Chengaiulama.in

Wednesday 14 February 2024

ஜும்ஆ பயான் 16/02/2024

தலைப்பு : அன்னையர் தினம் FEB-22

” الجنة تحت أقدام الأمهات ”

தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது” 

தாய் என்ற ஒற்றை சொல்லின் பொருளாக அளவு கடந்த அன்பு மற்றும் எண்ணிலடங்காத தியாகம் என்று சொல்ல முடியும். ஒரு தாயானவள் ஒரு குழந்தையினை பெற்றெடுத்து அதனை பாராட்டி சீராட்டி பாதுகாத்து வளர்ப்பதற்காக தன்னையே அர்ப்பணிக்கின்றாள்.

தன் உதிரத்தையே பாலாக தந்து குழந்தைகளினை வளர்க்கின்றாள். வாழ்வில் பல வலிகளை தாங்கி கொண்டு தனது குழந்தைகள் நலனுக்காக உழைக்கின்ற உயர்ந்த தியாக செயலாக இதனை கூறமுடியும்.

தாய்க்கு முதலிடம்:

عن أبي هريرة رضي الله عنه قال: "جاء رجلٌ إلى رسول الله - صلى الله عليه وسلم- فقال: يا رسول الله، من أحق الناس بحسن صحابتي؟ قال: أمّك، قال: ثمّ من؟ قال: أمّك، قال: ثمّ من؟ قال: أمّك، قال: ثمّ من؟ قال: أبوك (متفق عليه).

 ‘மனிதர்களுள் யாருக்கு நான் அதிகக் கடன்பட்டுள்ளேன்?’ இது நபித்தோழர் ஒருவரின் வினா. ‘தாய்’ என்று பதிலளித்தார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். ‘அடுத்து யார்?’ என மீண்டும் அவர் கேட்க, ‘தாய்’ என்றே கூறினார்கள். மூன்றாவது முறையாக ‘அடுத்து யார்?’ என்று கேட்டபோதும் ‘தாய்’ என்றே பதில் வந்தது. ‘அடுத்து யார்?’ என நான்காம் முறையாக அவர் கேட்க ‘தந்தை’ என்று பதிலளித்தார்கள் நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். ( அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, – புகாரீ ஷரீஃப்.)

ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு தாய்-தந்தை இருவருமே காரணம் என்பது உண்மையானாலும் தந்தையைவிட தாய்க்கே முதலிடம் வழங்குகிறது இஸ்லாம். 

தியாகத்திற்கு தாயைவிட வேறு சிறந்த உதாரணம் சொல்வது சிரமம். அவள் ஒரு குழந்தையின் பிறப்புக்காக இறப்பின் வாசல்வரை சென்று வருகிறாள; தன் உயிரைப் பணயம் வைத்துக் குழந்தையைப் பெறுகிறாள். குழந்தைக்காகத் தாய் செய்யும் தியாகம் மகத்தானது. கொஞ்ச நேரம் இளைப்பாறிக்கொள்ள ஒரு பத்து நிமிடம் மற்றொருவரின் விரகுச்சுமையைத் தாங்கி நிற்கவே ஒதுங்கிவிடுகிற இந்த காலத்தில் தொடர்ந்து பத்து மாதம் ஒரு சிசுவைத் தன் வயிற்றில் சுமப்பதென்பது எவ்வளவு பெரிய தியாகம்!

குழந்தைக்கு நோய் என்றால் தான் பத்தியம் இருக்கிறாள் என்பது மாத்திரம்அல்ல, நோய்வாய்ப்பட்ட குழந்தை மருந்து சாப்பிட விரும்பாதபோது நலமாயுள்ள தாய், தானும் அந்த மருந்தை சிறிது குடிக்கிறாள். ஏன்? தாய்க்கும் தனக்கும் ஒரே நோய்தான் என்று குழந்தை எண்ணி ஆறுதல் அடைவதற்காக. ஒரு அறிஞரின் சொல் எப்படி இருக்கிறது பாருங்கள்: ‘ஒரு தாய் தனக்கு என்னவாவெல்லாம் இருக்கிறாள் என்பதை மனிதன் கடைசிவரை உணர்வதில்லை. அவன் அதை உணரும் போது அவள் உயிரோடு இருப்பதில்லை’. சிலரது வாழ்வில் இது உண்மையும்கூட!

وَوَصَّيْنَا الْاِنْسٰنَ بِوَالِدَيْهِ‌ 

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; (அல்குர்ஆன் : 31:14)

என்று பல இடங்களில் தாய் தந்தை இருவருக்கும் அடிபணிந்து நன்றி செலுத்தி வருமாறு கூறும் அல்லாஹ், தாயின் தகுதியை தந்தையைவிட ஒருபடி மேலாக உயர்த்திச் சொல்வதற்கான காரணத்தையும் கூறுகிறான்.

حَمَلَتْهُ اُمُّهٗ وَهْنًا عَلٰى وَهْنٍ وَّفِصٰلُهٗ فِىْ عَامَيْنِ اَنِ اشْكُرْ لِىْ وَلِـوَالِدَيْكَ اِلَىَّ الْمَصِيْرُ‏

”அவனுடைய தாய் பலவீனத்தின் மேல் பலவீனம் கொண்டவளாக அவனைத் தன் கர்ப்பத்தில் சுமந்தாள், மேலும் அவன் பால்குடி மறக்க இரண்டு வருடங்கள் பிடிக்கின்றன.’ (அல் குர்ஆன் 31:14)என்று தாய் அனுபவிக்கும் துன்பத்தை தெளிவாகக் கூறகிறான். ‘பலவீனத்தின் மேல் பலவீனமாக’ என்ற அல்லாஹ்வின் கூற்இன்றைய மருத்துவ வல்லுநர்கள் கூறும் விளக்கத்தை கவனியுங்கள்:

குழந்தை தன் எலும்புகள் வளரத் தேவையான ‘கால்சியம்’ சத்தை தாயின் எலும்புகளிலிருந்து உறிஞ்சிக் கொள்கிறது. அதே போல் தனக்குத் தேவையான இரும்புச்சத்தை தாயின் இரத்தத்திலிருந்து பெற்றுக் கொள்கிறது.

தாயின் கருப்பைச் சுவர்கள் குழந்தைக்கு வேண்டிய இரத்தத்தை அதிகரிப்பதால் விரிவடைகின்றன. இதனால் தாயின் மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைகிறது. தலை சுற்றல்கூட வரும். தாயின் இதயம் கற்ப காலத்தில் மட்டும் மிக அதிகமாக இயங்குகிறது. இதனால் தாய்க்கு அதிக களைப்பு நெஞ்சுக்கரிப்பு கூட ஏற்படுகிறது.

குழந்தையின் எடை அதிகரிக்கும்போது தாயின் கீழ் முதுகில் வலி ஏற்படுகிறது. இதன் மூலம் தலைவலி, வயிற்று வலி, கால்வலி, பார்வையில் மந்த நிலை ஏற்படுகிறது.

பொதுவாக குழந்தை பெற்ற பின் தாய்மார்களில் 25 முதல் 50 சதவிகித தாய்மார்கள் மனநலக்குறைவு அடைகிறார்கள் என்கின்றனர் மருத்துவ மேதைகள். மெய் சிலிரக்க வைக்கும் தாயின் தியாகத்தை மறக்கலாமா?

பெற்றோரின் சிறப்பும் கடமையும்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என சான்றோர்கள் வணங்கத் தகுதியானவர்களின் வரிசையில் முன்னிலையில் தாய் – தந்தை ஆகிய பெற்றோர்களையே முதன்மைப்படுத்தி உள்ளனர்.

இதன் மூலம் நாம் வாழும் உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் பெற்றோர்கள் எந்த அளவு முக்கியமானவர்கள் என்பதனை உணர்ந்து கொள்ள முடியும்.

அல்லாஹ்வின் பொருத்தம் பெற்றோர் பொருத்தத்தால் ஏற்படுகிறது.

رِضى الربّ في رِضى الوالدِ، وسَخَطُ الرَبّ في سخطِ الوالدِ

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் அம்ருபின் ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் திருப்தி பெற்றோரின் திருப்தியில் உள்ளது. அல்லாஹ்வின் கோபம் பெற்றோரின் கோபத்தில் உள்ளது." (சுபுலுஸ் ஸலாம்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ்[ரலி] அறிவிக்கிறார்கள். "தமது பெற்றோருக்கு நன்மை செய்து வருவோருக்கு அல்லாஹ் சுவனத்தின் இரு வாயில்களை திறந்து வைக்கிறான். அப்பெற் றோரில் ஒருவர் மட்டுமே இருந்து [அவருக்கு நன்மை செய்து வந்தால்] சுவனத்தின் ஒரு வாயிலை அல்லாஹ் அவருக்குத் திறந்து வைக்கிறான். அப்பெற்றோரில் ஒருவர் அப்பிள்ளை மீது கோபித்து விட்டால்) அவர் பொருந்திக்கொள்ளும் வரை அல்லாஹ் அவரை பொருந்திக்கொள்ளமாட்டான். அப் பெற்றோர் அவனுக்கு அநீதம் செய்தாலுமா? எனக் கேட்கப் அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஆம் பெற்றோர் அவனுக்கு அநீதி செய்தாலும் சரியே என பதில் அளித்தார்கள். [அதபுல் முப்ரது-இமாம் புகாரி]

பொதுவாகவே பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு அநீதம் செய்யமாட்டார்கள். ஆயினும் யாராவது சிலர் அவ்வாறு பிள்ளைகளுக்கு அநீதம் செய்தாலும், பிள்ளைகள் அப்பெற் றோருக்குச் செய்யவேண்டிய மரியாதைகளையும் உபகாரங் களையும் செய்து வரவேண்டும். பதிலுக்குப் பதில் என்பது அவர்கள் விஷயத்தில் பொருந்தாது.

மேலும் பெற்றோர் மார்க்கத்திற்குப் புறம்பான தீய காரியங்கள் செய்பவர்களாக இருந்தால், அத்தீமைகளின் விளைவுகளையும், தண்டனைகளையும் அவர்களுக்கு அன்பாகவும், அறிவுப் பூர்வமாகவும், பிள்ளைகள் எடுத்துரைக்கவேண்டும். மாறாக அவர்களை துன்புறுத்தவோ, அவர்கள்மீது கடுஞ் சொற்களை வீசவோ கூடாது. மேலும் அவர்கள் அத்தீய செயல்களை விட்டு, திருந்தி வாழ வல்ல அல்லாஹுத்தஆலா விடம் பிரார்த்தனை செய்து வரவேண்டும்.

இறைத் தூதர் ஸைய்யிதுனா இப்ராஹீம் (அலை) அவர் களது தந்தை ஆஸர் என்பவர் இறைவனுக்கு இணைவைப்ப வராக இருந்தார். அதனைக் கைவிட்டு ஏக இறைவன் ஒருவனையே ஈமான் கொள்ளுமாறு அவருக்கு உபதேசம் செய் யும் நேரத்தில் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் மிகுந்த மரியாதையையும் கனிவையுமே அவரிடம் கடை பிடித்தார் அவ்வுபதேசத்தின் பொழுது தந்தை கடினமான வார்த் தைகளை அள்ளி வீசியபொழுதும் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள்

قَالَ سَلٰمٌ عَلَيْكَ‌ سَاَسْتَغْفِرُ لَـكَ رَبِّىْ اِنَّهٗ كَانَ بِىْ حَفِيًّا‏

 "எனதருமைத் தந்தையே! தங்கள் மீது இறை வணின் சாந்தி உண்டாகுக! எனது இரட்சகனிடம் தங்களுக்காக பிழை பொறுக்கத் தேடுவேன் என இதமாகவும் பொறுமையாகவும் கூறினார்கள்.

யுத்தம் செய்ய பெற்றோரின் அனுமதி.

யமன் நாட்டைச் சேர்ந்த நபரொருவர் முஹம்மத் (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வந்தார். அவரை முஹம்மத் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். ‘யமன் நாட்டில் உமக்கு உறவினர்கள் எவராவது இருக்கின்றாரா?’ என வினவினார்கள். அப்போது அந்நபர் ‘ஆம் என் பெற்றோர் இருக்கின்றனர்’ என்றார். அப்போது முஹம்மத் (ஸல்) அவர்கள் ‘நீர் இங்கு வருவதற்கு அவர்கள் அனுமதி வழங்கினாரா?’ எனக்கேட்டார். அச்சமயம் அந்நபர், ‘இல்லை.

நான் அனுமதி கேட்கவில்லையே!’ என்றார். அப்படியென்றால் நீர் திரும்பிச் செல்லும். இங்கு வரவென அவர்களிடம் (பெற்றோர்) அனுமதி கேளும். அவர்கள் அனுமதி அளித்தால் இங்கு வந்து ஜிஹாதில் கலந்துகொள்ளலாம். இல்லையெனில் அவர்களுக்குச் சேவை புரிந்த வண்ணம் இருந்து அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வீராக! எனக் கூறி அனுப்பியதாக அபூ ஸயீத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல் : அபூதாவூத்)

பெற்றோரை ஏசுவது பெரும்பாவமாகும்.

பெரும்பாவங்களில் உள்ளது தாய் தந்தையரைத் திட்டுவது என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன மாத்திரத்தில், “அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் தன் தாய், தந்தையரைத் திட்டுவானா?” என்று நபித்தோழர்கள் வினவுகின்றார்கள். “ஆம்! இவன் இன்னொருவரின் தந்தையைத் திட்டுகின்றான். உடனே அவன் பதிலுக்கு இவனது தந்தையைத் திட்டுகின்றான். இவன் அவனுடைய தாயைத் திட்டுகின்றான். உடனே அவன் இவனது தாயைத் திட்டுகின்றான். (இது இவன் நேரடியாகத் திட்டியதற்குச் சமம்)” என்று பதிலளித்தார்கள். (நூல் : முஸ்லிம்)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

மௌலானா ஆஷிக் இலாஹி புலந்சஹ்ரி அவர்கள் தமது ஹுகூகுல் வாலிதைன்'' எனும் நூலில், தான் ஒரு சரித்திர யவத்தை கேள்விப்பட்டதாக எழுதுகிறார்கள். ஒருவர் தமது வயது முதிர்ந்த தந்தையை ஒரு போர்வையில் மூட்டை யாக கட்டி கிணற்றில் தள்ளுவதற்காக தூக்கிச் சென்றார். கிணற்றோரத்தில் அம்மூட்டையைவைத்து அவரைகிணற்றில் தள்ளுவதற்கு தயாராக இருந்த நேரத்தில் மூட்டைக்குள் கட்டப்பட்டிருக்கும் அவரது தந்தை மகனை விளித்து; மகனே! என்னை இக்கிணற்றில் தள்ளாதே! வேறு ஏதாவது ஒரு கிணற்றில் தளளிவிடு. ஏனெனில் இக்கிணற்றில்தான் முன்னொரு காலத்தில் நான் எனது தந்தையை தள்ளிவிட் டேன் என்றார். இதனைக்கேட்ட அவரது மகனின் உள்ளத்தில் ஒருவித மாற்றமும், திருப்பமும் ஏற்பட்டது. தன் தந்தை யின்மீது இரக்கம் பிறந்தது. பின்னர் மூட்டையி லிருந்து அவிழ்த்துவிட்டு கண்ணியமாக விட்டிற்கு அழைத்து சென்றார்.

ஒரு காலத்தில் அவர் தமது தந்தைக்குச் செய்த அதே சதிச் செயலை இன்று அவரது மகன் அவருக்குச் செய்யமுன் வந்து விட்டான். இருப்பினும், இறைவனின் நாட்டம் அம்மனிதரைக் காப்பாற்றி விட்டது.

தந்தையைப் பார்க்கிலும் தாயின் தனிச் சிறப்பு.

ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சமூகத்திற்கு வந்து எனது அழகிய நடைமுறையைக்கொண்டு யாருக்கு அதிகம் உபகாரம் செய்ய கடமைப்பட்டுள்ளேன் என கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "உமது தாய்க்கு" எனப் பகர்ந்தார்கள். பின்னர் யாருக்கு என வினவினார் அவர் அதற்கும் "உமது தாய்க்கு" என்றார்கள். பின்னர் யாருக்கு என்றார் அப்பொழுதும் உமது தாய்க்கு என்றார்கள். பின்னர் என்றார். அப்பொழுது உமது தந்தைக்கு என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (புகாரி)

தந்தையைப் பார்க்கிலும் தாயின் சிறப்பு இரு காரணங் களால் உயர்ந்துள்ளது.

முதல் காரணம்:- 1) தாய் தனது வயிற்றில் பிள்ளையைச் சுமந்திருத்தல், பின்னர் அதனை வேதனையால் துடிதுடித்து பெற்றெடுத்தல், பின்னர் அதற்கு சில ஆண்டுகள் அமுதூட்டினாள். அதனை கண்ணுங்கருத்துமாய் வளர்த்தாள்

2. காரணம் 

وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ

‘‘தனது தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து(க் கர்ப்பத்தில்) அவனைச் சுமந்து கொண்டலைந்தாள். (பிறந்த) பிறகும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அவனுக்குப் பால் மறக்கடித்தாள். ஆகவே, நீ எனக்கும் நன்றி செலுத்து; உன் தாய் தந்தைக்கும் நன்றி செலுத்து. முடிவில் நீ நம்மிடமே வந்து சேர வேண்டியதிருக்கிறது. (அல்குர்ஆன் 31 : 14)

கைருத் தாபீயின்.

தாயின் பணிவிடை காரணமாக உவைசுல் கரனீ (ரலி) நபிகளாரைக் காண வராததும் அவரை அவர்கள் புகழ்ந்துரைத்ததும் ஹஜ்ரத் உவைசுல் கரனீ (ரலி) அவர்கள் யமன் நாட் டைச் சார்ந்த "தாபிஈ" ஆவார். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே அவர் இஸ்லாத்தில் இணைந்து விட்டார். அண்ணல் நபி (ஸல்) அவர்கள்மீது அளவு கடந்த அன்பு பூண்டவராகவும், அவர்களை தம் கண்களால் கண்டு மகிழவேண்டுமென்ற பேராவலையுடையவராகவும் இருந்தார். ஆயினும் அவர் வயது முதிர்ந்த பலவீனமான தமது தாய்க்கு தொடர்ந்து பணிவிடை செய்துவரவேண்டிய வராயிருத்ததால், திரு நபி (ஸல்) காண யமனி லிருந்து திரு மதீனத்திற்கு அவரால் வர முடியவில்லை. தான் திருமதீனா சென்று விட்டால் தாயின் பணிவிடை தடை படுமே என்ற ஒரே காரணத்திற்காக அவ்வரிய பயணத்தை அவரால் மேற்கொள்ள இயலவில்லை. அவரது பல்வேறு சிறப்பியல்களுக்குச் சான்றாக அவருக்கு "கைருத் தாபீயின்"- நாயகத் தோழர்களுக்கு சிறந்த தோழர் - எனும் சிறப்புப் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வழங்கினார்கள்.

 தாயன்பு.

 ஒரு பெண் தன் இரு பெண் மக்களுடன் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வந்து யாசகம் கேட்டு நின்றாள். அவளிடம் மூன்று பேரித்தங்கனிகளை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கொடுக்கின்றார்கள். அவற்றில் ஒன்றை தனக்கு வைத்துக்கொண்டு மற்ற இரண்டையும் தன் மகள்களுக்கு சாப்பிடக் கொடுக்கிறாள். அவற்றை அவர்கள் சாப்பிடுகின்றனர். தனக்குரியதை சாப்பிட அந்த பெண் எத்தனித்த போது அதையும் தங்களுக்குத் தரக்கேட்டு அந்தக் குழந்தைகள் அடம்பிடிக்கின்றன. எவ்வித முகச்சுழிப்புமின்றி சந்தோஷமாக அப்பழத்தை இரண்டாகப் பிளந்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்துவிட்டு அவர்கள் சாப்பிடுவதை ரசித்துக் கொண்டிருந்தாள். இந்த நிகழ்ச்சி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹாவின் மனதைப்பெரிதும் பாதித்தது. இரவில் வீடு திரும்பிய நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் இந்த நிகழ்வைக்கூற, மெய்சிலிர்த்துப் போன நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அவள் நேரடியாக சுவனம் செல்வாள்’ என்ற சுபச்செய்தியை தெரிவிக்கிறார்கள். ( அப்துல்லா இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு – முஸ்லிம் ).

” الجنة تحت أقدام الأمهات ”

தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது” என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. நாம் அனைவரும் பெற்றோரைப் பேணக்கூடியவர்களாகத் திகழ எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக, ஆமீன்..

 

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

No comments:

Post a Comment