Thursday, 18 November 2021

ஜும்ஆ பயான் 19/11/2021


தலைப்பு:

இறைநேசர்களின் கராமத் எனும் அற்புதங்கள்...

اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ  ‏

(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

(அல்குர்ஆன் : 10:62)

அல்லாஹுத்தஆலா தனது வல்லமையையும்,நுபுவத்தையும் மெய்ப்பிப்பதற்காக வேண்டி தனது நபிமார்களின் வழியாக.

"خرقاً للعادة  يعني خلاف العادة" 

வழமைக்கு முரணான,மனித அறிவிற்கும் புலப்படாத சில அற்புதங்களை நிகழ்த்துவதுண்டு அதற்குப் பெயர் "ஒரு அதிசயம்" முஃஜிஸா எனப்படும்.

அதுவே நபிமார்கள் அல்லாத,அல்லாஹ்விற்கு நெருக்கமான இறைநேசர்களின் மூலமாகவும் அற்புதங்கள் வெளிப்படும்.அதற்குப் பெயர் "கண்ணியங்கள்"கரமத், கராமாத் என்றும் சொல்லப்படும்.

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர்களாகிய உலக முஸ்லிம்களின் (அகீதா)கொள்கை:

كرامات الأولياء حق بإجماع أمة الإسلام من أهل السنة والجماعة الذين قالوا بجواز ظهور أمر خارق للعادة على يد مؤمن ظاهر الصلاح إكراما من الله له

இறைநேசர்களின் (கராமாத்)அற்புதங்கள் உண்மையாகும்.அல்லாஹ் சாலிஹான முஃமினான தன் நேசரை சங்கைப்படுத்த அவரின் கரங்களில் வழமைக்கு மாற்றமான சில கராமத்துகளை வெளிப்பத்தலாம் என்பது இஸ்லாமிய சமூகத்தின் ஏகோபித்தமுடிவாகும்.

சிலவழிக்கெட்ட    (அன்று முஃதஸிலாவினர் இன்று போலித் தவ்ஹீத்வாதிகள்) கூட்டத்தினர், அவ்லியாக்களின் கராமத்துகளை மறுக்கின்றனர்.

அவர்களின் வாதம்:நபிஅல்லாதவரிடமும் அற்புதம் வெளிப்பட்டால் நபிக்கும்,மற்றவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.எனவே நபிமார்களிடம் மட்டுமே அற்புதம் வெளிப்படும்.

மறுப்பு;நபியாக இருப்பதற்கு அற்புதங்கள் மட்டுமே ஷரது கிடையாது.நபிக்கு பல ஷரதுகள் உண்டு.எனவே அவ்லியாக்களிடம் (வழமைக்கு முரணான)கராமத் வெளிப்படலாம்.

அற்புங்களை காட்டி நுபுவத்தை தஃவா செய்தால் அவர் இறைநேசராக இருக்கமுடியாது.                    (எ.க;முஸைலம துப்னு கத்தாப்)

நபியாக இருப்பதற்கு அற்புதங்கள் மட்டுமே அளவுகோள் கிடையாது. சாதரண மனிதர்களும் (மெஜிஷியன்கள்,)பாவிகளும் கூட அற்புதங்களை காட்டலாம்.(எ.க:தஜ்ஜால்,சூனியக்காரர்கள்)

எனவே நபியாக இருப்பதற்கு அற்புதங்களை மட்டுமே அளவுகோளகக் கொள்வது ஏற்புடையதல்ல.

ஆனால் முஃஜிஸா,கராமத் இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு.

முஃஜிஸா என்பது இறைக்கட்டளை அதனை வெளிப்படுத்திக்காட்டுவது நபிக்கு கடமையாகும்.மேலும் ஒரு நபி தனது நுபுவத்தை மெய்ப்பிப்பதற்காகவும்,தன்னை          (معصوم )பெரும்பாவங்களை விட்டும் பரிசுத்தமானவர் என்பதனை நிரூபிப்பதற்காகவும் முஃஜிஸாவை  வெளிப்படுத்துவார்.(எ.க:நம் கண்மணி நாயகம்(ஸல்) சந்திரனை பிளந்தது,நபி மூஸா (அலை)அவர்கள் கடலை பிளந்தது.....)

கராமத் என்பது இறைநேசரை சங்கைப்படுத்த அல்லாஹ் வழங்கும் ஓர் அன்பளிப்பாகும்.அது அவருக்கு தெரிந்தும்,தெரியாமலும்,இஷ்டத்தோடும்,இஷ்டமில்லாமலும் வெளிப்படலாம். ஆனால் நுபுவத்திற்கு முஃஜிஸா கடமை.விலாயத்திற்கு கராமத் கடமையல்ல.கராமத் இல்லாமலும் இறைநேசர் இருக்கலாம்.

அவ்லியாக்களின் கராமத்தை மறுக்கும் வழிகேடர்கள் கராமத்தை மட்டுமல்ல இறைநேசர்களையே மறுப்பவர்கள்.

அவ்லியாக்கள் என்றாலே ஒரு சாரார் உட்சபட்ச மரியாதை செலுத்துவதையும்,மற்றொரு சாரார் தரம் தாழ்த்தி பேசுவதையும் காணமுடிகிறது.

இறைநேசர் என்பவர் யார்,அவர் எப்படி வாழ்ந்தார்,அவரின் வாழ்வை படிப்பினையாக எடுத்துக்கொள்வதென்றால் எப்படி எடுத்துக்கொள்வது என்பனப் போன்ற எந்த புரிதலும் இல்லாமல்,வலிமார்கள் என்றாலே கராமத்துகள் நினைவுக்கு வருவதும்.

முஸ்லிம்கள், கராமத்துகளை நிகழ்த்தினால் தான் அவர் வலி என்ற பொதுபுத்தியை ஒதுக்கிவைத்து விட்டு குர்ஆன்,ஹதீஸ் வலிக்கு சொல்லும் இலக்கணங்களை ஒப்பிட்டு பார்க்கவேண்டும்.    

                   @@@@@@@

திருக்குர்ஆன் வலிமார்களை அறிமுகம் செய்யும் மிகப்பிரபல்யமான வசனம்.

اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ  ‏

(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.(அல்குர்ஆன் : 10:62)

الَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَ‏

அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்.(அல்குர்ஆன் : 10:63)

لَهُمُ الْبُشْرٰى فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِ‌ لَا تَبْدِيْلَ لِـكَلِمٰتِ اللّٰهِ‌ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ‏

அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்.(அல்குர்ஆன் : 10:64)

இவ்வசனம் இறைநேசர்களுக்கு 4 (நான்கு) இலக்கணங்களைக்கூறுகிறது

1)பயமற்றவர்கள் 2)அச்சமற்றவர்கள் 3)ஈமான்,இறையச்சமுள்ளவர்கள் 4)இம்மை,மறுமை ஈருலகிலும் சுபச்சோபனம் பெற்றவர்கள்.

குர்ஆன் கூறும் இறைநேசரின் அடையாளம்.

اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِيَتْ عَلَيْهِمْ اٰيٰتُهٗ زَادَتْهُمْ اِيْمَانًا وَّعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ ‌‌ۖ ‌ۚ‏

உண்மையான முஃமின்கள் wahid என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள். 8:2.

و لقوله تعالى : ۚ إِنْ أَوْلِيَاؤُهُ إِلَّا الْمُتَّقُونَ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ

இறை தக்வாவுடையவர்களையே தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அவ்லியாக்களாக இருக்கமுடியாது.  8:34

                   @@@@@@@       

ஹதீஸ்களில் வலிமார்களை குறித்து...

وفي تفسير ابن كثير : حديث مرفوع كما قال البزار عن سعيد بن جبي ، عن ابن عباس قال:قال رجل: يا رسول الله، مَنْ أولياء الله؟ قال: "الذين إذا رءُوا  ذُكر الله".ثم قال البزار: وقد روي عن سعيد مرسلا. 

யாரைப்பார்த்தால் இறைவனின் ஞாபகம் வருமோ அவர்கள் தான் இறை நேசச் செல்வர்கள்.

حديث إبن ماجه 4109 والإمام أحمد  27601 عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ أَلَا أُنَبِّئُكُمْ بِخِيَارِكُمْ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ خِيَارُكُمْ الَّذِينَ إِذَا رُءُوا ذُكِرَ اللَّهُ عَزَّ وَجَلَّ

உங்களில் உன்னதமானவர்கள் யார் என சொல்லட்டுமா என நபி (ஸல்)கேட்டார்கள் .ஆம் சொல்லுங்களே என சஹாபாக்கள் சொன்னார்கள் . உங்களில் உன்னதமானவர் யாரெனில் எவர்களை பார்த்தால் மட்டுமே அல்லாஹ்(ஆகிரத்)நினைவு வருமோ அவர் தான் என நபி ஸல் சொன்னார்கள் என்பதாக அஸ்மா (ரலி)அறிவிக்கிறார்கள் .ஹதீஸ் அஹ்மத் இப்னு மாஜஹ் 4109

ஹதீஸ் கூறும் இறைநேசர்களின் அடையாளம்.

إنَّ مِن عبادِ الله مَن لو أقسَم على اللهِ لَأبَرَّه .

 صحيح ابن حبان ٦٤٩٠.  

அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி) விடுவார்களாயின் அதை அல்லாஹ் நிறைவேற்றி விடுகிறான்’

١- [عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم:] إنَّ من أمَّتي مَن لو جاء أحدُكم يسأَلُه دينارًا لم يُعْطِه ولو سأَله درهمًا لم يُعْطِه ولو سأَله فِلْسًا لم يُعْطِه ولو سأَل اللهَ الجنَّةَ أعطاه إيّاها ذي طِمْرينِ لا يُؤْبَهُ له لو أقسَم على اللهِ لأبرَّه

الهيثمي (ت ٨٠٧)، مجمع الزوائد ١٠‏/٢٦٧  •  رجاله رجال الصحيح‏‏

என் உம்மத்தில் சிலர் இருக்கின்றனர், அவர்களிலிருந்து யாரேனும் ஒருவர் உங்களில் ஒருவரிடம் வந்து ஒரு தங்க நாணயம் யாசித்தால் அவருக்குக் கொடுக்கமாட்டார், ஒரு வெள்ளி நாணயம் கேட்டால் அதையும் கொடுக்கமாட்டார், ஒரு பைசா கேட்டால் ஒரு பைசாவும் கொடுக்கமாட்டார். (ஆயினும் அல்லாஹுதஆலாவிடம் அவரது தகுதியாவது) அவர் அல்லாஹுதஆலாவிடம் சொர்க்கத்தை வேண்டினால் அல்லாஹுதஆலா அவருக்கு சொர்க்கத்தைக் கொடுத்துவிடுவான். (அம்மனிதரின் மேனியில் வெறும்) இரு பழைய போர்வைகள் இருக்கும், அவரை யாரும் சிறிதும் பொருட்படுத்தமாட்டார்கள். (ஆயினும்) அவர் அல்லாஹுதஆலா(வின் மீது தன் காரியங்களை ஒப்படைக்கும் மனவலிமையுடன்) அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால் அல்லாஹுதஆலா நிச்சயமாக அவரது சத்தியத்தை நிறை வேற்றி வைப்பான்”

                       @@@@@@@

இறை நேசர்களின் அந்தஸ்து.........

[رواه البخاري] 6021   عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ

ஸஹீஹ் புகாரி:6502 .எவர் என் நேசரை பகைத்துக் கொண்டாரோ அவருடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன்.எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்ப்படுத்திக் கொள்வதில்லை.என் அடியான் நஃபிலான வழிபாடுகளால் என் பக்கம்  நெருங்கி வந்து கொண்டே இருப்பான்.இறுதியில் அவனை  நான் நேசிப்பேன்.அவ்வாறு அவனை  நான் நேசித்து விடும் போது , அவன் கேட்கின்ற செவியாக ,அவன் பார்க்கின்ற கண்ணாக,அவன் பற்றுகின்ற கையாக,அவன் நடக்கின்ற காலாக நான் ஆகி விடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன்.என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம்  நான் அவனுக்கு  பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறை நம்பிக்கையாளரின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப்போன்று நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை.அவரோ மரணத்தை வெறுக்கிறார்.நானும் [மரணத்தின் மூலம்] அவருக்கு கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.

மேற்சொன்ன இந்த ஹதீஸில் அல்லாஹுத்தஆலா தனது வலி கேட்பதையெல்லாம் தருவேன் என்றும்,அவரின் பார்வையாக,செவியாக,கரங்களாக,பாதங்களாக இப்படி எல்லாமுமாகவே மாறிவிவேன் என்றும் கூறுவதால் இறைநேசரின் வழியாக அல்லாஹ் கராமத்துகளை வெளியாக்குவதென்பது பாரதூரமான ஒன்றல்லவே. 

                      @@@@@@@

இறைநேசர்களின் கராமத்.

குர்ஆனிலும்,ஆதாரப்பூர்வாமான அறிவிப்புகளிலும் வலிமார்களின் கராமாத்கள் உண்மை என்பதற்கு ஆதரங்கள் உள்ளன.

அல்லாஹ் நேரடியாக ஒரு அற்புதத்தை நிகழ்த்தினால் அதற்கு பெயர் குத்ரத். அல்லாஹ் நபிமார்கள் மூலமாக ஒரு அற்புதத்தை நிகழ்த்தினால் அதற்கு பெயர் முஃஜிஸாத். அல்லாஹ் வலிமார்கள் மூலமாக ஒரு அற்புதத்தை நிகழ்த்தினால் அதற்கு பெயர் கராமத்.


ஒரு ஆபித் மார்க்க அறிஞரின் கராமத்.

قال علامہ تفتازانی علیہ الرحمۃ : ’’کأتیان صاحب سلیمان علیہ السلام وھو اٰصف بن برخیا علی الاشھر بعرش بلقیس قبل ارتداد الطرف مع بعد المساف

குர்ஆனில் ஸுலைமான் (அலை)அவர்களின் அவையில் இருந்த இல்மை கற்றறிந்த ஆசிஃப் என்ற  இறைநேசர்,பல மைல்களுக்கு அப்பால் இருந்த பல்கீஸ் அம்மையாரின் சிம்மாசனத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் கொண்டுவந்தது அவரின் கராமத்தாகும் என அல்லாமா தஃப்தாஸானி (ரஹ்)அவர்கள் இவ்வசனத்திற்கு விளக்கம் கூறுகிறார்கள்.

قَالَ يٰۤاَيُّهَا الْمَلَؤُا اَيُّكُمْ يَاْتِيْنِىْ بِعَرْشِهَا قَبْلَ اَنْ يَّاْتُوْنِىْ مُسْلِمِيْنَ‏ 

“பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?” என்று (ஸுலைமான் அவர்களிடம்) கேட்டார்.(அல்குர்ஆன் : 27:38)

قَالَ عِفْرِيْتٌ مِّنَ الْجِنِّ اَنَا اٰتِيْكَ بِهٖ قَبْلَ اَنْ تَقُوْمَ مِنْ مَّقَامِكَ‌ وَاِنِّىْ عَلَيْهِ لَـقَوِىٌّ اَمِيْنٌ‏ 

ஜின்களில் (பலம் பொருந்திய ஓர்) இஃப்ரீத் கூறிற்று; நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்; நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்.”(அல்குர்ஆன் : 27:39)

قَالَ الَّذِىْ عِنْدَهٗ عِلْمٌ مِّنَ الْـكِتٰبِ اَنَا اٰتِيْكَ بِهٖ قَبْلَ اَنْ يَّرْتَدَّ اِلَيْكَ طَرْفُكَ‌ فَلَمَّا رَاٰهُ مُسْتَقِرًّا عِنْدَهٗ قَالَ هٰذَا مِنْ فَضْلِ رَبِّىْ‌ لِيَبْلُوَنِىْٓ ءَاَشْكُرُ اَمْ اَكْفُرُ‌ وَمَنْ شَكَرَ فَاِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهٖ‌ وَمَنْ كَفَرَ فَاِنَّ رَبِّىْ غَنِىٌّ كَرِيْمٌ‏ 

இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: “உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்” என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்: “இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்” என்று (ஸுலைமான்) கூறினார். (அல்குர்ஆன் : 27:40)

அன்னை மர்யம் அலை அவர்களுக்கு ஏற்பட்ட கராமத்.

ذكر البيضاوي حول تفسير قوله تعالى وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا (الآية 37 من سورة آل عمران) بأن الآية دليل على جواز الكرامة للأولياء.

وعلق الشيخ زادة على تفسير البيضاوي بأن حصول الرزق عند مريم على الوجه المذكور لا شك أنه أمر خارق للعادة ظهر على يد من لا يدعي النبوة وليس معجزة للنبي الذي كان في ذلك الزمن زكريا عليه السلام، فتعين أنه كرامة لمريم عليها السلام

நபி ஜகரிய்யா (அலை)அவர்களின் பராமரிப்பில் வளர்ந்த மர்யம் (அலை)அவர்களுக்கு மஸ்ஜிதில் பூட்டப்பட்ட தனிஅறையில் பழங்களும்,உணவும் கிடைத்தது.மர்யம் (அலை)அவர்களின் கராமத் என பைளாவி (ரஹ்)அவர்களின் தஃப்ஸீர் விளக்கம் கூறுவார்கள்.

فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُوْلٍ حَسَنٍ وَّاَنْبَتَهَا نَبَاتًا حَسَنًا ۙ وَّكَفَّلَهَا زَكَرِيَّا ‌ كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَۙ وَجَدَ عِنْدَهَا رِزْقًا ‌‌ قَالَ يٰمَرْيَمُ اَنّٰى لَـكِ هٰذَا ‌ قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ‌ اِنَّ اللّٰهَ يَرْزُقُ مَنْ يَّشَآءُ بِغَيْرِ حِسَابٍ‏

அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், “மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார்;  “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள்(பதில்) கூறினாள்.(அல்குர்ஆன் : 3:37)


குகைவாசிகளின் கராமத்.

குர்ஆனில் சூரா கஹ்ஃபில் குகைவாசிகள் 300 வருடங்கள் உறங்கியதும்,உயிர்த்தெழுந்ததும்.

கிளுர் (அலை)அவர்கள் சிறுவனை கொன்றுவிட்டு அதற்கான காரணமாக பின்நாட்களில் அவன் இப்படி இருப்பான் என்று கூறுவதும் கராமத்துகளாகும்...

நபிமொழி அறிவிப்புகளில் வரும்,முன்வாழ்ந்த சமூகத்தவர்களில் உள்ள வலிமார்களின் கராமத்துகள்....

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

(முற்காலத்தில்) ஒரு பெண் வழிபாட்டு அறையிலிருந்த தம் மகனை 'ஜுரைஜ்' என்று அழைத்தார்! 'இறைவா! நான் தொழுது கொண்டிருக்க என் தாய் என்னை அழைக்கிறாரே!' என்று ஜுரைஜ் (மனத்திற்குள்) கூறினார். மீண்டும் 'ஜுரைஜ்' என்று அப்பெண் அழைத்தபோது. 'இறைவா! நான் தொழுது கொண்டிருக்க என் தாய் அன்னை அழைக்கிறாரே!' என்று ஜுரைஜ் (மனத்திற்குள்) கூறினார். மீண்டும் அப்பெண் 'ஜுரைஜ்' என்று அழைத்தபோது 'இறைவா! நான் தொழுது கொண்டிருக்க என் தாய் என்னை அழைக்கிறாரே' என்று (மனத்திற்குள்) கூறினார். அப்போது அப்பெண் 'இறைவா! விபச்சாரிகளின் முகத்தில் விழிக்காமல் ஜுரைஜ் மரணிக்கக் கூடாது' என்று பிரார்த்தித்தார். ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தி ஜுரைஜுடைய ஆசிரமத்திற்கு வந்து செல்பவளாக இருந்தாள். அவள் ஒரு குழந்தையைப் பெற்றாள். இந்தக் குழந்தை யாருக்குப் பிறந்தது என்று அவளிடம் கேட்கப்பட்டபோது 'ஜுரைஜுக்குதான்; அவர் தம் ஆசிரமத்திலிருந்து இறங்கி வந்து இவ்வாறு செய்துவிட்டார்' என்று அவள் கூறினாள். 'தன்னுடைய குழந்தையை எனக்குப் பிறந்தது எனக் கூறும் அப்பெண் எங்கே?' என்று ஜுரைஜ் கேட்டுவிட்டு அவள் பெற்ற குழந்தையை நோக்கி 'சிறுவனே! உன் தந்தை யார்?' எனக் கேட்டதற்கு அக்குழந்தை 'ஆடுமேய்க்கும் இன்னார்' என விடையளித்தது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி (1206)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

'இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் தங்கக்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர் 'சாட்சிகளை எனக்குக் கொண்டு வா! அவர்களைச் சாட்சியாக வைத்துத் தருகிறேன்' என்றார். கடன் கேட்டவர் 'சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!' என்றார். 'அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டுவா!' என்று கடன் கேட்கப்பட்டவர் கூறினார். அதற்குக் கடன் கேட்டவர் 'பிணை நிற்க அல்லாஹ்வே போதுமானவன்' என்று கூறினார். கடன் கேட்கப்பட்டவர் 'நீர் கூறுவது உண்மையே!' என்று கூறி, குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பித் தர வேண்டும் என்று ஆயிரம் தங்கக் காசுகளை அவருக்குக் கொடுத்தார். கடன் வாங்கியவர் கடல் மார்க்கமாகப் புறப்பட்டு, தம் வேலைகளை முடித்துவிட்டு, குறிப்பிட்ட தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக வாகனத்தைத் தேடினார். எந்த வாகனமும அவருக்குக் கிடைக்கவில்லை. உடனே, ஒரு மரக்கட்டையை எடுத்து, அதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் தங்கக் காசுகளையும் கடன் கொடுத்தவருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்து அடைத்தார். பிறகு கடலுக்கு வந்து, 'இறைவா! இன்னாரிடம் நான் ஆயிரம் தங்கக் காசுகளைக் கடனாகக் கேட்டேன்; அவர் பிணையாளி வேண்டுமென்றார்; நான் 'அல்லாஹ்வே பிணைநிற்கப் போதுமானவன்!' என்றேன்; அவர் உன்னைப் பிணையாளியாக ஏற்றார். என்னிடம் சாட்சியைக் கொண்டுவரும்படி கேட்டார்; 'சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!' என்று கூறினேன். அவர் உன்னை சாட்சியாக ஏற்றார்; அவருக்குரிய (பணத்)தை அவரிடம் கொடுத்து அனுப்பி விடுவதற்காக ஒரு வாகனத்திற்கு நான் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை என்பதையெல்லாம் நீ அறிவாய்! எனவே, இதை உரியவரிடம் சேர்க்கும் பொறுப்பை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன்!' என்று கூறி அதைக் கடலில் வீசினார். அது கடலுக்குள் சென்றதும் திரும்பிவிட்டார். அத்துடன் தம் ஊருக்குச் செல்வதற்காக வாகனத்தையும் அவர் தேடிக் கொண்டிருந்தார். அவருக்குக் கடன் கொடுத்த மனிதர், தம் செல்வத்துடன் ஏதேனும் வாகனம் வரக்கூடும் என்று நோட்டமிட்ட வண்ணம் புறப்பட்டார். அப்போது, பணம் அடங்கிய அந்த மரக்கட்டையைக் கண்டார். தம் குடும்பத்திற்கு விறகாகப் பயன்படட்டும் என்பதற்காக அதை எடுத்தார். அதைப் பிளந்து பார்த்தபோது பணத்தையும் கடிதத்தையும் கண்டார். பிறகு, கடன் வாங்கியவர் ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக்கொண்டு இவரிடம் வந்து சேர்ந்தார். 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்முடைய பணத்தை உமக்குத் தருவதற்காக வாகனம் தேடும் முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தேன். இப்போதுதான் வாகனம் கிடைத்து வந்திருக்கிறேன்!' என்று கூறினார். அதற்கு கடன் கொடுத்தவர், 'எனக்கு எதையாவது அனுப்பி வைத்தீரா?' என்று கேட்டார். கடன் வாங்கியவர், 'வாகனம் கிடைக்காமல் இப்போதுதான் வந்திருக்கிறேன் என்று உமக்கு நான் தெரிவித்தேனே!' என்று கூறினார். கடன் கொடுத்தவர், 'நீர் மரத்தில் வைத்து அனுப்பியதை உம் சார்பாக அல்லாஹ் என்னிடம் சேர்ப்பித்துவிட்டான்; எனவே, ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக் கொண்டு (சரியான) வழியறிந்து செல்லும்!' என்று கூறினார். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி 2291)

அமீருல் முஃமினீன் உமர் (ரலி)அவர்களின் கராமத்...

: كرامة عمر بن الخطاب - رضي الله عنه -: عن ابن عمر - رضي الله عنهما -: أن عمر بعث جيشًا، وأَمَّرَ عليهم رجلًا يدعى سارية، فبينما عمر يخطب، فجعل يصيح: يا ساريةُ الجبلَ! فقدِم رسول من الجيش، فقال: يا أمير المؤمنين لقينا عدونا فهزمونا، فإذا بصائح يصيح: يا ساريةُ الجبلَ، فأسندنا ظهورنا إلى الجبل، فهزمهم الله تعالى. (رواه البيهقي

உமர் (ரலி) அவர்கள் சாரியா என்பவரின் தலைமையில் ஒரு படையைப் போருக்கு அனுப்பினார்கள். உமர் (ரலி) அவர்கள் ஜும்ஆ தினத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கையில் தன் உரையின் இடையே‘‘يَا سَارِيَةُ! الْجَبَلَ’’ சாரியாவே அந்த மலைக்குள் செல். சாரியாவே அந்த மலைக்குள் செல் எனக் கூறினார்கள். போர் நடந்து கொண்டிருந்த இடத்துக்கும் உமர் (ரலி) அவர்கள் இருந்த இடத்துக்கும் இடையே ஒரு மாத காலம் பயணம் செய்யத் தக்க தொலைவு இருந்தது. உமர் (ரலி) அவர்கள் இங்கிருந்து எழுப்பிய சப்தத்தை படைத் தளபதி சாரியா அங்கே செவியுற்று மலைக்குள் சென்றார். இதன் பிறகு வெற்றி கிடைத்தது.

காலித் இப்னு வலீத் (ரலி)அவர்களின் கராமத்....

விஷம் அருந்தியும் அன்னவர்களுக்கு ஒன்றுமாகவில்லை

عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، قَالَ: " شَهِدْتُ خَالِدَ بْنَ الْوَلِيدِ رَضِيَ اللَّهُ عَنْهُ بِالْحِيرَةِ أُتِيَ بِسُمٍّ ، فَقَالَ : مَا هَذَا ؟ قَالُوا : سُمُّ سَاعَةٍ قَالَ : " بِسْمِ اللَّهِ " ثُمَّ ازْدَرَدَهُ – يعني ابتلعه ولم يصبه سوء – " .

"شرح أصول اعتقاد أهل السنة والجماعة" (6/498) ، "البداية والنهاية" (6 /382) .

ஸஃபீனா (ரலி-அன்ஹா)அவர்களின் கராமத்...

وسفينة مولى رسول الله صلى الله عليه وسلم أخبرَ الأسدَ ‏أنه رسولُ رسولِ الله صلى الله عليه وسلم فمشى معه الأسد حتى أوصله إلى مقصده.

ரோம் தேசத்தை நோக்கிய இஸ்லாமிய படையில் கிளம்பிச்சென்ற ஸஃபீனா (ரலி)அவர்கள் பயணக்கூட்டதைவிட்டும்  வழிதவறி காடுவழியே சென்ற போது,தீடீரென எதிரே ஒரு சிங்கம். அம்மையார் அந்த சிங்கத்திடம், நான் நபி முஹம்மது (ஸல்)அவர்களின் அடிமை,எனக்கு வழிவிடு என்ற சொன்னதும்,அந்த சிங்கம் அவர்களுக்கு வழிகாட்டி சென்று அவர்களின் படையில் கொண்டுப்போய் சேர்த்தது.

இரு ஸஹாபிகளின் இறைநேச வாழ்க்கையில் நிகழ்ந்த கராமத்......


3639» حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُعَاذٌ قَالَ: حَدَّثَنِي أَبِي عَنْ قَتَادَةَ حَدَّثَنَا أَنَسٌ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلَيْنِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَا مِنْ عِنْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي لَيْلَةٍ مُظْلِمَةٍ وَمَعَهُمَا مِثْلُ الْمِصْبَاحَيْنِ، يُضِيآنِ بَيْنَ أَيْدِيهِمَا، فَلَمَّا افْتَرَقَا صَارَ مَعَ كُلِّ وَاحِدٍ مِنْهُمَا وَاحِدٌ حَتَّى أَتَى أَهْلَهُ. 

அனஸ்(ரலி) அறிவித்தார்.  நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் இருவர் நபி(ஸல்) அவர்களிடமிருந்து (விடைபெற்று) இருள் நிறைந்த ஓர் இரவில் (தம் இல்லங்களுக்கு) நடந்து சென்றனர். அவ்விருவருடனும் இரண்டு விளக்குகளைப் போன்றவை அவர்களுக்கு முன்னால் ஒளிவீசிக் சென்றன. அவர்கள் (வழியில்) பிரிந்து சென்றபோது, அவர்கள் தம் வீட்டாரிடம் சென்று சேரும் வரை ஒவ்வொருவருடனும் ஓர் ஒளி (மற்றொன்றைவிட்டுப் பிரிந்து அவர்களுடன்) சென்றது. அவ்விருவரும் அவரவர் வீடு போய் சேரும் வரை அந்த வெளிச்சம் இருந்தது. ( புஹாரி 3639)

இறைநேசர்களின் உடலை மண் தீண்டாது.

1351» حَدَّثَنَا مُسَدَّدٌ أَخْبَرَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ عَنْ عَطَاءٍ عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَمَّا حَضَرَ أُحُدٌ دَعَانِي أَبِي مِنَ اللَّيْلِ فَقَالَ مَا أُرَانِي إِلاَّ مَقْتُولاً فِي أَوَّلِ مَنْ يُقْتَلُ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِنِّي لاَ أَتْرُكُ بَعْدِي أَعَزَّ عَلَيَّ مِنْكَ، غَيْرَ نَفْسِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِنَّ عَلَيَّ دَيْنًا فَاقْضِ، وَاسْتَوْصِ بِأَخَوَاتِكَ خَيْرًا. فَأَصْبَحْنَا فَكَانَ أَوَّلَ قَتِيلٍ، وَدُفِنَ مَعَهُ آخَرُ فِي قَبْرٍ، ثُمَّ لَمْ تَطِبْ نَفْسِي أَنْ أَتْرُكَهُ مَعَ الآخَرِ فَاسْتَخْرَجْتُهُ بَعْدَ سِتَّةِ أَشْهُرٍ، فَإِذَا هُوَ كَيَوْمِ وَضَعْتُهُ هُنَيَّةً غَيْرَ أُذُنِهِ. 

ஜாபிர்(ரலி) அறிவித்தார்.  உஹதுப்போர் நடக்கவிருந்தபோது என்னுடைய தந்தை அன்றிரவு என்னை அழைத்து, `நபி(ஸல்) அவர்களின் சகாக்களில் (நாளை போரில்) முதலில் நானே கொல்லப்படுவேன் எனக் கருதுகிறேன். மேலும் எனக்குப் பின் நான்விட்டுச் செல்பவர்களில் நபி(ஸல்) அவர்களைத் தவிர மற்றவர்களில் உன்னைத் தவிர வேறு யாரையும் நான் மதிப்பிற்குரியவராகக் கருதவில்லை. என் மீது கடன் உள்ளது. அதை நீ அடைப்பதுடன் உன்னுடைய சகோதரிகளிடம் நல்ல முறையில் நடந்து கொள்" என்றார். மறுநாள் (போரில்) அவர்தான் முதலில் கொல்லப்பட்டார். அவருடன் இன்னொருவரும் அடக்கம் செய்யப்பட்டார். இன்னொருவருடன் அவரை கப்ரில்விட்டுவைப்பதை என்னுடைய மனம் விரும்பவில்லை. எனவே, (அடக்கப்பட்ட) ஆறு மாதங்களுக்குப் பின்பு அவரின் உடலை நான் கப்ரிலிருந்து வெளியிலெடுத்தேன். அப்போது அன்றுதான் சற்று முன்னர் அடக்கம் செய்யப்பட்டவர் போன்று அவரின் காதைத் தவிர உடம்பு அப்படியே இருந்தது.உடனே புதிய கப்ரில் அவரை தனியாக அடக்கம் செய்தேன் ‌.(புஹாரி:1351)

வலிகள் கோமான் கௌதுல் அஃளம் (ரஹ்)அன்னவர்களின் கராமத்...

ஹழ்ரத் ஷைக் அப்துல் ஹக் திஹ்லவீ (ரஹ்)அவர்கள் கூறுகிறார்கள்:அல்லாஹுத்தஆலா கௌதுல் அஃளம் (ரஹ்)அவர்களுக்கு (பயானை) சொற்பொழிவை கராமத்தாக வழங்கியிருந்தான். 

ஒருநாள் மதியம் கைலூலாவுடைய நேரத்தில் மஜ்லிஸில் தூங்கிக் கொண்டிருந்தபோது, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கௌது நாயகம் அவர்களின் கனவில் தோன்றி, 'மக்களைத் தீய வழியிலிருந்து திருத்த நீர் ஏன் அவர்களுக்கு உபதேசம் செய்யக் கூடாது? என்று கேட்க, அதற்கவர்கள் நானோ அரபியல்லாதவன். அரபிமொழி பண்டிதர்களின் மத்தியில் நான் எப்படி அரபி மொழியில் திறமையாக பேசுவேன்? என்று பதில் கூற, அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது உமிழ் நீரை அவர்கள் வாயில் ஏழுமுறை உமிழ்ந்தார்கள். அன்றுமுதல் நமது நாயகமவர்கள் திறமையாக பேசும் ஆற்றல் பெற்றார்கள். முதல் முறையாக பேச ஆரம்பித்தவுடன் இமாமுனா அலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தோன்றி, தங்களுடைய உமிழ்நீரை ஆறுமுறை உமிழ்ந்து சென்றார்கள். இதன் பலனாக அவர்கள் சாதுரியமாக பேசும் வல்லமை பெற்றார்கள்.( நூல்: கலாயிதுல் ஜவாஹிர்.)

இதனால் இவர்களது சொற்பொழிவு கேட்போர் மனதை கவர்வதாகவும், கல்நெஞ்சையும் கரைப்பதாகவும் சொற்சுவை, பொருள் பொலிவு ஆகியவை நிறைந்ததாக இருந்தது. அன்னாரின் பேச்சைக் கேட்க வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிக் கொண்டே வந்தது. சுமார் அறுபதனாயிரம், எழுபதனாயிரம் பேர் கூடிவிடுவார்கள். அவர்களின் பிரசங்கத்தை ஏறக்குறைய 400 எழுத்தாளர்களுக்கு மேல் எழுதிக் கொண்டிருப்பார்கள்.

அன்னவர்களின் சொற்பொழிவு கடும் பாறை போன்ற உள்ளத்தையும் கரைத்துவிடும்.

அவர்களின் சொற்பொழிவால் பல ஆயிரக்காணக்கான இல்லங்களும்,இலட்சக்கணக்கான உள்ளங்களும் நேர்வழிப் பெற்றன.(நூல்:அக்பாருள் அக்யார்)

                      @@@@@@@


உலகில் கியாம நாள் வரை இறைநேசர்களின் வரவு இருந்து கொண்டே இருக்கும்.கியாமத் நாள் வரை அப்புனிதர்களின் கராமாத்துகளும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும்.

அல்லாஹுத்தஆலா இறைநேசர்களின் கராமத்துகளின் பொருட்டால் நம் பிழைகளைப் பொறுத்து,நமக்கு ஈடேற்றம் தந்தருள்புரிவானாக!ஆமீன்....


வெளியீடு :செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.                  


                                   

Wednesday, 3 November 2021

ஜும்ஆ பயான் 05/11/2021

 உறவுகள் மேம்பட...

 وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ‌  اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا‏

 ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 4:01)

இஸ்லாம் ஓர் அழகிய வாழ்வியல் முறையாகும்.இறைவனுக்கு வழிப்பட்டு நடப்பது எந்தளவுக்கு அவசியமோ அதுபோல "ஹுகூகுல் இபாத்"எனப்படும் சக படைப்புகளுக்கு ஆற்றவேண்டிய கடமைகளும் அவசியமாகும்.

பெற்றோர்களின் பணிவிடை,மனைவி மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமை,உற்றார் உறவினர்களோடு நல்லுறவுப்பேணுவது,அண்டை வீட்டாரிடம் நல்லறம் பேணுதல்,                 சக மனிதர்களோடு சகோதர வாஞ்சையோடு பழகுதல் போன்றவை மார்க்கக் கடமை என்கிறது இஸ்லாம்.

(உலகில் மற்ற மதங்கள்,சமயங்களில் உறவைப் பேணுவது சிறப்பு,நல்லது என்ற ரீதியில் தான் கூறப்பட்டுள்ளதே ஒழிய கட்டாயக்கடமையல்ல) ஆனால் இஸ்லாம் இவற்றை கடமை என்கிறது, அதனால் தான் உறவை பேணாதவனின்  ஈமான் பரிபூரணம் ஆகாது என நம் மார்க்கம் இயம்புகிறது.

இன்றைய விஞ்ஞானயுகத்தில் அறிவியல் வளர்ச்சியால் மனித வாழ்க்கையில் வசதிவாய்ப்புகள் பெருகிவிட்டன.ஆனால் வாழ்வின் அவசியமான மகிழ்ச்சியையும்,நிம்மதியையும் மனிதன் இழந்துத்தவிக்கிறான்.

அலைப்பேசி,சமூகவலைதளங்கள், ஊடகங்கள் இவற்றுக்கு தரும் முக்கியத்தில் கொஞ்சம் கூட உறவுகளுக்கு தருவதில்லை.

விளைவு: பெற்றோர்களைப் பேணாத பிள்ளைகளால் பெருகிவிட்ட முதியோர் இல்லங்களும்,கணவன் மனைவிக்கிடையில் பரஸ்ப்பரம் அன்பு,பாசம்,விட்டுக்கொடுக்குதல் இல்லாததால் பெருகிவரும் விவாகரத்துக்களும்,பெற்றோர்கள் குழந்தைகளுக்கிடையில் மனம்விட்டுப் பேசுதல்,அரவணைப்பு இல்லாததால் வளரும் இளம்தலைமுறையினரின் சீரழிவும், பெரும் பெரும் அடுக்குமாடிகளில் (அபார்ட்மெண்ட்)சொகுசாக குடியிப்பவர்களின் பக்கத்து ஃபிளாடில் குடியிருப்பவன் யார்,அவனுக்கு என்ன நடந்தால் என்ன என்று எந்த இலட்சியமும் இல்லாமல் 'கான்கிரீட் காடு'களில் வாழ்ந்துக்கொண்டிருப்பவர்களும்,....

இப்படி மனித சமூகம் நிம்மதியையும்,மகிழ்ச்சியையும் தொலைத்துவிட்டு வாழவழியின்றி தவிக்கின்றது.

இனிய வாழ்விற்கு சுமூக உறவு அவசியம்.

சில வேளைகளில் பெரும் சுமையாக மாறினாலும் உறவுகள்தான் மனிதனின் பலமே! ஆபத்துகளில் கை கொடுக்க, துயரங்களில் ஆறுதல் அளிக்க, இன்ப-துன்பங்களில் உரிமையோடு பங்கெடுக்க உறவுகள் வேண்டும்.

وَهُوَ الَّذِىْ خَلَقَ مِنَ الْمَآءِ بَشَرًا فَجَعَلَهٗ نَسَبًا وَّ صِهْرًا‌  وَكَانَ رَبُّكَ قَدِيْرًا‏

“அவனே மனிதனை நீரால் படைத்தான்; அவனுக்குச் சொந்தங்களையும் பந்தங்களையும் ஏற்படுத்தினான். உம்முடைய இறைவன் பேராற்றல் உடையவன்” (25:54) என்கிறது திருக்குர்ஆன்.

மனிதனுக்குப் பிறப்பால் தாய், தந்தை, சகோதரன், சகோதரி போன்ற 25க்கும் அதிகமான சொந்தங்களும் திருமணத்தால் மாமனார், மாமியார் போன்ற 12க்கும் அதிகமான பந்தங்களும் கிடைப்பது எவ்வளவு பெரிய பலம்!

உறவுகள் மேம்பட இஸ்லாம் கூறும் வழிமுறைகள்.

முதலில் 1)அல்லாஹ்வின் திருப்பொருத்தை மாத்திரம் நாடி உறவைப்பேணுவது.பிரதிஉபகாரம் செய்தாலும்,செய்யாவிட்டாலும்,நன்றி செலுத்தினாலும்,செலுத்தாவிடினும் இறைப்பொருத்ததை நாடி செய்பவர் உறவை முறிக்கமாட்டார்.

உறவுகளில் விரிசல் ஏற்ப்பட முதல்முக்கிய காரணமே எதிர்ப்பார்ப்பதால் தான்.

"நான் இன்ன உபகாரம் செய்தால் அவர் பிரதிஉபகாரம் செய்வார் அல்லது நன்றி சொல்வார்"என்ற எதிப்பார்ப்போடு உபகாரம் செய்து அது நடக்காத போது சண்டையும்,பிரச்சனையும் உறவில் விரிசலும் ஏற்படுகிறது. 

இரண்டாவது2)உறவை வெட்டிவாழ்பவரோடும் சேர்ந்து வாழ்வது.

حديث عبد الله بن عمرو بن العاص -رضي الله تعالى عنهما- أن النبي ﷺ قال: ليس الواصل بالمكافِئ، ولكن الواصل الذي إذا قُطعت رحمه وصلها[1]. رواه البخاري.

“அவர் பேசினால் நானும் பேசுவேன்” என்று பதிலுக்குப் பதில் உறவாடுவது, உறவை மதிப்பதாகாது. உறவை முறித்துக்கொள்பவருடனும் உறவாடுவதே உறவை மதிப்பதாகும். 

மூன்றாவது3)தீங்கிழைத்தாலும் நன்மையேச் செய்வது.விட்டுக்கொடுத்து வாழ்வது.

நபி(ஸல்)அவர்களின் மக்கா வாழ்க்கையில் நபியை எதிர்த்தவர்கள்,ஏன் அவர்களின் உயிருக்கே ஆபத்தைவிளைவிக்க முயற்சித்தவர்கள் அவர்களின் உறவினர்கள் தாம்,

"ஃபத்ஹே மக்கா"மக்கா வெற்றியின் போது நாயகம் (ஸல்)அவர்கள் நினைத்திருந்தால் அவர்களை பழிவாங்கி பழித்தீர்த்திருக்கலாம் ஆனால் அவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்புவழங்கி தீங்கிழைத்தோரிடமும் நல்லமுறையில் நடந்துகாட்டினார்கள்.

عن أبي هريرة -رضي الله عنه- أن رجلاً قال: يا رسول الله، إن لي قَرابَة أصِلهم ويقطعوني، وأحسن إليهم ويُسيئُون إليَّ، وأحْلَمُ عنهم ويجهلون عليَّ، فقال: «لئن كنت كما قلت، فكأنما تُسِفُّهُمْ الْمَلَّ، ولا يزال معك من الله ظهير عليهم ما دمت على ذلك».رواه المسلم

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நண்பர் ஒருவர் வந்து, “நான் உறவை மதித்து வாழ்கிறேன். ஆனால், உறவுகள் என்னைப் புறக்கணிக்கிறார்கள். அவர்களுக்கு நான் நன்மை செய்கிறேன்; அவர்களோ எனக்குத் தீங்கு செய்கின்றனர். அவர்களுடன் சகிப்புத்தன்மையோடு நடந்துகொள்கிறேன். அவர்களோ என்னைக் கண்டுகொள்வதே இல்லை” என்று முறையிட்டார்.

அப்போது நபிகளார், “நீ சொல்வதைப் போன்று நடந்துகொள்வது உண்மையென்றால், அவர்களின் வாயை அடைத்தவர் போலாகிவிடுவீர்கள்.இதே நிலையில் நீங்கள் நீடித்திருக்கும்வரை இறைவனிடமிருந்து ஓர் உதவியாளர் அவர்களுக்கெதிராக உங்களுடன் இருந்துகொண்டேயிருப்பார்" என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.ஸஹீஹ் முஸ்லிம் (5000)

நான்காவது4)அன்பளிப்புகளை பறிமாறிக்கொள்வது உறவுகளுக்கிடையில் பாசத்தையும்,பிணைப்பையும் உண்டாக்கிக்கொள்ள இஸ்லாம் காட்டித் தரும் அழகான வழிமுறை.

حدثنا عمرو بن خالد قال حدثنا ضمام بن إسماعيل قال سمعت  موسى بن وردان عن أبى هريرة عن النبي صلى الله وسلم يقول تهادوا تحابوا               

நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பளிப்பு செய்து நேசத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி),நூல் : அல்அதபுல்முஃப்ரத்(590)

இறந்து விட்ட மனைவியின் உறவினர்களோடு மாநபி (ஸல்).

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்.

ஹாலா பின்த்து குவைலித் - கதீஜா(ரலி) அவர்களின் சகோதரி - இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வருவதற்கு அனுமதி கேட்டார். உடனே நபி(ஸல்) அவர்கள் (கதீஜா - ரலி - அவர்களைப் போன்ற குரலில் ஹாலாவும் அனுமதி கேட்ட காரணத்தால்)  கதீஜா(ரலி) அனுமதி கேட்கும் விதத்தை நினைவு கூர்ந்து கவனம் மாறி, 'இறைவா! இவர் ஹாலாவாக இருக்கட்டும்' என்று கூறினார்கள். உடனே நான் ரோஷமடைந்து இறந்துவிட்ட, தாடைகள் சிவந்த ஒரு குறைஷிக் கிழவியை ஏன் (எப்போது பார்த்தாலும்) நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்கு பதிலாக அவரைவிடச் சிறந்த மனைவியை உங்களுக்கு அல்லாஹ் கொடுத்துவிட்டானே (அப்படியிருக்க, இன்னும் ஏன் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.)' என்று கேட்டேன். ஸஹீஹ் புகாரி (3821)

ஸஹாபாக்களின் நட்புறவு.

அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் மக்காவுக்குப் பயணம் மேற்கொண்டால், அவர்களுடன் கழுதையொன்று இருக்கும். ஒட்டக வாகனத்தில் பயணம் செய்து களைத்து விட்டால், அக்கழுதைமீது ஓய்வெடுத்துக்கொள்வார்கள். மேலும், தலைப்பாகையொன்றும் அவர்களிடம் இருந்தது. அதை அவர்கள் தமது தலையில் கட்டிக்கொள்வார்கள். இந்நிலையில் ஒரு நாள் அவர்கள் அந்தக் கழுதையில் (பயணம் செய்துகொண்டு) இருந்தபோது, கிராமவாசி ஒருவர் அவர்களைக் கடந்துசென்றார்.

உடனே அவரிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "நீங்கள் இன்ன மனிதரின் புதல்வரான இன்ன மனிதரல்லவா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘ஆம்" என்றார். உடனே அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், தமது கழுதையை அக்கிராமவாசியிடம் கொடுத்து "இதில் ஏறிக்கொள்ளுங்கள்" என்றார்கள்; தலைப்பாகையைக் கொடுத்து, "இதைத் தலையில் கட்டிக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.

அப்போது அவர்களிடம் அவர்களுடைய தோழர்களில் சிலர், "அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக! தாங்கள் ஓய்வெடுப்பதற்காக (மாற்று வாகனமாகப்) பயன்படுத்திவந்த கழுதையை இந்தக் கிராமவாசிக்குக் கொடுத்துவிட்டீர்களே? (பயணத்தின்போது) தாங்கள் தலையில் கட்டிக்கொண்டிருந்த தலைப்பாகையையும் கொடுத்துவிட்டீர்களே?" என்று கேட்டார்கள்.

அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நல்லறங்களில் மிகவும் சிறந்தது, ஒரு மனிதர் தம் தந்தை மறைந்தபின் அவருடைய அன்புக்குரியவர்களுடன் நல்லுறவு பாராட்டுவதாகும்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். இந்தக் கிராமவாசியின் தந்தை (என் தந்தை) உமர் (ரலி) அவர்களின் நண்பராக இருந்தார்" என்று சொன்னார்கள்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. (ஸஹீஹ் முஸ்லிம் (4991)

உறவினர்களுக்கு செலவு செய்தல்.

يَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ ۖ قُلْ مَا أَنْفَقْتُمْ مِنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ ۗ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிடவேண்டும்). நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை நன்கறிந்தவன் எனக் கூறுவீராக. அல்குர்ஆன் 2:215..

உறவினர்களுக்கே முன்னுரிமை.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனா அன்சாரிகளிலேயே அபூதல்ஹா (ஸைத் பின் சஹ்ல்-ரலி) அவர்கள் பெரும் செல்வராக இருந்தார். அவருடைய செல்வங்களில் "பைரஹா" எனும் தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குச் சென்று அங்குள்ள நல்ல (சுவை) நீரை அருந்துவது வழக்கம். "நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாதவரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்" எனும் இந்த (3:92ஆவது) வசனம் அருளப்பெற்றபோது, அபூதல்ஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எழுந்துசென்று, "அல்லாஹ் தனது வேதத்தில் "நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாதவரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்" எனக் கூறுகின்றான். என் செல்வங்களில் எனக்கு மிகவும் விருப்பமானது "பைரஹா" (எனும் இந்தத் தோட்டமே) ஆகும். (இனி) அது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும். அதற்கான நன்மையையும் அது (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இருப்பதையும் நான் அல்லாஹ்விடம் எதிர்பார்க்கிறேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் விரும்பிய வழியில் அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்" என்று சொன்னார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நல்லது. அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம்தானே! அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம்தானே! நீங்கள் அது தொடர்பாகக் கூறியதை நான் செவியுற்றேன். அதை உங்கள் நெருங்கிய உறவினர்களிடையே (தானமாக) வழங்குவதையே நான் (உசிதமாகக்) கருதுகிறேன்" என்று சொன்னார்கள்.எனவே, அதை அபூதல்ஹா (ரலி) அவர்கள் தம் நெருங்கிய உறவினர்களுக்கும், தம் தந்தையின் சகோதரர் மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்து விட்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் (1821)

நல்லோர்களின் உபதேசம்

இமாம் ஜைனுல் ஆபிதீன் (ரஹ்) அவர்களின் மகன் முஹம்மது கூறுகிறார். எனது தந்தை ஐந்து வகையான மனிதர்களோடு எப்பொழுதும் சேராதே என்று எனக்கு வசிய்யத் செய்துள்ளார் .

1. "பாவி" இவன் ஒரு கவள உணவுக்கு. அதைவிட குறைவான பொருளுக்கு உன்னை விற்கவும் தயங்க மாட்டான். 

2."கஞ்சன்" உனக்கு மிகத் தேவையான பொருளை கூட உன்னை விட்டும் பிரிக்க தயங்க மாட்டான். 

3."பொய்யன்" அருகில் உள்ளதை உன்னை விட்டும் தூரமாக்குவான். தூரமானவற்றை சமீபமாக்கிக் காட்டுவான்.

4. "மடையன்"  இவன் உனக்கு உதவ நினைப்பான். ஆனால் முடிவு மோசமானதாகி விடும்.

5."உறவை முறித்து உறவினர்களுக்கு துன்பம் தருபவன்" இவன் இறை வேதத்தில் மூன்று இடங்களில் சபிக்கப்பட்டுள்ளதைக் கண்டுள்ளேன்.

உறவை முறிப்பது பெரும்பாவம்.                   وعن أَبي محمد جُبَيْرِ بنِ مُطْعِمٍ 

 أَنَّ رسولَ اللَّه ﷺ قَالَ: لا يَدْخُلُ الجَنَّةَ قَاطِعٌ، قَالَ سفيان في روايته: يَعْني: قاطِع رحِم. متفقٌ عَلَيهِ

உறவை முறித்துக்கொள்பவர் சொர்க்கம் செல்ல மாட்டார் என்பது நபிகளாரின் பொன்மொழி.

قال رسول الله -صلى الله عليه وسلم- : (مَن سَرَّهُ أنْ يُبْسَطَ له في رِزْقِهِ، وأَنْ يُنْسَأَ له في أثَرِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ).[١٠

. “வாழ்வாதாரம் விரிவடைய வேண்டும்; ஆயுள் அதிகமாக வேண்டும் என்று விரும்புகின்றவர் உறவுகளுடன் சேர்ந்து வாழட்டும்!” என்பதும் நபிமொழிதான். (புகாரீ, முஸ்லிம்)

உறவைப்பேணிவாழ்வதால் வாழ்வில் நிம்மதியும்,மகிழ்ச்சியும் கிடைப்பதோடு அல்லாஹ்வின் திருப்பொருத்தமும் கிடைக்கின்றது.                                          

எனவே அல்லாஹுத்தஆலா நம்மை உறவைப்பேணி வாழும் நல்லோர்களாக ஆக்கி அருள் புரிவானாக!ஆமீன்.


வெளியீடு -

செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Wednesday, 27 October 2021

ஜும்ஆ பயான் 29/10/2021 ஹிஜ்ரி 1443 பிறை -22

  

நபி (ஸல்) அவர்களின் சீர்த்திருத்த பணிகள்.

அல்லாஹ்வின் வாக்கு....

وَمَا كَانَ رَبُّكَ لِيُهْلِكَ الْقُرٰى بِظُلْمٍ وَّاَهْلُهَا مُصْلِحُوْنَ‏ 

(நபியே!) ஓர் ஊராரை, அவ்வூரார் சீர்திருந்திக் கொண்டிருக்கும் நிலையில் - அநியாயமாக உம் இறைவன் அழிக்கமாட்டான்.(அல்குர்ஆன் : 11:117)

நபியின் அருள்மொழி....

يَسِّرُوا ولا تُعَسِّرُوا، وبَشِّرُوا، ولا تُنَفِّرُوا

இலகுவாக்குங்கள்; சிரமத்தைக் கொடுக்காதீர்கள். மேலும் நல்லவற்றையே சொல்லுங்கள். சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்; வெறுப்பூட்டாதீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி 69)

நபியின் சமூக தீர்திருத்தம்.

நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் இப்பூலகில் அவதரித்த அவ்வேளையில் அரபகத்தில் அறியாமை இருள் சூழ்ந்திருந்தது என்கிறது வரலாறு.

ஆனால் உண்மை நிலை அரபகம் மட்டுமல்ல உலகம் முழுவதுமே அநீதம்,அநியாயம்,அட்டூழியம் எனும் இருளால் தத்தளித்துக்கொண்டிருந்தது.

இந்தியா போன்ற நாடுகளில் உயர்ஜாதி,கீழ்ஜாதி,தாழ்ந்த ஜாதி என்று  வர்ணாசிரமம் பேசும் வர்க்கபேதமும் ஜாதிவெறியும்,

மேலைநாடுகளில் வெள்ளையர்,கருப்பர் என நிறப்பாகுபாட்டை தூக்கிப்பிடிக்கும் நிறவெறியும்,

அரபகத்தில் குறிப்பாக அரபி,அஜமி எனும்(அரபியல்லாத மற்ற மொழி பேசுபவர்களை ஊமையர்கள் எனக்கூறும்) இனவெறியும்,மொழிவெறியும் பரவியிருந்த அறவே மனிதம் அற்ற காலமாக இருந்தது.

வேதக்காரர்களான (அஹ்லே-கிதாபுகளான)யூத,கிருத்துவர்களின் வாழ்க்கையோ இன்னும் தரம் தாழ்ந்திருந்தது.

யூதர்கள்:தங்களை கடவுளின் குழந்தைகள் என்றும் மற்றவர்கள் வாழதகுதியற்றவர்கள் என்றும் கூறி அட்டூழியம் புரிந்துக்கொண்டிருந்தனர்.

கிருத்துவர்களோ:இறைவேதமான இன்ஜீலை (பைபிள்)தங்களின் மனோஇச்சைக்கு தோதுவாக திரித்தும்,மாற்றியும் எழுதி தம் மனம்போனப் போக்கில் வாழ்வை கழித்துக்கொண்டிருந்தனர்.

சுருக்கமாக:பதிநான்காம் நூற்றாண்டில் ஓர் நல்ல இனத்தையோ,சமூகத்தையோ,சிறந்த ஆட்சியாளரையோ,ஆட்சியையோ,நல்ல சமூகத்தை கட்டமைக்கும் தலைவரையோ உலகெங்கிலும் எங்குமே கண்பது வெறும் கனவாக மட்டுமே இருந்தது.

அகிலமெல்லாம் அறியாமை இருள் சூழ்ந்திருந்த அவ்வேளையில் அருள் ஒளிவிளக்காய் அகிலத்திற்கோர் அருட்கொடையாய் அண்ணலம் பெருமானார் (ஸல்)அவர்கள் அரபிய தீபகற்பத்தில் அவதரித்தார்கள்.

இறைவன் அரபகத்தை ஏன் தேர்ந்தெடுத்தான்?

நாயகம் (ஸல்)அவர்கள் முழுஉலகிற்கான,கியாம நாள் வரை உள்ள அனைவருக்குமான இறுதித்தூதர் ஆவார்கள்.அவர்களின் வருகை குறிப்பாக அரபகத்தில் நிகழ்ந்தற்கான பல்வேறு காரணங்களை விவரிக்கும் ஆய்வாளர்கள் முக்கிய காரணமாகக்கூறுவது:புவியியல் அமைப்பிலேயே அரபகம் என்பது ஆசியா,ஐரோப்பா,ஆப்ரிக்கா ஆகிய பெரும் கண்டங்களின் மத்திய பகுதியாக இருந்தது.இப்பகுதிகளை சுற்றி பல்வேறு மதங்களும்,இனக்குழுக்களும் விரவிக்கிடந்தன.

அரபகம் மத்திய பகுதியாக இருந்ததால் சுற்றியுள்ள நாட்டினர் வருவதும்,செல்வதும் சகஜமாக இருந்தது. எனவே உலகெங்கிலுமுள்ளவர்களை இஸ்லாத்தை நோக்கி அழைப்பதும்,அழைப்பு பணியைக்கொண்டுப்போய் சேர்ப்பதற்கும் உகந்த இடம் அரபகம் என்பதால் அல்லாஹ் அதை தேர்ந்தெடுத்தான்.

சீர்திருத்தத்தின் துவக்கம்.

மக்காவில்........

மக்க மாநகரில் உயர்ந்த கோத்திரம் குரைஷிக் கோத்திரத்தவர்கள்,குரைஷி கோத்திரத்தில் சிறந்த வம்சம் ஹாஷிமீ வம்சத்தார்.

நாயகம் (ஸல்)அவர்கள் குரைஷி கோத்திரத்தில் ஹாஷிமீ வம்சத்தில் பிறக்கிறார்கள்.

நாயகம் (ஸல்)அவர்கள் சீர்திருத்தப் பணியை முதலில் தனது குடும்பத்தவர்கள்,கோத்திரத்தவர்களிடம் துவங்குகிறார்கள்.

துவக்கத்தில் மக்கத்து குரைஷிகள் நபியின் தூதுத்துவத்தையும்,சீர்திருத்த பணியையும் மறுத்ததோடு அல்லாமல் மூர்க்கத்தனமாக எதிர்த்தனர்.

நெருங்கிய உறவினர்களை நேர்வழிக்கு அழைத்தல்.

وَاَنْذِرْ عَشِيْرَتَكَ الْاَقْرَبِيْنَۙ‏

“நீங்கள் உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்.” (அல்குர்ஆன் 26:214)

இவ்வசனம் அருளப்பட்டதும் நபி (ஸல்) தங்களது நெருங்கிய உறவினர்களான ஹாஷிம் கிளையாரை அழைத்தார்கள். அவர்களுடன் முத்தலிபின் வமிசத்தில் சிலரும் சேர்ந்து மொத்தம் 45 ஆண்கள் வந்தனர். நபி (ஸல்) பேசத் தொடங்கியபோது அபூ லஹப் முந்திக்கொண்டு “இவர்கள் உமது தந்தையின் சகோதரர்களும் அவர்களுடைய பிள்ளைகளுமாவர். அதை நினைவில் கொண்டு பேசு! மதம் மாறியவர்களைப் பற்றி இங்கு பேசாதே. அறிந்துகொள்! அரபியர்களில் உன்னுடைய கூட்டத்தாருக்கு எந்தவொரு வலிமையுமில்லை. உன்னை தண்டிப்பதற்கு நானே மிகத் தகுதியானவன். நீ கூறும் இந்த ஏகத்துவத்தில் நீ உறுதியாக இருந்தால், அது அரபிகளின் துணையுடன் குறைஷி குடும்பத்தினர் உன்மீது பாய்வதற்கு ஏதுவாகிவிடும். தனது தந்தையின் சொந்தக்காரர்களுக்கு உன்னைப் போல தீங்கிழைத்த எவரையும் நான் கண்டதில்லை” என்று கூறினான். இதனால் நபி (ஸல்) அச்சபையில் பேசாமல் இருந்துவிட்டார்கள்.

மக்கா வாழ்வில் நபியவர்கள் 13 ஆண்டுகள் தொடர் சீர்த்திருத்த பணியில் கடும் சிரமங்களுக்கு மத்தியில் மக்களை ஓரிறைக்கொள்கையின் பால் அழைத்ததுடனே குலப்பெருமை,நிற இனப்பாகுபாடுகளுக்கு எதிராகவும்,பெண்உரிமை,பெண்களின் கண்ணியம் காத்திடவும்,இயலாதோர்,வரியோர்களின் உரிமைகளை காத்திடவும்,  உலகில் ஒளித்த ஒரே குரல், முதல் குரல், நபியவர்களின் குரலாக இருந்தது. 

கடும் எதிர்ப்புகளுக்கிடையிலும் நபியின் சீர்த்திருத்த பணியில் தோய்வு ஏற்ப்படவில்லை.

நாளுக்கு நாள் வளர்ந்து, மக்காவை கடந்து, தாயிஃப்,யத்ரிப்(மதினா),அபிசீனியா வரை தாக்கத்தை ஏற்படுத்தியது.

மதினாவில் நபியவர்கள்...

நபி (ஸல்)அவர்களின் மக்கா வாழ்க்கை, சீர்திருத்த பணியின் அஸ்திவாரம் எனில், மதினா வாழ்க்கை அசுர வளர்ச்சி,முழுவடிவம் எனலாம்.

கல்வி,பொருளாதாரம்,குடும்பவியல், அரசியல்,அணுகுமுறை என பல்துறைகளில் மிகப்பெரும் மாற்றத்தையும்,சீர்திருத்ததையும் ஏற்படுத்தினார்கள்.நற்குணங்களின் பிறறேப்பிடமாகவும்,ஏழை எளியோர்களின் புகலிடமாகவும்,அநாதைகளின் அரவணைப்பாகவும்,பெண்கள், குழந்தைகள்,வயோதிகர்களின் ஆதரவாகவும் நபியின் சீர்த்திருத்த பணி அமைந்திருந்தது.

நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த அழகிய சீர்திருத்த வழி முறைகளில் சில......


நபியின் சீர்திருத்தம் தொழுகையில்....

முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தேன். அப்போது (தொழுதுகொண்டிருந்த) மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான் "யர்ஹமுக் கல்லாஹ்” (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக) என்று (மறுமொழி) கூறினேன். உடனே  மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான் "என்னை என் தாய் இழக்கட்டும்! நீங்கள் ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்?" என்று கேட்டேன். மக்கள் (பதிலேதும் கூறாமல்) தங்கள் கைகளால் தொடைகள் மீது தட்டினர். என்னை  அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்று நான் அறிந்துகொண்டு அமைதியாகி விட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் என் தந்தையும் என் தாயும் நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்- (பின்வருமாறு அறிவுரை) கூறினார்கள். அவர்களுக்கு முன்னரோ பின்னரோ அவர்களைவிட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் (என் வாழ்நாளில்) கண்டதேயில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!  அவர்கள் என்னைக் கண்டிக்கவுமில்லை; அடிக்கவுமில்லை; திட்டவுமில்லை. (மாறாக,) அவர்கள், "இந்தத் தொழுகையானது, மக்களின் பேச்சுகளுக்கு உரிய நேரமன்று. தொழுகை என்பது இறைவனைத் துதிப்பதும் பெருமைப்படுத்துவதும் குர்ஆன் ஓதுவதுமாகும்" என்றோ அல்லது இதைப் போன்றோ சொன்னார்கள். (புகாரி (935),)


இரண்டு பிரிவினர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட கருத்து மோதலில் நபியின் சீர்திருத்தம்.

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

அகழ்ப் போர் (முடிந்து வந்த) தினம், நபி(ஸல்) அவர்கள், 'பனூ குறைழா குலத்தினர் வசிக்குமிடத்தை நீங்கள் அடையும் வரை (உங்களில்) எவரும் அஸ்ருத் தொழுகையைத் தொழவேண்டாம்' என்று கூறினார்கள். வழியிலேயே அஸ்ரு(த் தொழுகை) நேரத்தை அவர்கள் அடைந்தனர். அப்போது சிலர், 'பனூ குறைழாக் குலத்தினரை அடையும் வரை நாம் அஸ்ருத் தொழ வேண்டாம்' என்று கூறினர். வேறு சிலர், '(தொழுகை நேரம் தவறிப் போனாலும் தொழவேண்டாம் என்ற) அந்த அர்த்தத்தில் நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை; ('வேகமாக அங்கு போய்ச் சேருங்கள்' என்ற கருத்தில் தான் இந்த வார்த்தையைக் கூறினார்கள்) எனவே, நாம் தொழுவோம்' என்று கூறினர். நபி(ஸல்) அவர்களிடம் இரண்டு சாரார் குறித்தும் தெரிவிக்கப்பட்டபோது அவர்களில் எவரையும் அவர்கள் குறை கூறவில்லை.(ஸஹீஹ் புகாரி (4119)

குற்றம் செய்தவரிடம் நபியின் சீர்திருத்தம்...

அலீ(ரலி) அறிவித்தார்....

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் அவர்களையும் மிக்தாத் அவர்களையும் 'நீங்கள் 'ரவ்ளத்து காக்' என்னுமிடம் வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்' என்று கூறி அனுப்பினார்கள். (அவ்வாறே) நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தோடின. இறுதியில், நாங்கள் 'ரவ்ளா' எனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு (சிவிகைப்) பெண்ணைக் கண்டோம். நாங்கள் (அவளிடம்), 'கடிதத்தை வெளியே எடு' என்று கூறினோம். அவள், 'என்னிடம் கடிதம் எதுவுமில்லை' என்று கூறினாள். நாங்கள், 'ஒன்று நீயாகக் கடிதத்தை எடுத்து (கொடுத்து) விடு; இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி (சோதனையிட்டு) விடுவோம்' என்று சொன்னோம். உடனே, அவள் (இடுப்பு வரை நீண்டிருந்த) தன்னுடைய சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றோம். அதில், ஹாத்திப் இப்னு அபீ பல்தஆ அவர்கள் மக்காவாசிகளான இணைவைப்போரிடையுள்ள பிரமுகர்கள் சிலருக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (ரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்ததைக் கண்டோம். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஹாத்திபே! என்ன இது?' என்று கேட்டார்கள். ஹாத்திப்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! என் விஷயத்தில் அவரசப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷிகளில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாக இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களின் வீட்டாரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கிறார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால் மக்காவாசிகளுக்கு உபகாரம் எதையாவது செய்து, அதன் காரணத்தால் அவர்கள் என் உறவினர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று விரும்பினேன். (அதனால் அவர்கள் கேட்டுக் கொண்ட படி இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் சத்திய மார்க்கத்தை நிராகரித்தோ, (இஸ்லாத்தைத் துறந்து) வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இவர் உங்களிடம் உண்மை பேசினார்' என்று கூறினார்கள். உமர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விட என்னை அனுமதியுங்கள்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும், உமக்கென்ன தெரியும்? ஒருவேளை அல்லாஹ் பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களைப் பார்த்து, 'நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன்' என்று கூறி விட்டிருக்கலாம்' என்றார்கள். 

'என்ன (பலமான) அறிவிப்பாளர் தொடர் இது!' என்று இந்த நபிமொழியின் அறிவிப்பாளர் தொடரைக் கண்டு இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) (வியந்து) கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி (3007)

தன்னை சபித்தவரை சபித்தவருக்கு நபியின் சீர்திருத்த உபதேசம்

عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ دَخَلَ رَهْطٌ مِنَ الْيَهُودِ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا السَّامُ عَلَيْكُمْ. قَالَتْ عَائِشَةُ فَفَهِمْتُهَا فَقُلْتُ وَعَلَيْكُمُ السَّامُ وَاللَّعْنَةُ. قَالَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((مَهْلاً يَا عَائِشَةُ، إِنَّ اللَّهَ يُحِبُّ الرِّفْقَ فِي الأَمْرِ كُلِّهِ)). فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ وَلَمْ تَسْمَعْ مَا قَالُوا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((قَدْ قُلْتُ وَعَلَيْكُمْ)

நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) கூறினார் 

யூதர்களில் ஒரு குழுவினர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'அஸ்ஸாமு அலைக்கும்' (-உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சலாம்) கூறினர். அவர்கள் கூறியதைப் புரிந்துகொண்ட நான் அவர்களுக்கு 'வ அலைக்கும் அஸ்ஸலாமு வல்லஅனா (-அவ்வாறே உங்களின் மீது மரணமும் சாபமும் உண்டாகட்டும்)' என்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாளுவதையே அல்லாஹ் விரும்புகிறான்' என்று கூறினார்கள். அப்போது நான், 'இறைத்தூதர் அவர்களே! அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான்தான் 'வ அலைக்கும்' (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லிவிட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?)' என்று கேட்டார்கள். (ஸஹீஹ் புகாரி (6024)


நபி (ஸல்)அவர்களின் சீர்திருத்த பணியின் நீட்சி...

நபிகளாரின் இவ்வுலக வாழ்வு  குறைந்த காலமே என்றாலும் அவர்கள் நூற்றாண்டுகள் செய்யும் சாதனைகளையும்,சீர்திருத்ததையும் குறைந்த காலத்திலே செய்வதென்பது நபியின் தனிச்சிறப்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

மனிதத்தோல் போர்த்திய மிருங்களை மனிதப் புனிதர்களாக மாற்றியதும்,இறந்த உள்ளங்களை உயிர்ப்பெறச்செய்ததும்,வெறுப்பு, விரோதத்தை நீக்கி அன்பையும்,பாசத்தையும், பிணைப்பையும் ஏற்படுத்தியதும்.அறியாமை இருளில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்களை மீட்டு அவர்களுக்கு அறிவொளியும் புகட்டி சத்திய இஸ்லாமிய பாதையில் மடம்மாற்றியதும் நபியின் பேரற்புதமும்,வேறொருவரால் செய்யமுடியாத சாதனைகளுமாகும்.

அல்லாமா சுலைமான் நத்வி(ரஹ்)அவர்கள் கூறுகிறார்கள்:ஆதம் (அலை)அவர்கள் தொடங்கி ஈசா (அலை)வரையிலும்,உலகளவில் ஷாம்(சிரியா) முதல் இந்தியா வரை எந்த மனிதரையும் நம் நபிக்கு நிகராக காணமுடியாது.காரணம் அவர்களின் சொல்லும் செயலும் ஒன்றாக இருந்தது.

சொன்னதை தான் செய்தார்கள் செய்வதை தான் சொல்வார்கள்.அப்படி ஒரு தலைவரை வரலாறு கண்டதில்லை.

இன்றும் உலகளவில் மக்களின் சீர்திருத்ததிற்காகவும் ஈடேற்றத்திற்காகவும் பல்வேறு அமைப்புகளும்,குழுக்களும், ஜமாஅத்துகளும் முயற்சிகளை மேற்கொண்டும் இலக்கை அடையமுடியவில்லை.நபிவழியில் நடப்பதாலே ஒழிய மனித சமூகம் சிர்த்திருத்தம் பெறமுடியாது.

எனவே நபியை நேசிப்போம்,நபிவழி நடப்போம்...


வெளியீடு : -

செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...