Wednesday, 19 July 2023

ஜூம்ஆ பயான் 21/07/2023

ஹிஜ்ரத் ஒர் பார்வை.(ஹிஜ்ரி 1445)

وَمَنْ يُهَاجِرْ فِي سَبِيلِ اللَّهِ يَجِدْ فِي الْأَرْضِ مُرَاغَمًا كَثِيرًا وَسَعَةً ۚ وَمَنْ يَخْرُجْ مِنْ بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ وَرَسُولِهِ ثُمَّ يُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ أَجْرُهُ عَلَى اللَّهِ ۗ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا

இன்னும், தம் வீட்டைவிட்டு வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதர் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டு விடுமானால் அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது - மேலும் அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், பேரன்பு மிக்கோனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன் 4/100)

ஹிஜ்ரத் என்றால் என்ன?

அரபி இலக்கணத்தில் ஹிஜ்ரத் என்றால் ஏதாவது ஒரு விஷயத்தை வெறுத்து விட்டு விடுவதாகும். ஆனால் ஷரீஅத்தில் தாருல் குஃப்ர் எனும் இஸ்லாமிய நெறிக்கு மாற்றமாக நடக்கும் ஊரை விட்டு இஸ்லாமிய நாட்டிற்கு புலம்பெயர்ந்து செல்வதற்கு சொல்லப்படும். ( ரூஹுல் மஆனி)

அல்லாமா முல்லா அலி காரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு மனிதர் தீனை பாதுகாப்பதற்காக ஒரு ஊரை விட்டு இன்னொரு ஊருக்கு இடம் பெயர்வதற்கும் ஹிஜ்ரத் என்று சொல்லலாம். (நூல் மிர்காத் 39/1)

மேலும் ஒருவர் முஸ்லிம் என்ற அடிப்படையில் இறை மறுப்பாளர்களால் அவர் வாழ்ந்த ஊரை விட்டும் நிர்பந்தமாக வெளியேற்றப்பட்டாலும் அதற்கும் ஹிஜ்ரத் என்று சொல்லப்படும். இதை அல்லாஹ் சூரா ஹஷ்ரில் குறிப்பிட்டு காட்டுகிறான்.

لِلْفُقَرَاءِ الْمُهَاجِرِينَ الَّذِينَ أُخْرِجُوا مِنْ دِيَارِهِمْ وَأَمْوَالِهِمْ يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا وَيَنْصُرُونَ اللَّهَ وَرَسُولَهُ ۚ أُولَٰئِكَ هُمُ الصَّادِقُونَ

எவர்கள் தம் வீடுகளையும், தம் சொத்துகளையும் விட்டு, அல்லாஹ்வின் அருளையும், அவன் திருப் பொருத்தத்தையும் தேடியவர்களாக வெளியேற்றப்பட்டனரோ அந்த ஏழை முஹாஜிர்களுக்கும் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் அப்பொருளில் பங்குண்டு); அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் தாம் உண்மையாளர்கள்.(அல்குர்ஆன் 59/8)

இதனடிப்படையில் ஒருவர் வியாபாரத்திற்காக அல்லது திருமணம் முடிப்பதற்காக அல்லது வேறு உலக நோக்கத்திற்காக ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டில் குடியேறினால் அது ஹிஜ்ரத்தாகாது..

ஹிஜ்ரத் பற்றி நபி (ஸல்) அவர்கள்.

المهاجر من هجر ما نهى الله عنه ورسوله (بخاري،مسلم)

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் : யார் அல்லாஹ்வும் அவனது தூதராகிய ரசூல் (ஸல்) அவர்களும் தடுத்ததை விட்டு விடுகிறாரோ அவர் தான் முஹாஜிர் என கூறியுள்ளார்கள். (நூல் (முஸ்லிம், புகாரி)

இதனடிப்படையில் ஒருவர் தான் வாழ்ந்த ஊரை விட்டு புலம்பெயர்வது மட்டும் ஹிஜ்ரத் அல்ல. மாறாக அல்லாஹ்வும், ரசூலும் எதை தடுத்துள்ளார்களோ அதை விட்டு விலகுவது தான் உண்மையான ஹிஜ்ரத் ஆகும்.

ஹிஜ்ரத்தின் சிறப்புக்கள்.

குர்ஆனில் எப்படி பல இடங்களில் ஜிஹாத் பற்றி பேசப்படுகிறதோ, அதேப் போன்று பல இடங்களில் ஹிஜ்ரத் பற்றியும், அதன் சிறப்புகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது.

1) إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ أُولَٰئِكَ يَرْجُونَ رَحْمَتَ اللَّهِ ۚ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ

நம்பிக்கை கொண்டோரும், (காஃபிர்களின் கொடுமைகளால் நாட்டை விட்டு) துறந்தவர்களும், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தோரும் அல்லாஹ்வின் (கருணையை) - ரஹ்மத்தை - நிச்சயமாக எதிர்பார்க்கிறார்கள்;. மேலும், அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், பேரன்புடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 2- 218)

2)الَّذِينَ آمَنُوا وَهَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ أَعْظَمُ دَرَجَةً عِنْدَ اللَّهِ ۚ وَأُولَٰئِكَ هُمُ الْفَائِزُونَ

எவர்கள் ஈமான் கொண்டு, தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள் மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் 9/20)

3)وَمَنْ يُهَاجِرْ فِي سَبِيلِ اللَّهِ يَجِدْ فِي الْأَرْضِ مُرَاغَمًا كَثِيرًا وَسَعَةً ۚ وَمَنْ يَخْرُجْ مِنْ بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ وَرَسُولِهِ ثُمَّ يُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ أَجْرُهُ عَلَى اللَّهِ ۗ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا

இன்னும், தம் வீட்டைவிட்டு வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதர் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டு விடுமானால் அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது - மேலும் அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், பேரன்பு மிக்கோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4/100)

மேற்கூறிய வசனம் காலித் ப்னு ஹிஜாம் (ரலி) அவர்கள் பற்றி குறிப்பிடுகிறது. அவர்கள் மக்காவிலிருந்து ஹபஷா விற்கு ஹிஜ்ரத் செய்து சென்ற நேரத்திலே பாம்பு கடித்து இறந்து விட்டார்கள். அப்போது இந்த ஆயத் இறங்கியது.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

الهجرة تهدم ما كان قبلها

ஹிஜ்ரத்திற்கு முன்பாக ஒரு மனிதன் செய்த அத்துனை பாவங்களையும் ஹிஜ்ரத் அழித்துவிடுகிறது.

ஹிஜ்ரத்தினால் ஏற்படும் பரக்கத்துகள்.

وَالَّذِينَ هَاجَرُوا فِي اللَّهِ مِنْ بَعْدِ مَا ظُلِمُوا لَنُبَوِّئَنَّهُمْ فِي الدُّنْيَا حَسَنَةً ۖ وَلَأَجْرُ الْآخِرَةِ أَكْبَرُ ۚ لَوْ كَانُوا يَعْلَمُونَ

கொடுமைப்படுத்தப்பட்ட பின்னர், எவர்கள் அல்லாஹ்வுக்காக நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்களோ, அவர்களுக்கு, நாம் நிச்சயமாக அழகான தங்குமிடத்தை இவ்வுலகத்தில் கொடுப்போம். இன்னும், அவர்கள் அறிந்து கொண்டார்களேயானால் மறுமையிலுள்ள (நற்) கூலி (இதைவிட) மிகவும் பெரிது. (அல்குர்ஆன் 16/41)

எந்த ஒரு மனிதர் ஹிஜ்ரத்தை மேற்கொள்கிறாரோ அல்லாஹ் அந்த மனிதரின் உலக காரியத்தையும் லேசாக்குகிறான்.உலகத்தில் முன்பை விட சிறந்த தங்குமிடத்தை தருகிறான். சிறந்த கண்ணியத்தையும், மரியாதையையும், மன நிம்மதியும் தருகிறான். மறுமையிலோ சொல்ல முடியாத அளவிற்கு அந்தஸ்துகளை உயர்த்துகிறான்..

இப்ராஹும் (அலை) அவர்கள் தன் சொந்த நாடான இராக்கை விட்டு சிரியாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள். அங்கே சிறந்த கண்ணியத்தை அல்லாஹ் கொடுத்தான்.மூஸா (அலை) அவர்கள் தானும் தன்னுடைய கூட்டத்தார்களாகிய பனீ இஸ்ரவேலர்களோடு சேர்ந்து  தன் சொந்த நாடான மிஸ்ரை விட்டு சிரியாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு சிறந்த கண்ணியத்தை சிரியாவில் கொடுத்ததோடு, மீண்டும் மிஸ்ரையும் மீட்டி தந்தான்.

நமது நபி நாயகம் (ஸல்) அவர்கள் தன் தோழர்களாகிய வஹாபாக்களோடு அல்லாஹ்வின் உத்தரவின் பேரில் புனித மக்காவை விட்டு மதீனா ஹிஜ்ரத் செய்தார்கள்.

அல்லாஹ் மக்காவை விட மதீனாவில் சிறந்த கண்ணியத்தையும், நல்ல தங்குமிடத்தையும், எல்லாவிதமான வெற்றியையும் அள்ளித் தந்தான்.

மக்காவை விட மதீனாவில் சிறந்த வாழ்க்கையை ஸஹாபாக்கள் வாழ்ந்தார்கள். பிறகு மீண்டும் மக்காவை அல்லாஹ் வெற்றிக் கொள்ள செய்தான். இன்று வரை ஏன் கியாமத் வரை மக்கா, மதீனா புனித பூமியாக இருக்கும்.

சோதனைகள் வரும் ஆனால்....

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு புலம்பெயர்ந்து செல்லும் போது பல்வேறு சோதனைகள்  ஆரம்பத்தில் வரத்தான் செய்யும். இந்த சோதனைகளை முஹாஜிரீன்கள் முழுமையாக அனுபவித்தார்கள். ஏழ்மையிலும், வறுமையிலும் இருந்தார்கள். இதை ஸஹாபாக்கள் விரும்பி தேர்ந்தெடுத்தார்கள்.

ஆனால் காலம் செல்ல செல்ல அல்லாஹ் அவர்களுக்கு சிறந்த குடும்பத்தையும், பொருளாதாரத்தில் தன்னிறைவையும் தந்தான்.

ஹிஜ்ரத்தின் ஆரம்பத்தில் பல சிரமங்களை சகித்துக் கொண்ட ஸஹாபாக்கள், வசதி வாய்ப்புகள் வந்தபோது அள்ளிக் கொடுத்தார்கள் என வரலாறு சொல்கிறது.ஒரு போதும் அவர்கள் கஞ்சத்தனம் செய்யவில்லை.

இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக அபூபக்கர் (ரலி) அவர்கள் தன் வீட்டில் ஒரு பொருளும் மிச்சம் வைக்காமல் எடுத்து வந்து நபியிடம் கொடுத்தார்கள். உமர் (ரலி) அவர்களும் தன்னால் முடிந்ததை தந்தார்கள். பல ஸஹாபாக்களும் வாரி கொடுத்தார்கள்.

பெண்களில் ஜைனப் (ரலி) அவர்கள் தனக்கு எது கிடைத்தாலும் அதை அப்படியே ஏழைகளுக்கு பங்கிட்டு கொடுத்து விடுவார்கள். இதனாலே அவர்களை உம்முல் மஸாகீன் ( ஏழைகளின் தாய்) என்றே அழைப்பார்கள்.

இப்படி ஏழ்மையில் இருந்த ஸஹாபாக்களில் பல பேர் ஹிஜ்ரத் உடைய பரக்கத்தால் செல்வ சீமான்களாக மாறினார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஒரு தடவை ஒரு கூட்டத்திற்கு தலைவராக நியமிக்கப்பட்ட போது .. தன்னை தானே கேட்டுக் கொண்டார்கள். முன்பு நீ ஒரு கூட்டத்தில் அடிமையாக, கூலித் தொழிலாளியாக  இருந்தாய். உணவு கிடைத்தால் போதும் என்று இருந்தாய். பயணக் கூட்டத்தாருக்கு சமைப்பதற்கு விறகு பொறுக்கி கொடுத்து வாழ்ந்தாய். ஆனால் இன்று நீ இஸ்லாம் என்ற பொக்கிஷம் கிடைத்ததால் உன்னை எல்லோரும் இமாம் என்றும் அமீருல் முஃமினீன் என்றும் அழைக்கிறார்கள். எவ்வளவு பெரிய பாக்கியத்தை பெற்றுள்ளாய் என தனக்கு தானே கேட்டுக் கொள்வார்களாம்.

அல்லாஹ்விற்காக ஹிஜ்ரத் பயணத்தை ஸஹாபாக்கள் மேற்கொண்டதால்  பெரும் கண்ணியத்தையும், பொருளாதார தன்னிறைவையும் அல்லாஹ் கொடுத்தான்.

மாறாக உலகத்திற்காக  பொருளாதாரத்திற்காக, ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்காக பயணம் செய்தால், அவர் முயற்சி செய்தது கிடைக்கும், ஆனால் அது ஹிஜ்ரத்தாகாது

முதல் ஹிஜ்ரத்

எதிரிகளின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்த போது தன் ஈமானையும் உயிரையும் பாதுகாப்பதற்காக

நபித்துவத்தின் ஐந்தாம் ஆண்டு உஸ்மான் ரலி இன்னும் அவருடைய துணைவியார் மற்றும் நபிகளாரின் புதல்வியுமான ருக்கையா ரலி உள்ளிட்ட 11ஆண்கள் 4 பெண்கள் முதல் கட்டமாக அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள்.  இரண்டாவது கட்டமாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலி.  ஜாபர் இப்னு அபீதாலிப் ரலி. அபூமூஸா அல்அஷ்அரி ரலி ஆகியோர் உட்பட 83 ஆண்களும் 18 பெண்களும் அபிசீனியாவிற்கு புறப்பட்டார்கள்.

ஹிஜ்ரத்தின் தொடக்கம்.

 அறியாமையும், இறைநிராகரிப்பும் சூழ்ந்த பாலைவனங்களுக்கு நடுவில் இஸ்லாம் தனக்கொரு தனி நாட்டை நிறுவுவதில் வெற்றி பெற்றது. இது இஸ்லாமிற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முஸ்லிம்களுக்கு அந்த நாட்டை நோக்கி ஹிஜ்ரா செய்ய அனுமதி அளித்தார்கள்.

‘ஹிஜ்ரா’ என்றால் தனது எல்லா உலக ஆதாயங்களையும் இழந்து சொந்த மண்ணில் உள்ள உடைமைகளை அப்படியே விட்டுவிட்டு தன்னையும் தனது மார்க்கத்தையும் காப்பாற்றிக் கொள்ள தனது சொந்த நாட்டை, சொந்த ஊரை துறந்து அந்நிய நாட்டுக்கு, அந்நிய ஊருக்கு செல்வதாகும். செல்லும் வழியில் அல்லது செல்வதற்கு முன் பல ஆபத்துகளை சந்திக்க வேண்டி வரும். உயிர் பறிபோகலாம் உடைமைகள் அபகரிக்கப்படலாம் செல்லுமிடத்தில் எத்தகைய எதிர்காலத்தை முன்னோக்க வேண்டியிருக்குமோ? அங்கு என்னென்ன கவலைகளும், துக்கங்களும், துயரங்களும் மறைந்திருக்கின்றனவோ? என்று எதுவும் அறியாத நிலையில் மேற்கொள்ளப்படும் பயணமே ஹிஜ்ராவாகும்.

இவை அனைத்தையும் தெரிந்துதான் முஸ்லிம்கள் ஹிஜ்ரா செய்யத் தொடங்கினர். முஸ்லிம்கள் ஹிஜ்ரா செய்து ஓரிடத்தில் ஒன்று கூடிவிட்டால் தங்களுக்கு ஆபத்துகள் ஏதும் ஏற்படலாம் என்று உணர்ந்திருந்த மக்கா முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) முஸ்லிம்களை ஹிஜ்ரா செய்யவிடாமல் தடுத்தனர். இதற்கு சில உதாரணங்களை இங்கு பார்ப்போம்:

1) ஹிஜ்ரா செய்த முதல் கூட்டத்தில் அபூஸலமாவும் ஒருவர். இவர் இரண்டாவது அகபாவிற்கு ஒரு வருடத்துக்கு முன் ஹிஜ்ரா செய்தார். அபூ ஸலமா (ரழி) தனது மனைவியுடனும் தனது சிறிய குழந்தையுடனும் ஹிஜ்ரா செய்ய நாடியபோது அவரது மனைவியின் உறவினர்கள் அபூஸலமாவை நோக்கி “நீ எங்களை புறக்கணித்து விட்டாய் நீ வேண்டுமானால் சென்றுவிடு எங்களுடைய பெண்ணை ஊர் ஊராக அழைத்துத் திரிய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று கூறி அவன் மனைவியையும் குழந்தையையும் அவரிடமிருந்து பிரித்து விட்டனர். இதைப் பார்த்த அபூஸலமாவின் குடும்பத்தினர் “நீங்கள் உங்களது பெண்ணை எங்கள் குடும்பத்தாரிடமிருந்து பிரித்து விட்டீர்கள். எனவே, எங்கள் மகனுக்குப் பிறந்த குழந்தையை நாங்கள் உங்கள் பெண்ணுடன் விடமாட்டோம்” என்று சண்டையிட்டு குழந்தையைப் பறித்துக் கொண்டனர். இதே நிலையில் அபூஸலமா மதீனாவை நோக்கிப் பயணமானார்.

தனது கணவனும் சென்றுவிட குழந்தையையும் பறிகொடுத்த உம்மு ஸலமாவின் உள்ளம் வேதனையால் வெந்தது. ஒவ்வொரு நாள் காலையிலும் ‘அப்தஹ்’ என்ற இடத்திற்கு வந்து மாலை வரை அழுதுகொண்டே இருப்பார். அழுதே ஒரு வருடத்தைக் கழித்துவிட்ட நிலையில் அவரது குடும்பத்தினரின் உள்ளத்தில் அவர் மீது இரக்கம் பிறந்தது. நீ உனது கணவனுடன் சென்று சேர்ந்து கொள் என்று அனுமதித்து, அவன் பிள்ளையையும் அபூ ஸலமாவின் குடும்பத்தாரிடமிருந்து வாங்கித் தந்தனர். ஏறக்குறைய 500 கி.மீ. தொலைவுள்ள மதீனாவை நோக்கி பயணமானார். உயர்ந்த மலைகள், அபாயம் நிறைந்த வழிகள், அல்லாஹ்வின் படைப்பினங்களில் யாரும் உடன் இல்லை. இந்நிலையில் பயணித்து ‘தன்யீம்’ வந்தடைந்த போது அவரை உஸ்மான் இப்னு தல்ஹா இப்னு அபூதல்ஹா சந்தித்தார். அவரது நிலைமை மீது இரக்கம் கொண்டு அவரை பாதுகாப்புடன் அழைத்து வந்து ‘குபா“வில் விட்டுவிட்டு “இதோ இந்த ஊரில்தான் உங்கள் கணவர் இருக்கிறார். அல்லாஹ் உங்களுக்கு அருள்வளம் (பரக்கத்) செய்வான்” என்று உம்முஸலமாவை வாழ்த்தி விட்டு அவர் மக்கா திரும்பினார். (இப்னு ஹிஷாம்)

தாருந் நத்வா  குறைஷிகளின் ஆலோசனை மன்றம்.

நபித்தோழர்கள் தங்களது மனைவி, மக்களுடன் மக்காவை விட்டு வெளியேறி மதீனாவில் அவ்ஸ், கஸ்ரஜ்களுடன் குடியேறியதைப் பார்த்த இணைவைப்பவர்கள் மிகப்பெரிய சங்கடத்துக்கு ஆளானார்கள். இதற்கு முன்பில்லாத அளவுக்கு எந்நேரமும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். தங்களின் சிலை வழிபாட்டையும், அரசியல் அந்தஸ்தையும் முற்றிலும் அடியோடு தகர்த்தெறியக் கூடிய பேராபத்து ஒன்று வரப்போவதை உணர்ந்தனர்.

நபி (ஸல்) பிறரைக் கவரும் ஆற்றல் உள்ளவர்கள் தலைமைத்துவத்துக்கும் நேர்வழிபடுத்தவும் முழுத் தகுதி பெற்றவர்கள் நபித்தோழர்கள் நெஞ்சுறுதி மிக்கவர்கள் நிலைத்தன்மை கொண்டவர்கள் நபியவர்களுக்காக எதையும் அர்ப்பணிக்கத் துணிந்தவர்கள் மதீனாவில் உள்ள அவ்ஸ், கஸ்ரஜ் கிளையினரோ மிகுந்த ஆற்றலும் பலமுமிக்கவர்கள் இவ்விரு சமூகத்திலும் உள்ள அறிஞர்களோ சமாதானத்தையும், சீர்திருத்தத்தையும் விரும்புபவர்கள் குரோதம் கொள்வதை எதிர்ப்பவர்கள் ஏற்கனவே பல ஆண்டுகளாக உள்நாட்டு போர்களால் மதீனா நகரம் பாதிக்கப்பட்டிருக்கும் போது தற்போது சண்டை சச்சரவுகளை அன்சாரிகள் அறவே விரும்ப மாட்டார்கள் என்று மக்காவாசிகள் நன்கு விளங்கி வைத்திருந்தனர்.

மதீனா மிக முக்கிய மைய நகரமாக விளங்குகின்றது. யமன் நாட்டிலிருந்து ஷாம் வரை நீண்டு செல்லக்கூடிய செங்கடலின் கரை வழியாக செல்லும் வியாபாரக் கூட்டங்கள் அதன் வழியாகத்தான் செல்ல வேண்டும். மக்காவாசிகள் மட்டும் ஓர் ஆண்டுக்கு மதீனா வழியாக ஷாம் தேசத்துடன் குறைந்தது இரண்டரை லட்சம் தங்க நாணயங்களுக்கு வியாபாரம் செய்து வந்தனர். இது மட்டுமல்லாமல் தாயிஃப் நகர மக்களும் அதைச் சுற்றியுள்ள மக்களும் மதீனா வழியாகவே வியாபாரம் செய்து வந்தனர். மதீனா பாதுகாப்புடையதாக இருந்ததால் அனைவரும் வியாபாரத்திற்காக இவ்வழியையேத் தேர்ந்தெடுத்தனர். எனவே, மதீனா இத்தகைய முக்கியத்துவம் பெற்றிருப்பதையும் அவர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

ஆகவே, இஸ்லாமிய அழைப்பு மதீனாவில் மையம் கொள்வதாலும் மதீனாவாசிகள் தங்களுக்கு எதிராக ஒன்று கூடுவதாலும் ஏற்படும் மாபெரும் ஆபத்தை குறைஷிகள் உணராமல் இருக்கவில்லை.

தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த ஆபத்து அதிகமாகுவதைக் குறைஷிகள் நன்கு உணர்ந்து கொண்டனர். இந்த ஆபத்து உருவாகுவதின் மூலக் காரணத்தை, அதாவது நபி முஹம்மது (ஸல்) அவர்களையே அழித்து விடுவதுதான் இந்த ஆபத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஏற்றமான வழி என்று முடிவு செய்தனர்.

நபித்துவத்தின் பதினான்காம் ஆண்டு, ஸஃபர் மாதம் 26 வியாழன், அதாவது கி.பி. 622, செப்டம்பர் 12” இரண்டாவது அகபா உடன்படிக்கை முடிந்து இரண்டரை மாதங்கள் கழிந்து காலையில் குறைஷிகளின் மிக முக்கியமான ஆலோசனை மன்றம் ஒன்று கூடியது.”” இந்த சபையில் குறைஷிகளின் முக்கிய பிரமுகர்கள், தலைவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் ஏகத்துவ அழைப்பைப் பரப்பி வரும் நபி (ஸல்) அவர்களையும் அவ்வழைப்பின் தாக்கத்தையும் முழுமையாக அழித்து விடுவதற்கு ஆலோசனை செய்து சரியான திட்டம் தீட்ட ஒன்று கூடினர்.

நபியவர்களைக் கொல்ல திட்டமிடுதல்.

சபை ஒன்றுகூடிய பின் பலவிதமான கருத்துகள், விவாதங்கள் நடைபெற்றன. அவர்களில் ஒருவனான அபுல் அஸ்வத் என்பவன் “நாம் அவரை நமது ஊரைவிட்டு வெளியேற்றி விடுவோம். அவர் எங்கு சென்றால் நமக்கென்ன. நாம் நமது காரியத்தையும், நமக்கு மத்தியிலிருந்த நட்பையும் முன்பு போல் சீர்படுத்திக் கொள்வோம்” என்று கூறினான்.

அதற்கு அந்த நஜ்தி வயோதிகன் “இது சரியான யோசனையல்ல. அவன் அழகிய பேச்சையும், இனிமையான சொல்லையும், தனது மார்க்கத்தைக் கொண்டு மக்களின் உள்ளங்களில் அவர் இடம்பிடித்து விடுவதையும் நீங்கள் பார்க்கவில்லையா? அவ்வாறு நீங்கள் செய்தால் அவர் வேறொரு இடம் சென்று அவர்களிடம் தங்கி அவர்களை முஸ்லிம்களாக மாற்றிவிடலாம். பிறகு அவர்களை அழைத்துக்கொண்டு உங்களது ஊருக்கு வந்து உங்களை அழித்தொழித்து விடலாம். எனவே வேறு யோசனை செய்யுங்கள்” என்று கூறினான்.

அடுத்து அபுல் புக்த என்பவன் “அவரை சங்கிலியால் பிணைத்து ஓர் அறையில் அடைத்து விடுவோம். இதற்கு முன் ஜுஹைர், நாஃபிகா போன்ற கவிஞர்களுக்கு நடந்தது போன்று நடக்கட்டும். அதாவது, சாகும் வரை அப்படியே அவரை விட்டுவிடுவோம்” என்று கூறினான்.

வேண்டாம் வேறு யோசனை கூறுங்கள்.  இறுதியில் நபியை கொலைச் செய்து விடலாம் என முடிவுவெடுக்கப்பட்டது.

குறைஷிகளின் திட்டமும், அல்லாஹ்வின் ஏற்பாடும்.

குறைஷிகள் தங்களின் அன்றாட வேலைகளில் சகஜமாக ஈடுபட்டு, தங்களின் செயல்பாடுகளில் எவ்வித மாற்றமும் தெரியாத விதத்தில் நடந்துகொண்டனர். பிறர் இந்த சதித் திட்டத்தின் வாடையைக் கூட நுகர முடியாத வண்ணம், அந்த குறைஷிகள் நடந்து கொண்டனர். இவர்கள் அல்லாஹ்வுக்கு சூழ்ச்சி செய்ய நாடினர். அல்லாஹ் அவர்கள் அறியாத விதத்தில் அவர்களது சூழ்ச்சிகளை வீணாக்கி விட்டான். குறைஷிகளின் சதித்திட்டத்தை நபி (ஸல்) அவர்களிடம் அறிவிப்பதற்காக அல்லாஹ்வின் புறத்திலிருந்து வானவர் ஜிப்ரீல் இறங்கி வந்தார். “நீங்கள் ‘ஹிஜ்ரா’ செய்ய அல்லாஹ் அனுமதி கொடுத்து விட்டான். அதற்குரிய நேரத்தையும் நிர்ணயம் செய்துள்ளான். குறைஷிகளின் இத்திட்டத்தை முறியடிப்பதற்குரிய வழியையும் தெளிவுபடுத்தி இருக்கின்றான். எனவே, இன்று இரவு நீங்கள் வழக்கமாக தூங்கும் விரிப்பில் தூங்க வேண்டாம்” என்று வானவர் ஜிப்ரீல் கூறினார். (இப்னு ஹிஷாம்)

மக்கள் எல்லாம் தங்களது இல்லங்களில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் மதிய வேளையில் ஹிஜ்ராவின் திட்டத்தை உறுதி செய்து கொள்வதற்காக நபி (ஸல்) அவர்கள் அபூபக்ரிடம் வந்தார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது:

மதிய வேளையில் நாங்கள் வீட்டில் அமர்ந்திருந்தபோது ஒருவர் அபூபக்ரிடம் “இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முகத்தை மறைத்தவராக உங்களிடம் வந்திருக்கிறார்” என்று கூறினார். அது நபி (ஸல்) எங்களிடம் வரும் வழக்கமான நேரமல்ல! “எனது தாயும் தந்தையும் நபி (ஸல்) அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்நேரத்தில் அவர்கள் வந்திருப்பதற்குக் காரணம் ஏதோ ஒரு முக்கியமான விஷயம்தான்” என்று அபூபக்ர் (ரழி) அவர்கள் கூறினார்கள்.

எங்களிடம் வந்த நபி (ஸல்) உள்ளே வர அனுமதி கேட்கவே அபூபக்ர் (ரழி) அனுமதி கொடுத்தார்கள். உள்ளே நுழைந்த நபி (ஸல்) அபூபக்ரிடம் “உங்களுடன் இருப்பவர்களை உடனே வெளியேற்றுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரழி) “அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களுக்கு அர்ப்பணமாவேனாக! இங்கு உங்கள் குடும்பத்தார்கள்தான் இருக்கிறார்கள்” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “எனக்கு மக்காவைவிட்டு வெளியேறுவதற்கு அனுமதி கிடைத்து விட்டது” என்றார்கள். அதற்கு அபூபக்ர் (ரழி) “அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நானும் உங்களுடன் வருகிறேன்” என்று கூறவே, நபி (ஸல்) “சரி!” என்றார்கள். (இப்னு ஹிஷாம்)

பின்பு ஹிஜ்ரா எவ்வாறு செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அபூபக்ர் (ரழி) அவர்களுடன் பேசி முடிவு செய்து கொண்டார்கள். வீட்டிற்குத் திரும்பிய நபி (ஸல்) அன்று சூரியன் மறைந்து இருட்டுவதை எதிர்பார்த்திருந்தார்கள். தான் குறைஷிகளின் தீய திட்டத்தை தெரிந்து கொள்ளாதது போன்றே, தன் அன்றாடச் செயல்களை வழக்கம் போல் செய்து கொண்டிருந்தார்கள். குறைஷிகளின் தீய திட்டத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் பிறர் தனது ஹிஜ்ராவின் திட்டத்தைத் தெரிந்து கொள்ளதவாறு நடந்து கொண்டார்கள்.

நபியவர்கள் புறப்படுகிறார்கள்.

குறைஷிகள் தங்களது தீய திட்டத்தில் எவ்வளவுதான் சுதாரிப்புடனும், விழிப்புடனும் இருந்தாலும் கூட படுதோல்வி அடைந்தனர். நபி (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி கூட்டத்தைப் பிளந்து கொண்டு தரையிலிருந்து கைப்பிடி மண்ணை எடுத்து அங்கிருந்தவர்களின் தலையின் மீது தூவிவிட்டுச் சென்றார்கள். எதிரிகள் நபி (ஸல்) அவர்களை பார்க்க முடியாதவாறு அல்லாஹ் செய்துவிட்டான்.

وَجَعَلْنَا مِنْ بَيْنِ اَيْدِيْهِمْ سَدًّا وَّمِنْ خَلْفِهِمْ سَدًّا فَاَغْشَيْنٰهُمْ فَهُمْ لَا يُبْصِرُوْنَ‏

இன்னும் நாம் அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னே ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்; (இவ்வாறாக) அவர்களை மூடிவிட்டோம் - ஆகையால் அவர்கள் பார்க்க முடியாது.(அல்குர்ஆன் : 36:9)

நபி (ஸல்) இவ்வசனத்தை ஓதியவர்களாக அங்கிருந்து வெளியேறி சென்றார்கள். அங்கிருந்த ஒவ்வொருவரின் மீதும் நபி (ஸல்) மண்ணை தூவியிருந்தார்கள். பின்பு அபூபக்ர் (ரழி) அவர்களின் வீட்டுக்கு வருகை தந்து அபூபக்ர் (ரழி) அவர்களையும் அழைத்துக் கொண்டு வீட்டின் பின்பக்கம் உள்ள சிறிய கதவின் வழியாக வெளியாகி, மக்காவிலிருந்து யமன் நாட்டை நோக்கிச் செல்லும் பாதையிலுள்ள ‘ஸவ்ர்’ குகையை வந்தடைந்தார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

முற்றுகையிட்டிருந்தவர்கள் நடுநிசியை எதிர்பார்த்திருந்த நேரத்தில் தாங்கள் தோல்வி அடைந்து விட்டோம் என்பது அவர்களுக்குத் தெரிந்தது. வெளியிலிருந்து வந்த ஒருவர் நபி (ஸல்) அவர்களின் வீட்டு வாசலில் இவர்கள் இருப்பதைப் பார்த்தவுடன் “நீங்கள் எதை எதிர்பார்த்திருக்கின்றீர்கள்” என்று கேட்டார். அவர்கள் “நாங்கள் முஹம்மதை எதிர்பார்த்து இருக்கிறோம்” என்றனர். அவர் “நீங்கள் தோல்வியடைந்து விட்டீர்கள் நஷ்டமடைந்து விட்டீர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக! இப்போதுதானே முஹம்மது உங்களைக் கடந்து செல்கிறார். உங்களது தலையின் மீது மண் தூவப்பட்டுள்ளதே! நீங்கள் பார்க்கவில்லையா?” என்று அவர் கூற, அவர்கள் தங்கள் தலையிலுள்ள மண்ணைத் தட்டிவிட்டு “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் அவரைப் பார்க்கவில்லையே! எப்படி அவர் சென்றிருப்பார்!” என்று திகைத்தனர்.

இருப்பினும் கதவின் இடுக்கின் வழியாக வீட்டிற்குள் பார்த்தனர். அங்கு அலீ (ரழி) படுத்திருப்பதை நபி என்று எண்ணி, “இதோ முஹம்மதுதான் தூங்குகிறார். இது அவருடைய போர்வைதான்” என்று கூறி, அவர் வெளியேறுவதை எதிர்பார்த்தவர்களாகவே விடியும்வரை நின்றிருந்தனர். ஆனால், காலையில் விரிப்பிலிருந்து அலீ (ரழி) எழுந்து வெளியே வருவதைப் பார்த்ததும், கைசேதமடைந்து நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரிக்கவே அலீ (ரழி) “எனக்கு எதுவும் தெரியாது” என்று மறுத்துவிட்டார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

வீட்டிலிருந்து குகை வரை.

நபித்துவத்தின் 14ஆம் ஆண்டு ஸஃபர் மாதம் பிறை 27 இரவில், அதாவது கி.பி. 622 செப்டம்பர் 12 அல்லது 13ல் நபி (ஸல்) தனது வீட்டை விட்டு வெளியேறி உயிராலும், பொருளாலும் தனக்கு மிகுந்த உதவி ஒத்தாசை செய்து வந்த, தனது தோழரான அபூபக்ர் (ரழி) வீட்டிற்கு வந்தார்கள். பின்பு, இருவரும் வீட்டின் பின்வாசல் வழியாகப் புறப்பட்டனர். விடியற்காலை உதயமாவதற்குள் மக்காவை விட்டு வெளியேறிவிடத் துரிதமாகப் பயணித்தனர்.

குறைஷிகள் தங்களை மிக மும்முரமாகத் தேட முயற்சிப்பார்கள் பொதுவாக மக்காவிலிருந்து வடக்கு நோக்கிய மதீனாவின் பாதையைத்தான் கண்காணிப்பார்கள் என்பதால் முற்றிலும் அந்த பாதைக்கு எதிர் திசையிலுள்ள மக்காவிலிருந்து யமன் நாட்டை நோக்கிய தெற்கு திசையின் பாதையில் சென்றார்கள். இவ்வாறு ஐந்து மைல் நடந்ததற்குப் பின் அங்குள்ள ‘ஸவ்ர்’ மலையை சென்றடைந்தார்கள். இது ஏறுவதற்குக் கடினமான, பெரிய பாறைகளைக் கொண்ட உயரமான மலையாகும். இதனால் நபி (ஸல்) அவர்களின் பாதங்கள் காயமடைந்தன. (எதிரிகள் தங்களின் பாத அடிகளைத் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக குதிகால்களின் மீது நீண்ட நேரம் நடந்து வந்ததால்தான் நபி (ஸல்) அவர்களின் கால்கள் காயமடைந்தன என்றும் சிலர் கூறுகின்றனர்.) காரணம் எதுவாயினும் சரியே! மலையில் நபி (ஸல்) அவர்களால் ஏற இயலவில்லை. ஆகவே, நபி (ஸல்) அவர்களை அபூபக்ர் (ரழி) சுமந்து கொண்டு மலையின் உச்சியிலுள்ள குகைக்குச் சென்றார்கள். அக்குகைக்கு வரலாற்றில் ‘ஸவ்ர் குகை’ என்று கூறுகின்றனர்.

இருவரும் குகைக்குள்.

நபி (ஸல்) அவர்களும், அவர்களது தோழரும் குகையை அடைந்தபோது “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் உள்ளே நுழையக் கூடாது. நான்தான் முதலில் நுழைவேன். அதில் ஏதாவது தீங்குகள் இருப்பின் அதனால் பாதிப்பு எனக்கு ஏற்படட்டும், உங்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது” என்று அபூபக்ர் (ரழி) கூறி, உள்ளே நுழைந்தார்கள். அக்குகையைச் சுத்தம் செய்து அதிலிருந்த ஓட்டைகளில் ஓர் ஓட்டையைத் தனது கீழாடையின் ஒரு பகுதியைக் கிழித்து அடைத்துவிட்டு மற்ற இரண்டு ஓட்டைகளை தனது கால்களைக் கொண்டு அடைத்துக் கொண்டார்கள். பின்பு, நபி (ஸல்) அவர்களை உள்ளே அழைக்கவே அவர்கள் உள்ளே நுழைந்து அபூபக்ரின் மடியில் தனது தலையை வைத்துத் தூங்கி விட்டார்கள். சிறிது நேரத்தில் அபூபக்ர் (ரழி) காலில் ஏதோவொன்று தீண்டிவிடவே வலியினால் வேதனையடைந்த அவர்கள், ‘நபி (ஸல்) விழித்துக் கொள்வார்களே!’ என்ற பயத்தில் அசையாமல் இருந்து விட்டார்கள். எனினும், வலியின் வேதனையால் அவர்களின் கண்களில் இருந்து கசிந்த நீர், நபி (ஸல்) அவர்களின் முகத்தை நனைத்தது. விழித்துப் பார்த்த நபி (ஸல்) “அபூபக்ரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது” என்று கேட்டார்கள். “என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! என்னை ஏதோ தீண்டிவிட்டது” என்று அவர்கள் கூறவே நபி (ஸல்) தங்களது உமிழ்நீரை அவ்விடத்தில் தடவ அவர்களது வலி தூரமானது. (ரஜீன், மிஷ்காத்)

இருவரும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று இரவுகள் குகையில் தங்கியிருந்தனர். (ஃபத்ஹுல் பாரி)

முதல் கட்டம் புதிய சமூகம் அமைத்தல்.

நபி (ஸல்) மதீனாவில் நஜ்ஜார் கிளையினரின் இல்லத்திற்கு ஹிஜ்ரி 1ல் ரபிய்யுல் அவ்வல் பிறை 12, வெள்ளிக்கிழமை, கி.பி. 622 செப்டம்பர் 27ல் வந்தார்கள். முதலாவதாக அபூ அய்யூப் அன்சாரியின் வீட்டுக்கருகிலுள்ள இடத்தில் இறங்கி “இன்ஷா அல்லாஹ்! இங்குதான் தங்குமிடம் அமையும்” என்று கூறிவிட்டு, பின்பு அபூ அய்யூப் அன்சாரியின் வீட்டுக்குச் சென்றார்கள்.

அல்மஸ்ஜித் அந்நபவி.

இதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் எடுத்துக் கொண்ட முதல் முயற்சி பள்ளி வாசல் ஒன்றை அமைப்பதாகும். இந்த பள்ளி வாசலைத்தான் ‘அல்மஸ்ஜித் அந்நபவி’ (நபியவர்கள் கட்டிய பள்ளிவாசல்) என்று சிறப்பாக சொல்லப்படும். தங்களது ஒட்டகம் முதன் முதலாக மண்டியிட்ட இடத்தையே நபி (ஸல்) அவர்கள் பள்ளி கட்டுவதற்காகத் தேர்வு செய்தார்கள். அந்த நிலம் இரண்டு அனாதைகளுக்குச் சொந்தமாக இருந்தது. அவர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் அதை விலைக்கு வாங்கி கட்டிடப் பணியைத் தொடங்கி, அப்பணியில் தாங்களும் பங்கெடுக்கும் முகமாக கல், மண் சுமந்தார்கள். வேலையை உற்சாகப்படுத்தும் வகையில்,

“இறைவா! மறுமை வாழ்வைத் தவிர வேறு வாழ்வு இல்லை.

அன்சாரிகள், முஹாஜிர்களுக்கு நீ மன்னிப்பளி!

இந்த சுமை கைபருடைய சுமையல்ல!

எங்கள் இறைவன் மீது ஆணையாக! இது நன்மை பயக்கக் கூடியது தூய்மையானது.”என்று கவியாக படிப்பார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பணியின்போது ஆர்வமூட்டும் சொற்களைக் கூறி வந்தது தோழர்களுக்கு வேலையில் மிகுந்த உற்சாகத்தை அளித்தது. தோழர்களும் உற்சாகம் மிகுந்து,

நபி பணி செய்ய, நாம் அமர்ந்தால்,அது வழிகெட்ட செயலல்லவோ!

என்று கவிபாடிக் கொண்டிருந்தார்கள்.

அந்த இடத்தில் இணைவைப்போரின் கப்ருகள் (அடக்கஸ்தலங்கள்) சில இருந்தன. மற்றும் பல இடிந்த கட்டடங்களும், சில பேரீத்த மரங்களும், ‘கர்கத்’ என்ற மரங்களும் இருந்தன. நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க கப்ருகள் தோண்டி எடுக்கப்பட்டு, மற்றொரு இடத்தில் புதைக்கப்பட்டன. இடிபாடுகள் அகற்றப்பட்டு தரை சமமாக்கப்பட்டது. மரங்கள் அனைத்தும் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன. அந்த மரங்கள் கிப்லா” திசையில் வரிசையாக நட்டு வைக்கப்பட்டன. அப்போது கிப்லா பைத்துல் முகத்தஸை” நோக்கியிருந்தது. பள்ளியுடைய வாயிலின் இரு ஓரங்களும் கற்களால் ஆக்கப்பட்டன. அதனுடைய சுவர்கள் கல்லாலும், மண்ணாலும் கட்டப்பட்டன. பேரீத்த மரத்தின் கீற்றுகளால் முகடுகள் அமைக்கப்பட்டன. தூண்கள் பேரீத்த மரங்களால் செய்யப்பட்டன. தரையில் மணலை விரிப்பாக ஆக்கப்பட்டது. பள்ளிக்கு மூன்று வாயில்கள் அமைக்கப்பட்டன. பள்ளியின் நீளம் கிப்லாவிலிருந்து கடைசி வரை நூறு முழங்கள் ஆகும். பள்ளியின் இரண்டு புறங்களும் அதே அளவு அல்லது அதைவிட சற்று குறைவாக இருந்தன. பள்ளியின் அஸ்திவாரம் மூன்று முழத்தில் போடப்பட்டது.

மதீனா வாழ்க்கையில் அழைப்பு மற்றும் போரின் கட்டங்கள்.

மதீனா வாழ்க்கையை மூன்று கால கட்டங்களாக பிரிக்கலாம்:

1) இஸ்லாமிய சமூகத்திற்கு அடித்தளம் அமைத்தல், இஸ்லாமிய அழைப்புப் பணியை உறுதிபடுத்துதல்.

இக்கால கட்டத்தில் மதீனாவிற்குள் பெரும் குழப்பங்களும் பிரச்சனைகளும் ஏற்பட்டன. மதீனாவிற்கு வெளியிலிருந்து முஸ்லிம்களை அழிப்பதற்காகவும் அழைப்புப் பணியை வேரறுப்பதற்காகவும் எதிரிகள் பெரும் போர்களை நடத்தினர். ஆனால், இக்காலகட்டம் ஹிஜ்ரி 6ஆம் ஆண்டு துல்கஅதாவில் நடந்த ஹுதைபிய்யா உடன்படிக்கையுடன் முடிவடைந்தது. அதற்குப் பிறகு அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றியையும், ஆதிக்கத்தையும் அருளினான்.

2) மிகப்பெரிய எதியுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளுதல், அரசர்களை இஸ்லாமின் பக்கம் அழைத்தல், சதித்திட்டங்களை முறியடித்தல்.

இக்காலகட்டம் ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு ரமழான் மாதம் புனித மக்கா வெற்றியுடன் முடிவுற்றது.

3) குழுக்களை வரவேற்றல், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைதல்.

இக்காலகட்டம் மக்கா வெற்றியிலிருந்து 11 ஆம் ஆண்டு ரபீவுல் அவ்வல் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை தொடர்ந்தது.

இந்த ஹிஜ்ரத்துடைய பயணத்தை வைத்து தான் ஹிஜ்ரி ஆண்டு உமர் (ரலி) அவர்களின் காலத்தில் பல கட்ட ஆலோசனைக்கு பிறகு துவங்கப்பட்டது. இன்றிலிருந்து ஹிஜ்ரி 1445 தை துவங்க இருக்கும் நமக்கு அல்லாஹ் தன் புறத்திலிருந்து எல்லா விதமான ரஹ்மத்துகளையும், பரக்கத்துகளையும் தந்தருள்வானாக! ஆமின்.

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Wednesday, 12 July 2023

ஜும்ஆ பயான்14/07/2023

இறை சட்டமே நிறை சட்டம்.

  اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا‌  فَمَنِ اضْطُرَّ فِىْ مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّاِثْمٍ‌ۙ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏‏

இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 5:3)

அல்லாஹுத்தஆலா தன்னிறைவு பெற்ற சன்மார்க்கமாகிய தீனுல் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக நமக்கு வழங்கியுள்ளான்.இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகள்,வாழ்க்கை நெறிமுறைகள,கடந்த கால வரலாற்றுப் படிப்பினை, வருங்கால செய்தி குறித்த முன்னறிவிப்பு, எல்லா மனிதர்களுக்கும்,எல்லா காலங்களுக்கும், எல்லா இடங்களுக்கும் இசைந்து கொடுப்பதிலும்,பொருந்திப்போவதிலும்  தன்னிறைவு பெற்ற பல சிறப்புகளை தாங்கிய இஸ்லாம் நிறைவான மார்க்கமாகும்.

அல்லாஹுத்தஆலாவிடம் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம் ஆகும்.

அல்லாஹுத்தஆலா அருளிய திருமறை குர்ஆன் மற்றும் அண்ணலம் பெருமானார் ﷺஅவர்களின் வாழ்க்கை நெறியில் இருந்து வழங்கிய ஷரிஅத் சட்டதிட்டங்களை பேணி நடப்பது ஒவ்வொரு இஸ்லாமியனின் மீதும் கடமையாகும்.வாழ்வின் எல்லா தருணங்களையும் ஷரிஅத் சட்டங்களே முஸ்லிம்களை வழி நடத்த முடியும்.

உடலுக்கு உயிர்ப்போல இஸ்லாமியனாக வாழ இஸ்லாமிய ஷரிஅத் அவசியமாகும். இஸ்லாமியன் உலகில் எந்த மூளையில் வாழ்ந்தாலும் அந்நாட்டின் சட்டங்களுக்கு கீழ்படிந்து வாழ இஸ்லாம் வழிகாட்டுகிறது.

ஆனால் ஒரு நாட்டின் சட்டம் இஸ்லாமிய ஷரிஅத்திற்கு மாற்றமாக நடக்க நிர்பந்தித்தால் உயிரேப்போனாலும் ஒரு முஸ்லிம் இஸ்லாத்திற்கு மாறுசெய்யமாட்டான்.

இஸ்லாமியர்கள் மட்டுமல்ல உலகில் உள்ள சமயத்தவர் அனைவரும் தங்களின் வேதங்களையும்,மத கோட்பாடுகளையும் உயிரையும் விட மேலாக மதிக்கின்றனர்.

இஸ்லாமியர்கள் தங்களின் உயிரை விடவும் மேலாக மதிக்கக் கூடிய இறை வேதம் குர்ஆனும்,அண்ணலம் பெருமானார் ﷺஅவர்களின் நபி மொழிகளும்,இஸ்லாமியர்கள் எப்படி வாழ வேண்டும்,எப்படி வாழக்கூடாது,எது ஹலால்,எதுஹராம் என்பதனை தெளிவாக வழிகாட்டி விட்டன.

இஸ்லாம் அனுமதிக்கும் ஒன்றை உலகம் முழுக்க எதிர்த்தாலும் அதனை இஸ்லாமியர்கள் ஏற்க மாட்டார்கள்.அதேபோல தடை செய்த ஒன்றை உலகமெல்லாம் சேர்ந்து  அதனை செய்ய நிர்பந்தித்தாலும் உயிரே போனாலும் அதனை செய்ய மாட்டார்கள்.

இஸ்லாம் தோன்றிய காலத்தில் இருந்தே எதிர்ப்புகளை கையாண்டு வருகின்றது.இன்னும் சொல்லப்போனால் இஸ்லாத்தின் தனித்துவமே அது எதிர்ப்புகளோடு தான் வளரும்.எதிர்க்க எதிர்க்க அதிகமாக வளரும்.

வரலாற்றில் நபிமார்கள் தொடங்கி நம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரையிலும்.இன்னும் இன்று வரையிலும் இஸ்லாம் எதிர்க்க எதிர்க்க மேம்பட்டு வளர்ந்து கொண்டே இருக்கின்றது.தோல்வியை ஒருபோதும் சந்திக்கவில்லை.

நபி மூஸா (அலை)அவர்களை தோற்கடிப்பதற்காக ஃபிர்அவ்ன் உலகில் உள்ள சூனியக்காரர்களை எல்லாம் ஒன்று திரட்டினான் இறுதியில் நடந்தது என்ன?

يقول ابن كثير فى "البداية والنهاية"  عن هؤلاء السحرة: "قال عبد الله بن عباس وعبيد بن عمير: كانوا من أول النهار سحرة فصاروا من آخره شهداء بررة".

இப்னு கஸீர்(ரஹ்)அவர்கள் இப்னு அப்பாஸ்(ரலி)அவர்களின் ஒரு அறிவிப்பில் :அந்த வரலாற்றை சுருக்கமாக ஒரே வரியில்"பகலின் ஆரம்ப பொழுதில் சூனியக்காரர்களாக இருந்தவர்கள்,இறுதியில் நல்லவர்களாக,ஷஹீதுகளாக மாறிப்போனார்கள்.

இஸ்லாத்தை எதிர்த்தவர்கள் எல்லாம் இஸ்லாத்திற்கு முன் சரணாகதி அடைந்தார்களே தவிர அவர்கள் வெற்றிப்பெற்றதாக சரித்திரம் இல்லை.

100 சினை போட்ட ஒட்டகை பரிசு என்ற அறிவிப்பால் நபிﷺஅவர்களின் தலையை கொய்தப்புறப்பட்ட ஹழ்ரத் உமர் (ரலி)அவர்கள் முன்றாம் நாளில் இஸ்லாத்தை ஏற்றார்.

இனி யாராவது ஒருவன் இஸ்லாமியனை தீண்ட நினைத்தாலும் அவன் வாரிசில் ஒன்றை இழக்க நேரிடும் என கர்ஜித்தார்கள் உமர்(ரலி)அவர்கள் என்கிறது வரலாறு.

இஸ்லாத்தை அழிக்க நினைத்த எத்தனையோ முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலே முடிந்திருக்கின்றன. குறிப்பாக இந்தநூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்களில் அக்பர் என்பவர் "ஒரே நாடு" ஒரே சட்டம் ஒரே மதம் என்று சொல்லி "தீனே இலாஹி"என்ற பெயரில் ஒரு மதத்தை உருவாக்கி இனி தம் ஆட்சியில் எல்லா மதத்தவரும் "தீனே இலாஹி"யே பின்பற்றி நடக்க வேண்டும் என்று நிர்பந்தித்தார்.துவங்கிய சில தினங்களிலே நாடெங்கும் மூர்க்கமாக எதிர்த்த இஸ்லமியர்களின் எழுச்சியால் அதன் அடிச்சுவடே தெரியாமல்  இன்று "தீனே இலாஹி"பாட புத்தகங்களில் இரண்டு வரிகளில் சுருங்கிப்போனது.

இவைகள் இஸ்லாம் பல எதிர்ப்புகளுக்கிடையில் அதன் பாரம்பரியத்தோடு வளர்ந்ததற்கான ஆதாரங்களில் சில...

இன்றும் கூட சர்வதேச அளவில் இஸ்லாம் நிறைய நெருக்கடிகள்,நிறைய பிரச்சனைகளை எதிர்க்கொண்டுதான் இருக்கின்றது.

பல நாடுகளில் இஸ்லாமியர்கள்  புர்கா அணிய தடை-தாடி வைக்க தடை-மஸ்ஜிது கட்ட தடை ,பல நாடுகளில் முஸ்லிம்களுக்கு பயங்கரவாத முத்திரை என்றெல்லாம் ஊடகங்களை கையில் வைத்துள்ள பாசிச சக்திகளால் நிறைய கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

இவையனைத்தையும் தாண்டி இஸ்லாத்தின் வளர்ச்சி விகிதம் குறைந்திருக்கின்றதா என்றால் இல்லை முன்னெப்போதையும் விட இஸ்லாம் இன்னும் வீறுகொண்டு வளர்கின்றது.

அந்த வரிசையில் பொது சிவில் சட்டதை வரும் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பு அமல்படுத்த அல்லது அதற்கான முயற்சிகளில் மத்தியில் உள்ள ஒன்றிய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.இது இஸ்லாமியர்களின் தனி சட்டங்களாக உள்ள திருமணம்,விவாகரத்து,வழிபாட்டுரிமை,சொத்துபங்கீடு,வக்ஃப் உரிமை போன்ற உரிமைகளை பறிக்க கொண்டுவரும் தந்திர முயற்சியே அன்றி வேறில்லை.

ஒன்றிய அரசு பொது சிவில் சட்டத்தை புகுத்த நினைப்பது,நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலே அன்றி வேறில்லை. இது ஒருமைப்பாட்டை வேரோடு அறுக்கும் செயலாகும்.

பொதுசிவில் சட்டம் என்ற பெயரில், முஸ்லிம்களாக வாழும் உரிமை பறிக்கப்பட்டால், முஸ்லிம்கள் அதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். பொங்கி எழுவார்கள். உலகத்துச் சலுகைகள் எதையும் அவர்கள் இழப்பார்கள்.

ஆனால் முஸ்லிம்களாக வாழ்வதற்கே தடை என்றால் இஸ்லாத்தை விட உயிர் பெரிதில்லை என்பதை நிரூபித்துக் காட்டுவார்கள். அத்தகைய நிலை ஏற்பட்டால் எந்தச் சக்தியாலும் அவர்களைத் தடுக்க முடியாது.

பொது சிவில் சட்டம் கோரிக்கை எப்போது எழுந்தது?

பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்து, முஸ்லிம்களுக்கென தனித்தனியே தனிநபர் சட்டங்கள் இயற்றப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெண்ணுரிமை ஆர்வலர்களால் முதன் முதலில் பொது சிவில் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. பெண்ணுரிமை, பாலின சமத்துவம், மத சார்பின்மை போன்றவற்றை அவர்கள் முன்வைத்தனர். பிரிட்டிஷ் ஆட்சியில் பெண்களுக்கு, குறிப்பாக இந்து விதவைகள் நிலையை மேம்படுத்த சில சட்டங்கள் இயற்றப்பட்டன.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு விரும்பியும் கூட, பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முடியவில்லை. பலவாறான சமரசங்களுக்குப் பிறகு இந்து வாரிசுமைச் சட்டம் 1956-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

1985-ம் ஆண்டு ஷா பானோ வழக்கில், முஸ்லிம் பெண்ணான பானோ தனது முன்னாள் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெறலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில்தான், நீதிபதிகள் 'Uniform' என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தனர். அதன் பின்னரே பொது சிவில் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் அரங்கில் வலுப்பெற்றது. பாரதிய ஜனதாக் கட்சி அதனை வலுவாக முன்னெடுத்தது.

பொது சிவில் சட்டம் - ஆதரவாளர்கள் கூறுவது என்ன?

பொது சிவில் சட்டத்தை ஆதரிப்போர், அது உண்மையான மத சார்பின்மையை ஊக்குவிக்கும் என்று கூறுகின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுமே சட்டத்தின் முன் சமமாக ஒரே மாதிரியாக நடத்தப்படுவார்கள் என்பது அவர்கள் வாதம்.

அத்துடன், பொது சிவில் சட்டம் பெண்களுக்கு கூடுதல் உரிமைகளைக் கொடுக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். குடும்ப வாழ்க்கையில் ஆணாதிக்கத்தை உறுதிப்படுத்தும் மத ரீதியான பழைய விதிகளை உடைத்தெறிந்து, பொது சிவில் சட்டம் பெண்களுக்கு சம அதிகாரத்தை தரும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

பொது சிவில் சட்டம் - எதிர்ப்பாளர்கள் கூறுவது என்ன?

மதம் என்பது நம்பிக்கை சார்ந்தது. அதன் அடிப்படையிலான விதிகளுக்கு மாறாக வேறொன்றை பின்பற்ற நிர்பந்திருப்பது எப்படி சரியாக இருக்க முடியும்? என்னுடைய மதம் எது என்று தீர்மானிக்க அரசு யார்? என்று எதிர்ப்பாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

"நாங்கள் இந்திய அரசியல் சாசனத்தால் ஆளப்படுகிறோம், என்னுடைய மதத்தை பின்பற்ற அரசியல் சாசனம் சுதந்திரத்தை வழங்கியுள்ளது" என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

இதைத்தான் இஸ்லாமும் கூறுகிறது. 

لَاۤ اِكْرَاهَ فِى الدِّيْنِ‌ۙ 

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; (அல்குர்ஆன் 2:256)

திருமண சட்டம் எதற்கு?

ஆண் பெண் இடையே ஏற்படும் உறவுமுறைக்கு பெற்றவர்களின் சம்மதமும் சமூக அங்கீகாரமும் அவசியமானதாக உள்ளது. சமுதாயத்தில் யாரும் தனித்திருந்து இன்புற்று வாழ முடியாது. எனவே அனைவரின் ஆசியுடன் செய்துகொள்ளும் உறவுமுறையே திருமணம் என்பதாகும்.  மனமுவந்து திருமணம் செய்து கொள்ள, இஸ்லாமிய சமூக அமைப்பு/ஆட்சியமைப்பு வரையறைகளுடன் கூடிய சட்டங்களைப் பிறப்பிக்க வேண்டும். இத்தகைய ஏற்பாடுகளின்றி அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கூடிக் கொள்ளலாம் அல்லது இணைந்து வாழலாம் என்றிருந்தால் காலப்போக்கில் பெண்கள், ஆண்களின் காம வேட்கைக்கு இரையாகி விடுவார்கள். மேலும் பெண்கள் விலைப் பொருளாக மாறி விடுவார்கள். எனவே கட்டுக் கோப்பான சமூக அமைப்பு சீர்கெடும். பெண்களுக்கு சமுதாயத்தில் சம அந்தஸ்து கிடைக்காது. எனவே யார் யாருடைய கணவன் அல்லது யார் யாருடைய மனைவி என்பதற்கு வாழ்நாள் காலத்து ஒப்பந்த வாக்கு மூலத்தை பதிவு செய்வது அவசியமான ஒன்றாகும். இதுவே நிக்காஹ் என்பதாகும்.

இதைப் படிப்பவர்களுக்கு சில சந்தேகங்கள் எழலாம். அதாவது மேலை நாடுகளிலும், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பாலியல் உறவுமுறைக்கு கட்டுப்பாடு எதுவும் இல்லையே. இருந்தும் அவர்கள் சிறப்பாகத் தானே வாழ்கிறார்கள் என்று கேட்கலாம். ஆனால் ஒரு விஷயத்தை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இரண்டாம் உலக போருக்குப் பின் மேலை நாடுகளும் ஜப்பான் போன்ற நாடுகளிலும் தம் இழப்பைச் சரி செய்ய அல்லும் பகலும் அயராது உழைத்து சில ஆண்டுகளிலேயே பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்று விட்டார்கள். இந்த வளர்ச்சி அவர்களுடைய காம களியாட்டங்களைத் தாக்குப் பிடித்து வருகின்றன. ஆனால் இந்நிலை வெகுநாட்களுக்கு நீடிக்க வாய்ப்பில்லை. அவர்களுடைய வீரம், ஆண்மை வீரியம் மற்றும் தொலை நோக்குப் பார்வை போன்றவை குன்றி வருகின்றன. அவர்கள் வெறும் இயந்திர வாழ்வையே வாழ்ந்து வருகிறார்கள். இதன் விளைவாக அவர்களுக்கு வேறு கோணங்களில் பிரச்னைகள் ஏற்பட்டு அவர்கள் அழிவுக்கு ஆளாவார்கள். மேலும் வருங்கால சந்ததியர்களுக்கு உடல் ரீதியாகவும் அறிவுத்திறன் விஷயத்திலும் பாதிப்புகள் ஏற்படும்.

அப்படியிருக்க பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தால் இரண்டு சாட்சிகள் தேவையில்லை. ஈஜாப் கபூல் . மஹர் தேவையில்லை அரசு பத்திரத்தில் பதிவு செய்தால் போதும் என்ற நிலை ஏற்படுமேயானால் திருமண வாழ்க்கை சீர்கெட்டு விடும்.

எனவே திருமணம் சம்பந்தமாக திருக்குர்ஆன்  வரையறையின் பிரகாரம் நடப்பது தான் சிறந்தது.

திருமணத்திற்கு ஈஜாப் கபூல் அவசியம்.

கன்ஸா பின்த் கிதாம் அல்அன்சாரியா(ரலி) கூறினார் 

கன்னி கழிந்த பெண்ணான என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்துவைத்தார்கள். எனக்கு இதில் விருப்பமிருக்கவில்லை. எனவே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் போ(ய் என் விருப்பத்தைச் சொன்)னேன். அத்திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள்.                            (ஸஹீஹ் புகாரி : 5138. )

விருப்பமில்லாத பெண்ணை மணக்கலாமா?

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا يَحِلُّ لَكُمْ أَن تَرِثُوا۟ ٱلنِّسَآءَ كَرْهًۭا ۖ وَلَا تَعْضُلُوهُنَّ لِتَذْهَبُوا۟ بِبَعْضِ مَآ ءَاتَيْتُمُوهُنَّ إِلَّآ أَن يَأْتِينَ بِفَٰحِشَةٍۢ مُّبَيِّنَةٍۢ ۚ وَعَاشِرُوهُنَّ بِٱلْمَعْرُوفِ ۚ

4:19. நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப்பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது கூடாது, பகிரங்கமான கெட்ட செயலை அவர்கள் செய்தாலொழிய, பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் (துன்பம்கொடுத்து) தடுத்து வைக்காதீர்கள்.

விளக்கம் :

(1) உங்களை விரும்பாத பெண்களைப் பலவந்தமாக திருமணம் செய்து கொள்ளக் கூடாது.

(2) மேலும் நீங்கள் மணமுடித்துக் கொண்ட பெண்களுக்கு அளித்துள்ள பொருட்களைத் திரும்பப் பெறும் பொருட்டு, அவர்களை உங்களிடமே நிறுத்திக் கொண்டு துன்புறுத்தக் கூடாது.

(3) இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் ஆண் பெண் ஆகிய இருவரும் மனமுவந்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதே.

(4) எனவே மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவரும் ஒருவரையொருவர் நேரில் பார்த்து மனதிற்குப் பிடித்திருந்தால், மணமுடித்துக் கொள்ளலாம்.

(4) மேலும் திருமண விஷயத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் மனப் பக்குவத்தை அவ்விருவரும் அடைந்திருக்க வேண்டும்.


ஸ்பைனில் முஸ்லிம்களின் வீழ்ச்சியின் ஆரம்பம்.

ஸ்பைனில் முஸ்லிம்களை வீழ்த்துவதற்கு கையில் எடுத்த முதல் ஆயுதம் திருமணத்தின் சட்டம் தான் யார் யாரெல்லாம் இஸ்லாத்தின் பிரகாரம் திருமணம் செய்து உள்ளீர்களோ அவர்கள் அனைவரும் அரசாங்கத்திடம் பதிவு செய்ய வேண்டும் அப்படி பதிவு செய்தால் மட்டுமே திருமணம் செல்லுபடி ஆகும் என்று சொன்னார்கள் முஸ்லிம்கள் அனைவரும் சாதாரண விஷயம் தானே என்று நினைத்து பதிவு செய்தார்கள் பிறகு இரண்டாவதாக அரசாங்கத்திடம் பதிவு செய்வது தான் உண்மையான திருமணம் ஷரியத் பிரகாரம் செய்யக்கூடிய திருமணம் திருமணமாக ஆகாது என்று சொன்னார்கள். அன்றிலிருந்து முஸ்லிம்களின் வீழ்ச்சி ஆரம்பமானது.

தலாக் ஒர் பார்வை..

இஸ்லாம் மார்க்கத்தில் ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தலாக் எனும் விவாகரத்துச் செய்யும் உரிமை நாட்டில் மிகப்பெரிய விவாதப் பொருளாக ஆக்கப்பட்டுள்ளது.

தலாக் எனும் விவாகரத்துச் சட்டத்தினால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற காரணத்தைச் சொல்லியே இது விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறது.

கணவன் மனைவியர் சேர்ந்து வாழ்ந்து விட்டு பிரியும் போது பெரும்பாலும் பெண்கள் பாதிக்கப்படுவார்கள். சில வேளை ஆண்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்தக் காரணம் அனைவருக்குமானதே தவிர முஸ்லிம்களுக்கு மட்டும் உரியது அல்ல. முஸ்லிம் ஆண்கள் தமது மனைவியரை விவாகரத்து செய்தால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவது போல், இந்து ஆண்கள் விவாகரத்து செய்தால் இந்துப் பெண்கள் பாதிக்கப்படுவார்கள். கிறித்தவ ஆண்கள் விவாகரத்துச் செய்தால் கிறித்தவப் பென்கள் பாதிக்கப்படுவார்கள். எந்த மதத்தைச் சேர்ந்த ஆண்கள் விவாகரத்து செய்தாலும் அந்தந்த மதத்துப் பெண்கள் பாதிக்கப்படுவார்கள். மதத்தை நம்பாதவர்கள் விவாகரத்துச் செய்தாலும் அவர்களின் மனைவியர் பாதிக்கப்படுவார்கள்.

பொதுவான இந்தப் பிரச்சனையில் கருத்து சொல்பவர்கள் நியாயமானவர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? இந்தியாவில் யாரும் விவாகரத்து செய்யக் கூடாது என்று கூற வேண்டும்.

அப்படி ஒருவரும் கூறுவதில்லை. கூற முடியாது. ஏனெனில் திருமண உறவு என்பது தாய், தந்தை, அண்ணன் தம்பி போன்ற பிரிக்க முடியாத உறவு அல்ல.

ஆண்களும் பெண்களும் தங்களின் தேவைகள் சிலவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஏற்படுத்திக் கொள்ளும் உறவாகும்.

திருமணம் செய்த பின்னர் பெரும்பாலும் தம்பதிகள் மகிழ்வோடு வாழ்கிறார்கள். சிலர் குறைகளைச் சகித்துக் கொண்டு வாழ்கிறார்கள். மிகச் சிலர் சேர்ந்து வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த நிலைக்கு ஆளானவர்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை இல்லாவிட்டால் அவர்களை எந்தச் சட்டத்தின் மூலமும் சேர்த்து வைக்க முடியாது.

விவாகரத்து செய்ய முடியாது என்று வலியுறுத்தினால் அந்த ஆண் பெயருக்குத் தான் அவளுக்குக் கணவனாக இருப்பான். அவளுடன் இல்லறம் நடத்த மாட்டான். வேண்டாத மனைவி என்பதால் சித்திரவதை செய்வான். மனைவியைக் கவனிக்காமல் கள்ள உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு மனைவியை மனம் நோகச் செய்வான். 

எனவேதான் விவாகரத்து மற்றும் ஜீவனம்சம் கொடுக்கும் விஷயத்தில் மார்க்கம் அழகிய முறையில் வழிகாட்டியுள்ளது. பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தால் விவாகரத்து விஷயத்தில் இன்னும் பல குற்றங்களுக்கு வழி வகுத்து விடும்.

வக்ஃப் ஒர் பார்வை.

வக்ஃபு என்பது ஒரு நிலம் அல்லது கட்டிடத்தை ஏதாவது நல்ல காரியத்திற்காக அர்ப்பணித்து அதன் மூலம் வரும் வருமானத்தை அந்த நல்ல காரியத்திற்காக செலவிடுவதற்கு சொல்லப்படும். அந்த சொத்து அப்படியே இருக்கும். பணத்தை ஏழைகளுக்கு செலவிட்டாலோ அல்லது ஒரு நிலத்தை அனாதைக்கு கொடுத்து விட்டாலோ அத்துடன் அந்த தர்மம் முடிந்துவிடும். பிறகு அந்த அனாதை வயதுக்கு வந்த பின் அந்நிலத்தை விற்கவும் செய்யலாம். அல்லது வேறு யாருக்கும் அன்பளிப்பாகவும் கொடுத்து விடலாம். ஆனால் வக்ஃபு என்பது கியாமத் வரை அசல் அப்படியே இருக்கும். அதன் வருமானத்தை மட்டும் பாத்தியப்பட்டவர்கள் அனுபவிப்பார்கள்.

உமர் (ரலி) அவர்களின் வக்ஃபின் மூலம் அதற்குரிய சட்டங்களை அறிய முடிகிறது. உமர் (ரலி) அவர்கள் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றுக் கொண்டார்கள். நபியவர்களிடம் வந்து இப்பொழுது நான் ஒரு நிலத்தைப் பெற்றிருக்கிறேன். இதைவிட விலையுயர்ந்த ஒரு நிலத்தை நான் பெற்றதில்லை. எனவே தங்களது உத்தரவின் படி செயல்படுகிறேன், என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் விரும்பினால் அதன் அடிமனையை தடுத்து வைத்துக்கொண்டு (அதிலிருந்து வரும் லாபத்தை) தர்மம் செய்து விடுங்கள், என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்களும் அவ்வாறே தர்மம் செய்து விட்டார்கள். இந்நிலம் விற்கப்படக் கூடாது; அன்பளிப்பாக வழங்கடக்கூடாது; வாரிசுரிமை கோரப்படக்கூடாது, என்று கூறி ஏழைகள், உறவினர்கள், அடிமைகள், விருந்தாளிகள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்கும் அல்லாஹ்வின் பாதையிலும் செலவிடப்பட வேண்டுமென்று தர்மம் செய்து விட்டர்கள். அந்நிலத்தின் பொறுப்பாளர் நடைமுறையில் அறியப்பட்ட விதத்தில் சாப்பிட்டுக்கொள்ளலாம். நண்பருக்கு உணவளிக்கலாம். ஆனால் அதைக் கொண்டு சொத்து சேகரிப்பவராக இருக்கக் கூடாது, என்று கூறினார்கள். (புகாரி) 

ஒரு பொருளுக்கு சொந்தக்காரர் எப்படிப்பட்ட நல்ல காரியத்தில் செலவு செய்ய அவர் விரும்புகிறாரோ அதில் செலவழித்தால் தான் தனக்கு நிறைவான நன்மை கிடைக்கும், என்று நம்பினால் அதைத் தவிர வேறெதிலும் அது நல்ல காரியமாக இருந்தாலும் செலவு செய்ய மாட்டார். எனவே அவர் வக்ஃப் செய்யும் போது எப்படி செலவு செய்ய வேண்டும் என்று விரும்புகிறாரோ அதில் தான் கடைசி வரை செலவிட வேண்டும். நாமாக ஒரு காரியத்தை இதுவும் நல்ல காரியம் தானே! இதில் செலவு செய்தாலும் வக்ஃப் செய்தவருக்கு நன்மை போய் சேரத்தானே செய்யும், என்று நினைத்துக் கொண்டு நாம் விரும்பியவற்றில் செலவிடக்கூடாது. வாகிஃபின் நிபந்தனையாகும்.

வக்ஃப் செய்பவர் குறிப்பிடும் நிபந்தனையை எவ்வித மாற்றமும் செய்யாமல் அப்படியே நிறைவேற்றியாக வேண்டும். வாகிஃபின் நிபந்தனை மார்க்கம் விதித்த நிபந்தனையைப் போன்று மதித்து செயல் படுத்த வேண்டும். அவர் விதித்த நிபந்தனை மார்க்கத்திற்கு முரணாக இருந்தால் அதை அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை.

மஸ்ஜித்:

ஒரு இடத்தில் மஸ்ஜித் உருவாக்க்கப்பட்ட பின் அது கியாம நாள் வரை மஸ்ஜிதாகவே இருக்கும். அதை வேறு எதற்காகவும் பயன்படுத்தக்கூடாது. ஒரு தடவை பள்ளிவாசல் என்ற முறையில் தொழுகை நடந்த பிறகு அங்கு ஏதோ ஒரு காரணத்தினால் முஸ்லிம்கள் யாரும் இல்லாமால் போய்விட்டாலும் அந்த இடம் மஸ்ஜிதாகவே இருக்கும்.

ஒருவேளை பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தால் வக்ஃப் இடங்களில் சாலைகள் அமைக்கப்படலாம். அல்லது வேறு ஏதேனும் காரியங்களில் பயன்படுத்த படலாம் என்ற அச்சம் முஸ்லிம்களுக்கு மத்தியில் உள்ளது.

எனவே நிறைவான சட்டம் இறைச் சட்டம் தான் என்பதை அனைத்து மக்களுக்கும் உணர்த்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. 

அல்லாஹுத் தஆலா அந்த நஸுபை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமின்...

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.


 

Tuesday, 27 June 2023

ஜும்ஆ பயான் 30/06/2023

பொது சிவில் சட்டம்.

முன்னுரை :

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّلَا مُؤْمِنَةٍ اِذَا قَضَى اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَمْرًا اَنْ يَّكُوْنَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ اَمْرِهِمْ  وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِيْنًا‏

மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.(அல்குர்ஆன் : 33:36)

وَمَنْ يَّبْتَغِ غَيْرَ الْاِسْلَامِ دِيْنًا فَلَنْ يُّقْبَلَ مِنْهُ‌  وَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ‏

இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.(அல்குர்ஆன் : 3:85)

அல்லாஹ்வின் மார்க்கம் இஸ்லாம்.

அல்லாஹுத்தஆலா அகில உலக மக்கள் மகிழ்ச்சிகரமாக வாழ இஸ்லாம் எனும் நெறிமுறையை வகுத்துத்கொடுத்திருக்கிறான். அதேசமயம் அல்லாஹுத்தஆலா எவரையும் இஸ்லாத்தை ஏற்கும் படி நிர்பந்திக்கவில்லை.

குர்ஆன் கூறும் தெளிவான இரண்டு செய்திகள்.

1 )இம்மை மறுமை இரண்டு வாழ்விற்குமான சிறந்த வாழ்க்கை நெறி இஸ்லாம் மட்டும்தான்.

اِنَّ الدِّيْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ 

நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; (அல்குர்ஆன் : 3:19)

2)மனிதர்களெல்லாம் இஸ்லாத்தை மட்டும் தான் ஏற்க வேண்டுமென்ற எந்த நிர்பந்தமும் இல்லை.

لَاۤ اِكْرَاهَ فِى الدِّيْنِ‌ۙ  

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; (அல்குர்ஆன் : 2:256)

Uniform civil code.

உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடாக திகழக்கூடிய இந்தியாவை தற்பொழுது ஆளும் ஒன்றிய அரசு "Uniform Civil Code" UCC என்கிற  பொது சிவில் சட்டத்தை வருகிற நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்குள்ளாக இந்திய சட்ட ஆணையத்தின் மூலம் பொதுமக்களிடமிருந்தும்,பதிவு செய்யப்பட்ட மத அமைப்புகளிடமிருந்தும் கருத்து கேட்டு , வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள்ளாக இதனை அமுல் படுத்தி,தனக்கு சாதகமாக்கிக் கொள்ள துரித கதியில் இக்கருத்துகேட்பு நடத்தப்படுகிறது.

பொது சிவில் சட்டம், சிறுபான்மையினராக வாழும் இஸ்லாமியர்,கிருஸ்துவர் ஆகியோர்களுக்கு மட்டும் எதிரான சட்டமல்ல மாறாக இந்தியாவில் வாழும் பல்வேறு மொழிபேசுவோர்,பல்வேறு இனத்தவர்,பிற்படுத்தப்பட்டோர் என அனைவருக்கும் எதிரான சட்டம் என்று சட்ட வல்லுனர்களும், நடுநிலையாளர்களும் எச்சரிக்கின்றனர்.

பொது சிவில் சட்டம்"Uniform Civil Code" UCC என்றால் என்ன?

இந்திய அரசியலமைப்பு சாசன சட்டம் இரண்டு வகைப்படும்.

1)Criminal law குற்றவியல் சட்டம். (எ.க)கொலை,கொள்ளை,திருட்டு இவற்றுக்கான தண்டனை சட்டம்

2)civil law உரிமை சம்பந்தமான சட்டம்.

(எ.க)வியாபாரம்,கடன், வாடகை இவற்றின் லாப நஷ்டத்தில் அரசாங்கம் தலையிட முடியாது.

Criminal law குற்றவியல் சட்டம்.civil law உரிமை சம்பந்தமான சட்டம்.இந்த இரண்டு சட்டங்களுக்கும் வித்தியாசம் உண்டு

Criminal law குற்றவியல் சட்டத்தை பொறுத்தவரை பாதிக்கப்பட்டவர் புகார் கொடுத்தாலும்,கொடுக்க விட்டாலும் அரசாங்கம் அதில் தலையிடும்.

civil law உரிமை சம்பந்தமான சட்டத்தை பொறுத்தவரை பாதிக்கப்பட்டவன் வழக்கு தொடுக்காத வரை அரசாங்கம் தலையிட முடியாது.வழக்குத் தொடுத்தால் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

இந்த இரண்டு சட்டங்களும் இந்திய அரசியலமைப்பு சாசன சட்டத்தில் உள்ளது.

இந்த இரண்டு சட்டங்களில் civil law உரிமை சம்பந்தமான சட்டத்தில் மட்டும் மதங்களைப் பொறுத்து சலுகைகள் வழங்கப்படுகிறது(சில சட்டங்களில் மட்டும்.எல்லா சட்டங்களிலும் அல்ல)

அவரவர் பின்பற்றும் மதத்தின் அடிப்படையில் அரசாங்கத்தால் சில சட்டங்களில் தனி உரிமை,தனி சலுகை வழங்கப்படுகிறது.

அதன்படி இஸ்லாமியர்களுக்கு ஐந்து சட்டங்களில்  (civil law)தனி உரிமை,சலுகை உள்ளது.

1)திருமணம் :யாரை திருமணம் செய்வது,எந்த முறையில் திருமணம் செய்வது என்ற உரிமை.

2)திருமணம் முறிவு,தலாக் உரிமை

3)குலா என்கிற மனைவி பிரிவை வேண்டும் உரிமை

4)வாரிசு உரிமை,சொத்துரிமை

5)வக்ஃப் உரிமை,வக்ஃப் சொத்தை பயன்படுத்தும் உரிமை 

இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள்,ஏதோ இந்தியாவிலேயே இஸ்லாமியர்களுக்கு மாத்திரமே தனிச்சட்டம் இருப்பது போல காட்டி இஸ்லாமியர்களின் மீது வெறுப்பை தூண்டி விட பார்க்கின்றனர்.

civil law தனிச்சட்டம் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல,பெரும்பான்மை இந்துக்களுக்கும் தனிச்சட்டம்,தனி சலுகைகள் உண்டு.

இந்துக்களுக்குள்ள தனிச்சட்டம்.

1)கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தால் வருமான வரி விளக்கு உண்டு(இந்த சலுகை சிறுபான்மை இஸ்லாமியர்,கிறிஸ்தவர் இவர்களுக்கு கிடையாது)

2)வளர்ப்பு பிள்ளையை, சொந்தப் பிள்ளையாக ஆக்கிக் கொள்ளலாம் சொத்தில் அவர்களுக்கு பங்கு உண்டு.

3)நிர்வாணமாக காட்சி தருதல்;இந்து ஜைன மதத்தில் மத உரிமைகளில் சாமியார்களுக்கு நிர்வாணமாக இருக்க சலுகை உள்ளது.

சீக்கியர்களுக்கும் civil law சிவிலில் தனி உரிமைகள் உண்டு.

1)குறுவாள் வைத்துக் கொள்ளும் உரிமை(பயங்கர ஆயுதம் வைத்துக்கொள்வது சட்டப்படி குற்றம் ஆனால் சீக்கியர்கள்  குறுவாள் வைத்துக்கொள்ள தனி உரிமை உள்ளது)

2)தாடி வைத்துக் கொள்வது (இந்திய ராணுவத்தில் முதல் நிபந்தனை தாடியை மழித்து Clean Shave இருக்க வேண்டும் ஆனால் சீக்கியர்களுக்கு அதில் விதிவிலக்கு உள்ளது)

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல இந்துக்கள், ஜைனர்கள்,சீக்கியர்கள்,கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் civil law சிவிலில் தனிச்சட்டம் தனி உரிமை  வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்று பொது சிவில் சட்டத்தைப் பற்றி பேசுவோர் இஸ்லாமியர்களுக்கு மட்டும் தனி சிறப்பு சட்டம் உள்ளது என்ற தோற்றத்தை கொண்டுவர பார்க்கிறார்கள்.

முஸ்லிம்களுக்கு எல்லா விஷயங்களிலும், சட்டம் தனி சலுகைகளை காட்டுவதாக பொதுமக்களிடம் ஒரு சித்தரிப்பை காட்டுகிறார்கள். உண்மை அதுவல்ல என்பதை நம்மை சுற்றிலும் வாழும் பொதுமக்களிடம் புரிய வைக்க வேண்டும்.

திருமண முறை, சொத்துப் பங்கீடு, வழிபாடு, வக்பு சொத்துக்கள் என இந்த நான்கில் மட்டுமே இந்த சலுகைகள்  முஸ்லிம்களுக்கு தரப்பட்டுள்ளது.மற்ற அனைத்திற்கும் எல்லோருக்குமான பொது சட்டமே முஸ்லிம்களுக்கும் பொருந்துகிறது.

ஒரு கொலை குற்றத்துக்கு அனைவருக்கும் ஒரே விதமான வழக்கு தான் பதிவு செய்யப்படுகிறது. ஒரே வகையான தண்டனைத்தான் தரப்படுகிறது.

போக்குவரத்து விதிகளை மீறினால் அன்பழகனுக்கும், ஹஸனுக்கும், ஆண்டணிக்கும் ஒரே தண்டனைதான் விதிக்கப்படுகிறது.இந்த உண்மைகளை பொது மக்களுக்கு விளக்க வேண்டும்.

சிறுபான்மையினருக்கு என்று சில மதம் சார்ந்த விஷயங்களில் தனி சட்டங்கள்  பல நாடுகளில் உள்ளது.பாகிஸ்தானிலும் பங்ளாதேஷிலும் இந்துக்களுக்கும், கிருத்தவர்களுக்கும் இப்படி உள்ளது.நேபாளத்தில் முஸ்லிம்களுக்கும், கிரித்தவர்களுக்கும் உள்ளது.

பெளத்த நாடுகளான மியான்மார் மற்றும் இலங்கையிலும் பிற சிறுபான்மை மதத்தினருக்கு தனி சட்டங்கள் உள்ளது.இந்த உண்மைகளை மக்களுக்கு விளக்க வேண்டும்.

நமது நாட்டில் வட நாட்டு இந்துக்களுக்கும், தென்னாட்டு  இந்துக்களுக்கும் திருமண முறைகளில் மாறுபாடு உண்டு.வட கிழக்கில் வாழும் கிருத்தவர்களுக்கும், கோவாவில் வாழும் கிருத்தவர்களுக்கும் திருமண முறைகளில் மாறுபாடுகள் உள்ளது.சீக்கிய சமூகத்திலும் இப்படி மாறுபாடுகள் உண்டு.

இப்படியுள்ள முரண்பாடுகளை- சமூக கொள்கைகளை ஒரே சட்டத்தின்படி மாற்ற நினைப்பது தவறானது மட்டுமல்ல; சாத்தியமற்றதும் ஆகும்.

CRIMINAL LAW  பொதுவாக உள்ளதா?

ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் Criminal law குற்றவியல் சட்டம் இதில் இந்தியாவில் வாழும் எந்த மதத்தவருக்கும் சலுகை கிடையாது இந்தியா முழுக்க ஒரே சட்டம் தான் ஆனால் இந்த சட்டமே ஒரே முறையில் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா?என்றால் இல்லை என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம்.

இந்த Criminal law குற்றவியல் சட்டத்திலே பல்வேறு மாறுபாடுகள்,திருத்தங்கள் செய்யப்படுகின்றன.இதுவரை பொதுவான ஒரே நிலைக்கு வர முடியவில்லை.

(எ.க)1)விபச்சாரத் தொழில்-விபச்சார விடுதி வைப்பது தமிழ்நாட்டில் தடுக்கப்பட்ட குற்ற செயல்.

ஆனால் மும்பையில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் விபச்சாரத் தொழில்-விபச்சார விடுதி குற்ற செயல் அல்ல

2)மதுபானம் குடிப்பது -மதுக்கடை நடத்துவது-விற்பனை செய்வது-சாலையில் குடித்து திரிவது சில மாநிலங்களில் குற்றம் அல்ல ஆனால் வேறு சில மாநிலங்களில் குற்றகுமாகும்.

3)ஒரு பெண் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஆடுவது பொது இடங்களில் தடை ஆனால் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பெண்கள் நிர்வாணமாக நடனம் ஆடலாம் தடையில்லை 

4)சில மாநிலங்களில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவோர் ஹெல்மெட் அணிவது கட்டாயம்.கார் ஓட்டும்போது சீட் பெல்ட் போடுவது கட்டாயம்.தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் குற்ற நடவடிக்கை அவர் மீது பாயும்.

இதுப்போன்ற பல உதாரணங்களை கூறலாம்.

இப்படி Criminal law குற்றவியல் சட்டத்திலேயே ஒரு பொது நிலைக்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டுவர முடியாத போது,"பொது சிவில் சட்டம்" பற்றி பேசுவது தேர்தலுக்கு தேர்தல் பேசும் வேடிக்கையான செய்தியாக தான் பார்க்க தோன்றுகிறது.

விட்டுக் கொடுக்க முடியாதா?

இஸ்லாமிய சமூகம் கொஞ்சம் விட்டுக் கொடுத்து இந்த ஐந்து விஷயங்களில் தேசிய நீரோட்டத்தில் கலந்தால் என்ன?ஒரே நாடு ஒரே தேசம் அதுபோல் ஒரே சட்டம் என்ற ஒற்றுமைக்கு வரலாமே?ஏன் இந்திய முஸ்லிம்கள் ஒரு பாரபட்சமான நிலையை கையாள வேண்டும் என்ற ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது.

நாம் கேட்பது என்னவென்றால் திருமணம்,தலாக்,குலா, வாரிசுரிமை,வக்ஃப் இந்த ஐந்து சட்டங்களும் இஸ்லாமியர்கள் தங்களுக்கு மத்தியில் செய்து கொள்ளும் விஷயங்களாகும் இதனால் நாட்டிற்கும்,நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும்,பிற சமூகத்திற்கும் என்ன பாதிப்பு ஏற்பட்டு விடப்போகிறது? 

இன்னும் சொல்லப்போனால் அவரவரின் மத நெறிப்படி வாழ்வது இந்திய ஜனநாயகம் அனைவருக்கும் வழங்கி உள்ள தார்மீக உரிமையாகும்.

இது இன்று,நேற்று அல்ல இந்தியாவில் கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களுக்கு மேலாக நடைமுறையில் உள்ள ஒன்றாகும்.

இந்தியாவில் 800 வருடங்கள் ஆட்சி செய்த இஸ்லாமிய முகலாய மன்னர்கள்,இங்குள்ள இந்துக்களுக்கு அவர்களின் மதம் முறைப்படி வாழ முழு சுதந்திரம் அளித்தார்கள்.

முகலாயர்களுக்கு பிறகு கிறிஸ்துவ ஆங்கிலேயே 200 வருட அவர்களின் ஆட்சியில் இந்துக்கள்,முஸ்லிம்கள் அவரவரின் மத முறைப்படி வாழ தனி சிவில் சட்ட உரிமை வழங்கினார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் வந்த ஆட்சியாளர்கள் தனி சிவில் சட்டம் இருக்க எந்தத் தடையும் போடவில்லை.ஆனால் இப்போதுள்ள ஒன்றிய அரசு பொது சிவில் சட்டத்தை புகுத்த நினைப்பது,நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலே அன்றி வேறில்லை.

இது ஒருமைப்பாட்டை வேரோடு அறுக்கும் செயல் என்று சகோதர சமயத்தவர்களே பேசுகிறார்கள் என்பது நாளேடுகளிலும்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் காண முடிகிறது.

அரசியல் சாசன சட்டம் 44.

அவர்களின் இன்னொரு வாதம்;இந்திய அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டதை தானே கொண்டுவர முயற்சிக்கின்றோம்?  (அரசியல் சாசனத்தில் சட்டத்தின் 44வது பிரிவில் பொது சிவில் சட்டம் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது)

பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக இவர்கள் சொல்வது இது நமது அரசியல் சட்டத்தின் 44 வது பிரிவில் உள்ளது என்பதுதான்.

இதற்கான பதில்;

இந்திய அரசியல் சாசனத்தில் ஐந்து தலைப்புகள் உள்ளது.

1)இந்தியாவின் எல்லைகள்

2)குடியுரிமை

3)பொதுவானவை

4)கொள்கை விளக்கம்

5)அடிப்படை கடமைகள்

இதில் நான்காவது தலைப்பாக உள்ள "கொள்கை விளக்கம்" என்பது அரசாங்கங்களுக்கு ஆலோசனைகளாக வழங்கப்பட்ட விஷயமாகும்.கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்ட விஷயம் அல்ல.அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டது;

ஒன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாவிட்டால் அதில் நீதிமன்றம் தலையிட்டு நடைமுறைப்படுத்த முடியும்.ஆனால் இந்த நான்காவது தலைப்பில் நீதிமன்றம் தலையிட்டு நடைமுறைப்படுத்த முடியாது.

இந்தியா ஒரு மிகப் பெரிய நாடு. சரியாகச் சொல்வதானால் மதம், மொழி, இனம் எனப் பலதிறப்பட்ட மக்கள் சமூகங்கள் வாழும்ஒரு துணைக் கண்டம் இது. இதற்குள் எல்லாவற்றிலும் கருத்தொற்றுமை சாத்தியம் இல்லை என்பதாலதான் நமது அரசியல் சட்டம் ‘அடிப்படை உரிமைகள்’ எனவும், ‘வழிகாட்டு நெறிமுறைகள்’ எனவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சில நாடுகளில்தான் இந்த ஏற்பாடு. வழிகாட்டு நெறிமுறைகளாகச் சொல்லப்பட்டவை காலப்போக்கில் அரசியல் சட்ட அடிப்படைகள் ஆக்கப்பட வேண்டும் என்பது பொருள்.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் பொது தனிநபர் சட்டம் மட்டுமின்றி வேறு பலவும் உள்ளன, அடித்தள மக்களுக்கு சட்ட மற்றும் நாடாளுமன்றங்களில்  வழங்கப்பட்டுள்ள இட ஒதுகீட்டை முடிவுக்குக் கொண்டுவருதல் (334ம் பிரிவு), ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியை ஆட்சி மொழி ஆக்குதல் (343) என்பதெல்லாமும் வழிகாட்டு நெறிமுறைகள்தான். இதை எல்லாம் இன்று நடைமுறையில் சாத்தியமும் இல்லை, நியாயமும் இல்லை.

இரண்டாவது பதில்;

அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்ட எத்தனையோ விஷயங்கள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது.

கொள்கை விளக்கத்தில் 25 ஆவது பிரிவு;அவரவர் விருப்பப்படி மதத்தை பின்பற்றலாம்,அவரவர் மதப் பிரசங்கம் செய்யலாம்.

இது முழுமையாக நடைமுறையில் உள்ளதா?

45 வது பிரிவு:இந்திய அரசியல் சாசனம் துவங்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்குள்ளாக அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும்? கட்டாய கல்வி இலவச கல்வி அவசியம்.

60 வருடங்கள் கடந்தும் எத்தனையோ கிராமங்களில் அடிப்படை கல்வி கூட இல்லாமல் 30 வயதை தாண்டியவர்கள் இருக்கிறார்கள்.ஒன்றிய அரசும் இதற்கான எந்த முயற்சியையும் முழுமையாக மேற்கொள்ளவில்லை.

47வது பிரிவு;மது-போதை-நச்சுத்தன்மை உள்ள பொருட்களை இந்தியாவில் முழுமையாக தடை செய்ய வேண்டும்.

48வது பிரிவு;முழுமையான மதுவிலக்கு.மது,போதைப் பொருள்கள்,நச்சுத்தன்மை உள்ள குளிர்பானங்கள்,நச்சுத்தன்மையுள்ள உரங்கள் தடை செய்யப்பட வேண்டும்.

ஆனால் பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது.அதில் நீதிமன்றம் தலையிட்டு மதுவிலக்கை ரத்து செய்கிறது.

இப்படி நகைமுரணான எத்தனையோ விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

பொது சிவில் சட்டம் என்கிற பெயரில் இவர்கள் சொல்ல வருவது எல்லா மதத்தினருக்குமான ‘பொது தனிநபர் சட்டம்’ என்பதுதான்.

இன்னும் சரியாகக் கவனித்தால் இவர்கள் சொல்ல வருவது  ‘பொது தனிநபர் சட்டம்’ கூட அல்ல. இந்துத் தனிநபர் சட்டத்தைப் பிற மதங்களின் மீது திணிப்பதுதான். அதன் மூலம் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் தனித்துவங்களையும் அடையாளங்களையும் அழிப்பதுதான் இவர்களின் நோக்கம்.. சிறுபான்மையினர் இன்று கலவரப் பட்டிருப்பதன் பின்னணியும் இதுதான்.

பொது சிவில் சட்டம்: மத அமைப்புகள், பொது மக்களிடம் கருத்துக் கேட்கும் 22-வது சட்ட ஆணையம்.

நாடு முழுமைக்கும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது தொடர்பாக பொதுமக்கள், மத அமைப்புகள் தம் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று 22வது சட்ட ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களின் போது பாஜக தேர்தல் அறிக்கைகளில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கம், அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவது மற்றும் பொது சிவில் சட்டம் ஆகியவை இடம்பெற்றன. இவற்றில் பொது சிவில் சட்டம் மட்டுமே தற்போது பாக்கி உள்ளது. இதையும் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பு அமல்படுத்த அல்லது அதற்கான முயற்சிகளில் மத்தியில் உள்ள பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக கருத்துகளைத் தெரிவிக்க விரும்புபவர்கள் சட்ட ஆணையத்துக்கு அதன் உறுப்பினர் செயலரின் மின்னஞ்சல் முகவரிக்கு தனிப்பட்ட முறையிலோ அல்லது சட்ட ஆணைய இணையதளத்தில் அதற்கென கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிலோ தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, 30 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை membersecretary--lci@gov.in என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21வது சட்ட ஆணையம் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், நாட்டில் பொது சிவில் சட்டம் அவசியம் இல்லை. தற்போதைய சூழலில் அது விரும்பத்தக்கதும் அல்ல என்று தெரிவித்தது.

185 பக்கங்கள் கொண்ட அந்த ஆலோசனை அறிக்கையில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் நாட்டில் நிலவும் பன்முகத்தன்மைக்கு மதச்சார்பின்மை முரண்பட முடியாது. நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மை என்பதை பொது சிவில் சட்டம் மூலம் சமரசம் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் அது தேசத்தின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஆகிவிடும் என்று தெரிவித்திருந்தது.

நன்றி;இந்து தமிழ் திசை நாளிதழ் 15/06/2023

ஜம்இய்யத் உலமா இ ஹிந்த்.

நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக சட்ட ஆணையம் மீண்டும் கருத்து கேட்பு நடவடிக்கையை தொடங்கி உள்ளது. இந்நிலையில் ஜம்இய்யத் உலமா இ ஹிந்த் இஸ்லாமிய அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘‘பொது சிவில் சட்டம் கொண்டு வருவது, அரசியலமைப்பு சட்டத்தின் 25 மற்றும் 26வது பிரிவுகளில் இந்திய குடிமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மத சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு முற்றிலும் எதிரானது. இந்தியாவின் அரசியலமைப்பு மதசார்பற்ற அரசியலமைப்பாகும். ஒவ்வொரு குடிமகனுக்கும் முழு மத சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நபரும் அவருக்கு விருப்பமான மதத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்திய அரசுக்கு அதிகாரப்பூர்வ மதம் என்பது கிடையாது. அனைத்து குடிமக்களுக்கும் முழுமையான சுதந்திரத்தை அது வழங்குகிறது. பொது சிவில் சட்டம் அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இதனை இஸ்லாமியர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் இது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது” என குறிப்பிட்டுள்ளது.

நம் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை.

ஏன் பொது சிவில் சட்டம்"Uniform Civil Code தேவையில்லை என்பதற்கு கூறிவுள்ள முக்கிய காரணங்களில் சில...

1.) பிரிவு 25 மத நடைமுறைச் சுதந்திரத்திற்கான உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கிறது, எனவே தனிப்பட்ட சட்டங்களைப் பயிற்சி செய்வதில் அரசால் கூட தலையிட முடியாது.

2.) UCC நமது அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானது.

3.) இந்திய சட்ட அமைப்பு பன்மைத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் UCC பயன்பாடு அதன் முழுமையான அழிவை விளைவிக்கும்.

4.) இந்தியாவின் நாடாளுமன்ற முறையே வேற்றுமையில் ஒற்றுமை என்ற மாதிரியில் உள்ளது. எனவே, UCC இணையாக இருக்க முடியாது.

5.) UCC மீதான தனிநபர் சட்டங்களின் அரசியலமைப்புச் செல்லுபடியை இந்திய உச்ச நீதிமன்றம் மீண்டும் மீண்டும் உறுதி செய்துள்ளது.

உரிமைகள் பறிக்கப்படும் சமுதாயம்.

நாடு சுதந்திரம் பெற்றது முதல், படிப்படியாக முஸ்லிம்கள் எல்லா வகையிலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். கல்வி, வேலை வாய்ப்பு, அரசுப் பதவிகள் ஆகிய அனைத்துத் துறைகளிலும் அவர்கள் முற்றாக ஒதுக்கப்பட்டு விட்டனர். கலவரங்களால் அவர்களின் உயிர், உடைமைகள், கற்பு ஆகிய அனைத்தும் பறிக்கப்படுகின்றன. ஆள்வோரின் துணையுடன் இந்து வெறி சக்திகளால் பள்ளிவாசல் இடிக்கப்பட்டது. ஆட்சியாளர்களே ஒரு பள்ளியைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். தடா எனும் பெயரில் ஐம்பதாயிரம் முஸ்லிம்கள் இன்னும் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். சட்டப்படி அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் யாவும் பறிக்கப்பட்டு, அனைத்துச் சலுகைகளும் மறுக்கப்பட்டுள்ளனர். பருந்தின் வாயில் சிக்கிய கோழிக்குஞ்சு போன்ற நிலையில் நொந்து போயிருக்கின்றது முஸ்லிம் சமுதாயம்! எத்தனை உரிமைகள் மறுக்கப்பட்டாலும் முஸ்லிம்களாக வாழும் உரிமையாவது இங்கு இருக்கின்றது என்பது மட்டும் தான் அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்!

மொகலாய ஆட்சியில் சிவில் சட்டம்.

மொகலாய மன்னர்கள் இந்த நாட்டை ஆண்ட போது இந்துக்கள் தமது மதத்தின் அடிப்படையில் சிவில் சட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் நாடு சிதறிப் போகவில்லை. ஆயிரம் நாடுகளாக இருந்த பகுதிகள் ஒரு நாடாகத் தான் மாறின. இது தான் உண்மை.

வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆண்ட போதும் முஸ்லிம்களும், இந்துக்களும் தத்தம் மதத்தின்படி சில சிவில் சட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் நாடு சிதறவில்லை. இத்தகைய அணுகுமுறையினால் தான் பரந்த இந்தியாவே உருவானது. மொகலாயர்களும், வெள்ளையர்களும் மதச் சுதந்திரத்தில் தலையிட்டிருந்தால் இன்றைய இந்தியாவை நாம் பார்க்க முடியாது. இதையும் அறிவுஜீவிகள் உணர வேண்டும்.

 புத்த மதத்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள தாய்லாந்து நாட்டில் முஸ்லிம் தனியார் சட்டம் உள்ளது. புத்த மத நாடு என்று பிரகடனம் செய்து கொண்ட இலங்கையிலும் கூட முஸ்லிம் தனியார் சட்டம் அமலில் உள்ளது. கிரீஸ், எத்தியோப்பியா, உகாண்டா ஆகிய நாடுகளிலும் முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் இத்தகைய சட்டங்கள் உள்ளன. இதன் காரணமாக இந்த நாடுகள் சிதறிப் போகவில்லை.

அறிவுஜீவிகளுக்கு இந்த உண்மை நன்றாகத் தெரிந்திருந்தும் இஸ்லாத்தின் மேல் அவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பொது சிவில் சட்டம் எனக் கூப்பாடு போடுகின்றனர்.

உள் நோக்கம் கொண்ட தீர்ப்புகள்.

இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்கிறார். பிறகு மற்றொரு திருமணம் செய்வதற்காக முஸ்லிமாக மாறி, திருமணமும் செய்து கொள்கிறார். முதல் மனைவி இதை எதிர்த்துத் தாக்கல் செய்த வழக்கில், “முஸ்லிம் தனியார் சட்டத்தை அந்தக் கணவர் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்’ என்று முடிவு செய்து அவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. நீதிமன்றம் அத்துடன் நிறுத்திக் கொண்டால் நாம் விமர்சிக்கப் போவதில்லை. ஆனால் இவ்வழக்கில் வாதியாகவோ, பிரதிவாதியாகவோ இல்லாத மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அன்று ஓர் உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

“அனைத்து மதத்தவர்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் ஒன்றை ஒரு வருடத்துக்குள் மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்” என்பதே அந்த உத்தரவு. இதைத் தான் நாம் விமர்சிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சீரான உரிமையியல் சட்டத்தை இந்தியா முழுவதிலும் அமல் செய்யப்படுவதற்கான முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும்” என்று அரசியல் சாசனத்தின் 44வது பிரிவு கூறுவது தான் இந்தத் தீர்ப்புக்கு அடிப்படடை.

நீதிபதிகளின் நோக்கத்தைச் சந்தேகப்படுவதா? அரசியல் சாசனம் பற்றிய சரியான விளக்கம் அவர்களுக்கு இல்லை என்பதா? என்ற ஐயத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.

இஸ்லாத்தில் தீண்டாமை இல்லை என்பதற்காக ஒரு தாழ்த்தப்பட்ட இந்து, முஸ்லிமாக மாறினால், அது பற்றிய வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தால், “இனி மேல் இஸ்லாத்திலும் தீண்டாமையைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று தீர்ப்பு வழங்குவது எவ்வளவு கேலிக்குரியதோ அந்த அளவு கேலிக்குரியதாகவே நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அமைந்துள்ளது.

அரசியல் சாசனத்தில் 44வது பிரிவு இவ்வாறு கூறுவது உண்மை தான். ஆனால் இது எந்தத் தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ளது? அந்தத் தலைப்பின் நிலை என்ன? என்பதையெல்லாம் நீதிமன்றம் கண்டு கொள்ளவில்லை.

பொது சிவில் சட்டத்தின் அபாயம்.

பொது சிவில் சட்டம் என்பது இந்திய மக்களின் ஒட்டு மொத்த உணர்வுகளுக்கும் சமாதி கட்டி விட்டு அந்த சமாதியின் மேல் எழுப்பப் பட முடியுமே தவிர மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஒரு போதும் உருவாக்கப்பட முடியாது.

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் மாட்டுக்கறி சாப்பிடுகிற போது மாட்டுக்கறிக்கு தடை விதிப்பது போன்ற சட்டங்கள் அடுத்த வீட்டுக்காரரை நமக்கு எதிராகத் தூண்டுமே தவிர இணக்கமாக வாழ்வதற்குரிய வழி அதுவாக இருக்க முடியாது. 

இந்திய அரசியல் சாசணத்தின் வழி காட்டு நெறிகள் முதலில் நாடு முழுக்க  மதுவிலக்கை அமுல் படுத்தக் கூறுகிறது. அனைத்து சாராரும், அனைத்து மதத்தவரும் எதிர்க்கக்கூடிய, சமூக நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் அழித்தொழிக்க விரும்பும் ஒரு விஷயத்தை முதலில் கையில் எடுப்பதை விட்டு விட்டு மக்களின் அடிப்படை உரிமையை பறிக்கிற ஒன்றை தேச நலனாக காட்டுவது சந்தர்ப்பவாத அரசியலின் சதிப் புத்தியாகும் இதில் நீதி மன்றங்களும் சிக்கிக் கொண்டு விட்டன என்பது தான் க்ருட் தேசத்திற்கு நேர்ந்த பெருங்கவலையாகும்.

உண்மையில்  சிவில் சட்டம் என்பதற்கான சாத்தியங்கள் அறவே கிடையாது என்பதை முஸ்லிம் தலைவர்கள் 30 வருடங்களுக்கு முன்னரே தெளிவு படுத்தி விட்டனர்.

அல்லாஹு தஆலா நம் சமுதாய மக்களுக்கு  தன் முழு பாதுகாப்பையும் வழங்கியருள்வானாக! ஆமின்...


வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.


Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...