بسم الله الرحمن الرحيم
குர்பானி - 2021.
لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَٰكِنْ يَنَالُهُ التَّقْوَىٰ مِنْكُمْ ۚ كَذَٰلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ ۗ وَبَشِّرِ الْمُحْسِنِينَ
குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் சென்றடைவதில்லை. ஆனால் உங்களுடைய தக்வா (இறையச்சம்) தான் அவனை சென்றடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
(அல்குர்ஆன் 22:37)
குர்பானியின் வரலாறு.
நபி இப்ராஹீம் (அலைஹி வஸல்லம்)அவர்கள் சுமார் 86 வருடங்களுக்குப் பிறகு மகன் இஸ்மாயீல் (அலைஹி) அவர்களை பெற்றெடுக்கிறார்கள். தவம் கிடந்து பெற்றெடுத்த அந்த பிள்ளையை அறுத்து பலியிடுமாறு அல்லாஹ் கனவில் கட்டளையிடுகிறான்.
இது இப்ராஹீம் அலைஹி அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த மிகப்பெரிய சோதனை என திருமறை குர்ஆன் சொல்கிறது.
ان هذا لهوالبلاء المبىن
இந்த சோதனையை வரலாற்று சாதனையாக மாற்றியது தான் இந்த வரலாற்று பின்னணி.
தான் கண்ட கனவை தன் மகனிடம் சொல்ல, மகனோ சற்றும் தயங்காமல் தந்தையே நீங்கள் கண்ட கனவை நிறைவேற்றுங்கள் என சொல்ல, இப்ராஹீம் (அலை) இறைவன் மீது கொண்ட அன்பினால் தான் ஈன்றெடுத்த மகனை அறுக்க முயல, கத்தி அறுக்கவில்லை.
இந்த தியாகத்தை பார்த்த அல்லாஹ் நபியே நீங்கள் கண்ட கனவை மெய்படுத்திவிட்டீர், சோதனைய வென்று விட்டீர், எனவே இனிமேல் மகனுக்கு பகரமாக ஆட்டை குர்பானி கொடுங்கள் என குர்பானியை கடமையாக்கினான்.
அன்று மகனையே அறுக்க கொடுக்க முயன்றார்கள். ஆனால் இன்று ஆடு, மாடு குர்பானி கொடுக்க கூட ஏதோ ஒரு காரணத்தை சொல்லி தட்டிக் கழிக்கிறார்கள். இது மிகப்பெரிய பாவமாகும்.
குர்பானி என்றால் என்ன?
குர்பானி என்றால் தியாகம் செய்தல், நெருங்குதல் என்றுப்பொருள். நபி இப்ராஹீம் அலைஹி அவர்களும் அவர்களின் குடும்பத்தார்களும் செய்த தியாகத்தை நினைவுக் கூர்ந்து பிராணிகளை அறுக்கும் கடமைதான் குர்பானி. இந்த குர்பானி ஹிஜ்ரி 2-ம் ஆண்டு கடமையாக் கப்பட்டது.
குர்பானியின் சிறப்பு
குர்பானி நபி இப்ராஹீம் (அலைஹி) அவர்களின் அழகிய சுன்னத்தாகும்.
ஒரு தடவை ஸஹாபாக்கள் நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் உள்ஹியா என்றால் என்ன? என்று கேட்கும் போது குர்பானி என்பது உங்கள் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்களின் சுன்னத்தாகும். மேலும் நீங்கள் கொடுக்கும் குர்பானி பிராணியின் ஒவ்வொரு ரோமத்திற்கும் ஒரு நன்மையுண்டு. மேலும் அதன் இரத்தம் பூமியில் விழுவதற்கு முன் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. மேலும் அந்த பிராணி நரகத்திற்கும் அவனுக்கும் மத்தியில் திரையாகிவிடுகிறது என்றார்கள்.
குர்பானி கொடுக்கும் நாளில் சிறந்த அமல் குர்பானி கொடுப்பது தான்.
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். துல்ஹஜ் பிறை 10-ல் மனிதன் செய்யும்
அமலில் குர்பானியை விட வேறெந்த செயலும் அல்லாஹ்விடம் விருப்பமுடையதாக இருக்காது. குர்பானி கொடுக்கப்பட்ட ஆடு தனது கொம்புடனும் ,குளம்புடனும், முடியுடனும், கியாமத் நாளில் வரும். அதன் இரத்தம் பூமியில் விழுவதற்கு முன்பே அது அல்லாஹ்விடம் ஒப்புக் கொள்ளப்பட்டு விடுகிறது. எனவே பரிபூரணமான மகிழ்வுடன் குர்பானியை நிறை வேற்றுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(ஆதாரம் -திர்மிதி)
இதுப் போன்று ஆடு, மாடுகளை அறுத்தும் ஒரு மனிதனுக்கு அர்ப்பணிக்கும் தியாக உணர்வு வரவில்லையென்றால் அவன் கொடுத்த அந்த குர்பானி ஒரு சடங்கு தான்.
குர்பானி யார் மீது கடமை?
ஹஜ், ஜகாத் கடமையானவர் மீது குர்பானி கொடுப்பது வாஜிபாகும். மேலும் யார் அன்றைய நாளின் எல்லா வகையான தேவை நீங்க 87 1/2 கிராம் (11 பவுன்) தங்கம் அல்லது 612 1/2 கிராம் வெள்ளி அல்லது அதன் கிரயத்தையோ, ( அல்லது அதன் அளவு உள்ள வருமான இடங்கள் பெற்றிருக்கிறாரோ அவர் மீது குர்பானி கடமையாகும்.
ஜகாத்தை போன்று குர்பானியில் வருடம் பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்பதில்லை. எனவே தான் ஒரு ஏழை அன்றைய நாளில் பணக்காரராக ஆனால் அவர் மீதும் குர்பானி கடமையாகும்.
குர்பானி நாளில் அதற்கு பகரமாக வேறு சதகா செய்யக்கூடாது.
குர்பானி பிராணிகள்
1)ஆடு
வெள்ளாடு - ஒரு வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
செம்மறி ஆடு - ஒரு வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். நன்கு கொழுத்ததாக இருந்தால் ஆறு மாதமே இருந்தாலும் போதுமானது.
2) மாடு
இரண்டு வயது முழுமையடைந்து இருக்க வேண்டும். 2 வயதிற்கு குறைவான மாட்டை குர்பானி கொடுப்பது கூடாது.
3) ஒட்டகம்
ஐந்து வயது முழுமையடைந்து இருக்க வேண்டும்.
கோழி, வாத்து, மீன் போன்றவைகளை குர்பானி கொடுப்பது கூடாது.
எதுவரை கொடுக்கலாம்?
ஹனஃபீ மத்ஹபில் துல்ஹஜ் பிறை 10,11,12 ஆகிய மூன்று நாட்கள் வரையிலும்,
ஷாபியி மத்ஹபில் துல்ஹஜ் பிறை 10,11,12,13 ஆகிய நான்கு நாட்கள் வரையிலும் கொடுக்கலாம்.
பிராணியை அறுக்கும் முறை
1) அறுப்பவர் முஸ்லிமாக இருக்க வேண்டும்.
2) பிஸ்மில்லாஹ் சொல்லி அறுக்க வேண்டும்.
اني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا مناالمشركين .لا شريك له وبذلك أمرت وانا اول المسلمىن என்ற இந்த ஆயத்தை ஒதி பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என சொல்லி அறுக்க வேண்டும். அறுத்த பின் யா அல்லாஹ் என்னிட மிருந்து இதை ஏற்றுக் கொள்வாயாக! என துஆச் செய்ய வேண்டும்.
3) தொண்டை குழிக்கும், தொண்டைக்கும் மத்தியில் உள்ள இரண்டு இரத்தம் ஒடும் குழாய் , மூச்சுக்குழாய், உணவுக்குழாய், ஆகிய நான்கு குழாய்களை துண்டிக்க வேண்டும்.
4) குர்பானி கொடுப்பதை நிய்யத் செய்துக்கொள்ள வேண்டும்.
5) கிப்லாவின் பக்கம் பிராணியை முன்னோக்கி வைத்து அறுப்பது சுன்னத்.
குர்பானியின் ஒழுக்கம்
1) முன்பே கத்தியை தீட்டி வைத்திருக்க வேண்டும்.
2) ஒரு பிராணிக்கு முன்னால் இன்னொரு பிராணியை அறுப்பது கூடாது.
3) அறுத்த பிறகு பிராணியின் சூடு ஆறுவதற்கு முன் தோலை உரிப்பதோ, கறியை துண்டுப் போடுவதோ கூடாது.
எது கொடுப்பது சிறந்ததது?
1) காயடிக்கப்பட்ட பிராணி, இதன் இறைச்சி நன்றாக இருக்கும்.
2) விலை உயர்ந்த பிராணி.
கர்பம்
இது குறையல்ல,கொடுக்கலாம். எனினும் பேரு காலத்திற்கு நெருக்கமாக உள்ள பிராணியை அறுப்பது மக்ரூஹ்.
மாறு கண், பைத்தியம் பிடித்த பிராணி கொடுக்கலாம்.
மலட்டு தன்மையுள்ள பிராணியும் கொடுக்கலாம்.
எது கொடுப்பது கூடாது?
1)மூக்கு அறுப்பட்டது,
2) புற்பூண்டு சாப்பிட முடியாத அளவு நாக்கு அறுப்பட்டது.
3) ஆட்டிற்கு ஒரு மடியில்
பால் வராமல் இறுத்தல், மாடு ,ஒட்டகம் இவைகளுக்கு இரு மடியில் பால் வராமல் இருப்பது.
4) மடியில் காயம், மடி துண்டிக்கப்பட்டு கன்று பால் குடிக்க முடியாத நிலையில் உள்ள பிராணி.
5) கண்கூடாக தெரியும் நோய் உள்ள பிராணி.
6) அரவாணியான பிராணி கூடாது. (ஷாபியி இடம் கூடும்)
7) குருடாக இருத்தல், ஒற்றை கண் உள்ளதாக இருத்தல், ஒரு கண்ணின் பார்வையில் மூன்றில் ஒரு பாகம் அல்லது அதைவிட அதிகமாக பார்வை குறைப்பட்டிருத்தல் கூடாது.
8) முக்கால் பகுதி அல்லது அதைவிட அதிகமாக வால் துண்டிக்கப்பட்டிருக்கும் பிராணி.
9) கால் ஊனமான பிராணி, மூன்று கால்களில் மட்டுமே நடக்கிறது என்றால் கூடாது. ஊனமுற்ற காலிலும் நடந்தால் கூடும்.
10) அறுக்கும் இடம் வரை வர முடியாத அளவுள்ள நோய் உள்ள பிராணி.
11) அனைத்து பல்லும் இல்லாமல் இருத்தல், அல்லது தீனியை மெல்ல முடியாத அளவு இருத்தல்.
12) பிராணிக்கு கொம்பு இல்லாவிட்டாலும், ஒடிந்து விட்டாலும் கொடுக்கலாம். மூளைக்கு பாதிப்பு சென்றிருந்தால் கூடாது.
பிராணியில் சாப்பிட கூடாதவை ஏழு
1) இரத்தம்
2) ஆண்குறி
3) பெண்குறி
4) விறைகள்
5) மூத்திரப்பை
6) பித்தப்பை
7) கழலைக் கட்டி (ஆட்டில் இருக்கும் கொழுப்பு கட்டிகள் )
குர்பானி இறைச்சி
குர்பானி பிராணியின் இறைச்சியை மூன்று பங்கு வைக்க வேண்டும்.
1) ஒரு பங்கு தனக்கும்
2) இன்னொரு பங்க சொந்த பந்தங்களுக்கும்
3) இன்னொரு பங்கு ஏழைகளுக்கும் ஆக
மூன்று பங்கு வைக்க வேண்டும்.
பிற மதத்தவர்களுக்கு கொடுப்பது குற்றமல்ல.
குர்பானி தோல்
1) குர்பானி தோலை பதனிட்டு தானே பயன்படுத்தலாம்.
2) ஏழைகளுக்கு தர்மம் செய்து விடலாம்.
3) விற்பது கூடாது, விற்பனை செய்து விட்டால் தர்மம் செய்து விட வேண்டும்.
4) மதரஸா மாணவர்களுக்கு கொடுக்கலாம்.
5) குர்பானி தோல் அல்லது அதன் கிரயத்தை எவ்வகையான கூலியாகவோ, அறுப்பு கூலியாகவோ
கொடுப்பது கூடாது.
6) மஸ்ஜித், மதரஸா கட்டிட நிர்வாகத்திற்கு செலவிட கூடாது.
7) டேக்ஸ், வரி போன்றதற்கு கொடுப்பது கூடாது.
கூட்டுக் குர்பானி
கூட்டுக் குர்பானியை விட தனியான குர்பானி கொடுப்பது தான் சிறந்தது.
1)மாடு, ஒட்டகத்தில் மட்டும் தான் கூட்டு சேர முடியும்.
2) 7 பேர் வரை கூட்டுக் குர்பானியில் இடம் பெறலாம், அதற்கு மேல் கூடாது.
3)கூட்டுக் குர்பானியில் அனைவருக்கும் குர்பானியின் ஒரே நிய்யத் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. இபாதத் உடைய நிய்யத் இருக்கலாம்.
எனவே தான் கூட்டுக் குர்பானியில் ஒருவர் குர்பானிக்காக, மற்றொருவர் அகீகா விற்காக நிய்யத் வைத்திருந்தாலும் கூடும்.
ஆனால் கறிக்காக , இறைச்சிக்காக மட்டும் சேர்ந்தால் அனைவரின் குர்பானி கூடாது.
4) பிராணியை வாங்கும் முன் அனைவரும் கூட்டு சேர்வது சிறப்பு.
5) எந்த எண்ணமும் இல்லாமல் பிராணி வாங்கி, பின் கூட்டாக்கினாலும் கூடும்.
6) தனக்கே என்று வாங்கி பிறரை கூட்டாக்கினாலும் கூடும். ஆனால் வாங்கியவர் குர்பானி கடமையானவராக இருக்க வேண்டும்.
7) குர்பானி பிராணியை அறுத்த பின் கூட்டாகுதல் கூடாது.
8) யாராவது கூட்டில் இறந்து விட்டால் வாரிசுதாரர் அனுமதியளித்தால் கொடுக்கலாம்.
சில முக்கியமான சட்டங்கள்
1) குர்பானி கடமையல்லாதவர் கடன் வாங்கி கொடுத்தாலும் கூடும். ஆனால் கடனை திருப்பி கொடுப்பது சிரமம் என்றால் கூடாது.
2) குர்பானி பிராணி காணாமல் போனால், திருடப்பட்டால், மரணித்துவிட்டால், குர்பானி கடமை நீங்காது. வேறு பிராணியை வாங்கி அறுப்பது கடமையாகிவிடும்.
3) பிராணி வாங்கிய பின் அதில் ஏதேனும் குறை ஏற்பட்டால் , வசதியுள்ளவர்கள் வேறு பிராணியும், வசதியில்லாதவர் அதே பிராணியை கொடுத்தாலும் கூடி விடும்.
4)வசதி இருந்தும் குர்பானி கொடுக்காமல் விட்டு விட்டால் களா செய்ய வேண்டும், பிராணியின் விலை மதிப்பில் தர்மம் செய்ய வேண்டும். வசதி இருந்தும் யார் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் ஈதுல் அல்ஹா தொழுமிடத்திற்கு வர வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
5)இரவு நேரங்களிலும் குர்பானி கொடுக்கலாம்.
6) கூட்டுக் குர்பானி கறியை கண்டிப்பாக எடை போட்டுத்தான் பிரிக்க வேண்டும்.தோராயமாக பிரிக்க கூடாது.
7) பெருநாள் தொழுத பின் கறி சாப்பிடுவது சுன்னத்.
8) தனது மனைவி, குழந்தைகளுக்காக குர்பானி கொடுப்பது கணவன், தந்தை மீது கடமையல்ல.
9) பெண்கள் நிஸாபுடைய அளவு வசதி பெற்றிருந்தால் குர்பானி கொடுப்பது வாஜிபாகும்.
10)பருவமடையாதவர்களுக்காக குர்பானி கொடுப்பது கடமையல்ல.
11) குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சேர்த்து ஒரு ஆட்டை கொடுத்தால் போதுமாகாது. மாறாக யார் மீது குர்பானி கடமையோ அவர்கள் அனைவர் மீதும் குர்பானி கொடுப்பது கட்டாயமாகும்.
அரஃபா நோன்பு
அரஃபாவின் நோன்பு, துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாளின் நோன்பு. இது சுன்னத்தான நோன்பாகும்.
அரஃபா நோன்பு அந்நாளின் முந்தைய ஆண்டு, பிந்தய ஆண்டு ஆக இரு ஆண்டின் பாவங்களுக்கும் பரிகாரமாகும் என ஆதரவு வைக்கிறேன், என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நூல் :முஸ்லிம்.
ஈதுல் அல்ஹா பெருநாள்
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இரு பெரு நாட்களின் இரவுகளில் யார் நன்மையை நாடியவராக வணக்கம் புரிகிறாரோ அவரது இதயம் மனிதர்கள் இதயங்கள் மரணிக்கும் போது மரணிக்காது.(இப்னுமாஜா)
தக்பீர் தஷ்ரீக்
பிறை ஒன்பதாம் நாள் ஃபஜ்ரு தொழுகையிலிருந்து பிறை 13-ம் நாள் அஸர் தொழுகை வரை (23 வக்துகள்) தொழுகைக்கு பின் ஒரு முறை தக்பீர் கூறுவது வாஜிபாகும். மூன்று முறை சொல்வது சுன்னத்.
தக்பீர்
அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து.
2 comments:
ماشاء الله
Jazakallah Khairan kaseera
Post a Comment