Wednesday, 3 November 2021

ஜும்ஆ பயான் 05/11/2021

 உறவுகள் மேம்பட...

 وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ‌  اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا‏

 ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 4:01)

இஸ்லாம் ஓர் அழகிய வாழ்வியல் முறையாகும்.இறைவனுக்கு வழிப்பட்டு நடப்பது எந்தளவுக்கு அவசியமோ அதுபோல "ஹுகூகுல் இபாத்"எனப்படும் சக படைப்புகளுக்கு ஆற்றவேண்டிய கடமைகளும் அவசியமாகும்.

பெற்றோர்களின் பணிவிடை,மனைவி மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமை,உற்றார் உறவினர்களோடு நல்லுறவுப்பேணுவது,அண்டை வீட்டாரிடம் நல்லறம் பேணுதல்,                 சக மனிதர்களோடு சகோதர வாஞ்சையோடு பழகுதல் போன்றவை மார்க்கக் கடமை என்கிறது இஸ்லாம்.

(உலகில் மற்ற மதங்கள்,சமயங்களில் உறவைப் பேணுவது சிறப்பு,நல்லது என்ற ரீதியில் தான் கூறப்பட்டுள்ளதே ஒழிய கட்டாயக்கடமையல்ல) ஆனால் இஸ்லாம் இவற்றை கடமை என்கிறது, அதனால் தான் உறவை பேணாதவனின்  ஈமான் பரிபூரணம் ஆகாது என நம் மார்க்கம் இயம்புகிறது.

இன்றைய விஞ்ஞானயுகத்தில் அறிவியல் வளர்ச்சியால் மனித வாழ்க்கையில் வசதிவாய்ப்புகள் பெருகிவிட்டன.ஆனால் வாழ்வின் அவசியமான மகிழ்ச்சியையும்,நிம்மதியையும் மனிதன் இழந்துத்தவிக்கிறான்.

அலைப்பேசி,சமூகவலைதளங்கள், ஊடகங்கள் இவற்றுக்கு தரும் முக்கியத்தில் கொஞ்சம் கூட உறவுகளுக்கு தருவதில்லை.

விளைவு: பெற்றோர்களைப் பேணாத பிள்ளைகளால் பெருகிவிட்ட முதியோர் இல்லங்களும்,கணவன் மனைவிக்கிடையில் பரஸ்ப்பரம் அன்பு,பாசம்,விட்டுக்கொடுக்குதல் இல்லாததால் பெருகிவரும் விவாகரத்துக்களும்,பெற்றோர்கள் குழந்தைகளுக்கிடையில் மனம்விட்டுப் பேசுதல்,அரவணைப்பு இல்லாததால் வளரும் இளம்தலைமுறையினரின் சீரழிவும், பெரும் பெரும் அடுக்குமாடிகளில் (அபார்ட்மெண்ட்)சொகுசாக குடியிப்பவர்களின் பக்கத்து ஃபிளாடில் குடியிருப்பவன் யார்,அவனுக்கு என்ன நடந்தால் என்ன என்று எந்த இலட்சியமும் இல்லாமல் 'கான்கிரீட் காடு'களில் வாழ்ந்துக்கொண்டிருப்பவர்களும்,....

இப்படி மனித சமூகம் நிம்மதியையும்,மகிழ்ச்சியையும் தொலைத்துவிட்டு வாழவழியின்றி தவிக்கின்றது.

இனிய வாழ்விற்கு சுமூக உறவு அவசியம்.

சில வேளைகளில் பெரும் சுமையாக மாறினாலும் உறவுகள்தான் மனிதனின் பலமே! ஆபத்துகளில் கை கொடுக்க, துயரங்களில் ஆறுதல் அளிக்க, இன்ப-துன்பங்களில் உரிமையோடு பங்கெடுக்க உறவுகள் வேண்டும்.

وَهُوَ الَّذِىْ خَلَقَ مِنَ الْمَآءِ بَشَرًا فَجَعَلَهٗ نَسَبًا وَّ صِهْرًا‌  وَكَانَ رَبُّكَ قَدِيْرًا‏

“அவனே மனிதனை நீரால் படைத்தான்; அவனுக்குச் சொந்தங்களையும் பந்தங்களையும் ஏற்படுத்தினான். உம்முடைய இறைவன் பேராற்றல் உடையவன்” (25:54) என்கிறது திருக்குர்ஆன்.

மனிதனுக்குப் பிறப்பால் தாய், தந்தை, சகோதரன், சகோதரி போன்ற 25க்கும் அதிகமான சொந்தங்களும் திருமணத்தால் மாமனார், மாமியார் போன்ற 12க்கும் அதிகமான பந்தங்களும் கிடைப்பது எவ்வளவு பெரிய பலம்!

உறவுகள் மேம்பட இஸ்லாம் கூறும் வழிமுறைகள்.

முதலில் 1)அல்லாஹ்வின் திருப்பொருத்தை மாத்திரம் நாடி உறவைப்பேணுவது.பிரதிஉபகாரம் செய்தாலும்,செய்யாவிட்டாலும்,நன்றி செலுத்தினாலும்,செலுத்தாவிடினும் இறைப்பொருத்ததை நாடி செய்பவர் உறவை முறிக்கமாட்டார்.

உறவுகளில் விரிசல் ஏற்ப்பட முதல்முக்கிய காரணமே எதிர்ப்பார்ப்பதால் தான்.

"நான் இன்ன உபகாரம் செய்தால் அவர் பிரதிஉபகாரம் செய்வார் அல்லது நன்றி சொல்வார்"என்ற எதிப்பார்ப்போடு உபகாரம் செய்து அது நடக்காத போது சண்டையும்,பிரச்சனையும் உறவில் விரிசலும் ஏற்படுகிறது. 

இரண்டாவது2)உறவை வெட்டிவாழ்பவரோடும் சேர்ந்து வாழ்வது.

حديث عبد الله بن عمرو بن العاص -رضي الله تعالى عنهما- أن النبي ﷺ قال: ليس الواصل بالمكافِئ، ولكن الواصل الذي إذا قُطعت رحمه وصلها[1]. رواه البخاري.

“அவர் பேசினால் நானும் பேசுவேன்” என்று பதிலுக்குப் பதில் உறவாடுவது, உறவை மதிப்பதாகாது. உறவை முறித்துக்கொள்பவருடனும் உறவாடுவதே உறவை மதிப்பதாகும். 

மூன்றாவது3)தீங்கிழைத்தாலும் நன்மையேச் செய்வது.விட்டுக்கொடுத்து வாழ்வது.

நபி(ஸல்)அவர்களின் மக்கா வாழ்க்கையில் நபியை எதிர்த்தவர்கள்,ஏன் அவர்களின் உயிருக்கே ஆபத்தைவிளைவிக்க முயற்சித்தவர்கள் அவர்களின் உறவினர்கள் தாம்,

"ஃபத்ஹே மக்கா"மக்கா வெற்றியின் போது நாயகம் (ஸல்)அவர்கள் நினைத்திருந்தால் அவர்களை பழிவாங்கி பழித்தீர்த்திருக்கலாம் ஆனால் அவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்புவழங்கி தீங்கிழைத்தோரிடமும் நல்லமுறையில் நடந்துகாட்டினார்கள்.

عن أبي هريرة -رضي الله عنه- أن رجلاً قال: يا رسول الله، إن لي قَرابَة أصِلهم ويقطعوني، وأحسن إليهم ويُسيئُون إليَّ، وأحْلَمُ عنهم ويجهلون عليَّ، فقال: «لئن كنت كما قلت، فكأنما تُسِفُّهُمْ الْمَلَّ، ولا يزال معك من الله ظهير عليهم ما دمت على ذلك».رواه المسلم

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நண்பர் ஒருவர் வந்து, “நான் உறவை மதித்து வாழ்கிறேன். ஆனால், உறவுகள் என்னைப் புறக்கணிக்கிறார்கள். அவர்களுக்கு நான் நன்மை செய்கிறேன்; அவர்களோ எனக்குத் தீங்கு செய்கின்றனர். அவர்களுடன் சகிப்புத்தன்மையோடு நடந்துகொள்கிறேன். அவர்களோ என்னைக் கண்டுகொள்வதே இல்லை” என்று முறையிட்டார்.

அப்போது நபிகளார், “நீ சொல்வதைப் போன்று நடந்துகொள்வது உண்மையென்றால், அவர்களின் வாயை அடைத்தவர் போலாகிவிடுவீர்கள்.இதே நிலையில் நீங்கள் நீடித்திருக்கும்வரை இறைவனிடமிருந்து ஓர் உதவியாளர் அவர்களுக்கெதிராக உங்களுடன் இருந்துகொண்டேயிருப்பார்" என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.ஸஹீஹ் முஸ்லிம் (5000)

நான்காவது4)அன்பளிப்புகளை பறிமாறிக்கொள்வது உறவுகளுக்கிடையில் பாசத்தையும்,பிணைப்பையும் உண்டாக்கிக்கொள்ள இஸ்லாம் காட்டித் தரும் அழகான வழிமுறை.

حدثنا عمرو بن خالد قال حدثنا ضمام بن إسماعيل قال سمعت  موسى بن وردان عن أبى هريرة عن النبي صلى الله وسلم يقول تهادوا تحابوا               

நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பளிப்பு செய்து நேசத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி),நூல் : அல்அதபுல்முஃப்ரத்(590)

இறந்து விட்ட மனைவியின் உறவினர்களோடு மாநபி (ஸல்).

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்.

ஹாலா பின்த்து குவைலித் - கதீஜா(ரலி) அவர்களின் சகோதரி - இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வருவதற்கு அனுமதி கேட்டார். உடனே நபி(ஸல்) அவர்கள் (கதீஜா - ரலி - அவர்களைப் போன்ற குரலில் ஹாலாவும் அனுமதி கேட்ட காரணத்தால்)  கதீஜா(ரலி) அனுமதி கேட்கும் விதத்தை நினைவு கூர்ந்து கவனம் மாறி, 'இறைவா! இவர் ஹாலாவாக இருக்கட்டும்' என்று கூறினார்கள். உடனே நான் ரோஷமடைந்து இறந்துவிட்ட, தாடைகள் சிவந்த ஒரு குறைஷிக் கிழவியை ஏன் (எப்போது பார்த்தாலும்) நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்கு பதிலாக அவரைவிடச் சிறந்த மனைவியை உங்களுக்கு அல்லாஹ் கொடுத்துவிட்டானே (அப்படியிருக்க, இன்னும் ஏன் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.)' என்று கேட்டேன். ஸஹீஹ் புகாரி (3821)

ஸஹாபாக்களின் நட்புறவு.

அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் மக்காவுக்குப் பயணம் மேற்கொண்டால், அவர்களுடன் கழுதையொன்று இருக்கும். ஒட்டக வாகனத்தில் பயணம் செய்து களைத்து விட்டால், அக்கழுதைமீது ஓய்வெடுத்துக்கொள்வார்கள். மேலும், தலைப்பாகையொன்றும் அவர்களிடம் இருந்தது. அதை அவர்கள் தமது தலையில் கட்டிக்கொள்வார்கள். இந்நிலையில் ஒரு நாள் அவர்கள் அந்தக் கழுதையில் (பயணம் செய்துகொண்டு) இருந்தபோது, கிராமவாசி ஒருவர் அவர்களைக் கடந்துசென்றார்.

உடனே அவரிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "நீங்கள் இன்ன மனிதரின் புதல்வரான இன்ன மனிதரல்லவா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘ஆம்" என்றார். உடனே அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், தமது கழுதையை அக்கிராமவாசியிடம் கொடுத்து "இதில் ஏறிக்கொள்ளுங்கள்" என்றார்கள்; தலைப்பாகையைக் கொடுத்து, "இதைத் தலையில் கட்டிக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.

அப்போது அவர்களிடம் அவர்களுடைய தோழர்களில் சிலர், "அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக! தாங்கள் ஓய்வெடுப்பதற்காக (மாற்று வாகனமாகப்) பயன்படுத்திவந்த கழுதையை இந்தக் கிராமவாசிக்குக் கொடுத்துவிட்டீர்களே? (பயணத்தின்போது) தாங்கள் தலையில் கட்டிக்கொண்டிருந்த தலைப்பாகையையும் கொடுத்துவிட்டீர்களே?" என்று கேட்டார்கள்.

அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நல்லறங்களில் மிகவும் சிறந்தது, ஒரு மனிதர் தம் தந்தை மறைந்தபின் அவருடைய அன்புக்குரியவர்களுடன் நல்லுறவு பாராட்டுவதாகும்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். இந்தக் கிராமவாசியின் தந்தை (என் தந்தை) உமர் (ரலி) அவர்களின் நண்பராக இருந்தார்" என்று சொன்னார்கள்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. (ஸஹீஹ் முஸ்லிம் (4991)

உறவினர்களுக்கு செலவு செய்தல்.

يَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ ۖ قُلْ مَا أَنْفَقْتُمْ مِنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ ۗ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிடவேண்டும்). நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை நன்கறிந்தவன் எனக் கூறுவீராக. அல்குர்ஆன் 2:215..

உறவினர்களுக்கே முன்னுரிமை.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனா அன்சாரிகளிலேயே அபூதல்ஹா (ஸைத் பின் சஹ்ல்-ரலி) அவர்கள் பெரும் செல்வராக இருந்தார். அவருடைய செல்வங்களில் "பைரஹா" எனும் தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குச் சென்று அங்குள்ள நல்ல (சுவை) நீரை அருந்துவது வழக்கம். "நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாதவரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்" எனும் இந்த (3:92ஆவது) வசனம் அருளப்பெற்றபோது, அபூதல்ஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எழுந்துசென்று, "அல்லாஹ் தனது வேதத்தில் "நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாதவரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்" எனக் கூறுகின்றான். என் செல்வங்களில் எனக்கு மிகவும் விருப்பமானது "பைரஹா" (எனும் இந்தத் தோட்டமே) ஆகும். (இனி) அது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும். அதற்கான நன்மையையும் அது (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இருப்பதையும் நான் அல்லாஹ்விடம் எதிர்பார்க்கிறேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் விரும்பிய வழியில் அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்" என்று சொன்னார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நல்லது. அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம்தானே! அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம்தானே! நீங்கள் அது தொடர்பாகக் கூறியதை நான் செவியுற்றேன். அதை உங்கள் நெருங்கிய உறவினர்களிடையே (தானமாக) வழங்குவதையே நான் (உசிதமாகக்) கருதுகிறேன்" என்று சொன்னார்கள்.எனவே, அதை அபூதல்ஹா (ரலி) அவர்கள் தம் நெருங்கிய உறவினர்களுக்கும், தம் தந்தையின் சகோதரர் மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்து விட்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் (1821)

நல்லோர்களின் உபதேசம்

இமாம் ஜைனுல் ஆபிதீன் (ரஹ்) அவர்களின் மகன் முஹம்மது கூறுகிறார். எனது தந்தை ஐந்து வகையான மனிதர்களோடு எப்பொழுதும் சேராதே என்று எனக்கு வசிய்யத் செய்துள்ளார் .

1. "பாவி" இவன் ஒரு கவள உணவுக்கு. அதைவிட குறைவான பொருளுக்கு உன்னை விற்கவும் தயங்க மாட்டான். 

2."கஞ்சன்" உனக்கு மிகத் தேவையான பொருளை கூட உன்னை விட்டும் பிரிக்க தயங்க மாட்டான். 

3."பொய்யன்" அருகில் உள்ளதை உன்னை விட்டும் தூரமாக்குவான். தூரமானவற்றை சமீபமாக்கிக் காட்டுவான்.

4. "மடையன்"  இவன் உனக்கு உதவ நினைப்பான். ஆனால் முடிவு மோசமானதாகி விடும்.

5."உறவை முறித்து உறவினர்களுக்கு துன்பம் தருபவன்" இவன் இறை வேதத்தில் மூன்று இடங்களில் சபிக்கப்பட்டுள்ளதைக் கண்டுள்ளேன்.

உறவை முறிப்பது பெரும்பாவம்.                   وعن أَبي محمد جُبَيْرِ بنِ مُطْعِمٍ 

 أَنَّ رسولَ اللَّه ﷺ قَالَ: لا يَدْخُلُ الجَنَّةَ قَاطِعٌ، قَالَ سفيان في روايته: يَعْني: قاطِع رحِم. متفقٌ عَلَيهِ

உறவை முறித்துக்கொள்பவர் சொர்க்கம் செல்ல மாட்டார் என்பது நபிகளாரின் பொன்மொழி.

قال رسول الله -صلى الله عليه وسلم- : (مَن سَرَّهُ أنْ يُبْسَطَ له في رِزْقِهِ، وأَنْ يُنْسَأَ له في أثَرِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ).[١٠

. “வாழ்வாதாரம் விரிவடைய வேண்டும்; ஆயுள் அதிகமாக வேண்டும் என்று விரும்புகின்றவர் உறவுகளுடன் சேர்ந்து வாழட்டும்!” என்பதும் நபிமொழிதான். (புகாரீ, முஸ்லிம்)

உறவைப்பேணிவாழ்வதால் வாழ்வில் நிம்மதியும்,மகிழ்ச்சியும் கிடைப்பதோடு அல்லாஹ்வின் திருப்பொருத்தமும் கிடைக்கின்றது.                                          

எனவே அல்லாஹுத்தஆலா நம்மை உறவைப்பேணி வாழும் நல்லோர்களாக ஆக்கி அருள் புரிவானாக!ஆமீன்.


வெளியீடு -

செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

No comments:

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...