Thursday, 18 January 2024

ஜும்ஆ பயான் 19/01/2024

பாபர் மஸ்ஜிதின் இடத்தில் இராமர் கோவில்.

மஸ்ஜித் என்பது இறையில்லமாகும்.அல்லாஹுவின் வணக்க வழிபாடுகள் நடைபெறும்  இடமாகும்.முஸ்லிம்களின் மிகவும் பரக்கத் பொருந்திய,                        புண்ணியத்தலமும்,இரவு பகலாக,சர்வ வல்லமை மிக்க படைப்பாளனின் ஏகத்துவத்தை ஏற்று புகழ் பாடும் பூமியின் சிறந்த பகுதி பள்ளிவாசல்கள் ஆகும்.ஹம்து எனும் இறைபுகழும்,திக்ரு எனும் இறைதுதியும்,தஹ்லீல் எனும் ஏகத்துவ முழக்கமும்  மஸ்ஜிதின் எட்டுத்திக்கும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.அல்லாஹுத்தஆலாவின் சன்னிதானத்திற்கு முன்னால் சிரம் தாழ்த்தி ஸஜ்தா செய்வதற்காக எழுப்பப்பட்ட முதல் இறை ஆலயம் புனித கஃபதுல்லாஹ்வாகும்.

اِنَّ اَوَّلَ بَيْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَـلَّذِىْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًى لِّلْعٰلَمِيْنَ‌‌‏

(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.

(அல்குர்ஆன் : 3:96)

இஸ்லாமியர்களின் ஏகோபித்த முடிவு:

உலகில் உள்ள அனைத்து மஸ்ஜிதுகளையும் கியாம நாள் வரை பாதுகாப்பதும்,அவற்றை எக்காரணத்திற்காகவும் வேறு இடங்களுக்கு மாற்றாமல் இருப்பதும் அவசியமாகும்.

காரணம் மஸ்ஜிதில் கீழே பூமி எவ்வளவு ஆழத்திற்கு செல்லுமோ அதுவரையும்,மஸ்ஜித்திற்கு மேல் ஏழு வானம் வரை அது மஸ்ஜிதாகவே இருக்கும்.

ஈமான்,இஸ்லாத்தின் பரக்கத்தை இழந்தவன்.மேலும் குஃப்ர்,ஷிர்கில் மூழ்கியிருப்பவனே மஸ்ஜிதை சேதப்படுத்துவது,அதனை இடிப்பது,அதன் புனிதத்தை கெடுப்பது போன்ற இழிசெயலில் ஈடுப்படுவான்.

ஈமான்கொண்ட மக்கள் மஸ்ஜிதின் உருவாக்கம்,அதன் வளர்ச்சிக்காக பாடுப்படுவார்கள்.

اِنَّمَا يَعْمُرُ مَسٰجِدَ اللّٰهِ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَاَ قَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّكٰوةَ وَلَمْ يَخْشَ اِلَّا اللّٰهَ‌ فَعَسٰٓى اُولٰۤٮِٕكَ اَنْ يَّكُوْنُوْا مِنَ الْمُهْتَدِيْنَ‏

அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்.(அல்குர்ஆன் : 9:18)

இறைமறுப்பாளர்களும், இணைவைப்பாளர்களும் மஸ்ஜிதை அழிக்கும் சூழ்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள்.

وَمَنْ اَظْلَمُ مِمَّنْ مَّنَعَ مَسٰجِدَ اللّٰهِ اَنْ يُّذْكَرَ فِيْهَا اسْمُهٗ وَسَعٰـى فِىْ خَرَابِهَا ‌ اُولٰٓٮِٕكَ مَا كَانَ لَهُمْ اَنْ يَّدْخُلُوْهَآ اِلَّا خَآٮِٕفِيْنَ  لَهُمْ فِى الدُّنْيَا خِزْىٌ وَّلَهُمْ فِى الْاٰخِرَةِ عَذَابٌ عَظِيْمٌ‏

இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.(அல்குர்ஆன் : 2:114)

தற்போது, ​​ஒரு திட்டமிட்ட சதித்திட்டத்தின் கீழ், இந்திய முஸ்லிம்களை பல்வேறு பிரச்சனைகளில் சிக்க வைத்து, அவர்களின் கூட்டமையை சிதறடித்து, அவர்களின் அதிகாரத்தை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்திய ஊடகங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து விஷம கருத்துக்களை கக்கிவருகின்றன.

இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகள்,சட்டத்திட்டங்கள் மற்றும்  இஸ்லாத்தின் புனிதர்கள்  பற்றிய சந்தேகங்கள் தொடர்ந்து பரப்பப்பட்டுவருகின்றன.

இந்தியாவில் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுப்பதற்கான  முயற்சிகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. 

புனித குர்ஆன் எரிக்கப்படுகின்றன. நாட்டில் பல மஸ்ஜித்கள் இடிக்கப்படுகின்றன அல்லது முஸ்லிம்கள் அதில் தொழுகை நடத்த விடாமல் தடுக்கப்படுகிறார்கள்.

இதன் ஒரே நோக்கம், இந்திய முஸ்லிம்கள் தங்கள் தனித்துவ அடையாளங்களை இழந்து,

கங்கையை புனிதமாகவும்,ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிடவும்,இந்து மதத்தை தங்களின் தாய்மதமாக ஏற்று "கஹ்ர்வாப்ஸி"என்ற பெயரில் மதம்மாற கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

ஆனால் இந்திய முஸ்லிம்கள் தங்களின் ஈமானையும்,மார்க்கத்தையும் பாதுகாக்க அனைத்து வகையான தியாகங்களையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்,

அவர்களை எந்த சக்தியாளும்,எவ்வளவு விலைக்கொடுத்தாலும் இஸ்லாத்திலிருந்து வெளியேற்ற முடியாது.

ஏனெனில் வரலாற்றில்ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்திய முஸ்லிம்கள் தங்களின் மத,வழிப்பாட்டு சுதந்திரத்திற்காக உறுதியான ஈமானோடு இஸ்லாமிய எதிர்ப்பு சக்திகளுக்கு எதிராகப் போராடியுள்ளனர்.

இந்த நம்பிக்கையின் காரணமாகவே இந்திய முஸ்லிம்கள் இதுவரை தங்களைப் பாதுகாத்து வருகின்றனர்.

மேலும் ஆயிரம் எதிர்ப்புகள் இருந்தாலும், அவர்கள் தங்களின் மார்க்கம், கலாச்சார, நாகரீகத்தை பாதுகாப்பதில் மும்முரமாக உள்ளனர்.

ஜனநாயகம் தகர்க்கப்பட்ட தினம்.

டிசம்பர் 6 இந்திய முஸ்லிம்களின் வரலாற்றில் மறக்க முடியாத நாளாகும்.இதே தினத்தில் தான் 1992 ஆம் ஆண்டு உத்திரபிரதேச மாநிலம் அயோத்தி நிலத்தில் கட்டப்பட்ட நூற்றாண்டை கடந்த, வரலாற்று சிறப்புமிக்க பாபர் மஸ்ஜித், மதவெறி கொண்ட தேச விரோத பாசிச சக்திகளால்  திட்டமிட்டு இடுத்து தரைமட்டமாக்கப்பட்டது.

அப்போது இந்தியப் பிரதமராக இருந்த  நரசிம்மராவ் மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் கல்யாண் சிங் ஆகியோர், அப்போது ஆளும் காங்கிரஸ் கட்சி இத்தீய சதியில் ரகசியமான சம பங்காளிகள் என்பது நம்பகமான சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களிலிருந்து தெளிவாகிறது.

ஏனெனில் பல ஆயிரம் ராணுவ வீரர்கள் முன்னிலையில் பாபர் மஸ்ஜித் ஷஹீதாக்கப்படுகிறது.அனைத்து ராணுவ வீரர்களும்,காவல்துறையினரும் பார்வையாளர்களாகவே இருந்தனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த படைகளையும் வீரர்களையும் அனுப்பியதன் நோக்கம் என்ன?

பாபர் மஸ்ஜித் இடிப்பு, ராணுவ வீரர்களை அனுப்பியது பற்றி அன்றைய அரசிடம் கேட்கப்பட்ட போது ஆளும் அரசு சொன்னது...

ஹிந்துக்களை வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்த  ராணுவப்படைகளை அனுப்பி,மஸ்ஜிதை இடித்து கோவிலை கட்டுவதை தடுத்திருந்தால், ரத்தம் சிந்தியிருக்கும், ரத்தம் சிந்துவதை நாம் ஏற்கவில்லை.என்ற ஆச்சரியமான,அபத்தமான பதிலையே ஆளும் அரசு கூறியது.

அயோத்தி மண்ணில் ரத்தம் சிந்தியதால் தான் ராணுவ வீரர்களின் கைகளில் விலங்கு , காலில் சங்கிலியும் போடப்பட்டதோ என்கிற ஆச்சர்யம் பாமரனின்  உள்ளத்திலும் எழும்.

இதன்விளைவு வெள்ளிடை மலைப்போல,கைமேல் பலனாக பாபர் மஸ்ஜித் ஷஹீதாக்கப்பட்டது, அந்த நேரத்தில் நாடு முழுவதும் வகுப்புவாத தீ பரவியது.

 நாட்டில் பல நகரங்களிலும்,ஊர்களிலும் இராணுவத்தின் தோட்டாக்கள் மற்றும் அதன் பீரங்கிகளின் மூலம் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் இரத்தத்துடன் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.

அவர்களின் மனைவிகள் விதவைகளாகவும்,குழந்தைகள் அனாதைகளாகவும் ஆனார்கள்.கடைகள் சூறையாடப்பட்டன, வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன.

இஸ்லாமியர்களின் உயிர்,உடைமைகள்,மானம்,மரியாதை ஆகியவற்றின் மீது அநியாயமாக தாக்குதல்கள் நடந்தபோது, ​​அன்றைய அரசும்,நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல்,குறைந்தபட்சம் வருத்தம் கூட தெரிவிக்காமல் மௌனம் காத்தது. 

அது ஏன் நடந்தது?என்றால் பாசிசவாதத்தின் நோக்கமும் பல காலங்களின் விருப்பமும் நிறைவேறியது.

இந்த அனைத்து இயக்கங்கள் மற்றும் கோட்பாடுகளிலிருந்து, அனைத்து திட்டங்களும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு இன்றும் செயல்படுத்தப்படுகின்றன என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது.

அப்போது, ​​அயோத்தியில் துப்பாக்கி குண்டுகள் வீசி இந்துக்கள் கொல்லப்பட்டு இரத்தம் சிந்துவதை விரும்பாத அரசு தான், நாடு முழுவதும் முஸ்லீம்கள் ஒடுக்கப்பட்டபோது எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை, முஸ்லிம்களின் மீது அடக்குமுறை, கொடுங்கோன்மை, வன்முறை, மிருகத்தனத்தின் கோரத்தாண்டவம் தலைவிரித்தாடிய போது அதனை தடுப்பதற்கான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.

இத்தகைய நியாயமற்ற போக்கு ஒரு நீதியான ஆட்சியாளரிடம் பார்க்கமுடியாது,கொடுங்கோலன், கிளர்ச்சியாளன், கலகக்காரன், மதவெறி மற்றும் பொறாமை கொண்ட ஆட்சியாளன் தான் இப்படி நடந்துக்கொள்வான்.

இந்த வெளிப்படையான அநீதி மற்றும் ஒடுக்குமுறைக்குப் பின்னால், பெரும்பான்மையானராக உள்ள இந்துக்கள் அதன் கூட்டு ஆற்றலுடன் சிறுபான்மையிரான முஸ்லிம்களை ஒருமுறையேனும் தாக்கி கட்டாயப்படுத்திடவும், ஆதரவற்றவர்களாகவும் ஆக்கிட வேண்டும் என்ற சிந்தனை நாடெங்கிலும் பரவியது.

மேலும் இங்கு மீண்டும் தலை தூக்க முடியாத அளவுக்கு அவர்களை நசுக்கி, மற்ற இடங்களிலும் அநீதிக்கு எதிராக குரல் எழுப்பினால், அதே கொடுமைதான் என்ற செய்தியை, நாட்டின் சிறுபான்மையினருக்கு பகிரங்கமாகவே எச்சரிக்கப்பட்டது. அங்கேயும் வற்புறுத்தவது,அடக்குமுறைக்கு ஆளாக்குவது என்பது தொடர்கதையானது.

கலவரக்காரர்களை தடுக்கவோ, அநீதமிழைக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக எந்த அரசாங்கமும் முன்வரவில்லை.

டிசம்பர் 06க்குப் பிறகு பாஜக மாநில அரசுகள் வீழ்ந்தன.

தீவிரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது, இருந்தபோதிலும், டிசம்பர் 6 க்கு முன்பு இருந்த அதே நிலைமை தொடர்ந்தது, மேலும் சட்டம் ஒழுங்கு கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் சீர்குழைந்து,தீய சக்திகள் இன்னும் வளர வழிவகுத்தது. 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும்,அதன் வரலாற்றிற்கும் எதிராக சவால் விட  தயங்காத அளவுக்கு இந்தியாவில் தீவிரவாத இந்துக்களின் மனவுறுதி அதிகரித்ததற்கு இதுவே காரணமாகும்.மாறாக, புதிய அரசியலமைப்பையும் புதிய வரலாற்றையும் திணிக்க முயற்சிமேற்கொள்ளப்பட்டது.

இன்னும் சொல்லப்போனால், நடுநிலையான வரலாற்றாசிரியர்களால் தொகுக்கப்பட்ட இந்தியாவின் பல நூற்றாண்டு கால வரலாறு உண்மைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல, மதச்சார்பற்ற அடிப்படையில் இயற்றப்பட்ட இந்திய அரசியலமைப்பு இனி தேவையில்லை என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது.

இந்நாட்டின் ஹிந்துகள் வந்தேறிகள் அல்லர் என்றும், முகமது பின் காசிம், சுல்தான் மஹ்மூத் கஸ்னவி, ஷஹாபுதீன் கோரி, ஹுமாயூன், ஜஹீருதீன் பாபர், ஔரங்கசீப் ஆலம்கிர் போன்றவர்களே வந்தேறி இந்நாட்டின் மீது படையெடுத்தார்கள் என்றும் இவர்களை வரலாற்றுப் புத்தகங்களில் தீவிரவாதிகளாக சித்தரிக்க விரும்புகிறார்கள். அதனால் இவர்கள் கோவில்களை இடித்து மஸ்ஜித்களை கட்டினார்கள் என்கிற கட்டுக்கதையை திணிக்க முயற்சிக்கின்றனர்.

ராஜா தஹார், பிருத்விராஜ், சிவாஜி போன்ற இந்துமன்னர்களை, நமது தேச நாயகர்களாகவும்,

திப்புசுல்தான்,ஔரங்கசீப் போன்ற இஸ்லாமிய மன்னர்களை தேசவிரோதிகளாக சித்தரித்து வரலாற்றை மாற்றி எழுதிவிட்டனர்.

சிறுபான்மையினருக்கு அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பையும், அவர்களின் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்களின் சலுகைகளையும் ஒழித்து, பெரும்பான்மையினரின் வழிமுறைகள் எதுவோ  அதையேக் கடைப்பிடிக்க வேண்டும்.என்கிற திட்டமும்   மதச்சார்பற்ற இந்தியாவை   இந்து ராஷ்டிரா நாடாக மாற்ற வேண்டும் என்கிற திட்டமும் தீட்டி முழுவீச்சில் முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர். 

நீதி குழித்தோண்டி புதைக்கப்பட்ட தினம்.

இந்திய இஸ்லாமிய சமூகம் நீதிமன்ற தீர்ப்பு தமக்கு சாதகமாக வரும் என்று 27 வருட சட்டப் போராட்டத்தின் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் பாபர் மஸ்ஜித் தீர்ப்பு,பாசிச மதவாதிகள் எழுதிக் கொடுத்ததை வாசித்ததைப் போல இருந்தது "இடித்தவர்களுக்கே இடம் சொந்தம்"என்கிற தீர்ப்பு பேரிடியாக வந்தது.

அதன் விவரம் சுருக்கமாக...

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை நிர்மோகி அகாரா, ராம் லல்லா, சன்னி வக்பு வாரியம் ஆகியோர் உரிமை கொண்டாடினார்கள். இதை சரிபாதியாகப் பிரித்துக்கொள்ளக் கடந்த 2010-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 14 மேல் முறையீட்டு மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த 2019ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தொடர்ந்து 40 நாட்கள் விசாரணை நடத்தி முடித்துள்ளது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்  ஓய்வு பெறுவதையடுத்து, அயோத்தி வழக்கில் 9/11/2019 அன்று  தீர்ப்பு அளிக்கப்பட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்.

1-அயோத்தியில் உள்ள பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை. 2003-ம் ஆண்டு இந்திய தொல்லியல்துறை ஆய்வறிக்கையின்படி பாபர் மசூதிக்குக் கீழ் ஒரு கட்டிடம் இருக்கிறது. அந்தக் கட்டிடம் முஸ்லிம் சமூகத்தின் கட்டிடத்தைப் போல் அல்ல என்ற தொல்லியல் துறையின் அறிக்கையை எந்தவிதத்திலும் ஒதுக்கிவிட முடியாது அதேசமயம், பாபர் மசூதிக்குக் கீழே இருக்கும் கட்டிடம் கோயில் போன்ற தோற்றத்திலும் இல்லை என்று தொல்லியல்துறை தெரிவித்துள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்தது.

2-அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் பிறந்தார் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையை மறுக்க முடியாது. நம்பிக்கை என்பது தனிமனிதர் சார்ந்தது.

3-1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதம். இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல். ஒரு மதத்தினரின் நம்பிக்கை மற்ற மதத்தினரின் நம்பிக்கையைத் தடுப்பதாக இருக்கக் கூடாது.

4-1857-ம் ஆண்டுக்கு முன்புவரை சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் உள்பகுதியில் இந்துக்கள் வழிபடத் தடையில்லை. ஆங்கிலேயர் வருவதற்கு முன் அயோத்தியில் இந்துக்கள் ராமர், சீதாவை வணங்கியதற்கான ஆதாரம் இருக்கிறது.

5-அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி. கோயில் கட்டுவதற்கு 3 மாதத்துக்குள் அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்கி அதன் வசம் 2.77 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப் பட வேண்டும். அந்தக் கோயிலின் கட்டுமானப் பணிகளை அந்த அறக்கட்டளை கண்காணிக்க வேண்டும். அதற்குரிய உறுப்பினர்களை 3 மாதங்களில் நியமிக்க வேண்டும்.

6-முஸ்லிம்களுக்கு மசூதி கட்டுவதற்கு அயோத்தியில் தனியாக 5 ஏக்கர் நிலத்தை உ.பி. அரசு வழங்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தின் உள்பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தியுள்ளார்கள். ஆனால், இடம் முழுமையாக தங்களுக்குச் சொந்தம் என்பதையும் முஸ்லிம் அமைப்புகள் நிரூபிக்கவில்லை.

(நன்றி;இந்து தமிழ் திசை)


பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் இராமர் கோவில்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் எதிர்வரும் ஜனவரி 22ஆம் தேதி இந்தியப்பிரதமரின் தலைமையில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் இராமர் கோவில் திறப்பு விழா அரசுவிழாவாக கொண்டாடப்படவுள்ளது.

இதற்காக பல்வேறு பிரபலங்கள், பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் பாஜக, ராமர் கோவிலை அயோத்தியில் கட்டி தருவதாக வாக்குறுதி அளித்திருந்தது. அதேபோன்று கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் பாஜக ராமர் கோவில் விவகாரத்தை வைத்து பிரச்சாரம் நடத்தி இருந்தது.

அதே சமயம் தொடர்ந்து பாஜக இரண்டு முறை மத்தியில் ஆட்சியைப் பிடித்திருக்கும் நிலையில் இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கிற நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. கோவில் வேலைகள் முழுமையாக முற்றுப்பெறாத நிலையில், பாஜக அரசு தேர்தலை காரணம் காட்டி முன்கூட்டியே கோவிலை திறப்பதாகவும், இது அரசியல் செயல்திட்டம் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

(நன்றி:நக்கிரன்)

மீண்டும் இவர்கள் ஆட்சியில் அமர்ந்தால் இந்தியாவை "இந்து ராஷ்டிரா"என அறிவித்துவிடுவார்கள்.

இந்தியாவை  "இந்து ராஷ்டிரா"ஆக அறிவித்துவிட்டால் இங்கே இஸ்லாமியர்களின் நிலை என்ன?

இதற்கான பதில்!

ஹழ்ரத் ஷாஹ்வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி (ரஹ்)அவர்கள் தங்களின் தஃப்ஹீமாத் எனும் நூலில் எழுதுகிறார்கள்:

நான் உறுதியாக கூறுவேன்  எப்பொழுது இந்தியா இந்துத்துவாவாதிகளின் ஆளுகையின் கீழ் செல்லுமோ அப்பொழுது அல்லாஹ்வின் நாட்டப்படி அதிகார வர்க்கத்தினரும் ஆட்சியாளரும் இஸ்லாத்தை ஏற்கும் நிலை ஏற்படும்.இந்தியா இஸ்லாமிய நாடாக மாறும்.

காரணம் வரலாற்றில் துருக்கி ஆதிக்க சக்திகளின்  ஆளுகைக்கு கீழ் சென்றதற்குப் பின்னால் தான் இஸ்லாமிய நாடாக மாறியது.

பொதுவாகவே ஹழ்ரத் முஹம்மதுﷺ அவர்களின் உம்மதிற்கு வெற்றிக்கு முன்னால் சோதனை வரும்.

(التفہیمات الالہیہ-٢٦٩)

அல்லாஹ் இந்த சோதனையான கால கட்டத்தில் நம் சமுதாய மக்களுக்கும் இஸ்லாமிய அடையாள சின்னங்களுக்கும் பாதுகாப்பை தந்தருள்வானாக! ஆமின்...

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

No comments:

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...