Thursday, 4 January 2024

ஜும்ஆ பயான் 05/01/2023

தலைப்பு :

குடும்பத்திற்காக செலவு செய்தல்.

اِنَّ رَبَّكَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُ‌ اِنَّهٗ كَانَ بِعِبَادِهٖ خَبِيْرًا بَصِيْرًا‏

நிச்சயமாக உம்முடைய இறைவன் தான் நாடியவருக்கு விசாலமாக உணவு (சம்பத்து)களை வழங்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவாகவும் கொடுக்கிறான் - நிச்சயமாக அவன் தன் அடியார்(களின் இரகசிய பரகசியங்)களை நன்கு அறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.  (அல்குர்ஆன் : 17:30)

இன்றைய அதிவேகமான தொழிநுட்ப வளர்ச்சி,  மனித வாழ்வை மிகவும் சீர்க்குழைத்துக்கொண்டிருக்கின்றது.

நன்மையை காட்டிலும் தீமை மிகைத்து காணப்படுகிறது.

நம் வாழ்வின் தீமைகளில் மிக முக்கியமானது சக மனிதனின் உரிமை பறிக்கப்படுவதும்,உரிமைமீறுதலுமே ஆகும்.

இதற்கு  அனுதினமும் கண்முன்னே நாம் காணும் உதாரணங்களே சான்றுகளாகும்.

#நாள்முழுக்க பாடுப்படும் கூலித்தொழிலியின் கூலியை குறைத்து கொடுக்கப்படுகிறது.

#ஆசிரியர்,இமாம்,நியாயமாக வேலை செய்பவர்களின் வருமானத்தை விடவும் அரசியல்வாதிகள்,கூத்தாடிகள்,சமூகவிரோதிகளிடம் பணபுழக்கம் அளவுக்கு மீறி உள்ளன.

உரிமைமீறல்களில் மிக மோசமானது குடும்ப உறுப்பினர்களான பெற்றோர்கள்,மனைவி மக்கள் உடன் பிறந்தோரின் உரிமைகளை மீறுதலே ஆகும்.

اَلرِّجَالُ قَوَّامُوْنَ عَلَى النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰهُ بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ وَّبِمَاۤ اَنْفَقُوْا مِنْ اَمْوَالِهِمْ‌  

(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். (அல்குர்ஆன் : 4:34)

எத்தனையோ இஸ்லாமிய குடும்பங்களின் இன்றைய பரிதாப நிலை;

கணவன்மார்கள் தான் சம்பாதிப்பது தனக்கு மட்டுமே என வாழ்ந்து வருகின்றனர். வீட்டுச் செலவுக்கு பணம் தருவதில்லை.

இதனால் இஸ்லாமிய குடும்ப பெண்மணிகள் குடும்ப கஷ்டத்திற்காக குறைந்தஊதியத்திற்கு கூலிவேலைக்கோ அல்லது கம்பெனிக்கோ வேலைக்கு சென்று, வீட்டுச் செலவுகள் அனைத்தையும் ஏற்று, சிரமத்தோடு குடும்பத்தை  நடத்தி  வருகின்றனர். 

குடிகார கணவன்மார்களால், வருமானத்திற்கு நாதியில்லாமல் எத்தனையோ குடும்பங்களில் வயதுக்கு வந்த பெண்பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் அவலமும் தொடர்கதையாக உள்ளது.

சிலர் நல்ல வேலையில் இருந்தும், பணம் சம்பாதிக்கும் வெறியில், குதிரை ரேசுக்கு போவதும், சூதாடுவதுமாக குடும்பத்தை தவிக்கவிட்டுவிடுகின்றனர்.

குடும்ப செலவினங்கள் குடும்ப தலைவரின் பொறுப்பே ஆகும் என்பதை மேலுள்ள இறைமறை வசனம் வலியுறுத்துகின்றது.

ஆனால் இனறு தம் தாய்,தந்தையரின் கடமையை மறந்து நண்பர்களோடு செலவுசெய்வதை பெருமையாக கருதுபவர்களுக்கும்.

மனைவி,மக்களை கவனிக்காமல் ஊதாரித்தனமாக மனம் போனப்போக்கில் வாழ்பவர்களுக்கும் பின்வரும் நபிமொழி நல்லதோர் பாடமாகும்.

قَالَ اَلنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَ آلِهِ : خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ وَ أَنَا خَيْرُكُمْ لِأَهْلِي.

நபிகள் நாயகம்ﷺஅவர்கள் கூறினார்கள்: உங்களில் சிறந்தவர் அவருடைய குடும்பத்திற்கு சிறந்தவரே ஆவார், நான் என் குடும்பத்திற்கு சிறந்தவனாக இருக்கின்றேன்.

وقال صلى الله عليه وسلم: كفى بالمرء إثما أن يضيع من يقوت. رواه أحمد وأبو داود وغيرهما.

''தான் உணவளிக்க வேண்டியவருக்கு உணவளிக்காமல் இருப்பது ஒன்றே, மனிதனுக்கு பாவம் (செய்தவன்) என்பதற்கு போதுமாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு இப்னுல் ஆஸ்(ரலி)  அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 294)

குடும்ப தலைவனின் பொருளாதாரத்தில் முழுஉரிமை பெற்றவர்கள் மனைவி,மக்கள்,பெற்றோர்களே ஆவார்கள்.இவர்களின் செலவினங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்வது குடும்பதலைவரின் மீது கடமையாகும்.

குர்ஆனில்...

  وَعَلَى الْمَوْلُوْدِ لَهٗ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوْفِ‌ 

 (ஷரீஅத்தின்) முறைப்படி அவர்களுக்கு உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்; (அல்குர்ஆன் : 2:233)

ஒரு குடும்பத்தலைவர் குடும்பச் செலவுக்கு பணம் தராவிட்டால், அவருக்குத் தெரியாமல் ஒரு குடும்பத்தலைவி தனக்கும், தன் குழந்தைகளுக்கும் வேண்டியதை நியாயமான முறையில் எடுத்துக் கொள்ளும் உரிமை அவளுக்கு உண்டு. அவளின் மீது குற்றமேதுமில்லை என்பதையும் இஸ்லாம் தெளிவுபடுத்துகிறது.

عن عائشة ـ رضي الله عنها: أن هند بنت عتبة قالت يا رسول الله إن أبا سفيان رجل شحيح وليس يعطيني ما يكفيني وولدي إلا ما أخذت منه وهو لا يعلم، فقال: خذي ما يكفيك وولدك بالمعروف. متفق عليه.

 ஒரு முறை ஹிந்த் பின்த் உத்பா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் “இறைத்தூதர் அவர்களே! என் கணவர் அபூசுய்யான் (ரலி) கருமியான மனிதர். எனக்கும் என் குழந்தைக்கும் போதுமான (பணத்)தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டதைத் தவிர (போதுமான தொகையை அவராகத் தரமாட்டார்)’ என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘உனக்கும், உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக் கொள்’ என்று கூறினார்கள்.” (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

ஒரு குடும்பத்தலைவர் எவ்வாறு பொறுப்பாக தமது குடும்பத்தாருக்கு செலவு செய்யவேண்டும் என இஸ்லாம் அழகிய முறையில் வழிகாட்டுகிறது. அவர் தம் குடும்பத்தாருக்கு செலவு செய்வதும் தர்மமே! நன்மையே! அறமே!

عَنْ أَبِي مَسْعُودٍ الْبَدْرِيِّ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ : الْمُسْلِمُ إِذَا أَنْفَقَ نَفَقَةً عَلَى أَهْلِهِ وَهُوَ يَحْتَسِبُهَا فَهِيَ لَهُ صَدَقَةٌ". (مسند الدارمي، باب في النفقة علی العیال: ۳/۱۷۴۳، ط:دارالمغنی)

 ‘இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு முஸ்லிம் தம் குடும்பத்தாருக்குச் செலவிட்டால், அதுவும் அவருக்கு தர்மமாக அமையும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி) 

ஊருக்கு வாரி வாரி வழங்கிவிட்டு, குடும்பத்தை அம்போ என்று விட்டுவிடக்கூடாது. ஊருக்கு வாரி வழங்கும் முன்பு தமது குடும்பத்தினருக்கு வழங்கிட வேண்டும். தர்மத்தை கூட முதலில் வீட்டிலிருந்து தான் தொடங்கிட வேண்டுமென இஸ்லாம் கூறுகிறது.

عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " دِينَارٌ أَنْفَقْتَهُ فِي سَبِيلِ اللَّهِ، وَدِينَارٌ أَنْفَقْتَهُ فِي رَقَبَةٍ، وَدِينَارٌ تَصَدَّقْتَ بِهِ عَلَى مِسْكِينٍ، وَدِينَارٌ أَنْفَقْتَهُ عَلَى أَهْلِكَ، أَعْظَمُهَا أَجْرًا الَّذِي أَنْفَقْتَهُ عَلَى أَهْلِكَ 

வீட்டாரிடமிருந்தே உன் தர்மத்தை தொடங்கு! என நபி (ஸல்) கூறினார்கள்’. 

"விட்டாரில் நீ செலவளிப்பதே கூலியால்  மிக உயந்தது"(அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

வசதியுள்ளவர் தமது வசதிக்கேற்ப செலவு செய்யட்டும். யாருக்குச் செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவு செய்யட்டும் என்கிறது அருள்மறை...

لِيُنْفِقْ ذُوْ سَعَةٍ مِّنْ سَعَتِهٖ‌ وَمَنْ قُدِرَ عَلَيْهِ رِزْقُهٗ فَلْيُنْفِقْ مِمَّاۤ اٰتٰٮهُ اللّٰهُ‌ لَا يُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا مَاۤ اٰتٰٮهَا‌ سَيَجْعَلُ اللّٰهُ بَعْدَ عُسْرٍ يُّسْرًا‏

தக்க வசதியுடையவர்கள், தம் வசதிக்கேற்ப (இவ்விஷயத்தில்) செலவு செய்து கொள்ளவும்; ஆனால், எவர் மீது அவருடைய உணவு (வசதி) நெருக்கடியாக்கப் பட்டுள்ளதோ, அவர் தமக்கு அல்லாஹ் கொடுத்ததிலிருந்து செலவு செய்து கொள்ளவும்; எந்த ஆத்மாவையும் அல்லாஹ் அதற்குக் கொடுத்திருப்பதேயல்லாமல் (மிகையாக செலவு செய்யும் படி) சிரமப்படுத்த மாட்டான்; கஷ்டத்திற்குப் பின்னர், அல்லாஹ் அதி சீக்கிரத்தில் இலகுவை (சுகத்தை) உண்டாக்கியருள்வான்.(அல்குர்ஆன் : 65:7)

وَعَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رضي الله تعالى عنه قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَنَا ذُو مَالٍ، وَلَا يَرِثُنِي إِلَّا ابْنَةٌ لِي وَاحِدَةٌ، أَفَأَتَصَدَّقُ بِثُلُثَيْ مَالِي؟ قَالَ: لَا، قُلْتُ: أَفَأَتَصَدَّقُ بِشَطْرِهِ؟ قَالَ: لَا، قُلْتُ: أَفَأَتَصَدَّقُ بِثُلُثِهِ؟ قَالَ: الثُّلُثُ، وَالثُّلُثُ كَثِيرٌ، إِنَّكَ أَنْ تَذَرَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَذَرَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ. مُتَّفَقٌ عَلَيْهِ

உமது வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விட பிறரிடம் தேவையற்றவர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது. என்கிறது நபிமோழி.

عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّهُ أَخْبَرَهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:" إِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللَّهِ إِلَّا أُجِرْتَ عَلَيْهَا حَتَّى مَا تَجْعَلُ فِي فَمِ امْرَأَتِكَ"

இறைஉவப்பை நாடி நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி. அதற்கு உமக்கு நன்மை கிடைக்கும்; நீர் உம் மனைவியின் வாயில் ஊட்டுகிற ஒரு கவள உணவுக்கும் கூட நன்மையுண்டு’ என நபி (ஸல்) அவர்கள் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களுக்குத் தெரிவித்தார்கள்’. (நூல்: புகாரி)

குடும்பத்திற்குச்செலவு செய்வதன் சிறப்பை அறிந்து கொள்ள அபூதல்ஹா (ரலி) அவர்களின் தியாகத்தை எடுத்துச் சொல்கிற சம்பவம் நல்ல சிறந்த உதாரணம்.

عن إسحاق بن عبد الله بن أبي طلحة أنه سمع أنس بن مالك يقول : كان أبو طلحة أكثر أنصاري بالمدينة مالا من نخل ، وكان أحب أمواله إليه بيرحاء ، وكانت مستقبلة المسجد ، وكان رسول الله - صلى الله عليه وسلم - يدخلها ، ويشرب من ماء فيها طيب ، قال أنس : فلما نزلت لن تنالوا البر حتى تنفقوا مما تحبون قام أبو طلحة ، فقال : يا رسول الله إن الله يقول : لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وإن أحب أموالي بيرحاء ، وإنها صدقة لله أرجو برها وذخرها عند الله ، فضعها يا رسول الله حيث شئت ، قال : فقال رسول الله - صلى الله عليه وسلم - : بخ ذلك مال رابح ، ذلك مال رابح ، وقد سمعت ما قلت ، وإني أرى أن تجعله في الأقربين ، فقال أبو طلحة : أفعل يا رسول الله ، فقسمها أبو طلحة بين أقاربه وبني عمه .

அனஸ் பின் மாலிக் (ரலி) கூறியதாவது:

அன்ஸாரிகளில் அபூதல்ஹா (ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரது செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிது(ந் நபவீ பள்ளிவாசலு)க்கு எதிரில் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள நல்ல தண்ணீரைக் குடிப்பது வழக்கம்.

“நீங்கள் நேசிக்கும் பொருட் களிலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் நன்மையை அடையவே மாட்டீர்கள்” என்ற (3:92) இறை வசனம் இறங்கியதும், அபூதல்ஹா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹு தஆலா, “நீங்கள் நேசிக்கும் பொருட் களிலிருந்து தர்மம் செய்யாதவரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள்” எனக் கூறுகிறான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைருஹா என்னும் தோட்டமேயாகும். அது அல்லாஹ்விற்காக தர்மம் ஆகட்டும்! நான் அதன் மூலம் அல்லாஹ்விடம் நன்மையையும் அது (அவனிடம் எனது மறுமை வாழ்வின் நலனுக்கான) சேமிப்பாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறேன். எனவே “அல்லாஹ்வின் தூதரே! அதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” எனக் கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் “ஆஹா! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! நீர் கூறியதை நான் நன்றாகவே செவியேற்று விட்டேன். நீர் அதை உமது நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் உசிதமாகக் கருதுகின்றேன்” எனக் கூறினார்கள்.

அதற்கு அபூதல்ஹா (ரலி) “அல்லாஹ்வின் தூதரே! நான் அவ்வாறே செய்கிறேன்!” எனக் கூறிவிட்டு, அத்தோட்டத்தைத் தமது நெருங்கிய உறவினருக்கும் தமது தந்தையுடன் பிறந்தவரின் குழந்தைகளுக்கும் பங்கிட்டுவிட்டார்.

குடும்பத்திற்காக செலவு செய்தலின் அவசியம்

ஒவ்வொரு முஸ்லிமும் தமது அன்றாட வாழ்வியல் செயல்முறைக்கு திருக்குர்ஆன் வழிகாட்டலையே பின்பற்ற வேண்டும். அதில் முக்கிய பங்கு வகிப்பது, வாழ்வாதாரத்துக்கு உணவு, உடை, உறைவிடம் என மனிதனின் முக்கியத் தேவை பொருளாதாரமாகும்.

اِنَّ رَبَّكَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُ‌ اِنَّهٗ كَانَ بِعِبَادِهٖ خَبِيْرًا بَصِيْرًا‏

நிச்சயமாக உம்முடைய இறைவன் தான் நாடியவருக்கு விசாலமாக உணவு (சம்பத்து)களை வழங்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவாகவும் கொடுக்கிறான் - நிச்சயமாக அவன் தன் அடியார்(களின் இரகசிய பரகசியங்)களை நன்கு அறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.  (அல்குர்ஆன் : 17:30)


سَمِعَ أَبَا مَسْعُودٍ الْبَدْرِيَّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" نَفَقَةُ الرَّجُلِ عَلَى أَهْلِهِ صَدَقَةٌ "".

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

ஒருவர் தன் குடும்பத்தினருக்காகச் செய்யவும் செலவும் தர்மமே ஆகும். 

இதை பத்ருப் போரில் பங்கெடுத்தவரான அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.     (ஸஹீஹ் புகாரி : 4006. )

மனைவி மக்களைக் கவனிப்பது கணவனுக்குக் கட்டாயக் கடமை. கடமையை நிறைவேற்றிய நன்மையும் கிடைக்கும். கூடுதலாக தர்மம் செய்த நன்மையையும் இறைவன் தருகிறான் என்பதைத்தான் நபியவர்கள் இப்படிக் கூறுகிறார்கள். அதே நேரத்தில் நமது குடும்பத்தைச் சாராத நபர்களில் ஏழைகளுக்கும் இல்லாதவர்களுக்கும் கொடுத்தால் அதற்கு தர்மத்தின் நன்மை மட்டும்தான் கிடைக்கும். ஆனால் குடும்பத்திற்குச் செலவளித்தால் இரட்டை நன்மைகள் கிடைக்கிறது.

எனவே கணவன்மார்கள் செலவு செய்யும் போது அடிக்கடி தாங்கள் செலவு செய்வதைக் குத்திக்காட்டி, எடுத்தெறிந்து பேசிவிடக் கூடாது. ஏனெனில் அப்படி நமது செலவைச் சொல்லிக் காட்டிக் கொண்டிருந்தால் நாம் இறைவன் சொன்னதற்காகச் செய்யவில்லை என்றாகிவிடும். மறுமையில் எந்த நன்மையும் கிடைக்காமல் போய்விடும் என்பதைக் கவனத்தில் கொண்டு குடும்பத் தலைவர்கள் செலவு செய்திட வேண்டும்.

தன்னிறைவு பெற்ற நிலையில் குடும்பத்தை விட்டுச்செல்லுதல்

عَنْ سَعْد ٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعُودُنِي وَأَنَا مَرِيضٌ بِمَكَّةَ، فَقُلْتُ لِي مَالٌ أُوصِي بِمَالِي كُلِّهِ قَالَ "" لاَ "". قُلْتُ فَالشَّطْرُ قَالَ "" لاَ "". قُلْتُ فَالثُّلُثُ قَالَ "" الثُّلُثُ، وَالثُّلُثُ كَثِيرٌ، أَنْ تَدَعَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَدَعَهُمْ عَالَةً، يَتَكَفَّفُونَ النَّاسَ فِي أَيْدِيهِمْ، وَمَهْمَا أَنْفَقْتَ فَهُوَ لَكَ صَدَقَةٌ حَتَّى اللُّقْمَةَ تَرْفَعُهَا فِي فِي امْرَأَتِكَ، وَلَعَلَّ اللَّهَ يَرْفَعُكَ، يَنْتَفِعُ بِكَ نَاسٌ وَيُضَرُّ بِكَ آخَرُونَ "".

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது„

நான் மக்காவில் நோய்வாய்ப்பட்டிருந்த போது, நபி (ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரித்து வந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் செல்வம் உள்ளது. எனது செல்வம் முழுவதையும் (தர்மத்திற்காக) நான் மரண சாசனம் செய்து விடட்டுமா? என்று கேட்டேன். அவர்கள், வேண்டாம் என்று பதிலளித்தார்கள். நான் பாதியை (மரணசாசனம் செய்துவிடட்டுமா)? என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் வேண்டாம் என்று சொன்னார்கள். நான், (அப்படியென்றால்) மூன்றிலொரு பங்கை (நான் மரணசாசனம் செய்யட்டுமா)? என்று கேட்டேன். அதற்கவர்கள் மூன்றிலொரு பங்கா! மூன்றிலொரு பங்குகூட அதிகம்தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதைவிட அவர்களைத் தன்னிறைவு கொண்டவர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும். நீங்கள் (அவர்களுக்காக) எதைச் செலவு செய்தாலும் அது நீங்கள் செய்த தர்மமே. எந்த அளவிற்கென்றால் நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் இடுகின்ற ஒரு கவளம் உணவும் கூட (தர்மமாகவே உங்களுக்கு எழுதப்படும்) அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை அளிக்கக்கூடும். அப்போது மக்கள் சிலர் உங்களால் பயன் அடைந்திடவும்., வேறு சிலர் உங்களால் இழப்புக்குள்ளாகவும் கூடும் என்று சொன்னார்கள்.        (ஸஹீஹ் புகாரி : 5354. )

சேமிப்பின் அவசியம்

ஒவ்வொருவருக்கும் சேமிப்பு என்பது அவசியம்.

சேமிப்பு எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம் பணமாக, தங்கமாக, நிலமாக என்று எது சரிப்பட்டு வருகிறதோ லாபம் என்று தோன்றுகிறதோ அந்த வகையில் உங்கள் சேமிப்பை தொடரலாம்.

சில நேரங்களில் சேமிப்பிற்காகப் பணம் ஒதுக்குவது கடுப்பாகவே இருக்கும், அதுவும் பணப் பற்றாக்குறையான சமயங்களில்

இதுக்கு வேற மாசாமாசம் கொடுக்க வேண்டியதாக இருக்குதே! என்று எரிச்சலாக இருக்கும்.

நமக்கு இந்தப்பணம் மொத்தமாகக் கிடைக்கும் போது தான், இதனுடைய அருமை புரியும்.

قَالَ تَزْرَعُوْنَ سَبْعَ سِنِيْنَ دَاَبًا‌ فَمَا حَصَدْتُّمْ فَذَرُوْهُ فِىْ سُنْبُلِهٖۤ اِلَّا قَلِيْلًا مِّمَّا تَاْكُلُوْنَ‏

பஞ்சத்தை எதிர்கொள்வதற்காக யூசுப் (அலை) அவர்களின் திட்டமும் இதனையே சுட்டிநிற்கிறது. அவர் தொடராகப் பயிரிட்டார். வளமான ஏழு வருடங்களின் அறுவடையை சேமித்தார். சிக்கனமாகவே பயன்படுத்தினார். 'நீங்கள் ஏழு வருடங்களுக்குத் தொடராக விவசாயம் செய்வீர்கள். உண்பதற்காக பயன்படுத்தும் சிறிய பகுதியைத் தவிர பெரிய பகுதியை அறுவடை செய்யாது கதிர்களிலே விட்டு விடுங்கள்' (12.47)

அறுவடை செய்யாது கதிர்களிலே விட்டு விடுதல் என்பது சேமிப்பதற்கும், பஞ்சமான காலத்தில் தேவைப்படும் போது பயன்படுத்வதற்குமான உத்தியாகும்.

وَاَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلٰمَيْنِ يَتِيْمَيْنِ فِى الْمَدِيْنَةِ وَكَانَ تَحْتَهٗ كَنْزٌ لَّهُمَا وَكَانَ اَبُوْهُمَا صَالِحًـا  فَاَرَادَ رَبُّكَ اَنْ يَّبْلُغَاۤ اَشُدَّهُمَا وَيَسْتَخْرِجَا كَنْزَهُمَا   رَحْمَةً مِّنْ رَّبِّكَ‌‌  وَمَا فَعَلْتُهٗ عَنْ اَمْرِىْ‌  ذٰ لِكَ تَاْوِيْلُ مَا لَمْ تَسْطِعْ عَّلَيْهِ صَبْرًا ‏( 18:82) 

சூறா கஹ்பில் மூஸா (அலை) அவர்களும் அறிவுள்ள ஒரு நல்ல மனிதரும் சென்ற பயணத்தின் போது ஒரு சிறந்த பெற்றார் தனது பிள்ளைகளின் நலன் நாடி மறைத்து சேமித்து வைத்திருந்த புதையலை பற்றிய விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கைபரில் கிடைத்தவை மூலம் ஒரு வருடத்துக்கு குடும்பத்துக்கு தேவையானவைகளை சேமித்து வைத்திருந்தார்கள்.

அன்னார் பனூ நழீர் கோத்திரத்தின் பேரீச்சம் பழங்களை விற்பனை செய்வார்கள். அதன் மூலம் ஒரு வருடத்துக்கு தேவையான உணவுப் பொருட்களை சேமிப்பார்கள்.

எனவே சேமிக்கப் பழகுங்கள்.

சேமிப்பது சிரமமா?

சேமிப்பது கடினம் என்று நினைக்கிறார்கள், இல்லவே இல்லை.

சேமிக்க ஆரம்பித்தால் நமக்கே தெரியாமல் பணம் சேர்ந்து விடும். சேமிக்க எவ்வளவோ வழிகள் இருக்கிறது.இதில் நமக்கு எது சரிப் பட்டு வருதோ அதில் நாம் இணையலாம்.

முதலில் பணம் கட்ட சிரமமாக இருக்கும், பின்னர் அது அப்படியே நமக்கு ஒரு பழக்கமாகி, சிரமமில்லாத ஒன்றாகி விடும்.

ஒரு நாள் பார்த்தால், அட! இவ்வளவு சேமித்து விட்டோமா! என்ற வியப்பாக இருக்கும்.பின்னர் ஏற்படும் பெரிய செலவிற்கு இந்தச் சேமிப்பு மிக உதவியாக இருக்கும்.

திட்டமிடுதல்.

وَشَاوِرْهُمْ فِى الْاَمْرِ‌ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ‌ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ‏

 சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.(அல்குர்ஆன் : 3:159)

திட்டமிடுதல் ரொம்ப முக்கியம். சரியான திட்டமிடுதல் இல்லை என்றால் எதுவுமே சரியாக வராது.

எனவே, நமது மாத பட்ஜெட் என்ன? அதில் எப்படி  செலவுகளைப் பிரிக்கலாம் என்பதை திட்டமிட வேண்டும்.

இதற்காகத் திட்டமிடும் போதே, நமது அனைத்து செலவிற்கும் சேர்த்து திட்டமிட வேண்டும், அப்போது தான் இறுதியில் பிரச்சனை இல்லாமல் இருக்கும்.

சம்பளம் வந்த முதல் இரண்டு வாரம் மகிழ்ச்சியாகவும் கடைசி இரண்டு வாரம் நெருக்கடியாகவும் ஆவதற்கு திட்டமிடுதல் இல்லாமையே காரணம்.

புதுச் செலவை என்ன செய்வது?

திட்டமிட்டுத் தான் செய்கிறோம் ஆனால், சில நேரங்களில் திட்டமிடுதலில் இல்லாத செலவுகளும் திடீர் என்று வந்து விடுகின்றன, அப்போது என்ன செய்வது?

என்ன தான் திட்டமிட்டாலும், சில நேரங்களில் நம்மையும் மீறி புதிய அத்தியாவசிய செலவுகள் [நண்பர்கள் திருமணம், மருத்துவம், பரிசுப்பொருள்] வந்து விடும்.

இந்த நேரங்களில் நமது சேமிப்பில் இருந்து எடுக்கலாம் அல்லது நண்பர்களிடையே கடனாகப் பெற வேண்டியது இருக்கும்.

இது போல் என்ன செலவானாலும் அடுத்த மாதத்தில் குறைக்கக்கூடிய செலவுகளில் கையை வைத்துத் தான் ஆக வேண்டும், அப்போது தான் சமாளிக்க முடியும், இல்லை என்றால் கடன் என்பது தொடர் கதையாகி விடும்.

நம்மால் திரும்பக் கொடுக்க முடியும் என்றால் மட்டுமே கடன் வாங்குவது  நல்லது.

ஆசைப்படலாமா?

என்றுமே வரவுக்கு மீறிச் செலவு செய்யவே கூடாது, இவ்வாறு செய்யப்படும் செலவுகளே நம்மைச் சிக்கலில் மாட்டி விடும்.

ஆசைப்படலாம்! ஆனால், அதற்குண்டான நம் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது சம்பாதிக்கும் திறனை அதிகரிக்க வேண்டும்.

அதாவது நம்மில் பெரும்பாலனர்கள் வாங்கும் சம்பளமே போதும்! என்று அடுத்த கட்டத்திற்கு செல்ல முயற்சிக்கவே மாட்டார்கள்.

காலம் முழுவதும் ஒரே நிலையிலிருந்து, அதே நிலையிலேயே தங்கள் வாழ்வை முடித்துக்கொள்வார்கள்.

எப்பப்பார்த்தாலும் பஞ்சப்பாட்டாகவே இருக்கும். இதை எப்படி கடந்து வருவது?

முதலில் நாம் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்பதைக் கண்டறிய வேண்டும்.

இதற்கு முதல் எதிரி சோம்பேறித்தனம், முயற்சியின்மை. கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. நல்ல நிலைக்கு வர வேண்டும் என்றால், கடுமையா உழைக்கணும்.

وَاَنَّ سَعْيَهٗ سَوْفَ يُرٰى‏

அன்றியும், நிச்சயமாக அவன் முயற்சி(யின் பலன்) பின் அவனுக்குக் காண்பிக்கப்படும்.(அல்குர்ஆன் : 53:40)

எனவே, எப்போதுமே ஒரு நிலையில் இருப்பதை தொடராமல், அடுத்த கட்டத்திற்கு செல்வது எப்படி? என்பதை யோசித்து அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபடலாம்.

வீண் விரயம் வேண்டாம்.

اِنَّ الْمُبَذِّرِيْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّيٰطِيْنِ‌  وَكَانَ الشَّيْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا‏

நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.(அல்குர்ஆன் : 17:27)

ஆகவே, “நிச்சயமாக வீண் விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாவே இருக்கின்றனர் என்று ஊதாரித்தனமாக செலவு செய்பவர், ஷைத்தானின் சகோதர ராவார்” என ஊதாரியை ஷைத்தானோடு இணைத்து திருக்குர்ஆன் வசனம் குறிப்பிடுகிறது.(நூல்: புகாரி)

அல்லாஹ் நம் குடும்பத்திற்காக நிரந்தரமாக செலவு செய்யும் பாக்கியத்தையும் செல்வத்தையும் தந்தருள்வானாக! ஆமின்...

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.


Wednesday, 20 December 2023

ஜும்ஆ பயான் 22/12/2023

தலைப்பு: 

காக்கப்பட வேண்டிய வக்ஃபு சொத்துக்கள்.


"வக்ஃப்"என்றால் என்ன?

"வக்ஃப்"وقف இஸ்லாமிய சட்டத்திட்டங்களில் ஒரு முக்கிய பகுதியாகும், 

இஸ்லாமிய வளரும் தலைமுறையினர்,வருங்கால சந்ததியினரின் வாழ்வின் ஈடேற்றத்திற்கு  வக்ஃப் பிரகாசமான பக்கமாக அமைகிறது. 

ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு நாட்டிலும் முஸ்லிம்கள், சமுதாயத்தின் நல்ல பல நோக்கங்களுக்காக வக்ஃப் எனும் தானத்தை வழங்கியுள்ளனர்.

"வக்ஃப்"وقف என்பது ஏழை, எளியவர்களுக்கு மட்டுமல்ல,  public works ஏழை, பணக்காரன் என்கிற பாகுபாடு இல்லாமல்  அனைவருக்கும் பயனளிக்கும் பொதுப்பனி என்பதே  இதன் நோக்கமாகும்.

வக்ஃப் என்பதன் பொருள்: வக்ஃப் என்பதன் வரையறை, சொத்தின் லாபத்தை அனைவருக்கும் அல்லது ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு உரிமையைத் தடுத்துவைத்துக்கொள்வதாகும்.அதை விற்கவோ மாற்றவோ முடியாது.

வக்ஃப் وقف என்பது وقف یقف ،وقفاََ وقوفاََ  என்கிற அரபி மூலச் சொல்லிலிருந்து பிறந்ததாகும்.இதன் அசல் பொருள்:الحبس والمنع அதாவது நிறுத்துதல், பிணைத்தல், எவராவது மூன்றாம் நபருக்குச் சொந்தமாவதைத் தடுப்பது. 

வக்ஃபின் சட்டம்:

வக்ஃப் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம்,  وقف تام(அதாவது முழுமையான) வக்ஃப் அவசியமாகும் . அதனால் அதை விற்பது, பரிசளிப்பது போன்றவை ஹராமும்,ஷரிஆ சட்டத்திற்கு புறம்பானதும் ஆகும்.

ففي الصحيحين أن عمر رضي الله عنه قال: يا رسول الله ! إني أصبت مالاً بخيبر لم أصب قط مالاً أنفس عندي منه؛ فما تأمرني فيه ؟ قال: (إن شئت حبست أصلها وتصدقت بها, غير أنه لا يباع أصلها ولا يوهب ولا يورث)

உமர் (ரலி) அவர்களின் வக்ஃபின் மூலம் அதற்குரிய சட்டங்களை அறிய முடிகிறது. உமர் (ரலி) அவர்கள் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றுக் கொண்டார்கள். நபியவர்களிடம் வந்து இப்பொழுது நான் ஒரு நிலத்தைப் பெற்றிருக்கிறேன். இதைவிட விலையுயர்ந்த ஒரு நிலத்தை நான் பெற்றதில்லை. எனவே தங்களது உத்தரவின் படி செயல்படுகிறேன், என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் விரும்பினால் அதன் அடிமனையை தடுத்து வைத்துக்கொண்டு (அதிலிருந்து வரும் லாபத்தை) தர்மம் செய்து விடுங்கள், என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்களும் அவ்வாறே தர்மம் செய்து விட்டார்கள். இந்நிலம் விற்கப்படக் கூடாது; அன்பளிப்பாக வழங்கடக்கூடாது; வாரிசுரிமை கோரப்படக்கூடாது, என்று கூறி ஏழைகள், உறவினர்கள், அடிமைகள், விருந்தாளிகள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்கும் அல்லாஹ்வின் பாதையிலும் செலவிடப்பட வேண்டுமென்று தர்மம் செய்து விட்டர்கள். அந்நிலத்தின் பொறுப்பாளர் நடைமுறையில் அறியப்பட்ட விதத்தில் சாப்பிட்டுக்கொள்ளலாம். நண்பருக்கு உணவளிக்கலாம். ஆனால் அதைக் கொண்டு சொத்து சேகரிப்பவராக இருக்கக் கூடாது, என்று கூறினார்கள். (புகாரி) 

இஸ்லாத்தின் முதல் வக்ஃப் நபி முஹம்மது ﷺ அவர்களால் செய்யப்பட்டது.நபி ﷺ ஏழு தோட்டங்களை வக்ஃப் செய்தார், இது இஸ்லாத்தின் முதல்  வக்ஃப் ஆகும். இந்த ஏழு தோட்டங்களும் உஹத் போரில் முஸ்லிம்களால் போரிட்டு கொல்லப்பட்ட "முகைரிக்" என்ற ஒரு  யூதருக்கு சொந்தமானதாகும். அவன் "நான் இறந்தால் எனது செல்வம் (சொத்து) ஹஸ்ரத் முஹம்மத்ﷺஅவர்களுக்கு சொந்தமாகட்டும்.அதனை .அல்லாஹ்வின் விருப்பப்படி செலவு செய்யட்டும்."என்று அவர் உயில் எழுதி வைத்திருந்தார்.

இஸ்லாத்தில் இரண்டாவது வக்ஃப் ஹஸ்ரத் உமர் பாரூக் (ரலி)அவர்களால் செய்யப்பட்டது. அதன் பிறகு நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நபித்தோழர்கள் பல வக்புகளை அளித்தனர்.

வக்ஃபின் நோக்கம்:

இஸ்லாத்தின் நிதிஅமைப்பில் பொருளாதார ஸ்தரத்தன்மைக்கு வக்ஃப் ஒரு அடிப்படை இடத்தைப் பெற்றுள்ளது.

இஸ்லாமிய வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும், ஏழை, எளியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறவும், முஸ்லிம்களை அறிவியல் மற்றும் கலை,கல்வி முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டது. 

நோயுற்றோர் மற்றும் துன்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், 

கல்விமான்களுக்கு உதவவும், அறிவு ஜீவீகளின்  நிதி ஆதரத்திற்கும் இஸ்லாமிய வக்ஃப் மிக முக்கியப் பங்காற்றியுள்ளது.

வக்ஃபு சொத்தின் நிபந்தனைகள்.

ஒரு முஸ்லிம் தன்னுடைய சொத்துக்களை இறைவனுக்காக வக்ஃபு என்ற செய்து விட்ட பிறகு அவரோ, அவருடைய வாரிசுகளோ அந்தச் சொத்துக்களின் நிர்வாகிகளாக இருக்க முடியுமே தவிர, அதை வாரிஸ்தாரர்களோ அல்லது தனிநபரோ அல்லது ஆட்சியாளர்களோ உரிமைக் கொண்டாடமுடியாது.

ஒருவேளை ஆட்சியாளர்கள் வக்ஃபு  சொத்துக்களை தனி உரிமை கொண்டாடினால் அவர்களை எதிர்த்து போராடுவது முஸ்லிம்கள் மீது அவசியம்.

أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ وَضَعَ رِجْلَهُ فِي الْغَرْزِ، أَيُّ الْجِهَادِ أَفْضَلُ؟ قَالَ: «كَلِمَةُ حَقٍّ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ»

ஒருவர் தன்னுடைய காலை அங்கவடியில் (குதிரையில் ஏறுவதற்கு உதவும் வளையம்) வைத்துக் கொண்டு. “ஜிஹாதில் சிறந்தது எது?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அநியாயக்கார அரசனிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்” என்று பதிலளித்தார்கள். (நூல் : நஸாயீ- (4138)

அல்லாஹ்வின் சட்டத்தை மாற்றுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.

வக்ஃப் வாரியம் என்றால் என்ன?

வக்ஃபு வாரியம் எதற்காக ஏற்படுத்தப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். வெகு காலத்துக்கு முன், முஸ்லிம் செல்வந்தர்களும், முஸ்லிம் மன்னர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான சொத்துக்களை இறைவனுக்குத் தானமாகக் கொடுத்தனர். இப்படிப்பட்ட சொத்துக்கள்தான் வக்பு வாரியத்தின் சொத்துக்கள் என்று சொல்லப்படுகின்றன. இந்த சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு, முஸ்லிம் மக்கள் நலனுக்கான காரியங்களை, ஏழை-எளியோர் பயன்பெறும் வகையில் செய்ய வேண்டும் என்பதுதான் அடிப்படை நோக்கம். பள்ளிவாசல் பராமரிப்பு, தர்கா பராமரிப்பு, முஸ்லிம் மக்களின் கல்வி மேம்பாடு போன்றவற்றுக்காகச் செலவிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, இப்படிப்பட்ட சொத்துகள் பழங்காலத்தில் தானமாக வழங்கப்பட்டன.

தானமாக வழங்கப்பட்ட இடங்களின் பராமரிப்பையும் கண்காணிப்பையும் வக்பு வாரியம் செய்தாலும், இடங்களை வழங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பல காலமாகச் சொத்துக்களைப் பராமரித்துவந்தார்கள். அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை வக்பு வாரியத்திடம் சேர்த்தார்கள். இப்படிச் சொத்துக்களைப் பராமரிப்போரை முத்தவல்லிகள் என்று குறிப்பிடுகின்றனர். இந்த முத்தவல்லிகளை அறங்காவலர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர்.

முற்காலத்தில் இந்த சொத்துக்களெல்லாம் உயர்ந்த நோக்கங்களுக்காகத் தானமாக வழங்கப்பட்டாலும் தானமாக வழங்கிய பெரியோர்களின் வாரிசுகளே, அந்தச் சொத்துக்களைத் தங்கள் பெயருக்கு மாற்றிக்கொண்டதும், பிறருக்கு விற்பதும் சில இடங்களில் நடந்தது.

இப்படிப்பட்ட செயல்பாடுகளைக் கண்காணித்து, முத்தவல்லிகளை ஒழுங்காகச் செயல்பட வைக்க 1954-ல் உருவாக்கப்பட்டதுதான் வக்பு வாரியம். ஒன்றிய - மாநில அரசுகள் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த வக்பு வாரியம், 

முஸ்லிம் பெரியவர்கள் இறைப் பணிக்காக வழங்கிய பெரும் சொத்துக்களைப் பராமரித்துக் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றது.

வக்ஃப் வாரியம் கடந்து வந்த பாதை.

இந்திய முஸ்லீம்களின் எழுச்சி,தொடர் போராட்டங்களின் எதிரொலியாக  அன்றைய காங்கிரஸ் அரசு 1954 வக்ஃப் சட்டம் என்று ஒரு நொண்டி வக்ஃப் சட்டத்தை உருவாக்கியது, இது முதன்முதலில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களால்  பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது, அதில் ஏராளமான ஓட்டைகளும்,குறுக்கு வழிகளும்  இருந்தன. 

இந்த சட்டத்துக்கு எதிராக முஸ்லீம்கள் தலைமையிலிருந்து எதிர்ப்பு குரல் எழுப்பிய போது காங்கிரஸ் அரசு, வக்ஃப் சட்டம் 1959தை இயற்றியது.முந்தைய சட்டத்தை போன்று பல குறைபாடுகள் இதிலும் இருந்தன.

அவற்றை நீக்க 1964ல் ஒரு சட்டம் இயற்றப்பட்டது.

அதன் பிறகு இறுதி திருத்தம் செய்து 1969ல் இயற்றப்பட்ட சட்டம் தொடர்ந்து 26 ஆண்டுகளாக நாட்டில் செயல்பாட்டில் இருந்தது.

மொத்த வக்ஃப் சொத்துக்கள்.

இந்தியாவின் சிறுபான்மை மக்களின் நலன்கள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட சச்சார் கமிட்டி, (2008) வக்பு வாரியச் சொத்துக்களின் நிலை குறித்தும் ஆராய்ந்தது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 7,452 வக்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான 53,834 சொத்துக்கள் இருக்கின்றன. இவற்றின் மதிப்பு பல லட்சம் கோடிகள் என்கிறார்கள். தமிழ்நாட்டின் பெருநகரங்களில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் வக்பு வாரியச் சொத்துக்களை மீட்க முடியாமல் வழக்குகள் போடப்பட்டு, நிலுவையில் உள்ளன. சில இடங்களில் அரசு சார்ந்த நிறுவனங்களே ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சொத்துக்கள் அனைத்தும் முறையாக மீட்கப்பட்டால், வாரியம் என்ன நோக்கத்துக்காக ஏற்படுத்தப்பட்டதோ, அது நிறைவேறும் என்று கமிட்டி தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியது. இதன் மூலம், கல்வி நிறுவனங்கள், சுகாதார மையங்கள், சமுதாய நலக்கூடங்கள் போன்றவற்றை ஏற்படுத்தி, ஏழை எளிய முஸ்லிம்களுக்கு உதவ முடியும் என்பது கமிட்டியின் பரிந்துரை. ஆனால் இன்று அவை அனைத்தும் கானல் நீராய் மாரிப்போய் விட்டது. 

وَلَا تَاْكُلُوْٓا اَمْوَالَـكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوْا بِهَآ اِلَى الْحُـکَّامِ لِتَاْکُلُوْا فَرِيْقًا مِّنْ اَمْوَالِ النَّاسِ بِالْاِثْمِ وَاَنْـتُمْ تَعْلَمُوْنَ‏

அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.    (அல்குர்ஆன் : 2:188)

فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ ظَلَمَ قِيدَ شِبْرٍ مِنَ الأَرْضِ طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ "".

 நபி(ஸல்) அவர்கள், 'ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்' என்று கூறினார்கள்.   (ஸஹீஹ் புகாரி : 2453.)

அடுத்தவர்களின் பொருளின் மீது அஞ்சி நடந்த நம் முன்னோர்கள்.

முஹத்திஸ்களின் அமீர் என்று போற்றப்பட்ட தபவுத்தாபியீன்களின் ஒருவராகிய அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஈராக் நாட்டை சேர்ந்தவர்கள்.

சிரியா தேசம் சென்று அங்கிருக்கின்ற முஹத்திஸ்கள் இடத்தில் பாடம் படித்துவிட்டு திரும்புகிறார்கள். தன்னுடைய பையை பிரிக்கும் போது அதில் எழுதக்கூடிய சிறிய குச்சி ஒன்று இருக்கிறது.

அப்போதுதான் ஞாபகம் வருகிறது. வகுப்பில் உட்கார்ந்து இருக்கும்போது தன்னுடைய குச்சி உடைந்து விட்ட காரணத்தால் தனக்கு அருகில் இருந்த ஒருவரிடம் இருந்து எழுதுகோலை இரவலாக வாங்கினார்கள். அதை அவர்கள் திரும்பி கொடுக்கவில்லை. மறந்துவிட்டார்கள். வகுப்பு முடிந்து மாணவர்கள் கலைந்து விடுகிறார்கள்.

இந்த நிலையில் அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அந்தக் குச்சியை எடுத்துக் கொண்டு ஈராக்கிலிருந்து சிரியா தேசம் சென்றார்கள். அந்த மஸ்ஜிதை தேடிச் சென்று அந்தக் குச்சியை யாரிடம் இருந்து பெற்றார்களோ அவர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டு குச்சியை கொடுத்துவிட்டு திரும்ப அவர்கள் ஈராக் வருகிறார்கள்.

இந்திய இஸ்லாமியர்களின் வக்ஃப் சொத்தும்,வக்ஃப் சட்டம்1995ஐ திரும்ப பெறும் மசோதவும்.

நம் இந்தியத்தாய் திருநாட்டில் 35 வக்பு வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன.கர்நாடக வக்பு வாரியம் நாட்டிலேயே அதிக வருவாய் ஈட்டக்கூடிய சிறந்த வக்ஃப் வாரியமாகும்.

நாட்டின் பிற மாநிலங்களைப் பொறுத்தவரை, ஒப்பபீட்டளவில் மகாராஷ்டிரா வக்ஃப் வாரியம் மிக மோசமான நிலையில் உள்ளது, 

அதிகளவில் சட்டவிரோத வக்ஃப் ஆக்கிரமிப்புகள் மகாராஷ்டிராவிலேயே நடந்துள்ளன.சில அரசியல் புள்ளிகள், மற்றும் வாரிய அதிகாரிகளின் துணையோடு

நாட்டின் பல இடங்களில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் நடந்துக்கொண்டே இருக்கின்றன.

தற்போதைய நாட்டின் வக்ஃப்  சொத்தின் மதிப்பு 1.20 லட்சம் கோடி அதாவது 12000 பில்லியன் டாலர் மதிப்புக்கு நிகர் ஆகும்.

இவற்றில் ஒரு பத்துசதவிகிதமாவது 10% அதாவது 12000 கோடியையாவது முஸ்லிம்களின் கல்வி, மருத்துவம் போன்ற சமூக மேம்பாடுகளுக்கு  முறையாக செலவிடப்பட்டால் அரசின் எந்த உதவியோ,ஒதுக்கீடோ இல்லாமலே தன்னிறைவான வளர்ச்சி அடைந்த சமூகமாக இஸ்லாமியர்கள் இருந்திருப்பார்கள்.(فکر وخبر۔آن لائن اخبار)

இந்தியாவில் வக்ஃபின் நிலை:

 நமது மாபெரும் இந்திய திருநாட்டில் வக்ஃப் விஷயத்தில் அரசு  தீவிரம் காட்டியிருந்தால், அதைப்பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமேயில்லாமல் போயிருக்கும்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது முஸ்லிம்களிடம் எதுவும் இல்லை.

சுதந்திரத்திற்குப் பிறகு நடந்த முடிவில்லாத கலவரங்களால் இஸ்லாமிய சமூகம் நிலைகுலைந்து போய் இருந்தது.

முஸ்லிம்களின் உயிரும், உடைமையும் ஈவு இரக்கமின்றி சூறையாடப்பட்டு, பெரும் நில உரிமையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி பாகிஸ்தானுக்கு குடி பெயர்ந்தனர். கோடிக்கணக்கான சொத்துக்களை ஏலம் விடப்பட்டன, எண்ணற்ற சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆயிரக்கணக்கான மஸ்ஜித்கள், தர்காக்கள், (கப்ருகள்)கல்லறைகள், மடங்கள், ஆஷுரா கானாகள், மதரஸாக்கள் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டன.முஸ்லிம்கள் சுதாரித்துக் கொள்வதற்குள்ளாக நிலைமை மிக மோசமாக கை மீறி விட்டிருந்தது.

முஸ்லீம் மன்னர்கள், ஆட்சியாளர்கள், நவாப்கள் மற்றும் செல்வந்தர்கள் முஸ்லிம்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக அர்ப்பணித்த வக்ஃப் நிலத்தை, அரசு பல இடங்களில் பெரிய கட்டிடங்கள் கட்டி, பல ஏக்கர் நிலங்களுக்கு வேலி அமைத்து,மூடிவிட்டன. 

வக்ஃப் நிலங்கள் மிகக் குறைந்த வாடகையில் ஆக்கிரமிக்கப்பட்டன.

இன்றும், அரசு தனது அலுவலகங்களை எண்ணற்ற வக்ஃப் சொத்துக்களில் ஆண்டு வாடகைக்கு ஒரு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை நடத்தி வருகிறது.

இறுதியாக வக்ஃப் சட்டம் 1995 ஐ அரசு, உருவாக்கியது.ஆனால் வழக்கம் போல் இந்த சட்டத்தில் பல பிரச்சனைகளும் சிக்கல்களும் இருப்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும்.

1995 சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்க துவங்கியதால் மற்றொரு சட்டத்தை அமைக்க வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. வக்ஃப் சட்டம் 2010 என்று பெயரிடப்பட்ட குழு அமைக்கப்பட்டது.

நிலத்தின் தற்போதைய சந்தைமதிப்பு, கடந்த கால நிலவரத்தை நாம் மதிப்பாய்வு செய்தால், கடந்த சில தசாப்தங்களில், நாட்டில் பன்னாட்டு நிறுவனங்களின் வருகையும் முதலீடும் நிலத்தின் விலையை விண்ணுக்கு உயர்த்தியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

 கார்ப்பரேட் கம்பெனி முதலீட்டாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இடம் கிடைப்பது கடினமாக இருந்த வேலையில். அரசு, சில சமயங்களில் வக்பு வாரியத்தின் அறங்காவலர்களிடமும், சில சமயங்களில் மத்திய வாரியம் முதல் மாநில வக்பு வாரியம் வரையிலான உயர் அதிகாரிகள் உட்பட அதிகாரிகளிடமும் வக்பு நிலங்களை  கேட்டு பெற்றன.

இதனால் ஏற்பட்ட மிக மோசமான விளைவு;

நாட்டின் பாரம்பரிய வக்பு சொத்தை  அரசும்,பன்னாட்டுநிறுவனங்களும்,தொழிற்சாலைகளும் நாசமாக்கின,

இதனை விடவும் மிகப் பெரிய இழப்பு. கோடிக்கணக்கான, ரூபாய் மதிப்புள்ள வக்பு சொத்துக்களை முஸ்லிம்களே விற்று நாசமாக்கினர் என்பது மிகவும் வருந்ததக்க செய்தியாகும்.

பல்வேறு குழுக்களை நிறுவுதல் மற்றும் அவற்றின் பரிந்துரைகள்.

வக்ஃப் சொத்துக்களின் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு குழுக்களை அமைத்தது. இதனுடன், பல கமிஷன்களும் வக்ஃப் விதிமுறைகளுக்கான ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் வழங்கின. இதில் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன், நீதிபதி ராஜேந்தர் சச்சார் கமிட்டி, தேர்வுக்குழு, பார்லிமென்ட் கூட்டுக்குழு போன்றவை அடங்கும்.

இந்தியாவில் வக்ஃப் சொத்துக்களுக்கு முறையான பாதுகாப்பு அளிக்கப்பட்டால், முஸ்லிம்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை குறிப்பிடத்தக்க அளவில் அடைய முடியும், அவர்களிலுள்ள  வறுமையை அகற்றி ஓரங்கட்டப்பட்டு முடிவுக்கு கொண்டுவரமுடியும். 

ஆனால் இது சாத்தியமாகுமா?அரசு மனது வைத்தால் சத்தியமாகும். இந்திய முஸ்லிம்களின்  வளர்ச்சியும் செழுமையும்,இந்தியாவின் செழுமையும், வளர்ச்சியும் வளமும் அல்லவா?

20 கோடி முஸ்லிம்கள் அப்படியே தனித்து விடப்பட்டு, அவர்களின் கல்வி, சமூக, பொருளாதார நிலைகளில் கவனம் செலுத்தவில்லை என்றால், அது நாட்டுக்கு பெருமையா?

வாகனத்தின் ஒரு சக்கரம் நன்றாகவும், மற்றொன்று பலவீனமாகவும் இருந்தால், உடலின் ஒரு உறுப்பு வலுவாகவும், மற்ற உறுப்பு செயலிழந்தும் பலவீனமாகவும் இருந்தால் அதனை என்னவென்று சொல்வது?

இந்திய முஸ்லிம்களின் கோரிக்கையும்,விரும்பமும் என்னவென்றால் நவாப்கள், மன்னர்கள், உன்னதமான தனவந்தர்கள்,  அர்ப்பணித்த வக்ஃப் சொத்துக்களுக்கு குறைந்தபட்சம் சட்ட உரிமையாவது கொடுக்கப்படவேண்டும், பல ஆண்டுகளாக அவற்றை அரசு வைத்திருக்கிறது, முஸ்லிம்களுக்கு நிலமோ,நிலம் சார்ந்த எந்த உரிமையும் இல்லை, 

குறைந்தபட்சம் தற்போதைய சந்தை நிலவர படி வாடகை நிர்ணயிக்கப்பட வேண்டும். வக்ஃப் சொத்துக்களில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை வைத்திருப்பவர்களை அகற்ற வேண்டும். பட்ஜெட்டில்  வக்ஃபிற்கு நிதிஒதுக்கப்படுகிறதா?தற்போது நாட்டில்,  இந்திய ரயில்வே மற்றும் பாதுகாப்புத் துறைக்கு அடுத்தபடியாக, அதிக பட்ச சொத்துக்கள்,நிலங்கள்,  வக்ஃப் வாரியத்திடம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

1996ல், ராஜ்யசபா தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. 2006ல் ராஜேந்திர சச்சார் கமிட்டி அமைக்கப்பட்டது.2008ல் பாராளுமன்ற  கூட்டுக்குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. அனைத்து கமிட்டிகளும் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளன.

சச்சார் கமிட்டி பரிந்துரைகள்:(வக்ஃபு சொத்துக்களை பாதுகாத்திட சச்சார் கமிட்டி முன்வைத்த பரிந்துரைகள்.)

1)நாட்டில் பரவலாக உள்ள  ஐந்து லட்சம் வக்ஃப் சொத்துக்களைப் பாதுகாக்கும் முறையை மேம்படுத்த வேண்டும், 

பொதுப்பணித்துறை, நீதி,நிர்வாக துறை அளவுக்கு வக்ஃப் வாரியத்தை முக்கியத்துவம் வாய்ந்த துறையாக ஆக்கப்படவேண்டும்.அதிகபட்ச முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். (2) சமூக நலன் தேசிய வக்ஃப் மேம்பாட்டுக் கழகம் அமைக்கப்பட வேண்டும்.

 (3) ஐந்து லட்சம் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத வரையறுக்கப்பட்ட வாடகை போன்ற சட்டங்களிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். 

(4) வக்பு வாரியத்துக்கு சட்டப்பூர்வ அமைப்பு என்கிற அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்

(5)ஓராண்டுக்குள் அரசால் பயன்படுத்தப்படாத வக்பு நிலத்தை வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், எண்ணற்ற அரசு நிறுவனங்கள் வக்ஃப் சொத்துக்களை கைவசம் வைத்திருப்பதாகவும், இன்னும் சில சதுர அடி கட்டிடங்கள் மட்டுமே அமைக்கப்பட்டு மீதமுள்ள நிலம் காலியாக இருப்பதும் குழுவின் கவனத்திற்கு வந்துள்ளது. 

6)அரசினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள (காணி)சொத்துக்கள், அங்கு அரச கட்டிடம் இல்லாத அல்லது காலியாகக் கிடக்கும் காணிகள் முஸ்லிம் கல்வி நிலையங்களுக்கும் பொது சுகாதார நிலையங்களுக்கும் தாமதமின்றி ஒப்படைக்க வேண்டும்.

 (7) அரசு ஆக்கிரமித்துள்ள சொத்துக்களை, 6(ஆறு)மாதத்திற்குள் காலி செய்து, கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வாடகையை மாற்றி, தற்போதைய சந்தை நிலவரப்படி வாடகை வழங்க வேண்டும்.

(8)வக்ஃப் வாரியத்தின் அனைத்து முடிவுகளும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் மற்றும் முஸ்லிம் தனிவாரிய சட்ட அமைப்பு மற்றும் இஸ்லாமிய சட்டங்களின்படி எடுக்கப்பட வேண்டும். இதற்கு முஸ்லிம் ஜமாஅத்துகளின் பிரதிநிதித்துவம் அவசியம் ஆகும்.

(9)எந்த ஒரு அரசியல் கட்சியின் தலைவரும் அல்லது உறுப்பினரும் வக்பு வாரியத்தின் தலைவராக இருக்கக்கூடாது என்பதில் முழு கவனம் செலுத்த வேண்டும்.

10) ஆட்சியர் மற்றும் ஆணையருக்கு ஒத்துழைக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும்.

 (11) வக்ஃப் வாரியத்தின் குத்தகை 11 மாதங்கள் மட்டுமே இருக்க வேண்டும். மற்றும் வக்பு வாரியத்தின் அறிவிப்பின் பேரில் உடைமைகளை காலி செய்யும் அதிகாரம் வக்பு வாரியத்திற்கு வழங்கப்பட வேண்டும்.

ஜே.பி.சி.யின் பரிந்துரைகள்:

1)அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் அமைச்சர்களின் தலையீட்டைத் தடுக்க, குத்தகை அதிகாரம் வக்ஃப் வாரியத்திற்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

 (2) வக்ஃப் சர்வே கமிஷன் நியமனம் கட்டாயமாக்கப்பட வேண்டும். 

(3)வக்ஃப் சொத்துக்கள் கணக்கெடுப்பில் ஆகஸ்ட் 15, 1947ல்  உள்ள படி அனைத்து வக்ஃப் நிலங்களும் சேர்க்கப்பட வேண்டும்.

 (4)மத்திய வக்ஃப் கவுன்சிலின் தலைவர் பதவியை எந்த அமைச்சருக்கும் வழங்கப்படக்கூடாது , ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது பல்கலைக்கழக துணைவேந்தர் தலைவராக நியமிக்கப்பட வேண்டும். 

5) மத்திய வக்ஃப் கவுன்சில் செயலாளருக்கு இந்திய அரசின் இணைச் செயலாளர் அந்தஸ்து வழங்கப்படுவதன் மூலம் அரசு அதிகாரிகளின் தலையீடுகளை தடுக்க முடியும்.

 (6) சர்வீஸ் கார்டு தயாரிக்கும் போது, ​​.

வகஃப் சட்டம் 1954ன் படி, உயர்கல்வி பணியாளர்கள் முஸ்லீம்களாக மட்டுமே இருக்க வேண்டிய சட்டத்தின் படி முஸ்லிம்கள் மட்டுமே C.E.O. ஆக்கப்பட வேண்டும். 

(7) வகஃபின் மதிப்புமிக்க நிலங்கள் மற்றும் கட்டிடங்கள் எந்தவொரு தனிப்பட்ட முதலீட்டாளருக்கும் வழங்கப்படக்கூடாது,  பதிவுசெய்யப்பட்ட அறக்கட்டளை அல்லது பதிவு செய்யப்பட்ட சங்கத்திற்கு வழங்கப்பட வேண்டும். (8) குத்தகை நிலமாக வக்ஃபு சொத்தை, எந்த ஒரு தொழிலதிபர் அல்லது  தனிநபருக்கு தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்படக்கூடாது.

அது மருத்துவமனை அல்லது வணிகத் திட்டத்திற்காக குத்தகைக்கு எடுக்கப்பட்டாலும் சரியே.

 (9)வக்ஃப் சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற சி.இ.ஓ.வுக்கு அதிகாரம் இருந்தும்,

 சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததற்காக C.E.Oமீது அபராதம் விதிக்கப்பட வேண்டும்.

வக்ஃப் சொத்துகளில் ஊழல்.

வக்ஃப் சொத்துகளில் ஊழல் தற்போது, ​​நாடு முழுவதும் நடைபெற்று வரும் தொடர் கதையாக ஆகிவிட்டது.

அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.

உத்தரபிரதேசத்தில் வக்பு வாரியத்தின்  3000 ஆயிரம் நிலங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, அதன் தற்போதைய சந்தை மதிப்பு பல ஆயிரம் கோடிகள் இருக்கும். 

நாட்டின் தலைநகரான டெல்லியில் மட்டும்,  வக்ஃப் சொத்துகளின் எண்ணிக்கை 1977 என்றும், அதில் 600 அரசு கட்டிடங்கள் மற்றும் நில மாஃபியாக்கள் ஆக்கிரமித்துள்ளன என்றும்  ஆச்சரியமான  தகவல் வெளிவருகிறது.

DDA தனது கட்டிடங்களை 138 நிலங்களில் கட்டியுள்ளது.மத்திய கட்டுமானத் துறை மதிப்புமிக்க 108 நிலங்களில் கட்டிடங்களைக் கட்டியுள்ளது. 53 தொல்லியல் துறையின் வசம் உள்ளது. டெல்லியின் மையப்பகுதியில் 20 பெரிய ஏக்கர் நிலம் உள்ளது, அதில் பெர்க்ஸ்டுடி 20 வயர்லெஸ் துறையை கொண்டுள்ளது 10. பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் டெல்லி நகர் நிகாம், மின்சாரத் துறை, என்டிஎம்சி உள்ளிட்ட டெல்லி அரசின் பல்வேறு அலுவலகங்கள் வசம் உள்ள 05, சதுர அடிக்கு ரூ.07 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான தற்போதைய விலையில் சுமார் 18 மதிப்புமிக்க புவியியல் தளங்களை ஆக்கிரமித்துள்ளன. என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.

200 இடங்களை நில மாஃபியாக்கள் ஆக்கிரமித்து, அதில் இன்று பன்னாட்டு நிறுவனங்களின் ஆடம்பரமான மற்றும் பல மல்டிபிளக்ஸ் மாடி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. வணிக வளாகங்கள், கார்ப்பரேட் துறையின் பல நிறுவனங்கள் இந்த வக்ஃப் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளன,

 இவையனைத்தும் வக்ஃப் வாரியத்திற்கு மிகக் குறைந்த வாடகையை செலுத்துகின்றன, ஆனால் பலர் வாடகை கூட செலுத்துவதில்லை. 

கடந்த அரசு இயற்றிய வக்ஃப் சட்டம்:

2010ல், வக்ஃப் சட்டத்தின் மசோதா திருத்தப்பட்ட வரைவு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, மக்களவை ஒரேயடியாக ஒப்புதல் அளித்தது. சல்மான் குர்ஷித் மிகவும் புத்திசாலித்தனமாக இந்த நொண்டி மசோதாவை பாராளுமன்றத்திலும் முஸ்லிம்களின் மத மற்றும் சமூக அமைப்புகளிலும் நிறைவேற்ற விரும்பினார். வக்ஃபின் நோக்கத்தையே தோற்கடிக்கும் வகையில் இந்த மசோதாவில் பல திருத்தங்கள் இருந்தன. இதற்கு, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்  மற்றும் பல அமைப்புகள் தங்களது ஆட்சேபனைகளையும், எதிர்ப்புகளையும் பதிவு செய்துள்ளன.

இந்த மசோதாவில் வக்புவின் அசல் நோக்கத்தை அழிக்கும் வகையில் பல விதிகள் உள்ளன.முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் பல அமைப்புகள் தங்கள் ஆட்சேபனையையும் எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளன. 

இதில், கவனிக்க தக்க ஒன்று என்னவென்றால்,ஒரு காலத்தில் 'வக்ஃப்'க்கு என்று ஒரு வரையறை இருந்தது, யாருடைய பெயரிலிருந்து  வக்ஃப் செய்யப்படுகிறது என்பது முக்கியம்.

எனவே ஒரு முஸ்லீம் மட்டுமே 'வக்ஃப்' செய்ய முடியும். என்றிருந்தது.

அதனை வக்ஃப் வாரியம் தளர்த்தியது. அது கூறியது, 'எந்த மதத்தைப் பின்பற்றுபவர்களாலும் வக்ஃப் செய்ய முடியும் மற்றும் இந்தியாவில் பல நன்கொடைகள் முஸ்லிம் அல்லாதவர்களாலும் வழங்கப்பட்டுள்ளன. அவர்களால் பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளன.

எனவே, வக்ஃப் என்பதன் வரையறையானது, வக்ஃப் முஸ்லிமல்லாதவராக இருந்தாலும், நிறுவப்பட்ட அனைத்து வக்ஃப்களும் அப்படியே இருக்கும்.

வக்ஃப்பின் திருத்தப்பட்ட வரைவை தயாரிக்க தேர்வுக் குழு அமைக்கப்பட்டது, அதன் தலைவர் சைபுதீன் சுஸ், ஆறு வாரங்களில் அதன் அறிக்கையை சமர்ப்பித்தாக இருந்தது.ஒரு வருடம் கழித்து அறிக்கை சமர்பிக்கப்பட்டது, ஆனால் அது குறிப்பிடத்தக்க பலனைத் தரவில்லை, பல விவாதங்கள் மற்றும் ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, வக்ஃப் சட்டத்தின் இந்த திருத்தப்பட்ட வரைவு பல திருத்தங்களுக்குப் பிறகு 05 செப்டம்பர் 2013 அன்று மக்களவையில் அங்கீகரிக்கப்பட்டது.(فکر وخبر۔آن لائن اخبار)

முந்தைய 1995வக்ஃப் சட்டம் மற்றும் தற்போதைய வக்ஃப் சட்டம் 2013 ஆகியவற்றின் மதிப்பாய்வு மற்றும் ஒப்பீட்டை அறிவது அவசியமாகும். இது முந்தைய வக்ஃப் சட்டத்துடன் ஒப்பிடும்போது புதிய சட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை வெளிப்படுத்தும்.மேலும் புதிய சட்டத்தின் சாதக,பாதகங்களை அறிய பேருதவியாய் அமையும். 

( 1) வக்ஃப் என்பது இந்தச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது, எந்த மதத்தைப் பின்பற்றுபவர்  வக்ஃப் செய்தாலும் அது அங்கீகரிக்கப்பட்டு சட்டப்பூர்வமாக வக்ஃப் என்று கருதப்படும். 

(2)இந்த சட்டம் ஆக்கிரமிப்பு தொடர்பாக விரிவாக வரையறுக்கப்பட்டுள்ளது மற்றும் "Vacating Law"("வெளியேற்றம் சட்டத்துடன்") இணைந்து படிக்க வேண்டும்.

3) வக்ஃப் கணக்கெடுப்பு நடத்தப்படாவிட்டால், இந்த சட்டம் அமலுக்கு வந்த ஓராண்டு காலத்திற்குள் கணக்கெடுப்பை முடிக்க வேண்டியது ஒவ்வொரு மாநிலத்தின் பொறுப்பாகும், இதனால் எந்த வக்ஃப் சொத்தும் பதிவு செய்யப்படாமல் இருக்க முடியும்.

 4)மிகவும் சர்ச்சைக்குரிய பிரிவு 86 ரத்து செய்யப்பட்டது, இதன் விளைவாக பதிவு செய்யப்படாத உதவித்தொகைகள் மீது வழக்குத் தொடரும் உரிமை நிறுத்தப்பட்டது. மேலும் மேலும் எஞ்சியிருக்கும் பல சொத்துக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின.

(5) பிரிவு 108/A நீட்டிக்கப்பட்டது, இதன் விளைவாக எந்த சட்டமும் வக்ஃப் சொத்துக்களை பாதிக்காது மற்றும் வக்ஃப் சொத்து அப்படியே இருக்கும்.

6) புதிய சட்டம் மத்திய வக்ஃப் கவுன்சிலை பலப்படுத்தியுள்ளது. அது தனது அதிகாரங்களை விரிவுபடுத்தி, மாநில வக்பு வாரியங்களை மத்திய வக்ஃப் சபைக்கு ஓரளவு பொறுப்புக்கூறச் செய்ய முயற்சித்துள்ளது.

 (7)வகஃப் பட்டியலைக் கருத்தில் கொண்டு நிலப் பதிவேடுகளை (landrickard) இறுதி செய்து, அதற்கேற்ப இணைப்பை மேற்கொள்ள வேண்டியது வருவாய்த் துறை அதிகாரிகளின் பொறுப்பாகும். 

 (8)பிரிவு 06 இல், “இந்த வக்ஃப்பில் ஆர்வமுள்ள ஒருவர்” என்ற வாசகம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக “பாதிக்கப்பட்ட ஒருவர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வக்ஃபு சொத்துக்களில் வேறுபாடும்,விளைவுகளும் ஏற்படும்.

9)பிரிவு 32 வக்ஃப் வாரியத்தின் அசையாச் சொத்தை விற்கவோ, அன்பளிப்பாகவோ, அடமானம் வைக்கவோ அல்லது மாற்றவோ செய்யும் அதிகாரத்தை நீக்குகிறது. 

 (10)பிரிவு 51 இல் ஒரு புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது, இதன் மூலம் வக்ஃப் சொத்துக்களின் விற்பனை, பரிசு, பரிமாற்றம் மற்றும் அடமானம் ஆகியவை கொள்கையளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன, ஆனால் மாநில வக்ஃப் வாரியத்திற்கு வக்ஃப் வளர்ச்சிக்கு குறிப்பிட்ட மற்றும் பரந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 (11)வக்ஃப் சொத்துக்களை குத்தகைக்கு விடுவதற்கான காலம் 30 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதனால் வக்ஃப் சொத்துக்கள் வளர்ச்சியடையும்.

12) வக்ஃப் தீர்ப்பாயம் மூன்று உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது, நீதிபதியைத் தவிர, நிர்வாகத்தின் பிரதிநிதி மற்றும் ஒரு இஸ்லாமிய அறிஞர் இருப்பார், மேலும் தீர்ப்பாயத்தின் நோக்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.                        (مولانا ولی رحمانی کے مضمون سے اقتباس )

வக்ஃபு வாரிய சட்டம் 1995-ஐ நீக்க துடிக்கும் ஆளும் பாசிச அரசு.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்  1954 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட வக்பு வாரியம்,

75 ஆண்டுகளை கடந்த சுதந்திர இந்தியாவில் வக்ஃப் வாரியத்தை பலப்படுத்துவதற்காக பல கமிட்டிகள் சமர்பித்த பரிந்துரைகள்,

முஸ்லிம் தனி வாரிய சட்ட அமைப்பு,இஸ்லாமிய அமைப்புகள் இவற்றின் ஆலோசனைகளை முன்வைத்து 5 தடவைகளுக்கு மேல் சட்டங்கள் இயற்றப்பட்டு வக்ஃப் வாரியத்திற்கு  வானளாவிய அதிகாரம் தரப்பட்டது.

இந்தியாவில் இராணுவம்,இரயில்வே துறைக்கு அடுத்தபடியாக சொத்துகளை அதிகம் வைத்திருக்ககூடிய வக்பு வாரியம்,

இரயில்வே துறைக்கு நிகராக செயல்படுவதற்கு அதிகாரம் படைத்த வாரியம்,பஞ்சாயத்து அலுவலகத்தை விடவும் மோசமாக செயல்படுவது வேதனையான ஒன்றாகும்.

இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும் பல  சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன.

வக்பு வாரியமும்,இந்திய இஸ்லாமிய சமூகமும் அது குறித்து எந்த கவலையும் இல்லாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றன. 

ஆளும் பாசிச அரசோ, வக்ஃபு வாரிய சட்டம் 1995-ஐ ரத்த செய்ய துடிக்கிறது. இந்த சட்டம் மட்டும் ரத்து செய்யப்பட்டால் வக்ஃபு வாரியம்,வெற்று வாரியமாக மாற்றப்படும். 

காரணம் இந்த வக்ஃபு நிலங்களை பாதுகாக்க நமக்கு இருக்கும் மிகப்பெரிய பாதுகாப்பு வக்ஃபு சட்டம் 1995 என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த சட்டம் வக்ஃபு வாரியங்களுக்கு வானுயர்ந்த அதிகாரத்தை வழங்குகிறது.

ஒரு நிலம் வக்ஃபு நிலமா ?இல்லையா? என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் வக்ஃபு வாரியத்திற்கு இந்த சட்டம் வழங்குகிறது.

இந்த வக்ஃபு சட்டம் 1995 திரும்பத் பெறப்பட்டால் வக்ஃபு சொத்துக்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்படும்.

வக்ஃப் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கு உள்ள உரிமை பறிக்கப்படும்.

அல்லாஹு தஆலா  வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்கும் தூண்களாக நம்மை ஆக்குவானாக! ஆமின்.

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.


Wednesday, 4 October 2023

ஜும்ஆ பயான் 06/10/2023

முஹம்மது நபி ﷺ அவர்களின் ஹிஜ்ரத்திலிருந்து ஹஜ்ஜத்துல் விதா வரை.


طَلَعَ الْبَدْرُ عَلَیْنَا

مِنْ ثَنِیَّاتِ الْوَدَاعِ

وَجَبَ الشُّکْرُ عَلَیْنَا

مَا دَعٰی لِلّٰہِ دَاعِ

கண்மணி நாயகம் ﷺஅவர்களின் வரலாறு, உலக வரலாற்றிலேயே ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

அல்லாஹுத்தஆலா முன்னோர் பின்னோர் அனைவருக்குமான அழகிய முன்மாதிரியாக நபியை அனுப்பி வைத்தான்.அவர்களின் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் மனித சமுதாயத்திற்கு நேர்வழியாகவும்,சிறந்த பாடத்தையும் கற்பிக்கின்றது.

மதினாவின் ஹிஜ்ரத் இஸ்லாமிய வரலாற்றிலேயே அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.

இது கண்மணி நாயகம் ﷺஅவர்கள்,இன்னும் அவர்களின் தோழர்களாகிய சஹாபாப்பெருமக்களின் வாழ்க்கை திருப்புமுனையின் புதிய துவக்கமாக அமைந்தது. இஸ்லாம் உலகெங்கிலும் ஓங்கி வளர துவக்க புள்ளியாக அமைந்தது.

ஹிஜ்ரத்திற்கு முன் மதீனா.

நாயகம் ﷺஅவர்கள் ஹிஜ்ரத் செய்து மதினாவுக்கு வருவதற்கு முன்னால் மதினாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மக்காவை விட சற்று அதிகமாகவே இருந்தது.ஆனால் இஸ்லாத்தின் நிலைமையோ மிக பலவீனமாக இருந்தது. 

மதினாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 100 இருந்து ஹிஜ்ரத்துடைய நேரத்தில் ஆயிரமாக உயர்ந்திருந்தது.ஆனால் இஸ்லாம் அமைப்பு ரீதியாக பலம் பெற்று இருக்கவில்லை.இஸ்லாமியர்கள் கூட்டமைப்பாக இல்லாமல் சிதறுண்டு இருந்தனர்.

நாயகம் ﷺஅவர்களின் குபா தங்குதலும்,மதினா வருகையும்.

மக்கா காஃபிர்களின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரிக்க சஹாபாக்கள் தனித்தனியாகவும்,கூட்டாகவும் மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்ய துவங்கி விட்டனர்.

இறுதியாக நாயகம் ﷺஅவர்கள் ஹழ்ரத் அபுபக்ர்(ரலி)அவர்களோடு சேர்ந்து ஹிஜ்ரத் செய்து மதீனா வந்தடைந்தார்கள். 

அல்லாஹ்வின் நாட்டம் இன்னும் கட்டளையின் பேரில் நாயகம் ﷺஅவர்களின் மதினா ஹிஜ்ரத், பெரும் தாக்கத்தையும்,இஸ்லாம் உலகெங்கிலும் பல்கி பெருக காரணமாகவும் அமைந்துவிட்டது.

நாயகம்ﷺஅவர்கள் மதினாவிற்கு வந்த போது ஓர் அதிசய தக்க நிகழ்வை கண்டார்கள்.

மக்காவில் தங்களின் நெருங்கிய சொந்த பந்தங்களே பெரும் துன்பங்களை தந்து பிறந்த மண்ணை விட்டே நபியை துரத்தினர் ஆனால் இங்கு மதினாவிலோ தங்களின் சொந்த பந்தங்களை விடவும் நபியின் மீதுள்ள பிரியத்தில் தங்களின் உயிர்,பொருள் அனைத்தையும் நபிக்காக தியாகம் செய்யும் ஒரு கூட்டம் நபியை வரவேற்க காத்திருக்கின்றனர்.

நபிகள் நாயகம்ﷺஅவர்களின் வருகையை எதிர்நோக்கியவர்களாக மதினாவாசிகள் எல்லையில் மிகுந்த ஆர்வதோடும் அல்லாஹ்வின் பிரிய நபி இனி நம்மோடு வாழப்போகிறார்கள் என்கிற ஆர்வத்திலும் வரவேற்று காத்திருக்கின்றனர்.

பரா இப்னு ஆஸிப் (ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்;நபிகள் நாயகம்ﷺ அவர்கள் முதன்முதலாக மதினாவில் நுழையும் சந்தர்ப்பத்தில் மதினாவாசிகள் மட்டற்ற மகிழ்ச்சியில் இருந்தனர்.அது போன்றதொரு மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தை இதற்கு முன் நான் மதீனாவில் கண்டதில்லை.

குபா.

நாயகம் ﷺஅவர்கள் மதினாவிற்கு செல்வதற்கு முன்னால் அருகிலுள்ள குபாவிற்கு சென்றார்கள். இது மதினாவிலிருந்து இரண்டறை மைல் தொலை தூரத்தில் உள்ள ஓர் ஊராகும்.அங்கே சில அன்சார் சஹாபாக்களின் இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வந்தன.அங்கு குல்ஸும் இப்னு ஹத்மு (ரலி)அவர்களின் இல்லத்தில் ஓய்வெடுத்தார்கள்.நபி ﷺஅவர்கள் குபா வந்துவிட்டதை கேள்விப்பட்ட மதினாவாசிகள் நபியை சந்திக்க வர துவங்கிவிட்டனர்.

நபி ﷺஅவர்கள் குபாவிற்கு வந்ததும் முதன் முதலாக அங்கு ஒரு மஸ்ஜிதை கட்டுகின்றார்கள்.நபியோடு சேர்ந்து ஸஹாபாக்களும் இப்புனித பணியில் ஈடுபட்டு ஓரிரு தினங்களில் மஸ்ஜித் கட்டி முடிக்கப்படுகின்றது.

நாயகம்ﷺஅவர்களுக்கு இது மிக விருப்பமான மஸ்ஜிது ஆகும்.மதினாவிற்கு சென்றதற்கு பின்னாலும் கூட வாரத்தில் ஒரு தினம் இங்கு வந்து தொழுதுவிட்டு செல்வார்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் முதல் மஸ்ஜித் என்ற பெருமையும்,நாயகம் ﷺஅவர்களின் திருக்கரங்களால் கட்டப்பட்ட முதல் மஸ்ஜித் என்ற பெருமையும்.அல்லாஹுத்தஆலா திருமறையில் புகழ்ந்து கூறும் மஸ்ஜிதும் குபா மஸ்ஜிதாகும்.

لَا تَقُمْ فِيْهِ اَبَدًا ‌ لَمَسْجِدٌ اُسِّسَ عَلَى التَّقْوٰى مِنْ اَوَّلِ يَوْمٍ اَحَقُّ اَنْ تَقُوْمَ فِيْهِ‌ فِيْهِ رِجَالٌ يُّحِبُّوْنَ اَنْ يَّتَطَهَّرُوْا ‌ وَاللّٰهُ يُحِبُّ الْمُطَّهِّرِيْنَ‏

ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் - நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது; அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது; அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.(அல்குர்ஆன் : 9:108)

குபாவில் பத்து தினங்களுக்கு மேல் தங்கியதற்கு பின்னால் நாயகம் ﷺஅவர்கள் மதினாவை நோக்கி புறப்பட்டார்கள்.அந்நேரத்தில் நபி ﷺஅவர்களுடன் முஹாஜிர்,அன்சார் ஸஹாபாக்களின் ஒரு பெரும் எண்ணிக்கை இருந்தது.

நாயகம்ﷺஅவர்கள் ஒட்டகத்தில் சவாரி செய்து சென்றார்கள்.வழியில் ஓரிடத்தில் ஜும்ஆ நேரம் வந்துவிட்டதால் பனு ஸாலிம் இப்னு அவ்ஃப் என்பவரின் இடத்தில் குத்பா ஓதி,ஜும்ஆ தொழுகை நடத்தினார்கள்.

இதுவே நாயகம்ﷺஅவர்கள் நடத்திய முதல் ஜும்ஆ ஆகும்.முதல் குத்பாவில் ஸஹாபாக்களிடம் "தக்வா"இறையச்சத்தில் உறுதியாக இருக்குமாறு உபதேசித்தார்கள்.அதே இடத்தில் ஒரு மஸ்ஜித் கட்டப்பட்டது அது மஸ்ஜிதுல் ஜும்ஆ என்ற பெயரில் இன்றும் உள்ளது.

மதினா வருகை.

ஜும்ஆ தொழுகை முடிந்ததும் நாயகம் ﷺஅவர்கள் மீண்டும் தங்கள் பட்டாளத்துடன் மதினாவை நோக்கி புறப்பட்டார்கள்.மதினாவை வந்தடைந்ததும்,முஸ்லிம்கள் அனைவரும் தங்களின் இல்லத்தின் அருகே நின்று கொண்டு மிகுந்த உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் அன்போடும் நாயகம் ﷺஅவர்களை "யாரசூலல்லாஹ் ﷺ!இது எனது வீடு எனது உயிர் பொருள் அனைத்தும்  தங்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும். நீங்கள் எங்களின் இல்லத்தில் தங்கிக் கொள்ளுங்கள்." என்றனர்.

நபிﷺமதீனாவிற்குள் நுழைந்த அந்நாள் அம்மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும், ஆனந்தமும் நிறைந்த நாளாக இருந்தது. மதீனாவின் தெருக்களிலும், வீடுகளிலும் இறைப்புகழும், இறைத்துதியும் முழங்கப்பட்டன. அன்சாரிகளின் சிறுமிகள் மிக ஆனந்தத்துடன் சில கவிகளைப் பாடி குதூகலமடைந்தனர்.

طَلَعَ الْبَدْرُ عَلَیْنَا

مِنْ ثَنِیَّاتِ الْوَدَاعِ

وَجَبَ الشُّکْرُ عَلَیْنَا

مَا دَعٰی لِلّٰہِ دَاعِ

“நமக்கு முழு நிலா தோன்றியது.

ஸனியாத்தில் விதா என்னும் மலைப்பாங்கான இடத்திலிருந்து,

அல்லாஹ்வுக்காக அழைப்பவர் அழைக்கும்போதெல்லாம்

நாம் நன்றி செலுத்துவது கடமையாயிற்று.

எங்களுக்கு அனுப்பப்பட்டவரே!

பின்பற்றத் தகுந்த மார்க்கத்தைத்தான் கொணர்ந்தீரே! ”

நாயகம் ﷺஅவர்களின் வருகையின் காரணமாக அனைவரின் முகங்களும்,இல்லங்களும் பிரகாசமாகிவிட்டன.இறை நிராகரிப்பும்,இணைவைப்பும் நிறைந்த இடங்களில் ஏகத்துவம் எனும்  ஒளி வீச துவங்கி விட்டன. 

ஹழ்ரத் அனஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்;நாயகம் ﷺஅவர்கள் மதினாவிற்கு வந்த அந்த நாளிலே அவர்களின் வருகையினால் மதினாவின் மூளை முடிக்கெல்லாம் பிரகாசத்தால் மின்னியது.

நாயகம் ﷺஅவர்களின் இல்லம்.

நபி (ஸல்) மதீனாவில் நஜ்ஜார் கிளையினரின் இல்லத்திற்கு ஹிஜ்ரி 1ல் ரபிய்யுல் அவ்வல் பிறை 12, வெள்ளிக்கிழமை, கி.பி. 622 செப்டம்பர் 27ல் வந்தார்கள். 

நாயகம் ﷺஅவர்களின் ஒட்டகம் பனு நஜ்ஜாரின் இடத்தை அடைந்தபோது மதினாவாசிகளில் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் எழுந்த கேள்வி நாயகம் ﷺஅவர்கள் யாரின் இல்லத்தில் தங்கப் போகிறார்கள்?

ஒவ்வொருவருமே அந்த பாக்கியமும் சிறப்பும் கண்ணியமும் பெருமையும் தங்களுக்கே கிடைக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் ஒட்டகத்தின் கயிற்றைப் பிடித்து இழுத்தனர்.

நாயகம் ﷺஅவர்கள் அம்மக்களை நோக்கி "எனது ஒட்டகத்தை விட்டு விடுங்கள்!நான் இந்நேரம் பணிக்கப்பட்டு இருக்கிறேன்" (அல்லாஹ்வின் நாட்டம் எந்த இடத்தில் உள்ளதோ அங்கு ஒட்டகம் அமரும்)என்று கூறினார்கள்

இதனை கேட்டதும் ஒட்டகத்தின் கயிற்றை விட்டு விட்டனர்.சிறிது தூரம் சென்றதும் ஒட்டகம் ஒரு இடத்திலே அமர்ந்தது அங்கு தான்  மஸ்ஜிதுன் நபிவியும்,நபியின் மனைமார்களான உம்மஹாத்துல் முஃமீனீன்களின் இல்லங்களும் அமைந்தன. 

அங்கிருந்து எழுந்து ஒட்டகம் மீண்டும் நடந்து சென்று ஓரிடத்திலே அமர்ந்தது இப்பொழுது நாயகம்ﷺஅவர்கள் சொன்னார்கள்;இன்ஷா அல்லாஹ்! இங்குதான் தங்குமிடம் அமையும்”

ھٰذَا اِنْ شَاءَ اللّٰہُ الْمَنْزِلُ(بخاری،کتاب الہجرت)

பின்பு நாயகம்ﷺஅவர்கள் மக்களிடம் கேட்டார்கள் இந்த இடத்திற்கு அருகில் உள்ள இல்லம் யாருடையது?

உடனே அபு அய்யூப் அல் அன்சாரி(ரலி)அவர்கள் முன்னாள் வந்து யா ரசூலுல்லாஹ்ﷺ! இது எனது இல்லமாகும்.வாருங்கள்,என்று நபியை அழைத்தார்.

நாயகம்ﷺஅவர்கள் நான் தங்குவதற்கு ஒரு இடத்தை தயார் செய்யுங்கள்.என்றார்கள் (مسلم)

அபு அய்யூப் அல் அன்சாரி(ரலி)அவர்கள் தங்களின் இல்லத்தை சுத்தமாக்கி விட்டு நாயகம்ﷺஅவர்களை அழைத்துச் சென்றார்கள்.

மஸ்ஜிதுன் நபவீ

 நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் எடுத்துக் கொண்ட முதல் முயற்சி பள்ளி வாசல் ஒன்றை அமைப்பதாகும். இந்த பள்ளி வாசலைத்தான் ‘அல்மஸ்ஜித் அந்நபவி’ (நபியவர்கள் கட்டிய பள்ளிவாசல்) என்று சிறப்பாக சொல்லப்படும். தங்களது ஒட்டகம் முதன் முதலாக மண்டியிட்ட இடத்தையே நபி (ஸல்) அவர்கள் பள்ளி கட்டுவதற்காகத் தேர்வு செய்தார்கள். அந்த நிலம் இரண்டு அனாதைகளுக்குச் சொந்தமாக இருந்தது. அவர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் அதை விலைக்கு வாங்கி கட்டிடப் பணியைத் தொடங்கி, அப்பணியில் தாங்களும் பங்கெடுக்கும் முகமாக கல், மண் சுமந்தார்கள். வேலையை உற்சாகப்படுத்தும் வகையில்,

“இறைவா! மறுமை வாழ்வைத் தவிர வேறு வாழ்வு இல்லை.

அன்சாரிகள், முஹாஜிர்களுக்கு நீ மன்னிப்பளி!

இந்த சுமை கைபருடைய சுமையல்ல!

எங்கள் இறைவன் மீது ஆணையாக! இது நன்மை பயக்கக் கூடியது தூய்மையானது.”என்று கவியாக படிப்பார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பணியின்போது ஆர்வமூட்டும் சொற்களைக் கூறி வந்தது தோழர்களுக்கு வேலையில் மிகுந்த உற்சாகத்தை அளித்தது. தோழர்களும் உற்சாகம் மிகுந்தது,

நாயகம்ﷺஅவர்களின் ஒட்டகம் முதலில் உட்கார்ந்த இடம் இரண்டு முஸ்லிம் சிறுவர்களான ஸஹ்ல் மற்றும் ஸுஹைல் இருவருக்கு சொந்தமானதாகும்.அது அஸ்அத் இப்னு ஸரரா(ரலி)அவர்களின் பொறுப்பில் இருந்தது.

நாயகம்ﷺஅவர்கள் இந்த இடத்தில் மஸ்ஜித்  கட்டிக் கொள்ளவும்,மனைவிமார்களின் இல்லங்களை அமைத்துக் கொள்ளவும் விரும்பினார்கள். பத்து தீனாருக்கு அந்த இடம் வாங்கப்பட்டது.பேரித்த மரங்களை வெட்டி மஸ்ஜிதை கட்ட துவங்கினர்.

இப்புனிதப் பணியில் சஹாபாக்கள் ஆர்வத்தோடு ஈடுபட்டனர்.நாயகம்ﷺஅவர்கள் தங்களின் புனித கரங்களால் கல்லையும் மண்ணையும் சுமந்து கட்டுமான பணியை மேற்கொண்டனர்.பேரித்த மர ஓலைகளால் வேயப்பட்டதால் கன மழைகாலங்களில் மஸ்ஜிதில் தண்ணீர் ஒழுகும்.

ஆரம்பத்தில் பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுதார்கள் பின்பு கஃபத்துல்லாஹ் இருக்கும் திசையை நோக்கி கிப்லா மாற்றப்பட்டது.

அந்த பள்ளிவாசல் தொழுகையை நிறைவேற்றுதற்கு உண்டான இடம் மட்டுமல்ல மாறாக, முஸ்லிம்கள் மார்க்கக் கல்வியையும், அதன் போதனைகளையும் கற்றுத் தேர்வதற்குரிய ஒரு பல்கலைக்கழகமாகவும் பள்ளிவாசல் விளங்கியது. சண்டையிட்டு பிளவு பட்டு விரோதம் கொண்டுள்ள பல கோத்திரத்தினர் தங்களது விரோதத்தையும், பகைமையையும் மறந்து அன்புடனும், நேசத்துடனும் ஒன்று சேர்ந்து பழக, தோழமை கொள்ள, நட்புக் கொள்வதற்கேற்ற சங்கமாகவும் அது விளங்கியது. முஸ்லிம்களின் அனைத்துக் காரியங்களையும் நிர்வகிப்பதற்குரிய, செயல்திட்டங்களை அமுல்படுத்துவதற்குரிய மையமாகவும் அது விளங்கியது. ஆலோசனை சபைகளை நடத்துவதற்குரிய மன்றமாகவும் அது விளங்கியது.

அது மட்டுமல்ல வீடு, சொத்து, குடும்பம், பிள்ளைகள் என்று யாரும் இல்லாத ஏழை நபித்தோழர்களில் பலருக்கு தங்கும் விடுதியாகவும் அப்பள்ளி இருந்தது.

முஹாஜிர்,அன்சார் ஸஹாபிகளுக்கிடையில் சகோதரத்துவ ஒப்பந்தம்.

ஒற்றுமை மற்றும் அன்பை பகிர்ந்துகொள்ளும் மையமாக விளங்கிய பள்ளியை கட்டி முடிக்கும் பணியுடன், வரலாற்றில் மிகவும் பிரசித்திபெற்ற ஆச்சரியமிக்க மற்றொரு பணியையும் நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்டார்கள். அதுதான் நாடு துறந்த முஸ்லிம்களையும், மதீனாவில் உள்ள அன்சாரிகளையும் சகோதரர்களாக ஆக்கும் பணி.

இதைப்பற்றி இப்னுல் கய்” (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் அனஸ் இப்னு மாலிக்கின் இல்லத்தில் முஹாஜிர்களுக்கும், அன்சாரிகளுக்கும் இடையில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள். அப்படிச் சகோதரர்களாக ஆக்கப்பட்டவர்கள் மொத்தம் தொண்ணூறு நபர்கள். அதில் பாதி முஹாஜிர்களும், பாதி அன்சாரிகளும் இருந்தனர். இவர்களில் ஒருவர் மற்றவருடன் நட்புகொள்ள வேண்டும் அன்பு காட்ட வேண்டும் ஒருவர் மரணித்துவிட்டால் அவன் இரத்த உறவினர்களைவிட இவரே அவன் சொத்துகளுக்கு வாரிசாவார். ஆனால், பத்ர் போர் நடைபெற்றதற்குப் பின்பு

இனி அல்லாஹ்வுடைய வேதக் கட்டளைப்படி உங்கள் உறவினர்களில் உள்ளவர்களே ஒருவர் மற்றவருக்கு ஏற்றமானவர்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 8:75)

என்ற வசனம் இறங்கியபின் உடன்பிறவா சகோதர சொத்துமை சட்டம் ரத்து செய்யப்பட்டு சகோதரத்துவ உடன்படிக்கை மட்டும் நிரந்தரமாக்கப்பட்டது.

சிலர், “நபி (ஸல்) இரண்டாவது முறையாக முஹாஜிர்களுக்கு மத்தியில் மட்டும் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள். அதாவது, ஒரு முஹாஜிரை மற்றொரு முஹாஜிருக்கு சகோதரராக ஆக்கினார்கள் என்று கூறுகின்றனர். ஆனால், முதலில் கூறப்பட்ட கருத்துதான் ஏற்றமானதாகும். ஏனெனில், முன்னரே முஹாஜிர்களுக்கிடையில் இஸ்லாமிய சகோதரத்துவம் இருந்தது. குலக் கோத்திர ஒற்றுமையிலும், மக்காவை சேர்ந்தவர்கள் என்பதிலும் சகோதரர்களாக இருந்ததால் அவர்களுக்கு மத்தியில் புதிய ஒரு சகோதரத்துவ உடன்படிக்கையை ஏற்படுத்த வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனால், அன்சாரிகளுடனான முஹாஜிர்களின் நிலைமை அப்படியல்ல. அன்சாரிகளுக்கும், முஹாஜிர்களுக்குமிடையில் இஸ்லாமிய சகோதரத்துவத்துடன் தனிப்பட்ட நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக ஒரு சகோதரத்துவ உடன்படிக்கை அவசியமாயிருந்தது.” (ஜாதுல் மஆது)

நபி (ஸல்) அறிமுகப்படுத்திய சகோதரத்துவத்தின் அடிப்படை நோக்கம் என்னவெனில் அறியாமைக் கால இனவெறியை ஒழிக்க வேண்டும் நிறம், குலம், இனம் ஆகிய பாகுபாடுகள் அனைத்தும் குழி தோண்டிப் புதைக்கப்பட வேண்டும் இஸ்லாமை அடிப்படையாக வைத்தே நட்போ பகையோ ஏற்பட வேண்டும்.

இந்த சகோதரத்துவத்தில் விட்டுக்கொடுத்தல், அன்பு, ஒருவருக்கொருவர் ஆறுதலளித்தல், பிறருக்கு நன்மை புரிதல் என்ற உணர்வுகள் பின்னிப் பிணைந்திருந்தன.

அனஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது: “அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் நாடு துறந்து எங்களிடம் வந்தபோது அவர்களையும் ஸஅது இப்னு ரபீஆ (ரழி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள்.” அப்போது அப்துர் ரஹ்மானிடம் ஸஅது இப்னு ரபீஆ கூறினார்:

அன்ஸாரிகளில் நான் வசதி வாய்ப்புள்ள பணக்காரன். என் செல்வங்களை இரண்டு பங்குகளாக்கி (தங்களுக்கு ஒரு பங்கை வழங்கி) விடுகிறேன். எனக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். இருவரில் யாரைப் பிடிக்குமோ (உமக்குப் பிடித்த) அப்பெண்ணை நான் மணவிலக்கு (தலாக்கு) தந்துவிடுகிறேன். அவர் ‘இத்தா’ காலத்தை முடித்துவிட்டால் நீங்கள் அப்பெண்ணை மணமுடித்துக் கொள்ளுங்கள். அதற்கு “அல்லாஹ் உங்களுக்கு நலமும் வளமும் வழங்கட்டும்! அது தங்கள் குடும்பத்திலும் பொருளிலும் ஏற்படட்டும்!! எனக்குத் தங்களது கடைத் தெரு எங்கே இருக்கின்றதென்று காட்டுங்கள். அது போதும்” என்று அப்துர் ரஹ்மான் (ரழி) கூறினார்கள். கைனுகாவினன் கடைத் தெரு அவருக்குக் காட்டப்படவே, அப்துர் ரஹ்மான் (ரழி) கடைத்தெருவுக்குச் சென்று வியாபாரம் செய்து கொஞ்சம் பாலாடைக் கட்டி மற்றும் வெண்ணையை இலாபமாகப் பெற்று வீடு திரும்பினார். மறுநாளும் அவ்வாறே தொடர்ந்து வியாபாரத்திற்குச் சென்று அல்லாஹ்வின் அருளை அதிகமதிகம் சம்பாதித்தார். பின்பு ஒரு நாள் அவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தபோது அவர்மீது வாசனைப் பொருளின் அடையாளம் பட்டிருந்தது. அவரிடம் நபி (ஸல்) “என்ன மகிழ்ச்சியான செய்தி?” என விசாரித்தார்கள். அவர் “நான் நேற்று ஒரு அன்சாரிப் பெண்ணை திருமணம் செய்தேன்” என்றார். “எவ்வளவு மணக் கொடை (மஹர்) அளித்தீர்கள்” என்று நபி (ஸல்) கேட்க, “(கால் தீனார் பெறுமானமுள்ள) சிறு துண்டு தங்கம்” என அப்துர் ரஹ்மான் (ரழி) பதில் கூறினார். (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்களிடம் அன்ஸாரிகள் நமக்கும் நமது சகோதரர்(களான முஹாஜிர்)களுக்கும் (பலன் தரும்) பேரீத்த மரங்களை பங்கு பிரித்துக் கொடுங்கள் என்றனர். நபி (ஸல்) முடியாது என மறுத்து விட்டார்கள். அப்படியென்றால் எங்களுடன் அவர்கள் பாடுபடட்டும். வரும் பலாபலன்களில் நாம் அவர்களைக் கூட்டாகிக் கொள்வோம் என்று அன்ஸாரிகள் கோரினர். அதனை முஹாஜிர்கள் ஒத்துக்கொண்டனர். (ஸஹீஹுல் புகாரி)

இந்நிகழ்ச்சிகள் முஹாஜிர்கள் மீது அன்சாரிகள் கொண்டிருந்த ஆழமான பிரியத்தையும், மனத்தூய்மையையும், தியாகத்தையும், விட்டுக்கொடுத்தலையும் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. முஹாஜிர்கள் தங்களது அன்சாரித் தோழர்கள் செய்த உபகாரத்தை எந்த அளவிற்கு மதித்தார்கள் என்பதையும், அந்த உபகாரத்திலிருந்து தங்களின் அவசியமான தேவைக்கு மட்டும் எடுத்து பயனடைந்தார்கள் என்பதையும் அவர்களிடமிருந்து அதை முழுமையாக அபகரித்துக் கொள்ளவில்லை என்பதையும், தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

முஸ்லிம்கள் சந்தித்த பல பிரச்சனைகளுக்கு நபி (ஸல்) அறிமுகப்படுத்திய இந்த சகோதரத்துவ உடன்படிக்கை மிக அறிவுப்பூர்வமான தீர்வாகவும், நுட்பமான அரசியல் நடவடிக்கையாகவும், இருந்தது.

இஸ்லாமிய நட்பு ஒப்பந்தம்.

இறைநம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் இந்த சகோதரத்துவ உடன்படிக்கையை நபி (ஸல்) உறுதியாக அமைத்தது போன்றே அவர்களுக்கு மத்தியில் அறியாமைக்கால மனக் கசப்புகளையும், குரோதங்களையும் அகற்றும் இஸ்லாமிய நட்பு ஒப்பந்தங்களையும் ஏற்படுத்தினார்கள். அந்த ஒப்பந்தங்களின் மூலம் இனவெறி உணர்வுகளை அழித்தார்கள். ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் நிறுவினார்கள்.

நட்பு ஒப்பந்தத்தின் அம்சங்கள்.

நபியாகிய முஹம்மது (ஸல்) சார்பாகக் குறைஷி இனத்தைச் சேர்ந்த மற்றும் மதீனாவைச் சேர்ந்த இன்னும் இவர்களைப் பின்பற்றி இவர்களுடன் சேர்ந்து, இவர்களுக்குத் துணையாகப் போர் புரியும் அனைத்து முஸ்லிம்கள், இறை நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் எழுதிக் கொள்ளும் ஒப்பந்தம்:

1) முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தவர்.

2) குறைஷிகளில் ஹிஜ்ரா செய்தவர்கள் (முஹாஜிர்கள்) தங்களுக்குள் ‘தியத்“”தை கொடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களில் கைது செய்யப்பட்டவருக்கு அவர்கள் அழகிய முறையில் ‘ஃபித்யா“” கொடுத்து உதவி ஒத்தாசை செய்ய வேண்டும். அனைத்து இறைநம்பிக்கையாளர்களுக்கு மத்தியிலும் நீதமாக நடந்துகொள்ள வேண்டும். அன்சாரிகளில் உள்ள ஒவ்வொரு கிளையாரும் தங்களின் பழைய நிலைமைக்கேற்ப தங்களுக்குள் ‘தியத்’ கொடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களில் உள்ள ஒவ்வொரு வகுப்பினரும் தங்களின் கைதிகளை அழகிய முறையில் ‘ஃபித்யா’ கொடுத்து விடுவித்துக் கொள்ள வேண்டும். அனைத்து முஸ்லிம்களுக்கு மத்தியில் நீதமாக நடந்துகொள்ள வேண்டும்.

3) பொதுவாக இறைநம்பிக்கையாளர்கள் தங்களுக்கு மத்தியில் சிரமத்தில் இருப்பவர்களுக்கு ‘ஃபித்யா’ அல்லது ‘தியத்’ விஷயத்தில் அழகிய முறையில் கொடுத்து உதவ வேண்டும்.

4) தங்களில் கிளர்ச்சி செய்பவர்கள், முஃமின்களுக்கு மத்தியில் அநியாயம் செய்பவர்கள், பாவமான காரியம் செய்பவர்கள், வரம்பு மீறுபவர்கள், விஷமத்தனம் செய்பவர்கள் இவர்களை இறையச்சம் உள்ள முஃமின்கள் (இறைநம்பிக்கையாளர்கள்) ஒன்றுகூடி எதிர்க்க வேண்டும்.

5) மேற்கூறப்பட்டவர்களில் (பொதுவாக முஸ்லிம்களில்) வழிதவறிய ஒருவர் தங்களைச் சார்ந்த ஒருவரின் பிள்ளையாக இருப்பினும் சரியே! அவருக்கு எதிராக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

6) ஓர் இறைநம்பிக்கையாளர் ஒரு காஃபிருக்காக மற்றொரு இறைநம்பிக்கையாளரை கொலை செய்யக்கூடாது. அதாவது வாரிசில்லாத காஃபிர் கொலையுண்டதற்காக அந்த காஃபிருடைய முஸ்லிமான நண்பர், கொலையாளியான முஸ்லிமைக் கொல்லக் கூடாது.

7) ஓர் இறைநம்பிக்கையாளருக்கு எதிராக ஒரு காஃபிருக்கு உதவி செய்யக் கூடாது.

8) அல்லாஹ்வின் பொறுப்பு சமமான ஒன்றே. முஃமின்களில் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவர் பிறருக்கு கார்மானம் (பாதுகாப்பு) கொடுக்கலாம். தங்களில் ஒருவர் கொடுக்கும் கார்மானத்தை மற்ற அனைத்து இறைநம்பிக்கையாளர்களும் நிறைவேற்ற வேண்டும். அதில் பங்கம் இழைக்கக்கூடாது.

9) யூதர்களில் யார் நம்மை பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு உதவி செய்யப்படும். அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்ளப்படும். அவர் மீது எவ்வித அநியாயமும் இழைக்கப்படமாட்டாது. அவருக்கு எதிராக பிறருக்கு உதவி செய்யக்கூடாது.

10) சமாதான உடன்படிக்கை செய்துகொள்வது முஃமின்கள் அனைவரின் உரிமையாகும். அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும்போது, நீதமின்றி ஓர் இறைநம்பிக்கையாளரை விட்டுவிட்டு அன்னியருடன் சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளக்கூடாது.

11) இறைநம்பிக்கையாளர்களில் யாரொருவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும்போது தவறுதலாக தங்களில் ஒருவரைக் கொன்று விடுவாரோ அவருக்கு அனைத்து இறை நம்பிக்கையாளர்களும் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும்.

12) நமக்கு இணக்கமான எவரும் குறைஷிகளின் உயிர், பொருளுக்குக் கார்மானம் (பாதுகாப்பு) கொடுக்க முடியாது. மேலும், ஓர் இறைநம்பிக்கையாளருக்கு எதிராக ஒரு இணைவைப்பவரை பாதுகாக்க முடியாது.

13) ஒரு முஃமின் மற்றொரு முஃமினை குற்றமின்றி கொலை செய்து விட்டதற்கு தக்க ஆதாரமிருப்பின் அவரையும் பழிக்குப்பழி கொலை செய்யப்படும். ஆனால். கொலை செய்யப்பட்டவன் உறவினர் மன்னித்துவிட்டால் அவரை விடுவிக்கப்படும்.

14) இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் கொலை செய்தவனுக்கு எதிராக ஒன்றுசேர வேண்டும். கொலை செய்தவனுக்கு எவ்வகையிலும் உதவி செய்யக் கூடாது.

15) இறைநம்பிக்கையாளர் ஒரு விஷமக்காரனுக்கு, கலகம் செய்பவனுக்கு உதவி செய்யக் கூடாது, அவனுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது எவர் ஒருவர் ஒரு விஷமக்காரனுக்கு உதவி செய்கிறாரோ அல்லது அடைக்கலம் கொடுக்கிறாரோ அவருக்கு மறுமையில் அல்லாஹ்வின் சாபமும், கோபமும் உண்டு. அவருடைய கடமையான, உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

16) உங்களுக்கு ஏதாவது ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதை அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் இறுதித் தீர்ப்புக்காக விட்டுவிட வேண்டும். (இப்னு ஹிஷாம்)

யூதர்களுடன் ஒப்பந்தம்.

நபி (ஸல்) மதீனாவில் அரசியல் அமைப்பு, சட்ட ஒழுங்கு ஆகிய அனைத்திலும் முதன் முதலாக முஸ்லிம்களுக்கு மத்தியில் நிலைத் தன்மையையும் ஒருமைப்பாட்டையும் நிறுவினார்கள். அதன் மூலம் மதீனாவில் புதிய இஸ்லாமிய சமுதாயத்திற்கும், சமூகத்திற்குமான அடித்தளத்தை மிக ஆழமாக உறுதிப்படுத்தினார்கள்.

இரண்டாம் கட்டமாக, முஸ்லிம் அல்லாதவர்களுடன் தங்களது சமூகத் தொடர்புகளை முறைப்படுத்தத் துவங்கினார்கள். அதற்குக் காரணம், முழு மனித சமுதாயமும் நிம்மதி, பாதுகாப்பு, நற்பயன்கள், நல்லுறவுகள் கிடைக்கப்பெற வேண்டும். ஒரே ஒருமைப்பாட்டுக்குக் கீழ் நாட்டு மக்களை கொண்டுவர வேண்டும் என்பதுதான். ஆகவே சுயநோக்கங்களும், இனவெறியும் நிரம்பி இருந்த அக்காலத்தில் எங்கும் காணப்படாத மன்னித்தல், பெருந்தன்மையுடன் நடத்தல், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சட்டங்களை நபி (ஸல்) அமைத்தார்கள்.

மதீனாவிற்கு அருகில் யூதர்கள்தான் முஸ்லிமல்லாதவர்களாக இருந்தார்கள். இவர்கள் முஸ்லிம்களின் மீது உள்ளத்தில் பகைமையை மறைத்து வைத்திருந்தாலும் வெளிப்படையாக முஸ்லிம்களை எதிர்க்கவுமில்லை அவர்களிடத்தில் சண்டை, சச்சரவு செய்யவுமில்லை. எனவே நபி (ஸல்) யூதர்களுடன் நன்மையான நல்ல உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களுக்கு அவர்களது செல்வத்திலும், மதத்திலும் முழு சுதந்திரம் அளித்தார்கள். அவர்களை மதீனாவை விட்டு விரட்ட வேண்டுமென்றோ அல்லது அவர்களுடைய சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டுமென்றோ அவர்கள் நாடவுமில்லை அதைச் செய்யவுமில்லை.

நபி (ஸல்) யூதர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் அம்சங்களை இப்போது நாம் பார்ப்போம்:

1) அவ்ஃப் கிளையினரைச் சேர்ந்த யூதர்கள், முஃமின்களுடன் இணைந்த ஒரே சமுதாயத்தினராக கருதப்படுவர். இந்த யூதர்களுக்கு அவர்களது மார்க்கத்தில் முழு உரிமை உண்டு. முஸ்லிம்களுக்கும் அவர்களுடன் நட்பு கொண்டவர்களுக்கும் அவர்களின் மார்க்கத்தில் முழு சுதந்திரம் உண்டு. இவ்வாறே அவ்ஃப் கிளையினரை சாராத மற்ற யூதர்களுக்கும் அவர்களது மார்க்கத்தில் முழு சுதந்திரம் உண்டு.

2) யூதர்கள் தங்களின் செலவுகளுக்குத் தாங்களே பொறுப்பாளிகளாவர். அவ்வாறே முஸ்லிம்களும் தங்களின் செலவுகளுக்கு தாங்களே பொறுப்பாளிகளாவர்.

3) இந்த உடன்படிக்கை உடையவர்களிடம் யார் போர் தொடுத்தாலும் அவருக்கு எதிராக முஸ்லிம்களும், யூதர்களும் தங்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்துகொள்ள வேண்டும்.

4) யூதர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு - நலம் நாடுதல், ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்தல், உபகாரம் புரிதல் - என்ற அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். குற்றம் புரிவதில் துணை போவது கூடாது.

5) தனது நண்பன் குற்றத்திற்காக மற்றவர் குற்றவாளியாக மாட்டார்.

6) அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

7) பிறருக்கு எதிரானப் போரில் முஸ்லிம்களுடன் யூதர்கள் கலந்துகொள்ளும் போது யூதர்களும் போர் செலவுகளில் பங்கெடுக்க வேண்டும்.

8) இவ்வுடன்படிக்கையில் கலந்து கொள்பவர்கள் மதீனாவில் குழப்பம் விளைவிப்பதோ, விஷமத்தனம் செய்வதோ, இரத்தம் ஓட்டுவதோ முற்றிலும் தடுக்கப்பட்டதாகும்.

9) இந்த உடன்படிக்கையில் கலந்து கொண்டவர்களுக்கு மத்தியில் ஆபத்தான சண்டை, சச்சரவுகள் அல்லது ஏதும் பிரச்னைகள் நிகழ்ந்தால் அதற்குரிய முடிவை அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுமே கூறுவார்கள்.

10) குறைஷிகளுக்கும், குறைஷிகளுக்கு உதவி செய்பவர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கக் கூடாது.

11) யாராவது மதீனாவின் மீது முற்றுகையிட்டால் அவர்களுக்கெதிராக அனைவரும் போர் புரிய வேண்டும். தங்களுக்குள் உதவி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் இருக்கும் பகுதியைப் பாதுகாக்க வேண்டும் 

12) இந்த உடன்படிக்கை, அநியாயக்காரனையும், குற்றவாளியையும் தண்டனையிலிருந்து பாதுகாக்காது.

இந்த உடன்படிக்கையும், ஒப்பந்தமும் உறுதிபெற்றதால் மதீனாவும், மதீனாவைச் சுற்றியுள்ள பகுதிகளும் ஒற்றுமை மிக்க நாடாக மாறி அதற்குத் தலைநகரம் மதீனாவாக விளங்கியது. அந்த நாட்டின் தலைவராக (இவ்வாறு நாம் கூறுவது சரியாக இருப்பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இருந்தார்கள். அந்நாட்டில் முழுமையான அதிகாரமும் பேச்சுரிமையும் முஸ்லிம்களுக்கே இருந்தன.

அமைதியும், பாதுகாப்புமுடைய சூழலை விரிவுபடுத்துவதற்காகத் தேவைக்கேற்ப மற்ற சமூகத்தவர்களுடனும் நபி (ஸல்) இதற்குப்பின் உடன்படிக்கை செய்து கொண்டார்கள். 

எதிரிகளின் சூழ்ச்சியும் தாக்குதலும்,நாயகம்ﷺஅவர்களின் தற்காப்பு நடவடிக்கைகளும்.

நாயகம்ﷺஅவர்களையும்,ஸஹாபாக்களையும் மக்காவிலிருந்து விரட்டியதற்கு பின்னாலும் மக்கா காஃபிர்கள் முஸ்லிம்களை நிம்மதியாக இருக்கவிடவில்லை,பல போர்களைத்தொடுத்தார்கள்.

அதனையே அல்லாஹுதஆலா இஸ்லாம் வளர காரணமாக ஆக்கிவிட்டான்.நாயகம்ﷺஅவர்கள் காலத்தில் நிகழ்ந்த யுத்தங்கள் மொத்தம் 28 அவற்றில் 9 யுத்தங்களில் தான் வாளேந்தி போரடினர்.மற்றவை அனைத்தும் போர் இன்றியே வெற்றி கிடைத்தன.

ஜைது இப்னு அர்கம்(ரலி)அவர்களின் ஓர் அறிவிப்பு;நாயகம்ﷺஅவர்கள் பங்கேற்ற யுத்தங்கள் 19 ஆகும்.

صحیح بخاری

வரலாற்றாய்வாளர்களின் கருத்து;நாயகம்ﷺஅவர்கள் பங்கேற்ற யுத்தங்களுக்கு غزوہ "கஸ்வா" எனப்படும்.

நபி கலந்துக்கொள்ளாமல் அனுப்பிவைத்த படைக்குسرِیّہ "சரிய்யா" எனப்படும்.

இறையழைப்பு பணியும்,இஸ்லாத்தை எத்திவைத்தலும்.

ஹிஜ்ரத்தின் பரகத்தினால் மக்காவை விடவும் மதினாவில் நாயகம்ﷺஅவர்களுக்கும்,இஸ்லாமியர்களுக்கும் இஸ்லாத்தை எத்திவைப்பதும்,பரப்புவதும் இலகுவாக இருந்தது.அல்லாஹ்வின் பால் அழைக்கும் தஃவா பணி மிக வேகமாக வளர்ந்தது.

நாயகம்ﷺஅவர்களின் மதினா ஹிஜ்ரதிற்கு முன்னால் ஹழ்ரத் முஸ்அப் இப்னு உமைர் (ரலி)அவர்களை தவிர குறிப்பிட்ட எண்ணிக்கையில் தஃவா பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும் நபிகள் நாயகம்ﷺஅவர்களின் வருகைக்கு பின்னால் தஃவா பணியில் புது உத்வேகம் ஏற்பட்டது.மதினாவின் மூளை முடுக்கெல்லாம் இஸ்லாமிய அழைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

உயர்ந்தோர்,தாழ்ந்தோர்,ஏழை,செல்வந்தர் என எல்லா தரப்பு மனிதர்களிடமும் இறையழைப்பு பணி சேர்ந்தது. 

அரசர்களுக்கும் ஆளுநர்களுக்கும் கடிதம் எழுதுதல்.

நபி (ஸல்) அவர்கள் உடன்படிக்கையை முடித்து ஹுதைபிய்யாவிலிருந்து திரும்பிய பின் ஹிஜ்ரி 6ஆம் ஆண்டின் இறுதியில் பல அரசர்களுக்குக் கடிதம் எழுதி இஸ்லாமின் பக்கம் அவர்களை அழைத்தார்கள்.

நபியவர்கள் அரசர்களுக்குக் கடிதம் எழுத முற்பட்டபோது “முத்திரை இல்லாத கடிதங்களை அரசர்கள் படிக்க மாட்டார்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டது. ஆகவே, நபியவர்கள் வெள்ளியினாலான மோதிரம் ஒன்றைத் தயார் செய்தார்கள். அதில் ‘முஹம்மது ரஸூலுல்லாஹ்’ என்று பதித்தார்கள். அது மூன்று வரிகளாக இருந்தது. முஹம்மது என்று முதல் வரியிலும், ரஸூல் என்று ஒரு வரியிலும், அல்லாஹ் என்று ஒரு வரியிலும் இந்த அமைப்பில் எழுதப்பட்டிருந்தது. (ஸஹீஹுல் புகாரி)

நபியவர்கள் இப்பணிக்காக தங்களது தோழர்களில் நன்கு அனுபவம் வாய்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களைத் தூதுவர்களாக அரசர்களிடம் அனுப்பினார்கள். ஹிஜ்ரி 7ஆம் ஆண்டு, முஹர்ரம் மாதம் தொடக்கத்தில், அதாவது கைபர் தாக்குதலுக்குச் சற்று முன்பு இந்தத் தூதுர்களை நபி (ஸல்) அனுப்பினார்கள் என பேராசிரியர் மன்சூர்பூ (ரஹ்) திட்டவட்டமாக தெரிவிக்கிறார்.

மிஸ்ரு நாட்டு மன்னருக்குக் கடிதம்.

மிஸ்ரு (எகிப்து) மற்றும் இஸ்கந்தய்யா (அலெக்ஸாண்டியா)வின் மன்னரான ‘முகவ்கிஸ்’ என்றழைக்கப்படும் ஜுரைஜ் இப்னு மத்தாவிற்கு நபி (ஸல்) கடிதம் அனுப்பினார்கள்.(ரஹ்மத்துல் லில் ஆலமீன்)

அக்கடிதத்தில்:அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் எழுதுகிறேன். அல்லாஹ்வின் அடிமையும், அவனது தூதருமான முஹம்மது, கிப்திகளின் மன்னருக்கு எழுதுவது. நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்.

நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. அல்லாஹ் உங்களுக்கு இருமுறை நற்கூலி வழங்குவான். நீங்கள் புறக்கணித்து விட்டால் கிப்தி இனத்தவர்களின் குற்றமும் உங்களையே சாரும்.

(“வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்க மாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” (என்று கூறுங்கள். நம்பிக்கை யாளர்களே! இதனையும்) அவர்கள் புறக்கணித்தால் (அவர்களை நோக்கி) “நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே) வழிப்பட்டவர்கள் என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள்.) (அல்குர்ஆன் 3:64) (ஜாதுல் மஆது)

ஹபஷா மன்னர் நஜ்ஜாஷிக்குக் கடிதம்,

பாரசீக மன்னருக்குக் கடிதம்,

ரோம் நாட்டு மன்னருக்குக் கடிதம்,

பஹ்ரைன் நாட்டு ஆளுநருக்குக் கடிதம்,

யமாமா நாட்டு அரசருக்குக் கடிதம்,

ஸிரியா நாட்டு மன்னருக்குக் கடிதம்,

ஓமன் நாட்டு அரசருக்குக் கடிதம்,

இப்படி சுற்றியுள்ள அனைத்து நாட்டு மன்னர்கள்,ஆளுநர்களுக்கு கடிதம் எழுதி நாயகம்ﷺஅவர்கள் தஃவா கொடுத்தார்கள்.

ஆன்மீகப் புரட்சிகள்.

நபி (ஸல்) அவர்கள் அவ்வப்போது அவர்களுக்கு மார்க்கச் சட்டங்களையும், சமூக உயர்வுக்கு வழிகாட்டும் நல்லொழுக்கங்களையும் போதித்து வந்தார்கள். அவர்களின் உள்ளங்களை ஒவ்வொரு அசுத்தத்திலிருந்தும் தூய்மைப்படுத்தியதுடன் உயர் பண்புகளைக் கடைபிடிக்கவும் அவர்களுக்கு ஆர்வமூட்டினார்கள். அன்பு, சகோதரத்துவம், கண்ணியம், இறைவணக்கம், கீழ்ப்படிதல் போன்ற நல்லொழுக்கப் பயிற்சியும் அளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் சில ஒழுக்கப் பயிற்சிகளையும், போதனைகளையும் பின்வரும் வரிகளில் நாம் பார்ப்போம்:

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் “இஸ்லாமில் சிறந்த அமல் எது?” என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் “உணவளிப்பது, தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் சொல்வது” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தவுடன் நான் அவர்களைச் சந்திக்கச் சென்றேன். அவர்களது முகத்தை நன்கு உற்று நோக்கியபோது அது பொய்யன் முகம் அல்ல என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொண்டேன். நபி (ஸல்) அவர்களின் பேச்சில் முதலாவதாக பின்வரும் உபதேசங்களே இடம் பெற்றன. “மக்களே! ஸலாம் சொல்லும் பழக்கத்தை உங்களுக்குள் பரவலாக்குங்கள் உணவளியுங்கள் உறவினர்களுடன் சேர்ந்து வாழுங்கள் இரவில் மக்கள் உறங்கும்போது நீங்கள் எழுந்து தொழுங்கள் நீங்கள் நிம்மதியாக சுவனம் செல்வீர்கள்.” (ஸுனனுத் திர்மிதி, இப்னு மாஜா)

மக்கா வெற்றி فتح مکہ.

நாயகம் ﷺஅவர்கள்  தம் நாற்பதாவது வயதில் நபித்துவத்தை மக்களிடம் எடுத்துரைததில் தொடங்கி அவர்கள் மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்யும் வரையிலும்,ஹிஜ்ரத்திற்கு பின் நபியோடு பல போர்கள் செய்து ஹுதைபிய்யா உடன் படிக்கை வரையிலும் நபிக்கும்,நபி தோழர்களுக்கும்,மக்கா காஃபிர்கள் சொல்லொண்ணா துன்பங்களை  தந்தார்கள்.நபியின் உயிருக்கு ஊறு விளைக்க சந்தர்பங்களை எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஹிஜ்ரி 8 ஆம் நாயகம்ﷺஅவர்கள் ஸஹாபாக்களின் பத்தாயிரம் பேர்க்கொண்ட ஒரு பெரும் படையோடு மக்காவிற்குள் நுழைகிறார்கள்.கத்தி இன்றி இரத்தம் இன்றி மக்கா முஸ்லிம்களால் கைப்பற்றப்படுகிறது.

மக்கா வெற்றியின் போது தங்களை கருவறுக்க காத்திருந்த மக்கா காஃபிர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கிய காரூண்ய நபி கண்மணி நாயகம் ﷺஅவர்கள் ;

قَالَ لَا تَثْرِيبَ عَلَيْکُمُ الْيَوْمَ .. اذْهَبُوا فَاَنْتُمْ الطُّلَقَاء ُ ۔

"இன்றைய நாள் உங்களின் மீது பழிவாங்குதல் இல்லை.. என்ற யூசுஃப் சூராவின் வசனத்தை ஓதிகாட்டி,செல்லுங்கள்!நீங்கள் சுதந்திரமானவர்கள்" என்று சொன்னார்கள். (سبل الہدی والرشاد،ج5ص242 )

  اَلْيَوْمْ يَوْمُ الْمَرْحَمَةْ۔

இன்றைய நாள் அன்பு,இரக்கம் காட்டும் நாளாகும். என பொதுஅறிவிப்பு செய்தார்கள்.

 (جامع الأحادیث، مسند عبد اللہ بن عباس رضی اللہ عنہما. حدیث نمبر38481)

மக்கா வெற்றியின் போது அரபகத்தின் நான்கு தீசைகளிலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக,கோத்திரம் கோத்திரமாக இஸ்லாத்தை ஏற்று நபியிடம் பைஅத் செய்தனர்.

இப்னு ஸஅத்(ரஹ்) தங்களின் "தபகாதுல் குப்ரா"எனும் நூலில் கிட்டதட்ட 70 கோத்திரங்களுக்கும் அதிகமாக பைஅத் செய்தனர் என எழுதுகிறார்கள்.

இறுதி ஹஜ்.

ஈருலகத் தலைவர் நம் கண்மணி நாயகம் ﷺஅவர்களின் 23 வருட நபித்துவ வாழ்வின் தொடர் முயற்சி, அரப்பணிப்பினால் இஸ்லாம் உலகெங்கிலும் மிக வீரியமாக பல்கிப்பெருகியது.மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

நாயகம்ﷺ அவர்கள் ஹிஜ்ரி 10ஆம் ஆண்டு இறைக்கட்டளைக்கேற்ப பெரும் திரளான மக்களோடு ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள்.

அங்கே வைத்து  "الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ"

"தீன் சம்பூரணமாகிவிட்டது"என மக்களுக்கு அறிவிப்பு செய்கிறார்கள்.சில தினங்களில்سورہ نصر நஸ்ரு சூரா இறங்குகின்றது.

முதன் முதலில் நாயகம் அவர்களின் உற்றத்தோழர் அபூபக்ர் சித்தீக் (ரலி)அவர்கள் நபியின் பிரிவை உணருகிறார்கள்.காரணம் தீன் சம்பூரணமாகிவிட்டதால் நுபுவ்வத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டது.இனி நபியின் தேவை அவசியம் இல்லை.

அதனால் தான் நஸ்ரு சூராவின் இறுதியில் நபியின் இறுதிமுடிவை உணர்த்தும் முகமாக அல்லாஹுத்தஆலா நபியைப் பார்த்து تسبیح و استغفار தஸ்பீஹ், இஸ்திக்ஃபார் செய்துக்கொள்ளுமாறு கட்டளையிடுகின்றான்.நாயகம்ﷺ அவர்கள் தங்களின் ஹஜ்ஜை முடிப்பதற்குள்ளாகவே மக்கள் இந்த ஹஜ்ஜை حجتہ الوداع "ஹஜ்ஜதுல் விதாஃ" இறுதி ஹஜ் என சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

தற்பொழுது அழைப்புப் பணிகள் நிறைவுற்றன. இறைத்தூது உலகின் முன் வைக்கப்பட்டது. “லாஇலாஹஇல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை, முஹம்மது நபி (ஸல்) அல்லாஹ்வுடைய தூதராக இருக்கின்றார்கள்” என்ற அஸ்திவாரத்தின் மீது புதிய சமூகம் செம்மையாக அமைந்தது. இத்தருணத்தில் நபி (ஸல்) அவர்களின் உள்மனம், தாம் உலகில் இருக்கும் காலங்கள் சொற்பமே என்ற மெல்லிய ஒலிக்கீற்றை ஒலித்துக் கொண்டிருந்தது. ஆம்! அவ்வாறுதான், நபி (ஸல்) ஹிஜ்ரி 10ம் ஆண்டு யமன் தேசத்துக்கு முஆத் (ரழி) அவர்களை அனுப்பும் போது கூறிய பொன்மொழிகள் ஞாபகம் இருக்கலாம்.

“அநேகமாக இந்த ஆண்டிற்குப் பின் என்னை சந்திக்கமாட்டாய் முஆதே! இந்த பள்ளிக்கும் எனது மண்ணறைக்கும் அருகில்தான் நீ செல்வாய்.” நபி (ஸல்) அவர்களின் இந்த சொற்களால் நபி (ஸல்) அவர்களை நாம் பிரியப் போகிறோம் என்ற வருத்தத்தால் முஆது (ரழி) கண் கலங்கினார்கள். அல்லாஹ் தனது தூதருக்கு அவர்கள் செய்த அழைப்புப் பணியின் பலன்களை காட்ட நாடினான். இந்த அழைப்புப் பணிக்காகவே இருபது ஆண்டுகளுக்கு மேலாக பலவகை சிரமங்களைச் சகித்தார்கள்.

மக்காவிலும் அதன் ஓரங்களிலும் வாழ்கின்ற அரபிய வமிசங்களும், அதன் முக்கிய பிரமுகர்களும் ஒன்று சேர்ந்து இஸ்லாமிய மார்க்கச் சட்டத் திட்டங்களை நபி (ஸல்) அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நபி (ஸல்) அமானிதத்தை நிறைவேற்றினார்கள் தூதுத்துவத்தை முழுமையாக எத்திவைத்தார்கள் சமுதாயத்திற்கு நன்மையை விரும்பினார்கள் என்ற வாக்கை மக்களிடமிருந்து நபி (ஸல்) வாங்க வேண்டும் என்றும் அல்லாஹ் விரும்பினான். அல்லாஹ்வின் இந்த விருப்பத்திற்கேற்பவே கண்ணியமிக்க ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கா செல்லவிருக்கிறேன் என நபி (ஸல்) அறிவித்தார்கள். இதனைக் கேட்ட மக்கள் பல திசைகளில் இருந்தும் மதீனா வந்தனர். துல் கஅதா முடிய ஐந்து நாட்கள் இருக்கும் போது சனிக்கிழமை நபி (ஸல்) பயணம் மேற்கொண்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், ஃபத்ஹுல் பாரி)

தலையில் எண்ணெய் தடவி தலைவாரி, கீழாடையாக கைலியையும், மேலாடையாக போர்வையையும் அணிந்து கொண்டு, தனது ஒட்டகப் பிராணிக்கு மாலை அணிவித்தார்கள். ளுஹ்ர் தொழுகைக்குப் பிறகு புறப்பட்டு அஸ்ர் தொழுகைக்கு முன்பாக ‘துல் ஹுலைஃபா’ வந்தார்கள். அங்கு அஸ்ரை இரண்டு ரக்அத்தாக தொழுதுவிட்டு அங்கே அன்று முழுதும் தங்கி, மறுநாள் காலை ஸுப்ஹ் தொழுத பின்பு, தமது தோழர்களைப் பார்த்து, “அந்த பரக்கத் (அருள் வளம்) பொருந்திய பள்ளத்தாக்கில் தொழுது, “ஹஜ்ஜுடன் சேர்த்து உம்ரா எனக் கூறுங்கள்” என என்னுடைய இறைவனிடமிருந்து வந்த ஒருவர் இன்றிரவு கூறிவிட்டுச் சென்றார் என்று அறிவித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)


வரலாறு தொடரும்......

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.



Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...