தலைப்பு :
குர்பானி உணர்த்தும் தத்துவங்கள்.
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.
(அல்குர்ஆன் : 108:2)
தியாகத்திருநாளாம் ஹஜ்ஜுப்பெருநாளில் உலகெங்கிலுமுள்ள அநேக இஸ்லாமியர்கள் நிறைவேற்றும் உயர்ந்த,உன்னதமான வணக்கம் குர்பானியாகும்.
ஆதிபிதா ஆதம் (அலை)அவர்கள் துவங்கி ஹழ்ரத் முஹம்மது (ஸல்)அவர்களின் உம்மத்தினர்களாகிய நம் வரை உயிர்ப்புடனிருக்கும் சிறந்த வணக்கம் குர்பானியாகும்.
وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ ابْنَىْ اٰدَمَ بِالْحَـقِّۘ اِذْ قَرَّبَا قُرْبَانًا
(நபியே!) ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பியும்; அவ்விருவரும் (ஒவ்வொருவரும்) குர்பானி கொடுத்த போது,
(அல்குர்ஆன் : 5:27)
குர்பானி என்பதன் மூலச்சொல் (قرب )குர்ப் قرباني என்பதன் பொருள் நெருக்கமாக்கி வைப்பது.
ஷரீஅத்தில் குர்பானி என்பது...
کل ما یتقرب بہ إلى اللہ تعالى من ذبیحۃ و غیرہا
பிராணியை அறுத்துபலியிடுதல்,இன்னும் இதுப்போன்றவைகளால் அல்லாஹுவின் பால் நெருக்கமாக்கிவைக்கும் செயல்கள் அனைத்திற்கும் குர்பானி என்றுச் சொல்லப்படும்.
குர்பானி என்பது வெறுமனே பிராணியை அறுத்து பலியிடுவதோ அல்லது அதன் இறைச்சியை வகைவகையாக சமைத்து உண்பதோ அல்லது அதை சுற்றத்தார்களுக்கு பகிர்ந்தளிப்பதோ இவைகள் மாத்திரம் இல்லை.
துல்ஹஜ் மாத பிறை பத்தாம் நாள் வசதிவாய்ப்புள்ளவர்கள் ஒரு பிராணியை அறுத்து பலியிடுதல் எனும் குர்பானி ஆகச்சிறந்த அமல் என்பதில் ஐயமில்லை.அதைதாண்டி குர்பானி,மகத்துவமிக்கதோர் மார்க்க கடமையாகும்.
இஸ்லாத்தின் ஏனைய வணக்கங்களுக்கு உள்ள தனித்துவங்களும்,தாத்பரியங்களும் குர்பானிக்கும் உண்டு.
அவற்றில் சில வற்றை காண்போம்....
1,இறையச்சம்,உளத்தூய்மை:
குர்பானியின் உயர்ந்த தாத்பரியங்களில் ஒன்று முஸ்லிம்களுக்கு இறையச்சத்தையும்,உளத்தூய்மையையும் போதிப்பதாகும்.
திருமறையில் அல்லாஹ்....
لَنْ يَّنَالَ اللّٰهَ لُحُـوْمُهَا وَلَا دِمَآؤُهَا وَلٰـكِنْ يَّنَالُهُ التَّقْوٰى مِنْكُمْ كَذٰلِكَ سَخَّرَهَا لَـكُمْ لِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ وَبَشِّرِ الْمُحْسِنِيْنَ
(எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
(அல்குர்ஆன் : 22:37)
எனவே குர்பானி முஸ்லிமின் உள்ளத்தில் இறையச்சத்தையும்,உளத்தூய்மையையும் உண்டாக்கியிருக்கவேண்டும்.
இந்த இறையச்சம் இப்ராஹீம் (அலை) இஸ்மாயீல் (அலை) தாயார் ஹாஜரா அம்மையாரிடம் நிரப்பமாக இருந்தது.
இதே தக்வா எனும் இறையச்சம் ஸஹாபாக்களிடம் நிரப்பமாக இருந்தது.
ஹலரத் உமர் (ரலி) ஆட்சியில் அவர்கள் இரவில் நகர் வலம் வந்த போது, ஒரு வீட்டில் தாய் தனது மகளிடம் “பாலில் தண்ணீர் ஊற்று” என சொல்கிறார். ஹலரத் உமர் (ரலி) கூர்ந்து கேட்கிறார்கள். மகள் சொல்கிறாள் “பாலில் தண்ணீர் ஊற்றக் கூடாது என்பது ஜனாதிபதி உமரின் கட்டளை!” தாய் சொல்கிறார் “இந்த நடுநிசி இரவில் உமர் பார்த்துக் கொண்டிருக்கிறாரா? தண்ணீர் ஊற்று” மகள் உடனே சொல்கிறார் “ஹலரத் உமர் பார்க்காவிட்டாலும் என்னையும், உன்னையும் படைத்த அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். எப்படி தண்ணீர் ஊற்றுவது? இப்பெண்ணின் தக்வா அப்பெண்ணை ஹலரத் உமர் (ரலி) அவர்களின் மருமகளாக உயர்த்தியது.
வரலாற்றில் ஒரு ஆட்டிடையன் சம்பவம் மிகவும் பிரபல்யமானது. காட்டில் ஒரு ஆட்டிடையன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். பிரயாணம் செய்த ஒரு பெரியவர் ஆட்டிடையனிடம் “ஒரு ஆடு விலைக்கு கொடு, பணம் தருகிறேன், உணவு சமைத்து உனக்கு உண்ணவும் தருகிறேன்” என்றார். அதற்கு ஆட்டிடையன் “ஆடுகள் எனது எஜமானனுக்குச் சொந்தமானவை. அவரின் அனுமதி இல்லாமல் விற்க முடியாது” இதைக் கேட்ட பெரியவர் “எனக்கு ஒரு ஆடு விற்று விடு. எஜமானன் கேட்டால் ஆட்டை ஓநாய் அடித்து தின்று விட்டது எனக் கூறிவிடு” என்றார். உடனே அந்த ஆட்டிடையன், “பொய் சொல்வதா? அல்லாஹ் நம்மை பார்த்துக் கொண்டு இருக்கிறான்” எனக் கூறி தர மறுத்துவிட்டார். இவரது தக்வா ஆட்டு மந்தைக்கே அவரை சொந்தக்காரனாக்கியது.
2,நபி இப்ராஹீம் (அலை)அவர்களின் வழிமுறை(சுன்னத்):
குர்பானி என்பதே ஒப்பற்ற உதாரணப்புருஷர் ஹழ்ரத் இப்ராஹீம் (அலை)அர்களின் நிகரற்ற தியாகத்தை நினைவுக்கூர்வதாகும்.
அதனால்தான் ஸஹாபிகள் நபி (ஸல்) அவர்களிடம் இந்த உள்ஹிய்யா என்ன? என்று கேட்கிறார்கள், இது உங்கள் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்களின் வழிமுறை என்றார்கள்.அதில் எங்களுக்கு என்ன? என மீண்டும் கேட்டபோது அதன் ஒவ்வொரு முடிக்கும் ஒரு நன்மை உண்டு என்றார்கள்.
عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ: قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللَّهِ مَا هَذِهِ الْأَضَاحِيُّ؟ قَالَ: «سُنَّةُ أَبِيكُمْ إِبْرَاهِيمَ» قَالُوا: فَمَا لَنَا فِيهَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «بِكُلِّ شَعَرَةٍ، حَسَنَةٌ» قَالُوا: " فَالصُّوفُ؟ يَا رَسُولَ اللَّهِ قَالَ: «بِكُلِّ شَعَرَةٍ مِنَ الصُّوفِ، حَسَنَةٌ» (ابن ماجة)
நினைவுக்கூர்வதென்றால் வெறுமனே அவர்களின் தியாகத்தை புகழ்வது,பெருநாள் கொண்டாடுவதாக மட்டும் இருக்கக்கூடாது. அன்னவர்களைப்போல இறைவனுக்காக எதையும் அர்ப்பணிக்கும் உணர்வை குர்பானி உணர்ததவேண்டும்.
3,அர்ப்பனிப்புணர்வு:
குர்பானி வருங்காலங்களில் எனது உயிர்,உறவு,உடமைகள் அனைத்தையும் அல்லாஹ்காக தியாகம் செய்வேன் என்ற அர்பணிப்புணர்வை தரவேண்டும்.
இறைவன் தனது திருமறையில் கூறுவதைப் போல....
قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ
நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.
(அல்குர்ஆன் : 6:162)
படைத்தவனுக்கு வழிப்படுவது,விருப்பு வெறுப்பை துறப்பது
இறைப்பொருத்தத்திற்காக தனக்குள்ள விருப்பு,வெறுப்புகள்,இச்சைகள் அனைத்தையும் துறப்பேன் எனும் தியாக உணர்வுவை குர்பானி தரவேண்டும்.
உஸைரிம் ரலியின் அர்பணிப்பு
ஒருதடவையும் தொழாதவர் போரில் மரணித்ததற்காக அவருக்கு நபியவர்கள் செய்த அறிவிப்பு.
உஹது யுத்தம் நடைபெற்று முடிந்ததன் பின்பு போரில் காயமடைந்தவர்களையும், கொல்லப்பட்ட (சஹீதான) நபித்தோழர்களையும் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதில் கடும் காயங்களுக்குள்ளாகி உயிர் பிரியும் நிலையில் இருந்தவர்களில் “உஸைரிம்” என்றழைக்கப்படும் அம்ர் இப்னு ஸாபித் (ரலி) என்பவரும் ஒருவர்.
இவர் ஒருபோதும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதில்லை. பல முறை இவருக்கு இஸ்லாத்தை எடுத்துக் கூறி அழைப்பு விடுத்திருந்தும் அவர் இஸ்லாத்தை ஏற்காமல் மறுத்துவந்தார்.
இவ்வாறு இஸ்லாமிய மார்க்கம் பிடிக்காத ஒருவர் போர்க்களத்தில் படுகாயம் அடைந்த நிலையை நபித் தோழர்கள் பார்த்தபோது, இஸ்லாத்தை பிடிக்காத இவர் ஏன் இங்கு வந்தார் என்று கூறிக்கொண்டு அவரிடம் விசாரித்தனர்.
அதற்கு உஸைரிம் அவர்கள் “இஸ்லாத்தின் மீதுள்ள பிரியத்தினால்தான் போரில் கலந்துகொண்டேன். நான் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டேன். அல்லாஹ்வின் தூதரோடு சேர்ந்து எதிரிகளுடன் போர் புரிந்தேன். இப்போது எனது நிலை என்னவென நீங்கள் பார்க்கின்றீர்கள்” என்று தனது பேச்சை முடிக்கின்ற நிலையில் அவரது உயிர் பிரிந்தது.
இவரது இந்த நிலை பற்றி நபி அவர்களிடம் எடுத்துக் கூறப்பட்டது. அதற்கு நபி அவர்கள் “அவர் சுவனவாசிகளில் ஒருவர்” என்றார்கள்.
இது பற்றி அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகையில் உஸைரிம் அவர்கள் ஒரு நேரத் தொழுகை கூட தொழவில்லை. இருந்தும் நபியவர்களின் நாவினால் உஸைரிம் அவர்கள் சுவனவாசி என்ற நற்செய்தி பெற்றார்.
மலக்குகள் அவரை எடுத்து சென்று குளிப்பாட்டினார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இது தான் தியாகம், இது தான் உண்மையான தியாகம் இதுப் போன்ற தியாக உணர்வை இந்த குர்பானி நம்மிடம் ஏற்படுத்த வேண்டும்.
4,உதவும் மனப்பான்மை:
குர்பானி இறைச்சியை தனது சுற்றத்தார்களுக்கு வழங்குவதன் மூலம் உதவும் மனப்பான்மையை உணர்த்துகிறது.
فَاِذَا وَجَبَتْ جُنُوْبُهَا فَكُلُوْا مِنْهَا وَاَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَـرَّ كَذٰلِكَ سَخَّرْنٰهَا لَـكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ
பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இரப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் - இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.
(அல்குர்ஆன் : 22:36)
5,நேர மேலாண்மை:
இஸ்லாத்தில் எல்லா அமல்களுமே அதனதற்குய நேரத்தித்தில் நிறைவேற்படுவதை வலியுறுத்துப்படுகிறது.
தொழுகை,நோன்பு,ஹஜ்,ஜகாத் இவைகளைப் போலவே குர்பானியும் துல்ஹஜ் பிறைகளான 10,11,12ஆகிய மூன்று தினங்களில் நிறைவேற்றபடவேண்டும் என்ற நேரமேலாண்மையை நமக்குணர்த்துகிறது.
الأضحية جَائِزَةٌ فِي ثَلَاثَةِ أَيَّامٍ : يَوْمُ النَّحْرِ وَيَوْمَانِ بَعْدَهُ وَقَالَ الشَّافِعِيُّ : ثَلَاثَةُ أَيَّامٍ بَعْدَهُ لِقَوْلِهِ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ { أَيَّامُ التَّشْرِيقِ كُلُّهَا أَيَّامُ ذَبْحٍ } وَلَنَا مَا رُوِيَ عَنْ عُمَرَ وَعَلِيٍّ وَابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَنَّهُمْ قَالُوا : أَيَّامُ النَّحْرِ ثَلَاثَةٌ أَفْضَلُهَا أَوَّلُهَا- وَيَجُوزُ الذَّبْحُ فِي لَيَالِيِهَا إلَّا أَنَّهُ يُكْرَهُ لِاحْتِمَالِ الْغَلَطِ فِي ظُلْمَةِ اللَّيْلِ (الهداية)
ஷாபி மத்ஹபின் படி பிறை 10, 11, 12, 13 நாட்களில் குர்பானி கொடுக்கலாம். ஹனபி மத்ஹபின் படி பார்க்கும் போது பிறை 10, 11, 12 நாட்கள் மட்டுமே.
அவற்றில் முதலாவது நாள் கொடுப்பது சிறந்தது என்று நபி ஸல் அவர்கள் கூறி இருக்கிறார்கள்.
இரவில் கொடுப்பது கூடும் என்றாலும் அது மக்ரூஹ் ஆகும்.
6,தியாக உணர்வு மார்க்க கடமை:
குர்பானி என்பது தியாகம் செய்வதை மார்க்க கடமை என்று உணர்த்துகிறது. ஆம் இப்ராஹீம் (அலை) இஸ்மாயீல் (அலை) இவர்களின் தியாகத்தை நினைத்து பார்த்து நாமும் அந்த உணர்வை நமக்குள் கொண்டு வர வேண்டும்.
தியாகம் செய்பவர் இரண்டு வகை.
1) இறைவனுக்காக தியாகம் செய்பவர்.
2) மற்றவருக்காக தியாகம் செய்பவர்.
உதாரணமாக..தான் காதலித்த காதலிக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்கிறான். தாய், தந்தையை விட்டுவிடுகிறான்.
சிலர் அரசியலுக்காக நிறைய தியாகம் செய்கின்றனர். தன் தலைவனுக்காக தீக்குளிக்கிறான். ஆனால் உண்மையான தியாகம் இதுவல்ல.
தன் இறைவனுக்காக செய்யும் தியாகம் தான் உயர்ந்தது, மகத்துவமானது. அதை தான் இப்ராஹீம் (அலை) , இஸ்மாயீல் (அலை) செய்தார்கள்.
ஆம்.. மகனை யாரிடமாவது விடச் சொன்னால் பரவாயில்லை, ஏன் குழந்தை காணாமல் போயிருந்தாலும் பரவாயில்லை, மாறாக தான் பெற்றெடுத்த பிள்ளையை அறுக்க முனைவது எவ்வளவு பெரிய தியாகம்.
தனக்கு மிஞ்சியதை கொடுப்பது தர்மம். தன்னிடம் உள்ளதை கொடுப்பது தயாளம். தன்னையே கொடுப்பது தான் தியாகம். இதை இஸ்மாயீல் (அலை) செய்ய துணிந்தது அவர்களின் தியாக உணர்வை காட்டுகிறது. ஆனால் இது சாதாரண விஷயமல்ல.
ஆகவே அல்லாஹ் எதிர்வரும் தியாகத்திருநாளை நம் ஈடேற்றத்திற்க்கும்,நலவுகளுக்கும், சோதனைகளிலிருந்து காத்திடவும் காரணமாக்கி வைப்பானாக!ஆமீன்...