Monday, 18 September 2023

ஜும்ஆ பயான் 22/09/2023

நபி  ﷺஅவர்களின் பிறப்பு முதல் 40 வரை.

لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ 

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.(அல்குர்ஆன் : 33:21)

அல்லாஹு ஜல்ல ஷஃனுஹு தஆலா தம் பிரித்திற்குறிய தூதர் முஹம்மதுﷺஅவர்களின்  சங்கைப்பொருந்திய نور ஒளியை ஆதம்(அலை)அவர்களைப் படைப்பதற்கு ஒன்பது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் படைத்தான்.

அண்ணல் முஹம்மதுﷺஅவர்களின்  சங்கைப்பொருந்திய نور ஒளி,மனித உருவாக்கத்திற்கு பின்பு ஆதிபிதா ஆதம்(அலை)அவர்களின் வழியாக சங்கைக்குறிய பரிசுத்த ஆண்களின் முதுகந்தண்டின் வழியாகவும்,தூயப் பெண்களின் கருவறையின் வழியாகவும் பயணித்து அப்துல்லாஹ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களின் முதுகந்தண்டிலிருந்து அன்னை ஆமினா அவர்களின் கருவில் மனித வடிவம் பெற்று புனித மக்க மா நகரில் உலக அருளாக பிறக்கின்றது.

قال رسول الله صلى الله عليه وسلم " أنا أنفسكم نسباً وصهراً وحسباً، ليس فيَّ ولا في آبائي من لدن آدم سفاح كلها نكاح " ".(الحاكم عن ابن عباس )

கண்மணி நாயகம் ﷺஅவர்கள் நவிலுகிறார்கள;"நான் குலத்தால்,கோத்திரத்தால்,வம்சத்தால் சிறந்தவன்.ஆதம் (அலை)அவர்களிலிருந்து என் (மூதாதையர்கள்)தந்தைமார்களில் எவரும் தவறான வழியில் வந்தவர்கள் அல்லர்.அனைவரும் நிகாஹ்வின் வழியாகவே வந்தார்கள்"

உலகம் அறியாமையிலும், பாவத்திலும் மூழ்கிக் கொண்டிருந்த வேலையில் இன்றிலிருந்து சற்றேறத்தாழ 1400 ஆண்டுகளுக்கு முன்னால் உலகை மீட்பராக,கருணையே வடிவான நம் கண்மணி நாயகம் ﷺஅவர்கள் அரேபிய தீபகற்பத்தில் மக்க மா நகரில் ஷைபு பனு ஹாஷிம் என்னுமிடத்தில் ரபிவுல் அவ்வல் பிறை 12 ஆம் நாள் (கி.பி571 ஏப்ரல்)ஹழ்ரத் இப்ராஹிம் (அலை)அவர்களின் அருமை மகனார்இஸ்மாயில் (அலை)அவர்களின் வழித்தோன்றலில் பிறக்கின்றார்கள்.

முஹம்மதுﷺஅவர்களின் வம்ச வழித்தொடர்:

نسب  محمد ﷺ

هو محمدﷺ بن عبد الله بن عبد المطلب بن هاشم بن عبد مناف بن قصي بن كلاب بن مرة بن كعب بن لؤي بن غالب بن فهر بن مالك بن النضر بن كنانة بن خزيمة بن مدركة بن إلياس بن مضر بن نزار بن معد بن عدنان من ذرية إسماعيل بن إبراهيم.

1-முஹம்மதுﷺஅவர்கள்

2-அப்துல்லாஹ்

3-அப்துல் முத்தலிப் 

4-ஹாஷிம்

5-அப்து மனாஃப்

6-குஸய்

7-கிலாப்

8-முர்ரத்

9-கஅப்

10-லுஐ

11-காலிப்

12-ஃபிஹ்ர்

13-மாலிக்

14-நளர்

15-கினானஹ்

16-குஸைமஹ்

17-முத்ரகஹ்

18-இல்யாஸ்

19-முளர்

20-நிஸார்

21-மஅத்

22-அத்னான்

அத்னான் இவர்கள் ஹழ்ரத் இப்ராஹீம்(அலை)அவர்களின் அருமை மகனார் இஸ்மாயீல்(அலை)அவர்களின் வம்ச வழித்தோன்றலில் உள்ளவர்.

நபி (ஸல்) அவர்களின் வம்ச வழி  தொடர் மூன்று வகையாகப் பிரிகின்றது.

முதலாவது: 

அனைத்து வரலாற்று ஆசிரியர்களும், வமிச இயல் வல்லுனர்களும் ஒருமித்த கருத்து கொண்டிருப்பது. இது நபி (ஸல்) அவர்களில் தொடங்கி அத்னானில் முடிகிறது.

இரண்டாவது:

 இதில் மிகுந்த கருத்து முரண்பாடுகள் உள்ளன. அவற்றை ஒன்றிணைப்பது இயலாததாகும். அது அத்னானிலிருந்து நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் வரையிலான வமிசத் தொடராகும். இதில் சிலர் மௌனம் காக்கிறார்கள். சிலர் அத்னானுக்கு மேல் வமிசத் தொடரை கூறக்கூடாது என்கிறார்கள். சிலர் வமிசத் தொடரை அதற்கு மேலும் கூறுவது கூடும் என்கிறார்கள். இவ்வாறு கூறுபவர்கள் வமிசத் தொடர் மற்றும் எண்ணிக்கையில் முரண்படுகிறார்கள். அவர்களது முரண்பாடான கருத்துகள் முப்பதையும் தாண்டியுள்ளது. எனினும் அத்னான், நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் வமிசத்தைச் சேர்ந்தவர் என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர்.

மூன்றாவது: 

இது நபி இப்றாஹீம் (அலை) அவர்களிலிருந்து ஆதம் (அலை) அவர்கள் வரையிலானது. இதில் வேதக்காரர்களின் கருத்தையே ஏற்க வேண்டி வருகிறது. அதில் பல கருத்துகள் பொய்யானவை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இன்னும் சில கருத்துகள் குறித்து மௌனம் காப்பதே சிறந்ததாகும்.

கண்மணி நாயகம் ﷺஅவர்களின் தந்தை.

 தந்தை அப்துல்லாஹ் அவர்கள் கண்மணி நாயகம் ﷺஅவர்களின் பிறப்பிற்கு ஆறு மாதங்களுக்கு முன்னால் இறை அழைப்பை ஏற்று இறப்பெய்துகிறார்கள்.

ஷாம் (சிரியா)தேசத்திற்கு வியாபாரம் நிமித்தமாக சென்று திரும்ப வரும் வழியில் யஸ்ரிப்(மதினா) எனும் இடத்தில் தங்களின் பாட்டனாரின் இல்லத்தில் தங்குகிறார்கள்.அங்கு நோய்வாய் ஏற்பட்டு மரணத்தை தழுவுகிறார்கள்.அங்கேயே அடக்கம் செய்யப்படுகிறார்கள்.இதனால் கண்மணி நாயகம் ﷺஅவர்கள் பிறக்கும்போதே அனாதையாக பிறக்கிறார்கள்.

கண்மணி நாயகம் ﷺஅவர்களின் பிறப்பு.

தாயார் ஆமினா அம்மையார் அவர்கள் கருவுற்றிருந்தபோது, ​​​​அன்னையின் உடலின் கீழ் பகுதியில் இருந்து ஒரு ஒளி வெளிப்பட்டு, ஷாம்(சிரியா)வின் அரண்மனைகளை ஒளிரச் செய்வதாக கனவு கண்டார்கள். 

அன்னை அவர்கள் நபியை பிரசவித்தபோது, ​​அப்துல் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் தாயார் ஷிஃபா பின்த் அம்ர் மருத்துவச்சியாகச் செயல்பட்டார். 

நபியின் பாட்டனார் அப்துல் முத்தலிப் தமக்கு  பேரக்குழந்தை பிறந்த மகிழ்ச்சியான செய்தியை கேட்டு, பிறந்த குழந்தையை கஅபாவிற்கு தூக்கிச் சென்று அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள். தம் அருமைப்பேரர் உலக மாந்தர்களால் போற்றிப்புகழப்படுவார் என்று நம்பிய அப்துல் முத்தலிப் குழந்தைக்கு அதுவரை உலகில் யாரும் யாருக்குமே சூட்டிடாத முஹம்மது محمد (புகழப்பெற்றவர்) எனும் பெயரை சூட்டி அகமகிழ்ந்தார்.

அரபுகளின்  மரபுகளுக்கு இணங்க, அவர் குழந்தையின் தலையை மொட்டையடித்து, பின்னர்  மக்காவாசிகளை அழைத்து ஓர் ஆட்டை  அறுத்து (அகீகா)விருந்தளித்தார்.

அபுல் ஃபிதா(ரஹ்)அவர்களின் ஓர் அறிவிப்பின் படி;மக்கள், அப்துல் முத்தலிப்பிடம் "ஏன் உங்களின்  பேரருக்கு  முஹம்மது (ஸல்) என்று பெயர் வைத்தீர்கள்,

உங்களின் மூதாதையர்களில் ஒருவரின் பெயரை வைத்திருக்கலாமே?" என்று கேட்டார்கள்,அதற்கு அப்துல் முத்தலிப் அவர்கள் சொன்னார்கள் :  ​​​​"என் பேரர் புகழப்படுவதையும்,உலகம் முழுக்க அவர் புகழ் பரவுவதையும் நான் விரும்புகிறேன்"

அல்லாஹ்வின் தூதர்ﷺ  அவர்களின் வளர்ப்பு.

முஹம்மது நபி ﷺஅவர்கள் முதலில் தாயாராலும் பின்னர் அவர்களின்  தாயின் அடிமை உம்மு அய்மானாலும் வளர்க்கப்பட்டார்கள். உம்மு அய்மன்(ரலி) அவர்கள் அபிசீனியா  (எத்தியோப்பியா) நாட்டைச் சேர்ந்த அடிமை ஆவார்கள்.

அவர்களின் இயற்பெயர் " பர்கா", பின்னாளில் அவர் இஸ்லாத்தை ஏற்று மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தார்கள் , அங்கு அவர் நபிகள் நாயகம் ﷺஅவர்கள் மரணத்திற்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு இறந்தார்கள். இதன் மூலம், அல்லாஹ்வின் தூதர்ﷺ அவர்களை மிக நீண்ட காலம் அறிந்தவர் என்ற பெருமையை பர்கா(ரலி) அவர்கள் பெற்றார்கள்.

முஹம்மது நபி ﷺஅவர்கள் (நபியின்சச்சா) அபூலஹப் அவர்களின் அடிமை  ஸுவைபா அவர்களின் பராமரிப்பில் இருந்தார்கள்.

அந்நேரத்தில் ஸுவைபா அவர்களின் குழந்தை மஸ்ரூஹ்,மற்றும் ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப்,அபு ஸலமா பின் அப்துல் மக்ஸூமி ஆகியோருக்கும் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தார்.

எனவே, அவர்கள் ஒரே மார்பில் பாலூட்டப்பட்டதால் அவர்கள் வளர்ப்பு சகோதரர்கள் ஆனார்கள்.ஸுவைபா அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்களுக்கு ஏழு நாட்கள் பாலூட்டினார்கள்,

எட்டாவது நாளில் நபி ﷺஅவர்களை  பாலைவன கிராமத்தில் வளர்க்க(பேச்சுத்திறன், மொழி புலமைக்காக)  பனு சஃத் பழங்குடியினரின் ஹலிமா(ரலி)அவர்களிடம்  ஒப்படைக்கப்பட்டார்கள்.

பிறக்கும் போது நிகழ்ந்த அதிசய நிகழ்வுகள்.

அல்லாஹ்வின் தூதர்ﷺ அவர்கள் பிறந்த நேரத்தில் சில அற்புத நிகழ்வுகள் நடந்தன. ரோமப்பேரரசின் கிஸ்ரா அரண்மனையின் சில தூண்கள்  இடிந்து விழுந்தன, 

கைசர் என்கிற பாரசீக பேரரசின் கோவிலில் 1000 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருந்த அவர்களின் புனித பாரம்பரிய நெருப்பு அணைந்தது. 

ஈராக்கின் சாவா ஏரியில் சில தேவாலயங்கள் இடிந்து மூழ்கின.

  يا ,رسولَ اللهِ أخْبِرْنا عن نفسِكَ ، قال : دعوةُ أبي إبراهيمَ وبُشرَى عيسَى ، ورأت أُمِّي حينَ حَمَلَتْ بي كأنَّهُ خرجَ منها نورٌ أضاءَتْ لهُ قصورُ بُصرَى مِن أرضِ الشَّامِ[الحاکم]

அல்லாஹ்வின் தூதர்ﷺ அவர்களே!உங்களைப் பற்றி எங்களுக்கு கூறுங்கள் என்று சஹாபாக்கள் கேட்டார்கள்.

அதற்கு கண்மணி நாயகம் ﷺஅவர்கள்;"நான் எனது தந்தை இப்ராஹீம்(அலை)அவர்களின் துஆவின் வெளிப்பாடும்.ஈஸா(அலை)அவர்களின் சுபச்செய்தியும் ஆவேன். எனது தாய் என்னை கருவுற்றிருந்த சமயம்,அவளிலிருந்து ஓர் ஒளி வெளிப்பட்டு ஷாம் (சிரியா)தேசத்தில் அரண்மனைகள் இலங்குவதாகக் கண்டாள்"என்று பதில் கூறினார்கள்.  (நூல்;ஹாகிம்)

மீலாதுன் நபி.

கி.பி 571 ஏப்ரல் 19அல்லது 20 நபியின் பிறப்பை கூறும் அறிஞர்களின் கருத்து;ரபிவுல் அவ்வல் பிறை 8 அல்லது 9 என்பதாம் பிறை.

பெரும்பான்மையான உலமாக்கள் மற்றும் முஸ்லிம் உம்மாவின் ஏகோபித்த கருத்து;கண்மணி நாயகம் ﷺஅவர்களின் பிறப்பு ஒரு திங்கட்கிழமை ரபிவுல் அவ்வல் பிறை 12ஆம் நாள் عامَ الفیل யானை ஆண்டில் நிகழ்ந்தது.

  مشہورموٴرخ امام محمد بن اسحاق  قال: وُلِدَ رسولُ الله  صلی اللہ علیہ وسلم یومَ الاثنین لاثنتی عشرة (۱۲) لیلةً خَلَتْ مِنْ شَھْرِ ربیعِ الأول عامَ الفیل․(السیرة النبویة لابن ہشام۱/۲۸۴،تاریخ الطبری۲/۱۵۶، مستدرک حاکم۴۱۸۲، شعب الایمان للبیہقی ۱۳۲۴، الکامل فی التاریخ لابن الاثیر۱/۲۱۶)

திங்கட்கிழமை பரகத் பொருந்திய தினமாகும்,காரணம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்)அவர்களின் ஒரு அறிவிப்பு;

أن رسول اﷲ صلي الله عليه وآله وسلم سُئل عن صوم يوم الإثنين؟ قال : ذاک يوم ولدت فيه ويوم بعثت أو أنزل عليّ في(مسلم،

بيهقي، السنن الکبري)

திங்கட்கிழமை நோன்பு பற்றி கண்மணி நாயகம்ﷺஅவர்களிடம் கேட்கப்பட்டது,அப்போது நாயகம் ﷺஅவர்கள் சொன்னார்கள்;அந்த தினத்திலே தான் நான் பிறந்தேன்,நபியாக ஆக்கப்பட்டேன்,அந்த தினத்தில் தான் என் மீது முதன் முதலில் வஹி இறக்கி அருளப்பட்டது.

வரலாற்றாசிரியர்கள் எழுதுகிறார்:கண்மணி நாயகம் ﷺஅவர்கள் குழந்தை பருவத்திலே நினைவாற்றல்,மொழித்திறன் மிக்கவர்களாக திகழ்ந்தார்கள்.

மூன்றுமாத குழந்தையாக இருக்கும் போது நிற்கவும்,ஏழு மாதத்தில் நாடக்கவும்,எட்டாவது மாதத்தில் பேசவும் துவங்கிவிட்டார்கள்.

ஒன்பதாவது மாதத்தில் அழகிய தொனியில்,இலக்கிய நயத்தோடு நாயகம் ﷺஅவர்கள் பேசுவதை காணும் மக்கள் ஆச்சர்யப்பட்டனர்.

ஆறு வயதில் தாயின் இழப்பு.

நாயகம் ﷺஅவர்களுக்கு ஆறு வயது இருக்கும் போது சங்கைக்குறிய தாயார் ஆமினா பின்து வஹப் அவர்கள் நபியின் தந்தை அப்துல்லாஹ் அவர்களின்  கப்ரை ஸியாரத் செய்ய யஸ்ரிப்(மதீனா)க்கு நபியை அழைத்து சென்றார்கள்.அங்கே ஒரு மாத காலம் தங்கிய பின்பு ஊருக்கு திரும்பும் வழியில் மதினாவிற்கு அருகில் (22மைல்)அப்வா எனும் இடத்தில் ஆமினா அம்மா மரணத்தை தழுவுகிறார்கள்.அங்கேயே அடக்கம் செய்யப்படுகிறார்கள்.அடிமைப்பெண் உம்மு அய்மன் (ரலி)அவர்களோடு நாயகம் ﷺஅவர்கள் மக்கா வந்தடைகிறார்கள்.(روضة الاحباب۱ص۶۷)۔

நாயகம் ﷺஅவர்களின் எட்டாம் வயதில் அருமை பாட்டனார் அப்துல் முத்தலிப் 120வயதில் மரணத்தை தழுவுகிறார்கள்.

அப்துல் முத்தலிப் அவர்களின் மரணத்திற்கு பின்பு நாயகம் ﷺஅவர்கள் தம் தந்தையின் பெரிய சகோதரர் அபுதாலிப் அவர்களின் அன்பிலும்,அரவணைப்பிலும் வளர்கிறார்கள்.

கூடவே தந்தை அப்துல் முத்தலிபின் கஃபதுல்லாஹ்வின் பாதுகாப்பு மற்றும் நிர்வகிக்கும் முதவல்லி பொறுப்பையும்,குறைஷிகளின் தலைவர் பொறுப்பையும் ஏற்று திறம்படசெயல் படுகிறார்கள்.(الیعقوبی ج۲ص۱۱)۔

அப்துல் முத்தலிப் அவர்களின் மரணசாசனமும், வழிகாட்டுதலும்.

அப்துல் முத்தலிப் அவர்களுக்கு மரணம் நெருங்கிய சமயத்தில் நாயகம் ﷺஅவர்களை நெஞ்சோடு அணைத்து முத்தமிட்டு,தங்களின் மகன் அபுதாலிபிடம் "அபுதாலிபே!இது உன் உடன்பிறந்த (தம்பி)சகோதரனின் குழந்தையாகும்.இதனை நல்லமுறையில் கண்ணும்கருத்துமாக வளர்ப்பது உன் பொறுப்பாகும்.

இதனை இழக்கவோ,கைவிட்டுவிடவோ கூடாது.இதன் தலை முதல் பாதம் வரை,உடல்,பொருள்,ஆவி அனைத்தையும் பாதுப்பதும்,உதவுவதும் உன் பொறுப்பாகும்.என்று கூறினார்கள்(روضة الاحباب)

நபித்துவத்திற்கு முன்.

நபி (ஸல்) அவர்கள் மது அருந்தியதில்லை. சிலைகளுக்குப் பலியிடப்பட்டதை உண்டதில்லை. சிலைகளுக்கான விழாக்களில் கலந்து கொண்டதில்லை. சிலைகளை முற்றிலுமாக வெறுத்தார்கள். லாத், உஜ்ஜாவைக் கொண்டு சத்தியம் செய்வதைச் சகித்துக்கொள்ள மாட்டார்கள்.

இறைவனின் பாதுகாப்பு அவர்களைச் சூழ்ந்திருந்தது. உலக இன்பங்களின் மீது ஆசை தோன்றும்போதும் தவறான அறியாமைக்கால பழக்க வழக்கங்களின்மீது ஆவல் ஏற்படும்போதும் அவற்றிலிருந்து அல்லாஹ்வின் அருளால் தடுக்கப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அறியாமைக்கால செயலை செய்ய வேண்டுமென நான் இருமுறை மட்டுமே விரும்பினேன். அந்த இருமுறையும் அல்லாஹ் என்னைத் தடுத்துவிட்டான். பிறகு அல்லாஹ் தூதுத்துவத்தை எனக்கு அருளும் வரை அந்த எண்ணம் ஏற்பட்டதே இல்லை. ஓர் இரவு மக்காவின் மேற்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவரிடம் என் ஆடுகளை நீ பார்த்துக் கொள். மக்காவில் வாலிபர்கள் இராக்கதை பேசுவது போன்று நானும் பேசி வருகிறேன் என்று நான் கூறினேன். அவர் ஒப்புக் கொண்டார். நான் வெளியேறி மக்காவினுள் நுழைந்து அதில் முதல் வீட்டைக் கடந்தேன். அங்கு இசை சப்தத்தைக் கேட்டு அது என்னவென்று விசாரித்தேன். அதற்கு மக்கள் இன்ன ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் முடிந்து இன்று முதலிரவு என்று கூறினார்கள். நான் அதைக்கேட்க அமர்ந்தவுடன் நான் செவியேற்காத வகையில் அல்லாஹ் என்னைத் தடுத்து தூங்கச் செய்துவிட்டான். இறுதியில் சூரிய வெப்பம்தான் என்னை எழுப்பியது. எனது தோழரிடம் நான் சென்றபோது அவர் என்ன நடந்ததென விசாரிக்க நடந்ததைக் கூறினேன். அதற்குப் பிறகு நான் எந்தவொரு தீய செயலையும் செய்ய எண்ணியதேயில்லை.” (முஸ்தத்ரகுல் ஹாகிம்)

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அறிவிப்பதாவது: கஅபாவை புதுப்பிக்கும் பணியின்போது நபி (ஸல்) அவர்களும் அப்பாஸும் கல்லை எடுத்துக் கொடுக்கும் பணியைச் செய்தார்கள். அப்போது அப்பாஸ் நபி (ஸல்) அவர்களிடம் உங்களது கீழாடையைக் கழற்றி புஜத்தில் வைத்துக் கொண்டால் கற்கள் அழுத்தாமலிருக்கும் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தனது ஆடையைக் கழற்றி (புஜத்தில் வைத்தவுடன்) கண்கள் மேலே சொருக மயக்கமடைந்து விட்டார்கள். பிறகு அவர்கள் தெளிவடைந்து எனது கீழாடை! எனது கீழாடை! என்று கூற, நபி (ஸல்) அவர்களுக்கு அப்பாஸ் ஆடையை உடுத்தி விட்டார்கள். அதற்குப்பின் அவர்களது மறைவிடத்தை எவரும் பார்த்ததில்லை. (ஸஹீஹுல் புகாரி

துறவி பஹீரா.

நபி (ஸல்) அவர்களுக்கு 12 வயதாகும் போது அபூதாலிப் வியாபாரத்திற்காக ’ஷாம்’ தேசம் சென்றார். அப்போது நபியவர்களையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். அவர்கள் ஷாம் நாட்டின் புஸ்ரா நகரை வந்தடைந்தனர். அங்கு ‘பஹீரா’ என்ற பிரபலமான துறவி ஒருவர் இருந்தார். அவரது பெயர் ‘ஜர்ஜீஸ்’ என்று சொல்லப்படுகிறது. அவர் எங்கும் வெளியில் செல்ல மாட்டார். எனினும், இந்த வியாபாரக் கூட்டம் புஸ்ரா சென்றதும் அவர்களை சந்திக்க வந்தார். வணிகக் கூட்டத்தைப் பிளந்துகொண்டு வந்து சிறுவரான நபி (ஸல்) அவர்களின் கரத்தைப் பற்றிக்கொண்டு “இதோ உலகத்தாரின் தலைவர்! இதோ உலகத்தாரின் இறைவனுடைய தூதர்! இவரை அல்லாஹ் அகிலத்தாருக்கு அருட்கொடையாக அனுப்புவான்” என்று கூறினார். அவரிடம் அபூதாலிபும் குறைஷிப் பெரியவர்களும் “இது எப்படி உமக்குத் தெரியும்?” என வினவினர். அவர் “நீங்கள் கணவாய் வழியாக வந்தபோது கற்களும் மரங்களும் சிரம் பணிந்தன. அவை இறைத்தூதர்களுக்கே தவிர வேறு எவருக்கும் சிரம் பணியமாட்டா. மேலும், அவரது புஜத்துக்குக் கீழிருக்கும் ஆப்பிளைப் போன்ற இறுதித் தூதரின் முத்திரையைக் கொண்டும் நான் அவரை அறிவேன். எங்களது வேதங்களில் அது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது” என்று கூறினார். பிறகு அவர்களுக்கு விருந்தளித்து உபசரித்தார். இச்சிறுவரை ஷாமுக்கு அழைத்துச் சென்றால் அங்குள்ள ரோமர்கள் மற்றும் யூதர்களால் இவருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே, இவரை இங்கிருந்தே மக்கா திருப்பி அனுப்பி விடுங்கள் என்று பஹீரா அபூதாலிபிடம் கூறினார். அதற்கினங்க அபூதாலிப் நபி (ஸல்) அவர்களை சில வாலிபர்களுடன் மக்காவுக்கு அனுப்பி வைத்தார். (ஸுனனுத் திர்மிதி,

உழைக்கும் காலம்.

நபி (ஸல்) அவர்கள் வாலிபத்தின் ஆரம்ப காலத்தில் குறிப்பிட்ட தொழில் எதையும் செய்து வரவில்லை. எனினும், ஸஅது கிளையாரின் ஆட்டு மந்தையை மேய்த்ததாக பல அறிவிப்பு களிலிருந்து தெரிய வருகிறது. அவ்வாறே மக்காவாசிகளின் ஆடுகளையும் மேய்த்து கூலியாக தானியங்களைப் பெற்று வந்தார்கள். (ஸஹீஹுல் புகாரி) வாலிபமடைந்தவுடன் ஆடு மேய்ப்பதை விட்டுவிட்டு ஸாம்ப் இப்னு அபூஸாம்ப் அல் மக்ஜூமி என்பவருடன் இணைந்து வணிகம் செய்யத் தொடங்கினார்கள். அவருக்கு நம்பிக்கைக்குரிய மிகச் சிறந்த தொழில் நண்பராக நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள். மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளன்று அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். ‘என் சகோதரரே!, என் தொழில் நண்பரே!” எனக் கூறி அவரை நபி (ஸல்) அவர்கள் வரவேற்றார்கள். (ஸுனன் அபூதாவூது, இப்னு மாஜா, முஸ்னது அஹ்மது)

நபி (ஸல்) அவர்கள் 25 வது வயதில் கதீஜா அவர்களின் வணிகப் பொருட்களுடன் ஷாம் சென்றார்கள்.இதுபற்றி இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: கதீஜா பின்த் குவைலித் சிறப்பும் வளமும் மிக்க வியாபாரப் பெண்மணியாகத் திகழ்ந்தார். தனது வியாபாரத்திற்காக ஆட்களை வேலைக்கு அமர்த்தி அதில் கிடைக்கும் இலாபத்தின் ஒரு பகுதியை அவர்களுக்குத் தருவார். நபி (ஸல்) அவர்களின் வாய்மை, நம்பகத்தன்மை போன்ற நற்பண்புகளைப் பற்றி அன்னார் கேள்விப்பட்ட போது அவர்களை வரவழைத்து “எனது அடிமை மய்ஸராவுடன் வணிகப் பொருட்களை எடுத்துக் கொண்டு ஷாமில் வணிகம் செய்து வரவேண்டும். மற்ற வணிகர்களுக்குக் கொடுத்து வந்ததைவிட சிறப்பான பங்கை உங்களுக்குத் தருகிறேன்” என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதை நபி (ஸல்) அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.

கதீஜாவை மணம் புரிதல்.

நபி (ஸல்) அவர்கள் சிறப்பாக வணிகம் செய்து பெரும் வருவாயுடன் மக்கா திரும்பினார்கள். கதீஜா தங்களது பொருளில் இதற்குமுன் கண்டிராத பெரும் வளர்ச்சியைக் கண்டார். மேலும் மய்ஸராவும், தான் நபி (ஸல்) அவர்களிடம் கண்ட நற்பண்புகள், உயர் சிந்தனை, பேச்சில் உண்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றை கதீஜாவிடம் விவரித்தார். கணவரை இழந்திருந்த கதீஜாவை பல குறைஷித் தலைவர்கள் மணமுடிக்க விரும்பியபோது அதனை மறுத்து வந்த கதீஜா தனக்கு ஏற்ற கணவர் முஹம்மது (ஸல்) அவர்கள்தான் என முடிவெடுத்தார். தனது எண்ணத்தை தோழி நஃபீஸா பின்த் முநப்பிஹ் இடத்தில் தெரிவித்தார். நஃபீஸா நபி (ஸல்) அவர்களிடம் கதீஜாவின் விருப்பத்தைக் கூற நபி (ஸல்) அவர்களும் அதை ஒப்புக் கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தனது தந்தையின் சகோதரர்களிடம் இதுபற்றிக் கூறினார்கள். அவர்கள் கதீஜாவின் தந்தையுடைய சகோதரரிடம் பேசி திருமணத்திற்கு முடிவு செய்தார்கள். ஷாமிலிருந்து திரும்பிய மூன்றாம் மாதத்தில் அவ்விருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அதில் ஹாஷிம் கிளையாரும் முழர் கோத்திரத்தின் தலைவர்களும் கலந்து கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் 20 மாடுகளை மஹராகக் கொடுத்தார்கள். அப்போது கதீஜா (ரழி) அவர்களுக்கு வயது 40, நபி (ஸல்) அவர்களின் வயதோ 25! அவர் அறிவாலும் செல்வத்தாலும் குடும்பத்தாலும் மிகச்சிறந்த பெண்மணியாக விளங்கினார். நபி (ஸல்) அவர்களுக்கு இவரே முதல் மனைவி. இவர் மரணித்த பின்பே நபி (ஸல்) அவர்கள் வேறு பெண்ணை மணமுடித்தார்கள்.

கஅபாவை செப்பனிடுதல், நபி (ஸல்) அவர்கள் நடுவராகுதல்.

நபி (ஸல்) அவர்களின் 35வது வயதில் குறைஷியர்கள் கஅபாவைப் புதுப்பித்தனர். கஅபா, ஓர் ஆள் உயரத்திற்குப் பாறைகளால் கட்டப்பட்டிருந்தது. அது இஸ்மாயீல் (அலை) அவர்களின் காலத்திலிருந்தே மேல்முகடு இன்றி ஒன்பது முழம் கொண்டதாக இருந்தது. அதன் சுவரும் கட்டடங்களும் சிதிலமடைந்து இருந்தன. இந்நிலையில் கஅபாவினுள் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷங்களை ஒரு கூட்டம் திருடிச் சென்றது. நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் மக்காவில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கஅபாவின் கட்டடம் மேலும் பாதிப்படைந்தது. அதன்மீது கொண்டிருந்த மரியாதையின் காரணமாக குறைஷியர்கள் அதைப் புதுப்பிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாயினர். அதனை ஹலாலான (தூய்மையான) வருமானத்தைக் கொண்டே செப்பனிட வேண்டும்; வட்டி, விபசாரம், திருட்டு போன்ற பொருட்களின் மூலமாக செப்பனிடக் கூடாது என அனைவரும் கூடி முடிவெடுத்தனர். இந்நிலையில் பழைய கட்டடத்தை எவ்வாறு இடிப்பது என அனைவரும் அஞ்சினர். வலீத் இப்னு முகீரா மக்ஜூமி கடப்பாரையை எடுத்து “அல்லாஹ்வே! நான் நன்மையை நாடியே இதைச் செய்கிறேன்” என்று கூறி ருக்னுல் யமானி, ருக்னுல் ஷாமியின் பகுதிகளை இடித்தார். அவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாததைக் கண்ட குறைஷியர்கள் அச்சம் தெளிந்து, அவருடன் இணைந்து இடித்தனர்.

இறுதியாக, இப்றாஹீம் (அலை) அவர்கள் அமைத்த அஸ்திவாரம் தென்பட்டது. பிறகு கஅபாவை பல பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு கோத்திரத்தாரும் ஒரு பகுதியைக் கட்ட வேண்டுமென முடிவு செய்து ஒவ்வொரு கோத்திரத்தாரும் ‘பாகூம்’ என்ற ரோமானிய பொறியியல் வல்லுனரின் மேற்பார்வையில் கட்டத் தொடங்கினர். இறுதியாக, ஹஜ்ருல் அஸ்வதின்” இடம் வந்தபோது அதை அதற்குரிய இடத்தில் வைப்பது யார் என்பதில் பிரச்சனை எழுந்தது. அது பற்றிய சர்ச்சை நான்கு அல்லது ஐந்து நாட்களாகத் தொடர்ந்தது. சர்ச்சை கடுமையாகி போராக மாறிவிடும் அபாயம் எழுந்தது. அப்போது அபூ உமய்யா இப்னு முகீரா - மக்ஜூமி அம்மக்களிடம், “இப்புனிதப் பள்ளிவாசலில் முதன்முதலாக நுழைபவரை நடுவராக்கி அவரது ஆலோசனையை ஒப்புக் கொள்ளுங்கள்” என்று கூறினார். இக்கருத்தை அனைவரும் மனமார ஏற்றனர். அவர்கள் ஆவலுடன் காத்திருக்க நபி (ஸல்) அவர்களே முதலாமவராக நுழைந்தார்கள். அவர்களைக் கண்ட அம்மக்கள் “இதோ முஹம்மது வந்துவிட்டார். இவர்தான் நம்பிக்கைக்குரியவர். இவரை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்” என்றனர். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு அருகில் வந்தவுடன் விவரத்தைக் கூறினர். நபி (ஸல்) அவர்கள் ஒரு விரிப்பை வரவழைத்து அதன் நடுவே ஹஜ்ருல் அஸ்வதை வைத்தார்கள். பிறகு சச்சரவிட்டுக் கொண்டிருந்த கோத்திரத்தாரின் தலைவர்களை அழைத்து விரிப்பின் ஓரங்களைப் பிடித்துத் தூக்குமாறு கூற, அதை அவர்கள் தூக்கினர். கஅபாவுக்கு அருகில் கொண்டு வந்தவுடன் தனது கரத்தால் ஹஜ்ருல் அஸ்வதை எடுத்து உரிய இடத்தில் வைத்தார்கள். இது அனைவரும் ஒப்புக் கொண்ட மிக அழகிய தீர்வாக அமைந்தது.

ஹிரா குகையில்.

நபி (ஸல்) அவர்களுக்கு நாற்பது வயது நெருங்கியது. அவர்களது ஆழிய சிந்தனை, தனிமையை விரும்பியது. சத்துமாவையும் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு மக்காவிலிருந்து இரண்டு மைல் தொலைவிலுள்ள நூர் மலையின் ஹிரா குகைக்குச் செல்வார்கள். அக்குகை நான்கு முழ நீளமும் ஒன்றே முக்கால் முழ அகலமும் கொண்டது. ரமழான் மாதத்தில் அங்கு தங்கி வணக்க வழிபாடுகளிலும், இப்புவியையும் அதைத் தாண்டிய பிரபஞ்சத்தையும் இயக்கும் அபார சக்தியைப்பற்றி சிந்திப்பதிலும் ஈடுபடுவார்கள். சமுதாயம் கொண்டிருந்த இணைவைக்கும் இழிவான கொள்கையையும், பலவீனமான அதன் கற்பனைகளையும் அவர்கள் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் மனதிருப்தியுடன் வாழ்க்கையைத் தொடர தெளிவான, நடுநிலையான வாழ்க்கைப் பாதையும் அவர்களுக்கு முன் இருக்கவில்லை.

தனிமையின் மீதான அவர்களது விருப்பம் அல்லாஹ்வின் ஏற்பாடு என்று சொல்லலாம். நபி (ஸல்) அவர்கள் இதற்கு முன் உலக அலுவல்களில் ஈடுபட்டு வந்தார்கள்; வியாபாரம் செய்து வந்தார்கள். இப்போது அவை அனைத்தையும் விட்டு தனிமையை நாடுகிறார்கள். ஏனெனில், மாபெரும் பொறுப்பைச் சுமக்க அவர்கள் தயாராக வேண்டும்; உலக வரலாற்றை மாற்றி மக்களுக்கு நேரிய பாதையைக் காட்ட ஆயத்தமாக வேண்டும். இவ்வாறு நபித்துவம் வழங்குவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தனிமையின் மீதான விருப்பத்தை அல்லாஹ் அவர்களுக்கு ஏற்படுத்தினான். ஆக மாதத்தின் பெரும் பகுதியை நபி (ஸல்) அவர்கள் தனிமையில் கழித்து வந்தார்கள். தனிமையை விசாலமான மனஅமைதியுடன் கழித்தது மட்டுமல்லாமல் இந்த பிரபஞ்சத்தை இயக்கி வரும் மறைபொருள் பற்றி ஆழமாக சிந்தித்தார்கள். ஆம்! அல்லாஹ்வின் நாட்டப்படி அம்மறைபொருளுடன் தொடர்பு கொள்ள இதோ நேரம் நெருங்கிவிட்டது. (இது குறித்து மேல் விவரங்களை ஸஹீஹுல் புகாரி, தாரீக் இப்னு ஹிஷாம் மற்றும் வரலாற்று நூல்களில் காணலாம். முதன்முதலாக அப்துல் முத்தலிப் ஹிரா குகையில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தார். ரமழானில் அங்கு சென்று தங்குவார். ஏழை எளியோருக்கு உணவளிப்பார். (இப்னு கஸீர்)

ஜிப்ரீல் வருகை.

பரிபூரணத்தின் தொடக்கமாகிய 40 வயது நிறைவானபோது (பல நபிமார்களுக்கு நாற்பதாவது வயதில்தான் நபித்துவம் (நுபுவ்வத்) அருளப்பட்டது என்று சொல்லப்படுகிறது), நபித்துவ அடையாளங்கள் தெரிய ஆரம்பித்தன.

அவற்றில் சில: மக்காவிலிருந்த கல் ஒன்று அவர்களுக்கு ஸலாம் கூறி வந்தது உண்மையான கனவுகளைக் கண்டார்கள்; அவை அதிகாலையின் விடியலைப் போன்று நிதர்சனமாக நடந்து விடும்; இந்த நிலையில் ஆறு மாதங்கள் கழிந்தன நபித்துவ பணியாற்றியதோ 23 ஆண்டுகள், உண்மைக் கனவுகள் நபித்துவத்தின் 46 பங்குகளில் ஒரு பங்காகும்.

அது ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்த மூன்றாம் ஆண்டு ரமழான் மாதம். அல்லாஹ் அகிலத்தாருக்கு தனது கருணையைப் பொழிய நாடினான். முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நபித்துவத்தை வழங்கி சிறப்பிப்பதற்காக மேன்மைமிகு குர்ஆனின் சில வசனங்களுடன் வானவர் ஜிப்ரீலை அவர்களிடம் அனுப்பி வைக்கிறான்.

(நபியே! அனைத்தையும்) படைத்த உங்களது இறைவனின் பெயரால் (எனது கட்டளைகள் அடங்கிய குர்ஆனை) நீங்கள் ஓதுவீராக! அவனே மனிதனை கருவிலிருந்து படைக்கின்றான். (நபியே! பின்னும்) நீங்கள் ஓதுங்கள்! உங்களது இறைவன்தான் மகா பெரும் கொடையாளி! (அல்குர்ஆன் 96 : 1-6) என்ற வசனங்களை ஓதிக் காட்டினார்.

தொடரும்.....

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.



1 comment:

Vellimedai chengai said...
This comment has been removed by the author.

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...