புத்தாண்டு 2023.
உலக வாழ்வென்பது அல்லாஹ் நமக்கு வழங்கிய மகத்தான அருட்கொடை. உயர்ந்த பொக்கிஷம்.மனிதன் தன் வாழ்வை அர்த்தமுள்ளதாகவும், சீரானதாகவும் அமைத்துக் கொள்வானே யானால் ஈருலகிலும் வெற்றியடைவான்.தன் வாழ்வை வீணாக்குபவன்,மனம் போன போக்கில் வாழ்பவன் தன்னை தானே அழிவில் போட்டுக் கொள்கிறான்.
உலகின் அனைத்து மதங்களும், நாடுகளும் பல்வேறு பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்களைக் கொண்டாடுகின்றன.அவற்றில் ஒவ்வொன்றுமே வரலாற்றில் சிலப்பல பின்னணிகள் கொண்டவைகளாக உள்ளன.ஒவ்வொரு பண்டிகையுமே ஏதோ ஓர் விதத்தில் நல்ல செயல்களை ஊக்குவிப்பதும், கெட்ட செயல்களை அகற்ற அழைப்பு விடுப்பதையும் அறியலாம்.
ஆனால் காலப்போக்கில் மக்களிடையே வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் பாவமிகுதியினால், அப்பண்டிகைகளின் அசல் நோக்கம் மாற்றப்பட்டு புதுமைகளும்,கட்டுக்கதைகளும் சேர்க்கப்பட்டன. உலகம் முன்னேறி நாகரீகமாக மாற, மக்கள் கலாச்சாரம் மற்றும் கலை என்கிற பெயரில் புதிய கொண்டாட்டங்களையும், அர்த்தமற்ற கேளிக்கைகளையும்,பண்டிகைகளையும் உருவாக்கினர்.
(எ.க 1-ஸ்பெயின் நாட்டின் தக்காளித்திருவிழா.
(எ.க.2-அமெரிக்கா, பிரிட்டன், கனடா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ஹாலோவீன் திருவிழா பேய்களுக்காகக் கொண்டாடப்படுகிறது.) அவற்றில் ஒன்று தான் புத்தாண்டு கொண்டாட்டம்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள்...
உண்மையில், இந்த புத்தாண்டு கொண்டாட்டம் கிறிஸ்தவர்களின் மதப்பண்டிகை. புத்தாண்டைக் கொண்டாடும் பாரம்பரியம் பண்டைய காலங்களிலிருந்து கிறிஸ்தவர்களிடையே இருந்து வருகிறது, இதற்கு ஒரு காரணம், அவர்களின் மதநம்பிக்கையின்படி, டிசம்பர் 25 அன்று, (ஹஸ்ரத் ஈஸா (அலை)அவர்கள்)ஜீஸஸ் பிறந்ததினமாக கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்படுகிறது. இயேசுவின் பிறப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக உலகம் முழுவதும் கிருஸ்துவர்களால் கொண்டாடப்படுகின்றது.அதன் நீட்சியே புத்தாண்டு கொண்டாட்டமாகும்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில், நாடு முழுவதும் வண்ண விளக்குகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, டிசம்பர் 31 இரவு, மக்கள் 12 மணி வரை காத்திருந்து, 12 மணிக்கு ஒருவரையொருவர் வாழ்த்தி, கேக் வெட்டி,Happy New Year எனக்கூச்சலிட்டு புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கின்றனர். பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. பல்வேறு இரவு விடுதிகளில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என்கிற பெயரில் வயதுவித்தியாசமின்றி ஆண்,பெண் இரு பாலரும் குடி,கூத்து,கும்மாளமுமாக அன்றைய ஓர் இரவில் மட்டும் அனைத்து அனாச்சாரங்களும், காமகளியாட்டங்களும் அரங்கேற்றப்படுகின்றன.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் இஸ்லாமியர்கள்.
இன்று, இந்த கிறிஸ்தவ புத்தாண்டை பொது கொண்டாட்டமாக உலகெங்கிலும் கொண்டாடப்படுகின்றது. பல இஸ்லாமிய நாடுகளும்,முஸ்லிம்களும் கூட புத்தாண்டை எதிர்பார்த்து, டிசம்பர் 31 ஆம் தேதிக்காக காத்திருக்கிறார்கள், இந்த முஸ்லிம்கள் தங்களின் உயர்ந்த மார்க்கநெறிகளையும், பாரம்பரியங்களையும் விட்டுவிட்டு தாழ்ந்த, இழிவான கலாச்சாரத்தை பின்பற்றி புத்தாண்டைக் கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.
இது கிறிஸ்தவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு ஆண்டை கணக்கிடும் வரலாற்று முறையாகும்.
இஸ்லாமியர்களுக்கென தங்களின் ஆண்டைக்கணக்கிட உயந்த,உன்னதமான தத்துவங்களை தன்னகத்தே கொண்டுள்ள ஹிஜ்ரா (சந்திர) நாட்காட்டி முறை உள்ளது, இது நபிகள் நாயகம்ﷺஅவர்களின் ஹிஜ்ரத் செய்த ஆண்டை வைத்து கணக்கிடப்படும் முறையாகும். துவக்க மாதம் முஹர்ரம் ஆகும். இதுவே இஸ்லாமிய நாட்காட்டி; ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இஸ்லாமிய வருடமோ,மாதங்களின் பெயர்களோ தெரியாது.
இஸ்லாமியர்களுக்கு பிறையின் நினைவு வருடத்தில் ரமலான்,ஈது பெருநாளுக்கு மட்டுமே வரும்.இஸ்லாமிய ஆண்டுகணக்கெல்லாம் பெயருக்கு நிக்காஹ்(திருமண)அழைப்பிதலில் போடுவதற்கு மாத்திரமே தேவைப்படுகின்றது.
புத்தாண்டு கொண்டாடலாமா?
இன்று முஸ்லிம்கள் ஆங்கில புத்தாண்டை கொண்டாடுகிறார்கள், ஆனால் உண்மையிலே புத்தாண்டு கொண்டாடுவதற்குறிய தினமா?ஒவ்வொரு ஆண்டு கழியும் போதும் நம் வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து,மரணத்திற்கு ஒரு வருடம் நெருக்கமாகின்றோம். வாழ்க்கை எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு வழங்கிய மாபெரும் பாக்கியம். அப்பாக்கியம் குறையும் போது கொண்டாடப்படக்கூடாது ; மாறாக வருத்தம் கொள்ளவேண்டும்.
கடந்த ஆண்டு கசப்பான அனுபவங்கள், உணர்வுகள், நினைவுகள், மகிழ்ச்சியான நிகழ்வுகள் மற்றும் சோகமான விபத்துக்கள் ஆகியவற்றை விட்டுவிட்டு, வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை படிப்பினையாக கொடுத்து, மனிதனிடமிருந்து விடைபெறுகிறது. மேலும் மனிதன் தனது வாழ்க்கையின் நிலையான காலத்தை(மறுமையை) நோக்கி நகர்கிறான்.
இதனையே கவிஞர் ஒருவர் இப்படி கூறுகிறார்:
غافل تجھے گھڑیال یہ دیتا ہے مناد
گِردوں نے گھڑی عمر کی ایک اور گھٹادی
கவனக்குறைவாக இருக்கும் உங்களுக்கு, கடிகாரம் அறிவிப்புச்செய்கிறது..
கடிகாரத்தின் முட்கள்,வாழ்வின் பொழுதுகளை துண்டிக்கின்றன.
(கழிவது நேரங்களல்ல நம் வாழ்வின் உயர்ந்த பொழுதுகள்)
قال ابن مسعود:( ما ندمت على شيء، ندمى على يوم غربت شمسه، نقص فيه أجلي، ولم يزد فيه عملي! )قیمة الزمن عند العلماء، ص: ۲۷)
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி)அவர்கள் சொல்கிறார்கள்: நான் எதைக்குறித்தும் கைசேதப்படுவதில்லை,சூரியன் மறையும் ஓர் நாளில் எனது பட்டோலையில் எந்த நல்அமல்களும் அதிகமாகாமல் கழியும் அந்நாளே எனக்கு கைசேதமாகும்.
قال الحسن البصري:(يا ابن آدم إنما أنت أيام!، فإذا ذهب يوم ذهب بعضك)
ஹஸன் பஸரீ (ரஹ்)அவர்கள் சொன்னார்கள்:
"ஆதமின் மகனே!நாள்களின் ஒட்டுமொத்த தொகுப்பு நீ,
விளங்கிக்கொள்!ஒரு நாள் கழியும் போது நீ உன் சிலதை இழக்கிறாய்"
இவ்வாழ்வு நமக்கு நிரந்தர மறுமை வாழ்வின் தயாரிப்பிற்காக தரப்பட்டுள்ளது.நாம் நம் வாழ்வை எவ்வளவு பயனுள்ள வழியில் கழிப்பதென சிந்தித்து செயல்பட வேண்டும்.
ஹஸ்ரத் அலி(ரலி)அவர்கள் கூறினார்கள்:இந்த நாட்கள் உங்கள் ஆயுளின் வேதச்சுவடுகளாகும், நல்லறங்களால் அவற்றை நிறந்தரமானதாக, நீடிக்ககூடியதாக்குங்கள்.
பெயரளவில் (நினைவு) தினங்கள்...
உலகளவில் யூத,கிறிஸ்தவர்களால் தோற்றுவிக்கப்பட்ட பண்டிகைகள் அனைத்துமே, சக மனிதனின் கடமைகள்,உரிமைகளை இலட்சியம் செய்யாமல் வெறுமனே வருடாவருடம் (நினைவு)தினங்களாக...
அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், குழந்தைகள் தினம் மற்றும் ஆசிரியர் தினம் என்பன போன்ற தினங்களை கொண்டாடிவிட்டால் போதும்,; ஏனென்றால் மேற்கத்திய நாடுகளில் குடும்ப அமைப்புகள் சிதைந்து போய் விட்டன.
பெற்றோர்களை பராமரிக்காமல் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பும் பிள்ளைகளும்,வயதுக்கு வந்த பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் பெற்றோர்களும்,இப்படி எந்த உறவும் பேணப்படாமல் குடும்ப அமைப்புகளை சிதைத்து விட்டு, பெயருக்கு வருடத்தில் ஒரு முறை இது போன்ற தினங்களைக் கொண்டாடுகின்றனர்.ஆனால் இங்கு அப்படியல்ல, இஸ்லாம் அனைவருக்குமான உரிமைகள்,கடமைகளை நிர்ணயித்து,குடும்ப அமைப்பு சிதையாமல் பாதுகாக்கின்றது.
எனவே, இஸ்லாமியர்கள் இதுப்போன்ற வித்தியாசமான தினங்களை கொண்டாடுவது அவசியமற்றதாகும்; மாறாக, முஸ்லிம்கள் அவற்றை தவிர்க்க வேண்டும்; மற்றவர்களின் கலாச்சாரங்களை பின்பற்றுவதை விட்டும் இஸ்லாத்தில் தடைச்செய்யப்பட்டுள்ளது.
குர்ஆன்,ஹதீஸ் ஒளியில் புத்தாண்டு.
சரி ஓர் ஆண்டு கழிந்து புதிய ஆண்டை எதிர்நோக்கும் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் என்ன அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்?என்பதனை குர்ஆன்,ஹதீஸின் ஒளியில் அறியலாம்.
புத்தாண்டு தொடர்பான ஏதேனும் நடைமுறையை இஸ்லாத்தின் முதல் தலைமுறையினர்களான ஸஹாபாப்பெருமக்கள் கடைப்பிடித்திருகின்றார்களா , என்றால் அப்படி எந்த நடைமுறையையும் காண முடியவில்லை; இருப்பினும், சில ஹதீஸ் கிதாபுகளில், , புதிய மாதமோ அல்லது புத்தாண்டின் முதல் மாதமோ தொடங்கும் போது, நபிகள் நாயகம் ﷺஅவர்களின் தோழர்கள் இந்த துஆவை ஓதுவார்கள்,அதனை அடுத்தவர்களுக்கு கற்றுக்கொடுப்பார்கள் என வருகின்றது. : ”اللّٰھُمَّ أدْخِلْہُ عَلَیْنَا بِالأمْنِ وَ الإیْمَانِ، وَالسَّلَامَةِ وَالإسْلَامِ، وَرِضْوَانٍ مِّنَ الرَّحْمٰنِ وَجِوَازٍمِّنَ الشَّیْطَانِ“ (المعجم الاوسط للطبرانی ۶/۲۲۱ حدیث: ۶۲۴۱ دارالحرمین قاہرہ)
யா அல்லாஹ்! எங்களுக்கு ஈமானுடைய, அருள் உடைய பிறையாகவும், ஈடேற்றமும், இஸ்லாமும் உடைய பிறையாகவும் ஆக்கி வைப்பாயாக!
இந்த துஆவை புத்தாண்டின் துவக்கத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு மாதமும் பிறை காணும் போது ஓத வேண்டும்; மேலும்,புத்தாண்டில், முஸ்லிம்கள் குறிப்பாக இரண்டு விஷயங்களைச் செய்ய வேண்டும்.
வேறுவிதமாகக் கூறினால், புத்தாண்டு குறிப்பாக இரண்டு படிப்பினைகளை பாடமாக நமக்கு விட்டுச் செல்கிறது: (1) கடந்த காலம் குறித்த சுயவிசாரனை (2) எதிர்காலத்திற்கான செயல் திட்டம்.
கடந்த காலம் குறித்த சுயவிசாரனை..
புத்தாண்டு நம் இம்மை,மறுமை ஈருலக வாழ்வின் நிலை குறித்து நம்மை நாமே சுயவிசாரனை செய்துக் கொள்ளும் உணர்வை தருகிறது. நம் வாழ்நாளில் ஒரு வருடத்தை நாம் இழந்ததிருகின்றோம்.அதில் நாம் செய்த செயல்களில் நன்மை,தீமைகளை என்னென்ன என்பதனை ஆராயவேண்டும்.
நம் வணக்க வழிபாடுகளில்,கொடுக்கல் வாங்கலில் ஹலால்,ஹராமை பேணி நடந்தோமா?,அடுத்தவர்களுக்கு செலுத்த வேண்டிய கடமைகளை சரிவர நிறைவேற்றினோமா? அடுத்தவர்களின் குறைகளை ஆராய்வதற்கு முன்னால் நம் குறைகளை ஆராய்ந்தோமா?என சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம்
ஒரு நபர் தனது தவறுகளையும் குறைபாடுகளையும் மற்றவர்களின் கண்களில் இருந்து மறைக்க முடியும்; ஆனால் சுயத்தின்(மனசாட்சி) கண்களில் இருந்து தப்ப முடியாது; அதனால்தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”حَاسِبُوْا أنْفُسَکُمْ قَبْلَ أنْ تُحَاسَبُوْا“۔ (ترمذی ۴/ ۲۴۷ ابواب الزہد، بیروت)
உங்களை கேள்வி கணக்கு கேட்கப்படுவதற்கு முன்பு நீங்களே உங்களை விசாரணை செய்து கொள்ளுங்கள் (நூல்;திர்மிதி)
எனவே, நாம் அனைவரும் நேர்மையாக குற்றம் சாட்டி, நம்மை நாமே எடைப் போட்டு, கிடைத்த அவகாசத்தைப் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; இந்த காலக்கெடு முடிவதற்குள்.
இதனையே அல்லாஹுத்தஆலா குர்ஆனில்...
وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ
உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்.(அல்குர்ஆன் : 63:10)
وَلَنْ يُّؤَخِّرَ اللّٰهُ نَفْسًا اِذَا جَآءَ اَجَلُهَا وَاللّٰهُ خَبِيْرٌ بِمَا تَعْمَلُوْنَ
ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 63:11)
எதிர்காலத்திற்கான செயல் திட்டம்.
கடந்த காலம் குறித்த சுயவிசாரனைக்கு பின்பு எதிர்வரும் ஆண்டில் நம் வாழ்வை ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில், நல்லறங்களில் கழிப்பதை குறித்து சிந்தித்து செயல்பட ஓர் திட்டமிடலும்.
கடந்த கால அனுபவப்பாடங்களிலிருந்து நம் பலம் எது, பலகீனம் எது என சிந்தித்து, நம் பலத்தை சாதகமாக பயன்படுத்தவும், பலகீனத்தை கைவிடவும் உறுதிக்கொள்ள வேண்டும்
மனிதன் தவறுகளுக்கு மேல் தவறு செய்வதை விடவும் கொடியது, மோசமானது, அத்தவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல் அதைத் தொடர்ந்து செய்வதுதான்.
இந்த திட்டமிடல் ஹதீஸ் மூலம் அறியப்பட்ட மார்க்க மற்றும் உலக விஷயங்களில் இருக்க வேண்டும்.
நாயகம் ﷺஅவர்கள் கூறினார்கள் ;
اغتنِمْ خمسًا قبل خمسٍ: شبابَك قبل هِرَمِك، وصِحَّتَك قبل سِقَمِك، وغناك قبل فقرِك، وفراغَك قبل شُغلِك، وحياتَك قبل موتِك
ஐந்துக்கு முன் ஐந்தை (வாய்ப்பாக)கனீமத்தாக கருதுங்கள்:
வயோதிகற்கு முன் வாலிபத்தையும்,
நோய்க்கு முன் ஆரோக்கியத்தையும்,
வறுமைக்கு முன் செல்வத்தையும்,
அலுவல்களுக்கு முன் ஓய்வையும்,
மரணத்திற்கு முன் வாழ்வையும்,
(வாய்ப்பாக கருதுங்கள்).
மறுமை வாழ்வின் வெற்றியும் தோல்வியும் இவ்வுலக வாழ்வின் செயல்களைப் பொறுத்தே அமையும்.
இறைவன் தனது திருமறையில்...
وَاَنْ لَّيْسَ لِلْاِنْسَانِ اِلَّا مَا سَعٰىۙ
இன்னும், மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை.(அல்குர்ஆன் : 53:39)
وَاَنَّ سَعْيَهٗ سَوْفَ يُرٰى
அன்றியும், நிச்சயமாக அவன் முயற்சி(யின் பலன்) பின் அவனுக்குக் காண்பிக்கப்படும்.(அல்குர்ஆன் : 53:40)
ثُمَّ يُجْزٰٮهُ الْجَزَآءَ الْاَوْفٰىۙ
பின்னர், அதற்கு நிறப்பமான கூலியாக, அவன் கூலி வழங்கப்படுவான்.(அல்குர்ஆன் : 53:41)
உண்மையில், ஒவ்வொரு புத்தாண்டும் மனிதனுக்கு மகிழ்ச்சிக்கு பதிலாக கவலையைத்தர வேண்டும் ; ஏனென்றால் தன் வயது படிப்படியாக குறைந்து பனிக்கட்டி போல் உருகுவதை உணர்ந்தவன். எப்படி மகிழ்ச்சியடைய இயலும் ? மாறாக வாழ்வின் ஒவ்வொரு நாளும் சூரியன் மறைவதற்குள் ஏதாவது நல்லறம் செய்ய வேண்டும் என்ற ஆசை அவனை ஆட்கொள்ளச் வேண்டுமல்லவா.
நம்மைப் பொறுத்தவரை, புத்தாண்டு என்பது தற்காலிக இன்பத்துக்கான,மகிழ்ச்சிக்கான நேரம் அல்ல, மாறாக, நம்மை விட்டும் கடந்த காலத்தின் மதிப்பை உணர்வதற்கும், இனி வரவிருக்கும் தருணங்களைச் சிறப்பாக கையாள்வதற்கும் , நமது இலட்சியங்களையும் மன உறுதியையும் புதுப்பிப்பதற்கும் ஓர் உன்னத வாய்ப்பாகும்.
ஹிஜ்ரா(சந்திர) கணக்கீடு முறை,VS ஆங்கிலசூரியக் கணக்கீடு முறை.
அதே சமயம், முஸ்லிம்களின் புத்தாண்டு ஹிஜ்ரி ஆண்டாகும்.அது முஹர்ரம் மாதத்திலிருந்து துவங்குகிறது. ஜனவரி மாதத்தில் ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவது முஸ்லிம்களுக்கு அழகல்ல ...
முஸ்லிம்கள் தங்களின் சுக,துக்க அனைத்து காரியங்களுக்கும் ஹிஜ்ரி ஆண்டையே கணக்கிட வேண்டும்.
ரமலான்,ஹஜ், ஜகாத்து என இஸ்லாத்தின் அனைத்து அமல்களையும் இஸ்லாமிய மாத, ஆண்டு கணக்குப்படி நிறைவேற்றினால் தான் நிறைவேறும், ஆனால் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இஸ்லாமிய ஆண்டோ,மாதங்களின் பெயர்களோ தெரிவதில்லை.
ஹிஜ்ரா ஆண்டு முறை என்பது நம் வரலாறு, அதனை தெரிந்து வைத்திருப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் தலையாய கடமையாகும்.
இஸ்லாமிய வரலாறு மற்றும் இஸ்லாமிய விதிகள் அனைத்தும் ஹிஜ்ரா(சந்திர) கணக்கீடுகளின் அடிப்படையிலானவை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்; எனவே, இந்த ஹிஜ்ரா கணக்கைக் கடைப்பிடிப்பது உம்மத்தின் கடமையாகும். மற்ற சூரியக் கணக்கீடுகள், முதலியன, தேவை ஏற்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம் ; ஆனால் சந்திர கணக்கீட்டை முற்றிலுமாக புறக்கணிப்பது பெரும் பாவமாகும், இதன் காரணமாக ஒருவருக்கு ரமலான் எப்போது வரும், துல்-ஹஜ் மற்றும் முஹர்ரம் எப்போது வரும் என்று கூட தெரியாமல் போய்விடும். (மஆரிஃபுல் குர்ஆன் 3/402, 403)
ஹழ்ரத் அஷ்ரஃப் அலி தானவி(ரஹ்) அவர்கள் எழுதுகிறார்கள்: ஷரியத்தின் விதிகள் ஹிஜ்ரா (சந்திர) கணக்கீட்டை அடிப்படையாகக் கொண்டவை ; எனவே, முழு உம்மாவும் சந்திர கணக்கீட்டை அழிக்கும் இரண்டாவது காலத்தை தங்கள் நெறிமுறையாக மாற்றினால், அனைவரும் பாவிகளாக கருதப்படுவார்கள் , அது பாதுகாப்பாக இருந்தால், மற்ற கணக்கீட்டை பயன்படுத்த அனுமதி உண்டு; ஆனால் ஸலஃபுஸ் ஸாலிஹீன்களான நல்லோர்களிடம்,
ஹிஜ்ரா (சந்திர) கணக்கீட்டு முறை "فرض عین " என்ற அடிப்படையில் கட்டாயக்கடமையாகும்.நம்மிடம் சந்திர கணக்கீட்டைப் பயன்படுத்துவது "فرضِ کفایہ" என்ற அடிப்படையில் சிறந்ததாகும். ( بیان القرآن ص: ۵۸ ، ادارئہ تالیفات اشرفیہ پاکستان)
எனவே, நம்முடைய இந்த ஹிஜ்ரா சந்திர வரலாற்றை நாம் முற்றிலும் மறந்துவிடக் கூடாது.
அமலை விரைவு படுத்துங்கள்.
இமாம் இப்னுல் கய்யிம் (ரஹி) கூறினார்கள்: "நேரத்தை வீணடிப்பது மரணத்தை விட கடிணமானது.ஏனென்றால் நேரத்தை வீணடிப்பது உங்களை அல்லாஹ்விடமிருந்தும் மறுமையிலிருந்தும் துண்டிக்கிறது.
மரணமோ உங்களை இந்த உலகத்திலிருந்தும் அதன் மக்களிடமிருந்தும் துண்டிக்கிறது". (கிதாபுல் ஃபவாயிது - பக்கம்:31).
உழைப்பதற்கு நடந்து செல்லுங்கள்.
هُوَ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ ذَلُوْلًا فَامْشُوْا فِىْ مَنَاكِبِهَا وَكُلُوْا مِنْ رِّزْقِهٖ وَاِلَيْهِ النُّشُوْرُ
அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்; ஆகவே, அதன் பல மருங்குகளிலும், நடந்து அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள்; இன்னும் அவனிடமே (யாவரும்) உயிர்த்தெழவேண்டியிருக்கிறது.(அல்குர்ஆன் : 67:15)
ஜும்ஆவிற்கு கொஞ்சம் வேகமாக நடந்து செல்லுங்கள்.
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ
ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.(அல்குர்ஆன் : 62:9)
பாவமன்னிப்பு கேட்க விரைந்து சொல்லுங்கள்.
وَسَارِعُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَۙ
இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் : 3:133)
அல்லாஹ்வின் பால் விரண்டு வாருங்கள்.
فَفِرُّوْۤا اِلَى اللّٰهِ اِنِّىْ لَـكُمْ مِّنْهُ نَذِيْرٌ مُّبِيْنٌ
ஆகவே, அல்லாஹ்வின் பக்கம் விரைந்து செல்லுங்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கின்றேன் (என்று நபியே! நீர் கூறுவீராக). (அல்குர்ஆன் : 51:50)
قال شيخ الإسلام ابن تيمية رحمه الله :
من كـــان الله يحبه
استعمله فيما يحبه.
இமாம் இப்னு தைமியஹ் (றஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்: எவரை அல்லாஹ் விரும்புகின்றானோ அவரை அவனுக்கு விருப்பமான காரியங்களில் செயற்படவைப்பான்.
நயவஞ்சகனின் அடையாளம்.
اِنَّ الْمُنٰفِقِيْنَ يُخٰدِعُوْنَ اللّٰهَ وَهُوَ خَادِعُوْهُمْ وَاِذَا قَامُوْۤا اِلَى الصَّلٰوةِ قَامُوْا كُسَالٰى ۙ يُرَآءُوْنَ النَّاسَ وَلَا يَذْكُرُوْنَ اللّٰهَ اِلَّا قَلِيْلًا ۙ
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை.(அல்குர்ஆன் : 4:142)
சிறுநீர் கழித்து சுத்தம் செய்யாத நடிகன். நரகத்திற்கு வழிகாட்டும் நடிகனின் திரைப்படம் வெளிவர இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்தே படத்தைப் பார்க்க போட்டிப் போடும் மனிதன்....சுவர்க்கத்தின் பக்கம் விரைந்து வர மனம் வருவதில்லை
இமாம் அஹ்மத் இப்னு ஹர்ப் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் : ஐம்பது வருடங்களாக அல்லாஹ்வை வணங்கினேன் மூன்று விஷயங்களை விடும் வரை இபாதத்தில் இன்பம் காண முடியவில்லை.
1. மக்களின் திருப்தியை பெறுவதை விட்டேன். சத்தியத்தை (துணிந்து) சொல்லும் ஆற்றலை பெற்றேன்.
2. தீயவர்களின் தோழமையை விட்டேன் நல்லவர்களின் தோழமையை பெற்றுக்கொண்டேன்.
3. உலக இன்பங்களை விட்டேன் மறுமையின் இன்பத்தை பெற்றுக் கொண்டேன்.
(நூல்: ஸியறு அஃலாமுந் நுபலா 11/34)
நேரம் பொன் போன்றது.
காலம் பொன் போன்றது என்று தமிழிலும் TIME IS GOLD என்று ஆங்கிலத்திலும், الوقت أثمن من الذهب என்று அரபியிலும் சொல்கிறோம். ஆனால் பொன்னை விடவும் உயர்ந்தது தான் காலம்.
உருதுவில்: گیا وقت پہر آتا نہی சென்ற நேரம் திரும்ப வராது என்பார்கள். உண்மையில் காலம் இழந்தால் பெற முடியாத ஒர் பொக்கிஷம். ஒவ்வொரு நொடியையும் திட்டமிட்டு செலவழிக்க வேண்டும். நொடியை மதிக்காதவன் நிமிடத்தை மதிக்க மாட்டான் என்பார்கள். நிமிடங்களை கவனித்துக் கொண்டால் மணி " (Money) தானாக நம் வாழ்க்கையில் கிடைத்து விடும். காலத்தை தவிர நமக்கு எதுவும் சொந்தமில்லை. தனக்கு எதுவும் இல்லாமல் இருப்பவனுக்கு கூட காலம் தான் சொந்தமாகும். உலகில் என்ன விலையும் கொடுத்து வாங்க முடியாத மிக உயர்ந்த பொருள் நேரமே! கடனாக தரவோ, பெறவோ முடியாதது காலம் தான்.அரசன் முதல் ஆண்டி வரை அனைவரிடமும் சமமாக பரவி இருப்பது நேரமே!
என்னிடம் எதை வேண்டுமானாலும் கேள். ஆனால் நேரத்தை மட்டும் கேட்காதே என்று ஒரு தத்துவஞானி கூறியுள்ளார். நேரம் என்பது எவரையும் பொருட்படுத்துவதில்லை. யாருக்காகவும் காத்திருப்பதுமில்லை.நேரத்தை வீணாக்குவது கொலையல்ல, தற்கொலையாகும். சென்ற நேரம் திரும்ப வராது. இன்றைய வேலையை நாளை தள்ளி போடுவது மடமைத்தனமாகும்.
آج کا کام کل پر نٹال என உருதுவில் சொல்வது பிரபல்யமானதாகும்.
மரணம்....
மரணம் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது , ஆனால் வர வேண்டிய நேரத்தில் சரியாக வரும். ஒரு மனிதனின் மரண நேரம் வந்து விட்டால் ஒரு நிமிடம் முந்தவும் செய்யாது. பிந்தவும் செய்யாது.
ஆகையால் தான் மரணத்திற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். இறைவன் எப்பொழுது அழைத்தாலும் சந்தோஷமாக செல்லும் நிலையில் நம் அமல்கள் இருக்க வேண்டும்.
முற்காலத்தில் வாழ்ந்த ஒருவன் மரணம் தனக்கு வரக்கூடாது என்பதற்காக இப்படி துஆ செய்தானாம்...
யா அல்லாஹ்! எனக்கு இரவிலும் பகலிலும் மரணம் வரக்கூடாது. அதேப்போல் நான் வீட்டிலும், வெளியிலும் மரணம் ஆகக் கூடாது என துஆ செய்தான். அவன் துஆவை அல்லாஹ் கபூல் செய்தான்.
அவனை அல்லாஹ் இரவிலும் பகலிலும் கட்டுப்படாத மஃரிப் பாங்கு சொன்ன பிறகு உள்ள 20 நிமிடத்தில் வரும் செம்மேகம் உள்ள நேரத்தில் மவ்த் ஆக்கினான். அதேப்போல் ஒரு காலை வீட்டிலும், ஒரு காலை வெளியில் வைத்த நிலையில் மரணமாக்கினான் என்பார்கள்.
எனவே ஒருவன் பிறந்து விட்டால் அவனுக்கு இறப்பு என்பது நிச்சயம். அதை யாராலும் மறுக்க முடியாது. மரணம் வந்தே தீரும். ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுகிக்க கூடியதே என அல்லாஹ் திருமறையில் பேசுகிறான்.
ஒரு தடவை முல்லா நஸ்ருத்தீன் மக்களிடம் சென்று உங்களுக்கு மரணம் வராமல் இருக்க ஒரு மருந்தை நான் சொல்லட்டுமா? எனக் கேட்டார். மக்களெல்லாம் அது என்ன மருந்து என தெரிந்துக் கொள்ள ஆர்வமாக கூடினார்கள். முல்லா என்ன சொல்ல போகிறார் என கேட்க கூட்டம் கூட்டமாக வந்தனர். கடைசியில் முல்லா சொன்னார் உனக்கு மரணம் வராமலிருக்க நீ பிறக்காமல் இருக்க வேண்டும் என்றார்.
பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு கண்டிப்பாக இருக்கும். ஆனால் அந்த இறப்புக்குள் நாம் நம்மை சரி செய்து கொள்ள வேண்டும்.
ஸஹாபாக்கள் ஒரு தடவை கூடி சிரித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த நபி (ஸல்) அவர்கள் எனக்கு தெரிந்த இரண்டு விஷயம் உங்களுக்கும் தெரிந்தால் இப்படி சிரிக்க மாட்டீர்கள்.
1)- வருங்கால வாழ்க்கை.
2)- மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கை.
இதை அறிந்தால் நீங்கள் இவ்வாறு சிரித்துக் கொண்டு இருக்க மாட்டீர்கள் என்று மரணத்தின் அகோரத்தை நபி (ஸல்) அவர்கள் உணர்த்தினார்கள்.
மரணத்தை மறந்த மனிதன்.
قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ
நபியே! அவர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள். வெருண்டோடும் மரணம் உங்களை நிச்சயமாக பிடித்துக் கொள்ளும் என்று சொல்லுங்கள். எந்த மரணத்தில் இருந்து நீங்கள் வெருண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணத்தை பார்த்து பயந்து ஓடுகிறீர்களோ நிச்சயமாக அது உங்களை சந்தித்தே தீரும். . (அல்குர்ஆன் 62 : 8)
நாம் நினைக்க வேண்டிய மிக முக்கியமான காரியங்களில் ஒன்று, ஒவ்வொருவரும் தன்னுடைய மரணத்தைப்பற்றி அதற்காக நான் என்ன செய்து வைத்திருக்கிறேன்? என்னுடைய கப்ருக்காக நான் என்ன தேடி இருக்கிறேன்? என்னுடைய கப்ரு விசாலமாவதற்கு, என்னுடைய கப்ரு ஒளி நிறைந்ததாக சொர்க்கத்தின் இன்பங்கள் நிறைந்ததாக ஆவதற்கு நான் என்ன செய்து வைத்திருக்கிறேன்?
இந்த மரணத்தை நாம் மறந்தாலும் இந்த மரணம் நம்மை மறக்காது. நாம் மறந்துவிடுவோம். நம்முடைய தந்தையை அடக்கம் செய்த அதே நேரத்தில் மரணத்தை மறந்து விடுகின்றோம். தாயை அடக்கம் செய்துவிட்டு மரணத்தை மறந்து விடுகின்றோம். மனைவியை அடக்கம் செய்து விட்டு மறந்து விடுகின்றோம். பிள்ளைகளை அடக்கம் செய்துவிட்டு மரணத்தை மறந்து விடுகின்றோம். இப்படியாக நம்முடைய உறவுகளை நம்முடைய நண்பர்களை அடக்கம் செய்கிறோம்.
ஆனால் அடக்கம் செய்த அதே இடத்திலேயே நம்மில் பலருக்கு மரணத்தின் மறதி வந்து விடுகிறது. ஏதோ அவருக்கு தான் மரணம் அவர் மரணித்து விட்டார் தனக்கு மரணம் இல்லை என்பதை போன்ற ஒரு மனநிலையில் நாம் அந்த இடத்தில் இருந்து திரும்பி வருகின்ற நிலைமை இன்று நம்மில் பலருக்கு உள்ளது.
மறுமையில்...
مَاۤ اَغْنٰى عَنِّىْ مَالِيَهْ
“என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே! (அல்குர்ஆன் : 69:28)
هَلَكَ عَنِّىْ سُلْطٰنِيَهْ
“என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!” (என்று அரற்றுவான்).(அல்குர்ஆன் : 69:29)
சிறுதுளி பெருவெள்ளம்.
ஒரு நாள் ஃபஜ்ருத் தொழுகையின்போது பிலால்(ரலி) அவர்களிடம் ‘பிலாலே இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறும்! ஏனெனில் உம்முடைய செருப்போசையை சொர்க்கத்தில் கேட்டேன்‘ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு பிலால்(ரலி) இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அவ்வுளூவின் மூலம் நான் இரண்டு ரக்ஆத் தொழாமல் இருப்பதில்லை. இதுதான் என்னுடைய செயல்களில் சிறந்த செயல் என்று விடையளித்தார்கள்
பிலால் ரலியல்லாஹு அன்ஹு சுவர்க்கத்திற்கு செல்வதற்கு பெரிய அமல் ஒன்றும் காரணமாக இல்லை. தொடர்ச்சியாக செய்து வந்த ஒளுவுடைய அமல்தான் அவர்களை சுவர்க்கத்திற்கு கொண்டு போய் சேர்த்தது.
இன்று நாம் ஒரே நாளில் எல்லா வணக்கங்களையும் செய்துவிட்டு மறுநாள் ஒட்டுமொத்தமாக விட்டு விடுகின்றோம் இதற்குப் பெயர் இபாதத் அல்ல. மாறாக சிறிய அமலாக இருந்தாலும் நிரந்தரமாக செய்வதிலே தான் அதிக நன்மைகள் உண்டு.
எனவே எல்லா வணக்கங்களையும் தொடர்ந்து செய்வதற்கு நமக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.. மேலும் எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா நம் அனைவரையும் மற்றவர்களைப் பின்பற்றுவதிலிருந்து விலக்கி, நம் முஹம்மது நபிﷺஅவர்களின் வழிமுறையை பின்பற்றுவதற்கான நல் வாய்ப்பை வழங்கி ஈருலகிலும் ஈடேற்றத்தை நல்கிடுவானாக!ஆமீன்..
No comments:
Post a Comment