Wednesday, 24 March 2021

ஜும்ஆ பயான் 26/03/2021

 தலைப்பு :

நிஸ்ஃபு ஷஃபான் எனும் பராஅத் இரவு

تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلَىٰ بَعْضٍ ۘ مِنْهُمْ مَنْ كَلَّمَ اللَّهُ ۖوَرفع بَعْضَهُمْ دَرَجَاتٍ ۚ

அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்;. அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்;. (2:253, அல் குர்ஆன்)

அல்லாஹ்  இவ்வுலகில் சிலவற்றை வேறு சிலவற்றை விடவும் சிறப்பாக்கி வைத்துள்ளான்.

மக்காவையும், மதீனாவையும்  மற்ற நகரங்களை விடவும்,நமது நபி (ஸல்)அவர்களை மற்ற நபிமார்களை விடவும்,சஹாபாக்களை மற்ற முஃமின்களைவிடவும், முஃமின்களை மற்ற மனிதர்களை விடவும் சிறப்பாக்கியுள்ளான்.

அதே போல ரமலானை மற்ற மாதங்களை விடவும்,ஜும்ஆவை வாரத்தின் மற்ற நாட்களை விடவும், லைலத்துல் கத்ரு இரவு மற்றும் பராஅத் இரவுகளை மற்ற இரவுகளை விடவும் சிறப்பாக்கியுள்ளான்.

ஐயமும்,தெளிவும்.

பராஅத் இரவை குறித்து  வரும் ஹதீஸ்கள் "ளயீஃப் ضعيف" "முர்ஸல் مرسل"எனக் கூறி முற்றாக இந்த இரவின் சிறப்புகளை மறுப்பவர்கள் சிலர் இருக்கிறார்கள்.

ஆனால் கிட்டதட்ட இருபதிற்கும் மேற்ப்பட்ட ஹதீஸ்களும், பத்து ஸஹாபாக்களின் ரிவாயத்துகளும் (1அபுபக்ர் 2.அலீ 3.அன்னை ஆயிஷா 4.அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் 5. முஆத் பின் ஜபல் 6.அபுஹுரைரா 7. அபு ஸஃலபா 8.அவ்ஃப் பின் மாலிக் 9.அபு மூஸா அஷ்அரி 10.உஸ்மான் பின் அதீ   رضي الله تعالي عنهم اجمعين)மற்றும் தாபிஈன்கள் தபவுத்தாபிஈன்கள்,இமாம்கள் நல்லோர்கள் இந்த இரவின் சிறப்புகளையும் அதில் அமல் செய்வதையும் சிறப்பித்து கூறியிருப்பதாலும் இஸ்லாமியர்கள் இந்த இரவை சிறப்பாக கருதி அமல் செய்கிறார்கள்.

பராஅத் இரவு

ஒரு தொழில் ஆரம்பிப்பதற்கு நேரம் சந்தர்ப்பம் சூழ்நிலை அமைவது போன்று நம் பாவம் மன்னிப்பதற்கு இந்த பராஅத் இரவு ஒரு வாய்ப்பாகும் .

ரஜப் விதைக்கும் மாதம்; ஷஃபான் நீர் பாய்ச்சும் மாதம்; ரமழான் அறுவடை செய்யும் மாதம் என்றும் மேன்மக்கள் கூறுவார்கள்.

அந்த ஷஃபான் மாதத்தின் பதினைந்தாவது இரவுதான் பாக்கியமுள்ள பராஅத்  இரவு:

حم (1) وَالْكِتَابِ الْمُبِينِ (2) إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ (3) فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ(4)

ஹாமீம்!தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக இதனை மிக்க பாக்கியமுள்ள ஓர் இரவில் இறக்கி வைத்தோம். நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறோம் உறுதியான எல்லா காரியங்களும் அதில் தான் நம்முடைய கட்டளையின் படி (தீர்மானிக்கப்பட்டு) பிரித்துக்கொடுக்கப்படுகின்றன.  (அல் குர்ஆன்:44;1,2,3,4)

*பல்வேறு பெயர்களும் காரணங்களும்*

இந்த சிறப்பான இரவுக்கு நான்கு பெயர்கள் கூறப்படும்.

ليلة البراءة.1 :இந்த இரவில் அதிகமான நரகவாசிகளுக்கு விடுதலையளிக்கப்படுவதால் "பராஅத் இரவு"என்றும்.    

ليلة المباركة .2:  பரகத் பொழியும் இரவு என்பாதல் "முபாரக்கான இரவு" என்றும்

3.ليلةالصك  : விதி நிர்ணையிக்கப்டும் இரவு என்பதால் "சீட்டு வழங்கப்படும் இரவு"என்றும் . 

 ليلةالرحمة  . 4 :  அல்லாஹ்வின்பிரத்யேக ரஹ்மத் இறங்குவதால் "ரஹ்மத்தான இரவு" என்றும் பெயர்கள் உள்ளன.

பராஅத் இரவின்சிறப்புகள்

1)பராஅத் இரவு வணக்கமும் நோன்பும்.

 قال النبي صلى الله عليه وآله وسلم: «إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا نَهَارَهَا؛ فَإِنَّ اللهَ يَنْزِلُ فِيهَا لِغُرُوبِ الشَّمْسِ إِلَى سَمَاءِ الدُّنْيَا، فَيَقُولُ: أَلَا مِنْ مُسْتَغْفِرٍ لِي فَأَغْفِرَ لَهُ، أَلَا مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ، أَلَا مُبْتَلًى فَأُعَافِيَهُ، أَلَا كَذَا، أَلَا كَذَا، حَتَّى يَطْلُعَ الْفَجْرُ» رواه ابن ماجه من حديث علي رضي الله عنه،

நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் சொன்னார்கள்: ஷஃபான் மாதத்ததின் பகுதி(15ம் நாள் )இரவு வந்துவிட்டால் அதன் இரவிலே நின்று வணங்குங்கள், அதன் பகலில் நோன்பு வையுங்கள், காரணம் அல்லாஹுத்தஆலா சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் உலகின் வானத்திற்கு இறங்கி வந்து "எவரேனும் பாவமன்னிப்பு தேடுபவர் இருக்கிறாரா? அவரின் பாவத்தை நான் மன்னிப்பேன்,எவரேனும் ரிஜ்கை  கேட்பவர் இருக்கிறாரா? அவருக்கு நான் ரிஜ்கை அளிப்பேன்,எவரேனும் சிரமத்தில் அகப்பட்டவர் இருக்கிறாரா? அவரின் சிரமத்தை நான் நீக்குவேன், இவ்வாறே அல்லாஹ் (அன்றைய இரவு முழுவதும்)காலை ஃபஜ்ரு உதயமாகும் வரை கேட்டுக்கொண்டே இருப்பான்.

அறிவிப்பவர் :அலீ (ரலி)அவர்கள் (நூல் இப்னுமாஜா)

2)பராஅத் மன்னிப்பு வழங்கும் இரவு .

حديث عائشة رضي الله عنها. قالت: فقدتُّ النبي صلى الله عليه وسلم  ذات ليلة، فخرجت أطلبه، فإذا هو بالبقيع، رافعًا رأسه إلى السماء. فقال: "أكنت تخافين أن يحيف الله عليك ورسوله؟" فقلت: يا رسول الله، ظننت أنك أتيت بعض نسائك. فقال: "إن الله تبارك وتعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا، فيغفر لأكثر من عدد شعر غنم كلب" (خرّجه الإمام أحمد والترمذي وابن ماجه) (2)، وذكر الترمذي عن البخاري أنه ضعفه.

அன்னை ஆயிஷா (ரலி)அறிவிக்கிறார்கள்: ஒருநாள் இரவு வேளையில் நபி (ஸல்) அவர்களை காணவில்லை,அவர்களைத் தேடி நான் சென்றேன், அப்போது அவர்கள் வானத்தை நோக்கி தங்களின் தலையை உயர்த்தியவர்களாக ஜன்னத்துல் பகீ என்ற இடத்தில் (இருக்கக் கண்டேன்) அப்போது அவர்கள் "அல்லாஹ்வும் அவனது தூதரும் உனக்கு அநீதம் செய்வர் என பயந்து விட்டாயா?"என என்னிடம் கேட்டார்கள்,அப்போது நான் "யா ரசூலல்லாஹ் உங்களின் மனைவியர்களில் (வேறு) சிலரின் வீட்டிற்கு வந்திருப்பீர்கள் என நான் நினைத்தேன்"என்று கூறினேன்.அப்போது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்"நிச்சயமாக அல்லாஹுத்தஆலா ஷாபான் மாதத்தின் பகுதி (15ஆம் நாள்) இரவில் இவ்வுலகின் வானத்திற்கு இறங்கி கலப் கோத்திரத்தவர்களின் ஆடுகளின் (அடர்த்தியான) .ரோமங்களின் எண்ணிக்கையைவிட அதிகமானவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்குகிறான். "நூல் :திர்மிதீ 

3) ஒரு வருடத்திற்கான விதி எனும் களா கத்ரு (பட்ஜெட்)எழுதப்படும் மகத்தான இரவு

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் இரவு தொழுதார்கள். நீண்ட நேரம் “ஸுஜூத்” செய்து கொண்டிருந்தார்கள். (நெற்றியை தரையில் வைத்த வண்ணம் இருந்தார்கள். அவர்கள் மரணித்து விட்டார்களோ என்று நான் நினைத்து அவர்களின் கால் பெருவிரலை அசைத்துப் பார்த்தேன். அது அசைந்தது. தொழுகையை முடித்த நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷாவே! நான் உனக்கு துரோகம் செய்துவிட்டதாக நினைக்கின்றாயா? என்று கேட்டார்கள். இல்லை அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் நீண்ட நேரம் ஸுஜூத் செய்து கொண்டிருந்ததால் நீங்கள் மரணித்து விட்டீர்களோ என்று நான் எண்ணினேன் என்று சொன்னார்கள். அப்போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இன்றிரவு பற்றி உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அல்லாஹ்வுக்கும், ரஸூல் அவர்களுக்குமே தெரியும் என்றேன்.

இன்றிரவு “ஷஃபான்” பதினைந்தாம் இரவு. இன்றிரவு அல்லாஹ் தனது அடியார்களுக்கு “தஜல்லீ” வெளியாகி பாவமன்னிப்புக் கேட்பவர்களுக்கு அவர்களின் பாவங்களை  , அருள் வேண்டுவோருக்கு அருள் செய்கிறான். பொறாமை நெஞ்சுள்ளவர்களை அவ்வாறே விட்டுவிடுகின்றான்.) என்று கூறினார்கள்.( அறிவிப்பு – ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள்..அலா இப்னுல் ஹாரித் ஆதாரம் – ஷுஃபுல் ஈமான் )

இந்த நாளின் இரவில் நின்று வணக்கம் புரிவதும், பகலில் நோன்பு நோற்பதும் இறைவனுக்கு மிக உகந்த செயலாகும் என ஹதீஸில் வந்துள்ளது.என்றாலும், இந்த உம்மத்தின் நிலை குறித்து மாநபி {ஸல்} அவர்கள் அன்றே தங்களின் கவலையை, ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள் என்பதை பின்வரும் ஹதீஸின் மூலமாக விளங்க முடிகின்றது.

عن أسامة بن زيد رضي الله عنهما قال: قلت يا رسول الله: لم أرك تصوم من شهر من الشهور ما تصوم من شعبان؟ قال : ((ذاك شهر تغفل الناس فيه عنه، بين رجب ورمضان، وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين، وأحب أن يرفع عملي وأناصائم

மாநபி {ஸல்} அவர்கள் ஷஅபான் மாதத்தில் அதிகமாக நோன்பு நோற்கும் பழக்கமுடையவர்களாக இருந்தார்கள்.இதைக் கவனித்த நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! ஏன் மற்றெல்லா மாதங்களில் நோன்பு நோற்பதை விடவும் ஷஅபானில் அதிகமாக நோன்பு நோற்கின்றீர்கள்? என்று கேட்டார்கள்.அதற்கு, மாநபி {ஸல்} ரஜபுக்கும் ரமலானுக்கும் இடையே வருகிற இந்த ஷஅபான் மாதம் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. அல்லாஹ்விடம் எவ்வளவு மகத்தானது என்பதை விளங்காமல் மக்கள் அலட்சியமாக இருக்கின்றார்கள்.

1. இந்த மாதத்தில் தான் மனிதர்களின் அமல்கள் – செயல்கள் அல்லாஹ்வின் திருமுன் உயர்த்தப்படுகின்றது.

2. என் அமல்கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படும் போது நான் நோன்பாளியாக இருக்கவே விரும்புகின்றேன்” என்று பதில் கூறினார்கள்( நூல்: النسائي )      

عن عائشة عن النبي -صلى الله عليه وسلم- قال: ((هل تدرين ما هذه الليل؟ " يعني ليلة النصف من شعبان قالت: ما فيها يا رسول الله فقال: " فيها أن يكتب كل مولود من بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم، 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஷஃபான் மாதத்தினுடைய சரிபாதியின் இரவாகிய இந்த இரவில் என்னென்ன இருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று என்னைப் பார்த்து கேட்டார்கள். அந்த இரவில் என்ன இருக்கின்றது நாயகமே! என்று நான் கேட்டேன். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இந்த இரவில்தான் இந்த வருடத்தில் பிறக்கவிருக்கின்ற குழந்தைகள், இந்த வருடத்தில் இறக்கவிருக்கின்ற மனிதர்கள் பற்றிய விபரங்களை எழுதப்படுகினது. மேலும் இந்த இரவில்தான் அவர்களின் அமல்கள் உயர்த்தப்படுகின்றது. இந்த இரவில்தான் அவர்களின் உணவுகளும், இறக்கி வைக்கப்படுகின்றது. அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா                          ரலியல்லாஹு அன்ஹா.(நூல் மிஷ்காத் )

ஆகவே இறப்பு, பிறப்பு, வாழ்வாதாரம் உள்ளிட்ட எல்லா காரியங்களின் தீர்ப்புகள் பராஅத் இரவில் எழுதப்பட்டு, லைலதுல் கத்ருடைய இரவில் அதை மலக்குகளிடம் பிரித்துக் கொடுக்கப்படுகிறது, என்று இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள். இந்த வகையில் பராஅத் இரவு என்பது, அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு பட்ஜெட், லைலத்துல் கத்ருடைய இரவில் தாக்கல் செய்வதற்குரிய பூர்வாங்கப் பணிகளை துவங்கும் நாளாகும்.

4)பராஅத் இரவின் சிறப்புகளை பெறமுடியாத பாவிகள்.

وخرج الإمام أحمد  من حديث عبد الله بن عمرو، عن النبي صلى الله عليه وسلم قال: "إن الله ليطلع إلى خلقه ليلة النصف من شعبان، فيغفر لعباده، إلا اثنين، مشاحن، أو قاتل نفس"، وخرجه ابن حبان في (صحيحه)  من حديث معاذ، مرفوعًا.

நபி (ஸல்)அவர்கள் சொன்னார்கள்:நிச்சயமாக அல்லாஹ் ஷஃபான் மாதத்தின் பகுதி (15ம் நாள்)இரவில் தனது படைப்பினங்களின் பால் இறங்கி வந்து தனது அடியார்களின் (அனைவரின்)பாவங்களை மன்னிக்கிறான்,இரண்டு நபர்களை தவிர

1.குரோதம் கொள்பவன்

2.தற்கொலை செய்து கொண்டவன்"

அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் அம்ர் பின்ஆஸ் நூல்:இப்னு ஹிப்பான்.

இன்னும் சில அறிவிப்புகளில்...

"உறவை துண்டிப்பவன்" "பெற்றோருக்கு மாறுசெய்பவன்" "முஷ்ரிக்" "சூனியக்காரன்"விபச்சாரத்தில் பிடிவாதக்காரன்"கோள் சொல்பவன்" "மதுஅருந்துபவன்" என இன்னும் சில நபர்களை இணைத்தும் கூறப்பட்டள்ளது.

நம் சமூகத்தை பெரும் பாவங்களை விட்டும் அல்லாஹ் பாதுகாப்பானாக!ஆமீன்...

சமுதாய பாதுகாவலர்கள் எனக் கூறிகொண்டு "என் கட்சி","என் இயக்கம்","என் கொள்கை", என்று சக இஸ்லாமியர்களோடு குரோதம் கொள்பவர்களும்,

தீன் தாரிகள் எனக் கூறிகொண்டே உறவை துண்டித்து  வாழ்பவர்களும்,பெற்றொருக்கு மாறுசெய்பவர்ளும் நம்மில் அனேகர் இருக்கின்றனர்.

மார்க்கத்தை விளங்காத,மார்க்கத்தை விட்டும் தூரமாக உள்ள சாதாரண முஸ்லிம்களின் நிலையைப் பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை,

"மது,விபச்சாரம்,வட்டி என்று அனைத்து பெரும்பாவங்களிலும் தயக்கமின்றி ஈடுப்படுகின்றனர்.

பராஅத் போன்ற இரவுகளில்  அல்லாஹ் தன் அடியார்களின் மீது கருணைக்கொண்டு மக்ஃபிரதையும்,ரஹ்மத்தையும் வாரிவழங்கும் போதுகூட இவர்கள் போன்ற பெரும்பாவிகளுக்கு அருள்பாலிப்பதில்லை,ஆனால் இவர்களும் குற்றத்தையுணர்ந்து தவ்பா செய்துவிடுவார்களேயானால் அல்லாஹ் இவர்களுக்கும் மக்ஃபிரதை வழங்கிவிடுகிறான்.

எனவே இந்த மகத்துவமிக்க இரவு நம்மை எதிர் நோக்கி இருக்கிறது நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு நம் வாழ்வில் ஒளிவீசும் அந்த புனித இரவின் நன்மைகளை நாம் முழுமையாக அடைய இறைவன் அருள் புரிவானாக.. ஆமின்.

வெளியீடு: செங்கல்பட்டு& காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

No comments:

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...