Chengaiulama.in

Thursday, 8 September 2022

ஜும்ஆ பயான் 09/09/2022

வீண் விரயம் செய்யாதீர்கள்.


இஸ்லாம் வாழ்வின் ஒவ்வொர் அம்சத்திலும் எளிமை,நீதம்,நிதானம் ஆகியனவற்றை கடைப்பிடிக்குமாறும்,வீண்விரயம், ஊதாரித்தனம்,படோடாபம்,ஆடம்பரம் முதலியனவற்றை தடுப்பதோடு,அவற்றை பழிப்பிற்குறிய செயலாக திருமறையில்  எச்சரிக்கின்றது.

وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُوْلَةً اِلٰى عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُوْمًا مَّحْسُوْرًا‏

(உலோபியைப் போல் எதுவும் வழங்காது) உம் கையை உம் கழுத்தில் கட்டப் பட்டதாக்கிக் கொள்ளாதீர்; அன்றியும், (அனைத்தையும் செலவழித்து உம் கையை) ஒரே விரிப்பாக விரித்து விடாதீர்; அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், (கையில் எதுவுமில்லாது) துக்கப்பட்டவராகவும் அமைந்து விடுவீர்.(அல்குர்ஆன் : 17:29)

يٰبَنِىْۤ اٰدَمَ خُذُوْا زِيْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْا‌  اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ‏

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.    (அல்குர்ஆன் : 7:31)

وَالَّذِيْنَ اِذَاۤ اَنْفَقُوْا لَمْ يُسْرِفُوْا وَلَمْ يَقْتُرُوْا وَكَانَ بَيْنَ ذٰلِكَ قَوَامًا‏

இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.(அல்குர்ஆன் : 25:67)

وَاٰتِ ذَا الْقُرْبٰى حَقَّهٗ وَالْمِسْكِيْنَ وَابْنَ السَّبِيْلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيْرًا‏

இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமை (பாத்தியதை)களைக் கொடுப்பீராக; மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக!) வீணாகப் (பொருளை) விரையஞ் செய்யாதீர்.(அல்குர்ஆன் : 17:26)

اِنَّ الْمُبَذِّرِيْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّيٰطِيْنِ‌  وَكَانَ الشَّيْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا‏

நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.(அல்குர்ஆன் : 17:27)

  اِنَّ اللّٰهَ لَا يَهْدِىْ مَنْ هُوَ مُسْرِفٌ كَذَّابٌ‏

 நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.”(அல்குர்ஆன் : 40:28)

மூன்று வகையினர்

பொதுவாக பொருளாதாரத்தை கையாள்வதை வைத்து மனிதர்களை மூன்று வகையினராக பிரிக்கலாம்.

முதல்வகையினர்

பொருளாதாரத்தை வைத்திருந்தும் செலவழிக்கவேண்டிய இடத்தில் செலவு செய்யாதவன் இவனே بخیل கஞ்சன்,உலோபி ஆவான்.

இரண்டாம்வகையினர்;

பகட்டு,படோடாபத்திற்கு தேவையற்ற செலவினங்களை செய்பவன் இவனை ஊதாரி,வீண்விரயம் செய்பவன் என்பர்.

மூன்றாம்வகையினர்;

அவசியத்தேவைக்கு செலவு செய்பவன்,தன் சுயத்தேவைக்கும் சரியான முறையில் செலவிடுபவர்.

இம்மூன்று பிரிவினரில் இறைவனின் நேசத்தைப் பெற்றவர் மூன்றாம்பிரிவினரே காரணம் இவர்கள் தன் பொருளில் கஞ்சத்தனமும் செய்வதில்லை,வீண்விரயமும் செய்யமாட்டார்கள்.

நவீன கண்டுபிடிப்புகள்.

நவீன கண்டுபிடிப்புகள் பெருகி வரும் இன்றைய விஞ்ஞானயுகத்தில்,மக்களிடம் நுகர்வு மோகம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது.எதையும் கவர்ச்சிகரமான விளம்பரத்தால் விற்றுவிடலாம் என்கிற வியாபார யுக்தியில் மக்கள் வீழ்ந்துவிடுகின்றனர்.

சிறு குழந்தைகளுக்கு வாங்கித்தரும் சாக்லேட்,விளையாட்டு சாதனங்கள் தொடங்கி ஓட்டல்கள்,மால்கள்,சூப்பர்மார்கெட்கள் என எல்லா இடங்களிலும் மக்களை ஈர்ப்பதற்காக செய்யப்படும் விளம்பரங்களைப்பார்த்து நாம் ஏன் வாங்குகிறோம்?எதற்கு வாங்குகிறோம் என்கிற எந்த சிந்தனையும் இல்லாமல் பொருளைவாங்கி பணத்தை விரயம் செய்கின்றனர்.

இக்கால நாகரீக உலகில் மனிதனுக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகளும், உபயோகிக்கும் பொருள்களும் ஏராளமாகப் பெருகியிருக்கின்றன. விதவிதமான ஆயத்த ஆடைகள், (Ready mades); கலைநயம் மிக்க சேலைகள்! கண்கவரும் ஆபரணங்கள்! கவர்ச்சிகரமான அலங்காரப் பொருட்கள், பலவகையான வீட்டு உபயோக சாதனங்கள், பெண்களின் அழகை மெருகூட்டும் பொருட்கள்! இன்னும் விதவிதமான வாகனங்கள், இருசக்கர ஊர்திகள், கணிணி வகைகள், புதிது புதிதாக விற்பனைக்கு வரும் அலைபேசிகள்! ஆக இப்படி லட்சக்கணக்கான பொருட்களை மக்கள் பெரும் சூப்பர் மார்க்கெட்டுகளிலும், பெரும் கடைகளிலும் மற்றும் சிறிய கடைகளிலும் தினந்தோறும் வாங்கிச் செல்கிறார்கள். இப்படி குவித்தும், அடுக்கியும், ஷோ கேஸ்களில் அலங்கரித்தும் வைக்கப்பட்டுள்ள பொருள்களில் மக்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படுபனவற்றையும், அவசியமானவற்றையும்தான் வாங்குகிறார்களா? என்றால் நிச்சயமாக இல்லை என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். அமெரிக்காவில் 20 பேரில் ஒருவர் என்ற விகிதத்தில் ஆண்களும் சரி பெண்களும் சரி தேவையில்லாமலேயே எண்ணற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் மனோநிலையை உடையவர்களாக இருக்கிறார்கள். இன்னுமொரு புள்ளிவிவரப்படி அமெரிக்காவில் 17 மில்லியன் நபர்கள் இப்படிப்பட்ட பொருட்களை தேவையின்றி வாங்கிக் குவிக்கும் கட்டுப்பாடற்ற மனோயிச்சையால் துன்பமும் அவதியும் படுகிறார்கள். இம்மனநிலையை ‘வாங்கிக் குவிக்கும் மனஅழுத்த சீர்கேடு’ (compulsive shoping disorder) என்றும், ‘பொருள் வாங்குதலில் தேட்டமுடையவன்’ (shopaholic) என்றும் அழைக்கிறார்கள்.

சமீபத்தில் எனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கு மூலையில் ஓர் உடற்பயிற்சி இயந்திரத்தை மூட்டை கட்டி வைத்திருந்தனர். ஏன் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தாமல் வைத்திருக்கிறீர்கள் எனக் கேட்டேன்.

''இது ஆன்லைன் மூலம் ஒரு பொருள் வாங்கியபோது ஆஃபர் விலையில் கிடைத்தது. வீட்டு உபயோகப்பொருள் வாங்க ஆன்லைனில் தேடியபோது, அந்தப் பொருளின் விலையோடு கொஞ்சம் கூடுதலாகப் பணம் கட்டினால் இந்த இயந்திரமும் தருவதாகச் சொன்னார்கள். எனவேதான் வாங்கினோம். ஆனால், வாங்கிய நாளிலிருந்து இதைப் பயன்படுத்தவே இல்லை'' என்றனர். தேவைப்படாத பொருளுக்கு எதற்குப் பணத்தை விரயம் செய்தீர்கள் என்றால், சரியான பதில் இல்லை.

இதைப்போல இன்னொரு அனுபவமும் சமீபத்தில் கிடைத்தது. நண்பர் ஒருவரது வீட்டுக்குச் சென்றிருந்தபோது அவர் மனைவி ஒரு தையல் இயந்திரம் வாங்கி வந்திருந்தார். இத்தனைக்கும் அவருக்கு தையல் தொழில் தெரியாது. இனி, தையல் கலையைக் கற்றுக்கொள்ளப் போகிறீர்களா என்று கேட்டால், இல்லை என்று சொன்னார்கள். பிறகு ஏன்தான் இந்த தையல் இயந்திரத்தை வாங்கினீர்கள் என்று கேட்டேன். ''எனது தோழி ஒருத்தி வைத்திருக்கும் எல்லா பொருட்களும் நானும் வைத்திருக்கிறேன். அவளுக்கு தையல் தெரியும், எனக்கு தையல் தெரியாது, என்றாலும் அவள் வாங்கிவிட்டாள் என்பதற்காக நானும் வாங்கினேன்'' என்றார். இந்தப் பதிலை கேட்டபோது எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

நமது பொருளாதாரப் பழக்கவழக்கம் சமீப காலங்களாக மிகப் பெரிய மாற்றம் கண்டுவருகிறது என்பதைத்தான் இந்த இரு சம்பவங்களும் எடுத்துச் சொல்கின்றன. நுகர்வு மோகம் அதிகரித்து வருவதுதான் இந்த மாற்றத்துக்குக் காரணம் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். மேலும், மக்களின் சேமிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது என்கின்றன புள்ளிவிவரங்கள்.

தீவிரமான நுகர்வு பழக்கத்தின் விளைவு என்னவாகிறது? வாங்குகிற பொருள் நமக்குப் பயன்படுமா என்பது குறித்து சிந்திப்பதில்லை. அதற்குக் கொடுக்கும் விலை சரியானதுதானா என்பதை ஆராய்வதும் இல்லை. எனக்குப் பிடித்திருக்கிறது, நான் செய்கிறேன் என்கிறது இந்தத் தலைமுறை.

நமது பொருளாதாரப் பழக்கவழக்கம் பெருமளவில் சேமிப்பை அடிப்படையாகக் கொண்டது. நமது மக்கள் தங்களது வருமானத்தில் சேமிப்புக்கும் ஒரு முக்கியமான இடத்தை ஆரம்பக் காலந்தொட்டே கொடுத்து வருகின்றனர். இதைக் குடும்பச் சேமிப்புப் பழக்கம் என்பார்கள்.

இந்திய பொருளாதாரத்தின் முக்கியமான தூண் இந்தக் குடும்பப் பொருளாதார அமைப்புதான். எந்தப் பொருளை வாங்க வேண்டும் என்றாலும், அதன் பயன்பாடு என்ன, அது எவ்வளவு நாட்களுக்கு உழைக்கும், அந்தப் பொருளுக்குக் கொடுக்கும் மதிப்பு சரியானதுதானா என்பதை ஆராய்ந்த பிறகே செலவு செய்வார்கள்.

அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது, அமெரிக்க மக்கள் அதிகக் கடன் வாங்கி, அதைத் திருப்பிக் கட்டாததுதான். அப்போது அமெரிக்காவில் பலரும் தங்கள் வருமானத்தைவிடவும் அதிகமாகக் கடன் வாங்கியிருந்தார்கள். தங்களது தேவைக்கும் அதிகமான நுகர்வு பொருட்களை வாங்கி அடுக்கி இருக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் அமெரிக்கா நிதி நெருக்கடியில் சிக்கியது.

ஆனால், அந்த நெருக்கடி நிலையிலும் இந்திய பொருளாதாரத்துக்குப் பெரிய பாதிப்பில்லை. காரணம், நமது இந்திய பொருளாதாரத்தின் சேமிப்பும் யோசித்து யோசித்துச் செலவு செய்யும் குணமும்தான்.

இதைத் தாண்டியும் இப்போதெல்லாம், ஆஃபர்களுக்காகப் பொருட்கள் வாங்குவதும், அடிக்கடி பர்ச்சேஸ்செய்வதும் ஹாபி என்கிற மாதிரி நமது செலவு பண்புகள் மாறி வருகிறது. நமது செலவுப் பழக்கம் ஏன் இப்படி மாறிவருகிறது என நிதி ஆலோசகர் சுபாஷினி அவர்களிடம் கேட்கப்பட்டது..

''ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்ப மக்களின் பொருளாதாரப் பழக்கங்களில் ஏற்படும் மாற்றம் தவிர்க்க முடியாது. என்றாலும், இப்படியான நுகர்வுப் பழக்கம் நமது இந்திய பொருளாதாரத்துக்குப் புதியது. பொருளையோ, சேவையையோ எதை வாங்கினாலும் அது நமக்கு முற்றிலும் பொருத்தமானதா, பயன்படுத்துகிறோமா என்பதை ஒன்றுக்கு இரண்டுமுறை கவனித்து வாங்கும் பண்பு நம்மிடம் உள்ளது.

அடிக்கடி ஷாப்பிங் செல்வது மனநிறைவு கொடுக்கிறது என்றாலும், அதற்காக நாம் கொடுக்கும் விலை என்ன என்பதை யோசிக்க வேண்டும். வருமானத்தில் இத்தனை சதவிதம்தான் இதர செலவுக்கு ஒதுக்க முடியும் என்றால், அந்த வரம்புக்குள் நிறுத்திக்கொள்ள வேண்டும். மனதுக்கு நிறைவு தருகிறது என்பதற்காக எல்லா வரம்புகளையும் கடந்தால் நெருக்கடிகள் வருவதைத் தவிர்க்க முடியாது.

வருமானத்தைத் திட்டமிட்டுச் செலவு செய்யும் குடும்பத்தில் இதுபோன்ற சிக்கல்கள் இருக்காது. திட்டமில்லாமல் செலவு செய்தால் அவசரத்துக்கு மருத்துவச் செலவுக்குகூட திண்டாட்டமாகிவிடும். மன திருப்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளையில், அதற்காக என்ன விலை கொடுக்கிறோம் என்பதைப் பார்க்காமலேயே வாங்கிவிட முடியாது.

#நீரை.மகேந்திரன் நன்றி;விகடன்

வீண்விரயாத்தினால் ஏற்படும் தனிமனித,சமூக வாழ்வியல் பாதிப்புகள்

வீண்விரயம் என்பது ஆரோக்கியம்,நோய்.வாலிபம்,வயோதிகம்வசதியானவர்,ஏழை, நடுத்தரவர்க்கத்தினர் என நபருக்கு நபர் மாறுப்படும்.ஒரு உணவோ அல்லது உடையோ ஒருவருக்கு வீண்விரயமாகவும்,மற்றவருக்கு அத்தியாவசியமாகவும் இருக்கலாம்.

விரயம் செய்பவன் ஷைத்தானின் தோழன்

اِنَّ الْمُبَذِّرِيْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّيٰطِيْنِ‌  وَكَانَ الشَّيْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا‏

நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.(அல்குர்ஆன் : 17:27)

விரயம் செய்பவன் இழிவானவன்,கோழை

وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُوْلَةً اِلٰى عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُوْمًا مَّحْسُوْرًا‏

(உலோபியைப் போல் எதுவும் வழங்காது) உம் கையை உம் கழுத்தில் கட்டப் பட்டதாக்கிக் கொள்ளாதீர்; அன்றியும், (அனைத்தையும் செலவழித்து உம் கையை) ஒரே விரிப்பாக விரித்து விடாதீர்; அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், (கையில் எதுவுமில்லாது) துக்கப்பட்டவராகவும் அமைந்து விடுவீர்.(அல்குர்ஆன் : 17:29)

நேர்வழியை விட்டும் தடுக்கப்பட்டவன்.

  اِنَّ اللّٰهَ لَا يَهْدِىْ مَنْ هُوَ مُسْرِفٌ كَذَّابٌ‏

நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.”(அல்குர்ஆன் : 40:28)

அல்லாஹ்வின் அன்பை விட்டும் நீங்கியவன் 

 ‌ كُلُوْا مِنْ ثَمَرِهٖۤ اِذَاۤ اَثْمَرَ وَاٰتُوْا حَقَّهٗ يَوْمَ حَصَادِهٖ‌ ‌ وَلَا تُسْرِفُوْا‌  اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ‏

 ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.(அல்குர்ஆன் : 6:141)

வீண்விரயம் ஃபிர்அவ்னின் குணம்

وَاِنَّ فِرْعَوْنَ لَعَالٍ فِى الْاَرْضِ‌  وَاِنَّهٗ لَمِنَ الْمُسْرِفِيْنَ‏

 நிச்சயமாக ஃபிர்அவ்ன் அந்த பூமியில் வலிமை மிக்கவனாக இருந்தான்; வரம்பு மீறிக் (கொடுமை செய்பவனாகவும்) இருந்தான்.(அல்குர்ஆன் : 10:83)

விரயம்செய்பவன் மறுமையில் தண்டிக்கப்படுவான்

وَكَذٰلِكَ نَجْزِىْ مَنْ اَسْرَفَ وَلَمْ يُؤْمِنْ بِاٰيٰتِ رَبِّهٖ‌ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَشَدُّ وَاَبْقٰى‏

ஆகவே, எவன் தன் இறைவனுடைய வசனங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாமல், வரம்பு மீறி நடக்கின்றானோ அவனுக்கு இவ்வாறுதான் நாம் கூலி கொடுப்போம்; மேலும் மறுமையின் வேதனை மிகவும் கடினமானதும் நிலையானதுமாகும்.(அல்குர்ஆன் : 20:127)

வீண்விரயம் அழிவிற்கு காரணமாகும்

ثُمَّ صَدَقْنٰهُمُ الْوَعْدَ فَاَنْجَيْنٰهُمْ وَمَنْ نَّشَآءُ وَاَهْلَكْنَا الْمُسْرِفِيْنَ‏

பின்னர், (நம்) வாக்குறுதியை அவர்களுக்கு நாம் நிறைவேற்றினோம்; அவ்வாறு நாம் அவர்களையும், நாம் நாடியவர்களையும் காப்பாற்றினோம்; ஆனால் வரம்பு மீறியவர்களை நாம் அழித்தோம்.(அல்குர்ஆன் : 21:9)

வீண்விரயம் செய்பவன் நரகம் செல்லத் தகுதியானவன்

 وَاَنَّ الْمُسْرِفِيْنَ هُمْ اَصْحٰبُ النَّارِ‏

 நிச்சயமாக வரம்பு மீறியவர்கள் நரக வாசிகளாகவே இருக்கிறார்கள்.(அல்குர்ஆன் : 40:43)

வீண்விரயம் சமூக பிரச்சனைககளூக்கு காரணமாக அமையும்

وَلَا تُطِيْعُوْۤا اَمْرَ الْمُسْرِفِيْنَۙ‏

“இன்னும், நீங்கள், வரம்பு மீறியோரின் கட்டளைக்கு வழிப்படாதீர்கள்.(அல்குர்ஆன் : 26:151)

الَّذِيْنَ يُفْسِدُوْنَ فِى الْاَرْضِ وَ لَا يُصْلِحُوْنَ‏

“அவர்கள் பூமியில் குழப்பம் உண்டாக்குவார்கள்; நன்மை செய்ய மாட்டார்கள்” என்றுங் கூறினார்).(அல்குர்ஆன் : 26:152)

வறுமையை உண்டாக்கும் வீண்விரயம்.

 قال امیر المومنین عمر رضي الله عنه ; سَبَبُ الفَقر الِاسراف

உமர் (ரலி)அவர்கள் சொன்னார்கள்;வறுமையை உன்டாக்கும் காரணம், வீண்விரயம்.

வீண்விரயம் வாழ்வாதாரத்தை குறைக்கும்.

ஹழ்ரத் அலீ(ரலி)அவர்கள் சொன்னார்கள்;வீண்விரயம் பொருளாதாரத்திலும், வாழ்வாதாரத்திலும் குறைவை உண்டாக்கும்.வீண்விரயம் அறிவீனர்களின் செயலாகும்.

வீண்விரயம் ஆரோக்கியத்தை கெடுக்கும்

ويقول عمر رضي الله عنه: إياكم والبطنة في الطعام والشراب، فإنها مفسدة للجسد، مورثة للسقم، مكسلة عن الصلاة، وعليكم بالقصد فيهما، فإنه أصلح للجسد، وأبعد عن السرف، وإن الله تعالى ليبغض الحبر السمين، وإن الرجل لن يهلك حتى يؤثر شهوته على دينه.

வயிறுபுடைக்க உண்பதையும்,பருகுவதையும் விட்டும் உங்களை எச்சரிக்கிறேன்.அது உடலை கெடுக்கும்,நோயை உண்டாக்கும்,வணக்கவழிப்பாடு செய்வதை விட்டும் சோம்பேறிதனத்தை உண்டாக்கும்.

வீண்விரயத்தை தவிர்ப்பதற்கான வழிகள்

- இஸ்லாமிய வகுத்தளித்த வாழ்வியல்  முறையை பின்பற்றுவது.

- பொருளாதாரம்,சொல்,செயல் என அனைத்திலும் வீணானவற்றை தவிர்த்தல்.

- எளிமை மற்றும் நடுநிலை பேணுவது.

- நுகர்வுக்கும்,உற்பத்திக்கும் இடையிலான விகிதாச்சாரத்தை கவனித்து பொருளாதாரத்தை கையாள்வது.

- காட்சிக்கு ஆடம்பரமாக செலவு செய்து மற்றவர்களுடன் போட்டி போடாமல், எளிமையை கடைபிடிப்பது.

- வாழ்வில் எளிமை,எண்ணத்தில் பணிவு இவ்விரண்டும் விரயத்தை தடுக்கும்.பெருமை,ஆடாம்பரம் வீண்விரயத்தை தூண்டும்.

- அல்லாஹ்  நமக்களித்த பொருளாதாரம் நமக்குறியது  மட்டுமல்ல, அதில் ஏழை,எளியோர்க்கும் பங்குண்டு என்பதை உணர வேண்டும்

வீண்விரயத்தை (ஆடம்பரத்தைத்) தவிர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்.

-முதலில் இது ஷைத்தானின் தூண்டுதல்,விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் சகோதிரர்கள் என்கிறது திருமறை.

- வாழ்வாதாரத்தில் பரகத் அபிவிருத்தி.

- அடுத்தவரிடம் தேவையாகாமல் இருப்பது.

- வீண் செலவுகளைத் தவிர்ப்பதன் மூலம், பகட்டு,பெருமையைத் தவிர்க்கலாம்.

-பேராசை பிறர் உள்ளத்தில் எழுவதில்லை.

- நாம் நம் சக்திக்கு ஏற்ப செலவு செய்தால், இதயம் பணிவு மற்றும் நன்றியுடன் இருக்கும்.

- வீண் செலவுகளைத் தவிர்ப்பதன் மூலம், சமூகத்தில் தீமைகள் பரவுவதையும் தவிர்க்கலாம்.

- அல்லாஹ்வை நெருங்குவதற்குச் சிறந்த வழி, அளவாகச் செலவு செய்வதும், அளவோடு இருப்பதும்தான்.

- வீண் செலவுகளைத் தவிர்ப்பதன் மூலம், அல்லாஹ்வின் வெறுப்பைத் தவிர்க்கிறோம்.

- வீண் செலவுகளைத் தவிர்ப்பதன் மூலம், நாம் மனோஇச்சையிலிருந்து விடுபடுகிறோம்.

- அல்லாஹ்வின் நல்ல அடியார்களில் கணிக்கப்படுவார்.

- அதிகப்படியான செல்வம் அல்லாஹ்வின் அடியார்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே செலவிடப்படுகிறது.

அளந்து செலவு செய்.

வீண் விரயம் செய்வதை அல்லாஹ் வன்மையாக கண்டிக்கிறான். செல்வத்தை அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம்; ஏனென்றால் மிதமிஞ்சி செலவு செய்வோர் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ தான் இறைவனுக்கு நன்றி செலுத்தாது மாறு செய்தவன். (அல்குர்ஆன் 17:27)

'ஆற்றில் போட்டாலும் அளந்து போடு’ என்பது தமிழ்ப் பழமொழி. 'ஓடும் ஆற்றில் ஒளு செய்தாலும் தண்ணீரை வீண் விரயம் செய்யாதே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.(ஆதாரம்: அஹ்மத், இப்னுமாஜா)

இவ்வாறு அண்ணலாரின் வழிகாட்டுதல்களைப் பெற்ற இஸ்லாமிய சமூகம்தான் உண்ணும் உணவு முதல் உடுக்கும் உடை அனைத்திலும் பகட்டையும் விரயத்தையும் காட்டுகிறார்கள். குறிப்பாக அரபு நாடுகள்

துபாயில் ரமளானின் ஒவ்வொரு நாளும் 1850 டன் உணவுப்பொருட்கள் வீணாக்கப்படுகின்றதாம்..! இதுவே அபுதாபியில் 500 டன் என்ற அளவுக்கு வீணாக்கப்படுகின்றதாம்..! பொதுவாக அமீரகத்தில் ரமளானில் 15 முதல் 20 % உணவு மற்ற மாதங்களை விட அதிகம் வீணாகிறது என்கிறார்கள்.

UAE Red Crescent அமைப்பு என்ன செய்கிறது எனில், இது போன்ற தேவைக்கு மிகுதியான கைவைக்கப்படாத உணவை, பிரிக்கப்படாத ஓட்டல் உணவு ஆர்டர்களை அப்படியே எடுத்துச்சென்று தேவைப்படுவோருக்கு கொடுத்து விடுகிறதாம். இதுபோன்று கடந்த ரமளானில் மட்டும் 24,535 ஹாட் மீல்ஸ் அயிட்டங்களை தேவையுடைய ஆயிரம் குடும்பத்திற்கும் பத்தாயிரம் தொழிலாளர்களுக்கும் உடனடியாக சப்ளை செய்துள்ளதாக அந்த அமைப்பின் இயக்குனர் தெரிவிக்கிறார்.

விரயமும் ஒரு சமூக அநீதிதான்.

உணவை விரயமாக்குவது தமிழகத்தில் மட்டும் நடக்கும் நிகழ்வல்ல; உலகம் முழுவதிலும் நடக்கும் சமூக அநீதி! எத்தனையோ சிரமங்களுக்கு இடையில் உணவுக்கான பொருளை விளைவித்துத் தரும் விவசாயிக்குச் செய்யப்படும் அவமரியாதை. உணவு என்பது ஜடமல்ல... அது ஓர் உயிர்ப் பொருள். உலகில் சுமார் 70 கோடி மக்கள் இரவில் உணவு கிடைக்காமல் பசித்த வயிற்றோடு தினமும் உறங்கச் செல்கின்ற சோகமான நிலைமை ஒருபுறம் என்றால், உணவின் மொத்த உற்பத்தியில் சுமார் 20% உணவு விரயமாகிறது என்கிறது ஐநாவின் ‘உணவு விரயக் குறியீடு 2021’ ஆய்வறிக்கை.

54 நாடுகளில் மேற்கொண்ட அந்த ஆய்வின்படி, உலக அளவில் 2019-ல் 9.31 கோடி டன் அளவில் உணவுகள் விரயம் செய்யப்பட்டுள்ளன. இதில் 61% வீடுகளிலிருந்தும், 26% உணவு விடுதிகளிலிருந்தும் 13% சில்லறை விற்பனையிலிருந்தும் விரயமாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய வீடுகளில் 2019-ல் மட்டும் 6.80 கோடி டன் அளவில் உணவு விரயம் செய்யப்பட்டுள்ளது. உலகில் உணவை நுகரும் வாய்ப்புள்ள ஒரு தனிநபர் வருடத்துக்கு 74 கிலோ உணவை வீட்டிலிருந்தும், 47 கிலோ உணவைத் திருவிழாக்கள், உணவகங்கள், திருமண நிகழ்வுகள், சமூக நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறப்படும் உணவிலிருந்தும் விரயம் செய்யப்படுவதாக அந்தப் புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகிறது.

முன்மாதிரி நாடுகள்

விரயம் செய்யப்படும் உணவைத் தடுப்பதிலும் அதை மறுபடியும் பயன்படுத்துவதிலும் முன்னெடுப்புகளுக்கு முகம் கொடுக்கும் உலக நாடுகளில் டென்மார்க்கும் நெதர்லாந்தும் முன்னிலை வகிக்கின்றன. இந்த நாடுகளில் உணவுப் பாதுகாப்புத் துறையானது சமூக நிகழ்வுகளில் உணவு விரயம் செய்யப்படுவதைத் தடுக்கும் விதமாகக் கண்காணிப்புப் படைகளை அமைத்துள்ளன. விரயமான உணவை மறுபடியும் உதவும் உணவாக மாற்றும் முயற்சியில் தற்போது தென்ஆப்பிரிக்காவும் இறங்கியுள்ளது.

விரயம் செய்யாமல் இருக்க நிபந்தனையிடுவது.

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

உமர்(ரலி) 'தம்ஃக்' என்றழைக்கப்பட்ட தம் சொத்து ஒன்றை அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் தருமம் செய்தார்கள். அது ஒரு பேரீச்சந் தோட்டமாக இருந்தது. அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நான் ஒரு செல்வத்தைப் பெற்றுள்ளேன். அது என்னிடம் (இருப்பவற்றிலேயே) உயர் தரமானதாகும். எனவே, அதை தருமம் செய்து விட விரும்புகிறேன்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அதன் நிலத்தை (எவருக்கும்) விற்கக் கூடாது; அன்பளிப்பாகவும் தரக்கூடாது; அதற்கு எவரும் வாரிசாகவும் ஆக முடியாது; அதன் வருவாய் மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அதை தருமம் செய்து விடு' என்று கூறினார்கள். எனவே, உமர்(ரலி) அதை தருமம் (வக்ஃபு) செய்துவிட்டார்கள். அவர்களின் அந்த தருமம் (வக்ஃபு) அல்லாஹ்வின் பாதையிலும், அடிமைகளை விடுதலை செய்யவும், ஏழைகளுக்காகவும், விருந்தினர்களுக்காகவும், வழிப்போக்கர்களுக்காகவும், உறவினர்களுக்காகவும் வழங்கப்பட்டது. 'நிர்வாகம் செய்பவர் அதிலிருந்து பொது வழக்கப்படி (நியாயமான முறையில்) உண்பதில் அல்லது விரயம் செய்யாமல் தம் நண்பருக்கு உண்ணக் கொடுப்பதில் குற்றமில்லை' என்றும் (அது தொடர்பான ஆவணத்தில்) அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். (ஸஹீஹ் புகாரி 2764)

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

உமர்(ரலி) வக்ஃபு செய்தபோது, அதை நிர்வாகம் செய்பவர் அதிலிருந்து உண்ணலாம் என்றும் அவர் தன் நண்பருக்கு (அதிலிருந்து) பணத்தை விரயம் செய்யாமல் உண்ணக் கொடுக்கலாம் என்றும் விதிமுறைகள் நிர்ணயித்தார்கள். ஸஹீஹ் புகாரி( 2777)

- எளிமையாக  இருப்பது துன்பத்திற்கு வழிவகுக்காது

- மனிதன் சட்டவிரோதமான மற்றும் ஹராமான முறையில் பொருளீட்டுவதை தவிர்க்கிறான்.

அல்லாஹுத்தஆலா நாம் வீண்விரயம் செய்வதை விட்டும் பாதுகாத்து,நல்லோர்களாக வாழச்செய்வானாக!ஆமீன்...


வெளியீடு : செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

No comments:

Post a Comment