தலைப்பு :
மனித உரிமைகள்.
وَلَـقَدْ كَرَّمْنَا بَنِىْۤ اٰدَمَ وَحَمَلْنٰهُمْ فِى الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنٰهُمْ مِّنَ الطَّيِّبٰتِ وَفَضَّلْنٰهُمْ عَلٰى كَثِيْرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيْلًا
நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம். (அல்குர்ஆன் : 17:70)
மனித இனம் சிறந்தது. படைப்பினங்களில் மனிதன் சங்கையும்,மேன்மையும் மிக்கப் படைப்பாகும்.மனிதன் சுய கட்டுப்பாட்டுடனும்,ஒழுக்கமாகவும் வாழ்ந்து தன் கண்ணியம் காப்பதுடனே,சக மனிதனின் மானம் மரியாதை,உயிர்,உடமைகள் இவற்றுக்கு குந்தகம் விளைவிக்காமல்,அவனுக்கு செலுத்தும் கடமைகள்,உரிமைகளைப் பேணுவது அவசியமாகும்.
இறைவழிப்பாட்டிற்கு நிகரான கடமை,சக மனிதனுக்கு ஆற்றவேண்டிய கடமைகளாகும். இன்னும் சொல்லப்போனால் இறைவழிப்பாட்டில் குறையிருப்பின் இறைவன் நாடினால் மன்னிப்பான். ஆனால் சக மனிதனுக்கு செய்யவேண்டிய கடமைகளில் குறையிருப்பின் அவர் மன்னிக்கும் வரை அல்லாஹ் மன்னிப்பதில்லை.
நஷ்டவாளி யார்?
இம்மையில் மனித உரிமைப் பேணாதவன் நாளை மறுமையில் பெரும் நஷ்டவாளி.மேலும் எவ்விதம் அவன் நஷ்டமடைகிறான் என்பதனை விவரிக்கின்றது பின் வரும் நபிமொழி....
عن أبي هريرة رضي الله عنه:
« أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ قَالُوا : الْمُفْلِسُ فِينَا مَنْ لا دِرْهَمَ لَهُ وَلا مَتَاعَ ، فَقَالَ : إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلاةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا وَقَذَفَ هَذَا وَأَكَلَ مَالَ هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ وَهَذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِي النَّار » [رواه مسلم]
நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடத்தில், ‘உங்களில் நஷ்டவாளி யார் என்று தெரியுமா? என்று கேட்டார்கள். (அதற்கு அவர்கள்) ‘எங்களில் (எவர்களிடத்தில்) தீனாரும் உலகத்தில் வாழ்வதற்கு வசதி வாய்ப்பும் இல்லையோ அவர்களே நஷ்டவாளி என்று குறிப்பிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘மறுமை நாளில் ஒரு மனிதன் தொழுகை, நோன்பு, ஜக்காத் போன்ற நல்லறங்களுடன் வருவான். ஆனால் பலர் வந்து, ‘இவன் என்னை ஏசியவன், நான் செய்யாத விஷயத்தை என் மீது சுமத்தியவன், எனது செல்வத்தை சாப்பிட்டவன், இரத்தங்கள் ஓட்டியவன், அடித்தவன் என்றெல்லாம் அவனுக்கு எதிராக மனிதர்கள் முறையீடு செய்வார்கள். அப்போது அவன் இவ்வுலகில் செய்த நல்லமல்களை எடுத்து அவர்களுக்கு கொடுக்கப்படும். நல்லமல்கள் முடிந்த பிறகு அவர்களின் தீமைகளிலிருந்து எடுக்கப்பட்டு இம்மனிதனுக்கு கொடுக்கப்படும். இவ்வாறு அவன் நரகத்திற்கு நுழைவிக்கப்படுவான். (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம்)
ஆண்டுதோறும்......
டிசம்பர் 10 அன்று உலகம் முழுவதும் மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது. கலாச்சாரம், சமூகம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சாத்தியமான அனைத்து சூழல்களிலும் சமூகத்தின் நலனை உறுதிப்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 1948ல் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை (யு.டி.எச்.ஆர்) ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஏற்றுக்கொண்டது. இந்த நாளை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படடுகிறது.
இனம், நிறம், மொழி, பாலினம், அரசியல், ஜாதி, மதம், பிறப்பு, சொத்து, பிற அந்தஸ்து, தேசிய அல்லது சமூக தோற்றம் என பாகுபாடு பார்க்கக்கூடாது என்பதை உணர்த்துவதே இந்த தினம்.
உலகளவில் "மனித உரிமை"என்பது இந்த இரண்டு நூற்றாண்டுகளாக தான் பேசுப் பொருளாகியிருக்கிறது.குறிப்பாக இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகள்,பொருளாதார நெருக்கடி,அசாதாரன நிலை போன்றவை இது குறித்து சிந்திக்கவும்,மாநாடுகள்,கருத்தரங்குகள் வழியாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஐக்கிய நாடுகளின் சபை முயற்சிகளை முன்னெடுக்கின்றன.
ஆனால் இவ்வடிப்படை உரிமைகளை நினைத்துக்கூட பார்க்கமுடியாத காலத்திலே மனிதனுக்கு அவனுடைய உரிமைகளை உரிய முறையில் வழங்கிய பெருமை இஸ்லாத்திற்கே உரியது.
மனித உரிமைகளில் மிக முக்கியமானது நான்கு.
1. உயிர் பாதுகாப்பு.
2. உடமை பாதுகாப்பு.
3. கண்ணியம் பாதுகாப்பு.
4. தன் சார்ந்திருக்கும் கொள்கை பாதுகாப்பு.
உயிர் பாதுகாப்பு.
مِنْ اَجْلِ ذٰ لِكَ ۛ ؔ كَتَبْنَا عَلٰى بَنِىْۤ اِسْرَآءِيْلَ اَنَّهٗ مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ اَوْ فَسَادٍ فِى الْاَرْضِ فَكَاَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيْعًا وَمَنْ اَحْيَاهَا فَكَاَنَّمَاۤ اَحْيَا النَّاسَ جَمِيْعًا وَلَـقَدْ جَآءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنٰتِ ثُمَّ اِنَّ كَثِيْرًا مِّنْهُمْ بَعْدَ ذٰ لِكَ فِى الْاَرْضِ لَمُسْرِفُوْنَ
இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.(அல்குர்ஆன் 5:32)
ஒரு நாள் அண்ணல் நபி(ஸல்)அவர்களை பார்க்க பால்குடித்தாய் ஹலிமா ஸஃதிய்யா அவர்களின் சகோதரி வருகை புரிந்த சமயத்தில் (ஸல்) அவர்கள் தன் தலைப்பாகையை விரிப்பாக்கி கௌரவித்தார்கள்.
அதே அண்ணல் நபி(ஸல்)அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்காத ஒரு மனிதர் வருகை புரிந்த சமயத்திலும் (ஸல்) அவர்கள் தன் தலைப்பாகையை விரிப்பாக்கி கண்ணியப்படுத்தினார்கள்.
அண்ணல் நபி(ஸல்)அவர்களின் சபையில் உரிமையளிக்கும் விஷயத்தில் கலீபா அபுபக்கரும்(ரலி),காட்டரபியும் ஒன்றே!
ஒரு நாள் நபி(ஸல்)அவர்களின் சபையில் ஒரு குவளை நிரம்ப பால் வந்திருந்த சமயத்தில், சபையில் முதல் இடத்தைப் பிடித்த சிறுவனிடம் தாமதமாக வந்திருந்த அபுபக்கர்(ரலி)அவர்களுக்கு அப்பாலை கொடுப்பதற்கு அண்ணல் நபி (ஸல்)அவர்கள் அனுமதியல்லவா கேட்டார்கள்.
இஸ்லாம் தன்னைப் பற்றியொழுகும் விசுவாசிகளின் உயிர்கள் மற்றும் உரிமைகளையும், அரசின் ஆணைகளை மதித்து நடக்கும் மாற்றுமத மக்கள் அனைவரின் உயிர்கள் மற்றும் உரிமைகளையும் ஒரே கண்ணோட்டத்துடனேயே பார்க்கிறது.
இஸ்லாமியர்களின் உயிர்களும்,மாற்றுமத மக்களின் உயிர்களும்,ஏன் மற்ற உயிரினங்களின் உயிர்களும் இஸ்லாத்தில் ஒன்று தான். ஏனென்றால் உயிர் புனிதமானது.இதற்கு ஒரு முகம்,அதற்கு ஒரு முகம் என்றெல்லாம் இஸ்லாத்தில் கிடையாது.
முன்னொரு காலத்தில் வாழ்ந்த ஒரு பெண் ஒரு பூனையை பட்டினி போட்டு, அதை சித்திரவதை செய்தால் என்பதால் அவள் நரகவாசியாக்கப்பட்டாள்.
அதே நேரத்தில் மற்றொரு பெண், அவள் விபச்சாரி, அவள் ஒரு நாயின் தாகத்தை தீர்த்ததால் அவள் சுவனவாசியாக்கப்பட்டாள்.
இதுவே இஸ்லாத்தின் உண்மை நிலை.
كُنْتُ قَائِمًا عِنْدَ رَسولِ اللهِ ﷺ فَجَاءَ حِبْرٌ مِن أحْبَارِ اليَهُودِ فَقالَ: السَّلَامُ عَلَيْكَ يا مُحَمَّدُفَدَفَعْتُهُ دَفْعَةً كَادَ يُصْرَعُ منها فَقالَ: لِمَ تَدْفَعُنِي؟ فَقُلتُ: ألَا تَقُولُ يا رَسولَ اللهِ، فَقالَ اليَهُودِيُّ: إنَّما نَدْعُوهُ باسْمِهِ الذي سَمَّاهُ به أهْلُهُ. فَقالَ رَسولُ اللهِ ﷺ: إنَّ اسْمِي مُحَمَّدٌ الذي سَمَّانِي به أهْلِي، فَقالَ اليَهُودِيُّ: جِئْتُ أسْأَلُكَ، فَقالَ له رَسولُ اللهِ ﷺ: أيَنْفَعُكَ شيءٌ إنْ حَدَّثْتُكَ؟ قالَ: أسْمَعُ بأُذُنَيَّ، فَنَكَتَ رَسولُ اللهِ ﷺ بعُودٍ معهُ، فَقالَ: سَلْ فَقالَ اليَهُودِيُّ: أيْنَ يَكونُ النَّاسُ يَومَ تُبَدَّلُ الأرْضُ غيرَ الأرْضِ والسَّمَوَاتُ؟ فَقالَ رَسولُ اللهِ ﷺ: هُمْ في الظُّلْمَةِ دُونَ الجِسْرِ قالَ: فمَن أوَّلُ النَّاسِ إجَازَةً؟ قالَ: فُقَرَاءُ المُهَاجِرِينَ قالَ اليَهُودِيُّ: فَما تُحْفَتُهُمْ حِينَ يَدْخُلُونَ ... المزيد مسلم (٢٦١ هـ)، صحيح مسلم ٣١٥ • [صحيح] .
தவ்பான்(ரலி)அவர்கள் நபி அவர்களின் பிரத்தியேகத் தோழர் ஆவார். அவர்கள் அறிவிக்கின்றனர்.ஒரு சமயம் நபி (ஸல்)அவர்களின் திருச்சமூகத்தில் நின்றுகொண்டிருந்தேன். யூத மதத்தைச் சார்ந்த அறிஞர் ஒருவர் நபி(ஸல்)அருகில் வந்து "அஸ்ஸலாமு அலைக்க யா முஹம்மத்"(முஹம்மது உம்மீது சாந்தி உண்டாக்க!)என்று கூறினார்.இவ்வார்த்தையை செவிமெடுத்த நான் மிக பலமாக அவரை என் கரத்தால் குத்தினேன்.யூத அறிஞர் கீழே விழுந்துவிட்டார்.அவர் எழுந்து என்னை நோக்கி "என்னை ஏன் குத்தினீர் எனக் கேட்டார்.நான் அவரிடம் "அல்லாஹ்வின் ரஸூலே உங்கள் மீது சாந்தி உண்டாகுக! எனக் கூறுவதை விடுத்து, முஹம்மதே உம் மீது சாந்தி உண்டாகுக என்று ஏன் கூறனீர்கள்? எனக் கேட்டேன். அதற்கவர் உங்களின் தலைவருக்கு அவரின் குடும்பத்தார் என்ன பெயர் சூட்டியுள்ளனரோ அப்பெயரைக் கூறித்தானே அவர்களை நாங்கள் அழைக்கிறோம்(இதில் தவறு என்ன?)எனக் கேட்டார்.அப்போது நபி(ஸல்)"நிச்சயமாக என் பெயர் முஹம்மதுதான். அப்பெயரையே என் குடும்பத்தார் எனக்குச் சூட்டியுள்ளனர். யூத அறிஞர் நடந்து கொண்ட முறையில்ஆட்சசேபத்துக்குரியது எதுவுமில்லை "எனக் கூறி தவ்பான்(ரலி)அவர்களைக் கண்டித்தார்கள்.
பொதுவாகவே யூதர்கள் நபி(ஸல்)அவர்களைத் தரக்குறைவாக அழைப்பது வழக்கம். அதனால்தான் தான் தவ்பான்(ரலி)அவர்கள் யூத அறிஞர் 'முஹம்மதே! 'என்றழைத்து சலாம் கூறியதையும் ஒழுங்கீனமெனக் கருதினார்கள். எனினும் அகிலமனைத்திற்கும் அருளாக வந்த அண்ணல் நபி(ஸல்)அவர்கள் தவ்பான்(ரலி)அவர்கள் நடந்துகொண்ட முறையைக் சிறந்ததெனக் கருதவில்லை. மாறாக "என் நபித்துவத்தை நம்பாத மனிதரும் முஸ்லிம்களைப்போன்றே என்னை கண்ணியப்படுத்த வேண்டுமென்பது கட்டாயமல்ல'எனும் கருத்தைச் சுட்டிக்காட்டினார்கள். இச்சம்பவங்களின் மூலம் மாற்று மதத்தாரின் உரிமைகளுக்கும், உயிர், உடமைகளின் பாதுகாப்பிற்கும் எந்த அளவு மதிப்பும் மரியாதையும் வழங்கியுள்ளார்கள் என்பதை விளங்க முடிகிறது.
யூதன் ஒருவன் சிறுமி ஒருத்தியின் தலையை இரண்டு கற்களுக்கிடையே வைத்து நசுக்கிவிட்டான். அந்தச் சிறுமியிடம் மக்கள், 'உன்னை இப்படிச் செய்தவன் யார்? இன்னாரா? இன்னாரா?' எனறு கேட்டனர். யூதனின் பெயர் கூறப்பட்டவுடன் அச்சிறுமி ('ஆம், அவன்தான்' என்பதற்கு அடையாளமாகத்) தலையசைத்தாள். யூதன் பிடிக்கப்பட்டு தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். நபி(ஸல்) அவர்கள் அவனுடைய தலையை இரண்டு கற்களுக்கிடையே வைத்து நசுக்கும்படி உத்தரவிட, அவ்வாறே அவனுடைய தலை நசுக்கப்பட்டது. (ஸஹீஹ் புகாரி (2413)
நபி(ஸல்) அவர்கள் "மலை உச்சியிலிருந்து விழுந்தோ, நஞ்சை உண்டோ, இரும்பால் தாக்கியோ, தன்னைத்தானே ஒருவன் மாய்த்துக்கொண்டால் அதுபோன்ற தண்டனையை அவன் நீண்ட காலமாக நரகத்தில் அனுபவிப்பான். "என்று கூறியுள்ளார்கள்.
இதுபோன்று பல்வேறு நாயக வாக்குகள் மனிதன் தற்கொலை செய்து கொள்வதை வன்மையாக கண்டிக்கின்றன.
பரிசுத்த இஸ்லாம் மனிதர்கள் தம் உயிர்களைக் தாமே மாய்த்துக்கொள்வதற்குக்கூட அறவே அனுமதி வழங்கவில்லை.
அவ்விதமிருக்க மற்றோரைத் தகுந்த காரணமின்றி கொலை செய்ய எவ்விதம் அனுமதியளிக்கும்?
உடமை பாதுகாப்பு.
உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் மக்கா வெற்றிப்போரின்போது (மக்ஸூமி குலத்துப்) பெண்ணொருத்தி திருடிவிட்டாள். எனவே, அவளுடைய குலத்தார் (தண்டனைக்கு) அஞ்சி அவளுக்காகப் பரிந்துரைக்கும்படி கோரி, உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களிடம் வந்தார்கள். உஸாமா(ரலி), 'எனக்காக (அல்லாய்விடம்) பாவமன்னிப்புக் கோரி பிரார்த்தியுங்கள், இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார்கள். மாலை நேரம் வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உரையாற்றிட எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்ற படி போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிறகு, 'நிற்க, உங்களுக்கு முன்னிருந்த மக்களை அழித்ததெல்லாம் அவர்கள், தம்மிடையேயுள்ள உயர்ந்த(குலத்த)வன் திருடிவிடும்போது அவனை (தண்டிக்காமல்)விட்டுவந்ததும், பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடி விடும்போது அவனுக்கு தண்டனை கொடுத்து வந்ததும் தான். முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே திருடி விட்டிருந்தாலும் அவளுடைய கையையும் நான் வெட்டியிருப்பேன்' என்று கூறினார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்)அவர்கள் அந்தப் பெண்ணின் கையை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவளுடைய கை வெட்டப்பட்டது. அதன் பிறகு அவள் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரி (திருந்தி)விட்டாள்; மேலும் மணந்தாள்.
ஆயிஷா(ரலி) கூறினார்: அதன் பிறகு அவள் என்னிடம் வந்து கொண்டிருந்தாள். நான் அவளுடைய தேவையை(ப் பூர்த்தி செய்யும்படி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் முறையிடுவேன். (ஸஹீஹ் புகாரி (4304)
கண்ணியம் பாதுகாப்பு
ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) அறிவித்தார்.
(கூஃபாவில் அதிகாரியாக இருந்த) ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) மீது கூபா வாசிகளில் சிலர் உமர்(ரலி) அவர்களிடம் புகார் கூறினார்கள். அவர் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்பதும் அவர்களின் புகார்களில் ஒன்றாக இருந்தது. உடனே உமர்(ரலி) அவரை நீக்கிவிட்டு அம்மார்(ரலி) அவர்களை அதிகாரியாக நியமித்தார்கள். ஸஃதை (மதீனாவுக்கு) வரவழைத்து 'அபூ இஸ்ஹாக்! நீங்கள் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்று கூஃபா வாசிகளில் சிலர் கூறுகின்றனரே! என்று கேட்டார்கள்.
அதற்கு ஸஃது(ரலி) 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப் படியே தொழுகை நடத்தினேன். அதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. இஷாவுடைய முதல் இரண்டு ரக்அத்களில் நீண்ட நேரம் ஓதியும் பின் இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதியும் தொழுகை நடத்துகிறேன்' என்று பதிலளித்தார்கள். 'உம்மைப் பற்றி நம்முடைய கருத்தும் அதுவே' என்று உமர்(ரலி) கூறினார்.
அதன்பின்னர் ஒரு நபரை அல்லது சில நபர்களை ஸஃது(ரலி) உடனே கூஃபாவுக்கு அனுப்பி, ஸஃதைப் பற்றிக் கூஃபா வாசிகளிடம் விசாரிக்கச் சொன்னார்கள். விசாரிக்கச் சென்றவர் ஒரு பள்ளிவாசல் விடாமல் அவரைப் பற்றி விசாரித்தபோது அனைவரும் ஸஃதைப் பற்றி நல்ல விதமாகவே கூறினார்கள். 'பனூஅபஸ்' கூட்டத்தாரின் பள்ளி வாசலில் விசாரித்தபோது, அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த அபூ ஸஃதா எனப்படும் உஸாமா இப்னு கதாதா என்பவர் எழுந்து, 'நீங்கள் விசாரிப்பதால் நான் சொல்கிறேன். ஸஃது அவர்கள் தமது படையிலுள்ளவர்களிடம் எளிமையாக நடப்பதில்லை; (பொருட்களை) சமமாகப் பங்கிடுவதில்லை; தீர்ப்பு வழங்குவதில் நீதியாக நடப்பதில்லை' என்று புகார் கூறினார்.
இதைக் கேட்ட ஸஃது(ரலி) 'அல்லாஹ்வின் மேல் ஆணையாக! மூன்று பிரார்த்தனைகளை (உமக்கெதிராக) நான் செய்யப் போகிறேன்' என்று கூறிவிட்டு, 'இறைவா! உன்னுடைய இந்த அடியார் (அவரின் புகாரில்) பொய்யராகவும் புகழ் விரும்பிப் புகார் கூறுபவராகவும் இருந்தால் அவரின் ஆயுளை அதிகப் படுத்துவாயாக! அவரின் வறுமையையும் அதிகப் படுத்துவாயாக! அவரைப் பல சோதனைகளுக்கு ஆளாக்குவாயாக!' என்று பிரார்த்தனை செய்தார்கள்.
இதன் பிறகு அந்த மனிதரிடம் எவரேனும் நலம் விசாரித்தால் 'சோதனைக்காளான முதுபெரும் வயோதிகனாம் விட்டேன். ஸஃதின் பிரார்த்தனை என் விஷயத்தில் பலித்துவிட்டது' எனக் கூறக் கூடியவராம்விட்டார். ஜாபிர்(ரலி) வழியாக இதை அறிவிக்கும் அப்துல் மலிக் இப்னு உமைர் 'அதன் பிறகு நானும் அவரைப் பார்த்திருக்கிறேன்; முதுமை யினால் அவரின் புருவங்கள் அவரின் கண்களை மறைத்திருந்தன. பாதைகளில் நடந்து செல்லும் பெண்களின் மீது (பார்வை பறி போனதால்) மோதிக் கொள்வார்; இந்த நிலையில் அவரை பார்த்திருக்கிறேன்' என்று குறிப்பிட்டார். (ஸஹீஹ் புகாரி (755)
கொள்கை பாதுகாப்பு.
لَـكُمْ دِيْنُكُمْ وَلِىَ دِيْنِ
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”(அல்குர்ஆன் : 109:6)
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம், 'உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று கூறினார். அந்த யூதர், 'உலகத்தார் அனைவரை விடவும் மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்டு) அந்த முஸ்லிம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்துவிட்டார். அந்த யூதர், நபி(ஸல்) அவர்களிடம் சென்று தனக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்த (சச்சர)வையெல்லாம் தெரிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை அழைத்து வரச்சொல்லி அது பற்றி அவரிடம் கேட்டார்கள். அவர் விபரத்தைக் கூறினார். (நடந்தவை அனைத்தையும் விசாரித்துத் தெரிந்து கொண்ட பின்) நபி(ஸல்) அவர்கள், 'மூஸாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நாளில் மூர்ச்சையாகி விடுவார்கள். நானும் அவர்களுடன் மூர்ச்சையாகி விடுவேன். நானே முதலாவதாக மயக்கம் தெளிந்து எழுவேன். அப்போது, மூஸா(அலை), (அல்லாஹ்வின்) அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெளிந்து விட்டிருப்பாரா, அல்லது அல்லாஹ் அவருக்கு மட்டும் (மூர்ச்சையடையத் தேவையில்லையென்று) விதி விலக்கு அளித்திருப்பானா என்று எனக்குத் தெரியாது' என்று கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி (2411)
மேற்கூறியவை அல்லாமல் இன்னும் எண்ணற்ற உரிமைகளை இஸ்லாம் கூறுகிறது.
பெண்ணுரிமை.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள். பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தம் தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது அப்போது நபி(ஸல்) அவர்கள் அப்பாஸ்(ரலி) அவர்களிடம் 'அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும், பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?' என்று கேட்டார்கள். (முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்ட போது) நபி(ஸல்) அவர்கள் 'முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக்கூடாதா?' என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா 'இறைத்தூதர் அவர்களே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகிறீர்களா? என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'இல்லை' நான் பரிந்துரைக்கவே செய்கிறேன்' என்றார்கள. அப்போது பரீரா, '(அப்படியானால்) அவர் எனக்குத் தேவையில்லை' என்று கூறிவிட்டார். ஸஹீஹ் புகாரி (5283)
பேச்சுரிமை.
ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்களுடன் மக்கள் ஹுனைன் போரிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அப்போது கிராமவாசிகள் அல்லாஹ்வின் தூதரைப் பிடித்து (போரில் கிடைத்த பொருட்களிலிருந்து தங்களுக்குக் கொடுக்கும்படி) கேட்கலானார்கள். இறுதியில், அவர்களை (சூழ்ந்து நெருக்கியபடி) ஒரு கருவேல மரத்தின் அருகே தள்ளிக் கொண்டு சென்று அவர்களின் போர்வையைப் பறித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'எனக்கு என் போர்வையைக் கொடுத்து விடுங்கள். இந்த (கருவேல மரத்தின்) முட்கள் அளவிற்கு ஒட்டகங்கள் (என்னிடம்) இருந்தாலும் அவற்றை நான் உங்களிடையே பங்கிட்டு விடுவேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவோ, பொய் சொல்பவனாகவோ, கோழையாகவோ பார்க்க மாட்டீர்கள்' என்றார்கள். (ஸஹீஹ் புகாரி (3148)
சமத்துவ உரிமை.
இஸ்லாத்தில் சமூக,பொருளாதார,அரசியல், நீதிபரிபாலன விவகாரங்கள் யாவற்றிலும் சமத்துவம் பேணச் சொல்லி வலியுறுத்திக்கூறப்பட்டுள்ளது.மக்கள் யாவரும் சமமானவர்ளே.குலத்தாலோ நிறத்தாலோ இனத்தாலோ பணபலம் படைப்பட்டாளத்தாலோ ஒருவர் இன்னொருவரை விட உயர்ந்து விடமுடியாது என்கிறது திருமறை...("மக்கள் யாவரும் சமமானவர்களே" சம உரிமை)
يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.
(அல்குர்ஆன் : 49:13)
கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜை நிறைவேற்றிய சமயம் ஆற்றிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த உறையில் பின்வருமாறு கூறினார்கள்;
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஓர் அரபிக்கும் ஓர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் ஓர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறையச்சம் உள்ளவர்தான்.(அல்பைஹகீ)
பிறப்பால் யாரும் யாரையும்விட உயர்ந்தவர்களும் இல்லை, தாழ்ந்தவர்களும் இல்லை. உலக மக்கள் அனைவரும் ஆதம்(அலை) மற்றும் அன்னை ஹவ்வா(அலை) ஆகிய ஒரு தாய் தந்தையரின் பிள்ளைகளாவர். அனைவரும் சகோதர சகோதரிகளே என்ற இறைவசனத்தின் அடிப்படையில் உலகிற்கு உரக்கக்கூறினார்கள். நிறத்தாலோ, மொழியாலோ, இனத்தாலோ அனைவரும் சமமே என்று முழங்கினார்கள்.
ஒரு சமயம் அபுதர் கிஃபாரி(ரலி)அவர்களுக்கும் அபிஸீனியா நாட்டை சார்ந்த கறுத்த அடிமைக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.தர்க்கம் சூடுபிடித்து முற்றியது.இருவருக்கும் கோபம் மேலிட்டது.கோபத்தால் நிதானமிழந்த அபுதர்(ரலி)அவர்கள் தன் பிரதிவாதியை பார்த்து "ஏ!கறுப்பியின் மகனே"என்று கூறிவிட்டார்கள்.இதைக்கேட்ட பெருமானார்(ஸல்)அவர்கள் "பேச்சு எல்லை மீறிவிட்டது!இறைபக்தியாளரையன்றி கறுத்த பெண்ணின் மகனை அன்றி வெள்ளை பெண்ணின் மகனுக்கு எந்த சிறப்பும் கிடையாது"எனக் கூறி தோழர் அபுதர்(ரலி)அவர்களை கண்டித்தார்கள்.
இந்த சம்பவம் நாயகம்(ஸல்)அவர்களின் காலத்தில் அடிமையும் தன் எஜமானனிடம் தர்க்கம்செய்ய முடியும் என்பதையும்,நிற இன பாகுபாடற்ற சமூகமாக அம்மக்களை நாயகம்(ஸல்)அவர்கள் உருவாக்கினார்கள் என்பதையும் காட்டுகிறது.
நீதி பரிபாலனத்தில் சமத்துவம்
இஸ்லாத்தில் நீதிக்கு முன் அனைவரும் சமம்.பனக்காரன் ஏழை,உயர்ந்தவன் தாழ்ந்தவன்,வலியவன் எளியவன் போன்ற எந்த பாகுபாடும் கிடையாது.وَاَنْزَلْنَاۤ اِلَيْكَ الْكِتٰبَ بِالْحَـقِّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ الْكِتٰبِ وَمُهَيْمِنًا عَلَيْهِ فَاحْكُمْ بَيْنَهُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ عَمَّا جَآءَكَ مِنَ الْحَـقِّ لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَّمِنْهَاجًا وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَـعَلَـكُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰـكِنْ لِّيَبْلُوَكُمْ فِىْ مَاۤ اٰتٰٮكُمْ فَاسْتَبِقُوا الْخَـيْـرٰتِ اِلَى اللّٰهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَۙ
மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக; உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்; அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்; ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்); எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது; நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.
(அல்குர்ஆன் : 5:48)
وَاِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَيْنَهُمْ بِالْقِسْطِ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ
ஆனால், நீர் (இவர்களிடையே) தீர்ப்பளிப்பீராயின் நியாயமாகவே அவர்களிடையில் தீர்ப்பளிப்பீராக; ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களையே நேசிக்கின்றான்.
(அல்குர்ஆன் : 5:42)
இஸ்லாம் கூறும் நீதி பரிபாலனங்களை அணுவளவும் வழுவாது பின்பற்றி ஆட்சி செலுத்திய நபித்தோழர்களில் முதன்மையானவர் ஹழ்ரத் உமர் (ரலி)அவர்கள். நீதிக்கு ஓர் உமர் என்றுப் போற்றப்படக்கூடிய
உமர் (ரலி)அவர்கள் ஆட்சி போறுப்பேற்றபோது இவ்வாறு பிரகடனம்செய்தார்கள்:
"அல்லாஹ்வின் மீதாணையிட்டு கூறுகிறேன்;என்னிடம் எவரும் எந்தவிதத்திலும் மற்றவரைவிட பலசாலியல்லர்.பலவீனருமல்லர்.
எல்லோருக்கும் நீதி நிலைநாட்டுவேன்.எவருக்கும் நியாயம் வழங்குவேன்"
கலீஃபா உமர் (ரலி) அவர்கள், நீதி வழுவாது ஆட்சி செலுத்தி வந்தார். அதற்கு ஒரு சான்றினைக் காண்போம். கலீஃபாவின் மகன் அப்துல்லா, ஒரு நாள் காரணமின்றி ஒருவனை அடித்துவிட்டார். கலீஃபா முறைப்படி விசாரித்து, தம் மகன் குற்றவாளி எனக் கண்டறிந்தார்; தான் பெற்ற மகன் என்று பாரபட்சம் பார்க்காது தண்டனை வழங்க உத்தரவிட்டார் என்பது வரலாறு.
கலீஃபா உமர் (ரலி) அவர்களின் நீதி வழுவாத ஆட்சி, உலக வரலாற்றில் போற்றப்படுவதாக அமைந்திருந்தது.
அண்ணல் காந்தி இப்படிச் சொன்னார்கள்:
“இந்த இந்திய தேசத்தின் முழுமையான சுதந்திரத்தை இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் நீதிமான் உமர் அவர்களின் ஆட்சியின் அடிப்படையில் அமைகிறபோது தான் சுவைக்க முடியும்.”
பொருளீட்டுவதில் சமத்துவம்.
பொருளியலில் மக்களிடையே சமத்துவத்தை நிலைநாட்ட இஸ்லாம் பல வகையிலும் வழிகாட்டிக்கொண்டிருக்கிறது.காரணம் ஒருவனின் பொருளீட்டும் ஆர்வம் அடுத்தவனை எந்த விதத்திலும் பாதித்துவிடக்கூடாது என்பதால் பொருளாதாரத்தில் ஹராம்,வட்டி,மோசடி,பதுக்கல் போன்றவற்றை தவிர்த்து ஹலாலான வழியில் பொருளீட்ட வழிகாட்டுகிறது.وَاَحَلَّ اللّٰهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبٰوا
அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்;
(அல்குர்ஆன் : 2:275)
அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய அறிவு,ஆற்றலைக்கொண்டு ஆகுமான வழிகளில் பொருளீட்டவும்,அதனை அபிவிருத்தி செய்யவும்,ஆகுமான வழியில் செலவுச்செய்யவும் முழு சுதந்தரம் இருகின்றது.
وَالَّذِيْنَ جَاهَدُوْا فِيْنَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَاِنَّ اللّٰهَ لَمَعَ الْمُحْسِنِيْنَ
மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 29:69)
அரசியல் உரிமை.
ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அரசியல் விவகாரங்களில் உரிமையோடு இயங்கவும்,கருத்துவெளியிடவும்,தனக்கு விருப்பமான பிரதிநிதியை தேர்வு செய்யும் உரிமையும் இருக்கவேண்டும்.நாட்டில் தலைவரை,மக்களை சகல விதத்திலும் இறைவழி நின்று வழி நடத்தும் தலைவரை தேர்வுசெய்யும் உரிமையை இஸ்லாம் பொதுமக்களுக்கு வழங்குவதுடன் அவர் வழிதவறுபட்சத்தில் அவரை கேள்விக்கேட்கும் உரிமையும் கண்டிக்கும் உரிமையும் மக்களுக்கு வழங்குகின்றது.
இரண்டாம் கலீஃபா உமர்(ரலி)அவர்கள் ஒரு தடவை உரைநிகழ்த்திக் கொண்டிருந்த போது" நான் தவறு செய்தால் என்னை திருத்துங்கள்"என்றார்கள். இதனைக் கேட்ட ஒருவர் எழுந்து நின்று "கலிஃபா உம்மிடம் நாம் தவறை கண்டால் இதனால் உம்மை திருத்துவோம்"என்று தம் கையிலிருந்த வாளைக்காட்டி சொன்னார்.இதனை கேட்ட கலிஃபா கோபம் கொள்ளவில்லை மாறாக மகிழ்ச்சியில் சிரித்து விட்டு " என் சகோதரர்கள் என் மீது இவ்வளவு அக்கறையோடிருக்கிறார்களே!அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்"என்று கூறினார்கள்.
இஸ்லாமிய ஆட்சியில் மக்களுக்கு அரசியலில் முழுச்சுதந்திரமிருந்தது.
மத உரிமை.
மதம் என்பது நம்பிக்கையின் அடிப்படையில் நடைமுறைக்கு வரும் விஷயம்.இதை வற்புறுத்தலாலோ அடக்குமுறையாலோ யார் மீதும் திணிக்கக் கூடாது.இஸ்லாம் தன் போதனையை எங்கும் எவரிடமும் வற்புறுத்தியதில்லை. இதனையே குர்ஆன்...
لَاۤ اِكْرَاهَ فِى الدِّيْنِۙ قَدْ تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَىِّ
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது.
(அல்குர்ஆன் : 2:256)
இஸ்லாத்தை போதிக்க வந்த தூதருக்கே அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
فَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَيْكَ الْبَلٰغُ الْمُبِيْنُ
எனினும் இவர்கள் (உம்மைப்) புறக்கணித்துத் திரும்பிவிடுவார்களாயின், (நபியே! அதற்காகக் கவலைப்படாதீர்; ஏனெனில்) உம்மீது (கடமையு)ள்ளதெல்லாம் (இறை கட்டளைகளை அவர்களுக்குத்) தெளிவாகச் சேர்ப்பிப்பதுதான்.
(அல்குர்ஆன் : 16:82)
மனித உரிமைகள் அனைத்தையும் செயல்படுத்திக்காட்டிய ஒரே மார்க்கம் இஸ்லாம்.
எனவே மனித உரிமைகளைப் பேணி இஸ்லாமிய வழிநடக்கும் நல்வாய்ப்பை அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்கிடுவானாக!ஆமீன்...
4 comments:
Masha allah
Alhamdulillah
مشاء الله بارك الله شكرا
Alhamdulillah
Post a Comment