பொது சிவில் சட்டம்.
முன்னுரை :
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّلَا مُؤْمِنَةٍ اِذَا قَضَى اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَمْرًا اَنْ يَّكُوْنَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ اَمْرِهِمْ وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِيْنًا
மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.(அல்குர்ஆன் : 33:36)
وَمَنْ يَّبْتَغِ غَيْرَ الْاِسْلَامِ دِيْنًا فَلَنْ يُّقْبَلَ مِنْهُ وَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ
இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.(அல்குர்ஆன் : 3:85)
அல்லாஹ்வின் மார்க்கம் இஸ்லாம்.
அல்லாஹுத்தஆலா அகில உலக மக்கள் மகிழ்ச்சிகரமாக வாழ இஸ்லாம் எனும் நெறிமுறையை வகுத்துத்கொடுத்திருக்கிறான். அதேசமயம் அல்லாஹுத்தஆலா எவரையும் இஸ்லாத்தை ஏற்கும் படி நிர்பந்திக்கவில்லை.
குர்ஆன் கூறும் தெளிவான இரண்டு செய்திகள்.
1 )இம்மை மறுமை இரண்டு வாழ்விற்குமான சிறந்த வாழ்க்கை நெறி இஸ்லாம் மட்டும்தான்.
اِنَّ الدِّيْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ
நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; (அல்குர்ஆன் : 3:19)
2)மனிதர்களெல்லாம் இஸ்லாத்தை மட்டும் தான் ஏற்க வேண்டுமென்ற எந்த நிர்பந்தமும் இல்லை.
لَاۤ اِكْرَاهَ فِى الدِّيْنِۙ
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; (அல்குர்ஆன் : 2:256)
Uniform civil code.
உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடாக திகழக்கூடிய இந்தியாவை தற்பொழுது ஆளும் ஒன்றிய அரசு "Uniform Civil Code" UCC என்கிற பொது சிவில் சட்டத்தை வருகிற நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்குள்ளாக இந்திய சட்ட ஆணையத்தின் மூலம் பொதுமக்களிடமிருந்தும்,பதிவு செய்யப்பட்ட மத அமைப்புகளிடமிருந்தும் கருத்து கேட்டு , வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள்ளாக இதனை அமுல் படுத்தி,தனக்கு சாதகமாக்கிக் கொள்ள துரித கதியில் இக்கருத்துகேட்பு நடத்தப்படுகிறது.
பொது சிவில் சட்டம், சிறுபான்மையினராக வாழும் இஸ்லாமியர்,கிருஸ்துவர் ஆகியோர்களுக்கு மட்டும் எதிரான சட்டமல்ல மாறாக இந்தியாவில் வாழும் பல்வேறு மொழிபேசுவோர்,பல்வேறு இனத்தவர்,பிற்படுத்தப்பட்டோர் என அனைவருக்கும் எதிரான சட்டம் என்று சட்ட வல்லுனர்களும், நடுநிலையாளர்களும் எச்சரிக்கின்றனர்.
பொது சிவில் சட்டம்"Uniform Civil Code" UCC என்றால் என்ன?
இந்திய அரசியலமைப்பு சாசன சட்டம் இரண்டு வகைப்படும்.
1)Criminal law குற்றவியல் சட்டம். (எ.க)கொலை,கொள்ளை,திருட்டு இவற்றுக்கான தண்டனை சட்டம்
2)civil law உரிமை சம்பந்தமான சட்டம்.
(எ.க)வியாபாரம்,கடன், வாடகை இவற்றின் லாப நஷ்டத்தில் அரசாங்கம் தலையிட முடியாது.
Criminal law குற்றவியல் சட்டம்.civil law உரிமை சம்பந்தமான சட்டம்.இந்த இரண்டு சட்டங்களுக்கும் வித்தியாசம் உண்டு
Criminal law குற்றவியல் சட்டத்தை பொறுத்தவரை பாதிக்கப்பட்டவர் புகார் கொடுத்தாலும்,கொடுக்க விட்டாலும் அரசாங்கம் அதில் தலையிடும்.
civil law உரிமை சம்பந்தமான சட்டத்தை பொறுத்தவரை பாதிக்கப்பட்டவன் வழக்கு தொடுக்காத வரை அரசாங்கம் தலையிட முடியாது.வழக்குத் தொடுத்தால் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
இந்த இரண்டு சட்டங்களும் இந்திய அரசியலமைப்பு சாசன சட்டத்தில் உள்ளது.
இந்த இரண்டு சட்டங்களில் civil law உரிமை சம்பந்தமான சட்டத்தில் மட்டும் மதங்களைப் பொறுத்து சலுகைகள் வழங்கப்படுகிறது(சில சட்டங்களில் மட்டும்.எல்லா சட்டங்களிலும் அல்ல)
அவரவர் பின்பற்றும் மதத்தின் அடிப்படையில் அரசாங்கத்தால் சில சட்டங்களில் தனி உரிமை,தனி சலுகை வழங்கப்படுகிறது.
அதன்படி இஸ்லாமியர்களுக்கு ஐந்து சட்டங்களில் (civil law)தனி உரிமை,சலுகை உள்ளது.
1)திருமணம் :யாரை திருமணம் செய்வது,எந்த முறையில் திருமணம் செய்வது என்ற உரிமை.
2)திருமணம் முறிவு,தலாக் உரிமை
3)குலா என்கிற மனைவி பிரிவை வேண்டும் உரிமை
4)வாரிசு உரிமை,சொத்துரிமை
5)வக்ஃப் உரிமை,வக்ஃப் சொத்தை பயன்படுத்தும் உரிமை
இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள்,ஏதோ இந்தியாவிலேயே இஸ்லாமியர்களுக்கு மாத்திரமே தனிச்சட்டம் இருப்பது போல காட்டி இஸ்லாமியர்களின் மீது வெறுப்பை தூண்டி விட பார்க்கின்றனர்.
civil law தனிச்சட்டம் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல,பெரும்பான்மை இந்துக்களுக்கும் தனிச்சட்டம்,தனி சலுகைகள் உண்டு.
இந்துக்களுக்குள்ள தனிச்சட்டம்.
1)கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தால் வருமான வரி விளக்கு உண்டு(இந்த சலுகை சிறுபான்மை இஸ்லாமியர்,கிறிஸ்தவர் இவர்களுக்கு கிடையாது)
2)வளர்ப்பு பிள்ளையை, சொந்தப் பிள்ளையாக ஆக்கிக் கொள்ளலாம் சொத்தில் அவர்களுக்கு பங்கு உண்டு.
3)நிர்வாணமாக காட்சி தருதல்;இந்து ஜைன மதத்தில் மத உரிமைகளில் சாமியார்களுக்கு நிர்வாணமாக இருக்க சலுகை உள்ளது.
சீக்கியர்களுக்கும் civil law சிவிலில் தனி உரிமைகள் உண்டு.
1)குறுவாள் வைத்துக் கொள்ளும் உரிமை(பயங்கர ஆயுதம் வைத்துக்கொள்வது சட்டப்படி குற்றம் ஆனால் சீக்கியர்கள் குறுவாள் வைத்துக்கொள்ள தனி உரிமை உள்ளது)
2)தாடி வைத்துக் கொள்வது (இந்திய ராணுவத்தில் முதல் நிபந்தனை தாடியை மழித்து Clean Shave இருக்க வேண்டும் ஆனால் சீக்கியர்களுக்கு அதில் விதிவிலக்கு உள்ளது)
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல இந்துக்கள், ஜைனர்கள்,சீக்கியர்கள்,கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் civil law சிவிலில் தனிச்சட்டம் தனி உரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இன்று பொது சிவில் சட்டத்தைப் பற்றி பேசுவோர் இஸ்லாமியர்களுக்கு மட்டும் தனி சிறப்பு சட்டம் உள்ளது என்ற தோற்றத்தை கொண்டுவர பார்க்கிறார்கள்.
முஸ்லிம்களுக்கு எல்லா விஷயங்களிலும், சட்டம் தனி சலுகைகளை காட்டுவதாக பொதுமக்களிடம் ஒரு சித்தரிப்பை காட்டுகிறார்கள். உண்மை அதுவல்ல என்பதை நம்மை சுற்றிலும் வாழும் பொதுமக்களிடம் புரிய வைக்க வேண்டும்.
திருமண முறை, சொத்துப் பங்கீடு, வழிபாடு, வக்பு சொத்துக்கள் என இந்த நான்கில் மட்டுமே இந்த சலுகைகள் முஸ்லிம்களுக்கு தரப்பட்டுள்ளது.மற்ற அனைத்திற்கும் எல்லோருக்குமான பொது சட்டமே முஸ்லிம்களுக்கும் பொருந்துகிறது.
ஒரு கொலை குற்றத்துக்கு அனைவருக்கும் ஒரே விதமான வழக்கு தான் பதிவு செய்யப்படுகிறது. ஒரே வகையான தண்டனைத்தான் தரப்படுகிறது.
போக்குவரத்து விதிகளை மீறினால் அன்பழகனுக்கும், ஹஸனுக்கும், ஆண்டணிக்கும் ஒரே தண்டனைதான் விதிக்கப்படுகிறது.இந்த உண்மைகளை பொது மக்களுக்கு விளக்க வேண்டும்.
சிறுபான்மையினருக்கு என்று சில மதம் சார்ந்த விஷயங்களில் தனி சட்டங்கள் பல நாடுகளில் உள்ளது.பாகிஸ்தானிலும் பங்ளாதேஷிலும் இந்துக்களுக்கும், கிருத்தவர்களுக்கும் இப்படி உள்ளது.நேபாளத்தில் முஸ்லிம்களுக்கும், கிரித்தவர்களுக்கும் உள்ளது.
பெளத்த நாடுகளான மியான்மார் மற்றும் இலங்கையிலும் பிற சிறுபான்மை மதத்தினருக்கு தனி சட்டங்கள் உள்ளது.இந்த உண்மைகளை மக்களுக்கு விளக்க வேண்டும்.
நமது நாட்டில் வட நாட்டு இந்துக்களுக்கும், தென்னாட்டு இந்துக்களுக்கும் திருமண முறைகளில் மாறுபாடு உண்டு.வட கிழக்கில் வாழும் கிருத்தவர்களுக்கும், கோவாவில் வாழும் கிருத்தவர்களுக்கும் திருமண முறைகளில் மாறுபாடுகள் உள்ளது.சீக்கிய சமூகத்திலும் இப்படி மாறுபாடுகள் உண்டு.
இப்படியுள்ள முரண்பாடுகளை- சமூக கொள்கைகளை ஒரே சட்டத்தின்படி மாற்ற நினைப்பது தவறானது மட்டுமல்ல; சாத்தியமற்றதும் ஆகும்.
CRIMINAL LAW பொதுவாக உள்ளதா?
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் Criminal law குற்றவியல் சட்டம் இதில் இந்தியாவில் வாழும் எந்த மதத்தவருக்கும் சலுகை கிடையாது இந்தியா முழுக்க ஒரே சட்டம் தான் ஆனால் இந்த சட்டமே ஒரே முறையில் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா?என்றால் இல்லை என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம்.
இந்த Criminal law குற்றவியல் சட்டத்திலே பல்வேறு மாறுபாடுகள்,திருத்தங்கள் செய்யப்படுகின்றன.இதுவரை பொதுவான ஒரே நிலைக்கு வர முடியவில்லை.
(எ.க)1)விபச்சாரத் தொழில்-விபச்சார விடுதி வைப்பது தமிழ்நாட்டில் தடுக்கப்பட்ட குற்ற செயல்.
ஆனால் மும்பையில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் விபச்சாரத் தொழில்-விபச்சார விடுதி குற்ற செயல் அல்ல
2)மதுபானம் குடிப்பது -மதுக்கடை நடத்துவது-விற்பனை செய்வது-சாலையில் குடித்து திரிவது சில மாநிலங்களில் குற்றம் அல்ல ஆனால் வேறு சில மாநிலங்களில் குற்றகுமாகும்.
3)ஒரு பெண் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஆடுவது பொது இடங்களில் தடை ஆனால் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பெண்கள் நிர்வாணமாக நடனம் ஆடலாம் தடையில்லை
4)சில மாநிலங்களில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவோர் ஹெல்மெட் அணிவது கட்டாயம்.கார் ஓட்டும்போது சீட் பெல்ட் போடுவது கட்டாயம்.தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் குற்ற நடவடிக்கை அவர் மீது பாயும்.
இதுப்போன்ற பல உதாரணங்களை கூறலாம்.
இப்படி Criminal law குற்றவியல் சட்டத்திலேயே ஒரு பொது நிலைக்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டுவர முடியாத போது,"பொது சிவில் சட்டம்" பற்றி பேசுவது தேர்தலுக்கு தேர்தல் பேசும் வேடிக்கையான செய்தியாக தான் பார்க்க தோன்றுகிறது.
விட்டுக் கொடுக்க முடியாதா?
இஸ்லாமிய சமூகம் கொஞ்சம் விட்டுக் கொடுத்து இந்த ஐந்து விஷயங்களில் தேசிய நீரோட்டத்தில் கலந்தால் என்ன?ஒரே நாடு ஒரே தேசம் அதுபோல் ஒரே சட்டம் என்ற ஒற்றுமைக்கு வரலாமே?ஏன் இந்திய முஸ்லிம்கள் ஒரு பாரபட்சமான நிலையை கையாள வேண்டும் என்ற ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது.
நாம் கேட்பது என்னவென்றால் திருமணம்,தலாக்,குலா, வாரிசுரிமை,வக்ஃப் இந்த ஐந்து சட்டங்களும் இஸ்லாமியர்கள் தங்களுக்கு மத்தியில் செய்து கொள்ளும் விஷயங்களாகும் இதனால் நாட்டிற்கும்,நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும்,பிற சமூகத்திற்கும் என்ன பாதிப்பு ஏற்பட்டு விடப்போகிறது?
இன்னும் சொல்லப்போனால் அவரவரின் மத நெறிப்படி வாழ்வது இந்திய ஜனநாயகம் அனைவருக்கும் வழங்கி உள்ள தார்மீக உரிமையாகும்.
இது இன்று,நேற்று அல்ல இந்தியாவில் கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களுக்கு மேலாக நடைமுறையில் உள்ள ஒன்றாகும்.
இந்தியாவில் 800 வருடங்கள் ஆட்சி செய்த இஸ்லாமிய முகலாய மன்னர்கள்,இங்குள்ள இந்துக்களுக்கு அவர்களின் மதம் முறைப்படி வாழ முழு சுதந்திரம் அளித்தார்கள்.
முகலாயர்களுக்கு பிறகு கிறிஸ்துவ ஆங்கிலேயே 200 வருட அவர்களின் ஆட்சியில் இந்துக்கள்,முஸ்லிம்கள் அவரவரின் மத முறைப்படி வாழ தனி சிவில் சட்ட உரிமை வழங்கினார்கள்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் வந்த ஆட்சியாளர்கள் தனி சிவில் சட்டம் இருக்க எந்தத் தடையும் போடவில்லை.ஆனால் இப்போதுள்ள ஒன்றிய அரசு பொது சிவில் சட்டத்தை புகுத்த நினைப்பது,நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலே அன்றி வேறில்லை.
இது ஒருமைப்பாட்டை வேரோடு அறுக்கும் செயல் என்று சகோதர சமயத்தவர்களே பேசுகிறார்கள் என்பது நாளேடுகளிலும்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் காண முடிகிறது.
அரசியல் சாசன சட்டம் 44.
அவர்களின் இன்னொரு வாதம்;இந்திய அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டதை தானே கொண்டுவர முயற்சிக்கின்றோம்? (அரசியல் சாசனத்தில் சட்டத்தின் 44வது பிரிவில் பொது சிவில் சட்டம் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது)
பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக இவர்கள் சொல்வது இது நமது அரசியல் சட்டத்தின் 44 வது பிரிவில் உள்ளது என்பதுதான்.
இதற்கான பதில்;
இந்திய அரசியல் சாசனத்தில் ஐந்து தலைப்புகள் உள்ளது.
1)இந்தியாவின் எல்லைகள்
2)குடியுரிமை
3)பொதுவானவை
4)கொள்கை விளக்கம்
5)அடிப்படை கடமைகள்
இதில் நான்காவது தலைப்பாக உள்ள "கொள்கை விளக்கம்" என்பது அரசாங்கங்களுக்கு ஆலோசனைகளாக வழங்கப்பட்ட விஷயமாகும்.கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்ட விஷயம் அல்ல.அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டது;
ஒன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாவிட்டால் அதில் நீதிமன்றம் தலையிட்டு நடைமுறைப்படுத்த முடியும்.ஆனால் இந்த நான்காவது தலைப்பில் நீதிமன்றம் தலையிட்டு நடைமுறைப்படுத்த முடியாது.
இந்தியா ஒரு மிகப் பெரிய நாடு. சரியாகச் சொல்வதானால் மதம், மொழி, இனம் எனப் பலதிறப்பட்ட மக்கள் சமூகங்கள் வாழும்ஒரு துணைக் கண்டம் இது. இதற்குள் எல்லாவற்றிலும் கருத்தொற்றுமை சாத்தியம் இல்லை என்பதாலதான் நமது அரசியல் சட்டம் ‘அடிப்படை உரிமைகள்’ எனவும், ‘வழிகாட்டு நெறிமுறைகள்’ எனவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சில நாடுகளில்தான் இந்த ஏற்பாடு. வழிகாட்டு நெறிமுறைகளாகச் சொல்லப்பட்டவை காலப்போக்கில் அரசியல் சட்ட அடிப்படைகள் ஆக்கப்பட வேண்டும் என்பது பொருள்.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் பொது தனிநபர் சட்டம் மட்டுமின்றி வேறு பலவும் உள்ளன, அடித்தள மக்களுக்கு சட்ட மற்றும் நாடாளுமன்றங்களில் வழங்கப்பட்டுள்ள இட ஒதுகீட்டை முடிவுக்குக் கொண்டுவருதல் (334ம் பிரிவு), ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியை ஆட்சி மொழி ஆக்குதல் (343) என்பதெல்லாமும் வழிகாட்டு நெறிமுறைகள்தான். இதை எல்லாம் இன்று நடைமுறையில் சாத்தியமும் இல்லை, நியாயமும் இல்லை.
இரண்டாவது பதில்;
அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்ட எத்தனையோ விஷயங்கள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது.
கொள்கை விளக்கத்தில் 25 ஆவது பிரிவு;அவரவர் விருப்பப்படி மதத்தை பின்பற்றலாம்,அவரவர் மதப் பிரசங்கம் செய்யலாம்.
இது முழுமையாக நடைமுறையில் உள்ளதா?
45 வது பிரிவு:இந்திய அரசியல் சாசனம் துவங்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்குள்ளாக அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும்? கட்டாய கல்வி இலவச கல்வி அவசியம்.
60 வருடங்கள் கடந்தும் எத்தனையோ கிராமங்களில் அடிப்படை கல்வி கூட இல்லாமல் 30 வயதை தாண்டியவர்கள் இருக்கிறார்கள்.ஒன்றிய அரசும் இதற்கான எந்த முயற்சியையும் முழுமையாக மேற்கொள்ளவில்லை.
47வது பிரிவு;மது-போதை-நச்சுத்தன்மை உள்ள பொருட்களை இந்தியாவில் முழுமையாக தடை செய்ய வேண்டும்.
48வது பிரிவு;முழுமையான மதுவிலக்கு.மது,போதைப் பொருள்கள்,நச்சுத்தன்மை உள்ள குளிர்பானங்கள்,நச்சுத்தன்மையுள்ள உரங்கள் தடை செய்யப்பட வேண்டும்.
ஆனால் பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது.அதில் நீதிமன்றம் தலையிட்டு மதுவிலக்கை ரத்து செய்கிறது.
இப்படி நகைமுரணான எத்தனையோ விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
பொது சிவில் சட்டம் என்கிற பெயரில் இவர்கள் சொல்ல வருவது எல்லா மதத்தினருக்குமான ‘பொது தனிநபர் சட்டம்’ என்பதுதான்.
இன்னும் சரியாகக் கவனித்தால் இவர்கள் சொல்ல வருவது ‘பொது தனிநபர் சட்டம்’ கூட அல்ல. இந்துத் தனிநபர் சட்டத்தைப் பிற மதங்களின் மீது திணிப்பதுதான். அதன் மூலம் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் தனித்துவங்களையும் அடையாளங்களையும் அழிப்பதுதான் இவர்களின் நோக்கம்.. சிறுபான்மையினர் இன்று கலவரப் பட்டிருப்பதன் பின்னணியும் இதுதான்.
பொது சிவில் சட்டம்: மத அமைப்புகள், பொது மக்களிடம் கருத்துக் கேட்கும் 22-வது சட்ட ஆணையம்.
நாடு முழுமைக்கும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது தொடர்பாக பொதுமக்கள், மத அமைப்புகள் தம் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று 22வது சட்ட ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களின் போது பாஜக தேர்தல் அறிக்கைகளில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கம், அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவது மற்றும் பொது சிவில் சட்டம் ஆகியவை இடம்பெற்றன. இவற்றில் பொது சிவில் சட்டம் மட்டுமே தற்போது பாக்கி உள்ளது. இதையும் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பு அமல்படுத்த அல்லது அதற்கான முயற்சிகளில் மத்தியில் உள்ள பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக கருத்துகளைத் தெரிவிக்க விரும்புபவர்கள் சட்ட ஆணையத்துக்கு அதன் உறுப்பினர் செயலரின் மின்னஞ்சல் முகவரிக்கு தனிப்பட்ட முறையிலோ அல்லது சட்ட ஆணைய இணையதளத்தில் அதற்கென கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிலோ தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, 30 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை membersecretary--lci@gov.in என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21வது சட்ட ஆணையம் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், நாட்டில் பொது சிவில் சட்டம் அவசியம் இல்லை. தற்போதைய சூழலில் அது விரும்பத்தக்கதும் அல்ல என்று தெரிவித்தது.
185 பக்கங்கள் கொண்ட அந்த ஆலோசனை அறிக்கையில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் நாட்டில் நிலவும் பன்முகத்தன்மைக்கு மதச்சார்பின்மை முரண்பட முடியாது. நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மை என்பதை பொது சிவில் சட்டம் மூலம் சமரசம் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் அது தேசத்தின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஆகிவிடும் என்று தெரிவித்திருந்தது.
நன்றி;இந்து தமிழ் திசை நாளிதழ் 15/06/2023
ஜம்இய்யத் உலமா இ ஹிந்த்.
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக சட்ட ஆணையம் மீண்டும் கருத்து கேட்பு நடவடிக்கையை தொடங்கி உள்ளது. இந்நிலையில் ஜம்இய்யத் உலமா இ ஹிந்த் இஸ்லாமிய அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘‘பொது சிவில் சட்டம் கொண்டு வருவது, அரசியலமைப்பு சட்டத்தின் 25 மற்றும் 26வது பிரிவுகளில் இந்திய குடிமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மத சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு முற்றிலும் எதிரானது. இந்தியாவின் அரசியலமைப்பு மதசார்பற்ற அரசியலமைப்பாகும். ஒவ்வொரு குடிமகனுக்கும் முழு மத சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நபரும் அவருக்கு விருப்பமான மதத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்திய அரசுக்கு அதிகாரப்பூர்வ மதம் என்பது கிடையாது. அனைத்து குடிமக்களுக்கும் முழுமையான சுதந்திரத்தை அது வழங்குகிறது. பொது சிவில் சட்டம் அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இதனை இஸ்லாமியர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் இது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது” என குறிப்பிட்டுள்ளது.
நம் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை.
ஏன் பொது சிவில் சட்டம்"Uniform Civil Code தேவையில்லை என்பதற்கு கூறிவுள்ள முக்கிய காரணங்களில் சில...
1.) பிரிவு 25 மத நடைமுறைச் சுதந்திரத்திற்கான உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கிறது, எனவே தனிப்பட்ட சட்டங்களைப் பயிற்சி செய்வதில் அரசால் கூட தலையிட முடியாது.
2.) UCC நமது அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானது.
3.) இந்திய சட்ட அமைப்பு பன்மைத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் UCC பயன்பாடு அதன் முழுமையான அழிவை விளைவிக்கும்.
4.) இந்தியாவின் நாடாளுமன்ற முறையே வேற்றுமையில் ஒற்றுமை என்ற மாதிரியில் உள்ளது. எனவே, UCC இணையாக இருக்க முடியாது.
5.) UCC மீதான தனிநபர் சட்டங்களின் அரசியலமைப்புச் செல்லுபடியை இந்திய உச்ச நீதிமன்றம் மீண்டும் மீண்டும் உறுதி செய்துள்ளது.
உரிமைகள் பறிக்கப்படும் சமுதாயம்.
நாடு சுதந்திரம் பெற்றது முதல், படிப்படியாக முஸ்லிம்கள் எல்லா வகையிலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். கல்வி, வேலை வாய்ப்பு, அரசுப் பதவிகள் ஆகிய அனைத்துத் துறைகளிலும் அவர்கள் முற்றாக ஒதுக்கப்பட்டு விட்டனர். கலவரங்களால் அவர்களின் உயிர், உடைமைகள், கற்பு ஆகிய அனைத்தும் பறிக்கப்படுகின்றன. ஆள்வோரின் துணையுடன் இந்து வெறி சக்திகளால் பள்ளிவாசல் இடிக்கப்பட்டது. ஆட்சியாளர்களே ஒரு பள்ளியைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். தடா எனும் பெயரில் ஐம்பதாயிரம் முஸ்லிம்கள் இன்னும் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். சட்டப்படி அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் யாவும் பறிக்கப்பட்டு, அனைத்துச் சலுகைகளும் மறுக்கப்பட்டுள்ளனர். பருந்தின் வாயில் சிக்கிய கோழிக்குஞ்சு போன்ற நிலையில் நொந்து போயிருக்கின்றது முஸ்லிம் சமுதாயம்! எத்தனை உரிமைகள் மறுக்கப்பட்டாலும் முஸ்லிம்களாக வாழும் உரிமையாவது இங்கு இருக்கின்றது என்பது மட்டும் தான் அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்!
மொகலாய ஆட்சியில் சிவில் சட்டம்.
மொகலாய மன்னர்கள் இந்த நாட்டை ஆண்ட போது இந்துக்கள் தமது மதத்தின் அடிப்படையில் சிவில் சட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் நாடு சிதறிப் போகவில்லை. ஆயிரம் நாடுகளாக இருந்த பகுதிகள் ஒரு நாடாகத் தான் மாறின. இது தான் உண்மை.
வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆண்ட போதும் முஸ்லிம்களும், இந்துக்களும் தத்தம் மதத்தின்படி சில சிவில் சட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் நாடு சிதறவில்லை. இத்தகைய அணுகுமுறையினால் தான் பரந்த இந்தியாவே உருவானது. மொகலாயர்களும், வெள்ளையர்களும் மதச் சுதந்திரத்தில் தலையிட்டிருந்தால் இன்றைய இந்தியாவை நாம் பார்க்க முடியாது. இதையும் அறிவுஜீவிகள் உணர வேண்டும்.
புத்த மதத்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள தாய்லாந்து நாட்டில் முஸ்லிம் தனியார் சட்டம் உள்ளது. புத்த மத நாடு என்று பிரகடனம் செய்து கொண்ட இலங்கையிலும் கூட முஸ்லிம் தனியார் சட்டம் அமலில் உள்ளது. கிரீஸ், எத்தியோப்பியா, உகாண்டா ஆகிய நாடுகளிலும் முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் இத்தகைய சட்டங்கள் உள்ளன. இதன் காரணமாக இந்த நாடுகள் சிதறிப் போகவில்லை.
அறிவுஜீவிகளுக்கு இந்த உண்மை நன்றாகத் தெரிந்திருந்தும் இஸ்லாத்தின் மேல் அவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பொது சிவில் சட்டம் எனக் கூப்பாடு போடுகின்றனர்.
உள் நோக்கம் கொண்ட தீர்ப்புகள்.
இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்கிறார். பிறகு மற்றொரு திருமணம் செய்வதற்காக முஸ்லிமாக மாறி, திருமணமும் செய்து கொள்கிறார். முதல் மனைவி இதை எதிர்த்துத் தாக்கல் செய்த வழக்கில், “முஸ்லிம் தனியார் சட்டத்தை அந்தக் கணவர் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்’ என்று முடிவு செய்து அவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. நீதிமன்றம் அத்துடன் நிறுத்திக் கொண்டால் நாம் விமர்சிக்கப் போவதில்லை. ஆனால் இவ்வழக்கில் வாதியாகவோ, பிரதிவாதியாகவோ இல்லாத மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அன்று ஓர் உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
“அனைத்து மதத்தவர்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் ஒன்றை ஒரு வருடத்துக்குள் மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்” என்பதே அந்த உத்தரவு. இதைத் தான் நாம் விமர்சிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சீரான உரிமையியல் சட்டத்தை இந்தியா முழுவதிலும் அமல் செய்யப்படுவதற்கான முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும்” என்று அரசியல் சாசனத்தின் 44வது பிரிவு கூறுவது தான் இந்தத் தீர்ப்புக்கு அடிப்படடை.
நீதிபதிகளின் நோக்கத்தைச் சந்தேகப்படுவதா? அரசியல் சாசனம் பற்றிய சரியான விளக்கம் அவர்களுக்கு இல்லை என்பதா? என்ற ஐயத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.
இஸ்லாத்தில் தீண்டாமை இல்லை என்பதற்காக ஒரு தாழ்த்தப்பட்ட இந்து, முஸ்லிமாக மாறினால், அது பற்றிய வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தால், “இனி மேல் இஸ்லாத்திலும் தீண்டாமையைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று தீர்ப்பு வழங்குவது எவ்வளவு கேலிக்குரியதோ அந்த அளவு கேலிக்குரியதாகவே நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அமைந்துள்ளது.
அரசியல் சாசனத்தில் 44வது பிரிவு இவ்வாறு கூறுவது உண்மை தான். ஆனால் இது எந்தத் தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ளது? அந்தத் தலைப்பின் நிலை என்ன? என்பதையெல்லாம் நீதிமன்றம் கண்டு கொள்ளவில்லை.
பொது சிவில் சட்டத்தின் அபாயம்.
பொது சிவில் சட்டம் என்பது இந்திய மக்களின் ஒட்டு மொத்த உணர்வுகளுக்கும் சமாதி கட்டி விட்டு அந்த சமாதியின் மேல் எழுப்பப் பட முடியுமே தவிர மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஒரு போதும் உருவாக்கப்பட முடியாது.
நாட்டின் பெரும்பான்மையான மக்கள் மாட்டுக்கறி சாப்பிடுகிற போது மாட்டுக்கறிக்கு தடை விதிப்பது போன்ற சட்டங்கள் அடுத்த வீட்டுக்காரரை நமக்கு எதிராகத் தூண்டுமே தவிர இணக்கமாக வாழ்வதற்குரிய வழி அதுவாக இருக்க முடியாது.
இந்திய அரசியல் சாசணத்தின் வழி காட்டு நெறிகள் முதலில் நாடு முழுக்க மதுவிலக்கை அமுல் படுத்தக் கூறுகிறது. அனைத்து சாராரும், அனைத்து மதத்தவரும் எதிர்க்கக்கூடிய, சமூக நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் அழித்தொழிக்க விரும்பும் ஒரு விஷயத்தை முதலில் கையில் எடுப்பதை விட்டு விட்டு மக்களின் அடிப்படை உரிமையை பறிக்கிற ஒன்றை தேச நலனாக காட்டுவது சந்தர்ப்பவாத அரசியலின் சதிப் புத்தியாகும் இதில் நீதி மன்றங்களும் சிக்கிக் கொண்டு விட்டன என்பது தான் க்ருட் தேசத்திற்கு நேர்ந்த பெருங்கவலையாகும்.
உண்மையில் சிவில் சட்டம் என்பதற்கான சாத்தியங்கள் அறவே கிடையாது என்பதை முஸ்லிம் தலைவர்கள் 30 வருடங்களுக்கு முன்னரே தெளிவு படுத்தி விட்டனர்.
அல்லாஹு தஆலா நம் சமுதாய மக்களுக்கு தன் முழு பாதுகாப்பையும் வழங்கியருள்வானாக! ஆமின்...