Chengaiulama.in

Wednesday, 10 August 2022

ஜும்ஆ பயான் 12/08/2021

பவள விழா காணும் இந்தியா.

சுதந்திர தினம் 75

 اِنَّ اللّٰهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتّٰى يُغَيِّرُوْا مَا بِاَنْفُسِهِمْ‌ وَاِذَاۤ اَرَادَ اللّٰهُ بِقَوْمٍ سُوْۤءًا فَلَا مَرَدَّ لَهٗ‌ وَمَا لَهُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّالٍ‏

 எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.(அல்குர்ஆன் : 13:11)

"இந்திய சுதந்திர வரலாறு,இஸ்லாமியர்களின் குருதியால் எழுத்தப்பட்டுள்ளது.

இந்நாட்டின் விடுதலைக்காக இஸ்லாமியர்கள்,தங்களின் உயிர்,பொருள்,உடமைகள் அனைத்தையும் அர்ப்பணித்தார்கள்.

தங்களின் விகிதாச்சாரத்தை விட அதிகமாக  இந்நாட்டிற்காக தங்களை அர்பணித்துக் கொண்டார்கள்.

ஏராளமான முஸ்லிம்கள் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றது மட்டுமல்லாமல், தங்கள் அன்பான நாட்டின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த தங்கள் உயிரையும் தியாகம் செய்தனர்."

இதனை சொன்னவர் ஒரு சாதாரண இந்தியரோ, ஒரு அரசியல் தலைவரோ அல்லது ஒரு முஸ்லீம் அறிஞரோ கிடையாது, மாறாக புகழ்பெற்ற பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மறைந்த குஷ்வான் சிங் அவர்களால் பேசப்பட்டது.

(இதனை 1975ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான ‘இல்லஸ்டிரேட்டட் வீக்லி’ என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.)

டெல்லியின் இந்தியா கேட் மீது சுமார் 95,300 சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன, அவர்களில் 61,945 பேர் முஸ்லிம்கள். அதாவது இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக எதிர்த்து போராடி தியாகம் செய்தவர்களில் 65% பேர் முஸ்லிம் விடுதலைப் போராளிகள்.

இப்படி இந்திய தேசிய விடுதலைக்காக தம் சதவிகிதத்தை விடவும் அதிகமாக தியாகம் செய்த இஸ்லாமியர்களின் வரலாறு மறைக்கப்படுகின்றது.

சன்னஞ்சன்னமாக வரலாற்றை மாற்றி மறக்கடிக்கப்படுகின்றது.

சச்சார் அறிக்கை

இந்தியா சுதந்திரம் பெற்று 75ஆண்டுகளாக இஸ்லாமியர்கள், ஆட்சி,அதிகாரம்,கல்வி,உயர்பதவி, பொருளாதாரம் என எல்லா துறைகளிலும் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

"இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 14% ஆக இருக்கும்போது, அவர்கள் இந்திய அதிகாரத்துவத்தில் 2.5% மட்டுமே உள்ளனர். [9] இந்திய முஸ்லிம்கள் உள்ள நிலையானது பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் நிலைமைகளுக்கும் தாழ்ந்து இருப்பதாக"  சச்சார் குழு பாராளுமன்றத்தில்2006ல் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இன்று இந்தியாவில் இஸ்லாமியர்களின் மதவழிப்பாட்டுரிமை,உணவு, வாழ்வாதாரம் தொடங்கி அவர்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கி  நாடற்ற அகதிகளாக்கும் சதிவேலைகளை கனகச்சிதமாக திட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

தங்களின் ஆட்சியில் பொருளாதார பிரச்சனை ,சட்டம் ஒழுங்கு சீர்குலைவு,எல்லைபாதுகாப்பு மந்தநிலை,ஊழல்குற்றச்சாட்டு, கருப்புப்பண விவகாரம் என பல விமர்சனங்களை மடைமாற்ற,

மக்களை ஜாதி,மத ரீதியில் பிளப்படுத்தி,ஒற்றுமையை சீர்குலைத்து நாட்டை வன்முறை காடாக்கும் சதிவேலைகள் சமுதாயத்தை சீர்குலைத்து வருகின்றன.

மதவெறியை தூண்டி,பிரிவினையை வளர்ப்பதற்காகவே ஆங்கிலேயர்கள் வரலாற்றை புனைந்தார்கள்.

அதே ஆயுதத்தை இன்று மதவெறியர்களான பாசிச சக்திகள் கையில் எடுத்திருக்கின்றார்கள்.

மிருக பலத்தோடு ஆட்சி அதிகாரம் தங்களின் கரங்களில் இருக்கும் மமதையில், இந்திய வரலாற்றை மாற்றுவோம் என்று கொக்கரிக்கின்றனர்.

இந்திய திருநாட்டில் வாழும் இஸ்லாமியர்களின் நெருக்கடியான இக்காலக்கட்டத்தில் உண்மை வரலாற்றை, மற்ற சமயத்தவருக்கும்,நம் அடுத்த சந்ததிகளான இளையசமுதாயம்,மற்றும் குழந்தைகளுக்கும் கொண்டு சேர்க்கும் பொறுப்பும்,கடமையும் நமக்கு உண்டு.

சுதந்திர வரலாறு.

ஏகாதிபத்திய வெள்ளையர்களின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த இந்தியா, சுதந்திரக்காற்றைச் சுவாசித்து 75 வருடங்கள் கடந்து விட்டன. இன்று இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு 75 -வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்ற இவ்வேளையில், இந்தியச் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அந்தத் தியாகிகளின் ஈடு இணையற்றச் செயல்பாடுகளை நினைவு கூர வேண்டியது அவசியமாகும்.

இன்று சுவாசிக்கும் இந்தச் சுதந்திரக்காற்று அவ்வளவு எளிதாக கிடைத்து விடவில்லை. வியாபாரத்திற்காக நாட்டில் நுழைந்த வெள்ளை ஏகாதிபத்திய வெறியர்கள், உள்நாட்டு பிரச்சனைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நாட்டை தங்களின் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். தாய்மண்ணை ஆக்ரமித்துள்ள அந்நியர்களிடமிருந்து நாட்டை மீட்க இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்துப் போராடினர். தேச விடுதலை என்று வரும் போது அதில், ஜாதி, மதம், இனம் என்பதற்கெல்லாம் இடம் இல்லை. வெள்ளையன் வருகைக்கு முன்னர் பல்வேறு இன, மொழி மக்களாகப் பிரிந்து வாழ்ந்திருந்த இந்தியர்கள், வெள்ளையனை எதிர்க்க, தங்களிடையிலான அனைத்து வேற்று விருப்பு, வெறுப்புகளையும் களைந்து ஓரணியில் நின்றுப் போராடினர். எனினும் எப்பொழுதும் போல் அற்பக் காசிற்காகவும் அடிமைப் பதவிக்காகவும் விலைபோன சில துரோகிகளும் நாட்டில் இருக்கவே செய்தனர்.

வரலாறு தெரியாத சமூகம் வரலாறு படைக்க முடியாது...

தனது சொந்த வரலாற்றை பற்றி அறியாதவன் தன் வாழ்க்கையை பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கின்றான்.

எனவே இம்மண்ணுக்காக நம் மக்கள் ஆற்றிய தன்னிகற்ற தியாகத்தை அறிந்து,அதனை மற்றவர்களுக்கு எடுத்துரைப்போம்.

தெற்கில் முதல் சுதந்திரப்போராட்டம்.

ஆங்கிலேயர்களுக்கெதிரான முதல் சுதந்திரப் போராட்டம் ஹைதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தான் ஆகியோரால் 1780 இல் தொடங்கப்பட்டது.

சுதந்திர போராட்டத்தில் பீரங்கிகளை பயன்படுத்தி ஆங்கிலேயரை மிரள வைத்த மாவீரன் திப்பு சுல்தான்.

மாவீரன் திப்பு சுல்தான் தலைமையில் இந்திய சுதந்திர போர் நடந்திருந்தால் இந்தியா அன்றே விடுதலை அடைந்து இருக்கும் என்று மகாத்மா காந்தி கூறினார்.

வடக்கே வங்கத்து சிங்கம் சிராஜ்-உத்-தவ்ளா.

தெற்கே தென்னகத்து வேங்கை திப்பு சுல்தான் என்றால் வடக்கே வங்கத்து சிங்கம் சிராஜ்-உத்-தவ்ளா...

ஆங்கிலேயர் வணிகம் செய்ய வந்த காலந்தொட்டே அவர்களை ஆங்காங்கே எதிர்த்துக் கொண்டிருந்தவர்களில் முஸ்லிம்கள், முஸ்லிம் மன்னர்கள் கணிசமாக இருந்தனர். ஆங்கிலேயருக்கு நாட்டை ஆளும் எண்ணம் வந்துவிட்டதை முதலில் கணித்து அவர்களை எதிர்த்தவர் வங்காளத்தை ஆண்ட சிராஜ்-உத்-தவ்ளா ஆவார்.

வடக்கில் சிந்திய முதல் ரத்தம்.

வர்த்தகம் செய்ய வந்த ஆங்கிலேயருக்கு இந்த மண்ணின் வளத்தை நிரந்தரமாய் அனுபவிக்கும் எண்ணம் ஆசையாய்உருவானது. ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு இங்குள்ள ஆட்சியாளர்கள் பலர் அச்சத்துடன் அள்ளிக் கொடுத்தனர். அண்ட இடமும் கொடுத்தனர். தங்கள் ஆட்சிப்பரப்புக்குள் ஆங்கிலேயர் சுதந்திரமாய் பவனிவர பாதை அமைத்தனர். ஏனென்றால் பிரிட்டீஷாரின் துணை, தங்கள் பகை அரசுகளிடம் இருந்து தங்களைக் காக்கும் என்ற சுயநலத்தினால். நம் ஆட்சியாளர்களின் இச்சுயநலம் பிரிட்டீஷாருக்கு நிரந்தரமாய் இம்மண்ணை ஆள்வதற்கான எளிய வாய்ப்பாக அமைந்தது.

இந்த காலகட்டத்தில், வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு நாடாளும் ஆசை வந்துவிட்டது என்பதை முதலில் கணித்து,ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு எதிராய் இந்த மண்ணில் முதலில் நிமிரிந்து நின்றவர்தான் வங்காளத்தை ஆண்டசிராஜ்-உத்-தௌலா.

1757-ல் ஆங்கிலேயரை அவர் சந்தித்த பிளாசிப் போர்தான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் இம்மண்ணில் நடந்த முதல் இந்திய சுதந்திரப்போர்...!  இதுவே பெரிய யுத்தம்..! இப்போரில் கைதாகும் இந்திய வீரர்களை அடைப்பதற்காக ஆங்கிலேயர் கட்டிய சிறைக்கூடத்திலேயே ஆங்கிலேயர்களைக் கைது செய்து அடைத்த மாவீரர்தான் சிராஜ்-உத்-தௌலா. 

ஆங்கிலேயரின் நாடாளும் ஆசையை முளையில் கிள்ளும் தௌலாவின் முயற்சியை முறியடிக்க பிரிட்டனிலிருந்து கடல் மார்க்கமாக வந்த ஆங்கிலப்படை கல்கத்தா துறைமுகத்தில் மிகப்பெரிய எதிர் முற்றுகையைச் சந்தித்தது. கல்கத்தா துறைமுகத்தில் ஆங்கிலேயரை எதிர்கொண்ட தௌலாவுக்கு இயற்கை மட்டும் ஒத்துழைத்திருந்தால்… இந்திய சரித்திரமே மாறியிருக்கும். ஆனால் இயற்கை ஒத்துழைக்க மறுக்க, நான்கு மணி நேரம் பெய்த கடுமையான மழையினால் தௌலா படையின் வெடிமருந்துகள் நனைந்தன. அவரது முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

பிரிட்டிஷ் எதிர்ப்பில் சிந்திய முதல் இந்திய ரத்தம்.. வங்காளத்தில் சிராஜ்-உத்-தௌலா சிந்திய ரத்தம்தான். அதன் மீதுதான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் தன் முதல் கால்  கோளை இந்திய மண்ணில் ஊன்றியது. ஆமாம் இந்தியாவில் பிரிட்டீஷாரின் ஆட்சி முதலில் வங்காளத்தில்தான் ஏற்பட்டது.

இந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்கு.

இந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்திய விடுதலைப் போரில் தங்கள் வழிபாட்டுத் தலங்களைக் கூட வெள்ளையனுக்கு எதிராகப் பயன்படுத்திய ஒரு சமுதாயம் உண்டென்றால், அது இஸ்லாமிய சமுதாயம்தான்.

வெள்ளிக் கிழமை ஜூம்மா மேடைகள் எல்லாம் வெள்ளையனுக்கு எதிராக போர்ப் பரணி பாடின. ஜூம்மா மேடைகளில் உரமேற்றியதன் விளைவு வீரத்துடன் இந்த சமுதாயம் வெள்ளையனை எதிர்த்துப் போராடியது. வெள்ளையனின் உடை கலாச்சாரம், மொழி போன்றவை ஹராம் என பத்வாக்கள் அளித்தனர். வெள்ளையனின் அதிகார வரம்புக்கு உட்பட்ட நிலப்பரப்புகள் யுத்த பூமி  என்பது போன்ற பத்வாக்கள் வழங்கப்பட்டன.

19 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய இஸ்லாமிய அறிஞராகத் திகழ்ந்த மௌலவி காசிம் அஹ்மத் நாளோத்வி 1885ல் இந்திய தேசிய காங்கிரஸில் முஸ்லிம் உறுப்பினராகச் சேர வேண்டும் என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். வெள்ளையனை நாட்டை விட்டு விரட்டுவது மார்க்கக் கடமை என்ற அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட பத்வாக்களை (மார்க்கத் தீர்ப்புக்களை) திரட்டி நுஸ்ரத்தூல் அஹ்ரார் (விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான உதவி) என்ற பெயரில் நூல் ஒன்றையும் வெளியிட்டார்.

மௌலவி அஹ்துல்லாஹ் ஷா

இந்தியாவின் முதல் ஆங்கிலேயர்களுக்கெதிரான போரை ஏற்பாடு செய்து வழிநடத்தியது யார் தெரியுமா? முதல் சுதந்திரப் போரை தொடங்கி வழி நடத்தியவர் மௌலவி அஹமதுல்லா ஷா என்கிற இஸ்லாமிய அறிஞர். 

அஹ்மதுல்லா ஷா இஸ்லாத்தினை பின்பற்றும் முஸ்லீமாகவும், மத ஒற்றுமையை பேனக்கூடியராகவும் இருந்தார். 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சியில், நானா சாஹிப் மற்றும் கான் பகதூர் கான் போன்றோர் இவருடன் இணைந்து போராடினார்கள்.

ஆங்கிலேயர்களால் ஒருபோதும் மௌலவியை உயிருடன் பிடிக்க முடியவில்லை. அவரைப் பிடிக்க 50,000 ரூபாய் பரிசாக அறிவிக்கப்பட்டது. கடைசியில் பாவன் சிற்றரசின் ராஜா ஜகந்நாத் சிங் வஞ்சகமாக விருந்துக்கு அழைத்தது தெரியாமல் வந்த மௌலவியைக் கோட்டைக்குள் யானையுடன் நுழைந்தவுடன் கதவுகள் சாத்தப்பட்டன. வஞ்சகத்தினை உணர்ந்து வெளியேற எத்தணிக்கும் முன்பே ராஜா ஜகந்நாத் சிங் தம்பி பல்தேவ் சிங் துப்பாக்கியால் சுட்டு கொன்றான். தலை துண்டிக்கப்பட்டு பரங்கி மாஜிஸ்திரேட்டுக்கு வழங்கப்பட்டது. எஞ்சிய உடல் துண்டு துண்டாக்கப்பட்டு தீயிலிட்டு சுட்டு பொசுக்கினர். ராஜா ஜெகந்நாத் சிங்கிற்க்கு அறிவிக்கப்பட்ட பரிசு வழங்கப்பட்டது. அடுத்த நாள், மௌலவியின் தலை கோட்வாலியில் உள்ள காவல் நிலையம் முன்பு தூக்கிலிடப்பட்டது.  1857 ல் நடைப்பெற்ற இத்துயர சம்பவத்தினை மற்றொரு புரட்சியாளர் பஸல்-உல்-ஹக் கைராபாதி சாட்சி பகற்கின்றார்.

அப் போராட்டத்தில், ஏராளமான சுதந்திரப் போராளிகள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர், அதில் 90 சதவீதம் பேர் முஸ்லிம் சுதந்திரப் போராட்ட வீரர்கள். 

முதல் சுதந்திரப் போரட்ட மங்கை பேகம் ஹஜ்ரத் மகால்

ஜான்சி ராணி தனது வளர்ப்பு மகனுக்கு ஆட்சியைப் பெறுவதற்காகப் ஆங்கிலேர்களோடு போராடினார் என்பது இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தெரியும்,                                                    ஆனால் பிரிட்டிஷ் தலைவன் சர் ஹெண்ட்ரி லாரன்சை தன் கையால் சுட்டுக்கொன்று அதற்காக சிறை சென்றவர் முதல் சுதந்திரப் போரட்ட மங்கை பேகம் ஹஜ்ரத் மகால் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

முதல் சுதந்திர உயிர் தியாகி.

பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கு எதிராக சதி செய்த குற்றச்சாட்டின் பேரில் அஷ்பகுல்லா கான் தூக்கிலிடப்பட்டார். இதனால், ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட முதல் சுதந்திர முஜாஹித் என்ற பெருமையைப் பெற்றார். தூக்கிலிடப்படும் போது அஷ்பகுல்லா கானுக்கு 27 வயதுதான்.

காங்கிரஸின் முதல் தலைவர்.

மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஒரு இஸ்லாமிய மத (ஆலிம்)அறிஞரும், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த முஸ்லீம் தலைவராகவும் இருந்தார்.

வெள்ளையனுக்கு எதிராகவும் , காங்கிரசின் தலைவராகவும் இருந்தவர் அபுல் கலாம் ஆசாத்.

வள்ளல் MAM அமீர் ஹம்சா.

MAM அமீர் ஹம்சா இந்திய தேசிய இராணுவத்திற்கு (ஆசாத் ஹிந்த் ஃபோஜ்) (INA) மில்லியன் கணக்கான ரூபாய்களை நன்கொடையாக வழங்கினார் என்பது உங்களுக்குத் தெரியுமா?. 

அவர் இந்திய தேசிய இராணுவத்தின் சுதந்திர நூலக வாசிப்பு பிரச்சாரத்தின் தலைவராக இருந்தார்.

 இப்போது இந்த சுதந்திரப் போராட்ட வீரரின் குடும்பம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் மிகவும் வறுமையில் வாடுகிறது.

வள்ளல் அப்துல் ஹபீப் யூசுப் முர்பானி.

வள்ளல் அப்துல் ஹபீப் யூசுப் முர்பானியை இந்தியர்களுக்குத் தெரியாது. இந்திய தேசிய ராணுவத்துக்கு 1 கோடி ரூபாய் முழுவதையும் நன்கொடையாக வழங்கியவர் இவர்தான். அந்தக் காலத்தில் ஒரு கோடி ரூபாய் என்பது ஒரு சிறிய தொகை அல்ல. 

வள்ளல் அப்துல் ஹபீப் யூசுப் முர்பானி தனது செல்வம் மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்திற்கு நன்கொடையாக வழங்கினார். 

சுபாஷ் சந்திரபோஸ் படையில் முஸ்லிம்கள்

ஷாநவாஸ் கான் ஒரு சிப்பாய், அரசியல்வாதி மற்றும் இந்திய தேசிய இராணுவத்தின் தலைமை அதிகாரி மற்றும் தளபதி. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய சுதந்திர இந்தியாவின் நாடுகடத்தப்பட்ட அமைச்சரவையில் 19 உறுப்பினர்களில் 5 பேர் முஸ்லிம்கள். 

கொடையாளி பி அம்மாள்

பி அம்மாள் என்ற முஸ்லிம் பெண் சுதந்திரப் போராட்டத்திற்காக 30 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான நன்கொடையை வழங்கியிருந்தார்.

கள்ளுக்கடை எதிர்ப்பு போராட்டம்

கள்ளுக்கடைகளுக்கு எதிரான மகாத்மா காந்தியின் தர்ணா மற்றும் உள்ளிருப்புப் பிரச்சாரத்தில் 19 பேர் மட்டுமே கலந்து கொண்டனர், அவர்களில் 10 பேர் முஸ்லிம்கள்.

மன்னர் பஹதூர்ஷா

கடைசி முகலாய இளவரசரான பஹதூர் ஷா ஜாபர், இந்தியாவின் சுதந்திரத்திற்காக மிகுந்த வீரியத்துடனும் தீவிரத்துடனும் போராடிய முதல் இந்தியர் ஆவார். அவர்களின் மீது ஆங்கிலேயர்கள் 1857ல் தேசத்துரோக வழக்கில் கைது செய்து ரங்கூன் சிறையில் அடைத்தனர்.ஆயுள் தண்டனை கைதியாக இறுதி வரை சிறையில் இருந்து அங்கேயே மரணித்தார்.

"இன்று நாங்கள் அனுபவிக்கும் சுதந்திரம் உன் தியாகத்தால் உதித்தது "பஹதூர்ஷாவின் கல்லறையில் முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தி எழுதிய வாசகம்.

மருதநாயகம்.

தமிழகத்தில்  வெள்ளையனுக்கு எதிராக 7 வருடம் தொடர் போர் செய்து வெள்ளையர்களின் சாம்ராஜ்ஜியத்தின் மிரள வைத்தவன் மாவீரன் இஸ்மாயில் மருதநாயகம் கான் சாஹிப் ஆவார்.

ஃபக்கீர் முகமது ரவுத்தர்

ஆங்கிலேயர்களுக்கெதிராக இந்திய கப்பற்படையை தோற்றுவித்த முதல் மாலுமியாக வ.உ.சிதம்ரனார் பிள்ளை என்பவரை  நாம் அனைவரும் அறிவோம்.  ஆனால் இந்த கப்பலை நன்கொடையாக வழங்கிய கப்பலுக்கு சொந்தக்காரர் ஃபக்கீர் முகமது ரவுத்தர் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். 

வ உ சி கைது செய்த வெள்ளையனிடம்  வ உ சி யை விடுதலை செய் என்று போராடி வெள்ளையன் துப்பாக்கி சூட்டால் உயிர் நீத்தவர் முகமது யாசின் என்ற இஸ்லாமியர்.

கொடிகாத்த குமரன்

கொடிகாத்த குமரன் அவரோடு சேர்ந்து கொடியை பிடித்து சிறை சென்ற முஸ்லிம்கள் அப்துல் லத்தீப், அக்பர் அலி , மைதீன்கான் . அப்துல் லத்தீப் , அப்துல் ரஹீம், வாவு சாகிப் , ஷேக் பாபா சாகிப் ஆகியவர்கள்.

வரலாற்று திரிப்பு

இந்திய விடுதலை போராட்ட காலத்தில் இந்த ஒற்றுமை இன்னும் வலுவடைந்தது. இந்து, முஸ்லிம், கிருத்துவம், சீக்கியம், பார்சி என அனைத்து மதங்களை பின்பற்றுவர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டார்கள்.

குறிப்பாக முஸ்லிம்கள் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பம்தொட்டு விடுதலை கிடைக்கும்வரை தனது மக்கள் தொகைக்கு மேலான அளவில் மிகப்பெரிய பங்களிப்பை செய்திருக்கிறார்கள். ஏனோ பலரது தியாகங்கள் வரலாற்றில் பொறிக்கப்படவில்லை. சில வரலாறுகள் முஸ்லிம்களுக்கு எதிராகவே பதிவு செய்யப்பட்டுள்ளன.

உதாரணமாக : “History of Freedom Struggle in India” என்ற நூலில் மாப்பிள்ளை புரட்சி பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “மாப்பிள்ளை கிளர்ச்சி ஒரு சுதந்திர போராட்ட கிளர்ச்சியே அல்ல. அது மதக்காழ்ப்புணர்ச்சி காரணமாக முஸ்லிம்கள் ஏற்படுத்திய கலவரம். மேலும்

காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தை கேரளாவில் பின்னடையைச் செய்தது இக்கிளர்ச்சியே. அது மட்டுமல்லாமல் மலபார் முஸ்லிம்களும், மதவாதிகளும், சந்தர்ப்பவாதிகளும் இந்துக்களைக் கூட்டம் கூட்டமாக படுகொலை செய்தார்கள் –மதமாற்றம் செய்தார்கள் – இந்துப் பெண்களைக் கற்பழித்தனர் – இந்துக்களின் உடைமைகளைக் கொள்ளையிட்டனர் – வீடுகளை தீயிட்டனர்” என்று மாப்பிள்ளை கிளர்ச்சியை தவறாக மதிப்பீடு செய்கிறது.

ஆனால் இந்திய மண்ணின் விடுதலைக்காக தென் இந்தியாவில் நிகழ்ந்த மாபெரும் புரட்சிதான் மாப்பிள்ளை புரட்சி. கேரளாவின் மலபார் மாப்பிள்ளை முஸ்லிம்கள் ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த இப்புரட்சியை ஒடுக்க ஆங்கில அரசு மாப்பிள அவுட்ரேஜ் சட்டம், மாப்பிள்ளை கத்திச் சட்டம் போன்றவற்றை இயற்றி மலபார் முஸ்லிம்கள் மீது அடக்குமுறையை திணித்தது. இதில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். மகாத்மா காந்தியடிகள் ஆதரித்த கிலாபத் இயக்கத்தின் எழுச்சியில்தான் மாப்பிள்ளை கிளர்ச்சி உருவாயிற்று.

இம்மாபெரும் தியாக வரலாற்றை தவறாக சித்தரித்த நூலுக்கெதிராக உண்மை வரலாற்றை பதிவு செய்யாமல் முஸ்லிம் சமூகம் இருந்து வருவது துரதிஸ்டவசமானது.

அதேபோல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருத துணைத் தலைவர் டாக்டர். ஹரி பிரசாத் சாஸ்திரி எழுதிய ஒரு வரலாற்று நூலில் இப்படி ஒரு திரிபு. “திப்பு சுல்தான் 3000 பிராமணர்களை இஸ்லாத்தில் இணையப் பலாத்தகாரம் செய்தபோது, அவர்கள் அனைவரும் தற்கொலை செய்துகொண்டார்கள்”. இந்த நூலைத்தான் அன்று ராஜஸ்தான், பிஹார், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், ஒரிசா, வங்காளம் போன்ற மாநிலங்களில் பாடத்திட்டத்தில் வைத்திருந்தார்கள். இதை படித்த திப்பு சுல்தான் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த பி.என்.பாண்டே அதிர்ந்தார். இதற்கான ஆதாரம் என்னெவென்று டாக்டர். ஹரிபிரசாத் சாஸ்திரிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினார். பல கடிதத்திற்கு பிறகு அவரிடம் இருந்து பதில் வந்தது. “மைசூர் கெசட்டில் எடுத்தேன்” என்று..... ........

உடனே மைசூர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பிஜேந்திர நாத்ஸீல் அவர்களுக்கு இந்த செய்தி உண்மைதானா, கெசட்டில் அப்படித்தான் இருக்கிறதா என வினவ, அவரும் ஆராய்ந்து அலசிவிட்டு இதுமாதிரி சம்பவம் எதுவும் கெசட்டில் இடம்பெறவில்லை என்று பதில் தருகிறார்.

இந்த ஆதாரங்களையெல்லாம் திரட்டிக்கொண்டு பல மாநிலங்களில் பாடத்திட்டத்தில் இருந்த அந்த பொய்யான வரலாற்று பிழையை நீக்க வைக்கிறார் பி.என்.பாண்டே. இது சில உதாரணங்கள்தான். இதுபோன்று எத்தனையோ சம்பவங்கள் வரலாற்றில் தவறாக பதிவு

செய்யப்பட்டுள்ளன. இதில் ஒரு வருத்தம் என்னவென்றால் இதுபோன்ற வரலாற்று திரிபுகளுக்கு எதிரான குரல் முஸ்லிம்கள் தரப்பில் இருந்து எழுவதில்லை. நடுநிலையான

ஆய்வாளர்களிடமிருந்து மட்டுமே எழுகின்றன.

இஸ்லாமியர்கள் சுதந்திரப் போராட்டத்தில் செய்த தியாகங்களை ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுத முடியும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மதவெறி, தீவிரவாத, பாசிச சக்திகள் இந்த உண்மையையும் யதார்த்தத்தையும் சாதாரண இந்தியர்களின் கண்களிலிருந்து மறைத்துவிட்டனர்,

இது மட்டுமல்ல, இந்திய வரலாற்றையும் பாடப்புத்தகங்களில் திரிக்கப்பட்டுள்ளது.அரசியல் ஆதாயத்திற்காகவும்,வாக்குகளைப் பெறுவதற்காகவும், மக்களைப் பிளவுபடுத்துவதற்காகவும், வரலாறு திரித்து எழுதப்பட்டுள்து என்பதே உண்மை. 

தேசபக்தியுள்ள இந்தியர்கள், அரசியல் வாதிகளின் கபட நாடகத்திற்கு பலியாகாமல், வலுவான, நிலையான மற்றும் முற்போக்கான நாட்டிற்காக அனைத்து குடிமக்களையும் ஒன்றிணைக்க பாடுபட வேண்டும்.


வெளியீடு: செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

No comments:

Post a Comment