Wednesday, 23 February 2022

ஜும்ஆ பயான் 25/02/2022

தலைப்பு:

"மிஃராஜ்" இம்மண்ணகத்தார்  வியக்கும் ஓர் விண்ணுலகப் பயணம்.

لَقَدْ رَاٰى مِنْ اٰيٰتِ رَبِّهِ الْكُبْرٰى‏

திடமாக, அவர் தம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் மிகப் பெரியதைக் கண்டார்.(அல்குர்ஆன் : 53:18)

ரஜப்,  இம்மாதத்தில் மிஃராஜ்  நிகழ்ந்ததால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக பார்க்கப்படுகிறது.

இப்புனித மாதத்தில் அல்லாஹுத்தஆலா தன் நேச நபி முஹம்மது ﷺஅவர்களை மிஃராஜ் எனும் பேரற்புத விண்வெளிப் பயணத்திற்கு தன் பால் அழைத்தான்.

இப்புனித பயணம்,பல இலட்சக் கணக்கான கோள்களை கடந்து,கால நேரமில்லாத, இடமே இல்லாதோர் இடத்திற்கு சென்று, இறைவனோடு நாயகம்ﷺஅவர்கள் ஒன்றிய ஓர் நிகழ்வாகும்.

"எங்கு மனித அறிவு திகைத்துப்போய் நிற்குமோ,அங்கிருந்து இறைவனின் ஆற்றல் துவங்கும்"என்பர் அதுப் போன்றதோர் புனிதப் பயணமே மிஃராஜ் ஆகும்.

“ فِعْلُ الْحَکِیْمِ لَایَخْلُو عَنِ الْحِکْمَۃِ “

"மதிநுட்பமானவனின் செயல்பாடு, மதிநுட்பத்தை விட்டும் விலகாது"என்பது பிரபல்யமான ஓர் அரபி பழமொழியாகும்.

அல்லாஹுத்தஆலாவின் தண்மைகளில் ஒன்று அவன்الْحَکِیْمِஹகீமாக இருப்பது.

அவனின் செயல்பாடுகள் அனைத்துமே, பல சூட்சுமங்கள் உள்ளடங்கியதாக இருக்கும்.

அவற்றை மனிதனின் சிற்றறிவால் விளங்கிக் கொள்ளமுடியாது.

அல்லாஹுத்தஆலா, நபிமார்கள் அனைவர்க்குமே தனித்தனியாக முஃஜிஸாக்களை வழங்கியிருந்தான்.

அந்த முஃஜிஸாக்கள் அனைத்தையும் விட உயர்ந்தது,தனித்துவமானது நாயகம் ﷺஅவர்களுக்கு வழங்கப்பட்ட  மிஃராஜ் எனும் முஃஜிஸாவாகும்.

ஏன் மிஃராஜ்,முஃஜிஸாக்களில் தனித்துவமானதென்றால்,

மூஸா(அலை)அவர்கள் தூர்ஸீனா மலையில் இறைவனோடு நேரடியாகப் பேசியது-ஈசா(அலை)அவர்கள் உயிராடு நான்காவது வானுலகிற்கு உயர்த்தப்பட்டது-இத்ரீஸ்(அலை)அவர்களை இறைவன் சுவனத்திற்கு அழைத்துக்கொண்டது.

 இவற்றையெல்லாம் விட அல்லாஹுதஆலா நம் கண்மணி நாயகம்ﷺஅவர்களுக்கு மிஃராஜ் பயணத்தில் இவ்வனைத்து பாக்கியங்களையும் வழங்கினான்.

இறைவனாடு பேசினார்கள்,ஏழுவானங்களுக்கு சென்றார்கள்,சுவன நரக காட்சிகளை கண்டார்கள்.

மிஃராஜின் முக்கிய நோக்கம்ایمان بِالغیب மறைவானவற்றை கண்ணால் காணச்செய்தல்.

இவ்வுலகில் வந்த அனைத்து நபிமார்களும் அல்லாஹ்வும்,மறுவுலக வாழ்வும், உண்மை என சாட்சி சொன்னார்கள்.اَشْہَدُ اَنْ لَّا ۤاِلٰہَ اِلَّا اللہ

ஆனால் இவர்கள் உலகில் வாழும் போது அல்லாஹ்வையோ,சுவன நரகத்தையோ தம் கண்களால் கண்டதில்லை.

சாட்சிகளில் மிக உயர்ந்த சாட்சி கண்ணால் காண்பது.

நபிமார்களில் அல்லாஹ்வையும்,சுவன, நரகத்தையும் கண்ணால் கண்ட சாட்சி வேண்டும் என்பதற்காக அல்லாஹ் நம் கண்மணி  நாயகம்ﷺஅவர்களை மிஃராஜிக்கு அழைத்தான்.

(شانِ حبیب الرّحمٰن ، ص107 ملخصاً)

இறை தூதுச் செய்தியின்(வஹியின்) படித்தரங்களில் மிக உயர்ந்தப் படித்தரம், இறைவனோடு எந்த திரையும் அன்றி நேரடியாகப் பேசுவது.

இவ்வுயர்ந்த அந்தஸ்து நாயகம்ﷺஅவர்களுக்கு மிஃராஜில் கிடைத்தது.

தஃப்ஸீர் கிதாபுகளில் எழுதுகிறார்கள்:பகரா சூராவின் கடைசி “ اٰمَنَ الرَّسُوْلُ “என துவங்கும் இரு வசனங்களை நாயகம்ﷺஅவர்கள் மிஃராஜில் இறைவனோடு எத்திரையும் இன்றி உரையாடும் போது பெற்ற வசனங்களாகும்.


மிஃராஜை பற்றி நபி (ஸல்) அவர்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

நான் இறையில்லம் கஅபாவில் இருமனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. என்னுடைய நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான 'புராக்' என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல்(அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை), 'ஜிப்ரீல்' என்று பதிலளித்தார். 'உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?' என்று கேட்கப்பட்டது. அவர், 'முஹம்மது' என்று பதிலளித்தார். 'அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்' என்றார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும்! அவரின் வருகை மிக நல்ல வருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், '(என்) மகனும் இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!' என்றார்கள். பிறகு இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்' என்று பதிலளிக்க, 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'முஹம்மது' என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'ஆம்' என்று பதிலளித்தார். 'அவரின் அவரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான், ஈஸா(அலை) அவர்களிடமும் யஹ்யா(அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும், 'சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்' என்றார்கள். பிறகு, நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்' என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்' என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்' பதிலளித்தார்.  'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு, நான் யூசுஃப் (அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்' என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு, நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்' என்று பதிலளித்தார். 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்' என்று பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் இத்ரீஸ்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்' என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு, நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்' என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்' என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்' என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன்(அலை) அவர்களிடம் சென்றோம். நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்' என்று (வாழ்த்து) சொன்னார். பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்' என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்' என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்' என்று பதிலளிக்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்' என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். 'நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர், 'இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தினரிலிருந்து சொர்க்கம் புகுவார்கள்' என்று பதிலளித்தார்கள். பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. 'ஜிப்ரீல்' என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்' என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச்சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது... நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வராவாகட்டும்' என்றார்கள். பிறகு, 'அல் பைத்துல் மஃமூர்' எனும் 'வளமான இறையில்லம்' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், 'இதுதான் 'அல் பைத்துல் மஃமூர்' ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகி விடும்' என்றார். பிறகு, (வான எல்லையிலுள்ள இலந்தை மரமான) 'சித்ரத்துல் முன்தஹா' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) 'ஹஜ்ர்' எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. அதன் வேர்ப்பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள், 'உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்' என்று பதிலளித்தார்கள். பிறகு என் மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூஸா(அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்டார்கள். நான், 'என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். எனவே, உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்' என்றார்கள். நான் திரும்பச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, இறைவன் அதை) முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போன்றே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றபோது அவர்கள் முன்பு போன்றே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான். பிறகு நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்க, 'அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்' என்றேன். அதற்கு அவர்கள், 'முன்பு சொன்னதைப் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு, 'நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டேன்' என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக), 'நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்' என்று அறிவிக்கப்பட்டது. (ஸஹீஹ் புகாரி (3207)


நம்பிக்கையின் பயணம்.

மிஃராஜ் பயணம் அசைக்க முடியாத உறுதியையும் உற்சாகத்தையும் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு கொடுத்தது.
மிஃராஜிற்குப் பிறகு தனது வாழ்க்கையின் எந்தச் சந்தர்ப்பத்திலும் பெருமானார் (ஸல்) அலாதியான உறுதிப்பாட்டை வெளியிடத் தவறவில்லை.
தவ்ரு குகையில் – அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் என்றார்கள்
உஹது யுத்தத்திற்கு பிறகு அபூசுப்யான் அடுத்த ஆண்டு சந்திப்போம் என சவால் விட்டிருந்தார். அடுத்த ஆண்டு பெருமானார் (ஸல்) அவர்கள் தயாரானார்கள். அப்போது சஹாபாக்களில் சிலர் இது தேவையா எனக் கருதிய போது நான் தனியாகவேனும் செல்வேன் என்றார்கள்.
இறுதியாக ஹுனைன் யுத்தத்தின் போது பெரும் எண்ணிக்கையில் இருந்த முஸ்லிம்கள் மலைக் கனவாய்களில் மறைந்திருந்த எதிரிகள் தொடுத்த  திடீர் தாக்குதலில் முஸ்லிம்கள் சிதறி ஓடிய போதும் போர்க்களத்தில் தனியாக நின்ற பெருமானார் (ஸல்)
انا نبي لا كذب أنا إبن عبد المطلب  என பாடிய படி தனியே நின்றார்கள். நின்ற இடத்தை விட்டு அசையவில்லை
(புஹாரி 2874)
١- [عن ربيعة بن عباد الديلي:] رأَيْتُ رسولَ اللهِ صلّى اللهُ عليه وسلَّم بسُوقِ ذي المَجازِ قبْلَ أنْ يُهاجِرَ وهو يطوفُ على النّاسِ فيقولُ يا أيُّها النّاسُ إنَّ اللهَ عزَّ وجلَّ يأمُرُكم أنْ تعبُدوه ولا تُشرِكوا به شيئًا وخَلْفَه رجُلٌ يقولُ يا أيُّها النّاسُ إنَّ هذا يأمُرُكم أنْ تترُكوا دِينَ آبائِكم فقُلْتُ مَن هذا فقالوا عمُّه أبو لَهَبٍ
الطبراني (ت ٣٦٠)

மிஃராஜிற்குப் பிறகு பெருமானார் (ஸல்) அவர்களின் பிரச்சாரப் பயணம் தைரியமாக மிக  உறுதியாக நடக்கத் தொடங்கியது.
அதுவரை தான் இருக்கிற இடத்தில் அல்லது மக்கள் கூடுகிற சந்தையில் ஹஜ்ஜுக்கு மக்கள் கூடுகிற போது தனது பிரச்சாரத்தை நிகழ்த்தி வந்த பெருமானார் (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குப் பிறகு அரபு கோத்திரத்தாரை அவர்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று மார்க்கத்தின் பக்கம் அழைத்தார்கள்.

மிஃராஜ் பயணம் வெறும் கனவல்ல.

மிஃராஜ் குறித்து சிலர் "நபியின் ரூஹ் மட்டும் மிஃராஜ் சென்றது.அவர்கள் உடலோடு செல்ல வில்லை" எனவும்.

சிலர் "இது கனவில் நிகழ்ந்ததாகவும்,கஷ்ஃப் எனும் மறைவான பயணம்" எனவும் அபிப்ராயம் கொள்கின்றனர்.

ஆனால் மிஃராஜ் எந்த ஒளிவுமறைவும் இன்றி நாயகம்ﷺஅவர்கள் தன் பூத உடலோடு இறைவனை சந்திக்க சென்ற ஓர் பேரற்புத(முஃஜிஸா) உண்மை நிகழ்வாகும்

குர்ஆனில் மிஃராஜ் குறித்து இரண்டு இடங்களில் வருகின்றது.

1)முதலாவது நபிகளார் மக்காவிலிருந்து பைத்துல் முகத்தஸ் நோக்கிச் சென்ற பயணத்தை இஸ்ரா என்கிறது குர்ஆன் வசனம்...

سُبْحٰنَ الَّذِىْۤ اَسْرٰى بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَـرَامِ اِلَى الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِىْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ مِنْ اٰيٰتِنَا‌  اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ‏

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 17:1)

முதல் வார்த்தை சுப்ஹானல்லதீ என்று ஆரம்பிக்கின்றான். சுப்ஹானல்லாஹ் என்ற வார்த்தை ஆச்சரியமான விஷயங்களை கேட்கும் போது சொல்லப்படுகின்ற வார்த்தை.  அவ்வாறுதான் பின்னால் சொல்லப் போகின்ற நிகழ்வு ஆச்சரியமானவை என்று அல்லாஹ்  உணர்த்துகிறான்.

2)இரண்டாவது மிஃராஜில் நடந்த நிகழ்வுகளை, நஜ்ம் (நட்சத்திரம்)எனும் சூராவில் விவரிக்கப்படுகின்றது.

وَلَقَدْ رَاٰهُ نَزْلَةً اُخْرٰىۙ‏

அன்றியும், நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் (ஜிப்ரீல்) இறங்கக் கண்டார்.(அல்குர்ஆன் : 53:13)

عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهٰى‏

ஸித்ரத்துல் முன்தஹா என்னும் (வானெல்லையிலுள்ள) இலந்தை மரத்தருகே.(அல்குர்ஆன் : 53:14)

عِنْدَهَا جَنَّةُ الْمَاْوٰى‏

அதன் சமீபத்தில் தான் ஜன்னத்துல் மஃவா என்னும் சுவர்க்கம் இருக்கிறது.

(அல்குர்ஆன் : 53:15)

اِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشٰىۙ‏

ஸித்ரத்துல் முன்தஹா என்னும் அம்மரத்தை சூழ்ந்து கொண்டிருந்த வேளையில்,(அல்குர்ஆன் : 53:16)

مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغٰى‏

(அவருடைய) பார்வை விலகவுமில்லை; அதைக் கடந்து (மாறி) விடவுமில்லை.(அல்குர்ஆன் : 53:17)

لَقَدْ رَاٰى مِنْ اٰيٰتِ رَبِّهِ الْكُبْرٰى‏

திடமாக, அவர் தம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் மிகப் பெரியதைக் கண்டார்.(அல்குர்ஆன் : 53:18)

இப்பயணம் வெறும் கனவில் நிகழ்ந்திருந்தால் அல்லாஹ் இரண்டு பகுதிகளாக பிரித்து விரிவாக விளக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது.

கனவில் விண்வெளிப்பயணம் சாதாரண மனிதனுக்கும் நடக்கலாம்.அது அற்புதமல்ல.ஆனால் மிஃராஜ் முஃஜிஸாவாகும்.

இன்னொரு ஆதாரம்:நபி நாயகம்ﷺஅவர்கள்  மிஃராஜ் பயணம் பற்றி மக்களிடம் கூறிய போது காஃபிர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

மிஃராஜ் கனவாக இருந்திருந்தால் காஃபிர்கள் விமர்சனம் செய்திருக்கமாட்டார்கள்.

இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்: காலையில் நபி (ஸல்) தங்களது கூட்டத்தாரிடம் அல்லாஹ் தனக்குக் காண்பித்த மாபெரும் அத்தாட்சிகளை அறிவித்தார்கள். இதைக் கேட்ட அம்மக்கள் முன்பைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்களுக்கு நோவினையும், தொந்தரவும் கொடுத்து அவர்களை ‘பெரும் பொய்யர்’ என்று வருணித்தனர். “உங்களது பயணம் உண்மையானதாக இருந்தால் எங்களுக்கு பைத்துல் முகத்தஸின் அடையாளங்களைக் கூறுங்கள்” என்று கேட்டனர். அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் கண்முன் பைத்துல் முகத்தஸைக் காண்பிக்கவே நபி (ஸல்) அவர்கள் அம்மக்கள் கேட்ட அடையாளங்களை அப்படியே கூறினார்கள். அதில் எதையும் அவர்களால் மறுக்க முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் போகும் வழியில் சந்தித்த வியாபாரக் கூட்டத்தையும், அது எப்போது மக்காவிற்கு வரும் என்பதையும், அவர்களது காணாமல்போன ஒட்டகத்தைப் பற்றியும் மக்காவாசிகளுக்கு அறிவித்தார்கள். நபி (ஸல்) எவ்வாறு கூறினார்களோ அனைத்தும் அவ்வாறே இருந்தன. இருப்பினும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத அவர்கள் நிராகரிக்கவே செய்தனர். சத்தியத்தை விட்டும் வெகுதூரம் விலகியே சென்றனர். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது)


அறிவா? அத்தாட்சியா?

மனிதன் எவ்வளவுதான் சிந்தித்தாலும் ஆறறிவு குள்ளாகத்தான்  சிந்திக்க முடியும் அறிவுக்கு ஒரு எல்லையை அல்லாஹ் வைத்துள்ளார். அத்தாட்சிகளுக்கு முன்னால் அறிவு தோற்றுப்போய் விடும்.
மிஃராஜ் பயணத்தை அறிவு ஏற்றுக்கொள்ளாது. ஆனால் நடந்தது உண்மை. மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்காக கடல் பிளந்தது. அறிவு ஏற்றுக்கொள்ளாது. ஆனால் நடந்தது உண்மை. மிஃராஜ்  உண்மையான முஸ்லிம்களை அடையாளப்படுத்தும்.

நபிமார்களுக்கு வழங்கப்பட்ட முஃஜிஸாக்கள்.

பொதுவாக அல்லாஹ் ஒரு நபி வாழும் காலத்தில்   எதனை வியப்பாகவும்,சாதனையாகவும்,சாத்தியமில்லாததாகவும் பார்க்கப்படுமோ அதனையே முஃஜிஸாவாக வழங்கிவிடுவான்.

மூஸா (அலை)அவர்களுக்கு சூனியத்தை முறியடிக்கும் முஃஜிஸாவையும்.

ஈசா (அலை)அவர்களுக்கு குணப்படுத்த முடியா நோய்களாக கருதப்பட்ட பிறவிக்குருடு,வெண்குஷ்ட நோய்களை குணப்படுத்தும் முஃஜிஸாவையும் வழங்கினான்.

நம் கண்மணி நாயகம்ﷺஅவர்களின் உம்மதினர்களாகிய நம் காலம் அறிவியல் வளர்ச்சி,விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்துவிளங்கக்கூடிய காலமாகும்.

விண்வெளி சாதனைகளை முறியடிக்கும் சாதனையாக அல்லாஹுதஆலா நம் நபி நாயகம்ﷺஅவர்களுக்கு மிஃராஜ்  எனும் முஃஜிஸாவை வழங்கினான்.


 மிஃராஜ் பயணமும், (Theory of Relativity)சார்பியல் கோட்பாடும்.

நவீன யுகத்தில் விஞ்ஞான வளர்ச்சியினால் மனிதன் சந்திரனில் கால் பதித்துவிட்டான்.மற்ற கோள்களுக்கும் மனிதனை அனுப்பும் சாத்தியக்கூறுகளை விஞ்ஞானிகள்,ஆராய்ந்துக்கொண்டிருக்கின்றனர்.ஆனால் நவின தொழில்நுட்பம்,விஞ்ஞானத்தில், மனிதனால் "மின்னல் வேகம்""ஒளிவேகம்"எனும் இலக்கை அடைய முடியவில்லை.

ஒளி வேகம் என்பது 186000 மைல் அதாவது ஒரு வினாடியில் மூன்று இலட்சம் கிலோ மீட்டரை கடப்பதாகும்.

நவீன விஞ்ஞான யுகத்தின் தந்தை என போற்றப்படக்கூடிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள்(கி.பி1905):

ஒளி வேகத்தில் விண்வெளிப்பயணம் சாத்தியமே எனும் கருத்தில்  "Theory of Relativity""சார்பியல் கோட்பாடு"எனும் ஓர் தியரியை முன்வைக்கிறார்.

அதில் ஐன்ஸ்டீன் தெளிவாக குறிப்பிடுகிறார்:Time and Space காலமும் பொருளும் ஒன்று சேரமுடியாது.காலத்தின் ஊடாக பயணம் செய்வதென்பது அரிதானாதாகும்.ஆனால் ஒளிவேகத்தில் பயணம் செய்யும் சாதனம் மனிதனுக்கு 90%சாத்தியமாகும் பட்சத்தில்,அவன் விண்வெளிப்பயணம் மேற்கொள்வானேயானால் அவன் உடல் எடை சரிபாதியாகக் குறைவதைப் போல, காலமும் பாதியாகக்குறையும்.

உதாரணமாக:ஒரு மனிதன் ஒளிவேகத்தில் விண்வெளிக்கு 10 ஆண்டுகள் பயணம் மேற்கொள்கிறானெனில் அவன் மீண்டும் பூமிக்கு திரும்ப வரும் போது வெறும் ஐந்து ஆண்டுகள் தான் கழிந்திருக்கும்.

ஆக ஒளி வேகத்தில் ஐந்தாண்டுகளில் பத்துஆண்டுகள் செல்லக்கூடிய தொலைதூரத்திற்கு செல்லலாம்.

ஒருவனுக்கு உடல் திடகாத்திரமும்,ஒளி வேகத்தில் செல்லும் சாதனமும் இருந்தால் காலத்தை கடந்து அவனால் பயணிக்கமுடியும் என்பதே நவீன விஞ்ஞானத்தில் நம்பப்படும் ஒன்றாகும்.

இப்படி காலத்தின் ஊடாக ஒளிவேகத்தில் விண்வெளிப்பயணம் மனிதனுக்கு சாத்தியாமா? என்பது கேள்விக் கூறியாகும்.

காலம் பற்றிய அறிவு அல்லாஹ்விடம் உள்ளது.

اِنَّ اللّٰهَ عِنْدَهٗ عِلْمُ السَّاعَةِ‌  وَيُنَزِّلُ الْغَيْثَ‌  وَيَعْلَمُ مَا فِى الْاَرْحَامِ‌  وَمَا تَدْرِىْ نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا‌  وَّمَا تَدْرِىْ نَـفْسٌ بِاَىِّ اَرْضٍ تَمُوْتُ ‌ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ ‏ 
நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.
(அல்குர்ஆன் : 31:34)

ஆக அனைத்தையும் படைத்துப்பரிபாளிக்கக்கூடிய,ஆற்றல் மிக்க அல்லாஹுத்தஆலாவுக்கு அது சாத்தியமாகும்.

இப்போது நவீனவிஞ்ஞான கருத்துக்களை மனதில் வைத்துக்கொண்டு குர்ஆன்,ஹதீஸ் ஒளியில் மிஃராஜ் பயணம் குறித்து காண்போம்...

கண்மணி நாயகம் ﷺஅவர்கள் براق புராக் எனும் வாகனத்தில் மிஃராஜ் பயணம் மேற்கொள்கின்றார்கள்.

 புராக்براقஎன்பது برقபர்க் என்பதன் பன்மைச்சொல்லாகும்.

பர்க் برقஎன்ற அரபிச் சொல்லுக்கு "மின்னல்" "ஒளி" என்று பொருள்.

மிஃராஜ் இரவில் பைத்துல் ஹராமிலிருந்து பைத்துல் முகத்தஸ் நோக்கி தரைவழிப் பயணம்-பைத்துல் முகத்தஸில் நபிமார்களுக்கு தொழவைத்தல்-அங்கிருந்து எழுவானங்களை கடந்து ஸித்ரதுல் முன்தஹாவை அடைதல்-சுவன,நரகத்தை காணுதல்-இறுதியாக அல்லாஹு ஜல்லஷானுஹுத்தஆலாவை சந்திதல்- இவை அனைத்தையும் முடித்து விட்டு நாயகம் ﷺஅவர்கள் வீடு திரும்புகிறார்கள். 

அவர்கள் பாடுத்திருந்த இடத்தின் சூடுதணியவில்லை.ஒழுச்செய்த தண்ணீரின் ஈரம் காயவில்லை.கதவு தாள்பாளின் அதிர்வு இன்னும் அடங்கவில்லை அதற்குள்ளாக  நாயகம் ﷺஅவர்கள் திரும்வந்துவிடுகிறார்கள்.

சில வினாடிகளில் இலட்சக்கணக்கான மைல்களை ஒளிவேகத்தில் கடப்பது எப்படி சாத்தியமாகும்?

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நியுட்டனின் "Theory of Relativity""சார்பியல் கோட்பாடு"சொல்கிறது:ஒளி வேகத்தில் பயணம் செய்தால் காலத்தின் ஊடாக பயணம் செய்யமுடியும்.குறைந்த வினாடியில் பல மைல்களை கடக்கலாம்.

ஆக நம்பகமான நபிமொழிகளில் நாயகம் ﷺஅவர்கள் براق புராகில் பயணம் மேற்க்கொண்டார்கள் என வருகிறது.

பர்க் மின்னல் என்பதன் பன்மையே براقபுராக் ஆகும்.

அரபியில் பன்மை என்பது குறைந்தபட்சம் மூன்றாகும்.ஆக ஒளியின் வேகம் 186000 மைல் வேகத்தை 3ல் பெருக்கினால் 558000மைல் வேகமாகும்.

அப்படியானால் நாயகம் ﷺஅவர்கள் மிஃராஜீக்கு சென்ற வேகம் 558000மைல் வேகமாகும்.

இந்தளவு வேகத்தில் செல்பவர் காலத்தின் ஊடாக பல மைல்களை சில வினாடிகளில் சென்று வரமுடியும் என்பதையே ஐன்ஸ்டீனின் "Theory of Relativity""சார்பியல் கோட்பாடு"சொல்கிறது.

மிஃராஜ் என்பது அல்லாஹ்தஆலா நம் கண்மணி நாயகம்ﷺஅவர்களுக்கு வழங்கிய முஃஜிஸா பேரற்புதமாகும். அதனை நம் சிற்றறிவால் விளங்கிக் கொள்ளமுடியாது.இருந்தாலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் Theory of Relativity""சார்பியல் கோட்பாடு" ஓரளவுக்கு மிஃராஜை விளங்க உதவுகிறது.

அல்லாஹ்வின் ஆற்றலையும்,நாயகம்ﷺஅவர்களின் முஃஜிஸாவையும்  விளங்கிக்கொள்ள எந்த கோட்பாடும் அவசியமில்லை.

அல்லாஹ்தஆலா நம் கண்மணி நாயகம் ﷺஅவர்களின் அந்தஸ்தை விளங்கிக்கொள்ளும் 

நல்வாய்ப்பையும்,அவர்களின் வழிநடக்கும் நற்பேற்றையும் நமக்கு தந்தருள்ப் புரிவானாக!ஆமீன்...


வெளியீடு: செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

No comments:

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...