Thursday, 9 December 2021

ஜும்ஆ பயான் 10/12/2021

தலைப்பு :

மனித உரிமைகள்.

وَلَـقَدْ كَرَّمْنَا بَنِىْۤ اٰدَمَ وَحَمَلْنٰهُمْ فِى الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنٰهُمْ مِّنَ الطَّيِّبٰتِ وَفَضَّلْنٰهُمْ عَلٰى كَثِيْرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيْلًا‏

நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.  (அல்குர்ஆன் : 17:70)

மனித இனம் சிறந்தது.  படைப்பினங்களில் மனிதன் சங்கையும்,மேன்மையும் மிக்கப் படைப்பாகும்.மனிதன் சுய கட்டுப்பாட்டுடனும்,ஒழுக்கமாகவும் வாழ்ந்து தன் கண்ணியம் காப்பதுடனே,சக மனிதனின் மானம் மரியாதை,உயிர்,உடமைகள் இவற்றுக்கு குந்தகம் விளைவிக்காமல்,அவனுக்கு செலுத்தும் கடமைகள்,உரிமைகளைப் பேணுவது அவசியமாகும்.

இறைவழிப்பாட்டிற்கு நிகரான கடமை,சக மனிதனுக்கு ஆற்றவேண்டிய கடமைகளாகும். இன்னும் சொல்லப்போனால் இறைவழிப்பாட்டில் குறையிருப்பின் இறைவன் நாடினால் மன்னிப்பான். ஆனால் சக மனிதனுக்கு செய்யவேண்டிய கடமைகளில் குறையிருப்பின் அவர் மன்னிக்கும் வரை அல்லாஹ் மன்னிப்பதில்லை.

நஷ்டவாளி யார்?

இம்மையில் மனித உரிமைப் பேணாதவன் நாளை மறுமையில் பெரும் நஷ்டவாளி.மேலும் எவ்விதம் அவன் நஷ்டமடைகிறான் என்பதனை விவரிக்கின்றது பின் வரும் நபிமொழி....

عن أبي هريرة رضي الله عنه:

« أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ قَالُوا : الْمُفْلِسُ فِينَا مَنْ لا دِرْهَمَ لَهُ وَلا مَتَاعَ ، فَقَالَ : إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلاةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا وَقَذَفَ هَذَا وَأَكَلَ مَالَ هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ وَهَذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِي النَّار » [رواه مسلم]

நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடத்தில், ‘உங்களில் நஷ்டவாளி யார் என்று தெரியுமா? என்று கேட்டார்கள். (அதற்கு அவர்கள்) ‘எங்களில் (எவர்களிடத்தில்) தீனாரும் உலகத்தில் வாழ்வதற்கு வசதி வாய்ப்பும் இல்லையோ அவர்களே நஷ்டவாளி என்று குறிப்பிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘மறுமை நாளில் ஒரு மனிதன் தொழுகை, நோன்பு, ஜக்காத் போன்ற நல்லறங்களுடன் வருவான். ஆனால் பலர் வந்து, ‘இவன் என்னை ஏசியவன், நான் செய்யாத விஷயத்தை என் மீது சுமத்தியவன், எனது செல்வத்தை சாப்பிட்டவன், இரத்தங்கள் ஓட்டியவன், அடித்தவன் என்றெல்லாம் அவனுக்கு எதிராக மனிதர்கள் முறையீடு செய்வார்கள். அப்போது அவன் இவ்வுலகில் செய்த நல்லமல்களை எடுத்து அவர்களுக்கு கொடுக்கப்படும். நல்லமல்கள் முடிந்த பிறகு அவர்களின் தீமைகளிலிருந்து எடுக்கப்பட்டு இம்மனிதனுக்கு கொடுக்கப்படும். இவ்வாறு அவன் நரகத்திற்கு நுழைவிக்கப்படுவான். (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம்)

ஆண்டுதோறும்......

டிசம்பர் 10 அன்று உலகம் முழுவதும் மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது. கலாச்சாரம், சமூகம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சாத்தியமான அனைத்து சூழல்களிலும் சமூகத்தின் நலனை உறுதிப்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 1948ல் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை (யு.டி.எச்.ஆர்) ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஏற்றுக்கொண்டது. இந்த நாளை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படடுகிறது.

இனம், நிறம், மொழி, பாலினம், அரசியல், ஜாதி, மதம், பிறப்பு, சொத்து, பிற அந்தஸ்து, தேசிய அல்லது சமூக தோற்றம் என பாகுபாடு பார்க்கக்கூடாது என்பதை உணர்த்துவதே இந்த தினம்.

உலகளவில் "மனித உரிமை"என்பது இந்த இரண்டு நூற்றாண்டுகளாக தான் பேசுப் பொருளாகியிருக்கிறது.குறிப்பாக இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகள்,பொருளாதார நெருக்கடி,அசாதாரன நிலை போன்றவை இது குறித்து சிந்திக்கவும்,மாநாடுகள்,கருத்தரங்குகள் வழியாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஐக்கிய நாடுகளின் சபை முயற்சிகளை முன்னெடுக்கின்றன.

ஆனால் இவ்வடிப்படை உரிமைகளை நினைத்துக்கூட பார்க்கமுடியாத காலத்திலே மனிதனுக்கு அவனுடைய உரிமைகளை உரிய முறையில் வழங்கிய பெருமை இஸ்லாத்திற்கே உரியது.

மனித உரிமைகளில் மிக முக்கியமானது நான்கு.

1. உயிர் பாதுகாப்பு.

2. உடமை பாதுகாப்பு.

3. கண்ணியம் பாதுகாப்பு.

4. தன் சார்ந்திருக்கும் கொள்கை பாதுகாப்பு.

உயிர் பாதுகாப்பு.

مِنْ اَجْلِ ذٰ لِكَ ‌ۛ ؔ  كَتَبْنَا عَلٰى بَنِىْۤ اِسْرَآءِيْلَ اَنَّهٗ مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ اَوْ فَسَادٍ فِى الْاَرْضِ فَكَاَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيْعًا  وَمَنْ اَحْيَاهَا فَكَاَنَّمَاۤ اَحْيَا النَّاسَ جَمِيْعًا ‌ وَلَـقَدْ جَآءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنٰتِ ثُمَّ اِنَّ كَثِيْرًا مِّنْهُمْ بَعْدَ ذٰ لِكَ فِى الْاَرْضِ لَمُسْرِفُوْنَ‏ 

இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.(அல்குர்ஆன் 5:32)

ஒரு நாள் அண்ணல் நபி(ஸல்)அவர்களை பார்க்க பால்குடித்தாய் ஹலிமா ஸஃதிய்யா அவர்களின் சகோதரி வருகை புரிந்த சமயத்தில் (ஸல்) அவர்கள் தன் தலைப்பாகையை விரிப்பாக்கி கௌரவித்தார்கள்.

அதே அண்ணல் நபி(ஸல்)அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்காத ஒரு மனிதர் வருகை புரிந்த சமயத்திலும் (ஸல்) அவர்கள் தன் தலைப்பாகையை விரிப்பாக்கி கண்ணியப்படுத்தினார்கள். 

அண்ணல் நபி(ஸல்)அவர்களின் சபையில் உரிமையளிக்கும் விஷயத்தில் கலீபா அபுபக்கரும்(ரலி),காட்டரபியும் ஒன்றே!

ஒரு நாள் நபி(ஸல்)அவர்களின் சபையில் ஒரு குவளை நிரம்ப பால் வந்திருந்த சமயத்தில், சபையில் முதல் இடத்தைப் பிடித்த  சிறுவனிடம் தாமதமாக வந்திருந்த அபுபக்கர்(ரலி)அவர்களுக்கு அப்பாலை கொடுப்பதற்கு அண்ணல் நபி (ஸல்)அவர்கள் அனுமதியல்லவா கேட்டார்கள்.

இஸ்லாம் தன்னைப் பற்றியொழுகும் விசுவாசிகளின் உயிர்கள் மற்றும் உரிமைகளையும், அரசின் ஆணைகளை மதித்து நடக்கும் மாற்றுமத மக்கள் அனைவரின் உயிர்கள் மற்றும் உரிமைகளையும் ஒரே கண்ணோட்டத்துடனேயே பார்க்கிறது.

இஸ்லாமியர்களின் உயிர்களும்,மாற்றுமத மக்களின் உயிர்களும்,ஏன் மற்ற உயிரினங்களின் உயிர்களும் இஸ்லாத்தில் ஒன்று தான். ஏனென்றால் உயிர் புனிதமானது.இதற்கு ஒரு முகம்,அதற்கு ஒரு முகம் என்றெல்லாம் இஸ்லாத்தில் கிடையாது.

முன்னொரு காலத்தில் வாழ்ந்த ஒரு பெண் ஒரு பூனையை பட்டினி போட்டு, அதை சித்திரவதை  செய்தால் என்பதால் அவள் நரகவாசியாக்கப்பட்டாள்.

அதே நேரத்தில் மற்றொரு பெண், அவள் விபச்சாரி, அவள்  ஒரு நாயின் தாகத்தை தீர்த்ததால் அவள் சுவனவாசியாக்கப்பட்டாள்.

இதுவே இஸ்லாத்தின் உண்மை நிலை.

كُنْتُ قَائِمًا عِنْدَ رَسولِ اللهِ ﷺ فَجَاءَ حِبْرٌ مِن أحْبَارِ اليَهُودِ فَقالَ: السَّلَامُ عَلَيْكَ يا مُحَمَّدُفَدَفَعْتُهُ دَفْعَةً كَادَ يُصْرَعُ منها فَقالَ: لِمَ تَدْفَعُنِي؟ فَقُلتُ: ألَا تَقُولُ يا رَسولَ اللهِ، فَقالَ اليَهُودِيُّ: إنَّما نَدْعُوهُ باسْمِهِ الذي سَمَّاهُ به أهْلُهُ. فَقالَ رَسولُ اللهِ ﷺ: إنَّ اسْمِي مُحَمَّدٌ الذي سَمَّانِي به أهْلِي، فَقالَ اليَهُودِيُّ: جِئْتُ أسْأَلُكَ، فَقالَ له رَسولُ اللهِ ﷺ: أيَنْفَعُكَ شيءٌ إنْ حَدَّثْتُكَ؟ قالَ: أسْمَعُ بأُذُنَيَّ، فَنَكَتَ رَسولُ اللهِ ﷺ بعُودٍ معهُ، فَقالَ: سَلْ فَقالَ اليَهُودِيُّ: أيْنَ يَكونُ النَّاسُ يَومَ تُبَدَّلُ الأرْضُ غيرَ الأرْضِ والسَّمَوَاتُ؟ فَقالَ رَسولُ اللهِ ﷺ: هُمْ في الظُّلْمَةِ دُونَ الجِسْرِ قالَ: فمَن أوَّلُ النَّاسِ إجَازَةً؟ قالَ: فُقَرَاءُ المُهَاجِرِينَ قالَ اليَهُودِيُّ: فَما تُحْفَتُهُمْ حِينَ يَدْخُلُونَ ... المزيد مسلم (٢٦١ هـ)، صحيح مسلم ٣١٥ • [صحيح] .

தவ்பான்(ரலி)அவர்கள் நபி அவர்களின் பிரத்தியேகத் தோழர் ஆவார். அவர்கள் அறிவிக்கின்றனர்.ஒரு சமயம் நபி (ஸல்)அவர்களின் திருச்சமூகத்தில் நின்றுகொண்டிருந்தேன். யூத மதத்தைச் சார்ந்த அறிஞர் ஒருவர் நபி(ஸல்)அருகில் வந்து "அஸ்ஸலாமு அலைக்க யா முஹம்மத்"(முஹம்மது உம்மீது சாந்தி உண்டாக்க!)என்று கூறினார்.இவ்வார்த்தையை செவிமெடுத்த நான் மிக பலமாக அவரை என் கரத்தால் குத்தினேன்.யூத அறிஞர் கீழே விழுந்துவிட்டார்.அவர் எழுந்து என்னை நோக்கி  "என்னை ஏன் குத்தினீர் எனக் கேட்டார்.நான் அவரிடம் "அல்லாஹ்வின் ரஸூலே உங்கள் மீது சாந்தி உண்டாகுக! எனக் கூறுவதை விடுத்து, முஹம்மதே உம் மீது சாந்தி உண்டாகுக என்று ஏன் கூறனீர்கள்? எனக் கேட்டேன். அதற்கவர் உங்களின் தலைவருக்கு அவரின் குடும்பத்தார் என்ன பெயர் சூட்டியுள்ளனரோ அப்பெயரைக் கூறித்தானே அவர்களை நாங்கள் அழைக்கிறோம்(இதில் தவறு என்ன?)எனக் கேட்டார்.அப்போது நபி(ஸல்)"நிச்சயமாக என் பெயர் முஹம்மதுதான். அப்பெயரையே என் குடும்பத்தார் எனக்குச் சூட்டியுள்ளனர். யூத அறிஞர் நடந்து கொண்ட முறையில்ஆட்சசேபத்துக்குரியது எதுவுமில்லை "எனக் கூறி தவ்பான்(ரலி)அவர்களைக் கண்டித்தார்கள்.

பொதுவாகவே யூதர்கள் நபி(ஸல்)அவர்களைத் தரக்குறைவாக அழைப்பது வழக்கம். அதனால்தான் தான் தவ்பான்(ரலி)அவர்கள் யூத அறிஞர் 'முஹம்மதே! 'என்றழைத்து சலாம் கூறியதையும் ஒழுங்கீனமெனக் கருதினார்கள். எனினும் அகிலமனைத்திற்கும் அருளாக வந்த அண்ணல் நபி(ஸல்)அவர்கள் தவ்பான்(ரலி)அவர்கள் நடந்துகொண்ட முறையைக் சிறந்ததெனக் கருதவில்லை. மாறாக "என் நபித்துவத்தை நம்பாத மனிதரும் முஸ்லிம்களைப்போன்றே என்னை கண்ணியப்படுத்த வேண்டுமென்பது கட்டாயமல்ல'எனும் கருத்தைச் சுட்டிக்காட்டினார்கள். இச்சம்பவங்களின் மூலம் மாற்று மதத்தாரின் உரிமைகளுக்கும், உயிர், உடமைகளின் பாதுகாப்பிற்கும் எந்த அளவு மதிப்பும் மரியாதையும் வழங்கியுள்ளார்கள் என்பதை விளங்க முடிகிறது.

யூதன் ஒருவன் சிறுமி ஒருத்தியின் தலையை இரண்டு கற்களுக்கிடையே வைத்து நசுக்கிவிட்டான். அந்தச் சிறுமியிடம் மக்கள், 'உன்னை இப்படிச் செய்தவன் யார்? இன்னாரா? இன்னாரா?' எனறு கேட்டனர். யூதனின் பெயர் கூறப்பட்டவுடன் அச்சிறுமி ('ஆம், அவன்தான்' என்பதற்கு அடையாளமாகத்) தலையசைத்தாள். யூதன் பிடிக்கப்பட்டு தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். நபி(ஸல்) அவர்கள் அவனுடைய தலையை இரண்டு கற்களுக்கிடையே வைத்து நசுக்கும்படி உத்தரவிட, அவ்வாறே அவனுடைய தலை நசுக்கப்பட்டது. (ஸஹீஹ் புகாரி (2413)

நபி(ஸல்) அவர்கள் "மலை உச்சியிலிருந்து விழுந்தோ, நஞ்சை உண்டோ, இரும்பால் தாக்கியோ, தன்னைத்தானே ஒருவன் மாய்த்துக்கொண்டால் அதுபோன்ற தண்டனையை அவன் நீண்ட காலமாக நரகத்தில் அனுபவிப்பான். "என்று கூறியுள்ளார்கள்.

இதுபோன்று பல்வேறு நாயக வாக்குகள் மனிதன் தற்கொலை செய்து கொள்வதை வன்மையாக கண்டிக்கின்றன.

பரிசுத்த இஸ்லாம் மனிதர்கள் தம் உயிர்களைக் தாமே மாய்த்துக்கொள்வதற்குக்கூட அறவே அனுமதி வழங்கவில்லை.

அவ்விதமிருக்க மற்றோரைத் தகுந்த காரணமின்றி கொலை செய்ய எவ்விதம் அனுமதியளிக்கும்?

உடமை பாதுகாப்பு.

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார். 

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் மக்கா வெற்றிப்போரின்போது (மக்ஸூமி குலத்துப்) பெண்ணொருத்தி திருடிவிட்டாள். எனவே, அவளுடைய குலத்தார் (தண்டனைக்கு) அஞ்சி அவளுக்காகப் பரிந்துரைக்கும்படி கோரி, உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களிடம் வந்தார்கள். உஸாமா(ரலி), 'எனக்காக (அல்லாய்விடம்) பாவமன்னிப்புக் கோரி பிரார்த்தியுங்கள், இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார்கள். மாலை நேரம் வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உரையாற்றிட எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்ற படி போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிறகு, 'நிற்க, உங்களுக்கு முன்னிருந்த மக்களை அழித்ததெல்லாம் அவர்கள், தம்மிடையேயுள்ள உயர்ந்த(குலத்த)வன் திருடிவிடும்போது அவனை (தண்டிக்காமல்)விட்டுவந்ததும், பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடி விடும்போது அவனுக்கு தண்டனை கொடுத்து வந்ததும் தான். முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே திருடி விட்டிருந்தாலும் அவளுடைய கையையும் நான் வெட்டியிருப்பேன்' என்று கூறினார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்)அவர்கள் அந்தப் பெண்ணின் கையை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவளுடைய கை வெட்டப்பட்டது. அதன் பிறகு அவள் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரி (திருந்தி)விட்டாள்; மேலும் மணந்தாள். 

ஆயிஷா(ரலி) கூறினார்: அதன் பிறகு அவள் என்னிடம் வந்து கொண்டிருந்தாள். நான் அவளுடைய தேவையை(ப் பூர்த்தி செய்யும்படி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் முறையிடுவேன். (ஸஹீஹ் புகாரி (4304)

கண்ணியம் பாதுகாப்பு

ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) அறிவித்தார். 

(கூஃபாவில் அதிகாரியாக இருந்த) ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) மீது கூபா வாசிகளில் சிலர் உமர்(ரலி) அவர்களிடம் புகார் கூறினார்கள். அவர் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்பதும் அவர்களின் புகார்களில் ஒன்றாக இருந்தது. உடனே உமர்(ரலி) அவரை நீக்கிவிட்டு அம்மார்(ரலி) அவர்களை அதிகாரியாக நியமித்தார்கள். ஸஃதை (மதீனாவுக்கு) வரவழைத்து 'அபூ இஸ்ஹாக்! நீங்கள் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்று கூஃபா வாசிகளில் சிலர் கூறுகின்றனரே! என்று கேட்டார்கள். 

அதற்கு ஸஃது(ரலி) 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப் படியே தொழுகை நடத்தினேன். அதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. இஷாவுடைய முதல் இரண்டு ரக்அத்களில் நீண்ட நேரம் ஓதியும் பின் இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதியும் தொழுகை நடத்துகிறேன்' என்று பதிலளித்தார்கள். 'உம்மைப் பற்றி நம்முடைய கருத்தும் அதுவே' என்று உமர்(ரலி) கூறினார். 

அதன்பின்னர் ஒரு நபரை அல்லது சில நபர்களை ஸஃது(ரலி) உடனே கூஃபாவுக்கு அனுப்பி, ஸஃதைப் பற்றிக் கூஃபா வாசிகளிடம் விசாரிக்கச் சொன்னார்கள். விசாரிக்கச் சென்றவர் ஒரு பள்ளிவாசல் விடாமல் அவரைப் பற்றி விசாரித்தபோது அனைவரும் ஸஃதைப் பற்றி நல்ல விதமாகவே கூறினார்கள். 'பனூஅபஸ்' கூட்டத்தாரின் பள்ளி வாசலில் விசாரித்தபோது, அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த அபூ ஸஃதா எனப்படும் உஸாமா இப்னு கதாதா என்பவர் எழுந்து, 'நீங்கள் விசாரிப்பதால் நான் சொல்கிறேன். ஸஃது அவர்கள் தமது படையிலுள்ளவர்களிடம் எளிமையாக நடப்பதில்லை; (பொருட்களை) சமமாகப் பங்கிடுவதில்லை; தீர்ப்பு வழங்குவதில் நீதியாக நடப்பதில்லை' என்று புகார் கூறினார். 

இதைக் கேட்ட ஸஃது(ரலி) 'அல்லாஹ்வின் மேல் ஆணையாக! மூன்று பிரார்த்தனைகளை (உமக்கெதிராக) நான் செய்யப் போகிறேன்' என்று கூறிவிட்டு, 'இறைவா! உன்னுடைய இந்த அடியார் (அவரின் புகாரில்) பொய்யராகவும் புகழ் விரும்பிப் புகார் கூறுபவராகவும் இருந்தால் அவரின் ஆயுளை அதிகப் படுத்துவாயாக! அவரின் வறுமையையும் அதிகப் படுத்துவாயாக! அவரைப் பல சோதனைகளுக்கு ஆளாக்குவாயாக!' என்று பிரார்த்தனை செய்தார்கள். 

இதன் பிறகு அந்த மனிதரிடம் எவரேனும் நலம் விசாரித்தால் 'சோதனைக்காளான முதுபெரும் வயோதிகனாம் விட்டேன். ஸஃதின் பிரார்த்தனை என் விஷயத்தில் பலித்துவிட்டது' எனக் கூறக் கூடியவராம்விட்டார். ஜாபிர்(ரலி) வழியாக இதை அறிவிக்கும் அப்துல் மலிக் இப்னு உமைர் 'அதன் பிறகு நானும் அவரைப் பார்த்திருக்கிறேன்; முதுமை யினால் அவரின் புருவங்கள் அவரின் கண்களை மறைத்திருந்தன. பாதைகளில் நடந்து செல்லும் பெண்களின் மீது (பார்வை பறி போனதால்) மோதிக் கொள்வார்; இந்த நிலையில் அவரை பார்த்திருக்கிறேன்' என்று குறிப்பிட்டார். (ஸஹீஹ் புகாரி (755)

கொள்கை பாதுகாப்பு.

لَـكُمْ دِيْنُكُمْ وَلِىَ دِيْنِ‏ 

உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”(அல்குர்ஆன் : 109:6)

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.          ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம், 'உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று கூறினார். அந்த யூதர், 'உலகத்தார் அனைவரை விடவும் மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்டு) அந்த முஸ்லிம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்துவிட்டார். அந்த யூதர், நபி(ஸல்) அவர்களிடம் சென்று தனக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்த (சச்சர)வையெல்லாம் தெரிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை அழைத்து வரச்சொல்லி அது பற்றி அவரிடம் கேட்டார்கள். அவர் விபரத்தைக் கூறினார். (நடந்தவை அனைத்தையும் விசாரித்துத் தெரிந்து கொண்ட பின்) நபி(ஸல்) அவர்கள், 'மூஸாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நாளில் மூர்ச்சையாகி விடுவார்கள். நானும் அவர்களுடன் மூர்ச்சையாகி விடுவேன். நானே முதலாவதாக மயக்கம் தெளிந்து எழுவேன். அப்போது, மூஸா(அலை), (அல்லாஹ்வின்) அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெளிந்து விட்டிருப்பாரா, அல்லது அல்லாஹ் அவருக்கு மட்டும் (மூர்ச்சையடையத் தேவையில்லையென்று) விதி விலக்கு அளித்திருப்பானா என்று எனக்குத் தெரியாது' என்று கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி (2411)

மேற்கூறியவை அல்லாமல் இன்னும் எண்ணற்ற உரிமைகளை இஸ்லாம் கூறுகிறது.

பெண்ணுரிமை.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்.  பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தம் தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது அப்போது நபி(ஸல்) அவர்கள் அப்பாஸ்(ரலி) அவர்களிடம் 'அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும், பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?' என்று கேட்டார்கள். (முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்ட போது) நபி(ஸல்) அவர்கள் 'முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக்கூடாதா?' என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா 'இறைத்தூதர் அவர்களே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகிறீர்களா? என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'இல்லை' நான் பரிந்துரைக்கவே செய்கிறேன்' என்றார்கள. அப்போது பரீரா, '(அப்படியானால்) அவர் எனக்குத் தேவையில்லை' என்று கூறிவிட்டார். ஸஹீஹ் புகாரி (5283)

பேச்சுரிமை.

ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார். 

நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன்  இருந்தோம். அவர்களுடன் மக்கள் ஹுனைன் போரிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அப்போது கிராமவாசிகள் அல்லாஹ்வின் தூதரைப் பிடித்து (போரில் கிடைத்த பொருட்களிலிருந்து தங்களுக்குக் கொடுக்கும்படி) கேட்கலானார்கள். இறுதியில், அவர்களை (சூழ்ந்து நெருக்கியபடி) ஒரு கருவேல மரத்தின் அருகே தள்ளிக் கொண்டு சென்று அவர்களின் போர்வையைப் பறித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'எனக்கு என் போர்வையைக் கொடுத்து விடுங்கள். இந்த (கருவேல மரத்தின்) முட்கள் அளவிற்கு ஒட்டகங்கள் (என்னிடம்) இருந்தாலும் அவற்றை நான் உங்களிடையே பங்கிட்டு விடுவேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவோ, பொய் சொல்பவனாகவோ, கோழையாகவோ பார்க்க மாட்டீர்கள்' என்றார்கள். (ஸஹீஹ் புகாரி (3148)

சமத்துவ உரிமை.

இஸ்லாத்தில்  சமூக,பொருளாதார,அரசியல், நீதிபரிபாலன விவகாரங்கள் யாவற்றிலும் சமத்துவம் பேணச் சொல்லி வலியுறுத்திக்கூறப்பட்டுள்ளது.மக்கள் யாவரும் சமமானவர்ளே.குலத்தாலோ நிறத்தாலோ இனத்தாலோ பணபலம் படைப்பட்டாளத்தாலோ ஒருவர் இன்னொருவரை விட உயர்ந்து விடமுடியாது என்கிறது திருமறை...

("மக்கள் யாவரும் சமமானவர்களே"                           சம உரிமை)

يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌  اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌  اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ‏
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.
(அல்குர்ஆன் : 49:13)

கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜை நிறைவேற்றிய சமயம் ஆற்றிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த உறையில் பின்வருமாறு கூறினார்கள்;

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஓர் அரபிக்கும் ஓர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் ஓர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறையச்சம் உள்ளவர்தான்.(அல்பைஹகீ)

பிறப்பால் யாரும் யாரையும்விட உயர்ந்தவர்களும் இல்லை, தாழ்ந்தவர்களும் இல்லை. உலக மக்கள் அனைவரும் ஆதம்(அலை) மற்றும் அன்னை ஹவ்வா(அலை) ஆகிய ஒரு தாய் தந்தையரின் பிள்ளைகளாவர். அனைவரும் சகோதர சகோதரிகளே என்ற இறைவசனத்தின் அடிப்படையில் உலகிற்கு உரக்கக்கூறினார்கள். நிறத்தாலோ, மொழியாலோ, இனத்தாலோ அனைவரும் சமமே என்று முழங்கினார்கள்.

ஒரு சமயம் அபுதர் கிஃபாரி(ரலி)அவர்களுக்கும் அபிஸீனியா நாட்டை சார்ந்த கறுத்த அடிமைக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.தர்க்கம் சூடுபிடித்து முற்றியது.இருவருக்கும் கோபம் மேலிட்டது.கோபத்தால் நிதானமிழந்த அபுதர்(ரலி)அவர்கள் தன் பிரதிவாதியை பார்த்து "ஏ!கறுப்பியின் மகனே"என்று கூறிவிட்டார்கள்.இதைக்கேட்ட பெருமானார்(ஸல்)அவர்கள் "பேச்சு எல்லை மீறிவிட்டது!இறைபக்தியாளரையன்றி கறுத்த பெண்ணின் மகனை அன்றி வெள்ளை பெண்ணின் மகனுக்கு எந்த சிறப்பும் கிடையாது"எனக் கூறி தோழர் அபுதர்(ரலி)அவர்களை கண்டித்தார்கள்.

இந்த சம்பவம் நாயகம்(ஸல்)அவர்களின் காலத்தில் அடிமையும் தன் எஜமானனிடம் தர்க்கம்செய்ய முடியும் என்பதையும்,நிற இன பாகுபாடற்ற சமூகமாக அம்மக்களை நாயகம்(ஸல்)அவர்கள் உருவாக்கினார்கள் என்பதையும் காட்டுகிறது.

நீதி பரிபாலனத்தில் சமத்துவம்

இஸ்லாத்தில் நீதிக்கு முன் அனைவரும் சமம்.பனக்காரன் ஏழை,உயர்ந்தவன் தாழ்ந்தவன்,வலியவன் எளியவன் போன்ற எந்த பாகுபாடும் கிடையாது.
وَاَنْزَلْنَاۤ اِلَيْكَ الْكِتٰبَ بِالْحَـقِّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ الْكِتٰبِ وَمُهَيْمِنًا عَلَيْهِ‌ فَاحْكُمْ بَيْنَهُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ عَمَّا جَآءَكَ مِنَ الْحَـقِّ‌ لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَّمِنْهَاجًا ‌ وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَـعَلَـكُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰـكِنْ لِّيَبْلُوَكُمْ فِىْ مَاۤ اٰتٰٮكُمْ فَاسْتَبِقُوا الْخَـيْـرٰتِ‌ اِلَى اللّٰهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَۙ‏
மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக; உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்; அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்; ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்); எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது; நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.
(அல்குர்ஆன் : 5:48)

وَاِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَيْنَهُمْ بِالْقِسْطِ‌  اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ‏
ஆனால், நீர் (இவர்களிடையே) தீர்ப்பளிப்பீராயின் நியாயமாகவே அவர்களிடையில் தீர்ப்பளிப்பீராக; ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களையே நேசிக்கின்றான்.
(அல்குர்ஆன் : 5:42)

இஸ்லாம் கூறும் நீதி பரிபாலனங்களை அணுவளவும் வழுவாது பின்பற்றி ஆட்சி செலுத்திய நபித்தோழர்களில் முதன்மையானவர் ஹழ்ரத் உமர் (ரலி)அவர்கள். நீதிக்கு ஓர் உமர் என்றுப் போற்றப்படக்கூடிய
உமர் (ரலி)அவர்கள் ஆட்சி போறுப்பேற்றபோது இவ்வாறு பிரகடனம்செய்தார்கள்:
"அல்லாஹ்வின் மீதாணையிட்டு கூறுகிறேன்;என்னிடம் எவரும் எந்தவிதத்திலும் மற்றவரைவிட பலசாலியல்லர்.பலவீனருமல்லர்.
எல்லோருக்கும் நீதி நிலைநாட்டுவேன்.எவருக்கும் நியாயம் வழங்குவேன்"

கலீஃபா உமர் (ரலி) அவர்கள், நீதி வழுவாது ஆட்சி செலுத்தி வந்தார். அதற்கு ஒரு சான்றினைக் காண்போம். கலீஃபாவின் மகன் அப்துல்லா, ஒரு நாள் காரணமின்றி ஒருவனை அடித்துவிட்டார். கலீஃபா முறைப்படி விசாரித்து, தம் மகன் குற்றவாளி எனக் கண்டறிந்தார்; தான் பெற்ற மகன் என்று பாரபட்சம் பார்க்காது தண்டனை வழங்க உத்தரவிட்டார் என்பது வரலாறு.

கலீஃபா உமர் (ரலி) அவர்களின் நீதி வழுவாத ஆட்சி, உலக வரலாற்றில் போற்றப்படுவதாக அமைந்திருந்தது.
அண்ணல் காந்தி இப்படிச் சொன்னார்கள்:
“இந்த இந்திய தேசத்தின் முழுமையான சுதந்திரத்தை இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் நீதிமான் உமர் அவர்களின் ஆட்சியின் அடிப்படையில் அமைகிறபோது தான் சுவைக்க முடியும்.”

பொருளீட்டுவதில் சமத்துவம்.

பொருளியலில் மக்களிடையே சமத்துவத்தை நிலைநாட்ட இஸ்லாம் பல வகையிலும் வழிகாட்டிக்கொண்டிருக்கிறது.காரணம் ஒருவனின் பொருளீட்டும் ஆர்வம் அடுத்தவனை எந்த விதத்திலும் பாதித்துவிடக்கூடாது என்பதால் பொருளாதாரத்தில் ஹராம்,வட்டி,மோசடி,பதுக்கல் போன்றவற்றை தவிர்த்து ஹலாலான வழியில் பொருளீட்ட வழிகாட்டுகிறது.

وَاَحَلَّ اللّٰهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبٰوا‌ 
அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்;
(அல்குர்ஆன் : 2:275)

அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய அறிவு,ஆற்றலைக்கொண்டு ஆகுமான வழிகளில் பொருளீட்டவும்,அதனை அபிவிருத்தி செய்யவும்,ஆகுமான வழியில் செலவுச்செய்யவும் முழு சுதந்தரம் இருகின்றது.
وَالَّذِيْنَ جَاهَدُوْا فِيْنَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا ‌ وَاِنَّ اللّٰهَ لَمَعَ الْمُحْسِنِيْنَ
மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 29:69)

அரசியல் உரிமை.

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அரசியல் விவகாரங்களில் உரிமையோடு இயங்கவும்,கருத்துவெளியிடவும்,தனக்கு விருப்பமான பிரதிநிதியை தேர்வு செய்யும்  உரிமையும் இருக்கவேண்டும்.
நாட்டில் தலைவரை,மக்களை சகல விதத்திலும் இறைவழி நின்று வழி நடத்தும் தலைவரை தேர்வுசெய்யும் உரிமையை இஸ்லாம் பொதுமக்களுக்கு வழங்குவதுடன் அவர் வழிதவறுபட்சத்தில் அவரை கேள்விக்கேட்கும் உரிமையும் கண்டிக்கும் உரிமையும் மக்களுக்கு வழங்குகின்றது.

இரண்டாம் கலீஃபா உமர்(ரலி)அவர்கள் ஒரு தடவை உரைநிகழ்த்திக் கொண்டிருந்த போது" நான் தவறு செய்தால் என்னை திருத்துங்கள்"என்றார்கள். இதனைக் கேட்ட ஒருவர் எழுந்து நின்று "கலிஃபா உம்மிடம் நாம் தவறை கண்டால் இதனால் உம்மை திருத்துவோம்"என்று தம் கையிலிருந்த வாளைக்காட்டி சொன்னார்.இதனை கேட்ட கலிஃபா கோபம் கொள்ளவில்லை மாறாக மகிழ்ச்சியில் சிரித்து விட்டு " என் சகோதரர்கள் என் மீது இவ்வளவு அக்கறையோடிருக்கிறார்களே!அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்"என்று கூறினார்கள்.

இஸ்லாமிய ஆட்சியில் மக்களுக்கு அரசியலில் முழுச்சுதந்திரமிருந்தது.
  

மத உரிமை.

மதம் என்பது நம்பிக்கையின் அடிப்படையில் நடைமுறைக்கு வரும் விஷயம்.இதை வற்புறுத்தலாலோ அடக்குமுறையாலோ யார் மீதும் திணிக்கக் கூடாது.
இஸ்லாம் தன் போதனையை எங்கும் எவரிடமும் வற்புறுத்தியதில்லை. இதனையே குர்ஆன்...

لَاۤ اِكْرَاهَ فِى الدِّيْنِ‌ۙ  قَدْ تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَىِّ‌
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது.
(அல்குர்ஆன் : 2:256)
இஸ்லாத்தை போதிக்க வந்த தூதருக்கே அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
فَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَيْكَ الْبَلٰغُ الْمُبِيْنُ‏
எனினும் இவர்கள் (உம்மைப்) புறக்கணித்துத் திரும்பிவிடுவார்களாயின், (நபியே! அதற்காகக் கவலைப்படாதீர்; ஏனெனில்) உம்மீது (கடமையு)ள்ளதெல்லாம் (இறை கட்டளைகளை அவர்களுக்குத்) தெளிவாகச் சேர்ப்பிப்பதுதான்.
(அல்குர்ஆன் : 16:82)

மனித உரிமைகள் அனைத்தையும் செயல்படுத்திக்காட்டிய ஒரே மார்க்கம் இஸ்லாம்.
எனவே மனித உரிமைகளைப் பேணி இஸ்லாமிய வழிநடக்கும் நல்வாய்ப்பை அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்கிடுவானாக!ஆமீன்...

வெளியீடு : செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.


Thursday, 2 December 2021

ஜும்ஆ பயான் குறிப்பு 03/12/2021

தலைப்பு :

மழை தரும்                             படிப்பினை. 

وَهُوَ الَّذِىْ يُنَزِّلُ الْغَيْثَ مِنْ بَعْدِ مَا قَنَطُوْا وَيَنْشُرُ رَحْمَتَهٗ‌  وَهُوَ الْوَلِىُّ الْحَمِيْدُ‏

அவர்கள் நிராசையான பின்னர் மழையை இறக்கி வைப்பவன் அவனே; மேலும் அவன் தன் ரஹ்மத்தை (அருளை)ப் பரப்புகிறான்; இன்னும் அவனே புகழுக்குரிய பாதுகாவலன்.(அல்குர்ஆன் : 42:28)

மழை அல்லாஹுவின் அருட்கொடைகளில் மகத்தான அருட்கொடை,அவன் ஆற்றல்களில் பேராற்றலாகும்.                              மழைத்துளி மனிதனின் உயிர்த்துளி.மட்டுமல்ல பூமியில் வாழும் ஜீவராசிகள் பல்கிப்பெருகவும்,மரம் செடிக்கொடிகள் பூத்துக்குலுங்கவும்,பூமி பசுமையாக இருக்கவும் மழையே காரணம்.மழையற்ற பூமி உயிரற்றது.மழைப்பொழியும் பூமியே உயிருள்ளது என்கிறது திருக்குர்ஆன்....

وَاللّٰهُ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَحْيَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا‌ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لِّقَوْمٍ يَّسْمَعُوْنَ‏

இன்னும், அல்லாஹ் வானத்திலிருந்து மழையை பொழிய வைத்து, அதைக் கொண்டு உயிரிழந்த பூமியை உயிர் பெறச் செய்கிறான் - நிச்சயமாக செவியேற்கும் மக்களுக்கு இதில் (தக்க) அத்தாட்சி இருக்கிறது.              (அல்குர்ஆன் : 16:65)

பிரிதோர் இடத்தில் மழை பரகத் (அபிவிருத்தி)என்கிறது குர்ஆன்...

وَنَزَّلْنَا مِنَ السَّمَآءِ مَآءً مُّبٰـرَكًا فَاَنْبَـتْـنَا بِهٖ جَنّٰتٍ وَّحَبَّ الْحَصِيْدِ ۙ‏

அன்றியும், வானத்திலிருந்து மிக்க பாக்கியமுள்ள தண்ணீரை (மழையை) நாம் இறக்கி வைத்து, அதைக் கொண்டு தோட்டங்களையும், அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைப்பிக்கிறோம்.(அல்குர்ஆன் : 50:9

மழை குறித்து முஃமினின் நிலைப்பாடு எப்படி இருக்கவேண்டும்...

 زيد بن خالد رضي الله عنه، قال: خرجنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية، فأصابنا مطر ذات ليلة، فصلى لنا رسول الله صلى الله عليه وسلم الصبح، ثم أقبل علينا فقال: أتدرون ماذا قال ربكم؟. قلنا: الله ورسوله أعلم، فقال:   (قال الله: أصبح من عبادي مؤمن بي وكافر بي، فأما من قال: مطرنا برحمة الله وبرزق الله وبفضل الله، فهو مؤمن بي، كافر بالكوكب، وأما من قال: مطرنا بنجم كذا، فهو مؤمن بالكوكب كافر بي)  ، رواه البخاري.

ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவு மழை பொழிந்த பின் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்கு ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி `உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா?` என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் `அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்` என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், `என்னுடைய அடியார்களில் என்னை நம்பியவர்களும் என்னை நிராகரிப்பவர்களும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளால், அவனுடைய கருணையால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நம்பியவர். நட்சத்திரங்களை நிராகரித்தவர். இன்னின்ன நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நிராகரித்து நட்சத்திரங்களை நம்பியவர்" என்று அல்லாஹ் கூறினான் எனக் குறிப்பிட்டார்கள்.(நூல்:புகாரி)

படைப்பினங்களின் தேவைக்கு மழையை பொழியச்செய்வதாக குர்ஆன் கூறுகிறது...

وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً بِقَدَرٍ فَاَسْكَنّٰهُ فِى الْاَرْضِ‌ وَاِنَّا عَلٰى ذَهَابٍ بِهٖ لَقٰدِرُوْنَ‌ ‏

மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்.(அல்குர்ஆன் : 23:18)

உலகில் ஆண்டுமுழுவதும் எங்காவது ஒரு பகுதியில் மழைப்பொழிந்து கொண்டுதான் இருக்கின்றது.ஆண்டில் மழையில்லாத நாட்களே இல்லை.

சில பகுதிகளில் மிதமிஞ்சிய மழையும்,சில பகுதிகளில் மழையின்மையினால் பஞ்சமும் ஏற்படுகின்றது.

عن عبد الله بن مسعود: ما من عام بأمطر من عام، ولكن الله يقسمه حيث شاء، عاما هاهنا وعاما هاهنا ، ثم قرأ ( وَإِنْ مِنْ شَيْءٍ إِلا عِنْدَنَا خَزَائِنُهُ وَمَا نُنـزلُهُ إِلا بِقَدَرٍ مَعْلُومٍ 

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி)அவர்களின் விளக்கம்;ஓர் ஆண்டின் மழை இன்னொர் ஆண்டில் பொழிவதில்லை.(அந்தந்த ஆண்டிற்கான மழை அந்தந்த ஆண்டே பொழியும்)ஆனால் அல்லாஹ் மழையை பங்கிர்ந்தளிப்பதில் தன் விருப்பப்படி செயல்படுகிறான் எனக் கூறி பின் வரும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள்

وَاِنْ مِّنْ شَىْءٍ اِلَّا عِنْدَنَا خَزَآٮِٕنُهٗ وَمَا نُنَزِّلُهٗۤ اِلَّا بِقَدَرٍ مَّعْلُوْمٍ‏

ஒவ்வொரு பொருளுக்குமான பொக்கிஷங்கள் நம்மிடமே இருக்கின்றன; அவற்றை நாம் ஒரு குறிப்பிட்ட அளவுப்படி அல்லாமல் இறக்கிவைப்பதில்லை.            (அல்குர்ஆன் : 15:21)

மழை பொதுவாக (ரஹ்மத்)அல்லாஹ்வின் அருளாகும் ஆனால் சில வேளைகளில் ஆபத்தாகவும்,வேதனையாகவும்,   தண்டனையாகவும் மாறலாம்.

முன்வாழ்ந்த சில கூட்டத்தவர்கள் மழை வெள்ளத்தால் அழிக்கப்பட்ட வரலாறுகளை குர்ஆன் கூறுகின்றது...

நூஹ் (அலை)அவர்களின் கூட்டத்தவர்கள்....

فَدَعَا رَبَّهٗۤ اَنِّىْ مَغْلُوْبٌ فَانْـتَصِرْ‏

அப்போது அவர்; “நிச்சயமாக நாம் தோல்வியடைந்தவனாக இருக்கிறேன்; ஆகவே, நீ (எனக்கு) உதவி செய்வாயாக!” என்று அவர் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்.(அல்குர்ஆன் : 54:10)

فَفَتَحْنَاۤ اَبْوَابَ السَّمَآءِ بِمَآءٍ مُّنْهَمِرٍ ‏

ஆகவே, நாம் கொட்டும் மழையைக் கொண்டு வானங்களின் வாயில்களைத் திறந்து விட்டோம்.(அல்குர்ஆன் : 54:11)

وَّفَجَّرْنَا الْاَرْضَ عُيُوْنًا فَالْتَقَى الْمَآءُ عَلٰٓى اَمْرٍ قَدْ قُدِرَ‌‏

மேலும், பூமியின் ஊற்றுகளை பொங்க வைத்தோம்; இவ்வாறாக, குறிப்பிட்ட ஓர் அளவின் படி (இரு வகை) நீரும் கலந்(து பெருக் கெடுத்)தது.(அல்குர்ஆன் : 54:12)

ஹுது (அலை)நபியின்ஆது கூட்டத்தவர்கள்...

فَلَمَّا رَاَوْهُ عَارِضًا مُّسْتَقْبِلَ اَوْدِيَتِهِمْ ۙ قَالُوْا هٰذَا عَارِضٌ مُّمْطِرُنَا‌  بَلْ هُوَ مَا اسْتَعْجَلْتُمْ بِهٖ ‌ رِيْحٌ فِيْهَا عَذَابٌ اَ لِيْمٌۙ‏

ஆனால் அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், “இது நமக்கு மழையைப் பொழியும் மேகமாகும்” எனக் கூறினார்கள்; “அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அதுதான்; (இது கொடுங்)காற்று - இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது:(அல்குர்ஆன் : 46:24)

تُدَمِّرُ كُلَّ شَىْءٍ ۭ بِاَمْرِ رَبِّهَا فَاَصْبَحُوْا لَا يُرٰٓى اِلَّا مَسٰكِنُهُمْ‌ كَذٰلِكَ نَجْزِى الْقَوْمَ الْمُجْرِمِيْنَ‏

“அது தன் இறைவனின் கட்டளையினால் எல்லாப் பொருட்களையும் அழித்துவிடும்” (என்று கூறப்பட்டது). பொழுது விடிந்த போது, (அழிக்கப்பட்ட அவர்களுடைய) வீடுகளைத் தவிர (வேறு) எதுவும் காணப்படவில்லை - இவ்வாறே குற்றம் செய்யும் சமூகத்திற்கு நாம் கூலி கொடுக்கிறோம்.(அல்குர்ஆன் : 46:25)

ஷுஐப் (அலை)நபியின் கூட்டாத்தார்...

وَلَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّيْنَا شُعَيْبًا وَّالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا  وَاَخَذَتِ الَّذِيْنَ ظَلَمُوا الصَّيْحَةُ فَاَصْبَحُوْا فِىْ دِيَارِهِمْ جٰثِمِيْنَۙ‏

(தண்டனைக்குரிய) நம் கட்டளை வந்த போது, ஷுஐபையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நமது ரஹ்மத்தை கொண்டு நாம் காப்பாற்றினோம்; அநியாயம் செய்தவர்களை (பேரிடியின்) முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்கள் தம் வீடுகளில் இருந்தவாறே காலையில் (இறந்து) கிடந்தனர்.(அல்குர்ஆன் : 11:94)

லூத்(அலை)நபியின் கூட்டத்தார்...

وَلَقَدْ اَتَوْا عَلَى الْقَرْيَةِ الَّتِىْۤ اُمْطِرَتْ مَطَرَ السَّوْءِ‌  اَفَلَمْ يَكُوْنُوْا يَرَوْنَهَا ‌ بَلْ كَانُوْا لَا يَرْجُوْنَ نُشُوْرًا‏

இன்னும்: நிச்சயமாக இ(ந்நிராகரிப்ப)வர்கள் ஒரு தீமையான (கல்) மாரி பொழிவிக்கப்பட்ட ஊருக்குச் சென்றிருக்கிறார்கள் - அதனையும் இவர்கள் பார்க்கவில்லையா? எனினும் (மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து) எழுப்பப்படுவதை இவர்கள் நம்பவேயில்லை.(அல்குர்ஆன் : 25:40)

முன்வாழ்ந்த கூட்டத்தவர்கள் மழை வெள்ளத்தால் அழிக்கப்பட்டதினால் நாயகம் (ஸல்)அவர்கள் வானில் கருமேகங்கள் சூழ்வதை கண்டால் நடுநடுங்கிப்போய்விடுவார்கள்.

 وحدثني أبو الطاهر أخبرنا ابن وهب قال: سمعت ابن جريج يحدثنا عن عطاء بن أبي رباح عن عائشة زوج النبي ﷺ أنها قالت كان النبي ﷺ إذا عصفت الريح قال اللهم إني أسألك خيرها وخير ما فيها وخير ما أرسلت به وأعوذ بك من شرها وشر ما فيها وشر ما أرسلت به قالت وإذا تخيلت السماء تغير لونه وخرج ودخل وأقبل وأدبر فإذا مطرت سري عنه فعرفت ذلك في وجهه قالت عائشة فسألته، فقال لعله يا عائشة كما قال قوم عاد { فلما رأوه عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا }

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சூறாவளிக் காற்று வீசும்போது, "இறைவா, இந்தக் காற்றின் நன்மையையும் அதனுள்ளே மறைந்திருக்கும் நன்மையையும் அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தக் காற்றின் தீங்கிலிருந்தும், அதனுள்ளே மறைந்திருக்கும் தீங்கிலிருந்தும், அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்" என்று கூறுவார்கள். வானத்தில் மேகமூட்டம் ஏற்பட்டால் நபி (ஸல்) அவர்களது முகம் மாறிவிடும்; (தமது அறைக்கு) உள்ளே போவார்கள்; வெளியே வருவார்கள்; முன்னும் பின்னுமாக நடப்பார்கள். (நிம்மதியற்று ஒரு விதத் தவிப்புடன் காணப்படுவார்கள்.) வானம் மழை பொழிந்துவிட்டால், அந்த (தவிப்பு) நிலை அவர்களைவிட்டு நீங்கிவிடும். இதை நான் அவர்களது முகத்திலிருந்து அறிந்துகொண்டு (இது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆயிஷா! (குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி) ‘ஆத்" சமுதாயத்தார், அந்த வேதனை (கொணரும் மேகம்) தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டபோது, (தவறாகப் புரிந்துகொண்டு) "இது நமக்கு மழை பொழிவிக்கும் மேகமாகும்" (46:24) என்று கூறினார்களே, அத்தகைய மேகமாகவும் இது இருக்கலாம்" என்று பதிலளித்தார்கள்.(நூல்:முஸ்லிம்)

தமிழ்நாட்டில் இடைவிடாது பெய்த அசாதாரண மழையும், இந்த ஆண்டு நவம்பரில் இரண்டு காற்றழுத்த தாழ்வுகள் காரணமாக பெய்த மழையும், பலரின் வாழ்வாதாரத்துடன் மனித உயிர் இழப்பு, கால்நடைகள் மற்றும் விவசாய உற்பத்தி போன்றவற்றிலும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு சென்னை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. “நவம்பர் 6 ஆம் தேதி, சென்னையில் 210 மிமீ மழை பெய்துள்ளது என்று பிராந்திய வானிலை மையம் (ஆர்எம்சி) தெரிவித்துள்ளது. இது 2015-ம் ஆண்டுக்குப் பிறகு சென்னையில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச மழையாகும் (டிசம்பர் 1-ம் தேதி 494 மி.மீ. மழை பெய்தது)" என்று ஆர்எம்சி துணை இயக்குநர் என் புவியரசன் தெரிவித்தார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. 6வது இரவில் இருந்து இடைவிடாத மழை நவம்பர் 7, ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்தது. இது சமீபத்திய ஆண்டுகளில் மிக அதிகமான மழையாக பதிவாகியுள்ளது. உபரி நீரை படிப்படியாக வெளியேற்றுவதற்காக செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய மூன்று நீர்த்தேக்கங்களின் மதகுகள் திறக்கப்பட்டன. பல வீடுகளில் மழைநீர் புகுந்தது.

இந்த பருவமழை காலத்தில், சென்னையில் மழை நீர் வழிந்தோட வழியின்றி, பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னையில் தான் அதிக மழை பெய்துள்ளதாக தகவல் பரவுகிறது. ஆனால், வானிலை ஆய்வு மைய புள்ளி விபரப்படி, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் நாகையில் தான் அதிக மழை பதிவாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அக்டோபர் ௧ முதல் நேற்று வரை 63 செ.மீ., மழை பெய்துஉள்ளது. இது இயல்பான 35 செ.மீ., அளவை விட, 80 சதவீதம் அதிகம்.இந்த பருவ மழை காலத்தில் இதுவரை மயிலாடுதுறை 102; கடலுார் 108; விழுப்புரம் 110; செங்கல்பட்டு 111; சென்னை 113; நாகை 114; காரைக்கால் 144; புதுச்சேரி 141 செ.மீ., என, எட்டு மாவட்டங்களில் 100 செ.மீ.,க்கு மேல் மழை பதிவாகியுள்ளது.

இரு மாநிலங்களிலும் அதிகபட்சமாக காரைக்காலில் 144; இரண்டாவதாக புதுச்சேரியில் 141 செ.மீ., மழை பெய்துள்ளது. மூன்றாவதாக நாகப்பட்டினத்தில் 114 செ.மீ., மழை பெய்துள்ளது. காரைக்கால், புதுச்சேரி மற்றும் நாகை முறையே மூன்று அதிகபட்ச மழை அளவுள்ள மாவட்டங்களாக உள்ளன.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் விழுப்புரம் ,கடலூர், திருச்சி, பெம்பலூர், உள்பட 29 மாவட்டங்களில் இயல்பைவிட அதிக மழை பெய்துள்ளது.தர்மபுரி, சேலம், நீலகிரி, திண்டுக்கல், தேனி , விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம் ஆகிய  8 மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்துள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. 

சென்னையில் இயல்பைவிட 83 சதவீதம் கூடுதல் மழை பதிவாகி உள்ளது. மதுரையில்  மட்டும் இயல்பான மழையே பதிவாகியுள்ளது.

மழை வரவேற்கத்தக்கது. இது மிகவும் தேவை. ஆனால் அது அசாதாரணமாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால், அது மக்களுக்கு சொல்லொணாத் துன்பத்தையும் கஷ்டங்களையும் ஏற்படுத்துகிறது. பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.

நாயகம்(ஸல்)அவர்கள் காலத்தில் பொழிந்த பெருமழை.

عن أنس بن مالك -رضي الله عنه- «أن رجلا دخل المسجد يوم الْجُمُعَةِ من باب كان نحو دار الْقَضَاءِ، ورسول الله -صلى الله عليه وسلم- قائم يَخْطُبُ، فَاسْتَقْبَلَ رسول الله -صلى الله عليه وسلم- قائمًا، ثم قال: يا رسول الله، هَلَكَتِ الأموال، وانْقَطَعَتِ السُّبُلُ فَادْعُ الله تعالى يُغِيثُنَا، قال: فرفع رسول الله -صلى الله عليه وسلم- يديه ثم قال: اللَّهُمَّ أَغِثْنَا ، اللَّهُمَّ أَغِثْنَا ، اللَّهُمَّ أَغِثْنَا. قال أنس: فلا والله ما نرى في السماء من سحاب ولا قَزَعَةٍ ، وما بيننا وبين سَلْعٍ من بيت ولا دار. قال: فطلعت من ورائه سَحَابَةٌ مثل التُّرْسِ. فلما تَوَسَّطَتْ السماء انْتَشَرَتْ ثُمَّ أَمْطَرَتْ. قال: فلا والله ما رأينا الشمس سَبْتاً. قال: ثم دخل رجل من ذلك الباب في الْجُمُعَةِ الْمُقْبِلَةِ، ورسول الله -صلى الله عليه وسلم- قائم يَخْطُبُ الناس، فَاسْتَقْبَلَهُ قائمًا، فقال: يا رسول الله، هَلَكَتْ الأَمْوَالُ وَانْقَطَعَتْ السُّبُلُ، فادع الله أن يُمْسِكَهَا عنَّا، قال: فرفع رسول الله -صلى الله عليه وسلم- يديه ثم قال: اللَّهُمَّ حَوَالَيْنَا وَلا عَلَيْنَا, اللَّهُمَّ على الآكَامِ وَالظِّرَابِ وَبُطُونِ الأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَر. قال: فَأَقْلَعَتْ، وخرجنا نمشي في الشمس». قال شريك: فسألت أنس بن مالك: أهو الرجل الأول قال: لاأدري.  صحيح البخاري)

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 

ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது `தாருல்களா` எனும் வாசல் வழியாக ஒருவர் வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி, `இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்` என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தி, `இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீது அணையாக வானத்தில் திரண்ட மேகத்தையோ பிரிந்து கிடக்கும் மேகங்களையோ நாங்கள் காணவில்லை. எங்களக்கும் (அதாவது மதீனாவுக்கும்) `ஸல்ஃ` என்னும மலைக்குமிடையே எந்த வீடும் கட்டிடமும் இருக்கவில்லை. (வெட்ட வெளியாக இருந்தது.) அப்போது அம்மலைக்கப் பின்புறமிருந்து கேடயம் போன்று ஒரு மேகம் தோன்றி வானத்தின் மையப் பகுதிக்கு வந்து சிதறி மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாக, ஆறு நாள்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை. அடுத்த ஜும்ஆவில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரைநிகழ்த்தும்போது ஒருவர் அதே வாசல் வழியாக வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி, ` இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்` என்றார். உடன் நபி(ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி `இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே. இறைவா! மணற்குன்றுகள், மலைகள், ஓடைகள், விளைநிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)` என்று பிரார்த்தித்தார்கள். உடனே மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம். 

இரண்டாவதாக வந்த மனிதர்முதலில் வந்தவர் தாமா? என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் `தெரியாது` என்றனர் என ஷரீக் கூறுகிறார்.(நூல்;புகாரி)

மழை சம்பந்தமாக நாயகம் (ஸல்)அவர்கள் கேட்ட சில முக்கிய துஆக்கள்..

1)மழை வேண்டி....

قال: اللَّهُمَّ أَغِثْنَا ، اللَّهُمَّ أَغِثْنَا ، اللَّهُمَّ أَغِثْنَا.

பொருள்:இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! 

اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا ، مَرِيئًا مُرِيعًا ، نَافِعًا غَيْرَ ضَارٍّ ، عَاجِلًا غَيْرَ آجِل

பொருள் : யா அல்லாஹ்! எங்களுக்கு உதவிகரமான, மகிழ்ச்சிகரமான, பசுமை ஏற்படுத்தக்கூடிய மழையைப் பொழிய செய்வாயாக! நன்மை தரக்கூடிய நட்டம் ஏறபடுத்தாத விரைவான தாமதமாகாத மழையை பொழியச் செய்வா

2)மழையினால் நன்மையை வேண்டியும்,அதனால் ஏற்படும் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடி...

اللَّهُمَّ إِنِّي أسْألُكَ خَيْرَهَا، وخَيْرَ مَا فِيْهَا، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ، وأعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيْهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ

பொருள்:இறைவா, இந்தக் காற்றின் நன்மையையும் அதனுள்ளே மறைந்திருக்கும் நன்மையையும் அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தக் காற்றின் தீங்கிலிருந்தும், அதனுள்ளே மறைந்திருக்கும் தீங்கிலிருந்தும், அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்"

3)பயனுள்ள மழை வேண்டி...

اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا

பொருள்:இறைவா!பயனுள்ள மழையை இறக்குவாயாக!

4)இடி,மின்னல் ஏற்பட்டால்...

إِذَا سَمِعَ صَوْتَ الرَّعْدِ وَالصَّوَاعِقِ قَالَ اللَّهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلَا تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذَلِكَ

பொருள்:யா அல்லாஹ்!உன் கோபத்தினால் எங்களை நாசமாக்கிவிடாதே!உன் வேதனையினால் எங்களை அழித்துவிடாதே!அவற்றுக்கு முன் நலவை நல்குவாயாக!

5)தேவைக்கு அதிகமாக மழை பெய்யும்போது....

اللَّهُمَّ حَوَالَيْنَا وَلا عَلَيْنَا, اللَّهُمَّ على الآكَامِ وَالظِّرَابِ وَبُطُونِ الأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَر.

பொருள் :இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே. இறைவா! மணற்குன்றுகள், மலைகள், ஓடைகள், விளைநிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)

வெளியீடு: செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Wednesday, 24 November 2021

ஜும்ஆ பயான் 26/11/2021

தலைப்பு:

தற்கால பிரச்சனைகளும்,இஸ்லாமிய சட்டங்களும்.

----------------------------

நவம்பர் - 26 தேசிய சட்ட தினம்

(National Law Day)

----------------------------

பாபர் மஸ்ஜிதின் விஷயத்தில் வரலாற்று பிழை செய்த அலகாபாத் நீதிமன்றம், மீண்டும் 24/11/2021 அன்று குழந்தையின் வாயில் ஆண் உறுப்பை வைத்து புணர்வது கடுமையான குற்றமல்ல என்ற ஒர் அருவருக்கத்தக்க  தீர்ப்பை வழங்கியுள்ளது.

----------------------------

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّلَا مُؤْمِنَةٍ اِذَا قَضَى اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَمْرًا اَنْ يَّكُوْنَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ اَمْرِهِمْ  وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِيْنًا‏                                                          (அல்குர்ஆன் 33-36)

1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி அரசியல் நிர்ணய சபையால் நமது அரசியல் அமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ஆம் தேதி தேசிய சட்ட தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு உலகிலேயே மிகப் பெரிய அரசியலமைப்பாகும். இதில் மொத்தம் 22 பிரிவுகள், 12 அட்டவணைகள், 94 திருத்தங்கள், 450 உட்பிரிவுகள் மற்றும் 1,17,369 சொற்கள் உள்ளன. இது ஆங்கிலப் பதிப்பை தவிர ஒரு அதிகாரப்பூர்வ இந்திமொழி பெயர்ப்பையும் கொண்டுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் முக்கிய நோக்கமே சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல்ரீதியாக அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் கிடைக்க வேண்டும், சுதந்திரமாக இருக்க வேண்டும். அத்தகைய சுதந்திரம் அடுத்தவரின் சுதந்திரத்தையும், உரிமையையும் பாதிக்கக்கூடியதாக இருக்கக்கூடாது.

ஆனால் இன்று பெயருக்குத்தான் சுதந்திர நாடே தவிர எல்லா சட்டங்களும் கானல் நீரகிவிட்டது.

குற்றம் செய்தவனெல்லாம் வெளியே சுற்றிக்கொண்டும் பாதிக்கப்பட்டவர்கள் அநீதி இழைக்கப்பட்டவர்கள் எல்லாம் சிறையில் இருக்கிறார்கள்.

ஆரம்பகாலங்களில்‌ ஐரோப்பியர்களை ஆண்ட மன்னர்களிடம்‌ இறைத்தன்மையை வழங்கியே மக்கள்‌ வாழ்ந்தனர்‌, மன்னனுக்கே முழுமையான அதிகாரம்‌ வழங்கப்பட்டது, அவன்‌ எதை சட்டமாகப்‌ பிறப்பித்தானோ அது சட்டமாக ஏற்றுக்‌ கொள்ளப்பட்டது. மக்கள்‌ எந்த அதிகாரமும்‌ அற்ற நடைபிணங்களாக இருந்தனர்‌. இதன்‌ மூலம்‌ மக்கள்‌ பல அவஸ்தைக்குள்ளானார்கள்‌, கலகங்கள்‌ தோன்றின, கலவரங்கள்‌ வெடித்தன, அந்த சர்வதிகார மன்னர்களை அகற்றிட மக்கள்‌ ஆர்ப்பாட்டங்கள்‌ செய்தார்கள்‌ இதனால்‌ பல கோட்பாடுகள்‌ தோற்றம்‌ பெற்றன, அவற்றில்‌: “தலைமை அதிகாரம்‌ மக்களுக்குரியது. மக்கள்தாம்‌ அதிகாரங்களின்‌ மூலாதாரமாகும்‌' அதாவது சட்டங்களை மக்களே இயற்றுவர்‌ என்ற கோட்பாடு மிக முக்கியமானதாகக்‌ கொள்ளப்பட்டது. பிறகு தான் தெரிந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த சட்டமும் எல்லா காலத்திற்கும் பொருந்துவதில்லை என்று.

53 முறை சிறை சென்றவர் மீண்டும் கைது!

15 முறை சைக்கிள் திருடியவன் மீண்டும் கைது!

என்றெல்லாம் அன்றாடம் செய்தித் தாள்களில் செய்திகள் வருகின்றன.

ஒரு நாட்டின் சமூகஅமைப்பும்,நிர்வாக கட்டமைப்பும் சீர்குழையமல் சீராக இயங்க சட்டமும்,நீதித்துறையும் அவசியமாகும்.

ஆனால் கேள்வி, நாட்டின் சட்டமும்,நீதித்துறையும், தனிமனித பாதுகாப்பையும்,சமூக அமைதியையும்,தன்னை ஆளும் அரசின் மீது நம்பிக்கையையும் ஊட்டியிருக்கின்றனவா?

நாட்டில் நாளுக்கு நாள் பெருகிவரும் கொலை,கொள்ளை,கற்பழிப்பு, பாலியல்  வல்லூறு, சொத்துக்களை சூறை யாடுவது போன்ற குற்றச்செயல்கள்,

சட்டம்,நீதித்துறைகளின் மீது அச்சமின்மையையும்,நம்பிக்கையின்மையும் காட்டுக்கின்றன.                        

ஏப்ரல் 1, 2014 நிலவரப்படி நாட்டில் உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரி 34,144 வழக்குகள், விசாரணையிலுள்ள வழக்குகள் 30,186 இணைந்து 64,330 வழக்குகள் உள்ளன. தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களில் சேர்த்து 16.5 லட்சம் வழக்குகளும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் 3.65 லட்சம் வழக்குகளும், மதுரை கிளையில் 1.09 லட்சம் வழக்குகளும், இந்தியா முழுவதும் 3 கோடிக்கு மேலவழக்குகளும் நிலுவையில் உள்ளன. இவைகளை நடத்தி முடிக்க 100 ஆண்டுகள் போதாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

நீதிமன்றங்கள், குறைவான நாட்களே வேலை செய்வது பற்றி, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கூறுகையில், ''நாடுமுன்னேற வேண்டும். அதற்காக கடினமாக உழைக்க வேண்டும், உற்பத்தியை பெருக்க வேண்டும் என எல்லோரும் நினைக்கும் போது, நீதிமன்றங்களும் ஏன் அதே போல் நினைத்து செயல் படக்கூடாது,'' என கேள்வி எழுப்பினார்.

ஆண்டில் 365 நாட்களில் 210 நாட்கள் மட்டுமே வழக்குகள் நடக்கின்றன. வாய்தா, நீதிமன்ற புறக்கணிப்பு போன்ற காரணங்களால் நீதி பரிபாலன நாட்கள் குறைந்து விடுகின்றன.

காசோலை வழக்கு மூன்று ஆண்டுகள், அடிதடி வழக்குகள் ஏழு ஆண்டுகள், விபத்து ஊர்தி வழக்குகள் 10 ஆண்டுகள், விவாகரத்து வழக்குகள் 15 ஆண்டுகள், பாகப்பிரிவினை வழக்குகள் 22 ஆண்டுகள் என வழக்குகள் தாமதமாகி கட்டுகள் நிறம் மாறுவதைப் பார்த்துப் பார்த்து வழக்கு நடத்துபவர்களின் மனமும் மாறிவிடுகிறது. பழமை வாய்ந்த சட்டங்களை முற்றிலும் ஒழித்து நவீன காலத்திற்கு ஏற்ப வரையறைகளுடன் கூடிய, தொழில் நுட்பம் சார்ந்த எளிய, விரைவான நீதியே மக்கள் கேட்கின்றனர்.(நன்றி:தினமலர் நாளிதழ்)

தாமதிக்கப்படும் நீதி,மறுக்கப்படும் நீதி என்று கூறப்பட்டாலும் விசாரணை என்றப் பெயரில் வழக்கு நீட்டிக்கப்படுவது குற்றவாளி மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதற்கும்,பாதிக்கப்பட்டவர் வழக்காட இயலாத கையறுநிலையால் சமரசம் செய்துக்கொள்வதற்கும் வழிவகுக்கிறது. 

வலியோர்க்குத் தான் நீதி; எளியோர்க்கு அல்ல என்ற நிலை எப்போது தான் மாறுமோ. வானம் வீழினும் நீதி வாழ வேண்டுமே என்கிற மனக்குமுறல்களை கேட்கமுடிகிறது.

சில்லரைகளில் திருடுபவன் அடித்து நொறுக்கப்படுகிறான்.பெரும் குற்றம் புரிபவன் V.I.P சிறையில் சொகுசாக மரியாதையோடு நடத்தப்படுகிறான்.

சிறைச்சாலையிலிருந்து வெளிவரும் குற்றவாளி திருந்திவரவேண்டும் ஆனால்  வெளிவருபன் இன்னும் அதிக குற்றச் செயல்களில் ஈடுபடுகிறான்.

சிறுவர் சீர்திருத்த பள்ளிகள்,சிறார்களை நன்நெறிப்படுத்தாமல் பெரும் குற்றச்செயல்களை புரிபவர்களாக மாற்றி அனுப்புகின்றன.

கடந்த வார செய்தி:

திருச்சி அருகில் ஆட்டை திருடிய 8பேர் கொண்ட கும்பலை துரத்திப்பிடித்த காவலர் பூமிநாதன் என்பரை அந்த கும்பலில் 18 வயது மதிக்க தக்க ஒருவன் பின்னாலிருந்து வெட்டிக்கொள்கிறான்.அதில் இரண்டு சிறுவர்கள், ஒருவனுக்கு வயது 10,இன்னொருவனுக்கு வயது 14,கூடுதல் தகவல் இவர்கள் போதைக்கு அடிமையனவர்கள்.போதைப் பொருள்,மது வாங்குவதற்காக திருடியதாக அவர்களே வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்.

எனவே சட்ட அமைப்புக்களை சரியாக்காத வரை குற்றங்களை கட்டுக்குள் கொண்டுவரமுடியாது.                 

இன்றும் பத்திரிக்கைகளில்....

ஒரு நாள் கூட பாலியல் அத்துமீறல் குற்றங்கள் இல்லாத நாளில்லை என்று சொல்லும் அளவு நிலைமை மிக மோசமாகி இருக்கிறது, இன்னமும் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும். உலகிலேயே மிகவும் மோசமான ஒரு குற்றம் என்றால் அது பாலியல் வன்புணர்வு என்னும் கற்பழிப்பு குற்றமாகத் தான் இருக்க முடியும். இந்தியாவில் பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றன. இன்றைய சமூகத்தில் பெண்களால் சுதந்திரமாக நடமாட முடியவில்லை.

பெண்களில் கிழவிகளையும்,ஏன் சிறிய குழந்தைகளையும் விட்டு வைக்காமல் சில காம கொடூரர்கள் மோசமாக நடந்து கொள்வதோடு, சமூகத்தில் எவ்வித அச்சமும் இல்லாமல் சுதந்திரமாக சுற்றிக் கொண்டு இருக்கின்றனர். இம்மாதிரியான குற்றவாளிகள் இந்தியாவில் மட்டுமே சுதந்திரமாக எந்தவொரு பயமும் இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.

நிர்பயா..

தலைநகர் புதுதில்லியில் நிர்பயா என்ற பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் நாடெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.சட்டம் கடுமையாக்கப்படும் என்றனர்.நடைமுறையில் இல்லை.கடுயான சட்டம் வந்தும் குற்றங்கள் குறைந்த பாடில்லை.

ஆசிபா...

காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிஃபா 8 பேர்  கொண்ட கும்பலால்  பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் .

பெண் குழந்தையை பெற்ற  பெற்றோர்களை மட்டும் இல்லை,  ஒட்டுமொத்த மக்களையும் கண்ணீர் சிந்த வைத்துள்ள காஷ்மீரில்  ஆசிஃபாவிற்கு நடந்த துயரம். குதிரை மேய்த்துக் கொண்டிருந்த சிறுமியை  கடத்தி  சென்று,  கோயில் கருவறையில் மூன்று நாட்கள் கட்டி வைத்துள்ளன. அதன் பின்பு ஆசிஃபாவின் வாயில் தொடர்ந்து தூக்க மாத்திரைகளை  திணித்து  3 நாட்கள்  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

வலி தாங்காமல் கத்திய சிறுமியின் வாயை துணியால் அடைத்து  மரண வேதனையை அளித்துள்ளனர். கடைசியில் சிறுமி இறந்த பின்பு அவளை தூக்கி வந்து காட்டு பகுதியில் போட்டு விட்டு சென்றுள்ளனர்.  இதை படிப்பவர்கள் மனதில் எழும் ஒரே கேள்வி என்ன நடக்கிறது இந்த நாட்டில்???  என்பது தான்.

ஜனவரி 10 ஆம் தேதி காணமால் போன ஆசிஃபா,  5 நாட்கள் கழித்து பிணமாக கிடைத்துள்ளார். முதலில் இந்த வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட  காவல் அதிகாரி, தீபக் கஜூரியா பின்பு  இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது மீண்டும் ஒரு அதிர்ச்சி.

பின்பு, கைதான அதிகாரியை விடுவிக்கக்கோரி இந்து ஏக்தா மஞ்ச் அமைப்பினர் பிப்ரவரி 16ஆம் தேதி ஜம்மு நகரில் தேசியக்கொடியுடன் ஊர்வலம் நடத்தினர்.  அதில் சில பாஜக அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.கைதான குற்றவாளிக்காக தேசியக் கொடியுடன் ஊர்வலம் சென்றது  அரசியல் தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சி ராம்,சஞ்சி ராம் மகன் விஷால் ஜங்கோதரா, சஞ்சி ராமின் 17 வயது உறவினர், போலீஸ் அதிகாரி தீபக் காஜுரியா சுரேந்தர் வர்மா, பர்வத குமார் ஆகிய 6 பேரும், அவர்கள் செய்த கொலையை மறைத்த 2 காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் அளித்துள்ள பதில்கள்,  காஷ்மீரில் வாழும்  நாடோடி சமூகத்தினரின்  பரிதாப நிலையை நம் கண்முன் நிறுத்துகிறது. ஆசிஃபாவை கற்பழித்ததற்கான நோக்கம்  நாடோடி சமூகத்தின் மீது அவர்களுக்கு  இருந்த வெறுப்புணர்வே ஆகும். குஜ்ஜர் சமூகத்தை அச்சுறுத்தி ஜம்முவை விட்டு அவர்களை  வெளியேற வைக்கவேண்டும் என்றே இப்படி செய்துள்ளனர். இந்த கொலையை மறைக்க போலீஸாருக்கு ரூ1.50 லட்சம் லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது.

பல போராட்டங்களை கடந்து தற்போது இந்த விவகாரம் வெளியே தெரிந்தது,குற்றவாளிகள் இன்று வரை தண்டிக்கப்படவில்லை.          (நன்றி:onetamil news)         

பள்ளிக்கூடங்களில் தொடரும் பாலியல் அத்துமீறல்கள்.

1) கோவை உக்கடம் பகுதியிலுள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் படித்த 17 வயது மாணவி ஒருவர், கடந்த நவம்பர் 2021. 11-ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மாணவி இறப்பதற்கு முன்பு `யாரையும் சும்மா விடக் கூடாது' என்று ஒருசில பெயர்களைக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பள்ளியின் இயற்பியல் ஆசிரியரான மிதுன் சக்கரவர்த்தியின் பாலியல் துன்புறுத்தல் காரணமாகவே மாணவி தற்கொலை செய்துகொண்டதாக அந்த மாணவியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர்.  இந்தப் புகாரை அடுத்து, ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்திமீது போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைதுசெய்தனர். பாதிக்கப்பட்ட மாணவி, தனக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பாகப் பள்ளி நிர்வாகத்திடம் புகார் வழங்கியும், அந்தப் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்வை ஏற்படுத்தியது. பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

2)சிவசங்கர் பாபா, சென்னை அருகிலுள்ள கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இன்டர்நேஷனல் என்ற பள்ளியை நடத்திவருகிறார். இந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் சிலர் சிவசங்கர் பாபாமீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா கைதுசெய்யப்பட்டார். மேலும், இவருக்கு உதவியதாக அந்தப் பள்ளியின் நடன ஆசிரியர் உட்பட ஐந்து ஆசிரியர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தக் குற்றம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி, சிவசங்கர் பாபாமீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

3)சென்னை கே.கே.நகரிலுள்ள பத்மா சோஷத்ரி பால பவன் (பி.எஸ்.பி.பி) பள்ளியில் கடந்த 20 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றுபவர் ராஜகோபாலன். இவர் அந்தப் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் அநாகரிகமாகவும், இரட்டை அர்த்தத்திலும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் வழங்கியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாலியல் குற்றச்சாட்டை அடுத்து, ராஜகோபாலன்மீது போக்சோ உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அவர் கைதுசெய்யப்பட்டார். மேலும், அவர்மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்து்ம் காவல்துறையினர் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர்.

சமீபகாலங்களாக, சில பள்ளி ஆசிரியர்களால் மாணவிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் ஏற்படுவது அதிகரித்துள்ளது. இப்படி மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல்களுக்கு ஒட்டுமொத்த ஆசிரியர்களும் காரணம் என்ற விமர்சனம் சமூக வலைதளங்களில் எழுந்திருக்கிறது.

நம் நாட்டில் கற்பழிப்பு குற்றத்திற்கு தண்டனை என்ன?

இந்திய அரசியல் அமைப்பில் கற்பழிப்புக்கு தண்டனை எல்லாம் கிடையாது..அது நம் நாட்டின் முதன்மை சட்டம். மக்கள் மட்டும் அரசு ஆகியவை எவ்வாறு இருக்க வேண்டும் அவர்களின் உரிமை என்ன கடமை என்ன எவ்வாறு தேர்வு செய்வது என்பதுதான் அரசியல் அமைப்பு.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 375 தான் கற்பழிப்பு என்பதை குற்றம் என்று கூறி அதற்கு தண்டனையும் அளிக்கிறது.இதன் அடிப்படையில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் வரை கொடிய காவல் தண்டனையை கொடுக்கலாம்.. ஆனால் சில முக்கிய அல்லது மிக கொடுமையான சம்பவத்துக்கு மரண தண்டனை' கிடைக்கும்.

சிறு குழந்தைகளை கற்பழிப்பு செய்த குற்றவாளிக்கு POCSO Act படி மரண தண்டனை கொடுக்க வாய்ப்பு உள்ளது.

போக்சோ, பாலியல் புகார்கள் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும், நடந்த பிறகு எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இரண்டு வகையில் இதை அணுக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 2019 – 20 வரை பள்ளிகளில் நடந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்து 36 வழக்குகள் பதிவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் போக்சோ சட்டத்தின் கீழ் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன, எத்தனை வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன என்று பார்த்தால் 14 சதவிகிதம் கூட இல்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போக்சோ சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து ஆறு மாதத்திற்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை போக்சோ வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன. இதன் மூலம் போக்சோ சட்டம் பாய்ந்தது என்று சொல்வது எல்லாம் பொய். அது பாயவும் இல்லை பதுங்கவும் இல்லை. பொம்மை போல ஒரே இடத்தில்தான் கிடக்கிறது.(நன்றி:விகடன்)

நம் நாட்டின் அவல நிலை:

இந்தியாவில் விபச்சாரம் சட்டப்படி குற்றமான செயலாக கருதப்படாது.அரசுஅனுமதியோடு விபச்சாரம் புரியலாம்.

இந்தியாவில் 28இலட்சம் தொழில் முறை விபச்சாரிகள் என்றும்,52 சதவிகிதம் சிறார்கள் பாலியல் ரீதியில் தாக்குதலுக்குள்ளாக்கப்படுகிறார்கள் என்றும் பாரளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் அளவுக்கு நிலைமை மேசமாகியிருக்கிறது.

தனிமனித ஒழுக்கம்,பண்பாடு ரீதியில் சமூகம் முன்னேற வேண்டும்.குடும்ப சூழல் மற்றும் ஆரம்ப பாடசாலைகளிலிருந்து ஒழுக்கமும்,நன்நெறியும் போதிக்கப்படவேண்டும். ஆனால் ஒழுக்க வாழ்வின் ஆரம்ப பாட சாலைகளில் இருந்தே வீழ்ச்சிகள் துவங்குகின்றன. பெற்றோரும், குடும்பமும், கல்வி கலாச்சாலைளும் ஒழுக்க வீழ்ச்சியின் துவக்க மையமாக விளங்கும் சமூக சூழலில் இத்தகைய பாலியல் அக்கிரமங்கள் தீவிரமடைவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

அரசியல், மத, சமூக மையங்கள் ஒழுக்க வாழ்விற்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். ஆனால், அங்கெல்லாம் வெட்கித் தலைகுனியவைக்கும் சம்பவங்கள் தாம் நடக்கின்றன.

கலை, இலக்கிய, விளையாட்டு, கலாச்சார துறைகளில் எல்லாம் பெண்களின் உடல் அமைப்பு துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.

விளம்பரங்ளில் பெண்களை காட்சிப்பொருளாகவும் போகப்பொருளாகவும் சித்தரித்துக்காட்டபடுகிறது.

வளர்ந்துவிட்ட கண்டுப்பிடிப்புகளும்,தகவல் தொழில் நுட்பங்களும் ஆபாசம் நிறைந்ததாகவும்,இளைய சமூகத்தை வக்கிரபுத்தியுள்ளவர்களாக மாற்றியிக்கின்றன.

இவ்வாறு சமூக சூழல் பாலியல் வக்கிரமங்களால் மலிந்து காணப்படும்பொழுது பெண்களைக் குறித்த மனோபாவம் ஆண்களிடம் மாறுபடுகிறது. பெண்கள் எப்பொழுதுமே ஒரு அனுபவிக்க கூடிய போகப்பொருளே என்ற சிந்தனையே ஆண்களிடம் மேலிடுகிறது. விளைவு பாலியல் வன்கொடுமைகள், பலாத்காரங்கள்.

ஆபாசங்கள் மலிந்துப் போன சமூகத்தில் பள்ளிக்கூடத்தில் 4வயது குழந்தைக்கு "Good touch"எது "bad touch"எது என்று சொல்லிக்கொடுக்கப்பட வேண்டுமென்றால் மனித குலம் எவ்வளவு கேவலமான நிலைக்கு சென்றுக்கொண்டிருக்கிறது.

ஒழுக்கம்,பண்பாடு ரீதியில் மேம்படாத சமூகம் நவீன வளர்ச்சியில் எவ்வளவு முன்னேறினாலும் உருப்படாது.

இஸ்லாம்,மதுவை குற்றங்களின் தலைவாசல் என்கிறது.ஒருவன் குடித்தால் எதையும் செய்வான்.குடிகாரர்கள் நிறம்புயுள்ள தேசத்தில் விபச்சாரம் நடக்காமல் வேறென்ன நடக்கும்.இந்த நாட்டில் குடிகாரர்களின் சராசரி வயது 13,புத்தகம் இருக்க வேண்டிய கையில்  மது பாட்டில்கள்...

எல்லா ஆபாச படங்களும் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவனின் மொபைலில் உள்ளது.

இந்தியாவில் ஒரு வினாடிக்கு 28,250பேர் ஆபாச படங்களை பார்கிறார்கள்.

இறை சட்டமே நிறை சட்டம்.

உலகளவில் பின்பற்றபடும் சட்டங்கள் பெரும்பாலும் மனிதனால் இயற்றப்பட்டவைகளே.அவற்றால் பிரச்சனைகளுக்கான முழுமையான தீர்வை காணமுடிவதில்லை.
ஆனால் இஸ்லாம் முழுமைப் பெற்ற சட்டத்திட்டங்களுடைய சன்மார்க்கமாகும்.
இஸ்லாத்தில் கொள்கை,கோட்ப்பாடு,சட்ட திட்டங்கள்,வாழ்வியல் வழிமுறை எல்லம் நேர்த்தியானவையும்.சட்டமாற்றம்,மறுபரிசீலணைக்கும் அப்பாற்பட்டதும் ஆகும்.

அதனால் தான் அல்லாஹுவும்,அவன் தூதரும் ஒன்றை சட்டமாக்கிவிட்டால் அதனை மறுக்கும் உரிமை எவருக்கும் இல்லை என்கிறது திருக்குர்ஆன்...
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّلَا مُؤْمِنَةٍ اِذَا قَضَى اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَمْرًا اَنْ يَّكُوْنَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ اَمْرِهِمْ  وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِيْنًا‏
மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன் : 33:36)   

وَّلَا يُشْرِكُ فِىْ حُكْمِهٖۤ اَحَدًا‏ 

அவன் தன்னுடைய தீர்ப்பில் வேறு எவரையும் கூட்டாக்கிக் கொள்ள மாட்டான்.( 18:26)

اِنِ الْحُكْمُ اِلَّا لِلّٰهِ‌ 

சட்டம் இயற்றும் அதிகாரம் அவனுக்கே உண்டு.

(அல்குர்ஆன் : 6:57. )

பாதிக்கப்பட்டவர்களின் குரலாக குர்ஆன் பேசும்.

وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيْهَاۤ اَنَّ النَّفْسَ بِالنَّفْسِۙ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْاَنْفَ بِالْاَنْفِ وَالْاُذُنَ بِالْاُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّۙ وَالْجُرُوْحَ قِصَاصٌ‌ فَمَنْ تَصَدَّقَ بِهٖ فَهُوَ كَفَّارَةٌ لَّهٗ ‌ وَمَنْ لَّمْ يَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ‏ 
அவர்களுக்கு நாம் அதில், “உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;” எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே!.
(அல்குர்ஆன் : 5:45)

அவதூறு கூறினால்...

وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ يَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِيْنَ جَلْدَةً وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا‌  وَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۙ‏ 

எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.
(அல்குர்ஆன் : 24:4)

விபச்சாரம் செய்தால்....

اَلزَّانِيَةُ وَالزَّانِىْ فَاجْلِدُوْا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ‌وَّلَا تَاْخُذْكُمْ بِهِمَا رَاْفَةٌ فِىْ دِيْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَآٮِٕفَةٌ مِّنَ الْمُؤْمِنِيْنَ‏ 

விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.
(அல்குர்ஆன் : 24:2)

ஜூஹைனா குலத்தை சார்ந்த ஒரு பெண்மணி 

 'அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக நான் (தகாத உறவினால்) கர்ப்பமுற்றுள்ளேன்' என்று கூறினார்.

''இல்லை நீ சென்று குழந்தை பெற்றெடு' (பிறகு திரும்பி வா) என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

குழந்தை பெற்றெடுத்த பின் அந்தப் பெண் ஒரு துணியில் குழந்தை எடுத்துக்கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'இது நான் பெற்றெடுத்த குழந்தை' என்று கூறினார்.

''நீ சென்று குழந்தைக்குப் பாலூட்டு! பால்குடி மறந்தபின் திரும்பி வா'' என்றார்கள்.
பால்குடி மறக்கடித்த பின் அப்பெண் அச்சிறுவனுடன் வந்தார். அவனது கையில் ரொட்டித் துண்டு ஒன்று இருந்தது. அப்பெண் 'அல்லாஹ்வின் தூதரே இவனுக்குப் பால்குடி மறக்கடித்து விட்டேன். இப்போது உணவு உட்கொள்கிறான்' என்று கூறினார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அச்சிறுவனை முஸ்லிம்களில் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள். பிறகு அந்தப் பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். (நூல்:முஸ்லிம்)

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

மாஇஸ் பின் மாலிக் எனப்படும் அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் மானக்கேடான ஒரு செயலைச் செய்துவிட்டேன். ஆகவே, எனக்குத் தண்டனையை நிலைநாட்டுங்கள்"என்று கூறினார். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பலமுறை திருப்பி அனுப்பினார்கள்.
பிறகு அவருடைய குலத்தாரிடம் விசாரித்தார்கள். அதற்கு அம்மக்கள், "அவரைப் பற்றித் தவறாக எதையும் நாங்கள் அறியவில்லை. ஆயினும், அவர் ஒரு செயலைச் செய்துவிட்டு, "தம்மீது தண்டனை நிறைவேற்றப்பட்டால் தவிர அக்குற்றத்திலிருந்து தம்மால் வெளியேற முடியாது" என்று கருதுகிறார்" என்று கூறினர்.
பிறகு மாஇஸ் (ரலி) அவர்கள் மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அவருக்குக் கல்லெறி தண்டனையை நிறைவேற்றுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். ஆகவே, நாங்கள் அவரை "பகீஉல் ஃகர்கத்" பொது மையவாடிக்கு அழைத்துச் சென்றோம். (கல்லெறியும்போது தப்பி ஓடாமலிருப்பதற்காக) அவரை நாங்கள் கட்டி வைக்கவுமில்லை. (அவரை நிறுத்துவதற்காக) நாங்கள் குழியும் தோண்டவில்லை.
அவரை எலும்பு, மண் கட்டி, சுட்ட செங்கல் ஆகியவற்றால் அடித்தோம். அடி தாங்க முடியாமல் அவர் ஓடினார். அவருக்குப் பின்னால் நாங்களும் ஓடினோம். இறுதியில் அவர் (பாறைகள் நிறைந்த) "அல்ஹர்ரா"ப் பகுதியின் முனைக்குச் சென்று எங்களுக்காக நிமிர்ந்து நின்றார். நாங்கள் அவர்மீது "ஹர்ரா"வின் பெருங்கற்களை எறிந்தோம். அவர் அமைதியாகிவிட்டார்.
பின்னர் அன்று மாலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடையே) நின்று உரையாற்றினார்கள். அப்போது, "அல்லாஹ்வின் பாதையில் அறப்போருக்காக நாம் புறப்படும்போதெல்லாம் சிலர் (போருக்குச் செல்லாமல்) நம்முடைய குடும்பத்தாரிடையே தங்கிவிடுகின்றனர். அவர்கள் மலை ஆடு (புணரும்போது) சப்தமிடுவதைப் போன்று சப்தமிட்டுக்கொண்டு இருந்துவிடுகிறார்கள். இத்தகைய (இழி)செயலை செய்யும் மனிதர் எவரேனும் என்னிடம் கொண்டுவரப்பட்டால் அவருக்குத் தக்க தண்டனை வழங்குவது என்மீது கடமையாகும்" என்று கூறினார்கள்.
(அன்றைய நாளில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாஇஸ் (ரலி) அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரவுமில்லை; (தண்டனையை நிறைவேற்றிய பின் அவரை) இழித்துப் பேசவுமில்லை.


திருடினால்.......

وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا جَزَاءً بِمَا كَسَبَا نَكَالًا مِنَ اللَّهِ ۗ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ
திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டணையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.

இந்த முஹம்மதின் மகள் பாத்திமா திருடினாலும்....

ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்.  மக்ஸுமிய்யா குலத்தை (குரைஷி குலம்) சார்ந்த ஒர் பெண்மணி திருடிவிட்டார். இது குரைஷி குலத்தினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. இது குறித்து நபிகள் நாயகத்திடம் அவர்களின் அன்புக்கு பாத்திரமான உஸாமாவால் மட்டுமே என்று பேசிக் கொண்டனர்.இது குறித்து உஸாமா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பேசினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய குற்றவியல் சட்டங்களில் நீர் பரிந்து பேசுகிறீரா? எனக் கடிந்து விட்டு மக்களிடையே எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் மனிதர்களே உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தவர் உயர்ந்தவன் திருடினால் விட்டு விடுவார்கள். பலவீனமானவன் திருடினால் தண்டனையை நிறைவேற்றுவார்கள் இதன் காரணமாகவே அவர்கள் அழிந்து போயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையாக இந்த முஹம்மதின் மகள் பாத்திமா திருடினாலும் அவரது கையை நானே வெட்டுவேன் எனக் கூறினார்கள்.

நூல்: புஹாரி 6787

திருடனின்‌ கரம்‌ மணிக்கட்டுவரை துண்டிக்கப்படுவது, கொலைக்குப்‌ பதிலாக கொலையாளி கொலை செய்யப்பட வேண்டும்‌ என்ற சட்டங்கள்‌ இரக்கமற்ற, காட்டுமிராண்டித்தனமான சட்டம்‌ என விமர்சனம்‌ செய்யும்‌ பலர்‌ தமது வீடுகளின்‌ திருடிய திருடனை முர்க்கத்தனமாக தாக்கி சிலவேளை அவனைக்‌ கொலையும்‌ செய்தும்‌ விடுகின்றனர்‌. கொலை காரனை இவர்கள்‌ என்ன செய்யவார்கள்‌ என்று நினைத்துப்பார்க்க வேண்டும்‌.

குற்றவாளிகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் தண்டனைகளை மாற்றி அவர்களுக்கெதிராகச் சாட்டையை உயர்த்தி, கடும் தண்டனைகளை நடைமுறைப்படுத்தினால், உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழும்.

திருடனைப் பிடித்தவுடன் அவன் கையை வெட்டி விட்டால் பிறகு அவன் நிரபராதி என்பது தெரிய வந்தால் போன கை திரும்பி வந்து விடுமா? என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர்.

இரண்டு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பின் எத்தனையோ பேர் நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இழந்த மூன்றாண்டுகளைத் திருப்பிக் கொடுக்க இயலுமா என்று கேட்டால் அதற்கு என்ன பதில்? என்பதைச் சிந்தித்தால் இப்படிக் கேட்க மாட்டார்கள்.

நபியின் சட்டத்தினால் மண்டியிட்ட மன்னர்.

சீசர் மன்னன்‌ அபூ சுப்பயான்‌ (ரழி) அவர்களுடன்‌ உரையாடிக்‌ கொண்டிருந்த போதுஅவர்‌ உங்களுக்கு எதைக்‌ கட்டளையிடுகின்றார்‌ எனக்கோட்டார்‌. அதற்கு அபூ சுஃப்யான்‌, தொழுகை, தர்மம்‌, போதும்‌ என்ற பண்பாடு, உறவுகளுடன்‌ சேர்ந்து வாழ்தல்‌, மூதாதையர்‌ சொல்வதைப்‌ புறக்கணித்தல்‌ ஆகிய பண்புகளைக்‌ கொண்டு கட்டளையிடுகின்றார்‌ எனப்பதில்‌ அளித்தார்‌. அதற்கு மன்னன்‌, நீ சொல்வது உண்மையானால்‌ அவர்‌ எனது இந்த சிம்மாசனத்தையும்‌ தனது ஆளுகையின்‌ கீழ்‌ கொண்டுவருவார்‌, எனக்கு முடியுமானால்‌ அவரை நான்‌ சந்தித்து, அவரது பாதத்தையும்‌ கழுவிடவும்‌ தயார்‌ என்றார்‌. புகாரி (2941)

நபி (ஸல்) அவர்களின்...............

காலத்தில் நடந்த இன்னொரு சம்பவம் இங்கு சுட்டிக்காட்ட உகந்தது.சமூகத்தில் நிலவிய வறுமை, பாதுகாப்பற்ற சூழல், வழிப்பறிக் கொள்ளை குறித்து நபி (ஸல்) அவர்களிடம் பலரும் முறையிட்டபோது தனது தோழர் அதீய் இப்னு ஹாதிம் (ரலி) அவர்களிடம் இவ்வாறு கூறினார்கள். “நீ நீண்ட நாள் வாழ்ந்தால், நீ நிச்சயம் பார்ப்பாய். ஒட்டகச் சிவிகையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை (வலம் வருவதற்காகப்) பயணித்து ஹீராவிலிருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறொருவருக்கும் அஞ்ச மாட்டாள்”. மக்காவில் வைத்து கப்பாப் இப்னு அரத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறுகையில், “ஸன்ஆ முதல் ஹழரள் மவ்த் வரை ஒரு பெண் தனியாக நடந்து செல்லும் சூழல் உருவாகும்” என்றார்கள்.

எந்தவொரு பெண்ணும் பூரண பாதுகாப்புடனும் அச்சமின்றியும் எங்கேயும், எப்பொழுதும் பயணிக்கும் விதம் மக்கள் ஒழுக்கரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் உயர்வான நிலையை அடையவேண்டும் என்பதையே இஸ்லாம் விரும்புகிறது.

மீண்டும் தவறு செய்யாமலிருக்க...

1. குற்றம்செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனை, மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதி-லிருந்து அவனைத் தடுக்க வேண்டும்.

2. ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு மற்றவர்கள் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும்.

3. குற்றவாளியால் பாதிப்புக்கு உள்ளானவன் தனக்கு நீதி கிடைத்து விட்டதாக நம்ப வேண்டும். அவன் மன நிறைவு அடைய வேண்டும். அதை இஸ்லாம் தான் தருகிறது.

அல்லாஹ்  நம்மையும் நம் சந்ததியினரையும்  இஸ்லாமிய இறை சட்டத்தை பின்பற்றி வாழவும், இறைவனுக்கு அஞ்சி வாழவும் தவ்ஃபீக் செய்வானாக!ஆமீன்....

வெளியீடு: செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

         

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...