தலைப்பு :
ஜகாத் எனும் கடமை 2021
قال الله في القران العظيم: يَمْحَقُ اللّٰهُ الرِّبٰوا وَيُرْبِى الصَّدَقٰتِ وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ اَثِيْم
அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.(அல்குர்ஆன் : 2:276)
உலக மதங்களும்,சமயங்களும் தர்மம் செய்வதை சிறப்பு மற்றும் நற்குணம் என்ற ரீதியில் கூறியிருக்க,இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே தர்மம் செய்வதை (ஜகாதை)கடமை என்று கூறுகிறது.
இஸ்லாத்தில் தொழுகைக்கு அடுத்து மிக முக்கியமான கடமை ஜகாத் ஆகும்.தொழுகை எனும் கடமை ஹிஜ்ரத்திற்கு முன் மிஃராஜிலும்,ஜகாத் எனும் கடமை ஹிஜ்ரி 2ஆம் ஆண்டும் கடமையாக்கப்பட்டன.
குர்ஆனில் தொழுகையோடு சேர்த்து ஜகாதை குறித்து 82 இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.
எனவே தான் தொழுகையைப் போன்றே ஜகாதையும் அதன் சட்டத்திட்டங்களையும் அறிந்து நிறைவேற்றுவது அவசியம் என முஃபஸ்ஸிரீன்கள் கூறுகிறார்கள்.
தொழுகைக்கு பின்பு மிக முக்கிய கடமை ஜகாத் என்பதை கூறும் நபிமொழி...
أنَّ النبيَّ صَلَّى اللهُ عليه وسلَّمَ بَعَثَ مُعَاذًا رَضِيَ اللَّهُ عنْه إلى اليَمَنِ، فَقالَ: ادْعُهُمْ إلى شَهَادَةِ أنْ لا إلَهَ إلَّا اللَّهُ، وأَنِّي رَسولُ اللَّهِ، فإنْ هُمْ أطَاعُوا لذلكَ، فأعْلِمْهُمْ أنَّ اللَّهَ قَدِ افْتَرَضَ عليهم خَمْسَ صَلَوَاتٍ في كُلِّ يَومٍ ولَيْلَةٍ، فإنْ هُمْ أطَاعُوا لذلكَ، فأعْلِمْهُمْ أنَّ اللَّهَ افْتَرَضَ عليهم صَدَقَةً في أمْوَالِهِمْ تُؤْخَذُ مِن أغْنِيَائِهِمْ وتُرَدُّ علَى فُقَرَائِهِمْ (الراوي : عبدالله بن عباس| المحدث : البخاري | المصدر:صحيح البخاري
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்:நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல் ரலி அவர்களை யமனுக்கு (ஆளுநராக) அனுப்பினார்கள். அப்போது அவரிடம், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை; நான் இறைத்தூதர் என்ற உறுதிமொழியின் பால் அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வந்தர்களிடம் பெற்று, ஏழைகளுக்கு வழங்குவதாக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவிப்பீராக!" என்று கூறினார்கள்.
ஜகாத்தின் நோக்கங்கள் இரண்டு
1)ஜகாத் கொடுப்பவரின் உள்ளத்தையும்,அவரின் பொருளாதாரத்தையும் தூய்மையாக்குகிறது மற்றும் பாவமன்னிப்பு வழங்குகிறது.
خُذْ مِنْ اَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيْهِمْ بِهَا وَصَلِّ عَلَيْهِمْ اِنَّ صَلٰوتَكَ سَكَنٌ لَّهُمْ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ
(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக; நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 9:103)
2)வறுமை ஒழிப்பு:பணம் படைத்தவரிடம் மாத்திரம் பொருளாதாரம் சுருங்கிவிடாமல் சமூகத்தில் அனைவரும் பயன்பெறும் விதத்தில் பொருளாதாரம் பரவலாக்கப்பட வேண்டும். (இரத்தம் உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் பாய்ச்சப்படுவதை போல)
ஏதேனுமொரு உறுப்புக்கு இரத்தம் செல்வது தடைப்பட்டால் அவ்வுறுப்பு எவ்வாறு செயலிழந்து விடுமோ அது போல,ஜகாத் கொடுப்பது தடைப்பட்டால் இந்த சமுதாயம் செயலிழந்துவிடும். இதனை பின்வரும் இறை வசனம் அழகாக தெளிவுப்படுத்துகிறது.
كَىْ لَا يَكُوْنَ دُوْلَةً بَيْنَ الْاَغْنِيَآءِ مِنْكُمْ
மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது)
உலகிலேயே ஆகச் சிறந்த வறுமை ஒழிப்புத் திட்டம் "ஜகாத்"ஆகும்.
உலகளவில் உள்ள இஸ்லாமியர்கள் தங்களின் ஜகாதை முறையாகவும்,அமைப்பாகவும் சரிவர நிறைவவேற்றுவார்களேயானால் இஸ்லாமியர்களிடம் வறுமையை ஒழித்து,அனைவருக்குமான தன்னிறைவான பொருளாதாரத்தையும்,சிறந்த கல்வியையும்,உயர்ந்த மருத்துவத்தையும் வழங்க முடியும்.
யதார்த்தம் என்ன?
ஜகாத் கடமையானவர்களில் பலர் ஜகாதை நிறைவேற்றுவதில்லை,அல்லது ஜகாதை நிறைவேற்றுவபரும் அதன் சட்டங்களை அறிந்து உரிய முறையில் நிறைவேற்றுவதில்லை.அதனால் உலகளவில் இஸ்லாமியர்களின் அவல நிலை குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
பொருளாதார தடையினால் சோமாலியா போன்ற நாடுகளிலும்.போரினால் பாதிக்கப்பட்ட சிரியா,பலஸ்தீன்,காஸா போன்ற பல நாடுகளிலும்.உள்நாட்டு கலவரங்களால் அகதிகளாகப்பட்ட ரோஹங்கிய முஸ்லிம்கள் வாழும் பர்மா போன்ற நாடுகளிலும்.
வாழ வழியற்றவர்களாக...
ஒரு வேலை உணவுக்கும் சிரமமான நிலையில்...
மார்பகங்கள் வற்றிய தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு பாலூட்ட முடியாத வேதனையில்...
வயிறுகள் ஒட்டிய நிலையில் பசியில் ஏங்கும் பிஞ்சி குழந்தைகள்...
அந்த காட்சிகள் எவரின் மனதையும் கலங்கச்செய்து விடும்.
ஏன் நம் மஹல்லாக்களில் இறைவனிடம் மட்டுமே கையேந்தப்படக்கூடிய மஸ்ஜித்களில் "குமர் காரியம்"என்றும் "மருத்துவ உதவி"என்றும் பிச்சையெடுக்கும் அவலக்குரல்களை நாம் கேட்டும் கேட்காதது மாதிரி கடந்து தானே செல்கிறோம்.
ஜகாத் நிறைவேற்றாமல் இருப்பது ஓர் சமூக பாதிப்பு என்பதால் அது குறித்த கடுமையான எச்சரிக்கைகள் குர்ஆனிலும்,ஹதீஸிலும் வந்துள்ளன.
وَالَّذِيْنَ يَكْنِزُوْنَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُوْنَهَا فِىْ سَبِيْلِ اللّٰهِۙ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِيْمٍۙ
இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!.(அல்குர்ஆன் : 9:34)
يَّوْمَ يُحْمٰى عَلَيْهَا فِىْ نَارِ جَهَـنَّمَ فَتُكْوٰى بِهَا جِبَاهُهُمْ وَجُنُوْبُهُمْ وَظُهُوْرُهُمْ هٰذَا مَا كَنَزْتُمْ لِاَنْفُسِكُمْ فَذُوْقُوْا مَا كُنْتُمْ تَكْنِزُوْنَ
(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) “இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்).(அல்குர்ஆன் : 9:35)
விளக்கம்:யாசிப்போரை கண்டதும் முதலில் நெற்றி சுருங்கும்,அடுத்து அவர்களை புறக்கணிக்கும் விதமாக தோள்புஜங்களை திருப்பி,முதுகை காட்டிச் சென்றுவிடுவர் அதனாலே அல்லாஹ் குறிப்பாக இந்த உறுப்புகளை வேதனைச் செய்யப்படும் என்கிறான்.(معارف القرآن: ۴/۳۶۳ தஃப்ஸீர் மஆரிஃபுல் குர்ஆன் 4:363)
وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ يَبْخَلُوْنَ بِمَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ هُوَ خَيْـرًا لَّهُمْ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ سَيُطَوَّقُوْنَ مَا بَخِلُوْا بِهٖ يَوْمَ الْقِيٰمَةِ وَ لِلّٰهِ مِيْرَاثُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ
அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் உலோபத்தனம் செய்கிறார்களோ அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம் - அவ்வாறன்று அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்; வானங்கள், பூமி ஆகியவற்றில் (இருக்கும் அனைத்துக்கும்) அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுக்கே உரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அறிகிறான்.(அல்குர்ஆன் : 3:180)
இந்த வசனத்திற்கு விளக்கமாக ஒரு ஹதிஸில் வருகிறது.
مَن آتَاهُ اللَّهُ مَالًا، فَلَمْ يُؤَدِّ زَكَاتَهُ مُثِّلَ له مَالُهُ يَومَ القِيَامَةِ شُجَاعًا أقْرَعَ له زَبِيبَتَانِ يُطَوَّقُهُ يَومَ القِيَامَةِ، ثُمَّ يَأْخُذُ بلِهْزِمَتَيْهِ - يَعْنِي بشِدْقَيْهِ - ثُمَّ يقولُ أنَا مَالُكَ أنَا كَنْزُكَ، ثُمَّ تَلَا: (لَا يَحْسِبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ) الآيَةَ. الراوي : أبو هريرة | المحدث : البخاري | المصدر : صحيح البخاري
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, `நானே உன்னுடைய செல்வம்" `நானே உன்னுடைய புதையல்" என்று கூறும்." இதைக்கூறிவிட்டு,
وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ يَبْخَلُوْنَ بِمَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ" என்ற (திருக்குர்ஆன் 03:180) வசனத்தை ஓதினார்கள். (அறிவிப்பவர்:அபூ ஹுரைரா(ரலி) அவர்கள்.)
முன் வாழ்ந்த சமூகங்களிலும் ஜகாத்
ஜகாத் நமக்கு மட்டுமல்ல முன் வாழ்ந்த சமூகத்தவர்களுக்கும் கடமையாக இருந்ததாக குர்ஆன் கூறுகிறது.
நபி இப்ராஹீம்,இஸ்ஹாக்,யஃகூப் (அலைஹிமுஸ்ஸலாது வஸ்ஸலாம்)ஆகிய நபிமார்கள் ஜகாத் கொடுப்பாவர்களாக இருந்தார்கள்.
وَجَعَلْنٰهُمْ اَٮِٕمَّةً يَّهْدُوْنَ بِاَمْرِنَا وَاَوْحَيْنَاۤ اِلَيْهِمْ فِعْلَ الْخَيْرٰتِ وَاِقَامَ الصَّلٰوةِ وَاِيْتَآءَ الزَّكٰوةِ وَكَانُوْا لَـنَا عٰبِدِيْنَ ۙ
இன்னும் நம் கட்டளையைக் கொண்டு (மக்களுக்கு) நேர்வழி காட்டும் இமாம்களாக - தலைவர்களாக - நாம் அவர்களை ஆக்கினோம்; மேலும், நன்மையுடைய செயல்களை புரியுமாறும், தொழுகையைக் கடைப்பிடிக்குமாறும், ஜகாத்தை கொடுத்து வருமாறும், நாம் அவர்களுக்கு வஹீ மூலம் அறிவித்தோம் - அவர்கள் நம்மையே வணங்குபவர்களாக இருந்தனர்.(அல்குர்ஆன் : 21:73)
நபி இஸ்மாயீல் (அலை)அவர்கள்...
وَ كَانَ يَاْمُرُ اَهْلَهٗ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ وَكَانَ عِنْدَ رَبِّهٖ مَرْضِيًّا
அவர் தம் குடும்பத்தினரைத் தொழுகையைக் கடைப்பிடிக்கவும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் ஏவுபவராக இருந்தார்; தம் இறைவனிடத்தில் மிகவும் விரும்பப்பட்டவராகவும் அவர் இருந்தார்.(அல்குர்ஆன் : 19:55)
நபி ஈஸா(அலை)அவர்கள்...
وَّجَعَلَنِىْ مُبٰـرَكًا اَيْنَ مَا كُنْتُ وَاَوْصٰنِىْ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ مَا دُمْتُ حَيًّا
“இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு வஸீய்யத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 19:31)
ஜகாத்தை கொடுக்க மறுப்பது...
زکات کا فرض ہونا قرآن سے ثابت ہے ،اس کا اِنکار کرنے والا کافر ہے ۔
குர்ஆன், ஜகாதை கடமை என வலியுறுத்தி கூறுவதால் ஜகாதை மறுப்பவன் காஃபிராகி விடுவான்.
الفتاویٰ الھندیۃ،کتاب الزکات ،الباب الاول،ج۱،ص۷۰ ۱)
அதனால் தான் ஹழ்ரத் அபூ பக்ர்(ரலி)அவர்கள் ஜகாத் கொடுக்க மறுப்போருடன் போர் பிரகடனம் செய்தார்கள்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்:
நபி(ஸல்) அவர்கள் மரணித்து அபூபக்ர்(ரலி) (ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்தன் மூலம்) இறை மறுப்பாளர்களாகிவிட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க அபூ பக்ர்(ரலி) தயாரானார்கள்.
அப்போது (உமர்(ரலி), அவர்கள் "லா இலாஹ இல்லல்லாஹ்" கூறியவர் தம் உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார்" "எனினும் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர, அவரின் விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது, நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போரிட முடியும்?` என்று கேட்டார். அந்நேரத்தில் அபூபக்ர்(ரலி), உமர் (ரலி) அவர்களை நோக்கி, `அல்லாஹ்வின் மீது ஆணையாக, தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போரிடுவேன். ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும்; அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட அதை மறுத்தற்காக நான் இவர்களுடன் போரிடுவேன்" என்றார். இது பற்றி உமர்(ரலி), `அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெரும் விதத்தில்) அல்லாஹ் விசாலாமாக்கியிருந்தாலேயே இவ்வாறு கூறினார். அவர் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன்" என்றார்.(நூல்:புகாரி,1399)
ஜகாத்தின் சிறப்புகள்
1)ஜகாத் என்ற சொல்லுக்கு النماء والزيادة والبركة வளருதல்,பெருகுதல்,அபிவிருத்தி ஆகிய பொருள்கள் கூறப்படும்.
ஜகாத் கொடுப்பதால் பொருளாதாரம் வளரும்,இன்னும் (பரகத்)அபிவிருத்தியாகும்.
يَمْحَقُ اللّٰهُ الرِّبٰوا وَيُرْبِى الصَّدَقٰتِ وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ اَثِيْمٍ
அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.(அல்குர்ஆன் : 2:276)
2)ஒன்றுக்கு பகரமாக 700 மடங்கு நன்மை கிடைக்கிறது. இஃதன்றி அவரின் மனத்தூய்மையை கவனித்து இதனையும் காண அதிகம் கிடைக்கும்.
مَثَلُ الَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ كَمَثَلِ حَبَّةٍ اَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِىْ كُلِّ سُنْبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ وَاللّٰهُ يُضٰعِفُ لِمَنْ يَّشَآءُ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.(அல்குர்ஆன் : 2:261)
3)ஜகாத் வழங்குபவருக்கு நம் நாயகம் (ஸல்)அன்னவர்களின் மேலான துஆ கிடைக்கிறது.
குர்ஆனில் ஜகாத் கொடுப்பவருக்காக அல்லாஹ்வே நபி(ஸல்)அவர்களை துஆ செய்யுமாறு சொல்கிறான்.
اِنَّ صَلٰوتَكَ سَكَنٌ لَّهُمْ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ
இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக; நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 9:103)
4)ஜகாத் தீங்குகள்,ஆபத்துக்களை விட்டும் காக்கிறது
مَنْ أَدَّی زَکَاةَ مَالِهِ فَقَدْ ذَهَبَ عَنْهُ شَرُّهُ.
(اخرجه ابن خزيمة فی الصحيح، 4 /13، الرقم: 2258)
நபிஸல் அவர்கள் சொன்னார்கள்: "எவர் தன் பொருளின் ஜகாதை நிறைவேற்றினாரோ அவரை விட்டும் அதன் தீங்கு கழிந்துவிடுகிறது."
ஆக ஜகாதை நிறைவேற்ற வில்லையெனில் அது தீங்காகவும்,ஆபத்தாகவும்.நோயாகவும் வந்துவிடியும்.
5)ஜகாத் பொருளாதாரத்தின் பாதுகாப்பு அரணாக அமைகிறது.
عن حسن البصري رضي الله عنه قال قال النبي صلی اللہ علیہ والہ وسلم :حَصِّنُوْا أَمْوَالَکُمْ بِالزَّکَاةِ، وَدَاوُوْا أَمْرَاضَکُمْ بِالصَّدَقَةِ، وَاسْتَقْبِلُوْا أَمْوَاجَ الْبَـلَاءِ بِالدُّعَاءِ وَالتَّضَرُّعِ.(اخرجه ابوداود فی السنن، کتاب: المراسيل: 133)
"ஜகாதைக் கொண்டு உங்களின் பொருளாதாரத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.ஸதகாவைக் கொண்டு உங்களின் நோயாளிகளுக்கு மருந்து கொடுங்கள்.சோதனை அலைகளை துஆவையும்,பனிவையும் கொண்டு எதிர்க்கொள்ளுங்கள்."என நபி (ஸல்)அவர்கள் சொன்னார்கள் (அறிவிப்பவர்:ஹஸன் பஸிரி (ரலி)அவர்கள்.)
ஜகாதின் சட்டங்களில் சில...
ஜகாத் யார் மீது கடமை
ஜகாத் கடமையாகும் நபரிடம் இருக்க வேண்டிய தன்மைகள்.
1) الاسلام :முஸ்லிமாக இருக்க வேண்டும்
2) الحرية :சுதந்திரமானவராக இருக்க வேண்டும்(தற்காலத்தில் எல்லோரும் சுதந்திரமானவர்களே)
3) العاقل :அறிவுள்ளவராக இருத்தல் எனவே பைத்தியம், புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் மீது ஜகாத் கடமையில்லை.
4)البالغ :பருவமடைந்தவராக இருத்தல்.
5)ملك النصاب :கடமையாகும் அளவுக்கு செல்வமும் வைத்திருக்க வேண்டும் அச்செல்வம் சுய தேவைகள்,கடன் போக மீதமுள்ளதாக இருப்பதோடு அதன் மீது வருடமும் பூர்த்தியாகி இருக்க வேண்டும்.(நூல்;துர்ருல் முக்தார் மஅரத்-2/263)
ஜகாத் கடமையாகும் பொருட்கள்
மூன்று விதமான பொருட்களின் மீது ஜகாத் கடமையாகும்.
1)தங்கம்,வெள்ளி அல்லது பணம்.
2)வியாபாரப் பொருட்கள்.
3)வளர்ப்புப் பிராணிகளான ஆடு,மாடு,ஒட்டகம்.
இப்பொருட்கள் எவ்வளவு இருந்தால் கடமையாகும்?
தங்கம்:87 கிராம் 480 மில்லி கிராம்(சுமார் 11 சவரனுக்குச் சமம்.)
வெள்ளி:612 கிராம் 360 மில்லி கிராம்
பணம்: வங்கியில் சேமித்து வைத்துள்ள பணம் 612 கிராம் 360 மி.கிராம் வெள்ளியின் விலைக்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால் அதன் மீது ஜகாத் கடமையாகும்.
கம்பெனியில்,கடையில் உள்ள வியாபாரப் பொருட்கள் 612 கிராம் 360 மி.கிராம் வெள்ளியின் விலை அளவுக்கு இருந்தால் அதன் மீது ஜகாத் கடமையாகும்.
இந்த வியாபாரப் பொருட்கள் நிஸாபின் அளவை விட குறைவாக இருந்தால் ஜகாத் கடமையாகாது.
ஜகாத் நிஸாபில் எவ்வளவு தரவேண்டும்......
தங்கம் GOLD
தங்கத்திலிருந்து வழங்க வேண்டிய ஜகாத்து 2.5 சதவீதம் ஆகும். எனவே ஜகாத்து கடமையான குறைந்தபட்ச அளவாகிய 87 கிராம் தங்கத்தை வைத்திருப்பவர்கள், அதிலிருந்து 2 கிராம் 125 மி. கிராம் தங்கத்தை ஜக்காத்தாக வழங்க வேண்டும்.
இந்தியாவில் சென்னை 27.04.2021 நிலவரப்படி (தங்கம் விலை பட்டியல்: 24 கேரட்1 கிராம் 4,463 - - 8 கிராம் 35,704
ஜகாத் கடமை 87 கிராம்
87※4463=388281
87 கிராம் விலை 388281ரூபாய் வைத்திருப்போர் 2.5% ஜகாத் கொடுக்க வேண்டும்.
388281※2.5÷100=7766/- ஜகாத் வழங்கவேண்டும்.
வெள்ளி SILVER
வெள்ளியிலிருந்து வழங்கவேண்டிய ஜகாத்தும் 2.5 சதவீதம் ஆகும். எனவே, ஜகாத்து கடமையான குறைந்த பட்ச அளவாகிய 612 கிராம் வெள்ளியை வைத்திருப்பவர்கள் 15 கிராம் வெள்ளியை ஜக்காத்தாக கொடுக்க வேண்டும்
வெள்ளி சுமார் 612 கிராம்கள் ஆகும். இதில் 2.5 சதவீதம் – 15 கிராம் வெள்ளியை ஜகாத்தாகக் கொடுக்க வேண்டும். அல்லது அன்றைய சந்தை நிலவரப்படி வெள்ளியின் விலையை மதிப்பிட்டு 15 கிராம் எடையின் வெள்ளிக்கான ரூபாயை ஜகாத்தாகக் கொடுக்கலாம்.
இந்தியாவில் சென்னை 27.04.2021 நிலவரப்படி வெள்ளி விலை பட்டியல்:
1 கிராம் 74.00
1 கிலோ 74,000வெள்ளியில் ஜகாத் கடமை=612 கிராம் வைத்து இருந்தால்
2.5% ஜகாத் வழங்கவேண்டும்1 கிராம் வெள்ளி விலை 74ரூ
612 கிராம் வெள்ளி விலை
74※612=45288
45288※2.5÷100=1133/-ரூபாய்
ஜகாத் வெள்ளியில் கொடுக்க வேண்டும்.
ஜகாத் கடமையாகாத பொருட்கள்.
அதிக விலை உள்ளதாக இருந்தாலும் ஜகாத் கடமையாகாத பொருட்கள்.
1)குடியிருக்கும் வீடு
2)வாடகைக்கு விட்டிருக்கும் வீடு எத்தனையிருந்தாலும் ஜகாத் கடமை இல்லை(ஆனால் வாடகை பெறும் தொகை நிஸாப் அளவு இருந்தால் அந்த பொருளுக்கு ஜகாத் உண்டு)
3)தேவைக்காக வாங்கப்பட்ட காலி நிலங்கள்(ஆனால் ரியல் எஸ்டேட் போன்ற வியாபார நோக்கங்களுக்கு வாங்கிய நிலங்களுக்கு ஒவ்வொரு வருடமும் அதன் மார்கெட் விலைக்கேற்ப ஜகாத் கடமையாகும்)
4)உபயோகப்படுத்தும் துணிமணி போன்றவைகள்.
5)வீட்டு உபயோக பொருட்கள் ஃபிரிஜ்,வாஷிங்மிஷின்,கம்ப்யூட்டர்,மொபைல்ஃபோன் போன்றவை.
6)வாகனங்கள்,மோட்டர் சைக்கிள் போன்றவை.
7)வீட்டில் வைத்திருக்கும் உணவுக்கு தேவையான பொருட்கள்.
8)தொழிற்சாலைகளில் உபயோகமாகும் இயந்திரங்கள் எவ்வளவு விலையுயர்ந்ததாக இருந்தாலும் ஜகாத் கடமையில்லை.
9)தங்கம்,வெள்ளி இரண்டின் மீது தான் ஜகாத் கடமை எனவே முத்து,பவளம்,வைடூரியம்,வைரம் போன்றவைகள் வியாபார நோக்கமின்றி உபயோகத்திற்காக வாங்கியிருந்தால் அதிக விலைமதிப்புள்ளதாக இருந்தாலும் ஜகாத் கடமையாகாது.
ஜகாத் பெற தகுதியானவர்கள்
எட்டு பிரிவினரை குர்ஆன் வகைப்படுத்துகிறது.
اِنَّمَا الصَّدَقٰتُ لِلْفُقَرَآءِ وَالْمَسٰكِيْنِ وَالْعٰمِلِيْنَ عَلَيْهَا وَالْمُؤَلَّـفَةِ قُلُوْبُهُمْ وَفِى الرِّقَابِ وَالْغٰرِمِيْنَ وَفِىْ سَبِيْلِ اللّٰهِ وَابْنِ السَّبِيْلِ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ
ஜகாத் எனும் தானம்....
1)தரித்திரர்களுக்கும், (பரம ஏழை)
2)ஏழைகளுக்கும்,(ஜகாத் நிஸாப் அளவு பொருளாதாரம் இல்லாதவர்கள்)
3)தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும்,(இஸ்லாமிய ஆட்சியில் ஜகாத்,சதகா போன்றவற்றை மக்களிடம் ரூபாய் வசூல் செய்து பைதுல்மாலில் சேர்ப்பவர்கள்.
(தற்காலத்தில் மதரஸா,மஸ்ஜிதுகளுக்கு சந்தா வசூலிப்பவர்கள் இதில் கட்டுப்படமாட்டார்கள்.எனவே அவர்களுக்கு தனியாக சம்பளம் கொடுக்க வேண்டும்)
4)இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், (மாற்று மத சகோதரர்களுக்கு ஜகாத் கொடுப்பது. ஆரம்ப காலத்தில் இதற்கு அனுமதி இருந்தது.பிற்காலத்தில் இது தடைசெய்யப்பட்டு விட்டது.இப்போது எந்த முஸ்லிம் அல்லாதவருக்கும் ஜகாத் கொடுக்க அனுமதி இல்லை.)
5)அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும்,(தற்காலத்தில் அடிமைகள் இல்லாததால் இது செயல்பாட்டில் இல்லை)
6)கடன் பட்டிருப்பவர்களுக்கும், (ஏழ்மையின் காரணமாக கடனை அடைக்க முடியாமல் சிரமப்படும் கடனாளிகளுக்கு உதவி செய்வது)
7)அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), (ஆயுதங்களை வாங்க வசதியில்லாத போராளிகளுக்கு ஜகாத் கொடுப்பது அல்லது குர்ஆன்,ஹதீஸை கற்பதில் மூழ்கியிருக்கும் மாணவர்களுக்கு கொடுப்பது)
8)வழிப்போக்கர்களுக்கும் . (பயணத்தில் தேவையான பணமின்றி தவிப்பவர்.தனது ஊரில் பெரிய செல்வந்தராக இருந்தாலும் பயணத்தில் இவர் ஜகாத் பெற தகுதியானவராகி விடுகிறார்)(அல்குர்ஆன் : 9:60 -தஃப்ஸீர் மஆரிஃபுல் குர்ஆன் 4:392)
உறவினர்களில் யாருக்கு ஜகாத் கொடுக்கலாம்?யாருக்கு கொடுக்கக் கூடாது?
இரண்டுவகையான உறவினர்களுக்கு ஜகாத் கொடுக்க அனுமதி இல்லை.
1)பிறப்போடு தொடர்புடையவர்கள்.
اصول தந்தை,தாய்,தாதா,தாதி,நண்ணா நண்ணிமா, மேலே வரை........
فروعமகன்,மகள்,பேரன்,பேத்தி,கடைசி வரை.....
2)தாம்பத்ய தொடர்புடையவர்கள்:அதாவது கணவன் மனைவி.
இதை தவிர்த்து மற்ற எல்லா உறவினர்களுக்கும் தேவையுடையவர்களாக இருந்தால் ஜகாத் கொடுக்க அனுமதி உள்ளது.
சகோதரன்,சகோதரி,தந்தையின் சகோதரர்,சகோதரி,தாயின் சகோதர,சகோதரிகள்,சகோதரரின் பிள்ளைகள் என்று எல்லா உறவினர்களுக்கும் ஜகாத் கொடுக்கலாம்(ஃபதாவா ஆலம்கீர் 1:190)
இன்னும் சொன்னால் ஜகாதை நிறைவேற்றிய நன்மை,உறவினர்களை ஆதரித்த நன்மை என இரட்டிப்பான நன்மைகள் கிடைப்பதால் உறவினர்களுக்கு ஜகாத் கொடுப்பதே சிறந்தது.(திர்மிதி 1:142)
மாற்றாந்தாய், மருமகள், மருமகனுக்கும் ஜகாத் கொடுக்கலாம்.(ஷாமி 3:293)
அல்லாஹ் நமது கரங்களை மேலான கொடுக்கும் கரங்களாக்கி வைப்பானாக!ஆமீன்...
வெளியீடு: செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.