Wednesday, 22 March 2023

ஜூம்ஆ பயான் 24/03/2023

ரமலானும் குர்ஆனும்.

குர்ஆன் இறங்கிய மாதம்.

شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ ۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ 
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; (அல்குர்ஆன் 2- 185)

ரமலானுக்கும்,குர்ஆனுக்கும் உள்ள மிக முக்கிய தொடர்புகளில் ஒன்று இம்மாதத்தில் தான் குர்ஆன் இறக்கியருளப்பட்டது.

அதனால் தான் கண்மணி நாயகம்ﷺஅவர்கள் ரமலான் மாதம் அதிகம் குர்ஆன் ஓதுவதில் தம்மை ஈடுப்படுத்திக்கொள்வார்கள்.

ரமலானில் ஜிப்ரயீல்(அலை)அவர்கள் ஒரு முழு குர்ஆனை ஓத நாயகம்ﷺஅவர்கள் கேட்பதும்,நாயகம்ﷺஅவர்கள் ஓத ஜிப்ரயீல்(அலை)அவர்கள் கேட்பதும் வழமையாக இருந்தது.

மேலும் நாயகம்ﷺஅவர்கள் தராவீஹ் தொழுகையில் முழுக்குர்ஆனை ஓதி முடிக்க முக்கியத்துவம் தருவார்கள்.

ஸஹாபாப்பெருமக்களும்,நல்லோர்களும் இன்று வரை இஸ்லாமியர்களும் ரமலான் மாதம் குர்ஆன் ஓதுவதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதும் இம்மாதத்தில் திருமறை இறக்கியருளப்பெற்ற காரணத்தினாலே ஆகும்.

ரமலான் மாதம் ஓர் லைலத்துல் கத்ரு இரவில் லவ்ஹுல் மஹ்ஃபூலிலிருந்து முதல் வானத்திற்கு குர்ஆன் முழுவதும் இறக்கியருளப்பட்டு,பின்பு தேவைக்கேற்ப சிறுக சிறுக கண்மணி நாயகம்ﷺஅவர்கள் மீது 23 ஆண்டுகள் இறக்கப்பட்டது.

குர்ஆன் மட்டுமல்ல அனைத்து இறைவேதங்களும்,ஸுஹ்ஃபுகள் எனும் ஏடுகளும் ரமலான் மாதத்திலே தான்  இறக்கப்பட்டன.

முஸ்னத் அஹ்மத்தில் வரும் ஓர் அறிவிப்பு...

கண்மணி நாயகம்ﷺஅவர்கள் சொன்னார்கள்;இப்ராஹீம்(அலை)அவர்களின் مصحف ابراہیمی முஸ்ஹஃப் எனும் ஏடும்,தவ்ராத்,இன்ஜீல் அனைத்தும் ரமலான் மாதத்திலே இறக்கியருளப்பட்டன.(مسند احمد)

குர்ஆன் இறங்கிய இரவு.

குர்ஆன் பரகத் பொருந்திய ஓர் இரவான லைலத்துல் கத்ரில்,ரமலான் மாதத்தில் இறக்கியருளப்பட்டது என கீழ்கானும் மூன்று ஆயத்துகளின் மூலம் தெரிந்துக் கொள்ளமுடியும்.

(ஆயத் 1)

اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةٍ مُّبٰـرَكَةٍ‌ اِنَّا كُنَّا مُنْذِرِيْنَ‏

நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்.   (அல்குர்ஆன் : 44:3)

(ஆயத் 2)

اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةِ الْقَدْرِ  ‏

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.             (அல்குர்ஆன் : 97:1)

(ஆயத் 3)

شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِ 

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது;         (அல்குர்ஆன் : 2:185)

ரமலானுக்கும், குர்ஆனுக்கும் உள்ள 3 தொடர்புகள்.

1) தக்வா எனும் இறையச்சம்.

ரமலான் மாதத்தில் நோன்புநோற்பது,     بالغ வயதுக்குவந்த, عاقل புத்திசுவாதீனமுள்ள, صحت ஆரோக்கியமான, مقیم ஊரிலுள்ள,                  ஆண்,பெண் அனைவரின் மீதும் فرض கட்டாயக்கடமையாகும். இக்கடமையை நிறைவேற்றுபருக்கு இச்சையை கட்டுப்படுத்தும் ஆற்றல் பிறக்கின்றது.  இதுவே تقویٰ இறையச்சத்தின் அடிப்படையாகும்.

பகரா சூராவில் நோன்பு கடமையாகக்கப்பட்டதின் நோக்கம் :

’’لَعَلَّکُمْ تَتَّقُوْنَ‘‘(البقرۃ: ۱۸۳) 

"நீங்கள் இறையச்சமுடையோராக ஆகுவதற்காக"என்கிறது குர்ஆன்.  வாழ்வில்تقویٰ இறையச்சம் ஏற்பட நோன்பு, பேருதவியாகவும்,பிரதிபலிப்பாகவும் உள்ளது.

குர்ஆன் இறக்கியருளப்பட்டதின்  நோக்கம் :

இப்புனித மாதத்தில் ஓர் பரக்கத் பொருந்திய இரவில்,இறைவனால் மாந்தர்களுக்கு நேர்வழிக்காட்டிட  இறக்கியருளப்பட்ட வேதம் திருமறை குர்ஆன்.

குர்ஆன் இறக்கியருளப்பட்டதின் நோக்கமும் تقویٰ எனும் இறையச்சமாகும் என குர்ஆன் பேசுகிறது.

ذٰ لِكَ الْڪِتٰبُ لَا رَيْبَۛ فِيْهِۛ هُدًى لِّلْمُتَّقِيْنَۙ‏

இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.(அல்குர்ஆன் : 2:2)

ஆக நோன்பு,குர்ஆன் இரண்டின் நோக்கமுமே تقویٰ இறையச்சம் ஆகும்.

2) ஷபாஅத் எனும் சிபாரிசு.

இவ்விரண்டின் இன்னொரு ஒற்றுமை, நாளை மறுமையில் இரண்டுமே அடியார்களுக்கு شفاعتசிபாரிசு செய்யும்.

ورد عن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم قال: « الصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ، يَقُولُ الصِّيَامُ: أَيْ رَبِّ، مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهَوَاتِ بِالنَّهَارِ، فَشَفِّعْنِي فِيهِ، وَيَقُولُ الْقُرْآنُ: مَنَعْتُهُ النَّوْمَ بِاللَّيْلِ، فَشَفِّعْنِي فِيهِ ، قَالَ: «فَيُشَفَّعَانِ».رواه أحمد

கண்மணி நாயகம்ﷺஅவர்கள் கூறினார்கள்; மறுமை நாளில் நோன்பும்,குர்ஆனும் அடியானுக்காக சிபாரிசுச் செய்யும்.

நோன்பு கூறும்:

"எத்தனையோ தினங்கள் இவனை பகலில் உணவையும்,மனோ இச்சையையும் விட்டும் நான் தடுத்திருக்கிறேன்.எனவே இவன் விஷயத்தில் எனது சிபாரிசை ஏற்றுக்கொள்"

குர்ஆன் கூறும்:

"நான் இவனை இரவு உறங்குவதை விட்டும் தடுத்திருக்கிறேன்.எனவே இவன் விஷயத்தில் எனது சிபாரிசை ஏற்றுக்கொள்"                                     அப்போது அவ்விரண்டின் சிபாரிசுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.(நூல்;அஹ்மத்)

3)இறை நெருக்கம்.

ரமலானும்,குர்ஆனும் قربِ الٰہی இறைநெருக்கத்தை பெற்றுத்தருவதில் ஒன்றாகும்.குர்ஆன் ஓதுபவர்களோடு அல்லாஹ் நெருக்கமாகி விடுகிறான்,அதுபோல் நோன்பு நோற்பவர்களோடு அல்லாஹ் நெருக்கமாகி விடுகிறான்.

நோன்பு பற்றி ஒரு ஹதீஸே குத்ஸியில் வருகிறது... 

قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: " إِلَّا الصَّوْمَ فَإِنَّهُ لِي، وَأَنَا أَجْزِي بِهِ، يَدَعُ شَهْوَتَهُ وَطَعَامَهُ مِنْ أَجْلِي "(رواية لمسلم)

நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூ­லி வழங்குவேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் ﷺஅவர்கள் கூறுகிறார்கள். (அறிவிப்பவர் அபூஹுரைரா (ர­லி) (நூல்: முஸ்­லிம் (2119

புனித ரமலானில் குர்ஆனின் தொடர்பு அதிகம் ஏற்படுகிறது.

குர்ஆன் பற்றி ஒரு ஹதீஸில் வருகிறது...

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ:

(( كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ، وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، وَكَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فَيُدَارِسُهُ الْقُرْآنَ، فَلَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدُ بِالْخَيْرِ مِنْ الرِّيحِ الْمُرْسَلَةِ )                          [ متفق عليه ]

நபி ﷺஅவர்கள் மக்களில் அதிகம் கொடைக் கொடுப்பவராக இருந்தார்கள் ரமலான் மாதத்தில் ஜிப்ரயீல் (அலை) அவர்களை சந்திக்கும் சமயத்தில் கொடை வள்ளலாக மாறிவிடுவார்கள். அவர்(ஜிப்ரயீல்) ரமலான் மாதத்தில் ஒவ்வொரு இரவும் நபியை சந்தித்து குர்ஆன் ஓதிக்காட்டுவார்.(அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்திக்கின்றபோது தொடர்ந்து வீசும் புயல்காற்றைவிட (வேகமாக) நல்லதை வாரி வழங்குவார்கள்.              (அறிவிப்பவர் :இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் )    (நூல் :புகாரி, முஸ்லிம் )

நபி  ﷺஅவர்கள்  மரணித்தை தழுவிய  அவ்வாண்டு ஜிப்ரயீல் (அலை )அவர்கள் ரமலானில் இரண்டு தடவைகள் குர்ஆன் ஓதிக் காட்டினார்கள் என பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் ஒரு ரிவாயத் உள்ளது.

குர்ஆன் ஒதுவதின் நன்மைகள்.

அறிஞப்பெருமக்கள் கூறுவார்கள்;குர்ஆனை பொருள் விளங்கி ஓத முயற்சி செய்யுங்கள்.

குர்ஆனில் வரும் சட்டத்திட்டங்களை விளங்கி,அமல் செய்து அதனை பிறருக்கும் எத்திவைய்யுங்கள்.

குர்ஆனின் பொருள் விளங்காவிட்டாலும் ஓதுங்கள்.காரணம் குர்ஆனை ஓதுவதும் ஓர் அமலாகும்.

குர்ஆனுக்குறிய தனிச்சிறப்பு,அதனை விளங்காமல் ஓதினாலும் நன்மை கிடைக்கும்,இச்சிறப்பு உலகில் வேறெந்த வேதத்திற்கோ,நூலுக்கோ கிடையாது.

இப்னு உமர் (ரலி)அவர்கள் கூறுகிறார்கள்:குர்ஆனை விளங்கி ஓதுபவருக்கு,இருபது நன்மைகள் கிடைக்கும்.குர்ஆனை விளங்காமல் ஓதுபருக்கு பத்து நன்மைகள் கிடைக்கும்.

فعن عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رضي الله عنه قال: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ: «مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ، وَالحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا، لَا أَقُولُ ﴿الم﴾ حَرْفٌ، وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلَامٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ» أخرجه الترمذي

 கண்மணி நாயகம்ﷺஅவர்கள் சொன்னார்கள்; எவர் அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஒரு எழுத்தை ஓதுவாரோ,அதனால்  அவருக்கு ஒரு நன்மை உண்டு.ஒரு நன்மை என்றால் அது போன்று பத்து மடங்காகும்.

அலிஃப்,லாம்,மீம் الم இதனை நான் ஒரு எழுத்து என்று சொல்லமாட்டேன்.அலிஃப்أَلِفٌ  ஒரு எழுத்தாகும்,லாம் لَامٌ ஒரு எழுத்தாகும்,மீம் مِيمٌ ஒரு எழுத்தாகும்.(அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)அவர்கள் நூல்:திர்மிதீ)

திருமறை குர்ஆனில் சில சூராக்கள் الم இது போன்ற எழுத்துக்களில் துவங்கும்,அதற்கு (”حروف مقطعات“)"ஹுரூஃபே முகத்தஆத்" என்று சொல்லப்படும்,அதன் விளக்கம் அல்லாஹ்வை தவிர வேறுயாருக்கும் தெரியாது.

அந்த எழுத்துக்களுக்கும் நன்மை கிடைக்கும் என நபி (ஸல்)அவர்கள் கூறியிப்பது,அர்த்தம் விளங்காமல் குர்ஆன் ஓதினால் நன்மை கிடைக்கும் என்பதனை  உறுதிசெய்கின்றது.

தாழ்வு மனப்பான்மை வேண்டாம்.

குர்ஆனை கற்றுக் கொண்டிருக்கும் அல்லது அரைகுறையாய் ஓதத் தெரிந்த எத்தனையோ பேர் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக, நமக்கு அவ்வளவாக ஓதவராதுங்க என்று கூறுபவர்களாக இருக்கிறார்கள். நாம் தினமும் ஓதாத பட்சத்தில் அரைகுறையாக ஓதும் நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். நாம் அடிக்கடி ஓதி எப்படியாவது நம் ஓதுதலை திருத்திக் கொள்ள வேண்டும் என முயற்சித்து அடிக்கடி ஓதினால் நிச்சயமாக நாம் மிகப் பெரும் காரிகளாகலாம். மேலும் நமக்கு குர்ஆன் ஓத வராது என்ற தாழ்வு மனப்பான்மையை நீக்கி திக்கினாலும் பரவாயில்லை நான் முயற்சி செய்வேன் என்று உறுதி பூண வேண்டும்.

இன்று குர்ஆனை நல்ல முறையில் ஓதும் அத்தனை பேரும் ஆரம்ப காலத்தில் திக்கித் திக்கி ஓதியவர்கள்தான் என்பதையும் நம் மனதில் கொள்ள வேண்டும். ஆக திக்கித் திக்கி ஓதுவது குற்றமல்ல. நன்மைகளில் எந்த குறைபாட்டையும் ஏற்படுத்தாது. இன்னும் சொல்லப் போனால் நன்மைகள் தான் அதிகமாகக் கிடைக்கும்.

குர்ஆன் ஓதுபவரின் மறுமை நிலை மிக்க மகத்தானது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கியாமத் நாளில்) குர்ஆனை உடையவரிடம், "நீர் குர்ஆனை ஓதுவீராக! அந்தஸ்தால் உயருவீராக, உலகில் எவ்வாறு அதனை நிறுத்தி அழகாக (தஜ்வீதுடன்) ஓதினீரோ அது போன்றே இங்கும் ஓதுவீராக. நீர் ஓதும் கடைசி ஆயத்தின் இடத்தில் உம் அந்தஸ்து உள்ளது" எனக் கூறப்படும். (எவ்வளவு ஆயத்துகள் ஓதுகிறாரோ அவ்வளவு தூரத்துக்கு அவரது அந்தஸ்துகள் சுவர்க்கத்தில் உயர்த்தப்படும்) - (அபூதாவூது, திர்மிதி: அப்துல்லாஹ் பின் அம்ர் இப்னு ஆஸ்(ரலி)

குர்ஆனுடன் தொடர்புடையவருக்கே முதலிடம்.

நபிகளார் அவர்கள் திருக்குர்ஆனோடு தொடர்பு வைத்திருந்தவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.

உஹுதுப் போரில் கொல்லப்பட்ட உயிர் தியாகிகளை எவ்வாறு அடக்கம் செய்வது? யாரை முதலாவதாக வைப்பது? அடுத்து யாரை வைப்பது என்பது தொடர்பாக நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைகள் : இவர்களில் குர்ஆனை அதிகம் மனனம் செய்தவர்கள் யார் என்று பார்த்து அவரை முதலாவது இடத்திலும் அதற்கு பிறகு அதைவிட குறைந்த வசனங்களை யார் அறிந்து வைத்தார்கள் என்பதைப் பார்த்து அவர்களுக்கு பிறகு அடுத்தடுத்ததாக அடக்கம் செய்யச் செய்தார்கள் என்று வழிகாட்டியுள்ளார்கள்.

1347- حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ ، أَخْبَرَنَا عَبْدُ اللهِ ، أَخْبَرَنَا لَيْثُ بْنُ سَعْدٍ ، حَدَّثَنِي ابْنُ شِهَابٍ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا

أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ يَجْمَعُ بَيْنَ الرَّجُلَيْنِ مِنْ قَتْلَى أُحُدٍ فِي ثَوْبٍ وَاحِدٍ ثُمَّ يَقُولُ أَيُّهُمْ أَكْثَرُ أَخْذًا لِلْقُرْآنِ فَإِذَا أُشِيرَ لَهُ إِلَى أَحَدِهِمَا قَدَّمَهُ فِي اللَّحْدِ وَقَالَ أَنَا شَهِيدٌ عَلَى هَؤُلاَءِ وَأَمَرَ بِدَفْنِهِمْ بِدِمَائِهِمْ وَلَمْ يُصَلِّ عَلَيْهِمْ وَلَمْ يُغَسِّلْهُمْ.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உஹுதுப் போரில் கொல்லப்பட்டவர்களை இரண்டிரண்டு பேராக ஒரே ஆடையில் கஃபனிட்டுவிட்டு, “”இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?” எனக் கேட்டார்கள். இருவரில் ஒருவர் சுட்டிக் காட்டப்பட்டதும் அந்த ஒருவரது உடலைக் கப்றின் உட்குழியில் முதலில் வைத்துவிட்டு, “”இவர்களுக்கு மறுமை நாளில் நானே சாட்சியாவேன்” எனக் கூறினார்கள். பின்பு இரத்தத்துடனேயே அடக்குமாறு கட்டளையிட்டார்கள். இவர்கள் நீராட்டப்படவில்லை; இவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தவுமில்லை. (நூல் : புகாரி-1347)

ஓதுபவருக்கு உதாரணம்.

عَنْ أَبِي مُوسَى ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ

مَثَلُ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَالأُتْرُجَّةِ طَعْمُهَا طَيِّبٌ وَرِيحُهَا طَيِّبٌ وَالَّذِي لاَ يَقْرَأُ الْقُرْآنَ كَالتَّمْرَةِ طَعْمُهَا طَيِّبٌ ، وَلاَ رِيحَ لَهَا وَمَثَلُ الْفَاجِرِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الرَّيْحَانَةِ رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ وَمَثَلُ الْفَاجِرِ الَّذِي لاَ يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْحَنْظَلَةِ طَعْمُهَا مُرٌّ ، وَلاَ رِيحَ لَهَا

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று! வாசனையும் நன்று! (நல்லவராக இருந்து) குர்ஆன் ஓதாமல் இருப்பவர், பேரீச்சம்பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று அதற்கு வாசனை கிடையாது. தீயவனாகவும் இருந்து கொண்டு குர்ஆனை ஓதிவருகின்றவனின் நிலை துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் வாசனை நன்று, சுவையோ கசப்பு! தீமையும் செய்து கொண்டு குர்ஆனையும் ஓதாமல் இருப்பவனின் நிலை குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் சுவையும் கசப்பு, அதற்கு வாசனையும் கிடையாது.

(அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி), நூல் : புகாரி-5020)

கண்ணீர் வடியுங்கள்.

وَاِذَا سَمِعُوْا مَاۤ اُنْزِلَ اِلَى الرَّسُوْلِ تَرٰٓى اَعْيُنَهُمْ تَفِيْضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوْا مِنَ الْحَـقِّ‌ۚ يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اٰمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِيْنَ‏

இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். “எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களை சான்று கூறுவோருடன் பதிவு செய்வாயாக!” என அவர்கள் கூறுகின்றனர்.(அல்குர்ஆன் 5:83)

عَنْ عَبْدِ اللهِ ، قَالَ : يَحْيَى بَعْضُ الْحَدِيثِ ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ قَالَ

قَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم اقْرَأْ عَلَيَّ قُلْتُ آقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ قَالَ فَإِنِّي أُحِبُّ أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي فَقَرَأْتُ عَلَيْهِ سُورَةَ النِّسَاءِ حَتَّى بَلَغْتُ {فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلاَءِ شَهِيدًا} قَالَ أَمْسِكْ فَإِذَا عَيْنَاهُ تَذْرِفَانِ

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்” என்று சொன்னார்கள். நான், “உங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஏனெனில் நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்” என்று சொன்னார்கள். ஆகவே நான் அவர்களுக்கு அந்நிஸா அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். “(முஹம்மதே!) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் சாட்சியை நாம் கொண்டு வந்து, இவர்களுக்கு எதிராக உம்மைச் சாட்சியாக நாம் கொண்டு வரும் போது (இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?” எனும் (4:41வது) வசனத்தை நான் அடைந்த போது நபி (ஸல்) அவர்கள் “நிறுத்துங்கள்” என்று சொன்னார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன.

(அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), நூல் : புகாரி-4582)


குர்ஆனை ஓதாமலும் அதன் படி செயல்படாதவர்களும் பொதிசுமக்கும் கழுதைக்கு ஒப்பானவர்கள்.

மறுமையில் நமது வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் பல விஷயங்களில் திருமறை குர்ஆனும் ஒன்று. திருமறைக் குர்ஆன் மறுமையில் அதனை ஓதியவர்களுக்காக சாட்சி சொல்லும் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருமறை குர்ஆன் என்றும், நபியவர்கள் கூறியுள்ளார்கள்.  அத்தகைய திருமறைக்குர்ஆனுடைய சட்டங்களை நடைமுறையில் பின்பற்றுகின்றோமா? என்றால் பெரும்பான்மை இஸ்லாமியர்களின் பதில் இதற்கு, இல்லை என்றே இருக்கும்.

مَثَلُ الَّذِيْنَ حُمِّلُوا التَّوْرٰٮةَ ثُمَّ لَمْ يَحْمِلُوْهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ اَسْفَارًا‌ ؕ بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِ اللّٰهِ ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏

தவ்ராத் சுமத்தப்பட்டு, பின்னர் அதைச் சுமக்காமல் (அதன் படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதுவோருக்குரிய உதாரணம் மிகவும் கெட்டது. அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்டமாட்டான்.(அல்குர்ஆன் 62:5)

தவ்ராத் என்ற வேதத்தைப் பெற்று அவ்வேதக் கருத்துக்களை நடைமுறையில் முறையாகப் பின்பற்றாத யூத சமுதாயத்தை அல்லாஹ், பொதி சுமக்கின்ற கழுதைக்கு உதாரணமாகக் கூறுகின்றான்.

கழுதையின் முதுகில் அழுக்கு மூட்டைகளை ஏற்றி வைத்தாலும் அது அழுக்கு மூட்டை என்பதைச் சிந்திக்காமல் அது சுமந்து செல்லும். அது போல் அறிவு நிறைந்த புத்தகங்களை ஏற்றினாலும் அதையும் அழுக்கு மூட்டையைப் போல் சுமந்து தான் செல்லுமே தவிர அதிலுள்ள கருத்துக்கள் ஆழமிக்கவை என்பதை கழுதை அறியாது.

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? என்றொரு பழமொழி கூடக் கூறுவார்கள். தான் முதுகில் சுமக்கும் பொருளின் மதிப்பை அறியாத மிருகம் தான் கழுதை. அது போன்று தான் தவ்ராத் வேதத்தைப் பெற்று அதனை வாயளவில் மட்டும் படித்து விட்டு செயலளவில் பின்பற்றாமல் அதிலுள்ள கருத்துக்களை மாற்றியும் மறைத்தும் வந்த யூத சமுதாயத்தை அல்லாஹ், ஏடுகளின் மதிப்பை உணராமல் வெறும் பொதி மூட்டையாகச் சுமக்கும் கழுதைக்கு ஒப்பாகக் கூறுகிறான்.

திருமறை குர்ஆன் ஓதவதின் சில ஒழுக்கங்கள்...

#குர்ஆன் ஓதுவது சிறந்த இபாதத் ஆகும். தான்  ஓதுவதை அடுத்தவர்ப் பார்க்கவேண்டும் என்ற தற்பெருமை,பிரருக்கு காட்டுவது இருக்கக்கூடாது.இறைப்பொருத்ததை நாடி ஓதவேண்டும்.

#ஒளுவுடன் சுத்தமாகவும்,ஒழுக்கத்தோடும்,மரியாதையோடும் ஒதுவது.

#நிதானமாக அழகியத்தொனியில் திருத்தமாக தஜ்வீத் சட்டங்களைப்பேணி ஓதுவது.

#குர்ஆன் வசனங்களைப் பொருள் விளங்கி கவனமுடன்  ஓதுவது மிகச் சிறப்பானதாகும்.

#குர்ஆனின் படி தானும் அமல்செய்வது,அடுத்தவருக்கும் எடுத்துரைப்பது.

தராவீஹ் 20 ரக்அத்...

عن السيّدة عائشة أمّ المؤمنين -رضي الله عنها-: (أنَّ رَسولَ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ صَلَّى في المَسْجِدِ ذَاتَ لَيْلَةٍ، فَصَلَّى بصَلَاتِهِ نَاسٌ، ثُمَّ صَلَّى مِنَ القَابِلَةِ، فَكَثُرَ النَّاسُ، ثُمَّ اجْتَمَعُوا مِنَ اللَّيْلَةِ الثَّالِثَةِ، أَوِ الرَّابِعَةِ فَلَمْ يَخْرُجْ إليهِم رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ، فَلَمَّا أَصْبَحَ، قالَ: قدْ رَأَيْتُ الذي صَنَعْتُمْ، فَلَمْ يَمْنَعْنِي مِنَ الخُرُوجِ إلَيْكُمْ إلَّا أَنِّي خَشِيتُ أَنْ تُفْرَضَ علَيْكُم. قالَ: وَذلكَ في رَمَضَانَ).[3]

ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்;. ‘நபிﷺஅவர்கள் (ரமளான் மாதத்தில்) பள்ளிவாசலில் பாயினால் அறை அமைத்துக் கொண்டு அதில் சில இரவுகள் (இரவுத் தொழுகை) தொழுதார்கள். அதனால் மக்கள் அவர்கள் பின்னே திரண்டு (தொழத் தொடங்கி)விட்டார்கள். ஒரு நாள் நபி ﷺஅவர்களின் குரலை மக்களால் கேட்க முடியவில்லை. எனவே, நபி அவர்’கள் (வீட்டினுள்) உறங்கிவிட்டார்கள் போலும் என்று மக்கள் நினைத்துக் கொண்டனர். எனவே, அவர்களில் சிலர் நபிﷺஅவர்கள் தங்களிடம் வெளியேறி வருவதற்காக கனைக்கலானார்கள். எனவே (மறுநாள்) நபிﷺஅவர்கள், ‘(ஒவ்வொரு நாளும் என்னைப் பின்தொடர்ந்து இரவுத் தொழுகையைத் தொழுகின்ற) உங்கள் செயலை நான் கண்டுவந்தேன். உங்களின் மீது (ரமழானின் இரவுத் தொழுகையான) அது கடமையாக்கப்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சும் அளவிற்கு உங்களுடைய அச்செயல் தொடர்ந்து கொண்டே இருந்தது. நீங்கள் தொழுது (இரவுத்) தொழுகை உங்களின் மீது கடமையாக ஆக்கப்பட்டால் உங்களால் அதை நிறைவேற்ற முடியாது. எனவே, மக்களே! நீங்கள் (இரவுத் தொழுகையை) உங்கள் வீடுகளிலேயே தொழுங்கள். ஏனெனில், ஒரு மனிதனின் தொழுகைகளில் சிறந்தது அவன் தன்னுடைய வீட்டில் தொழுவது தான்; கடமையான தொழுகையைத் தவிர” என்றார்கள்.” (புஹாரி: 7290)

நபியவர்கள், ‘ரமழான் கால தராவீஹ் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுதார்கள். பின்னர் அதை விட்டுவிட்டார்கள். அதற்குக் காரணமாகக் கூறும் போது, ‘இது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுவிடுமோ என நான் பயந்தேன்” எனக் காரணம் கூறினார்கள். பின்னர் உமர்(ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தில் முறையான ஒழுங்குடன் கூட்டாக இந்தத் தொழுகையைத் தொழும் நடைமுறை ஏற்படுத்தப்பட்டு இன்று வரை அது நடந்து வருகின்றது. நபியவர்களுடன் கூட்டாக சில நபித்தோழர்கள் இத்தொழுகையைத் தொழுதுள்ளதால் ரமழான் கால இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது சுன்னாவாகும். அத்துடன் நபியவர்கள் இது கடமையாக்கப்பட்டுவிடும் எனப் பயந்ததினால்தான் ஜமாஅத்தாகத் தொழுவதை நிறுத்தினார்கள். நபியவர்களது மரணத்தின் பின்னர் அந்த அச்சம் நீங்கிவிட்டதால் தொடராக முறையான ஏற்பாட்டுடன் ஜமாஅத்தாகத் தொழுவதை உமர்(ரலி) அவர்கள் ஏற்பாடு செய்தார்கள்.

உமர்(ரலி) அவர்களின் கிலாஃபத்தில் இஷா தொழுகை ஜமாஅத்தாக தொழுது முடித்ததற்கு பின்பு ஜமாஅத்தாக 20 ரக்அத்துகள் தராவீஹ் தொழுகை தொழுது முடித்த பின்பு வித்ரு தொழுவார்கள்.தராவீஹ் தொழுகையில் 30 நாட்கள் குர்ஆன் ஓதி முடிப்பதையும்,ரமலானில் வித்ரு தொழுகை ஜமாத்தாக தொழக்கூடிய வழமையும் அன்று முதல் இன்று வரை இஸ்லாமியர்கள் பின்பற்றி வருகிறார்கள் 

அரபகத்தின் மிகச் சிறந்த ஆலிம்களில் ஒருவரும்,மஸ்ஜிதுன் நபவியின் பிரபல்யமான பேராசிரியரும்,மதினா முனவ்வராவின் முன்னாள் (قاضی காஜி)நீதிபதியுமான  அஷ்ஷெய்கு அத்திய்யா முஹம்மது ஸாலிம் (ரஹ்)அவர்கள் 

قاضی شیخ عطیہ محمد سالم ؒ(متوفی: ۱۹۹۹)

"மஸ்ஜிதுந் நபவியில் ஆயிரத்தி நானூறு வருட தராவீஹ் தொழுகை பாரம்பரியம்" 

’’التراویح أکثر من ألف عام فی المسجد النبوي‘‘

எனும் பெயரில் அரபியில் தராவீஹ் தொழுகை சம்பந்தமாக அற்புதமான பயனுள்ள ஒரு கிதாபை எழுதியுள்ளார்கள்.

ரமலானில் சான்றோர்கள்.

ஸஹாபாப்பெருமக்கள்,தாபிஈன்கள், தபவுத்தாபிஈன்கள்,இறைநேசர்கள் அனைவருமே புனித ரமலானில் அதிகமாகவும் ஆர்வமாகவும் குர்ஆன் ஓதுதலில் ஈடுபடுவார்கள்.

சில முன்னோர்கள்,இறைநேசர்ககளை குறித்து எழுதுகிறார்கள்;ரமலானில் இவர்கள் தங்களின் மற்ற அலுவல்கள் அனைத்தையும் ஒதுக்கிவைத்து விட்டு முழுக்க முழுக்க குர்ஆன் ஓதுதலில் ஈடுபடுவார்கள்.

இமாம் மாலிக் (ரஹ்)

இமாமுனா மாலிக் (ரஹ்)அவர்கள்   ’’مؤطا مالک‘‘முஅத்தா மாலிக் எனும் பிரபலமான கிதாபை இந்த உம்மத்திற்கு வழங்கியவர்கள்.அன்னவர்களிடம் ஆயிரக்கணக்கானவர்கள் ஹதீஸ் பாடங்களை கற்பார்கள். ஆனால் இமாமவர்கள் ரமலானில் பாடம் நடத்த மாட்டார்கள் அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் لا كلام فيہ الا مع القران    "ரமலான் மாதத்தில் குர்ஆனுடனே தவிர வேறு எவரிடமும் பேச்சு கிடையாது. "

இமாம் அபூ ஹனீபா (ரஹ்)

இமாமுனா அபூஹனீஃபா (ரஹ்)அவர்கள் ரமலானில் மொத்தம் அறுபது குர்ஆன் ஓதிமுடித்துவிடுவார்கள்.

பகல்வேலையில் முப்பதும்,இரவில் முப்பது என ஓதி முடிப்பார்கள் என்று அலி இப்னு ஜைத் ஸஹ்தானி(ரஹ்)அவர்கள் கூறுகிறார்கள்.

التدوين في أخبار قزوين 2 332)

இமாம் ஷாஃபியீ (ரஹ்)

இமாமுனா ஷாஃபிஈ(ரஹ்)அவர்கள் தம் இறுதிகாலத்தில் அதிகம் குர்ஆன் ஓதுதல் ஈடுப்பட்டார்கள்.ஒவ்வொரு நாளும் இரவில் ஒரு குர்ஆன் ஓதிமுடிப்பார்கள்.ரமலானில் மட்டும் அறுபது குர்ஆன் ஓதிமுடிப்பார்கள்.

(المنتظم في تاريخ الأمم والملوك 10 / 135)

இமாம் சுஃபானுஸ்ஸ்வரீ (ரஹ்)

فقد كان سفيان الثوري إذا دخل رمضان ترك جميع  الأعمال، وأقبل على قراءة القرآن.

சுஃப்யான் சவ்ரி (ரஹ்)அவர்கள் :ரமலான் மாதத்தில் எல்லா காரியங்களையும் விட்டு விட்டு குர்ஆன் ஓதுவதில் ஈடுபடுவார்கள். 

கலீபா அப்துல் மலிக்

வலீத் இப்னு அப்துல் மலிக்(ரஹ்)அவர்கள் உமைய்யா கலீஃபாக்களில் பிரபலமனவர்.

இப்ராஹீம் இப்னு அபி அலிய்யா(ரஹ்)அவர்கள் சொல்கிறார்கள் ஒரு தடவை கலிஃபா அவர்கள் என்னிடம் "நான் எத்தனை தினங்களில் குர்ஆனை ஓதி முடிக்கவேண்டும்" என்று கேட்டார்கள்.

அதற்கு நான் இத்தனை இத்தனை தினங்கள் என (தோராயமாக)சொன்னேன்.

அதற்கு கலிஃபா அவர்கள் உங்கள் அரசு அலுவல்களுடனே மூன்று தினங்களில் குர்ஆனை முடித்துவிடுகிறேன்.ரமலானில் அறுபது குர்ஆன் ஓதிமுடிக்கிறேன் என்றார்.

(البدايۃ والنہايۃ 9 / 182)

இமாம் புகாரி (ரஹ்)

இமாம் முஹம்மது இப்னு இஸ்மாயீல் புகாரி (ரஹ்)அவர்களின் ரமலான் அமல்களை இப்னு ஹஜர் அஸ்கலானி(ரஹ்)அவர்கள் அறிவிக்கின்றார்கள்;

ரமலான் வந்துவிட்டால் புகாரி(ரஹ்)அவர்கள் தங்ளின் மாணவர்களுக்கு இமாமாக நின்று இருபது ரகஅத் தராவீஹ் தொழவைப்பார்கள்.ஓவ்வொர் ரகஅத்திலும் இருபது ஆயத்துகளை ஓதி,தராவீஹில் ஒரு குர்ஆன் ஓதி முடிப்பார்கள்.பின்பு ஸஹர் நேரம் வரை குர்ஆனின் ஒரு பகுதி அல்லது மூன்றில் ஒரு பகுதியோ ஓதி முடிப்பார்கள்,மூன்று இரவுகளில் ஒரு குர்ஆன் ஓதி முடிப்பார்கள்.ரமலானில் பகலில் தினமும் ஒரு குர்ஆன் ஓதிமுடித்துவிடுவார்கள்.

(فتح الباری 1/ 481)

ஜுபைர் இப்னு குமைர் (ரஹ்)

முஹம்மது இப்னு ஜுபைர் இப்னு குமைர் (ரஹ்)அவர்கள் கூறுகிறார்கள்;எனது தந்தை ரமலானில் வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக சேர்ந்து குர்ஆன் ஒதிமுடிக்கச்சொல்வார்கள்.நான் ரமலான் மாதத்தில் இரவு,பகலாக ஓதி தினமும் மூன்று குர்ஆன் முடிப்பேன்.ரமலானில் மொத்தம் தொண்ணூறு குர்ஆன் முடித்துவிடுவேன்.(تاريخ بغداد 8/ 485)

இமாம் பகவீ(ரஹ்)அவர்கள் முஹம்மது இப்னு ஜுபைர் இப்னு குமைர் (ரஹ்)அவர்களை குறித்து கூறுவார்கள்;இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல்(ரஹ்)அவர்களுக்கு பின்னால் ஜுபைர் இப்னு குமைர் (ரஹ்)அவர்களை விட சிறந்தவரை நான் கண்டதில்லை.

அன்னவர்கள் ரமலானில் தொண்ணூறு குர்ஆன் ஓதி முடித்துவிடுவார்கள்.

(العبر في خبر من غبر 1 / 369)

கலீபா மஃமூன் ரஷீத்

மஃமூன் ரஷீத்(ரஹ்)அவர்கள் பிரபலமான அப்பாஸீ கலிஃபாக்களில் ஒருவராவார்கள்.

அன்னவர்கள் ரமலானில் 33 முப்பத்தி மூன்று குர்ஆன் ஓதி முடித்துவிடுவார்கள்.

(تاریخ الخلفاء للسیوطي 1/226)

அபூ அப்பாஸ் இப்னு அதா (ரஹ்)

அபூஜஃபர் முஹம்மது இப்னு அப்துல்லாஹ்(ரஹ்)அவர்கள் சொல்கிறார்கள்;அபூ அப்பாஸ் இப்னு அதா (ரஹ்)அவர்கள் என்னிடம் அபூ ஜஃபரே!பல ஆண்டுகளாக நான் தினமும் ஒரு குர்ஆன் ஓதி முடித்துவிடுகிறேன்.

ரமலானில் இரவு,பகலாக தினமும் மூன்று குர்ஆன் முடிப்பேன்.

(صفۃ الصفوۃ 1/533)

கதாதா (ரஹ்)

ஹழ்ரத் கதாதா(ரஹ்)அவர்கள் ஏழு இரவுகளில் ஒரு குர்ஆன் முடிப்பார்கள்.ரமலானில் மூன்று இரவுகளில் ஒரு குர்ஆன் முடிப்பார்கள்.ரமலானின் இறுதி பத்தில் ஒவ்வொரு இரவும் ஒரு குர்ஆன் முடிப்பார்கள்.

(نداء الريان في فقہ الصوم وفضل رمضان 1 / 198)

காஸிம்  நானுத்தவி (ரஹ்)

ஹுஜ்ஜதுல் இஸ்லாம் மௌலானா காஸிம் நானுத்தவி (ரஹ்) அவர்கள்: ஹிஜ்ரி1277ஆம் ஆண்டு ரமலான் மாத ஹிஜாஸ் பயணத்தில் ஒவ்வொரு ஜுஸ்வுகளாக குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து ஹாஃபிளாகி விட்டார்கள்.

ரமலான் மாத தராவீஹ் தொழுகையில் அதிகளவு குர்ஆன் ஓதி தொழவைப்பார்கள். என ஷைகுல் ஹதீஸ் ஜகரிய்யா (ரஹ்)அவர்கள் தனது நூலில் குறிப்பிடுகிறார்கள்.

நம் முன்னோர்களான நல்லோர்கள் ரமலானின் இறுதிபத்தில் மூன்று தினங்களிலோ அல்லது ஒரே தினத்தில் ஒரு முழுகுர்ஆனை ஓதிமுடிக்கும் வழமையுடையவர்களாக இருந்தார்கள்.

இம்மாதத்தில் அதிகம் குர்ஆனுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.

தராவீஹ் தொழுகையில் குர்ஆன் ஓதப்பட்டு,ஒரு முழு குர்ஆனை தராவீஹிலே ஓதி முடிப்பதென்பது மிகச்சிறப்பானதாகும்.

அன்னை பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் ஒரு ரிவாயத்...

ரமலான் மாதத்தில் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ஒவ்வொரு இரவும் நபியை சந்தித்து குர்ஆன் ஓதிக்காட்டுவார்.

நபி  ﷺஅவர்கள்  மரணத்தை தழுவிய  அவ்வாண்டு ஜிப்ரயீல் (அலை )அவர்கள் ரமலானில் இரண்டு தடவைகள் குர்ஆன் ஓதிக் காட்டினார்கள்.

ரமலானில் மட்டுமல்ல ரமலானுக்கு பிறகும் அனுதினமும் குர்ஆன் ஓதுவதை வழமையாக்கி கொள்ளவேண்டும்.

அல்லாஹுத்தஆலா நம் அனைவருக்கும் நோன்பு மற்றும் குர்ஆன் ஓதுவதின் பரக்கத்தால் تقویٰ இறையச்சத்தோடு வாழும் வாய்ப்பையும்,ஈருலகிலும் ஈடேற்றத்தையும் நல்கிடுவானாக!ஆமீன்...

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

No comments:

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...