Wednesday, 9 November 2022

ஜும்ஆ பயான் 11/11/2022

இஸ்லாம் ஏற்படுத்திய கல்வி புரட்சி.

நவம்பர் 11.

தேசிய கல்வி தினம்.

(National Education Day).

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல்கலாம் ஆசாத் (Maulana Abulkalam Azad) பிறந்த தினத்தை தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் 1888ஆம் ஆண்டு நவம்பர் 11 அன்று பிறந்தார். 1947 முதல் 1958ஆம் ஆண்டுவரை தான் மறையும்வரை கல்வி அமைச்சராக இருந்தார். கல்வித் தேவைகளை சரியான முறையில் நிறைவு செய்ய உறுதி பூண்ட இவர் அதற்கான அடித்தளத்தை அமைத்தார். இந்திய தொழில் நுட்ப கழகத்தை (IIT) 1951இல் உருவாக்கினார். பல்கலைக்கழக மானியக்குழு (UGC) என்ற அமைப்பை 1953இல் வடிவமைத்தார். சாகித்திய அகாடமியை உருவாக்க வழிவகுத்தார். நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை, ஆரம்பப் பள்ளியில் உள்ளது என்றார். இவர் குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதினார். இந்தியாவை கல்வியில் முன்னேறிய நாடாக மாற்ற வேண்டும் எனக் கனவு கண்டார். இவரது சாதனைகளை நினைவு கூருவதற்காகவே இவரது பிறந்த தினத்தை கல்வி தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இஸ்லாமும்,கல்வியும்.

உலகிலுள்ள சமயங்கள் அனைத்தும் கல்வியின் முக்கியத்துவத்தையும்,கல்வி அழியா செல்வம் என்பதையும் ஏற்றுக்கொள்கின்றன.ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தை போல கல்வியை ஊக்குவிக்கும்,வலியுறுத்தும் எந்த சமயமும் கிடையாது.

இறைதூதுச்செய்திகளில் இறைவனின் முதல் அறைகூவல்...

اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَقَ‌‏

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.(அல்குர்ஆன் : 96:1)

خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍ‌‏

“அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.(அல்குர்ஆன் : 96:2)

اِقْرَاْ وَرَبُّكَ الْاَكْرَمُۙ‏

ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.(அல்குர்ஆன் : 96:3)

الَّذِىْ عَلَّمَ بِالْقَلَمِۙ‏

அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.(அல்குர்ஆன் : 96:4)

عَلَّمَ الْاِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ‏

மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.(அல்குர்ஆன் : 96:5)

இறைவன் தன் நபிக்கும் அவர்தம் உம்மத்திற்கும் சொல்லும் முதல் "வஹீ"செய்தி,கல்வியை கற்றுக்கொள்,எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்,இறைவன் மனினுக்கு கல்விஞானத்தையும்,எழுத்தாற்றலையும் வழங்கியுள்ளான்.என்பதிலிருந்து இஸ்லாம் கல்வியில் ஏனைய சமயங்களை விடவும் உயர்ந்திருப்பதை உறுதிப்படுத்துகிறது.

அல்லாஹுத்தஆலா மனித குலத்திற்கு எண்ணிலடங்கா உபகாரங்களைச் செய்துள்ள அதே வேளையில்,  இறைவனின் அருட்கொடைகளில் ஆக உயந்தது,உன்னதமானது மனிதனை கல்வி அறிவால் மேன்மைப்படுத்தியதுதான்.

இறைவன் மனிதனுக்கு கல்வி,கலை  ஞானத்தின் அனைத்துக்கூறுகளையும் கற்பித்துக்கொடுத்தான்.அவனே எழுதுகோலைக்கொண்டு எழுதும் எழுத்தாற்றலையும் கற்றுதந்தான், ஆகச் சிறந்த வேதமான குர்ஆன், (ஃபுர்கான்) நபிமொழிகள்(ஹதீஸ்கள்) ஆகியன பற்றிய அறிவைக் கொடுத்தான்.

இந்த கல்வி அறிவினால் தான் மனிதனுக்கு பூமியில் இறைவனின் பிரதிநிதி என்கிற அந்தஸ்தும்,"اشرف المخلوقات"படைப்பினங்களில் சிறந்தபடைப்பு என்கிற சிறப்பும் வழங்கப்பட்டுள்ளது.

ஆதம் (அலை)அவர்களுக்கு மலக்குமார்கள் ஸஜ்தா செய்யபணிக்கப்பட்டதும் இக்கல்வி மனிதனுக்கு வழங்கப்பட்ட காரணத்தால் தான்.

கல்விக்கு உயிர் கொடுத்த இஸ்லாம்.

உலகில் உள்ள எந்த சமூகமும் இஸ்லாம் மார்க்கம் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது போன்று வலியுறுத்தியது கிடையாது. கல்வி என்றால் என்னவென்றே புரியாத அந்தக் காலத்தில் கல்வியைக் கடமையாக்கியது இஸ்லாம். ஆண்களுக்கே கல்வி இல்லாதிருந்த  நிலையில் , அன்று வெறும் போகப்பொருளாகக் கருதப்பட்ட பெண்களுக்குக்கும் கல்வியை கட்டாயமாக்கியது இஸ்லாம். இறைவன் அருளிய திருக்குர்ஆனில் சுமார் 750 வசனங்கள் கற்றுக்கொள்ளவதைப் பற்றி கூறுகிறது.  கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் கல்வியின் மாண்புகளையும் மகத்துவத்தையும் தனது வாழ்நாட்களில் பலமுறை வலியுறுத்திச் சென்றுள்ளார்கள்.

يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ ‌ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏ 

 உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் - அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 58:11)

فَتَعٰلَى اللّٰهُ الْمَلِكُ الْحَـقُّ‌  وَلَا تَعْجَلْ بِالْقُرْاٰنِ مِنْ قَبْلِ اَنْ يُّقْضٰٓى اِلَيْكَ وَحْيُهٗ‌ وَقُلْ رَّبِّ زِدْنِىْ عِلْمًا‏ 

ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; இன்னும் (நபியே!) உமக்கு (குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; “இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக!(அல்குர்ஆன் : 20:114)

கல்வி கற்க முந்திவர வேண்டும்.

 'நபி(ஸல்) அவர்கள் மக்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் நபி(ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் சென்றார். அவ்விருவரும் நபி(ஸல்) அவர்களின் சபையில் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்தச் சபையில் ஓர் இடைவெளியைக் கண்டபோது அதில் அமர்ந்தார். மற்றவரோ சபையின் பின்னால் அமர்ந்து வெட்கப்பட்டு (கடைசியில் உட்கார்ந்து)விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்தினான்' என அபூ வாக்கித் அல் லைஸீ(ரலி) அறிவித்தார்.(ஸஹீஹ் புகாரி 66)

கற்பவர் மற்றும் கற்பிப்பவரின் சிறப்பு.

'அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்று ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; (தம் கால் நடைகளுக்கும்) புகட்டினார்; விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைக்க விடவுமில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும் நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர் வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி 79)

கல்வியின் புரட்சி.

நபி (ஸல்) அவர்கள் கல்வியின் புரட்சியை பத்ர் போரின் முடிவில் ஏற்படுத்தினார்கள். பத்ர் போரில் இறை மறுப்பாளர்களில் 70 பேர் சிறைபிடிக்கப்பட்டார்கள். அப்போதைய வழக்கப்படி, சிறை பிடிக்கப்பட்டவர்களில் வசதி வாய்ப்புள்ளவர்கள் பிணைத்தொகை கொடுத்து விடுதலை பெற்றனர். அப்போது, கைதிகளில் வசதியில்லாத ஒருவர் 10 முஸ்லிம் சிறுவர்களுக்கு எழுத, வாசிக்க கற்றுக் கொடுத்தால் அவர்களை விடுதலை செய்யலாம் என்று நபிகளார் உத்தரவிட்டார்கள்.

அதுபோல, சிறுவர்களுக்கு இலவச கல்வி சேவையை முதன்முதலாக உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களே. இந்த இலவச கல்வி சேவையில் கல்வி கற்றவர்களில் ஒருவர் தான் ஸைத்பின் ஸாபித் (ரலி). மதீனாவில் இருக்கும் போது, நபியவர்களுக்கு இறை செய்தி வரும்போது, அதை எழுதும் எழுத்தாளராக ஸைத்பின் ஸாபித் (ரலி) திகழ்ந்தார். இவர் தனது கல்வியை, பத்ர் யுத்த கைதிகளிடமிருந்து கற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நபி (ஸல்) அவர்கள், மஸ்ஜித் நபவி பள்ளிவாசல் திண்ணையில் வைத்து பரம ஏழைகளான எழுபதுக்கும் அதிகமான தோழர்களுக்கு இலவச கல்வியை இலவச உணவுடன் கற்றுக்கொடுத்தார்கள். இவர்கள் ‘திண்ணைத் தோழர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். கல்வி கற்பவர்களுக்கு இலவச உணவையும், இலவச விடுதியையும் முதன்முதலாக வழங்கியவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களே. இவ்வாறு திண்ணையில் இலவச கல்வி கற்றவர்களில் ஒருவர் தான் அபூஹூரைரா (ரலி) அவர்கள். இவர் நபிகளாரிடமிருந்து 5374 நபிமொழிகளை அறிவித்திருக்கிறார். அதிகமான நபிமொழிகளை அறிவித்தவர்களில் இவரே முதல் இடத்தை பெறுகிறார்.

ஏன் ஸஹாபாக்களை பின் பற்ற வேண்டும்?

(அவர்கள் கல்விமான்கள்)

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) கூறுகிறார்கள்: யார் ஒருவர் பிறரின் வழிமுறையை பின்பற்ற நாடுகிறாரோ அவர் இறந்துவிட்டவர்களின் (நபித்தோழர்களின்) வழிமுறையை பின்பற்றட்டும். ஏனெனில், உயிருடன் இருப்பவர் மீது குழப்பங்கள் ஏற்படுவதை அச்சமற்று இருக்க முடியாது. இறந்துவிட்டவர்களில் நீங்கள் பின்பற்ற வேண்டியவர்கள் யாரெனில் முஹம்மது (ஸல்) அவர்களின் தோழர்களாவர். அவர்களே இந்த சமுதாயத்தில் சிறந்தவர்கள் மிக்க நல்லுள்ளம் கொண்டவர்கள் மிக ஆழமான கல்வியறிவு பெற்றவர்கள் பகட்டை விரும்பாதவர்கள். அல்லாஹ் தனது நபியவர்களின் தோழமைக்காகவும், தனது மார்க்கத்தை நிலைநிறுத்துவதற்காகவும் அவர்களைத் தேர்வு செய்தான். அவர்களது சிறப்பை அறிந்து கொள்ளுங்கள். அவர்களது வழியில் அவர்களை நீங்களும் பின்தொடருங்கள். அவர்களது நற்பண்புகளிலும், வாழ்க்கையிலும் உங்களுக்கு முடிந்ததை உறுதியாக பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவர்கள்தான் முற்றிலும் சரியான நேர்வழியில் இருந்தார்கள். (ரஜீன்-மிஷ்காத்)

கல்வி என்பது யாது?

கல்வி  ஒரு மனிதனின் அறிவை  திறக்கும் திறவுகோல் ஆகும்.மனிதனை ஒரு முழுமையான ஆற்றல் உள்ள மனிதனாக மாற்றம் அடைய செய்வது கல்வியாகும். மனிதனின் நாகரிக வளர்ச்சிக்கு கல்வியின் வளர்ச்சியே அதிகமாக தேவைப்படுகிறது. ஒருவருடைய திறமையை வெளிக்கொண்டு வந்து அவர்களை சமுதாயத்தில் மதிக்கத்தக்கவராக ஆக்குகிறது. கல்வி ஒரு மனிதனை  முன்னேற்றுவதோடு,  அவனுடைய சமூகத்தையும், நாட்டையும்  முன்னேற்றுகிறது. கல்வியின் நோக்கம்   ஒருவருக்கு  அறிவோடு , ஒழுக்கத்தையும், பண்பாட்டையும்  கற்றுத் தருவதாகும். கல்வியின் முக்கியத்துவம் அறிந்ததால் தான் பல நாடுகளில் கல்வியை கட்டாயமாக்குகின்றனர்.

அரபுகளை கல்வி அறிவால் மேம்படுத்திய இஸ்லாம்.

நாயகம் ﷺஅவர்களின் வருகைகக்கு முன்னால் அரபுலகம் அறியாமை இருளில் தத்தளித்துக்கொண்டிருந்தது. அவர்களின் வாழ்க்கைத்தரம் அதளபாதாளத்தில் வீழ்ந்துக்கிடந்தது.மமதை,தற்பெருமை,அறியாமை எனும் நோய்களில் ஆட்பட்டிருந்தனர்.

செல்வத்தைப்பார்த்து சமூக அந்தஸ்தும்,தலைமைத்துமும் வழங்கப்பட்டது.அவர்களைப் பொறுத்தவரை, அதிக செல்வாக்குள்ளவரும், செல்வந்தராகவும் இருப்பவரே கெளரவமானவராக கருப்படுவார்.

நாயகம் ﷺஅவர்களின் வருகையினால் அரபுகளிடமிருந்த அறியமை இருள் நீங்கி கல்வி அறிவுப்பெற்ற உலகில் முன்மாதிரி சமூகமாக உயர்ந்தார்கள்.

பல்வேறு கிளைகளாக,கோத்திரங்களாக பிளவுப்பட்டு கிடந்தவர்கள்امتِ واحدہ ஒன்றுப்பட்ட சமூகமாக உயர்ந்தது அவர்களிடம் இஸ்லாம் ஏற்படுத்திய கல்வி புரட்சியினால் தான்.

கல்வியே மனிதஇனத்தை கலாச்சாரத்தில் சிறந்த பண்புள்ள சமூகமாக உயர்த்தும் என்பதால் அண்ணலம் பெருமானார் ﷺஅவர்கள்  "اِنَّمَا بُعِثْتُ مُعَلِّماً" "நான் ஆசிரியராக அனுப்பப்பட்டுள்ளேன்"என்றும் தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கல்வியின் அவசியத்தை அம்மக்களிடம் போதித்து கல்வியில் சிறந்தவர்களாக மாற்றினார்கள்.

இஸ்லாமிய வளர்ச்சியே கல்விவளர்ச்சி.

இஸ்லாம் உலகெங்கிலும் பரவுவதற்கு முக்கிய காரணம் கல்விக்கு இஸ்லாம் கொடுக்கும் முக்கியத்துவமே ஆகும்.

நாயகம் ﷺஅவர்கள் தம் தோழர்களிடம் கூறினார்கள்"بَلِّغُوا عَنِّي ولو آيَةً" "நீங்கள் என்னிடம் ஒரு வாக்கியத்தை கேட்டிருந்தாலும் அதனை பிறருக்கு எடுத்துரைத்துவிடுங்கள்."

நபிகளார்ﷺ தங்களின் இறுதி ஹஜ்ஜில் நீகழ்த்திய  உரையின் இறுதியில் மக்களை நோக்கி "இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்; விஷயம் சென்று சேருபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம்." என்று கூறியதாக (ஸஹீஹுல் புகாரி)பதிவுசெய்யப்பட்டுளள்து.

இஸ்லாத்தில் கல்வி இரு வகைகளாகும்.

ஒன்றுفرضِ عینகட்டாய கடமை மற்றொன்று فرضِ کفایہ(எவராகினும் ஒருவராவது கற்பது கடமை) அனைவருக்கும்  கடமையில்லை என்றாலும் சமுதாயத்தில் சிலராவது கற்பது கடமை.

இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களை,சட்டங்களை கற்பதுفرضِ عین கட்டாயகடமையாகும்.

முஸ்லிமான ஒருவர் குறைந்தபட்சம் இஸ்லாத்தில்فرضகடமைகள் என்னென்ன என்றும் அன்றாட வாழ்வில حرام حلال ஹலால்,ஹாராமின் வித்தியாசங்களை தெரிந்திருப்பதும் கட்டாயகடமையாகும்.

கல்விகற்றல் என்பது மார்க்க கல்வி மட்டுமல்ல நம் உலக தேவையை இலகுவாக்கி தரும் அனைத்துக்கல்விகளையும் இஸ்லாம் கற்க ஆர்வமூட்டுகின்றது இவை فرضِ کفایہ "ஃபர்ளு கிஃபாயா" என்ற அடிப்படையில் கடமையாகும்.

ஒரு போரில் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய பிணையாக இஸ்லாமிய சிறார்களுக்கு, அவர்களுக்கு தெரிந்த கல்வியை கற்பிக்குமாறு நாயகம் ﷺஅவர்கள் கூறினார்கள்.

கைதிகள் கற்பிக்கும் கல்வி உலக கல்வி என்பதில் சந்தேகமில்லை.இதிலிருந்து நாயகம் ﷺஅவர்கள் கல்விக்கு எவ்வளவு முக்கியத்தும் அளித்திருக்கின்றார்கள் என்பது விளங்குகிறது.

அல்லாஹ் நபியைப்பார்த்து உலக செல்வங்களை ஏறெடுத்தும் பார்க்கவேண்டாம் என்கிறான்.

وَلَا تَمُدَّنَّ عَيْنَيْكَ اِلٰى مَا مَتَّعْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْهُمْ زَهْرَةَ الْحَيٰوةِ الدُّنْيَا ۙ لِنَفْتِنَهُمْ فِيْهِ‌  وَرِزْقُ رَبِّكَ خَيْرٌ وَّاَبْقٰى‏

இன்னும், அவர்களில் சில பிரிவினர் இன்பமனுபவிக்க நாம் கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதீர்; (இவை யெல்லாம்) அவர்களைச் சோதிப்பதற்காகவே நாம் கொடுத்துள்ள உலக வாழ்க்கையின் அலங்காரங்களாகும். உமது இறைவன் (மறுமையில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும் நிலையானதும் ஆகும்.(அல்குர்ஆன் : 20:131)

ஆனால் கல்வியை தேடுமாறும்,கல்வியில் அதிமாக்கு என துஆ செய்யுமாறும் கட்டளையிடுகின்றான்.

 وَقُلْ رَّبِّ زِدْنِىْ عِلْمًا‏

 “இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக!(அல்குர்ஆன் : 20:114)

உலகில் அல்லாஹ், நபிக்கு அதிகமாக தேடுவதற்கும்,அதிகமாக கேட்பதற்கும் அனுமதித்த ஒரே விஷயம் கல்வி தான்.கல்விகற்பது அவசியமாகும்,கல்வி இறைப்பொருத்தைபெற்றுத்தரும்,மேலும் கல்வி கற்பதே ஓர் இபாதத் வணக்கமாகும்.

இஸ்லாத்தில் கல்விக்கு அதீத முக்கியத்தும் வழங்ப்பட்டிருப்பதற்கு காரணம் அதனால் தான் மனித இனம் اشرف المخلوقاتபடைப்பினங்களில் சிறந்த இனமாக விளங்குகின்றது.

குர்ஆனுக்கும்,நபிமொழிகளுக்கும் கல்வியில் முதன்மையான அந்தஸ்து என்றால் ஏனைய கல்விகளும் தேவையிருப்பின் கற்பதை இஸ்லாம் வலியுறுத்தவே செய்கின்றது.

கல்விஅறிவு பெருகும் போது இஸ்லாம் தானாக வளரும்,காரணம் இஸ்லாம் அறிவார்ந்த மார்க்கம்,கல்விஅறிவை தேடி அடைந்துக்கொள்ளுமாறு வலியுறுத்தும் மர்க்கமாகும்.

இன்று இந்திய இஸ்லாமியர்கள் மார்க்க,உலக இரு கல்விகளிலும் மிகவும் பின்தங்கியிப்பது வேதனைக்குறிய விஷயமாகும்.

அல்லாஹுத்தஆலா நம் சமூகத்தை கல்விஅறிவில் உயர்ந்த சமூகமாக ஆக்கியருள்வானாக!ஆமீன்...

வெளியீடு : செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

No comments:

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...