Wednesday, 16 February 2022

ஜும்ஆ பயான்.18-02-2022

தலைப்பு :

பெண்களின் போராட்ட குணம்.

وَالَّذِيْنَ جَاهَدُوْا فِيْنَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا ‌ وَاِنَّ اللّٰهَ لَمَعَ الْمُحْسِنِيْنَ

மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 29:69)

இஸ்லாம் வருவதற்கு முன் பெண்கள் இழிப்பிறவியாகவும்,போகப் பொருளாகவும்,மனித தன்மையின்றியும் நடத்தப்பட்டார்கள்.

உலக வரலாற்றிலும்,உலகில் உள்ள மதங்களிலும், பெண்களின் தியாகங்கள்,அவர்களின் தனிச்சிறப்புகள் வேண்டுமென்றே மறைக்கப்பட்டன. 

இஸ்லாம் வந்ததற்கு பின்னால் தான் பெண்களுக்கான முழுமையான அங்கீகாகரம்,சுதந்திரம் அளிக்கப்பட்டது,

பெண் என்பவள் கண்ணியமான படைப்பு, ஆண்களுக்கு நிகராக கல்வி முதல் பல் துறைகளில் பெண்களும் சாதிக்கலாம்,பெண்களுக்கும் வழிப்பாட்டுரிமை,சொத்துரிமை என எல்லா உரிமைகளும் உண்டு என்று உலகில் முதன் முதலாக பிரகடனப்படுத்தியது இஸ்லாம் தான்.

இன்னும் சொல்லப்போனால் இஸ்லாமிய வரலாறென்பது பெண்கள் இல்லாமல் முழுமைபெறாது.

நம் கண்மணி நாயகம் ﷺ அவர்கள் முழுமனித இனமும் நேர்வழிப் பெற்றிட தன் வாழ்நாளை அர்பணித்தார்கள்.இந்த தீனுல் இஸ்லாத்தை மக்களிடம் எடுத்துரைத்த போது சொல்லோண்ணா துன்பங்களை அனுபவித்தார்கள்.

அவர்களோடு சேர்ந்து ஈமான் கொண்ட ஸஹாபப்பெருமக்களும் தங்ளின்  இன்னுயிர்,உடமைகள்,தங்களின் உறவுகள்,தங்களின் ஊர் என அனைத்தையும் தியாகம் செய்த காரணத்தினால் இந்த தீன் உலகெங்கிலும் பரவியது.

இங்கு ஸஹாபப்பெருமக்கள் என குறிப்பிடுவது வெறுமனே ஆண்களை மாத்திரம் அல்ல,பெண்களையும் தான்.

ஆம் துவக்கத்திலிந்தே இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பு அளப்பெரியது.

இஸ்லாம் தளைத்தோங்குவதற்கும்,அதன் வளர்ச்சிக்கும் அன்று முதல் இன்று வரை இஸ்லாமிய பெண்சமூகம் பல போராட்டங்களையும் தியாகங்களையும் மேற்கொள்வதை யாராலும் மறுக்க இயலாது.

இஸ்லாத்தை ஏற்ற முதல் பெண் அம்மையார் கதீஜா(ரலி) அவர்கள்.

இஸ்லாத்தை தழுவிய முதல் பெண், இஸ்லாத்தின் போதனையை முதன் முதலில்  செவியேற்றவர்,இந்த தீனுக்காக தன் செல்வத்தையும்,தன் வாழ்நாளையும் அர்பணித்தவர்,என பல சிறப்புகளுக்கு சொந்தக்காரர் அன்னை கதீஜா (ரலி)அவர்கள்.

நாயகம் (ஸல்)அவர்கள் முதன் முதலில் வஹி இறங்கிய போது, வஹியில் தாக்கத்தால் பயந்து வீடு வந்த பெருமானார் (ஸல்) அவர்கள் தன்னை போர்வையை கொண்டு போர்த்தும் படி அன்னை கதீஜா அம்மையாரிடம் சொன்னார்கள்.

கதீஜா (ரலி) அவர்கள், நபி (ஸல்)  அவர்களைப் போர்வையால் போர்த்தினார்கள். (நடுக்கம் தீர்ந்ததும்) கதீஜா (ரலி)விடம் நடந்த செய்தியைத் தெரிவித்து விட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ எனத் தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா (ரலி) அவர்கள்; அவ்வாறு கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கின்றீர்கள். (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள். வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள், விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள். உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவிபுரிகின்றீர்கள் என்றார்கள்.

இவ்வாறு வஹியின் தாக்கத்தால் நடுங்கிய,பயந்த வேளையில் நபிக்கு ஆறுதல் கூறி ஆற்றுப்படுத்தியவர்கள்,இந்த தீனை எடுத்துரைக்கும் சமயத்தில் எவ்வளவு எதிர்ப்புகள் சூழ்ந்தாலும் உங்களோடு இருப்பேன் என்று கூறி தங்களின் வாழ்நாள் முழுக்க நாயகம் அவர்களின் தோளோடு தோள் நின்று அனைத்து எதிர்ப்புகளையும்,துன்பங்களையும் சகித்த ஓர் போரட்ட வாழ்விற்கு சொந்தக்காரர்.

அன்னையவர்கள் இறப்பெய்திய போது தன் பலமே குன்றிவிட்டதாக நாயகம் (ஸல்)அவர்கள் நினைக்கும் அளவுக்கு பக்கபலமாக நபிக்கு இருந்தவர்கள் அன்னை கதீஜா (ரலி)அவர்கள்.

அன்னை ஸஃபியா ரலி-அன்ஹா.

அன்னையவர்கள் போர்குணமும்,வீரமும் மிக்க பெண்ணாக திகழ்ந்தார்கள்.

கன்தக் யுதத்ததில் பெண்கள் ஓர் கூடாரத்தில் யுத்தத்தில் காயமுறும் வீரர்களுக்கு மருந்திடுதல் போன்ற உதவிகள் செய்ய தங்கியிருந்தனர்.

இதனை அறிந்த ஒரு யூதன் பெண்களை தாக்க முன்வந்த போது அன்னை ஸஃபியா (ரலி)அவர்கள் தனி ஆளாக நினறு அவன் தலையை வெட்டி எதிரிப் படையை நோக்கி வீசி எறிந்தார்கள்.

இதனை கண்ட யூதர்கள் நடுநடுங்கிப்போனார்கள்.

அன்னை ஜைனப் (ரலி-அன்ஹா)

கர்பலா யுத்தத்தில் அன்னை ஜைனப் (ரலி-அன்ஹா) தன் ஆண்வாரிசுகள் அனைவரையும் இழந்ததை விடவும் அண்ணலாரின் அருமை பேரர் ஹுசைன் (ரலி)அவர்கள் ஷஹிதாக்கப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியாமல் அதே போர்களத்தில் போராடி உயிர்நீத்தார்கள்.

உம்மு அம்மாரா (ரலி-அன்ஹா).

அன்னையவர்கள் உஹத் போரில் பங்கேற்று வீர தீரத்தோடு போராடியதை வரலாறு "உஹதின் வீர மங்கை" என போற்றுகிறது.

உஹதில் வீரர்களுக்கு உதவுவதற்காக சென்றவர்கள்,இஸ்லாமிய படையில் சிறு தவறேற்பட்டு,சிதறியதை கண்ட அன்னையவர்கள் கண்மணி நாயகம் ﷺஅவர்களை எதிரிகள் சூழ்ந்திருப்பதை கண்டு நபியவர்களுக்கு அரணாக நின்று எதிரிகளிடம் போராடுகிறார்கள் இதனால் அன்னையவர்களின் உடலில் 70 க்கு அதிகமான காயங்கள்,அக்காயங்களையும் பொருட்படுத்தாமல் போரடி விட்டு வந்து நபியவர்களிடம் "என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்பணம்!சுனவனத்தில் தங்களோடு இருக்க ஆசை,இறைவனிடம் எனக்காக இறஞ்சுவீர்களா?நாயகமே என கேட்க நபி ﷺ அவர்கள் உடனே துஆ செய்தார்கள்.

அது மட்டுமல்லாமல் நபிக்கு எதிராக தன்னை நபி என வாதிட்ட முஸைலமதுப்னு கத்தாப் என்பவனை கொல்ல தங்களின் மகனார் அப்துல்லாஹ உடன் போரில் கலந்துக்கொண்ட அன்னையவர்கள் தம் கையை இழந்தார்கள்.

சுமைய்யா (ரலி)

இந்த தீனுல் இஸ்லாதிற்காக முதன் முதலில் உயிர் தியாகம் செய்து ஷஹிதானவர்கள் அன்னை சுமைய்யா(ரலி- அன்ஹா)பெண் தான்.இப்படி வரலாறெங்கிலும் தீனுக்காக பெண்கள் போராடியிருக்கிறார்கள்.

அன்னை மாஷித்தா ரலியல்லாஹு அன்ஹா.

– حدثنا عبد الله حدثني أبي ثنا أبو عمر الضرير أنا حماد بن سلمة عن عطاء بن السائب عن سعيد بن جبير عن بن عباس قال قال رسول الله صلى الله عليه و سلم : لما كانت الليلة التي أسرى بي فيها أتت علي رائحة طيبة فقلت يا جبريل ما هذه الرائحة الطيبة فقال هذه رائحة ماشطة ابنة فرعون وأولادها قال قلت وما شأنها قال بينا هي تمشط ابنة فرعون ذات يوم إذ سقطت المدري من يديها فقالت بسم الله فقالت لها ابنة فرعون أبي قالت لا ولكن ربي ورب أبيك الله قالت أخبره بذلك قالت نعم فأخبرته فدعاها فقال يا فلانة وان لك ربا غيري قالت نعم ربي وربك الله فأمر ببقرة من نحاس فأحميت ثم أمر بها ان تلقى هي وأولادها فيها قالت له ان لي إليك حاجة قال وما حاجتك قالت أحب ان تجمع عظامي وعظام ولدي في ثوب واحد وتدفننا قال ذلك لك علينا من الحق قال فأمر بأولادها فألقوا بين يديها واحدا واحدا إلى ان انتهى ذلك إلى صبي لها مرضع وكأنها تقاعست من أجله قال يا أمه اقتحمي فإن عذاب الدنيا أهون من عذاب الآخرة فاقتحمت قال قال بن عباس تكلم أربعة صغار عيسى بن مريم عليه السلام وصاحب جريج وشاهد يوسف وبن ماشطة ابنة فرعون

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ல்லம் அவர்கள் மிஹ்ராஜ் பயணத்தின் போது ஒரு இடத்தில், கஸ்தூரியை விட மிக்க வாசனையை கொண்ட அதிசயமான மணமொன்றினை நுகர்ந்தார்கள்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வானவர் கோமான் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அந்த அற்புதமான வாசனையைப் பற்றி கேட்டார்கள்.

அதற்கு ஜிப்ரயீல்  அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ''இந்த அற்புதமான வாசனை 'மாஷித்தா'வும் அவருடைய குடும்பத்தினர்களும் இருக்கக் கூடிய (கப்ர் அல்லது சுவர்க்க மாளிகை) இடத்திலிருந்து வருகின்ற வாசனை'' என்று கூறினார்கள்.

தொடர்ந்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ல்லம் அவர்கள் மாஷித்தாவின் வரலாறை விவரிக்கும் படி கேட்க, ஜிப்ரயீல்  அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

"மாஷித்தா"- பிர்அவ்னின் குடும்பத்துப் பெண்களுக்கு தலை வாரி விட்ட பெண்.

ஒரு நாள் அவர் பிர்அவ்னின் மகளுக்கு தலை வாரிக் கொண்டிருந்த போது தற்செயலாக சீப்பு கீழே விழுகிறது.

உடனே மாஷித்தா "பிஸ்மில்லாஹ்- அல்லாஹ்வின் திருநாமம் கொண்டு" என்று கூறினார்.

அப்போது அந்த பிள்ளை "நீ அல்லாஹ் என்று கூறியது என் தந்தை பிர்அவனைத் தானே?" என்று வினவினாள்.

அதற்கு மாஷித்தா "இல்லை! என்னையும் உன் தந்தையையும் படைத்து பரிபாலிக்கும் அந்த இறைவன் அல்லாஹ்வை" என்று கூறினார்.

(மாஷித்தா; வணக்கத்திற்குரிய நாயனாக அல்லாஹ்வையும், இறைத்தூதராக நபி மூஸா அலைஹி வஸ்ல்லம் அவர்களையும் ஈமான் கொண்டு அதை மனதில் மறைத்து வைத்திருந்த பெண்ணாவார்.)

உடனே அந்த பிள்ளை போய் தன் தந்தை பிர்அவ்னிடம் குற்றஞ் சொல்ல அவன் மாஷித்தாவை சபைக்கு அழைத்து முழு விடயத்தையும் வினவினான்.

பிர்அவ்ன் கேட்டான் "என்னைத் தவிர உனக்கு வேறு யாரும் கடவுள் உண்டோ?" என்று!

அதற்கு மாஷித்தா "ஆம்! நிச்சயமாக என்னையும் உன்னையும் படைத்து பரிபாலிக்கும் அந்த அல்லாஹ்தான் என் இறைவன்" என்றார் உறுதியோடு.

கோபங் கொண்ட பிர்அவன் நெருப்பை மூட்டி செம்பால் ஆன பெரும் பாத்திரத்தில் எண்ணையைக் கொதிக்க வைத்து மாஷித்தாவுடைய கணவனிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு பிள்ளைகளாக நெருப்பில் எரிந்து கொண்டிருந்த எண்ணெய் பாத்திரத்தில் எறிந்தான். ஆனால் மாஷித்தா மனந்தளறவுமில்லை, அவருடைய ஈமானில் சற்றேனும் உறுதி குறையவுமில்லை.

கடைசியாக பிர்அவன் மாஷித்தாவையும் அவருடைய மார்பில் பால் குடித்ததுக் கொண்டிருந்த கைக் குழந்தையையும் தூக்கி எறியும் படி கூறினான்.

அப்போது மாஷித்தா "எனது கடைசி ஆசை ஒன்று இருக்கிறது" என்று கூறினார்.

பிர்அவ்ன் "என்ன, சொல்?" என்று கேட்டான்.

மாஷித்தா "என்னையும் என் கைக்குழந்தையையும் எண்ணையில் தூக்கி எறிந்த பின் கடைசியாக எமது எலும்புகள் எதுவெல்லாம் மிச்சமாகுமோ அவற்றையெல்லாம் ஒன்றாக ஒரு புடவையினுள் சுற்றி ஒரே கப்றில் அடக்கஞ் செய்யவேண்டும்" என்று.

கொடிய பிர்அவன் மாஷித்தாவுடைய வேண்டுகோளிற்கு இணக்கம் தெரிவித்தான்.

அப்போது மாஷித்தா தன் மார்பில் பால் குடித்ததுக் கொண்டிருந்த கைக் குழந்தையை பார்த்து "ஒரு பாவமும் அறியாத இந்த பிஞ்சும் சேர்ந்து எண்ணையில் கருகப் போகிறதே" என்று தயங்கினார்.

அப்போது வல்ல அல்லாஹ் அந்த குழந்தைக்கு பேசும் சக்தியை கொடுத்தான். அது "கவலைப்படாதே தாயே! நீ சத்தியத்தில் இருக்கிறாய், பொறுமைக் கொண்டு முன்னேறிச் செல், மறுமையுடைய வேதனைகளும் தண்டனைகளும் இதை விடக் கொடியது" என்று ஆறுதல் கூறியது. கடைசியில் மாஷித்தாவும் அவரது கைக் குழந்தையுடன் எண்ணைப் பாத்திரத்தில் எறியப்பட்டார்கள்.

வல்லவன் அல்லாஹ் மாஷித்தாவையும் அவருடைய குடும்பத்தையும் பொருந்திக் கொணடு வாக்களித்த உயர்ந்த சுவர்க்கத்தை அளித்துவிட்டான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் "ரலியல்லாஹு அன்ஹு" அவர்கள்

ஹதிஸ் எண்: 309                                 நூல்கள்: முஸ்னத் அஹ்மத்

நம் பாரத நாட்டின் விடுதலைக்காக பல இஸ்லாமிய பெண்கள் போராடியிருக்கிறார்கள்

1)பிஅம்மா (அபாடி பேகம்)

இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் கைபற்றிய போது, துணிந்து போராடிய பெண்மணிகளில் இவரும் ஒருவர். இவருடைய மகன் முகமது அலீ 1921-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு பின்னர் பொது மன்னிப்பில் சிறையை விட்டு வெளியே வருவதாக கேள்விபட்ட பி அம்மா உரைத்த பதில், “முஹம்மது அலீ வெறும் சாதாரண மனிதன் அல்ல, அவன் இஸ்லாமின் மகன். அவனால் ஒரு போதும் மற்றவர்கள் கொடுக்கும் மன்னிப்பு பிச்சையில் வருவதை சிந்திக்க முடியாது. ஒருவேளை அவன் அதை விரும்பினாலும் இந்த வயது முதிர்ந்த தாயின் கைகள் பலம் இழந்து கிடந்தாலும் அவனை எதிர் கொள்ள இது பலம் பெறும்” என்று உரைத்தவர்.

அவர் அயல் நாட்டின் பிடியில் இருந்து தன் தாய்நாட்டை காப்பற்ற அயராது உழைத்தவர். சுதந்திரத்திற்காக போராடியவர்களுடன் துணிந்து செயல்பட்டவர். அவர்கள் அயல் நாட்டின் ஆடைகளை அணிவதை தவிர்த்து மற்றவர்களையும் காதி துணியை அணிய வைக்க முயற்சித்தவர். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக பெரிதும் போராடியவர். இத்துணை போராட்டத்திலும் தன்னுடைய ஈமானை ஒருபோதும் தளர விடாதவர்.

2)ஜுபைதா தாவூதி

இவர்கள் மௌலான ஷாபி தாவூதி அவர்களின் மனைவி, பீகாரைச் சேர்ந்தவர். பிரிட்டிஷாருக்கு எதிராக “துணிச்சலை” தன் ஆடையாக உடுத்தி செயல்பட்டவர். மேலை நாட்டவர்களால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை ஒன்று திரட்டி பிரிட்டிஷ்காரர்களுக்கு முன் தன் எதிரித்துவத்தை காட்ட தீ வைத்து கொளுத்தியவர். பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக நடந்த அனைத்து கூட்டங்களிலும் பங்கெடுத்து, மற்ற பெண்ககளுக்கும்  துணிச்சலை வளர்க்க தன்னை முன்மாதிரியாக செயல்படுத்திக் கொண்டவர்.

3)சதாத் பனோ கிச்லேவ்.

இவர் பஞ்சாபைச் சேர்ந்தவர். மற்றவர்களை ஊக்குவிப்பதற்காக சுதந்திர போராட்டத்திற்காக பல கவிதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதியவர். சாதாரண பெண்மணியாக இருக்கும் நாம் நம் கணவர் சத்தியத்தின் பாதையில் போராடியோ அல்லது இறை நேர்மைக்காகவோ சிறையில் அடைக்கப்பட்டார் என்று கேள்வி பட்டால் அழுது, ஆர்ப்பாட்டம் செய்து வருந்துவதோடு அல்லாமல் நம் குழந்தை, பெற்றோர் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி, தனிமையில் வீழச் செய்வோம்.

1920-ஆம் ஆண்டு சதாத் பனோ கிச்லேவ் தன் கணவர் டாக்டர் கிச்லேவ் கைது செய்யப்பட்டதை கேள்விப்பட்டவுடன் தெரிவித்தது என்ன தெரியுமா? “அவர் தன் நாட்டுக்காக கைது செய்யப்பட்டதை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர் ஒருவரின் வாழ்க்கையை கொடுத்து ஆயிரம் பேரின் வாழ்க்கையை காப்பாற்றியுள்ளார்” என்று ஒரு துளிக் கூட வருத்தம் கொள்ளாமல் பெருமிதம் கொண்டார். அந்த கண்ணியமிக்க பெண்மணி. இவர் அரசாங்கத்தின் அத்துமீறல்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் எதிராக குரல் கொடுத்தவர், டாக்டர். கிச்லேவால் நிறுவப்பட்ட “ஸ்வராஜ் ஆசிரமத்தை” தன் கணவனுக்கு பின் வழி நடத்திச் சென்ற பெருமையைக் கொண்டவர்.

4)ஜுலைகா பேகம்.

இவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் மனைவியாவார். மிகவும் தைரியமிக்க பெண்மணி. சுதந்திரப் போராட்டத்தில் காந்தியாலும், நேருவாலும் மிகவும் மதிக்கத்தக்க, உன்னதமான மனிதர் அபுல் கலாம் ஆசாத் 1942-ல் கைது செய்யப்பட்ட போது, ஜுலைகா காந்திக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.

அதில், “என் கணவர் ஒரு வருடம் சிறைத் தண்டனை மட்டுமே பெற்றுள்ளார். அவர் தன் நாட்டின் மீது வைத்திருந்த பற்றுக்கு, அவருடைய பக்குவப்பட்ட மனதிற்கும் நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைந்த தண்டனையே. ஆனால் நியாயம் இன்னும் கிடைக்கவில்லை. இன்று முதல் இந்த வங்காளத்தின் முழு கிலாஃபத் அமைப்பையும் நானே பொறுப்பேற்று நடத்துவேன்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். தன் கணவனின் பொறுப்பை மிக எளிதாக தனதாக்கிக் கொண்டு தன்னுடைய பங்கையும் சுதந்திரத்திற்காக முழுமையாய் வெளிக்கொணர்ந்தவர்.

5)ரஜியா காத்தூன்.

பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து நின்ற வங்க தேசத்தின் முதல் பெண்மணி என்ற சிறப்பைப் பெற்றவர். இதனால் அவர்களைக் கைது செய்து களப்பணி என்ற இடத்தில் அடைத்து வைத்தனர். அவருடைய கடைசி மூச்சை அவர் அங்குதான் நீத்தார்.

மேலே குறிப்பட்டவர்களைத் தவிர நிசதுன்னிஷா பேகம், அக்பரி பேகம், அஷ்கரி பேகம், ஹபீபா, ரஹீமி, அமினா குரைஷி, ஃபாத்திமா குரைஷி, அமினா தயப்ஜி, பேகம் சகினா லுக்மணி, சாபியா சாத், பேகம் குல்சூம் சயானி, அஸ்மத் அரா காத்துன், சுகரா காத்துன், பீபி அமதுள் இஸ்லாம், ஃபாத்திமா இஸ்மாயீல், சுல்தானா ஹயாத் அன்சாரி, ஹழ்ரா பேகம் மற்றும் ஜுஹரா அன்சாரி இவர்களில் பல பேர் சிறையில் அடைக்கப்பட்டும், பல சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டும் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள். இவர்களின் மகத்தான போராட்டத்தாலும், வீரத்தாலும் இன்று நாம் சுதந்திர இந்தியாவைக் காண முடிகிறது.

6)ஹஸன் மஹ்பர் பேகம்

பேகம் ஹஜ்ரத் மஹலின் சம காலத்தில் ஜான்ஸி ராணியுடன் பிரிட்டீஷாருக்கு எதிராகப் போர்க்களத்தில் வாளேந்தி நின்ற மற்றொரு வீரமங்கை ஹஸன் மஹ்பர் பேகம். ஜான்ஸியின் ஒரு படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கிய மஹ்பர், 1858 ஜூன் 18ல் நடைபெற்ற குவாலியர் யுத்தத்தில் ஜான்ஸியுடன் வீர மரணம் அடந்தார்.

7)அமாதுல் ஸலாம்.

1938ல் ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக பம்பாயில் காந்திஜியும் முஹம்மது அலீ ஜின்னாவும் சந்தித்துப் பேச ஏற்பாடபயிற்று. ஜின்னாவைச் சந்திக்க ஒரு பெண்ணும் வந்திருந்தாள். ஜின்னாவின் இல்லத்தில் மூன்று மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை முடிந்த பின் காந்திஜி பத்திரிகை நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்பேட்டியில் காந்திஜி, “என்னிடம் அத்தியந்த பிரேமை வாய்ந்த பெண்ணொருத்தி இருக்கிறாள். ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக அவள் தன் உயிரையும் மகிழ்ச்சியாகக் கொடுப்பாள்” என்று கூறியவர், தன் அருகில் நின்ற அப்பெண்ணை நிருபர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அப்பெண்தான் குமாரி அமாதுல் ஸலாம்.

8)ஹாஜியா ஆலாஜி பானு என்ற ஃபீயம்மாள்.

“என் தோள்களின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றன” என்று காந்திஜியால் வருணிக்கப்பட்ட அலீ சகோதரர்களின் தாயாரான ஹாஜியா ஆலாஜி பானு என்ற ஃபீயம்மாள் தான், கைராட்டையில் நூற்ற நூலால் நெய்யப்பட்ட ஆடைக்கு ‘கதர்’ என்று பெயரிட்டவர். தன் கையால் நெய்த துணியைக் காந்திஜிக்கு அளித்து, “இதனைக் கத்ராக (கௌரவமாக) ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றார். அன்றிலிருந்துதான் அந்த ஆடைக்கு ‘கதர் ஆடை’ என்ற பெயர் வந்தது. சுதேசி இயக்கத்தின் கலாச்சார அடையாளமான துணிக்கு ‘கதர்’ என்று பெயரிட்டவர் ஒரு முஸ்லிம் தாய் என்ற பெருமை நம் போராட்ட வரலாற்றுக்கு உண்டு.

9)பேகம் சாஹிபா.

திண்டுக்கல் மாவட்டத்தில் பேகம் சாஹிபா என்ற ஊர் இருந்தது. அதன் பின்னர் பேகம் சாஹிபா நகராக மாறி அதன் பின்னர் பேகம்பூர் என மருவியது. ஹைதர் அலீ அவர்களின் தங்கை பேகம் சாஹிபா. அவர் கணவர் நவாபு மீரா ரசாலிக்கான் சாயபு. இவர் திண்டுக்கல் சீமை ஜாகீர்தாரராக இருந்தார். அவரின் மனைவியும் ஹைதர் அலீயின் தங்கையுமான ஹஜ்ரத் பேகம் சாஹிபாவுக்கு கி.பி.1772ல் குழந்தையைப் பெற்றெடுத்து ஏழாம் நாள் காலமானார்.

போர்க்களத்தில் நிறைமாத கர்ப்பிணியாக போராடியவர். மீரா ரசாலிக்கான் சாயபு தன் மனைவியை அடக்கம் செய்த இடத்தில் பள்ளிவாசல் கட்டி, கோரியும் கட்டி காசினாயி தோப்பு, பேகம்பூர், பனங்குளம், சின்ன பள்ளப்பட்டி ஆகிய ஊர்களில் நன்செய், புன்செய் நிலங்களை மானியமாக விட்டு ஒன்பது பேரையும் நியமித்துள்ளார். அந்த ஒன்பது பேரும் இந்நிலங்களை அனுபவித்துக் கொண்டு பள்ளிவாசல் பணிகளையும் கவனிக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டது.

இந்திய நில அளவை உயர் அலுவல் மெக்கன்சியின் உதவியாளர்களில் ஒருவராகிய தரியாபத்து நிட்டல நாயன அய்யன் பள்ளிவாசல்களையும் அங்குள்ள புற கட்டிடங்களையும் சுற்றிலும் உள்ள நந்தவனத் தோட்டங்களையும் நேரில் பார்த்து அதனை அழகாக வர்ணித்துள்ளார். அதன் மூல ஆவணம் தமிழ்நாடு அரசின் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் உள்ளது. அதன் எண்கள் டி.3021,ஆர் 8275 ஆகும்.

10)இளையான்குடியின் பீபியம்மாள்.

என் பிள்ளைகள் சிறையில் இருக்கும் போது ஒரு வேளை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டு விடுதலையானால் அவர்களின் குரல் வளையை நெறித்துக் கொல்வேன் என்று வீரசபதம் பூண்டவர் தாயார் பீபியம்மாள்.

1922ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும், கதர் ஆடையைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கவும், சுதந்திரப் போராட்டத்திற்கு நிதி திரட்டவும் இளையான்குடியில் உள்ள அலங்காரத்தோப்பிற்கு அருகே தென்புறம் பேரூராட்சியில் ஓர் அலுவலகம் அமைக்கப்பட்டது. அங்கே குடிநீர் தொட்டி ஒன்றும் இருந்தது. அந்தக் குடிநீர் தொட்டி அருகில் ஏ.எஸ்.டி. இப்ராகிம் ஷாவுடைய பங்களா இருந்தது. அந்த பங்களாவில் சுதந்திரப் போராட்டம் குறித்த நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த பீபியம்மாள், மீன்பஜார் முதல் காதர் பிச்சை தெரு வரை மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தார் என்கிறார்கள் அவ்வூர் மக்கள்.

இதே போல தென்காசி சையது குருக்கள் பள்ளிவாசல் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உருது மொழியில் பேசி நிதி திரட்டினார். அவர் பேசியதை தமிழில் திருச்சியைச் சேர்ந்த முர்தஸா சாகிப் மொழி பெயர்த்தார். இவ்வாறு சுதந்திர வேட்கையுடன் இந்தியா முழுவதும் சுற்றப்பயணம் செய்த பீபியம்மாள் 1924ம் ஆண்டு 72வது வயதில் காலமானார். பீபியம்மாள் விருப்பப்படி அவரது உடல் கதர் துணியால் சுற்றப்பட்டே நல்லடக்கம் செய்யப்பட்டது.

11)கண்ணனூர் ராணி பீபி

கேரளாவின் துறைமுகப்பட்டினமாக விளங்கிய கண்ணனூரை பதினெட்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர் ராணி பீபி. மைசூர் திப்பு சுல்தானின் ஆதரவாளரான இவர், பிரிட்டீஷ் படைவீரர்கள் கண்ணனூர் வழியாகச் செல்லக்கூடாது என்று தடை விதித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள் இவர் மீது போர் தொடுத்தனர்.

1783ம் ஆண்டு திடீரென கண்ணனூரை ஆங்கிலேயர்கள் தாக்கினார்கள். அந்தத் திடீர் தாக்குதலில் ராணி பீபியின் படை தோல்வியடைந்தது. அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஆங்கிலேயர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் அடைத்தவுடன் ராணியின் எல்லைப் பகுதியை தாங்கள் பயன்படுத்திக்கொள்ள ஒப்புதல் வழங்குவது போல போலி ஆவணம் தயாரித்து ராணியிடம் படித்துக் காண்பிக்காமல் ஒப்பந்தம் வாங்கி ஆங்கிலேயர்கள் தங்களுடைய ராணுவ முகாமிற்கு பயன்படுத்திக்கொண்டனர். அதன் பின்னர் ராணி விடுதலை செய்யப்பட்டார். 

1784ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து கண்ணனூரில் ஆங்கிலேயரின் முகாம் செயல்படத் தொடங்கியது. மீண்டும் 1790ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மறுபடியும் ஓர் ஒப்பந்தத்தை தயார் செய்து கையெழுத்திடுமாறு ராணி பீபியை நிர்பந்தம் செய்தனர். ஆனால் ராணி பீபி மறுத்ததுடன் திப்பு சுல்தான் படைக்கு ஆதரவாக செயல்படப் போவதாக பகிரங்கமாக அறிவிப்பும் செய்தார். இதன் காரணமாகவே மீண்டும் ராணி கைது செய்யப்பட்டார்.

12)உமர் பீபி

1919ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் ஆம் நாள் ஜாலியன் வாலாபாக் என்னுமிடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.இ.ஹெச். டயர் என்பவன் தலைமையில் ஆங்கிலேயர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரம் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரம் எனவும் அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூட்டில் ஏராளமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூட்டில் உமர் பீபியும் பலியானார். இவர் 1864ம் ஆண்டு அமிர்தசரசில் பிறந்தவர். இவரின் கணவர் பெயர் இமாமுதீன்.

13)மரியம் பீவி

திருச்சி பீமநகர் வயன்வித்தார் தெருவில் வசித்த மரியம் பீவி என்னும் விடுதலைப் போராட்ட வீராங்களை நாகபுரி கொடிப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைத் தண்டனை பெற்றார். இவருடைய கணவர் பெயர் அப்துல் கரீம். பெண் என்றும் பாராமல் ஆங்கில ஆட்சி மரியம் பீவிக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை வழங்கி கடலூர் சிறையில் அடைத்தது.

14)பேகம் அயிஜாஸ் ரசூல்

உத்திரப் பிரதேசத்தில் சாண்டிலா என்ற ஊரில் 1909ம் ஆண்டு நவார் சர்ஜூல் பிகாரின் மகளாகப் பிறந்தவர். நவாப் அயிஜாஸ் ரசூல் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் 1937ம் ஆண்டு உத்திரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட இவர். 1969ம் ஆண்டு முதல் 1971ம் ஆண்டு வரை உத்திரப் பிரதேச அமைச்சராக பதவி வகித்தார்.

15)பேகம் ஹஜ்ரத் மஹல்

இவர் ஒத் மாநிலத்தின் ராணி, நவாப் வாசித் அலி ஷாவின் மனைவியுமாவர். ஒத் என்பது இப்போது உள்ள உத்திர பிரதேச மாநிலம் ஆகும். இந்தியா பிரிடிஷ் காரர்களால் அடிமை பட்டுக் கிடந்த காலத்தில், அவர்களின் அடிமை தளத்தில் முழு மாநிலமும் உறைந்த நிலையில் இருந்த பொழுது துணிந்து எழுந்து இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர்.

பேகம் என்பது இவரது பெயர், “ஹஜ்ரத் மஹல்” என்பது மற்றவர்களால் போற்றி வழங்கப்பட்ட பெயர். அம்மாநிலத்தை ஆண்டு கொண்டு ராஜாவாகிய அவரது கணவரை பிரிடிஷ்காரர்கள் கொல்கத்தாவுக்கு நாடு கடத்திய பிறகு, அம்மாநிலத்தையே தன் கையில் எடுத்து ஆண்டவர். அம்மாநிலத்தை காக்க தன்னுடைய மகன் பிரிஜிஸ் காதரை மன்னனாக்கிவிட்டு, நாட்டை காப்பதற்காக அவர் சுதந்திர போராட்டத்தில் களம் இறங்கினார்.

இந்தியாவின் முதலாம் உலக போரின் போது முக்கிய பெறும் தலைவர்களுடன் இணைந்து பல சாதனைகளை செய்து உள்ளார். ஒரு சமயம் பிரிட்டிஷ் தலைவர்களில் ஒருவரான சர் ஹென்றி லாரன்ஸ் என்பவரையும், அவரை சுற்றி இருந்த மற்றும் சில அதிகாரிகளையும் வளைத்து பிடித்து ஒரு தனி பெண்மணியாக எதிர் கொண்டு, அவர்களுடன் நடந்த போராட்டத்தில் பேகம் ஹஜ்ரத் மஹல் சர் ஹென்றி லாரன்ஷை தன் கையால் சுட்டு வீழ்த்தினார்.

பின்னர் பிரிட்டிஷ்காரர்களின் சார்பில் ஜெனரல் ஹவ்லாக் என்பவரின் கண்காணிப்பில் மீண்டும் அம்மாநிலத்தை கைப்பற்ற முயன்று பெரும் தோல்வியை தழுவினார்கள். இறுதியில் சர் கேம்பால் தலைமையில் லக்னவை மீண்டும் பிரிட்ஷ்காரர்களே கைபற்றினர். இந்த சூழ்நிலையில் பேகம் ஹஜ்ரத் மஹல் பிரிட்ஷ்காரர்களால் பின் வாங்கிக் கொள்ளும் படி வற்புறுத்தப்பட்டார். ஆனால் வீரப் பெண்மணியான அவரோ இவர்கள் கொடுக்கும் “பொது மன்னிப்பில்” வெளி வந்து மீண்டும் இவர்களின் அடிமைத்தனத்திற்கு ஆளாவதை விட இங்கு இருந்து இடம் பெயர்வது மேல், என்று முடிவு எடுத்த துணிச்சல் மிக்க பெண்மணி.

இவரை என்னவென்று புகழ்வது, தமிழ் அகராதியில் இத்துணை தைரியமிக்க மகத்தான பெண்ணுக்கு என்ன வார்த்தை உள்ளது என்றால் கிடைக்குமா என்று தெரியவில்லை தைரியத்தை தன் இரத்தமாக கொண்டு வாழ்ந்தவர். லக்னோவில் பிறந்த இவர் 1832-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் நானா ஸாஹிப் அவர்கள் இந்தியாவின் சுதந்திரத்திற்காக அனைத்து மக்களும் ஒன்றினைந்து போரடா வேண்டி, இந்து முஸ்லிம் மக்களை ஒற்றுமைக்காக அழைத்த போது நாட்டிற்காக இவர் வீட்டை விட்டு வெளியே வந்து சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர்.

தன் ஒருத்தியின் வாழ்க்கை பல பேருக்கு உதவ வேண்டும் என்று நினைத்தவர். பெண்கள் அனைவரையும் போருக்கு தயார்படுத்தியவர், பெண்களுக்கு ஆயுதங்களை பயன்படுத்த கற்றுக் கொடுத்தவர். பிரிட்ஷ்க்காரர்களின் ரகசியங்களை ஒன்று திரட்டி சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அனுப்புவராக பணி புரிந்தவர். இறுதியாக பிரிட்டிஷ் அரசாங்கம் இவர்களை சிறை பிடித்த போது இவர்களுக்கு எதிராக செயல்பட்டதை துணிச்சலோடு ஒப்புக்கொண்டு, பிரிட்டிஷாரின் மன்னிப்பை ஏற்க மறுத்து, உயிர் தியாகம் செய்வதே மேல் என்று முழக்கமிட்ட வீர மங்கை.

ஷாஹின் பாக்கில் இஸ்லாமிய பெண்கள்.

இந்திய சுதந்திரத்திற்கு 70 வருடங்களுக்கு பின் இஸ்லாமிய பெண்கள் வீதிக்கு வந்தது,குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டில்லியில் ஷாஹின் பாக் எனும் இடத்தில் ஒன்று கூடினார்கள்.கடும் பனியில் தொடர்ந்து 60 தினங்களுக்கு மேல் போராடி உலகையே திரும்பிப்பார்க்க வைத்தார்கள்.

டில்லி ஜாமிஆ மில்லியா மாணவ,மாணவிகள் தாக்கப்பட்டதை அறிந்த இஸ்லாமிய வயதுமுதிர்ந்த பெண்களும்,குடும்ப பெண்களும் ஷாஹின் பாக் எனும் இடத்தில் கூடினர்.

இந்த செய்தியை மீடியாக்கள் இப்படி வர்ணித்தன.

"சுதந்திர இந்தியாவில் 70 வருடங்களுக்கு பின்னால் ஜாமியாவில் தங்களின் பேரன்களும்,பேத்திகளும் தாக்கப்பட்டதை அறிந்தும்,குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும் தாதிகளும்,நானிகளும் போராடுகிறார்கள்"

காரணம் இப்போராட்டத்தை வழிநடத்தியவர்கள் வயதுமுதிர்ந்த அந்த தாதிகளும்,நானிகளும் தான்.

அதன் தொடர்ச்சியாக  இந்தியா முழுக்க இஸ்லாமிய பெண்கள் தன்னெழுச்சியாக பல ஷாஹின் பாக் போரத்தை முன்னெடுத்தார்கள்.

அகிலா என்கிற ஹாதியா.

ராணுவத்தில் பணிப்புரிந்த ஹாதியாவின் தந்தை அசோகன் பாஜகவை சேர்ந்தவராக இருந்திருக்கிறார்.

அவ்வப்போது தந்தையின் இஸ்லாமிய விரோத பேச்சுக்களை கேட்டு வளர்ந்த ஹாதியாவின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது தமிழக வருகை...

சேலத்தில் உள்ள சித்த மருத்துவக்கல்லூரியில் இணைந்த ஹாதியாவுக்கு அறை தோழியாக இஸ்லாமிய பெண் அமைகிறார்.

அறை தோழி மற்றும் சக இஸ்லாமிய தோழிகளின் நடவடிக்கைகளை காணும் ஹாதியா அவர்களை உற்று நோக்குகிறார். இஸ்லாமிய பெண்களின் பேச்சு, நடத்தை, ஒழுக்கம், கண்ணியம், தூய்மை, தொழுகை என ஒவ்வொன்றும் ஹாதியாவை இஸ்லாத்தை காதலிக்க தூண்டுகிறது.

இஸ்லாத்தை பற்றிய தேடலில் இறங்குகிறார். இணையதளங்கள் வழியாகவும், இஸ்லாமிய தோழிகளின் வாயிலாகவும் இஸ்லாத்தை பற்றி மேலும் மேலும் தெரிந்து இஸ்லாத்தின் கடவுள் கொள்கை அவரது சிந்தனையை நுட்பமாக தூண்டுகிறது.

ஒரு கடவுள் கொள்கை :

நாமே உருவாக்கிய பொருள் நமக்கு கடவுளாக இருக்க முடியாது. நம்மை உருவாக்கியவனே கடவுளாக இருக்க முடியும். இப்பிரபஞ்சத்திற்கு பல கடவுள் இருக்க முடியாது. ஒரே கடவுள் மட்டுமே இருக்க முடியும் என்ற தெளிவுக்கு வருகிறார்.

இதனால் லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை, முஹம்மது அல்லாஹ்வுடைய தூதர்) என்ற கலிமாவை உறுதி பூண்டு இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்கிறார்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய பெண்ணாக வாழும் ஹாதியா இஸ்லாமிய சட்டப்படி இஸ்லாமிய ஆணையே திருமணம் முடிக்க வேண்டும் என்ற இஸ்லாமிய சட்டத்திற்கு உட்பட்டு இணையதளங்கள் வழியாக மணமகன் தேவை என பதிவு செய்து இஸ்லாமிய ஆணையே திருமணம் முடிக்கிறார்.

இது பாஜக தந்தைக்கு கோபம் வரவே தம்முடைய மகளுக்கு கட்டாய மதமாற்றம் செய்ததாகவும், கட்டாய திருமணம் செய்ததாகவும், ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்திற்கு அழைத்து செல்வதாகவும் கூறி ஆட்கொணர்வு மனு ஒன்றை கேரளா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

வழக்கை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம் திருமணத்தை ரத்து செய்து தந்தையுடன் மகளை அனுப்பி சட்டத்திற்கு புறம்பான தீர்ப்பை வழங்குகிறது.

இருப்பினும் கணவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தொடர்ந்து தம்முடைய மகள் புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்று பாஜக தந்தை நாடகமாடுகிறார்.

இருப்பினும் மிக உறுதியாக இருந்து 11 மாத வனவாசத்திற்கு பின் தமக்கான அநீதியை உச்சநீதிமன்றத்தில் உரக்க கூறி தமக்கான நீதியை பெற்றுள்ளார் ஹாதியா...

ஹாதியாவின் வெற்றிக்கு இறைவனின் அருளும் அவருடைய போராட்டமும் மன உறுதியே முக்கிய காரணமாகும். 

ஹாதியாவின் வாழ்க்கை சொல்லும் செய்தி.  ஹாதியா தனது போராட்டத்தால் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த ஓர் இஸ்லாமிய வரலாறு பெண் !

மர்வா ஸபா கவாக்ஸி

  (ஹிஜாப் போராளி)

ஹிஜாபை விரும்பும் பெண்கள் மற்றும் ஹிஜாபை  தவிர்க்க நினைக்கும் பெண்கள் கட்டாயமாக இந்த வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

சகோதரி #மர்வா_ஸபா_கவாக்ஸி ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் ஆவார் ,

தான் மருத்துவ படிப்பை படித்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தனது சிறு வயதில் இருந்தே தனது பள்ளி பருவத்ததை ஆரம்பித்தவர் தான் கவாக்ஸி

துருக்கியில் அங்காரா பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்புக்கு அனுமதி கிடைத்தவுடன் பெரும் மகிழ்சியாக இருந்தார் கவாக்ஸி.

பல்கலைக்கழகம் கவாக்ஸி அவர்களுக்கு கல்வி கற்க ஒரு நிபந்தனையை முன் வைத்தது,மருத்துவ படிப்புக்கு அவர் தேர்வானபோதும் , மார்க்கம் கட்டளையிட்ட ஹிஜாப் அணிவதை தவிர்க்க வேண்டும் என்ற நிபந்தனை பெரும் அதிர்ச்சி உண்டாக்கியது

மருத்துவராவதா அல்லது மார்க்கம் கட்டளையிட்ட ஹிஜாப் அணிவதா என்ற சோதனையான நிலையில் ,

கவாக்ஸி தான் ஆசை கொண்ட மருத்துவ படிப்பை ஹிஜாப்காக தூக்கி எறிந்து விட்டு ,மார்க்கத்திற்கு கட்டுபட்டு நடக்க வேண்டும் என்று முடிவு செய்தார் கவாக்ஸி அவர்களின் இந்த துணிச்சலாக முடிவுக்கு , அவரின் பெற்றோரும் ஒரு காரணம் ,

ஏன் என்றால் இதை போன்று ஒரு முறை கவாக்ஸி அவர்களின் தாய் வாழ்க்கையில் ஒரு சோதனையான நிகழ்வு நடைபெற்றது ,

ஒரு பல்கலைக்கழக பேராசிரியராக பணி செய்து கொண்டு இருந்த கவாக்ஸியின் தாய்  ஹிஜாபினால் பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவியை இழந்தவர் ஆவார் ,

ஆம் பல்கலைக்கழகத்தில் ஹிஜாபோடு பணி செய்ய கூடாது என்று பல்கலைக்கழக நிர்வாகம் கூறிய போது பல்கலைக்கழக பேராசிரியர் பணியை தூக்கி எரிந்தால்.

1980 களில் கொண்டு வரப்பட்ட ஹிஜாபுக்கு எதிரான தடைச் சட்டமே இத்தனைக்கும் பின்னணியாக இருந்தது.

நடைமுறையில் சட்டம் இருந்த போதிலும் இஸ்லாமிய வழிமுறைகளை யாருக்காவும் விட்டு கொடுக்காமல் சூழ்நிலையை நம்மைப்போல்  நிர்ப்பந்தமாக கருதாமல் மார்க்க பிடிப்பபை மக்களுக்கு முன் காட்டியவர்கள்.

பிரபல நடிகைகளின், பாடல்கலை டிக் டாக்கில் தேடும் பெண்களே ,இஸ்லாமிய வரலாற்றில் மர்வா ஸபா கவாக்ஸி இந்நூற்றாண்டின் புரட்சிகரமான பெண்களில் ஒருவர் என்ற இடத்தை பிடித்து உள்ளார் என்பதை இன்றைய சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சரித்திரம் படைத்த பெண் முஸ்கான்

கர்நாடகாவில் ஹிஜாப் போராட்டத்தின் அடையாளமாக பிபி முஸ்கான் கான் மாறி இருக்கிறார். 

அல்லாஹு  அக்பர் சொன்னது ஏன்? இந்துத்துவா மாணவர்கள் செய்தது என்ன? முஸ்கான் !

இந்துத்துவா மாணவர்களை நோக்கி இவர் அல்லாஹு அக்பர் என்று எழுப்பிய கோஷம் தேசிய அளவில் வைரலாகி உள்ளது.

கையை தூக்கி.. துணிச்சலாக பிபி முஸ்கான் கான் கோஷம் எழுப்பியது ஹிஜாப் போராட்டத்தின் அடையாளமாக, சின்னமாக உருவெடுத்துள்ளது. 

முதலில் என்னை கேட் வாசலில் தடுத்து நிறுத்த பார்த்தனர். எண்ணி தடுத்து நிறுத்தி என்னுடைய ஹிஜாப்பை கழற்றும்படி கூறினர். 

அல்லாஹு  அக்பர் சொன்னது ஏன்? இந்துத்துவா மாணவர்கள் செய்தது என்ன? முஸ்கான் !

ஹிஜாப் இல்லாமல் உள்ளே செல்லும்படி கூறினார்கள். ஹிஜாப் அணிந்தால் உள்ளே விட மாட்டோம் என்று வெளியே சென்ற கும்பல் சொன்னது. 

என்னை சுற்றி வளைத்து, நிறுத்த பார்த்தனர். அவர்கள் பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் கிடையாது. அவர்கள் இந்துத்துவா கும்பலை சேர்ந்தவர்கள்.

நான் அவர்களை கண்டு கொள்ளாமல் உள்ளே புகுந்து பைக்கில் வந்து விட்டேன். நான் உள்ளே பைக்கில் வந்ததும் வகுப்பை நோக்கி சென்றேன். 

ஆனால் இந்துத்துவா கும்பல் என்னை நோக்கி ஜெய் ஸ்ரீ ராம் என்று கத்தி கொண்டே வந்தனர். ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லிக் கொண்டே எனக்கு அருகில் தாக்குவது போல வந்தனர்.

எனக்கு அச்சம் அதிகரித்து விட்டது. எனக்கு இதயம் வேகமாக துடித்தது. பயமாக இருந்தது. ஆனால் திடீரென எனக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. 

அல்லாஹு அக்பர் என்று அல்லாவின் பெயரை துணிச்சலாக குறிப்பிட்டேன். அல்லாஹ் பெயரை சொன்னதும் எனக்கு நம்பிக்கை வந்தது. 

அதன் பின் தான் எனக்கு தைரியம் வந்தது.

ஹிஜாப் போராட்டம்.

கர்நாடகா மாநிலம் உடுப்.பி மாவட்டத்தில் உள்ள குந்தாப்பூர் அரசு பியூ கல்லூரியில், ஹிஜாப் அணிந்துவந்த 6 இஸ்லாமிய மாணவிகள் வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. ஹிஜாப் அணிவது அரசியலமைப்புச் சட்டம் எங்களுக்கு வழங்கிய உரிமை, எங்களை கல்லூரிக்குள் அனுமதிக்க வேண்டும் எனக்கூறி அந்த 6 மாணவிகளும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமூகவலைத்தளங்களில் வந்த காணொளி;ஹிஜாப் அணிந்த முஸ்கான் என்ற பெண் கல்லூரிக்குள் நுழையும் போதே சில ஓனாய்கள் ஹிஜாபுக்கு எதிராக கூச்சாலிடுகின்றன.

ஹிஜாப் அணிந்த அச்சிங்கப்பெண் நெஞ்சுரத்தோடு "அல்லாஹ் அக்பர்"கூறி அவ்விடத்தை கடக்கிறாள்.

கடைசி நம்பிக்கையாக இருந்த நீதித்துறை ஹிஜாபுக்கு தற்காலிக தடை விதித்து தீர்ப்பளித்திருப்பது இஸ்லாமிய சமூகத்திற்கும்,ஜனநாயகத்தை நம்புவோருக்கும் பேரதிர்ச்சியை அளித்திருக்கிறது.

57 இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் தலைவர் கர்நாடக கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்து ஒர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாபர் மஸ்ஜித் வழக்கில் வரலாற்றுப் பிழையான தீர்ப்பை அளித்தைப் போல ஹிஜாப் விவகாரத்திலும் இவர்களின் இறுதித் தீர்ப்பு அமையுமோ என்ற ஐயத்தை கிளப்பியிருக்கிறது.

ஆனால் பெண்கள் முன்னெடுக்கும் போராட்டம் தோற்றதாக சரித்திரம் இல்லை என்பது தான் வரலாறுக் கூறும் உண்மை....

வெளியீடு: செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

No comments:

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...