ஷபே பராஅத்...
அருள் மழைப்பொழியும் இரவு.
சங்கைக்குரிய ஷஃபான் மாதம் இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் எட்டாம் மாதம் ஆகும்.இம்மாதத்தின் மகத்துவத்தையும்,சிறப்புகளையும் பற்றி நம் கண்மணி நாயகம் ﷺஅவர்கள் பல நபி மொழிகள் பகன்றுள்ளார்கள்.
ஒரு நபி மொழியில்...
الشعبان شهری
"ஷஃபான் என்னுடைய மாதமாகும்"என நம் கண்மணிﷺ நாயகம் அவர்கள் கூறி அதன் சிறப்பை உணர்த்தியுள்ளார்கள்.
இன்னொரு அறிவிப்பில்...
شعبان شهري وشهر رمضان شهر الله تعالى
"ஷஃபான் என்னுடைய மாதமாகும்,ரமலான் அல்லாஹுடைய மாதமாகும்"(الجامع الصغير، رقم الحديث 4889)
ஹழ்ரத் துன் நூனுல் மிஸ்ரி(ரஹ்)அவர்கள் எழுதுகிறார்கள்; ரஜப் விதைகளை விதைக்கும் மாதம், ஷபான் பாசனம் பாய்ச்சும் மாதம், ரமலான் அதன் பழங்களை உண்ணும் மாதம்.
சங்கைக்குரிய ஷஃபான் மாதம் மேன்மையையும், சிறப்புக்களையும் தாங்கி இருப்பதற்கு,இம்மாதத்தில் உள்ள மேன்மைக்குரிய 15 ஆம் நாள் இரவு மிக முக்கிய காரணமாகும்.
இவ்விரவு அல்லாஹ்வின் அருளையும் பரக்கத்தையும்,சிறப்பையும் தாங்கியுள்ள இரவு ஆகும்.
இதற்கு அரபியில் نصف شعبان "நிஸ்ஃபு ஷஃபான் இரவு" எனப்படும்.
பராஅத் இரவு என்றால் என்ன?
اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةٍ مُّبٰـرَكَةٍ اِنَّا كُنَّا مُنْذِرِيْنَ
மாதம் பிறை 15ம் இரவுக்கு லைலத்துல் முபாரக்கா (பரக்கத் செய்யப்பட்ட இரவு), லைலத்துர் ரஹ்மா (ரஹ்மத் செய்யப்பட்ட இரவு), லைலத்துல் பராஅத் விடுதலை பெறும் இரவு) என்றெல்லாம் கூறப்படும்.
அந்த இரவிற்கு உண்டு என்கின்ற விவரம் தப்ஸீர் குர்துபியிலும், திர்மிதியின் விரிவுரை நூலான துஹ்ஃபதுல் அஹ்வதியிலும் மற்றும் பிரபலமான நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.
குறிப்பாக இமாம் இக்ரிமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் கூறியுள்ளார்கள். பராஅத் எனும் அரபி சொல்லுக்கு விடுதலை என்பது பொருளாகும். புனிதமிக்க அவ்விரவில் நரகவாசிகள் விடுதலை பெறுகிறார்கள் என்பதால் அந்த இரவிற்கு லைலதுல் பராஅத் (விடுதலை பெறும் இரவு) என பெயர் வந்தது.
ஷபே பராஅத்திற்குள்ள வேறு சில பெயர்கள்.
இமாம் கஸ்ஸாலி(ரஹ்)அவர்களின் பிரபல்யமான "முகாஷஃபதுல் குலூப்"எனும் நூலில் இவ்விரவுக்கு வேறு சில பெயர்களையும் குறிப்பிடுகிறார்கள்.
لیلۃ التکفیر
பாவங்களுக்கு பரிகாரமாகும் இரவு.
شب حیات
ஜீவனுள்ள இரவு.
شب مغفرت
பிழையைப்பொறுத்தருளும் இரவு.
شب آزادی
நரக விடுதலை வழங்கும் இரவு.
لیلۃ الشفاعۃ (شب شفاعت)
சிபாரிசு செய்யும் இரவு.
لیلۃ القسمہ والتقدیر
களா கத்ரை நிர்ணயிக்கும் இரவு.
இவ்விதமே இமாம் கஷ்ஷாஃப்(ரஹ்)அவர்கள் இவ்விரவுக்கு நான்கு பெயர்களை குறிப்பிடுவார்கள்.
لیلۃ المبارکہ
பரகத் பொருந்திய இரவு
لیلۃ البراۃ
நரக விடுதலை வழங்கும் இரவு.
لیلۃ الصک
விதி நிர்ணையிக்கப்டும் இரவு என்பதால் "சீட்டு வழங்கப்படும் இரவு"
لیلۃ الرحمہ
அருள் மழை பொழியும் இரவு.
ஷபே பராஅத் இரவுக்குள்ள தனித்துவமான சிறப்புக்கள்.
அதிகமான திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் "சூரா துகானின் இரண்டாவது வசனத்திற்கு(انا انزلناه فی ليلة مبارکة)விரிவுறையில் நிஸ்ஃபு ஷஃபான் இரவின் தனித்துவங்களை விவரித்துள்ளார்கள்.
#இவ்விரவுவில் அனைத்து காரியங்களும் நிர்ணயிக்கப்படுகிறது.
#இவ்விரவை அமல்களில் கழிப்பது சிறப்பானதாகும்.
#இவ்விரவுவில் அல்லாஹ்வின் அருள் மழைப்பொழிகிறது.
#இவ்விரவுவில் "ஷஃபாஅத்"சிபாரிசுக்கு முக்கியத்துவமளிக்கப்படுகிறது.
#இவ்விரவுவில் அடியார்களுக்கு பாவமன்னிப்பு எழுதப்படுகிறது.
(زمخشری، الکشاف، 4: 272 تا 273)
"ஷபே பராஅத்" என்கிற பெயர் காரணம்.
சங்கைக்குரிய இவ்விரவுக்கு "ஷபே பராஅத்"எனப்படுகிறது.இது ஃபார்ஸி வார்த்தையாகும்.شبஎன்றால் ஃபார்ஸியில் இரவு என்பதாகும்.براتஎன்றால் விடுதலை என்று பொருள்.
அரபியில் இதற்குلیلۃ البرات லைலதுல் பராஅத் எனப்படும்.
அறிஞப்பெருமக்களின் கருத்து;பாவங்களிலிருந்தும்,நரகிலிருந்தும் இவ்விரவில் விடுதலையளிக்கப்படுவதால் இதனை"لیلۃ البرات"எனப்டுகிறது.
ஷபே பராஅத் குறித்து குர்ஆனில்...
மேலே குறிப்பிட்டதை போல சூரா துகானின் இரண்டாவது வசனத்தில் இவ்விரவைப் பற்றி கூறப்படுகிறது.
اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةٍ مُّبٰـرَكَةٍ اِنَّا كُنَّا مُنْذِرِيْنَ
நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். (அல்குர்ஆன் : 44:3)
இவ்வசனத்தில் வரும் لیلۃ مبارکۃ "பரக்கத் பொருந்திய இரவு" என்றால் அது எந்த இரவு என்பதில் அறிஞப்பெருமக்களுக்கிடையில் இரு கருத்துக்கள் நிலவுகின்றன.
ழியாவுல் குர்ஆன் ضیاء القرآن எனும் தஃப்ஸீரின் ஆசிரியர், அவ்விரண்டு கருத்துக்களையும் விவரித்துள்ளார்கள்.
ஹழ்ரத் இப்னு அப்பாஸ்(ரலி)அவர்கள், கதாதா(ரஹ்)அவர்கள் இன்னும் அதிகமான முஃபஸ்ஸிரீன்களின் கருத்து:
இவ்வசனம் "லைலதுல் கத்ர்"யே குறிக்கின்றது.இதனை குர்ஆன் இறங்கிய இரவு "லைலதுல் கத்ர்"இரவு என்று கத்ரு சூரா தெளிவுபடுத்துகிறது.
ஹழ்ரத் இக்ரிமா(ரஹ்)அவர்கள்,இன்னும் ஒரு பெருங்கொண்ட கூட்டத்தினரின் கருத்து:
இவ்வசனம் நிஸ்ஃபு ஷஃபானையே குறிக்கின்றது.
கஸாயினுல் இர்ஃபான் خزائن العرفان எனும் நூலின் ஆசிரியர் எழுதுகிறார்கள்:
பரக்கத் பொருந்திய இரவு لیلۃ مبارکۃ என்பதற்கு லைலதுல் கத்ரு இரவு மற்றும் நிஸ்ஃபு ஷஃபான் இரவு இரண்டையுமே சொல்வதற்கு இடம்பாடுள்ளது.
இவ்விரவில் திருமறை குர்ஆன் லவ்ஹுல் மஹ்ஃபூலிலிருந்து முதலாவது வானத்திற்கு ஒட்டுமொத்தமாக இறக்கி அருளப்பட்டது.பின்னர் ஜிப்ரயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாயிலாக 30 (முப்பது)வருடங்கள் சிறுக சிறுக தேவைக்கு ஏற்ப இறக்கியருளப்பட்டது.ஒட்டுமொத்தமாக திருமறை இறங்கிய இரவு என்பதால் இவ்விரவில் அல்லாஹ்வின் ரஹ்மத்தும்,பரக்கத்தும் பூமியில் இறங்குகின்றது.துஆ ஒப்புக்கொள்ளப்படுகிறது.
ஷபே பராஅத் குறித்து ஹதீஸில்...
قال النبي صلى الله عليه وآله وسلم: «إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا نَهَارَهَا؛ فَإِنَّ اللهَ يَنْزِلُ فِيهَا لِغُرُوبِ الشَّمْسِ إِلَى سَمَاءِ الدُّنْيَا، فَيَقُولُ: أَلَا مِنْ مُسْتَغْفِرٍ لِي فَأَغْفِرَ لَهُ، أَلَا مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ، أَلَا مُبْتَلًى فَأُعَافِيَهُ، أَلَا كَذَا، أَلَا كَذَا، حَتَّى يَطْلُعَ الْفَجْرُ» رواه ابن ماجه من حديث علي رضي الله عنه،
நபிகள் நாயகம்ﷺஅவர்கள் சொன்னார்கள்: ஷஃபான் மாதத்ததின் பகுதி(15ம் நாள் )இரவு வந்துவிட்டால் அதன் இரவிலே நின்று வணங்குங்கள், அதன் பகலில் நோன்பு வையுங்கள், காரணம் அல்லாஹுத்தஆலா சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் உலகின் வானத்திற்கு இறங்கி வந்து "எவரேனும் பாவமன்னிப்பு தேடுபவர் இருக்கிறாரா? அவரின் பாவத்தை நான் மன்னிப்பேன்,எவரேனும் ரிஜ்கை கேட்பவர் இருக்கிறாரா? அவருக்கு நான் ரிஜ்கை அளிப்பேன்,எவரேனும் சிரமத்தில் அகப்பட்டவர் இருக்கிறாரா? அவரின் சிரமத்தை நான் நீக்குவேன், இவ்வாறே அல்லாஹ் (அன்றைய இரவு முழுவதும்)காலை ஃபஜ்ரு உதயமாகும் வரை கேட்டுக்கொண்டே இருப்பான்.
(அறிவிப்பவர் :அலீ (ரலி)அவர்கள் (நூல் இப்னுமாஜா)
وخرج الإمام أحمد من حديث عبد الله بن عمرو، عن النبي صلى الله عليه وسلم قال: "إن الله ليطلع إلى خلقه ليلة النصف من شعبان، فيغفر لعباده، إلا اثنين، مشاحن، أو قاتل نفس"، وخرجه ابن حبان في (صحيحه) من حديث معاذ، مرفوعًا.
நபி ﷺஅவர்கள் சொன்னார்கள்: நிச்சயமாக அல்லாஹ் ஷஃபான் மாதத்தின் பகுதி (15ம் நாள்)இரவில் தனது படைப்பினங்களின் பால் இறங்கி வந்து தனது அடியார்களின் (அனைவரின்)பாவங்களை மன்னிக்கிறான்,இரண்டு நபர்களை தவிர
1.குரோதம் கொள்பவன்
2.தற்கொலை செய்து கொண்டவன்"
அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் அம்ர் பின்ஆஸ் நூல்:இப்னு ஹிப்பான்.
ஹதீஸ்கலையில் ழஈபான ஹதீஸின் தரம் .
இன்று சிலர் பராஅத்துடைய இரவ பற்றி வந்த ஹதீஸ்கள் அனைத்தும் ழஈபானது இந்த இரவிற்கு தனிச்சிறப்பு கிடையாது என்று கூறி மக்களை இபாதத்தை விட்டும் தூரமாக்குவது தவறான காரியமாகும் ஏனெனில் இந்த இரவின் சிறப்புக்கள் பற்றி 15 ஸஹாபாக்களைத் தொட்டும் ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது அதிகமான கிதாபுகள் இந்த இரவின் சிறப்புப் பற்றி பேசியுள்ளது.
இதுபற்றி வந்த ஹதீஸ்களில் அதிகமானது ழஈபாக இருந்தாலும் அவைகளை ஒன்று சேர்க்கும் போது ஹஸனுடைய அந்தஸ்தைப் பெறும் என்பது ஹதீஸ் துறையில் ஈடுபடக்கூடியவர்களுக்குத் தெரியாதவிடயமல்ல.
இந்த ஹதீஸ்கள் ழஈப் என்று வைத்துக்கொண்டாலும் ழஈபான ஹதீஸ்களை சட்டங்களுக்கு ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாதே தவிர அமல்களின் சிறப்புக்களுக்கு ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியும் என்பது முஹத்திஸீன்களிடத்தில் ஏகோபித்த கருத்தாகும் என இமாம் நவவி (ரஹ்) கூறியிருப்பதுடன் இந்த கருத்தை ஸலபுஸ்ஸாலிஹீன்களில் இமாம் ஸவ்ரி, இப்னு உயைனா இப்னு ஹன்பல் இப்னுல் முபாரக் இப்னு மஹ்தி இப்னு மஈன் (ரஹ்) போன்றோர்களும் கூறியுள்ளார்கள்.
அமல்களின் சிறப்புகளுக்கு ழஈபான ஹதீஸ்களை ஆதாரமாக எடுப்பதின் நிபந்தனைகளை தெளிவுபடுத்திய இப்னு ஹஜர் அல் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் இந்த இரவின் சிறப்பை தனது பத்ஹுல் பாரீயிலே பேசியுல்லார்கள்.
எனவே பராஅத்துடைய இரவு பற்றி வந்த ஹதீஸ்களில் சிலது ஸஹீஹ், சிலது ஹசன், சிலது ழஈப் எனவும் சில முஹத்திஸீன்கள் கூறியிருக்கும் போது இந்த இரவை தானதர்மங்கள், குர்ஆன் திலாவத் திக்ருகள் துஆகள் போன்ற வணக்கங்களால் உயிர்ப்பிப்பது எவ்வித சந்தேகமும் கிடையாது.
ஷபே பராஅத் இரவில் கண்மணி நாயகம்ﷺஅவர்கள்.
حديث عائشة رضي الله عنها. قالت: فقدتُّ النبي صلى الله عليه وسلم ذات ليلة، فخرجت أطلبه، فإذا هو بالبقيع، رافعًا رأسه إلى السماء. فقال: "أكنت تخافين أن يحيف الله عليك ورسوله؟" فقلت: يا رسول الله، ظننت أنك أتيت بعض نسائك. فقال: "إن الله تبارك وتعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا، فيغفر لأكثر من عدد شعر غنم كلب" (خرّجه الإمام أحمد والترمذي وابن ماجه) (2)، وذكر الترمذي عن البخاري أنه ضعفه.
அன்னை ஆயிஷா (ரலி)அறிவிக்கிறார்கள்: ஒருநாள் இரவு வேளையில் நபி (ஸல்) அவர்களை காணவில்லை,அவர்களைத் தேடி நான் சென்றேன், அப்போது அவர்கள் வானத்தை நோக்கி தங்களின் தலையை உயர்த்தியவர்களாக ஜன்னத்துல் பகீ என்ற இடத்தில் (இருக்கக் கண்டேன்) அப்போது அவர்கள் "அல்லாஹ்வும் அவனது தூதரும் உனக்கு அநீதம் செய்வர் என பயந்து விட்டாயா?"என என்னிடம் கேட்டார்கள்,அப்போது நான் "யா ரசூலல்லாஹ் உங்களின் மனைவியர்களில் (வேறு) சிலரின் வீட்டிற்கு வந்திருப்பீர்கள் என நான் நினைத்தேன்"என்று கூறினேன்.அப்போது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்"நிச்சயமாக அல்லாஹுத்தஆலா ஷாபான் மாதத்தின் பகுதி (15ஆம் நாள்) இரவில் இவ்வுலகின் வானத்திற்கு இறங்கி கலப் கோத்திரத்தவர்களின் ஆடுகளின் (அடர்த்தியான) .ரோமங்களின் எண்ணிக்கையைவிட அதிகமானவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்குகிறான். (நூல் :திர்மிதீ)
ஷபே பராஅத் இரவில் (ஸஹாபாக்கள்) நபித்தோழர்கள்.
ஸய்யதுனா அனஸ் இப்னு மாலிக்(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்:சஹாபாப்பெருமக்கள், ஷஃபான் பிறையை கண்டுவிட்டால் குர்ஆன் திலாவத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.தங்களின் பொருளின் ஸகாத்தை கணக்கிட்டு வரியவர்களுக்கும்,ஏழைகளுக்கும் ரமலான் மாதத்தில் வழங்குவதற்காக தயாராக வைத்துக் கொள்வார்கள்.
அதிகாரிகள், கைதிகளை வரவழைத்து,தண்டனை உறுதியானவர்களுக்கு தண்டனை வழங்கிவிட்டு,மற்ற கைதிகளை விடுதலை செய்து விடுவார்கள்.
வியாபாரிகள், தங்களின் கடனை நிறைவேற்றிவிட்டு,தங்களுக்கு வரவேண்டிய கடன் நிலுவைத் தொகையினை வசூல் செய்து கொள்வார்கள்.
ரமலானின் பிறை தென்பட்டு விட்டால் சில சஹாபாக்கள் குளித்துவிட்டு இஃதிகாஃபில் அமர்ந்து விடுவார்கள். (غنية الطالبين، جلد1، ص246)
ஷபே பராஅத் இரவில் இமாமுனா ஹஸன்(ரலி)அவர்கள்.
இமாம் தாவூஸ் யமானி(ரஹ்)அவர்கள் கூறுகின்றார்கள்:நான்,இமாம் ஹஸன் இப்னு அலி(ரலி)அவர்களிடம் நிஸ்ஃபு ஷஃபான் குறித்தும்,அதில் அமல் செய்வது குறித்தும் கேட்டேன்.
அதற்கு இமாம்(ரலி)அவர்கள் பதில் கூறினார்கள்:நான் இந்த இரவை மூன்று பகுதிகளாக பிரித்துக் கொள்வேன்.
முதல் பகுதியில் எனது பாட்டனார் கண்மணி நாயகம்ﷺ அவர்களின் மீது ஸலவாத் ஓதுவேன்.இது அல்லாஹுத்தஆலாவின் கட்டளையின்படி அமல் செய்வதற்காகவாகும்.
اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا
இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.(அல்குர்ஆன் : 33:56)
இரவில் இரண்டாவது பகுதியில் "இஸ்திக்ஃபார்"பாவமன்னிப்புக் கோருதலில் ஈடுபடுவேன்,இதுவும் அல்லாஹ்வின் கட்டளையாகும்.
وَمَا كَانَ اللّٰهُ لِيُعَذِّبَهُمْ وَاَنْتَ فِيْهِمْ وَمَا كَانَ اللّٰهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُوْنَ
ஆனால் நீர் அவர்களிடையே இருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான்; மேலும் அவர்கள் பாவமன்னிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை.(அல்குர்ஆன் : 8:33)
இரவின் மூன்றாவது பகுதியில் தொழுகையில் ஈடுபடுவேன்.இதுவும் இறைகட்டளையாகும்.
كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ۩
(அவன் கூறுவது போலல்ல;) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.(அல்குர்ஆன் : 96:19)
நான் கேட்டேன் "இந்த இரவில் இது போன்ற அமல்களில் ஈடுபடக்கூடியவர்களுக்கு என்ன கூலிக்கிடைக்கும்."
அதற்கு இமாம்(ரலி)அவர்கள் கூறினார்கள்: எனது தந்தை அலி(ரலி)அவர்கள் கண்மணி நாயகம்ﷺ அவர்கள் சொல்லக்கேட்டதாக சொன்னார்கள்
"எவர் ஷஃபான் பதினைந்தாம் நாள் இரவை அமல்களால் உயிர் பெறச்செய்வாரோ அவரை அல்லாஹ் مقربین இறைநெருக்கம் பெற்றவர்களில் எழுதிவிடுகிறான்.
இறைநெருக்கம் பெற்றவர்கள் குறித்து திருமறையில்...
فَاَمَّاۤ اِنْ كَانَ مِنَ الْمُقَرَّبِيْنَۙ
(இறந்தவர் இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் நின்றும் இருப்பாராயின்.(அல்குர்ஆன் : 56:88)
(توبه و استغفار، طاهرالقادری، ص:362، 361)
ஷபே பராஅத் இரவில் ஹழ்ரத் உமர் இப்னு அப்துல் அஸீஸ்(ரஹ்)அவர்கள்.
அமீருல் முஃமினீன் ஹழ்ரத் உமர் இப்னு அப்துல் அஸீஸ்(ரஹ்)அவர்கள் ஒரு தடவை சங்கைக்குரிய ஷஃபான் மாதத்தின் 15 ஆம் நாள் இரவில் வணக்கத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.
அவர்கள் தலையை உயர்த்தியபோது, ஒரு பச்சை காகிதத்தைக் கண்டார்கள், அதன் ஒளி வானம் முழுவதும் பரவி இருந்தது ,அதில் எழுதப்பட்டிருந்தது:
هذه براءة من النار من الملک العزيز لعبده عمر بن عبدالعزيز.
சர்வவல்லமையுள்ள ஆட்சியாளன்,மிகைத்தோனாகிய அல்லாஹ்வால் நரக நெருப்பிலிருந்து விடுபடுவதற்கான கடிதம் இது, அவருடைய அடியாரான உமர் பின் அப்துல் அஸீஸுக்கு வழங்கப்பட்டது. (تفسير روح البيان، ج8، ص402)
மேற்கூறப்பட்ட அனைத்து அறிவிப்புகளில் இந்த செய்தி சூரிய ஒளியை விடவும் தெளிவாக விளங்குகின்றது:
நிஸ்ஃபு ஷஃபானின் மகத்துவ மிக்க சங்கைக்குரிய இரவு அல்லாஹுத்தஆலாவின் புறத்திலிருந்து ரஹ்மத்துகளையும், பரக்கத்துக்களையும்,பாவ மன்னிப்பின் பாக்கியத்தையும் கொண்டு வருகிறது.
எனவே சங்கைப்பொருந்திய ஷபே பராஅத் இரவில் அல்லாஹ்வின் அருளையும்,பரக்கத்தையும் அடைந்துக்கொள்ள முயற்சிப்போமாக!
அல்லாஹுத்தஆலா நம் அனைவருக்கும் ஷபே பராஅத் இரவின் நன்மைகளை அடைந்துக்கொள்ள தவ்ஃபீக் செய்வானாக! ஆமீன்...