Wednesday, 22 May 2024

ஜும்ஆ பயான் 24/05/2024

நிகாஹ் எனும் திருமணம்

நிகாஹ் என்பது இஸ்லாமிய நெறிகளில் ஒன்று  என்று அறிமுகப்படுத்தாமல் மனிதப்படைப்பு மற்றும் அவனின் உருவாக்கத்தின் துவக்கம்தான் நிகாஹ் என்கிறது அருள்மறையாம் குர்ஆன்...

يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً‌  وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ‌  اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا‏

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 4:1)

அல்லாஹுத்தஆலா இவ்வசனத்தில் தன் வல்லமை,ஆற்றலை விவரிக்கின்றான்.

அவனே மனித சமுதாயத்தை தனித்துவமான முறையில் ஒழுங்கமைத்தவன்.ஆதம்(அலை)என்கிற  மனிதனை அதன் கலிஃபா பிரதிநிதியாக ஆதாரமாக்கினான்

ஆதம் (அலை) அவர்கள் வழியாக எந்த ஒரு வெளி உதவியும் இல்லாமல், பாழடைந்த வனாந்திர பூமியான உலகத்தை  மனித  மக்கள்தொகையால் செழிப்பாக மாற்றினான், இதனால் ஒரு தனி நபராக இருந்த மனிதனை ஒரு சமூகமாக மாற்றினான்.

ஷாஹ் முஹத்திஸ் திஹ்லவீ (ரஹ்)அவர்கள் கூறுகின்றார்கள்:

அல்லாஹூத்தஆலா சில உயிரினங்களை ஜோடிகளின் அவசியமற்றதாக மண்ணிலிருந்துப் படைத்தான்.                     (எ.க புழு,பூச்சிகள்)

மற்ற பெரும்பாலான உயிரினங்களை படைக்கும் போதே மண்ணிலிருந்து ஜோடிஜோடியாக படைத்தான்.

ஆனால் மனிதனை களிமண்ணிலிருந்து படைத்ததற்கு பின்னால் அவன் ஜோடியை (இணையை)அவனிலிருந்தே (முதுகு விலா எலும்பிலிருந்து)படைத்தான்.

மனிதப் படைப்பும்,இயற்கையான ஈர்ப்பும்.

அல்லாஹுத்தஆலா மனிதனை ஆண்,பெண் என்கிற இரண்டு இனங்களாக படைத்து,இயல்பிலே ஒன்று இன்னொன்றை ஈர்க்கும் விதத்தில் அமைத்துவிட்டான். இந்த ஈர்ப்பு இருவருக்கிடையில் நெருக்கத்தையும்,அந்த நெருக்கத்தை மனித இனம் பெருகுவதற்கு காரணமாக ஆக்கினான்.

ஆண்,பெண் இருவரில் ஒருவர் மற்றவரின் துணையின்றி வாழ்வை கழிக்க முடியாது.அல்லாஹுத்தஆலா இயற்கையிலே ஒருவருக்கு மற்றவரின் துணையை நிர்பந்த தேட்டமாக ஆக்கிவைத்துள்ளான்.

ஜோடிசேருவது தங்களின் வாழ்க்கை மற்றும் வம்ச விஸ்தீரணத்திற்கு இலகுவான வழியாக்கி வைத்துள்ளான்.

இந்த இயற்கையான ஈர்ப்பு குறிப்பிட்ட சில படைப்பிற்கு மாத்திரம் அல்ல எல்லா படைப்பிற்கும் பொதுவாக்கிவைத்துள்ளான்.

மனிதர்களில் நபிமார்கள், ஸஹாபாக்கள்,தாபிஃ, தபவுத்தாபிஃ, அவ்லியாக்கள்,இமாம்கள்,வலிமார்கள்,  உலமாக்கள்,முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர்கள்.

ஊர்வன,பறப்பன,நடப்பன என எல்லா உயிரினங்களிலும் இந்த ஈர்ப்பை வைத்திருக்கின்றான்.      

ஆண்,பெண் ஈர்ப்பென்து தவறான செயலன்று,மாறாக அதுவே இயற்கையாகும்,இஸ்லாம் இந்த இயற்கை அமைப்பை சிதைக்கவோ,தடுக்கவோ இல்லை,அப்படி தடுப்பது இயற்கைகே முரணாகும்.

இஸ்லாம் முழுமையான இயற்கை போதனைகளைக் கொண்ட ஒரு மார்க்கமாகும்.

இயற்கையை அடிப்படையாகக் கொண்ட அனைத்து விஷயங்களையும் ஆதரிக்கின்றது. அதனை பின்பற்றுபவர்களிடம் இயற்கை தேவைகளை அடக்குவதற்கு அவசியமான எந்த நிர்பந்ததையும் வைப்பதில்லை.        

இயற்கையான உணர்வுகளை நிராகரிப்பது ஒருபோதும் நன்மைக்கான ஆதாரமாக இருக்க முடியாது, அத்தகைய முயற்சி எடுக்கப்படும்போதெல்லாம், ​​​​அது மோசமான பின்விளைவுகளையே ஏற்படுத்தியது. 

உலகில் மதத்தின் பெயரால் இந்த இயற்கை தேவையை மறுக்கும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு,அவை அனைத்தும் தோல்வியிலும்,குழப்பத்திலும் முடிந்தன.

அவற்றில் கிறிஸ்தவத்தின் துறவறம் முதன்மையானது, இது முஜாஹதா என்ற பெயரில் இயற்கையான தேவைகளை மறுத்து, மனநல சக்திகளை அடிபணியச் செய்து மனித இயற்கை தேவையை கடுமையாக மறுத்தது, இதன் விளைவாக அவர்களின் மதம்  உலகில் நாசம்,ஊழல் மற்றும் குழப்பங்கள்  தோன்றவே வழிவகுத்தது.

இஸ்லாம் வெட்கம், கற்பொழுக்கம்,பத்தினித்தனம்  ஆகியவற்றை மனிதனுக்கு அணிகலன்களாக அறிவித்து வலியுறுத்துகின்றது.

قال رسول الله ‏ ‏صلى الله عليه وسلم:’’إذا لم تستحی فاصنع ما شئت‘‘

கண்மணி நாயகம் ﷺஅவர்கள் சொன்னார்கள்:உனக்கு வெட்கம் இல்லையென்றால்,நீ விரும்பியதை செய்துக்கொள்.

விலைமதிப்பற்ற வெட்கம்,கற்பொழுக்கம், பத்தினித்தனம் போன்ற உணர்வுகளை பேணிப்பாதுகாத்திட, இஸ்லாமிய ஷரியத் "நிக்காஹ்" என்கிற பரக்கத் பொருந்திய  வாழ்க்கை முறையை  முன்வைக்கிறது , இதனால் கற்பொழுக்கம்,பத்தினித்தனம் ஆகியன  சாத்தியமாகின்றது. திருமண பந்தத்தில் பங்கேற்பவர்கள் தூய்மையான வாழ்க்கையை வாழ முடிகிறது.

திருமணத்திற்கும்,விபச்சாரத்திற்கும் உள்ள வேறுபாடு.

மனிதனுக்கு இயற்கையாக உண்டாகும் இச்சையை பூர்த்திச்செய்வதற்கு ஆகுமான,ஆகாத இரண்டு வழிகள் உள்ளன.

ஆகாத வழி என்பது இந்தத் தேவையை நிறைவேற்ற விரும்பும் மனிதன், ​எந்த வரைமுறையும் இல்லாமல் முழு சுதந்திரத்தோடு தான் நினைத்த விதத்தில்  நினைத்த நபர்களுடன் பூர்த்தி செய்து கொள்வது .

இஸ்லாம் இதனை கடுமையாக எதிர்க்கின்றது. இதனை ’’زنا‘‘விபச்சாரம் என்றும்  மிகப்பெரும் பாவம் என்றும் சாடுகின்றது. 

சில மணிநேரங்களுக்கு விபச்சாரத்தில் ஈடுபடுவது உண்மையில் பிரபஞ்சத்தின் படைப்பாளனான அல்லாஹ்வின்  இயற்கையான கொள்கைகளுக்கு எதிரான ஒரு கிளர்ச்சியாகும்.

இதனால் தான் நிகாஹ்(திருமணம்)என்கிற ஆகுமான ஹலாலான வழிமுறையை இஸ்லாம் வழங்கியிருக்கின்றது.

இதன் மூலம் ஆகுமான வழியில் மனித இனம் உலகில் பல்கிப்பெருகும்.

எனவே, இதுப்போன்ற (விபச்சாரம்)பாவமான உறவுமுறைக்கு எதிராக ஷரிஅத் சட்டத்தில் மிகவும் கடுமையான அணுகுமுறையை எடுத்து, தீயவர்களுக்கு கடுமையான தண்டனைகளை பரிந்துரைக்கின்றது.       

தவிர, விபச்சாரம் என்பது ஒரு பொறுப்பற்ற கீழ்த்தரமான செயலாகும், இதில் ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் தற்காலிகமாக ஏற்றுக்கொள்கிறார்கள். ஒருவரையொருவர் அனுபவித்த பிறகு ஒருவரையொருவர் மீண்டும் பார்க்க அக்கறை காட்ட மாட்டார்கள்.

இதன் விளைவாக, பெண்ணின் எந்தப் பொறுப்பையும் ஆண் ஏற்கமாட்டான், பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையில் பரஸ்பர பாசமும்,எந்த சேவை மனப்பான்மையும் இருக்காது.

இருவரும் பிரபஞ்சத்தின் இயற்கைக் கொள்கைகளை மீறும் குற்றவாளிகளாக மாறுகிறார்கள், அவர்களின் இந்த தீயச்செயல் உலகத்திற்கும் அதில் வாழும் மக்களுக்கும் கேடு விளைவிக்கும் செயலாக மாறுகின்றது.

இஸ்லாமிய ஷரீஅத், இந்த இச்சையை பாலியல் திருப்திக்கு மட்டும் மட்டுப்படுத்தவில்லை; மாறாக, அதற்கு ஒரு முழுமையான,நீடித்த வடிவத்தை அளித்து, இந்த ஒப்பந்தத்தில் இருவரையும் பிணைத்து,

இதில்  வாழ்வாதாரம், செலவினங்கள்,உடை,உணவு,உறைவிடம் ஆணின் பொறுப்பாகும்.

குழந்தையை பராமரிப்பது, பாலூட்டுதல்,நல்ல முறையில் வளர்ப்பது பெண்ணின் பொறுப்பாகும்.

வாழ்க்கையின் வலி, துக்கம், மகிழ்ச்சி, மன அழுத்தம், புத்துணர்ச்சி மற்றும் சூடான,குளிர்ச்சியான சூழ்நிலைகளை இருவரும் ஒன்றாக எதிர்கொள்ள வேண்டும், இருவரும் தங்கள் முடிவுகளில் சமமான பங்கேற்பாளர்களாக இருக்கவேண்டும், அவர்களின் ஒவ்வொரு முடிவும் அவர்கள் இருவரின் உரிமையையும் ஒவ்வொருவரும் பேணும் விதத்தில் இருக்கவேண்டும்.

திருக்குர்ஆன் இந்த கணவன் மனைவி உறவை ஒரு சிறந்த உதாரணத்துடன் விளக்கியுள்ளது.

 هُنَّ لِبَاسٌ لَّـكُمْ وَاَنْـتُمْ لِبَاسٌ لَّهُنَّ  

 அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; (அல்குர்ஆன் : 2:187)

உடலுக்கு ஆடை எவ்வளவு அவசியமோ, அதே அளவு கணவன் மனைவியின் தோழமை ஒருவருக்கு ஒருவர் அவசியம்; அதன்மூலம் அவர்கள் ஒன்றிணைந்து நேர்மையான சமுதாயத்தை உருவாக்க முடியும்.          ۔

எனவே,இஸ்லாமிய ஷரீஅத் இந்த அருவருப்பான,அசிங்கமான,சமூகத்தில் தீங்குவிளைவிக்கும் விபச்சாரத்தை முற்றிலும் நிராகரித்து

 "நிகாஹ்" என்ற உலகளாவிய எளிமையான வாழ்வியல் முறையை முன்வைக்கிறது. 

இதில் பெண்ணின் பரஸ்பர சம்மதம், பெண்ணின் பாதுகாவலர் மற்றும் இருசாட்சிகள், (மஹர்)நியாயமான உரிமை தொகையளித்து ஆண் பெண்ணை தனக்கு ஹலாலாக்கிக்கொள்கிறான்.

"நிகாஹ்"உலகில் வந்த அனைத்து நபிமார்களும் செய்த பரகத்பொருந்திய அமலாகும்.

وَلَقَدْ اَرْسَلْنَا رُسُلًا مِّنْ قَبْلِكَ وَ جَعَلْنَا لَهُمْ اَزْوَاجًا وَّذُرِّيَّةً ‌  

(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; அவர்களுக்கும் மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம்; (அல்குர்ஆன் : 13:38)

இவ்வுலகில் திருமணம் செய்யாத நபிமார்களுக்கும் நாளை மறுமையில் சுவனத்தில் திருமணம் செய்து வைக்கப்படும்.

அதேப்போன்று மறுமையில் ஈமான் என்ற பொக்கிஷத்தை அடைந்தவர்களும், திருமணம் முடித்தவர்களும்தான் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.

நிகாஹ்விற்கு பிறகு உள்ள நிலையை தான் வாழ்க்கை என்பார்கள். அதற்கு முன்பாக உள்ள நிலை வாழ்க்கை அல்ல. அது வளர்ப்பு அல்லது வளர்ச்சி மட்டும்தான். எனவே தான் ஆங்கிலத்தில் வாழ்க்கையை குறித்து சொல்லும் போது

Life is not With out Ur wife 

என்பார்கள்.

நான்கு செயல்கள் நபிமார்களின் பொதுவான சுன்னத்களாகும்: 

1- வெட்கம்

 2- வாசனை திரவியம் .

3- மிஸ்வாக்

 4- நிக்காஹ்

இந்த பரகத்தான நிகாஹ்வை கண்மனி நாயகம்ﷺஅவர்கள் தமது வழிமுறை என்றார்கள்.’’النکاح من سنتی‘‘ (مشکوٰۃ)

திருமணம் என்பது பாலியல் இச்சையை தீர்த்துக்கொள்ளும் திருப்திக்கான வழிமுறை மட்டுமல்ல; மாறாக, அது ஒரு நபரின் ஆன்மீகம், தார்மீக நெறிமுறை மற்றும் சமூக வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் (عبادت) வழிபாட்டு நிலையில் உள்ளது.

திருமணம் نکاح ஆன்மீகம்,குடும்ப வாழ்க்கை இரண்டிலும் உண்டாக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை காணலாம்.    

திருமணம் ஏன் அவசியம்?

ஒவ்வொரு மனிதனுக்கும் அல்லாஹ் இயற்கையாகவே பாலுணர்வை ஏற்படுத்தியுள்ளான். இந்த ஆசையை முறையாக அவன் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக திருமணம் என்ற முறையை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

எனவே பாலுணர்வு உள்ளவர் கட்டாயமாகத் திருமணம் முடிக்க வேண்டும். இவர் திருமணத்தைப் புறக்கணித்தால் ஒரு நேரம் இல்லாவிட்டால் இன்னொரு நேரத்தில் தவறான பாதைக்குச் சென்று விடுவார். மனிதர் ஒழுக்கத்துடன் வாழ்வதற்கு திருமணம் சிறந்த வழிமுறை என்பதால் இதை மார்க்கம் வலியுறுத்துகின்றது.

மூன்று காரியங்கள் பிற்படுத்தப்படக்கடாது.

لا تُؤخِّرْ ثلاثًا: الصلاةُ إذا أتتْ، والجنازةُ إذا حضرتْ، والأَيِّمُ إذا وَجَدْتَ لها كُفْؤًا

الراوي: علي بن أبي طالب. أخرجه الترمذي (١٧١)

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அலீ ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1.தொழுகை அதற்கான நேரம் வந்து விட்டால். (தொழுவதற்கும்)

2.ஜனாஸா ஆஜராகி விட்டால்.  (தொழுது அடக்கம் செய்யவும்)

3.பருவ வயதை அடைந்த பெண்ணுக்குத் தகுந்த வரண் கிடைத்து.

மஹர் எனும் மணக்கொடை.

وَاٰ تُوا النِّسَآءَ صَدُقٰتِهِنَّ نِحْلَةً  فَاِنْ طِبْنَ لَـكُمْ عَنْ شَىْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوْهُ هَنِيْٓــٴًـــا مَّرِیْٓـــٴًﺎ‏

“பெண்களுக்கு (மஹர் எனும்) அவர்களின் மணக்கொடைகளை மனமுவந்து கொடுத்து விடுங்கள். அவர்கள் தாமாகவே அதில் எதையேனும் உங்களுக்கு மனமுவந்து விட்டுக் கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் உண்ணுங்கள்.” (4:4)

பெண்ணுக்கான மணக் கொடை மஹர் என்று கூறப்படும். இஸ்லாமியத் திருமணத்தில் இது முக்கியமானதாகும். இன்று முஸ்லிம்களில் பலரும் பெண் வீட்டாரிடம் சீதனம் பெறுகின்றனர். இது பெரும் குற்றமாகும். இஸ்லாம் பெண்ணுக்கு ‘மஹர்’ – மணக் கொடை கொடுத்து மணமுடிக்க வேண்டும் என்று கட்டளையிடுகின்றது.

இந்த மஹர் பணமாகவும், பொருளாகவும் இருக்கலாம். சில நபித்தோழர்கள் தோட்டத்தை, தங்கத்தைக் கொடுத்து திருமணம் முடித்துள்ளனர். மணப்பெண் எதை ஏற்றுக் கொள்கின்றாளோ அதுவும் மஹராக அமையலாம்.

ஒருவர் மணமுடித்து அந்தப் பெண்ணுடன் வாழ்ந்துவிட்டு பிரிய நினைத்தால் எவ்வளவுதான் மணக்கொடை கொடுத்திருந்தாலும் அதை மீளப் பெற முடியாது.

وَاِنْ اَرَدْتُّمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍ ۙ وَّاٰتَيْتُمْ اِحْدٰٮهُنَّ قِنْطَارًا فَلَا تَاْخُذُوْا مِنْهُ شَيْئًا‌  اَ تَاْخُذُوْنَهٗ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِيْنًا‏

நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா?(அல்குர்ஆன் : 4:20)

அவ்வாரே ஒரு பெண் தனது கணவரை வேண்டாம் என்று கூறி குலா கேட்கும் பொழுது கணவர் மஹரை திரும்ப கேட்டால்  கொடுத்து விடவேண்டும். அப்படி இல்லையெனில் கொடுக்க வேண்டிய தேவையில்லை.

இஸ்லாம் விதித்த இந்த மஹர் பெண்ணினத்திற்கு இஸ்லாம் கொடுத்த உரிமைகளில் ஒன்றாகும். இதை மீறுவது குற்றமாகும். இதை மீறி பெண்ணிடம் வரதட்சணை வாங்குவது ஆண் இனத்திற்கே அவமானமாகும்!

இஸ்லாமிய அடையாளத்தை இழக்கும் ஆடம்பர திருமணம்?

اِنَّ الْمُبَذِّرِيْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّيٰطِيْنِ‌  وَكَانَ الشَّيْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا‏

நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.(அல்குர்ஆன் : 17:27)

இன்று திருமணம் என்பது சம்பிரதாயச் சடங்குகளைக் கொண்ட கோலாகல விழாவாக மாறிவிட்டது. ஐந்தே நிமிடங்களில் நடந்தேற வேண்டிய ஓர் எளிய நிகழ்ச்சி ஐந்து மாதங்கள் முதல் ஐந்தாண்டுகள்வரை தயாரிக்கப்படும் இமாலய முயற்சியாகி விட்டது.

செல்வந்தர்களுக்கு இது ஓர் ஆடம்பர விழா! நடுத்தர மக்களுக்கு ஒரு கடின விழா! எளியவர்களுக்கு ஒரு கனவு விழா எண்ணிப்பார்க்கவே உள்ளம் வெதும்புகிறது.

எப்படியெல்லாம் நடக்கிறது?

விலையுயர்ந்த மண்டபம். அல்லது ஹோட்டல். ஆடம்பர பத்திரிக்கை. வரவேற்பு நிகழ்ச்சி. வீடியோ கேமரா. வீன் பந்தாவிற்கு தயாரிக்கப்பட்ட பல்வகை உணவுகள்.

இவையனைத்திற்கும் பல லட்ச ரூபாய்கள் வீணடிக்கப்படுகின்றன. இதனால் யாருக்கும் எந்தவித பிரயோசனமும் நன்மையும் கிடையாது.மாறாக இத்தகைய திருமணத்தின் மூலம் கடன்காரன் என்ற அந்தஸ்து மட்டுமே எஞ்சுகிறது.இந்த ஆடம்பரங்களும் அநாச்சாரங்களும் நாமே நம் மீது திணித்துக் கொண்டவை. இந்தப்பல லட்ச ரூபாய்களைக் கொண்டு எத்தனையோ வாழ வழியற்ற குடும்பங்களை வாழ வைக்க முடியும் என்பதை இஸ்லாமிய சமூகம் உணரவேண்டும்.

திருமணத்தின் ஆன்மீக பயன்கள்

عَنْ عَبْدِاللَّهِ بْنِ مَسْعُودٍ : قَالَ لَنَا رَسُولُ اللَّهِ ﷺ: يَا مَعْشَرَ الشَّبَابِ، مَنِ اسْتَطَاعَ مِنْكُمُ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ، وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ؛ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ. مُتَّفَقٌ عَلَيْهِ.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் எங்களிடம், ”இளைஞர் சமுதாயமே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். அதற்கு இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு, (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்” என்று கூறினார்கள். – (ஸஹீஹ் முஸ்லிம்

இந்த ஹதீஸில் கண்மனி நாயகம்ﷺஅவர்கள் இந்த உம்மதின் இளைஞர்களுக்கு திருமணத்தின் அவசியத்தை வலியுறுத்தி,அதன்  இரண்டு முக்கிய நன்மைகளையும்  குறிப்பிட்டுள்ளார்கள்.

1-பார்வை பாதுகாப்பு 2-மறைவிடப் பாதுகாப்பு

இந்த இரண்டின் அபாயம் மிகப்பெரியதாகும்.

ஆபாசம்,அசிங்கத்தின் நிகழ்வுகள் அனைத்தும் பார்வையில் துவங்கி விபச்சாரத்தில் முடிகிறது.

உலகெங்கிலும் ஆண்,பெண் இருசாராரின் பார்வை தொடர்பு இறுதியில் விபச்சாரத்திற்கு வழிவகுக்கிறது.

நிகாஹ் எனும் திருமணத்தால் இந்த ஆபாச வலை மூடப்பட்டு (ஃபித்னா)குழப்பத்தின் ஒரு பெரிய அத்தியாயமே மூடப்படுகிறது.

ما تَرَكْتُ بَعْدِي فِتْنَةً أضَرَّ علَى الرِّجالِ مِنَ النِّساءِ.

الراوي : أسامة بن زيد | المحدث : البخاري 

கண்மனி நாயகம்ﷺஅவர்கள் கூறினார்கள்:

எனக்கு பின்னால் ஆண்களின் மீது ஏற்படும் குழப்பங்களில் பெண்களை விட மிகத்தீங்கானதை நான் விட்டுச்செல்லவில்லை.(مشکوٰۃ)

இந்த குழப்பத்தை தடுப்பதற்கான ஒரே வழி நிகாஹ் ஆகும்.திருமணம் செய்வதால் பெண்ணின் குழப்பத்தை விட்டும் தடுக்கப்பட்டு,ஈமான் பாதுகாக்கப்படும்.

قال رسول الله صلى الله عليه وسلم: إذا تزوج العبد فقد استكمل نصف الدين فليتق الله في النصف الباقي.

கண்மனி நாயகம்ﷺஅவர்கள் கூறினார்கள்:அடியான் ஒருவன் திருமண செய்வானேயானால் அவன் ஈமானில் பகுதியை பூர்த்திச்செய்துவிட்டான்,மீதமுள்ள பகுதியில் அல்லாஹ்வை அவன் அஞ்சிக்கொள்ளட்டும்(احیاء العلوم ) 

ஒரு முஸ்லிமுக்கு மிகவும் விலை மதிப்பற்ற  செல்வம் ஈமான் ஆகும். இந்த ஈமான் என்ற செல்வத்தை பாதுகாக்க نکاح  திருமணமே சிறந்த வழியாகும்.    

நல்லோர்களின் கூற்று:

மனிதனின் தீங்கு என்பது வெளிரங்க உறுப்புகளை விட மறைந்திருக்கும் இரண்டு உறுப்புகளால் உண்டாகுவதே அதிகம் ஒன்று வயிறு மற்றொன்று மர்மஸ்தானம்.

வயிறு ஹராமான சம்பாத்தியத்தின் மையப்பகுதியக உள்ளது.பியூன்கள் தொடங்கி உலகக் கந்துவட்டிக்காரர்கள் வரை, அனைவரும் தங்கள் வயிற்றில் உள்ள நெருப்பை அணைக்க வட்டி, சூதாட்டம், மோசடி, லஞ்சம்,திருட்டுப் போன்ற எல்லா குறுக்கு வழிகளையும் பயன்படுத்துகிறார்கள்.

மர்ம உறுப்பின் தீங்கிற்கு மிகப்பெரும் காரணங்கள் டீவி போன்ற மின்னணு சாதனம்,அச்சு ஊடகங்கள், விளம்பர சந்தை, மொபைல் போன்கள், ஆபாச படங்களைக் காட்சிப்படுத்துதல், ஆபாசப் பொருட்கள் எளிதாகவும் மலிவாகவும் கிடைப்பது உள்ளிட்ட அனைத்தும் பரவலான ஆபாசங்களுக்கு வழிவகைச்செய்கின்றது.

இவை அனைத்தும் மனிதனின்  இயற்கை இச்சையை காமவெறியாக  மாற்றுகின்றன.

இஸ்லாம்,திருமணத்தை எளிதாகவும் எளிமையாகவும் ஊக்குவிப்பதன் மூலம்  இந்த சோதனைகளை விட்டும் மனிதனை பாதுகாக்கின்றது.

           

நிகாஹ்வின் அவசியமும்,அதனை தாமதிக்காமல் துரிதமாக செய்வதும்.

திருமணத்தின் தேவை பருவமடைந்ததிலிருந்து தொடங்குகிறது.பசி, தாகம் எழுவது போல பாலுணர்வும் இயல்பான ஒன்றாகும்.

இதனை தாமதமாக்குவது,அறிவுக்கு முரணாகும்.

ஒரு நபர் பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும்,பாலியல் ரீதியாக சக்திப்பெற்றிருந்தால், அத்தகைய நபருக்கு திருமணம் ’’فرض‘‘ "கட்டாயம்" ஆகிறது.

இமாம் கஸ்ஸாலி (ரஹ்)அவர்கள் احیاء العلوم இஹ்யாவுல் உலூமில் எழுதுகிறார்கள்:நிகாஹ் என்பது இறையச்சமுள்ளவர்,இறையச்சமில்லதவர் அனைவருக்கு கடமையாகும்

காரணம் ஷைதான் மனித மனங்களில் ஊசலாட்டதை உண்டாக்கி வழிக்கெடுப்பான்.

الَّذِىْ يُوَسْوِسُ فِىْ صُدُوْرِ النَّاسِۙ‏

அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.(அல்குர்ஆன் : 114:5)

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்)அவர்கள் தமது மனைவி வஃபாத் ஆனதும் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்கள்.இமாம் அவர்கள் அறிவிலும்,சிந்தனையிலும் அசாதாரண குணங்களை கொண்டிருந்தார்கள். இருப்பினும் ஷைத்தானின் ஊசலாட்டத்தை விட்டும் தப்பிப்பதற்கு நிகாஹ் எனும் சுன்னத்தான வழியை தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள்.இதனால் வணக்கவழிப்பாட்டிலும்,ஆன்மீகத்திலும் ஒரு ஓர்மை ஏற்படும்.

ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)அவர்கள் கூறுகின்றார்கள்:வணக்கசாலியின் عابد வணக்க வழிப்படு நிகாஹ் அன்றி பரிபூரணமாகாது.

நிகாஹ்வினால் ஏற்படும் உடல் மற்றும் உளவியல் சார்ந்த நன்மைகள்

திருமணத்தின் நன்மை, மனித உடலிலும்,ஆரோக்கியத்திலும் பிரதிபலிக்கின்றன.சரியான வழியில் இச்சையை தீர்த்துக்கொள்வது மனஅமைதிக்கும்,உடல்ஆரோக்கியத்திற்கும் காரணமாக அமைகிறது.

இந்த இச்சையை தீர்க்கா விடின் அது மூளையை சூடாக்கிவிடும்.

அதுபோலவே, மனிதனுக்கு இடைவிடாத வேலையினால் களைப்பும், சலிப்பும் ஏற்படுவதால், இறுதியில் மன அமைதியும், மனநிறைவும், தேவைப்படும் பொழுது அவனுடைய இருண்ட மனநிலையை அன்பாகவும், புத்துணர்ச்சியாகவும் மாற்றக்கூடிய  ஆற்றல் மனைவியோடு ஒன்றுகூடுவதால் பிறக்கின்றது.

அல்லாஹுத்தஆலா  இந்த உளவியல் சங்கடத்திற்கு நிக்காஹ் மூலம் சிறந்த தீர்வைக் கொடுக்கின்றான்:

وَمِنْ اٰيٰتِهٖۤ اَنْ خَلَقَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا لِّتَسْكُنُوْۤا اِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَّوَدَّةً وَّرَحْمَةً   اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.(அல்குர்ஆன் : 30:21)

உடலுறவின் மூலம் கிடைக்கும் திருப்தியினால் மனம்,உடல் இரண்டும் நிம்மதிப்பெறுகின்றது.இது ஆண்,பெண் இருவருக்கும் அவசியத்தேவையாக இருக்கின்றது.

அல்லாஹுத்தஆலா தன் பிரத்தியேகமான அடியர்களின் துஆவை இவ்விதம் குர்ஆனில் பதிவுச்செய்கிறான்.

وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏

மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.(அல்குர்ஆன் : 25:74)

கணவன் வீட்டில் நுழையும் போது அவன் மனைவியையும்,குழந்தைகளையும் கண்டால் மகிழ்ச்சி உண்டாகுமே அதற்கினையான பாக்கியம் வோறொன்றுமில்லை.

ஹழ்ரத் உமர்(ரலி)அவர்கள் சொன்னார்கள்:நல்ல மனைவி ஈமானுக்கு பின்பு கிடைத்த சிறந்தச்செல்வமாகும்.

அல்லாஹ் நம் மனைவியரை நல்ல மனைவியராகவும்,நம் சந்ததியை சிறந்த சந்ததியாகவும் ஆக்கிவைப்பானாக!ஆமீன்...

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.



   

No comments:

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...