சிறுபான்மையினர் உரிமைகள்.
اِنَّ اللّٰهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتّٰى يُغَيِّرُوْا مَا بِاَنْفُسِهِمْ وَاِذَاۤ اَرَادَ اللّٰهُ بِقَوْمٍ سُوْۤءًا فَلَا مَرَدَّ لَهٗ وَمَا لَهُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّالٍ
எந்த சமூகம் தன்னைத்தானே மாற்றிக் கொள்ளவில்லையோ, அந்த சமூகத்தை அல்லாஹ்வும் மாற்றுவதில்லை. (அல்குர்ஆன் 13: 11)
நம் நாட்டின் வளம், வளர்ச்சி, பொருளாதாரம் இவற்றை விடவும் ஒரு நாட்டின் பாதுகாப்பையும்,அமைதியும் உறுதிச்செய்வது அந்நாட்டின் சிறுபான்மையினரின் உயிர்,உடைமைகள்,இருப்பு,உரிமைகள் பாதுகாக்கப்பட்டு அமைதியான,நிம்மதியான சூழலை உண்டாக்குவது அரசாங்கத்தின் தலையாயக்கடமையாகும்.
ஆனால் உலகலளவில் வலது சாரி சிந்தனையில் உள்ள அரசுகள் பெரும்பான்மையினரின் ஆதரவைப்பெறவும், ஆட்சியை தக்கவைப்பதற்கும் ஆட்சி,அதிகாரத்தை கைபற்றுவதென்பது மத, மொழி, இன சிறுபான்மையினருக்கு ஆபத்தாகவும், அச்சுறுத்தலாகவும் அமையும் என சமூகஆர்வலர்களும்,வல்லுனர்களும் எச்சரிக்கின்றனர்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், நம்பகத்தன்மைக்கும், சிறுபான்மையினர் அதிக முக்கியத்துவமுள்ளவர்களாகவும், கவனிக்கப்பட வேண்டியவர்களாகவும் இருக்கிறார்கள்.
இஸ்லாமும், சிறுபான்மையினறும்.
நமது இந்தியத் திருநாட்டைப் பொருத்தவரை, சிறுபான்மையினர் பட்டியலில், முஸ்லிம்களும் இடம் பெற்றுள்ள காரணத்தால், சிறுபான்மையினர் சம்மந்தமான சில அவசியமான கண்ணோட்டங்களை, இஸ்லாமிய அடிப்படையில் தெரிந்துக்கொள்வதோடு, சிறுபான்மை மக்கள் விஷயத்தில் அரசின் கடமைகளும், மக்களின் உரிமைகளும் என்ன என்பதை அறிந்துக்கொள்வது அவசியமாகும்.
முஸ்லிம்கள் வெற்றி கொண்ட பிரதேசங்களில், பலர் இஸ்லாத்தின் தூயநெறியை ஏற்றுக் கொண்டனர்; சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்வாறு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களின் உயிர், உடைமை, சொத்து, வழிபாட்டு உரிமை போன்றவற்றிற்கு முழுச்சுதந்திரமும், உரிமையும் வழங்கப்பட்டிருந்தன. இவர்கள்தான் சிறுபான்மையினர் என்ற அந்தஸ்த்தில் ‘திம்மிகள்’என அழைக்கப்பட்டனர். அதாவது ஒப்பந்தம் செய்து கொண்ட மக்கள் எனப் பொருள்.
மனித வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் சிறந்த வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள இஸ்லாம், ஆட்சி,அதிகாரத்தில் தங்களின் ஆளுகைக்கு கீழ்வாழும் சிறுபான்மையினரோடு இஸ்லாமிய ஆட்சியாளர் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்கிற அழகிய வழிகாட்டுலை வழங்கியுள்ளது.
சம நீதி....
அதன் வரிசையில் முதலாவது, எல்லாமக்களுக்கும் சமமான நீதி,நீதியில் ஏற்றத்தாழ்வு,பாகுபாடுகாட்டாலாகாது.
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّامِيْنَ بِالْقِسْطِ شُهَدَآءَ لِلّٰهِ وَلَوْ عَلٰٓى اَنْفُسِكُمْ اَوِ الْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ اِنْ يَّكُنْ غَنِيًّا اَوْ فَقِيْرًا فَاللّٰهُ اَوْلٰى بِهِمَا فَلَا تَتَّبِعُوا الْهَوٰٓى اَنْ تَعْدِلُوْا وَاِنْ تَلْوٗۤا اَوْ تُعْرِضُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا
முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 4:135)
பிரிதோர் வசனம்,நீதத்தோடும் நல்லமுறையில் நடக்குமாறு ஏவுகிறது.
لَا يَنْهٰٮكُمُ اللّٰهُ عَنِ الَّذِيْنَ لَمْ يُقَاتِلُوْكُمْ فِى الدِّيْنِ وَلَمْ يُخْرِجُوْكُمْ مِّنْ دِيَارِكُمْ اَنْ تَبَرُّوْهُمْ وَ تُقْسِطُوْۤا اِلَيْهِمْ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ
மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.(அல்குர்ஆன் : 60:8)
இஸ்லமிய நாட்டில் வாழும் மத,மொழி, இன சிறுபான்மையினருக்கு இஸ்லாமியர்களுக்குள்ள அனைத்து உரிமைகளும் உண்டு என பின்வரும் நபிமொழி தெளிவுப்படுத்துகிறது.
’’فان قبلوا الذمة فأعْلِمْہم أن لہم ما للمسلمین وعلیہم ما علی المسلمین‘‘ (بدائع الصنائع، ج:۶، ص: ۶۲)
ஒப்பந்தத்தில் உள்ள ஒரு திம்மியை(முஸ்லிமல்லாதாரை)ஏற்றுக்கொண்டால்,இஸ்லாமியர்களுக்குள்ள சாதக,பாதக (அனைத்து நடவடிக்கைகளும்)அவர்களுக்கும் உண்டு என அவர்களுக்கு அறிவித்துவிடுங்கள்.என நாயகம்ﷺஅவர்கள் கூறினார்கள்.
உயிர்,உடமை பாதுகாப்பு.
இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும் குடி மகன் என்ற வகையில், முஸ்லிமல்லாதாரின் உயிர் உடமைப் பாதுகாப்பு தொடர்பாகவும் (ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள்,
عن عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم قال من قتل نفسا معاهدا لم يرح رائحة الجنة
'ஒப்பந்தத்தில் உள்ள ஒரு திம்மியை(முஸ்லிமல்லாதாரை) எவரேனும் கொலை செய்தால் அவர் சுவர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்' (புஹாரி, அபூதாவுத்)
மற்றுமொருமறை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
قول النبي صلى الله عليه وسلم: (ألا من ظلم معاهدًا أو انتقصه أو كلفه فوق طاقتِه أو أخذ منه شيئًا بغيرِ طيبِ نفسٍ فأنا حجيجُه يوم القيامةِ،
'யார் முஸ்லிமல்லாத ஒரு உடன்படிக்கை செய்திருக்கும் திம்மிக்கு அநீதியிழைக்கிறாரோ அல்லது அவரது உரிமையைக் குறைக்கின்றாரோ, அல்லது அவரது சக்திக்கு மேல் பொறுப்புக்களை சுமத்துகின்றார்களோ அல்லது அவரது மன விருப்பின்றி ஏதேனுமொன்றை அவரிடமிருந்து பெறுகின்றாரோ அவருக்கெதிராக மறுமையில் நான் வாதிடுபவனாக இருப்பேன்' (அபூதாவுத்)
இஸ்லாமிய அரசாட்சியின்போது குடிமக்கள் முஸ்லிம், முஸலிமல்லாதார்.பெரும்பான்மை,சிறுபான்மை என பாகுபாடின்றி சகலரினதும் உயிர், உடமைப்பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது
மானம்,மரியதை. பாதுகாப்பு.
இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும் குடி மகன் என்ற வகையில், முஸ்லிமல்லாதாரின் உயிர் உடமைப் பாதுகாப்பை உறுதிசெய்வதுடனே அவர்களின் மானம்,மரியாதைக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களான புறம்,கோள்,திட்டுவது,அவதூறு இவை அனைத்தையும் நாயகம் ﷺஅவர்கள் தடைசெய்தார்கள்.
’’ویجب کف الأذی عنہ، وتحرم غیبتہ کالمسلم‘‘(۴)
(ஒப்பந்தத்தில் உள்ள ஒரு (முஸ்லிமல்லாதார்)திம்மி)அவருக்கு நோவினை தருவதை தடுத்துக்கொள்வது கடமையாகும்.அவரை புறம் பேசுவதை முஸ்லிமை (புறம்பேசுவதை) போன்றே ஹராமாகும்.
சட்டம்,நீதிக்கு முன் அனைவரும் சமம்.
இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும் முஸ்லிம்அல்லாதாரின் உரிமைகளைப் போன்றே நீதி,குற்றவியல் சட்டங்களிலும் முஸ்லிம்களுக்குள்ள நீதி,குற்றவியல் சட்டங்களே அவர்களுக்கும் வழங்கப்படும்.
’’دماوہم کدمائنا‘‘ (۵)
அவர்களின் உதிரங்கள் நம் உதிங்களைப் போன்றதாகும்.
மத சுதந்திரம்.
இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும் முஸ்லிம்அல்லாதாருக்கு முழுமையான மத சுதந்திரம் அளிக்கப்படும்.
மதம் என்பது நம்பிக்கையின் அடிப்படையில் நடைமுறைக்கு வரும் விஷயம்.இதை வற்புறுத்தலாலோ அடக்குமுறையாலோ யார் மீதும் திணிக்கக் கூடாது.
இஸ்லாம் தன் போதனையை எங்கும் எவரிடமும் வற்புறுத்தியதில்லை. இதனையே குர்ஆன்...
لَاۤ اِكْرَاهَ فِى الدِّيْنِۙ قَدْ تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَىِّ
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. (அல்குர்ஆன் : 2:256)
இஸ்லாத்தை போதிக்க வந்த தூதருக்கே அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
فَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَيْكَ الْبَلٰغُ الْمُبِيْنُ
எனினும் இவர்கள் (உம்மைப்) புறக்கணித்துத் திரும்பிவிடுவார்களாயின், (நபியே! அதற்காகக் கவலைப்படாதீர்; ஏனெனில்) உம்மீது (கடமையு)ள்ளதெல்லாம் (இறை கட்டளைகளை அவர்களுக்குத்) தெளிவாகச் சேர்ப்பிப்பதுதான்.(அல்குர்ஆன் : 16:82)
சிறுபான்மையினரின் நலன் உட்பட, எல்லா செயல்பாடுகளையும் இஸ்லாமிய அரசுகள் நடைமுறைப்படுத்தின. இதனை நபி (ஸல்) அவர்கள் முதல், கலீபாக்கள் உட்பட எல்லா ஆட்சியாளர்களிடமும் நாம் காணமுடியும்.
சிறுபான்மையினர் மீது அத்துமீறாதீர்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நீர் வேதமுடையவர்களிடம் செல்கிறீர். அவர்களிடம் சென்றடைந்துவிட்டால் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார் என்று (ஏகத்துவத்திற்கு) சாட்சியம் சொல்லும்படி அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டுவிட்டால், “அல்லாஹ் தினமும் ஐவேளை தொழுவதைக் கடமையாக்கியுள்ளான்’ என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் இதற்கும் (இசைந்து) உமக்கு கட்டுப்பட்டுவிட்டால் “நிச்சயமாக அல்லாஹ் அவர்களில் செல்வந்தர்களிடமிருந்து வசூக்கப்பட்டு அவர்களில் ஏழைகளுக்குக் கொடுக்கப்படுகின்ற ஸகாத்தைக் கடமையாக்கியுள்ளான்’ என அவர்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் இதற்கும் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டால் அவர்களின் பொருட்களில் சிறந்தவற்றை வசூலிப்பது குறித்து உம்மை எச்சரிக்கிறேன். அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளும்! ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையுமில்லை.
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமனுக்கு ஆளுநராக அனுப்பும்போது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் : புகாரி-1496 )
எப்படி ஒரு அடியான் இறை வணக்கத்தின் மூலம் அல்லாஹ்வை நெருங்குகிறானோ, அதைப்போலவே பாதிக்கப்பட்ட ஒருவனின் பிராத்தனைக்கும் அல்லாஹ்விடம் மிக்க நெருக்கம் இருக்கிறது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உணர்த்துகிறார்கள்.
சிறுபான்மையினரின் உணர்வுக்கு மதிப்பளிப்பது.
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தபோது யூதர் ஒருவர் வந்து, 'அபுல் காசிமே! உங்கள் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், '(அந்தத் தோழர்) யார்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'அன்சாரிகளில் ஒருவர்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவரைக் கூப்பிடுங்கள்' என்று உத்திரவிட்டார்கள். அவர் வந்து சேர்ந்தவுடன், 'இவரை நீர் அடித்தீரா?' என்று கேட்டார்கள். அந்த அன்சாரி, 'இவர் கடைவீதியில், 'மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று ஆணையிட்டுக் கூறிக் கொண்டிருந்ததை செவியுற்றேன். உடனே நான், 'தீயவனே! முஹம்மதை விடவா (மூஸா மேன்மை வாய்ந்தவர்)?' என்று கேட்டேன். என்னைக் கோபம் ஆட்கொண்டு விட, இவரின் முகத்தில் அறைந்து விட்டேன்' என்று கூறினார். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'நபிமார்களுக்கிடையே ஒருவரை மற்றொருவரை விட உயர்த்திப் பேசாதீர்கள். ஏனெனில், மறுமை நாளில் மக்கள் அனைவரும் மூர்ச்சையாகி விடுவார்கள். அப்போது, பூமி பிளந்து வெளிப்படுத்துபவர்களில் முதலாவது நபராக நான் இருப்பேன். அப்போது, நான் மூஸாவை அர்ஷின் (இறை சிம்மாசனத்தின்) கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பவராகக் காண்பேன். ' (ஸஹீஹ் புகாரி 2412)
எவ்வளவு பெரிய ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் தவறு செய்தவன் தமது கட்சிக்காரர்களாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும். இங்கு வந்த பாதிக்கப்பட்ட மனிதர் மனமகிழ உங்கள் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் தான் மறுமையில் சிறந்தவர் என்று பதிலளித்தார்.
உரிமைகளை கேட்கும் அதிகாரத்தை கொடுப்பது.
ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்:இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஹுனைன்' போரிலிருந்து திரும்பி வந்தபோது நான் அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன். மக்களும் உடன் இருந்தனர். அப்போது (கிராம) மக்கள் நபியவர்களைச் சூழ்ந்து (தர்மம்) கேட்கலானார்கள்; 'சமுரா' என்னும் (கருவேல) முள் மரம் வரை நபி(ஸல்) அவர்களை நெருக்கித் தள்ளிவிட்டார்கள். நபியவர்களின் சால்வை முள்மரத்தில் சிக்கிக் கொண்டது. எனவே, நபி(ஸல்) அவர்கள் சற்ற நின்று, 'என் சால்வையை என்னிடம் கொடுங்கள். என்னிடம் இந்த முள்மரங்களின் எண்ணிக்கையில் ஒட்டகங்கள் இருந்திருந்தாலும் கூட அவற்றை உங்களிடையே பங்கிட்டு விட்டிருப்பேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவும் காண மாட்டீர்கள்; பொய்யனாகவும் காண மாட்டீர்கள்; கோழையாகவும் காணமாட்டீர்கள்' என்று கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி 2821)
ஆட்சியாளர்களிடம் சிறுபான்மையினர் தங்களுடைய உரிமைகளை கேட்கும் சுதந்திரத்தை கொடுத்தார்கள்.
ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களின் மரண சாசனம்.
ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் மரணப் படுக்கையில் இருந்த பொழுது அடுத்த கலீஃபாவுக்கு அறிவுரைகள் தருவதற்காக ஓர் உயில் எழுதச் சொன்னார்கள். அந்த உயிலின் இறுதி வரிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
அது கூறுகிறது: “அல்லாஹ்வின் பெயராலும், அவன் தூதர் (ஸல்) அவர்களின் பெயராலும் பாதுகாப்பு கொடுக்கப்பட்ட மக்களுக்கு, (இவர்களைத்தான் ‘திம்மிகள்’ என்பர். அதவாது, இஸ்லாமிய ஆட்சியில் உள்ள முஸ்லிமல்லாத சிறுபான்மையினர்.) அவர்களது ஒப்பந்தத்தை நாம் நிறைவேற்ற வேண்டும். அவர்களைப் பாதுகாப்பதற்காக நாம் போராட வேண்டி வந்தாலும், அதனையும் செய்து நாம் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். அவர்களது சக்திக்கு மீறி அவர்கள் மீது நாம் சுமைகளைச் சுமத்தக் கூடாது.”
இந்த வார்த்தைகளை ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் எப்பொழுது கூறுகிறார்கள் பார்த்தீர்களா? தொழுது கொண்டிருந்த கலீஃபா அவர்களை விஷம் தோய்ந்த கத்தியால் ஒரு முஸ்லிமல்லாதவன் குத்தி விடுகிறான். அந்தக் காயம் ஏற்படுத்திய வலியோடு மரணம் நெருங்கும் வேளையில் அவர்கள் இந்த வார்த்தைகளைக் கூறுகின்றார்கள்.
ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் அன்றைய பாரசீகத்திலிருந்து எகிப்து வரை பரந்து விரிந்த நிலத்தின் தலைவராக இருந்தார்கள். ஒரு முஸ்லிமல்லாத சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவன்தான் அவர்களைக் கத்தியால் குத்தினான். அவர்கள் நினைத்திருந்தால் அவனைப் பழிக்குப் பழி வாங்கியிருக்கலாம்.
இன்று ஒரு கொலை நடந்து விட்டது என்று சிறு சந்தேகம் ஏற்பட்டாலும் சரி... அல்லது ஒரு சதி நடக்கிறது என்று இலேசாக செய்தி வந்தாலும் சரி... இன்றைய நவீன ஆட்சித் தலைவர்கள் உடனே செய்வது ஏவுகணைகளையும், குண்டுகளையும் எறிவதுதான். அது அப்பாவி குடிமக்கள் பல ஆயிரம் பேரைக் காவு கொண்டாலும் சரி... அவர்களுக்குக் கவலையில்லை.
ஓர் ஆட்சியின் தலைமைக்கு மன்னிப்பது, மறப்பது என்பது பெருந்தன்மை. ஆனால் சிறுபான்மையினரைப் பாதுகாக்க வேண்டும், அவர்களை நல்ல முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கட்டளையே இட்டால்...? இதைத்தான் ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் செய்தார்கள்.
இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள இஸ்லாமியர்கள்.
அண்மைக் காலங்களில் ஏதாவதொரு காரணத்தைவைத்து மதச் சிறுபான்மையினர்மீது, குறிப்பாக இஸ்லாமியர்கள்மீது, தாக்குதல்கள் நடைபெறுவது இயல்பாக ஆகிக்கொண்டிருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்த அளவுக்குக்கூடச் சுதந்திர இந்தியாவில் சிறுபான்மையினருக்கு உரிமைகள் இல்லை என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.
பிரிட்டிஷ் ஆட்சியில் அரசாங்க வேலைகளில் 35 சதவிகித முஸ்லிம்கள் இருந்தனர். ஆனால், இப்போது சுதந்திர இந்தியாவில் அந்தச் சதவிகிதம் 3.5 ஆகக் குறைந்துள்ளது; அதேபோல, 15 சதவிகிதமாக இருந்த கிறித்தவர்களின் எண்ணிக்கை 1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. 6 - 14 வயதுக்குட்பட்ட 25 சதவிகித முஸ்லிம் குழந்தைகள் பள்ளிக்கூடமே செல்வதில்லை அல்லது இடையிலேயே பள்ளியைவிட்டு நின்றுவிடுகின்றனர். பட்டதாரிகளில் 25 பேரில் ஒருவர் மட்டுமே பட்டப்படிப்பு வரை செல்கின்றனர். உயர்படிப்புக்குச் செல்வோர் 50-ல் ஒருவரே. இன்றைய இந்தியாவில் 31 சதவிகித முஸ்லிம்கள் வறுமைக்கோட்டுக்கும் கீழே வாழ்கின்றனர்.
சிறுபான்மையினர் உணவுப் பழக்கத்துக்காகக் கொல்லப்படுகிறார்கள். பல்கலைக்கழகங்களில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்; அவர்கள்மீது தீவிரவாத முத்திரை குத்தி வெறுப்பு உமிழப்படுகிறது; சிறுபான்மையினருக்கு ஆதரவாகப் பேசுவோரின்மீது வெறுப்பு விதைக்கப்படுகிறது; தேர்தல் நலனுக்காகப் பெரும்பான்மையின் வாக்குகளைப் பெறுவதற்காக முஸ்லிம்கள்மீது வெறுப்பு விதைக்கப்பட்டு கலவரங்கள் உருவாக்கப்படுகின்றன. அண்மையில், 2014-ல் உ.பி. தேர்தலின்போது முசாபர் நகரில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்... பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயரச் செய்யப்பட்டனர். இதேபோல தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிகள்மீதும் தொடர்ந்து தாக்குதல்கள் நடப்பது அதிகரித்துவருகிறது. மொத்தத்தில் இன்றைய இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பற்றச் சூழலில் அச்சத்துடன் வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆனால், சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பாக, ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 18-ம் நாளை சர்வதேச சிறுபான்மையினர் உரிமைகள் நாளாகக் கடைப்பிடிக்க வேண்டுமென்று 1992-ம் ஆண்டு டிசம்பர் 18 அன்று, ஐ.நா. மன்றத்தால் அறிவிக்கப்பட்டது. அதை உலகின் ஜனநாயக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன.
எந்த ஒரு நாட்டிலும் மதம், மொழி, இனம் மற்றும் பண்பாடு ஆகியவற்றில் அந்த நாட்டின் பெரும்பான்மையிடமிருந்து வேறுபட்டுச் சிறுபான்மையாக வாழும் மக்களுக்கு அவர்களுடைய தனிப்பட்ட அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமை உண்டு. அந்த உரிமையை அந்தந்த நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்பது அந்த அறிவிப்பின் சாரமாகும்.
சிறுபான்மையினர் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டும்; அவர்களுடைய பண்பாடு, மொழி மற்றும் மத நம்பிக்கைகளை மதித்து நடக்க வேண்டும்; அவற்றைப் பரப்புவதற்கான உரிமைகள் அவர்களுக்கு இருக்க வேண்டும்; சமூகங்களுடனான அவர்களுடைய பரஸ்பர நட்பும், மரியாதையும் பேணப்பட வேண்டும்; இவற்றையெல்லாம் உறுதிப்படுத்துவதற்கான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்; அந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பவை அந்த அறிவிப்பின் அடிப்படை அம்சங்களாகும். இவை ஐ.நா. உடன்படிக்கை தொடர்பான அனைத்து நாடுகளின் விதிமுறைகள் ஆகும். இந்த விதிமுறைகள் மீறப்பட்டு, அவற்றால் எந்த ஒரு நாட்டின் எந்த ஒரு சிறுபான்மை மக்கள் பிரிவாவது பாதிக்கப்படுமானால், அதுகுறித்து அந்தப் பிரிவினர் சர்வதேச அமைப்புகளில் முறையிடவும், அந்த அமைப்புகள் அதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்டுவதற்கும் ஐ.நா. அமைப்பின் அறிவிப்பு வழிவகை செய்துள்ளது. இவற்றை நேர்மையாக நடைமுறைப்படுத்தும் அரசுகளே நிஜமான ஜனநாயக அரசுகளாக இருக்க முடியும்.
இந்தப் பிரகடனத்துக்கு முன்பே சிறுபான்மையினர் உரிமைகள் குறித்த விவாதங்கள் எல்லா நாடுகளிலும் நிகழ்ந்துள்ளன. இதைக் கருத்தில்கொண்டே இந்திய அரசியல் சாசனத்தின் பல்வேறு பிரிவுகள் மதச் சிறுபான்மையினர், மொழிச் சிறுபான்மையினர், கலாசாரச் சிறுபான்மையினர் மற்றும் தங்களுக்கென்று சொந்த வாழ்நெறி நூலை வைத்திருப்போர் ஆகியோரைச் சிறுபான்மையினராக அங்கீகரிக்கின்றன.
இந்திய அரசியல் சட்டத்தின் பாகம் IV-A குடிமக்கள் அனைவரின் அடிப்படைக் கடமையைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதில் பிரிவு 51-A, சிறுபான்மையினர் குறித்த சிறப்புப் பிரிவாகும்; மதம், மொழி மற்றும் பிராந்திய, பிரிவு வேற்றுமைகள் கடந்து இந்தியாவின் அனைத்து மக்களிடையேயும் ஒத்திசைவு மற்றும் பொதுவான சகோதரத்துவ உணர்வை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்றும் நமது கலவையான கலாசாரத்தின் செழுமையான பாரம்பர்யத்தை தித்துப் பாதுகாக்க வேண்டும் என்று அந்தப் பிரிவு கூறுகிறது.
அரசியல் சட்டத்தின் ஆசான் டாக்டர் அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையிடம் கூறியதாவது, ‘‘சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு எதிராக ஒருவகையான வெறித்தனத்தை வளர்த்துக்கொண்டுள்ள கடும்போக்கினருக்கு நான் இரண்டு விஷயங்களைக் கூற விரும்புகிறேன்.
ஒன்று, சிறுபான்மையினர் ஒரு வெடித்தெழும் சக்தியாக இருக்கிறார்கள்; அந்தச் சக்தி வெடித்தெழுமானால், அரசின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் வெடித்துச் சிதறடித்து விடலாம். இதற்கு ஐரோப்பிய வரலாறு போதுமான சாட்சியங்களைக் கொண்டுள்ளது.
மற்றொன்று, இந்தியாவில் சிறுபான்மையினர் தமது இருத்தலை பெரும்பான்மையின் கரங்களில் ஒப்படைத்துள்ளனர். அயர்லாந்துப் பிரிவினையைத் தடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளின் வரலாற்றில் ரெட்மான்ட் கர்சனிடம், ‘பிராடஸ்டன்ட் சிறுபான்மையினருக்கு நீங்கள் விரும்பும் எந்தப் பாதுகாப்பையும் கேளுங்கள். ஆனால், நமக்கு ஓர் ஒன்றுபட்ட அயர்லாந்து இருக்கட்டும்' என்று கூறினார். அதற்கு கர்சன், ‘உங்கள் பாதுகாப்பு யாருக்கு வேண்டும்? நீங்கள் எங்களை ஆள்வதை நாங்கள் விரும்பவில்லை'.
இந்தியாவில் எந்தச் சிறுபான்மையும் இந்த நிலைப்பாட்டைஎடுக்கவில்லை. அவர்கள் விசுவாசத்துடன் பெரும்பான்மையின் ஆட்சியை, அரசியல் பெரும்பான்மையின் ஆட்சியை அல்ல ஏற்றுக்கொண்டுள்ளார்கள். சிறுபான்மையினருக்கு எதிராகப் பாகுபாடு காட்டக் கூடாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டியது பெரும்பான்மையின் கடமையாகும். சிறுபான்மையினர் தொடர்வார்களா அல்லது மறைந்து போவார்களா என்பது பெரும்பான்மை இதைப் பழகிக்கொள்வதைச் சார்ந்ததாகும். சிறுபான்மைக்கு எதிராகப் பாகுபடுத்திக் காண்பதை பெரும்பான்மை கைவிடும் அந்தக் கணமே சிறுபான்மையினராக இருந்துவருவதற்கு எந்த அடித்தளமும் இல்லாமல் போகும், அவர்கள் சிறுபான்மையாக இருப்பதிலிருந்து மறைந்துவிடுவார்கள்.
பெரும்பான்மை இதை மெய்யாக உணருமா?
#“அயர்லாந்து செய்ததும்... இந்தியா செய்யத்தவறியதும்!” - சர்வதேச சிறுபான்மையினர் தின சிறப்புப் பகிர்வு #InternationalMinoritiesDay
கீ.இரா.கார்த்திகேயன்.(நன்றி:விகடன்)
நம்மிடம் மாற்றம் வேண்டும்....
اِنَّ اللّٰهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتّٰى يُغَيِّرُوْا مَا بِاَنْفُسِهِمْ وَاِذَاۤ اَرَادَ اللّٰهُ بِقَوْمٍ سُوْۤءًا فَلَا مَرَدَّ لَهٗ وَمَا لَهُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّالٍ
எந்த சமூகம் தன்னைத்தானே மாற்றிக் கொள்ளவில்லையோ, அந்த சமூகத்தை அல்லாஹ்வும் மாற்றுவதில்லை. (அல்குர்ஆன் 13: 11)
இந்த இறைவசனத்திற்கேற்ப இந்திய இஸ்லாமியர்கள் தங்களை தகவமைத்துக்கொள்ளாத வரை எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது என்பதே நிதர்சனமான உண்மை...
ஏனெனில் இன்று இஸ்லாமியர்களை அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் வாக்கு வங்கிகளாகத்தான் பார்க்கிறார்கள். தேர்தல் நேரத்தில் அனைத்து கட்சிகளும் "நாங்கள் தான் சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்கள்" என்று சர்வ சாதாரணமாய் பரப்புரை செய்து, அதில் வெற்றியும் காண்கிறார்கள்.
வழக்கம் போல் நாமும் ஆளுக்கொரு கட்சியாக பிரிந்து நமது வாக்குகளை சிதற செய்கிறோம். இதனால் தான் பெருபான்மையாக இருக்க வேண்டிய நம் சமூகம் இன்றும் சிறுபான்மையாகவே இருக்கிறது. நம் அரசியல் தலைவர்களும் தனக்கு பின்னால் உள்ள இஸ்லாமிய சமூகத்தை சரியான வழியில் வழி நடத்த தவறி ஏதோ ஒரு கட்சியிடம் ஒரிரு சீட்டுக்காக ஒட்டு மொத்த சமுதாயத்தையே அடமானம் வைக்கிறார்கள். அல்லது எதிரிகளின் பிரித்தாளும் சூட்சிகளுக்கு ஆட்பட்டு தன் தனி மெஜாரிட்டியை காட்டுவதற்காக மிகப் பெரிய வாக்கு வங்கியாக உள்ள நம்மை பயன்படுத்தி அவர்களின் கட்சியை , அமைப்பை வளர்க்கிறார்கள். இதற்கு சமீபத்தில் நடந்த குஜராத் தேர்தல் மிகப் பெரிய சாட்சி.
"ஒற்றுமை எனும் கயிற்றை பற்றி பிடியுங்கள" என்கிற குர்ஆனிய வசனம் வெறும் மேடை பேச்சுக்காக மட்டும் நம் அரசியல் தலைவர்கள் பயன்படுத்துகிறார்கள். உண்மையில் இதை நிதர்சன படுத்த யாரும் முயற்சிப்பதில்லை. முன் வருவதுமில்லை. இப்படி இருந்தால் பெரும்பான்மையாக இருக்க வேண்டிய நம் சமூகம் கியாமத் வரை சிறுபான்மையாகத்தான் இருக்க முடியும். நம் இஸ்லாமிய அரசியல் தலைவர்கள் தங்களின் ஈகோ (அரசியல் காழ்ப்புணர்ச்சியை) விட்டு வெளியே வந்து ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரனியாய் திரளாத வரை வெற்றிக்கனியை சுவைக்க முடியாது. நாம் மக்களுக்கு முன்பாக சிறுபான்மை சமூகமாக இருக்கலாம். ஆனால் நம்மை படைத்த இறைவனுக்கு முன் நாம் எப்பொழுதும் பெரும்பான்மை சமூகம் தான் என்பதை உணர்ந்தாலே நம்மை நாமே மாற்றிக் கொள்ள முடியும்.
நம் சமூகம் எல்லாத்துறையிலும் பெரும்பான்மையாக இருக்க நாம் ஒன்றுபட அல்லாஹ் உதவி செய்வானாக! ஆமின்..