Thursday, 12 January 2023

ஜும்ஆ பயான்.13/01/2023

தேச ஒற்றுமை மாநாடு... 

ஜனவரி 15,16 2023

தேசஒற்றுமை.


 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.   

وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا ۚ 

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;


நம் இந்திய திருநாடு சமூக நல்லிணக்கத்திற்கான நிலம்.உலகத்திற்கே எடுத்துக் காட்டாய் திகழும் பூமி. இந்தியர்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளாக பந்த பாச உணர்வுகளோடு வாழ வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் நமது அரசியலமைப்பு சட்டம் .யாரோ சிலரின் அதிகார கணவுகளுக்காக அதன் மாண்புகளை சிதைப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. குடியுரிமை சட்டம், பொதுச் சிவில் சட்டம் என அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. வேலை வாய்ப்பின்மை, பொருளாதார வீழ்ச்சி, ஒற்றை கலாச்சாரம் என அடுத்தடுத்து பிரச்சினைகள் தொடர்கின்றன. நம் எதிர்கால சந்ததியினருக்கு அமைதியும் பாதுகாப்பும் நிறைந்த இந்தியாவை விட்டு செல்லும் தார்மீக கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது.

எனவே இஸ்லாமிய சமூகம் அந்த முழுமையான வெற்றியை அடைய அடிப்படை தேவைகள் இரண்டு. 

1) இறையச்சம் 2)ஒற்றுமை

இறையச்சம்.

இறையச்சம்,  ஒரு முஸ்லிமின் வாழ்வில் எல்லா பகுதியிலும் இருக்க வேண்டும். வெளிப்படையான தவறாக இருந்தாலும், மறைமுகமான தவறாக இருந்தாலும் அல்லாஹ் பார்க்கிறான் என்ற அச்சத்தோடு அந்த தவறுகளில் இருந்து விலகி இருக்கவேண்டும். ஆகையால் தான் மேற்கூறிய வசனத்தில் அல்லாஹ்வை முழுமையாக அஞ்சி வாழுங்கள் என கட்டளையிடுகின்றான். நம் தொழுகை, தொழில், அன்றாட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை அத்தனையிலும் ஒரு முஸ்லிம் இறையச்சத்தோடு செயல்பட வேண்டும். அல்லாஹ்விற்கு அஞ்சி நடந்தால் இந்த உலகம் நம்மை பார்த்து அஞ்சும்.

ஒற்றுமை.

பல தரப்பு மக்கள், பல்வேறு சிந்தனையுடைய மக்கள், பல மொழி, பல சமயங்கள், பல இன, சாதி, மதங்கள், பல நாடுகளை சார்ந்து வாழக்கூடிய மக்களுக்கு மத்தியில் அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றுதான். ஆனாலும் அந்த நேரங்களிலும் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் ஒரு பிரச்சினை ஏற்படும் போது அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும்  என இறைவன் கட்டளையிடுகிறான். நம்மில் பல அமைப்புகள், பல பிரிவுகள் இருந்தாலும், பல கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் இஸ்லாத்தின் நலனை கருத்தில் கொண்டு நாம் ஒரணியில் நிற்க வேண்டும். அப்படி ஒட்டுமொத்தமாக நம் உரிமை பிரச்சினைக்காக CAA, NRC, NPR போன்ற நேரங்களில் ஒன்று சேர்ந்ததால் தான் அதை நம்மால் நிறுத்தி வைக்க முடிந்துள்ளது.  வருங்கால அரசியல் நகர்வுகள் மீண்டும் அதை மெய்படுத்திவிடக் கூடாது என்பதற்கு நாம் அனைவரும் இஸ்லாம் என்ற கருத்தியலில் ஒன்று சேர வேண்டும். இதை வலியுறுத்தி அல்லாஹ் திருமறையில்....

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمَٰنُ وُدًّا

நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான-) நல்ல செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு அர்ரஹ்மான் (யாவரின்) நேசத்தை ஏற்படுத்துவான். (அல்குர்ஆன் 19/96)

பல்வேறு கிளைகளாக இருப்பினும் முஸ்லிம், முஃமின் என்ற பண்பில் நாம் அனைவரும் ஒன்றுபடும்போது அதில் அல்லாஹ்வின் உதவி கண்டிப்பாக இருக்கும்.

ஒரே இறைவன், ஒரே மறை , ஒரே நபி ஒரே மார்க்கம் என்று இருக்கும் நாம் தான் இன்று பல பிரிவுகளாக, பல கட்சிகளாக பிரிந்துக் கிடக்கின்றோம். ஆனால் பல கடவுள் கொள்கை, பல வேதம் உடையவர்கள் தங்களுக்கென்று ஒரு ஆபத்து வரும் போது ஒரணியில் நின்று ஒற்றுமையோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள், இதை இஸ்லாமிய சமூகம் எப்போது உணரப் போகிறோம்  என்பதை யோசிக்க வேண்டும்.

وَأَنَّ هَٰذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ ۖ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ ۚ ذَٰلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ

நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான். அல்குர்ஆன் (6/153)

إِنَّ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا لَسْتَ مِنْهُمْ فِي شَيْءٍ ۚ إِنَّمَا أَمْرُهُمْ إِلَى اللَّهِ ثُمَّ يُنَبِّئُهُمْ بِمَا كَانُوا يَفْعَلُونَ

நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.(அல்குர்ஆன்  6/159)

ஒற்றுமையோடு வாழவேண்டும். உங்களுக்கு மத்தியில் பிரிவினை வந்துவிடக் கூடாது என்பதை நபி (ஸல்) அவர்கள்  ஒரு ஹதீஸில் தெரிவிக்கிறார்கள். அல்லாஹ் உங்களிடத்தில் மூன்று விஷயத்தை பிரியப்படுகின்றான். மூன்று விஷயத்தை வெறுக்கின்றான்.

அல்லாஹ் பிரியப்படும் மூன்று விஷயங்கள்.

1) வணக்க வழிபாடுகளை அல்லாஹ்விற்காக மட்டும் செய்ய வேண்டும். அதில் யாரையும் இணையாக்கிவிடக் கூடாது.

 2) அல்லாஹ்வின் வேதத்தை பற்றி பிடித்துக்காள்ளவேண்டும். ஒற்றுமையோடு இருக்க வேண்டும். 

3)  ஆட்சியாளர்கள், மற்றும் தங்களின் தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

அல்லாஹ் பிரியப்படாத மூன்று விஷயங்கள்..

1 ) தேவையில்லாத விஷயங்களை விவாதம் செய்வது. 

2) அவசியமின்றி பிறரிடம் தேவையாகுதல். 

3) பொருளாதாரத்தை வீணடிப்பது.

வேற்றுமையில் ஒற்றுமை.

நம் இந்திய திரு நாடு பன்முக கலாச்சாரத்தை கொண்டது. நிறத்தால், இனத்தால், ஜாதியால், மதத்தால் நாம் வேறுபட்டு இருந்தாலும் இந்தியன் என்ற அடிப்பைடயில் நாம் ஒன்றுப்பட்டுள்ளோம். இந்த இந்தியா மதச்சார்பற்ற நாடு என நம் அரசியலமைப்பு சட்டமே கூறுகிறது. இதை மாற்றத்தான் இன்று பாசிச அரசாங்கம் முயற்சித்துக் கொண்டுள்ளது. நமக்குள் பிரிவினையை ஏற்படுத்த நமக்குள்ளே சில உட்பூசலை உண்டுபன்ன பல இஸ்லாமியர்களையும் விலை பேசி வாங்கி வருகின்றனர். இந்த பாசிச சிந்தனைக்கு நாம் ஆட்பட்டு விடக் கூடாது.

கருத்து வேற்றுமைகள் நமக்குள் நிறைய இருக்கலாம் .ஆனால் அது இஸ்லாத்திற்கு பாதகமாக ஆகிவிடக் கூடாது. மார்க்க விஷயத்தில் உலமாக்கள், ஃபிக்ஹ் கலை வல்லுஞர்கள் கருத்து வேற்றுமைக் கொள்வது ரஹ்மத்தாகும். ஆனால் தனக்கு தெரியாத ஒரு விஷயத்தில் கருத்து வேற்றுமை கொள்வது பிரிவினையை ஏற்படுத்திவிடும். அதுதான் இன்று நமக்கு மத்தியில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை சரி செய்ய நம்மால் முடியும். ஏனெனில் இதை  விட அதிகமான கருத்து வேற்றுமை அரபுகளிடம் இருந்தது. இரவு பகலாக, சண்டை, கலவரம், இரத்தம், வாள், போர் என வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு மத்தியில் உதித்த பெருமானார் (ஸல்) அவர்கள்  ஒற்றுமையை ஏற்படுத்தினார்கள். இதை அல்லாஹ் திருமறையில்....

وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنْتُمْ عَلَىٰ شَفَا حُفْرَةٍ مِنَ النَّارِ فَأَنْقَذَكُمْ مِنْهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ

அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான். (அல்குர்ஆன் 3 / 103)

நமது நாயகம் (ஸல்) அவர்களின் வருகையின் பரக்கத்தால் இதுவரை விரோதிகளாக இருந்தவர்கள் சகோதரர்களாக மாறினார்கள். எதிரிகளே அச்சப்படும் அளவு நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தினார்கள். உலகத்தில் எந்த தலைவராலும் செய்ய முடியாத சாதனையை நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள்.

53 வருடங்கள் தான் வாழ்ந்த , பிறந்த சொந்த பூமியான மக்காவில் ஹிஜ்ரி 8ல் மக்கா வெற்றிப் பெற்ற பிறகு இந்த ஒற்றுமையை, சமாதானத்தை அனைவருக்கும் பொது மன்னிப்பை கொடுத்து சாத்தியப்படுத்தினார்கள்.

மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய ஒற்றுமையினால் ஏற்பட்ட மாற்றங்கள் ....

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் புனித மதீனா சென்ற பின் மூன்று விதமான உடன்படிக்கையை ஏற்படுத்தினார்கள். இந்த உடன்படிக்கைகள் தான் இன்றளவும் நம் இஸ்லாம் உலகத்தின் மூளை முடுக்குகளுக்கெல்லாம்  பரவிக் கொண்டிருப்பதற்கு அடித்தளமாகும். 

1) மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து சென்ற முஹாஜிர்களுக்கும், மதீனாவின் மைந்தர்களான அன்சாரி தோழர்களுக்கும் மத்தியில் ஒர் நட்புறவை ஏற்படுத்தினார்கள். கொடுக்கல், வாங்கல் முதல் திருமண பந்தம் வரை அனைத்தையும் இருவர்களுக்கும்  மத்தியில் கட்டமைத்தார்கள். முஹாஜிர், அன்சாரி என்ற பாகுபாடு இருவர்களுக்கும் மத்தியில் எந்த நேத்திலும் ஏற்பட்டு விடக் கூடாது என்று அவர்களுக்கு மத்தியில் சகோதர பாசத்தை உருவாக்கினார்கள்.

2) மதீனாவில் காலம் காலமாக தங்களுக்கு மத்தியில் சண்டையிட்டுக் கொண்டிருந்த இரு பெரும் கூட்டமான அவ்ஸ் ,கஜ்ரஜ் கோத்திரத்தார்களை அழைத்து அவர்களுக்கு மத்தியில் சமாதான உடன்படிக்கை செய்து அவர்களை சீர்படுத்தினார்கள். காலம் காலமாக இருந்த பகைமை நீங்கி இஸ்லாத்திற்கு சாதகமானவர்களாக மாறினார்கள்.

3) மதீனாவாசிகளான அன்சாரி நபித் தோழர்களுக்கும், மதீனாவை சுற்றி வாழ்ந்த பனூ கைனுகா, பனூ குரைலா, பனூ நுலைர் போன்ற யூத சமுதாயத்திற்கும் மத்தியில் அமைதியை நிலை நாட்ட சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மற்றும் உடன் படிக்கைகளை செய்தார்கள். 

அதில் மிக முக்கியமான உடன் படிக்கை....

1) முஸ்லிம்களும் , யூதர்களும் ஒரே நாட்டினராக கருதப்படுவர். யூதர்கள் அவர்கள் மத சம்பிரதாயங்களை செய்ய எந்த தடையும் இல்லை. யூதர்களையும், முஸ்லிம்களையும்  எதிர்த்து அந்நிய நாட்டில் இருந்து யாராவது போர் செய்ய முனைந்தால் ஒருவொருக்கொருவர் உதவி செய்திட வேண்டும். ஒன்று சேர்ந்து இருவரும் யுத்தம் செய்ய வேண்டும்.யூதர்களை முஸ்லிம்களும், முஸ்லிம்களை யூதர்களும் பாதுகாக்க வேண்டும்.

2) குற்றம் செய்தவர்கள் முஸ்லிமாக இருந்தாலும் , யூதராக இருந்தாலும் சமமான தண்டனை வழங்கப்பட வேண்டும். ஏழை, பணக்காரன் என்ற எந்த பாகுபாடும் நீதி வழங்குவதில் இருக்ககூடாது.

என்பன போன்ற பல அரசியல் நுட்பங்களையும் அரசியல் நகர்வுகளையும் பெருமான் (ஸல்) அவர்கள் கன கச்சிதமாக செய்து முடித்தார்கள். இதன் பின் சில நயவஞ்சக வேலைகள் நடந்தாலும் , ஆரம்பத்தில் நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய இந்த ஒற்றுமை நிகழ்வுகள் பிற்கால இஸ்லாமிய வளர்ச்சிக்கு அச்சாரமாக இருந்தது.

இதை பின்பற்றியே பின்னால் வந்த நான்கு பெரும் கலீபாக்களும், அதன் பின் வந்த அத்துனை ஆட்சியாளர்களும் கடைபிடித்தார்கள். நம் இந்தியாவில்  800 வருடம் ஆட்சி செய்த முகலாய மன்னர்களும் இதை அடிப்படையாக வைத்துதான் பல்வேறு குழுக்களாக பிரிந்து இருந்த இந்த பிளவுப்பட்ட இந்தியாவை ஒருங்கினைந்த இந்திய திருநாடாக மாற்றினார்கள்.

ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டில் வாழும் அனைத்து சமய மக்களும் ஒற்றுமையோடு இருந்தால் தான்  முடியும். அதை முன்னெடுக்கும் வகையில் தான் இந்த தேச ஒற்றுமை மாநாடு ஒருங்கிணைக்பட்டுள்ளது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என பாட புத்தகத்தில் படித்திருப்போம். அது ஏட்டில் மட்டும் இல்லாமல், நம் வாழ்விலும் செய்ய உறுதியேற்போம்.

இளைஞனே! எழுந்துவா...

இளமையின் அருமை.

உலகில் வாழும் மனித சமூகம் பல்வேறு வளங்களைப் பெற்றிருக்கின்றன. இயற்கை வளம், எண்ணெய் வளம், கனிமவளம், நீர் வளம் இவ்வாறு பல்வேறு வளங்களை ஒரு நாடு, ஒரு சமூகம் பெற்றிருக்கின்றது. இந்த வளங்கள் அனைத்தையும் விட அது பெற்றிருக்கின்ற மனித வளம் (Human Resource) மகத்தானது. அந்தவகையில் ஒரு சமூகம் பெற்றிருக்கின்ற சிறந்த வளமாக இளைஞர் சமூகம் உள்ளது.

மனித வாழ்க்கையில் இளமைப்பருவமே (Child Hood) முக்கியமான காலகட்டமாகும். இப்பருவம் ஒரு கத்திமுனையைப் போன்றது. அதனை ஆக்கத்திற்கும் அழிவுக்கும் பயன்படுத்தலாம். இதே போன்றே இப்பருவமும் ஆக்கத்திற்கோ அல்லது அழிவிற்கோ பயன்படுத்தமுடியுமான பருவமாகும். இளமைப்பருவம் என்பது குழந்தைப் பருவத்திற்கும், முழு வளர்ச்சிப் பருவத்திற்கும் இடைப்பட்ட பருவமென அடையாளப்படுத்தப்படுகின்றது. இது உடல் வலிமையும் வீரியமும் கொண்ட பருவமாகும். வாழ்வில் சுறுசுறுப்பும் இயக்கமும் செயற்திறனும் மிக்க பருவமாகும். வாழ்வில் தன் வாலிபத்தை பயன்படுத்திக் கொள்ளாதவன் வளமான வாழ்விற்கு உரித்துடையவனாவது சாத்தியமானதன்று. இதனாலேயே முதுமை வரும் முன்னர் இளமையை பயன்படுத்திக்கொள்ளுமாறு நபிமொழி ஒன்று கூறுகின்றது.

‘உன்னிடம் ஐந்து விடயங்கள் வருவதற்கு முன் ஐந்து விடயங்களை பயன்படுத்திக்கொள்.

01. மரணம் வருமுன் வாழ்க்கையையும்

02. நோய் வருமுன் ஆரோக்கியத்தையும்

03. வேலைப்பளு வருமுன் ஓய்வு நேரத்தையும்

04. முதுமை வருமுன் இளமைப் பருவத்தையும்

05. வறுமை வருமுன் செல்வ நிலையையும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நஸாயி)

குர்ஆன் கூறும் முன் மாதிரி இளைஞர்கள் (யூசுஃப்)அலை.

قَالَ اجْعَلْنِىْ عَلٰى خَزَآٮِٕنِ الْاَرْضِ‌ اِنِّىْ حَفِيْظٌ عَلِيْمٌ‏ 

(யூஸுஃப்) கூறினார்: “(இந்த) பூமியின் களஞ்சியங்களுக்கு என்னை (அதிகாரியாய்) ஆக்கிவிடுவீராக; நிச்சயமாக நான் (அவற்றைப்) பாதுகாக்க நன்கறிந்தவன்.”(அல்குர்ஆன் : 12:55)

وَكَذٰلِكَ مَكَّنَّا لِيُوْسُفَ فِى الْاَرْضِ‌ يَتَبَوَّاُ مِنْهَا حَيْثُ يَشَآءُ‌  نُصِيْبُ بِرَحْمَتِنَا مَنْ نَّشَآءُ‌ وَلَا نُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ‏ 

யூஸுஃப் தான் விரும்பிய விதத்தில் காரியங்கள் செய்து வர அந்த நாட்டில் யூஸுஃபுக்கு நாம் இவ்வாறே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம்; இவ்வாறே நாம் நாடியவருக்கு நமது அருள் கிடைக்கும் படிச் செய்கின்றோம். நன்மை செய்பவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.(அல்குர்ஆன் : 12:56)

குகை வாசிகள் இளைஞர்கள்.

نَحْنُ نَقُصُّ عَلَيْكَ نَبَاَهُمْ بِالْحَـقِّ‌ اِنَّهُمْ فِتْيَةٌ اٰمَنُوْا بِرَبِّهِمْ وَزِدْنٰهُمْ هُدًى‌‏ 

(நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் - தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம்.(அல்குர்ஆன் : 18:13)

وَّرَبَطْنَا عَلٰى قُلُوْبِهِمْ اِذْ قَامُوْا فَقَالُوْا رَبُّنَا رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَنْ نَّدْعُوَا۫ مِنْ دُوْنِهٖۤ اِلٰهًـا‌ لَّـقَدْ قُلْنَاۤ اِذًا شَطَطًا‏ 

அவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று “வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம்; (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) - வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்” என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம்.(அல்குர்ஆன் : 18:14)

هٰٓؤُلَاۤءِ قَوْمُنَا اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اٰلِهَةً‌  لَوْ لَا يَاْتُوْنَ عَلَيْهِمْ بِسُلْطٰنٍ بَيِّنٍ‌  فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا ‏ 

எங்கள் சமூகத்தாராகிய அவர்கள் அவனையன்றி வேறு நாயனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் அவற்றின் மீது தெளிவான அத்தாட்சியைக் கொண்டு வரவேண்டாமா? ஆகவே அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக் கட்டுபவனை விட அநியாயக்காரன் யார்? (என்றும் கூறினார்கள்).(அல்குர்ஆன் : 18:15)

وَاِذِ اعْتَزَلْـتُمُوْهُمْ وَمَا يَعْبُدُوْنَ اِلَّا اللّٰهَ فَاْوٗۤا اِلَى الْـكَهْفِ يَنْشُرْ لَـكُمْ رَبُّكُمْ مِّنْ رَّحْمَتِهٖ وَيُهَيِّئْ لَـكُمْ مِّنْ اَمْرِكُمْ مِّرْفَقًا‏ 

அவர்களையும், அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றையும் விட்டு விலகி நீங்கள், குகையின்பால் ஒதுங்கிக் கொள்ளுங்கள், உங்களுடைய இறைவன் தன்னுடைய ரஹ்மத்திலிருந்து உங்களுக்கு விசாலமாகக் கொடுத்து, உங்கள் காரியத்தில் உணவு பிரச்சனையை உங்களுக்கு எளிதாக்கித் தருவான் (என்று அவர்களில் ஓர் இளைஞர் சொன்னார்).            (அல்குர்ஆன் : 18:16)

அபூஜகலை கொலைசெய்த சிறுவர்கள்.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார்:நான் பத்ருப் போரின்போது (படை) அணியில் நின்று கொண்டிருந்தேன். திரும்பிப் பார்த்தபோது என் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் இளவயதுடைய இரண்டு இளைஞர்கள் (நின்று கொண்டு) இருந்தனர். 

அந்த இருவர் (அருகில்) இருப்பது குறித்து நான் அஞ்சினேன். அப்போது அந்த இருவரில் ஒருவர் தம் தோழரிடமிருந்து மறைவாக என்னிடம், 'என் பெரிய தந்தையே! அபூ ஜஹ்லை எனக்குக் காட்டுங்கள்' என்று கூறினார். அப்போது நான், 'என் சகோதரர் மகனே! அவனை என்ன செய்யப் போகிறாய்?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'அவனை நான் கண்டால் (ஒன்று,) அவனை நான் கொலை செய்வேன்; அல்லது அதற்காக(ப் போராடி) மடிவேன் என்று அல்லாஹ்விடம் சபதம் எடுத்துக் கொண்டுள்ளேன்' என்றார். அப்போது மற்றொரு வரும் தம் சகாவிடமிருந்து மறைவாக, முதலமாவரைப் போன்றே கூறினார். 

அவர்களைப் போன்ற இருவருக்கிடையே நான் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. எனவே, அவ்விருவருக்கும், அபூ ஜஹ்லை சமிக்கை செய்து காட்டினேன். அந்த இருவரும் இராஜாளிப் பறவைகள் போன்று பாய்ந்து அவனைப் பலமாகத் தாக்கினர். அந்த இருவரும் 'அஃப்ரா'வின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித்) ஆவர்.(ஸஹீஹ் புகாரி (3988)

அர்ஷின் நிழலில் இளைஞன்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

'அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்; நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, 'நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்' என்று சொல்லும் மனிதர், தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்' புகாரி (660)

வாருங்கள்! ஒன்றிணைந்து தேசம் காப்போம்!

மிக மோசமான ஒரு காலகட்டத்தை நோக்கி இந்த தேசம் நகர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக முஸ்லிம்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் தங்களுடைய வாழ்க்கையை கேள்விக்குறியாக கழிக்க வேண்டிய நிலை; எதிர்காலத்தில் இங்கு தங்களால் வாழ முடியாது என்கிற ஒரு மோசமான நிலையைதான் இன்று தலித்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், முஸ்லிம்களும் சந்திக்கக் கூடிய ஒரு அவலமான நிலையில் இந்த தேசம் சென்று கொண்டிருக்கிறது.

இச்சூழலில் இந்திய முஸ்லிம்களையும் இந்திய மக்களையும் ஒரு தன்னம்பிக்கை நிலைக்கு நகர்த்த வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் உள்ளங்களில் இருக்கக்கூடிய பயத்தை துடைத்தெறிய வேண்டும். இந்த தேசம் உருவாகுவதற்கு காரணமாக இருந்தவர்கள் முஸ்லிம்கள். இந்த தேசத்தினுடைய வளர்ச்சிக்கு அடிப்படையாக பங்காற்றியவர்கள் முஸ்லிம்கள். அப்படிப்பட்ட பாரம்பரியத்திற்கு சொந்தமான ஒரு சமூகம் இன்று மனோரீதியாக ஏதோ ஒரு தடுமாற்றதில் இருக்கிறதா? மனோரீதியாக பீதிவயப்பட்டு இருக்கிறதா?

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்க வேண்டிய அவசியமே கிடையாது. காரணம், ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏதுவாக இஸ்லாமிய வழிகாட்டுதலை அல்லாஹ்வின் வசனங்கள் கொடுக்கின்றது. எந்த ஒரு சூழலிலும் நீங்கள் சர்வாதிகாரத்திற்கும் அடக்குமுறைக்கும் அடிபணிந்து போக வேண்டிய அவசியமில்லை. அதைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியமில்லை. அதைக்கண்டு தடுமாற வேண்டிய அவசியமில்லை என்கிற அடிப்படையிலான அற்புதமான வரலாறுகளை அடுக்கடுக்காகக் கொண்டு, இறை வசனங்களையும், அண்ணலம் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையை வழிகாட்டுதலாகக் கொண்டு இந்த சமூகத்தை அவ்வப்போது பயிற்றுவிக்க கூடிய அற்புதமான கொள்கையை, சித்தாந்தத்தை, பாரம்பரியத்தைக் கொண்ட மார்க்கம் இஸ்லாம்..

அல்லாமா இக்பால் அவர்கள் எழுதிய தேசியகீதம் ....

سارے جہاں سے اچھا ہندوستاں ہمارا 

ہم بلبلیں ہیں اس کی یہ گلستاں ہمارا 

غربت میں ہوں اگر ہم رہتا ہے دل وطن میں 

سمجھو وہیں ہمیں بھی دل ہو جہاں ہمارا 

پربت وہ سب سے اونچا ہم سایہ آسماں کا 

وہ سنتری ہمارا وہ پاسباں ہمارا 

گودی میں کھیلتی ہیں اس کی ہزاروں ندیاں 

گلشن ہے جن کے دم سے رشک جناں ہمارا 

اے آب رود گنگا وہ دن ہے یاد تجھ کو 

اترا ترے کنارے جب کارواں ہمارا 

مذہب نہیں سکھاتا آپس میں بیر رکھنا 

ہندی ہیں ہم وطن ہے ہندوستاں ہمارا 

یونان و مصر و روما سب مٹ گئے جہاں سے 

اب تک مگر ہے باقی نام و نشاں ہمارا 

کچھ بات ہے کہ ہستی مٹتی نہیں ہماری 

صدیوں رہا ہے دشمن دور زماں ہمارا 

اقبالؔ کوئی محرم اپنا نہیں جہاں میں 

معلوم کیا کسی کو درد نہاں ہمارا

பொருள்:

ஒட்டுமொத்த உலகை விட அழகானது என் இந்தியா

எங்கள் அது,அதன் கானக்குயில்கள் நாங்கள்

அந்நிய பூமியில் இருக்க நேர்ந்தாலும் எங்கள் மனம் அன்னை தேசத்திலேயே அமர்ந்திருக்கும்

மனமுள்ள இடத்திலே தான் மனிதர்களாகிய நாங்களும் இருப்போம் ?

வானுக்கு அண்டைவீட்டுக்காரனான உயர்ந்த அந்த மலை

அதுவே எங்களின் காவலாளி,அதுவே எங்கள் வாசல் பாதுகாவலன்.

அவள் மடியில் பல்லாயிரம் வருடங்களாகப் பாய்ந்து விளையாடுகின்றன நதிகள்

சொர்க்கம் பொறாமை கொள்ளும் தோட்டம் எங்களுடைய தேசம்

நீரோடும் கங்கை நதியே ! நினைவில் இருக்கின்றவனவா அந்நாட்கள் ?

உன் கரையில் எங்கள் மூடிய வண்டிகள் இறங்கிய அந்நாட்கள் ?

மதங்கள் எங்களுக்குள் பகையைப் போதிக்கவில்லை

நாங்கள் இந்தியர்கள்,இது இந்தியா

கிரேக்கம்,எகிப்து,பைஜான்டியம் உலகைவிட்டு அழிந்து போயின

எங்கள் பெயரும்,அடையாளமும் இன்னமும் உயிர்த்திருக்கிறது

காலச் சுழற்சி மட்டுமே எங்களுக்கான காலன்

இக்பால் ! நமக்கான உற்ற நண்பன் உலகிலில்லை

யாருக்கேனும் மறைந்திருக்கும் நம் வலி தெரியுமா ?

காரிருள் கவ்விடாமல் இந்தியாவை காப்போம்.! தேச ஒற்றுமையை நிலை நாட்டுவோம்.!

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

No comments:

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...