இஸ்லாம் கூறும் மத நல்லிணக்கம்.
ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க தினம் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த தினமான ஆகஸ்ட் 20 -ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம்.இஸ்லாம் மதமல்ல அது ஓர் அழகிய வாழ்வியல் முறையாகும்.
உலகமாந்தார்கள் யாவரும் ஒரு தாய்,தந்தையரின் பிள்ளைகள் ஆவார்கள்.உங்களுக்கிடையில் நிறம்,மொழி,இனம்,சமயம் என்கிற பேதங்கள் கிடையாது என்கிறது திருமறை...
يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.(அல்குர்ஆன் : 49:13)
மதங்களை விடவும் மனிதாபிமானம் முக்கியமானது.தான் சார்ந்த சமயத்தின் பற்று அடுத்த சமயத்தவரின் மீது விரோதம் கொள்ளவோ,அவர்களை வெறுக்கவோ காரணமாக அமைந்து விடலாகாது என நல்லிணக்கம் போதிக்கிறது இஸ்லாம்...
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّا امِيْنَ لِلّٰهِ شُهَدَآءَ بِالْقِسْطِ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ عَلٰٓى اَ لَّا تَعْدِلُوْا اِعْدِلُوْا هُوَ اَقْرَبُ لِلتَّقْوٰى وَاتَّقُوا اللّٰهَ اِنَّ اللّٰهَ خَبِيْرٌ بِمَا تَعْمَلُوْنَ
முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 5:8)
لَا خَيْرَ فِىْ كَثِيْرٍ مِّنْ نَّجْوٰٮهُمْ اِلَّا مَنْ اَمَرَ بِصَدَقَةٍ اَوْ مَعْرُوْفٍ اَوْ اِصْلَاحٍۢ بَيْنَ النَّاسِ ؕ وَمَن يَّفْعَلْ ذٰ لِكَ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ فَسَوْفَ نُـؤْتِيْهِ اَجْرًا عَظِيْمًا
தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத் தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுக்களில் எந்த நன்மையும் இல்லை. அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்கு மகத்தான கூலியை வழங்குவோம். (அல்குர்ஆன் 4:114)
ஒரு முஸ்லிம் பிற சமயத்தவர்களோடு நீதமாக நடந்துக்கொள்ளவேண்டும். விரோதம் பாராட்டலாகாது. மதவெறி,பிறசமய வெறுப்பு நீதமாக நடப்பதை விட்டும் தடுக்கும் என்கிறது அருள்மறையாம் திருமறை.
அண்ணலம் பெருமானார் ﷺ அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்றபோது, அங்கே யூதர்கள்,கிருத்துவர்கள்,சிலைவணக்கம்புரிபவர்களோடு இஸ்லாமியர்களும் சேர்ந்து வாழ்கின்றனர்.
பின்பு மதினாவின் ஆட்சி,அதிகாரம் நாயகம் ﷺஅவர்களின் ஆளுகைக்கு கீழ் வந்ததும்,அங்கு வாழ்ந்துவந்த வேற்று மதத்தவர்களை இஸ்லாமை ஏற்குமாரோ அல்லது மதினாவை விட்டும் வெளியேறும் படியோ நிர்பந்திக்கவில்லை.அவரவர் தம் மதவிருப்படி வாழ முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது.
இஸ்லாமியர்கள் மற்ற மதத்தவர்களோடு கொடுக்கல்,வாங்கலில் ஈடுப்பட்டனர்,அவர்களின் விருந்துகளில் பங்கெடுத்தனர்.மத பேதமின்றி நல்லிணக்கத்தோடு நடந்துக்கொண்டனர்.வேறுபட்ட கடவுள் கொள்கையுடையவர்களாக இருந்தாலும் அவர்களோடு சகோதர வாஞ்சையோடு பழகுமாறு இஸ்லாம் அறிவுறுத்துகின்றது.
இஸ்லாமிய ஆட்சியில் மத நல்லிணக்கம்.
இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும் குடி மகன் என்ற வகையில், முஸ்லிமல்லாதாரின் உயிர் உடமைப் பாதுகாப்பு தொடர்பாகவும் (ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள்,
عن عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم قال من قتل نفسا معاهدا لم يرح رائحة الجنة
'ஒப்பந்தத்தில் உள்ள ஒரு திம்மியை(முஸ்லிமல்லாதாரை) எவரேனும் கொலை செய்தால் அவர் சுவர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்' (புஹாரி, அபூதாவுத்)
மற்றுமொருமறை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
قول النبي صلى الله عليه وسلم: (ألا من ظلم معاهدًا أو انتقصه أو كلفه فوق طاقتِه أو أخذ منه شيئًا بغيرِ طيبِ نفسٍ فأنا حجيجُه يوم القيامةِ،
'யார் முஸ்லிமல்லாத ஒரு உடன்படிக்கை செய்திருக்கும் திம்மிக்கு அநீதியிழைக்கிறாரோ அல்லது அவரது உரிமையைக் குறைக்கின்றாரோ, அல்லது அவரது சக்திக்கு மேல் பொறுப்புக்களை சுமத்துகின்றார்களோ அல்லது அவரது மன விருப்பின்றி ஏதேனுமொன்றை அவரிடமிருந்து பெறுகின்றாரோ அவருக்கெதிராக மறுமையில் நான் வாதிடுபவனாக இருப்பேன்' (அபூதாவுத்)
ஒரு தடவை எகிப்தில் கவர்னராக இருந்த அம்ரிப்னுல் ஆஸ் (ரழி) அவர்கள் பள்ளிவாசலை விஸ்தரித்து கட்டுவதற்காக ஒரு யூதப் பெண்ணின் வீட்டை அவளது விருப்பமின்றி வேறு இடம் தருவதாகக் கூறி உடைத்து விட்டு பள்ளிவாசலை விசாலமாக்கிக் கட்டினார்கள். அப்பெண் தலைநகருக்குச் சென்று கலீபாவாக அன்று காணப்பட்ட உமர் (ரழி) அவர்களிடம் முறையிட்டாள். உடனே அம்ரிப்னுல் ஆஸ் (ரழி) அவர்களை வரவழைத்து விசாரித்தபோது, அவள் அளவுகதிகமாக ஈட்டுத்தொகையை எதிர்பார்ப்பதாகவும், அவளது ஈட்டுத்தொகை பைத்துல் மாலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தபோது உமர் (ரழி) அவர்கள் அப்பள்ளிவாசலை இடித்துவிட்டு அப்பெண்ணின் வீட்டைக் கட்டிக்கொடுக்குமாறு உத்தரவிட்டார்கள். இச்சம்பவமானது இஸ்லாமிய ஆட்சியின் கீழ் முஸ்லிமல்லாதார் கூட தங்களது உடமைப் பாதுகாப்புக்கு எந்தளவு உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது கண்கூடு. இவ்வாறான ஏராளமான சம்பவங்களை இஸ்லாம் அரசோச்சிய கால வரலாற்றில் கண்டுகொள்ள முடியும்.இஸ்லாமிய அரசாட்சியின்போது குடிமக்கள் முஸ்லிம், முஸலிமல்லாதார் என பாகுபாடின்றி சகலரினதும் உயிர், உடமைப்பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது.
நாயகம்ﷺஅவர்கள் வழிகாட்டிய சமயநல்லிணக்கம்.
عن أنس رضي الله عنه، قال: كان غلام [1] يهودي يخدم النبي صلى الله عليه وسلم فمرِض، فأتاه النبي صلى الله عليه وسلم يَعُودُه، فقَعَدَ عند رأسه، فقال له: «أَسْلِم»، فنظر إلى أبيه وهو عنده، فقال له: أَطِعْ أبا القاسم صلى الله عليه وسلم، فأَسْلَمَ، فخرج النبي صلى الله عليه وسلم وهو يقول: «الحمد لله الذي أنقذه من النار»
நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே அவனை நோய் விசாரிக்க நபி (ஸல்) அவர்கள் அவனிடம் வந்து அவனது தலைமாட்டில் அமர்ந்துகொண்டு ‘இஸ்லாத்தை ஏற்றுக் கொள்!’ என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், ‘அபுல் காசிம் (என்ற) நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்குக் கட்டுப்படு!’ என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டான். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்விற்கே சகலப் புகழும்’ எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.(அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி-1356
நபியவர்களுக்குப் பணிவிடை செய்யும் அளவிற்கு யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நெருக்கமாகப் பழகியுள்ளார்கள். இந்த நெருக்கத்தினால் தான் யூதச் சிறுவன் நோய்வாய்ப்படும் போது அவனை நலம் விசாரிக்கச் செல்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் சிறுவனைப் பார்த்து, இஸ்லாத்தை ஏற்றுக் கொள் என்று கூறிய மாத்திரத்தில் அவனுடைய தந்தை ஏற்றுக் கொள்வதற்கு அனுமதியளிக்கிறார் என்றால் பெருமானார் மீது அவர் எவ்வளவு மரியாதை வைத்திருப்பார்? நபியவர்கள் அவரிடத்தில் அழகிய முறையில் நடந்து கொண்டதே இதற்குக் காரணம்.
இறந்து விட்ட யூதர் ஒருவர் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் காட்டிய மத நல்லிணக்கம்..
كان سَهْلُ بنُ حُنَيْفٍ، وقَيْسُ بنُ سَعْدٍ قَاعِدَيْنِ بالقَادِسِيَّةِ، فَمَرُّوا عليهما بجَنَازَةٍ، فَقَامَا، فقِيلَ لهما إنَّهَا مِن أَهْلِ الأرْضِ أَيْ مِن اهْلِ الذِّمَّةِ، فَقالَا: إنَّ النبيَّ صَلَّى اللهُ عليه وسلَّمَ مَرَّتْ جِنَازَةٌ فَقَامَ، فقِيلَ له: إنَّهَا جِنَازَةُ يَهُودِيٍّ، فَقالَ: أَليسَتْ نَفْسًا.
الراوي : سهل بن حنيف وقيس بن سعد | المحدث : البخاري| المصدر : صحيح البخاري
ஸஹ்ல் இப்னு ஹுனைஃபு (ரலி), கைஸ் இப்னு ஸஅத் (ரலி) ஆகியோர் காதிஸியாவில் ஓரிடத்தில் அமர்ந்திருந்தபோது ஒரு ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. உடனே அவர்கள் இருவரும் எழுந்தார்கள். அப்போது அவர்களிடம் ‘இது இந்நாட்டில் அபயம் பெற்ற (காபிரின்) ஜனாஸாவல்லவா?’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவ்விருவரும், ‘நபி (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு ஜனாஸா சென்றபோது எழுந்து நின்றார்கள்; அப்போது அவர்களிடம் அது யூதரின் ஜனாஸா எனக் கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இவர் மனிதரில்லையா?’ எனப் பதிலளித்தார்கள் என்றார்கள். (புஹாரி :1312 அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரலி)
முஸ்லிம் மற்றும் யூதருக்கு மத்தியில் நடந்த சண்டையை தீர்த்து வைத்த பெருமானார்.
ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம், 'உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று கூறினார். அந்த யூதர், 'உலகத்தார் அனைவரை விடவும் மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்டு) அந்த முஸ்லிம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்துவிட்டார். அந்த யூதர், நபி(ஸல்) அவர்களிடம் சென்று தனக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்த (சச்சர)வையெல்லாம் தெரிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை அழைத்து வரச்சொல்லி அது பற்றி அவரிடம் கேட்டார்கள். அவர் விபரத்தைக் கூறினார். (நடந்தவை அனைத்தையும் விசாரித்துத் தெரிந்து கொண்ட பின்) நபி(ஸல்) அவர்கள், 'மூஸாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நாளில் மூர்ச்சையாகி விடுவார்கள். நானும் அவர்களுடன் மூர்ச்சையாகி விடுவேன். நானே முதலாவதாக மயக்கம் தெளிந்து எழுவேன். அப்போது, மூஸா(அலை), (அல்லாஹ்வின்) அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெளிந்து விட்டிருப்பாரா, அல்லது அல்லாஹ் அவருக்கு மட்டும் (மூர்ச்சையடையத் தேவையில்லையென்று) விதி விலக்கு அளித்திருப்பானா என்று எனக்குத் தெரியாது' என்று கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி (2411)
நபிகளார் தமது இருபத்தைந்தாம் வயதில் அல்அமீன் (நன்னம்பிக்கைக்குரியவர்) என்ற சிறப்புப் பெயரை ஊர் மக்களால் சூட்டப்பெற்றார்கள் என்பதிலிருந்தே அவர்கள் எந்த அளவுக்கு பொது மக்களுக்கு சேவை செய்திருக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது.
இருவருக்கு மத்தியில் நல்லிணக்கம்.
49:9 وَاِنْ طَآٮِٕفَتٰنِ مِنَ الْمُؤْمِنِيْنَ اقْتَتَلُوْا فَاَصْلِحُوْا بَيْنَهُمَاۚ فَاِنْۢ بَغَتْ اِحْدٰٮهُمَا عَلَى الْاُخْرٰى فَقَاتِلُوا الَّتِىْ تَبْغِىْ حَتّٰى تَفِىْٓءَ اِلٰٓى اَمْرِ اللّٰهِ ۚ فَاِنْ فَآءَتْ فَاَصْلِحُوْا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَاَقْسِطُوْا ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ
நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக்கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.(அல்குர்ஆன் 49:9,10)
இந்த வசனம் நபித் தோழர்களுக்கிடையே பிரச்சனைகள் எழுந்த போது தான் அருளப்பட்டது.
2691- حَدَّثَنَا مُسَدَّدٌ ، حَدَّثَنَا مُعْتَمِرٌ قَالَ : سَمِعْتُ أَبِي أَنَّ أَنَسًا ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ
قِيلَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم لَوْ أَتَيْتَ عَبْدَ اللهِ بْنَ أُبَيٍّ فَانْطَلَقَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم وَرَكِبَ حِمَارًا فَانْطَلَقَ الْمُسْلِمُونَ يَمْشُونَ مَعَهُ وَهْيَ أَرْضٌ سَبِخَةٌ فَلَمَّا أَتَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ إِلَيْكَ عَنِّي وَاللَّهِ لَقَدْ آذَانِي نَتْنُ حِمَارِكَ فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ مِنْهُمْ وَاللَّهِ لَحِمَارُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم أَطْيَبُ رِيحًا مِنْكَ فَغَضِبَ لِعَبْدِ اللهِ رَجُلٌ مِنْ قَوْمِهِ فَشَتَمَا فَغَضِبَ لِكُلِّ وَاحِدٍ مِنْهُمَا أَصْحَابُهُ فَكَانَ بَيْنَهُمَا ضَرْبٌ بِالْجَرِيدِ وَالأَيْدِي وَالنِّعَالِ فَبَلَغَنَا أَنَّهَا أُنْزِلَتْ {وَإِنْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا
நபி (ஸல்) அவர்களிடம், ”தாங்கள் அப்துல்லாஹ் பின் உபையிடம் வந்தால் நன்றாயிருக்கும்” என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அவனிடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள். முஸ்லிம்களும் நபி (ஸல்) அவர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்கள் சென்ற பாதை உவர் நிலமாக இருந்தது.
அவனை நபி (ஸல்) அவர்கள் சென்றடைந்த போது அவன், ”தூர விலகிப் போவீராக! அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமது கழுதையின் துர்நாற்றம் என்னைத் துன்புறுத்தி விட்டது” என்று கூறினான்.
அப்போது அவர்களுடன் இருந்த (அன்சாரித்) தோழர் ஒருவர், ”அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய கழுதை உன்னை விட நல்ல வாசனை உடையதாகும்” என்று கூறினார்.
அப்துல்லாஹ்வுக்காக அவனுடைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஆத்திரமடைந்து அந்த அன்சாரியை ஏசினார். அந்த இருவருக்காகவும் அவரவருடைய நண்பர்கள் கோபமடைந்தார்கள். தங்களுக்கிடையே ஈச்சங்குச்சியாலும் கைகளாலும் செருப்புக்களாலும் அடித்துக் கொண்டார்கள்.
அப்போது ‘இறை நம்பிக்கையாளர்களில் இரு குழுவினர் தங்களுக்குள் சண்டையிட நேர்ந்தால் அவர்களிடையே சமாதானம் செய்து வையுங்கள்’ (49:9) என்னும் வசனம் அருளப்பட்டது.(புகாரி)
மத நல்லிணக்கத்திற்கு சிறந்த ஒர் உதாரணம்
22.01.22 அன்று கேரளாவில் உள்ள காயம்குளம் அருகே செரவாலி என்ற ஊரில் நடந்து உள்ளது. அந்த ஊரில் இருக்கும் கோவில் அருகே வசித்து வருபவர் பிந்து. ஏழ்மையான விதவைப்பெண். இந்து மதத்தைச் சேர்ந்தவர். அவர் தன் 24 வயதான மூத்த மகள் அஞ்சுவுக்கும், காயம்குளத்தை சேர்ந்த சசி என்பவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவெடுத்த நேரத்தில், தன் வறுமை காரணமாக பணம் இல்லாத சூழ்நிலையில் உள்ளூர் மசூதியில் உள்ள ஜமாத் கமிட்டியின் செயலாளர் நுஜுமுதீனிடம் உதவி கேட்டார். நுஜுமுதீனும் ஜமாத்தில் இதுகுறித்து ஆலோசனை நடத்தியபோது, உதவி என்ன உதவி? நாமே திருமணத்தை நடத்தி வைப்போம். அதுவும் மசூதியிலேயே நடத்தி வைப்போம் என்று சொல்லி மசூதி வளாகத்தில் இந்து முறைப்படி வேதங்கள் ஓத, திருமணத்தை நடத்தி வைத்து இருக்கிறார்கள். எல்லா மதங்களை சேர்ந்த 4 ஆயிரம் பேர் கலந்துகொண்ட இந்த கோலாகல திருமணத்தில் பாயாசம், வடையோடு சைவ விருந்து பரிமாறப்பட்டு இருக்கிறது. மணமகளுக்கு ஜமாத்தின் சார்பில் 10 பவுன் தங்க சங்கிலியும், 2 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு மட்டுமல்லாமல், டி.வி. ரெப்ரிஜிரேட்டர் என்று ஒரு குடும்பம் நடத்த தேவையான அனைத்து பொருட்களையும் பரிசாக வழங்கி உள்ளனர். இந்து முறைப்படி திருமணம் நடந்தாலும், மணமக்கள் மசூதியையும் வழிபட்டு, தலைமை இமாம் ரியாசுதீன் பைசின் ஆசியையும் பெற்றுள்ளனர். திருமணத்தை நடத்தி வைத்த இந்து மத குருவும், முஸ்லிம் தலைமை இமாமும் அருகருகே உட்கார்ந்து மகிழ்வோடு பேசிக்கொண்டே சாப்பிட்டது மத ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் விதமாக இருந்தது.
இஸ்லாம் கூறும் சமய நல்லிணகத்தை நாடு பின்பற்றிநடந்தால் நாட்டில் நடைபெறும் மததுவேஷ அத்துமீறல்கள் நீங்கி மதசுதந்திரத்தோடும்,சமய நல்லிணக்கத்தோடும் மக்கள் நிம்மதியாக வாழ்வதோடு நாடும் முன்னேற்றம் அடையும்.