Thursday, 11 May 2023

ஜும்ஆ பயான் 12/05/2023.

இஸ்லாம் தீவிர வாதத்தை போதிக்கின்றதா?

இஸ்லாம் தீவிரவாத்தை போதிக்கின்றது என்றும் அதற்காக லவ் ஜிஹாத் என்ற பெயரில் கட்டாய மதமாற்றம் செய்து பெண்களை அதற்கு கருவிகளாக பயன்படுத்துகிறது என்றும் தற்போது இஸ்லாத்தின் மீது புதிய வகையான ஒரு குற்றச்சாட்டை சுமத்துகின்றனர். இஸ்லாம் எந்த காலத்திலும் தீவரவாதத்தை ஆதரித்ததல்ல.இஸ்லாம் என்றாலே அமைதி, நிம்மதி, சாந்தி , சமாதானம் என்று தான் பொருள். 

இஸ்லாம் அது தோன்றிய காலம் தொட்டு இதுவரையிலும் செய்த போர்கள் அத்தனையுமே தற்காப்பு போர்கள் தானே தவிர, தானாக முன்னெடுத்து செய்த போர்கள் அல்ல. இதை சிந்தித்தாலே இஸ்லாம் எந்தளவு தீவிரவாதத்தை எதிர்கின்றது என்பது புரிய வரும்.

சஹாபாக்கள் தங்கள் காலங்களில் செய்த போர்கள் அனைத்தும் தற்காப்பு போர்களே! ஏனெனில் ஒருவன் தன்னை தாக்க வருகிறான் எனில் குனிந்து முதுகை காட்டுவது அழகல்ல. மாறாக எதிர்த்து போராட வேண்டும். உயிரே போனாலும் அதற்கும் தயாராக இருக்கவேண்டும். கோழையாக 100 வருடங்கள் வாழ்வதை விட சிங்கமாக கர்ஜித்து 2 வருடம் வாழ்வதே மேல்.இதை அனைத்து மதங்களும் சொல்லத்தான் செய்கிறது.செய்யத்தான் செய்கிறது. இஸ்லாம் மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல.

எங்காவது ஒரு ஆட்சியாளன் மக்களின் மீது தனது ஆதிக்க கொடுமைகளை கட்டவிழ்த்து விடுகிறான் என்றால், அந்த பகுதி மக்கள் அவனால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அந்த ஆட்சியாளருடன் போர் புரிந்து மக்களுக்கு விடுதலை வாங்கி தருவார்கள். இதை தீவிரவாதம் என்று சொல்வதா? மனிதாபிமானம் என்று சொல்வதா?

உண்மையில் தீவிரவாதத்தால் தான் இஸ்லாம் வளர்கின்றது என்றால், எந்த போரிலாவது யுத்த கைதிகளை கலிமா கூறும்படி வற்புறுத்திய வரலாறு உண்டா?

இஸ்லாம் வாளால் பரப்பட்ட மார்க்கமாக இருந்திருந்தால், தீவிரவாதத்தால் வளர்ந்த மார்க்கமாக இருந்திருந்தால் ஹிஜ்ரி 8-ல் மக்கா நகரம் வெற்றிக் கொண்ட போதே, தன் முழு ஆதிக்க சக்தியால் அனைவரையும் முஸ்லிம்களாக மாற்றியிருக்க முடியும், மாறாக அனைவருக்கும்  பொது மன்னிப்பு வழங்கி அவரவர் விரும்பிய மதத்திலேயே அவர்களை வாழவைத்தது. நினைத்திருந்தால் அனைவரையும் நிர்பந்த படுத்தி முஸ்லிம்களாக மாற்றியிருக்கலாம். ஆனால் இஸ்லாம் அப்படி ஒரு மனிதரை அவர் விருப்பமின்றி மதம் மாற்றம் செய்வதை தடுக்கிறது.

لَا إِكْرَاهَ فِي الدِّينِ ۖ قَدْ تَبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ ۚ فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ لَا انْفِصَامَ لَهَا ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன் 2- 256)

மேலும் இந்த இந்திய திரு நாட்டை முகலாயர்கள் 800 வருடம் ஆட்சி செய்தனர். அவர்கள் நினைத்திருந்தால் இந்தியர்கள் அனைவரையும்  இஸ்லாமியர்களாக மாற்றியிருப்பார்கள். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. காரணம் நிர்பந்தப்படுத்தி ஒருவரை மாற்றுவதை இஸ்லாம் ஒருபோதும் விரும்பவில்லை.

தீவிரவாதம் என்றால் தான் கொண்ட கொள்கையில் தீவிரமாக இருப்பது. இது தவறில்லை. ஆனால் அதை பிறர் மீது திணிக்கும் செயல்தான் தவறு. அது பயங்கரவாதம். இந்த பயங்கரவாதத்தை இஸ்லாம் தடுக்கிறது.

وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يُقَاتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوا ۚ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ

உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்;. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.(அல்குர்ஆன் 2- 190)

இவ்வசனத்தில் அல்லாஹ் தீவரவாதத்திற்கு அடிப்படையாக உள்ள வரம்பு மீறுவதை கண்டிக்கிறான். தான் விரும்புவதில்லை என்கிறான் என்றால் இஸ்லாம் எப்படி தீவிரவாதத்தை போதிக்கும் மார்க்கமாக இருக்க முடியும்.

மாறாக அவர்கள் உங்களை தாக்கினால் அப்போது தற்காப்புக்காக நீங்கள் அவர்களை தாக்கலாம் என்று தான் சொல்கிறது.

ۖ فَإِنْ قَاتَلُوكُمْ فَاقْتُلُوهُمْ ۗ كَذَٰلِكَ جَزَاءُ الْكَافِرِينَ

 அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.(அல்குர்ஆன் 2- 192)

இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம்.

உலகெங்கும் தற்போது தீவிரவாதம் தலைத்தோங்கியுள்ளது. தீவிரவாத செயல்களால் உலகம் முழுவதிலும் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். இத்தகைய தீவிரவாதச் செயல் மதம், மொழி, இனம், நாடு என்ற பல்வேறு அடிப்படைகளில் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்றாலும் தீவிரவாதம் என்பது இஸ்லாத்தின் மறுபெயராகவே மேற்கத்திய ஊடகங்களால் உலகத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சில இஸ்லாமியப் பெயர்தாங்கிகள் சில இடங்களில் இவ்வாறான காரியங்களில் ஈடுபட்டதை வைத்து ஒட்டுமொத்த இஸ்லாமிய மார்க்கத்திற்குமே தீவிரவாதச் சாயம் பூசிவிட்டது உலக ஊடகத்துறை. தனிமனிதர்களின் செயல்களை ஒட்டுமொத்த மதத்தோடு தொடர்புபடுத்தத் துவங்கினால் எந்த மதமும் தீவிரவாதப் பட்டம் பெறாமல் எஞ்சி இருக்காது.

பெயரளவில் இஸ்லாத்தைக் கடைப்பிடிக்கும் சிலரிடத்தில் இவ்வாறான காரியங்கள் இருக்குமே தவிர இஸ்லாமிய மார்க்கத்தில் தீவிரவாதத்திற்கு அறவே இடமில்லை. இஸ்லாம் அவர்களின் செயல்களை ஆதரிக்கவும் இல்லை. இஸ்லாம் தீவிரவாத்தை போதிக்கும் மார்க்கம்  அல்ல. திருக்குர்ஆன் தீவிரவாதத்தை போதிக்கும் வேதமல்ல. மாறாக, அன்பை ஏவும் மார்க்கம். மனித நேயத்தை போதிக்கும் மார்க்கம்.

ஒருவர் ஒரு உயிரைக் கொன்றால் அவருக்கு ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் கொன்ற பாவம் கிடைக்கும் என்று கூறி, உயிரைக் கொல்லும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று எச்சரிக்கும் மார்க்கம் இஸ்லாம்.

‘‘ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்’’ என்றும், “ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்’’ என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம்.           (அல்குர்ஆன்:5:32.) (சுருக்கம்)

இவ்வாறு, ஒரு உயிரைக் கொல்வதே ஒட்டுமொத்த மனிதர்களையும் கொல்வது போல் என்று சொல்லும் மார்க்கம் தீவிரவாதத்தை ஏவுமா? துணை நிற்குமா? மேலும், மனிதர்களுக்கு நலம் நாடுவதுதான் இஸ்லாமிய மார்க்கத்தின் இலக்கணமே என்பதையும் நபிகளார் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

இவ்வாறு ஒரு மனிதன் பிற மனிதனுக்கு போதிக்கும் அன்பையே பிரதான தத்துவமாகக் கொண்ட மார்க்கமாக இஸ்லாம் இருக்கிறது. இதை முஸ்லிம்களிடத்தில் உலகம் கண்கூடாகக் காண்கிறது. சுனாமி, சென்னைப் பெருவெள்ளம், கஜா புயல் போன்ற எண்ணற்ற இயற்கைப் பேரிடர்களின் போது முஸ்லிம்களின் அன்பும் பாசமும் நிறைந்த அயராத பணி இதற்கெல்லாம் சாட்சிகளாக உலக மக்களின் கண் முன்னால் நிற்கிறது.

ஆனாலும், எத்தகைய மாற்றம் வந்தாலும் ஊடகங்கள் ஒரு நொடிப் பொழுதில் பொய் பிரச்சாரங்களின் வாயிலாகத் தவிடுபொடியாக்கி, இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என மக்களை ஏமாற்றிவிடுகின்றன. இவ்வாறு கூறும் போது, குர்ஆனில் ‘கண்ட இடத்தில் வெட்டுங்கள்’ என்பன போன்ற வன்முறையை ஆதரிக்கும் கருத்துக்கள் இருக்கத் தானே செய்கின்றன என்ற கேள்விகளை எழுப்புகின்றனர்.

அவை அனைத்துமே ஒரு நாட்டில் இஸ்லாமிய ஆட்சி இருந்து, அந்த நாட்டுக்கும் வேறொரு நாட்டுக்கும் போர் நடக்கும் போது கடைபிடிக்க வேண்டிய அம்சமாகும். இஸ்லாமிய நாடு மட்டுமல்ல. எந்த நாடாயினும் தனது எல்லையைப் பாதுகாக்கும் போர் செய்யும் போது எதிர்த்து வருபவர்களைக் கொல்வதுதான் உலக வழக்கம். கைகட்டி வேடிக்கை பார்ப்பது இல்லை.

அதுதான் அங்கு சொல்லப்பட்டுள்ளதே தவிர இஸ்லாத்தைப் பரப்ப போர் செய்யுங்கள் என்றோ, அப்பாவிகளைக் கொல்லுங்கள் என்றோ திருக்குர்ஆன் போதிக்கவில்லை. மேற்படி சொன்னது போல் நாடுகளுக்கிடையே போர் புரிவதற்குக் கூட இஸ்லாம் சில நெறிமுறைகளை சொல்லித் தருகிறது. அவற்றையும் பார்ப்போம்.

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே உரிமை.

திருக்குர்ஆனில் உள்ள பல கட்டளைகள், அனைத்து முஸ்லிம்களுக்கும் உரியது என்றாலும் ஆட்சியாளர்கள் மீதும், அரசுகள் மீதும் மட்டும் சுமத்தப்பட்ட கட்டளைகளும் உள்ளன. அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட கடமைகளைத் தனி நபர்கள் செயல்படுத்தக் கூடாது.

திருடினால் கையை வெட்டுதல், விபச்சாரத்துக்கு நூறு கசையடி வழங்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பன போன்ற சட்டங்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. இச்சட்டங்களைத் தனிப்பட்ட எந்த முஸ்லிமும், முஸ்லிம் குழுவும் கையில் எடுக்க முடியாது. மாறாக இஸ்லாமிய அரசு தான் இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதுப்போலத்தான் போர் செய்வதென்பது தனிநபர்களின் மீதோ, குழுக்கள் மீதோ கடமையில்லை. அரசாங்கத்தின் மீது மட்டுமே கடமையானதாகும்.

“தாலூத் என்பவரை அல்லாஹ் உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான்’’ என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார். “எங்கள் மீது அவருக்கு எப்படி ஆட்சியதிகாரம் இருக்க முடியும்? அவரை விட ஆட்சிக்கு நாங்களே தகுதியானவர்கள். அவருக்குப் பொருள் வசதியும் வழங்கப்படவில்லை’’  என்று அவர்கள் கூறினர். “உங்களை விட அவரை அல்லாஹ் தேர்வு செய்து விட்டான். அவருக்கு கல்வி மற்றும் உடலை (வலுவை) அதிகமாக வழங்கியிருக்கிறான். தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்’’ என்று அவர் கூறினார்.

“அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டதற்கு அடையாளமாக, உங்களிடம் ஓர் அலங்காரப் பெட்டி வரும். அதில் உங்கள் இறைவனிடமிருந்து (உங்களுக்கு) மன நிறைவு இருக்கும். மூஸாவின் குடும்பத்தாரும், ஹாரூனின் குடும்பத்தாரும் விட்டுச் சென்றவற்றில் எஞ்சியது அதில் இருக்கும். அதை வானவர்கள் சுமந்து வருவார்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அதில் உங்களுக்கு தக்க சான்று உள்ளது’’ என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார்.(அல்குர்ஆன்:2:247, 248.)

எதிரிகளின் உடல்களை சிதைக்கக் கூடாது.

போரிடும் போது எதிரிகளின் மீதுள்ள கோப அலையினால் அவர்களின் உடல்களை கோரப்படுத்தக் கூடாது; சிதைத்துவிடக் கூடாது.

கொள்ளையடிப்பதையும் ஒருவரின் அங்கங்களை (உயிருடன் இருக்கும் போதோ அல்லது இறந்த பிறகோ) சிதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) (நூல்: புகாரி-2474, 5516)

இதுபோன்று இன்னும் பல பாதிப்பில்லா சட்டங்களையும் வழங்கி அப்பாவிகளைக் காத்து, நாட்டை அழிக்க வருபவர்களுக்கு எதிராக மட்டுமே போர் என்ற நெறிகளை இஸ்லாம் சொல்கிறது. இந்த நெறிகள், சட்டங்கள் யாவும் பல நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் போர் நெறிகளை விட பல மடங்கு உயர்ந்தவையாகும். இஸ்லாம் சொல்லும் போர் நெறிகள் மட்டுமே  மனித உரிமை மீறல் இல்லாத நீதமான போர் நெறியாகும்.

இவ்வாறு போரில் கூட மனித உரிமை மீறலைத் தடுக்கும் மார்க்கம் தீவிரவாதத்தை ஏவுமா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இஸ்லாமியர்களை தீவிரவாதியாகவும் குர்ஆன் தவறான வேதமாகவும் சித்தரித்து திரை ப்படம் எடுக்கப் படுகிறது.தற்போது வெளியான தி கேரளா ஸ்டோரியும் அவ்வாரே அமைந்துள்ளது .மறுபக்கம் மதமாற்றம் தடை சட்டத்தின் முன்னோட்டம் தான் இத்திரைப்படமோ என்றெல்லாம் எண்ணத்தோன்றுகிறது.

இஸ்லாத்தின் வளர்ச்சியே காரணம்.

ஏன் மீண்டும் மீண்டும் முஸ்லிம் சமூகத்தின் மீதே தாக்குதல் நடத்துகிறார்கள் என்றால்... 

நாளுக்கு நாள் இஸ்லாம் அசுர வேகத்தில் வளர்ந்து வருவதை நம்மை விட எதிரிகள் அதிகம் அறிந்து வைத்திருக்கிறார்கள். இவ்வளர்ச்சியை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் தான் இது போன்ற  திரைப்படங்கள் மூலமாக வன்மத்தை கக்குகிறார்கள்.

அதனால் தான் முஸ்லிம்களை தவறாக சித்தரித்து காட்டிய தி கேரளா ஸ்டோரி படத்தை வெளியிடுவதற்கு அனுமதி கொடுக்கிறார்கள். முஸ்லிம்களின் உண்மை தன்மையை வெளியே கொண்டு வந்த BBC documentary படத்தை தடை செய்கிறார்கள்.

நம் இந்திய தாய் திருநாட்டில் இஸ்லாமியர்களின் நிலை முன்னெப்போதும் இல்லாத அளவு கவலைக்கிடமாக உள்ளது,

முஸ்லிம்கள், இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய சடங்குகளுக்கு எதிராக நாளுக்கு நாள் சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு, நிலைமை மேலும் மேலும் சிக்கலானதாக மாறுகிறது,

திட்டமிட்டு கலவரங்கள் நடத்தப்படுகின்றன. கடைகளும்  வீடுகளும் தீக்கிரையாக்கப்படுகின்றன,கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களை அச்சுறுத்திவரும் ‘புல்டோசர் அரசியல்’, இஸ்லாமியர்கள் வசிக்கும் ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றுவதாகக் கூறி புல்டோசர் மூலமாக வீடுகளும் கடைகளும் இடிக்கப்பட்டன.பசு நேசர்கள் என  மாட்டின் பெயர் கூறி மனித உயிர்கள் அநியாயமாக கொல்லப்படுகின்றன.

பின்னர் படிப்படியாக இவ்வடுக்கள் ஆறுவதற்குள்; இப்போது இஸ்லாத்தின் ஷரியா சட்டங்கள்  மற்றும் அடையாளச் சின்னங்கள்  மீதான தாக்குதல்கள், இஸ்லாமிய ஹிஜாப் மீதான தடை, திறந்த வெளியில் ஜும்ஆ தொழுக தடை மற்றும் ஒலிபெருக்கி மூலம் அதான் எனும் பாங்கு அழைப்பு தடை  இன்னும் இதுபோன்ற பல பிரச்சினைகளை உண்டாக்கி உளவியல் ரீதியிலான தாக்குதல் தொடுக்கப்படுகின்றன.

இவையெல்லாம் அரசு இயந்திரத்தால் நேரடியாகவோ அல்லது அதன் ஆசிர்வாதத்துடனோ நடத்தப்படுபவை இன்னொரு தளத்திலும் இஸ்லாமியரை தனிமைப்படுத்தும் முயற்சி நடக்கிறது இது பெருமளவில் சினிமாக்கள்,சமூக ஊடகங்கள் வழியாக நடக்கிறது.இங்கே பரப்பப்படும் பொய்களுக்கு ஆதாரங்கள் தேவையில்லை.இஸ்லாமியரை குறித்து அச்ச உணர்வும்,வெறுப்பும் விதைக்கப்படுகின்றன.

ஹிந்தி சினிமாக்கள் தொடங்கி தமிழ் சினிமா வரை இதற்கு எதுவும் விதிவிலக்கல்ல."விஸ்வரூபம் " "துப்பாக்கி" "எஃப்,ஐ,ஆர்" "பீஸ்ட்"இது போன்ற படங்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கின்றன.என்றால் இப்பொழுது வரும் படங்கள் "ஆவணப்படம்" "உண்மை சம்பவம்"எனக்குக்கூறி இஸ்லாத்தையும்,இஸ்லாமியர்களையும் நேரடியாகவே தாக்கி சினிமாக்கள் தயாரிக்கப்படுகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீர் பண்டிட்களைப் பற்றிய "The Kashmir file" "தி கஷ்மீர் ஃபைல்" என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் திரையிடப்பட்டது; இதன் நோக்கம் முஸ்லிமல்லாதவர்களின் உள்ளங்களில் முஸ்லிம்கள் மீது வெறுப்பை உண்டாக்கி அவர்களைத் தூண்டிவிட்டு பழிவாங்கத் தூண்டுவதாகும்.

இப்போது ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டிரைலரில் பல்வேறு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதோடு, 32,000 பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறி ஐ.எஸ். அமைப்பில் இணைந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது, பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

இந்தப் படம் `கேரளாவைச் சேர்ந்த இந்துப் பெண்களை இஸ்லாமியர்களாக மதமாற்றம் செய்து, அவர்களை நாடுகடத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதுபோல' காட்சிப்படுத்தப்பட்டிருந்ததால், படத்தின் டீசர் வெளியானபோதே கடுமையாக எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக, `உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கதை என்ற பெயரில், எவ்வித ஆதாரமும் இல்லாமல் 32,000 இந்துப் பெண்களை மதமாற்றம் செய்து, தீவிரவாத இயக்கத்துக்கு ஆள்சேர்த்ததுபோலவும், எதிர்காலத்தில் கேரள மாநிலமே இஸ்லாமிய மாநிலமாக மாறிவிடும்' என்பது போன்ற முற்றிலும் உண்மைக்குப் புறம்பான சம்பவங்களையும் வசனங்களையும் காட்சியமைத்து, இஸ்லாமிய வெறுப்பைக் கக்கியிருக்கிறது.

தொடர்ந்து "புர்கா" "ஃபர்ஹானா"போன்ற படங்களில் இஸ்லாமிய சட்டங்களையும்,இஸ்லாமியர்களையும் கேலிக்குள்ளாக்கப்படுகின்றது.

தீர்வு என்ன...

இஸ்லாமியர்களின் மீது வன்மத்தை கக்கும்,வெறுப்பை உமிழும் செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

சில அரசியல் தலைவர்கள், நடுநிலையளர்கள் ஊடகங்களில் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது மட்டுமே ஒரே ஆறுதலாக உள்ளது.வெறுமனே இதனை சமூகவலை தளங்களில் பகிர்வது ஒன்றே தீர்வாக ஆகாது.

இச்சந்தர்ப்பங்களில் இஸ்லாமியர்கள் என்ன செய்ய வேண்டும்.இச்சூழ்நிலையில் இஸ்லாமியர்களாகிய நம் பொறுப்பு என்ன என்பதை உணரவேண்டும்.

இதற்கு குர்ஆன் கூறும் ஒரே தீர்வு;இஸ்லாமியர்கள் சமூகமாக சக்திபெறவேண்டும்.

وَاَعِدُّوْا لَهُمْ مَّا اسْتَطَعْتُمْ مِّنْ قُوَّةٍ وَّمِنْ رِّبَاطِ الْخَـيْلِ تُرْهِبُوْنَ بِهٖ عَدُوَّ اللّٰهِ وَعَدُوَّكُمْ وَاٰخَرِيْنَ مِنْ دُوْنِهِمْ‌  لَا تَعْلَمُوْنَهُمُ‌  اَللّٰهُ يَعْلَمُهُمْ‌ وَمَا تُـنْفِقُوْا مِنْ شَىْءٍ فِىْ سَبِيْلِ اللّٰهِ يُوَفَّ اِلَيْكُمْ وَاَنْـتُمْ لَا تُظْلَمُوْنَ‏

அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.(அல்குர்ஆன் : 8:60)

இங்கு قُوَّةٍ என்றால் முஸ்லிம் சமூகத்திற்கு வலு சேர்க்கிற எல்லா காரியங்களிலும் இஸ்லாமியர்கள் வலுப்பெற்றாக வேண்டும். 

கல்வி,பொருளாதாரம் மேம்பாடுகள், அரசியல்,அதிகாரம்,சமூக கூட்டமைப்பு என எதுவெல்லாம் வலுச்சேர்க்குமோ அவற்றில்  மேம்பட்டு இருக்க வேண்டும்.அப்படி பலமான கூட்டமைப்பு சக்தி இல்லை எனில் எடுப்பார் கைப்பிள்ளை போன்று மற்றவர்களுக்கு அடிமைப்பட்டு கிடைக்கின்ற கொடுமையை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர் என குர்ஆனை எச்சரிக்கிறது.

கண்மணி நாயகம் பெருமானார்ﷺஅவர்கள் 100 பேர்கள் கொண்ட ஓர் குழுவை அபிசீனிய நாட்டிற்கு ஹிஜ்ரத் அனுப்பிவைத்ததும்,ஹுதைபியா உடன் படிக்கை,பத்ரு உள்ளிட்ட போர்களை மேற்க்கொண்டதும் இஸ்லாம் அசைக்க முடியாத சக்தியாக உருப்பெற மேற்கொண்ட நடவடிக்கைகளாகும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரத்தில் அதனை தவறும் பட்சத்தில் அதனால் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பு மிகப்பெரியதாக இருக்கும் என்பதற்கு உஹதுப்போர் இந்த உம்மத்திற்கு படிப்பினையாக உள்ளது.

கண்மணி நாயகம் பெருமானார்ﷺஅவர்கள் கலந்து கொண்ட உஹது போரில் ஏற்பட்ட சிறு தவறினால் இந்த உம்மத் முதல் தோல்வியை சந்திக்க நேரிடுகிறது.

நாயகம்ﷺஅவர்கள் எதிரிகளால் தாக்கப்படுகிறார்கள்.1000பேர்களில் வெறும் 16பேர்கள் மட்டுமே நபியோடு இருக்கிறார்கள்.நாயகம்ﷺஅவர்களின் சிறிய தந்தை ஹம்ஸா (ரலி)அவர்கள் உட்பட 70முஸ்லிம்கள் ஷஹிதாக்கப்பட்டனர்.

ஆகவே முன்னெச்சரிக்கை என்பது எப்போதும் அவசியம். அதை உணர்ந்து நம் சமூகம் செயல்ப்பட்டால் இனி எந்த எதிர்ப்புகள் வந்தாலும் எதிர்கொள்ள முடியும்.

அல்லாஹ்த்தஆலா கயவர்களின் சூழ்ச்சிகளை விட்டும் பாதுகாத்து,எல்லா விதத்திலும் சக்திப்பெற்ற சமூகமாக இந்திய இஸ்லாமியர்களை ஆக்கி அருள்ப்புரிவானாக!ஆமீன்...

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

No comments:

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...