Wednesday, 24 May 2023

ஜும்ஆ பயான் 26/05/2023

ஹஜ் எனும் கடமை.

ஹஜ் இஸ்லாத்தின் ஐந்து தூண்களில்  ஒன்றாகும். தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற கடமைகள் போன்றே புனித குர்ஆன், ஹதீஸ்  மற்றும் "இஜ்மாஃ" உம்மத்தின் ஒருமித்த கருத்து ஆகியவற்றால் ஹஜ் கடமை நிரூபிக்கப்பட்டுள்ளது; 

எனவே, எவர் ஹஜ் கடமையை மறுக்கிறாரோ அவர் காஃபிராவார். 

 ‌ وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا ‌ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنِ الْعٰلَمِيْنَ‏

இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 3:97) 

இந்த வசனம் ஹஜ் கடமையைப் பற்றி உறுதிப்படுத்துகிறது.

بُنِیَ الإِسْلاَمُ عَلَی خَمْسٍ: شَھَادَةِ أَنْ لاَ إِلَہَ إِلَّا اللہُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللہِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِیتَاء ِ الزَّکَاةِ، وَالحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ“․(بخاری شریف، حدیث نمبر:۸)

அண்ணலம் பெருமானார்ﷺஅவர்கள் கூறினார்கள்;

ஐந்தின் மீது இஸ்லாம் அமைக்கப்பட்டுள்ளது.

1,வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை மேலும் முஹம்மது நபி ﷺஅவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராக இருக்கிறார்கள்என்று சாட்சி சொல்வது.

2,தொழுகையை நிலை நாட்டுவது.

3,ஜகாத் கொடுப்பது.

4 ,ஹஜ் செய்வது

5,ரமலானில் நோன்பு நோற்பது.

(நூல்;புகாரி)

ஒரு காதல் பயணம்.

ஒரு நபர் தனது தாயகம், குடும்பம், நண்பர்கள், உறவினர்கள், செல்வச்செழிப்பு  இவற்றின் மீது அதிக  பிரியமும், இவை அனைத்தும் எப்போதும்  தனக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று எண்ணுவது  மனித இயல்பாகும். 

ஆனால் ஒரு மனிதன் ஹஜ்ஜுக்குச் செல்லும் போது; அதனால் சொந்த ஊர், மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்களை விட்டுச் சென்று தம் செல்வத்தைச் செலவழிக்க வேண்டும். இவற்றை அல்லாஹுவின் உத்தரவு,இஸ்லாமிய ஷரிஆவின் கடமை என்பதால்  செய்ய வேண்டும். இதனால்தான் இஸ்லாம், மக்களுக்கு ஹஜ் செய்ய அதிக ஆர்வத்தை ஊட்டுகிறது ,

புனித கஅபாவை தரிசிப்பதையும், பெருமானார்ﷺஅவர்கள் பிறந்த,வளர்ந்த,வாழ்ந்த,மறைந்த மண்ணை தரிசிக்க செல்லும் இப்புனித பயணத்தை இறை காதலின் வெளிப்பாடு என இஸ்லாம் வர்ணிக்கிறது.

இஸ்லாத்தில் மிகப்பெரும் கடமையாக உள்ள ஹஜ்ஜை பெரும் நன்மையை பெற்றுத் தரும் இறை காதல் பயணம் என்றும் அதன் அளப்பெரும் நன்மைகளையும் ஹதீஸ்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

سُئِلَ النَّبِیُّ - صَلَّی اللہُ عَلَیْہِ وَسَلَّمَ- أَیُّ الأَعْمَالِ أَفْضَلُ؟ قَالَ: ”إِیمَانٌ بِاللہِ وَرَسُولِہِ“ قِیلَ: ثُمَّ مَاذَا؟ قَالَ: ”جِھَادٌ فِی سَبِیلِ اللہِ“ قِیلَ: ثُمَّ مَاذَا؟ قَالَ: حَجٌّ مَبْرُورٌ“․(بخاری شریف، حدیث نمبر:۹۱۵۱)

ஹழ்ரத் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: "நபி ﷺஅவர்களிடம் கேட்கப்பட்டது  நற்செயல்களில் சிறந்தது எது?" 

அதற்குநபி ﷺ அவர்கள்  கூறினார்கள்: "அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின் மீதும்  ஈமான் கொள்வதாகும்." 

பிறகு எது என கேட்கப்பட்டது.      அதற்குநபி ﷺ அவர்கள்  கூறினார்கள்:

"அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதாகும்." 

பிறகு எது என கேட்கப்பட்டது...          அதற்கு நபி ﷺ அவர்கள்  கூறினார்கள்:

ஹஜ்ஜே மப்ரூர் (ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்) ஆகும். (நூல்;புகாரி)

ஹஜ் மபரூர் حج مبرور என்றால் என்ன?

$ எந்த பாவமும் நிகழாத ஹஜ்.

$  அல்லாஹுவால் مقبول ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்.

$  தற்பெருமை இல்லாத, பிரபல்யமாகுதல் நோக்கமில்லாத,எந்த பாவமும்,குற்றமும் நிகழாத ஹஜ்.

$  திரும்பிய பிறகு பாவத்தை மீண்டும் செய்யாமல், நன்மை செய்யும் நாட்டத்தை அதிகரிக்கும் ஹஜ்.

$  ஹஜ்ஜுக்குப் பிறகு ஒருவர் உலகில் ஆர்வமற்று, மறுமையில் ஆர்வம் காட்டுகிறாரோ அதுவே ஹஜ் மப்ரூர்.

ஹஜ் மப்ரூரின் சிறப்பு.

”العُمْرَةُ إِلَی العُمْرَةِ کَفَّارَةٌ لِمَا بَیْنَھُمَا، وَالحَجُّ المَبْرُورُ لَیْسَ لَہُ جَزَاء ٌ إِلَّا الجَنَّةُ“․ (بخاری شریف، حدیث:۱۷۷۳، مسلم شریف، حدیث(۱۳۴۹)-۴۳۷)

அபு ஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: இறைத்தூதர்  ﷺஅவர்கள் கூறினார்கள்: "ஒரு உம்ரா அடுத்த உம்ரா வரை அவ்விரண்டிற்கும்  மத்தியில்  உள்ளவற்றிற்கு பாவப்பரிகாரமாகும், மேலும் ஹஜ்ஜே-மப்ரூர் அதற்கு சுவனத்தை தவிர வேறெந்த வெகுமதியும் இல்லை." (நூல்;புகாரி,முஸ்லிம் )

ஹஜ்  முந்தைய பாவங்கள் அனைத்தையும் அழிக்கிறது...

இப்னு ஷிமாஸா (ரஹ்)கூறுகிறார்கள்;ஹழ்ரத் அம்ர் பின் ஆஸ்(ரலி)அவர்களளின் மரணத் தருவாயில்  நாங்கள் அவர்களின் பணிவிடையில் இருந்தோம். 

அன்னார் அவர்கள் நீண்ட நேரம் அழுதார்கள், பின்னர் அவர் தனது முகத்தை சுவரின் பக்கம் திருப்பினார்கள். இது குறித்து அவரது மகனார் சில கேள்விகளை கேட்டார்கள். பின்னர் அன்னார் (அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட  சம்பவத்தை விவரித்தார்கள்) கூறினார்கள்: அல்லாஹ் என் இதயத்தை நம்பிக்கையின் ஒளியால் ஒளிரச் செய்ய விரும்பியபோது; 

 நான் அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்களின் சமூகத்தில் பிரசன்னமாகி கூறினேன்:   நபிﷺஅவர்களே நீங்கள் உங்கள் முபாரக்கான வலது கரத்தை நீட்டுங்கள்;  நான் உங்களிடம் பைஅத் (சத்தியப் பிரமாணம்) செய்துக்கொள்கிறேன். 

நபிﷺஅவர்கள் தம் கரத்தை நீட்டினார்கள் நான்  நபிﷺஅவர்களின் கரத்தை இழுத்தேன்.அதற்கு நபிﷺஅவர்கள்:  அம்ரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள்

நான் சொன்னேன்: எனக்கு ஒரு நிபந்தனை (வேண்டுகோள்)இருக்கிறது.

நபிﷺஅவர்கள் கேட்டார்கள்;

உங்கள் நிபந்தனை என்ன?

நான் சொன்னேன்: எனக்கு பாவமன்னிப்பு கிடைக்க வேண்டும். 

”أَمَا عَلِمْتَ أَنَّ الإِسْلَامَ یَھْدِمُ مَا کَانَ قَبْلَہُ؟ وَأَنَّ الْھِجْرَةَ تَھْدِمُ مَا کَانَ قَبْلَھَا؟ وَأَنَّ الْحَجَّ یَھْدِمُ مَا کَانَ قَبْلَہُ“؟ (مسلم شریف، حدیث: ۱۲۱- ۱۹۲)

அதற்கு நபிﷺஅவர்கள் கூறினார்கள்; உனக்கு தெரியுமா? இஸ்லாம் அதற்கு முன்னுள்ள(பாவங்கள்) அனைத்தையும் அழித்துவிடும். 

ஹிஜ்ரத் அதற்கு முன்னுள்ள(பாவங்கள்) அனைத்தையும் அழித்துவிடும். 

ஹஜ் அதற்கு முன்னுள்ள(பாவங்கள்) அனைத்தையும் அழித்துவிடும். 

”مَنْ حَجَّ لِلہِ فَلَمْ یَرْفُثْ، وَلَمْ یَفْسُقْ، رَجَعَ کَیَوْمِ وَلَدَتْہُ أُمُّہ․“ (بخاری شریف، حدیث نمبر:۱۵۲۱)

அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்கள் கூறியதாக ஹழ்ரத் அபு ஹுரைரா (ரலி)அவர்கள் ஒரு ஹதீஸில் கூறுகிறார்கள்:

“உடலுறவு மற்றும் பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவன் அவனது தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாத பாலகனாக) திரும்புவான்”  (நூல்;புகாரி)

இங்கு رفَث"ரஃபஸ்" என்பது உடலுறவு என்று பொருளாகும், உடலுறவு மற்றும் உடலுறவின் போது கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் கட்டிப்பிடித்தல்,முத்தமிடுதல் போன்ற அனைத்தையும் குறிக்கும். 

அபு உபைதா (ரஹ்)கூறிகிறார்கள்: رفَث"ரஃபஸ்" என்றால் "வாய்மொழி அருவருப்பான பேச்சு,கெட்ட வார்த்தைகள்". 

பின்னர் کنایة ஆக உடலுறவு மற்றும் உடலுறவின் போது கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் கட்டிப்பிடித்தல்,முத்தமிடுதல் போன்றவற்றிக்கு பயன்பப்படுத்துவது புழக்கத்தில் உள்ளது.   (الموسوعہ الفقہیہ الکویتیہ۲۲/۲۷۵)

மஸ்அலா: சட்ட வல்லுநர்களின் கூற்றுப்படி, இஹ்ராம் நிலையில் உடலுறவு தடைசெய்யப்பட்டுள்ளது. 

குர்ஆனில் ...

اَلْحَجُّ اَشْهُرٌ مَّعْلُوْمٰتٌ ‌ فَمَنْ فَرَضَ فِيْهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوْقَۙ وَلَا جِدَالَ فِى الْحَجِّ  وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ يَّعْلَمْهُ اللّٰهُ ‌ؔ وَتَزَوَّدُوْا فَاِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوٰى وَاتَّقُوْنِ يٰٓاُولِى الْاَلْبَابِ‏

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது;  நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.(அல்குர்ஆன் : 2:197)

இஹ்ராம் நிலையில் யாராவது வேண்டுமென்றே உடலுறவில் ஈடுபட்டுவிட்டால்;  அவரது ஹஜ் செல்லாது, களா செய்வதும்,کَفَّارَةٌ எனும் குற்றபரிகாரமும் அவசியமாகும். 

மறதியில் யாராவது உடலுறவு கொண்டால்; 

எனவே, ஹனஃபி, மாலிகி, ஹன்பலி (ரஹிமஹுமுல்லாஹ்)ஆகியோரின் கூற்றுப்படி, இந்த நிலையிலும் கூட, ஹஜ் செல்லாது, களா செய்வதும், کَفَّارَةٌ எனும் குற்றபரிகாரமும் அவசியமாகும்; ஆனால் ஷாஃபிஈ (ரஹ்)அவர்களின் கூற்றுப்படி ஹஜ் முறியாது; மாறாக,, کَفَّارَةٌ எனும் குற்றபரிகாரம் அவசியமாகும்;  (الموسوعہ الفقہیہ الکویتیہ:۲۲/۲۷۶-۲۷۷)

இங்கு ” فِسْق“ "ஃபிஸ்க்" என்பது  பாவத்தைக் குறிக்கிறது. 

மேலும்”کَیَوْمِ وَلَدَتْہُ أُمُّہُ“என்பதன் விளக்கம் அல்லாமா இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி (ரஹ்)அவர்கள்கள் கூறுகிறார்கள்: "எந்த பாவம் என்று குறிப்பாக இல்லாமல் இருப்பாதால் அதன் ظاہریவெளிப்படையான பொருள் சிறிய,பெரிய அனைத்து பாவங்களும்  மன்னிக்கப்படும். "(فتح الباری۳/۳۸۲-۳۸۳)

முதியவர்கள், பலவீனர்கள் மற்றும் பெண்களின் ஜிஹாத்.

”جِھَادُ الْکَبِیرِ وَالضَّعِیفِ وَالْمَرْأَةِ الْحَجُّ وَالْعُمْرَةُ“ (السنن الکبری للنسائی، حدیث:۳۵۹۲، مسند احمد، حدیث:۹۴۵۹، السنن الکبری للبیہقی، حدیث:۸۷۵۹)

ஹழ்ரத் அபு ஹுரைரா (ரலி) அவர்களின் ஓர் அறிவிப்பு, 

நபிகள் நாயகம்  ﷺஅவர்கள் கூறினார்கள்: " முதியவர்கள், பலவீனர்கள் மற்றும் பெண்களின் ஜிஹாத் ஹஜ்ஜி,உம்ரா ஆகும்.

”قُلْتُ یَا رَسُولَ اللہِ! أَلاَ نَغْزُو وَنُجَاھِدُ مَعَکُمْ؟ فَقَالَ: ”لَکِنَّ أَحْسَنَ الجِھَادِ وَأَجْمَلَہُ الحَجُّ، حَجٌّ مَبْرُورٌ“․فَقَالَتْ عَائِشَةُ ”فَلاَ أَدَعُ الحَجَّ بَعْدَ إِذْ سَمِعْتُ ھَذَا مِنْ رَسُولِ اللہِ صَلَّی اللہُ عَلَیْہِ وَسَلَّمَ“․(بخاری شریف، حدیث:۱۸۶۱)

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ்வின் தூதரே! ﷺ.நாங்கள் உங்களோடு போரில்பங்கேற்கமுடியுமா?ஜிஹாத் செய்ய முடியுமா?

அதற்கு நபிﷺஅவர்கள் சொன்னார்கள்;என்றாலும் ஜிஹாதில் சிறந்தது,அழகானது ஹஜ் ஆகும் ஹஜ் மப்ரூர் ஆகும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:ரஸுல்ﷺ.அவர்களிடம் இதனை கேட்டதற்கு பிறகு நான் ஹஜ்ஜை தவறவிட்டதே இல்லை.(நூல்;புகாரி)

ஹஜ் சிறந்த ஜிஹாத்.

”یَا رَسُولَ اللہِ! نَرَی الجِھَادَ أَفْضَلَ العَمَلِ، أَفَلاَ نُجَاھِدُ؟ قَالَ: ”لاَ، لَکِنَّ أَفْضَلَ الجِھَادِ حَجٌّ مَبْرُورٌ“․ (بخاری شریف، حدیث:۱۵۲۰، السنن الکبری للبیہقی، حدیث:۱۷۸۰۵)

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதரேﷺ!ஜிஹாதை சிறந்த அமலாக நாங்கள் கருதுகிறோம்.நாங்களும் ஜிஹாத் செய்ய வேண்டாமா? என்று நான் கேட்டேன்.

அதற்கு நபிﷺஅவர்கள் சொன்னார்கள்;இல்லை,என்றாலும் ஜிஹாதில் சிறந்தது ஹஜ் மப்ரூர் ஆகும்.(நூல்;புகாரி)

ஏழ்மையை விரட்டும், பாவங்களை போக்கும் ஹஜ்.

”أَدِیمُوا الْحَجَّ وَالْعُمْرَةَ، فَإِنَّھُمَا یَنْفِیَانِ الْفَقْرَ وَالذَّنُوبَ کَمَا یَنْفِی الْکِیرُ خَبَثَ الْحَدِیدِ“․ (المعجم الاوسط، حدیث:۳۸۱۴)

ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்

நபிகள் நாயகம்ﷺ அவர்கள் கூறினார்கள்: " ஹஜ்ஜையும்,உம்ராவையும் நிறைவேற்றுங்கள், ஏனென்றால் அவை வறுமையையும்,பாவங்களையும் போக்கும்  உலை இரும்பிலிருந்து துருவை போக்குவதை போல. " 

”تَابِعُوا بَیْنَ الحَجِّ وَالعُمْرَةِ، فَإِنَّھُمَا یَنْفِیَانِ الفَقْرَ وَالذُّنُوبَ کَمَا یَنْفِی الکِیرُ خَبَثَ الحَدِیدِ، وَالذَّھَبِ، وَالفِضَّةِ، وَلَیْسَ لِلْحَجَّةِ المَبْرُورَةِ ثَوَابٌ إِلَّا الجَنَّةُ“․ (ترمذی شریف، حدیث نمبر: ۸۱۰)

அல்லாஹ்வின் தூதர்ﷺ அவர்கள் கூறினார்கள்: "ஹஜ்ஜையும்,உம்ராவையும் தொடர்ந்து செய்யுங்கள் ஏனென்றால் அவை வறுமை மற்றும் பாவங்களை போக்குகின்றன, உலை தங்கம்,வெள்ளி,இரும்பு இவற்றின் துருவை நீக்குவதைப் போல." (நூல்;திர்மிதீ

ஹஜ்ஜுக்காக செலவு செய்தின் சிறப்பு.

”النَّفَقَةُ فِی الْحَجِّ کَالنَّفَقَةِ فِی سَبِیلِ اللہِ بِسَبْعِ مِائَةِ ضِعْفٍ“․ (مسند احمد، حدیث:۲۳۰۰۰، شعب الایمان، حدیث:۳۸۲۹)

அபூ ஜஹீர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம்ﷺ அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்: “ஹஜ்ஜில் செலவு செய்வது அல்லாஹ்வின் பாதையில் எழுநூறு மடங்கு செலவு செய்வதை போன்றதாகும் . . " (முஸ்னத் அஹ்மத்,ஷுஅபுல் ஈமான்) 

ஹாஜிகளின் துஆ.

”الْحَاجُّ وَالْمُعْتَمِرُ وَفْدُ اللہِ تَعَالَی یُعْطِیھِمْ مَسْأَلَتَھُمْ، وَیَسْتَجِیبُ دُعَاء َھُمْ، وَیَقْبَلُ شَفَاعَتَھُمْ، وَیُضَاعِفُ لَھُمْ أَلْفَ أَلْفَ ضِعْفٍ“․ (اخبار مکة للفاکہی، حدیث:۹۰۲)

இப்னு உமர் (ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "ஹாஜியும்,உம்ரா செய்பவரும் அல்லாஹுவின் படையினர்.

அவர்கள் கேட்பது கொடுக்கப்படும்,அவர்களின் துஆ ஒப்புக்கொள்ளப்படும்,அவர்களுக்கு ஆயிரமாயிரம் மடங்கு நன்மை இரட்டிப்பாக்கப்படும்."

”الْغَازِی فِی سَبِیلِ اللہِ، وَالْحَاجُّ وَالْمُعْتَمِرُ وَفْدُ اللہِ، دَعَاھُمْ، فَأَجَابُوہُ، وَسَأَلُوہُ، فَأَعْطَاھُمْ“․ (ابن ماجہ، حدیث:۲۸۹۳)

ஹழ்ரத் இப்னு உமர் (ரலி)அவர்களின் அறிவிப்பு:

நபிகள் நாயகம்ﷺஅவர்கள் கூறினார்கள் "ஹாஜியும்,உம்ரா செய்பவரும் அல்லாஹுவின் படையினர்.

அவர்கள் துஆ செய்தால் அதற்கு நான் பதிலளிக்கிறேன், அவர்கள் கேட்டால் அதனை நான் கொடுக்கிறேன் "       (இப்னு மாஜா) 

ஹஜ்ஜை விரைந்து செய்தல்.

”تَعَجَّلُوا إِلَی الْحَجِّ - یَعْنِی: الْفَرِیضَةَ - فَإِنَّ أَحَدَکُمْ لَا یَدْرِی مَا یَعْرِضُ لَہُ“․ (مسنداحمد، حدیث:۲۸۶۷)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹுவின் தூதர்ﷺஅவர்கள் கூறினார்கள்,  " ஹஜ்ஜுக்கு விரைந்து செல்லுங்கள் - அதாவது, கடமையான ஹஜ் - உங்களுக்கு என்ன வழங்கப்படும் என்பதை உங்களில் ஒருவரும்  அறியமாட்டீர்கள் . " (முஸ்னத் அஹ்மத்) 

ஹஜ் செய்யாதவர்களின் கவனத்திற்கு..

”مَنْ مَلَکَ زَادًا وَرَاحِلَةً تُبَلِّغُہُ إِلَی بَیْتِ اللہِ وَلَمْ یَحُجَّ فَلَا عَلَیْہِ أَنْ یَمُوتَ یَھُودِیًّا، أَوْ نَصْرَانِیًّا، وَذَلِکَ أَنَّ اللہَ یَقُولُ فِی کِتَابِہِ: ”وَلِلہِ عَلَی النَّاسِ حِجُّ البَیْتِ مَنْ اسْتَطَاعَ إِلَیْہِ سَبِیلًا“․ (آل عمران:۹۷) (ترمذی شریف، حدیث نمبر:۸۱۲) 

அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்கள் கூறினார்கள்: 

" எவர் ஹஜ்ஜை நிறைவேற்றத் தேவையான அளவு பொருளைஅல்லது வாகனத்தை பெற்றிருந்தும் ஹஜ்ஜைநிறைவேற்றவில்லையோ அவர் ஒரு யூதனாக அல்லதுகிருஸ்துவனாக மரணிக்கட்டும்.

”لَقَدْ ھَمَمْتُ أَنْ أَبْعَثَ رَجُلًا إِلَی ھَذِہِ الْأَمْصَارِ، فَلْیَنْظُرُوا إِلَی کُلِّ رَجُلٍ ذِی جَدَةٍ لَمْ یَحُجَّ، فَیَضْرِبُوا عَلَیْھِمُ الْجِزْیَةَ، مَا ھُمْ مُسْلِمِینَ، مَا ھُمْ مُسْلِمِینَ“․ (السنة لابی بکر بن الخلال۵/۴۴)

ஹழ்ரத் உமர் இப்னுல்-கத்தாப், (ரலி) கூறினார்கள்: "நான் இந்த ஊர்களுக்கு ஒரு மனிதனை அனுப்ப முடிவு செய்திருக்கிறேன், அவர் ஹஜ்ஜி செய்ய வசதிப்பெற்றும் ஹஜ் செய்யாத நபர்களை கணக்கெடுத்து,அவர்களின் மீது ஜிஸ்யா வரி விதிக்கட்டும்.(ஏனென்றால்)அவர்கள் முஸ்லிம்களே இல்லை,அவர்கள் முஸ்லிம்களே இல்லை.

ஹஜ்ஜின் நன்மைகள்,வெகுமதிகள் குறித்து சொல்லப்பட்டுள்ள பல்வேறு ஹதீஸ்கள்,எந்த ஒரு முஸ்லிமும் ஹஜ்,உம்ரா செய்ய ஆர்வம்க்கொள்வதற்கு போதுமனவையாகும்.

எவர் ஹஜ் செய்ய போதுமான பொருளாதாரமும்,உடல் திடகாத்திரமும் பெற்றிருக்கின்றாறோ அவர் ஹஜ்ஜின் வெகுமதிகளை அறிந்து அதனை இழக்க விரும்பமாட்டார்.

நம் அனைவருக்குமே நன்மைகளை சேர்ப்பதும்,பாவ மன்னிப்பும்  மிக முக்கியத் தேவையாகும்.

இவ்வுலக வாழ்விற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது,வாழும் காலங்கள் அல்லாஹுவின் வெகுமதிகளாகும்,கழிந்தப் பொழுதுகள் திரும்பவருப்போவதில்லை.

பிறகு ஏன்  ஹஜ் செய்ய தாமதிக்க வேண்டும்.

லப்பைக்...

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் புனித கஃபாவை கட்டும் பணியை நிறை செய்த பிறகு அல்லாஹ் அதன் பால் மக்கள் வர அழைப்புக் கொடுக்க சொன்னான். அப்போது இப்ராஹீம் (அலை) எவ்வாறு என் சப்தம் எல்லோருக்கும் கேட்கும் என்றார்கள். உடனே அல்லாஹ் சப்தத்தை சேர்த்து வைப்பது என் வேலை என்று சொல்ல... இப்ராஹீம் (அலை) அழைப்பு கொடுத்தார்கள். அவர் சொன்னதை உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் கேட்டனர். இதையே அல்லாஹ் திருமறையில்....

وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَىٰ كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ

ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்).

ஹஜ்ஜூடைய பயணத்தின் போது நாம் சொல்லும்  "லப்பைக்" என்ற வார்த்தை இப்ராஹீம் (அலை) அவர்கள் அழைத்த அழைப்புக்கு பதில் கொடுப்பது போல் அமைந்துள்ளது.

தக்வா எனும் இறையச்சம் அவசியம்.

ஹஜ் செய்பவர்கள் எல்லா நிலையிலும் இறைவன் தன்னை பார்க்கிறான் என்ற அச்சத்தோடு இருக்க வேண்டும்.

 وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَىٰ ۚ وَاتَّقُونِ يَا أُولِي الْأَلْبَابِ

மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்;. நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.

ஹஜ் செய்வதால் கிடைக்கும் பாக்கியங்கள்...

فِيهِ آيَاتٌ بَيِّنَاتٌ مَقَامُ إِبْرَاهِيمَ ۖ وَمَنْ دَخَلَهُ كَانَ آمِنًا ۗ 
அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது. மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்;. 

1) அல்லாஹ்வை வணங்க ஏற்படுத்திய முதல் ஆலயமான கஃபாவை பார்க்கும் பாக்கியமும், அங்கே தொழுகும் பாக்கியமும், தவாஃப் செய்யும் பாக்கியமும் கிடைக்கிறது.

2) இப்ராஹீம் (அலை) இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் தியாகத்தை நினைத்து பார்க்கும் பாக்கியம் கிடைக்கிறது.

3) பச்சிளம் குழந்தை அழுததால் ஸ்பா , மர்வா விற்கு மத்தியில் ஹாஜரா அம்மையார் ஒடிய தியாகத்தை "சயீ" எனும் அமல் நினைவுப்படுத்துகிறது.

4) பச்சிளம் குழந்தையின் காலின் பரக்கத்தால் கிடைத்த ஜம் ஜம் நீரை தினமும் அருந்தும் பாக்கியம் கிடைக்கிறது.

5) சுவர்க்கத்தின் கல்லான ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடும் பாக்கியம் கிடைக்கிறது.

6) இப்ராஹீம் (அலை) நின்று கட்டிய அவர்கள் காலடி சுவடுகள் பட்ட மகாமே இப்ராஹீம் என்ற இடத்தை பார்க்கும் பாக்கியமும், அங்கே தவாப் முடித்து தொழும் பாக்கியமும் கிடைக்கப்பெறுகிறது.

இன்னும் மக்காவிலும், மதீனாவிலும் எண்ணற்ற அடையாளச் சின்னங்களை பார்க்கும் பாக்கியம் கிடைக்கிறது.

பத்லீ ஹஜ்....

ஒருவருக்கு வசதி ஏற்ப்பட்டு அவரால் முதுமையினாலோ, உடல் நலக்குறைவினாலோ ஹஜ் செய்ய முடியாவிட்டால், அவருக்கு பகரமாக வேறொருவர் பத்லீ ஹஜ் செய்யலாம்.ஆனால் இது நோன்பிலோ, தொழுகையிலோ முடியாது.

இப்னு அப்பாஸ் ரலி அறிவிக்கிறார்கள். ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள்: யா ரசூலல்லாஹ் என் தந்தை வயோதிகம் பெற்று விட்டதால் அவர் வாகனத்தில் கூட அமர முடியாது. எனவே அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா? என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தாராளமாக செய்யலாம் என்றார்கள்.

ஹாஜி என்பது பட்டமா?

ஒருவர் அரபா மைதானத்தில் தன் கடமைகளை நிறை வேற்றும் போது அவரின் ஹஜ் பூர்த்தியாகிறது..

நபி (ஸல்) அவர்கள் ஹஜ் என்றால் என்ன? என்று கேட்கும் போது அரபா தான் ஹஜ் என்றார்கள். ஹஜ் முடித்தவர் அன்று பிறந்த பாலகனை போல் எந்த பாவமும் செய்யாதவர் போல் மாறி விடுகிறார்.

ஹஜ் என்பது மற்ற ஏனைய கடமைகளை போல் ஒரு கடமை. ஆனால் ஹஜ்ஜை இன்று ஒரு பிக்னிக் கைப் போல் மாற்றி விட்டார்கள். ஹஜ்ஜுக்காக புறப்படும் போதும், திரும்பி வரும்போதும் எத்தனை தடல் புடலான ஆடம்பர செலவுகள்,இஸ்ராஃப் வீண் விரயம் செய்கிறார்கள்.

போகும் போது நமக்காக மற்றவர்கள் துஆச் செய்வதும், அங்கே சென்று மற்றவர்களுக்காக நாம் துஆச் செய்வது தான் வரைமுறை. வீட்டிற்கு செல்லும் முன் கேட்கப்படும் துஆ ஏற்கப்படுகிறது.

தன் பெயருக்கு பின்னாலோ, முன்னாலோ,, "ஹாஜி " எனப் போடாவிட்டால் கோபித்துக் கொள்கிறார்கள்.. தொழ வருபவர்களுக்கு " தொழுகையாளி" என்ற வார்த்தை யை உடன் சேர்த்து சொன்னால் எவ்வளவு கேலி கூத்தாக இருக்கும் என்பதை யோசிக்க வேண்டும்.ஆனால் இதை ஒரு கவுரவ பட்டமாக  பலரும் நினைத்துள்ளார்கள். அல்லாஹ்  நம் சமுதாயத்தை இதிலிருந்து பாதுகாக்க வேண்டும். அல்லாஹ்விற்காக மட்டும் ஹஜ் செய்யும் எண்ணத்தை நம் அனைவருக்கும் தர வேண்டும்

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைருக்கும் துரிதமாக ஹஜ் செய்யும் வாய்ப்பையும்,நம் ஹஜ்ஜை ஹஜ் மப்ரூராகவும்,அண்ணலம் பெருமானார் ﷺஅவர்களை தரிசிக்கும் பாக்கியத்தையும் நல்கிடுவானாக!ஆமீன்...


வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

 

Thursday, 11 May 2023

ஜும்ஆ பயான் 12/05/2023.

இஸ்லாம் தீவிர வாதத்தை போதிக்கின்றதா?

இஸ்லாம் தீவிரவாத்தை போதிக்கின்றது என்றும் அதற்காக லவ் ஜிஹாத் என்ற பெயரில் கட்டாய மதமாற்றம் செய்து பெண்களை அதற்கு கருவிகளாக பயன்படுத்துகிறது என்றும் தற்போது இஸ்லாத்தின் மீது புதிய வகையான ஒரு குற்றச்சாட்டை சுமத்துகின்றனர். இஸ்லாம் எந்த காலத்திலும் தீவரவாதத்தை ஆதரித்ததல்ல.இஸ்லாம் என்றாலே அமைதி, நிம்மதி, சாந்தி , சமாதானம் என்று தான் பொருள். 

இஸ்லாம் அது தோன்றிய காலம் தொட்டு இதுவரையிலும் செய்த போர்கள் அத்தனையுமே தற்காப்பு போர்கள் தானே தவிர, தானாக முன்னெடுத்து செய்த போர்கள் அல்ல. இதை சிந்தித்தாலே இஸ்லாம் எந்தளவு தீவிரவாதத்தை எதிர்கின்றது என்பது புரிய வரும்.

சஹாபாக்கள் தங்கள் காலங்களில் செய்த போர்கள் அனைத்தும் தற்காப்பு போர்களே! ஏனெனில் ஒருவன் தன்னை தாக்க வருகிறான் எனில் குனிந்து முதுகை காட்டுவது அழகல்ல. மாறாக எதிர்த்து போராட வேண்டும். உயிரே போனாலும் அதற்கும் தயாராக இருக்கவேண்டும். கோழையாக 100 வருடங்கள் வாழ்வதை விட சிங்கமாக கர்ஜித்து 2 வருடம் வாழ்வதே மேல்.இதை அனைத்து மதங்களும் சொல்லத்தான் செய்கிறது.செய்யத்தான் செய்கிறது. இஸ்லாம் மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல.

எங்காவது ஒரு ஆட்சியாளன் மக்களின் மீது தனது ஆதிக்க கொடுமைகளை கட்டவிழ்த்து விடுகிறான் என்றால், அந்த பகுதி மக்கள் அவனால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அந்த ஆட்சியாளருடன் போர் புரிந்து மக்களுக்கு விடுதலை வாங்கி தருவார்கள். இதை தீவிரவாதம் என்று சொல்வதா? மனிதாபிமானம் என்று சொல்வதா?

உண்மையில் தீவிரவாதத்தால் தான் இஸ்லாம் வளர்கின்றது என்றால், எந்த போரிலாவது யுத்த கைதிகளை கலிமா கூறும்படி வற்புறுத்திய வரலாறு உண்டா?

இஸ்லாம் வாளால் பரப்பட்ட மார்க்கமாக இருந்திருந்தால், தீவிரவாதத்தால் வளர்ந்த மார்க்கமாக இருந்திருந்தால் ஹிஜ்ரி 8-ல் மக்கா நகரம் வெற்றிக் கொண்ட போதே, தன் முழு ஆதிக்க சக்தியால் அனைவரையும் முஸ்லிம்களாக மாற்றியிருக்க முடியும், மாறாக அனைவருக்கும்  பொது மன்னிப்பு வழங்கி அவரவர் விரும்பிய மதத்திலேயே அவர்களை வாழவைத்தது. நினைத்திருந்தால் அனைவரையும் நிர்பந்த படுத்தி முஸ்லிம்களாக மாற்றியிருக்கலாம். ஆனால் இஸ்லாம் அப்படி ஒரு மனிதரை அவர் விருப்பமின்றி மதம் மாற்றம் செய்வதை தடுக்கிறது.

لَا إِكْرَاهَ فِي الدِّينِ ۖ قَدْ تَبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ ۚ فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ لَا انْفِصَامَ لَهَا ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன் 2- 256)

மேலும் இந்த இந்திய திரு நாட்டை முகலாயர்கள் 800 வருடம் ஆட்சி செய்தனர். அவர்கள் நினைத்திருந்தால் இந்தியர்கள் அனைவரையும்  இஸ்லாமியர்களாக மாற்றியிருப்பார்கள். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. காரணம் நிர்பந்தப்படுத்தி ஒருவரை மாற்றுவதை இஸ்லாம் ஒருபோதும் விரும்பவில்லை.

தீவிரவாதம் என்றால் தான் கொண்ட கொள்கையில் தீவிரமாக இருப்பது. இது தவறில்லை. ஆனால் அதை பிறர் மீது திணிக்கும் செயல்தான் தவறு. அது பயங்கரவாதம். இந்த பயங்கரவாதத்தை இஸ்லாம் தடுக்கிறது.

وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يُقَاتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوا ۚ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ

உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்;. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.(அல்குர்ஆன் 2- 190)

இவ்வசனத்தில் அல்லாஹ் தீவரவாதத்திற்கு அடிப்படையாக உள்ள வரம்பு மீறுவதை கண்டிக்கிறான். தான் விரும்புவதில்லை என்கிறான் என்றால் இஸ்லாம் எப்படி தீவிரவாதத்தை போதிக்கும் மார்க்கமாக இருக்க முடியும்.

மாறாக அவர்கள் உங்களை தாக்கினால் அப்போது தற்காப்புக்காக நீங்கள் அவர்களை தாக்கலாம் என்று தான் சொல்கிறது.

ۖ فَإِنْ قَاتَلُوكُمْ فَاقْتُلُوهُمْ ۗ كَذَٰلِكَ جَزَاءُ الْكَافِرِينَ

 அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.(அல்குர்ஆன் 2- 192)

இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம்.

உலகெங்கும் தற்போது தீவிரவாதம் தலைத்தோங்கியுள்ளது. தீவிரவாத செயல்களால் உலகம் முழுவதிலும் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். இத்தகைய தீவிரவாதச் செயல் மதம், மொழி, இனம், நாடு என்ற பல்வேறு அடிப்படைகளில் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்றாலும் தீவிரவாதம் என்பது இஸ்லாத்தின் மறுபெயராகவே மேற்கத்திய ஊடகங்களால் உலகத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சில இஸ்லாமியப் பெயர்தாங்கிகள் சில இடங்களில் இவ்வாறான காரியங்களில் ஈடுபட்டதை வைத்து ஒட்டுமொத்த இஸ்லாமிய மார்க்கத்திற்குமே தீவிரவாதச் சாயம் பூசிவிட்டது உலக ஊடகத்துறை. தனிமனிதர்களின் செயல்களை ஒட்டுமொத்த மதத்தோடு தொடர்புபடுத்தத் துவங்கினால் எந்த மதமும் தீவிரவாதப் பட்டம் பெறாமல் எஞ்சி இருக்காது.

பெயரளவில் இஸ்லாத்தைக் கடைப்பிடிக்கும் சிலரிடத்தில் இவ்வாறான காரியங்கள் இருக்குமே தவிர இஸ்லாமிய மார்க்கத்தில் தீவிரவாதத்திற்கு அறவே இடமில்லை. இஸ்லாம் அவர்களின் செயல்களை ஆதரிக்கவும் இல்லை. இஸ்லாம் தீவிரவாத்தை போதிக்கும் மார்க்கம்  அல்ல. திருக்குர்ஆன் தீவிரவாதத்தை போதிக்கும் வேதமல்ல. மாறாக, அன்பை ஏவும் மார்க்கம். மனித நேயத்தை போதிக்கும் மார்க்கம்.

ஒருவர் ஒரு உயிரைக் கொன்றால் அவருக்கு ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் கொன்ற பாவம் கிடைக்கும் என்று கூறி, உயிரைக் கொல்லும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று எச்சரிக்கும் மார்க்கம் இஸ்லாம்.

‘‘ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்’’ என்றும், “ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்’’ என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம்.           (அல்குர்ஆன்:5:32.) (சுருக்கம்)

இவ்வாறு, ஒரு உயிரைக் கொல்வதே ஒட்டுமொத்த மனிதர்களையும் கொல்வது போல் என்று சொல்லும் மார்க்கம் தீவிரவாதத்தை ஏவுமா? துணை நிற்குமா? மேலும், மனிதர்களுக்கு நலம் நாடுவதுதான் இஸ்லாமிய மார்க்கத்தின் இலக்கணமே என்பதையும் நபிகளார் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

இவ்வாறு ஒரு மனிதன் பிற மனிதனுக்கு போதிக்கும் அன்பையே பிரதான தத்துவமாகக் கொண்ட மார்க்கமாக இஸ்லாம் இருக்கிறது. இதை முஸ்லிம்களிடத்தில் உலகம் கண்கூடாகக் காண்கிறது. சுனாமி, சென்னைப் பெருவெள்ளம், கஜா புயல் போன்ற எண்ணற்ற இயற்கைப் பேரிடர்களின் போது முஸ்லிம்களின் அன்பும் பாசமும் நிறைந்த அயராத பணி இதற்கெல்லாம் சாட்சிகளாக உலக மக்களின் கண் முன்னால் நிற்கிறது.

ஆனாலும், எத்தகைய மாற்றம் வந்தாலும் ஊடகங்கள் ஒரு நொடிப் பொழுதில் பொய் பிரச்சாரங்களின் வாயிலாகத் தவிடுபொடியாக்கி, இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என மக்களை ஏமாற்றிவிடுகின்றன. இவ்வாறு கூறும் போது, குர்ஆனில் ‘கண்ட இடத்தில் வெட்டுங்கள்’ என்பன போன்ற வன்முறையை ஆதரிக்கும் கருத்துக்கள் இருக்கத் தானே செய்கின்றன என்ற கேள்விகளை எழுப்புகின்றனர்.

அவை அனைத்துமே ஒரு நாட்டில் இஸ்லாமிய ஆட்சி இருந்து, அந்த நாட்டுக்கும் வேறொரு நாட்டுக்கும் போர் நடக்கும் போது கடைபிடிக்க வேண்டிய அம்சமாகும். இஸ்லாமிய நாடு மட்டுமல்ல. எந்த நாடாயினும் தனது எல்லையைப் பாதுகாக்கும் போர் செய்யும் போது எதிர்த்து வருபவர்களைக் கொல்வதுதான் உலக வழக்கம். கைகட்டி வேடிக்கை பார்ப்பது இல்லை.

அதுதான் அங்கு சொல்லப்பட்டுள்ளதே தவிர இஸ்லாத்தைப் பரப்ப போர் செய்யுங்கள் என்றோ, அப்பாவிகளைக் கொல்லுங்கள் என்றோ திருக்குர்ஆன் போதிக்கவில்லை. மேற்படி சொன்னது போல் நாடுகளுக்கிடையே போர் புரிவதற்குக் கூட இஸ்லாம் சில நெறிமுறைகளை சொல்லித் தருகிறது. அவற்றையும் பார்ப்போம்.

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே உரிமை.

திருக்குர்ஆனில் உள்ள பல கட்டளைகள், அனைத்து முஸ்லிம்களுக்கும் உரியது என்றாலும் ஆட்சியாளர்கள் மீதும், அரசுகள் மீதும் மட்டும் சுமத்தப்பட்ட கட்டளைகளும் உள்ளன. அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட கடமைகளைத் தனி நபர்கள் செயல்படுத்தக் கூடாது.

திருடினால் கையை வெட்டுதல், விபச்சாரத்துக்கு நூறு கசையடி வழங்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பன போன்ற சட்டங்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. இச்சட்டங்களைத் தனிப்பட்ட எந்த முஸ்லிமும், முஸ்லிம் குழுவும் கையில் எடுக்க முடியாது. மாறாக இஸ்லாமிய அரசு தான் இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதுப்போலத்தான் போர் செய்வதென்பது தனிநபர்களின் மீதோ, குழுக்கள் மீதோ கடமையில்லை. அரசாங்கத்தின் மீது மட்டுமே கடமையானதாகும்.

“தாலூத் என்பவரை அல்லாஹ் உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான்’’ என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார். “எங்கள் மீது அவருக்கு எப்படி ஆட்சியதிகாரம் இருக்க முடியும்? அவரை விட ஆட்சிக்கு நாங்களே தகுதியானவர்கள். அவருக்குப் பொருள் வசதியும் வழங்கப்படவில்லை’’  என்று அவர்கள் கூறினர். “உங்களை விட அவரை அல்லாஹ் தேர்வு செய்து விட்டான். அவருக்கு கல்வி மற்றும் உடலை (வலுவை) அதிகமாக வழங்கியிருக்கிறான். தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்’’ என்று அவர் கூறினார்.

“அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டதற்கு அடையாளமாக, உங்களிடம் ஓர் அலங்காரப் பெட்டி வரும். அதில் உங்கள் இறைவனிடமிருந்து (உங்களுக்கு) மன நிறைவு இருக்கும். மூஸாவின் குடும்பத்தாரும், ஹாரூனின் குடும்பத்தாரும் விட்டுச் சென்றவற்றில் எஞ்சியது அதில் இருக்கும். அதை வானவர்கள் சுமந்து வருவார்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அதில் உங்களுக்கு தக்க சான்று உள்ளது’’ என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார்.(அல்குர்ஆன்:2:247, 248.)

எதிரிகளின் உடல்களை சிதைக்கக் கூடாது.

போரிடும் போது எதிரிகளின் மீதுள்ள கோப அலையினால் அவர்களின் உடல்களை கோரப்படுத்தக் கூடாது; சிதைத்துவிடக் கூடாது.

கொள்ளையடிப்பதையும் ஒருவரின் அங்கங்களை (உயிருடன் இருக்கும் போதோ அல்லது இறந்த பிறகோ) சிதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) (நூல்: புகாரி-2474, 5516)

இதுபோன்று இன்னும் பல பாதிப்பில்லா சட்டங்களையும் வழங்கி அப்பாவிகளைக் காத்து, நாட்டை அழிக்க வருபவர்களுக்கு எதிராக மட்டுமே போர் என்ற நெறிகளை இஸ்லாம் சொல்கிறது. இந்த நெறிகள், சட்டங்கள் யாவும் பல நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் போர் நெறிகளை விட பல மடங்கு உயர்ந்தவையாகும். இஸ்லாம் சொல்லும் போர் நெறிகள் மட்டுமே  மனித உரிமை மீறல் இல்லாத நீதமான போர் நெறியாகும்.

இவ்வாறு போரில் கூட மனித உரிமை மீறலைத் தடுக்கும் மார்க்கம் தீவிரவாதத்தை ஏவுமா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இஸ்லாமியர்களை தீவிரவாதியாகவும் குர்ஆன் தவறான வேதமாகவும் சித்தரித்து திரை ப்படம் எடுக்கப் படுகிறது.தற்போது வெளியான தி கேரளா ஸ்டோரியும் அவ்வாரே அமைந்துள்ளது .மறுபக்கம் மதமாற்றம் தடை சட்டத்தின் முன்னோட்டம் தான் இத்திரைப்படமோ என்றெல்லாம் எண்ணத்தோன்றுகிறது.

இஸ்லாத்தின் வளர்ச்சியே காரணம்.

ஏன் மீண்டும் மீண்டும் முஸ்லிம் சமூகத்தின் மீதே தாக்குதல் நடத்துகிறார்கள் என்றால்... 

நாளுக்கு நாள் இஸ்லாம் அசுர வேகத்தில் வளர்ந்து வருவதை நம்மை விட எதிரிகள் அதிகம் அறிந்து வைத்திருக்கிறார்கள். இவ்வளர்ச்சியை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் தான் இது போன்ற  திரைப்படங்கள் மூலமாக வன்மத்தை கக்குகிறார்கள்.

அதனால் தான் முஸ்லிம்களை தவறாக சித்தரித்து காட்டிய தி கேரளா ஸ்டோரி படத்தை வெளியிடுவதற்கு அனுமதி கொடுக்கிறார்கள். முஸ்லிம்களின் உண்மை தன்மையை வெளியே கொண்டு வந்த BBC documentary படத்தை தடை செய்கிறார்கள்.

நம் இந்திய தாய் திருநாட்டில் இஸ்லாமியர்களின் நிலை முன்னெப்போதும் இல்லாத அளவு கவலைக்கிடமாக உள்ளது,

முஸ்லிம்கள், இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய சடங்குகளுக்கு எதிராக நாளுக்கு நாள் சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு, நிலைமை மேலும் மேலும் சிக்கலானதாக மாறுகிறது,

திட்டமிட்டு கலவரங்கள் நடத்தப்படுகின்றன. கடைகளும்  வீடுகளும் தீக்கிரையாக்கப்படுகின்றன,கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களை அச்சுறுத்திவரும் ‘புல்டோசர் அரசியல்’, இஸ்லாமியர்கள் வசிக்கும் ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றுவதாகக் கூறி புல்டோசர் மூலமாக வீடுகளும் கடைகளும் இடிக்கப்பட்டன.பசு நேசர்கள் என  மாட்டின் பெயர் கூறி மனித உயிர்கள் அநியாயமாக கொல்லப்படுகின்றன.

பின்னர் படிப்படியாக இவ்வடுக்கள் ஆறுவதற்குள்; இப்போது இஸ்லாத்தின் ஷரியா சட்டங்கள்  மற்றும் அடையாளச் சின்னங்கள்  மீதான தாக்குதல்கள், இஸ்லாமிய ஹிஜாப் மீதான தடை, திறந்த வெளியில் ஜும்ஆ தொழுக தடை மற்றும் ஒலிபெருக்கி மூலம் அதான் எனும் பாங்கு அழைப்பு தடை  இன்னும் இதுபோன்ற பல பிரச்சினைகளை உண்டாக்கி உளவியல் ரீதியிலான தாக்குதல் தொடுக்கப்படுகின்றன.

இவையெல்லாம் அரசு இயந்திரத்தால் நேரடியாகவோ அல்லது அதன் ஆசிர்வாதத்துடனோ நடத்தப்படுபவை இன்னொரு தளத்திலும் இஸ்லாமியரை தனிமைப்படுத்தும் முயற்சி நடக்கிறது இது பெருமளவில் சினிமாக்கள்,சமூக ஊடகங்கள் வழியாக நடக்கிறது.இங்கே பரப்பப்படும் பொய்களுக்கு ஆதாரங்கள் தேவையில்லை.இஸ்லாமியரை குறித்து அச்ச உணர்வும்,வெறுப்பும் விதைக்கப்படுகின்றன.

ஹிந்தி சினிமாக்கள் தொடங்கி தமிழ் சினிமா வரை இதற்கு எதுவும் விதிவிலக்கல்ல."விஸ்வரூபம் " "துப்பாக்கி" "எஃப்,ஐ,ஆர்" "பீஸ்ட்"இது போன்ற படங்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கின்றன.என்றால் இப்பொழுது வரும் படங்கள் "ஆவணப்படம்" "உண்மை சம்பவம்"எனக்குக்கூறி இஸ்லாத்தையும்,இஸ்லாமியர்களையும் நேரடியாகவே தாக்கி சினிமாக்கள் தயாரிக்கப்படுகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீர் பண்டிட்களைப் பற்றிய "The Kashmir file" "தி கஷ்மீர் ஃபைல்" என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் திரையிடப்பட்டது; இதன் நோக்கம் முஸ்லிமல்லாதவர்களின் உள்ளங்களில் முஸ்லிம்கள் மீது வெறுப்பை உண்டாக்கி அவர்களைத் தூண்டிவிட்டு பழிவாங்கத் தூண்டுவதாகும்.

இப்போது ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டிரைலரில் பல்வேறு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதோடு, 32,000 பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறி ஐ.எஸ். அமைப்பில் இணைந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது, பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

இந்தப் படம் `கேரளாவைச் சேர்ந்த இந்துப் பெண்களை இஸ்லாமியர்களாக மதமாற்றம் செய்து, அவர்களை நாடுகடத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதுபோல' காட்சிப்படுத்தப்பட்டிருந்ததால், படத்தின் டீசர் வெளியானபோதே கடுமையாக எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக, `உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கதை என்ற பெயரில், எவ்வித ஆதாரமும் இல்லாமல் 32,000 இந்துப் பெண்களை மதமாற்றம் செய்து, தீவிரவாத இயக்கத்துக்கு ஆள்சேர்த்ததுபோலவும், எதிர்காலத்தில் கேரள மாநிலமே இஸ்லாமிய மாநிலமாக மாறிவிடும்' என்பது போன்ற முற்றிலும் உண்மைக்குப் புறம்பான சம்பவங்களையும் வசனங்களையும் காட்சியமைத்து, இஸ்லாமிய வெறுப்பைக் கக்கியிருக்கிறது.

தொடர்ந்து "புர்கா" "ஃபர்ஹானா"போன்ற படங்களில் இஸ்லாமிய சட்டங்களையும்,இஸ்லாமியர்களையும் கேலிக்குள்ளாக்கப்படுகின்றது.

தீர்வு என்ன...

இஸ்லாமியர்களின் மீது வன்மத்தை கக்கும்,வெறுப்பை உமிழும் செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

சில அரசியல் தலைவர்கள், நடுநிலையளர்கள் ஊடகங்களில் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது மட்டுமே ஒரே ஆறுதலாக உள்ளது.வெறுமனே இதனை சமூகவலை தளங்களில் பகிர்வது ஒன்றே தீர்வாக ஆகாது.

இச்சந்தர்ப்பங்களில் இஸ்லாமியர்கள் என்ன செய்ய வேண்டும்.இச்சூழ்நிலையில் இஸ்லாமியர்களாகிய நம் பொறுப்பு என்ன என்பதை உணரவேண்டும்.

இதற்கு குர்ஆன் கூறும் ஒரே தீர்வு;இஸ்லாமியர்கள் சமூகமாக சக்திபெறவேண்டும்.

وَاَعِدُّوْا لَهُمْ مَّا اسْتَطَعْتُمْ مِّنْ قُوَّةٍ وَّمِنْ رِّبَاطِ الْخَـيْلِ تُرْهِبُوْنَ بِهٖ عَدُوَّ اللّٰهِ وَعَدُوَّكُمْ وَاٰخَرِيْنَ مِنْ دُوْنِهِمْ‌  لَا تَعْلَمُوْنَهُمُ‌  اَللّٰهُ يَعْلَمُهُمْ‌ وَمَا تُـنْفِقُوْا مِنْ شَىْءٍ فِىْ سَبِيْلِ اللّٰهِ يُوَفَّ اِلَيْكُمْ وَاَنْـتُمْ لَا تُظْلَمُوْنَ‏

அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.(அல்குர்ஆன் : 8:60)

இங்கு قُوَّةٍ என்றால் முஸ்லிம் சமூகத்திற்கு வலு சேர்க்கிற எல்லா காரியங்களிலும் இஸ்லாமியர்கள் வலுப்பெற்றாக வேண்டும். 

கல்வி,பொருளாதாரம் மேம்பாடுகள், அரசியல்,அதிகாரம்,சமூக கூட்டமைப்பு என எதுவெல்லாம் வலுச்சேர்க்குமோ அவற்றில்  மேம்பட்டு இருக்க வேண்டும்.அப்படி பலமான கூட்டமைப்பு சக்தி இல்லை எனில் எடுப்பார் கைப்பிள்ளை போன்று மற்றவர்களுக்கு அடிமைப்பட்டு கிடைக்கின்ற கொடுமையை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர் என குர்ஆனை எச்சரிக்கிறது.

கண்மணி நாயகம் பெருமானார்ﷺஅவர்கள் 100 பேர்கள் கொண்ட ஓர் குழுவை அபிசீனிய நாட்டிற்கு ஹிஜ்ரத் அனுப்பிவைத்ததும்,ஹுதைபியா உடன் படிக்கை,பத்ரு உள்ளிட்ட போர்களை மேற்க்கொண்டதும் இஸ்லாம் அசைக்க முடியாத சக்தியாக உருப்பெற மேற்கொண்ட நடவடிக்கைகளாகும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரத்தில் அதனை தவறும் பட்சத்தில் அதனால் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பு மிகப்பெரியதாக இருக்கும் என்பதற்கு உஹதுப்போர் இந்த உம்மத்திற்கு படிப்பினையாக உள்ளது.

கண்மணி நாயகம் பெருமானார்ﷺஅவர்கள் கலந்து கொண்ட உஹது போரில் ஏற்பட்ட சிறு தவறினால் இந்த உம்மத் முதல் தோல்வியை சந்திக்க நேரிடுகிறது.

நாயகம்ﷺஅவர்கள் எதிரிகளால் தாக்கப்படுகிறார்கள்.1000பேர்களில் வெறும் 16பேர்கள் மட்டுமே நபியோடு இருக்கிறார்கள்.நாயகம்ﷺஅவர்களின் சிறிய தந்தை ஹம்ஸா (ரலி)அவர்கள் உட்பட 70முஸ்லிம்கள் ஷஹிதாக்கப்பட்டனர்.

ஆகவே முன்னெச்சரிக்கை என்பது எப்போதும் அவசியம். அதை உணர்ந்து நம் சமூகம் செயல்ப்பட்டால் இனி எந்த எதிர்ப்புகள் வந்தாலும் எதிர்கொள்ள முடியும்.

அல்லாஹ்த்தஆலா கயவர்களின் சூழ்ச்சிகளை விட்டும் பாதுகாத்து,எல்லா விதத்திலும் சக்திப்பெற்ற சமூகமாக இந்திய இஸ்லாமியர்களை ஆக்கி அருள்ப்புரிவானாக!ஆமீன்...

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Thursday, 13 April 2023

ஜும்ஆ பயான் 14/04/2023

இறுதி பத்து நாட்கள்.

ரமலானின் இறுதி பத்து தினங்களில் இஸ்லாமியர்கள் இரவு பகலாக அமல் செய்வதற்குறிய சிறந்த பொழுதுகளாகும்.ரமலான் மாதம் முழுக்கவே சிறப்பு கூறிய நாட்களாக இருந்தாலும் கடைசி பத்து தினங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ரமலானில் 20 தினங்கள் கழிந்ததற்கு பின்னால் மீதமுள்ள பத்து தினங்களில் ஒவ்வொரு நிமிடத்தையும் சிறந்த வாய்ப்பாக கருதி அமல்செய்யவேண்டும். ரமலான் மாதத்தின் கடைசி பத்து தினங்களை சிறப்பாக்கும் காரணங்கள்.

நரக விடுதலை அளிக்கும் பத்து.

ஹதீஸ்களில் புனித ரமலான் மாதம் குறித்து பல்வேறு சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. ஒரு ஹதீஸில் ஒவ்வொரு பத்து தினங்களுக்கும் தனித்தனி சிறப்புகளை கூறப்படும்.

ஒவ்வொரு பத்துதினங்களிலும் அல்லாஹ் தம் அடியார்களுக்கு தனித்துவமான அருளை புரிகிறான்.

رَمَضَانَ أوَّلُه رحمةٌ، و أوسطُهُ مغفرةٌ، وآخرُهُ عِتقٌ منَ النَّارِ.

(صحیح ابن خزیمه، حدیث نمبر: 1780)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட் கொடையாகவும் நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்' மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது.

இறுதி பத்து தினங்களும், அண்ணலம் பெருமானார்ﷺ அவர்களும்.

கண்மணி நாயகம் பெருமானார்ﷺஅவர்களின் இரவு பகல்,  வருடம் முழுக்க இறை தியானத்திலும்,இறை சிந்தனையிலும் வணக்க வழிபாடுகளிலும் கழியும்.இரவு வேளையில் உலகமே இறை சிந்தனை மறந்து உறக்கத்தில் ஆழ்ந்திருக்க கண்மணி நாயகம்ﷺஅவர்கள் தங்களை இறை வணக்கத்தில் ஈடுபடுத்திக் கொண்டிருப்பார்கள்.தஹஜ்ஜுத் தொழுகையில் சூரா பகரா,சூரா ஆல இம்ரான்,சூரா நிஸா போன்ற பெரும் சூராக்களை ஓதி தங்கள் பாதங்கள் வீங்கிடும் அளவுக்கு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.

இதுவே ரமலான் மாதத்தில் நாயகம் ﷺஅவர்களுக்கு அமல் செய்யும் தேட்டம்,பன்மடங்கு அதிகமாகிவிடும்.

குறிப்பாக கடைசி 10 தினங்கள் நாயகம் ﷺஅவர்களின் அமல்கள் குறித்து ஹதீஸிலே வருகிறது...

کَانَ یَجْتَهِدُ فِی الْعَشَرِ الْاَخِیْرِ مَالَا یَجْتَهِدُ فَی غَیْرِه.

(صحیح مسلم، حدیث نمبر: 1175)

நபி  ﷺஅவர்கள் மற்ற மாதங்களில் வணக்க வழிபாடு விஷயத்தில் ஆர்வம்காட்டாத அளவு ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் அதிக அளவில் வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: முஸ்லிம்.

«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ العَشْرُ شَدَّ مِئْزَرَهُ، وَأَحْيَا لَيْلَهُ، وَأَيْقَظَ أَهْلَهُ»

ரமலானுடைய கடைசி பத்து வந்துவிட்டால் முழு இரவிலும் இபாதத் செய்வார்கள். தனது குடும்பத்தாரையும் அவர்கள் தூங்க விடமாட்டார்கள் (எழுப்பி விடுவார்கள்). தன்னுடைய கீழ் ஆடையை இருக்க கட்டிக்கொள்வார்கள்.

புனித மிக்க ரமழான் மாதத்தின் இறுதிப்பத்தை நாம் அடைந்திருக்கும் இவ்வேலையில் இந்த இறுதிப்பத்தின் மகத்துவத்தையும், கண்ணியத்தையும் மிகவும் தெளிவாகவும், ஆழமாகவும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

ரமலானில் இரவுத் தொழுகை.

عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ

مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

யார் நம்பிக்கை கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ அவரது முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி-37

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் கனவு கண்டால் அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். நானும் ஒரு கனவு கண்டு, அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க ஆசைப்பட்டேன். அப்போது நான் இளைஞனாகவும் பள்ளிவாசலில் உறங்கக் கூடியவனாவும் இருந்தேன். இரண்டு மலக்குகள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சென்றார்கள். கிணற்றுக்குச் சுவர் கட்டப்பட்டது போல் அந்த நரகத்திற்கும் கட்டப் பட்டிருந்தது. அதற்கு இரண்டு கொம்புகள் இருந்தன. இதில் எனக்குத் தெரிந்த சில மனிதர்களும் கிடந்தனர். அப்போது நான் நரகத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகின்றேன் என்று கூறினேன். அப்போது வேறு ஒரு மலக்கு என்னைச் சந்தித்து நீர் பயப்படாதீர் என்று கூறினார். இவ்வாறு நான் கனவு கண்டேன். இக்கனவை ஹஃப்ஸா (ரலி) யிடம் கூறினேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் அவர் மனிதர்களிலேயே மிகவும் நல்லவர்!” என்று கூறினார்கள். அதன் பின்னர் குறைந்த நேரமே தவிர நான் உறங்குவதில்லை.

(அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி), நூல் : புகாரி-1121)


இஃதிகாஃப்.

நாயகம்ﷺஅவர்கள் கடைசி பத்தில் மேற்கொள்ளும் அமல்களில் இன்னொரு முக்கியமான அமல் இஃதிகாஃப் ஆகும். 

کانَ یَعْتَکِفُ العَشْرَ الأوَاخِرَ مِن رَمَضَانَ، حتَّی تَوَفَّاهُ اللّٰهُ عَزَّ وَجَلَّ، ثُمَّ اعْتَکَفَ أَزْوَاجُهُ مِن بَعْدِهِ. (متفق علیه)

அன்னை ஆயிஷா (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்:நாயகம்ﷺஅவர்கள்மரணத்தை தழுவும் வரை ரமலானின் கடைசி பத்து தினங்கள் இஃதிகாப் இருப்பார்கள்.அவர்களுக்குப் பின்னால் அவர்களின் மனைவியர்கள் இஃதிகாப் இருந்தார்கள்.

இஃதிகாப் இருப்பவர் பாவங்களை விட்டும் பாதுகாக்கப்படுகிறார்; நற்செயல் கள் அனைத்தையும் செய்பவரைப் போன்ற நன்மைகள் அவருக்கு எழுதப்படுகின்றன என நபி  ﷺஅவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: இப்னுமாஜா)

எவர் ரமலானின் இறுதி பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பாரோ அவருக்கு இரண்டு ஹஜ்,இரண்டு உம்ரா செய்த நன்மை கிடைக்கும்(நபிமொழி)

முஃமினான அடியான் இஃதிகாபில் உலக தொடர்புகளை துண்டித்து விட்டு இறை இல்லத்தில் அல்லாஹுகாக  தனித்திருந்து தொழுகை,திக்ரு,திலாவத் போன்ற அமல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான்.அவனின் தூக்கமும் இஃதிகாபில் வணக்கம் ஆகிறது. 

லைலதுல் கத்ரு.

லைலதுல் கத்ரு மகத்துவமிக்க ஓர் ஒப்பற்ற இரவாகும்.உம்மதே முஹம்மதிய்யாவிற்கு மட்டும் கிடைக்கப்பெற்ற பேருபகாரமாகும். 

லைலத்துல் கத்ர் لیلۃ القدر என்பதற்கு "கண்ணியமான" "சிறப்பான"இரவு என்று பொருளாகும். இந்த இரவில் நின்று வணங்குபவர்கள் அல்லாஹ்விடம் கண்ணியத்தையும்,சிறப்பையும் பெற்வர்களாக ஆகிறார்கள். 

இந்த இரவுக்கு எதனால் قدر கத்ரு என பெயர் வைக்கப்பட்டுள்ளது என்ற சூட்சுமத்தை அல்லாஹ்வே நன்கறிந்தவன்.இந்த இரவின் சிறப்பை அல்லாஹ் தனது மறையில் இவ்விதம் கூறுகிறான்.

اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةِ الْقَدْرِ  ‏

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.             (அல்குர்ஆன் : 97:1)

وَمَاۤ اَدْرٰٮكَ مَا لَيْلَةُ الْقَدْرِ‏

மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?(அல்குர்ஆன் : 97:2)

لَيْلَةُ الْقَدْرِ  ۙ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍ‏

கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.(அல்குர்ஆன் : 97:3)

تَنَزَّلُ الْمَلٰٓٮِٕكَةُ وَالرُّوْحُ فِيْهَا بِاِذْنِ رَبِّهِمْ‌ مِّنْ كُلِّ اَمْرٍ ۛۙ‏

அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.(அல்குர்ஆன் : 97:4)

سَلٰمٌ   ۛهِىَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ‏

சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.(அல்குர்ஆன் : 97:5)

லைலதுல் கத்ர் இரவில் வணக்கவழிப்பாடுகள் செய்வதன் சிறப்பை நாயகம்ﷺஅவர்கள் பல ஹதீஸ்களில் கூறியுள்ளார்கள்.

مَن قَامَ لَیلۃَ القَدرِ إیمانًا واحتِسابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِن ذنبِهِ. (متفق علیه)

லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

மேற்கூறிய ஹதீஸில் இவ்விரவின் சிறப்பை கூறிய நாயகம்ﷺஅவர்கள் மறைக்கப்பட்ட இந்த இரவை தேடி பல இரவுகள் அமல் செய்திருக்கிறார்கள்.

இந்த உம்மத்தை கடைசி பத்து தினங்களில் ஒற்றை படை இரவுகளில் இவ்வரவை தேடி அமல் செய்யுமாறு ஆர்வமூட்டியுள்ளார்கள்.

تَحرُّوا لیلۃَ القَدْر فی العَشْر الأواخِر من رمضانَ. (بخاری، حدیث نمبر: 2020)

ரமளான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

تَحرُّوا لَیلۃَ القَدْرِ فی الوَتْر من العَشرِ الأواخِرِ من رمضانَ.

(بخاری، حدیث نمبر: 2017)

ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

லைலத்துல் கத்ர் போன்ற ஒரு இரவை வேற எந்த உம்மத்தினருக்கும் வழங்கப்படவில்லை.இந்த உம்மத்திற்கு லைலத்துல் கத்ர் எதனால் வழங்கப்பட்டது என்று  நாயகம்ﷺஅவர்கள் கூறும்போது 

إنَّ رسولَ اللّٰهِ أُرِیَ أعمارَ الناسِ قبلَه أو ما شاءاللّٰهُ من ذلک فکأنه تقاصر أعمارَ أُمَّتِه ألَّا یَبلُغوا من العملِ مثلَ الذی بلغ غیرُهم فی طولِ العمُرِ، فأعطاه اللّٰهُ لیلةَ القدرِ خیرًا من ألفِ شهرٍ.

(موطا امام مالک، 1: 319)


நாயகம்ﷺஅவர்களுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் வயதுகளை காட்டப்பட்டது.தம் உம்மத்தினரின் வயது அவர்களை விட குறைவாக இருப்பதையும்,நீண்ட ஆயுளில் அவர்களின் அமல்களின் அளவு தங்களின் உம்மத்தினர் அமல்களை செய்ய இயலாது என்று எண்ணிய போது, அல்லாஹுதஆலா ஆயிரம் மாதங்களை விட சிறந்த லைலதுல் கத்ர் இரவை (இந்த உம்மத்திற்கு)வழங்கினான்.

இந்த இரவு வேறெந்த சமுதாயத்திற்கும் வழங்கப்படவில்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

‘பனூ இஸ்ராயீலைச் சார்ந்த ஒரு மனிதர் இரவு முழுவதும் நின்று வணங்குவார். காலை உதயமானதும் மாலை வரை எதிரியைச் சந்திக்க போர்க்களம் சென்று போராடுவார். இவ்வாறு அவர் ஆயிரம் மாதங்கள் ஈடுபட்டார்’ என முஜாஹித் (ரஹ்) கூறுகிறார்.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் கூறும் போது ‘பனூ இஸ்ரவேலர்களைச் சார்ந்த அய்யூப் (அலை), ஸகரிய்யா (அலை), ஹிஸ்கீல் (அலை), யூஷஃபின்நூன் (அலை) ஆகிய நால்வரும், 80 வருடங்கள் கண்ணிமைக்கும் நேரம் கூட இறைவனுக்கு மாறு செய்யாத வண்ணம் இறைவணக்கம் புரிந்து வந்தார்கள்’ என்று தெரிவித்தார்கள்.

இதைக் கேள்விப்பட்ட நபித்தோழர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.

உடனே வானவர் ஜிப்ரீல் (அலை) நபிகளாரிடம் இறங்கிவந்து ‘உங்களது சமுதாயம் இந்த நால்வரைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். எனவே இதைவிட சிறந்த ஒரு பாக்கியத்தை இறைவன் இறக்கி அருள்பாலித்திருக்கிறான்’ என்று கூறி பின்வரும் லைலத்துல்கத்ர் சம்பந்தமான அத்தியாயத்தை கூறினார்கள். (அறிவிப்பாளர்: அலி பின் உர்வா (ரஹ்)

லைலதுல் கத்ரில் கேட்கவேண்டிய துஆ.

கடைசி பத்து தினங்களில் நரக விடுதலை,மற்றும் இறைநெருக்கம் பெற ஓதும் துஆக்களை நாயகம்ﷺஅவர்கள் கற்றுத்தந்திருக்கிறார்கள். 

قلتُ یا رسولَ اللّهِ أرأیتَ إن عَلِمْتُ أیُّ لَیلةٍ لَیلةُ القَدرِ ما أقولُ فیها؟ قالَ: قولی: اللَّهمَّ إنَّکَ عفوٌّ کَریمُ تُحبُّ العفوَ فاعْفُ عنِّی.

(الترمذی، حدیث نمبر: 3513)

“இறைத்தூதர் ﷺஅவர்களே, ‘நான் லைலத்துல் கத்ரை பெற்று விட்டால் என்ன பிரார்த்தனை புரிய வேண்டும்?’ என ஆயிஷா (ரலி) நபிகளாரிடம் கேட்டார்கள். அதற்கு நபிகளார் ‘இறைவா, நீ மன்னிப்பவன். நீ மன்னிப்பை விரும்புகிறவன். எனவே நீ என்னை மன்னிப்பாயாக என்று நீ கேட்பீராக’ என்று இவ்வாறு கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: இப்னுமாஜா)


ஸதகதுல் ஃபித்ர்

இறுதிப் பத்தில் முக்கியமான ஒரு வணக்கம் ஸதகதுல் ஃபித்ர் ஆகும். இது 612 கிராம் 360 மில்லி கிராம் வெள்ளியோ அல்லது அதன் கிரையத்தையோ சொந்தமாக வைத்திருப்பவர்களின் மீது கடமையாகும்.இதனை இது தொழுகைக்கு முன்னால் கொடுத்து விட வேண்டும்.ஏழை எளியவர்களும், வரியவர்களும் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து நம்மோடு மகிழ்ச்சியாக ஈது பெருநாளில் பங்கேற்பதற்காக கடமையாக்கப்பட்டதாகும்.

انَّ رسولَ اللّٰهِ صلَّی اللّٰهُ علیهِ وسلَّمَ فرضَ زَکاةَ الفِطرِ من رمضانَ صاعًا من تمرٍ أو صاعًا من شعیرٍ علی کلِّ حرٍّ أو عبدٍ ذَکرٍ أو أنثی منَ المسلمینَ.

(جامع الترمذی)

நாயகம்ﷺஅவர்கள் ரமலான் மாதத்தில்  முஸ்லிம்களில் சுதந்திரமானவரோ அல்லது அடிமையோ,ஆணோ அல்லது பெண்ணோ ஒவ்வொருவரின் மீதும் பேரீத்தம் பழத்திலிருந்து ஒரு படியையோ அல்லது தொளி  கோதுமையில் இருந்து ஒரு படியையோ ஸதக்கத்துல் பித்ராக கொடுப்பதை கடமையாக்கினார்கள்.

ஃபித்ரா விபரம்:      

ஹனஃபி;  1 கிலோ 633 கிராம் கோதுமை அல்லது அதற்கான கிரயம் இவ்வாண்டு அதன் கிரயம் ரூபாய்  90/-  என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது

ஷாஃபிஈ: 2 கிலோ 400 கிராம் கோதுமை அல்லது அரிசி பொருளாக மட்டும் கொடுக்கவேண்டும்.கிரயம் கொடுக்க கூடாது.  (ஜமாஅத்துல் உலமா சபை)

கோடை வெப்பமும் நரகின் வெப்பமும்.

கோடை வெயில் அனலை அள்ளிக் கொட்டுகிறது. பாதைகளில் பயணிக்கும் மக்கள், அடிக்கடி அதன் ஓரத்தில் நிம்மதி நாடி நிழல் தேடி ஓய்வுக்காக ஒதுங்குகிறார்கள். சாமானியர்கள், செல்வச் சீமான்கள் என்று எந்தவொரு வித்தியாசமும் இல்லாமல் எல்லோரும் தங்களது சக்திக்கேற்ப, வாட்டியெடுக்கும் வெயிலில் இருந்து பாதுகாக்கும் வசதிகளின் பக்கம் படையெடுக்கிறார்கள்.

கடைத்தெருக்களுக்கு வழக்கமாக வெளியே வந்து செல்கின்றவர்களை விட அதிகமான மக்கள், வெயிலின் காரணமாக மின்விசிறிகளுக்குக் கீழே முடங்கிக் கிடக்கிறார்கள். நிழலின் அருமை வெயிலிலே தெரியும் எனும் பழமொழியை நாமெல்லாம் தெரிந்து வைத்திருப்போம். இருப்பினும், அதன் உண்மையான விளக்கத்தை அதன் அருமையை இப்போது நாம் அனுபவ ரீதியாக உணர்கிறோம்.

அதுவும் இந்த ரமலானில் வெயிலின் வெப்பம் வேகமாகத் தாக்குவதால் தேகம் வியர்வையைச் சிந்திச் சிந்தி சோர்வடைந்து விடும். இந்தத் தருணத்தில் நரகத்தின் வேதனையும் சொர்க்கம் அருமையை பற்றியும் தெரிந்து கொள்வோம்.

நரகம்...

திருக்குர்ஆனில் நரகம் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்ட அளவிற்கு வேறு எது குறித்தும் எச்சரிக்கைப்படவில்லை. நரகத்தின் அத்துனை நிலைகளையும்,தன்மைகளையும் கண்ணுக்கு முன் கொண்டுவரும் காட்சிகள் திருக்குர்ஆனில் ஏராளமாக உள்ளன.

திருக்குர்ஆனில்   نار   என்ற வார்த்தை 121 வசனங்களில் இடம் பெறுகிறது.

جهنم  என்ற வார்த்தை 77 வசனங்களில் இடம்பெறுகிறது.அதை போல سعير  வார்த்தை 26 வசனங்களில் இடம்பெறுகிறது.

இவ்வாறு நரகம் குறித்த வார்த்தைகள் அதிகமாக திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டிருப்பதின் மூலம் அதன் ஆபத்துக்களை உணர்ந்து கொள்ள முடியும்.

பாவத்திலிருந்து முழுமையாக பாதுகாக்கப்பட்ட கண்மணி முஹம்மது ஸல் அவர்கள் நரகத்தை விட்டும் பாதுகாப்பு தேடாத நாட்கள் இல்லை.அப்படியானால் நம் போன்றவர்களின் நிலை குறித்து என்ன சொல்வது?

நரகம் அச்சத்தின் மொத்த உருவம்.மரணத்தையே மரணமாக்கிவிடும். பார்ப்பவர்களின் பார்வைகளையும் இதயங்களையும் குழை நடுங்கச்செய்து விடும். அல்லாஹ்வின் கோபத்தின் மொத்த காட்சிகள்.நெருப்பே நெருப்பிலிருந்து பாதுகாப்பு தேடும் விந்தை!

ஒவ்வொரு மனிதனுக்கும் சுவர்க்கம் மற்றும் நரகத்தின் முன் காட்சிகள் (டிரைலர்) மரணத்திலும் மண்ணரையிலும் காட்டப்படும்.நரகத்தை விட்டும் பாதுகாக்கப்பட்டு சுவனத்தில் நுழையும் அந்த நாள் உண்மையில் வெற்றிக்குறிய நாளாகும் என்று திருக்குர்ஆன் புகழ்ந்து கூறுகிறது.

பொதுவாக நரகம் குறித்து எச்சரிக்கப்படும் போதெல்லாம் ஒரு முஃமினுக்கு ஷைத்தான் ஒரு வித மோசடியான நம்பிக்கையை தருவான்.அது என்னவென்றால் என்றாவது ஒரு நாள் சுவனம் சென்று விடலாம் தானே!

ஆம்! முஃமினான யாவரும் இன்ஷா அல்லாஹ் சுவனம் செல்வோம்.ஆனால் நரகத்தின் குறைந்த பட்ச நாள் என்பது ஒரு ஹுக்ப்.حقب

ஒரு حقب என்பது நாற்பது ஆண்டுகள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.  அப்படியானால் நரகத்தில் கால்வைத்துவிட்ட ஒருவர் அதிலிருந்து வெளியேர குறைந்தபட்சம் நாற்பது ஆண்டுகள் ஆகும்.(அந்த கொடிய நரகை விட்டும் அல்லாஹ் நம் எல்லோரையும் பாதுகாப்பானாக. ஆமீன்.)

நிழலும் அருட்கொடையே!

நாம் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக நித்திய ஜீவனான அல்லாஹ்வே இந்த நிழலை ஏற்படுத்தியிருக்கிறான். வெறும் வெயிலை மட்டும் கொடுத்து நம்மை வேதனையில் தள்ளிவிடாமல் அதிலிருந்து இதமளிக்கும் நிழலையும் தந்து அவன் நம் மீது கருணை மழையைப் பொழிந்திருக்கிறான். நமது நலனுக்காக அவன் அளித்திருக்கும் அளவிலா அருட்கொடைகளில் இந்த நிழலும் உள்ளடங்கும்.

இந்த உலகத்தில் தரப்பட்டிருக்கும் இன்பங்களைப் பற்றி மறுமைநாளில் விசாரிக்கும் போது, நிழல் தொடர்பாகவும் நம்மிடம் விசாரிக்கப்படும், அலை அலையாய் வரும் ஆதவனின் அக்னி கதிர்கள் ஆவேசமாக தீண்டும் வேளையில் நமக்கு ஆறுதல் அளிக்கும் இந்த நிழல் இன்பத்தைப் பற்றியும் நிச்சயமாக நாம் பதில் சொல்லியாக வேண்டும். வெயிலின் போது பல்வேறு விதமான நிழல்களில் இளைப்பாறும் நாம் இதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.

وَاللّٰهُ جَعَلَ لَـكُمْ مِّمَّا خَلَقَ ظِلٰلًا وَّجَعَلَ لَـكُمْ مِّنَ الْجِبَالِ اَكْنَانًا وَّجَعَلَ لَـكُمْ سَرَابِيْلَ تَقِيْكُمُ الْحَـرَّ وَسَرَابِيْلَ تَقِيْكُمْ بَاْسَكُمْ‌ؕ كَذٰلِكَ يُتِمُّ نِعْمَتَهٗ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تُسْلِمُوْنَ‏

தான் படைத்தவற்றிலிருந்து அல்லாஹ் உங்களுக்கு நிழல்களை ஏற்படுத்தினான். மலைகளில் உங்களுக்காகக் குகைகளையும் ஏற்படுத்தினான். வெப்பத்திலிருந்து உங்களைக் காக்கும் சட்டைகளையும், போரில் உங்களைக் காக்கும் கவச உடைகளையும் அவன் ஏற்படுத்தினான். நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதற்காக இவ்வாறே அவன் தனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தினான்.         (திருக்குர்ஆன் 16:81)

ஒருநாள் பகல் அல்லது இரவு நேரத்தில் நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோர் பசியின் காரணமாக வீட்டை விட்டு வெளியே வந்து அன்சாரித் தோழர் ஒருவருடைய வீட்டிற்குச் சென்றார்கள். வீட்டிற்கு வந்த மூவரையும் அந்த அன்சாரித் தோழரான) அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் தமது தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அவர்களுக்காக அவர் ஒரு பாயை விரித்தார். பிறகு பேரித்தம் மரங்கள் நோக்கிச் சென்று ஒரு குலையை கொண்டு வந்து வைத்தார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “எங்களுக்காக கனிந்த பேரித்தம் பழங்களை பறித்திருக்கக் கூடாதா?” என்று கூறினார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! செங்காய் மற்றும் கனிந்த பேரித்தம் பழங்களில் இருந்து தேர்வு செய்யவே நாடினேன்” என்று கூறினார். அவர்கள் அதைச் சாப்பிட்டார்கள். (அன்சாரித் தோழர் குடிப்பதற்காகக் கொண்டு வந்த) அந்த நீரைப் பருகினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! குளிர்ந்த நிழல், கனிந்த பழம், குளிர்ச்சியான நீர் இதுவும் அருட்கொடைகளில் உள்ளதாகும். இது பற்றியும் மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்” என்று கூறினார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி)  (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி),   நூல்: திர்மிதீ-2369 (2292),

அல்லாஹுத்தஆலா இந்த ரமலானில் நம்மை ரஹ்மத்,மக்ஃபிரத்,நரக விடுதலை பெற்றவர்களாக ஆக்கி,லைலதுல் கத்ரின் பாக்கியத்தை வழங்கிடுவானாக!ஆமீன்...

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...