Wednesday, 27 October 2021

ஜும்ஆ பயான் 29/10/2021 ஹிஜ்ரி 1443 பிறை -22

  

நபி (ஸல்) அவர்களின் சீர்த்திருத்த பணிகள்.

அல்லாஹ்வின் வாக்கு....

وَمَا كَانَ رَبُّكَ لِيُهْلِكَ الْقُرٰى بِظُلْمٍ وَّاَهْلُهَا مُصْلِحُوْنَ‏ 

(நபியே!) ஓர் ஊராரை, அவ்வூரார் சீர்திருந்திக் கொண்டிருக்கும் நிலையில் - அநியாயமாக உம் இறைவன் அழிக்கமாட்டான்.(அல்குர்ஆன் : 11:117)

நபியின் அருள்மொழி....

يَسِّرُوا ولا تُعَسِّرُوا، وبَشِّرُوا، ولا تُنَفِّرُوا

இலகுவாக்குங்கள்; சிரமத்தைக் கொடுக்காதீர்கள். மேலும் நல்லவற்றையே சொல்லுங்கள். சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்; வெறுப்பூட்டாதீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி 69)

நபியின் சமூக தீர்திருத்தம்.

நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் இப்பூலகில் அவதரித்த அவ்வேளையில் அரபகத்தில் அறியாமை இருள் சூழ்ந்திருந்தது என்கிறது வரலாறு.

ஆனால் உண்மை நிலை அரபகம் மட்டுமல்ல உலகம் முழுவதுமே அநீதம்,அநியாயம்,அட்டூழியம் எனும் இருளால் தத்தளித்துக்கொண்டிருந்தது.

இந்தியா போன்ற நாடுகளில் உயர்ஜாதி,கீழ்ஜாதி,தாழ்ந்த ஜாதி என்று  வர்ணாசிரமம் பேசும் வர்க்கபேதமும் ஜாதிவெறியும்,

மேலைநாடுகளில் வெள்ளையர்,கருப்பர் என நிறப்பாகுபாட்டை தூக்கிப்பிடிக்கும் நிறவெறியும்,

அரபகத்தில் குறிப்பாக அரபி,அஜமி எனும்(அரபியல்லாத மற்ற மொழி பேசுபவர்களை ஊமையர்கள் எனக்கூறும்) இனவெறியும்,மொழிவெறியும் பரவியிருந்த அறவே மனிதம் அற்ற காலமாக இருந்தது.

வேதக்காரர்களான (அஹ்லே-கிதாபுகளான)யூத,கிருத்துவர்களின் வாழ்க்கையோ இன்னும் தரம் தாழ்ந்திருந்தது.

யூதர்கள்:தங்களை கடவுளின் குழந்தைகள் என்றும் மற்றவர்கள் வாழதகுதியற்றவர்கள் என்றும் கூறி அட்டூழியம் புரிந்துக்கொண்டிருந்தனர்.

கிருத்துவர்களோ:இறைவேதமான இன்ஜீலை (பைபிள்)தங்களின் மனோஇச்சைக்கு தோதுவாக திரித்தும்,மாற்றியும் எழுதி தம் மனம்போனப் போக்கில் வாழ்வை கழித்துக்கொண்டிருந்தனர்.

சுருக்கமாக:பதிநான்காம் நூற்றாண்டில் ஓர் நல்ல இனத்தையோ,சமூகத்தையோ,சிறந்த ஆட்சியாளரையோ,ஆட்சியையோ,நல்ல சமூகத்தை கட்டமைக்கும் தலைவரையோ உலகெங்கிலும் எங்குமே கண்பது வெறும் கனவாக மட்டுமே இருந்தது.

அகிலமெல்லாம் அறியாமை இருள் சூழ்ந்திருந்த அவ்வேளையில் அருள் ஒளிவிளக்காய் அகிலத்திற்கோர் அருட்கொடையாய் அண்ணலம் பெருமானார் (ஸல்)அவர்கள் அரபிய தீபகற்பத்தில் அவதரித்தார்கள்.

இறைவன் அரபகத்தை ஏன் தேர்ந்தெடுத்தான்?

நாயகம் (ஸல்)அவர்கள் முழுஉலகிற்கான,கியாம நாள் வரை உள்ள அனைவருக்குமான இறுதித்தூதர் ஆவார்கள்.அவர்களின் வருகை குறிப்பாக அரபகத்தில் நிகழ்ந்தற்கான பல்வேறு காரணங்களை விவரிக்கும் ஆய்வாளர்கள் முக்கிய காரணமாகக்கூறுவது:புவியியல் அமைப்பிலேயே அரபகம் என்பது ஆசியா,ஐரோப்பா,ஆப்ரிக்கா ஆகிய பெரும் கண்டங்களின் மத்திய பகுதியாக இருந்தது.இப்பகுதிகளை சுற்றி பல்வேறு மதங்களும்,இனக்குழுக்களும் விரவிக்கிடந்தன.

அரபகம் மத்திய பகுதியாக இருந்ததால் சுற்றியுள்ள நாட்டினர் வருவதும்,செல்வதும் சகஜமாக இருந்தது. எனவே உலகெங்கிலுமுள்ளவர்களை இஸ்லாத்தை நோக்கி அழைப்பதும்,அழைப்பு பணியைக்கொண்டுப்போய் சேர்ப்பதற்கும் உகந்த இடம் அரபகம் என்பதால் அல்லாஹ் அதை தேர்ந்தெடுத்தான்.

சீர்திருத்தத்தின் துவக்கம்.

மக்காவில்........

மக்க மாநகரில் உயர்ந்த கோத்திரம் குரைஷிக் கோத்திரத்தவர்கள்,குரைஷி கோத்திரத்தில் சிறந்த வம்சம் ஹாஷிமீ வம்சத்தார்.

நாயகம் (ஸல்)அவர்கள் குரைஷி கோத்திரத்தில் ஹாஷிமீ வம்சத்தில் பிறக்கிறார்கள்.

நாயகம் (ஸல்)அவர்கள் சீர்திருத்தப் பணியை முதலில் தனது குடும்பத்தவர்கள்,கோத்திரத்தவர்களிடம் துவங்குகிறார்கள்.

துவக்கத்தில் மக்கத்து குரைஷிகள் நபியின் தூதுத்துவத்தையும்,சீர்திருத்த பணியையும் மறுத்ததோடு அல்லாமல் மூர்க்கத்தனமாக எதிர்த்தனர்.

நெருங்கிய உறவினர்களை நேர்வழிக்கு அழைத்தல்.

وَاَنْذِرْ عَشِيْرَتَكَ الْاَقْرَبِيْنَۙ‏

“நீங்கள் உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்.” (அல்குர்ஆன் 26:214)

இவ்வசனம் அருளப்பட்டதும் நபி (ஸல்) தங்களது நெருங்கிய உறவினர்களான ஹாஷிம் கிளையாரை அழைத்தார்கள். அவர்களுடன் முத்தலிபின் வமிசத்தில் சிலரும் சேர்ந்து மொத்தம் 45 ஆண்கள் வந்தனர். நபி (ஸல்) பேசத் தொடங்கியபோது அபூ லஹப் முந்திக்கொண்டு “இவர்கள் உமது தந்தையின் சகோதரர்களும் அவர்களுடைய பிள்ளைகளுமாவர். அதை நினைவில் கொண்டு பேசு! மதம் மாறியவர்களைப் பற்றி இங்கு பேசாதே. அறிந்துகொள்! அரபியர்களில் உன்னுடைய கூட்டத்தாருக்கு எந்தவொரு வலிமையுமில்லை. உன்னை தண்டிப்பதற்கு நானே மிகத் தகுதியானவன். நீ கூறும் இந்த ஏகத்துவத்தில் நீ உறுதியாக இருந்தால், அது அரபிகளின் துணையுடன் குறைஷி குடும்பத்தினர் உன்மீது பாய்வதற்கு ஏதுவாகிவிடும். தனது தந்தையின் சொந்தக்காரர்களுக்கு உன்னைப் போல தீங்கிழைத்த எவரையும் நான் கண்டதில்லை” என்று கூறினான். இதனால் நபி (ஸல்) அச்சபையில் பேசாமல் இருந்துவிட்டார்கள்.

மக்கா வாழ்வில் நபியவர்கள் 13 ஆண்டுகள் தொடர் சீர்த்திருத்த பணியில் கடும் சிரமங்களுக்கு மத்தியில் மக்களை ஓரிறைக்கொள்கையின் பால் அழைத்ததுடனே குலப்பெருமை,நிற இனப்பாகுபாடுகளுக்கு எதிராகவும்,பெண்உரிமை,பெண்களின் கண்ணியம் காத்திடவும்,இயலாதோர்,வரியோர்களின் உரிமைகளை காத்திடவும்,  உலகில் ஒளித்த ஒரே குரல், முதல் குரல், நபியவர்களின் குரலாக இருந்தது. 

கடும் எதிர்ப்புகளுக்கிடையிலும் நபியின் சீர்த்திருத்த பணியில் தோய்வு ஏற்ப்படவில்லை.

நாளுக்கு நாள் வளர்ந்து, மக்காவை கடந்து, தாயிஃப்,யத்ரிப்(மதினா),அபிசீனியா வரை தாக்கத்தை ஏற்படுத்தியது.

மதினாவில் நபியவர்கள்...

நபி (ஸல்)அவர்களின் மக்கா வாழ்க்கை, சீர்திருத்த பணியின் அஸ்திவாரம் எனில், மதினா வாழ்க்கை அசுர வளர்ச்சி,முழுவடிவம் எனலாம்.

கல்வி,பொருளாதாரம்,குடும்பவியல், அரசியல்,அணுகுமுறை என பல்துறைகளில் மிகப்பெரும் மாற்றத்தையும்,சீர்திருத்ததையும் ஏற்படுத்தினார்கள்.நற்குணங்களின் பிறறேப்பிடமாகவும்,ஏழை எளியோர்களின் புகலிடமாகவும்,அநாதைகளின் அரவணைப்பாகவும்,பெண்கள், குழந்தைகள்,வயோதிகர்களின் ஆதரவாகவும் நபியின் சீர்த்திருத்த பணி அமைந்திருந்தது.

நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த அழகிய சீர்திருத்த வழி முறைகளில் சில......


நபியின் சீர்திருத்தம் தொழுகையில்....

முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தேன். அப்போது (தொழுதுகொண்டிருந்த) மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான் "யர்ஹமுக் கல்லாஹ்” (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக) என்று (மறுமொழி) கூறினேன். உடனே  மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான் "என்னை என் தாய் இழக்கட்டும்! நீங்கள் ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்?" என்று கேட்டேன். மக்கள் (பதிலேதும் கூறாமல்) தங்கள் கைகளால் தொடைகள் மீது தட்டினர். என்னை  அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்று நான் அறிந்துகொண்டு அமைதியாகி விட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் என் தந்தையும் என் தாயும் நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்- (பின்வருமாறு அறிவுரை) கூறினார்கள். அவர்களுக்கு முன்னரோ பின்னரோ அவர்களைவிட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் (என் வாழ்நாளில்) கண்டதேயில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!  அவர்கள் என்னைக் கண்டிக்கவுமில்லை; அடிக்கவுமில்லை; திட்டவுமில்லை. (மாறாக,) அவர்கள், "இந்தத் தொழுகையானது, மக்களின் பேச்சுகளுக்கு உரிய நேரமன்று. தொழுகை என்பது இறைவனைத் துதிப்பதும் பெருமைப்படுத்துவதும் குர்ஆன் ஓதுவதுமாகும்" என்றோ அல்லது இதைப் போன்றோ சொன்னார்கள். (புகாரி (935),)


இரண்டு பிரிவினர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட கருத்து மோதலில் நபியின் சீர்திருத்தம்.

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

அகழ்ப் போர் (முடிந்து வந்த) தினம், நபி(ஸல்) அவர்கள், 'பனூ குறைழா குலத்தினர் வசிக்குமிடத்தை நீங்கள் அடையும் வரை (உங்களில்) எவரும் அஸ்ருத் தொழுகையைத் தொழவேண்டாம்' என்று கூறினார்கள். வழியிலேயே அஸ்ரு(த் தொழுகை) நேரத்தை அவர்கள் அடைந்தனர். அப்போது சிலர், 'பனூ குறைழாக் குலத்தினரை அடையும் வரை நாம் அஸ்ருத் தொழ வேண்டாம்' என்று கூறினர். வேறு சிலர், '(தொழுகை நேரம் தவறிப் போனாலும் தொழவேண்டாம் என்ற) அந்த அர்த்தத்தில் நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை; ('வேகமாக அங்கு போய்ச் சேருங்கள்' என்ற கருத்தில் தான் இந்த வார்த்தையைக் கூறினார்கள்) எனவே, நாம் தொழுவோம்' என்று கூறினர். நபி(ஸல்) அவர்களிடம் இரண்டு சாரார் குறித்தும் தெரிவிக்கப்பட்டபோது அவர்களில் எவரையும் அவர்கள் குறை கூறவில்லை.(ஸஹீஹ் புகாரி (4119)

குற்றம் செய்தவரிடம் நபியின் சீர்திருத்தம்...

அலீ(ரலி) அறிவித்தார்....

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் அவர்களையும் மிக்தாத் அவர்களையும் 'நீங்கள் 'ரவ்ளத்து காக்' என்னுமிடம் வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்' என்று கூறி அனுப்பினார்கள். (அவ்வாறே) நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தோடின. இறுதியில், நாங்கள் 'ரவ்ளா' எனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு (சிவிகைப்) பெண்ணைக் கண்டோம். நாங்கள் (அவளிடம்), 'கடிதத்தை வெளியே எடு' என்று கூறினோம். அவள், 'என்னிடம் கடிதம் எதுவுமில்லை' என்று கூறினாள். நாங்கள், 'ஒன்று நீயாகக் கடிதத்தை எடுத்து (கொடுத்து) விடு; இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி (சோதனையிட்டு) விடுவோம்' என்று சொன்னோம். உடனே, அவள் (இடுப்பு வரை நீண்டிருந்த) தன்னுடைய சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றோம். அதில், ஹாத்திப் இப்னு அபீ பல்தஆ அவர்கள் மக்காவாசிகளான இணைவைப்போரிடையுள்ள பிரமுகர்கள் சிலருக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (ரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்ததைக் கண்டோம். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஹாத்திபே! என்ன இது?' என்று கேட்டார்கள். ஹாத்திப்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! என் விஷயத்தில் அவரசப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷிகளில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாக இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களின் வீட்டாரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கிறார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால் மக்காவாசிகளுக்கு உபகாரம் எதையாவது செய்து, அதன் காரணத்தால் அவர்கள் என் உறவினர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று விரும்பினேன். (அதனால் அவர்கள் கேட்டுக் கொண்ட படி இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் சத்திய மார்க்கத்தை நிராகரித்தோ, (இஸ்லாத்தைத் துறந்து) வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இவர் உங்களிடம் உண்மை பேசினார்' என்று கூறினார்கள். உமர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விட என்னை அனுமதியுங்கள்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும், உமக்கென்ன தெரியும்? ஒருவேளை அல்லாஹ் பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களைப் பார்த்து, 'நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன்' என்று கூறி விட்டிருக்கலாம்' என்றார்கள். 

'என்ன (பலமான) அறிவிப்பாளர் தொடர் இது!' என்று இந்த நபிமொழியின் அறிவிப்பாளர் தொடரைக் கண்டு இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) (வியந்து) கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி (3007)

தன்னை சபித்தவரை சபித்தவருக்கு நபியின் சீர்திருத்த உபதேசம்

عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ دَخَلَ رَهْطٌ مِنَ الْيَهُودِ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا السَّامُ عَلَيْكُمْ. قَالَتْ عَائِشَةُ فَفَهِمْتُهَا فَقُلْتُ وَعَلَيْكُمُ السَّامُ وَاللَّعْنَةُ. قَالَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((مَهْلاً يَا عَائِشَةُ، إِنَّ اللَّهَ يُحِبُّ الرِّفْقَ فِي الأَمْرِ كُلِّهِ)). فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ وَلَمْ تَسْمَعْ مَا قَالُوا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((قَدْ قُلْتُ وَعَلَيْكُمْ)

நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) கூறினார் 

யூதர்களில் ஒரு குழுவினர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'அஸ்ஸாமு அலைக்கும்' (-உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சலாம்) கூறினர். அவர்கள் கூறியதைப் புரிந்துகொண்ட நான் அவர்களுக்கு 'வ அலைக்கும் அஸ்ஸலாமு வல்லஅனா (-அவ்வாறே உங்களின் மீது மரணமும் சாபமும் உண்டாகட்டும்)' என்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாளுவதையே அல்லாஹ் விரும்புகிறான்' என்று கூறினார்கள். அப்போது நான், 'இறைத்தூதர் அவர்களே! அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான்தான் 'வ அலைக்கும்' (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லிவிட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?)' என்று கேட்டார்கள். (ஸஹீஹ் புகாரி (6024)


நபி (ஸல்)அவர்களின் சீர்திருத்த பணியின் நீட்சி...

நபிகளாரின் இவ்வுலக வாழ்வு  குறைந்த காலமே என்றாலும் அவர்கள் நூற்றாண்டுகள் செய்யும் சாதனைகளையும்,சீர்திருத்ததையும் குறைந்த காலத்திலே செய்வதென்பது நபியின் தனிச்சிறப்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

மனிதத்தோல் போர்த்திய மிருங்களை மனிதப் புனிதர்களாக மாற்றியதும்,இறந்த உள்ளங்களை உயிர்ப்பெறச்செய்ததும்,வெறுப்பு, விரோதத்தை நீக்கி அன்பையும்,பாசத்தையும், பிணைப்பையும் ஏற்படுத்தியதும்.அறியாமை இருளில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்களை மீட்டு அவர்களுக்கு அறிவொளியும் புகட்டி சத்திய இஸ்லாமிய பாதையில் மடம்மாற்றியதும் நபியின் பேரற்புதமும்,வேறொருவரால் செய்யமுடியாத சாதனைகளுமாகும்.

அல்லாமா சுலைமான் நத்வி(ரஹ்)அவர்கள் கூறுகிறார்கள்:ஆதம் (அலை)அவர்கள் தொடங்கி ஈசா (அலை)வரையிலும்,உலகளவில் ஷாம்(சிரியா) முதல் இந்தியா வரை எந்த மனிதரையும் நம் நபிக்கு நிகராக காணமுடியாது.காரணம் அவர்களின் சொல்லும் செயலும் ஒன்றாக இருந்தது.

சொன்னதை தான் செய்தார்கள் செய்வதை தான் சொல்வார்கள்.அப்படி ஒரு தலைவரை வரலாறு கண்டதில்லை.

இன்றும் உலகளவில் மக்களின் சீர்திருத்ததிற்காகவும் ஈடேற்றத்திற்காகவும் பல்வேறு அமைப்புகளும்,குழுக்களும், ஜமாஅத்துகளும் முயற்சிகளை மேற்கொண்டும் இலக்கை அடையமுடியவில்லை.நபிவழியில் நடப்பதாலே ஒழிய மனித சமூகம் சிர்த்திருத்தம் பெறமுடியாது.

எனவே நபியை நேசிப்போம்,நபிவழி நடப்போம்...


வெளியீடு : -

செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Thursday, 5 August 2021

ஜும்ஆ பயான்.06/08/2021

தலைப்பு:

ஹிஜ்ரத் ஒர் பார்வை.


ஹிஜ்ரத் என்றால் என்ன?

ஹிஜ்ரத் என்றால் அரபியில் "தனித்துவிடுவது","பிரிவது","விடைப்பெறுவது" "நாட்டை துறந்து வெளியேறுவது" என்பனப் போன்ற பல பொருள்கள் உள்ளன. 

கொஞ்சம் விரிவாக சொல்லப்போனால்...

"ஹிஜ்ரத் என்றால் தனது எல்லா உலக ஆதாயங்களையும் இழந்து, சொந்த மண்ணில் உள்ள உடைமைகளை அப்படியே விட்டுவிட்டு தன்னையும் தனது மார்க்கத்தையும் காப்பாற்றிக் கொள்ள தனது சொந்த நாட்டை, சொந்த ஊரைத் துறந்து அந்நிய நாட்டுக்கு அந்நிய ஊருக்குச் செல்வதாகும். இவ்வாறு நாடு துறப்பவர்கள், செல்லும் வழியில் அல்லது செல்வதற்கு முன் பல ஆபத்துகளைச் சந்திக்க வேண்டி வரும். உயிர் பறிபோகலாம்; உடைமைகள் அபகரிக்கப்படலாம்; செல்லுமிடத்தில் எத்தகைய எதிர்காலத்தை முன்னோக்க வேண்டியிருக்குமோ? அங்கு என்னென்ன கவலைகளும், துக்கங்களும், துயரங்களும் மறைந்திருக்கின்றனவோ? என்று அறியாத நிலையில் மேற்கொள்ளும் பயணமே ஹிஜ்ரத்தாகும்".


ஹிஜ்ரத் செய்தவரின் சிறப்பு.

وَالَّذِيْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجٰهَدُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَالَّذِيْنَ اَاوَوْا وَّنَصَرُوْۤا اُولٰۤٮِٕكَ هُمُ الْمُؤْمِنُوْنَ حَقًّا‌  لَّهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ‏ 

எவர்கள் ஈமான் கொண்டு (தம்) ஊரைத்துறந்து அல்லாஹ்வின் பாதையில் போர் புரிகின்றாரோ அ(த்தகைய)வரும் எவர் அ(த்தகைய)வர்களுக்கு புகலிடம் கொடுத்து, உதவி செய்கின்றார்களோ அவர்களும் தான் உண்மையான முஃமின்கள் ஆவார்கள் - அவர்களுக்கு மன்னிப்பு உண்டு. கண்ணியமான உணவும் உண்டு.(அல்குர்ஆன் : 8:74)


நபிமார்களின் ஹிஜ்ரத்.

முன் வாழ்ந்த நபிமார்கள் பல் வேறு நோக்கங்களுக்காக ஹிஜ்ரத் செய்தார்கள் என்கிறது வரலாறு.

இறைதூதர்கள் தங்களின் தாய் நாட்டில் மக்களுக்கு தூதுத்துவத்தையும்,சீர்திருத்தப் பணியையும் மேற்கொள்ளும் போது எதிரிகளால் பல இன்னல்கள்,சோதனைகளை சந்திக்கநேரிடும்.

அந்த சோதனைகள் எல்லைகடக்கும் போது அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று தங்களின் தாயகத்தை துறந்து வேறு மாகாணத்திற்கோ,அல்லது வேறு நாட்டிற்கோ ஹிஜ்ரத் செய்துள்ளார்கள்.

நபி இப்ராஹீம்(அலை)அவர்கள் கொடுங்கோலன் நம்ரூத்தின் அடக்குமுறை,அநீதியிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள பாபிலோன் எனும் ஊரை விட்டும் ஷாம்(சிரியா)தேசத்திற்கு ஹிஜ்ரத் செய்தார்கள்.

இவ்விதமே முன் வாழ்ந்த நபிமார்களில் பலர் பல்வேறு நோக்கங்களுக்காக ஹிஜ்ரத் செய்தார்கள் என்கிறது வரலாறு.


காருண்ய நபி(ஸல்)யின் ஹிஜ்ரத்.

முன் வாழ்ந்த நபிமார்களைப் போலவே நம் கண்மணி நாயகம்(ஸல்)அவர்களின் ஹிஜ்ரத்திற்கும் பல முக்கிய காரணங்கள் உண்டு.

நபிகளாரின் தாய் மண்ணான புனித மக்கா மாநகரில் அன்னவர்கள் சொல்லோண்ணா துயரங்களை அனுபவித்தார்கள்.அன்னவர்களின் பூவுடல் நோவடைய தாக்கப்பட்டார்கள். சில பொழுது கற்களைக்கொண்டும்,வேறு சில பொழுது செத்தப்பிராணியின் குடல் போன்ற கழிவுகளை திருமேனில் கொட்டியும் தாக்குதலுக்குள்ளாக்கபட்டார்கள்.

அன்னவர்களின் அழைப்புப் பணியை எந்த விதத்திலெல்லாம் தடுக்கமுடியுமோ அனைத்தையும் விரோதிகள் முயற்சித்தார்கள்.

சிறைப்பிடிப்பது,அல்லது ஊர்விலக்கு செய்வது,அப்பாவி இஸ்லாமியர்களை உயிர்போகும் அளவுக்கு தாக்குவது என பல இன்னல்கள் செய்தார்கள்.

وإنما ثبت عنه صلى الله عليه وسلم أنه قال: ما أوذي أحد ما أوذيت. وفي رواية : ما أوذي أحد ما أوذيت في الله. رواهما أبو نعيم وحسنهما الألباني.

ويؤيد ذلك ما في الحديث: لقد أخفت في الله وما يخاف أحد، ولقد أوذيت في الله وما يؤذى أحد. رواه الترمذي وصححه الألباني

ஒரு தடவை நாயகம் (ஸல்)அவர்களே ."எனக்கு முன்வந்த நபிமார்கள் இறைப்பாதையில் என் அளவுக்கு சிரமங்களையோ,துன்பங்களையோ சந்தித்திருக்கமாட்டார்கள்"என்று சொன்னார்கள்"

மக்கத்து  காபிர்கள் மக்கத்து ரோஜாவான மாநபி (ஸல்)அவர்களை கொல்லவும் துனிந்துவிட்டார்கள்.

இச்சமயத்தில் தான் அல்லாஹ் தன் நபிக்கு....

وَاِذْ يَمْكُرُ بِكَ الَّذِيْنَ كَفَرُوْا لِيُثْبِتُوْكَ اَوْ يَقْتُلُوْكَ اَوْ يُخْرِجُوْكَ‌ وَيَمْكُرُوْنَ وَيَمْكُرُ اللّٰهُ‌ وَاللّٰهُ خَيْرُ الْمٰكِرِيْنَ‏

(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.(அல்குர்ஆன் : 8:30)

என்ற வசனத்தை இறக்கி விட்டு ,நபியே!மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்யுங்கள் என்று கூறினான்.

ஹிஜ்ரத் பயணம்.

நபி(ஸல்)அவர்களை எதிரிகள்  கொலை செய்ய திட்டம் தீட்டி, அவர்களின் வீட்டை சுற்றி முற்றுகையிட்டபோது,

நபி (ஸல்) அவர்கள் அலி(ரலி)அவர்களை தங்களின் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு,யாசின் சூராவின் ...

وَجَعَلْنَا مِنْ بَيْنِ اَيْدِيْهِمْ سَدًّا وَّمِنْ خَلْفِهِمْ سَدًّا فَاَغْشَيْنٰهُمْ فَهُمْ لَا يُبْصِرُوْنَ‏

இன்னும் நாம் அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னே ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்; (இவ்வாறாக) அவர்களை மூடிவிட்டோம் - ஆகையால் அவர்கள் பார்க்க முடியாது.(அல்குர்ஆன் : 36:9)                                     என்ற வசனத்தை ஓதி வெளியிலிருந்த காஃபிர்களின் முகத்தில் மண்ணை தூவி விட்டு,யார் கண்களிலும் படாமல் அபூபகர்(ரலி)அவர்களை மட்டும் துணைக்கு அழைத்துக் கொண்டு மதினாவை நோக்கி ஹிஜ்ரத் பயணத்தை துவக்கினார்கள்.(ஸீரது இப்னு ஹிஷாம்)


தவ்ரு குகையில் இருவரும்.

ஹிஜ்ரத் செல்லும் வழியில் ஹழ்ரத் அபுபகர் (ரலி)அவர்கள் நாயகம் (ஸல்)அவர்களை எதிரிகள் எந்த விதத்திலும் தாக்குதல் தொடுத்துவிடக்கூடாது என நாலாபுறமும் நோட்டமிட்டாவர்களாக,பாதுகாப்பு அரணாக சென்றார்கள்.வழியில் சற்று இளைப்பாறிக்கொள்வதற்காக தவ்ரு குகையில் தங்க முடிவு செய்ததும்,    உடனே ஹழ்ரத் அபுபகர்(ரலி)அவர்கள் குகையினுள் சென்று விஷ ஜந்துகள்,வனவிலங்கு ஏதும் இல்லை என உறுதி செய்ததற்கு பின் நாயகம்(ஸல்)அவர்களை உள்ளே அழைக்கிறார்கள்.

நபி(ஸல்)குகையில் சென்றதுமே ஓய்வெடுப்பதற்காக தங்களின் முபாரக்கான தலையை அபுபகர்(ரலி)அவர்களின் மடியில் வைத்து உறங்கிவிட, அபுபகர்(ரலி) அவர்களுக்கு அருகில் ஒரு பொந்து தென்பட்டதும்,அதிலிருந்து ஏதேனும் விஷஜந்து பெருமானாரை தீண்டிவிடக்கூடாது என தன் காலின் பெருவிரலால் அந்த பொந்தை அடைத்துக்கொள்ள,நினைத்தது போலவே பொந்தில் உள்ள ஒரு பாம்பு அபுபகர்(ரலி) அவர்களை தீண்ட,வலியை பொறுத்துக் கொண்டு நபியின் தூக்கம் கலைந்து விடக் கூடாது என அசையாமல் இருந்தார்கள்.

நபி (ஸல்)அவர்கள் விழித்தெழுந்து பார்த்த போது அபுபகர்(ரலி)அவர்களின் கண்கள் சிவந்து விஷம் தலைக்கேறி விட்டதை அறிந்து,தங்களின் முபாரக்கான எச்சிலை பாம்பு தீண்டிய இடத்தில் தடவ அபுபகர்(ரலி)அவர்களுக்கு விஷம் தெளிந்து பழையநிலைக்கு திரும்புகிறார்கள்.(பத்ஹுல் பாரி,மிஷ்காத்)


கவலைப்படாதீர்!அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்"

நாயகம் (ஸல்)அவர்களை தேடிக்கொண்டுவந்த காஃபிர்கள் தவ்ரு குகைக்கு அருகில் நடமாடுவதைக் கண்ட அபுபகர்(ரலி)அவர்கள் பதற்றமடைய,நாயகம் (ஸல்)அவர்கள் மிக்க நிதானமாக "கவலைப்படாதீர்!அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்"என்று சொன்னார்கள்.அதை அருள்மறையாம்  குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.

اِلَّا تَـنْصُرُوْهُ فَقَدْ نَصَرَهُ اللّٰهُ اِذْ اَخْرَجَهُ الَّذِيْنَ كَفَرُوْا ثَانِىَ اثْنَيْنِ اِذْ هُمَا فِى الْغَارِ اِذْ يَقُوْلُ لِصَاحِبِهٖ لَا تَحْزَنْ اِنَّ اللّٰهَ مَعَنَا‌  فَاَنْزَلَ اللّٰهُ سَكِيْنَـتَهٗ عَلَيْهِ وَاَ يَّدَهٗ بِجُنُوْدٍ لَّمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِيْنَ كَفَرُوا السُّفْلٰى‌  وَكَلِمَةُ اللّٰهِ هِىَ الْعُلْيَا  وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ‏

(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை;) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றியபோது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், “கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்.(அல்குர்ஆன் : 9:40)

தவ்ரு குகையில் மூன்று தினங்கள் தங்கியதற்கு பின்னால் மீண்டும் மதினாவை நோக்கிய ஹிஜ்ரத் பயணம் துவங்குகிறது.

குபாவில் இருவரும்.

ரபிவுல் அவ்வல் பிறை 1ல் துவங்கிய ஹிஜ்ரத் பயணம்,பிறை 12ல் குபாவை வந்தடைகிறார்கள்.அங்கு குல்தூம் இப்னு ஹத்மு (ரலி)என்ற ஸஹாபியிடம் சில தினங்கள் தங்குகிறார்கள்.அப்போது தான் அங்கு நபி(ஸல்)அவர்களின் முதல் மஸ்ஜித் என்ற  சிறப்பைப் பெற்ற மஸ்ஜித் அல் குபா கட்டப்பட்டு,முதல் ஜும்ஆவை நாயகம் (ஸல்)அவர்கள் பனு ஸலீம் என்ற அந்த கோத்திரத்தவர்களுக்கு நடத்தி தருகிறார்கள்.

குபா மஸ்ஜித் மற்றும் குபா வாசிகள் குறித்து குர்ஆன் இவ்வாறு புகழ்ந்து கூறுகிறது.

لَا تَقُمْ فِيْهِ اَبَدًا ‌ لَمَسْجِدٌ اُسِّسَ عَلَى التَّقْوٰى مِنْ اَوَّلِ يَوْمٍ اَحَقُّ اَنْ تَقُوْمَ فِيْهِ‌ فِيْهِ رِجَالٌ يُّحِبُّوْنَ اَنْ يَّتَطَهَّرُوْا ‌ وَاللّٰهُ يُحِبُّ الْمُطَّهِّرِيْنَ‏

ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் - நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது; அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது; அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.(அல்குர்ஆன் : 9:108)


மதினாவிற்குள் மாநபி (ஸல்).

ஈருலகத்தூதர்,தங்களின் உயிரை விட மேலாக நேசிக்கும் முஹம்மது (ஸல்)அவர்கள் தங்களின் ஊருக்கு வருகிறார்கள் என்பதை அறிந்த மதினா அன்சாரி ஸஹாபக்கள் வரவேற்க, கேள்விப்பட்ட நாள் முதல் ஊரின் எல்லைக்கு சென்று நின்றுக்கொள்வார்கள்.

அன்று ஒரு தினம் வெள்ளி கிழமை நன்பகல் பின்னேரம் நபியின் திருப்பாதங்கள் தங்கள் மண்ணில் பட்டதுமே மகிழ்ச்சிப்பெருக்கில்


اَللہُ اَکْبَر ُ، جَاءَنَا رَسُوْل اللہِ جَاءَ مُحَمَّدٌ

"அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)இதோ அல்லாஹுவின் தூதர் எங்களிடத்திலே வந்துவிட்டார்கள்.முஹம்மத் (ஸல்)அவர்கள் வந்துவிட்டார்கள்"என முழக்கமிட்டார்கள்.

குதூகலமடைந்த பெண்களும்,சிறார்களும் ......

طَلَعَ الْبَدْرُ عَلَیْنَا

مِنْ ثنِیّاتِ الوَداَع

وَجَبَتْ شُکْرُعَلَیْنَا

ماَدَعیٰ لِلٰہِ دَا ع

ஸனியாத்தில் விதாஃ எனும் கணவாய்களுக்கு கிடையே முஹம்மதெனும் முழு மதி தோன்றி விட்டது...

அல்லாஹுவிடம் பிரார்த்திப்போர் பிரார்த்திக்கும் காலமெல்லாம்...நம் மீது நன்றி செலுத்துவது கடமையாகும் என்றெல்லாம் கீதம்  இசைத்து நபியை வரவேற்றார்கள்.

ஹிஜ்ரத் பயணத்தில் நபியின் முஃஜிஸா எனும் அற்புதங்கள்.

1)தவ்ரு குகையில் அபூபகர்(ரலி)அவர்களை பாம்புக்கொட்டிவிட, நபி(ஸல்)அவர்கள் எச்சில் தொட்டு தடவ பாம்பின் விஷம் முறிந்து,குணமானது.

2)காஃபிர்களிடமிருந்து நபியை காக்க குகையின் வாயிலில் சிலந்தி வலைப்பின்னியதும்,உம்மு கைலான் என்ற மரமும்,அதன் மீது இரண்டுப் புறாக்கள் கூடு கட்டியதும், நபியின் முஃஜிஸாக்கள்.

3)சுராகா இப்னு மாலிக் என்பவர் நபியை பிடிக்க வரும் போது பூமி அவரின் பாதங்களை பிடித்துக் கொண்டது.(இவர் பின் நாட்களில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.)

4)உம்மு மஃபத் என்பவரின் பால்கறக்காத ஆட்டின் மடுவில் நாயகம் (ஸல்)அவர்களின் திருக்கரங்கள் பட்டதும்,பால் சுரந்து பாத்திரம் நிரம்பியது.

5)நபி(ஸல்)அவர்கள் ஹிஜ்ரத் கிளம்பிய போது எதிரிகளின் கண்களில் மண்ணை தூவி,அவர்களின் கண்ணெதிரே அந்த இடத்தை கடந்து சென்றார்கள்.யாருக்கும் அவர்களை பார்க்க முடியவில்லை.அல்லாஹ் அவர்களின் கண்களுக்கு திரையிட்டு விட்டான்.


ஹிஜ்ரத் பயணமே ஹிஜ்ரி யானது.

ஹிஜ்ரி ஆண்டு என்பது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மறைவிற்கு பின் இரண்டாவது ஜனாதிபதியாக பொறுப்பேற்ற உமர் (ரலியல்லாஹு அன்ஹு)அவர்களின் ஆட்சிகாலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. மக்காவை துறந்து மதீனாவிற்கு வந்த 16-வது ஆண்டு இந்த நிகழ்சி நடைபெற்றது. மைமூன் பின் மஹ்ரான் என்பவர் ஒரு முறை உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் ஒரு மனிதர் தனது தேவையை ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுக்கின்றார்.

​​அதில் ஷஃபான் என்று மட்டும் எழுதப்பட்டு இருந்தது. உமர் (ரலியல்லாஹு அன்ஹு)அவர்கள் அம்மனிதரிடம் எந்த வருடத்து ஷஃபான்? இந்த வருடமா? அடுத்த வருடமா? என்று வினவினார்கள். பிறகு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் காலத்தின் கணக்கீட்டின் அவசியத்தை உணந்தவகளாக! மற்ற தோழர்களோடு கலந்து ஆலோசிக்கிறாகள்.

ஸஹாபாக்களின் கருத்து பரிமாற்றத்திற்குப்பின் ஹிஜ்ரத்-ஐ அடிப்படையாக கொண்டு இஸ்லாமிய ஆண்டை அமலுக்கு கொண்டு வந்தார்கள்.

(நூல்: அல்பிதாயா-வன்னிஹாயா-பாகம்3-பக்கம்-206,207).

வரலாற்று ஆய்வாளர்கள் நபிகளாரின் வாழ்வில் ஹிஜ்ரத்தை இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான மைல்கல்லாகவும்,உலகெங்கும் இஸ்லாம் பரவ காரணமாகவும் குறிப்பிடுகிறார்கள்.

நாயகம்(ஸல்)அவர்களைத் தொடர்ந்து ஸஹாபாப்பெருமக்களும்,தாபிஈன்கள், தபவுத்தாபிஈன்கள்,இறைநேசச் செல்வர்கள் அகிலமெங்கும் ஹிஜ்ரத் செய்ததன் விளைவாகவே எட்டுத்திக்கும் இஸ்லாம் பரவியது,இன்றும் பரவிக்கொண்டிருகின்றது.


எனவே ஹிஜ்ரதைப் போற்றுவோம் நபி வழி நடப்போம்.


வெளியீடு: 

செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Thursday, 22 July 2021

ஜூம்ஆ பயான்23/07/2021

தலைப்பு:

சீரழியும் இஸ்லாமிய பெண்கள்.



இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம்.அல்லாஹ்வின் கட்டளைகள்,அவனின் தூதர் முஹம்மது நபி(ஸல்)அவர்களின் வழிமுறைகள் தாம் இஸ்லாமிய மார்க்கமாகும்.

இஸ்லாம் சிறந்த வாழ்வியல் முறையையும்,ஒழுக்க விழுமியங்களையும் போதிப்பதுடனே அசிங்கமான அருவருப்பானவற்றை விட்டும் தடுக்கிறது.

وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; (அல்குர்ஆன் : 6:151)


விபச்சாரம் போன்ற பெரும் பாவங்களை தடைசெய்கின்ற இஸ்லாம்,அதனை தூண்டக்கூடிய,அதன் பால் கொண்டு சேர்கக்கூடிய அனைத்து வழிகளையும் தடைச்செய்கின்றது.

وَلَا تَقْرَبُوا الزِّنٰٓى اِنَّهٗ كَانَ فَاحِشَةً  وَسَآءَ سَبِيْلًا‏

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.(அல்குர்ஆன் : 17:32)


விபச்சாரத்தை தூண்டக்கூடிய பார்ப்பது,பேசுவது,ஆண்,பெண் இருவர் தனித்திருத்தல் அனைத்தும் தடையாகும்.

1) இஸ்லாம் ஆண்,பெண் இருபாலருக்காண முதல் ஒழுக்கம் பார்வையை பேணுதல் என்கிறது.

قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ‌  ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ‌  اِنَّ اللّٰهَ خَبِيْرٌ بِمَا يَصْنَـعُوْنَ‏

(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.

(அல்குர்ஆன் : 24:30)

وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا‌ وَلْيَـضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّ‌ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ ا

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது;

عَنْ عَلِيِّ بْنِ عُقْبَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ 1 ( عليه السَّلام ) قَالَ : سَمِعْتُهُ يَقُولُ : " النَّظَرُ سَهْمٌ مِنْ سِهَامِ إِبْلِيسَ مَسْمُومٌ  

وَ كَمْ مِنْ نَظْرَةٍ أَوْرَثَتْ حَسْرَةً طَوِيلة. أي الإمام جعفر بن محم

பார்வை ஷைதானின் அம்புகளில் ஓர் அம்பு, எத்தனையோ பார்வைகள்  நீண்ட கைசேதத்தை தரவல்லது.

இன்றைய நவீன உலகம் இருபாலரும் சீர்க்கெட்டுப் போவதற்கான வழிகளை இலகுவாக்கியிக்கிறது.

தங்களின் வயதுக்குவந்த பிள்ளைகளுக்கு விலையுர்த்த செல்ஃபோனை வாங்கித்தரும் பெற்றொர்கள் அதன் விபரீதங்களை சற்றுசிந்தித்துப்பார்க்கவேண்டும்.

ஆபாசமான விஷயங்கள்,அருவருக்கத்தக்க காணொளிகளும் அதில் மலிந்து கிடக்கின்றது.

சமூகவளைதளங்களில் ஒரு பெண் அந்நிய ஆடவருடனும்,ஒரு ஆண் அந்நியப்  பெண்னோடும் எந்த தடையுமில்லாமல் உறையாடமுடியும்.

வெறுமனே பேச்சாகத் தொடங்கி பின் நட்பாகி ,காதலாகி, இஸ்லாமிய பெண் மாற்றுமதத்தவனோடு ஓடிப்போகக்கூடிய அவல நிலையே இதற்கு சாட்சி.அதனால் தான் இஸ்லாம் பேசுவதையும்,பார்ப்பதையும் தடைசெய்கிறது.


2) தேவையின்றி பெண்கள் வெளியே சுற்றித்திரிவதை இஸ்லாம் தடைச்செய்கின்றது.

وَقَرْنَ فِىْ بُيُوْتِكُنَّ وَلَا تَبَـرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْاُوْلٰى وَاَقِمْنَ الصَّلٰوةَ وَاٰتِيْنَ الزَّكٰوةَ وَاَطِعْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ  اِنَّمَا يُرِيْدُ اللّٰهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ اَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيْرًا ‏

(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.(அல்குர்ஆன் : 33:33)

இஸ்லாம்,பெண்கள் அவசிய தேவைக்காக அன்றி வெளியில் வருவதை தடைசெய்கிறது.அப்படியே வெளியில் சென்றாலும் ஃபர்தாவின் பேணிக்கையை கடைபிடிக்க வேண்டும்

இன்றைய மேற்கத்திய கலாச்சாரத்தை தூக்கிப்பிடிக்க கூடிய ஊடகங்கள்,பெண்கள் ஊர் சுற்றுவதையும்,ஆணும் பெண்ணும் சமம் எனக்கூறி தராளாமாக ஆணும் பெண்ணும் ஊர்சுற்றலாம்,கலந்துறவாடலாம்,இது தான் பெண்ணியம்,பெண்சுதந்திரம் இதற்கு எதிராக பேசுபவர்களை பழமைவாதிகள்,பெண்சுதந்திரத்திற்கு எதிரானவர்களாக காட்சியப்படுத்தப்படுகிறது.

இதுப்போன்ற பெண்ணியம்,ஆணும் பெண்ணும் சமம் போன்ற குறல்களை இஸ்லாமியர்களிலே கேட்கமுடிகிறது.

இதன் விளைவு; படிப்பு,வேலை என பல்வேறு காரணங்களை கூறிக்கொண்டு அந்நிய ஆடவர்களோடு இஸ்லாமியப் பெண்கள் ஃபர்தாவோடும், ஃபர்தா இல்லாமலும் சுற்றித்திரிவதை காணமுடிகிறது.இந்த பழக்கவழக்கங்கள் எல்லைமீறலுக்கும்,மதம் மாறுதலுக்கும் வழிவகுக்கிறது. 

எக்காரணங்களைக்கூறினாலும் ஆணும் பெண்ணும் பேசுவதையோ,தனித்துவிடுவதையோ இஸ்லாம் ஒரு போதும் அனுமதிப்பதில்லை.

கல்வி கற்ப்பதாகவே இருந்தாலும் பெண்களுக்கான கல்வி நிலையங்களில் முழுஃபர்தா பேணுவதாக இருந்தால் மட்டுமே அனுமதி.

இன்றைய காலக்காட்டத்தில் இன்னொரு கலாச்சார சீர்கேடு:

திருமணம் போன்ற சுபகாரியங்களில் ஃபர்தா அறவே தவிர்க்கப்படுகிறது,நல்ல முறையில் ஃபர்தாவை பேணக்கூடிய பெண்களும் கூட திருமணம் போன்ற சுபகாரிய காரியங்களில் ஃபர்தாவை இலட்சியம் செய்வதில்லை.

எல்லா நிலையிலும் பெண்கள் ஃபர்தாவை பேணவேண்டும். 

قال رسول الله صلى الله عليه وسلم

:’’یَا حَوْلَاءُ لَا تُبْدِی زِینَتَکِ لِغَیْرِ زَوْجِکِ یَا حَوْلَاءُ لَا یَحِلُّ لِامْرَأَةٍ أَنْ تُظْهِرَ مِعْصَمَهَا وَ قَدَمَهَا لِرَجُلٍ غَیْرِ بَعْلِهَا وَ إِذَا فَعَلَتْ ذَلِکَ لَمْ تَزَلْ فِی لَعْنَةِ اللَّهِ وَ سَخَطِهِ وَ غَضِبَ اللَّهُ عَلَیْهَا وَ لَعَنَتْهَا مَلَائِکَةُ اللَّهِ وَ أَعَدَّ لَهَا عَذَاباً أَلِیماً‘‘۔

நபி(ஸல்)ஒரு பெண்ணுக்கு உபதேசம் செய்யும் போது இப்படிச் சொன்னார்கள்

"பெண்ணே!உன்கணவனல்லாத ஆடவனுக்கு உன் அலங்காரத்தை காட்டவேண்டாம்.

பெண்ணே!ஒரு பெண் அவளின்  கணவனல்லாதவனுக்கு அவளின் பாதங்களையோ,மறைவிடங்களையோ கண்பிப்பது ஹலால் ஆகாது.அவ்விதம் அவள் செய்தால் அல்லாஹ்வின் சாபமும்,தண்டனையும்,கோபமும்,மலக்குமார்களின் சாபங்களும் அவள் மீது இறங்கும்,இன்னும் நோவினை தரும் வேதனை அவளுக்கு காத்திருக்கிறது"

நபி(ஸல்)அவர்கள் மிஃராஜில் கண்ட ஓர் நிகழ்வை விவரிக்கின்றார்கள்.

رَأَیْتُ امْرَأَةً تُقَطَّعُ لَحْمُ جَسَدِهَا مِنْ مُقَدَّمِهَا وَ مُؤَخَّرِهَا بِمَقَارِیضَ مِنْ نَار‘‘

"நரகிலே பெண்ணொருவள் தன் உடலில் முன்னும் பின்னும் தன் உடலை நெருப்பிலாலான கத்திரியைக் கொண்டு வெட்டிக்கொண்டிருப்பதை நான் (மிஃராஜில்)கண்டேன்"

اور اس کا سبب بیان کرتے ہوئے فرمایا:’’ أَمَّا الَّتِی کَانَتْ تَقْرِضُ لَحْمَهَا بِالْمَقَارِیضِ فَإِنَّهَا کَانَتْ تَعْرِضُ نَفْسَهَا عَلَی الرِّجَال

அதற்கான காரணத்தை நபி (ஸல்)அவர்கள் விவரிக்கும்போது.

"கத்திரியைக் கொண்டு தன் சதையை அப்பெண் எதற்காக வெட்டிக்கொண்டிருக்கிறாள் என்றால் தன்னை (அந்நிய)ஆண்களுக்கு வெளிப்படுத்தி காட்டிய காரணத்தினால் ஆகும்."

இஸ்லாம் ஹிஜாபை பெண்களுக்கான கண்ணியம்,பாதுகாப்புக்கேடயம் என்கிறது.

இஸ்லாமிய ஒழுக்கமாண்புகளை பேணுவதால் பெண்களுக்கெதிரான குற்றங்கள் தடுக்கமுடியும் என்பதை இன்றைய உலகம் ஒப்புக்கொள்கிறது.

மேற்கத்திய நாடுகளில் புர்கா அணியும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இன்று நம் இஸ்லாமிய பெண்களின் நிலை:புர்காவையே பலவிதங்களிலும்,பல்வேறு வண்ணங்களிலும் அணிகிறார்கள்.சிலர் இருக்கமான உடல் அங்கங்களை வெளிக்காட்டும் விதமாகவும்.இன்னும் சிலர் உள்ளே போட்டிருக்கும் ஆடையின் நிறம் தெரியுமளவு மெல்லிய புர்காக்களை அணிகிறார்கள்.

இப்படியான அறை குறையான ஆடையை அணிந்து பவனி வருவது தான் சுதந்திரம் என்றால் அதற்கு ஒரு போதும் இஸ்லாம் இடம் கொடுக்காது. ஆகையால் தான் இஸ்லாம் பெண்ணே உன் அலங்காரத்தை உன் கணவனுக்கு மட்டும் காட்டிக் கொள் என்கிறது. ஆனால் உலகமோ பெண்ணே உன் அழகை வெளியே வந்து எல்லோருக்கும் காட்டிக் கொள் என்கிறது. எனவே பெண்களை இஸ்லாம் ஃபர்தாவின் மூலம் கொடுமை படுத்தவில்லை, மாறாக கண்ணியப்படுத்துகிறது என நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். பெண்கள் நாட்டின் கண்கள் என்பதை இஸ்லாம் தான் நடைமுறை படுத்துகிறது.

ஹிஜாபின் நோக்கமே அந்நிய ஆடவனின் பார்வையை விட்டும் பாதுகாப்பதாகும்.

இஸ்லாத்தை சரியாக புரிந்துக் கொள்ளாத அறை வேக்காடுகள் இஸ்லாம் பெண்களை பர்தா என்ற போர்வையில் கொடுமை படுத்துகிறது என அவப்பெயரை ஏற்படுத்துகிறார்கள்.

ஆனால் பொதுவாகவே பெண்ணின் உடல் ஆணின் உடலுக்கு சற்று மாற்றமானது. பெண்கள் இயற்கையாகவே கவர்ச்சியாகவும், தன்னின் பால் பிறரை ஈர்க்கும் சக்தி உடையவர்கள்.எனவே அதற்குரிய சரியான ஆடையை அணிந்தால் தான் அதனை யாரும் பார்க்காமல், அதனால் ஏற்படும் பல விளைவுகளிலிருந்து பாது காக்க முடியும் என்பதால் தான் பெண்களுக்கு இஸ்லாம் பர்தாவை கடமையாக்கியுள்ளது.

இன்றைய அவலம் அந்த ஹிஜாபே இச்சையை தூண்டும் வகையில் உள்ளது.

سمعتم الحديث، يقول النبي ﷺ: صنفان من أهل النار لم أرهما بعد: رجال بأيديهم سياط كأذناب البقر يضربون بها الناس يقال عنهم إنهم الشرطة وأشباههم من الظالمين، الشرطة الظالمة ونساء كاسيات عاريات مائلات مميلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها، وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: 

இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அவ்விரு பிரிவினரை நான் பார்த்ததில்லை. (முதலாம் பிரிவினர்) பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக் கொண்டு மக்களை அடி(த்து இம்சி)க்கும் கூட்டத்தார்.

(இரண்டாம் பிரிவினர் யாரெனில்,) ஆடையணிந்தும் நிர்வானமாக இருப்பார்கள். சாய்ந்து நடக்க கூடியவர்களாக இருப்பார்கள். மக்களை தன் பக்கம் சாய்ப்பவர்களாக இருப்பார்கள். அவர்களின் தலை (முடி) ஒட்டகத்தின் திமிலைப் போல் வைத்திருப்பார்கள். அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) அதன் வாடையைக்கூட நுகரமாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு தொலைவிலிருந்து வீசிக் கொண்டிருக்கும்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 5487

அல்லாஹ் நம் பெண்களை இதுப்போன்ற இழிநிலைகளை விட்டும் இம்மையிலும்,மறுமையிலும் பாதுகாப்பானாக!ஆமீன்.


                                                     

23/07/2021

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...