முஹம்மது நபி ﷺ அவர்களின் 40 வயதிலிருந்து ஹிஜ்ரத் வரை.
தொடர்......
ஹிரா குகையில்......
வஹியின் வகைகள்....
நபித்துவம்.
அல்லாஹுத்தஆலா தம் நேச நபியை நாற்பது வயதில் தூதராக தேர்ந்தெடுத்தப் பொழுது அகில உலகமுமே இணைவைப்பிலும்,இறைநிராகரிப்பிலும் பாவக்கடலிலும் மூழ்கிக்கொண்டிருந்தது.
இறுதித்தூரக வந்த ஏந்தல் நபி ﷺஅவர்கள் அரபகத்திற்கு மாத்திரமல்ல முழு உலக மனித சமுதாயத்திற்கும்,அவர்கள் வாழ்ந்த காலத்திற்கு மட்டுமல்ல கியாம நாள் வரை உள்ள எல்லா மனிதருக்கும் நேர்வழி காட்டி நன்னெறி படுத்தும் பெரும் சவாலான பொறுப்பு அவர்களுக்கு முன்னால் இருந்தது.
சாமானிய மனிதனால் சிந்தித்துக்கூட பார்த்திர இயலாத இச்சவாலை தன் குறைந்த ஆயுட்காலமான 23 ஆண்டுகளில் சாத்தியமாக்கி காட்டிய தன்னிகற்ற சரித்திரம் போற்றும் மங்கா புகழுக்குச் சொந்தக்காரர் நம் கண்மணி நாயகம்ﷺஅவர்கள்.
நாயகம்ﷺஅவர்களின் நுபுவ்வத்திற்கு பின்னாலுள்ள 13 ஆண்டுகால மக்கா வாழ்வை நான்கு காலக்கட்டங்களாக வகைப்படுத்தலாம்.
முதல் காலகட்டம்.
இது அண்ணல் நபிﷺஅவர்கள் நபித்துவம் பெற்றதிலிருந்து ஏறத்தாழ மூன்றாண்டுகள் வரையுள்ளதாகும்.
இந்த காலகட்டத்தில் நாயகம்ﷺஅவர்கள் தம் அழைப்பு பணியையும் பிரச்சாரப் பொறுப்பையும் ரகசியமாக,மறைவான முறையில் செய்து வந்தார்கள்.
முதலில் நம்பிக்கை கொண்டவர்கள் அபூபக்கர், கதீஜா, ஜைது பின் ஹாரிஸ், அலீ பின் அபூதாலிப்(பெரிய தந்தையின் மகன்) நபித்துவத்தின் முதல் மூன்று ஆண்டுகள்: நபிகளார் இரகசியமாக மக்களை இஸ்லாத்தின் பக்கம் அழைத்தார்கள். மக்காவாசிகளில் சிலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.
இரகசிய அழைப்பு - மூன்று ஆண்டுகள்.
“சூரா” முத்தஸ்ஸிரின் ஆரம்ப வசனங்கள் அருளப்பட்டதும் ஏகத்துவ அழைப்புக்கு நபி (ஸல்) அவர்கள் தயாரானார்கள். அக்கால மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். தங்களது முன்னோர்களை சிலை வணங்கிகளாகக் கண்டார்கள் என்பதைத் தவிர சிலை வணக்கத்திற்காக வேறெந்த ஆதாரமும் அவர்களிடமில்லை. பிடிவாதமும் அகம்பாவமும் அவர்களது இயல்பாக இருந்தன. அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு வாள் முனைதான் என்றும், அரபிய தீபகற்பத்தின் மார்க்கத் தலைமைக்கு தாங்களே மிகத் தகுதியுடையோர் என்றும் நம்பியிருந்தனர். அரபிய தீபகற்பத்தின் மார்க்கத் தலைமையிடமான மக்காவை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அதை அப்படியே பாதுகாப்பது தங்களது பொறுப்பெனக் கருதினர். இப்பொழுது அவர்களது உணர்வில் ஊறிக் கிடந்த கொள்கைகளைத் தகர்க்கும் முயற்சியை திடீரென செய்தால் அது எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே, அழைப்புப் பணியை இரகசியமாகத் தொடங்குவதுதான் விவேகமான செயலாக இருந்தது.
இரண்டாம் கால கட்டம்.
இது நபித்துவத்தை பகிரங்கமாக அறிவித்ததில் இருந்து ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் வரையுள்ளதாகும்.
சபா மலைக் குன்றில் ஏறி நபிகளார் புகழ்பெற்ற உரையை நிகழ்த்தினார்கள். அதைக்கேட்டு அவருடைய உறவினரான அபூஜஹல் எரிச்சல் அடைந்தான். பிலால், யாசிர், சுமைய்யா, அம்மார், கத்தாப் போன்ற ஆதரவற்ற முஸ்லிம்கள் மீது கொடுமைகள் இழைக்கப்பட்டன.
இந்த காலகட்டத்தில் முதலில் சிறிது எதிர்ப்பு காட்டப்பட்டது.பின்னர் கேலி கிண்டல் நையாண்டி செய்யப்பட்டது. பல்வேறு குற்றச்சாட்டுகள் குனிந்து கூறப்பட்டன.இவ்வாறான யுக்திகளின் வாயிலாக இஸ்லாமிய அழைப்பை அமுக்கி நசுக்கிட முயன்றனர்.
சகோதரத்துவம் பேணுதல், உதவி ஒத்தாசை புரிதல் போன்ற நற்பண்புகளுடன் தூதுத்துவத்தைச் சுமந்து அதை எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்ற முஸ்லிம்களின் ஒரு கூட்டம் தயாரானபோது இஸ்லாமிய அழைப்பை பகிரங்கப்படுத்தி, தீமையை நன்மையால் எதிர்கொள்ள வேண்டுமென்று நபி (ஸல்) அவர்களுக்குக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
இது தொடர்பாக முதலாவதாக,
وَاَنْذِرْ عَشِيْرَتَكَ الْاَقْرَبِيْنَۙ
இன்னும், உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!(அல்குர்ஆன் : 26:214)என்ற வசனம் அருளப்பட்டது. இத்திருவசனத்தின் முன்தொடர் நபி மூஸா (அலை) அவர்களுக்கு இறைத்தூது கிடைத்ததிலிருந்து இஸ்ரவேலர்களுடன் அவர்கள் ஹிஜ்ரா செய்தது வரையிலான நிகழ்வுகளும், ஃபிர்அவ்ன் மற்றும் அவனது கூட்டத்தாரிடமிருந்து இஸ்ரவேலர் களுக்குக் கிடைத்த வெற்றியும், ஃபிர்அவ்ன் தனது கூட்டத்தாருடன் மூழ்கடிக்கப்பட்ட சம்பவங்களும் விவரிக்கப்படுகிறது. மேலும், ஃபிர்அவ்னை ஏகத்துவத்தின் பக்கம் அழைத்தபோது நபி மூஸா (அலை) கடந்து சென்ற அனைத்து நிலைமைகளும் விவரமாகக் கூறப்பட்டன.
இஸ்லாமிய அழைப்பை பகிரங்கப்படுத்த வேண்டும் என்ற கட்டளையுடன் மேற்கூறப்பட்ட விவரங்களை கொண்டு வந்ததற்கான காரணம்: மக்களை அழைக்கும்போது அவர்களிடமிருந்து பொய்ப்பித்தல், அத்துமீறல், கொடுமைப்படுத்துதல் போன்றவற்றைச் சந்திக்க நேரிடும்; அவற்றைத் தாங்கியே தீரவேண்டும். எனவே, தொடக்கத்திலிருந்தே தங்களது செயல்பாட்டில் தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக நபி (ஸல்) அவர்களுக்கும் நபித்தோழர்களுக்கும் முன்சென்ற நபிமார்கள் மற்றும் சமுதாயத்தவர்களின் நிகழ்ச்சிகளைச் சுட்டிக்காட்டப்பட்டது.
இம்மார்க்கத்தைப் பொய்யாக்குபவர்கள் தங்களது நிலையில் தொடர்ந்தால், அவர்களுக்கு ஏற்படும் இழிவான முடிவையும் அல்லாஹ்வின் தண்டனையையும் தெரிந்துகொள்ள வேண்டும்; அழகிய முடிவு தங்களுக்குத்தான் என்பதை இறைநம்பிக்கையாளர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக இந்த அத்தியாயத்தில் நூஹ், இப்றாஹீம், லூத், ஹூது, ஸாலிஹ் (அலை) ஆகிய நபிமார்களின் சமுதாயத்தினர், “அஸ்ஹாபுல் அய்கா’ (தோட்டக்காரர்கள்) என இறைத்தூதர்களைப் பொய்யாக்கியவர்களின் முடிவுகள் கூறப்பட்டுள்ளன.
நெருங்கிய உறவினர்களை நேர்வழிக்கு அழைத்தல்.
முந்தியவர்கள்!
நபி (ஸல்) அவர்கள் ஆரம்பமாகக் குடும்பத்தார் மற்றும் நண்பர்களில் தனது நம்பிக்கைக்குரியவர்களுக்கு இஸ்லாமை அறிமுகப்படுத்தினார்கள். உண்மையை நேசிப்பவர், நல்லவர் என தான் எண்ணியவர்களுக்கும் ஏகத்துவ அழைப்பு விடுத்தார்கள். நபி (ஸல்) அவர்களை எந்த வகையிலும் சந்தேகிக்காத ஒரு கூட்டம் அவர்களின் அழைப்பை ஏற்றது. இஸ்லாமிய வரலாற்றில் இவர்கள் “அஸ்ஸாபிக்கூனல் அவ்வலூன்” (முந்தியவர்கள்! முதலாமவர்கள்!) என்று அறியப்படுகின்றனர். இவர்களில் முதன்மையானவர் நபி (ஸல்) அவர்களின் துணைவியரான அன்னை கதீஜா (ரழி) ஆவார். பின்னர் நபி (ஸல்) அவர்களின் அடிமை ஜைது இப்னு ஹாரிஸா (ரழி), நபி (ஸல்) அவர்களின் பராமரிப்பிலிருந்த சிறுவர் அலீ (ரழி), உற்ற தோழரான அபூபக்ர் (ரழி) ஆகிய அனைவரும் அழைப்புப் பணியின் முதல் நாளிலேயே இஸ்லாமைத் தழுவினார்கள். பிறகு இறை அழைப்புப் பணிக்காக அபூபக்ர் (ரழி) ஆயத்தமானார்கள். அவர்கள் அனைவரின் நேசத்திற்குரியவராக, மென்மையானவராக, நற்குணமுடையவராக, உபகாரியாக இருந்தார்கள். அவர்களது அறிவு, வணிகத் தொடர்பு, இனிய பேச்சு ஆகியவற்றை மக்கள் மிகவும் நேசித்தனர். அவர்களில் தனக்கு மிக நம்பிக்கைக்கு உரியவர்களை முதலில் அழைக்கத் தொடங்கினார்கள். அவர்களது அழைப்பை ஏற்று உஸ்மான் இப்னு அஃப்பான், ஜுபைர் இப்னு அவ்வாம், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், ஸஅது இப்னு அபீ வக்காஸ், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹும்) ஆகிய எட்டு நபர்கள் இஸ்லாமை முதன்முதலாக ஏற்றுக் கொண்டனர்.
மூன்றாவது காலகட்டம்.
இத்தனை எதிர்ப்புகளுக்கு பின்னரும் இஸ்லாம் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே செல்வதை கண்டு பொறுக்க முடியாமல் கொடுமைகளும் அக்கிரமங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டன.முஸ்லிம்களை வரம்பு மீறி சித்திரவதைகள் செய்யலாயினர்.இந்த காலகட்டம் ஏறத்தாழ ஐந்தாறு ஆண்டுகள் நீடித்தது.இக்கால கட்டத்தில் முஸ்லிம்கள் விதவிதமான துன்பங்களுக்குள்ளாக நேர்ந்தது.
நான்காம் காலகட்டம்.
இது அபுதாலிப்,அன்னை கதீஜா( ரலி)ஆகிய இருவரின் மறைவிற்குப் பின்னால் இருந்து ஹிஜ்ரத் வரையுள்ள ஏறத்தாழ மூன்றாண்டு காலம் ஆகும்.இந்த காலகட்டம் நாயகம்ﷺஅவர்களுக்கும்,அவர்களின் ஸஹாபாக்களுக்கும் மிகத் துன்பகரமான, வேதனை மிக்க காலகட்டமாய் இருந்தது.
அபிசீனியா (ஹபஷா) நாட்டிற்கு ஹிஜ்ரத்.
நபித்துவத்தின் நான்காம் ஆண்டு நடுவில் அல்லது இறுதியில் முஸ்லிம்கள் மீது நிராகரிப்பவர்கள் வரம்பு மீற ஆரம்பித்தனர். தொடக்கத்தில் குறைவாகத் தென்பட்ட துன்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றன. ஐந்தாம் ஆண்டின் நடுவில் சோதனைகள் மலையாக உருவெடுக்கவே அதிலிருந்து விடுதலைபெற வழி என்ன என்று சிந்திக்கத் தொடங்கினார்கள். இச்சூழ்நிலையில்தான் “அல்லாஹ்வுடைய பூமி நெருக்கடியானதல்ல. எனவே (இடம்பெயரும்) ஹிஜ்ராவின் வழியை தேர்ந்தெடுங்கள்” என்று சுட்டிக் காட்டப்பட்ட அத்தியாயம் ஜுமரில் உள்ள 10வது வசனம் இறங்கியது.
قُلْ يٰعِبَادِ الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوْا رَبَّكُمْ لِلَّذِيْنَ اَحْسَنُوْا فِىْ هٰذِهِ الدُّنْيَا حَسَنَةٌ وَاَرْضُ اللّٰهِ وَاسِعَةٌ اِنَّمَا يُوَفَّى الصّٰبِرُوْنَ اَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ
(நபியே!) நீர் கூறும்: “ஈமான் கொண்ட நல்லடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு பயபக்தியாக இருங்கள்; இவ்வுலகில் அழகாய் நன்மை செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும் - அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது; பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள்.”(அல்குர்ஆன் : 39:10)
ஹபஷாவின் மன்னராக இருந்த “அஸ்மஹா நஜ்ஜாஷி’ நீதமானவர். அவர் யாருக்கும் அநியாயம் இழைக்கமாட்டார் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். எனவே, உயிரையும் மார்க்கத்தையும் பாதுகாத்துக் கொள்ள ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செய்யுமாறு முஸ்லிம்களை நபி (ஸல்) அவர்கள் பணித்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி நபித்தோழர்களின் ஒரு குழுவினர் முதலாவதாக ஹபஷாவிற்கு நாடு துறந்து செல்ல இருந்தார்கள். இதனை குறைஷிகள் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக இரவின் நடுநிசியில் புறப்பட்டு “ஷுஅய்பா’ துறைமுகத்தை அடைந்தனர். வியாபாரக் கப்பல்கள் இரண்டு அங்கு முகாமிட்டிருந்தன. எப்படியோ மோப்பம் பிடித்த குறைஷிகள், இவர்களைத் தேடி அந்த துறைமுகத்திற்கு வந்துவிட்டார்கள். அதற்குள் முஸ்லிம்கள் வியாபாரக் கப்பல்களில் ஏறி ஹபஷாவுக்கு புறப்பட்டு விட்டார்கள். இதனால் குறைஷிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். நாடு துறந்து சென்ற குழுவில் பன்னிரண்டு ஆண்களும் நான்கு பெண்களும் இருந்தனர். அவர்களுக்கு தலைவராக உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) இருந்தார்கள். இப்பயணத்தில் அவர்களின் மனைவியான (நபி (ஸல்) அவர்களின் மகள்) ருகையாவும் (ரழி) உடன் இருந்தார்கள். நபி இப்றாஹீம் (அலை), நபி லூத் (அலை) ஆகிய இருவருக்குப் பின் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரா செய்த முதல் குடும்பம் இதுதான்” என்று இவ்விருவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் அருளால் முஸ்லிம்கள் ஹபஷாவில் வாழ்வை நிம்மதியாகக் கழித்தார்கள். இது நபித்துவம் பெற்ற ஐந்தாம் ஆண்டின் ரஜப் மாதத்தில் நடைபெற்றது. (ஜாதுல் மஆது)
இணைவைப்பவர்களும் சிரம் பணிந்தனர்.
அந்த ஆண்டு ரமளான் மாதம் ஓர் இரவு நபி (ஸல்) அவர்கள் புனித பள்ளிக்குச் சென்றார்கள். அங்கு குறைஷியரும் அவர்களது தலைவர்களும் கொண்ட பெருங்கூட்டமொன்று குழுமியிருந்தது. திடீரென அவர்களுக்கு முன் நபி (ஸல்) அவர்கள் தோன்றி அத்தியாயம் அந்நஜ்மை ஓதினார்கள். நிராகரிப்பவர்கள் இதற்கு முன் குர்ஆன் வசனங்களைக் கேட்டதில்லை. அதற்குக் காரணம், “குர்ஆனை நீங்கள் கேட்காதீர்கள்; அது ஓதப்படும்போது வீண்செயல்களில் ஈடுபடுங்கள்’ என்று அவர்களில் ஒருவர் மற்றவருக்கு கூறி வந்ததுதான். நிராகரிப்பவர்களின் இந்தக் கூற்றைப் பற்றி,
وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَا تَسْمَعُوْا لِهٰذَا الْقُرْاٰنِ وَالْغَوْا فِيْهِ لَعَلَّكُمْ تَغْلِبُوْنَ
“நீங்கள் இந்த குர்ஆனை செவி ஏற்காதீர்கள். (அது ஓதப்படும் போது) அதில் (குழப்பம் செய்து) கூச்சலிடுங்கள், நீங்கள் அதனால் மிகைத்து விடுவீர்கள்” என்றும் காஃபிர்கள் (தங்களைச் சார்ந்தோரிடம்) கூறினர். (அல்குர்ஆன் : 41:26)
என்ற வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
ஊர் விலக்கு ( சமூகப் பகிஷ்காரம் ).
குறைஷியர் முஸ்லிம்களுக்கெதிராக எடுத்த நடவடிக்கைகள் யாவும் ஒன்றன் பின் ஒன்றாகத் தோல்வியடைந்தது மாத்திரமன்றி முஸ்லிம்களது எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே சென்றது. அதே வேளை பெரும் வீரர்களான ஹம்ஸா(ரலி)அவர்களும் உமர்(ரலி)அவர்களும் இஸ்லாத்தில் இணைந்து கொண்டதன் மூலம் முஸ்லிம்களின் பலம் மேலும் வலுவடைந்தது.
நபியவர்களின் உறவினர்களான ஹாஷிம் மற்றும் முத்தலிப் கோத்திரத்தார் அபூதாலிபின் தலைமையில் ஒன்று திரண்டு நபியவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கி வரலாயினர்.
எனவே குறைஷியர் நபியவர்களையும் அவர்களின் உறவினர்களையும் பகிஷ்கரிக்கத் தீர்மானித்தனர். சமூக, பொருளாதார,தகவல் பரிமாற்ற, அரசியல் ரீதியான சகல தொடர்புகளையும் குறைஷியர் துண்டித்துக் கொண்டனர். "முஹம்மதைக் கொலை செய்வதற்காக ஒப்படைக்கும் வரை ஹாஷிம், முத்தலிப் கிளையார்களின் எந்தவொரு சமாதானத்தையும் ஏற்பதில்லை; அவர்கள் மீது இரக்கம் காட்டுவதில்லை" என்ற பொது அறிவித்தலொன்றும் கஃபாவில் தொங்கவிடப்பட்டது.
மக்காவிலுள்ள 40 தலைவர்கள் ஒன்று கூடி அண்ணலாரின் பெரிய தந்தை அபூதாலிப் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தார்களை ஊரை விட்டுத் தள்ளி வைக்கும் நகர்ப்புறக்கணிப்பு நிபந்தனையை நபி பட்டம் கிடைத்த 7 ஆம் ஆண்டு நிறைவேற்றினர். தலைவர்கள் கையொப்பம் இட்ட ஒப்பந்தத்தை கஅபாவில் தொங்கவிட்டனர். இதனால் அபூதாலிப் அவர்கள் தங்களுடைய குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு ஊரருகில் தனது பள்ளத்தாக்கில் சென்று தங்கினார்கள். அப்போது அனைத்து முஸ்லிம்களுக்கும் நாயகம் (ஸல்) அவர்கள் குடும்பத்தினருக்கும் அதிகமான சிரமங்கள் ஏற்பட்டன. இந்த புறக்கணிப்பு மூன்று ஆண்டுகள் நீடித்தது. நபிப் பட்டம் கிடைத்த 10 ஆம் ஆண்டு கஅபாவில் தொங்கவிடப் பட்ட ஆணையை கறையான் அரித்ததால் அழிந்து போய் விட்டது. இதனால் புறக்கணிப்பு ஆணை முடிந்து விட்டது என முடிவு செய்து முஸ்லிம்கள் மக்கா திரும்பினர். சில நாட்களுக்குப் பின் முதலில் கதீஜா (ரழி) அவர்களும், அதைத் தொடர்ந்து பெரிய தந்தை அபூதாலிப் அவர்களும் இறந்து விட்டனர்.
துயர ஆண்டுஅபூதாலிப் மரணம்.
அபூதாலிப் நோய் அதிகமாகி நபித்துவத்தின் பத்தாவது வருடம் ரஜப் மாதத்தில் கணவாயிலிருந்து வெளியேறி சரியாக ஆறு மாதத்திற்குப் பின் மரணம் எய்தினார். (அல்முக்தஸர்)
சிலர் ரமழான் மாதத்தில் அன்னை கதீஜாவின் மரணத்திற்கு மூன்று நாள்களுக்கு முன் மரணமானார் என்றும் கூறுகின்றனர்.
அபூதாலிபுக்கு மரணம் சமீபமானபோது நபி (ஸல்) அவரிடம் சென்றார்கள். அப்போது அங்கு அபூஜஹ்லும் இருந்தான். அபூதாலிபிடம் நபி (ஸல்) அவர்கள் “எனது தந்தையின் சகோதரரே! நீங்கள் “லாஇலாஹஇல்லல்லாஹ்’ என்று கூறுங்கள். நான் அல்லாஹ்விடம் இவ்வார்த்தையின் பொருட்டால் உங்களுக்காக வாதிடுவேன்” என்று கூறினார்கள். ஆனால், அங்கிருந்த அபூஜஹ்லும், அப்துல்லாஹ் இப்னு அபூ உமய்யாவும் “அபூதாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா நீர் புறக்கணிக்கப் போகின்றீர்?” என்று தொடர்ந்து அவரிடம் இதையே கூறிக் கொண்டிருந்தனர். இறுதியில் அபூதாலிப் “நான் அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில்தான் (இருக்கிறேன்)” என்று கூறிவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “எனக்கு தடை வராமல் இருக்கும்வரை அல்லாஹ்விடம் உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவேன்” என்று கூறினார்கள். ஆனால்,
مَا كَانَ لِلنَّبِىِّ وَالَّذِيْنَ اٰمَنُوْاۤ اَنْ يَّسْتَغْفِرُوْا لِلْمُشْرِكِيْنَ وَ لَوْ كَانُوْۤا اُولِىْ قُرْبٰى مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ اَنَّهُمْ اَصْحٰبُ الْجَحِيْمِ
முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக்கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல.(அல்குர்ஆன் : 9:113)
(நபியே!) நிச்சயமாக நீங்கள் இவர்களில் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்த உங்களால் முடியாது. எனினும், தான் விரும்பியவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகின்றான். நேரான வழியில் செல்லத் தகுதியுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்!” (அல்குர்ஆன் 28:56) (ஸஹீஹுல் புகாரி)
என்ற இரு வசனங்களை அல்லாஹ் இறக்கி இணைவைப்பவர்களுக்காக பாவ மன்னிப்புக் கோருவதைத் தடை செய்துவிட்டான். (ஸஹுல் புகாரி)
நபி (ஸல்) அவர்களுக்கு அபூதாலிப் கொடுத்து வந்த பாதுகாப்பு மற்றும் உதவியைப் பற்றி நாம் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. காரணம், அவர் குறைஷித் தலைவர்கள் மற்றும் மூடர்களின் தாக்குதல்களிலிருந்து இஸ்லாமிய அழைப்புப் பணியைப் பாதுகாத்து, அதற்கு ஓர் அரணாக விளங்கினார். ஆனாலும் தங்களது மூதாதையரின் மார்க்கத்திலேயே அவர் நிலைத்திருந்து விட்டதால் மறுமையின் வெற்றியை அடையவில்லை.
ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் “நீங்கள் உங்களது பெரியதந்தை அபூதாலிபிற்கு என்ன பயனளிப்பீர்கள். அவர் உங்களைப் பாதுகாத்தார். உங்களுக்காகக் கோபம் கொண்டார்” என்று அப்பாஸ் (ரழி) கேட்டபோது, “அவர் நரகத்தின் குறைந்த ஆழமுள்ள பகுதியில் இருப்பார். நான் இல்லை என்றால் நரகத்தின் அடித்தளத்தில் சென்றிருப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
துணைவி கதீஜா மரணம்.
அபூதாலிபின் மரணத்திற்கு இரண்டு மாதங்களுக்குப் பின் துணைவி கதீஜா (ரழி) மரணமானார்கள். இவர்களது மரணம் நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரமழான் மாதத்தில், அவர்களின் 65வது வயதில் நிகழ்ந்தது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு வயது ஐம்பது. (தல்கீஹ்)
அபூதாலிபின் மரணத்திற்கு மூன்று நாட்களுக்குப் பின் கதீஜா (ரழி) மரணமானார்கள் என்று சிலர் கூறுகின்றனர்.
நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வின் மிகப்பெரியஅருளாக கதீஜா (ரழி) விளங்கினார்கள். நபி (ஸல்) அவர்களுடன் கால் நூற்றாண்டுக் காலம் வாழ்ந்த நமது அன்னை கதீஜா (ரழி), நபியவர்களின் துக்க நேரத்தில் அவர்களுக்கு ஆறுதலாக, சிரமமான நேரத்தில் உறுதுணையாக இருந்து, அவர்களின் தூதுத்துவத்தை எடுத்துக் கூறுவதற்கு பலவகையில் தியாகம் செய்தார்கள். மேலும், அறப்போரின் கஷ்டங்களில் பங்கெடுத்து தனது உயிராலும் பொருளாலும் உதவி ஒத்தாசை செய்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்: “மக்கள் என்னை நிராகரித்த போது, கதீஜா என்னை நம்பினார். மக்கள் என்னை பொய்ப்பித்த போது, அவர் என்னை உண்மைப்படுத்தினார். மக்கள் என்னை ஒதுக்கிய போது, அவர் என்னைத் தனது பொருளில் சேர்த்துக் கொண்டார். அல்லாஹ் அவர் மூலமாகத்தான் எனக்குக் குழந்தைகளைக் கொடுத்தான். அவரல்லாத மற்ற மனைவிகள் மூலம் குழந்தைகள் இல்லாமல் செய்துவிட்டான்.” (முஸ்னது அஹ்மது )
அபூஹுரைரா (ரழி) அறிவிப்பதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் வந்தார். “அல்லாஹ்வின் தூதரே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில் உணவு எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவருடைய இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் ஸலாம் கூறி சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காணமுடியாத முத்து மாளிகை ஒன்று அவருக்கு கிடைக்க இருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். (ஸஹீஹுல் புகாரி)
அடுக்கடுக்கான துயரங்கள்.
சில நாட்களுக்குள் துக்கம் தரும் இவ்விரு நிகழ்ச்சிகளும் நடந்து முடிந்தன. நபி (ஸல்) அவர்களின் உள்ளம் வேதனையால் துடிதுடித்தது. தொடர்ந்து சமுதாயத்தவர்களும் துன்பங்களைத் தந்தனர். அபூதாலிபின் மரணத்திற்குப் பின் நபி (ஸல்) அவர்களுக்குத் துயரத்திற்கு மேல் துயரம் அதிகரித்தது. முற்றிலும் நிராசையாகி “தாயிஃப்’ நகர மக்களாவது அழைப்பை ஏற்றுக் கொள்வார்கள் அல்லது ஆதரவு அளிப்பார்கள் என்று தாயிஃபை நோக்கி பயணமானார்கள். ஆனால், அங்கு அவர்களுக்கு ஆதரவளிப்பவரோ உதவி செய்பவரோ இல்லை. மாறாக, அம்மக்கள் நபி (ஸல்) அவர்களின் கூட்டத்தார் கொடுக்காத நோவினைகளை அவர்களுக்குக் கொடுத்தனர். கல் நெஞ்சம் கொண்ட அம்மக்கள் நபியவர்களை அடித்து துன்புறுத்தினர்.
தாயிஃப் நிகழ்ச்சி.
நபித்துவம் பெற்ற 10 ஆம் ஆண்டு நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்வதற்காக தாயிப் என்னும் நகரவாசிகளைச் சந்திக்கச் சென்றார்கள். அப்பொழுது அவ்வூரில் முக்கியமானவர்களைச் சந்தித்து இஸ்லாத்தின் பால் அழைத்த போது, ஒரு தலைவன், இறைத் தூதர் ஆக்க உம்மைவிட ஆண்டவனுக்கு வேறு ஆள் கிடைக்கவில்லையா? என்று கேட்டான். மற்றொரு தலைவன், “உம்முடன் பேச விரும்பவில்லை” என்று சொன்னான். மற்றொருவன் இன்னும் கேவலாமாகப் பேசினான். எனவே, நாயகம் (ஸல்) அவர்கள் பொது மக்களிடம் சென்று இஸ்லாத்தின் அழைப்பைக் கொடுத்தார்கள். அப்போது அவர்கள் சிறுவர்களைத் தூண்டி விட்டு கற்களைக் கொண்டு அடிக்கச் செய்தார்கள். பெருமானார் ஊரை விட்டு வெளியே வந்தபோது அம்மக்களுடைய நேர்வழிக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
“
மிஃராஜ் நிகழ்ச்சி.
மிஃராஜ் நபித்துவத்தின் 12ஆம் ஆண்டு ஹிஜ்ரத்திற்கு 17 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றதாக வரலாறு கூறுகிறது.
மிஃராஜ் நிகழ்வுக்கு சொல்லப்படும் காரணங்கள் இரண்டு.
1)மிஃராஜ் நபி (ஸல்)அவர்களின் காலத்தில் வாழ்ந்த, இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற,இனி வரப்போகிற அனைவருக்குமான அசைக்கமுடியாத அத்தாட்சிக்காக நிகழ்ந்தது.
2,மக்காவாசிகள் நபி(ஸல்)அவர்களின் 46 ஆவது வயதில் நபியையும், நபியின் குடும்பத்தையும்,இஸ்லாமியர்களையும் ஊர் விலக்கு செய்தது நபியை கவலையடையச்செய்தது.
மேலும் நபியின் பெரிய தந்தை அபூதாலிப் மற்றும் நபியின் மனைவி கதீஜா (ரலி)அவர்கள் இருவரின் தொடர் மரணங்களால் மாநபி மிகவும் கவலைக்குள்ளானார்கள்.
மேலும் தாயிஃப் பயணத்தில் பட்ட அவமானங்களால், ஒட்டு மொத்த சக்தியையும் இழந்துவிட்டதாக நபி (ஸல்)அவர்கள் எண்ணினார்கள்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் நபிக்கு யாருமே ஆறுதல் சொல்ல முடியாத நிலையில் அல்லாஹ்வே நேரடியாக ஆறுதல் சொல்ல அழைத்த விண்ணுலகப் பயணமே மிஃராஜ் என்பதாகும்.
நபித்துவம் பெற்ற 12 ஆம் ஆண்டு ரஜப் மாதம் பிறை 27 இரவு நாயகம் (ஸல்) அவர்கள் தங்களுடைய பூத உடலுடன் விண் பயணம் செய்தார்கள். இந்நிகழ்ச்சி “மிஃராஜ்” என அழைக்கப்படும். ஹலரத் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வழி நடத்த நாயகம் (ஸல்) அவர்கள் “ஸித்ரதுல் முன்தஹா” என்ற இடம் வரை சென்றார்கள். இந்த எல்லைக்குப் பின் தனிமையில் நாயகம் (ஸல்) அவர்கள் சென்று அல்லாஹ்வைத் தரிசனம் செய்து உம்மத்தினருக்கு தொழுகை என்னும் காணிக்கையைப் பெற்று திரும்பினார்கள்.
தொழுகை.
இஸ்லாமிய மார்க்கத்தில் தொழுகையே முதலாவதாக கடமையாக்கப்பட்டது. இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகிறார்: மிஃராஜுக்கு முன்பே நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் தொழுது வந்தார்கள் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. ஆனால், ஐவேளைத் தொழுகை கடமையாவதற்கு முன் ஏதேனும் தொழுகைகள் கடமையாக்கப்பட்டிருந்ததா இல்லையா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. சிலர் “சூரிய உதயத்திற்கு முன்பும் மறைவதற்கு முன்பும் தொழுது கொள்வது கடமையாக இருந்தது” என்று கூறுகின்றனர்.
இப்னு ஹிஷாம் (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் கணவாய்களுக்குச் சென்று இரகசியமாகத் தொழுது வந்தார்கள். ஒரு முறை நபி (ஸல்) அவர்களும் அலீ (ரழி) அவர்களும் தொழும்போது அபூதாலிப் பார்த்து அதுபற்றி விசாரித்தார். அவ்விருவரும் நற்செயலையே செய்கிறார்கள் என்று தெரிந்து கொண்டதும் அதில் நிலைத்திருங்கள் என்று கூறினார்.
ஹிஜ்ரத் செய்தல்.
தொழுகை கடமையான பின் மக்காவில் குரைஷிகளின் தொல்லை அதிகமானது. மக்காவாசிகள் அனைவரும் சேர்ந்து நாயகம் (ஸல்) அவர்களைக் கொன்று விடுவது என தீர்மானித்து இரவில் வீட்டை முற்றுகையிட்டனர். நபித்துவம் அடைந்து 13 ஆம் ஆண்டு சபர் மாத இறுதியில் நாயகம் (ஸல்) அவர்கள் ஹலரத் அலீ (ரழி) அவர்களுடன் தங்கி இருக்கும் போது நாயகம் (ஸல்) அவர்களுக்கு மக்காவை விட்டு செல்லும் படி அல்லாஹ்வின் உத்தரவு வந்தது. இதன்படி நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே இறங்கி வரும் போது ஏந்திய வாளோடு எதிரிகள் சூழ்ந்திருந்தனர். இதனை பார்த்த நாயகம் (ஸல்) அவர்கள் தரையிலிருந்து கைப்பிடி மண்ணை எடுத்து அங்கிருந்தவர்களின் தலையின் மீது தூவி விட்டுச் சென்றார்கள். எதிரிகள் நபி (ஸல்) அவர்களை பார்க்க முடியாதவாறு அல்லாஹ் செய்துவிட்டான்.
வீட்டிலிருந்து புறப்பட்டு ஹலரத் அபூபக்ர் (ரழி) அவர்களின் வீடு சென்று அவரை அழைத்துக் கொண்டு மக்காவை விட்டுப் புறப்பட்டார்கள். மூன்று மைல் தொலைவிலுள்ள “தெளர்” என்னும் குகையில் சென்று தங்கினார்கள். அங்கும் மக்கா குறைஷிகள் வந்து தேடினர். அவர்களின் சப்தத்தைக் கேட்ட ஹலரத் அபூபக்ர் (ரழி) அவர்கள், “நாம் இருவர் தானே இருக்கின்றோம். நாம் என்ன செய்வோம்? என்று சொன்னார்கள். அப்போது நாயகம் (ஸல்) அவர்கள் ’கவலைப்படாதீர்’ நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்; என்றனர். அவ்வமயம் அந்த குகையின் வாயிலில் சிலந்திப் பூச்சி வலையைப் பின்னியது. இதைப் பார்த்த மக்காவாசிகள் குகைக்குள் யாரும் இல்லை என்று கருதி திரும்பிச் சென்று விட்டனர். அவ்விடத்திலேயே மூன்று இரவு, மூன்று பகல் தங்கினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு ரபியுல் அவ்வல் மாதத் தொடக்கத்தில் மதீனா சென்று அடைந்தார்கள். அபூ அய்யூப் அன்சாரி (ரழி) அவர்களின் இல்லத்தில் தங்கினார்கள். இந்த நகரம் “யத்ரிப்” என்று அழைக்கப்பட்டு வந்தது. நாயகம் (ஸல்) அவர்கள் அங்கு குடியேறியதனால் அது “மதீனத்துன் நபி” நபிகளாரின் பட்டணம் என்று அழைக்கப்பட்டது. இந்த ஹிஜ்ரத் நிகழ்ச்சியிலிருந்து இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரி ஆண்டு எனக் கணக்கிடப்படுகிறது.
ஹிஜ்ராவின் தொடக்கங்கள்.
அல்லாஹ்வின் அருளால் இரண்டாவது உடன்படிக்கை முடிந்தது. அறியாமையும், இறைநிராகரிப்பும் சூழ்ந்த பாலைவனங்களுக்கு நடுவில் இஸ்லாம் தனக்கொரு தனி நாட்டை நிறுவுவதில் வெற்றி பெற்றது. இது இஸ்லாமிற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முஸ்லிம்களுக்கு அந்த நாட்டை நோக்கி ஹிஜ்ரா செய்ய அனுமதி அளித்தார்கள்.
‘ஹிஜ்ரா’ என்றால் தனது எல்லா உலக ஆதாயங்களையும் இழந்து சொந்த மண்ணில் உள்ள உடைமைகளை அப்படியே விட்டுவிட்டு தன்னையும் தனது மார்க்கத்தையும் காப்பாற்றிக் கொள்ள தனது சொந்த நாட்டை, சொந்த ஊரை துறந்து அந்நிய நாட்டுக்கு, அந்நிய ஊருக்கு செல்வதாகும். செல்லும் வழியில் அல்லது செல்வதற்கு முன் பல ஆபத்துகளை சந்திக்க வேண்டி வரும். உயிர் பறிபோகலாம் உடைமைகள் அபகரிக்கப்படலாம் செல்லுமிடத்தில் எத்தகைய எதிர்காலத்தை முன்னோக்க வேண்டியிருக்குமோ? அங்கு என்னென்ன கவலைகளும், துக்கங்களும், துயரங்களும் மறைந்திருக்கின்றனவோ? என்று எதுவும் அறியாத நிலையில் மேற்கொள்ளப்படும் பயணமே ஹிஜ்ராவாகும்.
இவை அனைத்தையும் தெரிந்துதான் முஸ்லிம்கள் ஹிஜ்ரா செய்யத் தொடங்கினர். முஸ்லிம்கள் ஹிஜ்ரா செய்து ஓரிடத்தில் ஒன்று கூடிவிட்டால் தங்களுக்கு ஆபத்துகள் ஏதும் ஏற்படலாம் என்று உணர்ந்திருந்த மக்கா முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) முஸ்லிம்களை ஹிஜ்ரா செய்யவிடாமல் தடுத்தனர்.
இதற்கு சில உதாரணங்களை இங்கு பார்ப்போம்:ஹிஜ்ரா செய்த முதல் கூட்டத்தில் அபூஸலமாவும் ஒருவர். இவர் இரண்டாவது அகபாவிற்கு ஒரு வருடத்துக்கு முன் ஹிஜ்ரா செய்தார். அபூ ஸலமா (ரழி) தனது மனைவியுடனும் தனது சிறிய குழந்தையுடனும் ஹிஜ்ரா செய்ய நாடியபோது அவரது மனைவியின் உறவினர்கள் அபூஸலமாவை நோக்கி “நீ எங்களை புறக்கணித்து விட்டாய் நீ வேண்டுமானால் சென்றுவிடு எங்களுடைய பெண்ணை ஊர் ஊராக அழைத்துத் திரிய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று கூறி அவன் மனைவியையும் குழந்தையையும் அவரிடமிருந்து பிரித்து விட்டனர். இதைப் பார்த்த அபூஸலமாவின் குடும்பத்தினர் “நீங்கள் உங்களது பெண்ணை எங்கள் குடும்பத்தாரிடமிருந்து பிரித்து விட்டீர்கள். எனவே, எங்கள் மகனுக்குப் பிறந்த குழந்தையை நாங்கள் உங்கள் பெண்ணுடன் விடமாட்டோம்” என்று சண்டையிட்டு குழந்தையைப் பறித்துக் கொண்டனர். இதே நிலையில் அபூஸலமா மதீனாவை நோக்கிப் பயணமானார்.
தனது கணவனும் சென்றுவிட குழந்தையையும் பறிகொடுத்த உம்மு ஸலமாவின் உள்ளம் வேதனையால் வெந்தது. ஒவ்வொரு நாள் காலையிலும் ‘அப்தஹ்’ என்ற இடத்திற்கு வந்து மாலை வரை அழுதுகொண்டே இருப்பார். அழுதே ஒரு வருடத்தைக் கழித்துவிட்ட நிலையில் அவரது குடும்பத்தினரின் உள்ளத்தில் அவர் மீது இரக்கம் பிறந்தது. நீ உனது கணவனுடன் சென்று சேர்ந்து கொள் என்று அனுமதித்து, அவன் பிள்ளையையும் அபூ ஸலமாவின் குடும்பத்தாரிடமிருந்து வாங்கித் தந்தனர். ஏறக்குறைய 500 கி.மீ. தொலைவுள்ள மதீனாவை நோக்கி பயணமானார். உயர்ந்த மலைகள், அபாயம் நிறைந்த வழிகள், அல்லாஹ்வின் படைப்பினங்களில் யாரும் உடன் இல்லை. இந்நிலையில் பயணித்து ‘தன்யீம்’ வந்தடைந்த போது அவரை உஸ்மான் இப்னு தல்ஹா இப்னு அபூதல்ஹா சந்தித்தார். அவரது நிலைமை மீது இரக்கம் கொண்டு அவரை பாதுகாப்புடன் அழைத்து வந்து ‘குபா“வில் விட்டுவிட்டு “இதோ இந்த ஊரில்தான் உங்கள் கணவர் இருக்கிறார். அல்லாஹ் உங்களுக்கு அருள்வளம் (பரக்கத்) செய்வான்” என்று உம்முஸலமாவை வாழ்த்தி விட்டு அவர் மக்கா திரும்பினார். (இப்னு ஹிஷாம்)