Wednesday, 22 June 2022

ஜும்ஆ பயான்24/06/2022

குர்பானியின் முக்கியத்துவம்.


فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ‏

எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.      (அல்குர்ஆன் : 108:2)

ஹஜ்ஜுடைய மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது ஹஜ் பயணத்திற்கான தயாரிப்புகள் ஒருபக்கம் நடந்துகொண்டு இருந்தாலும் மறுபக்கம் ஏனைய முஸ்லிம்கள்  குர்பானி மற்றும் கூட்டுக் குர்பானி அமலை நிறைவேற்றுவதற்கான ஆர்வத்திலும்,ஆயத்தப் பணிகளிலும் இருந்து வருகிறார்கள்.

குர்பானி, பொருள் சார்ந்த வணக்கங்களில் முக்கியமானதும்,இஸ்லாமிய அடையாளச் சின்னங்களில் ஒன்றாகவும் உள்ளது.

குர்பானி கொடுக்கும் பாரம்பரியம், ஆதி பிதா ஆதம் (அலை) அவர்களின் காலம் தொட்டே நடைமுறையில் இருந்து வருகின்றது.

குர்ஆனில் மரியம் சூராவில் ஹஸ்ரத் ஆதம் (அலைஹி) அவர்களின் இரு மகன்களான ஹாபில் மற்றும் காபில் இருவரும் குர்பானி கொடுத்த வரலாறு கூறப்படுகிறது. 

ஹாபில்  ஒரு ஆட்டையும்,காபில் சில விளைச்சல் பொருட்களையும் குர்பானியாக முன்வைக்கின்றனர்.

ஹாபிலின் குர்பானி ஏற்றுக்கொள்ளப்பட்டு,காபிலின் குர்பானி மறுக்கப்படுகிறது.

وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ ابْنَىْ اٰدَمَ بِالْحَـقِّ‌ۘ اِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ اَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْاٰخَرِ قَالَ لَاَقْتُلَـنَّكَ‌ قَالَ اِنَّمَا يَتَقَبَّلُ اللّٰهُ مِنَ الْمُتَّقِيْنَ‏

(நபியே!) ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பியும்; அவ்விருவரும் (ஒவ்வொருவரும்) குர்பானி கொடுத்த போது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை; (பின்னவர்) “நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று கூறினார். அதற்கு (முன்னவர்) “மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்” என்று கூறினார்.(அல்குர்ஆன் : 5:27)

அக்காலத்தில் குர்பானி  ஏற்றுக்கொள்ளப்பட்டதன் அடையாளமாக வானிலிருந்து நெருப்பு வந்து குர்பானியை கரித்து செல்லும்.

اَلَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ عَهِدَ اِلَيْنَاۤ اَلَّا نُؤْمِنَ لِرَسُوْلٍ حَتّٰى يَاْتِيَنَا بِقُرْبَانٍ تَاْكُلُهُ النَّارُ‌ قُلْ قَدْ جَآءَكُمْ رُسُلٌ مِّنْ قَبْلِىْ بِالْبَيِّنٰتِ وَبِالَّذِىْ قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوْهُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏

மேலும் அவர்கள், “எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை காண்பிக்கு)ம் வரை அவர் மீது நாங்கள் விசுவாசம் கொள்ள வேண்டாம்” என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்” என்று கூறுகிறார்கள். (நபியே!): “எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்” என்று நீர் கூறும்.(அல்குர்ஆன் : 3:183)

குர்பானி என்கிற வணக்கம் எல்லா உம்மத்திலும் கடமையாக இருத்திருக்கின்றது.

குர்ஆனில்....

وَلِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِّيَذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلٰى مَا رَزَقَهُمْ مِّنْ بَهِيْمَةِ الْاَنْعَامِ  فَاِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ فَلَهٗۤ اَسْلِمُوْا‌  وَبَشِّرِ الْمُخْبِتِيْنَ ۙ‏

இன்னும் கால்நடை(ப்பிராணி)களிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச் செய்வதற்காவே குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக்கிறோம்; ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!(அல்குர்ஆன் : 22:34)

முற்காலத்தில் குர்பானி என்பது தங்களின் அமல் கபூலானாதா? என்பதனை சோதித்துப் பார்க்கும் ஒரு அடையாளமாக இருந்தது. ஆனால் நம் உம்மத்திற்கு உயர்ந்த, உன்னத தியாக வரலாற்றை நினைவு கூறும் ஓர் வணக்கமாக  ஆக்கப்பட்டது.

ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை)அவர்கள் தங்களின் பாசத்திற்குரிய மகனார் இஸ்மாயில் (அலைஹி) அவர்களை அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிட தயாரானபோது, அல்லாஹ் சுவனத்தில் இருந்து ஓர் செம்மறிஆட்டை இறக்கிவைத்து அவர்களின் தியாகத்தை அங்கீகரித்து,கியாம நாள் வரை அவர்களின் தியாகத்தை போற்றும் ஒரு திருநாளாக இந்த உம்மத்திற்கு குர்பானியை ஒர் வணக்கமாக ஆக்கிவிட்டான்.

இதனையே குர்ஆனில்...

فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْىَ قَالَ يٰبُنَىَّ اِنِّىْۤ اَرٰى فِى الْمَنَامِ اَنِّىْۤ اَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرٰى‌ قَالَ يٰۤاَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ‌ سَتَجِدُنِىْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰبِرِيْنَ‏

பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”(அல்குர்ஆன் : 37:102)

فَلَمَّاۤ اَسْلَمَا وَتَلَّهٗ لِلْجَبِيْنِ‌‏

ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது;          (அல்குர்ஆன் : 37:103)

وَنَادَيْنٰهُ اَنْ يّٰۤاِبْرٰهِيْمُۙ‏

நாம் அவரை “யா இப்ராஹீம்!” என்றழைத்தோம்.(அல்குர்ஆன் : 37:104)

قَدْ صَدَّقْتَ الرُّءْيَا ‌ ‌ اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏

“திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.              (அல்குர்ஆன் : 37:105)

اِنَّ هٰذَا لَهُوَ الْبَلٰٓؤُا الْمُبِيْنُ‏

“நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”(அல்குர்ஆன் : 37:106)

وَفَدَيْنٰهُ بِذِبْحٍ عَظِيْمٍ‏

ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்.(அல்குர்ஆன் : 37:107)

وَتَرَكْنَا عَلَيْهِ فِى الْاٰخِرِيْنَ‌‏

இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்:(அல்குர்ஆன் : 37:108)

குர்பானியின் நோக்கம்.

لَنْ يَّنَالَ اللّٰهَ لُحُـوْمُهَا وَلَا دِمَآؤُهَا وَلٰـكِنْ يَّنَالُهُ التَّقْوٰى مِنْكُمْ‌ كَذٰلِكَ سَخَّرَهَا لَـكُمْ لِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ‌ وَبَشِّرِ الْمُحْسِنِيْنَ‏ 

(எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!(அல்குர்ஆன் : 22:37)

குர்பானியை மனமுவந்து நிறைவேற்ற வேண்டும். மாறாக பிறர் புகழவேண்டும் என்பதற்காகவோ, அல்லது ஏதோ கடமையை நிறைவேற்றினால் போதும் என்ற எண்ணத்திலோ, அல்லது மிக மெலிந்த பிராணியை குறைந்த விலைக்கு வாங்கியோ, அல்லது பக்கத்து வீட்டுக்காரர் குர்பானி கொடுக்கிறார் எனவே நாமும் கொடுப்போம் என்று குர்பானி கொடுத்தாலோ, குர்பானி நிறைவேறாது எந்த நன்மையும் கிடைக்காது. எனவே மனமுவந்து இறைவனுக்காக நிறைவேற்ற வேண்டும் . குர்பானி குர்பானியாக இருக்க வேண்டுமே தவிர குர்பானி பிர்யாணிக்காக இருக்கக் கூடாது.

இஸ்மாயீல் (அலை)அவர்களுக்கு பகரமாக ஓர் ஆட்டை இறக்கியதற்கும்,தங்களின் உயிருக்கு பகரமாக குர்பானியை ஆக்கியதற்கு நன்றிசெலுத்துவதே குர்பானியின் நோக்கமாகும்.

ஏன் குர்பானி கொடுக்க வேண்டும்?

உலக முஸ்லிம்கள் துல்ஹஜ் மாதம் 10-ம் நாள் குர்பானி கொடுப்பது ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு கொண்டது. அப்போது, இறைவனின் உத்தரவுக்கு இணங்க, நபி இப்ராகீம் (அலை) அவர்கள் தமது அருமை புதல்வரை ‘மினா’ எனும் இடத்தில் அறுத்துப் பலியிட முன் வந்தார்.

அவரின் இந்த மாசற்ற தியாகத்தை இறைவன் மெச்சும் வண்ணம் உருவானது தான் குர்பானி கொடுக்கும் வழக்கம். உலக முடிவு நாள் வரைக்கும் மக்கள் இந்த தியாகத்தை நினைவுகூரும் வகையிலும், முதன்முதலாக ஆட்டை அறுத்துப் பலியிட்ட அவரின் வழிபாட்டு முறையை கடைப்பிடிக்கும் விதமாகவும் இந்த தியாகத்திருநாள் அமைந்திருக்கிறது.

ஒருமுறை நபிகளாரிடம் அவரது தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே, இந்த தியாகப் பிராணிகளின் கலாசாரம் என்ன?’ என்று கேட்டார்கள். ‘இது உங்களின் தந்தை இப்ராகீம் (அலை) அவர்களின் கலாசார வழிமுறை’ என நபி (ஸல்) பதில் அளித்தார்கள்.

ஈத் பெருநாளின் முக்கிய அமல்.

பராஉ(ரலி) கூறினார் :

நபி(ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெநாளில்) உரையாற்றியதை கேட்டேன். அவர்கள் (தம் உரையில்) 'நாம் இன்றைய தினம் செய்யும் முதல் வேலை (பெருநாள் தொழுகை) தொழுதுவிட்டுத் திரும்பிச் சென்று குர்பானிப் பிராணிகளை அறுப்பதாகவே இருக்கவேண்டும். இதை செய்கிறவர் நம்முடைய வழியைப் பின்பற்றியவராவார். (பெருநாள்) தொழுகைக்கு முன்பே (பிராணியை) அறுக்கிறவர் தம் குடும்பத்தாருக்காக முன்கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அது அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது' என்று கூறினார்கள். 

அப்போது அபூ புர்தா(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! நான் தொழுவதற்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்து விட்டேன். என்னிடம் இரண்டு வயது பூர்த்தியான ஓர் ஆட்டைவிடச் சிறந்த ஒரு வயது பூர்த்தியான (வெள்ளாட்டுக் குட்டி) ஒன்று உள்ளது. (அதை நான் அறுக்கலாமா?)' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் 'முதலில் அறுத்ததற்கு பதிலாக இதையே அறுத்து விடுவீராக! ஆனால், உங்களுக்குப் பிறகு வேறெவருக்கும் 'அது செல்லாது' அல்லது 'நிறைவேறாது' என்று பதிலளித்தார்கள்.

(ஸஹீஹ் புகாரி 5560)

குர்பானி இஸ்லாத்தின் அடையாளச்சின்னம்.

ஒவ்வொரு நாட்டிற்கும் தேசிய அடையாள சின்னங்கள் உண்டு. அவற்றை பாதுகாப்பதும்,மரியாதை செலுத்துவதும் அந்நாட்டினரின் கடமையாகும்.அதுபோல் இஸ்லாமும் சில அடையாளச் சின்னங்களை குர்ஆனில் கூறுகிறது.அவற்றில் குர்பானியும் ஒன்றாகும். 

ذٰلِكَ وَمَنْ يُّعَظِّمْ شَعَآٮِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ‏

இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,) எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும்.(அல்குர்ஆன் : 22:32)

குர்பானி இறைவனுக்காக...

குர்பானி கொடுப்பது இறைவனின் கட்டளையாகும்.அறியாமைக் காலத்திலும் குர்பானி கொடுப்பதை வணக்கமாகக் கருதி வந்தார்கள். ஆனால் அவர்கள்  பிராணிகளை சிலைகளுக்காக வதம் செய்வதை குர்பானியாக கருதி வந்தார்கள்.

இன்றும் கூட ஹிந்துக்களும்,இன்னும் பல்வேறு மதத்தவர்களும், அவர்களின் கடவுளர்களின் பெயரால் பிராணிகளை அறுத்து பலியிடுவதை வணக்கமாகக் கருதுகிறார்கள்.கிருத்துவர்களும்  ஜீசஸ்  பெயரால் அறுத்து பலியிடுவதை இன்றும் காணலாம். 

இஸ்லாம் தொழுகையும், குர்பானியையும் இறைவனுக்காக மாத்திரம் நிறைவேற்ற வேண்டும் என அழுத்தம்,திருத்தமாக வலியுறுத்துகிறது.

 சூரா கவ்ஸரில்...

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ‏

எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.

இதே கருத்துப்பட சூரா அன்ஆமிலும்..

قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏

நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.(அல்குர்ஆன் : 6:162)

நாயகம் (ஸல்)அவர்களின் குர்பானி.

عَنْ أَنَسٍ قَالَ ضَحَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ، فَرَأَيْتُهُ وَاضِعًا قَدَمَهُ عَلَى صِفَاحِهِمَا يُسَمِّي وَيُكَبِّرُ، فَذَبَحَهُمَا بِيَدِهِ.

அனஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்.நபி(ஸல்) அவர்கள் இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கிடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவர்கள் தங்களின் பாதத்தை அவற்றின் பக்கவாட்டின் மீது வைத்துக்கொண்டு அல்லாஹ்வின்பெயர் கூறி,தக்பீர் (அல்லாஹ{ அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன் என்று) சொல்லி அவற்றைத் தம் கையால் அறுத்ததை பார்த்தேன்.(புஹாரி,முஸ்லிம்)

மற்றொரு ஹதீஸின் அடிப்படையில்....

1589- عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ أَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ عَشْرَ سِنِينَ يُضَحِّي.قَالَ أَبُو عِيسَى: هَذَا حَدِيثٌ حَسَنٌ.

நம்முடைய நபியவர்கள் மதீனாவில் 10 ஆண்டுகள் வாழ்ந்தார்கள் ஒவ்வொரு ஆண்டும் குர்பானி கொடுத்தார்கள்.            ( திர்மிதி)

இந்த நபிமொழி யின் மூலம் நபியவர்கள் எந்த ஆண்டும் குர்பானி கொடுக்காமல் இருந்ததில்லை எனக்கூறுகிறது. இவ்வாறு தொடர்ந்து வழமையாக நபி( ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்திருப்பது குர்பானியின் முக்கியத்துவத்தையும்,சிறப்பையும் உணர்த்துகிறது.

குர்பானி கொடுப்பவர், தம் கரங்களால் குர்பானிப் பிராணியை அறுப்பதே சிறப்பாகும்.

ஒரு ஹதீஸில் வருகிறது.

நாயகம் (ஸல்)அவர்கள் தங்களின் கடைசி (ஹஜ்ஜத்துல் விதாஃ) ஹஜ்ஜின் போது நூறு ஒட்டகங்களை  குர்பானி  கொடுத்தார்கள்.அவற்றில் எண்பது ஒட்டகங்களை தம் கரங்களால்  அறுத்து பலியிட்டார்கள்.மீதமுள்ளவற்றை ஸய்யதுனா அலி (ரலி) அவர்கள் அறுத்தார்கள். 

குர்பானி கொடுக்கவில்லை யானால்... 

ما رواه أحمد وأبو داود عن مخنف بن سليم أنّ النبيّ صلّى الله عليه وسلّم قال: (( يَا أَيُّهَا النَّاسُ، إِنَّ عَلَى أَهْلِ كُلِّ بَيْتٍ أُضْحِيَةُ كُلَّ عَامٍ )).

மஃக்னஃப் இப்னு ஸுலைம் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “மக்களே! உங்களில் (சொந்தமாக) வீடுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்டும் உள்ஹிய்யா கொடுக்க வேண்டும்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: அபூதாவூத், அஹ்மத் )

ما رواه أحمد وابن ماجه وغيرهما عن أبي هريرة رضي الله عنه عن النبيّ صلّى الله عليه وسلّم قال: (( مَنْ وَجَدَ سَعَةً فَلَمْ يُضَحِّ، فَلاَ يَقْرَبَنَّ مُصَلاّنَا )) [حديث حسن].

قال السّندي رحمه الله:" ليس المراد أنّ صحة الصلاة تتوقّف على الأضحية، بل هو عقوبة له بالطّرد عن مجالس الأخيار، وهذا يفيد الوجوب، والله تعالى أعلم ".

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “யார் உள்ஹிய்யா கொடுக்கிற அளவுக்கு வசதி வாய்ப்புகள் பெற்றிருந்தும் உள்ஹிய்யா கொடுக்க வில்லையோ, அவர் நம் தொழுமிடத்துக்கு வரவேண்டாம்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                                         ( நூல்: அஹ்மத், இப்னு மாஜா )

இந்த ஹதீஸிற்கு விளக்கம் தருகிற அஸ்ஸிந்தீ (ரஹ்) அவர்கள் “உள்ஹிய்யா கொடுப்பவரின் தொழுகை தான் நிறைவேறும் என்ற பொருளில் இந்த ஹதீஸை அணுகாமல் உள்ஹிய்யா கொடுப்பவர்களோடு இவர்கள் கலந்து விடுவதிலிருந்து தனித்து விடப்படவேண்டும் என்ற பொருளிலேயே இதை அணுக வேண்டும். மேலும், இது ஒரு வகையில் அவர்களைத் தண்டிப்பது போலவும் அமைந்திருக்கின்றது, மேலும், இந்த ஹதீஸை இவ்வாறு நோக்கும் பட்சத்தில் உள்ஹிய்யா வாஜிப் எனும் அந்தஸ்தைப் பெறுகின்றது. அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்” என்று கூறுகின்றார்கள்.

குர்பானி நாட்களில் சிறப்பான அமல்.

ما عمل ابن آدم يوم النحر عملا أحب إلى الله عزوجل من إهراق الدم و إنها لتأتي يوم القيامة بقرونها و أشعارها و أظلافها و أن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا ))  

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஆதமுடைய மகன் நஹ்ருடைய நாளில் செய்யும் செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானது உள்ஹிய்யா பிராணியின் இரத்தத்தை ஓட்டுவது தான். நாளை மறுமையில் அது அதன் முழு உருவில் வரும். (அதன் கொம்புடனும், அதன் முடிகளுடனும், அதன் சதைகளோடும் வரும்) திண்ணமாக, இந்தப் பூமியில் அதன் உதிரம் சேரும் முன்னரே அல்லாஹ்விடம் அது போய் சேர்ந்து விடுகின்றது. ஆகவே, நீங்கள் தூய மனதோடு உள்ஹிய்யாக் கொடுங்கள்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

(( يا رسول الله صلى الله علي وسلم ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم

قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة )) 

”நபித்தோழர்களில் சிலர் நபி {ஸல்} அவர்களிடம் இந்த உள்ஹிய்யாவினால் என்ன கிடைக்கும்? இதன் தாத்பரியம் என்னவென்று வினவினர். அப்போது நபி {ஸல்} அவர்கள் இது உங்களின் தந்தையான இப்ராஹீம் (அலை) அவர்களின் அழகிய நடைமுறையாகும். இந்த உள்ஹிய்யா பிராணியின் ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஒவ்வொரு நன்மைகள் கிடைக்கும்” என்று நபி {ஸல்} அவர்கள் பதிலளித்தார்கள்.

يا فاطمة قومي إلى أضحيتك فاشهديها فإن لك بكل قطرة تقطر من دمها أن يغفر لك ما سلف من ذنوبك قالت يا رسول الله ألنا خاصة آل البيت أو لنا و للمسلمين قال بل لنا و للمسلمين )) حديث منكر .

இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உள்ஹிய்யா தினத்தன்று அண்ணல் நபி {ஸல்} அவர்கள் தமது அருமை மகளாரிடம்

ஃபாத்திமாவே! எழுவீராக! உம்முடைய பிராணியிடத்தில் ஆஜராகுவீராக!

மேலும், நிச்சயமாக, எனது தொழுகையும், என்னுடைய வழிபாடுகளும், என்னுடைய வாழ்வும் என்னுடைய மரணமும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரியனவாகும். அவனுக்கோ யாரும் இணையில்லை. இவ்வாறே எனக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. மேலும், நான் இறைவனுக்கு கீழ்ப்படிவோரில் முதன்மையானவன்” என்று நீர் கூறுவீராக!

ஏனெனில் குர்பானிப் பிராணியின் முதலாவது சொட்டு இரத்தம் விழும்போதே உனது அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன.

மேலும் இந்தப் பிராணி மறுமை நாளில் இதனுடைய இரத்தமும் மாமிசமும் எழுபது மடங்கு கூடுதலாக கொண்டு வரப்படும். இதை உன்னுடைய மீஸானில் (நன்மைத் தட்டில்) வைக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இந்த பாக்கியம் உங்களுக்கும், உங்கள்  குடும்பத்தினருக்கு மட்டும் உரியதா? அல்லது எல்லா முஸ்லிம்களுக்கும் உரியதா? எனக் கேட்டார்கள்.

அப்போது நபி {ஸல்} அவர்கள் ”இது முஹம்மதுடைய குடும்பத்திற்கும் எல்லா முஸ்லிம்களுக்கும் பொதுவானதுதான்” என பதிலளித்தார்கள்.

يا أيها الناس ضحوا و احتسبوا بدمائها فإن الدم و إن وقع في الأرض فإنه يقع في حرز الله )) 

“மக்களே! நன்மையை எதிர்பார்த்து உள்ஹிய்யா கொடுங்கள். ஏனெனில், உள்ஹிய்யா பிராணியின் உதிரம் இப்பூமியில் விழுமுன் அல்லாஹ்வின் சந்நிதானத்தின் முன் விழுந்துவிடுகின்றது” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

عظموا ضحاياكم فإنها على الصراط مطاياكم 

”குர்பானிப் பிராணிகளில் மிகச் சிறப்பானதைக் கொடுங்கள். ஏனெனில் அது தான் மறுமையில் உங்களின் வாகனம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உயிருக்கு பகரமாகும் குர்பானி.

உலகில் எல்லா உம்மத்தினரும் அல்லாஹுவின் நெருக்கத்தை உண்டாக்கிக் கொள்ள குர்பானி கொடுத்துவந்தனர்.

ஜகாத் பொருளுக்கு பகரமாக தரப்படுவதை போல குர்பானி உயிருக்கு பகரமாகும். 

ஆதம்(அலை)அவர்களின் காலத்திலிருந்தே குர்பானி நடைமுறையில் இருந்தாலும்,

இப்ராஹீம்(அலை)அவர்கள் தம் மகனார் இஸ்மாயீல்(அலை)அவர்களை பலியிடத் தயாரன போது, அல்லாஹ்  அவருக்கு பகரமாக ஓர் ஆட்டை இறக்கி வைத்ததிலிருந்தே இந்த அமல் உயிருக்கு பகரமாக ஆனது.

قال ابن عباس: هو الكبش الذي تقرب به هابيل، وكان في الجنة يرعى حتى فدى الله به

إسماعيل.

وعنه أيضا: أنه كبش أرسله الله من الجنة كان قد رعى في الجنة أربعين خريفا.

அல்லாஹ் ஹாபிலுடைய ஆட்டை ஏற்றுக் கொண்டான் அதை சொர்க்கத்தில் 40 வருடங்கள் பாதுகாத்தான் அந்த ஆட்டைத்தான் இப்ராஹிம் நபி (அலை) அவர்கள் இஸ்மாயில் (அலை) அவர்களுக்கு பகரமாக பலியிட்டார்கள் -  நூல் : (தப்ஸீர் - இப்னு கஸீர் ).


குர்பானியின் சட்டம்

குர்பானியாக ஆடு,மாடு,ஒட்கை இம்முன்றில் ஒன்றை தரவேண்டும்.

وَلِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِّيَذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلٰى مَا رَزَقَهُمْ مِّنْ بَهِيْمَةِ الْاَنْعَامِ فَاِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ فَلَهٗۤ اَسْلِمُوْا‌ وَبَشِّرِ الْمُخْبِتِيْنَ ۙ‏

குர்பானி செய்வதை ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமையாக்கி இருக்கின்றோம். அல்லாஹ் கொடுத்திருந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் மீது அவன் பெயரைக் கூறி குர்பானி செய்யுங்கள். ஆகவே, உங்களுடைய இறைவன் (ஒரே) ஒருவன்தான். ஆதலால், அவன் ஒருவனுக்கே நீங்கள் முற்றிலும் கட்டுப்பட்டு நடங்கள். உள்ளச்சம் உடையவர்களுக்கு (நபியே!) நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.(அல்குர்ஆன் : 22:34)

இவ்வசனத்தில் இடம் பெறும்”அல்அன்ஆம்”” எனும் வார்த்தை ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகளை எடுத்துக் கொள்ளும்.

மேலும் நபி (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் இம்மூன்று வகைப் பிராணிகளைத் தவிர மற்றவை எதனையும் அவர்களின் வாழ்நாளில் குர்பானிக்காக கொடுத்ததில்லை.

குர்பானி கொடுக்க வசதியற்றவர்கள் குர்பானி கொடுப்பதாக எண்ணிக் கொண்டு கோழி, சேவலை அறுப்பது மக்ரூஹ். அது குர்பானியாக ஏற்படாது.

நூல் : ஆலம்கீரி, குலாஸாபக்கம் – 332

குர்பானி நம் உயிருக்கு பகரமாக தரப்படுவதால் உயர்வான சிறந்த பிராணியை தரவேண்டும்.

குர்பானி பிராணி குறைகள் அற்றதாகவும்,வயது பூர்த்தியானதாகவும் இருக்கவேண்டும்.

عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ، رَفَعَهُ قَالَ: لاَ يُضَحَّى بِالعَرْجَاءِ بَيِّنٌ ظَلَعُهَا، وَلاَ بِالعَوْرَاءِ بَيِّنٌ عَوَرُهَا، وَلاَ بِالمَرِيضَةِ بَيِّنٌ مَرَضُهَا، وَلاَ بِالعَجْفَاءِ الَّتِي لاَ تُنْقِي.

தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்பரா பின் ஆசிப் (ரலி)நூல் : திர்மிதீ(1417), அபூதாவூத்(4293), நஸயீ(4294) , இப்னுமாஜா (3135), அஹ்மத் (17777)

وَلَا تَجُوزُ الْعَمْيَاءُ وَالْعَوْرَاءُ الْبَيِّنُ عَوَرُهَا، وَالْعَرْجَاءُ الْبَيِّنُ عَرَجُهَا وَهِيَ الَّتِي لَا تَقْدِرُ أَنْ تَمْشِيَ بِرِجْلِهَا إلَى الْمَنْسَكِ، وَالْمَرِيضَةُ الْبَيِّنُ مَرَضُهَا، وَمَقْطُوعَةُ الْأُذُنَيْنِ وَالْأَلْيَةِ وَالذَّنَبِ بِالْكُلِّيَّةِ، وَاَلَّتِي لَا أُذُنَ لَهَا فِي الْخِلْقَةِ، وَتُجْزِئُ السَّكَّاءُ وَهِيَ صَغِيرَةُ الْأُذُنِ فَلَا تَجُوزُ مَقْطُوعَةُ إحْدَى الْأُذُنَيْنِ بِكَمَالِهَا وَاَلَّتِي لَهَا إذْنٌ

குருடானவை, அறவே நடக்க முடியாதவை காதுகள் துண்டிக்கப்பட்டவை, காதுகள் அறவே இல்லாதவை,வால், பித்தட்டு துண்டிக்கப்பட்டவை, மேயத் தெரியாதவை, மூக்கு துண்டிக்கப்பட்டவை, மடி துண்டிக்கப்பட்டவை, கன்றுக்கு பால் கொடுக்க முடியாதவை, பால் வற்றியவை, நாக்கு இல்லாதவை,நஜீஸைத்தவிர மற்றதை சாப்பிடாதவை ஒரு கால் துண்டிக்கப்பட்டவை ஆகியன குர்பானி கொடுக்கக்கூடாது.

(நூல் : துர்ருல்முக்தார் , ஆலம்கீரி, பக்கம் – 330)

عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ: أَمَرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَشْرِفَ العَيْنَ وَالأُذُنَ، وَأَنْ لاَ نُضَحِّيَ بِمُقَابَلَةٍ، وَلاَ مُدَابَرَةٍ، وَلاَ شَرْقَاءَ، وَلاَ خَرْقَاءَ.

பிராணிகளின் கண்களையும், காதுகளையும், கவனித்துத் தேர்வு செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். சிறிதளவு காது வெட்டப்பட்டவை, காது கிழிக்கப்பட்டவை, காதில் துவாரமிடப்பட்டவை ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள்  (திர்மிதீ 1532,)

குர்பானி உயர்ந்த நோக்கத்திற்காக தரப்படுவதால்,உளத்தூய்மை மிக அவசியமாகும்.

لَنْ يَّنَالَ اللّٰهَ لُحُـوْمُهَا وَلَا دِمَآؤُهَا وَلٰـكِنْ يَّنَالُهُ التَّقْوٰى مِنْكُمْ‌ كَذٰلِكَ سَخَّرَهَا لَـكُمْ لِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ‌ وَبَشِّرِ الْمُحْسِنِيْنَ‏

(எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!(அல்குர்ஆன் : 22:37)

அல்லாஹ் நம் எண்ணங்களை அழகாக்கியும்,நம் குர்பானியை சிறந்ததாகவும் ஆக்கி வைப்பானாக!ஆமீன்...

வெளியீடு: செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.


Wednesday, 15 June 2022

ஜும்ஆ பயான் 17/06/2022

ஹஜ் எனும் கடமை. 

وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ

“இன்னும், ஹஜ்ஜுக்காக மனிதர்களுக்கு அறிவிப்பு ஒன்றை விடுப்பீராக! நடந்தவர்களாக அவர்கள் உம்மிடம் வருவார்கள். இன்னும், மெலிந்த எல்லா ஒட்டகத்தின் மீதும் அவர்கள் வருவார்கள். அவை வெகுதூரமான எல்லா வழிகளில் இருந்தும் அவர்களைக் கொண்டு வரும்”. ( அல்குர்ஆன்: 22: 27 )

மனிதன் மேற்கொள்ளும் பயணங்களை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று பிழைப்புக்குப் பொருளீட்ட மேற்கொள்ளும் பயணம். அடுத்ததோ பொழுதுபோக்குக்கான பயணம். பயணங்கள் இரண்டானாலும், இவற்றில் தன்னலமும் இச்சைகளுமே மிகுந்திருக்கின்றன. இவையே அவனை வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டுச் செல்லத் தூண்டுகின்றன.

அன்பான உற்றார், உறவுகளைவிட்டு பல ஆயிரம் மைலுக்கு அப்பால் அனுப்புவதும் தன் நலன்சார்ந்த காரணங்களாகவே இருக்கும். இதில் அர்ப்பணம் என்றிருக்க வாய்ப்பில்லை. ஆனால், ஹஜ் பயணம் இவை எல்லாவற்றையும்விட முற்றிலும் மாறானது. இது இறைவனுக்காகவே மேற்கொள்ளப்படும் பயணம்.

மேலும் (ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் நன்மையானது, தக்வா (என்னும் பயபக்தியே) ஆகும்எனும் (2:197) 

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

யமன் வாசிகள் (ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருள்களைச் சேகரிக்காமல் ஹஜ்ஜுக்கு வருவார்கள்; மேலும் நாங்கள் இறைவன் மீது நம்பிக்கை வைத்துள்ளோம் என்றும் கூறுவார்கள். மக்கா வந்தடைந்தால் மக்களிடம் யாசகம் கேட்பார்கள். இது குறித்தே அல்லாஹ் (ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள், நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் நன்மையானது தக்வா (என்னும் பயபக்தியே) ஆகும்’ என்ற வசனத்தை இறக்கினான்.

முதல் ஆலயம்....

மனிதர்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்பதற்காக முதலில் கட்டப்பட்ட இறையில்லம் மக்காவிலுள்ள'கஅபா' ஆலயமாகும்.

إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ 

“அகிலத்தின் நேர்வழிக்கு உரியதாகவும்,பாக்கியம் பொருந்தியதாகவும்மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா (எனும் மக்கா) வில்உள்ளதாகும்”.                   ( அல்குர்ஆன்: 3: 96 )

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ ، ثنا عَبْدُ اللَّهِ ، ثناأَبُو مُعَاوِيَةَ ، وَعِيسَى بْنُ يُونُسَ ، قَالا : ثنا الأَعْمَشُ , عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ ، عَنْأَبِيهِ ، عَنْ أَبِي ذَرٍّ

 قَالَ : قُلْتُ : " يَا رَسُولَ اللَّهِ أَيُّ مَسْجِدٍ وُضِعَ فِي الأَرْضِ أَوَّلُ ؟ قَالَ : الْمَسْجِدُ الْحَرَامُ . قَالَ : قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ثُمَّ أَيُّ ؟ قَالَ : الْمَسْجِدُ الأَقْصَى . قَالَ : قُلْتُ : كَمْ بَيْنَهُمَا ؟ قَالَ : أَرْبَعُونَ سَنَةً ، وَأَيْنَمَا أَدْرَكْتَ الصَّلاةَ فَصَلِّ , فَإِنَّمَا هُوَ مَسْجِدُكَ " .

அபூதர் (ரலி)  அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நான் நபி {ஸல்} அவர்களிடம் ''பூமியில் முதலில் அமைக்கப்பட்ட பள்ளி எது?'' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல் மஸ்ஜிதுல் ஹராம்' (கஅபா) என்றுகூறினார்கள். பிறகு எது? என்றேன். 'அல் மஸ்ஜிதுல் அக்ஸா' என்று கூறினார்கள். ''இந்த இரண்டிற்கும் மத்தியில் எத்தனை (வருடங்கள் இடைவெளி?)'' என்று கேட்டேன். ''நாற்பது வருடங்கள்'' என்று நபி {ஸல்} கூறினார்கள்.   ( நூல்: புகாரி 3366 )

கஃபதுல்லாஹ்வின் சிறப்பு.

கஃபா வெறுமனே கருப்பு அங்கி போர்த்தப்பட்ட ஆன்மீக தலம் என்பது மாத்திரம் அல்ல,

மலக்குகள்,இறைநேசச் செல்வர்கள்,முஃமீன்கள் அனைவரின் ஆன்மீக தலைமையகம்.

மனிதன் பூமிக்கு வருவதற்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மலக்குகளால் கஃபா கட்டப்பட்டு,தவாஃப் செய்யப்பட்டுவந்தது.பின்பு ஆதம் அதனை கட்டும் பாக்கியம் பெற்றார்கள்.

அதன் பின்பு இப்ராஹீம்(அலை)அவர்கள்,இஸ்மாயீல்(அலை)இருவரின் மீள் உருவாக்கம் பிரபல்யமானதாகும்.

கஃபதுல்லாஹ், இஸ்லாமியர்கள் தொழுகை துவங்கி எல்லா நல்அமல்களுக்கும் முன்னோக்கும் முக்கிய அம்சமாகும்.

مَنۡ نَظَرَ اِلَی الۡكَعۡبَةِ اِيۡمَانًا وَّ تَصۡدِيۡقًا خَرَجَ مِنَ الۡخَطَا يَا كَيَوۡمٍ وَلَدَتۡهُ اُمُّهٗ

"எவர் கஃபாவை ஈமானோடும்,உண்மையான உள்ளத்தோடும் பார்ப்பாரோ,

அவர் அன்று அவரின் தாய் பெற்றெடுத்த பாலகனைப் போல பாவங்களிலிருந்து வெளியேறிவிடுவார்"என கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் சொன்னார்கள்

ஹஜ் செய்வதின் சிறப்பு

அப்துர் ரஹ்மான் பின் ஷுமாசா அல்மஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இறப்பின் நெருக்கத்தில் இருந்த அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவர்கள் நீண்ட நேரம் அழுதார்கள். பிறகு அவர்கள் சுவரை நோக்கித் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். அப்போது அவர்களுடைய புதல்வர், "அருமைத் தந்தையே! தங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்னின்ன நற்செய்திகளைக் கூறவில்லையா?" என்று கேட்டார். உடனே அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் தமது முகத்தை (தம் புதல்வரை நோக்கி)த் திருப்பி (பின்வருமாறு) கூறினார்கள்: "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்" என்றும் உறுதி கூறியதே நமது சேமிப்புகளில் சிறந்தது ஆகும். நான் (என் வாழ்நாளில்) மூன்று கட்டங்களைக் கடந்து வந்திருக்கிறேன்.

(முதலாவது கட்டத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது கடுமையான வெறுப்புக் கொண்டவர் என்னைவிட வேறெவரும் இருக்கவில்லை என்றே நான் கருதினேன். என்னால் இயன்றால் அவர்களைக் கொன்றுவிட வேண்டும் என்பதே எனக்கு மிகவும் விருப்பமான விஷயமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் மட்டும் நான் இறந்துவிட்டிருந்தால் நான் நரகவாசிகளில் ஒருவனாக ஆகியிருப்பேன்.

(இரண்டாவது கட்டத்தில்) அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தை ஊட்டினான். அப்போது நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று "உங்கள் வலக் கரத்தை நீட்டுங்கள். நான் உங்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிக்கிறேன்" என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் தமது வலக் கரத்தை நீட்டினார்கள். உடனே நான் எனது கையை இழுத்துக்கொண்டேன். நபி (ஸல்) அவர்கள், "அம்ரே! உமக்கு என்ன ஆயிற்று?" என்று கேட்டார்கள். நான், "சில நிபந்தனைகளை விதிக்க விரும்புகிறேன்" என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், "என்ன நிபந்தனை விதிக்கப்போகிறீர்?" என்று கேட்டார்கள். "என் (முந்தைய) பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும்" என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும்; ஹிஜ்ரத்தும் (மார்க்கத்திற்காக நாடுதுறத்தல்) முந்தைய பாவங்களை அழித்துவிடும்; ஹஜ்ஜும் முந்தைய பாவங்களை அழித்துவிடும் என்று உமக்குத் தெரியாதா?" என்று கேட்டார்கள். (பிறகு நான் இஸ்லாத்தைத் தழுவினேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட மிகவும் பிரியமானவர் வேறெவரும் எனக்கு இருக்கவில்லை; எனது பார்வைக்கு அவர்களை விட மிகவும் கண்ணியமானவர் வேறெவரும் இருக்கவில்லை. அப்போது அவர்கள்மீது நான் வைத்திருந்த மரியாதையினால் என் கண்கள் நிரம்ப அவர்களைப் பார்க்கக்கூட என்னால் முடியவில்லை. அவர்களை வர்ணித்துக் கூறும்படி நான் கேட்டுக்கொள்ளப்பட்டால் அதற்கும் என்னால் இயலாது. ஏனெனில், நான் அவர்கள்மீது வைத்திருந்த மரியாதையின் காரணத்தால் என் கண்கள் நிரம்ப அவர்களை நான் பார்த்திருக்கவிலலை. அந்த நிலையில் நான் இறந்திருந்தால் சொர்க்கவாசிகளில் ஒருவனாக ஆகியிருப்பேன் என்றே எதிர் பார்க்கிறேன்.

பிறகு (மூன்றாவது கட்டத்தில்) பல்வேறு பொறுப்புகளை நாம் வகித்தோம். அவற்றில் எனது நிலையென்ன என்பது எனக்குத் தெரியாது. எனவே, நான் இறந்துவிட்டால் ஒப்பாரி வைப்பவரோ நெருப்போ என் சடலத்தோடு இருக்கலாகாது. என்னை (குழிக்குக்குள் வைத்து) நீங்கள் அடக்கம் செய்யும்போது என்மீது மண்ணைத் தள்ளுங்கள். பிறகு ஓர் ஒட்டகத்தை அறுத்து அதன் இறைச்சியைப் பங்கிடும் நேரம் அளவுக்கு நீங்கள் அடக்கத்தலத்தைச் சுற்றி நில்லுங்கள். உங்களால் நான் ஆசுவாசமடைவேன்; என் இறைவனின் தூதர்க(ளான வானவர்க)ளிடம் நான் என்ன பதிலளிப்பது என்பதையும் கண்டுகொள்வேன். ( இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம் 192)

ஹஜ்ஜை கடமையாக்கும் அருள்மறை வசனங்கள்..

 وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا ‌ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنِ الْعٰلَمِيْنَ‏

 இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 3:97)

وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِ 

ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (அல்குர்ஆன் : 2:196)

ஹஜ்ஜின் சிறப்பு பற்றிய ஹதீஸ்கள்.

1521- حَدَّثَنَا آدَمُ ، حَدَّثَنَا شُعْبَةُ ، حَدَّثَنَا سَيَّارٌ أَبُو الْحَكَمِ قَالَ : سَمِعْتُ أَبَا حَازِمٍ قَالَ : سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ :

مَنْ حَجَّ لِلَّهِ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ.

“உடலுறவு மற்றும் பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவன் அவனது தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாத பாலகனாக) திரும்புவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி-1521)

- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَرِيفٍ ، حَدَّثَنَا عِمْرَانُ بْنُ عُيَيْنَةَ ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ ، عَنْ مُجَاهِدٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، عَنِ النَّبِيِّ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ قَالَ :

الْغَازِي فِي سَبِيلِ اللهِ ، وَالْحَاجُّ وَالْمُعْتَمِرُ ، وَفْدُ اللهِ ، دَعَاهُمْ ، فَأَجَابُوهُ ، وَسَأَلُوهُ ، فَأَعْطَاهُمْ.

“அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர், ஹஜ் செய்பவர், உம்ரா செய்பவர் ஆகியோர் அல்லாஹ்வின் சிறப்பு விருந்தினர்கள் ஆவர். அவன் அவர்களை அழைத்தான். அவர்கள் பதிலளிக்கின்றனர். அவனிடம் அவர்கள் பிரார்த்தித்தார்கள். அவர்களுக்கு அவன் வழங்கி விடுகின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: இப்னு மாஜா-2893 (2884)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ ، وَمُوسَى بْنُ إِسْمَاعِيلَ ، قَالاَ : حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ قَالَ : حَدَّثَنَا ابْنُ شِهَابٍ ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ،

أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم سُئِلَ أَيُّ الْعَمَلِ أَفْضَلُ فَقَالَ إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ قِيلَ ثُمَّ مَاذَا ؟ قَالَ : الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ قِيلَ ثُمَّ مَاذَا ؟ قَالَ : حَجٌّ مَبْرُورٌ.

“செயல்களில் சிறந்தது எது?” என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “ஏற்றுக் கொள்ளப்படும் ஹஜ்” என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி-26 

ஹஜ் சொல்லும் பாடம்.

மக்காவுக்கு ஹஜ் பயணம் செல்ல விரும்பும் ஒவ்வொருவரும் ‘இஹ்ராம்’ என்றழைக்கப்படும் எளிமை மிக்க ஒரு வெள்ளாடையுடன் போர்வை, காலணிகளை உடைமைகளாக்கிக் கொள்ள வேண்டியிருக்கும். இறைவனின் திருமுன் உடலாலும் உள்ளத்தாலும், எளிமையாக இருங்கள் என்பதே இதன் செய்தி.

ஹஜ்,பல சூட்சுமங்களையும் எண்ணற்ற ஆன்மீக தத்துவங்களையும் தன்னகத்தே தாங்கியிருக்கும் உயர்ந்த உன்னதமான ஓர் வணக்கமாகும்.

ஹஜ்ஜில் ஒவ்வோர் எட்டுமே இறைகாதலின் வெளிப்பாடாகும்.

ஹஜ் என்பதே அல்லாஹ்வின் பூர்வீக ஆலயம் கஃபா ஷரீஃபை தரிசிப்பதும்,மக்க மாநகரை நோக்கிய பயணமேயாகும்.

அல்லாஹ்வின் நேசத்திற்குறிய நபிமார்களும்,ரஸுல்மார்களும் மக்காவிற்கு பயணம் மேற்கொண்டு,இறை ஆலயத்தை தரிசிக்கும் சிறப்பை பெற்றார்கள்.

ஹழ்ரத் ஆதம் (அலை)அவர்கள் துவங்கி ஹழ்ரத் இப்ராஹீம் (அலை)அவர்கள்,இஸ்மாயீல்(அலை)அவர்கள் இறுதியாக நம் கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் வரை பல நபிமார்களின் அழகிய அடிச்சுவடி களை இப்புனித மண் தாங்கி நிற்கின்றது.

ஹழ்ரத் இஸ்மாயீல் (அலை)அவர்களின் குர்பானி வெளிப்பட்ட இடம்,மகாமே இப்ராஹீம் எனும் இடம்,ஜம் ஜம் நீரூற்று,அன்னை ஹஜ்ரா அம்மையார் திக்குத்தெரியாமல் ஓடிய ஸஃபா,மர்வா.சுவனத்திலிருந்து இறக்கியருளப்பெற்ற அஜ்ருல் அஸ்வத் இவையனைத்தும் இங்கு தான் உள்ளன.

இவையனைத்தையும் விடவும் நம் கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் பிறந்த,வாழ்ந்த ஊரும்,நபிக்கு மிக விருப்பமான ஊரும் மக்க மாநகரமாகும்.

ஹஜ் என்பது தொழுகை,நோன்பு,(ஸதகா)தானதர்மங்கள்,குர்பானி போன்ற எல்லா அமல்களும் நிறைந்த பரிபூரண வணக்கமாகும்.இதனால் தான் இதற்கு இறுதிக் கடமை என்று பெயர்.

ஹஜ்ஜிலே உலகெங்கிலுமிருந்து பல இனத்தவர்,பல்வேறு மொழிபேசுவோர், பல நிறத்தவர்,பல தேசத்தவர் என்கிற எந்த பேதமும் இன்றி அனைவரும் ஒரே இறைவனின் திருப்பொருத்தத்தை மாத்திரம் நாடி ஒன்றுக்கூடும் உலகின் ஒரே புனித தலம் மக்காவிலே உள்ள இறையில்லமாம் கஃபதுல்லாஹ் ஆகும்.

ஹஜ்ஜில் உயர்ந்தோர்,தாழ்ந்தோர் என்கிற எந்த பாகுபாடும் கிடையாது.அனைவரும் ஒரே தாய்,தந்தையரின் பிள்ளைகள் என்பதனை பறைசாற்றும் விதமாக இஹ்ராம் ஆடையை தான் அணியவேண்டும்.

ஒரே அல்லாஹ்,ஒரே ரஸுல்,ஒரே வேதம்,ஒரே கஃபா என்பனவற்றை ஈமான் கொண்டோர் ஒரே அமைப்பிலும்,ஒரே ஆடையிம்,ஒரே தோற்றத்திலும்,ஓர் அணியில் ஒன்றுபட வேண்டும் என அல்லாஹ் விரும்புகிறான்.

ஹாஜிகளின் தல்பியா...

இதோ ஹஜ்ஜின் காலம் துவங்கிவிட்டது உலகில் முளைமுடுக்குகளிலிருந்து ஹாஜிகள் لَبَّیْکَ اَللّٰھُمَّ لَبَّیْکَ என்ற தல்பியாவை முழங்கியவர்களாக இறையில்லத்தை நோக்கி புறப்பட்டு செல்கின்றனர்.

ஹாஜிகள் لَبَّیْکَ اَللّٰھُمَّ لَبَّیْکَ "வந்துவிட்டேன் இறைவா"என்று தல்பியா சொல்வதற்கு பின்னனியில் ஒரு சுவாரஸ்யமான வரலாறு உள்ளது.

لما فرغ إبراهيم من بناء البيت قيل له : ( أذن في الناس بالحج ) قال : رب وما يبلغ صوتي ؟ قال : أذن وعلي البلاغ

ஹழ்ரத் இப்ராஹீம்(அலை)அவர்கள் கஃபதுல்லாஹ்வை கட்டி முடித்ததும் அல்லாஹ் சொன்னான்;இப்ராஹீமே!ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக!

இப்ராஹீம்(அலை)அவர்கள் கேட்டார்கள்:"ரப்பே!எனது சப்தம் (அழைப்பு)எப்படி (எல்லோருக்கும் போய்)சேரும்"

இறைவன் சொன்னான்;நீர் அறிவிப்புச் செய்யும்,அதனை கொண்டு சேர்க்கும் பொறுப்பு என்னுடையது.

 عن ابن عباس قوله : ( وأذن في الناس بالحج ) قال : قام إبراهيم خليل الله على الحجر ، فنادى : يا أيها الناس كتب عليكم الحج ، فأسمع من في أصلاب الرجال وأرحام النساء ، فأجابه من آمن من سبق في علم الله أن يحج إلى يوم القيامة : لبيك اللهم لبيك

ஹழ்ரத் இப்ராஹீம் (அலை)அவர்கள் ஒரு குன்றின் மீது ஏறி நின்று உலகமாந்தர்களை நோக்கி அழைப்புக்கொடுக்கிறார்கள் "மனிதர்களே!உங்களின் மீது ஹஜ் கடமையாகிவிட்டது.

(அவர்களின் இவ்வழைப்பை அல்லாஹ்)ஆண்களின் முதுகந்தண்டில் உள்ளவர்களையும்,பெண்களின் கருவிலே உள்ளவர்களையும் கேட்கச்செய்தான்.

கியாம நாள் வரையுள்ளவர்களில் யாரையெல்லாம் ஹஜ்ஜீ செய்ய அல்லாஹ் நாடினானோ அவர்கள் "லெப்பைக்"என அதற்கு பதிலளித்தனர்.

இவ்வழைப்பு உலகில் உள்ளவர்கள் மாத்திரம் அல்ல "ஆலமே அர்வாஹில்"இருந்த உயிர்களும் செவியுற்றன.யாரெல்லாம் அதற்கு பதிலளித்தனரோ,எத்தனை முறை பதிலளித்தனரோ அத்தனை முறை ஹஜ் செய்யும் வாய்ப்பை அல்லாஹ் வழங்கிவிடுகின்றான்.

அஜ்ருல் அஸ்வத் கல்.

அஜ்ருல் அஸ்வத் என்பது கஃபாவின் கிழக்கு ஓரத்தில் பதிக்கப்பட்டுள்ள கரு நிறக்கல்லாகும்.சுவனத்திலிருந்து இறக்கியருளப்பெற்றது.இறங்கிய சமயம் முற்றிலும் வெண்மையாக இருந்த அக்கல்,மனிதர்களின் பாவங்களால் கருப்பாகிவிட்டது.

ஒரு தடவை ஹழ்ரத் உமர் ஃபாருக் (ரலி)அவர்கள் தவாஃப் செய்துக்கொண்டிருக்கையில்,அஸ்வத் கல்லுக்கருகில் வந்ததும்,அதற்கு முத்தமிட்டு விட்டு சொன்னார்கள்:"நீ பயனையோ,குறைவையோ தரவியலாத (சாதாரண)கல்.நாயகம் (ஸல்)அவர்கள் உன்னை முத்தமிட்டதால் நானும் முத்தமிடுகிறேன்"

உடனே அருகில் இருந்த ஹழ்ரத் அலி(ரலி)அவர்கள் உமர்(ரலி)அவர்களிடம் "உமரே!அப்படி சொல்லாதீர் மாறாக இது பயனளிக்கவும் செய்யும்,குறைஏற்படுத்தவும் செய்யும்."

ஆம் நாயகம் (ஸல்)அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்;அஸ்வத் கல்லிற்கு இரு கண்கள் உண்டு,அதனால் தன்னை முத்தமிடுபவர்களையும்,தொடுபவர்களையும் காணூகிறது.நாளை மறுமையில் அவர்களுக்காக சாட்சிக் கூறும்" எனக் கூறினார்கள்(நூல்: திர்மிதீ)

மகாமே இப்ராஹீம்(அலை).

இப்ராஹீம்(அலை)அவர்களுக்கு இஸ்மாயீல்(அலை)அவர்கள் உதவுபுரிய இதன் மீது நின்றுதான் கஃபாவை கட்டினார்கள்.

இதையே அல்லாஹ் குர்ஆனில்...  وَاتَّخِذُوْا مِنْ مَّقَامِ اِبْرٰهٖمَ مُصَلًّى‌  وَعَهِدْنَآ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ اَنْ طَهِّرَا بَيْتِىَ لِلطَّآٮِٕفِيْنَ وَالْعٰكِفِيْنَ وَالرُّکَّعِ السُّجُوْدِ‏

இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.(அல்குர்ஆன் : 2:125)

நாயகம் (ஸல்)அவர்கள் சொன்னார்கள்;"எவர் மகாமே இப்ராஹீமுக்கு அருகில் இரு ரகஅத் தொழுவாரோ,அல்லாஹ் அவரின் முன்,பின் பாவங்களை மான்னிப்பான்"

அரஃபா பெருவெளி

மக்காவிற்கு தென்கிழக்கில் சிறிய மலைக்கும் அதனை சுற்றியுள்ள மைதானாத்திற்கும் அரஃபா என்று சொல்லப்படும்.ஹஜ்ஜில் இங்கு தங்குவது கட்டாயக்கடமையாகும்.ஒரு நொடிக்கூட அந்நாளில் தங்கவில்லையெனில் ஹஜ் நிறைவேறாது.

நாயகம் (ஸல்)அவர்கள் தங்களின் ஹஜ்ஜத்துல் விதாஃவிலே இறுதிப்பேருரையை இங்கு தான் நிகழ்த்தினார்கள்.

ஹழ்ரத் ஆதம்(அலை) அவர்களும்,ஹவ்வா(அலைஹா)அவர்களும் பூமிக்கு வந்து 200ஆண்டுகள் கழித்து முதன்முதலில் இந்த இடத்தில் தான் சந்தித்துக்கொள்கின்றனர். அதனை நினைவுக்கூறும் விதமாகவே இவ்விடத்திற்கு "அரஃபா" எனப்படுகிறது.

துல்ஹஜ் பிறை 9ல் ஹாஜிகள் இவ்விடத்தில் திக்ரு,துஆ, தரூத்,இஸ்திக்ஃபார்  போன்ற நல்அமல்களில் ஈடுப்படுவார்கள்.

அடுத்து முஸ்தலிஃபா,மினா போன்ற பல்வேறு சிறப்புக்குறிய இடங்கள் உள்ளன, அல்லாஹ் குர்ஆனில் இவற்றை அல்லாஹுவின் புராதண அடையாளச் சின்னங்கள்,கண்ணியப்படுத்துங்கள் என்கிறான்.

ذٰلِكَ وَمَنْ يُّعَظِّمْ شَعَآٮِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ‏

இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,) எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும்.(அல்குர்ஆன் : 22:32)

அல்லாஹ்வின் நெருக்கத்தையும், அன்பையும் பெற்றுத்தரும் உயர்ந்த உன்னதமான ஹஜ்ஜையும்,அங்கு சென்று நம் கண்மணி நாயகத்தின் ஸியாரத்தையும்,நபிமார்கர்களின் தியாகத்தையும் காணும் நல்வாய்ப்பை அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்கிடுவானாக!ஆமீன்

வெளியீடு: செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Wednesday, 25 May 2022

ஜும்ஆ பயான் 27/05/2022

மாமன்னர் அவ்ரங்கசீப் ஆலம்கீர் (ரஹ்)அவர்கள்.

  فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ‏

ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக.    (அல்குர்ஆன் : 7:176)

இந்திய தலைநகர் டில்லியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓரு சாலைக்கு இந்த மண்ணை ஆண்ட மாபெரும் பேரரசரின் பெயர் "அவ்ரங்கசீப் ஆலம்கீர்"என்று வைக்கப்பட்டுள்ளது. 

இந்த பெயர் மததுவேஷமுள்ள பாசிசஆட்சியர்களின் உள்ளத்தை உறுத்த, அப்பெயரை தந்திரமாக அப்துல்கலாம் சாலை என்று மாற்றிவிட்டனர்.

அவ்ரங்கசீப் "கொடுங்கோண்மையான ஆட்சியாளர்" என்றும்,கோவில்களை இடித்தார் என்றும், இந்து மத விரோதியாக அவரை சித்தரிக்கின்றனர்.

உண்மையிலே அவ்ரங்கசீப் என்பர் யார்?அவரை இவர்கள் இவ்வளவு மூர்க்கமாக எதிர்ப்பதற்குறிய காரணம் என்ன என்பதனை நாம் அறிந்துக்கொள்வது காலத்தின் கட்டாயம்.

உண்மையை உரக்க சொல்லும் வரலாற்றாசிரியர்கள் "முகலாயமன்னர்களில் அவ்ரங்கசீப் பௌர்ணமி நாளின் பூரணச் சந்திரன்"என வருணிப்பார்கள்.

உலகில் தலைச்சிறந்த மாமன்னர்களில் ஒருவராக போற்றப்படும் அவ்ரங்கசீப் ஆலம்கீர்(ரஹ்)அவர்களின் மீது சேற்றைவாரி இரைக்கும் காரியத்தை திட்டமிட்டு செய்கின்றனர்.

இந்தய வரலாற்றை மாற்றுவோம் எனக் கூறி திரிக்கபட்ட புதிய வரலாற்றை மாற்றிஎழுத முயற்சிக்கின்றனர்.எனவே உண்மை வரலாற்றை அறிந்து, அதனை எடுத்து சொல்வோம். 

இந்தியாவில் இஸ்லாமியர்களின் ஆட்சி 800 ஆண்டுகள் என்றால்  அதில் பெரும் பகுதி, ஒரு சிறிய இஸ்லாமிய கோத்திரத்தவர்களான முகலாயர்கள் மிக நீண்ட காலம் கிட்டத்தட்ட 317 ஆண்டுகள்(கி.பி 1524 முதல் 1857 வரை) ஆட்சி செய்தனர்.

முகலாயர்களில் சிறந்த ஆட்சியளர்,பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்தவர் என்ற சிறப்பு அவ்ரங்கசீப் ஆலம்கீர் (ரஹ்)அவர்களையே சாரும்.

முகலாய மன்னர்கள் இந்தியவில் உள்ள பல பகுதிகளை ஆட்சி செய்திருந்தாலும்.யாருமே ஒட்டுமொத்த இந்தியாவை ஆளவில்லை.

ஆனால் அவ்ரங்கசீப் ஆலம்கீர் (ரஹ்)அவர்களின் ஆட்சி,மேற்கில் கஷ்மீர் மற்றும் பாகிஸ்தானை கடந்து ஆப்கானிஸ்தான் வரையிலும்,கிழக்கில் வங்கதேசம் வரையிலும்,தெற்கே தமிழ் நாடு வரையிலும் பரந்துவிரிந்திருந்தது.

இயற்பெயர் மற்றும் பிறப்பு.

அவ்ரங்கசீப் (ரஹ்)அவர்களின் இயற்பெயர்;முஹ்யித்தீன் அபுல் முளஃப்பர் முஹம்மது அவ்ரங்கசீப் (ரஹ்)என்பதாகும்.

مُحِیُّ الدین ابوالمظفرمحمد اورنگ زیب عالمگیر رحمۃ اللہ تعالٰی علیہ

முஹம்மது அவ்ரங்கசீப் (ரஹ்)அவர்கள் துல்கஃதா பிறை15 ஹிஜ்ரி 1027 அக்டோபர் 24ஆம் தேதி 1618 ஆம் வருடம் குஜ்ராத் மாநிலம் Dahod தஹோத் எனும் ஊரில் மன்னர் ஷாஹ்ஜஹான்,மும்தாஜ் தம்பதியருக்கு மகனாக பிறக்கிறார்கள்.

அவ்ரங்கசீப் (ரஹ்)அவர்களின் மார்க்க பற்று.

ஹழ்ரத் முஜத்திதே அல்ஃப தானி (ரஹ்)அவர்களின் சீடர் ஹழ்ரத் க்வாஜா முஹம்மது மஃஸும் ஸர்ஹிந்தி(ரஹ்)அவர்களிடம் (பைஅத்)ஆன்மீக தீட்சண்யம் பெறுகிறார்கள்.

அவ்ரங்கசீப்(ரஹ்)அவர்கள் மார்க்கம் பயின்ற ஆலிம்,ஃபாஸிலாகவும், இறைசிந்தனையில் ஆபிதாகவும்,துறவுவாழ்வை மேற்கொள்பவராகவும்,குர்ஆன் பிரதியை எழுதி விற்பது மற்றும் தொப்பி தைக்கும் வருமானாத்தில்  எளிமையான வாழ்வை மேற்க்கொள்ளும் மன்னராக திகழ்ந்தார் என்பதனை அவரை விமர்சிக்கும் வரலாற்றாசிரியர்களே எழுதிவைத்திருக்கின்றனர்.

ஒரு தடவை ஹழ்ரத் (ரஹ்)அவர்கள் சிறுபிராயத்திலே ஹாஃபிளாகிவிட்ட தன் மகனுக்கு துஆவேண்டி அவர்களின் தந்தை ஷாஹ்ஜஹான்(ரஹ்)அவர்களிடம் அழைத்து செல்கிறார்கள்.

ஹாஃபிளான தன் பேரக்குழந்தையை கண்டு ஷாஹ்ஜஹான்(ரஹ்)அவர்கள் அழஆரம்பித்துவிட்டர்கள்.ஏன் அழுகிறீர்கள் எனக் கேட்க, ஷாஹ்ஜஹான்(ரஹ்)அவர்கள்"ஹாஃபிளின் பெற்றொருக்கு நாளை மறுமையில் சூரியனை விட பிரகாசமான கிரீடம் அணிவிக்கப்படும்.

உன் மகன் ஹாபிள் என்பதால் உனக்கு அப்பாக்கியம் கிடைக்கும,உனை ஹாஃபிளாக்கியிருந்திருந்திருந்தால் எனக்கும் அப்பாக்கியம் கிடைத்திருக்குமே என நினைத்து அழுகிறேன்"என்றார்கள்.

இதனை கேட்டு கலங்கிய ஹழ்ரத் அவர்கள் வெறும் ஆறே மாதத்தில் முழுக்குர்ஆனையும் மனனம் செய்து ஹாஃபிளாகிவிட்டு வந்து தன் தந்தையிடம் உங்களுக்கும் அப்பாக்கியம் கிடைக்கும் என்றார்கள்.

இப்போது ஷாஹ்ஜஹான் தம் மகனைக் கண்டு ஆனந்தக்கண்ணீர்வடித்தார்கள்.

ஃபதாவா ஆலம்கீர்.

ஹழ்ரத் அவர்களின் ஆட்சி காலத்தில் அன்னவர்கள் ஆற்றிய மாபெரும் மார்க்கச் சேவை ’’فتاویٰ عالمگیری‘‘ ஃபதாவா ஆலம்கீர் எனும் பெயரில் ஹனஃபி மத்ஹப் சட்டங்களை பெரும் நூலாக கோர்வை செய்ததாகும்.

இப்பணிக்காக வேண்டி இந்திய தேசத்தின் பிரபல்யமான ஆலிம்களும்,மார்க்கவிற்பன்னர்களும் சேர்ந்து எட்டு வருடங்கள் இக்கிதாபை கோர்வை செய்தனர்.

இன்றும் இந்நூல் ஹனஃபி மத்ஹப் சார்ந்த ஃபத்வா நூல்களில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

வரலாற்று திரிபும்,உண்மையும்.

முகலாய வம்சத்தின் கடைசி பேரரசர் அவுரங்கசீப்,  'சக்ரவர்த்தி' என்ற சொல்லுக்கு முற்றிலும் பொருத்தமானவர் இவர்.

அவுரங்கசீப் மிகவும் பொல்லாதவர். தந்தையே சிறை வைத்தவர்; மக்களை வரிகளால் வாட்டி வதைத்தவர்; மதம் மாற்றியவர் என்று தான் வரலாறு சொல்கிறது. ஆனால், அவரது உண்மை முகமே வேறு.

தனக்கென ஒரு வட்டத்தை உருவாக்கி, அதன்படி வாழ்ந்தவர்; மிகவும் நேர்மையானவர்.

ஷாஜஹானின் கடைசி காலத்தில், அவுரங்கசீப் அவரை கவுரவமான அரண்மனை சிறையில் வைத்திருந்தாரே தவிர, கொடுமை படுத்தவில்லை.

ஷாஜஹானின் உடல், உரிய மரியாதையுடனே அடக்கம் செய்யப்பட்டது. அதுவும், தாஜ்மஹாலில், அவரது பிரியத்துக்குரிய மும்தாஜ் உடலுக்கு அருகிலேயே வைக்கப்பட்டது.

அவுரங்கசீப், 24 மணி நேரத்தில், மூன்று மணி நேரம் மட்டுமே உறங்குவார். வேலை தவிர, மீதமிருந்த ஓய்வு நேரங்களில் இஸ்லாமிய மார்க்க நூல்களை படிப்பதில் செலவிடுவார்; தரையில் தான் படுப்பார்; மாமிசம் உண்ணாதவர்.

அரசாங்க கஜானா பணம் மக்களுக்கு உரியது. அரச குடும்பத்தினர் செலவழிப்பதற்காக அல்ல என்பதில், மிகவும் உறுதியாக இருந்தார் அவுரங்கசீப். தன் சொந்த செலவுகளுக்காக, ஒருபோதும், அவர் கஜானாவை உபயோகித்ததில்லை.

எப்போதும் எளிமையான உடைகளையே அணிவார். ஆபரணங்களை அணியாதவர்; பொன், பொருள் மேல் ஆசையில்லாதவர். வெள்ளி, தங்க பாத்திரங்களை கூட உபயோகிக்க மாட்டார்.

பொதுவாக, மன்னர்கள் தங்கள் பிறந்த நாளில் தகதக உடையணிந்து, உடல் முழுவதும் ஜொலிஜொலிக்கும் நகைகள் அணிந்து மக்களுக்கு காட்சி கொடுப்பதை பாரம்பரியமாக வைத்திருந்தனர். ஆனால், எளிமை விரும்பியான அவுரங்கசீப், தன் பிறந்த நாள் கொண்டாட்டங்களை எல்லாம் அனுமதிக்கவில்லை. அன்றைய தினத்தையும், சாதாரண தினமாகவே எடுத்து கொண்டார்.

அவுரங்கசீப்புக்கு குல்லா தைப்பதில் ஆர்வம் உண்டு. அதே போல, குர்-ஆனை தன் கைப்பட எழுதுவதில், அதீத விருப்பம் கொண்டவர். அந்த இரண்டையும் விற்று, கிடைக்கும் பணத்தில் தான், தனிப்பட்ட செலவுகளை பார்த்து கொண்டார்.

மதுவை, வெறுத்தவர். தன் அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் மதுவை தடை செய்தார்; அதே போல கேளிக்கை விடுதிகளை இழுத்து மூடினார்; உல்லாச நிகழ்ச்சிகள் நடத்த கூடாதென்று உத்தரவிட்டார்; போதைப் பொருள்களையும் ஒழித்தார்.

அன்றைய காலகட்டத்தில், இறந்த கணவனின் சடலத்தை எரிக்கும்போதே, அதே நெருப்பில், மனைவியும் குதித்து, தங்கள் உயிரை மாய்த்து கொள்ளும், 'உடன் கட்டை' ஏறும் பழக்கம் இந்துக்களிடையே இருந்தது. குறிப்பாக, ராஜபுத்திரர்களிடையே அதிகமாக இருந்தது.

ஒருமுறை, போர்க்களத்தில் இறந்த ஒரு வீரனின் உடலை எரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவன் மனைவியை அந்த நெருப்பில் குதிக்க சொல்லி, சுற்றியிருந்தவர்கள் கட்டாயப்படுத்தினர்.

அங்கு வந்த அவுரங்கசீப், அந்த செயலை தடுத்தார். தங்கள் மத விஷயத்தில் தலையிடக்கூடாதென்று அங்கிருந்தவர்கள் வாதம் செய்தனர். ஆனால், அவுரங்கசீப் விடவில்லை.

'இது அநியாயம். இனி இத்தகைய கொடுமைகள் முகலாயப் பேரரசில் நடக்கக்கூடாது. இந்த சடங்கை தடை செய்கிறேன்...' என்று உத்தரவு பிறப்பித்தார். அதற்காக பல்வேறு பிரிவினரிடமிருந்து எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டியிருந்தது. மிகவும் கஷ்டப்பட்டுத்தான் இந்த சட்டத்தை செயல்படுத்தினர்.

'நவுரோஸ்' என்ற பண்டிகையை அக்பர் உருவாக்கியிருந்தார். மிகவும் உல்லாசமான திருவிழா அது. வண்ணமயமான கொண்டாட்டங்கள் நிறைந்தது. அந்த திருவிழாவின் இறுதியில் பேரரசரின் எடைக்கு சமமான பொன், வைர ஆபரணங்களை மக்களுக்கு கொடுக்கும் வழக்கமிருந்தது.

வீணாக அரசாங்க பணத்தை கேளிக்கைகளுக்காக செலவழிக்க விரும்பாத அவுரங்கசீப், நவுரோஸ் பண்டிகையை தடை செய்தார்.

ஒரு பேரரசராக இருந்தாலும், மிகவும் எளிமையாக வாழ்ந்தவர். அவ்வளவு செலவு செய்து, தன் தந்தை, தாய்க்காக தாஜ்மஹால் கட்டியதையே விரும்பாதவர்.

ஏனெனில், தாஜ்மஹால் கட்டுவதற்கு மக்களிடமிருந்த பணமெல்லாம் உறிஞ்சப்பட்டது; இக்கட்டட வேலையில் மக்கள் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டனர்; உயிரிழப்புகளும் ஏற்பட்டன; அரசு கஜானா படுமோசமாகி போனது.

ஆனால், ஷாஜகானுக்கு மக்கள் முக்கியமாக தெரியவில்லை. தன் மனைவிக்காக கட்டும் கட்டடம் மட்டும் நினைவில் இருந்தது. 1632-ல் ஆரம்பித்த தாஜ்மஹாலின் கட்டடப் பணிகள், 1648ல் தான் நிறைவடைந்தன. தன்னுடைய அன்பு மனைவியின் ஆசையை நிறைவேற்றிய சந்தோஷத்தில், கண்ணீர் வடித்தார் ஷாஜஹான்.

எளிமை விரும்பியான அவுரங்கசீப்பின் கண்களுக்கு, தாஜ்மஹால், அழகாக தெரியவில்லை; துயரமாகவே தெரிந்தது.

அதனால், இன்னொரு கருஞ்சலவைக்கல் மாளிகை கட்டுவதற்காக, ஷாஜஹான் எடுத்த முயற்சிகளை தடுத்தார். இருப்பினும் சில முக்கியமான நினைவு சின்னங்களை கட்டினார் அவுரங்கசீப்.

லாகூரில், 'பாட்ஷாய் மஸ்ஜித்' என்ற மிகப்பெரிய மசூதியை கட்டினார். மெக்காவுக்கு அடுத்தபடியாக, மிகப்பெரிய வெளிப்புற வழிபாட்டு தளத்தை கொண்டது இந்த மசூதி.

டில்லி செங்கோட்டை வளாகத்தில், மோடி மஸ்ஜித் என்ற சிறிய மசூதி ஒன்றையும் கட்டினார். லாகூர் கோட்டையை சுற்றி யிருக்கும், 13 நுழை வாயில்களில் ஒன்றான, ஆலம்கீர் என்ற பிரம்மாண்டமான கட்டடம் அவுரங்கசீப்பால் கட்டப்பட்டது தான்.

அவர் எழுதிய உயில்:

நான் இறந்த பின், எனக்கு நினைவு சின்னங்கள் எதுவும் கட்ட கூடாது. என் கல்லறை மேல் அலங்காரங்களும் இருக்க கூடாது. நான் குல்லாக்கள் தைத்து, விற்று சேர்ந்த பணம் கொஞ்சம் இருக்கிறது. அந்த பணத்தை பயன்படுத்தி என் இறுதி சடங்குகளை செய்யுங்கள்.

அந்த பணத்துக்கு மேல் செலவழிக்க கூடாது. என் இறுதி ஊர்வலத்தில் எந்த வித ஆடம்பரமும் கூடாது. இது போக, திருக்குர்-ஆன் எழுதி, விற்று சேர்ந்த பணத்தை என் பையில் வைத்துள்ளேன். அது புனிதமான பணம். அதை ஏழை மக்களுக்கு தானமாக கொடுத்துவிடுங்கள்.

இவ்வாறு எழுதி இருந்தார்.

அஹ்மத் நகரில், 1707 மார்ச், 3ல் அவரது உயிர் பிரிந்தது. அவரது உயில்படியே இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன.

அவுரங்கசீப்பின் இரண்டாவது மகன் பகதூர் ஷா, அடுத்து ஆட்சியில் அமர்ந்தார். மிகப்பெரிய பேரரசைக் கவனிக்க அவருக்கு திறமையில்லை. அவுரங்கசீப் காலத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்றுக் கொண்டிருந்த மராட்டியர்கள், அவரது மறைவுக்குப் பின், கொஞ்சம் கொஞ்சமாக முகலாயர்களின் இடங்களை கைப்பற்ற ஆரம்பித்தனர். அதனால், முகலாயர்களின் ஆட்சி கலைந்தது.

எளிமையாகவும், நிர்வாகத்தில் கண்டிப்பாகவும் இருந்ததால் தான், அவுரங்கசீப்பால், முகலாயப் பேரரசை கட்டி காக்க முடிந்தது. அவை இல்லாததால் தான் அவருடைய வாரிசுகள் பேரரசை இழந்தனர்.

ஒரு மனிதரின் இன்னொரு பக்கம் இத்தனை இனிமையானதா என்று ரொம்ப ஆச்சர்யமாக இருக்கிறது.

(நன்றி;தினமலர்)

அவ்ரங்கசீப் கோவில்களை இடித்தாரா?

வெங்கட் நாகராஜ் தனது காசி பயண அனுபவத்தை பற்றி எழுதிய இடுகையை பார்த்தேன். மிக சாதுர்யமாக தனது பாசிச கருத்துக்களை மென்மையாக சொல்லி நஞ்சை எப்படி விதைக்கிறார் என்று பாருங்கள்.

//கி.பி. 490 ஆம் வருடம் காசி விஸ்வநாதர் ஆலயம் கட்டப்பட்டது. பதினோறாம் நூற்றாண்டில் மீண்டும் ஹரிச்சந்திர மஹாராஜா ஒரு கோவிலைக் கட்டியிருக்கிறார். 1194 ஆம் அண்டு முகம்மது கோரி நடத்திய படையெடுப்பின் போது இந்தக் கோவிலையும், வாரணாசியில் இருந்த மற்ற கோவில்களையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிடவே, இது மீண்டும் கட்டப்பட்டிருக்கிறது.

பிறகு வந்த குத்புதின் ஐபக்கால் மீண்டும் இடிக்கப்பட்டு, அவரது மறைவிற்குப் பின் பல அரசர்களால் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. 1351-ம் ஆண்டு ஃபீருஸ் ஷா துக்ளக் என்பவரால் மீண்டும் இடிக்கப்பட மறுபடியும் நிர்மாணிப்பதில் நீண்ட இடைவெளி. அக்பரின் ஆட்சியில் வருமானத் துறை மந்திரியாக இருந்த தோடர் மால், 1585-ம் வருடம் மீண்டும் ஒரு கோவிலைக் கட்டியிருக்கிறார்.

1669-ஆம் வருடம் அரசாட்சி புரிந்த ஔரங்கசீப் காசி விஸ்வநாதர் கோவிலை முற்றிலும் இடிக்க ஆணையிடுகிறார். கோவில் தரைமட்டமாக்கப்பட்டு அவ்விடத்தில் கியான்வாபி மாஸ்க் என்ற மசூதி கட்டப்படுகிறது. கோவிலின் முக்கிய பூஜாரியாக இருந்தவர் சிவலிங்கத்தோடு கோவிலின் பின்பக்கம் இருந்த ஞானவாபி கிணற்றுக்குள் குதித்து விடுகிறார். இப்போதும் இந்தக் கிணறு காசி விஸ்வநாதர் கோவிலில் இருக்கிறது. எப்போதும் சிவன் கோவில்களில் சிவலிங்கத்திற்கு எதிரே அவரது வாகனமான ரிஷப வாகனம் இருக்கும். தற்போதைய மசூதியை நோக்கி அக்காலத்தில் இருந்த ரிஷப வாகனம் இருக்கிறது. //

எந்த அளவு அவதூறுகளை பரப்ப முடியுமோ அந்த அளவு திட்டம் போட்டு சிலர் பரப்பி வருகின்றனர். ஒரு இடத்தை சுற்றிப் பார்ப்பவர் அதன் அழகை சொல்லி விட்டு அல்லது அங்குள்ள மக்களை சொல்லி விட்டுதான் செல்வார்கள். அதை விடுத்து சர்ச்சைக்குரிய அதன் இடிப்பை வலிந்து திணித்து வெறுப்பை நாசூக்காக விதைக்கிறார். முதலில் கோவில் என்பது வழிபாட்டு தலம் மட்டும் அல்ல. அந்நாட்டின் பொன்னையும் விலையுயர்ந்த சொத்துக்களையும் பாதுகாத்து வைக்கும் பெட்டகமாக இருந்தது. எனவே வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் முதலில் கண் வைப்பது நம் நாட்டு கோயில்களைத்தான். பல இந்து மன்னர்கள் கோவிலை கொள்ளையடித்துள்ளார்கள். சேர சோழ பாண்டிய மன்னர்களின் வரலாறுகளே இதற்கு சாட்சி! ஆனால் அவற்றை எல்லாம் எழுத மாட்டார்கள்.

இந்த பதிவை எழுதியவர் முகலாயர்களுக்கு எந்த வேலையும் இல்லாமல் ஒவ்வொரு முறையும் இடிப்பதும் பிறகு கட்டுவதுமாக விஸவநாதர் ஆலயத்தின் வரலாற்றை எழுதுகிறார். இடித்தது மொகலாயர் ஆட்சி. அதே ஆட்சியில் அந்த கோவில் எப்படி திரும்பவும் கட்டப்பட்டது? அதை எப்படி அரசு அனுமதிக்கும்? நம் காலத்தில் இடிக்கப்பட்ட பாபரி மசூதியை இன்று வரை கட்ட முடிகிறதா? அறிவியல் வளர்ந்த காலத்திலேயே நிலைமை இப்படி இருக்க 1000 வருடங்களுக்கு முந்தய நிலையை சொல்ல தேவையில்லை. இதுதான் யதார்த்தம்.

ஏன் இடித்தார்?.....

கவிக்கோ அப்துர்ரஹ்மான் சாஹிப் அவர்களின் காணொளி உரையிலிருந்து...

இஸ்லாமியர்கள் எண்ணூறு வருடங்கள் இந்தியாவை ஆண்டிருகின்றனர்.அவர்கள் கோவில்களை இடித்திருந்தால் ஆயிரம் வருடம் பழமையான ஒரு கோவில் கூட மிஞ்சியிருக்காது.

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்கிறார்களே!

எண்ணூறு வருட ஆட்சிகாலத்தில் இந்தியாவில் எல்லோரையும் முஸ்லிமாக்கியிருப்பார்களே,ஏன் செய்யவில்லை?இன்றைக்கும் இந்தியாவில் இஸ்லாமியர்கள் சிறுபாண்மையினர்தானே,அவர்களின் தலைநகரான டில்லியில் கூட இஸ்லாமியர்கள் பெரும்பாண்மை இல்லையே ஏன் சிறுபாண்மை?எவ்வளவு பொய்கள்...,

மதுரை ஆதீனத்தின் வரலாறு புத்தகத்தை எனக்கு ஆதீனம் அனுப்பியிருந்தார்.படித்தேன் அதிர்ச்சி அடைந்தேன்...,

அவ்ரங்கசீப் மதுரை ஆதீனத்திற்கு பூஜை தளவாட சாமன்களை டில்லியிலிருந்து அனுப்பியிருக்கிறார்...,அவரை தான் பார்த்து சொல்கிறார்கள் கோவில்களையெல்லாம் இடித்தார் என்று.அவ்ரங்கசீப் காசியிலே உள்ள ஆலயத்தை இடித்தார் என்று எழுதிவைத்திருக்கிறார்கள்...இந்துக்கள் படித்தால் கொதிக்கத்தான் செய்வார்கள்.கொதிக்கவேண்டும் என்றுதான் எழுதிவைத்திருக்கிறார்கள்.அவ்ரங்கசீப் கோவிலை இடித்தாரா?ஆம் இடித்தார்.ஏன் இடித்தார் அதை சொல்லமாட்டார்கள்.அவ்ரங்கசீபும்,அவருக்கு கப்பம் கட்டும் சிற்றரசர்களும் சேர்ந்து பயணம் போய்க்கொண்டிருந்தார்கள்.காசியை நெருங்கும் போது இந்துமன்னர்கள் சொன்னார்கள்.....

"மாமன்னாரே எங்களுக்கு இது புனிதஸ்தலம்.இன்றொருநாள் எங்களுக்கு நீங்கள் அனுமதிக்கொடுத்தால்,நாங்கள் வழிப்பட்டு விட்டு வந்துவிடுவோம்.அவரங்கசீப் "தாராளமாக சென்று வழிபட்டு வாருங்கள். நான் இங்கு தங்கிக்கொள்கிறேன்".என்றார் அவர்கள் வழிபட்டு விட்டு மாலை நேரம் திரும்ப வந்துவிடுகின்றார்கள்.ஆனால் சோதித்துப்பார்த்ததில் ஒரு ராணி திரும்ப வரவில்லை.தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.அவ்ரங்கசீபிடம் முறையிட்டார்கள் எங்கு தேடியும் ஒரு ராணி மட்டும் கிடைக்க வில்லை.

மாமன்னர் போர்ப்படைகளை அனுப்பி கண்டுபிடிக்கச் சொன்னார்.கடைசியில் கோவில் கருவறைக்குள்ளே உள்ள நிலவறையில் அந்த ராணியை நிர்வாணமாக அழுதுக்கொண்டிருந்த வண்ணம் கண்டுபிடுக்கின்றார்கள்.அந்த கோவில் பூசாரி அந்த ராணியை கடத்திக்கொண்டு,கருவறைக்குள்ளே கற்பமாக்கும் வேலையை செய்துவிட்டான்.இதனை பார்த்து துடித்த இந்து மன்னர்கள்,அவ்ரங்கசீபிடம் "மன்னரே இந்த கோவில் தீட்டாகி விட்டது.இதிலே வழிப்படக்கூடாது,நாங்கள் வழிப்பட மாட்டோம்"என்றார்கள் ,அதற்கு அவ்ரங்கசீப் இது உங்கள் விஷயம்.நிங்களே தீர்ப்புச் சொல்லுங்கள்"என்று கேட்டார் இதனை இடித்து விட்டு நீங்களே எங்களுக்கு புதிதாக கோவில் கட்டிக்கொடுங்கள் என்று இநது மன்னர்கள் கேட்க உடனே அவ்ரங்சீப் அந்த கோவிலை இடித்து புதிதாக கோவிலை கட்டிக்கொடுக்கிறார்.இன்று இருக்கின்றதே காசி விஸ்வநாதர் ஆலயம் அது அவ்ரங்கசீபினால் கட்டிக்கொடுக்கப்பட்டது.

இந்த வரலாற்றை அப்துர்ரஹ்மான் சொன்னால் நம்பமாட்டீர்கள்,பேரசிரியர் பாண்டே சொல்கிறார்.

எங்களை பயங்கரவாதி என்கிறான் பிரிவினைவாதி என்கிறான் எத்தனை எத்தனை புரட்டல்கள்...இந்த நாட்டை உருவாக்கிக்கொடுத்தாவர்களே நாங்கள் தானே..என்பத்தி ஆறு தேங்களாக அல்லவா வைத்திருந்தீர்கள்...அலாவுதீன் கில்ஜி அல்லவா ஒரே நாடாக ஆக்கிக்கொடுத்தார்...

          

உண்மை வரலாறு....

முகலாய பேரரசர்களில் பலர் இந்திய மக்களின் மனதில் இடம்பெற்றிருந்தாலும், ஔரங்கசீப் மட்டுமே விதிவிலக்காக விளங்கினார். இந்துக்களை வெறுப்பவர், மத வெறியன், கொடூரமான அரசன், அரசியல் நோக்கத்திற்காக அண்ணன் தாரா ஷிகோஹ்க்கு துரோகம் செய்தவர் என்று கருதப்படுகிறார் ஒளரங்கசீப்.

இவரது ஆட்சி காலம் கி.பி. 1658-லிருந்து கி.பி. 1707 வரையாகும். இவரது ஆட்சிகாலத்தில் முகலாயப் பேரரசு காபுலில் இருந்து தமிழ்நாடு வரை பெரும் ஆட்சி செய்துவந்தது. இந்தியாவை ஒருங்கிணைத்து, திறம்பட ஆட்சி செய்த முதல் பேரரசர் என்ற பெருமைக்குரியவர் ஔரங்கசீப். முகலாய மன்னர்களில் அக்பரும், ஔரங்கசீப் ஆகிய இருவர் மட்டுமே 49 ஆண்டுகள் சாகும் வரை நாட்டை ஆண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது....

ஔரங்கசீப்பின் பெருமை...

இவ்வாறு சிறப்பான முறையில் ஆட்சி மேலாண்மை செய்து வந்ததன் காரணமாகவே ஔரங்கசீப் பேரரசால் இந்தியாவின் பெரும் பகுதியை வெற்றிக் கண்டு ஆட்சி செய்ய முடிந்தது. இதனால் தான் இவர் இந்தியாவை ஒருங்கிணைத்த முதல் பேரரசர் என்ற வரலாற்று புகழுக்கு சொந்தக்காரர் ஆனார்.

செஞ்சியை வென்ற ஔரங்கசீப்பின் தளபதி

ஔரங்கசீப்பின் தளபதி சூல்பிகார் கான் என்பவர் தமிழகத்தின் செஞ்சியை வென்றார். இதனால் அகம் மகிழ்ந்து போன ஔரங்கசீப், அந்த பகுதியின் ஆளுநராக (நவாப்) சூல்பிகார் கானையே நியமித்தார்

ஔரங்கசீப்பின் ஆட்சி பரப்பளவு..

ஔரங்கசீப் தன் ஆட்சி பரப்பளவு கந்தகாரில் தெற்கே செஞ்சி வரை விரிவுபடுத்தினர். இவரது ஆட்சிகாலம் வரலாற்று ஆய்வாளர்களால் மிகுந்த விமர்சனத்திற்கு உட்பட்டிருந்தது என கூறப்படுகிறது.

இந்திய வரலாற்றில் ஔரங்கசீப் அளவுக்கு விரிந்து பரந்த சாம்ராஜ்யத்தை ஆண்டவர்கள் யாரும் இல்லை. அவரிடம்தான் கோஹினூர் வைரம் இருந்தது. இத்தனை இருந்தும் அமைதியாகச் சாவதையும், எளிய முறையில் – சாதாரண சமாதியில் நல்லடக்கம் செய்யப்படுவதையுமே விரும்பினார். ஆர்பாட்டம் இல்லாமல் புதைக்கப்பட்ட கல்லறையுடன் தன்னைப் பற்றிய நினைவுகள் மக்களிடமிருந்து மறைந்துவிட வேண்டும் என்று ஔரங்கசீப் விரும்பியிருந்தாலும், உலகம் அப்படி விட்டுவிடத் தயாராக இல்லை. 21-வது நூற்றாண்டிலும்கூட இந்தியா, பாகிஸ்தான் என்ற இரு நாடுகளிலும் அவர் துடிப்பான ஆளுமையாக நினைவுகூரப்படுகிறார்.

மிகவும் எளிமையானவர் ஔரங்கசீப்.

பல வரலாற்று ஆசிரியர்கள் ஔரங்கசீப் மிகவும் எளிமையான அரசர். இவர் செல்வத்திற்கு மயங்கியது இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். பெரும்பாலும் வெள்ளை உடைதான் அணிவாராம். இவரது தலைப்பாகையில் கூட ஒரே ஒரு கல் தான் பதிக்கப்பட்டிருந்தது எனவும் சில வரலாற்று கூற்றுகள் மூலம் அறியப்படுகிறது. தனக்கென மாளிகை கூட காட்டியதில்லையாம் ஔரங்கசீப்.


THE MAN AND MYTH

1946 இல் ஜவஹர்லால் நேரு எழுதிய 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா' என்ற புத்தகத்தில் ஒளரங்கசீப் கடுமையானவர் மற்றும் பழமைவாத சிந்தனைகளைக் கொண்டவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த கருத்து தவறானது என்று மறுக்கிறார் அமெரிக்க வரலாற்றாசிரியர் ஆண்ட்ரி ட்ரஷ்கே. தமது 'ஒளரங்கசீப்-தி மேன் அண்ட் தி மித்' (Aurangzeb: The Man and the Myth) என்ற புத்தகத்தில், இந்துக்களின் மீது கொண்ட வெறுப்பால்தான் ஒளரங்கசீப் ஆலயங்களை அழித்ததாக கூறுவது தவறு என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.நேவார்க் ரூட்ஜர்ஜ் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய வரலாற்றுப் பேராசிரியராக பணியாற்றும் ஆண்ட்ரி ட்ரஷ்கே, ஒளரங்கசீப் மீதான இதுபோன்ற கருத்துகளுக்கு ஆங்கிலேய ஆட்சிக்கால வரலாற்றாசிரியர்களே காரணம் என்கிறார். ஆங்கிலேய ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி என்ற கொள்கையின்படி, இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரிப்பதற்கு வரலாற்றாசிரியர்கள் ஊக்குவிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

ஒளரங்கசீப்பின் ஆட்சிகாலம் 20 ஆண்டுகள் குறைவாக இருந்திருந்தால் நவீன வரலாற்றாசிரியர்கள் அவருடைய வரலாற்றை வித்தியாசமாக புரிந்து கொண்டிருக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறார் ஆண்ட்ரி ட்ரஷ்கே ஆனால் அவர் ஆட்சி காலம்  49 ஆண்டுகளாகும்.

15 கோடி மக்களை 49 ஆண்டு காலம் ஆட்சி செய்தார் ஒளரங்கசீப். அவரது ஆட்சிக்காலத்தில் ஏறக்குறைய இந்திய துணைக்கண்டம் முழுவதுமே முகலாய ஆட்சியின் கீழ் இருந்தது.

மகாராஷ்டிராவின் குல்தாபாத் நகரில் ஆடம்பரம் ஏதும் இல்லாமல் எளிமையான கல்லறையில் ஒளரங்கசீப் புதைக்கப்பட்டார் என்கிறார் ட்ரஷ்கே. இதற்குமாறாக, அரசர் ஹுமாயூனுக்காக செந்நிற கற்களால் அழகான கல்லறை டெல்லியில் கட்டப்பட்டது. அதேபோல் ஷாஜகான் ஆடம்பரமாக கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தாஜ்மஹாலில் புதைக்கப்பட்டார்.

இந்துக்களின் விரோதி என அழைக்கப்பட்ட அவரது ஆட்சியின்போது உண்மையில் இந்துக்களுக்கு எதிராக பெரிய கொடுமைகள் எதுவும் நடக்கவில்லை. உண்மையில், முக்கியமான அரசுப் பதவிகளில் இந்துக்களை பணியமர்த்தினார் ஒளரங்கசீப்' என்கிறார் ட்ரஷ்கே

_____நன்றி-BBC News jan 23-2020

முகலாய சாம்ராஜ்யத்தின் ஆறாவது சக்ரவர்த்தியாகப் பதவி வகித்த ஔரங்கசீப், இறப்பதற்கு முன் தனது மகனுக்கு எழுதிய கடிதத்தில், ‘அந்நியனாக இங்கு வந்தேன்.. அந்நியனாகவே செல்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். “மதிப்பிட முடியாத என்னுடைய வாழ்க்கை வீணாகப்போய்விட்டது” என்றும் அவர் தன்னுடைய இறுதிக் காலத்தில் புலம்பியிருக்கிறார்.

இந்திய தேசத்தின் தனிச்சிறப்பே இங்கு கோவில்களும்,மஸ்ஜித்களும் அருகருகே சமயநல்லிணக்கத்தின் அடையாளங்களாக திகழ்வதும்,எங்கள் வழிப்பாட்டு ஸ்தலங்களை போலவே இந்து,முஸ்லிம் சகோதரவாஞ்சையோடு பழகுபவர்கள் என்பதனை பறைச்சாற்றும் விதமாக விளங்குகின்றன.        

இந்த சகோதரத்துவத்திற்கும், சமயநல்லிணக்கத்திற்கும் வேட்டுவைக்கும் முகமாக பாசிச பயங்கரவாதிகள் புராணக்கதைகளையும்,வரலாறை இட்டுக்கட்டியும் மஸ்ஜிதுகளை அழிக்க சூழ்ச்சிசெய்கின்றனர்.

நேற்று பாபர்மஸ்ஜிதை ராம ஜென்ம பூமி என தங்களுக்கு சாதமாக தீர்ப்பை வாங்கி கோவில் கட்டிக்கொண்டிருக்கின்றனர்.

இன்று காசியில் கியான் வாபி மஸ்ஜித் கோவிலை இடித்து கட்டப்பட்டது என்கின்றனர்.

நாளை மதுராவிலே உள்ள ஈத்கா மஸ்ஜித் எங்களின் கிஷ்ணஜென்ம பூமி என்று பிரச்சனையை கையில் எடுப்பார்கள்.

இப்படியே இந்தியாவில் மூவாயிரம் மஸ்ஜித்களை இடித்து கோவிலை கட்டுவோம் என்கின்றனர். 

இவர்களின் அதிகார துஷ்பிரயோகத்தையும்,அத்துமீறல்களையும் வல்லோன் அல்லாஹ் முறியடிப்பான் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை.

ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை...

அதுப்போல் இவர்கள் எத்தனை பொய்புரட்டல்கள் செய்தாலும் உண்மை வரலாறு மறையாது.

வெளியீடு: செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை.

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...