பயணத்தின் ஒழுக்கங்கள்.
ஹஜ் பயணம்
மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின் மீதும் உம்மிடம் வருவார்கள். அவை அவர்களைத் தொலைவிலுள்ள ஒவ்வொரு பாதையிலிருந்தும் கொண்டு வந்து சேர்க்கும்” என்று கூறினோம். (திருக் குர்ஆன் 22 /27)
நடந்தும், ஒட்டகங்களில் சவாரி செய்தும் வந்திறங்கிய காலம் போக- இப்போது- கார்களிலும் பஸ்களிலும் தரை மார்க்கமாக-கப்பல்களில் கடல் மார்க்கமாக- விமானங்களில் ஆகாய மார்க்கமாக-
புனித ஹஜ்ஜை நிறைவேற்ற, உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் திரள் திரளாக வந்துக் கொண்டிருக்கின்றனர். துல் கஅதா மாதம் தொடங்கிவிட்டால் போதும், நாளுக்கு நாள் இறைவனின் விருந்தினர்கள் எண்ணிக்கை, அதிகரித்துக் கொண்டே போகின்றது.
ஜித்தா ‘இஸ்லாமியத் துறைமுகம்” கப்பல்களால் நிரம்பி வழிகின்றது. தீவுகளே இடம் பெயர்ந்து, நீலத் திரைக் கடலில் நீந்தி வந்தனவோ! என வியக்கும் வண்ணம், பெரும் பெரும் கப்பல்களில் புண்ணிய சீலர்கள் வந்திறங்குகின்றனர்
அகில உலகத்தையும் ஆட்டிப் படைக்கும் அமெரிக்காவிலிருந்து –
ஒரு காலத்தில் சூரியனே அஸ்தமிக்காத நிலப்பரப்பை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இங்கிலாந்திலிருந்து –
காணும் இடமெல்லாம் காடுகளை உள்ளடக்கிய ஆப்பிரிக்காவிலிருந்து –
காரல் மார்க்ஸின் கம்யூனிஸ தேசங்களிலிருந்து –
முஸ்லிம்கள் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் இந்தோனேசியாவிலிருந்து –
மனங்குளிரும் மரியாதைக்குப் பேர் போன மலேசியாவிலிருந்து –
செல்வச் செழிப்பு மிக்க சிங்கப்பூரிலிருந்து –
இதயம் கவரும் பசுமை நிறைந்த இலங்கையிலிருந்து -
வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவிலிருந்து –
பச்சைப் பிறைக் கொடி பாகிஸ்தானிலிருந்து –
பங்காளி நாடாம் வங்காள தேசத்திலிருந்து –
இன்னும் இவை போன்ற எண்ணற்ற தேசங்களிலிருந்து –
வண்ண வண்ணப் பறவைகளாய் வானவெளிப் பாதையில் பறந்து வந்த விமானங்களிலிருந்து – இலட்சக் கணக்கான இலட்சிய வாதிகள் புனித ஹஜ்ஜை நிறைவேற்ற வந்திறங்குகின்றனர்!
ஹஜ் பயணமும்,மறுமை பயணமும்.
وَتَزَوَّدُوْا فَاِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوٰى وَاتَّقُوْنِ يٰٓاُولِى الْاَلْبَابِ
மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.(அல்குர்ஆன் : 2:197)
கஃபா சர்வ வல்லமை மிக்க இறைவனின் இல்லம் ஆகும்.பூமி,வானங்களின் அதிபதியின் அரசவை ஆகும்.
ஹஜ்ஜுக்கு செல்பவர் அவனின் அரசவையை நோக்கிப் பயணப்படுகிறார்.அவனை தரிசிக்கச் செல்கிறார்.உண்மையில் நம் புறக்கண்களால் உலகில் இறைவனை காணமுடியாவிட்டாலும்,பைத்துல்லாஹ்வை வலம் வருதல்,அதனை தரிசித்தல் நாளை மறுமையில் இறை தரிசனத்தை பெற்றுத்தரும்.
ஹஜ் பயணம்,மறுமையின் பயணத்தை நினைவுப்படுத்துகின்றது. இப்பயணத்தின் நோக்கம்,நாளை மறுமைக்காண பயணத்தின் ஆர்வத்தை அதிகரித்துக்கொள்வதாகும்.
அல்லாஹுவின் محبت அன்பு எவரின் உள்ளத்தில் இருக்குமோ அவருக்கு கஃபை தரிசிக்கும் ஆர்வம் அதிரிக்கும்.காதலியின் மீதுள்ள பிரியம்,அவள் தொடர்புள்ள அனைத்தின் மீதும் பிரியத்தை ஏற்பத்துவதைப் போல, அவளின் ஊர்,அவளின் தெரு,அவளின் வீடு அனைத்தும் நேசத்திற்குறியதாக மாறிவிடுகின்றது.
லைலாவின் வீட்டு சுவற்றை முத்தமிட்ட மஜ்னூன் சொன்ன வார்த்தை...
أَمُرُّ عَلى الدِيارِ دِيارِ لَيلى
நான் லைலாவின் வீட்டை கடக்கின்றேன்...
أُقَبِّلَ ذا الجِدارَ وَذا الجِدارا
அவளின் சுவற்றை முத்தமிடுகின்றேன்...
وَما حُبُّ الدِيارِ شَغَفنَ قَلبي
எனது உள்ளத்தை வீட்டின் காதல் நிறப்பவில்லை...
وَلَكِن حُبُّ مَن سَكَنَ الدِيارا
வீட்டில் வசிப்பவளின் காதலே எனது உள்ளத்தை நிறப்பும்.
அல்லாஹுத்தஆலா கஃபா ஆலயத்தை தன் இல்லம் என்கிறான்.
காலம்,நேரம்,இடம் இவற்றிக்கெல்லாம் அப்பாற்பட்டவனாக இருக்கின்ற அல்லாஹுவே உலகின் குறிப்பிட்ட ஓர் பகுதியை தனது இல்லம் என்கிறான் என்றால் அவனை அளவுகடந்து நேசிக்கும் அடியார்கள் அங்கு பயணம் மேற்கொள்வதை வாழ்வின் இலட்சியமாக ஆக்கிக்கொள்வது இறைகாதலின் வெளிப்பாடாகும்.
ஹாஜிகள் மேற்க்கொள்ளும் பயணம் இறைஇல்லம் என்பதால் தங்களின் நிய்யத்தை சரி செய்துக்கொள்வது அவசியமாகும்.இறைவனுக்காக அன்றி வேறெந்த எண்ணமும் நம் ஹஜ்ஜை பாழாக்கிவிடும்.
ஹாஜி என்கிற பட்டமோ,ஹஜ்ஜு செய்வதை பிறருக்கு காட்டும் எண்ணமோ வேறெந்த தவறான நிய்யத்தும் இல்லாமல்,கஃபா இறையில்லம் அதனை தரிசிப்பது தனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்ற எண்ணத்தோடு பயணப்பட வேண்டும்.
ஹஜ் பயணம் ஏனயப்பயணங்களைப் எல்லாவற்றையும் விட்டுவிட்டு செல்வதாகும்.சொந்த நாடு,பிறந்த ஊர்,சொத்து சுகங்கள்,சொந்த பந்தங்கள் அனைத்தையும் துறந்த பயணம்.
இது இறைப்பொருத்தத்தை நாடி செல்லும் இலட்சிய பயணம் என்பதால் உரிமைகள் حقوق சம்பந்தமான அனைத்தையும் நிறைவேற்றிவிட்டு செல்லவேண்டும்.
நம்மை அண்டி வாழ்பவர்களுக்கான வாழ்வாதாரங்களை ஹஜ் சென்று திரும்ப வரும் வரை ஏற்பாடு செய்துவிட்டு செல்வதும்.யாருக்கேனும் கடன்ப்பட்டிருந்தால் அதனை நிறைவேற்றி விட்டு செல்வதும், அமானிதங்களை ஒப்படைத்து விட்டு செல்வதும், யாருக்கேனும் அனீதம் இழைத்திருந்தால் அதனை நிவர்த்தி செய்து மன்னிப்புக்கேட்டு விட்டு செல்வதும்,சுருக்கமாக அல்லாஹ்விற்கும்,அடியார்களுக்கும் செய்யும் கடமைகளிலிருந்து முழுமையாக தம்மை பரிசுத்தமாக்கி தவ்பா செய்து விட்டு செல்வதும் அவசியமாகும்.
ஹாஜியின் பயணம் என்பது திரும்ப வர முடியாது மறுமையின் பயணத்தைப்போன்றது எனவே பயணத்தின் தயாரிப்பில் தட்டுப்பாடு ஏற்பாடாத வாரு பயணசாமான்களை தயாரித்து வைத்திருக்வேண்டும்.
பயணத்தயாரிப்புகளில் சிறந்தது تقویٰ "இறையச்சம்"என்கிறான் இறைவன்.எனவே மறுமை சிந்தனையோடு تقویٰ இறைச்சத்தை உள்ளத்தில் ஏந்தி ஹஜ்ஜின் அமல்களில் ஆர்வம் கொள்ளவேண்டு.
وَتَزَوَّدُوْا فَاِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوٰى وَاتَّقُوْنِ يٰٓاُولِى الْاَلْبَابِ
மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.(அல்குர்ஆன் : 2:197)
ஹாஜி ஹஜ்ஜுக்காக தம் குடும்பம்,சொத்து,சொந்த பந்தங்களை பிரிந்து செல்லும் போது ஹஜ்ஜிக்காக எல்லா வகையிலும் வாய்ப்பளித்த அல்லாஹ்விற்கு شکر நன்றி செலுத்திய வண்ணம் செல்வது.
ஹஜ்ஜில் பயணமாகும் தம் மரணமும்,மறுமைக்கான பயணமும் வெகுதூரமில்லை என்கிற எண்ணம் எழ வேண்டும்.
இஹ்ராம் எனும் வெண்ணிற அங்கி அணியும் போது மரணத்தில் போர்த்தப்படுகிற கஃபன் துணியை நினைத்து பார்க்க வேண்டும்.
இப்புனித பயணம் உலகில் மற்ற பயணங்களைப் போன்றதல்ல இது இறைவனுக்காக வேண்டி இறையில்லத்தை நோக்கிய பயணம்.
எனவே என்னோடு அல்லாஹ் இருக்கின்றான்.எனக்கு உதவுபவனும்,என்னோடு பயணிப்பவனும்,எனக்கு வழிக்காட்டுபவனும் என் அல்லாஹ் என்கிற எண்ணத்தோடு ஹஜ் செய்யும் ஹாஜி வழியில் மரணித்தாலும் இறைவப்பாதையில் ஹாஜியாகவே மரணிக்கின்றார்.
وَمَنْ يُّهَاجِرْ فِىْ سَبِيْلِ اللّٰهِ يَجِدْ فِى الْاَرْضِ مُرٰغَمًا كَثِيْرًا وَّسَعَةً وَمَنْ يَّخْرُجْ مِنْ بَيْتِهٖ مُهَاجِرًا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ ثُمَّ يُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ اَجْرُهٗ عَلَى اللّٰهِ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا
இன்னும் எவர் அல்லாஹ்வின் பாதையில் நாடு கடந்து செல்கின்றாரோ, அவர் பூமியில் ஏராளமான புகலிடங்களையும், விசாலமான வசதிகளையும் காண்பார்; இன்னும், தம் வீட்டைவிட்டு வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதர் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டு விடுமானால் அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது - மேலும் அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், பேரன்பு மிக்கோனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 4:100)
ஹாஜி میقات மீகாத் எனும் எல்லையில் நிய்யத் செய்யும் போது உடலை விட்டு உயிர்பிரிந்து கப்ரின் தனிமை,மலக்குககளின் கேள்விக்கணைகள் இவற்றை கடந்து மறுமைநாளின் میقات எல்லையை கடப்பது நினைவில் வரவேண்டும்.
ஹாஜி میقات மீகாதில் لبیک லெப்பைக் கூறும் போது இறையச்சத்தோடும் ஆதரவோடும் இதோ!வந்துவிட்டேன் என கூறவேண்டும்.
லெப்பைக் கூறும் போது நாளை மறுமையில் எழுப்பப்படும் போது எனது نامۂ اعمال அஃமால் நாமா பட்டோலை வலது கரத்தில் கொடுக்கப்படுமா?நான் நல்லோர்களின் அணியில் சேர்க்கப்படுவேனா?என்கிற சிந்தனையில் கூறவேண்டும்.
ஹாஜி ஹரமில் நுழைந்ததுமே அல்லாஹுவின் பாதுகாப்பில் வந்துவிடுகின்றார்.எனவே ஹாஜி அல்லாஹுவின் கோபம் மற்றும் நரக நெருப்பை விட்டும் அல்லாஹ் பாதூகாப்பான் என்ற நம்பிக்கையில் ஹரமில் கஃபா மற்றும் இறையடையாளச்சின்னங்களை கண்ணியப்படுத்தவேண்டும்.
ஹாஜி கஃபாவை கண்டதும் இது சாதாரண இல்லமல்ல இது ரப்பின் இல்லம்,என்கிற உணர்வோடு ஆர்வமாகவும்,இப்பாக்கியத்தை வழங்கிய அல்லாஹுவிற்கு شکر நன்றி செலுத்தியவாரும்,கஃபாவை காணுவதை போல நாளை மறுமையில்
اِلٰى رَبِّهَا نَاظِرَةٌ
தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும்.
(அல்குர்ஆன் : 75:23)
தம் இறைவனை காணுவோம் என்கிற எண்ணம் வரவேண்டும்.
தவாஃப் செய்யும் போது இறையில்லத்தை மாத்திரம் அல்ல இது அகிலத்தின் மையப்பகுதி இதனை எல்லா படைப்பினங்களும்,மறுமையில் அர்ஷை மலக்குகளும் தவாஃப் செய்கிறார்கள் என்கிற எண்ணம் வரவேண்டும்.
ஹஜ்ஜுருல் அஸ்வத்தை முத்தமிடும் அல்லாஹ்வின் கரத்தை முத்தமிட்டு بیعت சத்தியப்பிரமாணம் செய்வதாக எண்ணவேண்டும்.ஹஜ்ஜுருல் அஸ்வத்தை பார்த்து அண்ணல் நபி அவர்கள் கூறினார்கள்;
அல்லாஹ்வின் வலது கரம் பூமியில் உள்ளது.மனிதன் தனது சகோதரனை முஸாஃபஹா செய்வதைப்போல அல்லாஹ் தனது அடியார்களுக்கு முஸாஃபஹா செய்கிறன்.(مسلم)۔
கஃபாவின் திறையை பிடிப்பது அல்லாஹ்வின் ஆடையை பிடித்து மன்றாடுவதை போல அங்கியை பிடித்து கேட்கும் போது மனிதனே மனம் இரங்கி தருவதைப்போல அல்லாஹ் ஹாஜியின் பாவங்களை மன்னிக்கிறான்.
ஹாஜி ஸஃபா,மர்வாவில் தொங்கோட்டம் ஓடும் போது ஒரு ஏழை,இயலாதவன் அரசவையில் அரசனின் கருணைப்பார்வை தம் மீது பட்டுவிடாதா என்கிற எண்ணத்தில் ஓடவேண்டும்.
அரஃபா பெருவெளியில் மஹ்ஷரின் நினைவு வரவேண்டும்,அங்கு பல்வேறு நாட்டினர்,பலநிறத்தவர்,பலமொழி பேசுவோர் ஒன்று கூடுவதைப்போல ஹாஜிகள் அரஃபா பெருளியில் இறைவனின் அருள் வேண்டி துஆ செய்யவேண்டும்.அரஃபா அல்லாஹுவின் رحمتِ அருள் இறங்கும் இடமாகும்.
ஜம்ரா ஷைத்தானுக்கு கல்லெறியும் போது மனோ இச்சை,அறிவு இவற்றிக்கு இடமளிக்காமல் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று நடப்பேன் என்று உறுதிக்கொள்வது.
குர்பானி கொடுப்பதும் இறைக்கட்டளையை ஏற்று வழிப்படுவதாகும். குர்பானியின் ஒவ்வொரு பொருளுக்கும் பகரமாக அல்லாஹ் நரக நெருப்பை விட்டும் விடுதலை அளிக்கின்றான்.ஹஜ்ஜின் ஓவ்வொர் எட்டும் மறுமையின் எட்டை நினைவுப்படுத்துக்கின்றன.
எனவே ஹஜ்ஜை சிறந்த முறையில் மேற்கொள்பவர் நாளை மறுமையில் அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்று அளப்பெரும் அந்தஸ்த்தை பெறுவார்.
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்.
இஸ்லாம் ஒரு நிறைவான, முழுமையான மார்க்கம். இது ஏதோ பூமிக்கு கீழே உள்ளதைப்பற்றியும், வானத் திற்கு மேலே உள்ளதைப்பற்றியும் மட்டுமே பேசக் கூடிய மார்க்கம் என்று இஸ்லாமியர்களில் பலர் தவறாக நினைக் கின்றார்கள். மாறாக நமது வாழ்க்கை முறையைப்பற்றி வேறெந்த மார்க்கமோ, மதமோ, சொல்லாத அளவிற்கு முழுமையான முறையில் கற்றுத்தரக்கூடிய மார்க்கம். இஸ்லாம் இதைப்பற்றி பேசவில்லை, இந்த விஷயத்திற்கு இஸ்லாத்தில் தீர்வு இல்லை என்று எவரும் வாய் திறக்க முடியாத வகையில் எல்லாவற்றையும் விரி வாக பேசுகிறது. இப்படி ஒரு மார்க்கத்தை வாழ்க்கை நெறியாக பெற்றதற்கே நாம் இறைவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.
மனிதர்களின் வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கின்ற பயணம் பற்றியும் இஸ்லாமிய மார்க்கத்தில் வழிகாட்டுதல் இருக்கின்றது. பயணம் மேற்கொள்ளும்போது யாவரும் பேண வேண்டிய ஒழுக்கங்களை கற்றுத் தருகின்றது. அதில் நாம் மேற்கொள்ளும் சிரமங்களை உணர்ந்து, அதை நீக்குவதற்காக இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் சலுகைகளையும் வழங்கு கின்றது. பயணிகள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்களை இங்கே தருகிறோம். அவைகளை அறிவதின் மூலம் வீணான சிரமங்களை தவிர்த்து, பயணத்தை நன்மையானதாக மாற்றலாம்.
பயணிகளின் துஆ.
عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ
ثَلاَثُ دَعَوَاتٍ مُسْتَجَابَاتٌ لاَ شَكَّ فِيهِنَّ دَعْوَةُ الْوَالِدِ وَدَعْوَةُ الْمُسَافِرِ وَدَعْوَةُ الْمَظْلُومِ
அபூஹூரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: மூன்று துஆக்கள் சந்தேகமின்றி பதிலளிக்கப்படும்.
1. பெற்றோருக்காக பிள்ளைகள் செய்யும் துஆ.
2. பயணியின் துஆ.
3. அநீதி இழைக்கப் பட்டவனின் பிரார்த்தனை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பயணியின் உணவு ஹராமாக இருந்தால்?
அபூஹுரைரா (ரலிலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மக்களே! அல்லாஹ் தூய வன். தூய்மையானதையே அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறை நம்பிக்கையாளர் களுக்கும் கட்டளையிட்டுள்ளான்” என்று கூறிவிட்டு(ப் பின்வரும் இரு வசனங்களை) ஓதிக்காட்டினார்கள்.
يٰٓاَ يُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا کُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَاشْكُرُوْا لِلّٰهِ اِنْ کُنْتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ
“நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வைத்தான் வணங்குகிறீர்கள் என்றால், அவனுக்கு நன்றி பாராட்டுங்கள்”(அல்குர்ஆன் 2:172)
பிறகு ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள் :
“அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற் கொள் கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி என் இறைவா!, என் இறைவா!’ என்று பிரார்த்திக்கிறார். ஆனால், அவர் உண்ணும் உணவு தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அணியும் உடை தடை செய் யப்பட்டதாக இருக்கிறது; தடை செய்யப்பட்ட உணவையே அவர் உட் கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?” என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம்-1844)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த செய்தியில் யாருடைய துஆ ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை விவரிக்கின்றார்கள். அதை சாதாரணமாக ஹராமில் உழல்பவனின் துஆ ஏற்கப்படாது என்று கூறினாலே போதுமானது. ஆனால் ஒரு பயணியின் துஆவைக் குறிப்பிட்டு அவன் ஹராமில் ஈடுபடு கிறான் என்பதினால் அவனது பிரார்த்தனை நிராகரிக்கப்படும் என்று கூறுவதி லிருந்து பயணிகளின் துஆ, இறைவனின் நெருக்கத்தை பெறுகிற, இறைக் கவனத்தை பெரிதும் ஈர்க்கிறது என்பதை சந்தேகமற அறியலாம்.
பயணம் ஓர் வேதனை.
பயணத்தில் இருப்பவர்கள் மார்க்க விஷயங்களில் பல்வேறு சலுகைகளை பெறுவதற்கு காரணம், பயணம் செய்வது என்பது வேதனை தரக்கூடிய விஷயம் என்று இஸ்லாம் குறிப்பிடுகின்றது. இஸ்லாம் கூறும் இந்த கருத் தினை நாம் யாரும் யோசித்து ஏற்க வேண்டியதில்லை. பயணம் செய்யும் அனைவரும் உணர்ந்தே வைத்திருக்கின்றோம். ஏனெனில் நாம் வீட்டில் சுகமாக உருண்டு, புரண்டு உறங்குவதைப்போல பயணத்தின்போது உறங்க முடியாது. அதிலும் இந்த காலத்தில் இரவு பகல் பாராமல் ஏதாவது சினிமாவையோ பாடைலையோ பேருந்தில் ஓடவிடுகிறார் கள். இந்த லட்சணத்தில் தூக்கம் எங்கிருந்து வரும்? அதிலும் இடம் கிடைக் காமல் நின்று கொண்டே பயணம் செய்ய நேர்ந்தால்… குடிகாரனிடமிருந்து வரும் மதுவின் வாடை மூக்கை துளைக்க… மற்றவர்கள் நம்மை இடிக்க… அதற்கிடையில் ஒருவர் நமது காலை அவரது பூட்ஸ் காலால் மிதிக்க… கூட்ட நெரிசலில் இடம் மாறி இறங்கி விட… இதுபோன்று நாம் பயணத்தின்போது படும் வேதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம். எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்…
السَّفَرُ قِطْعَةٌ مِنَ الْعَذَابِ يَمْنَعُ أَحَدَكُمْ طَعَامَهُ وَشَرَابَهُ وَنَوْمَهُ فَإِذَا قَضَى نَهْمَتَهُ فَلْيُعَجِّلْ إِلَى أَهْلِهِ
பயணம் வேதனையில் ஒரு பகுதியாகும். அது ஒருவரது உணவை யும், பாணத்தையும், உறக்கத்தையும் தடுத்து விடுகிறது. எனவே ஒருவர் தம் தேவையை முடித்ததும் விரைந்து தம் குடும்பத்தாரிடம் செல்லட்டும்.
(அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி-1804 )
பயணம் என்பது எந்தளவிற்கு வேதனையானது என்பதை நபிகளாரின் மேற்கண்ட பொன்மொழியை சிந்தித்துப் பார்த்தால் நன்கு விளங்கும். எனவே தான் குறிப்பிட்ட காரியம் முடிந்தவுடன் தாமதிக்காமல் திரும்ப வேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவுறுத்துகின்றார்கள்.
பயணிக்கு கிடைத்த சலுகை.
பயணத்தில் இருப்பவர்களுக்கு இறைவன் பலவிதமான சலுகைகளை வழங்குகின்றான். அதில் ஒன்றுதான்.
இறைவனுக்கு மிகவும் விருப்பமான, இஸ்லாத்தின் தூண் என்று போற்றப் படும் வணக்கமான தொழுகையில் கூட நமக்காக இறைவன் சலுகை வழங்கி யிருக்கின்றான். இதை பின்வரும் ஹதீஸ்கள் விளக்குகின்றன.
1615 – حَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ كِلاَهُمَا عَنْ غُنْدَرٍ – قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ غُنْدَرٌ – عَنْ شُعْبَةَ عَنْ يَحْيَى بْنِ يَزِيدَ الْهُنَائِىِّ قَالَ
سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنْ قَصْرِ الصَّلاَةِ فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِذَا خَرَجَ مَسِيرَةَ ثَلاَثَةِ أَمْيَالٍ أَوْ ثَلاَثَةِ فَرَاسِخَ – شُعْبَةُ الشَّاكُّ – صَلَّى رَكْعَتَيْنِ.
யஹ்யா பின் யஸீத் அல்ஹுனாயீ அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் தொழுகையைச் சுருக்கித் தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று மைல்’ அல்லது மூன்று ஃபர்ஸக்’ தொலைதூரத்திற்குப் பயணம் புறப்பட்டால் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாகவே தொழுதார்கள்” என்று பதில ளித்தார்கள். (நூல்: முஸ்லிம்-1230)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை சுருக்கித் தொழுவதற்கான அளவாக மூன்று மைல் என குறிப்பிட்டார்களா? அல்லது மூன்று பர்ஸக் என்று குறிப்பிட்டார்களா? என அறிவிப்பாளர் சந்தேகம் கொள்கிறார். ஒரு பேணுதலுக்காக இமாம்கள் 77 கிலோ மீட்டர் கடந்தால் லுஹர், அஸர், இஷா ஆகிய தொழுகை களை 4 ரக்அத்களுக்கு பதிலாக 2 ரக்அத்களாக சுருக்கி கஸராக தொழவேண்டும்.
பெண்கள் தனியாக பயணிப்பது.
பெண்கள் சிறிய பயணமாக இருந்தாலும் சரி, தொலைதூர பயணம் மேற்கொள்வதாக இருந்தாலும் சரி, அவர்கள் தனியே செல்லக்கூடாது என்று இஸ்லாம் அவர்களுக்கு கட்டளையிடுகின்றது. தனது கணவனுடனோ அல்லது திருமணம் முடிக்க தடை செய்யப்பட்ட (அண்ணன், தம்பி, மகன் போன்ற) ஆண் உறவினர்களுடனோ தான் பயணம் செய்ய வேண்டும். இதுவே அவர்களுக்கு பாதுகாப்பான பயணமாக அமையும்.
அல்லாஹ் ஹஜ் செய்யும் ஹாஜிகளின் பயணத்தை லேசாக்கி, அவர்களின் ஹஜ்ஜை மப்ரூரான ஹஜ்ஜாக ஆக்குவானாக! ஆமின்...