Wednesday, 22 June 2022

ஜும்ஆ பயான்24/06/2022

குர்பானியின் முக்கியத்துவம்.


فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ‏

எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.      (அல்குர்ஆன் : 108:2)

ஹஜ்ஜுடைய மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது ஹஜ் பயணத்திற்கான தயாரிப்புகள் ஒருபக்கம் நடந்துகொண்டு இருந்தாலும் மறுபக்கம் ஏனைய முஸ்லிம்கள்  குர்பானி மற்றும் கூட்டுக் குர்பானி அமலை நிறைவேற்றுவதற்கான ஆர்வத்திலும்,ஆயத்தப் பணிகளிலும் இருந்து வருகிறார்கள்.

குர்பானி, பொருள் சார்ந்த வணக்கங்களில் முக்கியமானதும்,இஸ்லாமிய அடையாளச் சின்னங்களில் ஒன்றாகவும் உள்ளது.

குர்பானி கொடுக்கும் பாரம்பரியம், ஆதி பிதா ஆதம் (அலை) அவர்களின் காலம் தொட்டே நடைமுறையில் இருந்து வருகின்றது.

குர்ஆனில் மரியம் சூராவில் ஹஸ்ரத் ஆதம் (அலைஹி) அவர்களின் இரு மகன்களான ஹாபில் மற்றும் காபில் இருவரும் குர்பானி கொடுத்த வரலாறு கூறப்படுகிறது. 

ஹாபில்  ஒரு ஆட்டையும்,காபில் சில விளைச்சல் பொருட்களையும் குர்பானியாக முன்வைக்கின்றனர்.

ஹாபிலின் குர்பானி ஏற்றுக்கொள்ளப்பட்டு,காபிலின் குர்பானி மறுக்கப்படுகிறது.

وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ ابْنَىْ اٰدَمَ بِالْحَـقِّ‌ۘ اِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ اَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْاٰخَرِ قَالَ لَاَقْتُلَـنَّكَ‌ قَالَ اِنَّمَا يَتَقَبَّلُ اللّٰهُ مِنَ الْمُتَّقِيْنَ‏

(நபியே!) ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பியும்; அவ்விருவரும் (ஒவ்வொருவரும்) குர்பானி கொடுத்த போது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை; (பின்னவர்) “நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று கூறினார். அதற்கு (முன்னவர்) “மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்” என்று கூறினார்.(அல்குர்ஆன் : 5:27)

அக்காலத்தில் குர்பானி  ஏற்றுக்கொள்ளப்பட்டதன் அடையாளமாக வானிலிருந்து நெருப்பு வந்து குர்பானியை கரித்து செல்லும்.

اَلَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ عَهِدَ اِلَيْنَاۤ اَلَّا نُؤْمِنَ لِرَسُوْلٍ حَتّٰى يَاْتِيَنَا بِقُرْبَانٍ تَاْكُلُهُ النَّارُ‌ قُلْ قَدْ جَآءَكُمْ رُسُلٌ مِّنْ قَبْلِىْ بِالْبَيِّنٰتِ وَبِالَّذِىْ قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوْهُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏

மேலும் அவர்கள், “எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை காண்பிக்கு)ம் வரை அவர் மீது நாங்கள் விசுவாசம் கொள்ள வேண்டாம்” என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்” என்று கூறுகிறார்கள். (நபியே!): “எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்” என்று நீர் கூறும்.(அல்குர்ஆன் : 3:183)

குர்பானி என்கிற வணக்கம் எல்லா உம்மத்திலும் கடமையாக இருத்திருக்கின்றது.

குர்ஆனில்....

وَلِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِّيَذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلٰى مَا رَزَقَهُمْ مِّنْ بَهِيْمَةِ الْاَنْعَامِ  فَاِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ فَلَهٗۤ اَسْلِمُوْا‌  وَبَشِّرِ الْمُخْبِتِيْنَ ۙ‏

இன்னும் கால்நடை(ப்பிராணி)களிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச் செய்வதற்காவே குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக்கிறோம்; ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!(அல்குர்ஆன் : 22:34)

முற்காலத்தில் குர்பானி என்பது தங்களின் அமல் கபூலானாதா? என்பதனை சோதித்துப் பார்க்கும் ஒரு அடையாளமாக இருந்தது. ஆனால் நம் உம்மத்திற்கு உயர்ந்த, உன்னத தியாக வரலாற்றை நினைவு கூறும் ஓர் வணக்கமாக  ஆக்கப்பட்டது.

ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை)அவர்கள் தங்களின் பாசத்திற்குரிய மகனார் இஸ்மாயில் (அலைஹி) அவர்களை அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிட தயாரானபோது, அல்லாஹ் சுவனத்தில் இருந்து ஓர் செம்மறிஆட்டை இறக்கிவைத்து அவர்களின் தியாகத்தை அங்கீகரித்து,கியாம நாள் வரை அவர்களின் தியாகத்தை போற்றும் ஒரு திருநாளாக இந்த உம்மத்திற்கு குர்பானியை ஒர் வணக்கமாக ஆக்கிவிட்டான்.

இதனையே குர்ஆனில்...

فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْىَ قَالَ يٰبُنَىَّ اِنِّىْۤ اَرٰى فِى الْمَنَامِ اَنِّىْۤ اَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرٰى‌ قَالَ يٰۤاَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ‌ سَتَجِدُنِىْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰبِرِيْنَ‏

பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”(அல்குர்ஆன் : 37:102)

فَلَمَّاۤ اَسْلَمَا وَتَلَّهٗ لِلْجَبِيْنِ‌‏

ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது;          (அல்குர்ஆன் : 37:103)

وَنَادَيْنٰهُ اَنْ يّٰۤاِبْرٰهِيْمُۙ‏

நாம் அவரை “யா இப்ராஹீம்!” என்றழைத்தோம்.(அல்குர்ஆன் : 37:104)

قَدْ صَدَّقْتَ الرُّءْيَا ‌ ‌ اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏

“திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.              (அல்குர்ஆன் : 37:105)

اِنَّ هٰذَا لَهُوَ الْبَلٰٓؤُا الْمُبِيْنُ‏

“நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”(அல்குர்ஆன் : 37:106)

وَفَدَيْنٰهُ بِذِبْحٍ عَظِيْمٍ‏

ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்.(அல்குர்ஆன் : 37:107)

وَتَرَكْنَا عَلَيْهِ فِى الْاٰخِرِيْنَ‌‏

இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்:(அல்குர்ஆன் : 37:108)

குர்பானியின் நோக்கம்.

لَنْ يَّنَالَ اللّٰهَ لُحُـوْمُهَا وَلَا دِمَآؤُهَا وَلٰـكِنْ يَّنَالُهُ التَّقْوٰى مِنْكُمْ‌ كَذٰلِكَ سَخَّرَهَا لَـكُمْ لِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ‌ وَبَشِّرِ الْمُحْسِنِيْنَ‏ 

(எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!(அல்குர்ஆன் : 22:37)

குர்பானியை மனமுவந்து நிறைவேற்ற வேண்டும். மாறாக பிறர் புகழவேண்டும் என்பதற்காகவோ, அல்லது ஏதோ கடமையை நிறைவேற்றினால் போதும் என்ற எண்ணத்திலோ, அல்லது மிக மெலிந்த பிராணியை குறைந்த விலைக்கு வாங்கியோ, அல்லது பக்கத்து வீட்டுக்காரர் குர்பானி கொடுக்கிறார் எனவே நாமும் கொடுப்போம் என்று குர்பானி கொடுத்தாலோ, குர்பானி நிறைவேறாது எந்த நன்மையும் கிடைக்காது. எனவே மனமுவந்து இறைவனுக்காக நிறைவேற்ற வேண்டும் . குர்பானி குர்பானியாக இருக்க வேண்டுமே தவிர குர்பானி பிர்யாணிக்காக இருக்கக் கூடாது.

இஸ்மாயீல் (அலை)அவர்களுக்கு பகரமாக ஓர் ஆட்டை இறக்கியதற்கும்,தங்களின் உயிருக்கு பகரமாக குர்பானியை ஆக்கியதற்கு நன்றிசெலுத்துவதே குர்பானியின் நோக்கமாகும்.

ஏன் குர்பானி கொடுக்க வேண்டும்?

உலக முஸ்லிம்கள் துல்ஹஜ் மாதம் 10-ம் நாள் குர்பானி கொடுப்பது ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு கொண்டது. அப்போது, இறைவனின் உத்தரவுக்கு இணங்க, நபி இப்ராகீம் (அலை) அவர்கள் தமது அருமை புதல்வரை ‘மினா’ எனும் இடத்தில் அறுத்துப் பலியிட முன் வந்தார்.

அவரின் இந்த மாசற்ற தியாகத்தை இறைவன் மெச்சும் வண்ணம் உருவானது தான் குர்பானி கொடுக்கும் வழக்கம். உலக முடிவு நாள் வரைக்கும் மக்கள் இந்த தியாகத்தை நினைவுகூரும் வகையிலும், முதன்முதலாக ஆட்டை அறுத்துப் பலியிட்ட அவரின் வழிபாட்டு முறையை கடைப்பிடிக்கும் விதமாகவும் இந்த தியாகத்திருநாள் அமைந்திருக்கிறது.

ஒருமுறை நபிகளாரிடம் அவரது தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே, இந்த தியாகப் பிராணிகளின் கலாசாரம் என்ன?’ என்று கேட்டார்கள். ‘இது உங்களின் தந்தை இப்ராகீம் (அலை) அவர்களின் கலாசார வழிமுறை’ என நபி (ஸல்) பதில் அளித்தார்கள்.

ஈத் பெருநாளின் முக்கிய அமல்.

பராஉ(ரலி) கூறினார் :

நபி(ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெநாளில்) உரையாற்றியதை கேட்டேன். அவர்கள் (தம் உரையில்) 'நாம் இன்றைய தினம் செய்யும் முதல் வேலை (பெருநாள் தொழுகை) தொழுதுவிட்டுத் திரும்பிச் சென்று குர்பானிப் பிராணிகளை அறுப்பதாகவே இருக்கவேண்டும். இதை செய்கிறவர் நம்முடைய வழியைப் பின்பற்றியவராவார். (பெருநாள்) தொழுகைக்கு முன்பே (பிராணியை) அறுக்கிறவர் தம் குடும்பத்தாருக்காக முன்கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அது அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது' என்று கூறினார்கள். 

அப்போது அபூ புர்தா(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! நான் தொழுவதற்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்து விட்டேன். என்னிடம் இரண்டு வயது பூர்த்தியான ஓர் ஆட்டைவிடச் சிறந்த ஒரு வயது பூர்த்தியான (வெள்ளாட்டுக் குட்டி) ஒன்று உள்ளது. (அதை நான் அறுக்கலாமா?)' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் 'முதலில் அறுத்ததற்கு பதிலாக இதையே அறுத்து விடுவீராக! ஆனால், உங்களுக்குப் பிறகு வேறெவருக்கும் 'அது செல்லாது' அல்லது 'நிறைவேறாது' என்று பதிலளித்தார்கள்.

(ஸஹீஹ் புகாரி 5560)

குர்பானி இஸ்லாத்தின் அடையாளச்சின்னம்.

ஒவ்வொரு நாட்டிற்கும் தேசிய அடையாள சின்னங்கள் உண்டு. அவற்றை பாதுகாப்பதும்,மரியாதை செலுத்துவதும் அந்நாட்டினரின் கடமையாகும்.அதுபோல் இஸ்லாமும் சில அடையாளச் சின்னங்களை குர்ஆனில் கூறுகிறது.அவற்றில் குர்பானியும் ஒன்றாகும். 

ذٰلِكَ وَمَنْ يُّعَظِّمْ شَعَآٮِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ‏

இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,) எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும்.(அல்குர்ஆன் : 22:32)

குர்பானி இறைவனுக்காக...

குர்பானி கொடுப்பது இறைவனின் கட்டளையாகும்.அறியாமைக் காலத்திலும் குர்பானி கொடுப்பதை வணக்கமாகக் கருதி வந்தார்கள். ஆனால் அவர்கள்  பிராணிகளை சிலைகளுக்காக வதம் செய்வதை குர்பானியாக கருதி வந்தார்கள்.

இன்றும் கூட ஹிந்துக்களும்,இன்னும் பல்வேறு மதத்தவர்களும், அவர்களின் கடவுளர்களின் பெயரால் பிராணிகளை அறுத்து பலியிடுவதை வணக்கமாகக் கருதுகிறார்கள்.கிருத்துவர்களும்  ஜீசஸ்  பெயரால் அறுத்து பலியிடுவதை இன்றும் காணலாம். 

இஸ்லாம் தொழுகையும், குர்பானியையும் இறைவனுக்காக மாத்திரம் நிறைவேற்ற வேண்டும் என அழுத்தம்,திருத்தமாக வலியுறுத்துகிறது.

 சூரா கவ்ஸரில்...

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ‏

எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.

இதே கருத்துப்பட சூரா அன்ஆமிலும்..

قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏

நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.(அல்குர்ஆன் : 6:162)

நாயகம் (ஸல்)அவர்களின் குர்பானி.

عَنْ أَنَسٍ قَالَ ضَحَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ، فَرَأَيْتُهُ وَاضِعًا قَدَمَهُ عَلَى صِفَاحِهِمَا يُسَمِّي وَيُكَبِّرُ، فَذَبَحَهُمَا بِيَدِهِ.

அனஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்.நபி(ஸல்) அவர்கள் இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கிடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவர்கள் தங்களின் பாதத்தை அவற்றின் பக்கவாட்டின் மீது வைத்துக்கொண்டு அல்லாஹ்வின்பெயர் கூறி,தக்பீர் (அல்லாஹ{ அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன் என்று) சொல்லி அவற்றைத் தம் கையால் அறுத்ததை பார்த்தேன்.(புஹாரி,முஸ்லிம்)

மற்றொரு ஹதீஸின் அடிப்படையில்....

1589- عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ أَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ عَشْرَ سِنِينَ يُضَحِّي.قَالَ أَبُو عِيسَى: هَذَا حَدِيثٌ حَسَنٌ.

நம்முடைய நபியவர்கள் மதீனாவில் 10 ஆண்டுகள் வாழ்ந்தார்கள் ஒவ்வொரு ஆண்டும் குர்பானி கொடுத்தார்கள்.            ( திர்மிதி)

இந்த நபிமொழி யின் மூலம் நபியவர்கள் எந்த ஆண்டும் குர்பானி கொடுக்காமல் இருந்ததில்லை எனக்கூறுகிறது. இவ்வாறு தொடர்ந்து வழமையாக நபி( ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்திருப்பது குர்பானியின் முக்கியத்துவத்தையும்,சிறப்பையும் உணர்த்துகிறது.

குர்பானி கொடுப்பவர், தம் கரங்களால் குர்பானிப் பிராணியை அறுப்பதே சிறப்பாகும்.

ஒரு ஹதீஸில் வருகிறது.

நாயகம் (ஸல்)அவர்கள் தங்களின் கடைசி (ஹஜ்ஜத்துல் விதாஃ) ஹஜ்ஜின் போது நூறு ஒட்டகங்களை  குர்பானி  கொடுத்தார்கள்.அவற்றில் எண்பது ஒட்டகங்களை தம் கரங்களால்  அறுத்து பலியிட்டார்கள்.மீதமுள்ளவற்றை ஸய்யதுனா அலி (ரலி) அவர்கள் அறுத்தார்கள். 

குர்பானி கொடுக்கவில்லை யானால்... 

ما رواه أحمد وأبو داود عن مخنف بن سليم أنّ النبيّ صلّى الله عليه وسلّم قال: (( يَا أَيُّهَا النَّاسُ، إِنَّ عَلَى أَهْلِ كُلِّ بَيْتٍ أُضْحِيَةُ كُلَّ عَامٍ )).

மஃக்னஃப் இப்னு ஸுலைம் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “மக்களே! உங்களில் (சொந்தமாக) வீடுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்டும் உள்ஹிய்யா கொடுக்க வேண்டும்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: அபூதாவூத், அஹ்மத் )

ما رواه أحمد وابن ماجه وغيرهما عن أبي هريرة رضي الله عنه عن النبيّ صلّى الله عليه وسلّم قال: (( مَنْ وَجَدَ سَعَةً فَلَمْ يُضَحِّ، فَلاَ يَقْرَبَنَّ مُصَلاّنَا )) [حديث حسن].

قال السّندي رحمه الله:" ليس المراد أنّ صحة الصلاة تتوقّف على الأضحية، بل هو عقوبة له بالطّرد عن مجالس الأخيار، وهذا يفيد الوجوب، والله تعالى أعلم ".

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “யார் உள்ஹிய்யா கொடுக்கிற அளவுக்கு வசதி வாய்ப்புகள் பெற்றிருந்தும் உள்ஹிய்யா கொடுக்க வில்லையோ, அவர் நம் தொழுமிடத்துக்கு வரவேண்டாம்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                                         ( நூல்: அஹ்மத், இப்னு மாஜா )

இந்த ஹதீஸிற்கு விளக்கம் தருகிற அஸ்ஸிந்தீ (ரஹ்) அவர்கள் “உள்ஹிய்யா கொடுப்பவரின் தொழுகை தான் நிறைவேறும் என்ற பொருளில் இந்த ஹதீஸை அணுகாமல் உள்ஹிய்யா கொடுப்பவர்களோடு இவர்கள் கலந்து விடுவதிலிருந்து தனித்து விடப்படவேண்டும் என்ற பொருளிலேயே இதை அணுக வேண்டும். மேலும், இது ஒரு வகையில் அவர்களைத் தண்டிப்பது போலவும் அமைந்திருக்கின்றது, மேலும், இந்த ஹதீஸை இவ்வாறு நோக்கும் பட்சத்தில் உள்ஹிய்யா வாஜிப் எனும் அந்தஸ்தைப் பெறுகின்றது. அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்” என்று கூறுகின்றார்கள்.

குர்பானி நாட்களில் சிறப்பான அமல்.

ما عمل ابن آدم يوم النحر عملا أحب إلى الله عزوجل من إهراق الدم و إنها لتأتي يوم القيامة بقرونها و أشعارها و أظلافها و أن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا ))  

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஆதமுடைய மகன் நஹ்ருடைய நாளில் செய்யும் செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானது உள்ஹிய்யா பிராணியின் இரத்தத்தை ஓட்டுவது தான். நாளை மறுமையில் அது அதன் முழு உருவில் வரும். (அதன் கொம்புடனும், அதன் முடிகளுடனும், அதன் சதைகளோடும் வரும்) திண்ணமாக, இந்தப் பூமியில் அதன் உதிரம் சேரும் முன்னரே அல்லாஹ்விடம் அது போய் சேர்ந்து விடுகின்றது. ஆகவே, நீங்கள் தூய மனதோடு உள்ஹிய்யாக் கொடுங்கள்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

(( يا رسول الله صلى الله علي وسلم ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم

قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة )) 

”நபித்தோழர்களில் சிலர் நபி {ஸல்} அவர்களிடம் இந்த உள்ஹிய்யாவினால் என்ன கிடைக்கும்? இதன் தாத்பரியம் என்னவென்று வினவினர். அப்போது நபி {ஸல்} அவர்கள் இது உங்களின் தந்தையான இப்ராஹீம் (அலை) அவர்களின் அழகிய நடைமுறையாகும். இந்த உள்ஹிய்யா பிராணியின் ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஒவ்வொரு நன்மைகள் கிடைக்கும்” என்று நபி {ஸல்} அவர்கள் பதிலளித்தார்கள்.

يا فاطمة قومي إلى أضحيتك فاشهديها فإن لك بكل قطرة تقطر من دمها أن يغفر لك ما سلف من ذنوبك قالت يا رسول الله ألنا خاصة آل البيت أو لنا و للمسلمين قال بل لنا و للمسلمين )) حديث منكر .

இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உள்ஹிய்யா தினத்தன்று அண்ணல் நபி {ஸல்} அவர்கள் தமது அருமை மகளாரிடம்

ஃபாத்திமாவே! எழுவீராக! உம்முடைய பிராணியிடத்தில் ஆஜராகுவீராக!

மேலும், நிச்சயமாக, எனது தொழுகையும், என்னுடைய வழிபாடுகளும், என்னுடைய வாழ்வும் என்னுடைய மரணமும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரியனவாகும். அவனுக்கோ யாரும் இணையில்லை. இவ்வாறே எனக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. மேலும், நான் இறைவனுக்கு கீழ்ப்படிவோரில் முதன்மையானவன்” என்று நீர் கூறுவீராக!

ஏனெனில் குர்பானிப் பிராணியின் முதலாவது சொட்டு இரத்தம் விழும்போதே உனது அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன.

மேலும் இந்தப் பிராணி மறுமை நாளில் இதனுடைய இரத்தமும் மாமிசமும் எழுபது மடங்கு கூடுதலாக கொண்டு வரப்படும். இதை உன்னுடைய மீஸானில் (நன்மைத் தட்டில்) வைக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இந்த பாக்கியம் உங்களுக்கும், உங்கள்  குடும்பத்தினருக்கு மட்டும் உரியதா? அல்லது எல்லா முஸ்லிம்களுக்கும் உரியதா? எனக் கேட்டார்கள்.

அப்போது நபி {ஸல்} அவர்கள் ”இது முஹம்மதுடைய குடும்பத்திற்கும் எல்லா முஸ்லிம்களுக்கும் பொதுவானதுதான்” என பதிலளித்தார்கள்.

يا أيها الناس ضحوا و احتسبوا بدمائها فإن الدم و إن وقع في الأرض فإنه يقع في حرز الله )) 

“மக்களே! நன்மையை எதிர்பார்த்து உள்ஹிய்யா கொடுங்கள். ஏனெனில், உள்ஹிய்யா பிராணியின் உதிரம் இப்பூமியில் விழுமுன் அல்லாஹ்வின் சந்நிதானத்தின் முன் விழுந்துவிடுகின்றது” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

عظموا ضحاياكم فإنها على الصراط مطاياكم 

”குர்பானிப் பிராணிகளில் மிகச் சிறப்பானதைக் கொடுங்கள். ஏனெனில் அது தான் மறுமையில் உங்களின் வாகனம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உயிருக்கு பகரமாகும் குர்பானி.

உலகில் எல்லா உம்மத்தினரும் அல்லாஹுவின் நெருக்கத்தை உண்டாக்கிக் கொள்ள குர்பானி கொடுத்துவந்தனர்.

ஜகாத் பொருளுக்கு பகரமாக தரப்படுவதை போல குர்பானி உயிருக்கு பகரமாகும். 

ஆதம்(அலை)அவர்களின் காலத்திலிருந்தே குர்பானி நடைமுறையில் இருந்தாலும்,

இப்ராஹீம்(அலை)அவர்கள் தம் மகனார் இஸ்மாயீல்(அலை)அவர்களை பலியிடத் தயாரன போது, அல்லாஹ்  அவருக்கு பகரமாக ஓர் ஆட்டை இறக்கி வைத்ததிலிருந்தே இந்த அமல் உயிருக்கு பகரமாக ஆனது.

قال ابن عباس: هو الكبش الذي تقرب به هابيل، وكان في الجنة يرعى حتى فدى الله به

إسماعيل.

وعنه أيضا: أنه كبش أرسله الله من الجنة كان قد رعى في الجنة أربعين خريفا.

அல்லாஹ் ஹாபிலுடைய ஆட்டை ஏற்றுக் கொண்டான் அதை சொர்க்கத்தில் 40 வருடங்கள் பாதுகாத்தான் அந்த ஆட்டைத்தான் இப்ராஹிம் நபி (அலை) அவர்கள் இஸ்மாயில் (அலை) அவர்களுக்கு பகரமாக பலியிட்டார்கள் -  நூல் : (தப்ஸீர் - இப்னு கஸீர் ).


குர்பானியின் சட்டம்

குர்பானியாக ஆடு,மாடு,ஒட்கை இம்முன்றில் ஒன்றை தரவேண்டும்.

وَلِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِّيَذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلٰى مَا رَزَقَهُمْ مِّنْ بَهِيْمَةِ الْاَنْعَامِ فَاِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ فَلَهٗۤ اَسْلِمُوْا‌ وَبَشِّرِ الْمُخْبِتِيْنَ ۙ‏

குர்பானி செய்வதை ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமையாக்கி இருக்கின்றோம். அல்லாஹ் கொடுத்திருந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் மீது அவன் பெயரைக் கூறி குர்பானி செய்யுங்கள். ஆகவே, உங்களுடைய இறைவன் (ஒரே) ஒருவன்தான். ஆதலால், அவன் ஒருவனுக்கே நீங்கள் முற்றிலும் கட்டுப்பட்டு நடங்கள். உள்ளச்சம் உடையவர்களுக்கு (நபியே!) நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.(அல்குர்ஆன் : 22:34)

இவ்வசனத்தில் இடம் பெறும்”அல்அன்ஆம்”” எனும் வார்த்தை ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகளை எடுத்துக் கொள்ளும்.

மேலும் நபி (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் இம்மூன்று வகைப் பிராணிகளைத் தவிர மற்றவை எதனையும் அவர்களின் வாழ்நாளில் குர்பானிக்காக கொடுத்ததில்லை.

குர்பானி கொடுக்க வசதியற்றவர்கள் குர்பானி கொடுப்பதாக எண்ணிக் கொண்டு கோழி, சேவலை அறுப்பது மக்ரூஹ். அது குர்பானியாக ஏற்படாது.

நூல் : ஆலம்கீரி, குலாஸாபக்கம் – 332

குர்பானி நம் உயிருக்கு பகரமாக தரப்படுவதால் உயர்வான சிறந்த பிராணியை தரவேண்டும்.

குர்பானி பிராணி குறைகள் அற்றதாகவும்,வயது பூர்த்தியானதாகவும் இருக்கவேண்டும்.

عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ، رَفَعَهُ قَالَ: لاَ يُضَحَّى بِالعَرْجَاءِ بَيِّنٌ ظَلَعُهَا، وَلاَ بِالعَوْرَاءِ بَيِّنٌ عَوَرُهَا، وَلاَ بِالمَرِيضَةِ بَيِّنٌ مَرَضُهَا، وَلاَ بِالعَجْفَاءِ الَّتِي لاَ تُنْقِي.

தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்பரா பின் ஆசிப் (ரலி)நூல் : திர்மிதீ(1417), அபூதாவூத்(4293), நஸயீ(4294) , இப்னுமாஜா (3135), அஹ்மத் (17777)

وَلَا تَجُوزُ الْعَمْيَاءُ وَالْعَوْرَاءُ الْبَيِّنُ عَوَرُهَا، وَالْعَرْجَاءُ الْبَيِّنُ عَرَجُهَا وَهِيَ الَّتِي لَا تَقْدِرُ أَنْ تَمْشِيَ بِرِجْلِهَا إلَى الْمَنْسَكِ، وَالْمَرِيضَةُ الْبَيِّنُ مَرَضُهَا، وَمَقْطُوعَةُ الْأُذُنَيْنِ وَالْأَلْيَةِ وَالذَّنَبِ بِالْكُلِّيَّةِ، وَاَلَّتِي لَا أُذُنَ لَهَا فِي الْخِلْقَةِ، وَتُجْزِئُ السَّكَّاءُ وَهِيَ صَغِيرَةُ الْأُذُنِ فَلَا تَجُوزُ مَقْطُوعَةُ إحْدَى الْأُذُنَيْنِ بِكَمَالِهَا وَاَلَّتِي لَهَا إذْنٌ

குருடானவை, அறவே நடக்க முடியாதவை காதுகள் துண்டிக்கப்பட்டவை, காதுகள் அறவே இல்லாதவை,வால், பித்தட்டு துண்டிக்கப்பட்டவை, மேயத் தெரியாதவை, மூக்கு துண்டிக்கப்பட்டவை, மடி துண்டிக்கப்பட்டவை, கன்றுக்கு பால் கொடுக்க முடியாதவை, பால் வற்றியவை, நாக்கு இல்லாதவை,நஜீஸைத்தவிர மற்றதை சாப்பிடாதவை ஒரு கால் துண்டிக்கப்பட்டவை ஆகியன குர்பானி கொடுக்கக்கூடாது.

(நூல் : துர்ருல்முக்தார் , ஆலம்கீரி, பக்கம் – 330)

عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ: أَمَرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَشْرِفَ العَيْنَ وَالأُذُنَ، وَأَنْ لاَ نُضَحِّيَ بِمُقَابَلَةٍ، وَلاَ مُدَابَرَةٍ، وَلاَ شَرْقَاءَ، وَلاَ خَرْقَاءَ.

பிராணிகளின் கண்களையும், காதுகளையும், கவனித்துத் தேர்வு செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். சிறிதளவு காது வெட்டப்பட்டவை, காது கிழிக்கப்பட்டவை, காதில் துவாரமிடப்பட்டவை ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள்  (திர்மிதீ 1532,)

குர்பானி உயர்ந்த நோக்கத்திற்காக தரப்படுவதால்,உளத்தூய்மை மிக அவசியமாகும்.

لَنْ يَّنَالَ اللّٰهَ لُحُـوْمُهَا وَلَا دِمَآؤُهَا وَلٰـكِنْ يَّنَالُهُ التَّقْوٰى مِنْكُمْ‌ كَذٰلِكَ سَخَّرَهَا لَـكُمْ لِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ‌ وَبَشِّرِ الْمُحْسِنِيْنَ‏

(எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!(அல்குர்ஆன் : 22:37)

அல்லாஹ் நம் எண்ணங்களை அழகாக்கியும்,நம் குர்பானியை சிறந்ததாகவும் ஆக்கி வைப்பானாக!ஆமீன்...

வெளியீடு: செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.


Wednesday, 15 June 2022

ஜும்ஆ பயான் 17/06/2022

ஹஜ் எனும் கடமை. 

وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ

“இன்னும், ஹஜ்ஜுக்காக மனிதர்களுக்கு அறிவிப்பு ஒன்றை விடுப்பீராக! நடந்தவர்களாக அவர்கள் உம்மிடம் வருவார்கள். இன்னும், மெலிந்த எல்லா ஒட்டகத்தின் மீதும் அவர்கள் வருவார்கள். அவை வெகுதூரமான எல்லா வழிகளில் இருந்தும் அவர்களைக் கொண்டு வரும்”. ( அல்குர்ஆன்: 22: 27 )

மனிதன் மேற்கொள்ளும் பயணங்களை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று பிழைப்புக்குப் பொருளீட்ட மேற்கொள்ளும் பயணம். அடுத்ததோ பொழுதுபோக்குக்கான பயணம். பயணங்கள் இரண்டானாலும், இவற்றில் தன்னலமும் இச்சைகளுமே மிகுந்திருக்கின்றன. இவையே அவனை வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டுச் செல்லத் தூண்டுகின்றன.

அன்பான உற்றார், உறவுகளைவிட்டு பல ஆயிரம் மைலுக்கு அப்பால் அனுப்புவதும் தன் நலன்சார்ந்த காரணங்களாகவே இருக்கும். இதில் அர்ப்பணம் என்றிருக்க வாய்ப்பில்லை. ஆனால், ஹஜ் பயணம் இவை எல்லாவற்றையும்விட முற்றிலும் மாறானது. இது இறைவனுக்காகவே மேற்கொள்ளப்படும் பயணம்.

மேலும் (ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் நன்மையானது, தக்வா (என்னும் பயபக்தியே) ஆகும்எனும் (2:197) 

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

யமன் வாசிகள் (ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருள்களைச் சேகரிக்காமல் ஹஜ்ஜுக்கு வருவார்கள்; மேலும் நாங்கள் இறைவன் மீது நம்பிக்கை வைத்துள்ளோம் என்றும் கூறுவார்கள். மக்கா வந்தடைந்தால் மக்களிடம் யாசகம் கேட்பார்கள். இது குறித்தே அல்லாஹ் (ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள், நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் நன்மையானது தக்வா (என்னும் பயபக்தியே) ஆகும்’ என்ற வசனத்தை இறக்கினான்.

முதல் ஆலயம்....

மனிதர்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்பதற்காக முதலில் கட்டப்பட்ட இறையில்லம் மக்காவிலுள்ள'கஅபா' ஆலயமாகும்.

إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ 

“அகிலத்தின் நேர்வழிக்கு உரியதாகவும்,பாக்கியம் பொருந்தியதாகவும்மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா (எனும் மக்கா) வில்உள்ளதாகும்”.                   ( அல்குர்ஆன்: 3: 96 )

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ ، ثنا عَبْدُ اللَّهِ ، ثناأَبُو مُعَاوِيَةَ ، وَعِيسَى بْنُ يُونُسَ ، قَالا : ثنا الأَعْمَشُ , عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ ، عَنْأَبِيهِ ، عَنْ أَبِي ذَرٍّ

 قَالَ : قُلْتُ : " يَا رَسُولَ اللَّهِ أَيُّ مَسْجِدٍ وُضِعَ فِي الأَرْضِ أَوَّلُ ؟ قَالَ : الْمَسْجِدُ الْحَرَامُ . قَالَ : قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ثُمَّ أَيُّ ؟ قَالَ : الْمَسْجِدُ الأَقْصَى . قَالَ : قُلْتُ : كَمْ بَيْنَهُمَا ؟ قَالَ : أَرْبَعُونَ سَنَةً ، وَأَيْنَمَا أَدْرَكْتَ الصَّلاةَ فَصَلِّ , فَإِنَّمَا هُوَ مَسْجِدُكَ " .

அபூதர் (ரலி)  அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நான் நபி {ஸல்} அவர்களிடம் ''பூமியில் முதலில் அமைக்கப்பட்ட பள்ளி எது?'' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல் மஸ்ஜிதுல் ஹராம்' (கஅபா) என்றுகூறினார்கள். பிறகு எது? என்றேன். 'அல் மஸ்ஜிதுல் அக்ஸா' என்று கூறினார்கள். ''இந்த இரண்டிற்கும் மத்தியில் எத்தனை (வருடங்கள் இடைவெளி?)'' என்று கேட்டேன். ''நாற்பது வருடங்கள்'' என்று நபி {ஸல்} கூறினார்கள்.   ( நூல்: புகாரி 3366 )

கஃபதுல்லாஹ்வின் சிறப்பு.

கஃபா வெறுமனே கருப்பு அங்கி போர்த்தப்பட்ட ஆன்மீக தலம் என்பது மாத்திரம் அல்ல,

மலக்குகள்,இறைநேசச் செல்வர்கள்,முஃமீன்கள் அனைவரின் ஆன்மீக தலைமையகம்.

மனிதன் பூமிக்கு வருவதற்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மலக்குகளால் கஃபா கட்டப்பட்டு,தவாஃப் செய்யப்பட்டுவந்தது.பின்பு ஆதம் அதனை கட்டும் பாக்கியம் பெற்றார்கள்.

அதன் பின்பு இப்ராஹீம்(அலை)அவர்கள்,இஸ்மாயீல்(அலை)இருவரின் மீள் உருவாக்கம் பிரபல்யமானதாகும்.

கஃபதுல்லாஹ், இஸ்லாமியர்கள் தொழுகை துவங்கி எல்லா நல்அமல்களுக்கும் முன்னோக்கும் முக்கிய அம்சமாகும்.

مَنۡ نَظَرَ اِلَی الۡكَعۡبَةِ اِيۡمَانًا وَّ تَصۡدِيۡقًا خَرَجَ مِنَ الۡخَطَا يَا كَيَوۡمٍ وَلَدَتۡهُ اُمُّهٗ

"எவர் கஃபாவை ஈமானோடும்,உண்மையான உள்ளத்தோடும் பார்ப்பாரோ,

அவர் அன்று அவரின் தாய் பெற்றெடுத்த பாலகனைப் போல பாவங்களிலிருந்து வெளியேறிவிடுவார்"என கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் சொன்னார்கள்

ஹஜ் செய்வதின் சிறப்பு

அப்துர் ரஹ்மான் பின் ஷுமாசா அல்மஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இறப்பின் நெருக்கத்தில் இருந்த அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவர்கள் நீண்ட நேரம் அழுதார்கள். பிறகு அவர்கள் சுவரை நோக்கித் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். அப்போது அவர்களுடைய புதல்வர், "அருமைத் தந்தையே! தங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்னின்ன நற்செய்திகளைக் கூறவில்லையா?" என்று கேட்டார். உடனே அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் தமது முகத்தை (தம் புதல்வரை நோக்கி)த் திருப்பி (பின்வருமாறு) கூறினார்கள்: "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்" என்றும் உறுதி கூறியதே நமது சேமிப்புகளில் சிறந்தது ஆகும். நான் (என் வாழ்நாளில்) மூன்று கட்டங்களைக் கடந்து வந்திருக்கிறேன்.

(முதலாவது கட்டத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது கடுமையான வெறுப்புக் கொண்டவர் என்னைவிட வேறெவரும் இருக்கவில்லை என்றே நான் கருதினேன். என்னால் இயன்றால் அவர்களைக் கொன்றுவிட வேண்டும் என்பதே எனக்கு மிகவும் விருப்பமான விஷயமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் மட்டும் நான் இறந்துவிட்டிருந்தால் நான் நரகவாசிகளில் ஒருவனாக ஆகியிருப்பேன்.

(இரண்டாவது கட்டத்தில்) அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தை ஊட்டினான். அப்போது நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று "உங்கள் வலக் கரத்தை நீட்டுங்கள். நான் உங்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிக்கிறேன்" என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் தமது வலக் கரத்தை நீட்டினார்கள். உடனே நான் எனது கையை இழுத்துக்கொண்டேன். நபி (ஸல்) அவர்கள், "அம்ரே! உமக்கு என்ன ஆயிற்று?" என்று கேட்டார்கள். நான், "சில நிபந்தனைகளை விதிக்க விரும்புகிறேன்" என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், "என்ன நிபந்தனை விதிக்கப்போகிறீர்?" என்று கேட்டார்கள். "என் (முந்தைய) பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும்" என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும்; ஹிஜ்ரத்தும் (மார்க்கத்திற்காக நாடுதுறத்தல்) முந்தைய பாவங்களை அழித்துவிடும்; ஹஜ்ஜும் முந்தைய பாவங்களை அழித்துவிடும் என்று உமக்குத் தெரியாதா?" என்று கேட்டார்கள். (பிறகு நான் இஸ்லாத்தைத் தழுவினேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட மிகவும் பிரியமானவர் வேறெவரும் எனக்கு இருக்கவில்லை; எனது பார்வைக்கு அவர்களை விட மிகவும் கண்ணியமானவர் வேறெவரும் இருக்கவில்லை. அப்போது அவர்கள்மீது நான் வைத்திருந்த மரியாதையினால் என் கண்கள் நிரம்ப அவர்களைப் பார்க்கக்கூட என்னால் முடியவில்லை. அவர்களை வர்ணித்துக் கூறும்படி நான் கேட்டுக்கொள்ளப்பட்டால் அதற்கும் என்னால் இயலாது. ஏனெனில், நான் அவர்கள்மீது வைத்திருந்த மரியாதையின் காரணத்தால் என் கண்கள் நிரம்ப அவர்களை நான் பார்த்திருக்கவிலலை. அந்த நிலையில் நான் இறந்திருந்தால் சொர்க்கவாசிகளில் ஒருவனாக ஆகியிருப்பேன் என்றே எதிர் பார்க்கிறேன்.

பிறகு (மூன்றாவது கட்டத்தில்) பல்வேறு பொறுப்புகளை நாம் வகித்தோம். அவற்றில் எனது நிலையென்ன என்பது எனக்குத் தெரியாது. எனவே, நான் இறந்துவிட்டால் ஒப்பாரி வைப்பவரோ நெருப்போ என் சடலத்தோடு இருக்கலாகாது. என்னை (குழிக்குக்குள் வைத்து) நீங்கள் அடக்கம் செய்யும்போது என்மீது மண்ணைத் தள்ளுங்கள். பிறகு ஓர் ஒட்டகத்தை அறுத்து அதன் இறைச்சியைப் பங்கிடும் நேரம் அளவுக்கு நீங்கள் அடக்கத்தலத்தைச் சுற்றி நில்லுங்கள். உங்களால் நான் ஆசுவாசமடைவேன்; என் இறைவனின் தூதர்க(ளான வானவர்க)ளிடம் நான் என்ன பதிலளிப்பது என்பதையும் கண்டுகொள்வேன். ( இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம் 192)

ஹஜ்ஜை கடமையாக்கும் அருள்மறை வசனங்கள்..

 وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا ‌ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنِ الْعٰلَمِيْنَ‏

 இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 3:97)

وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِ 

ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (அல்குர்ஆன் : 2:196)

ஹஜ்ஜின் சிறப்பு பற்றிய ஹதீஸ்கள்.

1521- حَدَّثَنَا آدَمُ ، حَدَّثَنَا شُعْبَةُ ، حَدَّثَنَا سَيَّارٌ أَبُو الْحَكَمِ قَالَ : سَمِعْتُ أَبَا حَازِمٍ قَالَ : سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ :

مَنْ حَجَّ لِلَّهِ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ.

“உடலுறவு மற்றும் பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவன் அவனது தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாத பாலகனாக) திரும்புவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி-1521)

- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَرِيفٍ ، حَدَّثَنَا عِمْرَانُ بْنُ عُيَيْنَةَ ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ ، عَنْ مُجَاهِدٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، عَنِ النَّبِيِّ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ قَالَ :

الْغَازِي فِي سَبِيلِ اللهِ ، وَالْحَاجُّ وَالْمُعْتَمِرُ ، وَفْدُ اللهِ ، دَعَاهُمْ ، فَأَجَابُوهُ ، وَسَأَلُوهُ ، فَأَعْطَاهُمْ.

“அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர், ஹஜ் செய்பவர், உம்ரா செய்பவர் ஆகியோர் அல்லாஹ்வின் சிறப்பு விருந்தினர்கள் ஆவர். அவன் அவர்களை அழைத்தான். அவர்கள் பதிலளிக்கின்றனர். அவனிடம் அவர்கள் பிரார்த்தித்தார்கள். அவர்களுக்கு அவன் வழங்கி விடுகின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: இப்னு மாஜா-2893 (2884)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ ، وَمُوسَى بْنُ إِسْمَاعِيلَ ، قَالاَ : حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ قَالَ : حَدَّثَنَا ابْنُ شِهَابٍ ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ،

أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم سُئِلَ أَيُّ الْعَمَلِ أَفْضَلُ فَقَالَ إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ قِيلَ ثُمَّ مَاذَا ؟ قَالَ : الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ قِيلَ ثُمَّ مَاذَا ؟ قَالَ : حَجٌّ مَبْرُورٌ.

“செயல்களில் சிறந்தது எது?” என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “ஏற்றுக் கொள்ளப்படும் ஹஜ்” என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி-26 

ஹஜ் சொல்லும் பாடம்.

மக்காவுக்கு ஹஜ் பயணம் செல்ல விரும்பும் ஒவ்வொருவரும் ‘இஹ்ராம்’ என்றழைக்கப்படும் எளிமை மிக்க ஒரு வெள்ளாடையுடன் போர்வை, காலணிகளை உடைமைகளாக்கிக் கொள்ள வேண்டியிருக்கும். இறைவனின் திருமுன் உடலாலும் உள்ளத்தாலும், எளிமையாக இருங்கள் என்பதே இதன் செய்தி.

ஹஜ்,பல சூட்சுமங்களையும் எண்ணற்ற ஆன்மீக தத்துவங்களையும் தன்னகத்தே தாங்கியிருக்கும் உயர்ந்த உன்னதமான ஓர் வணக்கமாகும்.

ஹஜ்ஜில் ஒவ்வோர் எட்டுமே இறைகாதலின் வெளிப்பாடாகும்.

ஹஜ் என்பதே அல்லாஹ்வின் பூர்வீக ஆலயம் கஃபா ஷரீஃபை தரிசிப்பதும்,மக்க மாநகரை நோக்கிய பயணமேயாகும்.

அல்லாஹ்வின் நேசத்திற்குறிய நபிமார்களும்,ரஸுல்மார்களும் மக்காவிற்கு பயணம் மேற்கொண்டு,இறை ஆலயத்தை தரிசிக்கும் சிறப்பை பெற்றார்கள்.

ஹழ்ரத் ஆதம் (அலை)அவர்கள் துவங்கி ஹழ்ரத் இப்ராஹீம் (அலை)அவர்கள்,இஸ்மாயீல்(அலை)அவர்கள் இறுதியாக நம் கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் வரை பல நபிமார்களின் அழகிய அடிச்சுவடி களை இப்புனித மண் தாங்கி நிற்கின்றது.

ஹழ்ரத் இஸ்மாயீல் (அலை)அவர்களின் குர்பானி வெளிப்பட்ட இடம்,மகாமே இப்ராஹீம் எனும் இடம்,ஜம் ஜம் நீரூற்று,அன்னை ஹஜ்ரா அம்மையார் திக்குத்தெரியாமல் ஓடிய ஸஃபா,மர்வா.சுவனத்திலிருந்து இறக்கியருளப்பெற்ற அஜ்ருல் அஸ்வத் இவையனைத்தும் இங்கு தான் உள்ளன.

இவையனைத்தையும் விடவும் நம் கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் பிறந்த,வாழ்ந்த ஊரும்,நபிக்கு மிக விருப்பமான ஊரும் மக்க மாநகரமாகும்.

ஹஜ் என்பது தொழுகை,நோன்பு,(ஸதகா)தானதர்மங்கள்,குர்பானி போன்ற எல்லா அமல்களும் நிறைந்த பரிபூரண வணக்கமாகும்.இதனால் தான் இதற்கு இறுதிக் கடமை என்று பெயர்.

ஹஜ்ஜிலே உலகெங்கிலுமிருந்து பல இனத்தவர்,பல்வேறு மொழிபேசுவோர், பல நிறத்தவர்,பல தேசத்தவர் என்கிற எந்த பேதமும் இன்றி அனைவரும் ஒரே இறைவனின் திருப்பொருத்தத்தை மாத்திரம் நாடி ஒன்றுக்கூடும் உலகின் ஒரே புனித தலம் மக்காவிலே உள்ள இறையில்லமாம் கஃபதுல்லாஹ் ஆகும்.

ஹஜ்ஜில் உயர்ந்தோர்,தாழ்ந்தோர் என்கிற எந்த பாகுபாடும் கிடையாது.அனைவரும் ஒரே தாய்,தந்தையரின் பிள்ளைகள் என்பதனை பறைசாற்றும் விதமாக இஹ்ராம் ஆடையை தான் அணியவேண்டும்.

ஒரே அல்லாஹ்,ஒரே ரஸுல்,ஒரே வேதம்,ஒரே கஃபா என்பனவற்றை ஈமான் கொண்டோர் ஒரே அமைப்பிலும்,ஒரே ஆடையிம்,ஒரே தோற்றத்திலும்,ஓர் அணியில் ஒன்றுபட வேண்டும் என அல்லாஹ் விரும்புகிறான்.

ஹாஜிகளின் தல்பியா...

இதோ ஹஜ்ஜின் காலம் துவங்கிவிட்டது உலகில் முளைமுடுக்குகளிலிருந்து ஹாஜிகள் لَبَّیْکَ اَللّٰھُمَّ لَبَّیْکَ என்ற தல்பியாவை முழங்கியவர்களாக இறையில்லத்தை நோக்கி புறப்பட்டு செல்கின்றனர்.

ஹாஜிகள் لَبَّیْکَ اَللّٰھُمَّ لَبَّیْکَ "வந்துவிட்டேன் இறைவா"என்று தல்பியா சொல்வதற்கு பின்னனியில் ஒரு சுவாரஸ்யமான வரலாறு உள்ளது.

لما فرغ إبراهيم من بناء البيت قيل له : ( أذن في الناس بالحج ) قال : رب وما يبلغ صوتي ؟ قال : أذن وعلي البلاغ

ஹழ்ரத் இப்ராஹீம்(அலை)அவர்கள் கஃபதுல்லாஹ்வை கட்டி முடித்ததும் அல்லாஹ் சொன்னான்;இப்ராஹீமே!ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக!

இப்ராஹீம்(அலை)அவர்கள் கேட்டார்கள்:"ரப்பே!எனது சப்தம் (அழைப்பு)எப்படி (எல்லோருக்கும் போய்)சேரும்"

இறைவன் சொன்னான்;நீர் அறிவிப்புச் செய்யும்,அதனை கொண்டு சேர்க்கும் பொறுப்பு என்னுடையது.

 عن ابن عباس قوله : ( وأذن في الناس بالحج ) قال : قام إبراهيم خليل الله على الحجر ، فنادى : يا أيها الناس كتب عليكم الحج ، فأسمع من في أصلاب الرجال وأرحام النساء ، فأجابه من آمن من سبق في علم الله أن يحج إلى يوم القيامة : لبيك اللهم لبيك

ஹழ்ரத் இப்ராஹீம் (அலை)அவர்கள் ஒரு குன்றின் மீது ஏறி நின்று உலகமாந்தர்களை நோக்கி அழைப்புக்கொடுக்கிறார்கள் "மனிதர்களே!உங்களின் மீது ஹஜ் கடமையாகிவிட்டது.

(அவர்களின் இவ்வழைப்பை அல்லாஹ்)ஆண்களின் முதுகந்தண்டில் உள்ளவர்களையும்,பெண்களின் கருவிலே உள்ளவர்களையும் கேட்கச்செய்தான்.

கியாம நாள் வரையுள்ளவர்களில் யாரையெல்லாம் ஹஜ்ஜீ செய்ய அல்லாஹ் நாடினானோ அவர்கள் "லெப்பைக்"என அதற்கு பதிலளித்தனர்.

இவ்வழைப்பு உலகில் உள்ளவர்கள் மாத்திரம் அல்ல "ஆலமே அர்வாஹில்"இருந்த உயிர்களும் செவியுற்றன.யாரெல்லாம் அதற்கு பதிலளித்தனரோ,எத்தனை முறை பதிலளித்தனரோ அத்தனை முறை ஹஜ் செய்யும் வாய்ப்பை அல்லாஹ் வழங்கிவிடுகின்றான்.

அஜ்ருல் அஸ்வத் கல்.

அஜ்ருல் அஸ்வத் என்பது கஃபாவின் கிழக்கு ஓரத்தில் பதிக்கப்பட்டுள்ள கரு நிறக்கல்லாகும்.சுவனத்திலிருந்து இறக்கியருளப்பெற்றது.இறங்கிய சமயம் முற்றிலும் வெண்மையாக இருந்த அக்கல்,மனிதர்களின் பாவங்களால் கருப்பாகிவிட்டது.

ஒரு தடவை ஹழ்ரத் உமர் ஃபாருக் (ரலி)அவர்கள் தவாஃப் செய்துக்கொண்டிருக்கையில்,அஸ்வத் கல்லுக்கருகில் வந்ததும்,அதற்கு முத்தமிட்டு விட்டு சொன்னார்கள்:"நீ பயனையோ,குறைவையோ தரவியலாத (சாதாரண)கல்.நாயகம் (ஸல்)அவர்கள் உன்னை முத்தமிட்டதால் நானும் முத்தமிடுகிறேன்"

உடனே அருகில் இருந்த ஹழ்ரத் அலி(ரலி)அவர்கள் உமர்(ரலி)அவர்களிடம் "உமரே!அப்படி சொல்லாதீர் மாறாக இது பயனளிக்கவும் செய்யும்,குறைஏற்படுத்தவும் செய்யும்."

ஆம் நாயகம் (ஸல்)அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்;அஸ்வத் கல்லிற்கு இரு கண்கள் உண்டு,அதனால் தன்னை முத்தமிடுபவர்களையும்,தொடுபவர்களையும் காணூகிறது.நாளை மறுமையில் அவர்களுக்காக சாட்சிக் கூறும்" எனக் கூறினார்கள்(நூல்: திர்மிதீ)

மகாமே இப்ராஹீம்(அலை).

இப்ராஹீம்(அலை)அவர்களுக்கு இஸ்மாயீல்(அலை)அவர்கள் உதவுபுரிய இதன் மீது நின்றுதான் கஃபாவை கட்டினார்கள்.

இதையே அல்லாஹ் குர்ஆனில்...  وَاتَّخِذُوْا مِنْ مَّقَامِ اِبْرٰهٖمَ مُصَلًّى‌  وَعَهِدْنَآ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ اَنْ طَهِّرَا بَيْتِىَ لِلطَّآٮِٕفِيْنَ وَالْعٰكِفِيْنَ وَالرُّکَّعِ السُّجُوْدِ‏

இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.(அல்குர்ஆன் : 2:125)

நாயகம் (ஸல்)அவர்கள் சொன்னார்கள்;"எவர் மகாமே இப்ராஹீமுக்கு அருகில் இரு ரகஅத் தொழுவாரோ,அல்லாஹ் அவரின் முன்,பின் பாவங்களை மான்னிப்பான்"

அரஃபா பெருவெளி

மக்காவிற்கு தென்கிழக்கில் சிறிய மலைக்கும் அதனை சுற்றியுள்ள மைதானாத்திற்கும் அரஃபா என்று சொல்லப்படும்.ஹஜ்ஜில் இங்கு தங்குவது கட்டாயக்கடமையாகும்.ஒரு நொடிக்கூட அந்நாளில் தங்கவில்லையெனில் ஹஜ் நிறைவேறாது.

நாயகம் (ஸல்)அவர்கள் தங்களின் ஹஜ்ஜத்துல் விதாஃவிலே இறுதிப்பேருரையை இங்கு தான் நிகழ்த்தினார்கள்.

ஹழ்ரத் ஆதம்(அலை) அவர்களும்,ஹவ்வா(அலைஹா)அவர்களும் பூமிக்கு வந்து 200ஆண்டுகள் கழித்து முதன்முதலில் இந்த இடத்தில் தான் சந்தித்துக்கொள்கின்றனர். அதனை நினைவுக்கூறும் விதமாகவே இவ்விடத்திற்கு "அரஃபா" எனப்படுகிறது.

துல்ஹஜ் பிறை 9ல் ஹாஜிகள் இவ்விடத்தில் திக்ரு,துஆ, தரூத்,இஸ்திக்ஃபார்  போன்ற நல்அமல்களில் ஈடுப்படுவார்கள்.

அடுத்து முஸ்தலிஃபா,மினா போன்ற பல்வேறு சிறப்புக்குறிய இடங்கள் உள்ளன, அல்லாஹ் குர்ஆனில் இவற்றை அல்லாஹுவின் புராதண அடையாளச் சின்னங்கள்,கண்ணியப்படுத்துங்கள் என்கிறான்.

ذٰلِكَ وَمَنْ يُّعَظِّمْ شَعَآٮِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ‏

இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,) எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும்.(அல்குர்ஆன் : 22:32)

அல்லாஹ்வின் நெருக்கத்தையும், அன்பையும் பெற்றுத்தரும் உயர்ந்த உன்னதமான ஹஜ்ஜையும்,அங்கு சென்று நம் கண்மணி நாயகத்தின் ஸியாரத்தையும்,நபிமார்கர்களின் தியாகத்தையும் காணும் நல்வாய்ப்பை அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்கிடுவானாக!ஆமீன்

வெளியீடு: செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Featured post

ஜும்ஆ பயான் 14/06/2024

தலைப்பு: குர்பானியின் சட்டங்கள். குர்பானி என்றால் என்ன? குர்பானி  என்பது இஸ்லாத்தின் மிக முக்கியமான வணக்கமாகும், இந்த புனித மாதத்தில் மில்லி...