Wednesday, 17 March 2021

ஜூம்ஆ பயான் 19-03-2021

 தலைப்பு:

நன்றி மறவாதீர்.

இறை படைப்புகள் அனைத்தும் மாறுபட்ட இரு கோணங்கள் கொண்டவை. ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல,இரவு பகல், சூரியன் சந்திரன், நீர் நெருப்பு போன்ற படைப்புகள் போல...

அவ்வாறே இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்களிடமும் மாறுப்பட்ட இரு கோணங்கள் உண்டு.படைப்பில் ஆண் பெண் என்றும்,செயல்களில்  நல்லவை தீயவை என்றும்,எண்ணங்களில் நேர்மறை எதிர்மறை  என்றும் உள்ளன.

ஆனாலும் அல்லாஹ் மனிதனுக்கு மட்டும் தான் செயல்களை பகுப்பாய்வுச் செய்யக்கூடிய பகுத்தறிவை வழங்கி, படைப்பினங்களில் சிறந்த படைப்பாக ஆக்கி வைத்துள்ளான்.

சோதனைக் களம்

அல்லாஹ் வழங்கிய பகுத்தறிவைக் கொண்டு மனிதன் நல்லவை தீயவை களை பகுத்தறிந்து நல்லவனாக வாழ்கிறானா?அல்லது தீயவனாக வாழ்கிறானா?

நன்றியுள்ள அடியானாக வாழ்கிறானா? நன்றி மறந்த நன்றிகெட்ட அடியானாக வாழ்கிறானா? என்பதை சோதிப்பதற்காகவே  இவ்வுலக வாழ்க்கையை வழங்கியிருக்கிறான்.நன்றி செலுத்தும் வாழ்வை தேர்ந்தெடுத்தவர்களுக்கு அல்லாஹ் நல்வாழ்வையும்,நன்றி மறுப்போருக்கு இழிவையும் தீய முடிவையும் தந்து விடுகிறான்.

இதனை அல்லாஹுத்தஆலா குர்ஆனில்

  ....... انا هديناه السبيل اما شاكرا وأما كفورا

 "நிச்சயமாக நாம் அவனுக்கு நேரான வழியையும் அறிவித்தோம் (அதைப் பின்பற்றி நமக்கு) நன்றி செலுத்துபவர்களும் இருக்கின்றனர்.(அதை) நிராகரித்து விடுபவர்களும் இருக்கின்றனர்.

நிராகரிப்பவர்களுக்கு நாம் சங்கிலிகளையும் (கை கால்)விலங்குகளையும் நரகத்தையும் நிச்சயமாக தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.

நல்லவர்கள்,கிண்ணங்களிலுள்ள கற்பூரம் கலந்த பானத்தை அருந்துவார்கள்.   

(சூரா தஹ்ர் :வசனம் 3,4,5)


இருவேறு பாதைகள்


நன்றியுணர்வு,நல்லோர்கள் மற்றும் நபிமார்களின்  பாதையாகும்.

நன்றி மறுப்பது, வரம்பு மீறுவோர், பெருமையடிப்போர் மற்றும் ஷைத்தானின் பாதையாகும்.

பொதுவாக நன்றி மறுக்கும் குணம்  பெருமையினால் ஏற்படும்.

அல்லாஹ் தனக்கு வழங்கிய கல்வி, செல்வம், ஆட்சியதிகாரம், இந்த அருட்கொடைகளுக்கு நன்றி பாராட்டுவதற்கு மாறாக பெருமை கொள்ளும்போது அழிவைத் தேடிக் கொள்கிறான். 

படைப்பில் சிறந்த படைப்பு என பெருமை கொண்டவன் ஷைத்தான்.

واذ قلنا للملائكة اسجدو لادم فسجدوا الا ابليس....

நாம் வானவர்களை (நோக்கி) "ஆதமுக்கு நீங்கள் ஸுஜூது செய்யுங்கள்"எனக் கூறியபோது  இப்லீஸைத் தவிர (அனைவரும்)ஸுஜூது செய்தார்கள். அவனோ பெருமை கொண்டு விலகி (நம் கட்டளையை)நிராகரிப்பவர்களில் ஆகி விட்டான். (சூரா:அல் பகரா ,வசனம் 34)

அல்லாஹ்வின் கட்டளையை மறந்து நான் நெருப்பால் படைக்கப்பட்டவன், ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவர், எனவே என்னை விட தாழ்ந்த மூலக்கூரில் படைக்கப்பட்ட  ஆதமுக்கு ஸஜ்தா செய்ய முடியாது என சொல்லி கியாமத் நாள் வரை சபிக்கப்பட்டவனாகிவிட்டான்.


ஆட்சி அதிகாரத்தை கொண்டு பெருமையடித்தவன்  ஃபிர்அவ்ன்

انا ربكم الاعلي

"நானே கடவுளர்களுக்கு கெல்லாம் கடவுள் "என ஃபிர்அவ்ன் கூறினான்

கடைசியில் அல்லாஹ் அவனை செங்கடலில் மூழ்கடித்து ஆட்சி அதிகாரத்தை கொண்டு பெருமை அடிப்பவர்களுக்கு பாடமாக ஆக்கினான்


பொருளாதாரம் மற்றும் கல்வியை கொண்டு பெருமையடித்தவன் காரூன்

மூஸா (அலை) அவர்கள் காரூனிடம் சென்று"அல்லாஹ் உனக்கு வழங்கிய செல்வ வளத்திலிருந்து கொஞ்சத்தை ஏழை எளிய மக்களுக்கு தா" என்று கேட்டபோது

"என்னிடமுள்ள செல்வம் எனது அறிவினாலும் திறமையினாலும் நான் சம்பாதித்தது.அதை நான் எதற்கு ஏழைகளுக்கு தரவேண்டும்" என காரூன் மமதையில் கூறினான்.

فخسفنا به وبداره الارض....

அவனையும் அவனுடைய மாளிகையையும் பூமியில் அழுந்த செய்தோம்.அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யக்கூடிய கூட்டத்தார் ஒருவரும் இருக்க வில்லை. அல்லது அவன் தன்னைத் தானே (அல்லாஹ்வின் பிடியிலிருந்து)காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை

 (சூரா :அல் கஸஸ், வசனம் :81)

நன்றி மறந்து மமதையால் அழிந்த முன் வாழ்ந்த சமூகங்கள்


ஸமூது கூட்டத்தினர்

ஸமூது கூட்டத்தினர் தங்களுக்கு அல்லாஹ் வழங்கி ஆற்றலுக்கு நன்றிசெலுத்தாமல் "தங்களை விட பலசாலி யாராவது இருக்கிறார்களா"எனக் கூறி பெருமை அடித்தனர்.

فاما ثمود فاهلكوا بالطاغية

ஆகவே 'ஸமூது' மக்கள் பெரும் சப்தத்தை கொண்டு அழிக்கப்பட்டனர்.

(சூரா :அல் ஹாக்கா வசனம்;5)

ஆது கூட்டத்தினர் பற்றி

واما عاد فاهلكوا بريح صر صر.....

ஆது எனும் மக்களோ அதிவேகமாக விரைந்து (இரைந்து) செல்லும் (புயல்) காற்றைக் கொண்டு அழிக்கப்பட்டனர் (சூரா: அல் ஹாக்கா ,வசனம் 6)

ஸபா கூட்டத்தினர் பற்றி

எல்லா வளமும் பெற்ற ஸபா வாசிகள் நன்றி பாராட்டாமல் மமதையால்  அழிந்த வரலாறு .

فقالوا ربنا باعد بيننا وبين اسفارنا.....

அவர்கள் (இந்த நன்றியைப் புறக்கணித்து "தொடர்ச்சியாக ஊர்கள் இருப்பது எங்கள் பயணத்திற்கு இன்பம் அளிக்கவில்லை) எங்கள் இறைவனே! எங்கள் பயணங்கள் நெடுந்தூரமாகும்படிச் செய்(வதற்காக மத்தியில் தொடர்ச்சியாக உள்ள இக்கிராமங்களை அழித்து விடு)வாயாக!"என்று பிரார்த்தித்துத் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். ஆகவே (அவர்களையும்  அவர்களுடைய நகரங்களையும் அழித்து) அவர்களையும் பல இடங்களுக்குச் சிதறடித்துப் பலரும் (இழிவாகப்)பேசப்படக்கூடிய கதைகளாக்கிவிட்டோம்.பொறுமையுடையவர்கள் ,நன்றி செலுத்துபவர்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன. 

(சூரா ஸபா, வசனம்: 19)

நபிமார்களின் நன்றியுணர்வு


நூஹ்(அலை)

ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ‌ اِنَّهٗ كَانَ عَبْدًا شَكُوْرًا‏ 

நாம் நூஹுடன் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)யவர்களின் சந்ததியினரே! நிச்சயமாக அவர் நன்றி செலுத்தும் அடியாராக இருந்தார்.

(அல்குர்ஆன் : 17:3)

ஸுலைமான்(அலை)

فَتَبَسَّمَ ضَاحِكًا مِّنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًـا تَرْضٰٮهُ وَاَدْخِلْنِىْ بِرَحْمَتِكَ فِىْ عِبَادِكَ الصّٰلِحِيْنَ‏ 

அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், “என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!” என்று பிரார்த்தித்தார்.

(அல்குர்ஆன் : 27:19)

நம் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள்  பண்பு

நபி {ஸல்} அவர்களிடம் பத்ரில் கைதிகளாக பிடிக்கப் பட்ட குஃப்ஃபார்களின் விடுதலை சம்பந்தமாக, குரைஷ் தலைவர்கள் பேச வந்த போது,நபியர்கள் சொன்னார்கள்....."இப்போது மட்டும் முத்இம் இப்னு அதீ அவர்கள் உயிரோடிருந்தால் அனைவரையும் விடுதலை செய்திருப்பேன்" ஏனெனில், ஷுஃபே அபூ தாலிபில் அண்ணலாரை சமூக பகிஷ்கரிப்பு செய்து வைத்திருந்த போது நபியை அவரின் குதிரை மீதேற்றி ஊர் முழுக்க சுற்றிவந்தார்கள். மக்காவில் தொங்கவிடப்பட்டிருந்த தீர்மானத்தை    (நபிக்கும் அவரோடு இருப்பவர்களுக்கும் உதவ கூடாது என்ற தீர்மானம்)கிழித்தெறிந்தவர்களில் அவரும் ஒருவர்.   (நூல்: ரஹீக்)

அல்லாஹ் கேட்கின்றான்: “ நபியே! உம் இறைவன் உம்மை ஒரு போதும் கைவிடவில்லை; கோபம் கொள்ளவும் இல்லை. மேலும், திண்ணமாக, பிந்திய காலகட்டம் முந்திய காலகட்டத்தை விட சிறந்ததாய் இருக்கும்; மேலும், உம் இறைவன் விரைவில்  நீர் திருப்தி அடைந்திடும் அளவிற்கு உமக்கு வழங்குவான். அவன் உம்மை அநாதையாய்க் காணவில்லையா? பிறகு, புகலிடமும் தந்தான் இல்லையா?” (அல்குர்ஆன்:93:3-6)

இங்கே அல்லாஹ் நபிகளாரை தங்களின் பழைய வாழ்க்கையை திரும்பிப் பார்க்கச் சொல்கின்றான். அங்கே புகலிடம் தந்தவர்கள், அரவணைத்தவர்கள், ஆதரவளித்தவர்கள் என அத்துணையையும் எண்ணிப் பார்க்குமாறு தூண்டுகின்றான். 


நிஃமத்தை நினைத்து பார்

வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள். அது போல நமக்கு அல்லாஹ் வழங்கிய எண்ணிலடங்கா அருட்கொடைகள் அது நம்மிடமிருந்து நீங்கும் போது தான் அதன் அருமை நமக்கு புரிய வரும்.

قدرالنعمة بعدالزوال

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள் ஏற்படுகின்றன, நாம் நினைத்து கொண்டிருக்கிறோம், நமக்கு மட்டும்தான் இவ்வளவு சோதனைகள் என்று, கொஞ்சம் திரும்பிப்பார்த்தால் மற்ற மனிதர்களும் நம்மை போன்றோ, நம்மை விடவோ அதிகமாக சோதனைகுள்ளக்கப்படுகிறார்கள் என்று புரிய வரும்.

வயது முதிர்ந்த மனிதர் ஒருவர்,

சரியாக சிறுநீர் வெளியேறாமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார், அங்கு அவருக்கு சிறுநீர் வெளியேற்றுவதற்கான கருவிகளைப் பயன்படுத்தி சிறுநீர் வெளியேற்றப்படுகிறது. சில நாட்களுக்குப்பின்பு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார், அவருக்கு செய்யப்பட மருத்துவத்திற்காக பில் கொடுக்கப்படுகிறது. அதனை பார்த்துவிட்டு பெரியவரின் கண்களில் கண்ணீர்த்துளிகள் வழிந்தோடியது, இதைப்பார்த்த மருத்துவர்கள், ஏன் பெரியவரே அழுகின்றீகள், என்று கேட்டதற்கு பதிலேதும் பேசாமல் மறுபடியும் அழத்தொடங்கினார். அருகில் உள்ள மற்ற உறவினர்கள் அனைவரும் மறுபடியும் கேட்க, கண்களைத்துடைத்தவாறு பெரியவர் சொன்னார், "நான் என்னிடம் கொடுக்கப்பட்ட மருத்துவ செலவைப்பார்த்து அழுகின்றேன் என்று யாரும் நினைத்து விடவேண்டாம், இரண்டு நாட்கள் சிறுநீர் வெளியேற்றியதற்காக என்னிடம் இவ்வளவு பணம் கேட்கின்றீர்களே, அருளும் அன்பும் உடைய எனது இறைவன், கடந்த 60 வருடங்களாக சிறுதும் தடங்கலின்றி சிறுநீர் வெளியாக்கியதற்காக இதுவரை என்னிடம் ஒரு பைசா கூட கேட்டு பில் அனுப்பவில்லையே! என்று எனது இறைவனின் அருளை நினைத்து அழுகின்றேன் என்றார். 

ஆக ஒருவருக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட அருட்கொடைகள், திரும்பப்பெறப்படும்போதுதான் அதன் அருமை தெரிய வரும். உலக விஷயங்களைப் பொறுத்துவரை நமக்கு கீழ்நிலையில் உள்ளவர்களைப் பார்த்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் குணம் நம்மிடையே இருந்தால் நம்முடைய குறைகள் சற்றே நிமிடத்தில் மறைந்து விடும். 

அல்லாஹ் தன் திருமறையில்

فَكُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ حَلٰلًا طَيِّبًا وَّاشْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ اِنْ كُنْـتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ‏

(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்தவைகளில் ஆகுமான நல்லவைகளையே புசியுங்கள்.   நீங்கள் அல்லாஹ்வை வணங்குபவர்களாக இருந்தால், அவனுடைய அருட்கொடைகளுக்கு நீங்கள் நன்றி செலுத்துங்கள்.

(அல்குர்ஆன் : 16:114) என்று கூறியிருக்கிறான்.


நன்றி செலுத்துதல் என்றால் என்ன?

ஒருவன் செய்த உபகாரத்திற்காக அவனை சொல்லாலும், செயலாலும் புகழ்வதற்கு நன்றி கூறுதல் என்று சொல்லப்படும்.

1, சொல்லால் ஷுகூர் செய்வது

2307 - وعن عبد الله بن عمرو - رضي الله عنه - قال : قال رسول الله - صلى الله عليه وسلم - : " الحمد رأس الشكر ، ما شكر الله عبد لا يحمده " .

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

புகழ்வது நன்றிசெலுத்துவதின் தலையாகும்.அல்லாஹ்வை புகழாத அடியான் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தவில்லை என்றார்கள்.

உபகாரத்தை அடைந்த ஒருவன் அதற்காக அல்லாஹ்வை புகழ்ந்தான் என்றால் அல்லாஹ் திருப்தியடைகிறான்.

 عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِنَّ اللَّهَ لَيَرْضَى عَنِ الْعَبْدِ أَنْ يَأْكُلَ الأَكْلَةَ أَوْ يَشْرَبَ الشَّرْبَةَ فَيَحْمَدَهُ عَلَيْهَا ‏"‏ ‏.‏

அனஸ் பின் மாலிக் அறிவிக்கிறார்கள் நபி (ﷺ) கூறியதாவது: "ஓர் அடியான்   உணவைச் சாப்பிட்டு,அதற்காக அல்லாஹ்வின் புகழ்கிறான், மேலும் தண்ணீர்  குடித்துவிட்டு அதற்காக அல்லாஹ்வைப் புகழ்கிறான் என்றால் இந்த  அடியானை கண்டு அல்லாஹ் திருப்தியடைகிறான்."என்று கூறினார்கள்.

2, செயலால் ஷுகுர் செய்வது

இறைவனின் அருட்கொடைகளுக்கு தொழுகை என்ற செயலால் ஷுகூர் செய்யுங்கள்.

عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ إِذَا جَاءَهُ أَمْرُ سُرُورٍ أَوْ بُشِّرَ بِهِ خَرَّ سَاجِدًا شَاكِرًا لِلَّهِ ‏.‏

அபுபக்ரா(ரலி) அறிவிக்கிறார்கள்"நபி (ﷺ) அவர்கள் தனக்கு  மகிழ்ச்சியான செய்தி வந்தால் அல்லது அதன் மூலம் நபி(ஸல்) மகிழ்ச்சியடைந்தார்கள் என்றால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக அல்லாஹ்வுக்கு சிரம் பணிவார்கள்"என்கிறார்கள்.

4836» أَنَّهُ سَمِعَ الْمُغِيرَةَ يَقُولُ قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى تَوَرَّمَتْ قَدَمَاهُ فَقِيلَ لَهُ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ قَالَ: ((أَفَلاَ أَكُونُ عَبْدًا شَكُورًا)). 

முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்கள்

நபி(ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று (அல்லாஹ்வைத்) தொழுதார்கள். அப்போது அவர்களிடம் 'தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே! பிறகு ஏன் நீங்கள் இவ்வளவு சிரமம் எடுத்துக்கொள்கிறீர்கள்? என்று கேட்கப்பட்டதுபோது.  'நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?' என்று நபி(ஸல்)கேட்டார்கள். 

ஸஹீஹ் புகாரி : 4836. 

தாஹா நபி தன் சமூகத்துக்கு தொழுகைகள் ஷூகூர் செய்வதற்கான ஆயுதங்கள் என்று உணர்த்துகிறார்கள்.


நன்றியுணர்வு  எல்லோரிடமும் இருக்க வேண்டும்

நன்றியுனர்வை அல்லாஹ்விடம் எப்படி வெளிப்படுத்த வேண்டுமோ, அதுப்போல் அடியார்களிடமும் நன்றியுணர்வோடு நடந்துக் கொள்ள குர்ஆனும் ஹதீஸும் நமக்கு வழிகாட்டுறது.

قال النبي صل الله عليه وسلم "من لا يشكر الناس لا يشكر الله (رواه الترمذي)

நபி (ஸல்)அவர்கள் சொன்னார்கள் மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹுக்கு நன்றி செலுத்தியவனாக ஆகமாட்டான்"(நூல்:திர்மிதீ)

எவரிடமும் எந்த சிறிய உபகாரத்தை பெற்றாலும் அவருக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.

மனைவியின் உபகாரத்திற்கு கணவனோ, கணவனின் உபகாரத்திற்கு மனைவியோ நன்றி செலுத்துவதில்லை, குழந்தைகளின் நல்ல செயல்களை  பாராட்டுவதில்லை, பெற்றோர்களை மதிப்பதில்லை, நண்பனின் உதவிகளை நினைத்துப்பார்ப்பதில்லை.

திருக்குறளில் ஒரு குறள் :நன்றி மறப்பது நன்றன்று  நன்றல்லது அன்றே மறப்பது நன்று.

விளக்கம் :ஒருவன் செய்த நல்லதை ஒருபோதும் மறக்கலாகாது. தீமை செய்தால் உடனே மறந்துவிட வேண்டும்.

ஆனால் நாம் இதற்கு மாற்றமாக செயல்படுகிறோம். ஒருவர் எவ்வளவோ உபகாரங்கள் செய்திருந்தாலும், மாற்றமாக ஏதாவது ஒரு செயல் செய்துவிட்டால் போதும் அவர் செய்த எல்லா உபகாரங்களையும் மறந்துவிடுகிறோம். 

நமது கண்மணி நாயகம் நபி (ஸல்) அவர்கள் சக மனிதர்களோடு நன்றியுணர்வோடு  வாழ்ந்தார்கள்.யாராவது ஏதாவது உபகாரம் செய்தால் காலமெல்லாம் அதை மறக்க மாட்டார்கள் 

1)அன்னை கதீஜா (ரலி) அவர்களுக்கு நல்ல கணவராகவும் நன்றியுள்ளவர்களாகவும் இருந்தார்கள், அவர்களின் ஜீவித காலமெல்லாம் வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை, காலமெல்லாம் அவர்களின் உபகாரங்களை மற்ற மனனவிகளிடமும் நினைவுப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.கதீஜா அம்மாவின் தோழிகளையும் கண்ணியப்படுத்தினார்கள்.

2)அலி (ரலி) அவர்களின் மீது அளவுகடந்த பிரியம் வைத்திருந்தார்கள் காரணம் அவரின் தந்தை அபூதாலிப் அவர்கள் நபி (ஸல் ) அவர்களுக்கு எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் ஆயுதமாக காலாமல்லாம் இருந்தார்கள்.

3)மதீனாவாசிகள் தனக்கு அடைக்கலம் கொடுத்த, இன்ன பிற உதவிகள் செய்த உபகாரத்திற்காக காலமெல்லாம் அவர்களை பிரியம் கொள்ளுமாறு இந்த உம்மத்திற்கு கட்டளையிட்டார்கள்.

قال النبي صلي الله عليه وسلم حب الانصار من الايمان

"அன்சாரிகளை பிரியம் கொள்வது ஈமானில் ஒரு பகுதி "என நபி (ஸல்)அவர்கள் சொன்னார்கள்.

 4)அபூபக்கர் (ரலி)அவர்கள் செய்த உபகாரங்களை நன்றியோடு நினைவு கூறுவார்கள்.

"எல்லோருக்கும் நான் பிரதி உபகாரம் செய்து விட்டேன் ஆனால் அபூபக்ருக்கு மட்டும் என்னால் பிரதி உபகாரம் செய்ய முடியவில்லை அல்லாஹ்தான் அவருக்கு பிரதி உபகாரம் செய்யவேண்டும்"என்று நபியவர்கள் கூறினார்கள்.


சிரமங்களின் போது மட்டும் இறைவனை நினைப்பது கூடாது

சிரமங்களின் போது மட்டும் இறைவனை நினைப்பது தீய குணம் என்று குர்ஆன் வருணிக்கிறது.

وَاِذَاۤ اَنْعَمْنَا عَلَى الْاِنْسَانِ اَعْرَضَ وَنَاٰ بِجَانِبِهٖ‌ وَاِذَا مَسَّهُ الشَّرُّ فَذُوْ دُعَآءٍ عَرِيْضٍ‏

மனிதனுக்கு நாம் (யாதொரு) அருள் புரிந்தால், அவன் (நமக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாக) நம்மை(யும் நம்முடைய கட்டளைகளையும்) புறக்கணித்து நம்மிலிருந்தும் விலகி விடுகின்றான். அவனை யாதொரு தீங்கு தொடர்ந்தாலோ, வெகு அகல நீளமான பிரார்த்தனை செய்(து அதனை நீக்குமாறு நம்மிடம் கோரு)கின்றான்.

(அல்குர்ஆன் : 41:51)

நம்மில் பலர் தனக்கோ, தன்னைச் சார்ந்தவர்களுகோ ஏதாவது சிரமம் கஷ்டம் வரும்போது மஸ்ஜிதுக்கு வந்து உருக்கமாக துஆ செய்வதும், பார்ப்பவர்களை எல்லாம் துஆ செய்யச் சொல்வதும், அந்த சிரமம் நீங்கிவிட்டாலோ எல்லாவற்றையும் மறந்து விடுவதையும் வாடிக்கையாக்கிகொள்கிறார்கள். அப்படியில்லாமல் அல்லாஹ் நமக்கு செய்த நிஃமத்களை நினைவு கூர்ந்து பார்த்து நன்றி செலுத்தினால் அல்லாஹ் நமக்கு அதிகப்படுத்தி தருவான். இதையே குர்ஆனில் அல்லாஹ்..

وَ إِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَ لَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذابِي لَشَدِيدٌ «7»

 எனக்கு நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு அதிகப்படுத்தி தருவேன், நன்றி மறந்தால் என் வேதனை எனும் பிடி கடுமையானது என்கிறான்.

وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لاَ تُحْصُوهَا

 என்னிலடங்கா நிஃமத்களை நம் மீது செய்துள்ள இறைவனுக்கு நன்றி செலுத்தும் நல் அடியார்களாக மாறுவோம்.


வெளியீடு:

செங்கல்பட்டு&காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை



No comments:

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...