும் புகைபிடித்தல், உக்காபிடித்தல் போன்ற பழக்கங்களும் கூடாது என்று அறிவிக்கப்பட்டு அவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிறார்கள் மற்றும் இளைஞர்களை போதையை விட்டும் தடுப்பதற்கான வழிகள்.
1-குழந்தைகளின் சேர்க்கைககளை(நட்புகளை)கண்காணிப்பது.
2-குழந்தைகளோடு பெற்றொர்கள் நட்பாக பழகவேண்டும்.இதனால் குழந்தைகள் தங்களின் பழக்கவழக்கங்களையும்,பிரச்சனைகளை பகிர்ந்துக்கொள்வார்கள்.
குழந்தைகளின் சகவாசத்தைக் கண்காணித்து, அவர்களுடன் அன்போடு பழகி நம்பிக்கையான உறவை வளர்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும், இதன்மூலம் அவர்களின் எண்ணங்களையும் போக்குகளையும் உணர்ந்து, சரியான நேரத்தில் வழிகாட்டி நெறிபடுத்துவதன் மூலம் அவர்களை வழிதவறாமல் காப்பாற்ற முயற்சிப்பது மிகவும்அவசியமாகும்.
கலந்துரையாடல் அவசியம்
வலி நிவாரணி மாத்திரையை போதை திரவமாக மாற்றி இளம் வயதினர் பயன்படுத்தி வருகிறார்கள். போதை மாத்திரையை சாப்பிடுவதை விட, திரவமாக மாற்றி உடலில் செலுத்தி போதைக்கு ஆளாகிறார்கள். இதை பயன்படுத்த தொடங்கிவிட்டால் தினசரி 2 முறையாவது கட்டாயம் ஊசிப்போட்டு போதை ஏற்றிக்கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு வந்து விடுகிறார்கள். மது, சாராயம் ஆகியவை கெட்ட வாடை வீசும் என்பதால் சிறுவர்கள், பெற்றோர்களிடம் சிக்காமல் இருக்க போதை ஊசியை தேர்ந்து எடுத்து சிக்கலுக்குள் மாட்டிக்கொள்கிறார்கள்.
பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து நடவடிக்கை எடுத்தால் விரைவாக போதைக்கு அடிமையாகும் சிறுவர் -சிறுமிகளை விரைவாக மீட்க முடியும். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளின் கைப்பைகளை பெற்றோர்கள் தினமும் சோதனை செய்து மாத்திரைகள், ஊசி போடும் சிரிஞ்ச் ஆகியவை இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். அவர்களின் வழக்கமாக தூக்க நேரத்தை தாண்டி தூங்குகிறார்களா? அல்லது தூக்கம் இல்லாமல் சிரமப்படுகிறார்களா? என்பதையும் பெற்றோர் பார்க்க வேண்டும். திடீர் என்று திருட்டுபழக்கம் வருவது. பொய் சொல்வது என்று புதிய பழக்கங்கள் வருகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். கைகளில் ஊசி போட்ட அடையாளங்கள் இருப்பதையும் கவனிக்க வேண்டும். குழந்தைகளிடம் பேச நேரம் செலவிட வேண்டும். அவர்களின் நண்பர்கள், தோழிகளுடனும் கலந்துரையாட வேண்டும். 17 வயது முதல் 24 வயது வரையானவர்கள்தான் போதை மாத்திரை, கஞ்சாவுக்கு அடிமையாகிறார்கள். பள்ளியில் இடைநின்ற மாணவ-மாணவிகள்தான் போதை வஸ்துகளின் வினியோகஸ்தர்களாக இருக்கிறார்கள்.
பள்ளிக்கூடங்களில் போதை கண்காணிப்பு குழுவை ஏற்படுத்தி, ஆசிரிய-ஆசிரியைகள் குழந்தைகளுடன் கலந்துரையாட வேண்டும். சந்தேகத்துக்கு உரிய மாணவனோ, மாணவியோ இருந்தால் அவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். காவல்துறையுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இளஞ்சிறார்களை பாதிக்கும் இந்த போதை அடிமைத்தனத்தில் இருந்து மீட்க இணைந்து அனைவரும் செயல்பட வேண்டியது அவசியம்.
நன்றி:தினத்தந்தி(19-05-2023)
ஒரு சமூகத்தில் போதைப்பொருள்களின் பயன்பாடு அதிகரிப்பது என்பது அந்தச் சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.அந்தச் சமூகம் வன்முறை மிக்கதாகவும், பாதுகாப்பற்றதாகவும் மாறும்.
இந்தப் புதைகுழியிலிருந்து இளைய தலைமுறையினரைக் காப்பது என்பது அவர்களின் குடும்பத்தினருக்கும் சரி, அரசுக்கும் சரி எளிதான செயல்பாடாக இருக்கப்போவதில்லை.
ஆறுமணி நேர அற்ப சந்தோஷத்திற்காக தங்கள் வாழ்கையை பணயம் வைக்கும் இளைய சமுதாயத்தினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை மீட்பது நம் அனைவரதும் பொறுப்பும், கடமையும் ஆகும்.
وَاَنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِ ۛ وَاَحْسِنُوْا ۛ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.(அல்குர்ஆன் : 2:195)
எனவே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போதை பொருள் உபயோகம் இல்லாத சமூகத்தை உருவாக்குவோம்.