ஹிஜ்ரத் ஒர் பார்வை.(ஹிஜ்ரி 1445)
وَمَنْ يُهَاجِرْ فِي سَبِيلِ اللَّهِ يَجِدْ فِي الْأَرْضِ مُرَاغَمًا كَثِيرًا وَسَعَةً ۚ وَمَنْ يَخْرُجْ مِنْ بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ وَرَسُولِهِ ثُمَّ يُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ أَجْرُهُ عَلَى اللَّهِ ۗ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا
இன்னும், தம் வீட்டைவிட்டு வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதர் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டு விடுமானால் அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது - மேலும் அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், பேரன்பு மிக்கோனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன் 4/100)
ஹிஜ்ரத் என்றால் என்ன?
அரபி இலக்கணத்தில் ஹிஜ்ரத் என்றால் ஏதாவது ஒரு விஷயத்தை வெறுத்து விட்டு விடுவதாகும். ஆனால் ஷரீஅத்தில் தாருல் குஃப்ர் எனும் இஸ்லாமிய நெறிக்கு மாற்றமாக நடக்கும் ஊரை விட்டு இஸ்லாமிய நாட்டிற்கு புலம்பெயர்ந்து செல்வதற்கு சொல்லப்படும். ( ரூஹுல் மஆனி)
அல்லாமா முல்லா அலி காரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு மனிதர் தீனை பாதுகாப்பதற்காக ஒரு ஊரை விட்டு இன்னொரு ஊருக்கு இடம் பெயர்வதற்கும் ஹிஜ்ரத் என்று சொல்லலாம். (நூல் மிர்காத் 39/1)
மேலும் ஒருவர் முஸ்லிம் என்ற அடிப்படையில் இறை மறுப்பாளர்களால் அவர் வாழ்ந்த ஊரை விட்டும் நிர்பந்தமாக வெளியேற்றப்பட்டாலும் அதற்கும் ஹிஜ்ரத் என்று சொல்லப்படும். இதை அல்லாஹ் சூரா ஹஷ்ரில் குறிப்பிட்டு காட்டுகிறான்.
لِلْفُقَرَاءِ الْمُهَاجِرِينَ الَّذِينَ أُخْرِجُوا مِنْ دِيَارِهِمْ وَأَمْوَالِهِمْ يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا وَيَنْصُرُونَ اللَّهَ وَرَسُولَهُ ۚ أُولَٰئِكَ هُمُ الصَّادِقُونَ
எவர்கள் தம் வீடுகளையும், தம் சொத்துகளையும் விட்டு, அல்லாஹ்வின் அருளையும், அவன் திருப் பொருத்தத்தையும் தேடியவர்களாக வெளியேற்றப்பட்டனரோ அந்த ஏழை முஹாஜிர்களுக்கும் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் அப்பொருளில் பங்குண்டு); அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் தாம் உண்மையாளர்கள்.(அல்குர்ஆன் 59/8)
இதனடிப்படையில் ஒருவர் வியாபாரத்திற்காக அல்லது திருமணம் முடிப்பதற்காக அல்லது வேறு உலக நோக்கத்திற்காக ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டில் குடியேறினால் அது ஹிஜ்ரத்தாகாது..
ஹிஜ்ரத் பற்றி நபி (ஸல்) அவர்கள்.
المهاجر من هجر ما نهى الله عنه ورسوله (بخاري،مسلم)
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் : யார் அல்லாஹ்வும் அவனது தூதராகிய ரசூல் (ஸல்) அவர்களும் தடுத்ததை விட்டு விடுகிறாரோ அவர் தான் முஹாஜிர் என கூறியுள்ளார்கள். (நூல் (முஸ்லிம், புகாரி)
இதனடிப்படையில் ஒருவர் தான் வாழ்ந்த ஊரை விட்டு புலம்பெயர்வது மட்டும் ஹிஜ்ரத் அல்ல. மாறாக அல்லாஹ்வும், ரசூலும் எதை தடுத்துள்ளார்களோ அதை விட்டு விலகுவது தான் உண்மையான ஹிஜ்ரத் ஆகும்.
ஹிஜ்ரத்தின் சிறப்புக்கள்.
குர்ஆனில் எப்படி பல இடங்களில் ஜிஹாத் பற்றி பேசப்படுகிறதோ, அதேப் போன்று பல இடங்களில் ஹிஜ்ரத் பற்றியும், அதன் சிறப்புகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது.
1) إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ أُولَٰئِكَ يَرْجُونَ رَحْمَتَ اللَّهِ ۚ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
நம்பிக்கை கொண்டோரும், (காஃபிர்களின் கொடுமைகளால் நாட்டை விட்டு) துறந்தவர்களும், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தோரும் அல்லாஹ்வின் (கருணையை) - ரஹ்மத்தை - நிச்சயமாக எதிர்பார்க்கிறார்கள்;. மேலும், அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், பேரன்புடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 2- 218)
2)الَّذِينَ آمَنُوا وَهَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ أَعْظَمُ دَرَجَةً عِنْدَ اللَّهِ ۚ وَأُولَٰئِكَ هُمُ الْفَائِزُونَ
எவர்கள் ஈமான் கொண்டு, தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள் மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் 9/20)
3)وَمَنْ يُهَاجِرْ فِي سَبِيلِ اللَّهِ يَجِدْ فِي الْأَرْضِ مُرَاغَمًا كَثِيرًا وَسَعَةً ۚ وَمَنْ يَخْرُجْ مِنْ بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ وَرَسُولِهِ ثُمَّ يُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ أَجْرُهُ عَلَى اللَّهِ ۗ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا
இன்னும், தம் வீட்டைவிட்டு வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதர் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டு விடுமானால் அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது - மேலும் அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், பேரன்பு மிக்கோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4/100)
மேற்கூறிய வசனம் காலித் ப்னு ஹிஜாம் (ரலி) அவர்கள் பற்றி குறிப்பிடுகிறது. அவர்கள் மக்காவிலிருந்து ஹபஷா விற்கு ஹிஜ்ரத் செய்து சென்ற நேரத்திலே பாம்பு கடித்து இறந்து விட்டார்கள். அப்போது இந்த ஆயத் இறங்கியது.
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
الهجرة تهدم ما كان قبلها
ஹிஜ்ரத்திற்கு முன்பாக ஒரு மனிதன் செய்த அத்துனை பாவங்களையும் ஹிஜ்ரத் அழித்துவிடுகிறது.
ஹிஜ்ரத்தினால் ஏற்படும் பரக்கத்துகள்.
وَالَّذِينَ هَاجَرُوا فِي اللَّهِ مِنْ بَعْدِ مَا ظُلِمُوا لَنُبَوِّئَنَّهُمْ فِي الدُّنْيَا حَسَنَةً ۖ وَلَأَجْرُ الْآخِرَةِ أَكْبَرُ ۚ لَوْ كَانُوا يَعْلَمُونَ
கொடுமைப்படுத்தப்பட்ட பின்னர், எவர்கள் அல்லாஹ்வுக்காக நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்களோ, அவர்களுக்கு, நாம் நிச்சயமாக அழகான தங்குமிடத்தை இவ்வுலகத்தில் கொடுப்போம். இன்னும், அவர்கள் அறிந்து கொண்டார்களேயானால் மறுமையிலுள்ள (நற்) கூலி (இதைவிட) மிகவும் பெரிது. (அல்குர்ஆன் 16/41)
எந்த ஒரு மனிதர் ஹிஜ்ரத்தை மேற்கொள்கிறாரோ அல்லாஹ் அந்த மனிதரின் உலக காரியத்தையும் லேசாக்குகிறான்.உலகத்தில் முன்பை விட சிறந்த தங்குமிடத்தை தருகிறான். சிறந்த கண்ணியத்தையும், மரியாதையையும், மன நிம்மதியும் தருகிறான். மறுமையிலோ சொல்ல முடியாத அளவிற்கு அந்தஸ்துகளை உயர்த்துகிறான்..
இப்ராஹும் (அலை) அவர்கள் தன் சொந்த நாடான இராக்கை விட்டு சிரியாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள். அங்கே சிறந்த கண்ணியத்தை அல்லாஹ் கொடுத்தான்.மூஸா (அலை) அவர்கள் தானும் தன்னுடைய கூட்டத்தார்களாகிய பனீ இஸ்ரவேலர்களோடு சேர்ந்து தன் சொந்த நாடான மிஸ்ரை விட்டு சிரியாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு சிறந்த கண்ணியத்தை சிரியாவில் கொடுத்ததோடு, மீண்டும் மிஸ்ரையும் மீட்டி தந்தான்.
நமது நபி நாயகம் (ஸல்) அவர்கள் தன் தோழர்களாகிய வஹாபாக்களோடு அல்லாஹ்வின் உத்தரவின் பேரில் புனித மக்காவை விட்டு மதீனா ஹிஜ்ரத் செய்தார்கள்.
அல்லாஹ் மக்காவை விட மதீனாவில் சிறந்த கண்ணியத்தையும், நல்ல தங்குமிடத்தையும், எல்லாவிதமான வெற்றியையும் அள்ளித் தந்தான்.
மக்காவை விட மதீனாவில் சிறந்த வாழ்க்கையை ஸஹாபாக்கள் வாழ்ந்தார்கள். பிறகு மீண்டும் மக்காவை அல்லாஹ் வெற்றிக் கொள்ள செய்தான். இன்று வரை ஏன் கியாமத் வரை மக்கா, மதீனா புனித பூமியாக இருக்கும்.
சோதனைகள் வரும் ஆனால்....
ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு புலம்பெயர்ந்து செல்லும் போது பல்வேறு சோதனைகள் ஆரம்பத்தில் வரத்தான் செய்யும். இந்த சோதனைகளை முஹாஜிரீன்கள் முழுமையாக அனுபவித்தார்கள். ஏழ்மையிலும், வறுமையிலும் இருந்தார்கள். இதை ஸஹாபாக்கள் விரும்பி தேர்ந்தெடுத்தார்கள்.
ஆனால் காலம் செல்ல செல்ல அல்லாஹ் அவர்களுக்கு சிறந்த குடும்பத்தையும், பொருளாதாரத்தில் தன்னிறைவையும் தந்தான்.
ஹிஜ்ரத்தின் ஆரம்பத்தில் பல சிரமங்களை சகித்துக் கொண்ட ஸஹாபாக்கள், வசதி வாய்ப்புகள் வந்தபோது அள்ளிக் கொடுத்தார்கள் என வரலாறு சொல்கிறது.ஒரு போதும் அவர்கள் கஞ்சத்தனம் செய்யவில்லை.
இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக அபூபக்கர் (ரலி) அவர்கள் தன் வீட்டில் ஒரு பொருளும் மிச்சம் வைக்காமல் எடுத்து வந்து நபியிடம் கொடுத்தார்கள். உமர் (ரலி) அவர்களும் தன்னால் முடிந்ததை தந்தார்கள். பல ஸஹாபாக்களும் வாரி கொடுத்தார்கள்.
பெண்களில் ஜைனப் (ரலி) அவர்கள் தனக்கு எது கிடைத்தாலும் அதை அப்படியே ஏழைகளுக்கு பங்கிட்டு கொடுத்து விடுவார்கள். இதனாலே அவர்களை உம்முல் மஸாகீன் ( ஏழைகளின் தாய்) என்றே அழைப்பார்கள்.
இப்படி ஏழ்மையில் இருந்த ஸஹாபாக்களில் பல பேர் ஹிஜ்ரத் உடைய பரக்கத்தால் செல்வ சீமான்களாக மாறினார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஒரு தடவை ஒரு கூட்டத்திற்கு தலைவராக நியமிக்கப்பட்ட போது .. தன்னை தானே கேட்டுக் கொண்டார்கள். முன்பு நீ ஒரு கூட்டத்தில் அடிமையாக, கூலித் தொழிலாளியாக இருந்தாய். உணவு கிடைத்தால் போதும் என்று இருந்தாய். பயணக் கூட்டத்தாருக்கு சமைப்பதற்கு விறகு பொறுக்கி கொடுத்து வாழ்ந்தாய். ஆனால் இன்று நீ இஸ்லாம் என்ற பொக்கிஷம் கிடைத்ததால் உன்னை எல்லோரும் இமாம் என்றும் அமீருல் முஃமினீன் என்றும் அழைக்கிறார்கள். எவ்வளவு பெரிய பாக்கியத்தை பெற்றுள்ளாய் என தனக்கு தானே கேட்டுக் கொள்வார்களாம்.
அல்லாஹ்விற்காக ஹிஜ்ரத் பயணத்தை ஸஹாபாக்கள் மேற்கொண்டதால் பெரும் கண்ணியத்தையும், பொருளாதார தன்னிறைவையும் அல்லாஹ் கொடுத்தான்.
மாறாக உலகத்திற்காக பொருளாதாரத்திற்காக, ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்காக பயணம் செய்தால், அவர் முயற்சி செய்தது கிடைக்கும், ஆனால் அது ஹிஜ்ரத்தாகாது
முதல் ஹிஜ்ரத்
எதிரிகளின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்த போது தன் ஈமானையும் உயிரையும் பாதுகாப்பதற்காக
நபித்துவத்தின் ஐந்தாம் ஆண்டு உஸ்மான் ரலி இன்னும் அவருடைய துணைவியார் மற்றும் நபிகளாரின் புதல்வியுமான ருக்கையா ரலி உள்ளிட்ட 11ஆண்கள் 4 பெண்கள் முதல் கட்டமாக அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள். இரண்டாவது கட்டமாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலி. ஜாபர் இப்னு அபீதாலிப் ரலி. அபூமூஸா அல்அஷ்அரி ரலி ஆகியோர் உட்பட 83 ஆண்களும் 18 பெண்களும் அபிசீனியாவிற்கு புறப்பட்டார்கள்.
ஹிஜ்ரத்தின் தொடக்கம்.
அறியாமையும், இறைநிராகரிப்பும் சூழ்ந்த பாலைவனங்களுக்கு நடுவில் இஸ்லாம் தனக்கொரு தனி நாட்டை நிறுவுவதில் வெற்றி பெற்றது. இது இஸ்லாமிற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முஸ்லிம்களுக்கு அந்த நாட்டை நோக்கி ஹிஜ்ரா செய்ய அனுமதி அளித்தார்கள்.
‘ஹிஜ்ரா’ என்றால் தனது எல்லா உலக ஆதாயங்களையும் இழந்து சொந்த மண்ணில் உள்ள உடைமைகளை அப்படியே விட்டுவிட்டு தன்னையும் தனது மார்க்கத்தையும் காப்பாற்றிக் கொள்ள தனது சொந்த நாட்டை, சொந்த ஊரை துறந்து அந்நிய நாட்டுக்கு, அந்நிய ஊருக்கு செல்வதாகும். செல்லும் வழியில் அல்லது செல்வதற்கு முன் பல ஆபத்துகளை சந்திக்க வேண்டி வரும். உயிர் பறிபோகலாம் உடைமைகள் அபகரிக்கப்படலாம் செல்லுமிடத்தில் எத்தகைய எதிர்காலத்தை முன்னோக்க வேண்டியிருக்குமோ? அங்கு என்னென்ன கவலைகளும், துக்கங்களும், துயரங்களும் மறைந்திருக்கின்றனவோ? என்று எதுவும் அறியாத நிலையில் மேற்கொள்ளப்படும் பயணமே ஹிஜ்ராவாகும்.
இவை அனைத்தையும் தெரிந்துதான் முஸ்லிம்கள் ஹிஜ்ரா செய்யத் தொடங்கினர். முஸ்லிம்கள் ஹிஜ்ரா செய்து ஓரிடத்தில் ஒன்று கூடிவிட்டால் தங்களுக்கு ஆபத்துகள் ஏதும் ஏற்படலாம் என்று உணர்ந்திருந்த மக்கா முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) முஸ்லிம்களை ஹிஜ்ரா செய்யவிடாமல் தடுத்தனர். இதற்கு சில உதாரணங்களை இங்கு பார்ப்போம்:
1) ஹிஜ்ரா செய்த முதல் கூட்டத்தில் அபூஸலமாவும் ஒருவர். இவர் இரண்டாவது அகபாவிற்கு ஒரு வருடத்துக்கு முன் ஹிஜ்ரா செய்தார். அபூ ஸலமா (ரழி) தனது மனைவியுடனும் தனது சிறிய குழந்தையுடனும் ஹிஜ்ரா செய்ய நாடியபோது அவரது மனைவியின் உறவினர்கள் அபூஸலமாவை நோக்கி “நீ எங்களை புறக்கணித்து விட்டாய் நீ வேண்டுமானால் சென்றுவிடு எங்களுடைய பெண்ணை ஊர் ஊராக அழைத்துத் திரிய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று கூறி அவன் மனைவியையும் குழந்தையையும் அவரிடமிருந்து பிரித்து விட்டனர். இதைப் பார்த்த அபூஸலமாவின் குடும்பத்தினர் “நீங்கள் உங்களது பெண்ணை எங்கள் குடும்பத்தாரிடமிருந்து பிரித்து விட்டீர்கள். எனவே, எங்கள் மகனுக்குப் பிறந்த குழந்தையை நாங்கள் உங்கள் பெண்ணுடன் விடமாட்டோம்” என்று சண்டையிட்டு குழந்தையைப் பறித்துக் கொண்டனர். இதே நிலையில் அபூஸலமா மதீனாவை நோக்கிப் பயணமானார்.
தனது கணவனும் சென்றுவிட குழந்தையையும் பறிகொடுத்த உம்மு ஸலமாவின் உள்ளம் வேதனையால் வெந்தது. ஒவ்வொரு நாள் காலையிலும் ‘அப்தஹ்’ என்ற இடத்திற்கு வந்து மாலை வரை அழுதுகொண்டே இருப்பார். அழுதே ஒரு வருடத்தைக் கழித்துவிட்ட நிலையில் அவரது குடும்பத்தினரின் உள்ளத்தில் அவர் மீது இரக்கம் பிறந்தது. நீ உனது கணவனுடன் சென்று சேர்ந்து கொள் என்று அனுமதித்து, அவன் பிள்ளையையும் அபூ ஸலமாவின் குடும்பத்தாரிடமிருந்து வாங்கித் தந்தனர். ஏறக்குறைய 500 கி.மீ. தொலைவுள்ள மதீனாவை நோக்கி பயணமானார். உயர்ந்த மலைகள், அபாயம் நிறைந்த வழிகள், அல்லாஹ்வின் படைப்பினங்களில் யாரும் உடன் இல்லை. இந்நிலையில் பயணித்து ‘தன்யீம்’ வந்தடைந்த போது அவரை உஸ்மான் இப்னு தல்ஹா இப்னு அபூதல்ஹா சந்தித்தார். அவரது நிலைமை மீது இரக்கம் கொண்டு அவரை பாதுகாப்புடன் அழைத்து வந்து ‘குபா“வில் விட்டுவிட்டு “இதோ இந்த ஊரில்தான் உங்கள் கணவர் இருக்கிறார். அல்லாஹ் உங்களுக்கு அருள்வளம் (பரக்கத்) செய்வான்” என்று உம்முஸலமாவை வாழ்த்தி விட்டு அவர் மக்கா திரும்பினார். (இப்னு ஹிஷாம்)
தாருந் நத்வா குறைஷிகளின் ஆலோசனை மன்றம்.
நபித்தோழர்கள் தங்களது மனைவி, மக்களுடன் மக்காவை விட்டு வெளியேறி மதீனாவில் அவ்ஸ், கஸ்ரஜ்களுடன் குடியேறியதைப் பார்த்த இணைவைப்பவர்கள் மிகப்பெரிய சங்கடத்துக்கு ஆளானார்கள். இதற்கு முன்பில்லாத அளவுக்கு எந்நேரமும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். தங்களின் சிலை வழிபாட்டையும், அரசியல் அந்தஸ்தையும் முற்றிலும் அடியோடு தகர்த்தெறியக் கூடிய பேராபத்து ஒன்று வரப்போவதை உணர்ந்தனர்.
நபி (ஸல்) பிறரைக் கவரும் ஆற்றல் உள்ளவர்கள் தலைமைத்துவத்துக்கும் நேர்வழிபடுத்தவும் முழுத் தகுதி பெற்றவர்கள் நபித்தோழர்கள் நெஞ்சுறுதி மிக்கவர்கள் நிலைத்தன்மை கொண்டவர்கள் நபியவர்களுக்காக எதையும் அர்ப்பணிக்கத் துணிந்தவர்கள் மதீனாவில் உள்ள அவ்ஸ், கஸ்ரஜ் கிளையினரோ மிகுந்த ஆற்றலும் பலமுமிக்கவர்கள் இவ்விரு சமூகத்திலும் உள்ள அறிஞர்களோ சமாதானத்தையும், சீர்திருத்தத்தையும் விரும்புபவர்கள் குரோதம் கொள்வதை எதிர்ப்பவர்கள் ஏற்கனவே பல ஆண்டுகளாக உள்நாட்டு போர்களால் மதீனா நகரம் பாதிக்கப்பட்டிருக்கும் போது தற்போது சண்டை சச்சரவுகளை அன்சாரிகள் அறவே விரும்ப மாட்டார்கள் என்று மக்காவாசிகள் நன்கு விளங்கி வைத்திருந்தனர்.
மதீனா மிக முக்கிய மைய நகரமாக விளங்குகின்றது. யமன் நாட்டிலிருந்து ஷாம் வரை நீண்டு செல்லக்கூடிய செங்கடலின் கரை வழியாக செல்லும் வியாபாரக் கூட்டங்கள் அதன் வழியாகத்தான் செல்ல வேண்டும். மக்காவாசிகள் மட்டும் ஓர் ஆண்டுக்கு மதீனா வழியாக ஷாம் தேசத்துடன் குறைந்தது இரண்டரை லட்சம் தங்க நாணயங்களுக்கு வியாபாரம் செய்து வந்தனர். இது மட்டுமல்லாமல் தாயிஃப் நகர மக்களும் அதைச் சுற்றியுள்ள மக்களும் மதீனா வழியாகவே வியாபாரம் செய்து வந்தனர். மதீனா பாதுகாப்புடையதாக இருந்ததால் அனைவரும் வியாபாரத்திற்காக இவ்வழியையேத் தேர்ந்தெடுத்தனர். எனவே, மதீனா இத்தகைய முக்கியத்துவம் பெற்றிருப்பதையும் அவர்கள் நன்கு அறிந்திருந்தனர்.
ஆகவே, இஸ்லாமிய அழைப்பு மதீனாவில் மையம் கொள்வதாலும் மதீனாவாசிகள் தங்களுக்கு எதிராக ஒன்று கூடுவதாலும் ஏற்படும் மாபெரும் ஆபத்தை குறைஷிகள் உணராமல் இருக்கவில்லை.
தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த ஆபத்து அதிகமாகுவதைக் குறைஷிகள் நன்கு உணர்ந்து கொண்டனர். இந்த ஆபத்து உருவாகுவதின் மூலக் காரணத்தை, அதாவது நபி முஹம்மது (ஸல்) அவர்களையே அழித்து விடுவதுதான் இந்த ஆபத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஏற்றமான வழி என்று முடிவு செய்தனர்.
நபித்துவத்தின் பதினான்காம் ஆண்டு, ஸஃபர் மாதம் 26 வியாழன், அதாவது கி.பி. 622, செப்டம்பர் 12” இரண்டாவது அகபா உடன்படிக்கை முடிந்து இரண்டரை மாதங்கள் கழிந்து காலையில் குறைஷிகளின் மிக முக்கியமான ஆலோசனை மன்றம் ஒன்று கூடியது.”” இந்த சபையில் குறைஷிகளின் முக்கிய பிரமுகர்கள், தலைவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் ஏகத்துவ அழைப்பைப் பரப்பி வரும் நபி (ஸல்) அவர்களையும் அவ்வழைப்பின் தாக்கத்தையும் முழுமையாக அழித்து விடுவதற்கு ஆலோசனை செய்து சரியான திட்டம் தீட்ட ஒன்று கூடினர்.
நபியவர்களைக் கொல்ல திட்டமிடுதல்.
சபை ஒன்றுகூடிய பின் பலவிதமான கருத்துகள், விவாதங்கள் நடைபெற்றன. அவர்களில் ஒருவனான அபுல் அஸ்வத் என்பவன் “நாம் அவரை நமது ஊரைவிட்டு வெளியேற்றி விடுவோம். அவர் எங்கு சென்றால் நமக்கென்ன. நாம் நமது காரியத்தையும், நமக்கு மத்தியிலிருந்த நட்பையும் முன்பு போல் சீர்படுத்திக் கொள்வோம்” என்று கூறினான்.
அதற்கு அந்த நஜ்தி வயோதிகன் “இது சரியான யோசனையல்ல. அவன் அழகிய பேச்சையும், இனிமையான சொல்லையும், தனது மார்க்கத்தைக் கொண்டு மக்களின் உள்ளங்களில் அவர் இடம்பிடித்து விடுவதையும் நீங்கள் பார்க்கவில்லையா? அவ்வாறு நீங்கள் செய்தால் அவர் வேறொரு இடம் சென்று அவர்களிடம் தங்கி அவர்களை முஸ்லிம்களாக மாற்றிவிடலாம். பிறகு அவர்களை அழைத்துக்கொண்டு உங்களது ஊருக்கு வந்து உங்களை அழித்தொழித்து விடலாம். எனவே வேறு யோசனை செய்யுங்கள்” என்று கூறினான்.
அடுத்து அபுல் புக்த என்பவன் “அவரை சங்கிலியால் பிணைத்து ஓர் அறையில் அடைத்து விடுவோம். இதற்கு முன் ஜுஹைர், நாஃபிகா போன்ற கவிஞர்களுக்கு நடந்தது போன்று நடக்கட்டும். அதாவது, சாகும் வரை அப்படியே அவரை விட்டுவிடுவோம்” என்று கூறினான்.
வேண்டாம் வேறு யோசனை கூறுங்கள். இறுதியில் நபியை கொலைச் செய்து விடலாம் என முடிவுவெடுக்கப்பட்டது.
குறைஷிகளின் திட்டமும், அல்லாஹ்வின் ஏற்பாடும்.
குறைஷிகள் தங்களின் அன்றாட வேலைகளில் சகஜமாக ஈடுபட்டு, தங்களின் செயல்பாடுகளில் எவ்வித மாற்றமும் தெரியாத விதத்தில் நடந்துகொண்டனர். பிறர் இந்த சதித் திட்டத்தின் வாடையைக் கூட நுகர முடியாத வண்ணம், அந்த குறைஷிகள் நடந்து கொண்டனர். இவர்கள் அல்லாஹ்வுக்கு சூழ்ச்சி செய்ய நாடினர். அல்லாஹ் அவர்கள் அறியாத விதத்தில் அவர்களது சூழ்ச்சிகளை வீணாக்கி விட்டான். குறைஷிகளின் சதித்திட்டத்தை நபி (ஸல்) அவர்களிடம் அறிவிப்பதற்காக அல்லாஹ்வின் புறத்திலிருந்து வானவர் ஜிப்ரீல் இறங்கி வந்தார். “நீங்கள் ‘ஹிஜ்ரா’ செய்ய அல்லாஹ் அனுமதி கொடுத்து விட்டான். அதற்குரிய நேரத்தையும் நிர்ணயம் செய்துள்ளான். குறைஷிகளின் இத்திட்டத்தை முறியடிப்பதற்குரிய வழியையும் தெளிவுபடுத்தி இருக்கின்றான். எனவே, இன்று இரவு நீங்கள் வழக்கமாக தூங்கும் விரிப்பில் தூங்க வேண்டாம்” என்று வானவர் ஜிப்ரீல் கூறினார். (இப்னு ஹிஷாம்)
மக்கள் எல்லாம் தங்களது இல்லங்களில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் மதிய வேளையில் ஹிஜ்ராவின் திட்டத்தை உறுதி செய்து கொள்வதற்காக நபி (ஸல்) அவர்கள் அபூபக்ரிடம் வந்தார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது:
மதிய வேளையில் நாங்கள் வீட்டில் அமர்ந்திருந்தபோது ஒருவர் அபூபக்ரிடம் “இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முகத்தை மறைத்தவராக உங்களிடம் வந்திருக்கிறார்” என்று கூறினார். அது நபி (ஸல்) எங்களிடம் வரும் வழக்கமான நேரமல்ல! “எனது தாயும் தந்தையும் நபி (ஸல்) அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்நேரத்தில் அவர்கள் வந்திருப்பதற்குக் காரணம் ஏதோ ஒரு முக்கியமான விஷயம்தான்” என்று அபூபக்ர் (ரழி) அவர்கள் கூறினார்கள்.
எங்களிடம் வந்த நபி (ஸல்) உள்ளே வர அனுமதி கேட்கவே அபூபக்ர் (ரழி) அனுமதி கொடுத்தார்கள். உள்ளே நுழைந்த நபி (ஸல்) அபூபக்ரிடம் “உங்களுடன் இருப்பவர்களை உடனே வெளியேற்றுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரழி) “அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களுக்கு அர்ப்பணமாவேனாக! இங்கு உங்கள் குடும்பத்தார்கள்தான் இருக்கிறார்கள்” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “எனக்கு மக்காவைவிட்டு வெளியேறுவதற்கு அனுமதி கிடைத்து விட்டது” என்றார்கள். அதற்கு அபூபக்ர் (ரழி) “அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நானும் உங்களுடன் வருகிறேன்” என்று கூறவே, நபி (ஸல்) “சரி!” என்றார்கள். (இப்னு ஹிஷாம்)
பின்பு ஹிஜ்ரா எவ்வாறு செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அபூபக்ர் (ரழி) அவர்களுடன் பேசி முடிவு செய்து கொண்டார்கள். வீட்டிற்குத் திரும்பிய நபி (ஸல்) அன்று சூரியன் மறைந்து இருட்டுவதை எதிர்பார்த்திருந்தார்கள். தான் குறைஷிகளின் தீய திட்டத்தை தெரிந்து கொள்ளாதது போன்றே, தன் அன்றாடச் செயல்களை வழக்கம் போல் செய்து கொண்டிருந்தார்கள். குறைஷிகளின் தீய திட்டத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் பிறர் தனது ஹிஜ்ராவின் திட்டத்தைத் தெரிந்து கொள்ளதவாறு நடந்து கொண்டார்கள்.
நபியவர்கள் புறப்படுகிறார்கள்.
குறைஷிகள் தங்களது தீய திட்டத்தில் எவ்வளவுதான் சுதாரிப்புடனும், விழிப்புடனும் இருந்தாலும் கூட படுதோல்வி அடைந்தனர். நபி (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி கூட்டத்தைப் பிளந்து கொண்டு தரையிலிருந்து கைப்பிடி மண்ணை எடுத்து அங்கிருந்தவர்களின் தலையின் மீது தூவிவிட்டுச் சென்றார்கள். எதிரிகள் நபி (ஸல்) அவர்களை பார்க்க முடியாதவாறு அல்லாஹ் செய்துவிட்டான்.
وَجَعَلْنَا مِنْ بَيْنِ اَيْدِيْهِمْ سَدًّا وَّمِنْ خَلْفِهِمْ سَدًّا فَاَغْشَيْنٰهُمْ فَهُمْ لَا يُبْصِرُوْنَ
இன்னும் நாம் அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னே ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்; (இவ்வாறாக) அவர்களை மூடிவிட்டோம் - ஆகையால் அவர்கள் பார்க்க முடியாது.(அல்குர்ஆன் : 36:9)
நபி (ஸல்) இவ்வசனத்தை ஓதியவர்களாக அங்கிருந்து வெளியேறி சென்றார்கள். அங்கிருந்த ஒவ்வொருவரின் மீதும் நபி (ஸல்) மண்ணை தூவியிருந்தார்கள். பின்பு அபூபக்ர் (ரழி) அவர்களின் வீட்டுக்கு வருகை தந்து அபூபக்ர் (ரழி) அவர்களையும் அழைத்துக் கொண்டு வீட்டின் பின்பக்கம் உள்ள சிறிய கதவின் வழியாக வெளியாகி, மக்காவிலிருந்து யமன் நாட்டை நோக்கிச் செல்லும் பாதையிலுள்ள ‘ஸவ்ர்’ குகையை வந்தடைந்தார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)
முற்றுகையிட்டிருந்தவர்கள் நடுநிசியை எதிர்பார்த்திருந்த நேரத்தில் தாங்கள் தோல்வி அடைந்து விட்டோம் என்பது அவர்களுக்குத் தெரிந்தது. வெளியிலிருந்து வந்த ஒருவர் நபி (ஸல்) அவர்களின் வீட்டு வாசலில் இவர்கள் இருப்பதைப் பார்த்தவுடன் “நீங்கள் எதை எதிர்பார்த்திருக்கின்றீர்கள்” என்று கேட்டார். அவர்கள் “நாங்கள் முஹம்மதை எதிர்பார்த்து இருக்கிறோம்” என்றனர். அவர் “நீங்கள் தோல்வியடைந்து விட்டீர்கள் நஷ்டமடைந்து விட்டீர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக! இப்போதுதானே முஹம்மது உங்களைக் கடந்து செல்கிறார். உங்களது தலையின் மீது மண் தூவப்பட்டுள்ளதே! நீங்கள் பார்க்கவில்லையா?” என்று அவர் கூற, அவர்கள் தங்கள் தலையிலுள்ள மண்ணைத் தட்டிவிட்டு “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் அவரைப் பார்க்கவில்லையே! எப்படி அவர் சென்றிருப்பார்!” என்று திகைத்தனர்.
இருப்பினும் கதவின் இடுக்கின் வழியாக வீட்டிற்குள் பார்த்தனர். அங்கு அலீ (ரழி) படுத்திருப்பதை நபி என்று எண்ணி, “இதோ முஹம்மதுதான் தூங்குகிறார். இது அவருடைய போர்வைதான்” என்று கூறி, அவர் வெளியேறுவதை எதிர்பார்த்தவர்களாகவே விடியும்வரை நின்றிருந்தனர். ஆனால், காலையில் விரிப்பிலிருந்து அலீ (ரழி) எழுந்து வெளியே வருவதைப் பார்த்ததும், கைசேதமடைந்து நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரிக்கவே அலீ (ரழி) “எனக்கு எதுவும் தெரியாது” என்று மறுத்துவிட்டார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)
வீட்டிலிருந்து குகை வரை.
நபித்துவத்தின் 14ஆம் ஆண்டு ஸஃபர் மாதம் பிறை 27 இரவில், அதாவது கி.பி. 622 செப்டம்பர் 12 அல்லது 13ல் நபி (ஸல்) தனது வீட்டை விட்டு வெளியேறி உயிராலும், பொருளாலும் தனக்கு மிகுந்த உதவி ஒத்தாசை செய்து வந்த, தனது தோழரான அபூபக்ர் (ரழி) வீட்டிற்கு வந்தார்கள். பின்பு, இருவரும் வீட்டின் பின்வாசல் வழியாகப் புறப்பட்டனர். விடியற்காலை உதயமாவதற்குள் மக்காவை விட்டு வெளியேறிவிடத் துரிதமாகப் பயணித்தனர்.
குறைஷிகள் தங்களை மிக மும்முரமாகத் தேட முயற்சிப்பார்கள் பொதுவாக மக்காவிலிருந்து வடக்கு நோக்கிய மதீனாவின் பாதையைத்தான் கண்காணிப்பார்கள் என்பதால் முற்றிலும் அந்த பாதைக்கு எதிர் திசையிலுள்ள மக்காவிலிருந்து யமன் நாட்டை நோக்கிய தெற்கு திசையின் பாதையில் சென்றார்கள். இவ்வாறு ஐந்து மைல் நடந்ததற்குப் பின் அங்குள்ள ‘ஸவ்ர்’ மலையை சென்றடைந்தார்கள். இது ஏறுவதற்குக் கடினமான, பெரிய பாறைகளைக் கொண்ட உயரமான மலையாகும். இதனால் நபி (ஸல்) அவர்களின் பாதங்கள் காயமடைந்தன. (எதிரிகள் தங்களின் பாத அடிகளைத் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக குதிகால்களின் மீது நீண்ட நேரம் நடந்து வந்ததால்தான் நபி (ஸல்) அவர்களின் கால்கள் காயமடைந்தன என்றும் சிலர் கூறுகின்றனர்.) காரணம் எதுவாயினும் சரியே! மலையில் நபி (ஸல்) அவர்களால் ஏற இயலவில்லை. ஆகவே, நபி (ஸல்) அவர்களை அபூபக்ர் (ரழி) சுமந்து கொண்டு மலையின் உச்சியிலுள்ள குகைக்குச் சென்றார்கள். அக்குகைக்கு வரலாற்றில் ‘ஸவ்ர் குகை’ என்று கூறுகின்றனர்.
இருவரும் குகைக்குள்.
நபி (ஸல்) அவர்களும், அவர்களது தோழரும் குகையை அடைந்தபோது “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் உள்ளே நுழையக் கூடாது. நான்தான் முதலில் நுழைவேன். அதில் ஏதாவது தீங்குகள் இருப்பின் அதனால் பாதிப்பு எனக்கு ஏற்படட்டும், உங்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது” என்று அபூபக்ர் (ரழி) கூறி, உள்ளே நுழைந்தார்கள். அக்குகையைச் சுத்தம் செய்து அதிலிருந்த ஓட்டைகளில் ஓர் ஓட்டையைத் தனது கீழாடையின் ஒரு பகுதியைக் கிழித்து அடைத்துவிட்டு மற்ற இரண்டு ஓட்டைகளை தனது கால்களைக் கொண்டு அடைத்துக் கொண்டார்கள். பின்பு, நபி (ஸல்) அவர்களை உள்ளே அழைக்கவே அவர்கள் உள்ளே நுழைந்து அபூபக்ரின் மடியில் தனது தலையை வைத்துத் தூங்கி விட்டார்கள். சிறிது நேரத்தில் அபூபக்ர் (ரழி) காலில் ஏதோவொன்று தீண்டிவிடவே வலியினால் வேதனையடைந்த அவர்கள், ‘நபி (ஸல்) விழித்துக் கொள்வார்களே!’ என்ற பயத்தில் அசையாமல் இருந்து விட்டார்கள். எனினும், வலியின் வேதனையால் அவர்களின் கண்களில் இருந்து கசிந்த நீர், நபி (ஸல்) அவர்களின் முகத்தை நனைத்தது. விழித்துப் பார்த்த நபி (ஸல்) “அபூபக்ரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது” என்று கேட்டார்கள். “என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! என்னை ஏதோ தீண்டிவிட்டது” என்று அவர்கள் கூறவே நபி (ஸல்) தங்களது உமிழ்நீரை அவ்விடத்தில் தடவ அவர்களது வலி தூரமானது. (ரஜீன், மிஷ்காத்)
இருவரும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று இரவுகள் குகையில் தங்கியிருந்தனர். (ஃபத்ஹுல் பாரி)
முதல் கட்டம் புதிய சமூகம் அமைத்தல்.
நபி (ஸல்) மதீனாவில் நஜ்ஜார் கிளையினரின் இல்லத்திற்கு ஹிஜ்ரி 1ல் ரபிய்யுல் அவ்வல் பிறை 12, வெள்ளிக்கிழமை, கி.பி. 622 செப்டம்பர் 27ல் வந்தார்கள். முதலாவதாக அபூ அய்யூப் அன்சாரியின் வீட்டுக்கருகிலுள்ள இடத்தில் இறங்கி “இன்ஷா அல்லாஹ்! இங்குதான் தங்குமிடம் அமையும்” என்று கூறிவிட்டு, பின்பு அபூ அய்யூப் அன்சாரியின் வீட்டுக்குச் சென்றார்கள்.
அல்மஸ்ஜித் அந்நபவி.
இதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் எடுத்துக் கொண்ட முதல் முயற்சி பள்ளி வாசல் ஒன்றை அமைப்பதாகும். இந்த பள்ளி வாசலைத்தான் ‘அல்மஸ்ஜித் அந்நபவி’ (நபியவர்கள் கட்டிய பள்ளிவாசல்) என்று சிறப்பாக சொல்லப்படும். தங்களது ஒட்டகம் முதன் முதலாக மண்டியிட்ட இடத்தையே நபி (ஸல்) அவர்கள் பள்ளி கட்டுவதற்காகத் தேர்வு செய்தார்கள். அந்த நிலம் இரண்டு அனாதைகளுக்குச் சொந்தமாக இருந்தது. அவர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் அதை விலைக்கு வாங்கி கட்டிடப் பணியைத் தொடங்கி, அப்பணியில் தாங்களும் பங்கெடுக்கும் முகமாக கல், மண் சுமந்தார்கள். வேலையை உற்சாகப்படுத்தும் வகையில்,
“இறைவா! மறுமை வாழ்வைத் தவிர வேறு வாழ்வு இல்லை.
அன்சாரிகள், முஹாஜிர்களுக்கு நீ மன்னிப்பளி!
இந்த சுமை கைபருடைய சுமையல்ல!
எங்கள் இறைவன் மீது ஆணையாக! இது நன்மை பயக்கக் கூடியது தூய்மையானது.”என்று கவியாக படிப்பார்கள்.
நபி (ஸல்) அவர்கள் பணியின்போது ஆர்வமூட்டும் சொற்களைக் கூறி வந்தது தோழர்களுக்கு வேலையில் மிகுந்த உற்சாகத்தை அளித்தது. தோழர்களும் உற்சாகம் மிகுந்து,
நபி பணி செய்ய, நாம் அமர்ந்தால்,அது வழிகெட்ட செயலல்லவோ!
என்று கவிபாடிக் கொண்டிருந்தார்கள்.
அந்த இடத்தில் இணைவைப்போரின் கப்ருகள் (அடக்கஸ்தலங்கள்) சில இருந்தன. மற்றும் பல இடிந்த கட்டடங்களும், சில பேரீத்த மரங்களும், ‘கர்கத்’ என்ற மரங்களும் இருந்தன. நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க கப்ருகள் தோண்டி எடுக்கப்பட்டு, மற்றொரு இடத்தில் புதைக்கப்பட்டன. இடிபாடுகள் அகற்றப்பட்டு தரை சமமாக்கப்பட்டது. மரங்கள் அனைத்தும் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன. அந்த மரங்கள் கிப்லா” திசையில் வரிசையாக நட்டு வைக்கப்பட்டன. அப்போது கிப்லா பைத்துல் முகத்தஸை” நோக்கியிருந்தது. பள்ளியுடைய வாயிலின் இரு ஓரங்களும் கற்களால் ஆக்கப்பட்டன. அதனுடைய சுவர்கள் கல்லாலும், மண்ணாலும் கட்டப்பட்டன. பேரீத்த மரத்தின் கீற்றுகளால் முகடுகள் அமைக்கப்பட்டன. தூண்கள் பேரீத்த மரங்களால் செய்யப்பட்டன. தரையில் மணலை விரிப்பாக ஆக்கப்பட்டது. பள்ளிக்கு மூன்று வாயில்கள் அமைக்கப்பட்டன. பள்ளியின் நீளம் கிப்லாவிலிருந்து கடைசி வரை நூறு முழங்கள் ஆகும். பள்ளியின் இரண்டு புறங்களும் அதே அளவு அல்லது அதைவிட சற்று குறைவாக இருந்தன. பள்ளியின் அஸ்திவாரம் மூன்று முழத்தில் போடப்பட்டது.
மதீனா வாழ்க்கையில் அழைப்பு மற்றும் போரின் கட்டங்கள்.
மதீனா வாழ்க்கையை மூன்று கால கட்டங்களாக பிரிக்கலாம்:
1) இஸ்லாமிய சமூகத்திற்கு அடித்தளம் அமைத்தல், இஸ்லாமிய அழைப்புப் பணியை உறுதிபடுத்துதல்.
இக்கால கட்டத்தில் மதீனாவிற்குள் பெரும் குழப்பங்களும் பிரச்சனைகளும் ஏற்பட்டன. மதீனாவிற்கு வெளியிலிருந்து முஸ்லிம்களை அழிப்பதற்காகவும் அழைப்புப் பணியை வேரறுப்பதற்காகவும் எதிரிகள் பெரும் போர்களை நடத்தினர். ஆனால், இக்காலகட்டம் ஹிஜ்ரி 6ஆம் ஆண்டு துல்கஅதாவில் நடந்த ஹுதைபிய்யா உடன்படிக்கையுடன் முடிவடைந்தது. அதற்குப் பிறகு அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றியையும், ஆதிக்கத்தையும் அருளினான்.
2) மிகப்பெரிய எதியுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளுதல், அரசர்களை இஸ்லாமின் பக்கம் அழைத்தல், சதித்திட்டங்களை முறியடித்தல்.
இக்காலகட்டம் ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு ரமழான் மாதம் புனித மக்கா வெற்றியுடன் முடிவுற்றது.
3) குழுக்களை வரவேற்றல், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைதல்.
இக்காலகட்டம் மக்கா வெற்றியிலிருந்து 11 ஆம் ஆண்டு ரபீவுல் அவ்வல் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை தொடர்ந்தது.
இந்த ஹிஜ்ரத்துடைய பயணத்தை வைத்து தான் ஹிஜ்ரி ஆண்டு உமர் (ரலி) அவர்களின் காலத்தில் பல கட்ட ஆலோசனைக்கு பிறகு துவங்கப்பட்டது. இன்றிலிருந்து ஹிஜ்ரி 1445 தை துவங்க இருக்கும் நமக்கு அல்லாஹ் தன் புறத்திலிருந்து எல்லா விதமான ரஹ்மத்துகளையும், பரக்கத்துகளையும் தந்தருள்வானாக! ஆமின்.
No comments:
Post a Comment