Wednesday, 15 June 2022

ஜும்ஆ பயான் 17/06/2022

ஹஜ் எனும் கடமை. 

وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ

“இன்னும், ஹஜ்ஜுக்காக மனிதர்களுக்கு அறிவிப்பு ஒன்றை விடுப்பீராக! நடந்தவர்களாக அவர்கள் உம்மிடம் வருவார்கள். இன்னும், மெலிந்த எல்லா ஒட்டகத்தின் மீதும் அவர்கள் வருவார்கள். அவை வெகுதூரமான எல்லா வழிகளில் இருந்தும் அவர்களைக் கொண்டு வரும்”. ( அல்குர்ஆன்: 22: 27 )

மனிதன் மேற்கொள்ளும் பயணங்களை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று பிழைப்புக்குப் பொருளீட்ட மேற்கொள்ளும் பயணம். அடுத்ததோ பொழுதுபோக்குக்கான பயணம். பயணங்கள் இரண்டானாலும், இவற்றில் தன்னலமும் இச்சைகளுமே மிகுந்திருக்கின்றன. இவையே அவனை வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டுச் செல்லத் தூண்டுகின்றன.

அன்பான உற்றார், உறவுகளைவிட்டு பல ஆயிரம் மைலுக்கு அப்பால் அனுப்புவதும் தன் நலன்சார்ந்த காரணங்களாகவே இருக்கும். இதில் அர்ப்பணம் என்றிருக்க வாய்ப்பில்லை. ஆனால், ஹஜ் பயணம் இவை எல்லாவற்றையும்விட முற்றிலும் மாறானது. இது இறைவனுக்காகவே மேற்கொள்ளப்படும் பயணம்.

மேலும் (ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் நன்மையானது, தக்வா (என்னும் பயபக்தியே) ஆகும்எனும் (2:197) 

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

யமன் வாசிகள் (ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருள்களைச் சேகரிக்காமல் ஹஜ்ஜுக்கு வருவார்கள்; மேலும் நாங்கள் இறைவன் மீது நம்பிக்கை வைத்துள்ளோம் என்றும் கூறுவார்கள். மக்கா வந்தடைந்தால் மக்களிடம் யாசகம் கேட்பார்கள். இது குறித்தே அல்லாஹ் (ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள், நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் நன்மையானது தக்வா (என்னும் பயபக்தியே) ஆகும்’ என்ற வசனத்தை இறக்கினான்.

முதல் ஆலயம்....

மனிதர்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்பதற்காக முதலில் கட்டப்பட்ட இறையில்லம் மக்காவிலுள்ள'கஅபா' ஆலயமாகும்.

إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ 

“அகிலத்தின் நேர்வழிக்கு உரியதாகவும்,பாக்கியம் பொருந்தியதாகவும்மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா (எனும் மக்கா) வில்உள்ளதாகும்”.                   ( அல்குர்ஆன்: 3: 96 )

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ ، ثنا عَبْدُ اللَّهِ ، ثناأَبُو مُعَاوِيَةَ ، وَعِيسَى بْنُ يُونُسَ ، قَالا : ثنا الأَعْمَشُ , عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ ، عَنْأَبِيهِ ، عَنْ أَبِي ذَرٍّ

 قَالَ : قُلْتُ : " يَا رَسُولَ اللَّهِ أَيُّ مَسْجِدٍ وُضِعَ فِي الأَرْضِ أَوَّلُ ؟ قَالَ : الْمَسْجِدُ الْحَرَامُ . قَالَ : قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ثُمَّ أَيُّ ؟ قَالَ : الْمَسْجِدُ الأَقْصَى . قَالَ : قُلْتُ : كَمْ بَيْنَهُمَا ؟ قَالَ : أَرْبَعُونَ سَنَةً ، وَأَيْنَمَا أَدْرَكْتَ الصَّلاةَ فَصَلِّ , فَإِنَّمَا هُوَ مَسْجِدُكَ " .

அபூதர் (ரலி)  அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நான் நபி {ஸல்} அவர்களிடம் ''பூமியில் முதலில் அமைக்கப்பட்ட பள்ளி எது?'' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல் மஸ்ஜிதுல் ஹராம்' (கஅபா) என்றுகூறினார்கள். பிறகு எது? என்றேன். 'அல் மஸ்ஜிதுல் அக்ஸா' என்று கூறினார்கள். ''இந்த இரண்டிற்கும் மத்தியில் எத்தனை (வருடங்கள் இடைவெளி?)'' என்று கேட்டேன். ''நாற்பது வருடங்கள்'' என்று நபி {ஸல்} கூறினார்கள்.   ( நூல்: புகாரி 3366 )

கஃபதுல்லாஹ்வின் சிறப்பு.

கஃபா வெறுமனே கருப்பு அங்கி போர்த்தப்பட்ட ஆன்மீக தலம் என்பது மாத்திரம் அல்ல,

மலக்குகள்,இறைநேசச் செல்வர்கள்,முஃமீன்கள் அனைவரின் ஆன்மீக தலைமையகம்.

மனிதன் பூமிக்கு வருவதற்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மலக்குகளால் கஃபா கட்டப்பட்டு,தவாஃப் செய்யப்பட்டுவந்தது.பின்பு ஆதம் அதனை கட்டும் பாக்கியம் பெற்றார்கள்.

அதன் பின்பு இப்ராஹீம்(அலை)அவர்கள்,இஸ்மாயீல்(அலை)இருவரின் மீள் உருவாக்கம் பிரபல்யமானதாகும்.

கஃபதுல்லாஹ், இஸ்லாமியர்கள் தொழுகை துவங்கி எல்லா நல்அமல்களுக்கும் முன்னோக்கும் முக்கிய அம்சமாகும்.

مَنۡ نَظَرَ اِلَی الۡكَعۡبَةِ اِيۡمَانًا وَّ تَصۡدِيۡقًا خَرَجَ مِنَ الۡخَطَا يَا كَيَوۡمٍ وَلَدَتۡهُ اُمُّهٗ

"எவர் கஃபாவை ஈமானோடும்,உண்மையான உள்ளத்தோடும் பார்ப்பாரோ,

அவர் அன்று அவரின் தாய் பெற்றெடுத்த பாலகனைப் போல பாவங்களிலிருந்து வெளியேறிவிடுவார்"என கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் சொன்னார்கள்

ஹஜ் செய்வதின் சிறப்பு

அப்துர் ரஹ்மான் பின் ஷுமாசா அல்மஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இறப்பின் நெருக்கத்தில் இருந்த அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவர்கள் நீண்ட நேரம் அழுதார்கள். பிறகு அவர்கள் சுவரை நோக்கித் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். அப்போது அவர்களுடைய புதல்வர், "அருமைத் தந்தையே! தங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்னின்ன நற்செய்திகளைக் கூறவில்லையா?" என்று கேட்டார். உடனே அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் தமது முகத்தை (தம் புதல்வரை நோக்கி)த் திருப்பி (பின்வருமாறு) கூறினார்கள்: "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்" என்றும் உறுதி கூறியதே நமது சேமிப்புகளில் சிறந்தது ஆகும். நான் (என் வாழ்நாளில்) மூன்று கட்டங்களைக் கடந்து வந்திருக்கிறேன்.

(முதலாவது கட்டத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது கடுமையான வெறுப்புக் கொண்டவர் என்னைவிட வேறெவரும் இருக்கவில்லை என்றே நான் கருதினேன். என்னால் இயன்றால் அவர்களைக் கொன்றுவிட வேண்டும் என்பதே எனக்கு மிகவும் விருப்பமான விஷயமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் மட்டும் நான் இறந்துவிட்டிருந்தால் நான் நரகவாசிகளில் ஒருவனாக ஆகியிருப்பேன்.

(இரண்டாவது கட்டத்தில்) அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தை ஊட்டினான். அப்போது நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று "உங்கள் வலக் கரத்தை நீட்டுங்கள். நான் உங்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிக்கிறேன்" என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் தமது வலக் கரத்தை நீட்டினார்கள். உடனே நான் எனது கையை இழுத்துக்கொண்டேன். நபி (ஸல்) அவர்கள், "அம்ரே! உமக்கு என்ன ஆயிற்று?" என்று கேட்டார்கள். நான், "சில நிபந்தனைகளை விதிக்க விரும்புகிறேன்" என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், "என்ன நிபந்தனை விதிக்கப்போகிறீர்?" என்று கேட்டார்கள். "என் (முந்தைய) பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும்" என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும்; ஹிஜ்ரத்தும் (மார்க்கத்திற்காக நாடுதுறத்தல்) முந்தைய பாவங்களை அழித்துவிடும்; ஹஜ்ஜும் முந்தைய பாவங்களை அழித்துவிடும் என்று உமக்குத் தெரியாதா?" என்று கேட்டார்கள். (பிறகு நான் இஸ்லாத்தைத் தழுவினேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட மிகவும் பிரியமானவர் வேறெவரும் எனக்கு இருக்கவில்லை; எனது பார்வைக்கு அவர்களை விட மிகவும் கண்ணியமானவர் வேறெவரும் இருக்கவில்லை. அப்போது அவர்கள்மீது நான் வைத்திருந்த மரியாதையினால் என் கண்கள் நிரம்ப அவர்களைப் பார்க்கக்கூட என்னால் முடியவில்லை. அவர்களை வர்ணித்துக் கூறும்படி நான் கேட்டுக்கொள்ளப்பட்டால் அதற்கும் என்னால் இயலாது. ஏனெனில், நான் அவர்கள்மீது வைத்திருந்த மரியாதையின் காரணத்தால் என் கண்கள் நிரம்ப அவர்களை நான் பார்த்திருக்கவிலலை. அந்த நிலையில் நான் இறந்திருந்தால் சொர்க்கவாசிகளில் ஒருவனாக ஆகியிருப்பேன் என்றே எதிர் பார்க்கிறேன்.

பிறகு (மூன்றாவது கட்டத்தில்) பல்வேறு பொறுப்புகளை நாம் வகித்தோம். அவற்றில் எனது நிலையென்ன என்பது எனக்குத் தெரியாது. எனவே, நான் இறந்துவிட்டால் ஒப்பாரி வைப்பவரோ நெருப்போ என் சடலத்தோடு இருக்கலாகாது. என்னை (குழிக்குக்குள் வைத்து) நீங்கள் அடக்கம் செய்யும்போது என்மீது மண்ணைத் தள்ளுங்கள். பிறகு ஓர் ஒட்டகத்தை அறுத்து அதன் இறைச்சியைப் பங்கிடும் நேரம் அளவுக்கு நீங்கள் அடக்கத்தலத்தைச் சுற்றி நில்லுங்கள். உங்களால் நான் ஆசுவாசமடைவேன்; என் இறைவனின் தூதர்க(ளான வானவர்க)ளிடம் நான் என்ன பதிலளிப்பது என்பதையும் கண்டுகொள்வேன். ( இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம் 192)

ஹஜ்ஜை கடமையாக்கும் அருள்மறை வசனங்கள்..

 وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا ‌ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنِ الْعٰلَمِيْنَ‏

 இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 3:97)

وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِ 

ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (அல்குர்ஆன் : 2:196)

ஹஜ்ஜின் சிறப்பு பற்றிய ஹதீஸ்கள்.

1521- حَدَّثَنَا آدَمُ ، حَدَّثَنَا شُعْبَةُ ، حَدَّثَنَا سَيَّارٌ أَبُو الْحَكَمِ قَالَ : سَمِعْتُ أَبَا حَازِمٍ قَالَ : سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ :

مَنْ حَجَّ لِلَّهِ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ.

“உடலுறவு மற்றும் பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவன் அவனது தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாத பாலகனாக) திரும்புவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி-1521)

- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَرِيفٍ ، حَدَّثَنَا عِمْرَانُ بْنُ عُيَيْنَةَ ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ ، عَنْ مُجَاهِدٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، عَنِ النَّبِيِّ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ قَالَ :

الْغَازِي فِي سَبِيلِ اللهِ ، وَالْحَاجُّ وَالْمُعْتَمِرُ ، وَفْدُ اللهِ ، دَعَاهُمْ ، فَأَجَابُوهُ ، وَسَأَلُوهُ ، فَأَعْطَاهُمْ.

“அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர், ஹஜ் செய்பவர், உம்ரா செய்பவர் ஆகியோர் அல்லாஹ்வின் சிறப்பு விருந்தினர்கள் ஆவர். அவன் அவர்களை அழைத்தான். அவர்கள் பதிலளிக்கின்றனர். அவனிடம் அவர்கள் பிரார்த்தித்தார்கள். அவர்களுக்கு அவன் வழங்கி விடுகின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: இப்னு மாஜா-2893 (2884)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ ، وَمُوسَى بْنُ إِسْمَاعِيلَ ، قَالاَ : حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ قَالَ : حَدَّثَنَا ابْنُ شِهَابٍ ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ،

أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم سُئِلَ أَيُّ الْعَمَلِ أَفْضَلُ فَقَالَ إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ قِيلَ ثُمَّ مَاذَا ؟ قَالَ : الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ قِيلَ ثُمَّ مَاذَا ؟ قَالَ : حَجٌّ مَبْرُورٌ.

“செயல்களில் சிறந்தது எது?” என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “ஏற்றுக் கொள்ளப்படும் ஹஜ்” என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி-26 

ஹஜ் சொல்லும் பாடம்.

மக்காவுக்கு ஹஜ் பயணம் செல்ல விரும்பும் ஒவ்வொருவரும் ‘இஹ்ராம்’ என்றழைக்கப்படும் எளிமை மிக்க ஒரு வெள்ளாடையுடன் போர்வை, காலணிகளை உடைமைகளாக்கிக் கொள்ள வேண்டியிருக்கும். இறைவனின் திருமுன் உடலாலும் உள்ளத்தாலும், எளிமையாக இருங்கள் என்பதே இதன் செய்தி.

ஹஜ்,பல சூட்சுமங்களையும் எண்ணற்ற ஆன்மீக தத்துவங்களையும் தன்னகத்தே தாங்கியிருக்கும் உயர்ந்த உன்னதமான ஓர் வணக்கமாகும்.

ஹஜ்ஜில் ஒவ்வோர் எட்டுமே இறைகாதலின் வெளிப்பாடாகும்.

ஹஜ் என்பதே அல்லாஹ்வின் பூர்வீக ஆலயம் கஃபா ஷரீஃபை தரிசிப்பதும்,மக்க மாநகரை நோக்கிய பயணமேயாகும்.

அல்லாஹ்வின் நேசத்திற்குறிய நபிமார்களும்,ரஸுல்மார்களும் மக்காவிற்கு பயணம் மேற்கொண்டு,இறை ஆலயத்தை தரிசிக்கும் சிறப்பை பெற்றார்கள்.

ஹழ்ரத் ஆதம் (அலை)அவர்கள் துவங்கி ஹழ்ரத் இப்ராஹீம் (அலை)அவர்கள்,இஸ்மாயீல்(அலை)அவர்கள் இறுதியாக நம் கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் வரை பல நபிமார்களின் அழகிய அடிச்சுவடி களை இப்புனித மண் தாங்கி நிற்கின்றது.

ஹழ்ரத் இஸ்மாயீல் (அலை)அவர்களின் குர்பானி வெளிப்பட்ட இடம்,மகாமே இப்ராஹீம் எனும் இடம்,ஜம் ஜம் நீரூற்று,அன்னை ஹஜ்ரா அம்மையார் திக்குத்தெரியாமல் ஓடிய ஸஃபா,மர்வா.சுவனத்திலிருந்து இறக்கியருளப்பெற்ற அஜ்ருல் அஸ்வத் இவையனைத்தும் இங்கு தான் உள்ளன.

இவையனைத்தையும் விடவும் நம் கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் பிறந்த,வாழ்ந்த ஊரும்,நபிக்கு மிக விருப்பமான ஊரும் மக்க மாநகரமாகும்.

ஹஜ் என்பது தொழுகை,நோன்பு,(ஸதகா)தானதர்மங்கள்,குர்பானி போன்ற எல்லா அமல்களும் நிறைந்த பரிபூரண வணக்கமாகும்.இதனால் தான் இதற்கு இறுதிக் கடமை என்று பெயர்.

ஹஜ்ஜிலே உலகெங்கிலுமிருந்து பல இனத்தவர்,பல்வேறு மொழிபேசுவோர், பல நிறத்தவர்,பல தேசத்தவர் என்கிற எந்த பேதமும் இன்றி அனைவரும் ஒரே இறைவனின் திருப்பொருத்தத்தை மாத்திரம் நாடி ஒன்றுக்கூடும் உலகின் ஒரே புனித தலம் மக்காவிலே உள்ள இறையில்லமாம் கஃபதுல்லாஹ் ஆகும்.

ஹஜ்ஜில் உயர்ந்தோர்,தாழ்ந்தோர் என்கிற எந்த பாகுபாடும் கிடையாது.அனைவரும் ஒரே தாய்,தந்தையரின் பிள்ளைகள் என்பதனை பறைசாற்றும் விதமாக இஹ்ராம் ஆடையை தான் அணியவேண்டும்.

ஒரே அல்லாஹ்,ஒரே ரஸுல்,ஒரே வேதம்,ஒரே கஃபா என்பனவற்றை ஈமான் கொண்டோர் ஒரே அமைப்பிலும்,ஒரே ஆடையிம்,ஒரே தோற்றத்திலும்,ஓர் அணியில் ஒன்றுபட வேண்டும் என அல்லாஹ் விரும்புகிறான்.

ஹாஜிகளின் தல்பியா...

இதோ ஹஜ்ஜின் காலம் துவங்கிவிட்டது உலகில் முளைமுடுக்குகளிலிருந்து ஹாஜிகள் لَبَّیْکَ اَللّٰھُمَّ لَبَّیْکَ என்ற தல்பியாவை முழங்கியவர்களாக இறையில்லத்தை நோக்கி புறப்பட்டு செல்கின்றனர்.

ஹாஜிகள் لَبَّیْکَ اَللّٰھُمَّ لَبَّیْکَ "வந்துவிட்டேன் இறைவா"என்று தல்பியா சொல்வதற்கு பின்னனியில் ஒரு சுவாரஸ்யமான வரலாறு உள்ளது.

لما فرغ إبراهيم من بناء البيت قيل له : ( أذن في الناس بالحج ) قال : رب وما يبلغ صوتي ؟ قال : أذن وعلي البلاغ

ஹழ்ரத் இப்ராஹீம்(அலை)அவர்கள் கஃபதுல்லாஹ்வை கட்டி முடித்ததும் அல்லாஹ் சொன்னான்;இப்ராஹீமே!ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக!

இப்ராஹீம்(அலை)அவர்கள் கேட்டார்கள்:"ரப்பே!எனது சப்தம் (அழைப்பு)எப்படி (எல்லோருக்கும் போய்)சேரும்"

இறைவன் சொன்னான்;நீர் அறிவிப்புச் செய்யும்,அதனை கொண்டு சேர்க்கும் பொறுப்பு என்னுடையது.

 عن ابن عباس قوله : ( وأذن في الناس بالحج ) قال : قام إبراهيم خليل الله على الحجر ، فنادى : يا أيها الناس كتب عليكم الحج ، فأسمع من في أصلاب الرجال وأرحام النساء ، فأجابه من آمن من سبق في علم الله أن يحج إلى يوم القيامة : لبيك اللهم لبيك

ஹழ்ரத் இப்ராஹீம் (அலை)அவர்கள் ஒரு குன்றின் மீது ஏறி நின்று உலகமாந்தர்களை நோக்கி அழைப்புக்கொடுக்கிறார்கள் "மனிதர்களே!உங்களின் மீது ஹஜ் கடமையாகிவிட்டது.

(அவர்களின் இவ்வழைப்பை அல்லாஹ்)ஆண்களின் முதுகந்தண்டில் உள்ளவர்களையும்,பெண்களின் கருவிலே உள்ளவர்களையும் கேட்கச்செய்தான்.

கியாம நாள் வரையுள்ளவர்களில் யாரையெல்லாம் ஹஜ்ஜீ செய்ய அல்லாஹ் நாடினானோ அவர்கள் "லெப்பைக்"என அதற்கு பதிலளித்தனர்.

இவ்வழைப்பு உலகில் உள்ளவர்கள் மாத்திரம் அல்ல "ஆலமே அர்வாஹில்"இருந்த உயிர்களும் செவியுற்றன.யாரெல்லாம் அதற்கு பதிலளித்தனரோ,எத்தனை முறை பதிலளித்தனரோ அத்தனை முறை ஹஜ் செய்யும் வாய்ப்பை அல்லாஹ் வழங்கிவிடுகின்றான்.

அஜ்ருல் அஸ்வத் கல்.

அஜ்ருல் அஸ்வத் என்பது கஃபாவின் கிழக்கு ஓரத்தில் பதிக்கப்பட்டுள்ள கரு நிறக்கல்லாகும்.சுவனத்திலிருந்து இறக்கியருளப்பெற்றது.இறங்கிய சமயம் முற்றிலும் வெண்மையாக இருந்த அக்கல்,மனிதர்களின் பாவங்களால் கருப்பாகிவிட்டது.

ஒரு தடவை ஹழ்ரத் உமர் ஃபாருக் (ரலி)அவர்கள் தவாஃப் செய்துக்கொண்டிருக்கையில்,அஸ்வத் கல்லுக்கருகில் வந்ததும்,அதற்கு முத்தமிட்டு விட்டு சொன்னார்கள்:"நீ பயனையோ,குறைவையோ தரவியலாத (சாதாரண)கல்.நாயகம் (ஸல்)அவர்கள் உன்னை முத்தமிட்டதால் நானும் முத்தமிடுகிறேன்"

உடனே அருகில் இருந்த ஹழ்ரத் அலி(ரலி)அவர்கள் உமர்(ரலி)அவர்களிடம் "உமரே!அப்படி சொல்லாதீர் மாறாக இது பயனளிக்கவும் செய்யும்,குறைஏற்படுத்தவும் செய்யும்."

ஆம் நாயகம் (ஸல்)அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்;அஸ்வத் கல்லிற்கு இரு கண்கள் உண்டு,அதனால் தன்னை முத்தமிடுபவர்களையும்,தொடுபவர்களையும் காணூகிறது.நாளை மறுமையில் அவர்களுக்காக சாட்சிக் கூறும்" எனக் கூறினார்கள்(நூல்: திர்மிதீ)

மகாமே இப்ராஹீம்(அலை).

இப்ராஹீம்(அலை)அவர்களுக்கு இஸ்மாயீல்(அலை)அவர்கள் உதவுபுரிய இதன் மீது நின்றுதான் கஃபாவை கட்டினார்கள்.

இதையே அல்லாஹ் குர்ஆனில்...  وَاتَّخِذُوْا مِنْ مَّقَامِ اِبْرٰهٖمَ مُصَلًّى‌  وَعَهِدْنَآ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ اَنْ طَهِّرَا بَيْتِىَ لِلطَّآٮِٕفِيْنَ وَالْعٰكِفِيْنَ وَالرُّکَّعِ السُّجُوْدِ‏

இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.(அல்குர்ஆன் : 2:125)

நாயகம் (ஸல்)அவர்கள் சொன்னார்கள்;"எவர் மகாமே இப்ராஹீமுக்கு அருகில் இரு ரகஅத் தொழுவாரோ,அல்லாஹ் அவரின் முன்,பின் பாவங்களை மான்னிப்பான்"

அரஃபா பெருவெளி

மக்காவிற்கு தென்கிழக்கில் சிறிய மலைக்கும் அதனை சுற்றியுள்ள மைதானாத்திற்கும் அரஃபா என்று சொல்லப்படும்.ஹஜ்ஜில் இங்கு தங்குவது கட்டாயக்கடமையாகும்.ஒரு நொடிக்கூட அந்நாளில் தங்கவில்லையெனில் ஹஜ் நிறைவேறாது.

நாயகம் (ஸல்)அவர்கள் தங்களின் ஹஜ்ஜத்துல் விதாஃவிலே இறுதிப்பேருரையை இங்கு தான் நிகழ்த்தினார்கள்.

ஹழ்ரத் ஆதம்(அலை) அவர்களும்,ஹவ்வா(அலைஹா)அவர்களும் பூமிக்கு வந்து 200ஆண்டுகள் கழித்து முதன்முதலில் இந்த இடத்தில் தான் சந்தித்துக்கொள்கின்றனர். அதனை நினைவுக்கூறும் விதமாகவே இவ்விடத்திற்கு "அரஃபா" எனப்படுகிறது.

துல்ஹஜ் பிறை 9ல் ஹாஜிகள் இவ்விடத்தில் திக்ரு,துஆ, தரூத்,இஸ்திக்ஃபார்  போன்ற நல்அமல்களில் ஈடுப்படுவார்கள்.

அடுத்து முஸ்தலிஃபா,மினா போன்ற பல்வேறு சிறப்புக்குறிய இடங்கள் உள்ளன, அல்லாஹ் குர்ஆனில் இவற்றை அல்லாஹுவின் புராதண அடையாளச் சின்னங்கள்,கண்ணியப்படுத்துங்கள் என்கிறான்.

ذٰلِكَ وَمَنْ يُّعَظِّمْ شَعَآٮِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ‏

இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,) எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும்.(அல்குர்ஆன் : 22:32)

அல்லாஹ்வின் நெருக்கத்தையும், அன்பையும் பெற்றுத்தரும் உயர்ந்த உன்னதமான ஹஜ்ஜையும்,அங்கு சென்று நம் கண்மணி நாயகத்தின் ஸியாரத்தையும்,நபிமார்கர்களின் தியாகத்தையும் காணும் நல்வாய்ப்பை அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்கிடுவானாக!ஆமீன்

வெளியீடு: செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

No comments:

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...