Tuesday, 22 August 2023

ஜும்ஆ பயான்25/08/2023

ஸஃபரும் தவறானப் புரிதலும்.

وَالْعَصْرِۙ‏

اِنَّ الْاِنْسَانَ لَفِىْ خُسْرٍۙ‏

காலத்தின் மீது சத்தியமாக.

நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 103:1,2)

சஃபர் மாதம்.

சஃபர் அல் முஸஃப்பர் மாதம் இஸ்லாமிய ஹிஜ்ரா நாட்காட்டியில் இரண்டாவது மாதமாகும்.இது முஹர்ரம் மாதத்தை அடுத்து  ரபிவுல் அவ்வலுக்கு முன்னால் வரும் மாதமாகும்.இதனை ஓர் வழமையான மாதம் எனலாம்.காரணம் இம்மாதத்தில் ஏனைய மாதங்களைப்போல சுன்னதான அல்லது முஸ்தஹப்பான அமல்கள் குறிப்பிடப்படவில்லை.அதனால் இம்மாதம் துற்சகுனம்,ஆபத்தானது என எண்ணுவது தவறாகும். அறியாமைக்கால அரபுகள் இம்மாதத்தை துற்சகுனமாக கருதி பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பார்கள்.

ஸஃபர் பீடை மாதமா?

நாயகம்ﷺ அவர்கள் ஸபஃர் மாதம் குறித்த மூடநம்பிக்கைகளை 1400 ஆண்டுகளுக்கு முன்பே தடைசெய்துவிட்டார்கள்.

قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ وَلاَ هَامَةَ وَلاَ صَفَرَ، وَفِرَّ مِنَ الْمَجْذُومِ كَمَا تَفِرُّ مِنَ الأَسَدِ ‏”‏‏.‏

”தொற்றுநோய் என்பது கிடையாது. பறவைகளைக்கொண்டு சகுனம் பார்ப்பதும் ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது. ‘ஸஃபர்’ மாதம் பீடை என்பதும் கிடையாது. சிங்கத்திடமிருந்து நீ எப்படி வெருண்டோடுவாயோ அப்படி தொழுநோயாளியிடமிருந்து வெருண்டோடு..  [புகாரி 5707]

துற்சகுனம்,கெட்டநேரம்,பீடைத்தனம் காலத்திலோ நேரத்திலோ பொருளிலோ அல்ல மாறாக மனிதன் செய்யும் செயல்கள் தான் நல்லது கெட்டதை நிர்ணயிக்கின்றது.

மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய வாழ்வை நல்ல முறையிலே இறைப் பொருத்தத்தை நாடி கழிக்கும்போது அது அவனுக்கு நல்ல பொழுதுகளாகும்.பாவங்களிலும் தீய பழக்கவழக்கங்களிலும் இறை கோபத்தை உண்டாக்கும் வழிகளில் காலத்தை கழிப்பது கெட்ட பொழுதுகளாக அமையும்.

உதாரணமாக சில மக்கள் அதிகாலை ஃபஜ்ர் தொழுகிறார்கள்.இன்னும் சிலர் ஃபஜ்ர் தொழாமல்  தூங்கி விடுகின்றனர்.

அனைவருக்கும் ஒரே மாதிரி விடிந்த காலைப்பொழுது பஜ்ரு தொழுதவருக்கு சிறந்ததாகவும்.தொழாதவருக்கு அபசகுனமாகவும் அமைந்து விடுகின்றது.எனவே கால நேரத்தில் நல்லது கெட்டது கிடையாது.நன்மை தீமையை தீர்மானிப்பது நம் செயல்களே ஆகும்.

وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عَلَيْهِ وَسلم: ” قَالَ اللَّهُ تَعَالَى: يُؤْذِينِي ابْنُ آدَمَ يَسُبُّ الدَّهْرَ وَأَنَا الدَّهْرُ بِيَدِيَ الْأَمْرُ أُقَلِّبُ اللَّيْلَ وَالنَّهَارَ ” مُتَّفَقٌ عَلَيْهِ) رواه البخاري ومسلم

அல்லாஹு தஆலா கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். ஆதமின் மகன் என்னை நோவினைபடுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான்.ஆனால் நான்தான் காலமாக (காலத்தை உருவாக்குபவனாக) இருக்கிறேன். நான்தான் இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன். (மிஷ்காத்)

மக்களில் சிலர் பேரிடர்களும், ஆபத்துகளும்,கொள்ளை நோய்களும் ஏற்பட்ட கால நேரங்களை கெட்ட நேரம் என்று ஏசுகின்றனர்.ஆனால் அந்தந்த காலங்களில் நிகழும் நிகழ்வுகள் யாவும் அல்லாஹ்வின் நாட்டப்படியும் கட்டளை படியும் நிகழ்கின்றன.

   تُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَتُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ‌ وَتُخْرِجُ الْحَـىَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَـىِّ‌ وَتَرْزُقُ مَنْ تَشَآءُ بِغَيْرِ حِسَابٍ‏

(நாயனே!) நீதான் இரவைப் பகலில் புகுத்துகின்றாய்; நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்; மரித்ததிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய்; நீயே உயிருள்ளதிலிருந்து மரித்ததையும் வெளியாக்குகின்றாய்; மேலும், நீ நாடியோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றாய். (அல்குர்ஆன் 3:27. )

இரவு பகல் மாறி மாறி வருவது காலத்தின் சுழற்சிக்குக் காரணமாகும். இவ்வாறு  மாறி மாறி வரச் செய்பவன் அல்லாஹு தஆலாவாக இருப்பதால் காலத்தை ஏசுவதை தன்னையே ஏசுவதாக,தன்னையே நோவினை செய்வதாகக் குறிப்பிடுகின்றான்.

உண்மையில் பீடை என்பதும் துர்சகுனம் என்பதும் இறைவன் படைத்த காலத்தில் இல்லை. மாறாக நமது செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளின் காரணத்தால் காலம் நமக்கு பீடையாக, துன்பம் தரக்கூடியதாக காட்சி தருகிறது. ஆனால் மார்க்கம் காட்டும் வழியில் நமது செயல்பாடுகளை அமைத்துக்கொண்டால் என்னாளும் நன்னாளே என்பதை உணரலாம்.

அறியாமைக்கால இப்பழக்கம் இன்றைய நவீன யுக சில இஸ்லாமியர்கள் வரை ஸஃபர் பீடை மாதமாக கருத்தப்பட்டு வருகின்றது.

இன்றைய சில இஸ்லாமியர்கள்,ஸஃபர் மாதத்தில் திருமணம் போன்ற சுப காரியம் செய்யவதில்லை.திருமணமான பெண்ணை புகுந்த வீட்டிற்கு அனுப்புவதில்லை,பயணம் செய்வதில்லை.இம்மாததில் தொழில் துவங்குவதையும்,கொடுக்கல் வாங்கலையும் அபசகுனமாக கருதி தள்ளிப்போடுகின்றனர். 

"மக்கள் சஃபர் மாதத்தை அசுபமாக கருதுகிறார்கள், அவர்கள் திருமணம் செய்ய மாட்டார்கள், அவர்கள் பெண்களை அனுப்ப மாட்டார்கள்,பயணத்தைத் தவிர்க்கிறார்கள்." குறிப்பாக சஃபர் மாதத்தின் முதல் பதிமூன்று தினங்கள் மிகவும்  துற்சகுனமாக கருதப்படுகின்றன, அவை பதின்மூன்று நோன்புகள் என்று அழைக்கப்படுகின்றன, இவை அனைத்தும் அறியாமையின் வெளிப்பாடாகும்.

ஷாஹ் அப்துல் ஹக் முஹத்தித் தெஹ்லவி(ரஹ்)அவர்களின்

"இஸ்லாமிய மாதங்களின் சிறப்புகள்", எனும் நூலில்  எழுதப்பட்டுள்ளது,          இது ( சஃபர் மாதம்) பேரழிவுகள், விபத்துக்கள் மற்றும் பேரழிவுகளின் மாதமாக மக்கள் கருதுகின்றனர், இந்த நம்பிக்கை தவறானது மற்றும் அதில் உண்மை இல்லை.                                      (اسلامی مهینوں کے فضائل، ص: 44)

மூட நம்பிக்கை இல்லாத  மார்க்கம்.

இஸ்லாத்தில் நல்ல நேரம் கெட்ட நேரம் கிடையாது.

காலங்களோடும், நேரங்களோடும் தான் மனிதனின் வாழ்க்கை பின்னிப் பிணைந்துள்ளது. உண்மை நிலை இவ்வாறு இருக்க காலத்தை நல்லது கெட்டது என தரம் பிரிப்பது வாழ்க்கைக்கு உகந்தது அல்ல. திருமணம், தொழில் துவங்குதல், புது வீட்டிற்குச் செல்லுதல் போன்ற காரியங்களைத் துவங்கும் முன்பாக நல்ல நேரம், கெட்ட நேரம் பார்க்கும் வழக்கம் பெரும்பான்மையானோரிடம் இருக்கிறது.

உலகில் நிகழக்கூடிய காரியங்கள் அனைத்தும் ஆட்களைப் பொறுத்தே அமைகின்றன நாட்களைப் பொறுத்து அல்ல. காலம் என்பது மனிதன் நாட்களை கணக்கிட்டு கொள்வதற்கான ஒரு வழிகாட்டி தான். வெற்றி தோல்வியை, இன்ப துன்பத்தைத் தீர்மானிக்கும் இலக்கு அல்ல. இதை உணராமல் நம்மவர்கள் காலத்தைக் குறைகூறுகின்றனர். இதன் மூலம் இறைவனையே நோவினை செய்கின்றனர்.m

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகின்றான். காலத்தின் கை சேதமே என்று அவன் கூறுகின்றான். ஆகவே உங்களில் ஒருவர் காலத்தின் கை சேதமே என்று கூற வேண்டாம். ஏனெனில் நானே காலம் (படைத்தவன்). அதில் இரவையும் பகலையும் நானே மாறி மாறி வரச்செய்கிறேன். நான் நாடினால் அவ்விரண்டையும் (மாறாமல்) பிடித்து (நிறுத்தி) விடுவேன். (நூல்: முஸ்லிம் 4521)

ஒரு நாளில் குழந்தை பிறக்கிறது என்றால் அதே நாளில் அதன் தாய் மரணிக்கிறாள். இப்படி இறப்பும் பிறப்பும் ஒரே நேரத்தில் சங்கமிக்கும் அந்நாளை நாம் நல்ல நாள் என்று குறிப்பிடுவோமா? அல்லது கெட்ட நாள் என்று குறிப்பிடுவோமா? நாட்கள் நன்மை, தீமையைத் தீர்மானிக்காது என்பதற்கு இதுவே தகுந்த ஆதாரமாக இருக்கிறது.

குறிபிட்ட பொருளினால் தான் நல்லது நடக்கும் என்று நம்பினால் அவர் இறை நம்பிக்கையாளர் இல்லை.

عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، أَنَّهُ قَالَ صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَةَ الصُّبْحِ بِالْحُدَيْبِيَةِ عَلَى إِثْرِ سَمَاءٍ كَانَتْ مِنَ اللَّيْلَةِ، فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ "" هَلْ تَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ "". قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ "" أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي وَكَافِرٌ، فَأَمَّا مَنْ قَالَ مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ فَذَلِكَ مُؤْمِنٌ بِي وَكَافِرٌ بِالْكَوْكَبِ، وَأَمَّا مَنْ قَالَ بِنَوْءِ كَذَا وَكَذَا فَذَلِكَ كَافِرٌ بِي وَمُؤْمِنٌ بِالْكَوْكَبِ "".

ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் 'ஹுதைபிய்யா' எனுமிடத்தில் எங்களுக்கு ஸுபுஹ் தொழுகை நடத்தினார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது. தொழுது முடித்ததும் மக்களை நோக்கி, 'உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே இதைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்' என்று நாங்கள் கூறினோம். 

'என்னை விசுவாசிக்கக் கூடியவர்களும் என்னை நிராகரிக்கக் கூடியவர்களுமான என் அடியார்கள் இரண்டு பிரிவுகளாக ஆனார்கள். அல்லாஹ்வின் கருணையினாலும் அவனுடைய அருட்கொடையினாலும் நமக்கும் மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நம்பி, நட்சத்திரங்களை மறுத்தவர்களாவர். இந்த நட்சத்திரத்தினால் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நிராகரித்து, நட்சத்திரங்களை விசுவாசித்தவர்களாவர் என்று இறைவன் கூறினான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.                        (ஸஹீஹ் புகாரி : 846)

இஸ்லாமிய பார்வையில் சகுனம்.

'சகுனம்’

என்பதற்கு அரபியில் ‘ததய்யுர்’ எனப்படும். இது ‘தய்ர்’ எனும் பெயர்ச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். பறவைக்கு அரபியில் ‘தய்ர்’ என்பர்.

இதற்கான காரணத்தை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்: அன்றைய அறியாமைக் கால மக்கள் ஒரு பிரயாணத்தை ஆரம்பிக்கும் போது பறவைகளை பறக்கச் செய்து அது பறக்கும் திசைக் கேற்ப அப்பிரயாணத்தின் முடிவைத் தீர்மானிப்பார்கள். அதாவது அப்பறவை வலப்புரம் பறந்தால் அதனை நற்சகுனமாகக் கருதி பிரயாணத்தைத் தொடர்பவர்களாகவும், அது இடப்புறம் பறந்தால் அது துர்ச்சகுனம் என்று ஆரம்பித்த பிரயாணத்தை நிறுத்தக் கூடியவர்களாகவும் இருந்தனர். எனவே அக்காலத்தில் பறவையை வைத்து சகுனம் பார்த்ததால் ‘ததய்யுர்’ என சகுனத்திற்கு பெயர் வந்தது.

இது அக்காலத்தில் வழக்கிலிருந்த சகுனமாகும். இன்று நமது நாட்டு மக்களைப் பொறுத்த வரை பல முறைகளில் சகுனம் பார்க்கிறார்கள். உதாரணமாக:

பிரயாணத்தை ஆரம்பிக்கும் போது, பூனை, வெற்றுக் குடம் சுமந்த பெண், விதவைப் பெண், கூன் குருடு போன்றோர் குறுக்கருத்தால் இதனை கெட்ட சகுனமாக கருதி ஆரம்பித்த பயணத்தை நிறுத்தி விடுதல்.

இமாம் இப்னுல் கையும் கூறுகிறார்கள்:

சகுணமானது அதை நம்பக் கூடியவனையும் அதற்குப் பயப்படக் கூடியவனையும் தான் பாதிக்கும். ஆனால் யார் அதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லையோ அவனை ஒரு பொழுதும் பாதிக்காது’.

சகுனம் பார்த்து தமது முன்னேற்றத்தைத் தடுத்துக் கொள்வதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. வெறும் பித்தலாட்டம் மட்டும் தான்.

ஷவ்வால் மாதம் பீடை அல்ல.

நல்ல நேரம் பார்த்து ஆரம்பிக்கப்பட்ட வியாபாரங்கள், திருமணங்களில் பலவும் தோல்வியிலும், மனக்கசப்பிலும் முடிவடைவதையும், மக்களால் ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் செய்யப்படும் காரியங்கள் அமோக வரவேற்பை பெறுவதையும் நாம் பார்க்கலாம். இதற்கு அன்னை ஆயிஷாவின் வாழ்க்கை ஓர் முன்மாதிரியாகவுள்ளது.

அறியாமைக் காலத்தில் ஷவ்வால் மாதம் பீடை மாதமாகவும், துர்க்குறியாகவும் கருதப்பட்டது. அம்மாதத்தில் மக்கள் எவ்வித நற்காரியமும் செய்ய மாட்டார்கள். மேலும் அம்மாதத்தில் திருமணம் செய்தால் நிலைக்காது என்றும் நம்பி இருந்தனர். இந்த அறியாமையை அழிப்பதற்க்காகவே நபி (ஸல்) அவர்கள் அம்மாதத்தில் ஆயிஷாவைத் திருமணம் செய்தார்கள் அனைவரும் மெச்சும் அளவிற்கு வாழ்ந்தார்கள். இதைப் பற்றி அன்னை ஆயிஷா அவர்களே கூறுகிறார்கள்.

ஆயிஷா (ரலி) கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை ஷவ்வால் மாதத்தில் மணந்து கொண்டார்கள்: ஷவ்வால் மாத்திலேயே என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் அவர்களுடன் என்னை விட நெருக்கத்திற்குரியவர் யார்?                   (நூல் : முஸ்லிம் 2782)

ஜோதிடர்கள்.

யாராவது குறி சொல்பனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பியவர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் அருளப்பட்டதை (குஆனை) நிராகரித்தவர் ஆவார்”- அறிவித்தவர் அபூஹுரைரா (ரலி).  (நூல் :அபூதாவுத்)

ஜோதிடக்காரன் கூறவதை உண்மை என்று நம்புபவன் அல்லாஹ் இறக்கிய வேதத்தை நிராகரித்தவனாவான் என்று நபி (ஸல்) அவாகள் எச்சரித்திருக்கிறாகள். 

நபி இப்ராஹிம் (அலை) 

 عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا قَدِمَ أَبَى أَنْ يَدْخُلَ الْبَيْتَ وَفِيهِ الآلِهَةُ فَأَمَرَ بِهَا فَأُخْرِجَتْ فَأَخْرَجُوا صُورَةَ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ فِي أَيْدِيهِمَا الأَزْلاَمُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" قَاتَلَهُمُ اللَّهُ أَمَا وَاللَّهِ قَدْ عَلِمُوا أَنَّهُمَا لَمْ يَسْتَقْسِمَا بِهَا قَطُّ "". فَدَخَلَ الْبَيْتَ، فَكَبَّرَ فِي نَوَاحِيهِ، وَلَمْ يُصَلِّ فِيهِ.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்:

நபி(ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்தபோது, கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச் சிலைகளில் (குறி பார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தாங்கியவாறு இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல்(அலை) ஆகியோரின் உருவங்களும் இருந்தன. அவற்றையும் வெளியேற்றினார்கள். இதைக்கண்ட நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் இ(தைச் செய்த)வர்களை அழிப்பானாக! அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவ்விரு (நபிமார்களு)ம் அம்புகள் மூலமாகக் குறி பார்ப்பவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை என்பதை இதைச் செய்தவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்' என்று கூறிவிட்டுக் கஅபாவில் நுழைந்தார்கள். அதன் ஓரங்களில் (நின்று) தக்பீர் கூறினார்கள்; அதில் தொழவில்லை.                         (ஸஹீஹ் புகாரி : 1601.)

اَللّٰهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَيَقْدِرُ لَهٗ  اِنَّ اللّٰهَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏

“அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு உணவை விசாலமாக்குகிறான், தான் நாடியவருக்கு சுருக்கியும் விடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிந்தவன்.”(அல்குர்ஆன் : 29:62)

மேற்கண்ட திருமறை வசனங்கள் மற்றும் நபி மொழிக்கு மாற்றமாக அல்லாஹ் ஒருவருக்கு குறிப்பிட்ட அளவு செல்வத்தை நிர்ணயித்திருக்க, ஜோதிடத்தை நம்புபவர்கள், அந்தக் ஜோதிடர்கள் கூறுவது போல் செயல்பட்டால் அல்லது அதிருஷ்டக் கற்களை மோதிரங்களில் அணிந்துக் கொண்டால் அந்தக் கற்கள் நமக்கு அல்லாஹ்வின் நாட்டத்திற்கு மாறாக நமக்கு அதிக செல்வங்களை பெற்றுத் தரும் என்று நம்புவதாகும். (இத்தகைய தீய எண்ணங்களிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாகவும்). அல்லாஹ் இறக்கியருளியதை நிராகரித்தவன் முஸ்லிமாக இருக்க முடியாது.

நவீனயுக அனாச்சாரங்கள்.

கைசேதம்!அறியாமைக்கால அரபுகளின் தவறான பழக்க வழக்கங்களின் நீட்சியை இன்றும் இஸ்லாமியர்கள் சிலரிடம் காணமுடிகிறது.குறிப்பாக இன்றைய சமூகஊடகங்களில் நம் இஸ்லாமிய சகோதரர்கள் பகிரும்,பரப்பும் செய்திகளை கூறலாம்.

சமூகவளைதளங்களின் பயன்கள் அதிகமாக இருப்பதைப்போல அதன் பாதிப்புக்களும் அதிகம்.அதன் பயனர்கள் ஒரு செய்தியை முழுமையாக படிக்காமலும்,அதன் நம்பகத்தன்மையை உறுதிச்செய்யாமலும் அடுத்தவருக்கு பகிர்வதை கடமையை போல் செய்கின்றனர்.

இஸ்லாமிய சகோதர்களும் கூட இஸ்லாமிய செய்திகளை ஷேர் செய்வதை நன்மையாக கருதுகின்றனர்.

உண்மையிலே அது இஸ்லாமிய செய்தியா?குர்ஆன் வசனமா?ஹதீஸா என்கிற எந்த அறிவும் இல்லாமல் பரப்புகின்றனர்.

நபிமொழி அல்லாததை நபிமொழி என்றோ அல்லது குர்ஆன் வசனம் அல்லாத ஒன்றை குர்ஆன் வசனம் என்றோ கூறுவது கடும் தண்டனைக்குரிய குற்றம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

عن أبي هريرة، قال: قال رسول الله صلى الله عليه وسلم: «من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار».  

[صحيح] - [متفق عليه]

அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்கள் கூறினார்கள்: ‘என்மீது யார் வேண்டுமென்றே பொய்யுரைப்பானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்’.

(அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி) நூல்கள் : புகாரீ 110, முஸ்லிம் 4)

இந்த நபிமொழி மாறுப்பட்ட வார்த்தைகளில் பல ஹதீஸ் கிரதங்களில் காணக்கிடக்கின்றது.

நாயகம் ﷺஅவர்கள் பல சந்தர்ப்பங்களில் தாம் சொல்லாததை சொன்னதாக இட்டுக்கட்டுவதை கடுமையான தண்டனைக்குறிய குற்றம் என எச்சரித்துள்ளார்கள்.எனவே ஒரு மெஸேஜை பகிர்வதற்கு முன்னால் அது உண்மையிலே ஹதீஸா இல்லை குர்ஆன் ஆயத்தா என ஆராய்ந்து அனுப்பவேண்டும்.தமக்கு வருவதையெல்லாம் Forward பகிர்வது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல.

இதுப்போன்று தனக்கு வரும் செய்திகளையெல்லாம் பரப்புபவனை நாயகம் ﷺஅவர்கள் பொய்யன் என்றார்கள்:

كَفَى بالمرءِ كذِبًا أن يحدِّثَ بِكُلِّ ما سمِعَ

الراوي :أخرجه مسلم في ((مقدمة الصحيح)) (5)، وأبو داود (4992)، وابن حبان (30) من حديث أبي هريرة

ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம். (அறிவிப்பவர்;அபூஹுரைரா (ரலி) அவர்கள்.) (நூல்: முஸ்லிம் 6)

حَدِيْثُ الْمُغِيرَةِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : (( إِنَّ كَذِبًا عَلَيَّ لَيْسَ كَكَذِبٍ عَلَى أَحَدٍ، مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ ))

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவரின் மீதும் கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்!'

(அறிவிப்பவர் : முகீரா(ரலி) நூல்கள் : புகாரீ 1291, முஸ்லிம் 5)

சமூகவலை தளங்களில் உலாவரும் பித்அத்கள்.

சஃபர் மாதம் சம்பந்தமாக சமூக வலைதளங்களில் பல செய்திகள் உலா வருகின்றன.

அதன் உண்மை தன்மையை ஆராயாமல் தனக்கு வரும் குறுஞ்செய்தியை அப்படியே பல group குழுக்களுக்கு forward பகிர்ந்து விடுகின்றனர்.

அது உண்மையிலே நன்மையான காரியமாக இருந்தால் பரவாயில்லை.ஆனால் தவறான தகவலாக இருந்தால் அதன் தீமை அதனை பகிர்ந்தவரையே சேரும்.

உதாரணமாக சமூக வலைதளங்களில் இஸ்லாம் என்ற பெயரில் வரும் சில செய்திகள்

#அல்லாஹுத்தஆலாவின் ஐந்து திருநாமத்தை  11 பேருக்கு forwardஅனுப்பினால் உங்களின் பெரும் பிரச்சனை முடிவுக்கு வரும்.

இதனை ஷேர் செய்யவில்லையெனில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

#அதேபோல சில மெசேஜ்கள் இப்படியும் வரும் இந்த தகவலை இத்தனை குரூப்புகளுக்கு ஷேர் செய்தால் சொர்க்கம் கிடைக்கும்.

#சில மெசேஜ்களில் அல்லாஹ் ரசூலின் மீது உண்மையான பிரியம் இல்லாதவர்கள் இந்த மெசேஜை ஷேர் செய்ய மாட்டார்கள்.

#சில மெசேஜ்கள் பிற மதத்தவரின் வெறுப்பை தூண்டும் விதமாகவும் வருகின்றன.

ஒரு பக்கம் கஃபத்துல்லாஹ்வின் படத்தையும்,இன்னொரு பக்கத்தில் வேறு மதத்தவரின் கடவுளின் படத்தை போட்டுவிட்டு A,B இந்த இரண்டில் எந்த கடவுளை உங்களுக்குப் பிடிக்கும் like, comment, share செய்யுங்கள்.

இதுபோன்று இஸ்லாத்திற்கு அறவே சம்பந்தமில்லாத பல பொய்யான தகவலை சமூக வலைதளங்களில் இஸ்லாமியர்களின் சிலர் நன்மையான காரியமாக கருதி பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.இது முற்றிலும் தவறான இஸ்லாத்திற்கு எதிரான தண்டனைக்குரிய குற்றமாகும். 

தற்காலத்தில் சமூக வலைதளங்களில் கற்பது,கற்பிப்பது,நல்ல பல செய்திகளை அறிந்து கொள்வது போன்ற பல காரியங்கள் எளிதாக அமைகிறது.இதனை சரியாக உபயோகித்தால்  அல்லாஹ்வின் அருட்கொடையாக அமையும். 

அப்படி இல்லாமல் வரும் செய்திகளை அதன் உண்மை தன்மையை ஆராயாமல் பலருக்கு அதனை அனுப்பும்போது அதன் தீமை அனுப்பியவரையே வந்து சேரும்.

மனிதன் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தையும்.எழுதக்கூடிய ஒவ்வொரு எழுத்தும்.பகிரக் கூடிய ஒவ்வொன்றும் அவன் செயலேட்டில் பதிவு செய்யப்பட்டு கொண்டே இருக்கின்றன என்பதனை மனிதன் நினைவில் கொள்ள வேண்டும்.

مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ‏

கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை.(அல்குர்ஆன் : 50:18)

வரலாற்று பிழைகள்.

இஸ்லாமிய வரலாற்றில் தவறான செய்தியை பரப்பியதால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட பல பின்னடைவுகளும் பாதிப்புகளும் இன்று வரை வரலாற்றில் சாட்சிகளாக உள்ளன.

உஹத் யுத்ததில் நாயகம் ﷺஅவர்கள் கொல்லப்பட்டார்கள் என பரவிய தவறான வதந்தியால் இஸ்லாமிய படை சிதறுண்டு போய் பெரும் பின்னடைவை சந்திக்க நேரிட்டது.

பனு முஸ்தலிக் யுத்தத்தின் போது அன்னை ஆயிஷா (ரலி)அவர்களின் மீது நயவஞ்சகர்கள் அபாண்டமான பழியை சுமத்தினர்.அது காட்டு தீயாய் பரவி நாயகம்ﷺ அவர்களை காயப்படுத்தியது. சில இஸ்லமியர்களும் உண்மைதன்மை ஆராயமல் அதனை செய்தனர்.

இறுதியில் அல்லாஹுத்தஆலா திருமறை குர்ஆனில் அன்னை ஆயிஷா (ரலி)அவர்களின் பத்தினித்தனம் பரிசுத்ததன்மையை கூறி,இட்டுட்டியவர்கள்,வதந்தி பரப்பியவர்களை கடினமான வார்த்தைகளால் கண்டித்தான்.

اِنَّ الَّذِيْنَ جَآءُوْ بِالْاِفْكِ عُصْبَةٌ مِّنْكُمْ‌  لَا تَحْسَبُوْهُ شَرًّا لَّـكُمْ‌  بَلْ هُوَ خَيْرٌ لَّـكُمْ‌  لِكُلِّ امْرِىٴٍ مِّنْهُمْ مَّا اكْتَسَبَ مِنَ الْاِثْمِ‌  وَالَّذِىْ تَوَلّٰى كِبْرَهٗ مِنْهُمْ لَهٗ عَذَابٌ عَظِيْمٌ‏

எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு.(அல்குர்ஆன் : 24:11)

அதேபோன்று இன்றும் சில இணையத்தளங்கள் இஸ்லாம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் பொதுவாக்கெடுப்புகளை நடத்துகின்றன. இந்த வாக்கெடுப்புகளில், நமது சகோதரர்கள் சிலர் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்கிறார்கள். பொதுவாக இதுபோன்ற அனைத்து இணையதளங்களும் இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன, அவைகளை மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு கையாள வேண்டும். இதனையே அல்லாஹுத்தஆலா இப்படி கூறியுள்ளான்.

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ  بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا اَنْ تُصِيْبُوْا قَوْمًا  بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ‏

முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.(அல்குர்ஆன் : 49:6)

اِنَّ الَّذِيْنَ يُحِبُّوْنَ اَنْ تَشِيْعَ الْفَاحِشَةُ فِى الَّذِيْنَ اٰمَنُوْا لَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ‏

எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.

(அல்குர்ஆன் : 24:19)

சமூக ஊடகங்களை நம்முடைய கல்வி,அரசியல்,வணிக நோக்கங்களுக்காக அதிகம் பயன்படுத்துகிறோம்.

அதைவிடவும் அதிகமாக தீனுல் இஸ்லாத்தை பரப்புவதற்கும்,நபித்துவ கல்வியை மாற்று மத சகோதரர்களுக்கு சரியான முறையில் எடுத்துரைப்பதற்கு சமூக ஊடகம் எளிதான மற்றும் விரைவில் மக்களை சென்றடையும் தளமாக உள்ளது.

இன்றைய காட்சி,அச்சு ஊடகங்கள்,சமூக வலைதளங்கள் பெரும்பாலும் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களின் ஆதிக்கத்தில் உள்ளது.அவற்றை இஸ்லாத்திற்கு எதிரான நச்சுக் கருத்துக்களை பரப்புவதற்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே இஸ்லாமியர்கள்  தம்மால் முடிந்த அளவு சமூக வலைதளங்களை இஸ்லாமிய போதனைகளை பரப்புவதற்கு நலமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் தமக்கு இஸ்லாத்தின் பெயரில் வரும் செய்திகளை அதன் உண்மை தன்மையை ஆராயாமல் அடுத்தவருக்கு பகிர்வதை அறவே தவிர்த்துக் கொள்ள வேண்டும்.இதனையே இஸ்லாம் தடுக்கின்றது.ஸஃபர் மாதத்தை போல அனேக அனாச்சாரங்கள் இப்படித்தான் துவங்கியது.

எனவே அனாச்சாரங்கள் எந்த வடிவத்தில் வந்தாலும் அதனை இஸ்லாமியர்கள் விட்டொழிக்க வேண்டும்.

அல்லாஹு தஆலா அதற்கு நம் அனைவருக்கும் கிருபை செய்வானாக! ஆமின்...

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...