தலைப்பு:
ஹிஜாப் எங்கள் உரிமை.
يٰۤـاَيُّهَا النَّبِىُّ قُلْ لِّاَزْوَاجِكَ وَبَنٰتِكَ وَنِسَآءِ الْمُؤْمِنِيْنَ يُدْنِيْنَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيْبِهِنَّ ذٰ لِكَ اَدْنٰٓى اَنْ يُّعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا
நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.(அல்குர்ஆன் : 33:59)
இன்று....
உணவு,உடை ,இருப்பிடம்... இம்மூன்றும் மனிதனின் அடிப்படை உரிமைகள். இவைகளை மக்களுக்கு ஏற்படுத்தி கொடுப்பது அரசின் கடமை . ஆனால் இன்று இம்மூன்றும் இஸ்லாமியர்களுக்கு மறுக்கப்பட்டு வருகிறது.
மாட்டுக்கறியின் பெயரால்..
சிஏஏ பெயரால்..
ஹிஜாப் பெயரால்..
எங்கே தொடங்கியது பிரச்னை?
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ம் தேதி தொடங்கியது இந்தப் பிரச்னை. கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசின் PU கல்லூரியில் (Pre-university College) 11 மற்றும் 12-ம் வகுப்பைச் சேர்ந்த 8 மாணவிகளுக்கு, ஹிஜாப் அணிந்து வந்ததால் வகுப்புகளில் பங்கேற்க அனுமதி (கல்லூரிக்குள் நுழையலாம்) மறுக்கப்பட்டது. வருகைப்பதிவேடுகளிலும் ஆப்சென்ட் என மார்க் செய்யப்பட்டது.
ஹிஜாப் விவகாரம் ஏன் இவ்வளவு பெரிதானது?
இதைப் புரிந்துகொள்ள கர்நாடகாவின் கடலோரப் பிரதேசத்தின் (Coastel Karnataka) அரசியலையும் (தக்ஷிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி ஆகிய மூன்று மாவட்டங்கள்) புரிந்துகொள்ளவேண்டும். இந்துத்துவ இயக்கங்கள் வலுவாக காலூன்றியிருக்கும் மாவட்டமான உடுப்பியில் மொத்தம் 5 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் 2013-ம் ஆண்டு காங்கிரஸ் 4 இடங்களையும், பா.ஜ.க 1 இடத்தையும் வென்றிருந்தன.
இதுவே 2018-ல் 5 இடங்களையும் பா.ஜ.க வென்றது. இதற்கு காரணமாக அப்போது குறிப்பிடப்பட்டது இந்த 3 மாவட்டங்களிலும் பா.ஜ.க மேற்கொண்ட மத அரசியல்தான். (அது பெரிய கதை என்பதால் இத்துடன் இங்கே நிறுத்திக்கொள்ளலாம்)
இந்நிலையில் அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் Popular Front of India (PFI) (இஸ்லாமிய அமைப்பு) மொத்தம் 3 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. இவை காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்திய இடங்கள். எப்படி பா.ஜ.க மத அரசியல் மூலம் இந்தப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தியதோ அதேபோல தற்போது PFI-யும் செய்கிறது என்பது இந்தப் பிரச்னையில் வைக்கப்படும் குற்றச்சாட்டு. இதற்கு எதிராக ஹிஜாப் விவகாரத்தை இன்னும் பெரிதாக்க பா.ஜ.க முயற்சி செய்கிறது என்பது இன்னொரு குற்றச்சாட்டு.
எது மதபாகுபாடு ?
`ஹிஜாப் என்பது மத அடையாளம். இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதுதான் மாணவர்கள் மத்தியில் மதபாகுபாட்டை உருவாக்குகிறது. ஆகவே கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தங்களின் மத அடையாளங்களுடன் வரக்கூடாது' என அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் இந்து மாணவர்கள் விபூதி பூசிக்கொள்வது, சீக்கிய மாணவர்கள் டர்பன் அணிந்துகொள்வது, பிராமண மாணவர்கள் பூநூல் அணிந்துகொள்வது என எல்லாமே மத அடையாளம் தானே? இவை எதுவுமே போடக்கூடாது, எந்தவொரு மத அடையாளத்துடனும் வரக்கூடாது என்றுசொல்லியிருந்தால் சரி அதிலாவது நியாயம் இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவது மட்டும்தான் பிரச்னை என்று சொல்லி தடைவிதித்தால், இது இஸ்லாமியர்கள் மீதான சங்பரிவாரங்களின் வன்மத்தையும், பாகுபாட்டையும்தான் வெளிப்படுத்துகிறது.
இஸ்லாமிய வீரமங்கைகள் அன்று..
ஸஃபிய்யா (ரலி)
குரைளா இன யூதர்கள் முஸ்லிம்களுடன் போர் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்:
ஹஸ்ஸான் இப்னு ஸாபிதுக்கு சொந்தமான ‘ஃபாஉ’ என்ற கோட்டையில் நபியவர்களின் மாமியான ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிபும் மற்ற முஸ்லிம் பெண்களும் சிறுவர்களும் பாதுகாக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களுக்குத் துணையாக ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரழி) இருந்தார்.
ஸஃபிய்யா (ரழி) கூறுகிறார்: அப்போது ஒரு யூதன் அக்கோட்டையைச் சுற்றி சுற்றி வந்தான். பனூ குரைளா யூதர்கள் நபியவர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை முறித்துவிட்டு போருக்குத் ஆயத்தமாகி விட்டனர் என்பது எங்களுக்குத் தெரியவந்து, அவர்கள் எங்களைத் தாக்க நாடினால்கூட எங்களைப் பாதுகாப்பதற்கு ஹஸ்ஸானைத் தவிர யாரும் இல்லை. ஏனெனில், நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் தங்களது எதிரிகளுடன் மிகத் தீவிரமாக போரில் ஈடுபட்டிருந்தனர். எங்களைத் தாக்குவதற்கு யாராவது வந்தாலும் அவர்களால் எதிரிகளை விட்டுவிட்டு எங்களைக் காப்பாற்றுவதற்காக மதீனாவிற்குள் வர இயலாது. எனவே, நான் ஹஸ்ஸானிடம் “ஹஸ்ஸானே! இந்த யூதன் கோட்டையைச் சுற்றி வருவதை நீ பார்க்கிறாய். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாம் பாதுகாப்பின்றி இருப்பதை நமக்குப் பின்னால் இருக்கும் மற்ற யூதர்களுக்கு இவன் கூறிவிடுவானோ என நான் அஞ்சுகிறேன். நபியவர்களும் நபித் தோழர்களும் நமது நிலையை அறிந்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். எனவே, நீ இறங்கி சென்று அவனைக் கொன்றுவா!” எனக் கூறினேன்.
அதற்கு ஹஸ்ஸான் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அது என்னால் முடியாது என்பது உனக்கு நன்றாகவே தெரியும்” எனக் கூறிவிட்டார். உடனே நான் எனது இடுப்புத் துணியை இறுக்கிக் கட்டிக் கொண்டு ஒரு தடியைக் கையில் எடுத்தேன். பின்பு கோட்டையிலிருந்து வெளியேறிச் சென்று அந்த யூதனை நான் வைத்திருந்த கைத்தடியால் அடித்துக் கொன்றேன். பின்பு கோட்டைக்குள் வந்து “ஹஸ்ஸானே! இறங்கிச் சென்று அவனது உடைமைகளை எடுத்து வா! அவன் ஆண் என்பதால்தான் அவனது உடைமைகளை என்னால் எடுக்க முடியவில்லை” என்றேன். அது எனக்குத் தேவையில்லையென ஹஸ்ஸான் கூறிவிட்டார். (இப்னு ஹிஷாம்)
நபி (ஸல்) அவர்களின் மாமி ஸஃபிய்யா (ரழி) அவர்கள் செய்த இந்த வீரச்செயலினால் பெண்களும், சிறுவர்களும் பாதுகாக்கப்பட்டார்கள். அதாவது, கோட்டைகளை வேவு பார்ப்பதற்காக சென்ற யூதன் திரும்ப வரவில்லை என்பதை அறிந்த மற்ற யூதர்கள் மதீனாவில் உள்ள கோட்டைகள் அனைத்தும் மிகுந்த பாதுகாப்புடன் உள்ளன என்று எண்ணினர். ஆகையால் மற்றொரு முறை இதுபோன்று துணிவு கொள்ள அவர்கள் முன்வரவில்லை.
ஜுவைரியா (ரலி)
ரோமானியர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் நடந்த யர்மூக் போர் மிகவும் பயங்கரமானது. இதில் எதிர் தரப்பில் இரண்டு லட்சம் வீரர்கள் இருந்தனர். முஸ்லிம்களோ முப்பத்து ஐயாயிரம் வீரர்கள் மட்டுமே. ஆரம்பத்தில் முஸ்லிம் வீரர்கள் ரோமானியரின் கடுமையான தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திணறினர். பலர் உயிரிழந்தும் படுகாயமடைந்தனர்.
முஸ்லிம் படையினருக்கு உணவு, நீர் வசதிகள் செய்துகொடுக்கவும், காயமடைந்த வீரர்களுக்குச் சிகிச்சை செய்யவும் முஸ்லிம் பெண்களின் படையும் வந்திருந்தது. அப்படையில அமீர் முஆவியாவின் மகளார் வீர மங்கை ஜுவைரியாவும் இருந்தார்.
எதிரிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முஸ்லிம்கள் தினறுவதைக் கண்டதும் ஜுவைரியா கொதித்தெழுந்தார். பெண்கள் அனைவரையும் திரட்டினார். வாட்களை ஏந்தியவாறு பெண்கள் படை புறப்பட்டது. இதனைக் கண்டதும் ஆண்கள் வீறு கொண்டனர். ஜுவைரியா எதிரிப்படையினும் புகுந்து வாளைச் சுழற்சி சுழற்றி வீசினார். எதிரிகள் திகைத்தனர். ஜுவைரியாவின் உடலில் பல காயங்கள் பட்டன. அவ் வீர மங்கை காயங்களைப் பொருட் படுத்தவில்லை. முஸ்லிம்கள் வெற்றிபெறும் வரை பின்வாங்கவும் இல்லை.
முஸ்லிம்களிடையே வெற்றி முழக்கம் ஏற்பட்ட பின்னரே குதிரையிலிருந்து சோர்ந்து கீழே சாய்ந்தார்............
அமாமா பின்த் ஜுபைர் (ரலி)
அது கலீபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம். அப்துல்லா பின் ஸஅத்(ரலி) தலைமையின் கீழ் ஆப்ரிக்க நாட்டுக்குச் சென்ற படையில் இஸ்லாமிய வீர மங்கை அமாமா ரலி பங்கு பெற்றார்கள். இவர்கள் இஸ்லாமிய வீரர்கள் மத்தியில் உணர்வூட்டும் உரை நிகழ்த்தி ஆர்வமூட்டினார்கள். ஆண் வீரர்களுக்குச் சமமாக வாளேந்தி வீரர் தளபதி அப்துல்லா (ரலி) அவர்களுக்கு உதவியாக அருகிலே இருந்து வீர சாகஸங்கள் புரிந்தார். இருவருமாகச் சேர்ந்து எதிரிப் படைத்தலைவனின் தலையை வெட்டி சாய்த்தனர். ஆப்ரிக்கப் படை பல திசைகளிலும் சிதறி ஓடிற்று.
இன்று வீர மங்கை முஸ்கான்.
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து கொண்டு மாணவி முஸ்கன் மண்டியாவில் உள்ள கல்லூரிக்குள் சென்றார்.
அப்போது அங்கிருந்த இந்துத்துவா மாணவர்கள் அந்த பெண்ணை ஹிஜாப்பை அகற்றிவிட்டு உள்ளே வருமாறு கூறினர். ஆனாலும் அந்த பெண் தனியொருவராக அச்சமின்றி உள்ளே நுழைந்தார்.
அவர் கல்லூரி கட்டடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது நிறைய மாணவர்கள் கழுத்தில் காவி துண்டுடன், கைகளில் காவி கொடியுடன் அந்த மாணவியை முற்றுகையிட்டு ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டனர். எனினும் அந்த மாணவி முன்னோக்கி சென்று கொண்டே இருந்தார்.
ஆனாலும் அவர்கள் விடாமல் அந்த மாணவியின் பின்னால் ஜெய்ஸ்ரீராம் கோஷமிட்டு விரல்களை உயர்த்தினர். இதனால் முஸ்கன் தைரியமாக அல்லாஹ் ஹூ அக்பர் என ஆக்ரோஷமாக கத்தினார்.
இந்த தைரியத்தை பலரும் பாராட்டிவருகின்ற அதே நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் பல இளைஞர்களையும் இளைஞிகளையும் தட்டி எழுப்பி விட்டிருக்கிறது. அல்லாஹு அக்பர்.
எதிரிகளை பார்த்து நாயகம் அல்லாஹு அக்பர்..
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (போருக்காக) அதிகாலை நேரத்தில் கைபருக்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது (யூதர்களான) கைபர்வாசிகள் (வயல் வெளிகளை நோக்கி) மண்வெட்டிகளை எடுத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும் அவர்கள், 'முஹம்மதும் ஐந்து (பிரிவுகள் கொண்ட அவரின்) படையினரும் வருகின்றனர்' என்று கூறினார்கள். உடனே கோட்டையை நோக்கி விரைந்தோடிச் சென்றார்கள். அப்போது, நபி(ஸல்) அவர்கள் தம் இரண்டு கைகளையும் உயர்த்தி, 'அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் (வாசிகளின் நிலை) நாசமாகிவிடும். 'நாம் ஒரு சமுதாயத்தினரின் முற்றத்தில் இறங்கி விடுவோமாயின் எச்சரிக்கை செய்யப்பட்டு வந்த அவர்களுக்கு அதுமிகக் கெட்ட காலை நேரமாகிவிடும்' என்று (திருக்குர்ஆன் 37: 177-வது இறைவசனத்தின் கருத்தைச்) கூறினார்கள்.(ஸஹீஹ் புகாரி 3647)
ஹிஜாப்.......
ஹிஜாபுக்காக ஏன் இந்தளவு இப்பெண்மணிகள் போராட வேண்டும் என்கிற கேள்வி நம் சகோதர சமயத்தவரின் உள்ளத்திலும்,ஹிஜாப் குறித்த புரிதல் நம்மவர்களுக்கும் வேண்டும் என்ற நோக்கத்தோடும்......
ஹிஜாப் என்றால் என்ன?ஹிஜாப் ஏன் கடமை?ஹிஜாப் இஸ்லாமியர்களுக்கானதா?இல்லை உலக மக்கள் அனைவருக்குமானதா?என்பனவற்றை காண்போம்...
ஹிஜாப் என்றால் அரபியில் திரை என்றுப் பொருள்.
குர்ஆனில் ஹிஜாபிற்கு திரை என்றே சொல்லப்படுகிறது...
وَاِذَا سَاَ لْتُمُوْهُنَّ مَتَاعًا فَسْــٴَــــلُوْهُنَّ مِنْ وَّرَآءِ حِجَابٍ
நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். (அல்குர்ஆன் : 33:53)
இஸ்லாத்தில் ஒரு பெண் தலை முதல் பாதம் வரை அங்கியைக் கொண்டு மறைப்பதற்கு ஹிஜாப் என்று சொல்லப்படும்.
மனித வாழ்கையில் ’’ستر’‘மானத்தை மறைத்தல் மற்றும் ‘’حجاب’‘ஹிஜாப் இரண்டும் மிக முக்கிய கடமைகளாகும்.
ஹிஜாப் மற்றும் மானத்தை மறைத்தல் இரண்டும் வெவ்வேறானது.இவற்றை பலர் ஒன்றென தவறாக விளங்கிக் கொள்கின்றனர்.
மானத்தை மறைத்தல் ’’ستر’‘ உலகில் ஆதி பிதா ஆதம் (அலை)அவர்கள் தொடங்கி எல்லா உம்மத்தினருக்கும் கட்டாய கடமையாக இருந்தது.
ஆனால் ‘’حجاب’‘ஹிஜாப் என்பது பெரும்பாலான உம்மதினருக்கு கடமையாக இல்லை.ஏன் இஸ்லாத்தின் ஆரம்ப காலங்களில் ஹிஜாப் கடமை இல்லை.ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டுதான் ஹிஜாப் கடமையாக்கப்பட்டது.
’’ستر’‘ மானத்தை மறைத்தல் என்பது ஆண்,பெண் இரு சாரரும் கட்டாயம் மறைக்கவேண்டிய அங்கங்களை மறைப்பது.
ஹிஜாப் என்பது பெண்களுக்கானது.
கிரேக்கர்கள்...
பண்டைய காலம் முதலே ஹிஜாப் முறை இருந்ததாக வரலாறு கூறுகிறது.
பண்டைய கிரேக்க நாகரீகம் சிறந்த நாகரீகமாக பார்க்கப்படுகிறது.
கிரேக்கர்களிடம் நிர்வாணமும்,அசிங்களும் நிறைந்து காணப்பட்ட காலத்தில் கூட பெண்கள் ஃபர்தா அணியும் பழக்கம் இருந்திருக்கிறது.
ஹான் லிச்சட் என்பவர் எழுதுகிறார்:இன்றைய காலத்தை போலவே அறைகுறை ஆடை அணியும் பெண்களும்,தன்னை மறைத்து வாழும் பெண்களும் கிரேக்க காலத்திலும் இருந்தார்கள்.
ஒரு பெண்குழந்தையை பெற்றெடுத்துவிட்டால் அவள் கண்ணியமாக கருதப்படுவாள். அவள் ஏனைய பெண்களைப் போலல்லாமல் தன்னை முழுமையாக மறைத்துக் கொள்வாள்.
பண்டைய ரோமானிய பெண்களிடம் ஹிஜாப்..
கிரேக்கர்களுக்கு பின் மிகப் பெரும் பேரரசாக ரோம் திகழ்ந்தது.
ரோமர்கள் தங்களின் பெண்களை கண்ணியமாக நடத்தினர். ரோமானியப் பெண்கள் வெட்கம்,பத்தினித்தனம் மிக்க பெண்களாக திகழ்ந்தனர்.தேவையின்றி வீதிகளில் சுற்றித் திரிய மாட்டார்கள்.வெளில் வருவதாக இருந்தால் முகம் முழுக்க மறைத்து வருவார்கள்.தலையில் இருந்து நெஞ்சுப் பகுதி வரை ஒரு துணியையும்,கழுத்து பகுதியிலிருந்து கால் வரை அபாயாவைப் போன்ற ஓர் அங்கியால் முழுமையாக தன்னை மறைத்து வெளியில் வருவார்கள்.
கிருத்துவ மதத்தில் ஹிஜாப்.
கிருஸ்துவத்திலும் ஹிஜாப் கடமையாக இருந்தது.
பைபிள் பழைய ஏற்பாடு:சியோனியப் பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொண்டு சுற்றித்திரிவதை வன்மையாக பழிக்கிறது.அவர்களின் தலைகளில் வேதனை இறங்கும் என எச்சரிக்கிறது.
பைபிள் புதிய ஏற்பாட்டில்;பெண்கள் தலையில் முக்காடுப் போடுவது அவசியம் என்றும் முக்காடில்லாத பெண்களின் தலையில் ஷைத்தான் உட்கார்ந்துக்கொள்கிறான்.
பைபிளில் உள்ளதை வைத்துப்பார்க்கும் போது ஹிஜாப் கிருத்துவர்களுக்கும் பர்ளாக இருந்திருக்கிறது.
அறியமை கால அரபுகளிடம் ஹிஜாப்..
ஷிப்லீ நூஃமானி (ரஹ்)அவர்கள் எழுதுகிறார்கள்:முகம் மற்றும் உடல் முழுவதையும் மறைக்கும் ஹிஜாப் முறை இஸ்லாம் வருவதற்கு முன்பே அரபுகளிடம் இருந்தது.
அறியாமைக்கால அரபுகளின் பழக்க வழக்கங்களை அறியாமைக்கால கவிஞர்களின் கவிதை வழியாக அறிய முடிகிறது.அக்கவிதைகளில் அவர்களிடம் இருந்த ஹிஜாப் பழக்கத்தையும் காணமுடிகிறது.
நாயகம்(ஸல்)அவர்கள் ஜைனப் பின்து ஜஹஷ் (ரலி)அவர்களை திருமணம் செய்த நேரத்தில் தான் ஹிஜாப் குறித்த முதல் வசனம் இறங்கியது.
இந்த வசனம் இறங்குவதற்கு முன்னால் அன்னையவர்கள் தங்களின் வீட்டில் இருக்கும் நிலையை பற்றி ஒரு ஹதிஸில் இப்படி வருகிறது..
((وَزَوْجَتُهُ مُوَلِّيَةٌ وَجْهَهَا إِلَی الْحَائِطِ))
நாயகம் அவர்களின் மனைவி(ஜைனப் (ரலி)அவர்கள் )யின் முகம் சுவற்றை நோக்கியிருக்கும்.
(அன்னியவர் முகத்தை காணாதவாறு அமர்ந்திருப்பார்கள்) ஆக அரபுகளிடம் ஹிஜாப் வழமை ஆரம்பத்திலிருந்த இருந்ததை இந்நிகழ்வுக் காட்டுகிறது.
இந்து மத வேதத்தில் ஹிஜாப்...
ரிக் வேதத்தில்...
உன் கண்களை தாழ்வாக்கிக் கொள்!பார்வையை மேல்நோக்காதே!அது உன் பாதத்தை நோக்கி இருக்கட்டும்!பிறர் எவரும் உன் வெளித்தோற்றத்தை பார்க்கா வண்ணம் திரையிட்டுக் கொள்.(ரிக் வேதம் 8:33:19)
நம் நாட்டிலும் கூட குஜராதி,ராஜஸ்தானி பெண்கள் சேலை உடுத்தும் முறைக் கூட கிட்டத்தட்ட ஹிஜாபை போலவே இருக்கும்.இப்படி பல நாடுகளிலும்,கலாச்சாரங்களிலும் ஹிஜாப் வழமையில் இருந்திருக்கின்றது.
இஸ்லாம் ஆபாசமான, அசிங்கமானவைகளை தடைசெய்கிறது.
இஸ்லாமிய வாழ்க்கை முறை என்பது தூய்மையானதும்,பாதுகாப்பானதும் ஆகும்.அதனால் அருவறுப்பான,அசிங்கமான அனைத்தும் இஸ்லாதில் தடையாகும்.
قُلْ اِنَّمَا حَرَّمَ رَبِّىَ الْـفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَ الْاِثْمَ وَالْبَـغْىَ بِغَيْرِ الْحَـقِّ وَاَنْ تُشْرِكُوْا بِاللّٰهِ مَا لَمْ يُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا وَّاَنْ تَقُوْلُوْا عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ
“என் இறைவன் ஹராம் எனத் தடுத்திருப்பவையெல்லாம், வெளிப்படையான அல்லது அந்தரங்கமான, மானக்கேடான செயல்கள்; பாவங்கள்; நியாயமின்றி (ஒருவருக்கொருவர்) கொடுமை செய்வது ஆதாரமில்லாமலிருக்கும் போதே; நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவது (ஆகிய இவையே என்று நபியே!) நீர் கூறுவீராக.(அல்குர்ஆன் : 7:33)
وَيَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ وَالْبَغْىِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ
அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் - நீங்கள் நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான்.(அல்குர்ஆன் : 16:90)
وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ
“வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்.(அல்குர்ஆன் : 6:151)
இவ்வசனங்களிலிருந்து தீயகுணம்,தீயசொல்,செயல்.தீயநடத்தை,அனைத்தும் தடை என்பது விளங்குகிறது.
பார்வை...
பாவங்கள் அனைத்தின் ஆணிவேர் பார்வை.அதனால் இஸ்லாம் பார்வையை பேணும் படி கூறுகிறது.
قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ اِنَّ اللّٰهَ خَبِيْرٌ بِمَا يَصْنَـعُوْنَ
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.(அல்குர்ஆன் : 24:30)
وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَـضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.(அல்குர்ஆன் : 24:31)
பார்வையை பேணுதல் ஆண்,பெண் இரு சாராரின் மீதும் கடமையாகும். பார்வை இச்சையைத் தூண்டி பாவம் செய்ய வைக்கும்.
زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالْبَـنِيْنَ وَالْقَنَاطِيْرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَـيْلِ الْمُسَوَّمَةِ وَالْاَنْعَامِ وَالْحَـرْثِ ذٰ لِكَ مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الْمَاٰبِ
பெண்கள் ,மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது;(அல்குர்ஆன் : 3:14)
ஜரீர் இப்னு அப்துல்லாஹ்( ரலி)அவர்கள் நபியவர்களிடம் கேட்டார்கள்.
"எனக்கெதிரில் வரும் பெண்ணின் மீது பார்வை பட்டுவிட்டால் என்ன செய்வது"என்று அதற்கு நபியவர்கள் أَصْرِفَ بَصَرِي "உனது பார்வையை திருப்பிக்கொள்"என்றார்கள்.
இஸ்லாத்தில் மஹ்ரமல்லாத பெண்ணைத் தொடுவதும், அவளோடு தனித்திருப்பதும் தடையாகும்.
ஹதீஸில் வருகிறது...
أَلَا لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ إِلَّا کَانَ ثَالِثَهُمَا الشَّيْطَانُ
அறிந்துக்கொள்:ஒரு ஆணும் பெண்ணும் மூன்றாவதாக அவ்விருவாரோடு ஷைத்தான் இருந்தே தவிர தனித்திருக்கமாட்டார்கள்.
பெண்ணின் அழகு,அலங்காரம்,அவள் அணியும் கொலுசின் ஓசைக்கூட ஒரு ஆணை சலனப்படுத்திவிடும் என்று பின் வரும் வசனம் கூறுகிறது.
وَقَرْنَ فِىْ بُيُوْتِكُنَّ وَلَا تَبَـرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْاُوْلٰى
(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; (அல்குர்ஆன் : 33:33)
وَلَا يَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِيُـعْلَمَ مَا يُخْفِيْنَ مِنْ زِيْنَتِهِنَّ وَتُوْبُوْۤا اِلَى اللّٰهِ جَمِيْعًا اَيُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ
மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.(அல்குர்ஆன் : 24:31)
குரல்.....
பெண்களின் குரல் கூட ஆண்களை சலனப்படுத்தும்.
فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَـطْمَعَ الَّذِىْ فِىْ قَلْبِهٖ مَرَضٌ وَّقُلْنَ قَوْلًا مَّعْرُوْفًا
(அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.(அல்குர்ஆன் : 33:32)
நறுமணம்...
பெண்கள் வீட்டில் எல்லா வகையான நறுமணப் பொருளையும் பயன்படுத்தலாம்,ஆனால் வெளியே செல்லும் போது அதிக நறுமணமுள்ள பொருளைப் பூசக்கூடாது.
((وَإِنَّ طِيبَ الرِّجَالِ مَا ظَهَرَ رِيحُهُ وَلَمْ يَظْهَرْ لَوْنُهُ أَلَا إِنَّ طِيبَ النِّسَائِ مَا ظَهَرَ لَوْنُهُ وَلَمْ يَظْهَرْ رِيحُهُ))
ஆண்களின் நறுமணம் அதன் வாடை நுகரும் வண்ணமும்,அதன் நிறம் வெளியே தெரியாத வண்ணமும் இருக்கும்.
பெண்களின் நறுமணம் நிறம் வெளியே தெரியும் வண்ணமும்,அதன் வாடை வெளியே நுகராத வண்ணமும் இருக்கும்.
வெட்கம்,நாணம்
இமாம் ராகிப் (ரஹ்)அவர்கள் எழுதுகிறார்கள்:الحياء انقباض النفس عن القبائح وتركه لذلك
வெட்கம் என்பது அருவறுப்பானவற்றை விட்டும் உள்ளத்தை கட்டுப்படுத்துவதாகும்.
வெட்கம் என்பது ஓர் உள்ளுணர்வு அதனால் இயற்கையாகவே தகாத செயலை கண்டதுமே உள்ளுணர் மனிதனை தடுக்கிறது.வெட்கம் ஈமானின் ஒரு பகுதியாகும்.
ஆதம் (அலை)அவர்களின் சிறு தவற்றினால் அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று உடனே வெட்கத்தினால் சுவனத்தின் இலைகளால் தங்களை மறைத்துக்கொண்டார்கள் என குர்ஆன் கூறுகிறது.
فَدَلّٰٮهُمَا بِغُرُوْرٍ فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْءٰتُهُمَا وَطَفِقَا يَخْصِفٰنِ عَلَيْهِمَا مِنْ وَّرَقِ الْجَـنَّةِ وَنَادٰٮهُمَا رَبُّهُمَاۤ اَلَمْ اَنْهَكُمَا عَنْ تِلْكُمَا الشَّجَرَةِ وَاَقُلْ لَّـكُمَاۤ اِنَّ الشَّيْطٰنَ لَـكُمَا عَدُوٌّ مُّبِيْنٌ
இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று; அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு: “உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?” என்று கேட்டான்.(அல்குர்ஆன் : 7:22)
மூஸா (அலை)அவர்கள் இரு இளம் பெண்களுக்கு கிணற்றில் தண்ணீர் எடுக்க உதவிய போது அவர்களை தங்களின் தந்தையிடம் கூட்டிச் செல்ல வெட்கத்தோடு அப்பெண்கள் வந்ததாக குர்ஆன் கூறுகிறது.
﴿ شرم و حیاء ﴾فَجَآءَتْهُ اِحْدٰٮہُمَا تَمْشِىْ عَلَى اسْتِحْيَآءٍ قَالَتْ اِنَّ اَبِىْ يَدْعُوْكَ
(சிறிது நேரத்திற்குப்) பிறகு அவ்விரு பெண்களில் ஒருவர் நாணத்துடன் நடந்து மூஸாவின் முன் வந்து; “எங்களுக்காக நீங்கள் தண்ணீர் புகட்டியதற்கான கூலியை உங்களுக்கு வழங்குவதற்காக எங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்” என்று கூறினார்; (அல்குர்ஆன் : 28:25)
அப்பெண்கள் அன்னிய ஆணோடு பேச வெட்கப்பட்டனர்.
வெட்கம் மனிதனின் இயற்கை குணமாகும்.
வெட்கம் குறித்து ஏராளமான நபிமொழிகள் உள்ளன.
(الْإِيمَانُ بِضْعٌ وَسِتُّونَ شُعْبَةً وَالْحَيَائُ شُعْبَةٌ مِنْ الْإِيمَانِ ))
ஈமான் அறுபது கிளைகளைக் கொண்டது. வெட்கம் ஈமானின் ஓர் பகுதியாகும்.
اَلْحَيَاءُ کُلُّهُ خَيْرٌ))
வெட்கம் அது முழுவதுமே சிறந்ததாகும்.
مَا کَانَ الْفُحْشُ فِي شَيْئٍ إِلَّا شَانَهُ وَمَا کَانَ الْحَيَائُ فِي شَيْئٍ إِلَّا زَانَهُ)
இஸ்லாமிய மார்க்கத்தில் சுய ஒழுக்கம்,வெட்கம்,கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.இவை இல்லையெனில் வாழ்க்கையின் அமைப்பு சீர்க்கெட்டுப்போய்விடும்.
ஹிஜாபின் அவசியம்...
இஸ்லாத்தில் பெண்களுக்கு ஹிஜாபை கடமையாக்கியிருப்பது,மானக் கேடானவற்றை தடுப்பதற்காக தான்.
ஹிஜாப் குறித்த முதல் வசனம் நபி(ஸல்)அவர்கள் ஜைனப் (ரலி)அவர்களை திருமணம் முடித்ததற்கு பின்னால் ஹிஜ்ரி 5ம் ஆண்டில் இறங்கியது....
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتَ النَّبِىِّ اِلَّاۤ اَنْ يُّؤْذَنَ لَـكُمْ اِلٰى طَعَامٍ غَيْرَ نٰظِرِيْنَ اِنٰٮهُ وَلٰـكِنْ اِذَا دُعِيْتُمْ فَادْخُلُوْا فَاِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوْا وَلَا مُسْتَاْنِسِيْنَ لِحَـدِيْثٍ اِنَّ ذٰلِكُمْ كَانَ يُؤْذِى النَّبِىَّ فَيَسْتَحْىٖ مِنْكُمْ وَاللّٰهُ لَا يَسْتَحْىٖ مِنَ الْحَـقِّ وَاِذَا سَاَ لْتُمُوْهُنَّ مَتَاعًا فَسْــٴَــــلُوْهُنَّ مِنْ وَّرَآءِ حِجَابٍ ذٰ لِكُمْ اَطْهَرُ لِقُلُوْبِكُمْ وَقُلُوْبِهِنَّ وَمَا كَانَ لَـكُمْ اَنْ تُؤْذُوْا رَسُوْلَ اللّٰهِ وَلَاۤ اَنْ تَـنْكِحُوْۤا اَزْوَاجَهٗ مِنْ بَعْدِهٖۤ اَبَدًا اِنَّ ذٰ لِكُمْ كَانَ عِنْدَ اللّٰهِ عَظِيْمًا
முஃமின்களே! (உங்களுடைய நபி) உங்களை உணவு அருந்த அழைத்தாலன்றியும், அது சமையலாவதை எதிர்பார்த்தும் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் அழைக்கப்பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள்; அன்றியும் நீங்கள் உணவருந்தி விட்டால் (உடன்) கலைந்து போய் விடுங்கள்; பேச்சுகளில் மனங்கொண்டவர்களாக (அங்கேயே) அமர்ந்து விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும்; இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார்; ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை; நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல; அன்றியும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது; நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் (பாவ) காரியமாகும்.(அல்குர்ஆன் : 33:53)
அடுத்த வசனம்...
يٰۤـاَيُّهَا النَّبِىُّ قُلْ لِّاَزْوَاجِكَ وَبَنٰتِكَ وَنِسَآءِ الْمُؤْمِنِيْنَ يُدْنِيْنَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيْبِهِنَّ ذٰ لِكَ اَدْنٰٓى اَنْ يُّعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا
நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.(அல்குர்ஆன் : 33:59)
ஹிஜாப் அடிமைதனத்தின் அடையாளமா?
ஹிஜாப் பெண்களை அடிமைப்படுத்துகின்றது என்று கூறுவோர் ஒன்று காழ்ப்புணர்ச்சியினாலோ அல்லது தவறானப்புரிதலாலோ கூறுகிறார்கள்.
உண்மையில் ஹிஜாப் பெண்களின் கண்ணியம்,பெண்களின் பெருமை.
இஸ்லாத்தில் ஆண்,பெண் என்கிற பேதம் கிடையாது.
உரிமைகள் என்று வரும் போது ஆண்,பெண் என்கிற பாகுபாடு இஸ்லாத்தில் இல்லை.
ஆனால் உளவியல் ரீதியிலும்,உடல் ரீதியிலும் இயற்கையிலே ஆண்,பெண் வித்தியாசப்படுவதாலும்,
ஆணை விட பெண் அதிகம் பாதிக்கப்படுவதால் தான் பெண்களுக்கு ஹிஜாப் போன்ற சட்டங்களை இஸ்லாம் கூறுகிறது.
ஹிஜாப் இஸ்லாமியப் பெண்களுக்கானது மாத்திரம் அல்ல,உலகில் மானத்தோடும்,மரியாதையோடும், கண்ணியத்தோடும் வாழ நினைக்கும் அனைத்துப் பெண்களுக்குமானதாகும்.
இந்நிலையில் இஸ்லாமிய சிங்கப் பெண்கள், நெஞ்சுரத்தோடும் துணிச்சலோடும் "நாங்கள் ஹிஜாபோடுத்தான் கல்லூரிக்கு வருவோம்" "ஹிஜாப் எங்களின் உரிமை"என்றும் தொடர்ந்து போராடிவருகிறார்கள்.
அவர்களின் உறுதியான இப்போராட்டம் இந்தியா முழுக்க பலதரப்பட்ட மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
வெகுஜனம் தொடங்கி நடுநிலையாளர்கள்,சமூக செயல்ப்பாட்டாளர்கள்,எழுத்தாளர்கள், பேச்சாளர்கள்,அரசியல்வாதிகள் என எல்லாத்தரப்பு மக்களும் ஹிஜாபுக்கு ஆதரவுத் தெரிவிக்கின்றனர்.
இன்னும் ஒரு படி மேலாக நம் சகோதர சமயத்து பெண்களும் ஹிஜாப் அணிந்து அப்பெண்களுக்கு ஆதரவுத்தருகிறார்கள்.
ஹிஜாபுக்காக போராடும் நம் சகோதரிக்களுக்கு நல்லுதவியும்.வெற்றியும் வல்ல அல்லாஹ் வழங்கிடுவானாக!ஆமீன்...