இஸ்லாமிய பார்வையில் ஸஃபர் மாதம்.
وَعِنْدَهٗ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَاۤ اِلَّا هُوَؕ وَيَعْلَمُ مَا فِى الْبَرِّ وَالْبَحْرِؕ وَمَا تَسْقُطُ مِنْ وَّرَقَةٍ اِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِىْ ظُلُمٰتِ الْاَرْضِ وَلَا رَطْبٍ وَّلَا يَابِسٍ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ
மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.(அல்குர்ஆன்:6:59.)
இஸ்லாமிய 12 மாதங்களில் இரண்டாவது மாதம் ஸஃபர்.அறியாமைக்கால அரபுகளிடம் இம்மாதம் மோசமானதாகக் கருதப்பட்டது.
ஆனால் முஸ்லிம்கள் இதை சஃபர்-உல்-கைர் அல்லது சஃபர்-உல்-முழஃப்பர் (வெற்றியின் மாதம்) என்று அழைக்கின்றனர்.
இந்த மாதம் அறியாமைக்கால அரபுகளிடம் (ஜாஹிலிய்யாவில்)துர்சகுனமாகக் கருதப்பட்டது.இம்மாதம் வானத்திலிருந்து ஆபத்துகளையும், பேரழிவுகளைக் கொண்டுவரும் என்பது அவர்களின் மூடநம்பிக்கை.
ஜாஹிலிய்யா மக்கள் இந்த மாதத்தில் மகிழ்ச்சியான வைபவங்களை (திருமணம், பயணம், பரிவர்த்தனைகள்) செய்வதை மோசமானதாகக் கருதினர்,
அறியாமைக்கால அரபுகளின் இந்த மூடபழக்கம் வாழையடி வாழையாக இஸ்லாமியர்களிடமும் தொற்றிக்கொண்டது வேதனையான விஷயமாகும்.
சஃபர் மாதத்திற்கான பெயர் காரணம்.
சஃபர் என்றால் "காலியாக இருப்பது" என்று பொருள். ஜாஹிலியா காலத்தில், சஃபர் மாதம் அபசகுனமாக கருதப்பட்டது,
மேலும் இது "சஃபர் அல்-மகன்" என்றும் அழைக்கப்பட்டது, அதாவது வீடுகளை காலி செய்யும் மாதம்,ஏனெனில் மூன்று புனித மாதங்களுக்குப் பிறகு (ஜுல்-கஃதா, ஜுல்-ஹிஜ்ஜா, முஹர்ரம்) இந்த மாதத்தில் வீடுகள் காலி செய்து.போர்தளவாடப் பொருட்களை எடுத்துக் கொண்டு அவர்கள் சண்டையிடுவதற்கும், கொலை செய்வதற்கும் போர்க்களத்திற்குச் செல்வார்கள்.
இந்த அழிவு மற்றும் அழிவுக்கான உண்மையான காரணத்தை கவனித்து அதைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, அரேபியர்கள் இந்த மாதத்தை துரதிர்ஷ்டம், பேரழிவுகள் மற்றும் பிரச்சனைகளின் மாதமாக நம்பினர்.( تفسیر ابن کثیر)
அறியாமை ஜாஹிலிய்யா காலத்தில் ஸஃபர் மாதம் பற்றிய கோட்பாடுகள்.
சஃபர் மாதத்தில் அரேபியர்கள் இரண்டு பெரிய தீமைகள் செய்தனர்:
1.சந்திர மாத கணக்கை முன்னும் பின்னுமாக மாற்றுதல்
மக்கா முஷ்ரிக்குகள், புனித மாதங்களில் போர்செய்வது தடை என்பதால் முஹர்ரம் மாதத்தை ஸஃபர் என்றும் ஸஃபரை முஹர்ரம் ஆக மாற்றியும் போர்ப்புரிந்தனர்.
இன்னும் சில வருடங்கள் முஹர்ரம் மாதத்தை தடை செய்து ஸஃபரிலிருந்து வருடத்தை துவக்கி 11 மாதங்களாக அறிவிப்புச்செய்து சந்திர மாதக்கணக்கை மாற்றிவிடுவார்கள். முஹர்ரம் ஒரு புனித மாதமாகும், அதில் போர் செய்வது தடைசெய்யப்பட்டது. (துல்கஅதா, துல்ஹிஜ், முஹர்ரம் ஆகிய மூன்று புனித மாதங்களாகும்), இந்த மூன்று மாதங்களில் முஷ்ரிக்குகள் சண்டையிடுவது மிகவும் கடினமாக இருந்ததால், அவர்கள் இப்படி ஒரு காரியத்தை செய்தனர்.
(سعیدی، تبیان القرآن، جلد: 5، ص: 133)
2. சஃபர் மாதத்தை அபசகுனமாக கருதினர்.
முஷ்ரிக்குகள் சஃபர் மாதத்தை அசுபமாக கருதினர்.சண்டை,கொலை போன்ற காரணங்களால் நிகழும் இழப்புகளால் வீடுகள் காலியாகி துன்பங்களையும் சிரமங்களையும் சந்திக்க நேரிடும்.என அதற்கு காரணம் கூறினர்.அவர்கள் செய்த செயல்களை சரி செய்யாமல் சஃபர் மாதத்தை அசுபமாக கருதினர்.
குர்ஆன் மற்றும் ஹதீஸ் வெளிச்சத்தில் சஃபர் மாதம்.
குர்ஆனின் ஒளியில்:
مَاۤ اَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ اللّٰهِ وَمَاۤ اَصَابَكَ مِنْ سَيِّئَةٍ فَمِنْ نَّـفْسِكَ وَاَرْسَلْنٰكَ لِلنَّاسِ رَسُوْلًا وَكَفٰى بِاللّٰهِ شَهِيْدًا
உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது; இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது; (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 4:79)
اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِىْ كِتٰبِ اللّٰهِ يَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ مِنْهَاۤ اَرْبَعَةٌ حُرُمٌ ذٰ لِكَ الدِّيْنُ الْقَيِّمُ ۙ فَلَا تَظْلِمُوْا فِيْهِنَّ اَنْفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِيْنَ كَآفَّةً كَمَا يُقَاتِلُوْنَكُمْ كَآفَّةً وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِيْنَ
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.(அல்குர்ஆன் : 9:36)
ஹதீஸ் ஒளியில்:
عن ابی هریرة قال قال النبی لا عدوی ولا صفر ولا هامة.
(صحیح البخاری، کتاب الطب، باب الهامة، رقم: 5770، دارالمعرفة بیروت)
தொற்றுநோய் என்பது கிடையாது. பறவைகளைக்கொண்டு சகுனம் பார்ப்பதும் ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது. ‘ஸஃபர்’ மாதம் பீடை என்பதும் கிடையாது. சிங்கத்திடமிருந்து நீ எப்படி வெருண்டோடுவாயோ அப்படி தொழுநோயாளியிடமிருந்து வெருண்டோடு.. அபூஹுரைரா (ரலி) புகாரி 5707,
عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((لا عدوى، ولا صفر، ولا هامة))، فقال أعرابي: يا رسول الله، فما بال الإبل تكون في الرمل كأنها الظباء، فيجيء البعير الأجرب فيدخل بينها فيُجربُها كلها؟! قال: ((فمن أعدى الأول؟
நபி (ஸல்) அவர்கள் 'தொற்று நோய் கிடையாது; ஸஃபரும் கிடையாது; (இறந்தவரின் எலும்பு ஆந்தையாக மாறிப் பறப்பதாகக் கருதும்) ஆந்தை பற்றிய நம்பிக்கையும் உண்மையல்ல' என்று கூறினார்கள்.
அப்போது கிராமவாசி ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியமாக) இருந்த ஒட்டகங்களுக்கிடையே சிரங்கு பிடித்த ஒட்டகம் கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்றனவே?' என்று கேட்டதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , 'முதல் ஒட்டகத்திற்கு (அதை)த் தொற்றச் செய்தது யார்?' என்று (திருப்பிக்) கேட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புஹாரி 5717, முஸ்லிம் 2220
ஸஃபர் மாதமும், தவறான எண்ணங்களும்
காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்று சொல்வதைப் போல அறியாமைக்கால இப்பழக்கம் இன்றைய நவீன யுக சில இஸ்லாமியர்கள் வரை ஸஃபர் பீடை மாதமாக கருத்தப்பட்டு வருகின்றது.
இன்றைய சில இஸ்லாமியர்கள்,ஸஃபர் மாதத்தில் திருமணம் போன்ற சுப காரியம் செய்யவதில்லை.திருமணமான பெண்ணை புகுந்த வீட்டிற்கு அனுப்புவதில்லை,பயணம் செய்வதில்லை.இம்மாததில் தொழில் துவங்குவதையும்,கொடுக்கல் வாங்கலையும் அபசகுனமாக கருதி தள்ளிப்போடுகின்றனர்.
"மக்கள் சஃபர் மாதத்தை அசுபமாக கருதுகிறார்கள், அவர்கள் திருமணம் செய்ய மாட்டார்கள், அவர்கள் பெண்களை அனுப்ப மாட்டார்கள்,பயணத்தைத் தவிர்க்கிறார்கள்." குறிப்பாக சஃபர் மாதத்தின் முதல் பதிமூன்று தினங்கள் மிகவும் துற்சகுனமாக கருதப்படுகின்றன, அவை பதின்மூன்று நோன்புகள் என்று அழைக்கப்படுகின்றன, இவை அனைத்தும் அறியாமையின் வெளிப்பாடாகும்.
ஷாஹ் அப்துல் ஹக் முஹத்தித் தெஹ்லவி(ரஹ்)அவர்களின்
"இஸ்லாமிய மாதங்களின் சிறப்புகள்", எனும் நூலில் எழுதப்பட்டுள்ளது,
இது ( சஃபர் மாதம்) பேரழிவுகள், விபத்துக்கள் மற்றும் பேரழிவுகளின் மாதமாக மக்கள் கருதுகின்றனர், இந்த நம்பிக்கை தவறானது மற்றும் அதில் உண்மை இல்லை.
(اسلامی مهینوں کے فضائل، ص: 44)
ஸஃபர் மாதம் பீடை கிடையாது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' தொற்றுநோய் கிடையாது. பறவை சகுனம் ஏதும் கிடையாது. ஆந்தை சகுனம் ஏதும் கிடையாது. 'ஸஃபர்' மாதம் பீடை என்பதும் கிடையாது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (84 ஸஹீஹ் புகாரி (5757)
அபூ ஹுரைரா(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'தொற்று நோய் கிடையாது. 'ஸஃபர்' தொற்று நோயன்று; ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது' என்று கூறினார்கள்.
அப்போது கிராமவாசியொருவர், 'இறைத்தூதர் அவர்களே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித் திரியும்) என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றிற்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்றனவே! அவற்றின் நிலையென்ன (தொற்று நோயில்லையா)?' என்று கேட்டார்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் முதல் (முதலில் சிரங்கு பிடித்த) ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?' என்று திருப்பிக் கேட்டார்கள். (ஸஹீஹ் புகாரி( 5717)
மூடநம்பிக்கையில் உலகம்.
எட்டு என்பது இந்தியாவில் கெட்ட எண் என்றால் பதிமூன்று மேல்நாட்டினருக்கு அலர்ஜிக்குரிய எண். பதிமூன்று என்னும் எண் இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸைக் குறிப்பதாகவும் எனவே பதிமூன்று என்பது கெட்ட எண் என்பதும் மேல் நாட்டினரின் கருத்து. அதுவும் பதிமூன்றாம் தியதி வெள்ளிக்கிழமையாகி விட்டால் அது படு பயங்கரமான மோசமான நாளாம். காரணம் இயேசு சிலுவையில் அறையப்பட்டது ஒரு வெள்ளிக்கிழமை, நோவா காலத்தின் தண்ணீர் பெருக்கு ஆரம்பமானது ஒரு வெள்ளிக்கிழமை, ஆதாம் ஏவாள் ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டது ஒரு வெள்ளிக்கிழமை என்று காரணங்கள் அடுக்கப்படுகின்றன.
ஸ்பெயின் நாட்டில் பதிமூன்றாம் தியதி செவ்வாய்க்கிழமை வந்து விட்டால் அன்று எந்த நல்ல செயல்களையும் செய்ய மாட்டார்கள். இத்தாலியில் பதின்மூன்றாம் எண்ணைப்போல பதினேழும் கெட்ட எண்ணாகக் கருதப்படுகிறது. அது மரணத்தைக் குறிப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.
அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பெரும்பாலான கட்டிடங்கள் பதிமூன்றாவது மாடி இல்லாமலேயே கட்டப்படுகின்றன. ஏராளமான குடியிருப்புகளில் பதிமூன்றாம் எண் வீடுகளே இருக்காது. விமான நிலையங்களில் கூட பதிமூன்றாவது எண்ணுள்ள வாசல் பல விமான நிலையங்களில் இருப்பதில்லை.
மரத்தில் பேய் வசிக்கிறது என்பது ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் நம்பிக்கையாக இருந்திருக்கிறது. மரங்களைத் தட்டினால் அதனுள் இருக்கும் பேய் வெளியே வராது என்பது மேல்நாட்டு நம்பிக்கையாக இன்றும் நிலவுகிறது. இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் காடுகளிலிருந்து வெட்டி வரும் மரங்களை வீடுகளில் உபயோகப் பொருட்களாக்குவதற்கு முன் பேய் விரட்டும் பூஜை நடக்கிறது !
அமெரிக்கர்கள், அருகிலிருக்கும் யாராவது தும்மி விட்டால் ‘கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக’ என்பார்கள். தும்மும்போது ஆன்மா வெளியேற முயல்வதாகவும், கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக என்று சொல்லும்போது ஆன்மா மீண்டும் உடலுக்குள் செல்வதாகவும் அவர்கள் நம்பினார்கள்.
இங்கிலாந்தைப் பொறுத்தவ்ரை தும்மும் போதெல்லாம் அசுத்த ஆவி வெளியேறுவதாக ஆறாவது நூற்றாண்டு வரை நம்பப்பட்டது. பின் பிளேக் நோய் தாக்கிய காலத்தில் வலியுடம் தும்முபவர்கள் மரணத்தை நோக்கியிருப்பதாகக் கருதப்பட்டு அவர்களுக்காய் ‘கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக’ என்று வாழ்த்தத் துவங்கினர். இதன் மூலம் அவன் இறக்க நேரிட்டால் அவனுக்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடைத்து சுவர்க்கத்துக்குச் செல்வான் என்று நம்பப்பட்டது. தும்மும்போது வாழ்த்தும் வழக்கம் எகிப்தில் திபேரியுஸ் சீசரின் காலத்திலேயே வழக்கத்தில் இருந்ததாகவும் சில கதைகள் சொல்கின்றன.
மூட நம்பிக்கையை முறியடித்த மாமறைக் குர்ஆன்.
உலக மக்களின் வாழ்வைக் கெடுக்கும் மூடநம்பிக்கைகளில் ஒன்று ஜோதிடம் ஆகும். நட்சத்திர ஜோசியம், எண் ஜோசியம், கிளி ஜோசியம், நாடி ஜோசியம், கைரேகை ஜோசியம் என்று பல்வேறு வகையிலான ஜோதிடக் கலைகள் மக்களுக்கு மத்தியில் உலவிவருகின்றன.
நம்முடைய எதிர்காலத்தையும் மறைவான விஷயங்களையும் ஜோதிடர் கண்டறிந்து விடுவார் என்ற நம்பிக்கையில் ஜோதிடர்களிடம் சென்று அவர்கள் கூறுவதை நம்பி தங்களுடைய எதிர்காலத்தையும், பொருளாதாரத்தையும் இழந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டுக் கூற இயலாது. இந்த ஜோதிடத்தை நம்பியவர்களில் அதிகமானோர் இதன் மூலம் ஏமாற்றப்பட்டு பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். கற்பிழந்தவர்களின் எண்ணிக்கையும் மிக மிக அதிகமாகும்.
தமிழக அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் பலர் ஜோதிடர்களின் ஆலோசனைப்படியே தங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொள்கின்றர். பச்சை நிறத்தில் சேலை அணிதல், மஞ்சள் நிறத்தில் துண்டு அணிதல், பெயரை நியூமராலஜி அடிப்படையில் மாற்றிக் கொள்வது, பெயரில் தேவையில்லாமல் ஓரிரு எழுத்துக்களை அதிகப்படுத்தி எழுதுவது, தோஷம் கழித்தல், பரிகார பூஜைகள் நடத்துதல் என இவர்களின் மூட நம்பிக்கைகளைப் பட்டியல் போட்டு மாளாது. பகுத்தறிவு வாதம் பேசுபவர்களும் இதில் அடக்கம்.
ஜோதிடர்களின் வசீகரமான பேச்சுக்களை நம்பி சொத்துக்களையும், கற்பையும் இழந்தவர்கள், இழந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம் ஏராளம்.
அன்றாடம் வியர்வை சிந்தி உழைத்த உழைப்பால் கிடைத்த வருமானத்தைப் பெற்றோர்களுக்கும் மனைவி மக்களுக்கும் செலவிடாமல் மது குடித்து சீரழிப்பவர்கள் ஒருபுறம் என்றால் அதற்கு நிகராக ஜோதிடர்களுக்கு அள்ளிக்கொடுத்து சீரழிப்பவர்கள் அதை விட அதிகம்.
மனித சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் மிகப் பெரும் பாதிப்பிற்குள்ளாவதற்குக் காரணம் இந்த ஜோதிட நம்பிக்கை தான். ஜோதிடத்தின் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு அதனால் ஏற்பட்ட பாதிப்புகள்தான் மிகமிக அதிகம்.
ஆனால் உண்மையான இறைவனிடமிருந்து அருளப்பட்ட திருமறைக் குர்ஆன், இது மூடநம்பிக்கை என்பதைத் தெளிவாக எடுத்துரைப்பதுடன் மனித சமூகம் நிம்மதியான வாழ்வடைய திருக்குர்ஆன் தெளிவான வழிகாட்டுகிறது.
ஜோதிடம் என்ற மூடநம்பிக்கையை ஒழிப்பதற்குத் திருக்குர்ஆன் எடுத்துரைக்கும் அற்புதமான அடிப்படை ‘‘நாளை நடப்பதை இறைவன் ஒருவனைத் தவிர வேறுயாரும் அறிய முடியாது” என்ற கொள்கைப் பிகரடனம்தான்.
27:65 قُلْ لَّا يَعْلَمُ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ الْغَيْبَ اِلَّا اللّٰهُؕ وَمَا يَشْعُرُوْنَ اَيَّانَ يُبْعَثُوْنَ
“வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள்.”(அல்குர்ஆன்:27:65.)
وَعِنْدَهٗ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَاۤ اِلَّا هُوَؕ وَيَعْلَمُ مَا فِى الْبَرِّ وَالْبَحْرِؕ وَمَا تَسْقُطُ مِنْ وَّرَقَةٍ اِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِىْ ظُلُمٰتِ الْاَرْضِ وَلَا رَطْبٍ وَّلَا يَابِسٍ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ
மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.(அல்குர்ஆன்:6:59.)
பதிமூன்று நோன்பின் ஷரிஅத் சட்டம்.
ஸஃபர் முதல் பதிமூன்று தினங்கள் மற்றும் இந்த மாதத்தின் கடைசி புதன் கிழமை பற்றி பல மார்க்கத்திற்கு முரணான பித்அத்கள் சிலரிடம் காணப்படுகிறது,
உதாரணமாக, முதல் 13 தினங்களில் கோதுமை வேகவைக்கப்பட்டு, குறிப்பிட்ட எண்ணிக்கையில் சூரா முஸ்ஸமில் ஓதப்பட்டு, அவ்வெண்ணிக்கைக்கேற்ப மாவு உருண்டைகள் கடற்கரையில் க ரைக்கப்படுகின்றன. அவற்றை மீன்கள் உண்பதால், ஸஃபர் மாதத்தில் ஏற்படும் துர்சகுனம், பேரிடர்களும் இவற்றைச் செய்வதன் மூலம் தவிர்க்கப்படும் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது. பிரச்சனைகள் மற்றும் சோதனைகள் அல்லாஹ்விடமிருந்து வருபவையாகும் அவற்றுக்கென்று குறிப்பிட்ட நாள் அல்லது மாதம் கிடையாது. குர்ஆன் அல்லது ஃபாத்திஹா ஓதுவது ஒரு முஸ்தஹப்பானசெயலாகும்,
மேலும் இது ஒவ்வொரு மாதத்தின் எந்த தேதியிலும் அனைத்து வகையான ஹலாலான வாழ்வாதாரத்திற்காகவும் ஓதலாம்.
ஆனால் ஸஃபர் மாதத்தில் பதிமூன்று நோன்பு நோற்பதற்கோ அல்லது குர்ஆன்,பாத்திஹா ஓதி கோதுமை உருண்டைகளை கடற்கரையில் கரைப்பதற்கோ இஸ்லாத்தில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை.
ஒடுக்கத்து புதன் எனும் ஸஃபர் மாதத்தின் கடைசி புதன்கிழமை.
ஸஃபர் மாத பதிமூன்று தினங்களைத் தவிர, சஃபர் மாதத்தின் கடைசி புதன்கிழமையை ஒடுக்கத்து புதன் என பல தவறான பித்அத்களில் ஈடுபடுகின்றனர், அதாவது, சஃபர் மாதத்தின் கடைசி புதன்கிழமை இந்தியாவில் ஒடுகத்து புதன் எனும் பெயரில் கொண்டாடப்படுகிறது.
அன்று தங்களின் அலுவல்களுக்கு விடுமுறை விட்டு, பொழுதுபோக்கிற்காக வெளியில் செல்கின்றனர், பூரிகள் சமைப்பார்கள், மகிழ்ச்சியைக் கொண்டாடுவார்கள், இதற்கு அவர்கள் கூறும் காரணம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்தை தழுவிய அவ்வாண்டில் ஸஃபர் மாதம் நோய்வாய் படுகிறார்கள்.
கடைசி புதன் கிழமை எழுந்து குளித்து விட்டு மதீனாவுக்கு வெளியே நடந்து சென்றார்கள் என்று கூறுகிறார்கள், இவை அனைத்தும் ஆதாரமற்றவை. ,
உண்மையில் நபி (ஸல்) அவர்கள் அந்நேரம் கடுமையாக நோய்வாய்ப்பட்டார்கள்.
சஃபர் மாதத்தில், துர்சகுனம் என நம்புவதும், ஆபத்துகள், ஜின்களின் இடர்கள் நிறைந்த மாதம் என கருதுவதும் இஸ்லாத்திற்கு முரணான செயலாகும்.
அல்லாஹுத்தஆலாவின் களா-கத்ரு எனும் விதியில் நிர்ணையிக்கப்பட்டவைகளைத் தவிர காலம்,நேரம் எந்த மாற்றத்தையும் செய்திட இயலாது.சஃபர் மாதமும் ஏனைய மாதங்களைப் போலவே ஒரு மாதமாகும், ஒருவர் இந்த மாதத்தில் ஷரியாவின் சட்டங்களைக் கடைப்பிடித்தால், இந்த மாதம் அவருக்கு பாக்கியமாகும்,
இந்த மாதத்தில் பாவம் செய்தால், அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவானேயானால், அவன் பாவியாகிவிடுவான்.பாவமே மனிதனின் பெரும் துர்சகுனமாகும்.
இறுதியாக...
இஸ்லாமிய நெறியை பின்பற்றுவதை விட்டும் இஸ்லாமியர்கள் தூரமாகும் போது தானாகவே அவர்கள்
மூடநம்பிக்கைகளுக்கும், கெட்ட சகுனங்களுக்கும் பலியாகின்றனர். அவை ஈமானை பலவீனப்படுத்தி வழிகேடர்களாக அவர்களை மாற்றிவிடுகின்றது, (நவூதுபில்லாஹ்...)
அல்லாஹ் நம்மை தீயஅனாச்சாரங்களை விட்டும் பாதுகாத்து,இஸ்லாமிய நெறியை பின்பற்றி வாழும் நன்மக்களாக ஆக்கி அருள்வானாக!ஆமீன்..