பொருளாதாரம் அல்லாஹ்வின் அருள்வளங்களில் மிகப்பெரியதும்,மனித வாழ்வாதாரங்களில் மிக முக்கியமானதும் ஆகும்.
இஸ்லாமிய மார்க்கத்தில் ஆகுமான ஹலாலான வழியில் பொருளீட்டுமாறும்.
தடைசெய்யப்பட்ட ஹராமான வழியில் பொருளீட்டுவதை விட்டொழிக்குமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது.
நாளை மறுமையில் அடியானிடம் தொடுக்கப்படுகிற கேள்விக்கணைகளில் பொருளாதாரமும் ஒன்றாகும்.
عن أبي بَرْزَةَ نَضْلَةَ بن عبيد الأسلمي -رضي الله عنه- مرفوعاً: «لا تَزُولُ قَدَمَا عَبْدٍ يَومَ القِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ عُمُرِهِ فِيمَ أَفْنَاهُ؟ وَعَنْ عِلْمِهِ فِيمَ فَعَلَ فِيهِ؟ وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ؟ وفِيمَ أَنْفَقَهُ؟ وَعَنْ جِسْمِهِ فِيمَ أَبْلَاهُ؟». (رواه الترمذي)
அடியானிடம் மறுமைநாளில் அவனின் வயதை குறித்து எவ்விதம் கழித்தாய்? என்றும்,அவன் கற்ற கல்வி பற்றி அதன் படி செயல்பட்டாயா?என்றும்,அவனின் பொருளாதாரம் குறித்து அதனை எவ்வழியில் ஈட்டினாய்?எவ்விதம் செலவழித்தாய்?என்றும்,அவனின் உடலை பற்றி அதனை எப்படி வளர்த்தாய்?என்றும் கேள்விக்கேட்க்கப்படும் வரை அவனின் பாதம் (ஒரு அடிக்கூட)நகராது.
பொருளாதாரம்,அல்லாஹ்வின் அருள் மற்றும் வாழ்வாதாரமாக இருந்தாலும், அதனை பல சந்தர்ப்பங்களில் கண்மணி நாயகம் ﷺ அவர்கள் فتنہ"பிரச்சனை" "குழப்பம்"என்றும் "கவலைத்தரும் காரணி"என்றும்
"உலக அலங்காரம்"என்றும் கூறியிருப்பது அறவே பொருளாதாரத்தின் நாட்டம் கூடாது என்கிற காரணத்தினால் அல்ல.மாறாக உலகை சம்பாதிக்கும் நோக்கில் மறுமையை மறந்து ஹலால்,ஹராம் பேணாமல் மனம்போனப் போக்கில் வாழ்ந்துவிடக்கூடாது.என்பதனை உணர்த்தவேயாகும்.
இன்றைய நவீனமயமாகல் உலகமயமாக்கலின் விளைவாக மக்கள், பொருளாதாரத்தின் மீதுள்ள அபரிமிதமான பேராசையினால் ஹலால்,ஹராம் குறித்த எந்த இலட்சியமும் இல்லாமல் பொருளாதாரத்தை சேகரிக்க முயற்சிக்கின்றனர்.
தீமைகளும்,குற்றங்களும் மலிந்துவிட்ட இக்காலத்தில் மனிதகுலத்தின் பேரழிவாக வட்டி விஸ்வரூபம் எடுத்துள்ளது.
தனிநபர்,பல குடும்பங்கள் தொடங்கி பெரும் நிறுவனங்கள் மற்றும் பல நாடுகளை திவாலாக்கியிக்கிறது.
வட்டி என்றால் என்ன?
இரு நபர்கள் எடையிலும்,அளவிலும் ஒரே மாதிரி உள்ள பொருளையோ அல்லது பணத்திற்கு பகரமாக பணத்தையோ கூடுதல்,குறைவாக மாற்றிக்கொள்வதே வட்டியாகும்.
எதுவெல்லாம் வட்டி.
ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்: யாரிடமாவது சில்லறை இருக்கிறதா?' என்று மாலிக் இப்னு அவ்ஸ்(ரலி) கேட்டார்கள். அப்போது தல்ஹா(ரலி) 'என்னிடம் இருக்கிறது. என்றாலும் ஃகாபாவிலிருந்து கருவூலக் காப்பாளர் வரும்வரை தரமுடியாது!' என்றார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'தங்கத்திற்கு வெள்ளியை மாற்றிக் கொள்வது, உடனுக்குடன் மாற்றினாலே தவிர, வட்டியாகும்! தீட்டிய கோதுமைக்குத் தீட்டிய கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றினாலே தவிர! பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும். உடனுக்குடன் மாற்றினாலே தவிர! வாற்கோதுமைக்கு வாற்கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றினாலே தவிர!' என உமர்(ரலி) அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி (2134)
வியாபாரம் ஹலால்,வட்டி ஹராம்.
ۘ وَاَحَلَّ اللّٰهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبٰوا فَمَنْ جَآءَهٗ مَوْعِظَةٌ مِّنْ رَّبِّهٖ فَانْتَهٰى فَلَهٗ مَا سَلَفَ وَاَمْرُهٗۤ اِلَى اللّٰهِ وَمَنْ عَادَ فَاُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
(அல்குர்ஆன் : 2:275)
ஸதகா வளரும்,வட்டி அழியும்
يَمْحَقُ اللّٰهُ الرِّبٰوا وَيُرْبِى الصَّدَقٰتِ وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ اَثِيْمٍ
அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
(அல்குர்ஆன் : 2:276)
வட்டியை அறவே விட்டொழியுங்கள்.
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَذَرُوْا مَا بَقِىَ مِنَ الرِّبٰٓوا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.(அல்குர்ஆன் : 2:278)
அல்லாஹ்,ரஸுலோடு போர்ப்புரிய தயாரா?
فَاِنْ لَّمْ تَفْعَلُوْا فَاْذَنُوْا بِحَرْبٍ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَاِنْ تُبْتُمْ فَلَـكُمْ رُءُوْسُ اَمْوَالِكُمْ لَا تَظْلِمُوْنَ وَلَا تُظْلَمُوْنَ
இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் - முதல் - உங்களுக்குண்டு; (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள், - நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.
(அல்குர்ஆன் : 2:279)
நாளை மறுமையில் பைத்தியம் பிடித்தவானாக...
اَلَّذِيْنَ يَاْكُلُوْنَ الرِّبٰوا لَا يَقُوْمُوْنَ اِلَّا كَمَا يَقُوْمُ الَّذِىْ يَتَخَبَّطُهُ الشَّيْطٰنُ مِنَ الْمَسِّ ذٰ لِكَ بِاَنَّهُمْ قَالُوْۤا اِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبٰوا ۘ
யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்.
(அல்குர்ஆன் : 2:275)
மறுமையில் கிடைக்கும் தண்டனை.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்து நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்! ‘அவர் யார்?’ என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள் ‘ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!’ எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸமுரா (ரலி)நூல்: புகாரி-2085)
வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும் அதை எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி).முஸ்லிம்-3258 (4177)
நபியின் இறுதிப்பேருரையில் வட்டி.
நாயகம் ﷺ அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின் போது ஹஜ்ஜதுல் விதாஃவில் நிகழ்த்திய பேருரையில் வட்டியை முற்றிலும் தடைசெய்ததோடு மட்டுமல்லாமல் முதலில் தங்களின் குடும்பத்தவர்களுக்கு உரித்தான வட்டியை தள்ளுபடி செய்தார்கள்.
أَلاَ وَإِنَّ كُلَّ رِبًا فِى الْجَاهِلِيَّةِ مَوْضُوعٌ لَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لاَ تَظْلِمُونَ وَلاَ تُظْلَمُونَ غَيْرَ رِبَا الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ
அறியாமைக்கால வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டது.முதலாவதாக எனது குடும்பத்தில் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களுக்கு உரித்தான வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்கிறேன்.
ஏழு பாவங்கள்
நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ‘பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்து விடுங்கள்’ என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்களின் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும்பாவங்கள்)’ என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு) புஹாரி 6857
இறைசாபத்தை பெற்றவர்கள்.
عن عبد الله بن مسعود أن رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكله وشاهديه وكاتبه رواه إ بن ماجه
"வட்டியை உண்பவன், அதனை உண்ணக் கொடுப்பவன், அதற்கு சாட்சியம் அளிக்கும் இருவர், கணக்கு எழுதுபவன் ஆகிய அனைவரையும் நபிகள் நயாகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்" என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: இப்னு மாஜா.
வங்கிக் கடன் (Loan)
அகில உ லக அறிஞப்பெருமக்களில் 99.99% பெரும்பான்மையானவர்களின் ஏகோபித்த முடிவு;வங்கி பரிவர்த்தனைகள் அனைத்தும் வட்டியாகும்.
வங்கியில் கடன்Loon பெற்றவர் செலுத்தும் அதிகப்படியான தொகையும்,
வங்கியில் இருப்புவைத்திருபருக்கு வரும் அதிகப்படியான Interest தொகையும் குர்ஆன்,ஹதீஸில் தடைசெய்யப்பட்ட வட்டியே ஆகும்.
அகில உலக உலமாக்கள், சமகால பிரச்சனைகளுகாக ’’مجمع الفقہ الإسلامي‘‘ இஸ்லாமிய சட்டங்களின் கூட்டமைப்பு என்கிற பெயரில் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட கூட்டங்களின் முடிவு "வங்கி பரிவர்த்தனை"அனைத்துமே வட்டியாகும் ஹராமாகும்.
இந்திய துணைகண்டத்தில் உலமாக்களின் ஏகோபித்தமுடிவும் இதுவே ஆகும்.
"பிக்ஹ் அகாடமி"எனும் பெயரில் புதுதில்லியில் நடத்தப்பட்ட பல்வேறு கூட்டங்களில் இதுவே இறுதி முடிவானது.
தங்களை பரந்த சிந்தனையாளர்களாக கருதும் எகிப்திய உலமாக்களும்,வங்கிகளில் கடன் வாங்குவதும், தற்போதைய முறையின் கீழ் வைப்புத் தொகைக்கு வட்டி வசூலிப்பதும் சட்ட விரோதமானது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.
ஆக அகில உலக உலமாக்களின் ஏகோபித்த தீர்ப்பு:தற்கால வங்கியியல் பரிவர்த்தனை அனைத்தும் வட்டியாகும்,சட்டப்படி ஹராமாகும்.
தற்கால நவீன யுகத்தில் வட்டியை தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்?
1:- வங்கியில் கடன் வாங்குவது அல்லது டெபாசிட் செய்த பணத்திற்கு வட்டி வாங்குவது கூடும் என்று ஒருவர் கூறினால், உலகம் முழுவதும் உள்ள அறிஞர்களில் 99.99% உலமாக்களின் முடிவு அது ஹராம் எனக்கூறி தவிர்க்கவும்.
2:- குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் வங்கியில் கடன் வாங்குவதும், வங்கியில் டெபாசிட் செய்த பணத்திற்கு வட்டி கட்டுவதும் ஹராம் என்று அறிஞர்கள் முடிவெடுத்துள்ளனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்., ஏனெனில் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் வட்டி பெரும் பாவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட்டிக்கு அல்லாஹ் பயன்படுத்திய கடின வார்த்தைகள் திருக்குர்ஆனில் மது அருந்துதல், பன்றி இறைச்சி உண்பது, விபச்சாரத்திற்கு பயன்படுத்தப்படவில்லை.
3:- நாம் உம்மத் என்று பெருமைப்படும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வட்டிக்காரர்களை சபித்துள்ளார்கள். சந்தேகத்திற்குரிய விஷயங்களைத் தவிர்க்க கற்றுக் கொடுத்துள்ளார்கள்.
4:- வங்கியில் கடன் வாங்குவதை தவிர்க்கவும், வங்கியில் கடன் வாங்காமல் உலக தேவைகளை பூர்த்தி செய்யவும், ஏதேனும் பிரச்சனைகள், சிரமங்கள் இருந்தால் பொறுமையாக இருங்கள்.
5:- வட்டியைத் தவிர்க்க வழியே இல்லாத நாட்டில் ஒருவர் இருந்தால், உங்கள் சக்திக்கேற்ப வட்டி முறையைத் தவிர்த்து விடுங்கள், அதிலிருந்து விடுபடுவதில் எப்போதும் அக்கறை கொண்டு, எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேளுங்கள்.
6:- வட்டிப் பணத்தைப் பயன்படுத்தியவர்கள், முதல் சந்தர்ப்பத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் தவ்பா செய்து, எதிர்காலத்தில் ஒரு பைசா கூட வட்டிப் பணத்தைக் உண்ணாமல், மீதமுள்ள வட்டித் தொகையை ஜகாத் தகுதியுள்ள ஒருவருக்குக் கொடுக்க வேண்டும்.
7:- ஒருவர் பழைய தங்க நகைகளை விற்று, புதிய தங்க நகைகளை வாங்க விரும்பினால், இரண்டிற்கும் தனித்தனி விலையை வசூலித்து, புதிய தங்கத்திற்கு ஈடாக பழைய தங்கத்தையும் வித்தியாசத்தையும் தரலாம். இல்லையெனில் அதுவும் ஒரு வகை வட்டிதான்.
இன்றைய பொருளாதார நிபுணர்கள் ஒப்புக்கொள்ளும் ஒன்று;
வட்டி மற்றும் வங்கியின் தற்போதைய அமைப்பு முதலீட்டாளர்களுக்கு மட்டுமே பயனளிக்கிறது, மேலும் இது பணவிக்கம் போன்ற பல குறைபாடுகளைக் ஏற்படுத்துகின்றது.
வட்டி ஏன் கொடும் பாவம் எனில்
அது حقوق اللہ இறைக்கட்டளையை மீறுவதுமட்டுமல்லாமல் حقوق العباد மனித உரிமை மீறலாக இருப்பதால் தான்.
عن عبد الله بن حنظلة غسيل الملائكة قال قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهويعلم أشد من ستة وثلاثين زنية (رواه أحمد)
"வட்டியின் ஒரு நாணயத்தை (அது வட்டியின் பொருள்தான் என்பதை) அறிந்த நிலையில் ஒருவன் உண்பது, முப்பத்தி ஆறு முறை விபச்சாரம் புரிவதை விட கடுமையான குற்றமாகும்" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழளா (ரலி) அவர்கள், நூல்: அஹ்மது.
ஒரு மனிதன் தன் வாழ்க்கைத்தரத்தை பெருக்குவதற்காக என்னென்னவோ குறுக்கு வழிகளையெல்லாம் கையாளுகின்றான் அதில் ஒன்றுதான் வட்டி.
இவ்வசனத்தில் (3:130) "பன்மடங்காகப் பெருகும் வட்டியை உண்ணாதீர்கள்" என்று கூறப்பட்டுள்ளது. இதைத் தவறாக விளங்கிக் கொண்டு "சிறிய அளவிலான நியாயமான வட்டிக்கு அனுமதி உண்டு; கொடிய வட்டி, மீட்டர் வட்டி போன்றவை தான் கூடாது" என்று சிலர் வாதிடுகின்றனர். இது குர்ஆனைப் பற்றிப் போதிய அறிவு இல்லாததன் அடிப்படையில் எழுப்பப்படும் வாதமாகும். 2:278 வசனத்தில் "வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்" என்று அல்லாஹ் கூறுகிறான். "வர வேண்டிய வட்டியில் கொடும் வட்டியைத் தவிர்த்து விட்டு சிறிய அளவிலான வட்டியை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள்" எனக் கூறாமல், "வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்" என்று பொதுவாகக் கூறுவதால் சிறிய வட்டியும், பெரிய அளவிலான வட்டியும் தடுக்கப்பட்டுள்ளது என்பதை விளங்கலாம். 2:279 வசனத்தில் "வட்டியிலிருந்து திருந்திக் கொள்பவர்களுக்கு அவர்களின் மூலதனம் மட்டுமே சொந்தம்" எனக் கூறப்படுகிறது. "மூலதனமும் சிறிய அளவிலான வட்டியும் சொந்தம்" என்று கூறப்படவில்லை. மாறாக வர வேண்டிய வட்டி அற்பமாக இருந்தாலும் அதைப் பெறாமல் கொடுத்த கடனை மட்டும் தான் வாங்க வேண்டும் என்று இவ்வசனம் கூறுகிறது. அப்படியானால் "பன்மடங்காகப் பெருகும் வட்டியை உண்ணாதீர்கள்" என்று 3:130 வசனம் கூறுவது ஏன்? பொதுவாக வட்டியின் தன்மையே இது தான். வியாபாரத்துக்கும் வட்டிக்கும் உள்ள வேறுபாடும் இது தான். அற்பமான வட்டிக்குக் கடன் கொடுத்தால் கூட நாட்கள் செல்லச் செல்ல அது பெருகிக் கொண்டே செல்லும். இரண்டு ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் வாங்கிய கடனை விட வட்டி பல மடங்கு அதிகமாகியிருப்பதைக் காணலாம். ஒரு பொருளை நாம் இலாபம் வைத்து விற்பனை செய்தால் அந்த ஒரு தடவை மட்டுமே அப்பொருள் மூலம் இலாபம் அடைகிறோம். ஆனால் ஒரு தொகையை வட்டிக்குக் கொடுத்தால் அந்தத் தொகையைத் திரும்பப் பெறும் வரை தொடர்ந்து பல தடவை இலாபம் அடைகிறோம். இதனால் தான் பன்மடங்காகப் பெருகும் வட்டி எனக் கூறப்படுகிறது. பெரிய வட்டி, கொடும் வட்டி என்ற கருத்தை இது தராது.
கந்து வட்டி கொடுமை காரணமாக தமிழகத்தில் ஒரு குடும்பம், நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தது. மனைவி மற்றும் குழந்தைகள் தீயில் கருகி உயிர் இழக்க, குடும்ப தலைவர் மட்டும் உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறார். கந்து வட்டிக்கு எதிராக பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் அரசு எடுக்காத காரணத்தால், ஒரு ஏழை குடும்பம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்று ஏராளமான சம்பவங்கள் நடந்துள்ளன.
இதற்கு நிரந்தரத் தீர்வு எங்கே கிடைக்கும்? திருக்குர்ஆனில் மட்டும் தான் இதற்குத் தீர்வு கிடைக்கும். திருக்குர்ஆனை அரசியல் மற்றும் ஆன்மீக சாசனமாகக் கொண்ட இஸ்லாத்தில் மட்டும் அதற்குத் தீர்வு இருக்கின்றது. முஸ்லிம்களின் முதல் நம்பிக்கையும், முழு நம்பிக்கையும் மறு உலக வாழ்க்கை தான்.
இந்த வாழ்க்கையை மையமாகக் கொண்டே முஸ்லிம்களின் இந்த உலக வாழ்க்கைச் சக்கரம் சுழல்கின்றது. முஸ்லிம்கள் எந்த ஒரு நல்ல காரியத்தைச் செய்தாலும் அதற்கு மறுமையில் பலன் கிடைக்கும் என்பதால் தான் செய்கின்றார்கள். அவர்கள் ஒரு தீய காரியத்தைச் செய்யாமல் விடுகின்றார்கள் என்றால் அதற்கு மறு உலக வாழ்க்கையில் தண்டனை கிடைக்கக்கூடாது என்பதால் தான் விடுகின்றார்கள்.
இன்று முஸ்லிம்கள் வங்கியில் வரவு செலவுக் கணக்கு வைத்திருக்கின்றார்கள். ஆனால் அதில் வருகின்ற வட்டியை வாங்கிக் கொள்வதில்லை. அது எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அதை உதறித் தள்ளி விடுகின்றார்கள். முஸ்லிம்கள் பிக்ஸட் டெபாசிட்டில் பணம் போடுவதில்லை. இதற்குக் காரணம் வட்டிக்கு விடுவோர் மறு உலக வாழ்க்கையில் நிரந்தர நரகத்தில் வீழ்ந்து விடுவார்கள் என்பதால் தான். இதோ திருக்குர்ஆன் கூறுகிறது.
2:275 اَلَّذِيْنَ يَاْكُلُوْنَ الرِّبٰوا لَا يَقُوْمُوْنَ اِلَّا كَمَا يَقُوْمُ الَّذِىْ يَتَخَبَّطُهُ الشَّيْطٰنُ مِنَ الْمَسِّؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ قَالُوْۤا اِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبٰوا ۘ وَاَحَلَّ اللّٰهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبٰوا ؕ فَمَنْ جَآءَهٗ مَوْعِظَةٌ مِّنْ رَّبِّهٖ فَانْتَهٰى فَلَهٗ مَا سَلَفَؕ وَاَمْرُهٗۤ اِلَى اللّٰهِؕ وَمَنْ عَادَ فَاُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதே’’ என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.(அல்குர்ஆன்:2:275.)
இதுதான் அதிகமான முஸ்லிம்கள் வங்கியிலிருந்து வருகின்ற வட்டியை வாங்க மறுப்பதற்குரிய முக்கியக் காரணமாகும். பிக்சட் டெபாசிட்டில் பணத்தைப் போட்டு சம்பாதிக்க மறுப்பதற்கும், வட்டித் தொழிலில் முஸ்லிம்கள் ஈடுபடாததற்கும் இது தான் காரணம். முஸ்லிம்கள் அறவே வங்கியிலிருந்து வட்டி வரவை வாங்குவதில்லை; பிக்ஸட் டெபாசிட்டில் பணத்தைப் போடுவதில்லை; வட்டித் தொழிலிலும் ஈடுபடுவதில்லை என்று நாம் வாதிடவில்லை.
முஸ்லிம்களிலும் வட்டியுடன் தொடர்புடையவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் மிகவும் குறைவானர்கள். அவர்கள் மறு உலக நம்பிக்கையில் அதிகப் பிடிமானம் இல்லாதவர்கள். அதனால் தான் இது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றார்கள். மற்றவர்கள் மறுமையை அஞ்சி வட்டியை விட்டு ஒதுங்கி விடுகின்றார்கள்.
அல்லாஹ் நம் அனைவரையும் வட்டியின் கொடுமையிலிருந்து பாதுகாப்பானாக! ஆமின்...
வெளியீடு : செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.
No comments:
Post a Comment