Thursday, 17 November 2022

ஜும்ஆ பயான் 18/11/2022

இஸ்லாத்தில் பெண்களுக்குள்ள உரிமைகள்.

يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌  اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌  اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ‏

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.(அல்குர்ஆன் : 49:13)

உலக வரலாற்றில் பெண்சமூகம் உரிமைமீறகள்,அடக்குமுறைகள், அத்துமீறல்களை தொடர்ந்து எதிர்க்கொண்டுவருகின்றது.

உலகில் ஐரோப்பா, எகிப்து,இராக், இந்தியா,சீனா போன்ற எந்த நாடுகளிலும் எந்த சமூகத்திலும் பெண்களுகெதிராக எந்த அத்துமீறல்களும் நடைப்பெறவில்லை என சொல்லமுடியாத அளவுக்கு பெண்கள் அநீதமிழைக்கப்பட்டனர். 

ஆண்கள்,பெண்களை தங்களின் வாழ்விற்காகவும்,வசதிக்காகவும் கைமாற்றிக்கொள்ளும் போகப்பொருளாக۔மிருகங்களை விடவும் கேவலமாக நடத்தினர்.

அறியாகைக்கால அரபகத்தில் பெண்கள்.

அரபுகள்,பெண்களை துன்பத்தை தரும் படைப்பாகவும்,துர்சகுனமாகவும் கருதினார்கள். பெண்கள் போதைகளாகவும், வெறும் சடப்பொருளாகவும், போகப் பொருளாகவும்  கருதப்பட்டனர். பெண்குழந்தைகள் பிறந்தால் உயிருடன் புதைக்கப்பட்டனர். பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டது. இவ்வாறு பெண்ணடிமை சாசனம் எழுதப்பட்டு பெண்கள் மிருகங்களை விட கேவலமாக வழிநடத்தப்பட்டனர்.

وَاِذَا بُشِّرَ اَحَدُهُمْ بِالْاُنْثٰى ظَلَّ وَجْهُهٗ مُسْوَدًّا وَّهُوَ كَظِيْمٌ‌‏

அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான். (அல்குர்ஆன் : 16:58)

يَتَوَارٰى مِنَ الْقَوْمِ مِنْ سُوْۤءِ مَا بُشِّرَ بِهٖ  اَيُمْسِكُهٗ عَلٰى هُوْنٍ اَمْ يَدُسُّهٗ فِى التُّـرَابِ‌  اَلَا سَآءَ مَا يَحْكُمُوْنَ‏

எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் - அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?(அல்குர்ஆன் : 16:59)

இந்தியாவில் பெண்கள்...

இந்தியாவில் வழக்கத்தில் இருந்த கொடூரமான பெண்களுக்கெதிரான இரண்டு நடைமுறைகள்

# உடன்கட்டை ஏறுதல்.

சதி என்ற கொடிய முறை முதன்மையாக இந்து சமூகங்களில் நடைமுறையில் இருந்தது, சமூதாயத்தில் ஒரு பெண்ணின் கணவர் இறந்துவிட்டால் அந்த விதவைப் பெண் தானாக முன்வந்து நெருப்பில் தனது உயிரை மாய்த்துக்கொள்ளவேண்டும்

# தேவதாசி முறை.

 20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது.

கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.

கி.மு. 200ஆம் ஆண்டில் தற்போதைய இந்தியாவில் அமுலில் இருந்த மனு ஸ்மிருதி என்ற சட்டம் தனது கணவனுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் பெண்ணை நாய்களுக்கு இரையாக்கிக் கொல்லும் அதிகாரத்தை வழங்கி இருந்தது. மனு ஸ்மிருதியைப் பொறுத்தவரை பெண்கள் ஆண்களின் உடமைகளே. அந்தச் சட்டத்தின் கூறுகள் இன்றுவரை தொடரும் நிலையே உள்ளது.

சீனாவில்...

சீனர்கள் பெண்களை நற்பாக்கியத்தையும் செல்வங்களையும் அழித்துவிடக்கூடிய தண்ணீருக்கு ஒப்பாக்கினர். அவர்கள் தம் மனைவியரை உயிரோடு புதைத்து விடுவதற்கும் விற்றுவிடுவதற்கும் உரிமை பெற்றிருந்தனர்.

பண்டைய ரோம,சுமேரிய,கிரேக்க  நாகரீகங்களில் பெண்கள்...

பழம்பெரும் நாகரீகங்களான அசிரிய,கிரேக்க , ரோம, சுமேரிய நாகரீகங்களில் பெண்களை விடவும் ஆண்கள் உயர்வானவர்கள் என்ற கருத்தும், திருமணத்துக்குப் புறம்பான உறவுகளை நாடும் பெண்களுக்கு அதீத தண்டனை வழங்குவதும் அங்கீகரிக்கப்பட்ட வழக்கமாக இருந்து வந்துள்ளது. 'இறைவனின் ஆசீர்வாதத்துடன், மதகுருமாரின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட சட்டங்களால்” பெண்கள் இவ்வாறு கொடூரமாக நடத்தப்பட்டார்கள். அதன் நீட்சியே இன்றுவரை உள்ளது.

ரோமர்கள்...

பண்டைய ரோம சட்டத்தில், பெண்கள் விடயத்தில் திருமணத்துக்கு அப்பாலான உறவு பெருங் குற்றமாகக் கருதப்பட்டது. அத்தகைய குற்றத்துக்கு மரணமே தண்டனை. அவ்வாறு தவறிழைத்த பெண்ணுக்குத் தண்டனை வழங்க ஒத்துழைப்பு நல்காத குடும்பத்தினரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரோமர்களுக்கு முன்னதாகவே இதுபோன்ற சட்டங்கள் உலகில் இருந்துள்ளன. மொசப்பத்தோமியாவை ஆட்சி செய்த பபிலோனிய மன்னரான ஹம்முராபி கி.மு. 1780இல் இது தொடர்பான சட்டம் ஒன்றை உருவாக்கியிருந்தார். ஹம்முராபி சட்டம் என அறியப்படும் இந்தச் சட்டத்தின் பிரகாரம் திருமணத்துக்கு அப்பாலான உறவைப் பேணும் பெண்ணைக் கயிற்றால் கட்டி, ஆற்றில் எறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்பட்டது. எனினும், இதுபோன்ற குற்றத்தைப் புரியும் ஆண்களுக்கு இதே வகையான தண்டனை வழங்கப்படவில்லை.

கிரேக்கர்கள்...

கிரேக்கர்கள் பெண்களை வியாபாரப் பொருட்களாகவே கருதினர். அவர்களுக்கென எந்த உரிமையும் கிடையாது. உரிமைகள் அனைத்தும் ஆண்களுக்கே என்றனர். இன்னும் அப்பெண்களுக்குச் சொத்துரிமை, கொடுக்கல், வாங்கல் போன்ற உரிமைகள் தடுக்கப் பட்டிருந்தன. அவர்களில் பிரபல்யமான தத்துவஞானியான சாக்ரடீஸ் என்பவன் பெண்கள் இருப்பது உலகின் வீழ்ச்சிக்கு மிகப்பெரும் மூல காரணமாகும். மேலும் பெண்கள் விஷ மரத்திற்கு ஒப்பானவர்கள். அம்மரத்தின் புறத் தோற்றம் அழகாக இருக்கும். எனினும் அதன் கனிகளை சிட்டுக்குருவிகள் தின்றவுடனேயே இறந்துவிடுகின்றன என்று கூறியுள்ளான்.

உலகமதங்களிள் பெண்கள்...

உலக மதங்களான இந்து, கிறித்துவம், இசுலாம், புத்தம், ஜைனம், சீக்கியம், யூதம் என ஒரு சிலவே உலகமெலாம் பரவி நின்றன. உலகில் பரவிய மதங்கள் அனைத்தும், எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டவே வழி காட்டின. ஆயினும் எல்லா உயிர்களையும் சமமாக நேசிக்கும் அன்பு உருவாகவில்லை. ஆண்–பெண், உயர்ந்தவர்-தாழ்ந்தவர், ஏழை–பணக்காரர் எனப் பாகுபாடு இருந்து கொண்டேதான் இருக்கிறது. குறிப்பாகப் பெண்களை அடிமைப்படுத்துவது முற்றிலுமாக நீங்கவில்லை. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆயினும் மதங்களைப் போதித்த வேதங்களும் சில நேரங்களில் இதற்குக் காரணங்களாகின்றன.

 ”கடவுள் முதலில் ஆணைப்படைத்தான். ஆதாமாகிய அவ்வாணின் விலா எலும்பிலிருந்தே ஏவாளைப் படைத்தான். அந்த ஏவாளே முதல் மனிதனாகிய ஆதாம் தவறிழைக்கக் காரணமானாள். எனவே பெண்கள் அடக்கி வைக்கப்பட்டார்கள்”என்று விவிலியம் கூறுகிறது.

இந்த உலகின் முதன்மை மதம் என்று சொல்லப்படக் கூடிய யூத, கிறிஸ்தவ மதத்தின் வேதநூலான பைபிள் பெண்ணை இப்படித்தான் சித்தரிக்கிறது.

பெண்: ஆன்மா இல்லாதவள், • பிறப்பால் இழிவானவள், • ஆண்களை வஞ்சிக்கும் குணமுடையவள், • விவாகரத்து உரிமையற்றவள், • மறுமணத்திற்கு தகுதியற்றவள், • வாரிசு சொத்து தடுக்கப்பட்டவள், • வேதம் படிக்க அருகதையற்றவள், • மாதத்தீட்டால், பிரசவத்தீட்டால் அசிங்கமானவள், • ஆணின் அதிகாரங்களுக்குள் அடங்கப்பட்டவள். 

  ”கணவன் துர்ப்பழக்கமுள்ளவனாக இருந்தாலும், அந்நிய ஸ்திரீ லோலனாக இருந்தாலும், நற்குணமில்லாதவனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப்போல் பூசிக்க வேண்டியது”என்று இந்திய வடமொழி வேதங்கள் கூறுகின்றன.

 ”பெண்ணே! நீ குழந்தைப் பருவம்வரை அப்பன் சொன்னதைக் கேள். வளர்ந்து மணமானதும் கணவன் சொன்னதைக் கேள். உனக்குக் குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதைக் கேட்க வேண்டும். உனக்கு இதுதான் கதி. நீ சுதந்திரமாக வாழத் தகுதியற்றவள். ஆண் சொல்படி கேள்”என மனுநீதி கூறுகிறது.

  மதங்கள் அனைத்தும் ஆண்களை அடிப்படையாகக் கொண்டே இயங்கி வருகின்றன. உலகப் பெரு மதங்களாகிய கிறித்துவம், இந்து போன்ற எந்த மதங்களும் பெண்களைக் கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை. பெண்கள் தீண்டத்தகாதவர்கள்; கோயில்களில் பூசை செய்யத் தகுதியற்றவர்கள் என்று பெண்களை ஒதுக்கி வைக்கின்றன. அதற்கு அவர்களின் மாதவிடாய் போன்ற இயற்கை நிகழ்வுகள் காரணங்களாக்கப்படுகின்றன. இவ்வாறு பல நிலைகளில் மதங்களும், மதத்தின் அடிப்படையில் எழுந்த வேதங்களும் பெண்ணடிமைக்கு வழி வகுத்தன.

உலக வரலாற்றில் பெண்ணுரிமை:

 ’ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாள் உருவாக்கப்பட்டாள்’ என்பதிலிருந்து, அஃதாவது மனிதகுல வரலாறு தொடங்கியதிலிருந்தே பெண்கள் அடக்கி வைக்கப்பட்டு வருகிறார்கள்.

     கி.பி. 586-இல் பிரஞ்சுக்காரர்கள், ’பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்களா? இல்லையா?’ என்பது பற்றி ஆராயக் கமிட்டி அமைத்தார்கள் என்ற செய்தி, அக்காலத்தில் பெண்கள் எந்தளவிற்குத் தாழ்நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

     கி.பி. 1567-இல் ஸ்காட்லாந்து பாராளுமன்றம், ‘பெண்களுக்கு எந்த உரிமையும் அளிக்கக் கூடாது’ என்றே சட்டம் இயற்றியுள்ளது.

     கி.பி. 1805 வரை, ’ஒரு கணவன் தன் மனைவியை 6 பென்னி காசுகளுக்கு விற்க முடியும்’ என ஆங்கிலேயச் சட்டம் இருந்தது என்றும், 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை, ’ஆங்கிலேய பொதுச் சட்டப்படி பெண்கள் குடியுரிமையின்றியே இருந்தார்கள்’ என்றும் வரலாறு தெரிவிக்கின்றது.

 ’பெண்களையும் பிராமணரல்லாதவர்களையும் கொல்லுதல் பாதகமாகாது’ என வடமொழி சாத்திரங்கள் கூறி வந்தன.

இந்தியாவில் 19-ஆம் நூற்றாண்டு வரை தோஷம், பால்ய விவாகம், சதி, விதவைத் திருமண மறுப்பு, சொத்துரிமையின்மை எனப் பெண்கள் வஞ்சிக்கப்பட்டே வந்தார்கள்.  

இத்தகைய சூழலில் 19-ஆம் நூற்றாண்டில்தான் ஐரோப்பாவில் பெண் விடுதலை பற்றிப் பேசப்பட்டது. கி.பி. 1837-இல் சார்லஸ் ப்யூரியே என்பவர்தான் முதன் முதலாகப் ’பெண்ணியம்’ (Feminism) என்ற சொல்லைக் கையாளத் தொடங்கினார். அதன் பின்னரே பெண்ணியம் பற்றிப் பரவலாகப் பேசப்பட்டது.

பழங்காலத்தில் ஆண்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டு வந்தது. கி.பி. 1780-இல்தான் ’பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட வேண்டும்’ என்கிற இயக்கம் பிரான்சு நாட்டில் தொடங்கப்பட்டது.

கி.பி.1860-இல் சுவீடன், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் சில மாகாணங்களில் மட்டும் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.

கி.பி.1893-இல் நியூசிலாந்து நாடு வளர்ந்த எல்லாப் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கிய முதல் நாடாகத் திகழ்கிறது. அதன்பின் ஆஸ்திரேலியாவில் 1895-இல் பெண்கள் அனைவரும் வாக்குரிமை பெற்றனர்.

ஐரோப்பா நாடுகளில் பின்லாந்து நாடுதான் 1907-இல் முதன் முதலாகப் பெண்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்கியது. 

இந்தியாவில் 1919-இல் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.

இவ்வாறு உலக வரலாறு நெடுகிலும் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வந்ததும், 20-ஆம் நூற்றாண்டில்தான் முழுமையான பெண்ணுரிமை உலகமெலாம் மலர்ந்தது என்பதும் பெண்ணுரிமை பேசிய மேல்நாட்டாரின் நிலையாகக் காணக் கிடைக்கின்றது.  

(நன்றி:கவிஞர், கலைமாமணி நா.இராசசெல்வம்,பெண்ணுரிமை தந்திட்ட பெருமகனார் என்ற நூலிலிருந்து)

நவநாகரீகத்தில், நவீன கண்டுபிடுப்புகளில் முன்னேறிவிட்டாதாக மார்தட்டிக்கொள்ளும் இன்றைய காலக்கட்டத்திலும் பெண்களுக்கு  எதிரான ஆணாதிக்க அடக்குமுறைகள் குறைந்தப்பாடில்ல.

ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் நாள் அன்று சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்  (International for the Elimination of Violence against Women)உலக அளவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உலக அளவில் அனைத்து துறைகளிலும் பெண்கள் அபரிதமான வளர்ச்சி அடைந்த போதிலும் அதை விட அதிக அளவில் பெண்கள் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பது உண்மை.

1993 ஐநா அமைப்பு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை செயல்களை சட்டப்படி குற்றம் என அறிவித்து உத்தரவிட்டது. 1999 நவம்பர் 25 சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பெண்களை தாயாய், சகோதரியாய் மதித்து அவர்களுக்கு எதிராக நடத்தப்படும் அனைத்து வழிமுறைகளையும் முற்றிலும் ஒழிக்க சபதம் ஏற்தே இன்னாள் அனுசரிக்கப்படுவதன் நோக்கமாகும்.

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள பாதுகாப்பும், உரிமைகளும்.

பெண்கள் சமுதாயம் இந்த நூற்றாண்டில் போராடிப் பெற்ற நியாயமான பல உரிமைகளை, 1,400 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் எந்தவிதமான போராட்டமும் நடத்தாமலேயே இஸ்லாம் வழங்கி விட்டது.

வழிபாட்டு உரிமையில், சொத்துரிமையில், விவாகரத்து உரிமையில், கல்வி கற்பதில் என அனைத்து உரிமை களையும் வழங்கி அவர்களை கண்ணியப்படுத்திய மார்க்கம் இஸ்லாம்.

இன்று உலகலாவிய ரீதியில் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும், பெண்கள் சுதந்திரமாக வழிப்படுத்தப்பட வேண்டும், பெண்களின் மகத்துவம் பேணப்பட வேண்டும்,பெண்களுக்கு பாலியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும், ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையில் பால்நிலைத்துவம் பேணப்பட வேண்டும் என பல்வேறு கோஷங்கள் எழுப்ப்ப்பட்டுக்கொண்டிருக்கின்றன. 

இவர்களது பெண்ணுரிமைப்போராட்டம் வெறும் வெற்று கோஷங்களாகவும், இஸ்லாத்தை காழ்ப்புணர்வுடன் விமர்சனம் செய்வதாகவுமே அமைந்திருக்கின்றன. இவற்றின் மூலம் சிறந்த ஒரு தீர்வை எட்ட முடியாது என்பது யதார்த்த பூர்வமான உண்மையாகும். 

பெண்ணின் பெருமையை நிலைநாட்டி, பெண்ணின் மகத்துவத்தை பேணிய ஓரே மார்க்கம் இஸ்லாம் என்றால் அது மிகையாகாது. இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன்னர் பெண்ணுரிமை பற்றி பேசியுள்ளது.போலிப் பெண்ணுரிமை பேசும் கூட்டம், தங்கள் காழ்ப்புணர்ச்சியையும் வறட்டு கவுரத்தையும் சற்று கழட்டி வைத்து விட்டு,இஸ்லாமிய வேதமாகிய  திருக்குர்ஆனையும், ரஸூல்ﷺ அவர்களின் சொல், செயல் அங்கீகாரமான ஹதீஸ்களையும் சற்றே நடுநிலையான, நியாயமான பார்வையுடன் பார்த்தார்கள் என்றால் 1428 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் பெண்ணுரிமையை நிறைவாக வழங்கியுள்ளது என்று முழு மனதுடன் ஒப்புக்கொண்டு அதனைப் பின்பற்றவும் செய்வார்கள்.

பிறப்பதில் உள்ள உரிமை!

 பெண்குழந்தை என்றால் சிசுவிலேயே அழித்துவிடுவதையோ அல்லது பிறந்ததும் கள்ளிப்பால் கொடுத்துக் கொல்வதையோ இஸ்லாம் மிக வன்மையாக எதிர்க்கிறது.

وَاِذَا الْمَوْءٗدَةُ سُٮِٕلَتْۙ‏

உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-(அல்குர்ஆன் : 81:8)

بِاَىِّ ذَنْبٍ قُتِلَتْ‌‏

“எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?” என்று-(அல்குர்ஆன் : 81:9)

பெண்குழந்தை பிறந்தால் உண்மையான முஸ்லிம் அதனை ரஹ்மத் (அல்லாஹ்வின் அருட்கொடை) என்று சந்தோஷப்படுவர்.

பெண்சிசுக்கொலையை தடை செய்த நாயகம்ﷺ.

நபிகள் நாயகம் ﷺகாலத்தில் நடந்த ஒரு நிகழ்வைப் பாருங்கள். நபிகளார் தோழர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலத்து பேச்சு எழுந்தது. ஒரு தோழர் தன் அடி மனதில் உறைந்து கிடந்த நிகழ்வைச் சொல்லத் தொடங்கினார். “இறைத் தூதரேﷺ! அந்த அறியாமைக் காலத்தில் என் மனைவி நிறை மாதக் கர்ப்பிணியாக இருந்த நேரம். நான் வியாபார விஷயமாகப் பயணம் செல்ல வேண்டிய கட்டம். என் மனைவியிடம், ‘ஆண் குழந்தை பிறந்தால் பத்திரமாகப் பார்த்துக் கொள். பெண் குழந்தை பிறந்தால் கொன்று புதைத்து விடு’ என்று சொன்னேன். பிறகு நான் பயணத்தில் இருந்து திரும்பியபோது மனைவி என்னிடம், ‘நமக்குப் பெண் குழந்தை பிறந்தது. நல்லவேளை அது இறந்து விட்டது’ என்று சொன்னாள். சில ஆண்டுகள் சென்றன. ஒருநாள் என் வீட்டிற்கு ஒரு அழகான பெண் குழந்தை வந்து விளையாடுவதைக் கண்டு, ‘யாரவள்?’ என்று திடுக்கிட்டுக் கேட்டேன். அதற்கு என் மனைவி, ‘பக்கத்து வீட்டுக் குழந்தை’ என்றாள். அந்தக் குழந்தை என்னிடம் பழகத் தொடங்கியது. குழந்தைக்கும் எனக்கும் இடையே இருந்த பாசத்தைக் கண்ட என் மனைவி, ‘இந்தக் குழந்தை மீது உங்களுக்கு அவ்வளவு பாசமா?’ என்று கேட்டாள். ‘ஆம்.. இவள் என் உயிரல்லவா?’ என்றேன். அப்போது என் மனைவி, ‘அன்று நான் சொன்னது பொய். இது பக்கத்து வீட்டு குழந்தை அல்ல. நம் குழந்தைதான். உங்களுக்குப் பயந்து நான் அப்படிச் சொன்னேன்’ என்றாள்.

நான் மகிழ்ச்சியில் நனைந்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் அறியாமைக் காலத்து வெறித்தனத்தில் நான், அந்தக் குழந்தையைக் கொல்ல முடிவு செய்தேன். ஆனாலும் பாசம் என்னை விடவில்லை. பாசத்திற்கும், அறியாமைக் கால சிந்தனைகளுக்கும் இடையே நடந்த போராட்டத்தில் பாசம் தோற்றது. ஒருநாள் என் அன்பு மகளைப் பாலை வெளிக்கு அழைத்துச் சென்றேன். என்னுடன் அவள் விளையாடிக் கொண்டும், கதை பேசிக் கொண்டும் இருந்தாள். ஒரு இடத்தில் குழி தோண்டினேன். பாலை வனத்தின் மணல் என் தாடியில் பதிந்தன. அந்தச் செல்ல மகள் ஏதும் அறியாமல், தன் பிஞ்சு விரல்களால் என் தாடியில் உள்ள மணலைத் தட்டி விட்டாள். இறைத்தூதரே! நான் கல்நெஞ்சக்காரன். என் மகளைக் குழியில் தள்ளி மணலைப் போட்டு, உயிரோடு புதைத்து விட்டேன்” என்று நபித் தோழர் சொன்னபோது, நபிகளார் அழ ஆரம்பித்து விட்டார். அருகில் இருந்த தோழர்கள், அந்தத் தோழரைப் பார்த்து, “என்ன காரியம் செய்தீர்? நபிகளாரையே அழச் செய்து விட்டீரே!” என்றபோது, நபிகள் நாயகம்ﷺ, “அந்தக் காலம் மறைந்து விட்டது. நாம் பாவமன்னிப்பைத் தேடி மீண்டு விட்டோம்” என்று கூறியவண்ணம் தனது தாடி நனையும் அளவு அழுதார்கள்.

பின்னர் நபிகள் நாயகம் ﷺகூறினார்கள்: “நாம் எவ்வளவு கல் நெஞ்சகர்களாய் இருந்துள்ளோம். (இஸ்லாத்தின் வருகைக்கு முந்தைய) அறியாமைக் காலத்தில் செய்த செயல்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்து விடுவான். ஆகவே உமது நற்செயல்களை புதுப்பித்துக் கொள்வீராக!” என்று அத்தோழரைப் பார்த்துக் கூறினார்கள். நபிகள் நாயகம் ﷺதாம் வாழ்ந்த காலத்திலேயே பெண் குழந்தைகளைப் புதைக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். 

  وَلَا تَقْتُلُوْۤا اَوْلَادَكُمْ مِّنْ اِمْلَاقٍ‌ نَحْنُ نَرْزُقُكُمْ وَاِيَّاهُمْ‌  

“வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; .(அல்குர்ஆன் : 6:151)

 என்ற இறை வசனத்தை ஓதிக் காட்டினார்கள். 

وَاِذَا الْمَوْءٗدَةُ سُٮِٕلَتْۙ‏  بِاَىِّ ذَنْبٍ قُتِلَتْ‌‏

மறுமையில் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையிடம், “எந்தக் குற்றத்திற்காக நீ கொல்லப்பட்டாய்?” (81:8) என்று கேட்கப்பட்டு, குற்றம் புரிந்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என்பதைக் கூறி மக்களை எச்சரித்தார்கள்.

عن عبد الله بن عباس ـ رضي الله عنه ـ‏ ‏قال: ‏قال رسول الله ‏‏ـ صلى الله عليه وسلم ـ‏: (مَنْ وُلِدَتْ له ابنةٌ فلم يئِدْها ولم يُهنْها، ولم يُؤثرْ ولَده عليها ـ يعني الذكَرَ ـ أدخلَه اللهُ بها الجنة ) رواه أحمد

 “ஒருவன் தன் பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்காமலும், கொடுமைப்படுத்தாமலும், ஆண் குழந்தைகளுடன் ஒப்பிட்டு வேறுபாடு காட்டாமலும் இருந்தால், இறைவன் அவனைச் சொர்க்கத்தில் நுழையச் செய்வான்” என்று நபிகள் நாயகம்ﷺகூறினார்கள். (நூ அபூதாவூத்)

رواية جابر بن عبد الله ـ رضي الله عنه ـ أن النبي ـ صلى الله عليه وسلم ـ قال: ( مَن كان له ثلاثُ بناتٍ يُؤدِّبُهنَّ ويرحَمُهنَّ ويكفُلُهنَّ وجَبَت له الجنَّةُ ألبتةَ، قيل يا رسولَ اللهِ: فإن كانتا اثنتينِ؟، قال: وإن كانتا اثنتين، قال: فرأى بعضُ القوم أن لو قال: واحدةً، لقال: واحدة ) رواه أحمد وصححه الألباني .

“ஒருவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்து, அவர்களைச் சிறந்த முறையில் வளர்த்து, கருணை புரிந்து, எந்தவிதக் கேடும் செய்யாமல் இருந்தால் அவருக்குச் சொர்க்கம் நிச்சயம்” என்றார்கள், நபிகள் நாயகம்ﷺ. அருகில் இருந்த நபித்தோழர் கேட்டார்: “இறைத்தூதர் அவர்களே! இரு பெண் குழந்தைகள் என்றால்...?” அதற்கு நபிகளார், “இரு பெண் குழந்தைகள் என்றாலும் சரியே!” என்றார்கள். 

ஆண்,பெண் இருபாலரரும் பிறப்பால் சமமானவர்களே!

ஆண்களும், பெண்களும் ஒரே மூலத்தில் இருந்தே படைக்கப்பட்டார்கள். எனவே இருவருமே கண்ணியத்திற்குரியவர்கள், சமமானவர்கள். இவ்வாறு பெண்களின் மாண்பை உயர்த்தும் வகையில் பல கருத்துகளைச் சமூகத்தில் பதிய வைத்து, பெண்களைப் பற்றிய கண்ணோட்டத்தை நபிகள் நாயகம் மாற்றி அமைத்தார்கள்.

 خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً‌  

 அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; (அல்குர்ஆன் : 4:1)

يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌  اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌  اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ‏

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.(அல்குர்ஆன் : 49:13)

ஆண்,பெண் என்கிற பாகுபாடின்றி மனித இனம் சிறந்த படைப்பு...

لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْۤ اَحْسَنِ تَقْوِيْمٍ‏

திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.          (அல்குர்ஆன் : 95:4)

பெண் என்பவள் தாயாக,சகோதரியாக, மனைவியாக,மகளாக இப்படி பல்வேறு   வழியில் வாழ்வியல் துணையாக பயணிப்பவர்களோடு நல்ல முறையில் நடந்துக்கொள்ளுமாரும்,அவர்களின் உரிமைகளை பேணிடுமாறும் இஸ்லாம் வலியுறுதத்துகின்றது.

பெண்கள் மென்மையானவர்கள்,ஆணின் விலா எலும்பினால் படைக்கப்பட்டவர்கள். அவர்களோடு கரடுமுரடாக நடந்துக்கொள்ளாதீர்.களிமண்ணினால் படைக்கப்பட்ட ஆணின் நெளிவுசுளிவை அவர்களிடம் எதிர்ப்பார்க்காதீர். அவர்களை சரிசெய்ய நினைத்து வளைத்து உடைத்துவிடாதீர்

என பெண்மையின் மென்மையை அழகாக நபிகள் நாயகம் வருணிப்பார்கள்.

 قال رسول الله صلى الله عليه وسلم:

 اسْتَوْصُوا بالنِّساءِ؛ فإنَّ المَرْأَةَ خُلِقَتْ مِن ضِلَعٍ، وإنَّ أعْوَجَ شَيءٍ في الضِّلَعِ أعْلاهُ، فإنْ ذَهَبْتَ تُقِيمُهُ كَسَرْتَهُ، وإنْ تَرَكْتَهُ لَمْ يَزَلْ أعْوَجَ، فاسْتَوْصُوا بالنِّساءِ.

الراوي : أبو هريرة | المحدث : البخاري 

பெண்களின் கண்ணியத்தை பறைச்சாற்றும் விதமாக நாயகம் ﷺஇவ்விதம் சொன்னார்கள்;

حُبِّبَ الَیَّ مِنَ الدُّنْیَا النِّسَاءُ والطِّیُبُ وَجُعِلَتْ قُرَّةُ عَیْنِيْ فِی الصَّلوٰةِ

"உலகில் எனக்கு பெண்கள் மற்றும் நறுமணப் பொருள் விருப்பத்திற்குறியவைகளாக்கப்பட்டுள்ளன.எனது கண்குளிர்ச்சி தொழுகையில் ஆக்கப்பட்டுள்ளது" 

திருமறைகுர்ஆன் பெண்களிடம் நல்லமுறையில் நடந்துக்கொள்ளுமாறு ஏவுகிறது.

وَعَاشِرُوْهُنَّ بِالْمَعْرُوْفِ‌  فَاِنْ كَرِهْتُمُوْهُنَّ فَعَسٰۤى اَنْ تَكْرَهُوْا شَيْــٴًـــا وَّيَجْعَلَ اللّٰهُ فِيْهِ خَيْرًا كَثِيْرًا‏

 இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை; ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.(அல்குர்ஆன் : 4:19)

இஸ்லாம் பெண்களுக்கு மண விலக்குப் பெறும் உரிமை, மறுமண உரிமை, பொருளீட்டும் உரிமை, சொத்துரிமை, வாரிசுரிமை, கல்வி உரிமை, அரசியலில் பங்கேற்கும் உரிமை என ஆண்களுக்குரிய எல்லா உரிமைகளையும் வழங்கியுள்ளது.

இன்று கூட பெண்களுக்கு வழங்க முடியாத உரிமைகளை இஸ்லாம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே வழங்கி விட்டது என்பதே உண்மை.இன்றும் பெண்களின் உரிமைகள் மீறப்படுவதும்,பெண்களுக்கெதிரான வன்முறைகளும் நாளுகக்கு நாள் பெருகிவருகிறது.

இதற்கு இஸ்லாத்தில் மட்டுமே நிரந்தர தீர்வைகாண முடியும் என்பது நிதர்சனம்.

இஸ்லாம் முன்வைக்கும் தீர்வு ஒன்று "பெண்களுக்கான ஹிஜாப்"

மற்றொன்று "கடுமையான குற்றவியல் சட்டம்".

இதுவே பெண்களின் உரிமை,மானம் காக்கப்பட சரியான தீர்வாகும்.

இன்று நவீன பெண்ணியம் பேசுவோர் "இஸ்லாம்  ஹிஜாப் என்கிற போர்வையில் பெண்களின் உரிமையை பறிக்கிறது" எனக்கூக்கூறல் இடும் இவர்கள் சினமா,விளம்பரம்,ஷோக்கள்,கலை நிகழ்ச்சிக்களில் பெண்களை அறைக்குறை ஆடையில் போகப்பொருளாக இவர்களின் வியாபார லாப நோக்கங்களுக்காக ஆபாசமாக சித்தரித்துக்காட்டும்  குரூர புத்திள்ளவர்கள்  இவர்கள் தான் பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைக்கும் காரணமாக இருக்கின்றார்கள்.

ஹிஜாப் பெண்களை அடிமைப்படுத்துகின்றது என்று கூறுவோர் ஒன்று காழ்ப்புணர்ச்சியினாலோ அல்லது தவறானப்புரிதலாலோ கூறுகிறார்கள்.உண்மையில் ஹிஜாப்  பெண்களின் கண்ணியம்,பெண்களின் பெருமை.இஸ்லாத்தில் ஆண்,பெண் என்கிற பேதம் கிடையாது.உரிமைகள் என்று வரும் போது ஆண்,பெண் என்கிற பாகுபாடு இஸ்லாத்தில் இல்லை.ஆனால் உளவியல் ரீதியிலும்,உடல் ரீதியிலும் இயற்கையிலே ஆண்,பெண் வித்தியாசப்படுவதாலும், ஆணை விட பெண் அதிகம் பாதிக்கப்படுவதால் தான் பெண்களுக்கு ஹிஜாப் போன்ற சட்டங்களை இஸ்லாம் கூறுகிறது.

ஹிஜாப் இஸ்லாமியப் பெண்களுக்கானது மாத்திரம் அல்ல,உலகில் மானத்தோடும்,மரியாதையோடும்,கண்ணியத்தோடும் வாழ நினைக்கும் அனைத்துப் பெண்களுக்குமானதாகும்.

இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறது என்ற பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையிலும் ஆண்களை விட பெண்களே அதிகமாக இஸ்லாத்தை ஏற்று வருகின்றனர்.

பெண்களின் உரிமைகள் காத்திட!பெண்கள் கண்ணியமாக வாழ்திட!இஸ்லாம் ஒன்றே தீர்வு.

வெளியீடு : செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.


Wednesday, 9 November 2022

ஜும்ஆ பயான் 11/11/2022

இஸ்லாம் ஏற்படுத்திய கல்வி புரட்சி.

நவம்பர் 11.

தேசிய கல்வி தினம்.

(National Education Day).

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல்கலாம் ஆசாத் (Maulana Abulkalam Azad) பிறந்த தினத்தை தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் 1888ஆம் ஆண்டு நவம்பர் 11 அன்று பிறந்தார். 1947 முதல் 1958ஆம் ஆண்டுவரை தான் மறையும்வரை கல்வி அமைச்சராக இருந்தார். கல்வித் தேவைகளை சரியான முறையில் நிறைவு செய்ய உறுதி பூண்ட இவர் அதற்கான அடித்தளத்தை அமைத்தார். இந்திய தொழில் நுட்ப கழகத்தை (IIT) 1951இல் உருவாக்கினார். பல்கலைக்கழக மானியக்குழு (UGC) என்ற அமைப்பை 1953இல் வடிவமைத்தார். சாகித்திய அகாடமியை உருவாக்க வழிவகுத்தார். நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை, ஆரம்பப் பள்ளியில் உள்ளது என்றார். இவர் குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதினார். இந்தியாவை கல்வியில் முன்னேறிய நாடாக மாற்ற வேண்டும் எனக் கனவு கண்டார். இவரது சாதனைகளை நினைவு கூருவதற்காகவே இவரது பிறந்த தினத்தை கல்வி தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இஸ்லாமும்,கல்வியும்.

உலகிலுள்ள சமயங்கள் அனைத்தும் கல்வியின் முக்கியத்துவத்தையும்,கல்வி அழியா செல்வம் என்பதையும் ஏற்றுக்கொள்கின்றன.ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தை போல கல்வியை ஊக்குவிக்கும்,வலியுறுத்தும் எந்த சமயமும் கிடையாது.

இறைதூதுச்செய்திகளில் இறைவனின் முதல் அறைகூவல்...

اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَقَ‌‏

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.(அல்குர்ஆன் : 96:1)

خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍ‌‏

“அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.(அல்குர்ஆன் : 96:2)

اِقْرَاْ وَرَبُّكَ الْاَكْرَمُۙ‏

ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.(அல்குர்ஆன் : 96:3)

الَّذِىْ عَلَّمَ بِالْقَلَمِۙ‏

அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.(அல்குர்ஆன் : 96:4)

عَلَّمَ الْاِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ‏

மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.(அல்குர்ஆன் : 96:5)

இறைவன் தன் நபிக்கும் அவர்தம் உம்மத்திற்கும் சொல்லும் முதல் "வஹீ"செய்தி,கல்வியை கற்றுக்கொள்,எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்,இறைவன் மனினுக்கு கல்விஞானத்தையும்,எழுத்தாற்றலையும் வழங்கியுள்ளான்.என்பதிலிருந்து இஸ்லாம் கல்வியில் ஏனைய சமயங்களை விடவும் உயர்ந்திருப்பதை உறுதிப்படுத்துகிறது.

அல்லாஹுத்தஆலா மனித குலத்திற்கு எண்ணிலடங்கா உபகாரங்களைச் செய்துள்ள அதே வேளையில்,  இறைவனின் அருட்கொடைகளில் ஆக உயந்தது,உன்னதமானது மனிதனை கல்வி அறிவால் மேன்மைப்படுத்தியதுதான்.

இறைவன் மனிதனுக்கு கல்வி,கலை  ஞானத்தின் அனைத்துக்கூறுகளையும் கற்பித்துக்கொடுத்தான்.அவனே எழுதுகோலைக்கொண்டு எழுதும் எழுத்தாற்றலையும் கற்றுதந்தான், ஆகச் சிறந்த வேதமான குர்ஆன், (ஃபுர்கான்) நபிமொழிகள்(ஹதீஸ்கள்) ஆகியன பற்றிய அறிவைக் கொடுத்தான்.

இந்த கல்வி அறிவினால் தான் மனிதனுக்கு பூமியில் இறைவனின் பிரதிநிதி என்கிற அந்தஸ்தும்,"اشرف المخلوقات"படைப்பினங்களில் சிறந்தபடைப்பு என்கிற சிறப்பும் வழங்கப்பட்டுள்ளது.

ஆதம் (அலை)அவர்களுக்கு மலக்குமார்கள் ஸஜ்தா செய்யபணிக்கப்பட்டதும் இக்கல்வி மனிதனுக்கு வழங்கப்பட்ட காரணத்தால் தான்.

கல்விக்கு உயிர் கொடுத்த இஸ்லாம்.

உலகில் உள்ள எந்த சமூகமும் இஸ்லாம் மார்க்கம் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது போன்று வலியுறுத்தியது கிடையாது. கல்வி என்றால் என்னவென்றே புரியாத அந்தக் காலத்தில் கல்வியைக் கடமையாக்கியது இஸ்லாம். ஆண்களுக்கே கல்வி இல்லாதிருந்த  நிலையில் , அன்று வெறும் போகப்பொருளாகக் கருதப்பட்ட பெண்களுக்குக்கும் கல்வியை கட்டாயமாக்கியது இஸ்லாம். இறைவன் அருளிய திருக்குர்ஆனில் சுமார் 750 வசனங்கள் கற்றுக்கொள்ளவதைப் பற்றி கூறுகிறது.  கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் கல்வியின் மாண்புகளையும் மகத்துவத்தையும் தனது வாழ்நாட்களில் பலமுறை வலியுறுத்திச் சென்றுள்ளார்கள்.

يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ ‌ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏ 

 உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் - அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 58:11)

فَتَعٰلَى اللّٰهُ الْمَلِكُ الْحَـقُّ‌  وَلَا تَعْجَلْ بِالْقُرْاٰنِ مِنْ قَبْلِ اَنْ يُّقْضٰٓى اِلَيْكَ وَحْيُهٗ‌ وَقُلْ رَّبِّ زِدْنِىْ عِلْمًا‏ 

ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; இன்னும் (நபியே!) உமக்கு (குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; “இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக!(அல்குர்ஆன் : 20:114)

கல்வி கற்க முந்திவர வேண்டும்.

 'நபி(ஸல்) அவர்கள் மக்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் நபி(ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் சென்றார். அவ்விருவரும் நபி(ஸல்) அவர்களின் சபையில் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்தச் சபையில் ஓர் இடைவெளியைக் கண்டபோது அதில் அமர்ந்தார். மற்றவரோ சபையின் பின்னால் அமர்ந்து வெட்கப்பட்டு (கடைசியில் உட்கார்ந்து)விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்தினான்' என அபூ வாக்கித் அல் லைஸீ(ரலி) அறிவித்தார்.(ஸஹீஹ் புகாரி 66)

கற்பவர் மற்றும் கற்பிப்பவரின் சிறப்பு.

'அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்று ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; (தம் கால் நடைகளுக்கும்) புகட்டினார்; விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைக்க விடவுமில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும் நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர் வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி 79)

கல்வியின் புரட்சி.

நபி (ஸல்) அவர்கள் கல்வியின் புரட்சியை பத்ர் போரின் முடிவில் ஏற்படுத்தினார்கள். பத்ர் போரில் இறை மறுப்பாளர்களில் 70 பேர் சிறைபிடிக்கப்பட்டார்கள். அப்போதைய வழக்கப்படி, சிறை பிடிக்கப்பட்டவர்களில் வசதி வாய்ப்புள்ளவர்கள் பிணைத்தொகை கொடுத்து விடுதலை பெற்றனர். அப்போது, கைதிகளில் வசதியில்லாத ஒருவர் 10 முஸ்லிம் சிறுவர்களுக்கு எழுத, வாசிக்க கற்றுக் கொடுத்தால் அவர்களை விடுதலை செய்யலாம் என்று நபிகளார் உத்தரவிட்டார்கள்.

அதுபோல, சிறுவர்களுக்கு இலவச கல்வி சேவையை முதன்முதலாக உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களே. இந்த இலவச கல்வி சேவையில் கல்வி கற்றவர்களில் ஒருவர் தான் ஸைத்பின் ஸாபித் (ரலி). மதீனாவில் இருக்கும் போது, நபியவர்களுக்கு இறை செய்தி வரும்போது, அதை எழுதும் எழுத்தாளராக ஸைத்பின் ஸாபித் (ரலி) திகழ்ந்தார். இவர் தனது கல்வியை, பத்ர் யுத்த கைதிகளிடமிருந்து கற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நபி (ஸல்) அவர்கள், மஸ்ஜித் நபவி பள்ளிவாசல் திண்ணையில் வைத்து பரம ஏழைகளான எழுபதுக்கும் அதிகமான தோழர்களுக்கு இலவச கல்வியை இலவச உணவுடன் கற்றுக்கொடுத்தார்கள். இவர்கள் ‘திண்ணைத் தோழர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். கல்வி கற்பவர்களுக்கு இலவச உணவையும், இலவச விடுதியையும் முதன்முதலாக வழங்கியவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களே. இவ்வாறு திண்ணையில் இலவச கல்வி கற்றவர்களில் ஒருவர் தான் அபூஹூரைரா (ரலி) அவர்கள். இவர் நபிகளாரிடமிருந்து 5374 நபிமொழிகளை அறிவித்திருக்கிறார். அதிகமான நபிமொழிகளை அறிவித்தவர்களில் இவரே முதல் இடத்தை பெறுகிறார்.

ஏன் ஸஹாபாக்களை பின் பற்ற வேண்டும்?

(அவர்கள் கல்விமான்கள்)

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) கூறுகிறார்கள்: யார் ஒருவர் பிறரின் வழிமுறையை பின்பற்ற நாடுகிறாரோ அவர் இறந்துவிட்டவர்களின் (நபித்தோழர்களின்) வழிமுறையை பின்பற்றட்டும். ஏனெனில், உயிருடன் இருப்பவர் மீது குழப்பங்கள் ஏற்படுவதை அச்சமற்று இருக்க முடியாது. இறந்துவிட்டவர்களில் நீங்கள் பின்பற்ற வேண்டியவர்கள் யாரெனில் முஹம்மது (ஸல்) அவர்களின் தோழர்களாவர். அவர்களே இந்த சமுதாயத்தில் சிறந்தவர்கள் மிக்க நல்லுள்ளம் கொண்டவர்கள் மிக ஆழமான கல்வியறிவு பெற்றவர்கள் பகட்டை விரும்பாதவர்கள். அல்லாஹ் தனது நபியவர்களின் தோழமைக்காகவும், தனது மார்க்கத்தை நிலைநிறுத்துவதற்காகவும் அவர்களைத் தேர்வு செய்தான். அவர்களது சிறப்பை அறிந்து கொள்ளுங்கள். அவர்களது வழியில் அவர்களை நீங்களும் பின்தொடருங்கள். அவர்களது நற்பண்புகளிலும், வாழ்க்கையிலும் உங்களுக்கு முடிந்ததை உறுதியாக பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவர்கள்தான் முற்றிலும் சரியான நேர்வழியில் இருந்தார்கள். (ரஜீன்-மிஷ்காத்)

கல்வி என்பது யாது?

கல்வி  ஒரு மனிதனின் அறிவை  திறக்கும் திறவுகோல் ஆகும்.மனிதனை ஒரு முழுமையான ஆற்றல் உள்ள மனிதனாக மாற்றம் அடைய செய்வது கல்வியாகும். மனிதனின் நாகரிக வளர்ச்சிக்கு கல்வியின் வளர்ச்சியே அதிகமாக தேவைப்படுகிறது. ஒருவருடைய திறமையை வெளிக்கொண்டு வந்து அவர்களை சமுதாயத்தில் மதிக்கத்தக்கவராக ஆக்குகிறது. கல்வி ஒரு மனிதனை  முன்னேற்றுவதோடு,  அவனுடைய சமூகத்தையும், நாட்டையும்  முன்னேற்றுகிறது. கல்வியின் நோக்கம்   ஒருவருக்கு  அறிவோடு , ஒழுக்கத்தையும், பண்பாட்டையும்  கற்றுத் தருவதாகும். கல்வியின் முக்கியத்துவம் அறிந்ததால் தான் பல நாடுகளில் கல்வியை கட்டாயமாக்குகின்றனர்.

அரபுகளை கல்வி அறிவால் மேம்படுத்திய இஸ்லாம்.

நாயகம் ﷺஅவர்களின் வருகைகக்கு முன்னால் அரபுலகம் அறியாமை இருளில் தத்தளித்துக்கொண்டிருந்தது. அவர்களின் வாழ்க்கைத்தரம் அதளபாதாளத்தில் வீழ்ந்துக்கிடந்தது.மமதை,தற்பெருமை,அறியாமை எனும் நோய்களில் ஆட்பட்டிருந்தனர்.

செல்வத்தைப்பார்த்து சமூக அந்தஸ்தும்,தலைமைத்துமும் வழங்கப்பட்டது.அவர்களைப் பொறுத்தவரை, அதிக செல்வாக்குள்ளவரும், செல்வந்தராகவும் இருப்பவரே கெளரவமானவராக கருப்படுவார்.

நாயகம் ﷺஅவர்களின் வருகையினால் அரபுகளிடமிருந்த அறியமை இருள் நீங்கி கல்வி அறிவுப்பெற்ற உலகில் முன்மாதிரி சமூகமாக உயர்ந்தார்கள்.

பல்வேறு கிளைகளாக,கோத்திரங்களாக பிளவுப்பட்டு கிடந்தவர்கள்امتِ واحدہ ஒன்றுப்பட்ட சமூகமாக உயர்ந்தது அவர்களிடம் இஸ்லாம் ஏற்படுத்திய கல்வி புரட்சியினால் தான்.

கல்வியே மனிதஇனத்தை கலாச்சாரத்தில் சிறந்த பண்புள்ள சமூகமாக உயர்த்தும் என்பதால் அண்ணலம் பெருமானார் ﷺஅவர்கள்  "اِنَّمَا بُعِثْتُ مُعَلِّماً" "நான் ஆசிரியராக அனுப்பப்பட்டுள்ளேன்"என்றும் தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கல்வியின் அவசியத்தை அம்மக்களிடம் போதித்து கல்வியில் சிறந்தவர்களாக மாற்றினார்கள்.

இஸ்லாமிய வளர்ச்சியே கல்விவளர்ச்சி.

இஸ்லாம் உலகெங்கிலும் பரவுவதற்கு முக்கிய காரணம் கல்விக்கு இஸ்லாம் கொடுக்கும் முக்கியத்துவமே ஆகும்.

நாயகம் ﷺஅவர்கள் தம் தோழர்களிடம் கூறினார்கள்"بَلِّغُوا عَنِّي ولو آيَةً" "நீங்கள் என்னிடம் ஒரு வாக்கியத்தை கேட்டிருந்தாலும் அதனை பிறருக்கு எடுத்துரைத்துவிடுங்கள்."

நபிகளார்ﷺ தங்களின் இறுதி ஹஜ்ஜில் நீகழ்த்திய  உரையின் இறுதியில் மக்களை நோக்கி "இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்; விஷயம் சென்று சேருபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம்." என்று கூறியதாக (ஸஹீஹுல் புகாரி)பதிவுசெய்யப்பட்டுளள்து.

இஸ்லாத்தில் கல்வி இரு வகைகளாகும்.

ஒன்றுفرضِ عینகட்டாய கடமை மற்றொன்று فرضِ کفایہ(எவராகினும் ஒருவராவது கற்பது கடமை) அனைவருக்கும்  கடமையில்லை என்றாலும் சமுதாயத்தில் சிலராவது கற்பது கடமை.

இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களை,சட்டங்களை கற்பதுفرضِ عین கட்டாயகடமையாகும்.

முஸ்லிமான ஒருவர் குறைந்தபட்சம் இஸ்லாத்தில்فرضகடமைகள் என்னென்ன என்றும் அன்றாட வாழ்வில حرام حلال ஹலால்,ஹாராமின் வித்தியாசங்களை தெரிந்திருப்பதும் கட்டாயகடமையாகும்.

கல்விகற்றல் என்பது மார்க்க கல்வி மட்டுமல்ல நம் உலக தேவையை இலகுவாக்கி தரும் அனைத்துக்கல்விகளையும் இஸ்லாம் கற்க ஆர்வமூட்டுகின்றது இவை فرضِ کفایہ "ஃபர்ளு கிஃபாயா" என்ற அடிப்படையில் கடமையாகும்.

ஒரு போரில் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய பிணையாக இஸ்லாமிய சிறார்களுக்கு, அவர்களுக்கு தெரிந்த கல்வியை கற்பிக்குமாறு நாயகம் ﷺஅவர்கள் கூறினார்கள்.

கைதிகள் கற்பிக்கும் கல்வி உலக கல்வி என்பதில் சந்தேகமில்லை.இதிலிருந்து நாயகம் ﷺஅவர்கள் கல்விக்கு எவ்வளவு முக்கியத்தும் அளித்திருக்கின்றார்கள் என்பது விளங்குகிறது.

அல்லாஹ் நபியைப்பார்த்து உலக செல்வங்களை ஏறெடுத்தும் பார்க்கவேண்டாம் என்கிறான்.

وَلَا تَمُدَّنَّ عَيْنَيْكَ اِلٰى مَا مَتَّعْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْهُمْ زَهْرَةَ الْحَيٰوةِ الدُّنْيَا ۙ لِنَفْتِنَهُمْ فِيْهِ‌  وَرِزْقُ رَبِّكَ خَيْرٌ وَّاَبْقٰى‏

இன்னும், அவர்களில் சில பிரிவினர் இன்பமனுபவிக்க நாம் கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதீர்; (இவை யெல்லாம்) அவர்களைச் சோதிப்பதற்காகவே நாம் கொடுத்துள்ள உலக வாழ்க்கையின் அலங்காரங்களாகும். உமது இறைவன் (மறுமையில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும் நிலையானதும் ஆகும்.(அல்குர்ஆன் : 20:131)

ஆனால் கல்வியை தேடுமாறும்,கல்வியில் அதிமாக்கு என துஆ செய்யுமாறும் கட்டளையிடுகின்றான்.

 وَقُلْ رَّبِّ زِدْنِىْ عِلْمًا‏

 “இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக!(அல்குர்ஆன் : 20:114)

உலகில் அல்லாஹ், நபிக்கு அதிகமாக தேடுவதற்கும்,அதிகமாக கேட்பதற்கும் அனுமதித்த ஒரே விஷயம் கல்வி தான்.கல்விகற்பது அவசியமாகும்,கல்வி இறைப்பொருத்தைபெற்றுத்தரும்,மேலும் கல்வி கற்பதே ஓர் இபாதத் வணக்கமாகும்.

இஸ்லாத்தில் கல்விக்கு அதீத முக்கியத்தும் வழங்ப்பட்டிருப்பதற்கு காரணம் அதனால் தான் மனித இனம் اشرف المخلوقاتபடைப்பினங்களில் சிறந்த இனமாக விளங்குகின்றது.

குர்ஆனுக்கும்,நபிமொழிகளுக்கும் கல்வியில் முதன்மையான அந்தஸ்து என்றால் ஏனைய கல்விகளும் தேவையிருப்பின் கற்பதை இஸ்லாம் வலியுறுத்தவே செய்கின்றது.

கல்விஅறிவு பெருகும் போது இஸ்லாம் தானாக வளரும்,காரணம் இஸ்லாம் அறிவார்ந்த மார்க்கம்,கல்விஅறிவை தேடி அடைந்துக்கொள்ளுமாறு வலியுறுத்தும் மர்க்கமாகும்.

இன்று இந்திய இஸ்லாமியர்கள் மார்க்க,உலக இரு கல்விகளிலும் மிகவும் பின்தங்கியிப்பது வேதனைக்குறிய விஷயமாகும்.

அல்லாஹுத்தஆலா நம் சமூகத்தை கல்விஅறிவில் உயர்ந்த சமூகமாக ஆக்கியருள்வானாக!ஆமீன்...

வெளியீடு : செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Thursday, 3 November 2022

ஜும்ஆ பயான் 04/11/2022

இஸ்லாம் கூறும் மருத்துவம்.

هُوَ الَّذِىْ بَعَثَ فِى الْاُمِّيّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ‏ (அல்குர்ஆன் 62 : 2 )

இன்றைய நவீன மருத்துவம் கூறும் செய்தி;ஆரோக்கியம் என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல உடல்,உள்ளம்,சிந்தனை, செயல்,பேச்சு,இயல்பு அனைத்தும் சரியாக அமைவதாகும்.சுருக்கமாக வாழ்வியல் முறை சீராக இருப்பதே ஆரோக்கியமாகும்.வாழ்வியல் முறை சீர்கெடும் போதும்,இயற்கை சீதோஷ்ணம் சமநிலை மாறுப்படும் போதும் மனிதனின் ஆராக்கியம் பாதிக்கப்பட்டு நோய்வாய் படுகிறான்.

இன்றைய நவீன மருத்துவத்தின் முன்னோடி இஸ்லாம்,இன்று மருத்துவ உலகம் கூறுவதை இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே தெளிவுப்படுத்திவிட்டது.

இஸ்லாம் மனிதனுக்கு வழிகாட்டும் வாழ்வென்பது இறைப்பொருத்தத்தை பெற்றுத்தருவதோடு இவ்வுலகில்  ஆரோக்கியமாக வாழ வழிவகைச்செய்கிறது.அதனால் தான் இஸ்லாத்தை "இயற்கை மார்க்கம்"என்பர்.மனிதன் இயற்கையோடு ஒன்றி ஆரோக்கியமாக வாழ அழகிய வழிகட்டுகிறது.

ஆரோக்கியமாக வாழ இஸ்லாம் காட்டும் வழிமுறைகளை காண்போம்.

ஆரோக்கியத்தின் அடிப்படை தூய்மை.

இஸ்லாம் தூய்மையை வலியுறுத்தும் மார்க்காம்.அகத்தூய்மை எவ்வளவு முக்கியமோ அதுப்போல புறத்தூய்மையும் மிக முக்கியமாகும்.

தூய்மையை வாழ்வின் நோக்கங்களில் ஒன்று என்கிறது குர்ஆன்...

قَدْ اَفْلَحَ مَنْ تَزَكّٰىۙ‏

தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.

(அல்குர்ஆன் : 87:14)

وَذَكَرَ اسْمَ رَبِّهٖ فَصَلّٰى ‏

மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.(அல்குர்ஆன் : 87:15)

بَلْ تُؤْثِرُوْنَ الْحَيٰوةَ الدُّنْيَا ‏

எனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.(அல்குர்ஆன் : 87:16)

وَالْاٰخِرَةُ خَيْرٌ وَّ اَبْقٰى‏

ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும்.(அல்குர்ஆன் : 87:17)

நபிகளாரின் முக்கிய பணிகளில் ஒன்று தூய்மை...

هُوَ الَّذِىْ بَعَثَ فِى الْاُمِّيّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ‏

அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.(அல்குர்ஆன் : 62:2)

மேற்கூறிய வசனங்களில் தூய்மை என்பதன் நோக்கம்,அகம் புறம் இரண்டின் தூய்மை அவசியமாகும். தனிமனித வாழ்வு,கூட்டுவாழ்கை அனைத்திலும் சொல்,செயல்,சிந்தனை அனைத்திலும் அகம் புறம் இரண்டும் தூய்மையாக இருந்தால் தான் அங்கீகரிக்கப்படும்.

காரணம் தூய்மை,ஆரோக்கியத்தின் அடிப்படையாகும்,வெளிரங்கமான செயல்களில் தூய்மையில்லையெனில் அது ஆரோக்கியத்தை கெடுத்து நோயை உண்டாக்கும்.

வாழ்க்கையில் நாம் வாழும் நாளில் ஆரோக்கியமாக நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்றால் சுத்தமாகவும் சுகாதார வழி முறைகளை பின் பற்றி சுத்தமான உணவு தூய குடிநீர் பாதுகாப்பான தங்குமிடம் சிறந்த நலச்சேவைகள் போன்றவற்றை ஒரு மனிதன் பெற்று கொள்கின்ற போது தான் ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும்.

ஷரிஅத் சட்டங்களில் பெரும்பாலும் நோயாளிகளுக்கு  விதிவிலக்களிக்கப்படும்.(எ.க)நோன்பு நோயாளியின் மீது கடமையில்லை ஆனால்  அவர் குணமானால் நோன்பை களாச்செய்யவேண்டும்.

இப்படி பல்வேறு வணக்கங்களுக்கு ஆரோக்கியம் அவசியமாகும்.அதனால் ஆரோக்கியத்தை கெடுக்கும் அசுதத்தை விட்டும் நீங்க தூய்மை அவசியமென்கிறது இஸ்லாம்.

எல்லா நோய்க்கும் மருந்துண்டு.

நாயகம் ﷺஅவர்கள் உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை பல நபிமொழிகளில் வலியுறுத்தியுள்ளார்கள்.உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்காக பலமருத்துவ முறைகளையு காட்டிதந்திருக்கிறார்கள்.நபிமொழிகளில் طبُّ النَّبِي "நபிவழி மருத்துவம்" என்பதற்கு தனிப்பிரிவே ஹதிஸ் கிதாபுகளில் உள்ளன.

மனிதன் நோய்வாய்ப்டும் போது அதற்கான சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறும்,தகுந்த மருத்துவரை அனுகுமாறும் இஸ்லாம் அறிவுத்துகின்றது.

حديث أبي هريرة t: أن النبي r قال: "إن الله لم ينـزل داءً إلا أنزل له شفاء" رواه البخاري

அல்லாஹ் அதற்கான நிவாரணியை இறக்காமல் எந்த நோயையும் இறக்குவதில்லை.

حديث جابر t قال: قال رسول الله r : "لكل داء دواء، فإذا أصيب دواء الداء برئ بإذن الله عزّ وجل "، رواه مسلم([2]).

ஒவ்வோரு நோய்க்கும் மருந்துண்டு.நோயின்  மருந்தை(மருத்துவதை)பெற்றுக்கொண்டால்,அல்லாஹ்வின் நாட்டப்படி நோய்குணமாகும்.

எல்லா நோய்க்கும் மருந்துண்டு என்றால் நாமே நமக்கு சுயமாக மருந்தை எடுத்துக்கொள்வதல்ல,அத்துறைச்சார்ந்த மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைக்கும் மருத்துவத்தை மேற்கொள்வதாகும் இதனை இன்னொரு ஹதீஸ் தெளிவுப்படுத்துகிறது..

எவரொருவர் தனக்கு அனுபவமில்லாத நோய்க்கு யாருக்காவது சிகிச்சையளித்து,அதனால் (அவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் )அவரின்  பாதிப்புக்கு (சிகிச்சையளித்த)இவரே பொருப்புதாரியாகும்.(سنن ابن ماجہ، کتاب الطب)

நம் முன்னோர்கள் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் என்று கூறியது போல உடலில் நல்ல ஆரோக்கியம் இருந்தால் தான் நல்வாழ்வினை வாழ முடியும் அதிகமான வணக்க வழிபாடுகள் செய்திட முடியும்.

عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ الصِّحَّةُ وَالْفَرَاغ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்....

1. ஆரோக்கியம்     2. ஓய்வு

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி-6412

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((مَا أَنْزَلَ اللَّهُ دَاءً إِلاَّ أَنْزَلَ لَهُ شِفَاءً)). 

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.        (ஸஹீஹ் புகாரி 5678)

மூன்று மருந்துகள்.

قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ((إِنْ كَانَ فِي شَيْءٍ مِنْ أَدْوِيَتِكُمْ- أَوْ يَكُونُ فِي شَيْءٍ مِنْ أَدْوِيَتِكُمْ- خَيْرٌ فَفِي شَرْطَةِ مِحْجَمٍ، أَوْ شَرْبَةِ عَسَلٍ، أَوْ لَذْعَةٍ بِنَارٍ تُوَافِقُ الدَّاءَ، وَمَا أُحِبُّ أَنْ أَكْتَوِيَ)).

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:உங்கள் மருந்துகளில் ஒன்றில் நன்மை ஏதேனும் 'இருப்பதாயிருந்தால்' அல்லது 'இருக்கிறதென்றால்' நோயின் தன்மைக்கு ஏற்றபடி இரத்தம் உறிஞ்சும் கருவியால் (உடலில்) கீறுவது, அல்லது தேன் அருந்துவது, அல்லது நெருப்பால் சூடிடுவதில் தான் அது உள்ளது. (ஆயினும்,) சூடிடுவதை நான் விரும்பவில்லை,என ஜாபிர்(ரலி) அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி 5683)

தேன் எனும் அருமருந்து.

மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட உணவுப்பொருள் தேன். ‘வயிற்றின் நண்பன்’ என தேனைக் கூறுவது உண்டு. தேன், உணவாகவும் மருந்தாகவும் பயன்படக்கூடிய பொக்கிஷம். குழந்தைகள் இருக்கும் வீடுகளில் அவசியம் வைத்திருக்க வேண்டிய பொருள் இது. தேன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும்.

தேன் ஆற்றல் நிறைந்தது. தேனில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. 100 கிராம் தேனில் 304 கலோரி அடங்கியிருக்கிறது.

குர்ஆன் தேனை ஷிஃபா அருமருந்து என்கிறது.தேனின் சிறப்பைக்கூறும் பல ஹதீஸ்கள் உள்ளன.

ثُمَّ كُلِىْ مِنْ كُلِّ الثَّمَرٰتِ فَاسْلُكِىْ سُبُلَ رَبِّكِ ذُلُلًا‌  يَخْرُجُ مِنْ بُطُوْنِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ اَلْوَانُهٗ فِيْهِ شِفَآءٌ لِّلنَّاسِ‌ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏

“பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.(அல்குர்ஆன் : 16:69)

தேனின் பயன்கள்.

தேனை பொதுவாக 'வயிற்றின் நண்பன்' என கூறுவதும் உண்டு. 70 வகையான வைட்டமின் சத்துக்கள் சுத்தமான தேனில் அடங்கியுள்ளன. தேன் எண்ணற்ற சத்துக்களை இயற்கையாகவே கொண்டுள்ளது.ஊட்டச்சத்து.சுவாசப் பிரச்சனைகள்.நோயெதிர்ப்பு சக்தி.எடை குறைவு.உடல் சோர்வு.முகப்பரு பிரச்சினை.சரும சுருக்கம்.காயங்களை குணமாக்க.சொறி, சிரங்கு, படை.முதுமை தோற்றத்தை தடுக்கும்.தசைப் பிடிப்பு.கொலஸ்ட்ரால் போன்ற என்னற்ற பிரச்சினைகளை நீக்குகிறது.ஆனால் கலப்படம் செய்யக்கூடிய பொருட்களில் முதலிடம் வகிப்பது தேன் தான்.

குர்ஆன் பொய்யாகாது.

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார்கள்:

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'என் சகோதரர் வயிற்று வலியால் சிரமப்படுகிறார்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். பிறகு இரண்டாம் முறையாக அவர் வந்தி(ருந்து 'தேன் ஊட்டியதில் வயிற்றுப் போக்குதான் ஏற்பட்டது' என்று கூறி)டவே, மீண்டும் நபி(ஸல்) அவர்கள், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். பிறகு மூன்றாம் முறையாக அவர் வர நபி(ஸல்) அவர்கள் அப்போதும், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். பிறகு (நான்காம் முறை அவர் வந்து), '(தாங்கள் சொன்னதையே) நான் சென்தேன். (ஆனால், குணமாகவில்லை)' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் '(தேனில் நிவாரணம் இருப்பதாகக் குர்ஆனில்) அல்லாஹ் உண்மையே கூறியுள்ளான்; உங்கள் சகோதரரின் வயிறுதான் பொய் சொல்கிறது: அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். அம்மனிதர், மீண்டும் தம் சகோதரருக்குத் தேன் ஊட்டினார். அதையடுத்து அவர் குணமடைந்தார். ( புகாரி 5684)

وَلَوْ جَعَلْنٰهُ قُرْاٰنًا اَعْجَمِيًّا لَّقَالُوْا لَوْلَا فُصِّلَتْ اٰيٰتُهٗ  ءَؔاَعْجَمِىٌّ وَّعَرَبِىٌّ‌   قُلْ هُوَ لِلَّذِيْنَ اٰمَنُوْا هُدًى وَشِفَآءٌ‌   وَ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ فِىْۤ اٰذَانِهِمْ وَقْرٌ وَّهُوَ عَلَيْهِمْ عَمًى‌  اُولٰٓٮِٕكَ يُنَادَوْنَ مِنْ مَّكَانٍ بَعِيْدٍ‏ 

நாம் இதை (குர்ஆனை) அரபியல்லாத வேறு மொழியில் இறக்கியிருந்தால்; இதன் வசனங்கள் தெளிவாக விளக்கப்பட்டிருக்கக் கூடாதா? (சொல்) அஜமீ (வேற்று மொழி); (தூதர்)) அரபியரா?” என்று அவர்கள் கூறியிருப்பார்கள். “இது ஈமான் கொண்டவர்களுக்கு ஒரு வழிகாட்டியும், (அரு) மருந்துமாகும்” என்று கூறுவீராக! ஆனால் ஈமான் கொள்ளாதவர்களுக்கு, அவர்களுடைய காதுகளில் செவிட்டுத்தன்மை இருக்கிறது; இன்னும், அவர் (கண்)களில் குருட்டுத்தனமும் இருக்கிறது; எனவே அவர்கள் வெகு தொலைவான இடத்திலிருந்து அழைக்கப்படுபவர்கள் (போல் இருக்கின்றனர்).  (அல்குர்ஆன் : 41:44)

பால் எனும் அமிர்தம்.

பால் என்பது கால்சியம் நிறைந்த, உடலுக்கு தேவையான ஒரு முழு உணவாக பார்க்கப்படுகிறது. உடல் எடையை பாதுகாக்கவும், கலோரிகளை எரிக்கவும் பால்  உதவுகிறது. மேலும் பால் குடிப்பதால் உடலுக்கு நல்ல சக்தியும், எலும்புகளுக்கு உறுதியும் அளிக்கிறது.

நாட்டு பசுக்களின் பாலில் உடல் வலிமை தரும் வகையிலான புரதம் உள்ளது. பசும்பால் 90% நீர்தன்மையுடன் அடர்த்தி குறைவாகவும், எளிதில் ஜீரணிக்க கூடியது.

நாட்டு பசும்பாலில் உள்ள பீட்டா கெசின் என்னும் புரதம் உடலை வலிமை அடைய செய்கிறது. 

பால் குறித்து குர்ஆன்...

وَاِنَّ لَـكُمْ فِىْ الْاَنْعَامِ لَعِبْرَةً‌   نُّسْقِيْكُمْ مِّمَّا فِىْ بُطُوْنِهٖ مِنْ بَيْنِ فَرْثٍ وَّدَمٍ لَّبَنًا خَالِصًا سَآٮِٕغًا لِّلشّٰرِبِيْنَ‏

நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது; அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம்.(அல்குர்ஆன் : 16:66)

கருஞ்சீரகம்.

காலித் இப்னு ஸஅத்(ரஹ்) கூறினார் :

எங்களுடன் ஃகாலிப் இப்னு அப்ஜர்(ரலி) இருக்க நாங்கள் (பயணம்) புறப்பட்டோம். வழியில் ஃகாலிப்(ரலி) நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம். ஃகாலிப்(ரலி) அவர்களை இப்னு அபீ அ(த்)தீக்(ரலி) உடல் நலம் விசாரிக்க வந்தார்கள். 

அப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதிலிருந்து ஐந்து அல்லது ஆறு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவரின் மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள். ஏனெனில், ஆயிஷா(ரலி) என்னிடம், 'நபி(ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்; 'சாமை'த் தவிர என்று கூறியதை கேட்டிருக்கிறேன்' எனத் தெரிவித்தார்கள். நான், 'சாம் என்றால் என்ன?' என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'மரணம்' என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹ் புகாரி 5687)

இரவு தூக்கம்.

ஒரு காலத்தில் இருட்டியதும் விலங்குகளும் பறவைகளும் மனிதர்களும் உறங்கி விடுவார்கள். அதனால் அதிமான மனிதர்கள் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியமாகவும் இருந்தனர்.

எப்பொழுது மின் விளக்குகள் கண்டுபிடிக்கப்பட்டதோ அன்றிலிருந்து மனிதன் தூக்கத்தை இழந்தான்.இரவுகளில் வேலைக்கு செல்வது அல்லது இரவில் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவது நண்பர்களோடு அரட்டை அடிப்பது இவைகளினால் நோய்கள் அதிகமாகி விட்டது ஆனால்

'நபி(ஸல்) அவர்கள் இஷாவுக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசுவதையும் வெறுப்பவர்களாக இருந்தனர்.' (ஸஹீஹ் புகாரி 568)

பிஸ்மில்லாஹ் கூறுவது.

ஹள்ரத் உமர் இப்னு அபீ ஸலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : “நான் சாப்பிடும் பொழுது தட்டில் எனது கை முறையின்றி உலாவிக் கொண்டிருந்ததைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “சிறுவனே! அல்லாஹ்வின் பெயர் ‘பிஸ்மில்லாஹ்’ கூறி உண்ணு! உனது வலது கரத்தினால் சாப்பிடு! (இங்கொன்றும் அங்கொன்றுமாக கையை உலாவாமல் ஒரு பக்கத்திலிருந்து) தட்டில் உனக்கு அருகில் உள்ளவற்றிலிருந்து சாப்பிடு” என்று எனக்கு கற்றுக் கொடுத்தார்கள். (நுல் : புஹாரி)

இந்த ஹதீஸின் மூலம் மூன்று விஷயங்கள் விளங்குகிறது. 

1. பிஸ்மில்லாஹ் என்று சொல்லி ஆரம்பிக்க வேண்டும். 

2. வலது கரத்தினால் சாப்பிட வேண்டும். 3. தட்டில் நமக்கு அருகில் இருப்பதை சாப்பிட வேண்டும்.

சாப்பிடும் முன்பு இரு கைகளை கழுகுவது.

ஹள்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குளிப்பு கடமையான நிலையில் தூங்க நாடினால் உளூ செய்து கொள்வார்கள். மேலும் சாப்பிட நாடினால் தங்களது கையை கழுகிக் கொள்வார்கள். (நூல் : நஸாயீ)

விஞ்ஞானம் : மனிதன் கரங்களை பல இடங்களில் உபயோகிப்பதால் அவற்றில் கண்ணுக்குத் தெரியாத நுண் (Invisible Rays) ஒன்று சேர்ந்திருக்கும். கைகளை கழுகாமலேயே சாப்பிட ஆரம்பித்தால் அக்கிருமிகள் உள்ளே சென்று பல கோளாறுகளுக்கு அடித்தளமிடுகிறது.

உணவே மருந்து.

மனிதனின் அடிப்படை தேவைகளுள் முதன்மையானது உணவாகும். மக்கள் உண்ணும் உணவு பழக்க வழக்கங்களுமே அவர்களின் உடல் நலத்தை தீர்மானிக்கின்றன.

நாம் உண்ணும் உணவு நமது உடலுக்குத் தேவையான சக்தியைத் தருகிறது  என்பது உண்மைதான்.அதற்காக எப்போதும் எல்லா உணவு வகைகளையும் பிடிபிடியென்று சாப்பிட்டு  விட்டால் செரிமானம் செய்ய நேரமும் காலமும் இருக்காது அதனால்தான் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அவயங்களைப் பாதிக்கிறது என்பது எவ்வளவு உண்மை.

"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்ற இந்த பழமொழிக்கேற்ப

குர்ஆனில்...

وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْا‌  اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ‏

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு  உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.    (அல்குர்ஆன் : 7:31)

இங்கு "இஸ்ராஃப்" என்பதன் பொருள் வெறுமனே உணவை வீணடித்தல் மட்டும் அல்ல,அளவுக்கதிகமாக உணவுஉட்கொள்வதும்,ஆரோக்கியமற்ற உணவை எடுத்துக்கொள்வதையும் குறிக்கும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும்  ஆரோக்கியத்தை தந்து அவன் கருணையால் வாழச் செய்வானாக! ஆமின்...

வெளியீடு : செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Featured post

ஜும்ஆ பயான் 14/06/2024

தலைப்பு: குர்பானியின் சட்டங்கள். குர்பானி என்றால் என்ன? குர்பானி  என்பது இஸ்லாத்தின் மிக முக்கியமான வணக்கமாகும், இந்த புனித மாதத்தில் மில்லி...