Thursday, 27 July 2023

ஜும்ஆ பயான் 28/07/2023

மனித நேயம் காப்போம்.

முன்னுரை :

மணிப்பூரில் என்னதான் நடக்கின்றது?


1949-ம் ஆண்டில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது மணிப்பூர். 1956-ல் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, 1972-ல் மாநில அந்தஸ்து பெற்றது. புவியியல் ரீதியாக பெரும்பாலான பகுதி மலைகள் தான். சமவெளி என்பது பத்து சதவிகித பள்ளத்தாக்கு நிலம்தான். இந்தப் பள்ளத்தாக்கு பகுதியில் பெரும்பான்மையாக அதாவது மாநில மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் மணிப்பூரி மொழி பேசும்‘மைத்தி’ இன மக்கள் வாழ்கிறார்கள். 90 சதவிகித மலைப் பகுதிகளில்,  குக்கி, நாகா, சோமி உள்ளிட்ட பழங்குடி குழுக்களைச் சேர்ந்த மக்கள் பரவி வாழ்கிறார்கள். குறிப்பிட்டுச் சொன்னால், பள்ளத்தாக்குப் பகுதியில் பெரும்பான்மை மக்கள் இந்துக்கள். மலைப் பகுதி பழங்குடிகளில் அனைவரும் கிறிஸ்தவர்கள். 

இந்த இரு சமூக, இனக்குழு மக்களுக்கிடையே உள்ள முக்கிய முரண் அவர்களின் வாழ்விடம். அரசியலமைப்புச் சட்டம் 371-சி பிரிவின்படி வெளியிடப்பட்ட அறிக்கை, ‘மலைப் பகுதிகளில் பழங்குடிகள் அல்லாத யாரும் நிலம் வாங்க முடியாது’ என்று தடுக்கிறது. (ஆனால், பழங்குடியினர் சமவெளி, பள்ளத்தாக்குப் பகுதிகளில் நிலம் வாங்கிக் கொள்ள முடியும்.) இந்தக் காரணத்தினால் கடந்த 2013-ம் ஆண்டில், “நாங்கள் வாழும் சமவெளி நிலம் எங்களுக்குப் போதவில்லை. பர்மா, பங்களாதேஷிலிருந்து வரும் அகதிகளால் எங்கள் வாழ்விடத்துக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அதனால், எங்களையும் பழங்குடிகள் என்று அறிவித்துவிடுங்கள்” என்று மைத்தி இந்துக்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் கிளம்பின. இது பிரச்னையின் முதல் புள்ளி.

பத்து ஆண்டுகள் கழித்து, கடந்த 2023 ஏப்ரல், 19-ம் தேதி மணிப்பூர் நீதிமன்றம் இது தொடர்பாக தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில், மைத்தி இந்துக்களையும் பழங்குடியினராகச் சேர்ப்பது குறித்து, 4 வாரங்களுக்குள் மாநில அரசு (பா.ஜ.க), மத்திய அரசுக்கு (பா.ஜ.க) தன்னுடைய பரிந்துரைகளை வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

ஏற்கெனவே, BC, SC, EWC உள்ளிட்ட இடஒதுக்கீடுகள் சமவெளியில் வாழும்  மைத்திகள் அனுபவித்துவருகிறார்கள். மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் 40 தொகுதிகள் பள்ளத்தாக்குகளில் வாழும் மைத்தி இந்துக்கள் வசமிருக்கின்றன. அரசுத் துறைகள், கல்வி, பொருளாதாரம் என அனைத்திலும் அவர்களுக்கே முன்னுரிமை கிடைத்துவருகிறது. தற்போது அவர்களைப் பழங்குடிகளாகவும் மாற்றி அறிவித்தால், தங்களுடைய நிலமும் எதிர்காலமும் பறிபோகும் என்று மணிப்பூர் பழங்குடி குழுக்கள் எதிர்க்கத் தொடங்கினார்கள். 

இதற்காக, மணிப்பூரின் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் (ATSUM)மலைப் பகுதிகளில் 12 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடத்தியது. பிறகு, மே-3ம் தேதி மணிப்பூரின் தலைநகர் இம்பால் (சமவெளி) உள்பட 10 இடங்களில் பேரணி நடத்த ஏற்பாடு செய்தது. இதில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் திரண்டு தங்களின் எதிர்ப்பைப் பதிவுசெய்தனர். அந்தப் பேரணியில் தான் முதன்முதலாக திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.  தாக்குதலுக்கு முக்கிய காரணமாக, மைத்தி இனப் பெண் ஒருவரை குக்கி பழங்குடிகள் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுவிட்டனர் என்று போலியான செய்தி ஒன்று பரப்பப்பட்டதுதான். அந்த வெறுப்புப் பிரசாரத்தின் அனல் தொடர் வன்முறைக்கான நெருப்பைப் பற்றவைத்தது.   

போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடி மக்களில் பெரும்பான்மையானவர்கள் குக்கிகள். இவர்கள் அதிகம் வசிக்கும் சுரசந்த்பூர் மாவட்டத்திலும் தலைநகர் இம்பாலிலும் குக்கி பழங்குடிகளைக் குறிவைத்து, மைத்திகள் தாக்குதலில் இறங்கியிருக்கிறார்கள். 

இதற்காக, எந்தெந்த வீடுகளில் இந்து மத அடையாளச் சின்னங்கள், கொடிகள் இருக்கின்றனவோ அவைமட்டும் தவிர்க்கப்பட்டு,  குக்கிகளின் வீடுகள் மீது தாக்குதல் அதிகரித்திருக்கிறது. இந்த வன்முறையில், வீடுகள், பள்ளிக்கூடங்கள், வணிக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்டிருக்கின்றன. குக்கி பழங்குடிகள், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போர் புரிந்ததற்காக அமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவை தகர்க்கப்பட்டிருக்கின்றன. மே 3-ம் தேதி வன்முறையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட உயிர்பலிகள் நிகழ்ந்திருக்கின்றன. பலர் வீடுகளைவிட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். 

அன்று இரவே மணிப்பூரின் எட்டு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவையும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. ராணுவம் வரவழைக்கப்பட்டு போராட்டக்காரர்களை(!) கண்டதும் சுட உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலைமையில்தான், மணிப்பூர் மாநில மல்யுத்த வீராங்கனை மேரிகோம், “எங்கள் மாநிலம் பற்றி எரிகிறது” என்று ட்வீட் மூலமாக பிரதமருக்குக் கோரிக்கை விடுத்தார். ஆனால், அப்போது கர்நாடக தேர்தல் பிஸியில் இருந்தது ஏழைத்தாயின் மகனின் மொத்த கூடாரமும். 
மணிப்பூரின் இரு இனக்குழுக்களுக்கு இடையே பரப்பிவிடப்பட்ட இந்த வெறுப்பரசியல், வன்முறை, கலவரங்களுக்குப் பின்னால், நீதிமன்ற உத்தரவு மட்டுமல்ல... மதம், அரசியல், பொருளாதார வளச் சுரண்டல் உள்ளிட்ட காரணங்களும் இருக்கின்றன. 2022-ல் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில், பாஜக 32 இடங்களில் வென்றது. அவற்றில்   இம்பால் (17), பிஷ்னுபூர் (4) சுரசந்த்பூர்(3), சந்தேல் (2) ஆகிய பா.ஜ.க வென்ற  தொகுதிகளில் பெரும்பான்மையான மக்கள் மைத்தி இந்துக்கள். 

300 ஆண்டுகள் பழமையான மைத்திகளின் ‘சனமகி’ பண்பாடும், இந்து மத சம்பிரதாயங்களும் ஒன்றோடு ஒன்று பிணைந்துகிடக்கிறது. இதனால், பெரும்பான்மை மைத்திகள்மீது அக்கறை காட்டுவதாகச் சொல்லிக்கொண்டு, சிறுபான்மையினரான கிறிஸ்தவ குக்கி பழங்குடிகளை அவர்களுக்கு நேரெதிராக நிறுத்தும் அரசியல் அங்கு பா.ஜ.க-வுக்குப் பலனளித்திருக்கிறது.  இதற்காக, மணிப்பூரில் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC)திட்டத்தை நடைமுறைப் படுத்தவேண்டும் என்று மைத்திகள் தரப்பிலான கோரிக்கை முதன்மை படுத்தப்படுகிறது. இது பழங்குடியினரை சமவெளிகளில் இருந்து வெளியேற்றுவதற்கான மறைமுகக் குரல்தான். 

ஒருபுறம், காட்டைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பழங்குடியினர் வாழும் மலைப் பகுதிகளிலிருந்து அவர்களை வெளியேற்றி, அவர்களின் வீடு, கட்டடங்களை இடிக்கும் பணிகளையும் ஆளும் பா.ஜ.க அரசு மேற்கொள்கிறது. மறுபுறம், சட்டமீறல்களுடன் மலைப் பகுதியில் பழங்குடியினர் அல்லாதவர்களின் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதற்கிடையே, அண்டை நாடுகளிலிருந்து குக்கி இனப் பழங்குடிகள் மணிப்பூரில் ஊடுருவி இருக்கிறார்கள் என்றும், அவர்களை உள்ளூர் குக்கி மக்கள் ஆதரிக்கிறார்கள் என்று திட்டமிட்ட வெறுப்புப் பிரசாரமும் அங்கு மேற்கொள்ளப்படுகிறது.  

மத ரீதியாக நடைபெறும் அத்துமீறல்களும் இவற்றுக்குச் சளைத்ததல்ல. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட எண்ணற்ற கிறிஸ்துவ தேவாலயங்களை, மாநில அரசுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டதாகச் சொல்லி இடித்துத் தள்ளிவருகிறது பா.ஜ.க அரசு. கத்தோலிக்க தேவாலயம், லூத்ரன் சர்ச், பாப்டிஸ்ட் கன்வென்ஷன் சர்ச் என நூற்றுக்கணக்கான தேவாலயங்களை தற்போதைய வன்முறையில் எரிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ‘இவை அனைத்தும் 1983-ல் அசாமில் நடைபெற்ற வன்முறை- நெல்லி இனப் படுகொலைகளை அடியொற்றி நடைபெறும் சம்பவங்களை நினைவு படுத்துகின்றன... அதன் பின்னணியில் இருந்ததும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தான்...’ என்கிறார்கள் அசாமைச் சேர்ந்த பழங்குடி மக்கள்.  

தமிழ்நாட்டில் நாமறிந்த இந்துத்துவ அமைப்புகள் போலவே, மணிப்பூரிலும் அரம்பை தெங்கால், மைத்தி-லீபன் உள்ளிட்ட சில பாசிச பா.ஜ.க-வின் ஆசிபெற்ற இந்துத்துவ அமைப்புகளே இந்த வன்முறையினை முன்னின்று நடத்தியிருக்கின்றன. நவீனரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்தியபடி இருச்சக்கர வாகனங்களில் கும்பலாகச் சென்று, காவல் நிலையங்களைச் சூறையாடி, குக்கி பழங்குடி கிராமங்களில் புகுந்து, அவர்களின் வீடுகளை, பொருட்களை, பெண்களை, ஆண்களை நாசம் செய்து கொலைகளில் ஈடுபடுகின்றன. இந்த இந்துத்துவ அமைப்புகளின் முக்கியக் கொள்கை, மணிப்பூரின் மன்னர் காலத்துப் பண்பாடான ‘சனமகி’ ராஜ்ஜியம் திரும்பவும் வரவேண்டும் என்பதுதான். மணிப்பூர் மாநில ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் பறப்பது இவர்களின் சனமகி கொடியே. 

பொருளாதார ரீதியாக, பழங்குடிகளின் நிலம்தான் சமவெளியில் வாழும் மைத்திகளின் இலக்கு. தங்களையும் பழங்குடிகளாக அறிவித்துவிட்டால், மலைப்பகுதி நிலங்களை அவர்களால் வாங்கிவிட முடியும். ஆனால், இது மைத்திகளின் ஒட்டுமொத்த மனநிலை அல்ல. அதே சமூகத்தின் பணம் படைத்த அதிகார வர்க்கத்தின் கோரிக்கை. பா.ஜ.க அரசின் தேசிய சமையல் எண்ணெய் திட்டத்துக்கு National Mission on Edible Oils-Oil Palm (NMEO-OP) வடகிழக்கின் 2.5 லட்சம் ஹெக்டேர் நிலம் வேண்டும். அதன் அளப்பரிய நீர்வளம் வேண்டும். பதஞ்சலி, காத்ரேஜ், ருச்சி, சஞ்சய் கொயாங்கோ உள்ளிட்ட பெரு முதலாளிகளின் எண்ணெய் வணிகம் செழிக்க பிரச்சனையின்றி பழங்குடிகளின் நிலம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். அவர்கள் வாழும் சதுப்பு நில, நீர்நிலைகளை விட்டு அவர்களைத் துரத்த வேண்டும். 

மணிப்பூர் பழங்குடிப் பெண்களை நிர்வாணமாக்கி, நடுவீதியில் இழுத்துச் சென்று, அவர்களின் தந்தை, சகோதரனைக் கொன்று குவித்த கொடூரம் வீடியோவாக வெளிவந்ததும், இரண்டரை மாதங்களாக வாய்திறக்காத பிரதமர், ‘இது 140 கோடி இந்திய மக்களின் அவமானம்’ என்றிருக்கிறார். 

ஆம், தரகு முதலாளித்துவ அடிமைகளும், மதவெறி, இனவெறியைத் தூண்டிவிட்டு, பாசிச கொள்கைகள் மூலம் மக்களைப் பிளவுபடுத்தி, பெண்களை நிர்வாணமாக்கி, சிறுமிகளை எரித்து, விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொலை செய்து, பழங்குடிகளை  அவர்களின் நிலங்களிலிருந்து வெளியேற்றும்    வெறுப்பரசியல் கும்பலை ஆட்சி அதிகாரத்தில் உட்கார வைத்திருப்பதற்காக நாங்கள் நிச்சயம் அவமானப்படத்தான் வேண்டும். இது எங்களின் அவமானம்தான். 

நன்றி : 
- கார்த்திக் புகழேந்தி கார்த்திக் புகழேந்தி
21-07-2023

மனித உரிமை மீறல்.

மணிப்பூர் மாநிலத்தில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மைத்தி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் கும்பல் ஒன்று சேர்ந்து நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற கொடூரமான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இரண்டு பெண்களில் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகியுள்ளார். இது ஒன்றும் இந்திய நாட்டிற்கு புதிதல்ல . மனித உரிமைகள் மீறப்படுவதும் மானங்கப்படுத்துவதும் இந்திய நாட்டின் அடையாளமாக மாறிவருகிறது.

பிறர் மானம் காப்போம்.

அல்லாஹ் நமக்கு வழங்கிய மார்க்கத்தில், இறைவனுக்கு செய்யவேண்டிய கடமைகள் நமக்கு எந்த அளவுக்கு சொல்லப்பட்டிருக்கிறதோ, அதை விட கூடுதலாக ஒரு மனிதன் இன்னொரு மனிதன் விஷயத்தில் நடந்துக் கொள்ளவேண்டிய அம்சங்கள் குறித்து நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. மனித உரிமைகளில் யார் ? எல்லை மீறுகிறார்களோ, அந்த மனிதர் மன்னிக்காத வரை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். என்று நபிகளார் நமக்கு கூறினார்கள்.

மனிதனின் மானம் வானம் போல் பெரியது மானத்திற்கு முன்னால் மனிதனின் உயிர் மற்றும் உடமைகள் அத்திப்பழத்தின் விதையை விடவும் சிறியவை. மானம் காப்பதும் மரியாதை கேட்பதும் மனிதனின் குருதியில் ஊரிய குணாதிசியங்கள்.

மானம் இழந்தவன் தன் உயிரை இழந்தான்’ என்பார்கள் நம் முன்னோர்கள்.மானம் மலையேரும் போது மனிதன் தற்கொலை செய்து கொள்கிறான் அல்லது சமூகத்தை விட்டும் ஓடி ஒழிந்து கொள்கிறான். தன்மானம்; காப்பதற்காக தன் சொத்து சுகங்களைக்கூட தியாகம் செய்யும் அளவுக்கு மனிதன் தன்மானத்தை பெரும் செல்வமாக மதிக்கின்றான்.

ஆதி மனிதர்களான ஆதம் அலைஹிஸ்ஸலாம், ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் ஆகிய இருவரும் சுவர்க்கத்தில் தங்க வைக்கப்பட்ட போது இறை கட்டலையை மீறினார்கள் அதன் விலைவால் அவர்களின் வெட்கத்தலங்கள் தெரிந்தன. உடனே இருவறும் பொங்கி எழுந்து நாணத்துடன் தங்கள் மானத்தை சுவனத்தின் இலை தழைகளைக் கொண்டு மறைக்க விலைந்ததாக குர்அன் கூறுகின்றது.

فَدَلّٰٮهُمَا بِغُرُوْرٍ‌  فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْاٰتُهُمَا وَطَفِقَا يَخْصِفٰنِ عَلَيْهِمَا مِنْ وَّرَقِ الْجَـنَّةِ‌  وَنَادٰٮهُمَا رَبُّهُمَاۤ اَلَمْ اَنْهَكُمَا عَنْ تِلْكُمَا الشَّجَرَةِ وَاَقُلْ لَّـكُمَاۤ اِنَّ الشَّيْطٰنَ لَـكُمَا عَدُوٌّ مُّبِيْنٌ‏

இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று; அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்.(அல்குர்ஆன் : 7:22)

மானம் காத்த மாநபி.

இன்னும் சொல்லப் போனால் மாஇஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் விபச்சாரக் குற்றத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒப்புக் கொண்டு அதற்குரிய தண்டனையை வழங்கக் கோரிய மூன்று சந்தர்ப்பங்கிலும் அவரின் மானத்தின் புனிதம் கருதி அவரின் இருண்ட விவகாரத்தை வெளிச்சப்படுத்தாமல் அவரை தண்டிக்காது திருப்பி அனுப்பிவைத்தார்கள் நபிகள் நாயகம்.நான்காவது தடைவ அவரே முன் வந்து அதற்குரிய தண்டனையைப் பெற்று இவ்வுலகிலேயே தன்னை பரிசுத்தப்படுத்திக் கொண்டார்.  (புகாரி 6814)

இஸ்லாம் ஒரு மனிதனின் மானத்தை எந்தளவு புனிதமாக மதிக்கின்றதென்றால்.

விபச்சாரம் செய்ததாக ஒருவர் சாட்சி சொன்னாலும் இருவர் சாட்சி சொன்னாலும் மூவர் சாட்சி சொன்னாலும் சொன்னவர்களுக்குத்தான் தண்டனை வழங்க வேண்டும் நான்குபேரின் சாட்சியையே இஸ்லாமிய குற்றவியல் சட்டம் ஏற்றுக் கொள்ளும். அந்நான்கு பேரில் ஒருவரின் கண்னில் பார்வை குறைபாடு இருந்தாலும் அவர்களின் சாட்ச்சி ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்கின்ற அளவிற்கு ஒருவரின் மானத்தை இஸ்லாம் புனிதமானதாக மதிக்கின்றது.

மனிதனின் மானம் அனைத்தையும் விட உயர்வானது.

அறியாமைக்காலத்து அறப்புக்கள் கூட தங்கள் மானத்தை பெரும் செல்வமாக மதித்துள்ளனர். அறியாமைக்கால புலவர் ஒருவர் தன் மானத்தின் மகிமையை கவிதையில் வடித்துள்ள விதத்தைப் பாருங்கள்.!

"மானம் அனைத்திலும் உயர்வானது! செல்வம் வைடூரியம் ஆகியவற்றை விடவும் விலை மதிப்பற்றது. மானம் இல்லாத செல்லவம் சுபிட்ச்சம் அற்றது.என் செல்வத்தால் என் மானத்தைக் காப்பேன். ஒரு போதும் அதை நான் கலங்கப்படுத்த மாட்டேன். என் செல்வம் பறிபோனால் தந்திரத்தை கையாண்டு அதை திரட்டுவேன். என் மானம் மலையேறினால் தந்திரங்களால் அதை காக்க முடியாது. மானம் கெட்ட பிறகு என் செல்வத்தால் என்ன பலன் இல்லை உயிர் வாழ்ந்தே என்ன பலன்".

இருண்ட வாழ்க்கை வாழ்ந்த அந்த அறபியர்கள் கூட தங்கள் மானத்தை பெரும் செல்வமாக மதித்துள்ளார்கள்.

தாழ்த்தப்பட்டவர்கள் புறக்கனிக்கப்படும் போது அல்லாஹ்வின் கோபம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த ஆரம்ப நேரம். அன்றைய மக்களால் உயர்ந்த குலமாகக் கருதப்பட்ட குரைஷிக் குலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தவர்கள் என்பதால் மரியாதைக்குரியவர்களாக இருந்தனர்.

இந்த நிலையில் முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொள்கை விளக்கம் அளித்து வந்தனர். ஒரு நாள் அவர்கள் இவ்வாறு கொள்கைப் பிரச்சாரம் செய்த போது நடந்த நிகழ்ச்சி பின் வருமாறு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளில் முக்கியப் பிரமுகர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தாழ்ந்த குலத்தவராகக் கருதப்பட்ட பார்வையற்ற இப்னு உம்மி மக்தூம் என்பார் வந்தார். அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைப் புறக்கணித்து விட்டு அந்தப் பிரமுகரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் திருக்குர்ஆன் வசனம் இறங்கியது 

عَبَسَ وَتَوَلّٰٓىۙ‏

اَنْ جَآءَهُ الْاَعْمٰى‏

وَمَا يُدْرِيْكَ لَعَلَّهٗ يَزَّكّٰٓىۙ‏

தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர். (திருக்குர்ஆன்: 80:1-10 )

கண் பார்வையற்ற இவர் விஷயத்தில் இதன் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட முறை தான் இதை விடச் சிறப்பானது.இதன் பின்னர் இவரைக் காணும் போதெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரியாதை செலுத்துவார்கள்.இவர் மூலம் அல்லாஹ் எனக்கு நல்ல அறிவுரை வழங்கினான் என்று அவரை மிகவும் மரியாதையோடு நடத்தினார்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா சென்று மாமன்னராக உயர்ந்த பின் அமைத்துக் கொண்ட ஆட்சியில் இவருக்கு முக்கியப் பங்கையும் அளித்தார்கள்.

 عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ قَالَ اسْتَخْلَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْنَ أُمِّ مَكْتُومٍ مَرَّتَيْنِ عَلَى الْمَدِينَةِ وَلَقَدْ رَأَيْتُهُ يَوْمَ الْقَادِسِيَّةِ مَعَهُ رَايَةٌ سَوْدَاءُ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போர்க்களம் சென்ற போது இரண்டு தடவை இவரிடம் ஆட்சியை ஒப்படைத்துச் சென்றார்கள். (நூல் : அஹ்மத் 11894)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ بِلاَلاً يُؤَذِّنُ بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُنَادِيَ ابْنُ أُمِّ مَكْتُومٍ "". ثُمَّ قَالَ وَكَانَ رَجُلاً أَعْمَى لاَ يُنَادِي حَتَّى يُقَالَ لَهُ أَصْبَحْتَ أَصْبَحْتَ.

 நபிகள் நாயகத்தின் பள்ளிவாசலில் மக்களைத் தொழுகைக்கு அழைக்கும் பணியை பிலால் (ரலி), இப்னு உம்மி மக்தூம் (ரலி) ஆகிய இருவரிடம் தான் நபிகள் நாயகம் (ஸல்) ஒப்படைத்திருந்தார்கள்.

மனித நேயம் காப்போம்.

இஸ்லாம், மனிதநேயத்தை போற்றும்  சன்மார்க்கமாகும்.இஸ்லாம் உலக அமைதியையும்,பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.படைப்பினங்கள் அனைத்தும் "அல்லாஹ்வின் குடும்பம்"என்கிற கூற்றின் வாயிலாக  ஜாதி மத இன நிற பேதங்களை கடந்து அனைவரும் ஆதி பிதா ஆதம் (அலை)அவர்களின் பிள்ளைகள் என்கிற உணர்வோடு தங்களுக்கிடையில்  அழகிய முறையிலும்,கண்ணியத்துடனும்,நேயத்துடனும் நடந்துக்கொள்ளவேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

மனித கண்ணியத்தை காப்பதும்,மனிதநேயத்தை போற்றுவதுமே இஸ்லாத்தின் அடிப்படை அம்சமாகும்.

இஸ்லாத்தில் மனிதனை اشرف المخلوقات படைப்பினங்களில் சிறந்த படைப்பு என்று கூறப்பட்டுள்ளது.மனித இனம் உலகில் அனைத்து படைப்பைக் காட்டிலும் சிறந்ததாக உள்ளது என குர்ஆன் வர்ணிக்கிறது...

وَلَـقَدْ كَرَّمْنَا بَنِىْۤ اٰدَمَ وَحَمَلْنٰهُمْ فِى الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنٰهُمْ مِّنَ الطَّيِّبٰتِ وَفَضَّلْنٰهُمْ عَلٰى كَثِيْرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيْلًا‏

நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.  (அல்குர்ஆன் : 17:70)

மனித இனத்தை தோற்றத்திலும்,அழகிலும் ஏனைய இனத்தைக் காட்டிலும் சிறப்பாக்கி வைத்ததாக அல்லாஹ் கூறுகிறான்.

لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْۤ اَحْسَنِ تَقْوِيْمٍ‏

திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.          (அல்குர்ஆன் : 95:4)

“பிறப்பொக்கும் எல்லாவுயிர்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” என்று பாடுகிறார் பாவலர் வள்ளுவன்.

அதாவது மனிதர்கள் எனப்படுபவர்கள் பிறப்பினால் யாவரும் சமன் என்பதாகும். உயர்வு தாழ்வுகள் இல்லாமல் பிற மனிதர்கள் மீது அன்பு பாராட்டும் அந்த உயரிய பண்புடையவனே உண்மையான மனிதனாவான் அத்தகைய பண்பில்லாதவர்களை மனிதனாக கருத முடியாது.

இக்கருத்தை இதைவிடவும் சிறப்பாக 1400 ஆண்டுகளுக்கு முன்பே இறைவன் தன் திருமறையில் அனைவரும் ஒரே தாய்,தந்தையின் மக்கள் என கூறிவிட்டான்.

يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌  اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌  اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ‏

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.(அல்குர்ஆன் : 49:13)

மனிதனின் இன்னொரு சிறப்பு உலகில் அனைத்தும் படைக்கப்பட்டது மனிதனுக்காக என்றும் மனிதன் தன்னை வணங்குவதற்காக படைக்கப்பட்டான் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இஸ்லாத்தில் மனித  இனத்தின் கண்ணியத்தையும்,சிறப்பையும் எந்த அளவுக்கு வலியுறுத்தப்பட்டிருக்கின்றது என்பதற்கு இந்த ஒரு விஷயமே போதுமானதாகும்.

மனிதன் மரணித்ததற்கு பின்னாலும் அவன் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

மரணித்த மனிதனை நல்ல முறையில் குளிபாட்டுவதும்.தூய்மையான துணியில் கஃபனிடுவதும்,நறுமணம் பூசுவதும்,ஜனாஸா தொழுவைப்பதும்,நான்கு நபர்கள் தங்களின் தோள்களில் சுமந்து சென்று கபுருஸ்தானில் அடக்கம் செய்வதும் மனித கண்ணியத்தை காட்டுகிறது.

ஒருமுறை ஒரு யூதனின் ஜனாஸா கடந்து செல்லும்போது கண்மணி நாயகம் ﷺஅவர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள்.

இது ஒரு யூதனின் ஜனாஸா தானே? (இதற்கு தாங்கள் நிற்க வேண்டுமா?)என்று சஹாபாக்கள் கேட்டதற்கு  

:’’اَلیسُت نفساً‘‘  (مشکوٰۃ شریف، ص: ۱۴۴۔۱۴۷)

அதுவும் ஒரு மனித உயிர் இல்லையா?என்று நாயகம் ﷺஅவர்கள் பதில் கூறினார்கள் (நூல்;மிஷ்காத்) 

அறியாமை கால அரபுகள் போர்களில் எதிரிகளோடு மனிதநேயமற்ற முறையில் கொடூரமாக நடந்து கொண்டனர்.உடல் உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டுவதும்.எதிரியின் மண்டை ஓட்டில் மது ஊற்றி அருந்துவதும் அவர்களின் கொடூர பழக்கமாக இருந்தது.

இஸ்லாம் இதுப்போன்ற மனிதநேய மீறல்களை கடுமையாக தடை செய்கின்றது.மரணித்தவரின் உடலோடு எந்த விதத்திலும் மரியாதை குறைவாக நடப்பதை இஸ்லாம் தடை செய்கிறது.

அன்னை ஆயிஷா (ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள் 

"மரணித்தவனின் எலும்பை உடைப்பது உயிரோடு இருக்கும் மனிதனின் எலும்பை உடைப்பது போன்றதாகும்."என்று கண்மணி நாயகம் ﷺஅவர்கள் கூறினார்கள்(مشکوٰۃ شریف)

போர்களில் கூட நேயத்தையும் நீதத்தையும் கடைபிடிக்க இஸ்லாம் வழிவகை செய்கிறது.

போர் புரியும் நாட்டிலுள்ள பெண்கள்,வயோதிகர்,சிறுவர் இவர்களை கொள்வது கூடாது.எதிரி நாட்டின் வளங்களை சுரண்டுவதும்,செடி கொடி மரங்களை வெட்டுவதையும் இஸ்லாம் தடை செய்கிறது. 

இஸ்லாத்தின் மனித மகத்துவத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று :இஸ்லாத்தை எடுத்துரைக்க வந்த அனைத்து ரசூல்மார்கள்,நபிமார்கள் அனைவரும் மனிதர்களே ஆவார்கள்.

இதனை ஏற்க மனித மனம் மறுத்ததன் விளைவாக ச நபிமார்கள் சிலரை இறைவன் என்றும் இறைவனின் குமாரர் என்று வாதிட்டனர்.

யூதர்கள் நபி தாவூத்,நபி யஃகூப்,நபி உஸைர் (அலைஹிம்)ஆகியவர்களை அல்லாஹ்வின் குமாரர் என்றார்கள்.  கிறிஸ்தவர்கள் நபி ஈஸா(அலை)அவர்களை அல்லாஹ்வின் குமாரர் என்றார்கள்.

கண்மணி நாயகம் ﷺஅவர்கள் கூறினார்கள்;படைப்பினங்கள் அல்லாஹ்வின் குடும்பம் ஆகும்.அல்லாஹ்விடம் படைப்பினங்களில் பிரித்திற்குறிய மனிதர்,எவர் அல்லாஹ்வின் குடும்பத்தினரோடு அழகிய முறையில் நடந்துக்கொள்கிறாரோ அவரே ஆவார்.(مشکوٰۃ شریف)

திருமறை குர்ஆன் சமூக ஒற்றுமை,மனிதநேயத்தை மனித மனங்களில் பதிய வைப்பதற்காக குர்ஆனில் பல இடங்களில் ’’یایّھا النّاس‘‘ மனித இனமே! என்றும் ’’یا بنی آدم‘‘ ஆதமின் மக்களே! என்றும் திரும்ப திரும்ப கூறுவதன் வாயிலாக மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் என்ற கருத்தை பதியவைக்கிறது.

இஸ்லாத்தை ஏற்ற மக்களை நோக்கி ’’ یایّھاالذین آمنوا‘‘ முஃமின்களே! என்கிறது காரணம் ஈமான் என்பது ஜாதி மத இன நிற பேதங்களை கடந்து மனிதனை மனிதநேயமிக்க நல்லவனாக மாற்றிவிடும்.

وَقَالَ « إِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ حَرَامٌ عَلَيْكُمْ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِى شَهْرِكُمْ هَذَا فِى بَلَدِكُمْ هَذَا أَلاَ كُلُّ شَىْءٍ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ تَحْتَ قَدَمَىَّ مَوْضُوعٌ وَدِمَاءُ الْجَاهِلِيَّةِ 

يَا أَيُّهَا النَّاسُ ، أَلاَ إِنَّ رَبَّكُمْ وَاحِدٌ ، وَإِنَّ أَبَاكُمْ وَاحِدٌ ، أَلاَ لاَ فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى عَجَمِيٍّ ، وَلاَ لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ ، وَلاَ أَحْمَرَ عَلَى أَسْوَدَ ، وَلاَ أَسْوَدَ عَلَى أَحْمَرَ ، إِلاَّ بِالتَّقْوَى أَبَلَّغْتُ ، قَالُوا : بَلَّغَ رَسُولُ اللهِ ، 

கண்மணி நாயகம்  (ஸல்) அவர்கள் சொன்னார்கள்;அறியாமைக்கால அனைத்து பழக்கவழக்கங்களும் என் பாதத்திற்கு கீழே புதைந்து விட்டன.

மக்களே!நிச்சயமாக உங்களின் அல்லாஹ் ஒருவனாக இருக்கிறான்.உங்களின் தந்தையும் ஒருவராக இருக்கிறார். ஒரு அரபிக்கு அரபி அல்லாதவரை விடவோ,ஒரு அரபி அல்லாதவருக்கு  அரபியை விடவோ எந்த சிறப்பும் கிடையாது.

ஒரு வெள்ளையனர் கருப்பரை விட சிறப்பானவர் அல்லர். சிறப்பின் அளவுகோல் இறையச்சத்தில் உள்ளது.அனைத்து முஸ்லிம்களும் சகோதரர்கள் ஆவார்கள்.

அடிமைகளுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.நீங்கள் உண்ணுவதையே அவர்களுக்கும் கொடுங்கள்.நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் கொடுங்கள்.

இஸ்லாமிய போதனைகளில் ஒன்று முஸ்ஸிம்கள் அனைவரும் சகோதரர்கள் ஆவார்கள்.குடும்ப,குலம்,கோத்திரம்,நிறபேதம்,மொழி அனைத்தும் வெறுமனே அடையாளங்களும்,ஒருவருக்கொருவரை எளிதில் அறிந்துக்கொள்வதற்காகவே ஆகும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه و سلم

وَكُونُوا عِبَادَ اللَّهِ إخْوَانًا، الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ،. [رَوَاهُ مُسْلِمٌ].

(நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் அடியார்கள்)அல்லாஹ்வின் அடியார்கள் அனைவரும் உங்களுக்கிடையில் சகோதரர்களாக ஆகுங்கள்.ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரர் ஆவார்.

நம் அகம் சார்ந்த தேடல் நிகழும்போது புறம் சார்ந்த மனிதர்களை நினைக்க மறந்துவிடுகின்றோம். ஆனால் அகமும் புறமும் சார்ந்ததுதான் வாழ்க்கை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

ஒருவரின் துயர் கண்டு துடித்தெழுவது மட்டும் உண்மையான மனித நேயமாகாது. அதனை செயல் வழி காட்ட வேண்டும் என்பதனை உணர வேண்டும்.மனிதநேயத்தை வெறுமனே போதனைகளாக மட்டும் இல்லாமல் நடைமுறைப்படுத்தி காட்டியது இஸ்லாம்.

சக மனிதனை முகமலர்ச்சியோடு சந்திப்பது ஒரு தர்மமே என்ற உயர்ந்த தத்துவத்தை கூறி இஸ்லாம் மனிதநேயம் பேசுகின்றது.

عن جابر بن عبد الله، قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((كلُّ معروف صدقة، وإنَّ من المعروف أن تلقى أخاك بوجهٍ طَلْق  ))

நற்காரியங்கள் அனைத்துமே தர்மமாகும்.உன் சகோதரனை மலர்ந்தமுகத்துடன் நீ சந்திப்பதும் நற்கருமங்களில் உள்ளதாகும்.

உலகில் வாழக்கூடிய முகம் தெரியாத நபர்கள் நம்மை பார்த்து சிரிப்பது கூட ஒரு மனிதநேயம் தான். மனிதநேயம் என்பது சக மனிதர்களின் மீது பாசம் வைப்பது, கருணை, இரக்கம் காட்டுவது போன்றதாகும். மனிதர்கள் என்றாலே அவர்களுக்கு பிரச்சனை இருப்பது இயல்புதான். அந்த பிரச்சனைகளை பார்த்துவிட்டு அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியினை செய்யலாம், பசியால் வாடுபவர்களுக்கு உணவு வாங்கி கொடுக்கலாம், தாகத்தில் தவிப்பவர்களுக்கு நீர் கொடுத்தல், இது போன்ற மனிதநேயமிக்க செயல்களை செய்தால் மனிதருக்குள் ஒற்றுமை நிலை அதிகரிக்கும்.

மனிதநேயம் என்பது மனிதனின் உயர்ந்த குணம், உயர்ந்த கண்ணியம். அது இல்லாமல், மனிதன் ஒரு விலங்கு மட்டுமே என்பதனை உணர்ந்து மனிதநேயத்துடன் வாழ வேண்டும்.

இஸ்லாத்தின் சட்டங்களும்,வணக்க வழிபாடுகள் சமத்துவத்தையும்,சகோதரத்துவத்தையும்,மனித நேயத்தையும் பறைசாற்றுகின்றன.

தொழுகையில் ஸஃப்பில் அணிவகுப்பாக முஸ்லிம்கள் தோளோடு தோள் சேர்ந்து நிற்கின்றனர்.அதில் அரசன் ஆண்டி அறிஞர் பாமரர் என்கிற எந்த பாகுபாடும் இன்றி அனைவரும் ஓரணியில் சமத்துவத்தோடு நிற்கும் காட்சியை காணலாம்.

நோன்பு காலங்களில் மஸ்ஜிதுகளில் நோன்பு திறக்கும் இஃப்தார் வேலையில் ஏழை,பணக்காரன் என்கிற பாகுபாடின்றி அனைவரும் ஒன்றாக கூடி நோன்பு திறக்கும் நிகழ்விலும் இதை காணலாம்.

ஹஜ்ஜில் ஹாஜிகள் அனைவரும் இஹ்ராம் எனும் ஒரே ஆடை அணிந்து பல நாட்டவர் பல இனத்தவர் பல நிறத்தவர் அனைவரும் ஒன்று கூடி ஹஜ் செய்யும் அந்த வேலையில் சகோதரத்துவம் சமத்துவம் ஒற்றுமை போன்ற உயர் பண்புகளை காணலாம்.

இஸ்லாமிய மார்க்கமே இறைவன் அருளிய மிகப் பெரும் அருட்கொடையாகும்.இங்கே ஜாதி மத இன நிற மொழி போன்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவரும் சமத்துவத்தோடும் சகோதரத்துவத்தோடும் வாழ வழி செய்கிறது.இந்த மனிதநேயத்தையும்,சமத்துவத்தையும் ஒருமைப்பாட்டையும் வேறந்த மதத்திலும் காண்பது அரிது.

عن عبد الله بن عمرو قال: قال رسول الله صلى الله عليه وسلم: «الراحمون يرحمهم الرحمن، ارحموا من في الأرض يرحمكم من في السماء، الرحم شجنة من الرحمن، فمن وصلها وصله الله ومن قطعها قطعه الله»

கண்மணி நாயகம்  (ஸல்) அவர்கள் சொன்னார்கள்;இறக்கம் காட்டுபவரின் மீது அல்லாஹ் இறக்கம் காட்டுகிறான்.எனவே நீங்கள் பூமியில் உள்ளவர்களின் மீது இறக்கம் காட்டுங்கள்.உங்களின் மீது வானத்தில் உள்ளவன் இறக்கம் காட்டுவன்.(صحیح بخاری)ا

மனிதர்களின் மீது அன்பு,கருனை காட்டுவதற்கு இஸ்லத்தில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

قال رسول الله صلى الله عليه وسلم:

وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَا يَدْخُلُ الْجَنَّةَ إِلَّا رَحِيمٌ، قَالُوا: كُلُّنَا رُحَمَاءُ، قَالَ: لَيْسَ بِرَحْمَةِ أَحَدِكُمْ خُوَيِّصَتَهُ حَتَّى يَرْحَمَ النَّاسَ(کنزالعمّال، ابواب الاخلاق)

கண்மணி நாயகம்  (ஸல்) அவர்கள் சொன்னார்கள்;கருணை காட்டுபவரை தவிர வேறு எவரும் சுவனத்தில் நுழைய முடியாது.

சஹாபாக்கள் சொன்னார்கள்;நாங்கள் அனைவரும் கருணை காட்டுகின்றோம்.அதற்கு நபி அவர்கள்;நெருக்கமானவருக்கு மட்டும் கருணை காட்டுவது அல்ல மக்கள் அனைவரின் மீதும் கருணை காட்டுவதாகும். 

சாதி மத இன வர்க்க பேதங்களை கடந்து அனைவரும் ஓர் தாய் தந்தையின் மக்கள் என்பதனை உணர்த்தி சகோதரத்துவம்,சமத்துவத்தை மனித இனம் கடைப்பிடிக்கும் போது தான் மனித நேயம் வளரும் என்பதே இஸ்லாத்தின் வழிகாட்டுதலாகும்.

இஸ்லாம் அன்றி மனிதநேயம் மலர வாய்பேயில்லை என்பதே யதார்த்தம். இதை புரியும் ஆற்றலை மனித குலத்திற்கு இறைவன் தந்தருள்வானாக! ஆமின்.

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.



No comments:

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...