இறை சட்டமே நிறை சட்டம்.
اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا فَمَنِ اضْطُرَّ فِىْ مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّاِثْمٍۙ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 5:3)
அல்லாஹுத்தஆலா தன்னிறைவு பெற்ற சன்மார்க்கமாகிய தீனுல் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக நமக்கு வழங்கியுள்ளான்.இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகள்,வாழ்க்கை நெறிமுறைகள,கடந்த கால வரலாற்றுப் படிப்பினை, வருங்கால செய்தி குறித்த முன்னறிவிப்பு, எல்லா மனிதர்களுக்கும்,எல்லா காலங்களுக்கும், எல்லா இடங்களுக்கும் இசைந்து கொடுப்பதிலும்,பொருந்திப்போவதிலும் தன்னிறைவு பெற்ற பல சிறப்புகளை தாங்கிய இஸ்லாம் நிறைவான மார்க்கமாகும்.
அல்லாஹுத்தஆலாவிடம் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம் ஆகும்.
அல்லாஹுத்தஆலா அருளிய திருமறை குர்ஆன் மற்றும் அண்ணலம் பெருமானார் ﷺஅவர்களின் வாழ்க்கை நெறியில் இருந்து வழங்கிய ஷரிஅத் சட்டதிட்டங்களை பேணி நடப்பது ஒவ்வொரு இஸ்லாமியனின் மீதும் கடமையாகும்.வாழ்வின் எல்லா தருணங்களையும் ஷரிஅத் சட்டங்களே முஸ்லிம்களை வழி நடத்த முடியும்.
உடலுக்கு உயிர்ப்போல இஸ்லாமியனாக வாழ இஸ்லாமிய ஷரிஅத் அவசியமாகும். இஸ்லாமியன் உலகில் எந்த மூளையில் வாழ்ந்தாலும் அந்நாட்டின் சட்டங்களுக்கு கீழ்படிந்து வாழ இஸ்லாம் வழிகாட்டுகிறது.
ஆனால் ஒரு நாட்டின் சட்டம் இஸ்லாமிய ஷரிஅத்திற்கு மாற்றமாக நடக்க நிர்பந்தித்தால் உயிரேப்போனாலும் ஒரு முஸ்லிம் இஸ்லாத்திற்கு மாறுசெய்யமாட்டான்.
இஸ்லாமியர்கள் மட்டுமல்ல உலகில் உள்ள சமயத்தவர் அனைவரும் தங்களின் வேதங்களையும்,மத கோட்பாடுகளையும் உயிரையும் விட மேலாக மதிக்கின்றனர்.
இஸ்லாமியர்கள் தங்களின் உயிரை விடவும் மேலாக மதிக்கக் கூடிய இறை வேதம் குர்ஆனும்,அண்ணலம் பெருமானார் ﷺஅவர்களின் நபி மொழிகளும்,இஸ்லாமியர்கள் எப்படி வாழ வேண்டும்,எப்படி வாழக்கூடாது,எது ஹலால்,எதுஹராம் என்பதனை தெளிவாக வழிகாட்டி விட்டன.
இஸ்லாம் அனுமதிக்கும் ஒன்றை உலகம் முழுக்க எதிர்த்தாலும் அதனை இஸ்லாமியர்கள் ஏற்க மாட்டார்கள்.அதேபோல தடை செய்த ஒன்றை உலகமெல்லாம் சேர்ந்து அதனை செய்ய நிர்பந்தித்தாலும் உயிரே போனாலும் அதனை செய்ய மாட்டார்கள்.
இஸ்லாம் தோன்றிய காலத்தில் இருந்தே எதிர்ப்புகளை கையாண்டு வருகின்றது.இன்னும் சொல்லப்போனால் இஸ்லாத்தின் தனித்துவமே அது எதிர்ப்புகளோடு தான் வளரும்.எதிர்க்க எதிர்க்க அதிகமாக வளரும்.
வரலாற்றில் நபிமார்கள் தொடங்கி நம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரையிலும்.இன்னும் இன்று வரையிலும் இஸ்லாம் எதிர்க்க எதிர்க்க மேம்பட்டு வளர்ந்து கொண்டே இருக்கின்றது.தோல்வியை ஒருபோதும் சந்திக்கவில்லை.
நபி மூஸா (அலை)அவர்களை தோற்கடிப்பதற்காக ஃபிர்அவ்ன் உலகில் உள்ள சூனியக்காரர்களை எல்லாம் ஒன்று திரட்டினான் இறுதியில் நடந்தது என்ன?
يقول ابن كثير فى "البداية والنهاية" عن هؤلاء السحرة: "قال عبد الله بن عباس وعبيد بن عمير: كانوا من أول النهار سحرة فصاروا من آخره شهداء بررة".
இப்னு கஸீர்(ரஹ்)அவர்கள் இப்னு அப்பாஸ்(ரலி)அவர்களின் ஒரு அறிவிப்பில் :அந்த வரலாற்றை சுருக்கமாக ஒரே வரியில்"பகலின் ஆரம்ப பொழுதில் சூனியக்காரர்களாக இருந்தவர்கள்,இறுதியில் நல்லவர்களாக,ஷஹீதுகளாக மாறிப்போனார்கள்.
இஸ்லாத்தை எதிர்த்தவர்கள் எல்லாம் இஸ்லாத்திற்கு முன் சரணாகதி அடைந்தார்களே தவிர அவர்கள் வெற்றிப்பெற்றதாக சரித்திரம் இல்லை.
100 சினை போட்ட ஒட்டகை பரிசு என்ற அறிவிப்பால் நபிﷺஅவர்களின் தலையை கொய்தப்புறப்பட்ட ஹழ்ரத் உமர் (ரலி)அவர்கள் முன்றாம் நாளில் இஸ்லாத்தை ஏற்றார்.
இனி யாராவது ஒருவன் இஸ்லாமியனை தீண்ட நினைத்தாலும் அவன் வாரிசில் ஒன்றை இழக்க நேரிடும் என கர்ஜித்தார்கள் உமர்(ரலி)அவர்கள் என்கிறது வரலாறு.
இஸ்லாத்தை அழிக்க நினைத்த எத்தனையோ முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலே முடிந்திருக்கின்றன. குறிப்பாக இந்தநூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்களில் அக்பர் என்பவர் "ஒரே நாடு" ஒரே சட்டம் ஒரே மதம் என்று சொல்லி "தீனே இலாஹி"என்ற பெயரில் ஒரு மதத்தை உருவாக்கி இனி தம் ஆட்சியில் எல்லா மதத்தவரும் "தீனே இலாஹி"யே பின்பற்றி நடக்க வேண்டும் என்று நிர்பந்தித்தார்.துவங்கிய சில தினங்களிலே நாடெங்கும் மூர்க்கமாக எதிர்த்த இஸ்லமியர்களின் எழுச்சியால் அதன் அடிச்சுவடே தெரியாமல் இன்று "தீனே இலாஹி"பாட புத்தகங்களில் இரண்டு வரிகளில் சுருங்கிப்போனது.
இவைகள் இஸ்லாம் பல எதிர்ப்புகளுக்கிடையில் அதன் பாரம்பரியத்தோடு வளர்ந்ததற்கான ஆதாரங்களில் சில...
இன்றும் கூட சர்வதேச அளவில் இஸ்லாம் நிறைய நெருக்கடிகள்,நிறைய பிரச்சனைகளை எதிர்க்கொண்டுதான் இருக்கின்றது.
பல நாடுகளில் இஸ்லாமியர்கள் புர்கா அணிய தடை-தாடி வைக்க தடை-மஸ்ஜிது கட்ட தடை ,பல நாடுகளில் முஸ்லிம்களுக்கு பயங்கரவாத முத்திரை என்றெல்லாம் ஊடகங்களை கையில் வைத்துள்ள பாசிச சக்திகளால் நிறைய கட்டவிழ்த்து விடப்படுகின்றன.
இவையனைத்தையும் தாண்டி இஸ்லாத்தின் வளர்ச்சி விகிதம் குறைந்திருக்கின்றதா என்றால் இல்லை முன்னெப்போதையும் விட இஸ்லாம் இன்னும் வீறுகொண்டு வளர்கின்றது.
அந்த வரிசையில் பொது சிவில் சட்டதை வரும் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பு அமல்படுத்த அல்லது அதற்கான முயற்சிகளில் மத்தியில் உள்ள ஒன்றிய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.இது இஸ்லாமியர்களின் தனி சட்டங்களாக உள்ள திருமணம்,விவாகரத்து,வழிபாட்டுரிமை,சொத்துபங்கீடு,வக்ஃப் உரிமை போன்ற உரிமைகளை பறிக்க கொண்டுவரும் தந்திர முயற்சியே அன்றி வேறில்லை.
ஒன்றிய அரசு பொது சிவில் சட்டத்தை புகுத்த நினைப்பது,நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலே அன்றி வேறில்லை. இது ஒருமைப்பாட்டை வேரோடு அறுக்கும் செயலாகும்.
பொதுசிவில் சட்டம் என்ற பெயரில், முஸ்லிம்களாக வாழும் உரிமை பறிக்கப்பட்டால், முஸ்லிம்கள் அதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். பொங்கி எழுவார்கள். உலகத்துச் சலுகைகள் எதையும் அவர்கள் இழப்பார்கள்.
ஆனால் முஸ்லிம்களாக வாழ்வதற்கே தடை என்றால் இஸ்லாத்தை விட உயிர் பெரிதில்லை என்பதை நிரூபித்துக் காட்டுவார்கள். அத்தகைய நிலை ஏற்பட்டால் எந்தச் சக்தியாலும் அவர்களைத் தடுக்க முடியாது.
பொது சிவில் சட்டம் கோரிக்கை எப்போது எழுந்தது?
பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்து, முஸ்லிம்களுக்கென தனித்தனியே தனிநபர் சட்டங்கள் இயற்றப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெண்ணுரிமை ஆர்வலர்களால் முதன் முதலில் பொது சிவில் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. பெண்ணுரிமை, பாலின சமத்துவம், மத சார்பின்மை போன்றவற்றை அவர்கள் முன்வைத்தனர். பிரிட்டிஷ் ஆட்சியில் பெண்களுக்கு, குறிப்பாக இந்து விதவைகள் நிலையை மேம்படுத்த சில சட்டங்கள் இயற்றப்பட்டன.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு விரும்பியும் கூட, பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முடியவில்லை. பலவாறான சமரசங்களுக்குப் பிறகு இந்து வாரிசுமைச் சட்டம் 1956-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
1985-ம் ஆண்டு ஷா பானோ வழக்கில், முஸ்லிம் பெண்ணான பானோ தனது முன்னாள் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெறலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில்தான், நீதிபதிகள் 'Uniform' என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தனர். அதன் பின்னரே பொது சிவில் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் அரங்கில் வலுப்பெற்றது. பாரதிய ஜனதாக் கட்சி அதனை வலுவாக முன்னெடுத்தது.
பொது சிவில் சட்டம் - ஆதரவாளர்கள் கூறுவது என்ன?
பொது சிவில் சட்டத்தை ஆதரிப்போர், அது உண்மையான மத சார்பின்மையை ஊக்குவிக்கும் என்று கூறுகின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுமே சட்டத்தின் முன் சமமாக ஒரே மாதிரியாக நடத்தப்படுவார்கள் என்பது அவர்கள் வாதம்.
அத்துடன், பொது சிவில் சட்டம் பெண்களுக்கு கூடுதல் உரிமைகளைக் கொடுக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். குடும்ப வாழ்க்கையில் ஆணாதிக்கத்தை உறுதிப்படுத்தும் மத ரீதியான பழைய விதிகளை உடைத்தெறிந்து, பொது சிவில் சட்டம் பெண்களுக்கு சம அதிகாரத்தை தரும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
பொது சிவில் சட்டம் - எதிர்ப்பாளர்கள் கூறுவது என்ன?
மதம் என்பது நம்பிக்கை சார்ந்தது. அதன் அடிப்படையிலான விதிகளுக்கு மாறாக வேறொன்றை பின்பற்ற நிர்பந்திருப்பது எப்படி சரியாக இருக்க முடியும்? என்னுடைய மதம் எது என்று தீர்மானிக்க அரசு யார்? என்று எதிர்ப்பாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
"நாங்கள் இந்திய அரசியல் சாசனத்தால் ஆளப்படுகிறோம், என்னுடைய மதத்தை பின்பற்ற அரசியல் சாசனம் சுதந்திரத்தை வழங்கியுள்ளது" என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
இதைத்தான் இஸ்லாமும் கூறுகிறது.
لَاۤ اِكْرَاهَ فِى الدِّيْنِۙ
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; (அல்குர்ஆன் 2:256)
திருமண சட்டம் எதற்கு?
ஆண் பெண் இடையே ஏற்படும் உறவுமுறைக்கு பெற்றவர்களின் சம்மதமும் சமூக அங்கீகாரமும் அவசியமானதாக உள்ளது. சமுதாயத்தில் யாரும் தனித்திருந்து இன்புற்று வாழ முடியாது. எனவே அனைவரின் ஆசியுடன் செய்துகொள்ளும் உறவுமுறையே திருமணம் என்பதாகும். மனமுவந்து திருமணம் செய்து கொள்ள, இஸ்லாமிய சமூக அமைப்பு/ஆட்சியமைப்பு வரையறைகளுடன் கூடிய சட்டங்களைப் பிறப்பிக்க வேண்டும். இத்தகைய ஏற்பாடுகளின்றி அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கூடிக் கொள்ளலாம் அல்லது இணைந்து வாழலாம் என்றிருந்தால் காலப்போக்கில் பெண்கள், ஆண்களின் காம வேட்கைக்கு இரையாகி விடுவார்கள். மேலும் பெண்கள் விலைப் பொருளாக மாறி விடுவார்கள். எனவே கட்டுக் கோப்பான சமூக அமைப்பு சீர்கெடும். பெண்களுக்கு சமுதாயத்தில் சம அந்தஸ்து கிடைக்காது. எனவே யார் யாருடைய கணவன் அல்லது யார் யாருடைய மனைவி என்பதற்கு வாழ்நாள் காலத்து ஒப்பந்த வாக்கு மூலத்தை பதிவு செய்வது அவசியமான ஒன்றாகும். இதுவே நிக்காஹ் என்பதாகும்.
இதைப் படிப்பவர்களுக்கு சில சந்தேகங்கள் எழலாம். அதாவது மேலை நாடுகளிலும், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பாலியல் உறவுமுறைக்கு கட்டுப்பாடு எதுவும் இல்லையே. இருந்தும் அவர்கள் சிறப்பாகத் தானே வாழ்கிறார்கள் என்று கேட்கலாம். ஆனால் ஒரு விஷயத்தை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இரண்டாம் உலக போருக்குப் பின் மேலை நாடுகளும் ஜப்பான் போன்ற நாடுகளிலும் தம் இழப்பைச் சரி செய்ய அல்லும் பகலும் அயராது உழைத்து சில ஆண்டுகளிலேயே பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்று விட்டார்கள். இந்த வளர்ச்சி அவர்களுடைய காம களியாட்டங்களைத் தாக்குப் பிடித்து வருகின்றன. ஆனால் இந்நிலை வெகுநாட்களுக்கு நீடிக்க வாய்ப்பில்லை. அவர்களுடைய வீரம், ஆண்மை வீரியம் மற்றும் தொலை நோக்குப் பார்வை போன்றவை குன்றி வருகின்றன. அவர்கள் வெறும் இயந்திர வாழ்வையே வாழ்ந்து வருகிறார்கள். இதன் விளைவாக அவர்களுக்கு வேறு கோணங்களில் பிரச்னைகள் ஏற்பட்டு அவர்கள் அழிவுக்கு ஆளாவார்கள். மேலும் வருங்கால சந்ததியர்களுக்கு உடல் ரீதியாகவும் அறிவுத்திறன் விஷயத்திலும் பாதிப்புகள் ஏற்படும்.
அப்படியிருக்க பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தால் இரண்டு சாட்சிகள் தேவையில்லை. ஈஜாப் கபூல் . மஹர் தேவையில்லை அரசு பத்திரத்தில் பதிவு செய்தால் போதும் என்ற நிலை ஏற்படுமேயானால் திருமண வாழ்க்கை சீர்கெட்டு விடும்.
எனவே திருமணம் சம்பந்தமாக திருக்குர்ஆன் வரையறையின் பிரகாரம் நடப்பது தான் சிறந்தது.
திருமணத்திற்கு ஈஜாப் கபூல் அவசியம்.
கன்ஸா பின்த் கிதாம் அல்அன்சாரியா(ரலி) கூறினார்
கன்னி கழிந்த பெண்ணான என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்துவைத்தார்கள். எனக்கு இதில் விருப்பமிருக்கவில்லை. எனவே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் போ(ய் என் விருப்பத்தைச் சொன்)னேன். அத்திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள். (ஸஹீஹ் புகாரி : 5138. )
விருப்பமில்லாத பெண்ணை மணக்கலாமா?
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا يَحِلُّ لَكُمْ أَن تَرِثُوا۟ ٱلنِّسَآءَ كَرْهًۭا ۖ وَلَا تَعْضُلُوهُنَّ لِتَذْهَبُوا۟ بِبَعْضِ مَآ ءَاتَيْتُمُوهُنَّ إِلَّآ أَن يَأْتِينَ بِفَٰحِشَةٍۢ مُّبَيِّنَةٍۢ ۚ وَعَاشِرُوهُنَّ بِٱلْمَعْرُوفِ ۚ
4:19. நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப்பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது கூடாது, பகிரங்கமான கெட்ட செயலை அவர்கள் செய்தாலொழிய, பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் (துன்பம்கொடுத்து) தடுத்து வைக்காதீர்கள்.
விளக்கம் :
(1) உங்களை விரும்பாத பெண்களைப் பலவந்தமாக திருமணம் செய்து கொள்ளக் கூடாது.
(2) மேலும் நீங்கள் மணமுடித்துக் கொண்ட பெண்களுக்கு அளித்துள்ள பொருட்களைத் திரும்பப் பெறும் பொருட்டு, அவர்களை உங்களிடமே நிறுத்திக் கொண்டு துன்புறுத்தக் கூடாது.
(3) இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் ஆண் பெண் ஆகிய இருவரும் மனமுவந்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதே.
(4) எனவே மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவரும் ஒருவரையொருவர் நேரில் பார்த்து மனதிற்குப் பிடித்திருந்தால், மணமுடித்துக் கொள்ளலாம்.
(4) மேலும் திருமண விஷயத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் மனப் பக்குவத்தை அவ்விருவரும் அடைந்திருக்க வேண்டும்.
ஸ்பைனில் முஸ்லிம்களின் வீழ்ச்சியின் ஆரம்பம்.
ஸ்பைனில் முஸ்லிம்களை வீழ்த்துவதற்கு கையில் எடுத்த முதல் ஆயுதம் திருமணத்தின் சட்டம் தான் யார் யாரெல்லாம் இஸ்லாத்தின் பிரகாரம் திருமணம் செய்து உள்ளீர்களோ அவர்கள் அனைவரும் அரசாங்கத்திடம் பதிவு செய்ய வேண்டும் அப்படி பதிவு செய்தால் மட்டுமே திருமணம் செல்லுபடி ஆகும் என்று சொன்னார்கள் முஸ்லிம்கள் அனைவரும் சாதாரண விஷயம் தானே என்று நினைத்து பதிவு செய்தார்கள் பிறகு இரண்டாவதாக அரசாங்கத்திடம் பதிவு செய்வது தான் உண்மையான திருமணம் ஷரியத் பிரகாரம் செய்யக்கூடிய திருமணம் திருமணமாக ஆகாது என்று சொன்னார்கள். அன்றிலிருந்து முஸ்லிம்களின் வீழ்ச்சி ஆரம்பமானது.
தலாக் ஒர் பார்வை..
இஸ்லாம் மார்க்கத்தில் ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தலாக் எனும் விவாகரத்துச் செய்யும் உரிமை நாட்டில் மிகப்பெரிய விவாதப் பொருளாக ஆக்கப்பட்டுள்ளது.
தலாக் எனும் விவாகரத்துச் சட்டத்தினால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற காரணத்தைச் சொல்லியே இது விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறது.
கணவன் மனைவியர் சேர்ந்து வாழ்ந்து விட்டு பிரியும் போது பெரும்பாலும் பெண்கள் பாதிக்கப்படுவார்கள். சில வேளை ஆண்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இந்தக் காரணம் அனைவருக்குமானதே தவிர முஸ்லிம்களுக்கு மட்டும் உரியது அல்ல. முஸ்லிம் ஆண்கள் தமது மனைவியரை விவாகரத்து செய்தால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவது போல், இந்து ஆண்கள் விவாகரத்து செய்தால் இந்துப் பெண்கள் பாதிக்கப்படுவார்கள். கிறித்தவ ஆண்கள் விவாகரத்துச் செய்தால் கிறித்தவப் பென்கள் பாதிக்கப்படுவார்கள். எந்த மதத்தைச் சேர்ந்த ஆண்கள் விவாகரத்து செய்தாலும் அந்தந்த மதத்துப் பெண்கள் பாதிக்கப்படுவார்கள். மதத்தை நம்பாதவர்கள் விவாகரத்துச் செய்தாலும் அவர்களின் மனைவியர் பாதிக்கப்படுவார்கள்.
பொதுவான இந்தப் பிரச்சனையில் கருத்து சொல்பவர்கள் நியாயமானவர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? இந்தியாவில் யாரும் விவாகரத்து செய்யக் கூடாது என்று கூற வேண்டும்.
அப்படி ஒருவரும் கூறுவதில்லை. கூற முடியாது. ஏனெனில் திருமண உறவு என்பது தாய், தந்தை, அண்ணன் தம்பி போன்ற பிரிக்க முடியாத உறவு அல்ல.
ஆண்களும் பெண்களும் தங்களின் தேவைகள் சிலவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஏற்படுத்திக் கொள்ளும் உறவாகும்.
திருமணம் செய்த பின்னர் பெரும்பாலும் தம்பதிகள் மகிழ்வோடு வாழ்கிறார்கள். சிலர் குறைகளைச் சகித்துக் கொண்டு வாழ்கிறார்கள். மிகச் சிலர் சேர்ந்து வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த நிலைக்கு ஆளானவர்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை இல்லாவிட்டால் அவர்களை எந்தச் சட்டத்தின் மூலமும் சேர்த்து வைக்க முடியாது.
விவாகரத்து செய்ய முடியாது என்று வலியுறுத்தினால் அந்த ஆண் பெயருக்குத் தான் அவளுக்குக் கணவனாக இருப்பான். அவளுடன் இல்லறம் நடத்த மாட்டான். வேண்டாத மனைவி என்பதால் சித்திரவதை செய்வான். மனைவியைக் கவனிக்காமல் கள்ள உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு மனைவியை மனம் நோகச் செய்வான்.
எனவேதான் விவாகரத்து மற்றும் ஜீவனம்சம் கொடுக்கும் விஷயத்தில் மார்க்கம் அழகிய முறையில் வழிகாட்டியுள்ளது. பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தால் விவாகரத்து விஷயத்தில் இன்னும் பல குற்றங்களுக்கு வழி வகுத்து விடும்.
வக்ஃப் ஒர் பார்வை.
வக்ஃபு என்பது ஒரு நிலம் அல்லது கட்டிடத்தை ஏதாவது நல்ல காரியத்திற்காக அர்ப்பணித்து அதன் மூலம் வரும் வருமானத்தை அந்த நல்ல காரியத்திற்காக செலவிடுவதற்கு சொல்லப்படும். அந்த சொத்து அப்படியே இருக்கும். பணத்தை ஏழைகளுக்கு செலவிட்டாலோ அல்லது ஒரு நிலத்தை அனாதைக்கு கொடுத்து விட்டாலோ அத்துடன் அந்த தர்மம் முடிந்துவிடும். பிறகு அந்த அனாதை வயதுக்கு வந்த பின் அந்நிலத்தை விற்கவும் செய்யலாம். அல்லது வேறு யாருக்கும் அன்பளிப்பாகவும் கொடுத்து விடலாம். ஆனால் வக்ஃபு என்பது கியாமத் வரை அசல் அப்படியே இருக்கும். அதன் வருமானத்தை மட்டும் பாத்தியப்பட்டவர்கள் அனுபவிப்பார்கள்.
உமர் (ரலி) அவர்களின் வக்ஃபின் மூலம் அதற்குரிய சட்டங்களை அறிய முடிகிறது. உமர் (ரலி) அவர்கள் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றுக் கொண்டார்கள். நபியவர்களிடம் வந்து இப்பொழுது நான் ஒரு நிலத்தைப் பெற்றிருக்கிறேன். இதைவிட விலையுயர்ந்த ஒரு நிலத்தை நான் பெற்றதில்லை. எனவே தங்களது உத்தரவின் படி செயல்படுகிறேன், என்று கூறினார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் விரும்பினால் அதன் அடிமனையை தடுத்து வைத்துக்கொண்டு (அதிலிருந்து வரும் லாபத்தை) தர்மம் செய்து விடுங்கள், என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்களும் அவ்வாறே தர்மம் செய்து விட்டார்கள். இந்நிலம் விற்கப்படக் கூடாது; அன்பளிப்பாக வழங்கடக்கூடாது; வாரிசுரிமை கோரப்படக்கூடாது, என்று கூறி ஏழைகள், உறவினர்கள், அடிமைகள், விருந்தாளிகள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்கும் அல்லாஹ்வின் பாதையிலும் செலவிடப்பட வேண்டுமென்று தர்மம் செய்து விட்டர்கள். அந்நிலத்தின் பொறுப்பாளர் நடைமுறையில் அறியப்பட்ட விதத்தில் சாப்பிட்டுக்கொள்ளலாம். நண்பருக்கு உணவளிக்கலாம். ஆனால் அதைக் கொண்டு சொத்து சேகரிப்பவராக இருக்கக் கூடாது, என்று கூறினார்கள். (புகாரி)
ஒரு பொருளுக்கு சொந்தக்காரர் எப்படிப்பட்ட நல்ல காரியத்தில் செலவு செய்ய அவர் விரும்புகிறாரோ அதில் செலவழித்தால் தான் தனக்கு நிறைவான நன்மை கிடைக்கும், என்று நம்பினால் அதைத் தவிர வேறெதிலும் அது நல்ல காரியமாக இருந்தாலும் செலவு செய்ய மாட்டார். எனவே அவர் வக்ஃப் செய்யும் போது எப்படி செலவு செய்ய வேண்டும் என்று விரும்புகிறாரோ அதில் தான் கடைசி வரை செலவிட வேண்டும். நாமாக ஒரு காரியத்தை இதுவும் நல்ல காரியம் தானே! இதில் செலவு செய்தாலும் வக்ஃப் செய்தவருக்கு நன்மை போய் சேரத்தானே செய்யும், என்று நினைத்துக் கொண்டு நாம் விரும்பியவற்றில் செலவிடக்கூடாது. வாகிஃபின் நிபந்தனையாகும்.
வக்ஃப் செய்பவர் குறிப்பிடும் நிபந்தனையை எவ்வித மாற்றமும் செய்யாமல் அப்படியே நிறைவேற்றியாக வேண்டும். வாகிஃபின் நிபந்தனை மார்க்கம் விதித்த நிபந்தனையைப் போன்று மதித்து செயல் படுத்த வேண்டும். அவர் விதித்த நிபந்தனை மார்க்கத்திற்கு முரணாக இருந்தால் அதை அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை.
மஸ்ஜித்:
ஒரு இடத்தில் மஸ்ஜித் உருவாக்க்கப்பட்ட பின் அது கியாம நாள் வரை மஸ்ஜிதாகவே இருக்கும். அதை வேறு எதற்காகவும் பயன்படுத்தக்கூடாது. ஒரு தடவை பள்ளிவாசல் என்ற முறையில் தொழுகை நடந்த பிறகு அங்கு ஏதோ ஒரு காரணத்தினால் முஸ்லிம்கள் யாரும் இல்லாமால் போய்விட்டாலும் அந்த இடம் மஸ்ஜிதாகவே இருக்கும்.
ஒருவேளை பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தால் வக்ஃப் இடங்களில் சாலைகள் அமைக்கப்படலாம். அல்லது வேறு ஏதேனும் காரியங்களில் பயன்படுத்த படலாம் என்ற அச்சம் முஸ்லிம்களுக்கு மத்தியில் உள்ளது.
எனவே நிறைவான சட்டம் இறைச் சட்டம் தான் என்பதை அனைத்து மக்களுக்கும் உணர்த்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.
அல்லாஹுத் தஆலா அந்த நஸுபை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமின்...
வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.
No comments:
Post a Comment